ஆழி பெரிது

47. விரதப் போராளிகள்

‘உன் பணிக்காக வீர விரதம் மேற்கொண்ட நாங்கள் இதற்காகவே கச்சை அணிந்துள்ளோம்!’

விளிம்பு நிலை சாதுக்கள் குறித்து போன அத்தியாயத்தில் பார்த்தோம். முழுக்க போர் கலைகளுக்கே தம்மை அர்ப்பணித்த ஒரு சாது வர்க்கம் இந்தியாவில் வேத காலம் தொட்டே இருந்திருக்கிறது. சமுதாயத்தில் பிரச்னைகள் ஏற்படும்போது அறத்தை நிலைநிறுத்தும் பொறுப்புடன் அது வாழ்ந்திருக்கிறது. இது குறித்த விவரணம் அதர்வண வேதத்தில் வருகிறது. அதர்வண வேதத்தில் ஒரு முக்கியமான பகுதி (15 ஆவது நூல்) விராத்யர்கள் என்பவர்களைக் குறித்து பாடுகிறது.

இவர்கள் ருத்திரனை வழிபடுகிறவர்கள். கருப்பு நிற ஆடை அணிந்தவர்கள். கைகளில் ஈட்டியும் வில்லம்புகளும் கொண்டிருப்பவர்கள். தலைப்பாகை அணிந்தவர்கள். விராதர் எனும் பெயர் விரதம் மேற்கொண்டவர்கள் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என ஸ்டெல்லா க்ராம்ரிச் கருதுகிறார். யஜுர் வேதத்தில் உள்ள சதாருத்ரியம் என்னும் ருத்ர துதியில் விராதபதி (தைத்ரீய சம்ஹிதை 4.5.4.1) என ருத்ரன் அழைக்கப்படுவதை க்ராம்ரிச் சுட்டுகிறார். ரிக் வேதத்தில் விரதங்களைக் காப்பாற்றும் தெய்வமாக (இங்கு அக்னி விராதபதி) துதிக்கப்படுவது இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என க்ராம்ரிச் கருதுகிறார். வில்லெடுத்து விரதங்களைக் காப்பாற்றும் விராதன் அவனால் கிளர்ந்தெழுந்தே பிரஜாபதி படைக்கிறார். அத்தருணத்தில் விராதன் முக்கண் மகாதேவனாகவே ஆகிறான் என்பதாக இந்த தொன்மம் அதர்வண வேதப்பாடல்களில் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் விராதர்கள் என பல சமுதாயக்குழுக்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ரிக்வேதத்தில் ‘சங்காத்மகர்’ (ரிக் 1.163.8) என்று சொல்லப்படும் குழுவைச் சேர்ந்தவர்களாக விராதர்கள் இருக்கலாம் என மவுரிஸ் ப்ளூம்பீல்ட் என்னும் இந்தியவியலாளர் கருதுகிறார். பாலி இலக்கியங்கள் மகதர்களை விராதர்கள் என அழைக்கின்றன. மள்ளர்கள் மற்றும் லிச்சாவிகள் விராத க்ஷத்திரியர்கள் என்று தர்ம சாஸ்திரங்கள் உருவான காலங்களில் அழைக்கப்பட்டுள்ளனர். கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த அங்கர்கள் விராதர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் விராத பிராம்மணர்கள், விராத க்ஷத்திரியர்கள், விராத வைசியர்கள் ஆகிய பிரிவுகளும் இருந்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது ஒரு காலகட்டத்தில் விராதர்கள் ஒரு தனி அரசமைப்பு கொண்ட சமுதாயமாகக்கூட இயங்கியிருக்கக்கூடும் என கருத இடமுள்ளது.

கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளில் இத்தகைய சாது, சன்னியாசிகள் குறித்த விவரணங்கள் வருகின்றன. கிமு 326 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தான். சிந்து நதியோர குடியரசு நாடுகளை எளிதாக வென்றான். இதற்கு முக்கியமான காரணம் அந்தக் குடியரசுகளிடம் ஒற்றுமையில்லாமல் இருந்ததுதான். இத்துடன் அலெக்சாண்டர் ஜீயஸ் என்னும் கிரேக்க இறைவனின் ஒரே மகன் என்றும் உலக வெற்றிக்காகவே பிறந்தவன் என்றும் கருத்துகள் பரப்பப்பட்டன. எனவே திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்த வதந்திகளால் சிந்து கரைகளில் இருந்த குடியரசுகளின் தலைவர்களில் சிலர் இதனை உண்மை என நம்பி அலெக்சாண்டர் பக்கம் சாய்ந்தார்கள்.

என்றாலும் அலெக்சாண்டரால் பாரதத்தின் அன்றைய பேரரசாக விளங்கிய மகதத்தின்மீது படையெடுக்க இயலவில்லை. உலக வெற்றி எனும் அவன் கனவு பாரதத்தில் தகர்ந்தது. அவன் பின்வாங்கிச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால்அப்படி திரும்பிச்செல்லும் போது குறைந்தபட்சம் சிந்து நதியருகிலான குடியரசுகளிலாவது மாசிடோனிய கொடி பறப்பது குறித்து அவனுக்குக் கிடைத்திருக்கக்கூடிய கர்வமும் இல்லாமலானது. அங்கெல்லாம் மக்கள் கிளர்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டிருந்தது. அதனை அடக்க அவன் முனைந்தபோது இந்தப் புரட்சியைத் தூண்டியவர்கள் சாது சன்னியாசிகள் என்பது அவனுக்குத் தெரிந்தது. கலகத்தை அடக்க 80,000 மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சாதுக்கள். ஒரு கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சன்னியாசிகள், அர்ச்சகர்கள் என பலரை அவன் கொன்றதை பண்டைய கிரேக்கஆவணங்கள் பெருமையுடன் பதிவு செய்திருக்கின்றன.

இறுதியாக, அலெக்சாண்டருக்கு பாரத சாது ஒருவருடன் ஏற்பட்ட சந்திப்பு அவனது உலக வெற்றி குறித்த ஆசையை முழுமையாக முறியடித்திருக்கலாம். தாந்தமிஸ் (Dandamis) என்கிற பாரதிய சாது ஒருவரை அலெக்சாண்டர் சந்தித்ததாக மெகஸ்தனிஸும் அர்ரியனும் எழுதிய விவரணங்கள் தெரிவிக்கின்றன. இவர் வனத்தில் வாழ்ந்து வந்தார். இவரைச் சந்திக்கஅலெக்ஸாண்டர் ஒரு தூதனை அனுப்பினான். அந்த தூதன் தாந்தமிஸிடம் தேவமைந்தனான அலெக்ஸாண்டர் அழைப்பதாகவும் வந்தால் உலகவெற்றியாளனான அலெக்சாண்டர் சாதுவுக்கு அளவிடமுடியாத செல்வங்களைஅளித்து கௌரவிப்பார் என்றும் வர மறுத்தால் சிரச்சேதம் தண்டனையாக கிடைக்குமென்றும் கூறினான்.

தாந்தமிஸ் எனும் அந்த பாரத சாது அலெக்சாண்டருக்கு சொன்ன மறுமொழி உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பெற வேண்டியதாகும்:  ‘கடவுள் என்பது அன்பு, அருள், ஒளி ஆகியவற்றின் வடிவம். மரணத்தையும் படையெடுப்பையும் தருகிறவன் தேவமைந்தன் அல்ல. … அலெக்சாண்டர் அளிப்பதாக நீங்கள் சொல்லும் எல்லாச் செல்வங்களும் எனக்குத் தேவையற்றவை. எனக்கு வேண்டிய அனைத்தையும் இந்த பூமி தருகிறாள். ஒரு தாய் தனது மகனுக்கு பால் நினைந்தூட்டுவதைப் போல என் தேவைகள் அனைத்தையும் அவள் பூர்த்திசெய்கிறாள். ஆனால் செல்வத்தை வெறியுடன் சேர்ப்பவர்களுக்கோ அதுவே அழிவையும் தருகிறது….என்னைக் கொல்லப்போவதாக நீங்கள் சொல்கிறீர்கள். இந்த உடலைத்தானே நீங்கள் அழிக்கமுடியும். ஆன்மாவை என்ன செய்யமுடியும்? அது கிழிந்த உடையைத் துறப்பது போல இவ்வுடலை துறந்து அதன் சத்திய நிலைக்கு திரும்பிவிடும்…’

பூமியைக் குறித்த இந்த சாதுவின் பார்வை அதர்வண  வேதத்தின் பூமி சூக்தத்தை நினைவூட்டுகிறது. கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். ‘உலகில் வெற்றிகளையே சந்தித்த அலெக்சாண்டர் அந்த இந்தியத் துறவியின் முன்னால் தன்னைவிட மேலான வெற்றியாளரைச் சந்தித்தான்.’

பிற்கால அன்னியப் படையெடுப்புகளின் போதும், நாத சித்த யோகிகள் என்னும் சாதுக்கள் ராஜ புத்திரர்களின் சமுதாய-ஆன்மிக குருக்களாக இருந்து அறத்தைக் காக்கும் கிளர்ச்சிகளை உருவாக்கினார்கள். இவர்களும் சிவ வழிபாடு கொண்டவர்கள். பின்னர் நாக சாதுக்களின் அகாராக்கள் முக்கிய அன்னிய ஆக்கிரமிப்புகளின் எதிர்ப்பு கேந்திரங்களாக விளங்கின. இவற்றில் முக்கிய வழிபாட்டு தெய்வமாக விளங்கியவர் ருத்ர அம்சமாக கருதப்பட்ட அனுமான் ஆவார். இந்தச் சாது அணிகள் பின்னர் நவீனத்துவ காலகட்டங்களில் எப்படி ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் சக்திகளாக மாறின என்பதை முந்தைய கட்டுரையில் நாம் பார்த்திருந்தோம். ஆம்,  தேசத்தின் விடுதலையையும் அறத்தையும் காப்பாற்ற விரதம் பூண்ட துறவிகளின் படை ஒன்று வேத காலம் தொடங்கி தொடர்ந்து இந்த மண்ணில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

மேலதிக விவரங்களுக்கு:

  1. Ancient India as described by Megasthenes and Arrian, [J.W.Mc Crindle, 1877]
  2. Stella Kramrisch, The Presence of Śiva, Motilal Banarsidass Publ., 1988
  3. William.R.Pinch, Warrior ascetics and Indian empires, Cambridge University Press, 2006
(தொடரும்)
0
அரவிந்தன் நீலகண்டன்

ஆழி பெரிது

46. விளிம்பு நிலை துறவிகள்

1913ல் பிரிட்டிஷ் அரசாங்கம் காவல்துறைக்காக உருது கையேடு ஒன்றை வெளியிட்டது. அந்த கையேட்டில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சன்னியாசி சம்பிரதாயம் குறித்தும் விளக்கப்படங்கள் இருந்தன. எப்படிப்பட்ட நாமங்கள் இடுகிறார்கள்? அவர்களுடைய நெற்றியில், தோளில் இருக்கும் மத அடையாளங்கள் என்ன?

இவர்கள்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள். கலகக்காரர்கள். அரச விரோதிகள். 20ம் நூற்றாண்டில் அல்ல 19ம் நூற்றாண்டிலேயே இந்த சாது சன்னியாசிகளை பிரிட்டிஷ் அரசாங்கமும் அதற்கு முன்னால் கும்பெனி என்கிற கிழக்கிந்திய கம்பெனியும் தங்கள் எதிரிகளாக அடையாளம் கண்டுவிட்டனர்.

1824ல் வில்லியம் ஸ்லீமான் (William Sleemann 1788-1856) என்கிற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி, கம்பெனி அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களில் ஊர் ஊராக செல்லும் சாதுக்கள் கூட்டமாக செல்வதை வலுக்கட்டாயமாக தடுக்கும் Vagrant Act என்பதை உருவாக்கி அமுல்படுத்தினான்.  சாதுக்கள் மீது தான் கண்ட குறைகளை அவன் பதிவு செய்தான். இந்துக்களில் எல்லா சாதியினரும் பைராகிகளாகவும் கோஸ்வாமிகளாகவும் ஆக முடிகிறதாம். அத்துடன் இந்த சன்னியாசிகள் பிரிட்டிஷாருக்கு எதிரான கருத்துக்களை பரப்புகிறார்கள். எனவே இத்தகைய சன்னியாசிகள் காவல் நிலையங்களில் கட்டாயமாக ரிஜிஸ்டர் செய்யப்பட வேண்டுமென சட்டமியற்றினான்.

1857 எழுச்சிக்கு இத்தகைய சாதுக்களின் பங்களிப்பு இருந்திருக்கவேண்டுமென்பதை அப்புரட்சி நெருப்பைப் பரப்ப பயன்படுத்தப்பட்ட மதக்குறியீடுகள் சுட்டிக்காட்டின என்னும் அடிப்படையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெஞ்சமின் டிஸரேலி போன்றவர்கள் விவாதித்தனர். (புரட்சியில் ஈடுபட ஒத்துக்கொண்ட சிப்பாய்கள் தங்களுக்குள் தாமரை மலர்களை பரிமாறிக்கொண்டார்கள்).

பிரிட்டிஷாரின் அச்சம் பொருளற்றது என கூற முடியாது. 1920ன் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நாகபுரியில் நடந்தது. அப்போது அந்த மாநாடு குறித்த ரகசிய காவல்துறை அறிக்கை ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறது. ‘மிகவும் சக்தி வாய்ந்த நாக சாதுக்கள் என்னும் போர்வீர சாதுக்கள் நூறுபேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மக்களிடையே கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.’

சரி இதற்கும் வேதத்துக்கும் என்ன தொடர்பு?

சித்தர்கள், கலகக்கார துறவிகள். துறவறத்தையும் போர் பயிற்சியையும் ஒருங்கிணைத்து சமூகத்தின் விளிம்பு நிலைகளில் வாழ்ந்தவர்கள். சமுதாயத்துக்கும் அந்த சமுதாயம் பேணிய ஆழ்ந்த அறத்துக்கும் ஆபத்து வந்த போது அதை காப்பாற்ற சமுதாயத்துக்குள் வந்து மையமாக பணியாற்றி பின் மீண்டும் ஒதுங்கி தவ வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் குறித்த ஒரு விவரணையை முதன் முதலாக நாம் வேதத்தில் காண்கிறோம்.  பொதுவாக வேத ரிஷிகள் இல்லற வாழ்க்கை வாழ்ந்தவர்கள். சமுதாயத்திலிருந்து விலகிச் சென்ற துறவிகள் அல்ல. ஆனால் வேத சமுதாயத்தில் அத்தகைய துறவிகள் வாழ்ந்தனர். அவர்கள் மதிக்கப்பட்டனர். பின்னர் நாக சாதுக்கள், நாத சித்தர்கள், சங்கரரின் பாரம்பரியத்தில் உருவாக்கப்பட்ட தசநாமிகள், பைராகிகள் – இவ்வகையிலான அனைத்து விளிம்புநிலை சமுதாயத்தின் ஆன்மிக குரலாக வாழ்ந்த சன்னியாசி மரபுகள் அனைத்தும் இந்த வேத பாரம்பரியத்தில் மதித்து போற்றப்பட்ட துறவி-ஞானிகள் எனும் சமூகத்திலிருந்து விருட்சங்களானவை ஆகும்.

ரிக் வேதத்தில் முனிகள் மற்றும் யதிகள் ஆகிய துறவிகளை நாம் காண்கிறோம். யதிகள் சித்த மரபினராக இருக்க வேண்டும். அவர்கள் படைப்பாக்கச் சக்தி கொண்டவர்கள். தெய்வங்களைப் போல் இவர்கள் படைப்பவர்களா என்றால் வேதம் தெய்வங்கள் யதிகளைப் போல் படைப்பாற்றல் கொண்டவர்கள் என கூறுகிறது (ரிக் 10.72.7). பாம்பாட்டிச் சித்தர் சித்தர்களின் முக்கியத்தன்மையாக இந்தப் படைப்பாற்றல் சித்தியைப் பாடுகிறார்: ‘இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்’ இந்திரனைத் துதித்தவர்கள். (ரிக் 8.6.18). சாமவேதத்தில் இந்த யதிகள் போரிடுபவர்கள் என்னும் குறிப்பும் வருகிறது. (சாமம் 2:314)

முனிகள் குறித்த வேத சித்திரம் சித்தர்களுக்கான இலக்கணமாகவே அமைகிறது. ககன மார்க்கமாக செல்பவர்கள், தவத்தால் சிக்தி பெற்றவர்கள்; தம்முள் அண்டத்தையே அடக்கும் வல்லமை கொண்டவர்கள். சூரியனின் தகதகப்பையும் பூமியின் நிறத்தையும் ஒத்த காவி-மஞ்சள் ஆடை அணிந்தவர்கள். நீண்ட கேசம் உடையவர்கள். ருத்ரனுடன் அமர்ந்து விஷத்தை அருந்தும் ஆற்றல் உடையவர்கள். அனைத்து இறை சக்திகளுக்கும் தோழர்கள். இதுதான் முனிகள் குறித்து வேதம் அளிக்கும் சித்திரம் (ரிக். 10:136: 1-7). சித்தர் வல்லபம் என்கிற தலைப்பில் பாம்பாட்டிச் சித்தர் அளிக்கும் சித்திரமும் இந்த வேத சித்திரத்தின் அனுபவ எதிரொலியாக அமைகிறது:

கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டிவிடுவோம்

கடுவிஷந்தன்னைக் கக்கி ஆடு பாம்பே … [பாடல் 25]

…எட்டுமலைகளைப் பந்தா யெடுத்தெறிவோம்

ஏழு கடலையுங் குடித்தேப்பமிடுவோம் …[பாடல் 28]

மற்றொரு முக்கியமான வேத சமுதாய துறவிகள் குழு ஒன்று இருந்தது. அவர்களே பின்னாட்களில் ஆயுதம் ஏந்திய துறவிகளாகப் பரிணமித்தனர். அலெக்ஸாண்டர் முதல் அவுரங்கசீப் வரை அன்னிய ஆதிக்கங்களை எதிர்த்து போராடிய அந்த வீர துறவிகளின் வேத வேர்களையும் வரலாற்றுப் பரிமாணங்களையும் அடுத்து நாம் காணலாம்.

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:

  • William R. Pinch, Peasants and Monks in British India, Oxford India Paperbacks, 1999
  • பேரா. டி.என்.கணபதி, தமிழ்ச்சித்தர் மரபு, ரவி பப்ளிகேஷன்ஸ் 2004

0

அரவிந்தன் நீலகண்டன்

விடுவித்த வேதம் (45. ஆழி பெரிது)

அன்று பெண்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே இனி சொல்லப் போகும் விஷயங்களின் முக்கியத்துவம் நமக்கு முகத்தில் அறைவது போலப் புரியும்.

இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் எதுவும் முழுமையானவை எனச் சொல்லமுடியாது. அவை களத்தில் நடக்கும் விஷயங்களின் ஓரளவு மட்டுமேயான கணிப்பு மட்டுமே. ஆனால் அந்த மட்டிலும்கூட இந்தத் தகவல்கள் விவரிக்கும் சித்திரம் அதிர்ச்சி ஊட்டுவது. 1921ல் 612 பெண் குழந்தைகள் விதவைகள். அவர்களின் வயது ஒன்றிற்கும் கீழே. இந்தக் குழந்தைகள் அனைவருமே இந்துக்கள். 498 விதவைக் குழந்தைகளின் வயது ஒன்றிலிருந்து இரண்டு வரை. இரண்டிலிருந்து மூன்று வயதுக்குள்ளான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை: 1280. மூன்றிலிருந்து நான்கு: 2863. நான்கிலிருந்து ஐந்து: 6758.  ஐந்திலிருந்து பத்து: 12,016. இவை மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள். உண்மைத் தொகை இதற்குப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை  மிக எளிதாக ஊகிக்கலாம்.

இப்படிக் குழந்தை விதவைகளை உருவாக்குவதில், சொத்து அபகரிப்பு முதல் பெண்களை ’கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது’ என்பது வரை பல நோக்கங்கள், சமுதாயத்தின் தேக்கநிலை சக்திகளுக்கு இருந்தன. இதற்கு மத – ஆசார முலாமும் பூசப்பட்டது. இது எங்கள் மதம். மாட்சிமை தாங்கிய பேரரசி எங்கள் மத நம்பிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என 1857ல் சொல்லியிருக்கிறார்கள். எனவே இதை மாற்றக்கூடாது என்றார்கள். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பிரிட்டிஷ் அரசாங்கமும் இதில் பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான். குழந்தைத் திருமணங்களுடன் ஒப்பிடுகையில் மற்றொரு சமூக அநீதியான ‘சதி’ அல்லது உடன்கட்டை மிக அரிதாக நிகழ்ந்த நிகழ்ச்சி. ஆனால் அதை உலக அளவில் பெரிதாக்கி, பின்னர் அதைத் தடைசெய்ததில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. நாங்கள் இந்த இருண்ட தேசத்துக்குப் பண்பாட்டைக் கொண்டு வருகிறோம். ஆனால் குழந்தைகள் திருமணம் என்கிற அதைப்போன்ற ஒரு முக்கியமான சமூகக் கொடுமையை அழிக்க பிரிட்டிஷார் முன்வரவில்லை. காரணம் இருந்தது. உடல்நிலையும் மனநிலையும் சரியில்லாத அடிமைப்புத்தி கொண்ட ஒரு மக்கள்கூட்டம், ’எங்களை இப்படியே வைத்திருப்பதுதான் எங்கள் மதம்’ எனத் தாங்களாகவே விண்ணப்பிக்கும்போது அதை மாற்ற முயற்சி செய்யும் அளவுக்கு பிரிட்டிஷார் முட்டாள்கள் இல்லை. இன்னொரு விதத்திலும் இது பிரிட்டிஷுக்கு உதவியது. ’நாங்கள் ஆட்சி நடத்தும்போதே இந்த விஷயங்களில் தலையிட எங்களுக்கு முடியவில்லை. இனி நாங்களும் வெளியே போய்விட்டால் இந்தக் காட்டுமிராண்டிகள் என்ன நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டு வந்துவிடுவார்கள்! எனவே நாங்கள் இருப்பது அவசியம்.’ இந்த பிரசாரத்தையும் அவர்கள் செய்து வந்தார்கள்.

’குழந்தைத் திருமணம் நடக்காவிட்டால் மாதம் மும்மாரி பெய்யாது, ஏனென்றால் மழை பெய்வது கற்புக்கரசிகளுக்காகவே. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்னரே அவளுக்கு ’இதுதான் உன் கணவன்’ எனக் காட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் அவள் மனம் மாசு பட்டுவிடும். அப்படி அலைபாயும் பெண், கற்புநிலை தவறிவிடுகிறாள். பெண் கற்புநிலை தவறிவிட்டால் மழை பெய்யாது.’ இப்படியெல்லாம் ‘ஆன்மிக விளக்கங்கள்’ அளிக்கப்பட்டன.

மகாத்மா காந்தி குழந்தைத் திருமணம், விதவைக் குழந்தைகளின் நிலை ஆகியவை குறித்து மனம் வெதும்பி எழுதினார்: “நான் ஒவ்வொரு முறையும் கடவுளிடம் கேட்கிறேன்… என்னை ஏன் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சாட்சியாக உயிர்வாழ வைக்கிறாய் இறைவா!” (7-செப்டம்பர்-1927)

இத்தகைய இக்கட்டான சூழலில் வேத தர்மத்தின் குரல் ஒலித்தது. ஆரிய சமாஜ தலைவர்களின் மூலமாக. குழந்தைத் திருமணத்துக்கு வேத ஒப்புதல் கிடையாது என மூலை முடுக்கெல்லாம் ஆரிய சமாஜிகள் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரிட்டிஷார் உருவாக்கிய ஆசாரப் பூனைகள் அதிர்ந்தார்கள். வேதங்களிலிருந்து ஆரிய சமாஜிகள் மேற்கோள்களைக் காட்டினர். இதோ வேத தொன்மம், ’சூரிய தேவனே தன் மகளை அவள் விருப்பப்படி தேர்ந்தெடுத்த கணவனுக்கு அளிக்கிறான்.’ (ரிக் 1:157:1) பெண்கள் தங்கள் கணவனை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமையும் அறிவும் பெற வேண்டும். அந்த வயதுக்கு வந்த பிறகே அவர்கள் திருமணம் செய்ய வேண்டும். ஆசாரவாதிகள் வெகுண்டெழுந்தார்கள். ஆனால் அறிஞர்களும் மக்களும் சிந்திக்க ஆரம்பித்தார்கள். வேதத்தில் இருக்கும் திருமண மந்திரங்கள், ’மனைவி அவள் புகும் வீட்டின் இல்லத்தரசி’   என்றே தெள்ளத் தெளிவாகச் சொல்கின்றன. ஆம். நாம் எளிதாக இன்று பயன்படுத்தும் இந்த ‘இல்லத்தரசி’ என்கிற வார்த்தையே வேதத்தில் நாம் காணும் கருத்தாக்கம்தான்.

உன் புகுந்த வீட்டில் மாமியாருக்கும் மாமனாருக்கும் அன்பு கொண்ட அரசாட்சி செய்பவளாக இருப்பாய். உன் கணவனின் சகோதர சகோதரிகளின் மீது உனது ஆட்சி முழுமையாக அமையட்டும். (ரிக் 10:85:46)

ஒரு வயது கூட நிரம்பாத பெண் குழந்தை எப்படி இல்லத்தரசி ஆக முடியும்? எப்படி அன்பான அரசாட்சி செய்யமுடியும்? அதுவும் வயது முதிர்ந்த மாமியார் மாமனார் மீது? மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது நீங்கள் வேதம் சொல்வதை எதிர்க்கிறீர்கள் அல்லவா? வேதத்தை எதிர்க்கிற நீங்கள் எப்படி உங்களை சனாதன தர்மிகள் எனச் சொல்லமுடியும்?

குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர் ஹர் பிலாஸ் சாரதா. வேத அறிஞர். ஹிந்து தேசியவாதி. ஒவ்வொரு மாகாணத்திலும் சென்று பேசினார். அங்கே உள்ள சமூக சீர்திருத்தவாதிகளை முடுக்கிவிட்டார். விடுதலை கிடைக்கவேண்டுமென்றால் முதலில் நாம் பண்பட வேண்டும். நம் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அவர்களுக்குக் கல்வி வேண்டும். அதுதான் முக்கியம். இல்லாவிட்டால் விடுதலை கிடைக்காது. நாம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். வேதம் என்ன சொல்கிறது பாருங்கள். சாரதாவின் உழைப்பு பலன் கொடுக்க ஆரம்பித்தது. பிரிட்டிஷ் கலெக்டர்கள் தங்கள் அறிக்கைகளில் சொன்னார்கள்: ’பெண்களின் திருமண வயதை உயர்த்த மக்கள் விரும்புகிறார்கள்.’

அன்றைய ஆச்சாரவாதத்தின் தென்னகத் தலைநகராக இருந்த கும்பகோணத்தில் பெண்கள் கூடி எதிர்ப்பில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். சாரதா கொண்டு வரும் பெண்கள் விவாக வயதை அதிகரிக்கும் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். தூத்துக்குடியிலிருந்து லஷ்மி ஏகாம்பரம், கஞ்சம் ஊரிலிருந்து ஹிந்து பதித பாவன மிஷன், சென்னையிலிருந்து ஹிந்து தர்ம பரிபாலன சபா, வீரராகவ புரத்திலிருந்து பாரத ஸ்திரிகள் மண்டலியை சேர்ந்த கோமதி அம்மள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் சமூக போராளிகள் இணைந்து குரல் கொடுத்தனர். சாரதா கொண்டு வரும் சட்டம் அவசியம் இந்தச் சமுதாயத்துக்கு வேண்டும். (இது 1929ல் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் ஒரே ஒருவர்தான் என்பது போல பிரசாரம் செய்யப்படுகிறதே, அவர் இதையெல்லாம் குறித்து மேடை மேடையாகப் பேச்சளவில் முழங்கியதற்கு முன்னால் களத்தில் போராடியவர்கள், சத்தியமான வேதநெறி தழைத்தோங்க குரல்கொடுத்தவர்கள், உழைத்தவர்கள்.)  செப்டம்பர் 28, 1929ல் சாரதா சட்டம் அமலுக்கு வந்தது. ஏப்ரல் 1, 1930ல் அது அனைத்து இந்தியர்களுக்கும் சட்டமானது. நவீன இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு இது. பெண் விடுதலைக்கான மிக முக்கியத் தாவல் இது.

ஹர் பிலாஸ் சாரதா இல்லையென்றால் இந்தியாவில் பெண் விடுதலை பல பத்தாண்டுகள் ஏன் ஒரு நூற்றாண்டு கூட பின் தள்ளப்பட்டிருக்கும். இந்த மகாமனிதர் இதற்காக செய்த உழைப்பு தியாகங்கள் அவர் பெற்ற சொல்லடிகள், எதிர்ப்புகள், அவமானங்கள் இவை எதுவுமே இன்று நம் நினைவில் இல்லை. ஆனால் அவர் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அதை செய்யவில்லை. அவரை இயக்கியது அவர் மூலமாக வெளிப்பட்டது வேத ரிஷிகளின் ஞான ஒளி, அந்த ரிஷிகளின் சமுதாய சிந்தனை. வேத ரிஷிகளுக்கும் ஹர் பிலாஸ் சாரதாவுக்கும் இதற்காக உழைத்த நவீன வேத போராளிகளான ஆரிய சமாஜிகளுக்கும் ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டிருக்கிறான்.

சாரதா அத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்ததாக ஏற்கெனவே விதவைகளாக வாழ்வோருக்கு சொத்துரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தார் சாரதா. ’வேதங்கள் மனைவி கணவனின் சரி பாதி என கூறுகின்றன. எனவே கணவன் இறந்துவிட்டாலும், மனைவியின் மூலம் சரி பாதியாக அவன் வாழ்கிறான். அப்படி அவன் வாழும்போது அவனது சொத்துக்கள் எப்படி அவனுக்குப் (அதாவது மனைவிக்கு) போகாமல் இருக்க முடியும்?’ பிரகஸ்பதி இந்த வாதங்களை முன்வைத்துச் சொல்கிறார், ‘எனவே கணவனுக்கு முன் மனைவி இறந்தால் அவன் கையிலிருந்து நெருப்பு அவளுக்குச் செல்ல வேண்டும். மனைவிக்கு முன் கணவன் இறந்தால் அவன் சொத்து அவளுக்கு செல்ல வேண்டும்.’ பண்டைய இந்தியாவில் இந்த நிலை இருந்ததா என்றால் அது முழுமையாக இருந்திருக்க முடியாது. அன்றைய சமுதாயச் சூழலில் ஒரு பெண் எந்த அளவு தனியாகச் சொத்து நிர்வாகம் செய்திருக்க முடியும்? இருப்பினும் இன்னொரு விஷயத்தையும் நாம் காண்கிறோம். பல விதவை ராணிகள் அரசாண்டிருக்கிறார்கள். மிகத்திறமையாகவே அரசாட்சி செய்திருக்கிறார்கள். ராணி மங்கம்மாள், அகல்யாபாய் கேல்கர் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம்.   எனவே பிரகஸ்பதி தர்ம சாஸ்திரத்தின் சிந்தனை, சமூகத் தளத்தில் ஏற்பு உடையதாக அமைந்திருக்கிறது.

– அரவிந்தன் நீலகண்டன்

ஆழி பெரிது – முந்தைய பாகங்களைப் படிக்க.

ஆழி பெரிது

44. புத்தெழுச்சி

பாபா சாகேப் அம்பேத்கர் வேத சமுதாயம் காட்டும் வர்ணம் குல தர்மம் அல்ல என்பதை மிகவும் ஆணித்தரமாக மீண்டும் கூறுகிறார். அவரது சாதி ஒழிப்பு குறித்த புகழ் பெற்ற கட்டுரைக்கு பின்னால் மகாத்மா காந்தியுடன் அவர் நிகழ்த்திய உரையாடலின் போது மீண்டும் இதை தெளிவுபடுத்துகிறார். பாபா சாகேப்புடன் உரையாடும் போது காந்திக்கே வர்ணம் என்பது குலதர்மத்தை அடிப்படையாக கொண்டது எனும் எண்ணம் இருக்கிறது. இதனை அம்பேத்கர் மறுக்கிறார். காந்தியின் இந்த எண்ணம் வேத நெறிக்கு புறம்பானது என அவர் கருதுகிறார்: ‘வேதம் காட்டும் வர்ண கோட்பாடென்பது ஒருவருடைய இயல்பான குணத்துக்கு ஏற்ப அமைந்ததே. மகாத்மா காந்தியின் வர்ண கோட்பாடோ ஒருவரது இயற்கையான இயல்பை கணக்கில் எடுக்காமல் குலத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.’

இதைத் தொடர்ந்து இன்றைய காலகட்டத்தில் வேத சமுதாயத்தின் வர்ணப் பிரிவுகள் குறித்தும் கூட கவலைப்பட வேண்டியதில்லை என்பதால் வர்ணவியவஸ்தா என்பதையே தாம் தேவையற்றதென கருதுவதாக அம்பேத்கர் கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறும் மற்றொன்று மிகவும் முக்கியமான கருத்தாகும்: ‘சாதியும் வர்ணமும் ஒரே பொருளைக் குறிக்கும் இருவார்த்தைகள் என்று கொண்டு பின்னர் வர்ணம் என்பது ஹிந்து மதத்தை வரையறை செய்யும் சாஸ்திரங்களின் இன்றியமையாத விஷயம் என கொண்டால் பின்னர் சாதியை மறுதலிக்கும் எவரும் எப்படி ஹிந்துவாக இருக்க முடியும்?’

தான் இந்துவாக இறக்க மாட்டேன் என அம்பேத்கர் கூறிய ஹிந்து மதம் வர்ணத்தையும் சாதியையும் ஒன்றாக காணும் இந்து மனப்பாங்கைதான். அவரது காலகட்டத்தில் ஏன் இன்றைக்கும் கூட பெரும்பான்மையான இந்துக்களின் மனநிலை இதுவாகவே இருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும். ஆனால் அம்பேத்கர் சுட்டிகாட்டியுள்ளது போல வேத சமுதாயம் உண்மையிலேயே பிறப்படிப்படையில் அமையாத ஒரு சமூக அமைப்பையே ஆதர்சமாக கட்டமைத்தது. எனவேதான் அம்பேத்கரின் குரலை வேத சமூகநீதியின் குரலாக கருதவேண்டும்.

சிலர் இது அதீதமான கற்பனையோ என எண்ணலாம். ஆனால் நவீன இந்தியாவில் சமூகநீதிக்கான குரலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலும் வேத தருமத்தின் புத்தெழுச்சியுடன் இணைந்தே எழுந்தன என்பதை நினைவில் கொண்டால் அண்ணல் அம்பேத்கரின் குரல் இப்பெரும் கால வெள்ளத்தில் உருவான மகத்தான பெரும் பேரலை என்பதை உணர முடியும்.

ஆரிய சமாஜம் இந்திய விடுதலை போராட்டத்திலும் சரி இந்திய சமூகநீதி போராட்டத்திலும் சரி மிகப் பெரிய போராளிகளை உருவாக்கியது. பெருந்தலைவர் எம்.சி.ராஜா தலித் மக்களுக்காக போராடிய மிக முக்கிய தலைவராக ஆரிய சமாஜ தேசியவாதியான லாலா லஜ்பத்ராயை குறிப்பிடுகிறார். வேத புத்தெழுச்சி இவ்விதமாக தேசிய விடுதலையையும் சமூகநீதியையும் நோக்கி பயணித்ததை பிரிட்டிஷார் மிகவும் அச்சத்துடன் நோக்கினார்கள். வட இந்தியாவின் அவுத் மற்றும் வட மேற்கு பகுதிகளின் லெப்டினண்ட் கவர்னராக இருந்த சர் ஹெர்கோர்ட் பட்லர் லக்னோவிலிருந்து சர் டன்லப் ஸ்மித் என்பவருக்கு எழுதிய ரகசிய கடிதத்தில் (1-டிசம்பர்-1907) குறிப்பிடுகிறார்:

ஆரிய சமாஜத்தின் நோக்கம்தான் என்ன? இவர்களால் பெண் கல்வி ஏற்படும் தாக்கம் என்ன? அரசாங்கம் விரைவாக செயல்படவில்லை என்றால் ஆரிய சமாஜம்தான் பெண்கல்வியை பெரிய அளவில் கொண்டு செல்லும். பெண்கள் நமக்கு எதிராக திருப்பப்பட்டால் நம் நிலை இந்த நாட்டில் கதியற்றதாகிவிடும். தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்தில் மேலே கொண்டு வரும் போக்கும் தேசிய உணர்ச்சிக்கு உரமளிக்கும் போக்கும் இணைந்த ஆபத்தான இயக்கம் ஆரிய சமாஜம்.

வேத புத்தெழுச்சியை முன்வைத்த தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜமே இன்று ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப் பதமாக இருக்கக்கூடிய ‘தலித்’ எனும் பதத்தை சமூகநீதிக்கான போராட்டத்தில் முதன்முதலாகப் பயன்படுத்திய இயக்கம் என்பது தற்செயலானதல்ல. 1880களிலேயே தலித் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் பாடசாலையை ஆரிய சமாஜம் உருவாக்கியது. 1921 இல் தலித்தோத்பன் சபை எனும் தலித் மேம்பாட்டு அமைப்பை சுவாமி சிரத்தானந்தர் டெல்லியிலேயே உருவாக்கினார். அண்ணல் அம்பேத்கர் சுவாமி சிரத்தானந்தரை குறித்து இப்படி கூறுகிறார்: ‘சுவாமி சிரத்தானந்தரே ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய, மிக சிறந்த தலைவர் ஆவார்’ (the greatest and the most sincere champion of the Untouchables). சுவாமி சிரத்தானந்தர் வேத நெறியால் செதுக்கப்பட்டவர் ஆவார்.இந்த தேசம் தாழ்வுற்று அல்லலுற்று அன்னிய ஆதிக்கத்திலும் மூட பழக்கவழக்கங்களிலும் சமூக தேக்கநிலையிலும் இருந்த போது இந்த தேசத்தை மேலெழுப்பியது வேத புத்தெழுச்சியே.

பெண்விடுதலைக்கு அடிப்படை அஸ்திவாரத்தை நவீன இந்தியாவில் அழுத்தமாக அமைத்ததும் வேத புத்தெழுச்சியே.

(தொடரும்)

0

அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய அத்தியாயங்கள்

ஆழி பெரிது

43. அம்பேத்கர் வெளிப்படுத்தும் வேத சமுதாயம்

வேத சமுதாயத்தின் தன்மை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன் வைக்கிறார். இதன் முக்கியத்துவம் கருதி அம்பேத்கரின் விரிவான விவரணம் முழுமையாக முன் வைக்கப்படுகிறது:

மிகவும் தனித்தன்மை கொண்டதாக இந்த (வேத) பாரம்பரியம் ஏன் இருந்திருக்கக் கூடாது என ஐயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இந்த பாரம்பரியத்தின் படி வர்ணம் என்பது மனு மற்றும் சப்த ரிஷிகள் எனும் அமைப்பினரால் ஒரு மனிதருக்கு அளிக்கப்படும் ஒன்றாகும். மக்கள் கூட்டத்திலிருந்து க்ஷத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் இருக்க தகுதியான மக்களை மனு தேர்ந்தெடுப்பார். சப்தரிஷிகள் எனும் அதிகாரிகள் பிராம்மணர்களாக இருக்க தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் போக பிறர் சூத்திரர்கள் ஆவர். இந்த ஏற்பாடு அந்த குறிப்பிட்ட மக்கள் சமுதாயத்துக்கு நான்கு ஆண்டுகள் (அதாவது ஒரு யுகம்) நீடிக்கும். பின்னர் மீண்டும் புதிய வர்ண ஏற்பாடு செய்யப்படும். இந்த முறையில் முதலில் சூத்திரர்களாக இருந்தவர்கள் மீண்டும் பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆவதும், முன்பு பிராம்மணர், க்ஷத்திரிய வைசியர்களாக இருந்தவர்கள் பின்னர் சூத்திரர்கள் ஆவதும் நிகழும் வாய்ப்புகளும் சாத்தியங்களும் உண்டு.

ஆக வர்ண அமைப்பில் உள்ள மக்கள் அல்லது வர்ணத்தின் உரிமையாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான சமுதாய ஏற்பாடு மட்டுமே. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தம்முடைய உடல் திறன் உள்ளத்திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சமுதாயத்துக்கு பங்களிப்பதற்கான தேவையான ஏற்பாடாக இது விளங்கியது. இந்த வர்ண மாற்றங்கள் செய்வதற்கு இடைப்பட்ட காலகட்டமே மனுவந்தரம் என அழைக்கப்பட்டது. மனுவந்தரம் என்பது மனுவால் செய்யப்படும் வர்ண மாற்றம் ஆகும்.

மனுவந்தரம் எனும் இந்த வார்த்தை செழிப்பான பொருள் பொதிந்த ஒரு வார்த்தையாகும். இது இருவிஷயங்களை தெளிவுப்படுத்துகிறது. மனுவும் சப்தரிஷிகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு சமுதாய ஏற்பாடே வர்ண அமைப்பு என்பதை இது காட்டுகிறது. இரண்டாவதாக இந்த ஏற்பாடு ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்தது மட்டுமே என்பதையும் அதன் பிறகு அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதையும் அது காட்டுகிறது. புராணங்கள் இந்த மனுவந்தரத்தின் காலத்தை நான்கு ஆண்டுகள் கொண்ட ஒரு யுகம் எனக் காட்டுகின்றன. ஒவ்வொரு நான்கு ஆண்டுகள் முடியும் போதும் ஒரு சிலரின் வர்ணங்கள் அப்படியே இருக்கும், சிலரின் வர்ணங்கள் மேம்பட்டதாகும், வேறு சிலருக்கோ அது வீழ்ச்சியாக அமையும்.

இந்த வர்ண அமைப்பு முதலில் வயது வந்தவர்களுக்கான அமைப்பாகவே இருந்துள்ளது. இது தொடக்க கால பயிற்சி அல்லது விருப்பு வெறுப்புகள் கொண்ட அவதானிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக மனு மற்றும் சப்தரிஷிகள் ஒருவருடன் நேர்முகத் தேர்வு போன்ற ஒரு முறையில் எப்படி அவரைக் குறித்து எண்ணம் அடைகிறார்களோ அதைப் போன்றே அவரது வர்ணம் அமைந்தது. இது மிகவும் கடினமான ஒரு பகுப்பு முறை என்றே சொல்ல வேண்டும். இந்த வழக்கம் பின்னர் வழக்கொழிந்து போனது.

இதற்கு மாற்றாக குருகுல அமைப்பு உருவானது. ஒரு குரு அல்லது ஆச்சாரியரால் நடத்தப்படும் ஒரு கல்வி நிலையமே குருகுலம் என்பது.  அந்த பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் இந்த குருவிடம் கல்வி கற்க செல்வர். இந்த கல்விக் காலமானது 12 ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடியது. ஒரு குழந்தை குருகுலத்தில் மாணவனாக இருக்கும் போது பிரம்மச்சாரி என அழைக்கப்படுவான். கல்வி காலம் முடிந்த உடன் அந்த மாணவனுக்கு உபநயனம் சடங்கு செய்து வைக்கப்படும். குருகுலத்தில் செய்யப்படும் இந்த உபநயனச் சடங்கே மிகவும் முக்கியமான சடங்காக கருதப்பட்டது. இந்த சடங்கின் போதே மாணவனின் வர்ணம் நிச்சயிக்கப்பட்டது. ஆச்சாரியரால் வர்ணம் நிச்சயிக்கப்பட்ட மாணவன் சமுதாயத்தில் சென்று அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட தனது வர்ணத்துக்கான கடமைகளை செய்வான்.

மனு-சப்தரிஷி அமைப்பிற்கு மாற்றாக  குருகுல கல்வியின் இறுதியில்  உபநயனத்தின் போது ஆச்சாரியர் அல்லது குருவால் வர்ணம் நிர்ணயிக்கப்படும் முறை ஏற்பட்டது. இந்த முறை நிச்சயமாக முந்தைய முறையைக் காட்டிலும் மேம்பட்டதாக அமைந்தது. என்றோ வந்து மனு சப்தரிஷி அமைப்பினர் வர்ணத்தை நிர்ணயிப்பதைக் காட்டிலும் நடைமுறையில் குருகுல முறை மிகச்சிறப்பானதாக அமைந்தது. வர்ணம் என்பதற்கான அடிப்படைத் தேவை கல்வி என்பதாக இது இந்த முறையை மாற்றியமைத்தது. வர்ணத்தை நிர்ணயிக்க ஒரு தனிமனிதன் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் அது அடிப்படையாக கொண்டிருந்தது. இது வர்ண அமைப்பில் நிச்சயமாக ஒரு மிகச்சிறந்த முன்னகர்வே ஆகும்.

ஆச்சாரிய குருகுல அமைப்பு ஏற்பட்ட பிறகு வர்ணத்தின் கால அளவு என்பது நான்கு ஆண்டுகள் என்பதற்கு பதிலாக ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டுவிட்ட வர்ணம் அந்த தனிமனிதனின் ஆயுள் முழுவதற்கும் நீடித்தது. ஆனால் அது பிறப்படிப்படையில் அமையவில்லை.

அம்பேத்கர் அளிக்கும் இந்த சித்திரம் ஆழமாக அவர் வேதங்களை ஆராய்ந்ததிலிருந்து உருவான சமூக வரலாற்றுப் பார்வையாகும். இதற்கு பிறகு சாதியம் மற்றும் அதிகார வேட்கை தலை தூக்கியதையும் வர்ணம் பிறப்படிப்படையில் மாறியதையும், அதை தக்க வைத்துக்கொள்ள வர்ண அமைப்பில் அரசியல் மற்றும் பண்பாட்டு அதிகாரங்கள் கொண்டிருந்தோர் அதற்கேற்ப கருத்தியல்களை உருவாக்கியதையும் அம்பேத்கர் வர்ணிக்கிறார். ஆனால் ஒன்றை அவர் தெளிவுப்படுத்துகிறார். வேத காலத்து சமுதாயத்தின் வர்ண அமைப்பு பிறப்பு அடிப்படையில் உருவான ஒன்றல்ல என்பது மட்டுமல்ல வேத காலத்தில் சமுதாய அமைப்பினை உருவாக்குவது குறித்து பெரும் விவாதங்களும் பரிசோதனைகளும் நடந்து அதன் மூலம் குருகுலம்-வர்ணம் எனும் சிறப்பான ஒரு முறையை உருவாக்கினார்கள். பிற்காலத்தில் அது சிதைந்தும் தேக்கமடைந்தும் போனது என்பதே உண்மை.

(தொடரும்)

0

அரவிந்தன் நீலகண்டன்

ஆழி பெரிது

42. வேதத்தின் சமூகப் பார்வை-1. ஆழியும் பிரமிடும்

சென்ற அத்தியாயத்தில் அசுவமேத வேள்வி ஆபாச பாலியல் சடங்கா என்பதைப் பார்த்தோம். இதனுடன் இணைந்த மற்றொரு பிரபலமான, தவறான கண்ணோட்டம் வேதங்கள் குறித்து உண்டு.  வேத காலத்தில் சாதியம் இருந்ததா? வேத கால வர்ண அமைப்பு எத்தகையதாக இருந்தது?

இதனை முழுமையாக அறிந்து கொள்ள வேத சமுதாயத்தை மட்டும் தனியாகப் பார்க்காமல் பொதுவாக மானுட சமுதாயங்களில் சமூக படிநிலைகள் எப்படி உருவாகின்றன என்று கவனிக்கவேண்டும். அத்துடன் அத்தகைய படிநிலைகளில் பிறப்படிப்படையிலான ஏற்றதாழ்வுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அதை மத நூல்கள் அங்கீகரிக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.

இது நவீனத்துவ யுகம். இந்த நவீனத்துவ யுகத்தில் இருக்கும் அமைப்புகளில் ஜனநாயக அமைப்பே மிகச் சிறந்தது. இந்த நவீனத்துவ யுகத்துக்கு மேற்கத்திய நாடுகள் வருவதற்கு மிக அதிக அளவில் மூலதனமும் இயற்கை வளங்களும் தேவைப்பட்டன. அவற்றை மேற்கத்திய நாடுகள் காலனிய ஆதிக்கம் மூலம் இன்றைய மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சுரண்டி எடுத்தன. இதனால் மூன்றாம் உலக நாடுகளின் சமூக அமைப்புகள் தேக்கமும் இறுக்கமும் அடைந்தன. அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்தன்மையை அடைந்தன. இந்த அடிப்படையான பிளவு மேற்கத்திய பண்பாட்டின் உயர்ந்த தன்மை காரணமாகவும் இதர பண்பாடுகளின் தாழ்வு காரணமாகவும் ஏற்பட்டது என்பதாக ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டது. இதுவே உலகமெங்கும் நிலைநிறுத்தப்பட்டது.

ஆனால் உண்மை என்ன? மேற்கத்திய நாடுகளில் பிறப்படிப்படையிலான சமூக அமைப்பு இருந்தது. அதற்கு மத பீடங்களின் ஆதரவும் இருந்தது. இந்தியாவில் தீண்டாமை ஏற்படுவதற்கு முன்னரே கூட மேற்கத்திய சமுதாயத்தில் அது பரவலாக இருந்தது என நம்ப இடமிருக்கிறது. வரலாற்றாசிரியர் கேட்டி ஸ்டூவர்ட் என்பவர் சொல்கிறார்: ‘புனித ரோமானிய பேரரசெங்கும் ’கீழான தொழில்’ செய்தோரை ‘மேலான தொழில்’செய்தோர் பல்வேறு விதமான சமூக பொருளாதார சட்டபூர்வமான அரசியல் ரீதியான பாரபட்சங்களுக்கு ஆளாக்கினார்கள். இந்த பாரபட்சங்களில் (கீழ் நோக்கி செல்லச் செல்ல) அதிகரிக்கும் அவமானப்படுத்துதல் இருந்தது. இந்த தொழில் செய்யும் Guild எனப்படுபவை 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் ஐரோப்பாவில் பிறப்படிப்படையிலானவை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இந்திய வர்ணம் நான்கு பிரிவுகளை கொண்டது. ஆனால் மேற்கத்திய சமூக பார்வை ஏழு பிரிவுகளை கொண்டது. இந்த ஏழு பிரிவுகளையும் சமுதாயத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக ஆண்டவர் உருவாக்கினார் என்றும் அவை ஏழு உலகங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக உருவாக்கியதை ஒத்த ஒரு மாறாத அமைப்பு என்றும் மேற்கத்திய மத்திய கால இறையியலில் நம்பப்பட்டது. மேலும் மேற்கத்திய சமூக அமைப்பு இன்றைக்கும் ஒரு ’பிரமிடு’ பார்வை கொண்டது. பிரமிடின் அடி மேடை அகன்று பெரிதாக இருக்கும். உச்சி கூம்பு சிறிதாக இருக்கும். மேற்கத்திய சமுதாயத்தின் மேல் உச்சியில் எப்போதும் சிறுபான்மையினரே இருப்பார்கள். பெரும்பான்மை மக்கள் அதிகாரமும் வளமும் இல்லாமல் எப்போதும் அடிப்பாகங்களிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த வரலாற்றுப் பாடப்புத்தகத்திலும் காட்டப்படும் ஒரு சித்திரம் இது. இதுதான் ஐரோப்பியா கண்ட ஆதர்ச சமுதாய பார்வை.

ஆனால், இந்திய சமுதாய பார்வை வேறுவிதமானது. நான்கு வர்ணங்களும் பிரமிடுகள் அல்ல. மாறாக சமுதாயம் எனும் அதி உயிரியின் உடல் பாகங்கள். இது பெரிய அளவில் அடுக்குமுறை பார்வையை அழித்துவிடுகிறது. புருஷ சூக்தம் குறித்த அத்தியாயத்தில் இதை விளக்கமாக காணலாம். மற்றொரு பார்வையாக இந்திய பாரம்பரியம் முன்வைப்பது பேராழி வட்டங்கள் எனப்படும் Oceanic Circles.  இப்பார்வையை பாரத பாரம்பரியத்திலிருந்து எடுத்து மேற்கத்திய சமூக பார்வைக்கு மாற்றாக முன்வைத்தவர் மகாத்மா காந்தியே ஆவார். அவரது வார்த்தைகளில்:

இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் உண்டு. அக்கிராமங்களின் சமூக அமைப்பு என்றென்றும் விரியும். ஆனால் எப்போதும் உயராத வட்டங்களினால் (ever-widening, never-ascending circles) ஆனதாகும். வாழ்க்கை என்பது பிரமிடாக அதன் சிறிய உச்சி அதன் அடிப்பாகத்தால் தூக்கி நிறுத்தப்படும் தன்மை கொண்ட்தாக அமையாது. மாறாக அது ஒரு ஆழி வட்டமாக அமையும். அதன் மையத்தில் தனிமனிதன் இருப்பான். அவனைச் சுற்றி கிராமம். கிராமத்துக்காக தன்னை கொடுக்கும் தனிமனிதன். கிராமங்களால் உருவான ஆரத்துக்காக தன்னை கொடுக்கும் கிராமம் இறுதியில் இவை அனைத்துமாக ஓருயிராக இயங்கும். அந்த இயக்கம் கர்வமோ தீவிரமோ கொண்டதல்ல பணிவாக பேராழி வட்டங்களின் ஒருங்கிணைந்த உறுப்புகள் எனும் மகோன்னதத்துடன் அவை இயங்கும். (ஹரிஜன், 28-7-1946)

மகாத்மா காந்தி முன்வைக்கும் இந்த ஆதர்ச பார்வை வேத சமுதாய சிந்தனையிலிருந்தே உருவானது. இதை எப்படி தெரிந்து கொள்வது? வேதங்களின் பெயரால் பின்னர் எழுந்த ஸ்மிருதிகளாலும் சமுதாய தேக்க நிலையாலும் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு மனிதர். இந்திய சமூக வரலாற்றின் மிகச்சிறந்த மேதை  என்றே கருதப்படத்தக்கவர். சமூக நீதிக்காக போராடியவர். இந்து சமுதாயத்தின் மீதும் சாதியக் கோட்பாடுகளின் மீதும் மிகக்கடுமையான விமர்சன்ங்களை வைத்தவர். இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரதம சிற்பி, பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்து அதை நாம் ஆரம்பிக்கலாம்.

(தொடரும்)

மேலதிக விவரங்களுக்கு:

Katy Stuart, Defiled Trades and Social Outcasts, Honor and Ritual Pollution in Early Modern Germany, Cambridge University Press, 1999

0

அரவிந்தன் நீலகண்டன்

ஆழி பெரிது

41. அசுவமேத யாகம் தொடர்கிறது

அசுவமேத யாகத்தின் பழங்குடி மரபு வேர்களை நாம் போன கட்டுரையில் பார்த்தோம். அது தொல்பழங்காலத்தில் உருவான ஒரு வளமைச்சடங்கு (fertility ritual). இன்றைக்கும் உலகின் பல பாகங்களில் அது வெவ்வேறு வடிவங்களில் உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் பார்த்தோம்.

இந்திய மரபில் குறிப்பாக வேத இலக்கியத்தில் இந்தப் பழங்குடி சடங்கு எப்படி உருமாற்றம் அடைந்தது? அதில் எவ்வித குறியீட்டுத்தன்மைகள் உட்புகுத்தப்பட்டன? அலசலாம்.

சதபத பிராமணத்தில் மிகவும் விமரிசையாக இந்தச் சடங்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிக்வேதத்தில் அத்தனை விமரிசையான ஒரு சடங்காக அது சுட்டப்படவில்லை. அது மட்டுமல்லாமல் இச்சடங்கின் குறியீட்டுத்தன்மைக்கான தளமும் ரிக் வேதத்தில் சுட்டப்பட்டுவிட்டது. ரிக் வேத குதிரை பலியில் அதன் 34 விலா எலும்புகள் பேசப்படுகின்றன. 34 எலும்புகள் கொண்ட குதிரை. மாக்ஸ் முல்லர் இது குறித்து இங்கிலாந்தின் அன்றைய பிரசித்தி பெற்ற உயிரியலாளரான தாமஸ் ஹக்ஸ்லியிடம் கேட்டார். ஏனென்றால் குதிரைகளுக்கு 36 விலா எலும்புகள் உண்டே. இது வேறு ஏதாவது வகை குதிரையா? இதற்கு பதிலளித்த ஹக்ஸ்லி ஒரு குதிரை பலியிடுவதற்காக கொல்லப்படும்போது அதன் 36 விலா எலும்புகளையும் வெட்ட வேண்டியதில்லை. கடைசி ஜோடி எலும்புகள் சிறிதாக இருப்பதால் அதை விட்டுவிட்டு இந்த பலிச்சடங்கை செய்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் இந்தியவியலாளர் ஆல்ப்ரெட் லுட்விக் இதற்கு ஒரு வேறுபட்ட பொருளை கொடுக்கிறார். வேத இலக்கியங்களில் குதிரை பல இடங்களில் காலத்தைக் குறிப்பதாக காட்டப்படுகிறது. 27 நட்சத்திரங்கள், ஐந்து கோள்கள், சூரிய, சந்திரர் ஆகியவற்றை இணைத்தால் வரும் எண்ணிக்கையை இது குறிக்கிறது என்கிறார் அவர். இதற்கு ஆதாரமாக ஐத்ரேய பிராமணத்தில் வெளிப்படையாகவே பலியிடப்படும் விலங்கின் விலா எலும்புகளின் எண்ணிக்கை வருட சக்கரத்தின் காலப்பகுப்புகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறார். இந்தியவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதியுள்ள பேராசிரியர் சுபாஷ் கக், அஸ்வமேத யாகம் குறித்த தமது நூலில் லுட்விக் கூறியதை ஆமோதிக்கிறார். ஹக்ஸ்லி, லுட்விக் இருவர் கூறியதிலுமே உண்மை இருக்கலாம். உண்மையான ஒரு பலிச்சடங்கு பின்னர் காலத்தை காட்டுவதாக உருமாற்றம் அடைந்திருக்கிறது என நாம் யூகிக்கலாம்.

பிற்காலங்களில் இச்சடங்கு வளமைச்சடங்காக மிக அரிதாகவே நடத்தப்பட்டது. அஸ்வமேத சடங்கின் இதிகாச கால விவரணம் ஒன்று உள்ளது. அது ராமாயணத்தில் பாலகாண்டத்தில் வருகிறது. அதில் தசரதனின் பட்ட மகிஷியான கௌசலை பலியிடப்பட்ட குதிரையுடன் ஓர் இரவை கழித்தாள் என வருகிறது. மேலும் அதனையடுத்து வரும் நிகழ்வுகள் அது ஒரு வளமைச்சடங்கு என்பதுடன் தொடக்ககால ஷாமனிய (Shamanic) மருத்துவச் சடங்கு என்பதையும் காட்டுகிறது. ஆனால் ஒரு தலைமுறைக்குள்ளேயே அதன் சடங்கு தன்மை மாறியிருப்பதை பால காண்டத்திலிருந்து உத்தரகாண்டம் போகும் போது ராமாயணத்திலேயே நாம் காணமுடிகிறது. அது அரச அதிகாரம் தொடர்பான ஒரு சடங்காக மாறுகிறது. அந்த அளவில் அதன் பாலியல் தன்மைகள் ஏறக்குறைய இல்லாமல் ஆகிவிட்டதைக் காண்கிறோம்.

புத்தரின் காலத்தில் இச்சடங்கு நிகழ்ந்திருக்குமா? அதை அவர் கண்டித்திருப்பாரா? புத்தரின் பிறப்பிலேயே இத்தகைய ஒரு சடங்கு (தன்மை மிகவும் மாறிய விதத்தில்) நிகழ்ந்திருக்கக்கூடும். பழமையான புத்த சரிதையான லலிதாவிஸ்தரா புத்தரின் பிறப்பை இப்படி விளக்குகிறது. புத்தரின் அன்னையான மாயாதேவி கருதரிக்கப் போகிறார். புத்தர் எந்த விலங்கின் வடிவத்தில் கருவில் புக வேண்டும் என்பதை தேவர்கள் எல்லாம் கூடி வானுலகில் பேசுகின்றனர். பிராமணர்களின் வேத சாஸ்திர நூல்கள் பிராமணங்கள் சொல்லும் விதத்தில் யானையாக புத்தர் கருவுக்குள் பிரவேசிக்கட்டும் என அவர்கள் முடிவு செய்கிறார்கள். விலங்கு வடிவ கருப் பிரவேசம் என்னும் பழமையான சடங்கு வேத சடங்குகளிலும் பௌத்த ஐதீகங்களிலும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

ஒரு பழங்குடி சடங்கின் ஐதீக நினைவாகவே இந்த பௌத்த தொன்மம் காணப்பட வேண்டும். நாட்டின் நிலத்துக்கும் அரசனின் மனைவிக்கும் வளம் அளிக்கும் ஒரு புராதன சடங்கு. ஷாமனிய அல்லது இறையாவேச குணப்படுத்துவோர் / அரச அமைப்பின் புரோகிதர் எனும் இந்த இரு தன்மைகளும் இணைந்த ஒரு சடங்காக அஸ்வமேதம் மிக அரிதாக செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கும் பாலியல் வார்த்தையாடல்களை, வசைகளை சடங்குகளில் பயன்படுத்துவதைத் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் தாய் தெய்வ வழிபாடுகளில் நாம் காணலாம்.

மேற்கிந்திய தீவு நாடுகளில் உள்ள ஆப்பிரிக்க மக்களின் குழுவழிபாட்டு முறைகளில் இறையாவேசிகளின் சடங்குகள் முக்கியமானவை. அத்தகைய ஒரு இறையாவேச சடங்கில் ‘குதிரை’ பெண் மேல் பிரவேசிப்பது மையமான ஒரு நிகழ்வாக உள்ளது. (தெய்வீக) ஆவி வடிவிலான ஆண் குதிரையால் இப்படி ‘ஆட்கொள்ளப்படும்’ பெண் அந்த தருணத்தில் பாலியல் தன்மை கொண்ட பதங்களை பேசுவாள். அந்த சடங்கில் பங்கேற்பவர்களுடன் உடல் ரீதியாக நெருக்கம் கொள்வாள். இவை அனைத்துமே அந்த சடங்குக்கு பின்னர் அந்தப் பெண்ணுக்கு பெரும் மன விடுதலையையும் ஆளுமை சக்தியையும் அளிக்கும் உளவியல் சிகிச்சையாகவே அமைகிறது. இந்த வேத சடங்கு இன்னும் ஒரு படி ஆழமாக சென்று அந்த யாக குதிரைக்கு ஒரு கவித்துவமான பிரபஞ்ச உருவகத்தை அளிக்கிறது.

யாக குதிரையின் தலையே விடிகாலை. அதன் கண்ணே ஆதவன். அதன் மூச்சே வாயு. அதன் காது சந்திரன். அதன் கால்களே நான்கு திசைகள். அதன் விலாவே வெளி. அதன் கண்சிமிட்டல் இரவும் பகலும். அதன் எலும்பு முட்டுகள் மாதங்கள். அதன் உறுப்புகள் பருவங்கள். அதன் பிடரி மயிர் சூரிய கதிர்கள். அதன் உடலனைத்தும் விண்மீன்கள். அதன் வால் மயிர்கள் விருட்சங்கள். அதன் வாயிலிருந்து வெளிவருவதே அக்னி… (தைத்ரீய சம்ஹிதை 7.5.25)

இறையாவேசி சடங்கு மரபுகளின் மன நல நன்மைகள் மற்றும் பரிணாம முக்கியத்துவம் குறித்து பல ஆராய்ச்சிகள் இப்போது வெளியாகின்றன. இது குறித்த ஆராய்ச்சியில் தன் ஆயுளைக் கழித்த மைக்கேல் விங்கில்மான் இத்தகைய சடங்குகள் குறித்து கூறுவது -அது கொஞ்சம் கடினமாக இருந்தாலும்-  இங்கு முக்கியமானது. அவர் சொல்கிறார்:
இறையாவேச குணப்படுத்தும் வழிமுறைகளின் குறியீட்டுத்தன்மைகளும் சடங்குத் தன்மைகளும் ஓப்பியாட் அமைப்புகளைத் தூண்டி குணப்படுத்தும் செய்முறைகள் ஆகும். அத்துடன் உளவியல் மற்றும் சமூக செயலியல் விளைவுகள் மூலம் ஒருங்கிணைப்பையும் உருவாக்குபவை. வேற்றுமையான பண்பாடுகளுக்கிடையே ஒத்த தன்மை கொண்ட அத்தகைய சடங்குகள் இருப்பது அவை நரம்பியல் வேர்கள் கொண்டவை என்பதற்கான அத்தாட்சி.

அஸ்வமேத யாகத்தையும் இதர வேத வேள்விகளையும் நாம் சரியான கோணத்தில் அணுக இந்த பார்வையே நமக்கு உதவலாம். தாத்தாச்சாரியார்களும் அத்தகையவர்களை முன்வைத்து வேத வேள்விகளை இழிவாக பேசும் போலி பகுத்தறிவாளர்களும் தவறவிடுவது இந்த ஆழத்தையும் முழுமையையும்தான்.

(தொடரும்)

மேலதிக விவரங்களுக்கு:

Subash Kak, The Aswamedha The rite and its logic, Louisiana State University, Baton Rouge, 2001

Yuvraj Krishan,  The Buddha image: its origin and development, Bharatiya Vidya Bhavan, 1996

Michael V. Angrosino, Altered States of Consciousness, in (Encyclopedia of religious rites, rituals, and festivals, Ed. Frank A.Salamone, Routledge 2004)

Michael Winkelman, Shamanism: A Biopsychosocial Paradigm of Consciousness and Healing, Prager 2010

0

அரவிந்தன் நீலகண்டன்