குஷ்வந்த் சிங் : பாகிஸ்தான் போகும் ரயில்
குஷ்வந்த சிங் எழுதிய புகழ்பெற்ற Train to Pakistan நூலின் தமிழாக்கத்தை (பாகிஸ்தான் போகும் ரயில்) கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. சீனா : விலகும் திரை நூலை மொழிபெயர்த்த ராமன் ராஜா இதனை மொழிபெயர்த்திருக்கிறார். பக்கம் 272. விலை ரூ.200. புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.
இந்தியாவில் 1947-ன் கோடைக் காலம் எப்போதும்போல இல்லை. அந்த வருடம் பருவ நிலையே கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. வழக்கத்தைவிட வெயில். வழக்கத்தை விட வெப்பம், வறட்சி, புழுதி!
கோடை முடிவில்லாமல் நீண்டுகொண்டேபோவதுபோல் இருந்தது. எந்த வருடத்திலாவது மழை வருவதற்கு இவ்வளவு தாமதமாகி இருக்கிறதா? யாருக்கும் நினைவில்லை. பற்றாக்குறை மேகங்கள் வாரக் கணக்கில் ஏதோ நிழலடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருந்தன. மழை என்ற பேச்சே இல்லை. ஊர் மக்கள், ‘இது நம் பாவங்களுக்காகக் கடவுள் கொடுக்கும் தண்டனை போலிருக்கிறது’ என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
பாவம் செய்துவிட்டோம் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம் இருக்கிறது.
அதற்கு முந்தின கோடையில்தானே மதக் கலவரங்கள் வெடித்துப் புறப்பட்டன! தேசத்தை இந்து இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என்று இரண்டு கூறாகப் பிரிக்கிற யோசனை முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து கலவரம் வந்தது. கல்கத்தாவில் தொடங்கிக் கலவரம் பரவ ஆரம்பித்தது.
சில மாதங்களுக்குள்ளேயே சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டிவிட்டது.
கலவரத்தை இந்துக்கள்தான் திட்டமிட்டு ஆரம்பித்தார்கள் என்றார்கள் முஸ்லிம்கள். இந்துக்களைக் கேட்டால், பழியை முஸ்லிம்கள்மீது போட்டார்கள். ஆனால் இரண்டு தரப்பிலும் கொலைகள் நடந்தன என்பதே நிஜம். இரண்டு மதத்தினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள். கத்தியால், ஈட்டியால், குண்டாந்தடியால் தாக்கிக்கொண்டார்கள். அவர்களைப் போலவே இவர்களும் சித்திரவதை செய்தார்கள்; பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
கல்கத்தாவில் ஆரம்பித்த கலவரம் வடக்கே, கிழக்கே, மேற்கே எங்கெங்கும் பரவியது. மேற்கு வங்காளத்தில் உள்ள நவகாளியில் முஸ்லிம்கள் இந்துக்களைப் படுகொலை செய்தார்கள். பிகாரில் இந்துக்கள் முஸ்லிம்களைக் கொன்று குவித்தார்கள். பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் முல்லாக்கள் பெட்டி நிறைய மண்டை ஓடுகளை எடுத்துக்கொண்டு அலைந்தார்கள். அவை பிகாரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுடையவை என்று காட்டிக்கொண்டு திரிந்தார்கள். வடகிழக்கு எல்லைப் பிராந்தியங்களில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான இந்துக்களும் சீக்கியர்களும், வீடு வாசலையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அவர்கள் கிழக்கே தம் இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தார்கள்.
கால் நடையாகச் சிலர். மாட்டு வண்டிகளிலும் லாரிகளிலும் அடைத்துத் திணிந்துகொண்டு சிலர். ரயிலின் கூரை மேலும் பக்கவாட்டிலும் தொங்கிக்கொண்டு சிலர் என்று எப்படியெல்லாமோ பயணம் செய்தார்கள். போகிற வழியில், எதிர்ப் பக்கம் பயந்து ஓடிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுடன் மோதிக்கொண்டார்கள். ஆற்று மணல் திட்டுக்களிலும் சாலைச் சந்திப்புகளிலும் ரயில் நிலையங்களிலும் மோதல்கள். எங்கெங்கும் கலவரம்தான் நிலவரம்!
1947-ல் பாகிஸ்தான் என்ற புதிய தேசம் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டபோது, முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என்று ஒரு கோடி மக்கள் கிழக்கும் மேற்குமாகத் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். மழைக் காலம் ஆரம்பித்தபோது அவர்களில் ஏறக்குறையப் பத்து லட்சம் பேர் பலியாகிவிட்டார்கள். வட இந்தியா முழுவதும், ஒன்று ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு அலைந்துகொண்டிருந்தது அல்லது பயத்தில் உறைந்து போய் ஒடிந்துகிடந்தது.
0
ஜக்காவின் நினைவுகள் அவனை உலுக்கி எடுத்துவிட்டன. ‘வேணாங்க அய்யா. சாமி மேல ஆணையா வேணாங்க, வேணாங்க!’ ஜக்கா நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்து சப் இன்ஸ்பெக்டரின் இரண்டு பூட்ஸ் கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ‘முத்துக்கட்டி ராசாவே! பெரிய மனசு பண்ணுங்க!’
ஜக்காவுக்குத் தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது. ஆனால் அந்த மாதிரி சித்திரவதையை இன்னொரு முறை உடம்பு தாங்காது. ‘குருநாதர் மேல ஆணையா நான் ஒரு பாவமும் செய்யலைங்க. கொள்ளைக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாதுங்க!’
ஆறடி நாலு அங்குல மாமிச மலை ஒன்று தன் காலடியில் விழுந்து கெஞ்சுவதைப் பார்த்து இன்ஸ்பெக்டருக்குப் பரவசமாக இருந்தது.
உடம்பு வேதனையைத் தாங்கக்கூடிய மனிதன் ஒருவனும் உலகில் கிடையாது. யாருக்கு என்ன சித்திரவதை என்பதை மட்டும் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். சில பேர் பட்டினி போட்டாலே பணிந்துவிடுவார்கள். இக்பால் போன்றவர்களுக்கு, நாலு போலீஸ்காரர்கள் பார்வை படும் இடத்தில் இயற்கைக் கழிவுகளை வெளியேற்றவேண்டியிருப்பதே போதுமான சித்திரவதை. இன்னும் சிலபேருக்கு, கையைப் பின்னால் கட்டிவிட்டு மூஞ்சியில் வெல்லத்தைப் பூசி ஈ மொய்க்க விட்டுவிடவேண்டும். சிலரைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்தாலே போதும்; வழிக்கு வந்துவிடுவார்கள். கடைசியில் ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும் சரணாகதி ஆகிவிடுவார்கள்.
‘உனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் தரேன். கொள்ளைக்காரங்க பேரையெல்லாம் சொல்லிரு. இல்லாட்டி, பின் பக்கம் அடிக்கிற அடியில ஆட்டு வால் மாதிரி ஆயிடப்போவுது!’ என்று எச்சரித்தார் சப் இன்ஸ்பெக்டர். ஜக்காவிடமிருந்து தன் கால்களை விடுவித்துக்கொண்டு வெளியேறினார்.
0
‘உனக்கு ஏதாவது எழுதப் படிக்கத் தெரியுமா?’
‘எனக்கா? ஊகூம்! எங்க மாமா பையன் இஸ்கூலிலே படிச்ச பாட்டு ஒண்ணு சொல்லித் தந்தான். அதுல பாதி இங்கிலீசு, பாதி இந்தி. கேளுங்க:
பிஜ்ஜின் – புறா
பிளை – பறபற
லுக் – பாரு
இஸ்கை – மானம்!
இது உங்களுக்குத் தெரியுங்களா?’
‘தெரியாதே. அவன் உனக்கு அனா ஆவன்னா எல்லாம் சொல்லித் தரலையா?’
‘இந்த ஏபிசிடிங்களா? அது அந்தப் பயலுக்கே தெரியாது! எனக்குத் தெரிஞ்ச அளவுதான் அவனுக்கும் தெரியும்:
ஏபிசிடி உங்கொப்பன் தாடி
இளுத்துப் பார்த்தா வலிக்கும் தாடி!
இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரியுங்களா?’
‘ம்ஹும். அதுவும் தெரியாது!’
‘கிடக்கட்டும். இங்கிலீசுல ஏதாச்சும் சொல்லுங்க.’
இக்பால் அவனுக்கு குட் மார்னிங், குட் நைட் சொல்வது எப்படி என்று கற்றுத் தந்தான். அடுத்து ஜக்கா, வாழ்க்கையின் மிக முக்கியமான சில நடவடிக்கைகளுக்கு ஆங்கிலத்தில் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினான். இக்பால் பொறுமை இழந்தான்.
அப்போதுதான் அந்த ஐந்து புதிய கைதிகளும் பக்கத்து அறைக்கு வந்து சேர்ந்தார்கள். ஜக்காவின் ஜாலியான மனநிலை, வந்த வேகத்திலேயே மறைந்தது!
0
நரைத்த தாடியுடன் வயதான ஆள் ஒருவர் மிதந்துகொண்டிருந்தார். சிலுவையில் அறையப்பட்ட மாதிரி கைகள் இரண்டும் நீண்டிருந்தன. பொக்கை வாய் அகலத் திறந்து ஈறுகள் தெரிந்தன. கண்ணில் மெல்லிய படலம். தலையைச் சுற்றிலும் பிரபை மாதிரி அவருடைய தலைமுடி படர்ந்து மிதந்துகொண்டிருந்தது. கழுத்தில் ஒரு பெரிய ஆழமான வெட்டு. கழுத்தின் பக்கவாட்டிலிருந்து நெஞ்சுவரை இறங்கியிருந்தது. கிழவர் கை இடுக்கில் ஒரு குழந்தையின் தலையை இன்னும் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையின் தலையின் பின்புறம் ஒரு பெரிய பொந்து!
மலை மீது மரம் வெட்டுபவர்கள் ஆற்று ஓட்டத்தில் மரக் கட்டைகளைச் சமவெளிக்கு அனுப்புவார்களே, அதுபோல் இன்னும் ஏராளமான உடல்கள் வெள்ளத்தில் மிதந்துவந்தன. சில உடல்கள் கண்மாயின் வழியே புகுந்து வேகமாக அந்தப் பக்கம் சென்றுவிட்டன. மற்றவை பாலத்துத் தூண்களில் மோதிப் புரண்டு, மறுபடி வெள்ளம் திருப்பிப் போடும் வரை காயங்களைக் காட்டிக்கொண்டிருந்தன. சிலரின் கை கால்கள் வெட்டப்பட்டிருந்தன. சிலரின் வயிறு கிழிக்கப்பட்டிருந்திருந்தது. பல பெண்களின் மார்பு அறுக்கப்பட்டிருந்தது.
பிணங்கள் ஆற்றின் போக்கில் அமிழ்ந்தும் எழுந்தும் மிதந்துகொண்டு போனபோது தலைக்கு மேலே கருடன்களும் கழுகுகளும் வட்டமிட்டன.
0
பல மணி நேரம் தோண்டியபிறகு ஐம்பது அடி நீளத்துக்குக் குழி ஒன்று தயாராகிவிட்டது. தோண்டிய மண் இரண்டு பக்கமும் மலையாகக் குவிந்துகிடந்தது. பிறகு இயந்திரம் ஓய்வெடுக்கப் போயிற்று; இத்தனை நேரம் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வீரர்களும் போலீஸ்காரர்களும் களத்தில் இறங்கினார்கள்.
அவர்கள் இரண்டிரண்டு பேராக பிளாட்பாரத்துக்குச் சென்று கான்வாஸ் துணி ஸ்ட்ரெச்சர்களைச் சுமந்துகொண்டு வந்தார்கள். ஸ்ட்ரெச்சர்களைப் பள்ளத்தில் சாய்த்துக் காலி செய்துவிட்டு மறுபடி ரயிலுக்குப் போனார்கள். இப்படி நாள் முழுவதும், பொழுது சாய்கிறவரையில் தொடர்ந்து நடந்தது.
பிறகு புல்டோசர் மறுபடி உயிர் பெற்றது. தான் மென்று துப்பிய மண்ணையெல்லாம் மறுபடி அள்ளி விழுங்கிப் பள்ளத்தில் போய்க் கக்கியது; பள்ளம் மறைந்து சமதரையாகியது. அந்த இடமே காய்ந்து போன காயத்தின் வடு மாதிரி இருந்தது. புதைக்கப்பட்டவர்களை நாய் நரிகள் விருந்தாக்கிக்கொண்டுவிடாமல் இரவு முழுவதும் இரண்டு வீரர்கள் காவல் இருந்தார்கள்.
0







