காஷ்மிர் டைரி – 2
ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இளஞ்சூடும் இளங்குளிரும் பரவிக்கொண்டிருந்தது. அங்கேயே வண்டி அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம். உள்நுழையும் வாகனங்களும் வெளியேறும் வாகனங்களும் பல அடுக்கு சோதனைச் சாவடிகளைக் கடக்கவேண்டியிருந்தது. எங்களுடன் வந்திறங்கியவர்களைத் தவிர வேறு ஆள்கள் யாரையும் விமான நிலையத்தில் காணமுடியவில்லை. ஒன்றிரண்டு டாக்ஸிவாலாக்கள் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதால், ஒன்றிரண்டு படங்களை மட்டுமே எடுத்து திருப்திபட்டுக்கொண்டேன்.
மக்கள் புழங்கும் இடத்தை அடைவதற்கு சில நிமிடங்கள் பிடிக்கின்றன. ஓரடி கடப்பதற்குள் குறைந்தது நான்கு ஏகே 47 ஜவான்களைச் சாலையின் இரு பக்கங்களிலும் காணமுடிந்தது. உருது மொழிப் பலகைகள் கொண்ட சிறு கடைகள் அடுத்தடுத்து விரிகின்றன. இரானியப் படங்களில் வருவதைப் போன்ற நீண்ட அங்கி அணிந்த ஆண்கள் சைக்கிளில் விரைந்துகொண்டிருந்தனர். மீண்டும் இரானியப் படங்களில் வருவதைப் போல் அழகாக வெள்ளை முக்காடு அணிந்த காஷ்மிர் மாணவிகள் எறும்பு வரிசையாக நடந்து சென்றனர். அவர்கள் கடந்து செல்லும்வரை எங்கள் வண்டி நிறுத்திவைக்கப்பட்டது.
நகருக்குள் நுழைய நுழைய, ஜவான்களின் அடர்த்தி சற்றே குறையத் தொடங்கியது என்றாலும், திரும்பும் பக்கமெல்லாம் ஏகே 47 முன்வந்து நின்று பயமுறுத்தியது. இவர்களைக் கடந்துசென்றே காஷ்மிரிகள் காலை தேநீர் அருந்தவேண்டும். பள்ளிக்கும் பள்ளிவாசலுக்கும் செல்லவேண்டும். காய்கறிகள் வாங்கவேண்டும். வேலைக்குப் போகவேண்டும்.
Waugh in Abyssinia என்னும் புத்தகத்தில் Evelyn Waugh, இப்படிப்பட்ட ஒரு காட்சியை வருணித்திருப்பார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் முசோலினியின் இத்தாலியப் படைகள் அபிசீனியாவை ஆக்கிரமித்திருக்கும். ஆனால், அதை ஆக்கிரமிப்பு என்று நேரடியாகப் பளிச்சென்று சொல்ல எவிலின் வாஹ் தயங்குவார். ராணுவ வீரர்கள் அபிசீனியர்களைப் பாதுகாப்பதற்காகப் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள் என்பார். அவர்கள் அபிசீனியர்களுடன் ஒன்றுகலந்து கொஞ்சிக் குலாவி பழகுவார்கள் என்றும், அபிசீனியக் குழந்தைகள் இத்தாலிய வீரர்களுக்கு பூக்கள் பரிசளிப்பார்கள் என்றும் பதிலுக்கு வீரர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய்கள் வழங்குவார்கள் என்றும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருப்பார். நமக்கே சந்தேகம் வந்துவிடும், இத்தாலியர்கள் அபிசீனியர்களை ஒழிக்கவந்தவர்களா அல்லது உய்விக்க அனுப்பப்பட்டவர்களா என்று.
சுமார் இருபது நிமிட பயணத்துக்குப் பிறகு, ஹோட்டலை அடைந்தோம். முன்னரே இணையம் வாயிலாக தங்குமிடம் (Srinagar Embassy Hotel) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சாவி வாங்கி அறைக்குள் நுழைந்தபோது, திருவல்லிக்கேணி பேச்சிலர் ரூமுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. போதாக்குறைக்கு, நாற்காலி, கட்டில், பூட்டு, டவல் என்று எதை தொட்டாலும் ஐஸ் குளிர். பாத்ரூமில் ஹாட் வாட்டர் ஹாத்தா நஹி என்று நியூஸ் வாசித்துவிட்டுப் போனார் ஹோட்டல் பணியாளர் ஒருவர். மற்ற நண்பர்கள் மதியத்துக்கு மேல் வரவிருந்தார்கள். பைகளை அங்கேயே போட்டுவிட்டு, இரண்டடுக்கு ஸ்வெட்டர், ஜெர்கின் அணிந்துகொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டோம்.
புவிப்பரப்பு, குளிர், மக்கள், கட்டடங்கள், உணவு, சாலைகள், கடைகள் என்று காஷ்மிரின் எந்தவொரு அம்சமும் இந்தியாவை நினைவுபடுத்தவில்லை. ஒரு புதிய நாட்டில் நடைபோடும் உணர்வே ஏற்பட்டது.
காஷ்மிர் மிகத் தாமதமாகவே உறக்கம் கலைந்து விழித்துக்கொள்கிறது. ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்தோம். மேகி, சப்பாத்தி, உப்புமா மூன்றும் கிடைப்பதாகச் சொன்னார் பணியாளர். உப்புமா ஆர்டர் செய்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த உணவகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். மிக மிக சாவகாசமாக அவர் நடந்து வந்து, தண்ணீர் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அடுப்பு மூட்டி, பிறகு வெளியில் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு, ஏதோ ஒரு வகை பாக்கை வாயில் கொட்டி, அசைபோட்டு, இடுக்கில் மாட்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் குத்தி எடுத்து, பிறகு உள்ளே சென்று உப்புமாவை ஒரு கிண்ணத்தில் கவிழ்த்து கொண்டு வந்து கொடுத்தார். அவரே பில் எழுதிக்கொடுத்தார். அவரே பணம் வாங்கிக்கொண்டார். வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
டால் ஏரியின் கரையில் வரிசையாக ஷிகாரா எனப்படும் படகு வீடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு படகு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தோம். நடுத்தர வயது கொண்ட ஒருவர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் படகு வீட்டைப் பராமரித்து, விருந்தினர்களை ஈர்த்து, வரவேற்று தங்கவைப்பது அவர் பணி. பெயர், உமர். ‘சென்னைக்கு ஒரு முறை வந்திருக்கிறேன். கடும் சூடு!’ என்றார். ஒரு பிளாஸ்க் நிறைய தேநீரும் (‘காஷ்மிர் சிறப்பு தேநீர், இடைவெளியின்றி அருந்திகொண்டே இருக்கலாம்’) இரு கோப்பைகளும் கொண்டு வந்து வைத்தார். வீட்டின் முகப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
‘சமீபமாக இங்கே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றாலும், எப்போதும் எதுவும் நடக்கலாம் என்னும் நிலையே நீடிக்கிறது. நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். அமைதியான இடத்தில்தான் வியாபாரம் செய்யமுடியும். குழந்தைகளைப் படிக்கவைக்கமுடியும். திருமணம் செய்துவைத்து வாழவைக்கமுடியும்.’
உமரின் ஷிகாரா ஒப்பீட்டளவில் சிறியது. இரு படுக்கையறைகளும் ஒரு வரவேற்பறையும் ஒரு சமையலறையும் கொண்ட நடுத்தர வர்க்கத்துப் பயணிகளுக்கான இருப்பிடம். ஒரு நாளுக்கு ஒருவருக்கு 500 ரூபாய். உயர்ரக வசதிகள் கொண்ட சொகுசு ஷிகாரா என்றால் சில ஆயிரங்கள் வரை பிடிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர், மின்சார இணைப்பு உள்ளது. கேரளாவில் உள்ள படகு வீடுகளைப் போல் காஷ்மிர் ஷிகாராக்கள் பயணம் செய்வதில்லை. ஏரியின் கரைகளில் நடப்பட்டுள்ள ஆடாத, அசையாத வீடுகள் இவை.
நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே சிறு படகுகள் அசைந்து அசைந்து எங்களிடம் வந்து சேர்ந்தன. ஓரிரு வியாபாரிகளைக் கொண்ட சிறிய அசையும் கடைகள் அவை. ஷிகாராவில் தங்கியிருப்பவர்களிடம் வியாபாரம் செய்வதே இவர்கள் நோக்கம். எங்களை நெருங்கியவர்கள் சல்வார், கம்பளி ஆடைகளை விற்பனை செய்பவர்கள். டால் ஏரி முழுக்க இப்படிப்பட்ட பல வியாபாரிகளைக் காணமுடியும். கைவினைப் பொருள்கள், குங்குமப்பூ, பெப்சி, ஸ்வெட்டர் என்று பலவற்றை இவர்கள் படகுகளில் கொண்டுவருகிறார்கள். நீங்கள் கடைகளைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. கடைகள் தாமாகவே உங்களைத் தேடிவரும்.
உமரின் குடும்பத்தினர் படகு வீட்டுக்குப் பின்புறத்தில் குடியிருந்தனர். வீட்டுக்கு அழைத்துச்சென்று காட்டினார். தகர மேற்கூரையுடன்கூடிய சிறிய கூடாரம் அது. சமைக்க, உறங்க என்று இரண்டு சிறு அறைகள் இருந்தன. கரைக்கு அருகில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துகொண்டிருந்தார் உமரின் மனைவி. படகு வீட்டில் தங்கும் விருந்தினர்களுக்குச் சமையல் செய்யும் பொறுப்பு இவருடையது. பிற பணியாளர்களைத் தேவைக்கு ஏற்ப அமர்த்திக்கொள்கிறார்கள். படகு வீட்டின் உரிமையாளர் காஷ்மிரில் வேறொரு பகுதியில் தங்கியிருந்தார்.
‘சுற்றுலாவை நம்பித்தான் காஷ்மிர் இயங்குகிறது. கைவினைப் பொருள்கள், துணி, மணிகள், மரவேலைப்பாடுகள் என்று இங்கு நாங்கள் மேற்கொள்ளும் தொழில்கள் அனைத்தும் காஷ்மிரிகள் அல்லாதவர்களுக்காகத்தான்.’
‘ஜவான்கள்மீது எனக்கு அதிக மரியாதை இருந்ததில்லை. இவர்கள் நடத்தும் ஆபரேஷன்கள் அச்சமூட்டக்கூடியவை. விசாரணை எதுவுமின்றி தண்டனை கொடுத்துவிடுவார்கள். இவர்கள் சுட்டுக்கொல்பவர்களில் எத்தனைப் பேர் உண்மையில் தீவிரவாதிகள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.’
(தொடரும்)















