2014 – கணிப்பும் கனவும் : 5

இதற்கு முன்

_62363_indian_democracy300மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் நீங்கள் சொல்லும்படி தில்லுமுல்லுகள் செய்ய முடியுமென்றால், ஆளுங்கட்சிகள் வெகு எளிதில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியுமே. ஏன் அப்படி நடப்பதில்லை. பெரும்பாலான மாநிலங்களிலும், மத்தியிலும் தொங்கு சபைகளே அமைகின்றனவே.

இந்த மோசடிகளை இந்திய கட்சிகள் எதுவும் செய்வதாக நானும் நினைக்கவில்லை.

அப்படியானால் யார்தான் செய்கிறார்கள்?

முதலிலேயே சொன்னேனே… அமெரிக்கா உலகம் முழுவதும் தனது பொம்மை அரசுகளை உருவாக்கி அந்ததந்தப் பகுதி வளங்களைச் சுரண்ட முயற்சிசெய்துவருகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் தனது நலனையும் மதிப்பீடுகளையும் அது மிகவும் தந்திரமான முறையில் நிறைவேற்றி வருகிறது. அவர்கள்தான் தமக்குத் தோதான ஆட்சியை ’ஜனநாயக’ முறையில் உருவாக்கிவருகிறார்கள்.

அப்படியானால், தோற்கும் கட்சிகளாவது மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் மீதான புகாரை எழுப்ப முடியுமல்லவா? அதை ஏன் செய்வதில்லை.

பொதுவாக இது மிகவும் புத்திசாலித்தனமாக தந்திரமாக முன்னெடுக்கப்படுகிறது. வெறுமனே மின்னணு வாக்குப் பதிவு எந்திர மோசடியை மட்டுமே வைத்து ஒரு கட்சியின் வெற்றியோ இன்னொரு கட்சியின் தோல்வியோ தீர்மானிக்கப்படுவதில்லை. அதற்குத் தோதான பல விஷயங்கள் பல தளங்களில் முன்கூட்டியே செய்யப்பட்டு இறுதி உத்தரவாதமாக மின்னணு எந்திர மோசடி நடத்தப்படுகிறது. இதில் ஊடகங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. அவற்றின் மூலம் ஏதாவது ஒரு கட்சிக்கு எதிரான விஷயங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் அந்தச் செயல்பாட்டுக்கு எந்தப் பெரிய செல்வாக்கும் இருக்காது. எனினும் அதன் மூலம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படும். வாஜ்பாய் அரசு அடுத்து ஆட்சிக்கு வரமுடியாமல் தோற்கடிக்கப்பட்டது, தொடர்ந்து மோடி வெற்றி பெற்றுவருவது, பிரபாகரன் கொல்லப்பட்டு தமிழகத்தில் ஈழ அனுதாப அலை வீசிய நேரத்தில் நடந்த தேர்தலில் திமுக+காங்கிரஸ் கூட்டணிக்கு கணிசமான இடம் கிடைத்தது, ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக எதுவுமே செய்யாத ஜெயலலிதா ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமோக வெற்றி பெறுவது எனப் பல தேர்தல் முடிவுகள் சந்தேகத்துக்கு இடமானவை. இவ்வளவு ஏன் கெஜ்ரிவாலின் அமோக வளர்ச்சிகூட நம்பமுடியாததாகவே இருக்கிறது. அவருடைய வெற்றிக்கும் கேங் ரேப் நிகழ்வுக்கு ஊடகங்கள் தந்த அதீத முக்கியத்துவத்துக்கும் இடையில் ஒரு வலுவான தொடர்பு இருக்கிறது.

கெஜ்ரிவாலின் வெற்றிக்கு அண்ணா ஹசாரே மூலம் அவருக்குக் கிடைத்த ஆரம்பகட்ட நன் மதிப்பும் ஊழக்கு எதிராக அவர் போராடுவார் என்ற நம்பிக்கைதானே காரணம்.

அவையும் ஒரு காரணம். ஆனால், உணர்ச்சிபூர்வமாக டில்லி ஆளுங்கட்சியின் மேல் பெரும் அதிருப்தி எழ கேங் ரேப் நிகழ்வுக்கு ஊடகங்கள் தந்த அதிகப்படியான முக்கியத்துவமே காரணம். அப்படியாக களம் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு மின்னணு இயந்திர மோசடி மூலம் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழுவதில்லை.

சரி… கெஜ்ரிவால் பற்றி என்ன நினைக்கிறீர்கள்… ஃபோர்டு ஃபவுண்டேஷனால் முன்னிறுத்தப்படும் நபர் என ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே…

நிச்சயமாக அதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. ஃபோர்டு ஃபவுண்டேஷன் சில நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு அந்த அமைப்பு வலுப்பெறவே கூடாது. தேர்தலுக்கு முன்புவரை காங்கிரஸின் ஊழலைப் பற்றி வாய் கிழியப் பேசி வந்த கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க அவர்களின் ஆதரவு தேவை என்றதும் காங்கிரஸ் மீதான விமர்சனத்தை அப்படியே சுருட்டி வைத்துக்கொண்டுவிட்டார். எடுத்த எடுப்பிலேயே மத்திய மாநில அரசுக்கு இடையிலான சண்டையைப் பெரிதுபடுத்தும் முயற்சியில் இறங்கினார். மாநில அரசுக்கு ஜன் லோக் பாலை அமல்படுத்தும் அதிகாரம் கிடையாது என்றதும் நான் மக்கள் முன்னிலையில் சட்டமாக்குகிறேன் என்று மத்திய அரசுடனான விரோதத்தை பெரிதுபடுத்த முனைந்தார்.

மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்ய விரும்புவதாக அவர் சொல்வது சரிதானே. ஒரு நியாயமான சட்டத்தை முழு வீரியத்தோடு இன்றைய அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு அமலாக்க முடியவில்லையென்றால், மக்கள் ஆதரவுடன் அதை அமல்படுத்த முன்வந்தது தைரியமான நேர்மையான செயல்தானே. அதிலும் ஒவ்வொரு முக்கிய முடிவையும் மக்களிடம் கருத்துக் கணிப்பு வைத்து அதன்படி முடிவெடுப்பேன் என்ற அவருடைய தீர்மானம் உண்மையான மக்களாட்சியைக் கொண்டுவருமல்லவா..?

நிச்சயமாக. அவருடைய அந்த முயற்சிகள் எல்லாமே பாராட்டத் தகுந்தவையே. காசிக்குச் சென்று வழிபாடு நடத்தியது, சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திப்பதைப் போல் வாரணாசியில் போட்டியிடத் தீர்மானித்தது, கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவரை வீட்டுக்குச் சென்று சந்தித்து பேசியது போன்றவையெல்லம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்கவே செய்கின்றன. ஆனால், அவர் நல்லவரா கெட்டவரா என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒருவகையில் அவர் இந்தியாவின் கோர்பசேவ் ஆக ஆகிவிடுவாரோ என்ற பயம்கூட எனக்கு உண்டு.

ஏற்கெனவே காஷ்மீர் தனியாகப் பிரிந்து செல்ல வெளிப்படையான ஆதரவு அவரால் தரப்பட்டிருக்கிறது.

ஆமாம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற போர்வையில் அவர் பல விஷயங்களை முன்னெடுக்கக்கூடும். அவை இந்திய தேசியத்தை வலுவிழக்கவைக்கக்கூடும்.

ஆனால், அமெரிக்க பன்னாட்டு சக்திகளுக்கு இந்தியா ஒரே தேசமாக இருந்தால்தானே சுரண்டுவது எளிது. ஒவ்வொரு குறு நில மன்னரையும் சமாளிப்பதைவிட ஒரே ஒரு சக்கரவர்த்தியை சரிக்கட்டுவதுதானே அவர்களுக்கு எளிதாக இருக்கும். ஜமீந்தாரி முறையை காலனியவாதிகள் அமல்படுத்தியதன் நோக்கமே அதுதானே. ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க விரும்பினால் மத்திய அரசுடன் ஒரே ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டால் போதும். அதுவே அனைத்து மாநிலங்களிலும் அந்த நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்துவிடும். மத்திய அரசு வலுவாக இல்லாமல் இருந்தலோ அல்லது இந்தியா ஒவ்வொரு மாநிலமாகப் பிரிந்து சென்றாலோ ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒப்பந்தம் போட்டு ஒரு நிறுவனம் தன் கிளைகளை விரிப்பது மிகவும் சிரமமாக இருக்குமே.

அது சரிதான். சுரண்ட விரும்பும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியா ஒரே தேசமாக இருப்பதுதான் நல்லது. எனவே, அவர்கள் அவ்வளவு சீக்கிரம் இந்தியாவைத் துண்டாக விடமாட்டார்கள். இந்து அம்சத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் கிறிஸ்தவ மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதுதான் அவர்களுடைய இலக்கு. எனவே, அந்தவகையில் ஒரு இந்தியன் கொஞ்சம் ஆசுவாசமடைந்துகொள்ளலாம். இந்தியாவை அவர்கள் துண்டாக விடமாட்டார்கள். ஆனால், இந்த இடத்தில் இன்னொரு சந்தேகம் வருகிறது. பன்னாட்டு ஆயுத நிறுவனங்களும் சுற்றுலா துறைகளும் இந்தியாவை அமைதியான, ஒரே தேசமாக இருக்கவிரும்பமாட்டார்கள். 9/11க்குப் பிறகு இந்தியாவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் முதல் இலக்காக மாற்ற அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவில் இந்து அடிப்படைவாதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் வளர்ப்பதுகூட அந்த சதியின் ஓர் அங்கமாகவே தோன்றுகிறது. அது உண்மையென்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா முலம் கிடைக்கும் பொருளாதார லாபத்தைவிட இஸ்லாமிய தீவிரவாதத்தில் இருந்து அமெரிக்காவுக்குக் கிடைக்கும் பாதுகாப்பே பிரதானமாக இருக்கும். அதற்கு இந்தியாவை அழிவுப் பாதையில் தள்ளுவதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும்.

மேற்குலகம் இலங்கையில் செய்தார்களே அதுபோல்.

ஆமாம். சிங்கள், ஈழ சக்திகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து மோதவிட்டு இலங்கையை அழித்தார்கள். இன்று இலங்கையைப் புனரமைக்கும் காண்ட்ராக்டையும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கும் பொறுப்பையும் அவர்களே எடுத்திருக்கிறார்கள். ஆக இரண்டு வகையிலும் லாபம். அழிப்பவனும் அமெரிக்கனே… காப்பவனும் அமெரிக்கனே. அப்படியாக சிவனாகவும் விஷ்ணுவாகவும் அடுத்தடுத்து அவதாரமெடுக்கிறார்கள். இந்தியாவில் மாநிலங்களிடையேயான சண்டை, சாதிகளுக்கிடையிலான சண்டை, வட – தென் இந்திய சண்டை இவற்றையெல்லாம்விட இந்து முஸ்லீம் சண்டைதான் சரியான துருப்புச் சீட்டு. லேசாகக் கொளுத்திப் போட்டாலே பற்றிக் கொண்டு எரியும். எனவேதான் மேடமும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று சேரவேண்டும் என்று முஸ்லிம்களுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பி.ஜே.பி.யில் மிதவாத சக்திகள் ஓரங்கட்டப்பட்டு நான் ஒரு இந்து தேசியவாதி என கர்ஜிக்கும் மோடி முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு எப்படி ஒரு பிரபாகரனோ அதுபோல் இந்திய இந்துக்களுக்கு ஒரு மோடி.

மோடி தொடர்ந்து தேர்தலில் வென்றதை நீங்கள் சந்தேகப்பட்டுச் சொல்லியிருந்தீர்கள்.

ஆமாம். இந்துப் பெரும்பான்மை ஒருபோதும் அடிப்படைவாதத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை… ஒருபோதும் இருக்காது என்பதே என் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்குப் பின்னால் ஆயிரம் ஆண்டு கால சரித்திரம் இருக்கிறது. குஜராத்தில் கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டபோதுகூட ஒட்டு மொத்த இந்தியாவில் இந்துக்களின் மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மேல் ஒரு சிறு கீறல் கூட விழவில்லையே. நேர்மாறாக பங்களாதேஷில் என்ன நடந்தது என்று உலகம் பார்க்கத்தானே செய்தது. இந்தியாவில் தொழுகையே நடந்திராத ஒரு கட்டடம், முன்பு வழிபாடு நடந்து வந்த  ஒரு கோயில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பான்மை இஸ்லாமியர்களின் மத்தியில் சிக்கியிருந்த இந்துக்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். பங்களாதேசம் முழுவதும் பற்றி எரிந்தது. ஏனென்றால், பங்களாதேசம் முழுவதும் இஸ்லாமியர்கள் இருந்தார்கள்.

இந்தியாவில் கோத்ரா படுகொலை நடந்த பிறகும் குஜராத்தில் அதுவும் சில மாவட்டங்களில் மட்டுமே இந்துக்கள் ஆயுதங்களுடன் தெருவில் இறங்கினார்கள். எஞ்சிய பகுதியில் இருந்த பெரும்பான்மை இந்துக்கள் அவர்களுடைய இயல்பான மத சகோதரத்துவத்துடன்தான் இருந்தார்கள். அந்த குஜராத் இந்துக்கள்கூட மோடிக்குத் தொடர்ந்து ஆதரவு தந்திருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்தால்தான் நமக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற தவறான பாடத்தை இந்து சக்திகளுக்குப் புகட்ட மின்னணு வாக்கு எந்திர மோசடி மூலம் நடத்தப்பட்ட நாடகமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.

இந்து பெரும்பான்மை சாத்விகமானது என்று நம்புகிறீர்களா..?

அதில் என்ன சந்தேகம்? இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பிறகும் காஷ்மீரில் இஸ்லாமியர்களால் அவர்கள் அடித்துத் துரத்தப்பட்டது தொடர்பாக, எந்த இந்துவாவது ஆத்திரமடைந்து எந்தவொரு இஸ்லாமியரையாவது தாக்கியதுண்டா? குஜராத்தில் இந்து யானைக்கு ஒரே ஒரு முறைதான் மதம் பிடித்தது. காஷ்மீரில் ஆண்டுக்கணக்கில் அல்லவா இஸ்லாமிய யானை மதம் பிடித்து அலைகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தால்தான் இந்தப் பிரச்னை என்று இல்லை. இந்தியாவில் சுதந்தரத்துக்குப் பிறகு நடந்த 90 சதவிகித குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டது 15 சதவிகிதம் இருக்கும் இஸ்லாமியர்கள்தான். இந்துப் பெரும்பான்மை ஒப்பீட்டளவில் பெரிதும் அமைதியாகவேதான் இருக்கிறது. இந்த மனோபாவத்தைப் பார்க்கும்போது மோடி பெற்ற வெற்றி எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. அதிலும் அது காந்தி பிறந்த மண். குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு என்ன என்பதுகூட முக்கியமில்லை. இந்துப் பெரும்பான்மை சந்தேகத்துக்கு இடமான ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்காது என்றே நம்புகிறேன். இப்போதும்கூட இந்தியா முழுவதிலும் மோடியை ஆதரிப்பவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் அவருடைய நிர்வாகத் திறமையைப் பாராட்டித்தான் அவரை பிரதமராக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மோடி நல்லவரா…கெட்டவரா… உங்கள் பார்வை என்ன?

அவர் கெட்டவர் அல்ல. ஆனால், அவருடைய வருகையால் கெட்டது நடந்துவிடும் என்று அஞ்சுகிறேன். மோடியை முன்வைத்து தேசத்தில் ஒருவித பதற்றமான சூழல் வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல. மோடியினால் இந்து சக்திகள் எந்த அளவுக்கு அடிப்படைவாதம் நோக்கிச் செல்வார்களோ அதைவிட மோடி எதிர்ப்பாளர்கள் திரிபுவாதம் நோக்கிச் செல்கிறார்கள். இது நாளை எளிதில் தீவிரவாதம் நோக்கிச் சென்றுவிடும்.

இந்துப் பெரும்பான்மை அவருடைய நிர்வாகத் திறமையை பார்த்து மட்டுமே வாக்களிக்க விரும்புகிறது. ஆனால், இஸ்லாமிய, முற்போக்குப் போராளிகள்தான் சுற்றிச் சுற்றி அவரை இஸ்லாமிய எதிரியாக முத்திரை குத்தி வருகிறார்கள். என்னமோ குஜராத் கலவரம் முடிந்து நேரடியாக அவர் பிரதமராக வரப்போவதுபோல், அவருடைய பத்தாண்டு கால மாநில ஆட்சியை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்.

என்னதான் ஆனாலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்த தவறுக்கு இஸ்லாமிய அப்பாவிகளைத் தண்டித்தது / அதற்குத் துணைபோனது எந்தவகையிலும் சரியில்லையே…

அது தவறுதான். ஆனால், நான் இங்கு சுட்டிக் காட்டவிரும்புவது முற்போக்கு, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளின் இரட்டை வேடத்தைத்தான். அவர்கள் இந்து அடிப்படைவாதத்தை வளரவிடாமல் தடுக்கிறேன் என்ற பெயரில் இந்துப் பெரும்பான்மையின் உணர்வுகளை காலின் கீழே போட்டு மிதிக்கிறார்கள். நான் உங்களை இன்னொரு விஷயம் கேட்கிறேன். காஷ்மீரில் இந்துக்கள் பட்ட வேதனை குறித்து எந்த முற்போக்கு மேதாவியாவது வாய் திறந்து ஏதேனும் பேசியதுண்டா… காஷ்மீர் இந்தியாவில் இல்லையா… அப்பாவி இந்துக்களின் ரத்தத்துக்கு எந்த விலையும் கிடையாதா? முற்போக்குப் போராளிகளின் உடம்பில் ஓடும் பரந்த மனப்பான்மை கொண்ட இந்து ரத்தம், இஸ்லாமியர் படும் துன்பத்தைக் கண்டு வருந்திப் பேசவைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சொந்தத்தின் சோகத்தையும் கொஞ்சமாவது அது புரிந்துகொள்ளட்டுமே என்று எதிர்பார்ப்பது தவறா? ஒரு சில அடிப்படைவாதிகள் செய்யும் தவறுக்காக இஸ்லாமிய சமூகத்தையே பழிக்கக்கூடாது என்று சொல்லும் இந்த போராளிகளில் எத்தனைபேர் அப்பாவிகளான இந்துப் பெரும்பான்மையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு வார்த்தை பேசியிருக்கிறார்கள். இந்து அடிப்படைவாதிகள்தானே அவர்களுக்காகப் பேசியாக வேண்டியிருக்கிறது. இந்து அப்பாவிகளின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து ஒரு வார்த்தையை இந்தப் போராளிகள் பேசியிருந்தால் அடிப்படைவாதிகள் பக்கம் போக வேண்டிய அவசியமே வந்திருக்காதே… ஒரு எளிய இந்துவை இந்து அடிப்படைவாதம் நோக்கி யார் நகர்த்துகிறார்கள்.  மதச்சார்பற்றவர் என்ற போர்வையில் திரியும் இந்த முற்போக்காளர்கள்தானே. இது ஒருவகையில் பழி தீர்த்தலாகவே இருக்கிறது. ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ மாவோயிஸ அராஜகவாதிகள் செய்தவற்றுக்கு இந்திய கம்யூனிஸ்ட்களைத் திட்டித் தீர்த்துவந்த இந்து சக்திகளுக்கு ஒருவித பதிலடியாகவே தரப்படுகிறதோ என்னவோ… கம்யூனிஸ்ட்கள் மிகுந்த பதற்றத்துடன் கண்மூடித்தனமாக மோடியை எதிர்ப்பதைப் பார்க்கும்போது இந்த சந்தேகம்  வலுப்படவே செய்கிறது. ஊரான் தவறை ஊதிப் பெரிதாக்கினால் தன் தவறு தானே மறையும் என்ற மனோதத்துவ அணுகுமுறை இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதில் வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இந்து சக்திகளும், கம்யூனிஸ சக்திகளும் பரஸ்பரம் இப்படி மிகையாக ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்துக்கொள்வதால், உண்மையான எதிரி எந்த தடையும் இன்றி தன் இலக்கை நோக்கி முன்னேறுகிறான்.

0

Share/Bookmark

நான் பிரதமரானால்…

parliament-main

  • அதிகாரப் பரவலாக்கம். மத்திய அரசின் அதிகாரங்களில் ராணுவம், அயல் உறவு விவகாரங்கள் நீங்கலாக பிற அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படும். அதுபோல் மாநில அரசின் அதிகாரங்கள் மாவட்டங்களுக்கும், அதன் பிறகு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் பிரித்துத் தரப்படும்.
  • காவிரி பிரச்னைக்கு எளிய தீர்வு. கர்நாடகாவின் மேற்குப் பகுதி மலைகளில் பெய்து அரபிக் கடலில் வீணாகக் கலக்கும் நீரை பம்பிங் ஸ்டேஷன் மூலம் கிழக்குப் பக்கம் திருப்பினால் கர்நாடகா, ஆந்திரா, தமிழ் நாட்டின் தண்ணீர் தட்டுப்பாடு எளிதில் தீரும். (உலக வங்கியின் ஒப்புதலுக்காக கர்நாடக அரசுப் பொறியியல் நிபுணர் பவானி சங்கரால் முன் வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் திட்டம்)
  • நதிகள் இணைக்கப்படும். முதல் கட்டமாக மாநிலத்துக்குள் பாயும் நதிகள். அதன் பிறகு மாநிலங்களுக்கிடையிலான நதிகள்.
  • நாடு முழுவதும் சிறிய தடுப்பணைகள்.
  • தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வாக இந்தியக் கடல்களில் கடல் பாசி வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தப்படும். எல்லை தாண்டவேண்டிய அவசியமே இல்லாமல் மீனுக்கு நிகரான லாபத்தை கடல் பாசி வளர்ப்பின் மூலமும் சம்பாதிக்க முடியும். இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையில் தமிழர்கள் அதிகம் நியமிக்கப்படுவார்கள்.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டமானது தகவல் தெரிவிக்கும் கடமைச் சட்டமாக மாற்றப்படும்.
  • மாவோயிஸ்ட், பிரிவினைவாதி போன்ற போராளிகளைப் பிடிக்க மயக்க மருந்து பொருத்திய தோட்டாக்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் (கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் புலி, யானைகளைப் பிடிப்பதுபோல்)
  • வட கிழக்கு மாநிலங்களில் கனிம வளத் தொழிற்சாலைகளின் பாதி பங்குகள் பழங்குடி மக்களுக்கே தரப்படும். நிலங்கள் 20-30 வருட அளவில் அவர்களிடமிருந்து லீஸுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  • மக்களவை, சட்டசபை போன்றவை விவாத அரங்குபோல் நடத்தப்படும். ஒரு கட்சி கொண்டுவரும் திட்டத்தை சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் விவாதிக்கும் மையமாக அந்த சபைகள் திகழும். எந்தத்துறை பற்றிய விவாதம் நடக்கிறதோ அந்த அமைச்சர் மட்டும் அன்று சபைக்கு வந்தால் போதும்.
  • மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் மாதம் தோறும் ஒவ்வொரு தெருவுக்கும் சென்று பார்வையிடவேண்டும்.
  • நியாய விலைக்கடைகள் விரிவாக்கப்படும். காய்கறி, பழங்கள், மருந்து,  புத்தகங்கள், துணிகள், உணவுப் பொருள் என எல்லா பொருட்களையும் அரசே நியாய விலையில் விற்கும்.
  • கிராமங்கள்தோறும் பாரம்பரிய மருத்துவ மையங்கள் மூலிகைத் தோட்டங்களுடன் அமைக்கப்படும்.
  • பாரம்பரிய மருத்துவக் கல்வி 6-12-ம் வகுப்பு வரை தனிப் பாடமாகவே கற்றுத் தரப்படும்.
  • அரசு வேலை அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யும் வகையில் 58 வயது ஓய்வு என்பது 40 ஆகக் குறைக்கப்படும். எல்லாருக்கும் குறைந்தது 10 ஆண்டு கால அரசு  வேலைக்கான உத்தரவாதம் தரப்படும்.
  • நீர் தேங்காத சாலைகள் (வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தத்தமது வீட்டுக்கு முன்பாக இருக்கும் சாக்கடை மற்றும் சாலையைப் பராமரித்துக் கொள்ளலாம். செலவழிக்கும் பணத்துக்கு வரி விலக்கு)
  • டபுள் டெக்கர் பேருந்துகள் அதிகரிக்கப்படும்.
  • டபுள் டெக்கர் மின்சார ரயில் அமல்படுத்தப்படும்.
  • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சில அலுவலகங்கள் எட்டு மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கே மூடப்படும். சில அலுவலகங்கள் 11 மணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்கு மூடப்படும்.
  • கோயில்/சர்ச்/மசூதி/ அறக்கட்டளைகள் ஆகியவற்றின் நிலங்கள் நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
  • கிராமப்புற நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் விவசாயப் பணி மேம்பாட்டுக்கான மின் எந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி.
  • ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு மானியங்கள் கிடையாது.
  • விவசாயிகளுக்கு நகரங்களில் சென்று தங்கள் விலை பொருட்களை நேரடியாக விற்றுக் கொள்ள மிகக் குறைந்த செலவில் போக்குவரத்து (சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள்) வசதி செய்து தரப்படும். இப்போது விளை பொருட்களைக் கொள்முதல் செய்துவரும் வியாபாரிகளுக்கு ஏற்றுமதித்துறையில் முன்னுரிமை தரப்படும். ஏற்றுமதித்துறையில் ஈடுபட்டுவருபவர்களுக்கு தரிசு நிலங்களும் நீர்ப்பாசன வசதிக்கான மானியங்களும் செய்து தரப்படும்.
  • கிராமங்கள்தோறும் கண்ணகி கோயில் : 6-10 வயது மற்றும் 50–70 வயது பெண் பூசாரிகள் – தமிழில் அர்ச்சனை.
  • சாதி ஏற்றத் தாழ்வுகள் அமலில் இருக்கும் கிராமங்கள், ஊர்களில் மாநில ஆளுங்கட்சி, எதிர்கட்சிப் பிரபலங்கள் களத்தில் இறங்கி மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். உதா : கண்டதேவி தேரோட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும். இரட்டை குவளை ஒழிப்புக்கு ஜெயலலிதா தலைமை தாங்க வேண்டும்.
  • சோதனைச் சாலை, கணினிகள் போன்றவற்றை அதிகம் பேர் பயன்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் ஷிஃப்ட் முறை (8.00 – 2.00 மற்றும் 2.00 – 8.00) அமல்படுத்தப்படவேண்டும். இதனால் ஒரே வகுப்பில் 30 – 40 பேர் படிப்பதைப் பிரித்து 15 – 20 என ஆக்கிக் கொள்ளமுடியும். கூடுதல் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளமுடியும்.
  • பள்ளிப் பாடங்கள், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகச் சிறந்த ஆசிரியரால் எடுக்கப்படும். சன், விஜய், கலைஞர், ஜெயா என முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் தினமும் கல்விக்கென்று நான்கு மணி நேரத்தை ஒதுக்கவேண்டும். அல்லது கல்விக்கென தனி சேனல் தொடங்கவேண்டும்.
  • அணு, நீர், அனல் மின்சாரத்துக்கான பணம் முழுவதும் சூரிய மின்சாரத்துக்குத் திருப்பிவிடப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதுபோல் சூரிய மின் தகடு வயல்கள் அமைக்கப்படும்.

0

விடுதலை ராஜேந்திரனுடன் ஒரு சந்திப்பு

தி சண்டே இண்டியன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் நண்பர் அசோகனின் அழைப்பின்பேரில் அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் திடீரென சில இயக்கங்கள் திராவிட மாயை என்றும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் அல்லவா? அதைப்பற்றிய ஒரு கருத்து யுத்தத்தில் கலந்துகொள்ள விடுதலை ராஜேந்திரனையும் மக்கள் மாநாட்டுக் கட்சியின் (?) தலைவர் க. சக்திவேலுவையும் அழைத்திருந்தனர். அவர்களுடைய கருத்து மோதலைக் கண்டுகளிக்க வாருங்கள் என்று அழைத்திருந்தார் அசோகன்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் உள்ளிட்ட சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன். நேரில் அறிமுகமில்லை. சக்திவேலுவை எனக்கு வழக்கறிஞராக, காங்கிரஸ்காரராகத் தெரியும். புதிதாகக் கட்சி ஆரம்பித்து, அதற்கு அவரே தலைவராகவும் இருக்கிறார் என்பதை சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன்.

நான்கு மணிக்கு யுத்தம் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள். நான் கொஞ்சம் முன்கூட்டியே சென்றுவிட்டேன். முதலில் விடுதலை ராஜேந்திரன் வந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார் அசோகன். நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு (ஒன்று | இரண்டு) புத்தகம் பற்றி அவரிடம் சொன்னார் அசோகன். பிறகு தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் நான் எழுதிவரும் ஆடு.. புலி.. அரசியல் தொடர் பற்றியும் சொன்னார். தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பிறகு உங்கள் ஊர்க்காரர்தான் என்று சொன்னதும் ராஜேந்திரனின் முகத்தில் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை பற்றிப் பேசினோம். எங்கள் ஊர்.. எங்கள் ஊர்ச்சூழல்.. இன்னபிற விஷயங்கள். பிறகு திராவிட இயக்க வரலாறு பற்றி. அது தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள புத்தகங்கள் பற்றி. என்னுடைய புத்தகத்தின் கால எல்லை பற்றி. நூற்றாண்டு கொண்டாடப்படுவது பற்றிப் பேசினார். உங்கள் புத்தகம் இதுவரை என்னுடைய கவனத்துக்கு வரவில்லை. நாளையே வாங்கிப் படிக்கிறேன் என்றார். நானே உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி முகவரி வாங்கிக்கொண்டேன். சொன்னபடியே மறுநாள் அனுப்பிவைத்தேன்.

வழக்கறிஞர் சக்திவேலு வந்ததும் கருத்து யுத்தம் தொடங்கியது. யுத்தம் என்ற பதத்தை அழுத்தமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தக் காரணம் இருக்கிறது. சக்திவேலுவின் குரல் தொடக்கத்தில் இருந்தே உரத்து இருந்தது. சாதாரண விஷயத்தைக்கூட உரத்த குரலில் பேசினார். வாதத்துக்கு வலுசேர்க்க உரத்த குரல் உதவும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கலாம்.

திராவிடர், திராவிடம் என்பதெல்லாம் மாயை; நீதிக்கட்சி என்பதே தெலுங்கர்களின் முன்னேற்றத்துக்கான இயக்கம்தான். அதன்மூலம் தமிழர்கள் அதிகாரமின்றி அழுத்தப்பட்டனர் என்றார் சக்திவேலு. அதை மறுக்கும் வகையில் பேசிய விடுதலை ராஜேந்திரன், ‘இங்கே பார்ப்பனர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். ஏற்றத்தாழ்வுகளை அவர்கள்தான் உருவாக்கினர். ஒடுக்குமுறைகளை அவர்கள்தான் உருவாக்கினர். அந்த ஆதிக்கத்துக்கு எதிராகவே திராவிட இயக்கம் தோன்றியது. நீங்கள் சொல்வதுபோல தெலுங்கர்களை முன்னேற்றவோ, தமிழனை அழுத்தவோ திராவிட இயக்கம் தோன்றவில்லை’ என்றார்.

தமிழர்களைத் தமிழ்நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக அழுத்திவைத்திருக்கும் மூளைச் சலவையைத்தான் திராவிடம் செய்துவருகிறது என்றார் சக்திவேல். மொழி அடிப்படையில் இங்கே இருப்பவர்களை எல்லாம் துரத்தியடித்துவிட்டு, குறிப்பிட்ட சில சாதியினர் ஆதிக்கம் செலுத்தி, தமிழ்ச்சமுதாயத்தைப் பலவீனமாக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள் என்று பதில் கொடுத்தார் விடுதலை ராஜேந்திரன்.

விவாதம் பல கட்டங்களில் அனல் பறந்தது. விமரிசனம் என்ற பெயரில் நிறைய ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களை வெளியிட்டார் சக்திவேலு. அவற்றைத் தமக்கே உரிய நிதானத்துடன் எதிர்கொண்டார் ராஜேந்திரன். இடையிடையே நானும் விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்டேன். குறிப்பாக, விவாதத்தில் வெப்பம் அதிகரிக்கும் சூழலில். அந்த விவாதத்தின் முக்கியப்பகுதிகள் தற்போது வெளியாகியுள்ள சண்டே இந்தியன் இதழில் இடம்பெற்றுள்ளன.

தொடக்கத்திலேயே விவாதம் காரசாரமாகிவிட்டதால் முக்கிய விருந்தினர்களான ராஜேந்திரனும் சக்திவேலுவும் என்னைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ முகபாவனையை வைத்துக்கொள்ளமுடியாமல் திணறியது புதிய அனுபவம்.

விவாதங்கள் முடிந்தபிறகு விடுதலை ராஜேந்திரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆடு.. புலி. அரசியல் தொடர் பற்றிக் கேட்டார். இதுவரை எழுபது அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். என்னிடம் இருந்த தமிழக அரசியல் பத்திரிகையை அவரிடம் கொடுத்தேன். பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசவேண்டும் என்று அழைப்புவிடுத்தார். ஏற்றுக்கொண்டேன்.

0

ஆர். முத்துக்குமார்