ராணுவம் : இந்தியாவும் பாகிஸ்தானும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 11

1947 போரில் இந்தியாவின் முதல் தாக்குதல்

Pakistani troops patrol on a hill top post in Ladha, a town in the troubled tribal region of South Waziristan along the Afghan border on November 17, 2009. Donkeys nibbling on the roadside are the only creatures living in the ruins of war in the hamlet of Ladha, the scenic valley emptied of inhabitants due to fighting between army and Taliban. For five weeks, 30,000 troops backed by warplanes and helicopter gunships have waged battle in South Waziristan, bombing, shelling and fighting in streets against homegrown Taliban militants the military has vowed to crush. AFP PHOTO/ AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூகோள அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்வது சற்று கடினமான ஒன்றுதான். இருந்தபோதும் அதன் மலைத் தொடர்களைத் தெரிந்துகொண்டால் எளிதாகிவிடும். வெளி இமயமலை (தெற்கு), உள் இமயமலை, பெரும் இமயமலை (வடக்கு), இன்னும் வடக்கில் காரகோரம் மலைத் தொடர், தென் கிழக்கில் லடாக், சன்ஸ்கார் மலைத் தொடர்கள் ஆகியவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளின் முக்கியமான மலைத் தொடர்கள்.

தெற்கில் இருந்து சென்றால் முதலில் தென்படுபவை வெளி இமய மலைகள். இவை சிவாலிக் மலைகள் என்றும் ஜம்மு மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மலைத் தொடர் பஞ்சாபில் இருந்து உயர்ந்து கொண்டு செல்கிறது. கிழக்கில் பாசோஹ்லியில் இருந்து மேற்கில் பூஞ்ச் வரை செல்லும் இது ஓர் உடைந்த மலைத் தொடர். மேலும் இதனை ராவி நதியில் இருந்து ஜீலம் நதி வரை உள்ள மலைத்தொடர் என்றும் சொல்லலாம். இதில் உள்ள மலைகள் 200 கிமீ நீளமும், 20 முதல் 50 கிலோ மீட்டர் வரை அகலமும், 600 முதல் 1200 மீட்டர் வரை உயரமும் கொண்டவை.

உள் இமய மலைகள் சிறிய இமயமலைகள் என்றும் பிர்பாஞ்சால் மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெளி இமய மலைகளுக்கும், பிர்பாஞ்சால் மலைகளுக்கும் இடையே ஜம்மு பகுதி இருக்கிறது. ஜம்மு, காஷ்மீரின் குளிர்காலத் தலை நகரம்.

காஷ்மீர் பாள்ளத்தாக்கு அல்லது காஷ்மீர், வடக்கில் பெரும் இமய மலைகளுக்கும், தெற்கிலும் மேற்கிலும் உள்ள பிர் பாஞ்சால் மலைகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கோடைகாலத் தலை நகரான ஸ்ரீ நகர் அங்கு உள்ளது.

வடக்கில் காரகோரம் மலைத்தொடருக்கும் பெரும் இமய மலைகளுக்கும் இடையே உள்ள பகுதிகள் ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் என்று அழைக்கப்படுபவை. சிந்து சமவெளி, கில்கித், ஹன்சா, பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் இங்கு உள்ளன. இந்த வடக்குப் பகுதிகளுக்கு தென் கிழக்காக அமைந்திருப்பது லடாக் பகுதியாகும். இது வடக்கில் உள்ள குன்லன் மலைத் தொடர்களுக்கும் தெற்கில் உள்ள பெரும் இமயமலைக்கும் இடையில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இது வடக்கு தெற்காக 640 கிமீ அகலமும், கிழக்கு மேற்காக 380 கிமீ அகலமும் கொண்டது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 7000 மீட்டர்கள் உயரத்தில் இது அமைந்துள்ளது.

தட்ப வெப்ப நிலை ஒரு பகுதியின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. ஜம்மு பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 305 மீட்டர்கள். காஷ்மீர் பகுதியின் சராசரி உயரம் 1700 மீட்டர்கள். லடாக் பகுதியின் ச ணராசரி உயரம் 2500 முதல் 3500 மீட்டர்கள்.லடாக் பகுதி மலைப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.  இத்தகைய மலைப் பகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீரில் போரின் போது விமானத்தில் இருந்து பாராசூட் முலம் வீரர்களை இறக்குவது மிகவும் ஆபத்தானது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இடங்களில் ஐ சி என்ஜின்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் சரியாகச் செயல்படுவதில்லை. இப்படிப்பட்ட சவாலான குளிர் பிரதேசத்தில் தான் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கியது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டகோடா விமானம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதுவே போருக்காக காஷ்மீரில் இறங்கிய சுதந்தர இந்தியாவின் முதல் ராணுவ விமானம்.  அதை ஓட்டி வந்த விமானி பின் நாளில் ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக். அந்த விமானத்தில் 1 வது சீக்கிய ரெஜிமென்ட்டின் 17 ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.படையைத் தலைமை தாங்கியவர் லெப்டினட் கர்னல் திவான் ரஞ்சித் ராய்.

விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தின் மேல் தாழ்வாகப் பறந்து இரண்டு முறை வட்டமடித்தது.பிரதம மந்திரி நேருவின் அலுவலகத்தில் இருந்து வந்த ஆணையின் படி விமான தளம் எதிரிகள் கைவசம் இருக்கும் பட்சத்தில் விமானம் தரை இறங்கக் கூடாது. விமானி,விமான தளத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் விமானத்தைத் தரை இறக்குகிறார். உள்ளிருந்தவர்கள் வெளியே யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள்.விமான தளம் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.ஆனால் திடீரென்று விமான ஓடு தளத்திலிருந்து மனிதர்கள் முளைத்து எழுவது போல் உள்ளது.சிறிது நேரத்தில் அங்கு மக்கள் மொய்த்திருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ நகரில் இருந்து தப்பிச்செல்ல காத்திருந்த பொது மக்கள்.அவர்கள் விமான தளத்தின் அருகே பதுங்கி இருந்தார்கள்.இதனை அந்த விமானத்தில் வந்த பிரிகேடியர் ஹிராலால் அத்தால் தெரிவிக்கிறார்.

அந்த வேளையில் அத்து மீறி உள்ளே புகுந்த பதானியர்கள் பாரமுல்லாவைச் சுற்றி வந்து மனிதர்களை வேட்டையாடுவதில் மும்முரமாக இருந்தார்கள். படை இறங்கிக் கொண்ட பின் விமானி சாமர்த்தியமாக வேறு யாரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தை அங்கிருந்து பாரமுல்லா செல்லும் சாலை வரை ஓட்டி சென்று நோட்டமிடுகிறார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. அதே வேளையில் பாரமுல்லாவின் பல இடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டும் மற்ற இடங்கள் புகைந்து கொண்டும் இருக்கின்றன என்று அவர் செய்தி அனுப்புகிறார். அப்போது எதிரிகள் சுட்டதால் ஒரு குண்டு பறந்து வந்து எரி பொருள் டேங்கைத் தாக்குகிறது. ஆனால் அது மோசமாக சேதமடையவில்லை. விமானம் அந்த நாள் முழுவதும் பல முறை (28 முறை) பறந்து 300 சீக்கிய ரெஜிமென்ட் வீரர்களை ஸ்ரீ நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

முதல் முறை விமானம் வந்து இறங்கிய சில மணி நேரத்தில் படைத் தலைவர் ரஞ்சித் ராய் ஒரு சிறிய படையை ஸ்ரீ நகர் விமான தளத்துக்குக் காவலாக இருக்கும்படி ஆணையிட்டார். அவர் ஒரு ரைபிள் படைப் பிரிவுடன் பாரமுல்லாவை நோக்கிச் சென்றார். பாரமுல்லாவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த காஷ்மீர் ராணுவப் படைப் பிரிவுகளுடன் (60 வீரர்கள் கொண்ட 2 பிளாட்டூன்கள்) இந்தியப் படைப் பிரிவு சேர்ந்து கொண்டது. அந்தப் படைப் பிரிவுகள் பாரமுல்லாவிற்கு கிழக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் , பாதானியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய ராணுவம் காஷ்மீர் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன் முதல் ரைபிள்படை தாக்குதலை நடத்தியது.

இந்தியப் படை வீரர்களால் அதிக நேரம் பதானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் சற்று பின் வாங்கி ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அரணாக நின்றார்கள். அடுத்த நாள் அக்டோபர் 28 ஆம் தேதி காலை ரஞ்சித் ராய் மேலும் இரண்டு ரைபிள் படைப் பிரிவுகளுடன் சற்று முன்னேறிச் சென்றார். அங்கு மிகுதியான அளவில் பதானியப் படை வீரர்கள் இருப்பதைக் கண்டார். அபாயத்தை உணர்ந்து அங்கிருந்து படைப் பிரிவுகளை பின் வாங்குமாறு கட்டளையிட்டார்.

ஸ்ரீ நகரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் பாதுகாப்புடன் கூடிய வலிமையான இடத்தில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் படை பின்வாங்கும் தருணத்தில் எதிரிகளின் பக்கம் இருந்து வந்த குண்டு ஒன்று ரஞ்சித் ராயின் கழுத்தில் பாய்ந்ததால் அவர் வீர மரணம் அடைந்தார். பாரமுல்லாவில் பதானியப் படையுடன் நடந்த முதல் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட வீரர்களாலும், ஆயுதங்களாலும் இந்தியப்படை வலுவடைந்தது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது காஷ்மீரின் பதான் நகரம். இது பாரமுல்லாவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 27.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சீக்கிய படைப் பிரிவு, மோர்டார்கள் போன்ற வலுவான ஆயுதங்கள் கொண்ட படைப்பிரிவு, ஆறு இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பஞ்சாப் படைப்பிரிவு ஆகியவை பதான் நகரத்தில் நிறுத்தப்பட்டன. ஒரு குமான் துணை ராணுவப் படைப்பிரிவு ஸ்ரீ நகர் விமான தளத்தைக் காவல் காத்தது.

பிரிட்டிஷார் வளர்த்து விட்டுச்சென்ற இந்திய ராணுவம் 

ஒரு போரை முழுமையாகக் காண அதில் நேரடியாகப் பங்கு கொள்ளும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் வகித்த பதவிகளின் பெயர்களையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் ராணுவக் கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு ராணுவப் பதவிகளின் அதிகாரங்களுக்கும் போரின் போக்குக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

போரில் பங்கு பெரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், ராணுவத்தின் கட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய காரணிகளாக உள்ளன. 1947 இல் தேசப் பிரிவினைக்கு முன் இந்தியா ஏழு பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றாக இருந்த இந்தியாவின் ஏழு மாகாணங்கள் :

 1. 1.வங்காளம். சுமார் 1.5 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய வங்க தேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகியவை இணைந்த பெரிய மாகாணம்.
 2. மதராஸ். சுமார்1.4 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய தமிழ் நாடு முழுவதையும்,ஆந்திரப் பிரதேசம்,கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாகாணம்.
 3. பம்பாய். சுமார் 1.2 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் சிந்துவையும், தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 4. இணைந்த மாகாணங்கள். சுமார் 1.1 லட்சம் சதுர மைல்கள். தற்போதைய உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட்.
 5. மத்திய மாகாணங்கள். சுமார் 1 லட்சம் சதுர மைல். தற்போதைய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்.
 6. பஞ்சாப். சுமார் 97 அயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப், இஸ்லாமாபாத், இந்தியாவின் பஞ்சாப், இமாசலப் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகியவை இணைந்த மாகாணம்.
 7. அஸ்ஸாம். சுமார் 49 ஆயிரம் சதுர மைல்கள்.

சிறிய மாகாணங்கள் ஐந்து :

 1. வட மேற்கு எல்லை மாகாணம். 16 ஆயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டது.
 2. பிரிட்டிஷ் பலுசிஸ்தான். 46 ஆயிரம் சதுர மைல்கள்.
 3. கூர்க். 1600 சதுர மைல்கள்.
 4. அஜ்மீர்- மீர்வாரா. 2700 சதுர மைல்கள்சி இது தற்போதைய ராஜஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
 5. அந்தமான் நிக்கோபார் தீவுகள். 30,000 சதுர மைல்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமையில் இருந்த பெரிய மாகாணமான பர்மாவின் பரப்பளவு 1.7 லட்சம் சதுர மைல்கள். பர்மா 1937 இல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கத் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சமஸ்தானங்களில் நான்கு பெரியவை.

 1. ஹைதராபாத். 82,698 சதுர மைல்கள். இது சமீபத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியையும், மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
 2. ஜம்மு- காஷ்மீர். 80900 சதுர மைல்கள்.

3 மைசூர். 29,444 சதுர மைல்கள்.

 1. பரோடா. 8099 சதுர மைல்கள்.

சிறிய சமஸ்தானங்கள் :

 1. மத்திய இந்தியா ஏஜென்சி பகுதியைச் சேர்ந்த 148 சமஸ்தானங்கள்
  2. ராஜபுத்தானாவைச் சேர்ந்த 20 சமஸ்தானங்கள்
  3. பலுசிஸ்தான் பகுதியில் 2 சமஸ்தானங்கள்
  4. வங்காளத்தின் 30 சமஸ்தானங்கள்
  5. மதராஸ் பகுதியில் 5 சமஸ்தானங்கள்
  6. பம்பாய் பகுதியில் 354 சமஸ்தானங்கள்
  7. இணைந்த மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  8. மத்திய மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
  9. பஞ்சாபின் 34 சமஸ்தானங்கள்
  10. அஸ்ஸாமின் 26 சமஸ்தானங்கள்

சமஸ்தானங்களின் எண்ணிக்கை, பர்மாவின் 52 சமஸ்தானங்ளைச் சேர்க்காமல் 640. ஆனால் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மறைமுக ஆளுமையின் கீழ் இருந்த சமஸ்தானங்கள் 565. பிரிவினைக்கு முன் இந்தியாவின் பெரிய, சிறிய மாகாணங்களின் மொத்த பரப்பளவு சுமார் 8 லட்சத்து 63.3 ஆயிரம் சதுர மைல்கள் (பர்மா நீங்கலாக). அனைத்து சமஸ்தானங்களின் மொத்த பரப்பளவு (பர்மாவின் சமஸ்தானங்கள் நீங்கலாக) சுமார் 7 லட்சத்து 3.3 ஆயிரம் சதுர மைல்கள்.

பிரிவினைக்கு முன்னால் இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சத்து 66.6 ஆயிரம் சதுர மைல்கள். எனவே 1947 இல் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மாகாணங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 55 % ஆகவும் சமஸ்தானங்களின் பரப்பளவு 45 % ஆகவும் இருந்துள்ளன. இது பொதுவாக குறிப்பிடப்படும் 60% – 40% என்ற கணக்குக்கு நெருங்கி வருகிறது. மாகாணங்களில் எல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் முழுமையாக அதிகாரம் செலுத்தமுடியும். சமஸ்தானங்களை அது மறைமுகமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளமுடியும்.

உலகின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவம் என்பது பிரிட்டிஷ் ஆர்மி என்ற தரைப்படை, ராயல் ஏர்ஃபோர்ஸ் என்ற விமானப் படை, ராயல் நேவி என்ற கப்பல் படை ஆகியவற்றைக் கொண்டது. இதே போன்று பிரிட்டிஷ் இந்திய ராணுவமும் முப்படைகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ராணுவத் தரைப்படை கட்டமைப்பு தீ குழு (ஃபையர் டீம்) என்ற நான்கு வீரர்களைக் கொண்ட சிறிய பிரிவில் தொடங்கி தியேட்டர் என்ற பெரும் படையில் முடிகிறது.

இந்த ராணுவக் கட்டமைப்பு உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்குப் பொருந்தும். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

இரண்டாம் உலகப் போருக்கு (1939-45) முன்னால் இந்திய ராணுவம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் (கமாண்ட்) கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவை இணைந்த பெரிய தேசத்தின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராணுவப் பெரும் பிரிவும் ஒரு ஜெனரல் அல்லது லெப்டினெண்ட் ஜெனரலின் கீழ் செயல்பட்டது.

நிர்வாக வசதிக்காக ராணுவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1942 மே மாதம் ராணுவத்தின் பெரும் பிரிவுகளில் பெயர் மாற்றமும் சிலவற்றில் முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டன.

அப்போது ராணுவம் வடமேற்கு பெரும் பிரிவு,தெற்கு ராணுவப்படை,கிழக்கு ராணுவப்படை,மத்திய பெரும் பிரிவு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் 1946 இல் மீண்டும் மாற்றம் நடந்தது. மத்திய பெரும் பிரிவு கலைக்கப்பட்டது. வட மேற்கு பெரும் பிரிவு மீண்டும் வடக்குப் பெரும் பிரிவு ஆனது. தெற்கு, கிழக்கு, மேற்கு பெரும் பிரிவுகள் மீண்டும் உருவாயின. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வடக்கு ராணுவப் பெரும் பிரிவு சுதந்திர பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் ஆனது. மற்ற ராணுவப் பெரும் பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பகுதிகளாயின.

ராணுவத்தின் தரைப் படை, விமானப் படை, கப்பல் படை ஆகிய அனைத்திலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதிகாரிகள், வீரர்கள் ஆகியோரில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் பாகிஸ்தானுக்குச் சொந்தம். ஆயுதங்கள்,விமானங்கள், கப்பல்கள் ஆகிய எல்லாவற்றிலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றன.
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு கமாண்டுகள் ஒவ்வொன்றும் பெரிய ராணுவப் பிரிவைக் குறிக்கின்றன. கமாண்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பணிக்காகவோ அல்லது தேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதுகாப்புக்காகோ உருவாக்கப்படுவது. அது கார்ப்ஸ் என்ற பெரும் படையை ஒரு பணிக்காக அனுப்பமுடியும். அதே வேளையில் அது சிறிய படைகளான சில பெட்டாலியன்களையும் பணிக்காக அனுப்பும்.

ராணுவத்தைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரோடு ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள் இவை எல்லாம் இருந்தால் உடனடியாக ஒரு போரை நடத்திவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் நடக்க இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பணிக்கப்பட்டது ஆயுதங்கள் கொண்ட ஒரு காலாட்படை ரெஜிமென்ட். பொதுவாக அது நிர்வாகப் பணிகளையும், விழாக்கால பணிகளையும் மேற்கொள்ளும். அதில் சில பெட்டாலியன்கள் இருக்கும். இப்போது போருக்கு அனுப்ப அதில் ஒரு போர்க் குழு உருவாக்கப்படும். ஒரு பிரிகேடியர் தலைமையில் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவாக்கப்படுவது போர் குழு.
போர் செய்யப்போகும் படைகள் எல்லாம் சேர்ந்த ஒரு தொகுப்பை ஒரு கட்டடம் என்றால் இந்தப் போர்க் குழு அதன் அஸ்திவாரத்தின் மேல் எழுந்த முதல் தளம். இனி உயரமான பெரும் கட்டடம் அதன் மேல் எழும். ஒரு பெட்டாலியன் அல்லது ரெஜிமென்ட்டை வைத்து உருவாக்கப்படும் போர்க்குழுவுக்குத் தேவையான ஆள்களை அதுவே கொடுத்துவிடும். இன்னும் அதிகமாகத் தேவைப்படும் ஆட்களையும், ஆயுதங்களையும் மற்ற பிரிவுகள் கொடுக்கும். உதாரணமாக ராணுவ டேங்குகள் படை வீரர்களோடு அதில் இணைக்கப்படும். போர்க்குழு தன் பணியை சரியாகச் செய்து முடிக்க ஒரு தொழில் நுட்பப் பிரிவும் அதனோடு சேர்க்கப்படும். மேலும் போரில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு போர்க் குழுவின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வசதியானதாக இருக்கும். போரில் தாக்குதல் நடத்தும்போது ஆயுதம் தாங்கிய ஒரு ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவக்கப்படும் போர்க்குழு இரண்டு டேங்கு ஸ்குவாட்ரன்களையும், அதற்கு உதவியாக ஒரு காலாட்படை கம்பெனியையும் பயன்படுத்தலாம். போரில் சற்று பின்வாங்கி பாதுகாப்பாகப் போரிடும் நிலை ஏற்படும்போது ஒரு காலட்படை பெட்டாலியனைச் சுற்றி உருவாக்கப்படும் போர்க்குழு இரண்டு கம்பெனிகளையும், ஆயுதம் தாங்கிய ஒரு ஸ்குவாட் ரனையும் பயன்படுத்தலாம்.
1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அதில் 12 ஆயிரம் அதிகாரிகள் இருந்தார்கள். இவர்களைத் தவிர கமிஷனால் நியமிக்கப்படாத அதிகாரிகளும் இருந்தார்கள். மொத்த ராணுவ வீரர்களோடு சமஸ்தானங்களின் 75 ஆயிரம் படை வீரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தரைப் படை தலைமை தளபதி முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார். அவர்தான் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கமாண்டர் – இன் – சீஃப். அவர் கவர்னர் ஜெனரலின் ஆணைக்கு உட்பட்டு நடப்பவர். அந்தப் பதவியைக் கடைசியாக வகித்த வெள்ளைக்காரர் ஜெனரல் சர் ராய் பச்சர். இந்திய ராணுவத்தின் முதல் இந்திய கமாண்டர் – இன் – சீஃப் ஆக இருந்தவர் ஜென்ரல் கே.எம். கரியப்பா. சுதந்தர இந்தியாவில் 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பதவி குடியரசுத் தலைவர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. ஆதலால் தனியாக அப்படியொரு பதவி அதற்குப் பிறகு கிடையாது. தரைப்படை தளபதி பதவியின் பெயர் சீப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் என மாற்றப்பட்டது. இந்திய ஜனாதிபதி முப்படைகளின் தலைவர் (கமாண்டர் – இன் – சீஃப்) ஆகிவிட்டார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகள் எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் தாம். கமிஷனால் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகளில் பிரிட்டிஷாரும், இந்தியர்களும் இருந்தார்கள்.
1920 முதல் பிரிட்டிஷ் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள அதிகாரிகள் இந்தியர்கள். மேலும் அப்போது வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இவர்களும் இந்தியர்கள்தாம். முன்னே சொல்லப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் அதிகாரத்தில் வேறுபாடு உண்டு. வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் எல்லோரும் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். பிரிட்டிஷ் ராணுவ மேஜருக்கு இணையான சுபேதார் மேஜர், பிரிட்டிஷ் ராணுவ கேப்டனுக்கு இணையான சுபேதார், லெப்டினண்ட்டுக்கு இணையான ஜமேதார் ஆகியோர் இவர்களுள் அடங்குவார்கள்.
ராணுவத்தின் கட்டமைப்பில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் கொண்ட பட்டியல் பிரிட்டிஷ் ராணுவத்தின் கடை நிலை அதிகாரியில் இருந்து நீள்கிறது.

1.ராணுவசி அதிகாரி -பயிற்சி- ஒரு ஸ்டார்
2.இரண்டாம் நிலை லெப்டினண்ட் – 2 ஸ்டார்கள்
3.லெப்டினண்ட் -3 வருடங்கள் வரை
4.கேப்டன் – 3 ஸ்டார்கள்
5.மேஜர் – 8 முதல் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கிடைப்பது. 120 அதிகாரிகளை இவர் கட்டுப்படுத்த முடியும்.
6. லெப்டினண்ட் கர்னல் – இவர் 650 ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்தமுடியும்.
7.கர்னல்- இவர் பெரும்பாலும் களத்தின் தலைவராக இருப்பதில்லை.
8.பிரிகேடியர்
9. மேஜர் ஜெனரல்
10. லெப்டினட் ஜெனரல்
11.ஜெனரல்

இந்தப் பட்டியலில் உள்ள பல நிலைகளில் இந்தியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இணையாக, கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள்.
பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஏற்கும் வெவ்வேறு நிலைகளின் பட்டியல் :

1.முதல் நிலை – ராணுவ வீரர்
2. இரண்டாம் நிலை- லான்ஸ் கார்பொரல்
3. கார்பொரல் – 6 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு.
4. சார்ஜென்ட் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு
5. கர்னல் சார்ஜென்ட்
6. வாரன்ட் அதிகாரி – பிரிவு 2
7.வாரன்ட் அதிகாரி- பிரிவு 1

இந்தப் பட்டியலோடு இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது வீரர்களின் வெவ்வேறு நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.
1.சிப்பாய்
2.லான்ஸ் நாயக் – லான்ஸ் கார்பொரலுக்கு இணையானது.
3.நாயக்
4.ஹவில் தார் (சார்ஜென்ட்)
5.ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் : நாயக் சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர்.

பிரிட்டிஷ் இந்தியத் தரைப்படை கட்டமைப்பும், அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் விமானப் படையிலும் (ராயல் இண்டியன் ஏர் ஃபோர்ஸ்), கப்பல் படையிலும் (ராயல் இண்டியன் நேவி) சற்று மாறுபடும். மேலிருந்து கீழ் நிலை வரை இந்திய ராணுவம் விடுதலைக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய மயம் ஆகிக் கொண்டிருந்தது.

ராணுவத்தில் இந்தியர்கள் அதிக அளவில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.
1947 இல் தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவ யூனிட்டுகள், யுனைட்டெட் கிங்டத்துக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறுவதைக் கவனிக்கும் பொறுப்பை மேஜர் விஸ்லர் ஏற்றார். பிரிட்டிஷ் ராணுவத்தின் கடைசி பிரிவு 1வது பெட்டாலியன் (சாமர்செட்) 1948 பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியேறியது. ராணுவ தளவாடங்களில் மிகுதியானவற்றை பிரிட்டிஷ் ராணுவம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் விட்டுச் சென்றது. அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவம் அப்போது முற்றிலுமாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் விட்டுச் செல்லவில்லை.
1948 ஆம் ஆண்டு சுமார் 800 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானிலும், சுமார் 350 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் இருந்தார்கள். இந்தியா தனது நாட்டு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பதில் அக்கறை காட்டியது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவிலும், அறிவுரை வழங்கும் நிலையிலும் மட்டுமே இந்தியாவில் இருந்தார்கள். தேசப் பிரிவினையின்போது புலனாய்வுத்துறை சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவிட்டன என்கிறார் பீட்டர் ஏகிஸ் (தி ஃபர்ஸ்ட் இண்டோ பாகிஸ்தானி வார் 1947—48). அவை கிடைத்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் லாபம் இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய உளவுத்துறை பிரிட்டிஷ் அரசாட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டது. அது சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் விடுதலை கோரும் நபர்கள்; இயக்கங்கள் பற்றியவை.
எல்லாவற்றையும் பிரிக்கும்போது புலனாய்வுத் துறையை இரண்டு நாடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதுதான் முறை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் கிட்டத்தட்ட எந்தவிதமான புலனாய்வுத் தகவலும் இல்லாமல் புதிதாக எல்லாவற்றையும் தொடங்கும் நிலையில் இருந்தது. புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த குலாம் அகமதும் அவருடன் இருந்த இஸ்லாமிய அலுவலர்களும் தனி டொமினியனாக மாறிய பாகிஸ்தானுக்குப் பணி புரியப் போய் விட்டார்கள். பெரிய அளவில் அவர்கள் வசம் தகவல்கள் இல்லை என்றாலும் அவர்கள் புலனாய்வுத் துறையில் திறமையும், அனுபவமும் மிக்கவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

(தொடரும்)

முதல் போர் முற்றுகை வெறியாட்டங்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 9

downloadபாகிஸ்தான் திட்டமிட்டபடி காஷ்மீரை முற்றுகையிட்ட பழங்குடிப் படையின் கமாண்டர் குர்ஷித் அன்வர், படையை அபோத்தாபாத்தில் குவித்து அதனுடன் முசாபராபாத்துக்குள் நுழைந்தார். அபோத்தாபாத் நகரம் தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாவட்டத்தில் ஹசாரா பகுதியில் உள்ளது. அபோத்தாபாத்துக்கு வட கிழக்கு திசையில் அமைந்துள்ள முசாபராபாத் தான் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீரின் தலை நகரம். இதை அடைய அபோத்தாபாத்தில் இருந்து சாலையில் பயணித்தால் சுமார் 77 கிலோமீட்டர்களைக் கடக்க வேண்டும். முசாபராபாத் நகரம் முசாபராபாத் மாவட்டத்தில் ஜீலம், நீலம் ஆகிய நதிகளின் கரைகளில் அமைந்துள்ளது. குர்ஷித் அன்வர் தலைமையில் நடந்த இந்த காஷ்மீர் முற்றுகையைப் பின்னாளில் அக்பர் கான் உறுதி செய்துள்ளார். குர்ஷித் அன்வரும் முஸ்லிம் லீக்கின் தினசரியான டானில் இதைப்பற்றிக் கூறியுள்ளார்.

“திட்டத்தின்படி அக்டோபர் 21 ஆம் தேதி முற்றுகைக்கான தினமாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில தாமதங்கள் ஏற்பட்டு அடுத்த நாள் காலையில் தான் காஷ்மீர் முற்றுகை நடந்தது. என்னுடன் 4000 பேர் இருந்தார்கள். காஷ்மீருக்குள் நுழையும்வரை எங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அங்கு சென்ற பிறகே கடுமையான எதிர்ப்பை நாங்கள் சந்தித்தோம்.”

பழங்குடிப் படையினர் பஞ்சாப் வரை செல்லும் பிரதான சாலை வழியாக காஷ்மீரை நோக்கி முன்னேறினார்கள். அப்போது அவர்கள் அடைந்த நகரம் டோமெல். பிரதான சாலையில் பயணித்து ஜீலம் நதியின் குறுக்கே இருந்த முக்கிய பாலத்தைக் கடந்தார்கள். அதற்கு அருகில் ஜீலம் நதியும், நீலம் நதியும் கலக்குமிடத்தில் மிகப்பெரிய நகரமான முசாபராபாத் இருக்கிறது. அப்போது அங்கு முஸ்லிம்கள் மிகுதியாகவும், குறைந்த அளவில் இந்துக்களும் சீக்கியர்களும் இருந்தார்கள். இந்து, சீக்கிய மக்களில் பலர் பழங்குடிப் படை வருவதைக் கேள்விப்பட்டு ஊரைக் காலி செய்து புறப்பட்டு விட்டார்கள். மற்றவர்கள் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். அவர்களில் பலர் கையில் ரைபிள் வைத்திருந்தார்கள் .அதிகாலை இருளில் முற்றுகை நடந்தது .முசாபராபாத்தில் புதிதாக பதவி ஏற்ற கமிஷனரின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டு கண் விழித்தார்கள். பின்னாளில் கமிஷ்னரின் மனைவி அன்று நடந்ததை விவரித்தார்.

“அக்டோபர் 22 ஆம் தேதி காலை ஐந்து மணி அளவில் நான் கண் விழித்தேன். துப்பாக்கி முழக்கங்கள் மலையில் எதிரொலித்தன. நானும் என் குழந்தைகளும் வெராண்டாவுக்கு சென்று துப்பாக்கி சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தோம். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருந்தன.  சில குண்டுகள் பங்களாவின் வேலியாக இருந்த மரப் பலகைகளைத் துளைத்துக் கொண்டு வந்து விழுந்தன. எதிரிகள் ஏற்கனவே கிருஷ்ண கங்கா பாலத்தைக் கடந்து விட்டார்கள். அவர்கள் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.”

அந்தப் பயங்கரமான படையெடுப்பினால் அமைதியாக இருந்த நகரம் எப்படி பதற்றமடைந்தது என்பதை அவருடைய நேரடி அனுபவம் தெளிவாக  உணர்த்துகிறது. தொடக்கத்தில் இருந்தே சூறையாடல் நடைபெற ஆரம்பித்தது. பிரிகேடியர் அக்பர் கான் பின்னாளில் கூறியபடி படைக்குக் கூலியாக கொள்ளையடிக்கும் பொருள்களை எடுத்துக்கொள்ள படையின் கமாண்டர் குர்ஷித் அன்வரிடம் பழங்குடியினர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதில் முக்கியமானது என்ன வென்றால், அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் பொருள்களைத்தான் கொள்ளையடிப்பார்கள்.

காஷ்மீர் சமஸ்தானத்தின் படை எதிர்தாக்குதல் நடத்தி அவர்களை ஓரளவுக்குத்தான் தடுக்க முடிந்தது. ஏனென்றால் சமஸ்தானப் படை வீரர்கள் சிலர் பணிக்கு வராமல் சென்று விட்டார்கள். அவர்கள் பூஞ்சை சேர்ந்த முஸ்லிம்கள். ஒரு பிரிட்டிஷ் தூதுவர் முற்றுகை நடந்த நாளில் கடைசி பஸ்ஸில் ராவல்பிண்டியிலிருந்து பயணித்து ஸ்ரீ நகர் வந்து கொண்டிருந்தார். அவர் முசாபராபாத்தில் சீக்கியர்கள் துப்பாக்கிகளுடன் பழங்குடியினர் படையை எதிர் கொள்ள நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறார். அவர் கூற்றுப்படி பழங்குடியினர் படை குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டது. குழுக்களை வழி நடத்தியவர்கள் நிச்சயமாக பழங்குடியினர் அல்ல. குழுக்கள் சில நேரங்களில் குழுவின் தலைவர்களை மீறி செயல்பட்டன. குழுத் தலைவர்களாக செயல்பட்டவர்களில் சிலர் வடமேற்கு எல்லை மாகாணத்திலிருந்தும், மேற்கு பஞ்சாபிலிருந்தும் வந்த முஸ்லிம் லீக் தொண்டர்கள் என்பது பின்னாளில் பலருடைய வாக்குமூலங்கள் மூலம் தெளிவானது.

சூறையாடல்களுக்கு இடையே பலர் கொல்லப்பட்டனர். அவர்களில் மிகுதியானவர்கள் சீக்கியர்களும், இந்துக்களும்தாம். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளை ஆற்றில் வீசி விட்டு தாங்களும் அதில் குதித்தார்கள். கமிஷனரின் மனைவி கிருஷ்ணா மேத்தா அப்படி சிலர் தற்கொலை செய்து கொண்டதை நேரில் கண்டிருக்கிறார். அவர்கள் நோக்கம் சூறையாடுவது; கொள்ளையடிப்பது; பெண்களைக் கடத்துவது ஆகியவை தாம். ஆனாலும் இவற்றைத் தாண்டி அவர்களுக்கு உந்து சக்தியாக ஓர் இலக்கு இருந்தது.

1947 அக்டோபர் 26 இல் ஈத் பண்டிகை வருகிறது. அதனை காஷ்மீர் தலை நகர் ஸ்ரீ நகரில் கொண்டாட வேண்டும் என்பது பழங்குடிப் படையினரின் விருப்பம். முசாபராபாத்தில் இருந்து சுமார் 100 மைல்கள் தொலைவில் ஸ்ரீ நகர் உள்ளது. அவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி ஸ்ரீ நகர் அடைய வேகமாக செல்ல வேண்டும். ஜீலம் பள்ளத்தாக்கு சாலை பாறைகள் நிறைந்த மலைப் பாங்கான குறுகிய பாதை. அதன் வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. குறைவான எதிர்ப்பு இருந்தால் கூட அதில் முன்னேறுவது கடினம்.

இப்போது பழங்குடியினர் படை முசாபராபாத்தில் இருந்து பாரமுல்லாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து அவர்கள் ஸ்ரீ நகர் சென்று தங்கள் புனிதப் போரை முடிக்க வேண்டும். வழியில் அவர்கள் கடந்து செல்ல வேண்டிய மலைப்பாங்கான ஊர் உர்ரி. ஜீலம் நதிக்கரையில் உள்ள அழகிய இந்த ஊர் தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. மேலும் இது கிட்டத்தட்ட முசாபராபாத்துக்கும், பாரமுல்லாவுக்கும் நடுவில் ஜீலம் பள்ளத்தாக்கு சாலையில் அமைந்துள்ளது.

அக்டோபர் 22 ஆம் தேதி பதான் பழங்குடியினர் படை முசாபராபாத்துக்குள் நுழைந்துவிட்டது. 23 ஆம் தேதி அது உர்ரிக்கு வந்துவிடும். தகவல் அறிந்த காஷ்மீர் சமஸ்தானப் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங் 200 வீரர்களுடன் ஸ்ரீ நகரில் இருந்து புறப்பட்டார். பழங்குடிப் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அவருக்கு ஒரே வழிதான் இருந்தது. உர்ரியில் இருக்கும் முக்கிய பாலத்தை சமஸ்தானப் படை தகர்க்க வேண்டும். அதில் அவர் வெற்றி பெற்றார். அப்போது அங்கு காஷ்மீர் படையுடன் இருந்தவர் டெய்லி எக்ஸ்பிரஸின் நிருபர் சிட்னி ஸ்மித். அவர் தொடர்ந்து போர் பற்றிய செய்திகளை பத்திரிகையின் செய்திப் பிரிவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அவருடைய விவரிப்பு, காட்சிகளை நம் கண்முன்னே கொண்டு வருகிறது.

“நானும் அரசர் ஹரி சிங் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங்கும், உடைந்து நொறுங்கிக்கிடந்த உர்ரியின் இரும்புப் பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவருடைய படையினர் முன்னேறி வரும் பழங்குடிப் படைக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தார்கள். பழங்குடிப் படை நகரைக் கைப்பற்றுவதற்காக 4000 அடிகள் கணவாயில் குவிந்திருந்தார்கள். ஒரு மணி நேரம் நடந்த இடைவிடாத துப்பாக்கிச் சண்டைக்கு இடையே உர்ரி நகரத்துக்கு வந்து சேரும் வழியின் கடைசி மூன்று மைல்களைக் கடந்தார்கள். துப்பாக்கிகளின் முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்து பனி மூடிய 10,000 அடி உயர சிகரங்களில் எதிரொலித்தன. அவர்கள் வந்த வழியில் இருந்த வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. பள்ளத்தாக்கு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. தப்பி ஓடாமல் அவர்களை எப்படியும் எதிர்கொள்ளலாம் என்று இருந்த, குறைந்த எண்ணிக்கையிலான சீக்கியர்களையும், இந்துக்களையும் அவர்கள் துவம்சம் செய்தார்கள். துப்பாக்கி வெடிப்பது நின்றவுடன் சூறையாடலைத் தொடங்கினார்கள்.

“நான் பைனாகுலர் வழியாகப் பார்த்தபோது கறுப்புத் தலைப்பாகை அணிந்த நபர்கள் உர்ரியின் பஜார் தெருவில் ஒடிக்கொண்டிருந்தார்கள். பிரிகேடியர் ராஜிந்தர் சிங் ஐந்து லாரிகளில் தன் வீரர்களை அனுப்பினார். தொடர்ந்து மூன்று மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இரவு வந்ததும் அவர்கள் நகரைச் சுற்றி இருந்த மலைகளில் ரோந்து சுற்ற ஆள்களையும், கொலையாளிகளையும் அனுப்பினார்கள். காஷ்மீர் படையால் அவர்களைத் தடுக்க இயலவில்லை.

“காஷ்மீர் படையினர் வண்டிகளில் முன் விளக்குகளை எரியவிடாமல் தொடர்ந்து எதிரிகள் இருக்கும் திசையில் குத்துமதிப்பாக ரைபிளால் சுட்டபடி நிலவு ஒளி படர்ந்த மலைச் சாலைக்கு வந்தார்கள். சாலை முழுவதும் அகதிகள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என்று எல்லோரும் இருந்தார்கள். பல கிராமங்களை மக்கள் காலி செய்து விட்டார்கள். போலீஸாரும், அதிகாரிகளும் உர்ரிக்கும் ஸ்ரீ நகருக்கும் இடையே இருந்த இரண்டு ஊர்களை விட்டுச் சென்று விட்டார்கள்.

“பாலத்தை உடைத்ததன் மூலமாக காஷ்மீர் படை பழங்குடிப் படையின் முன்னேற்றத்தை வெகுவாக குறைத்தது. ஆனால் அதை முழுவதுமாக நிறுத்த முடியவில்லை.காஷ்மீர் படையினர் கடுமையாகப் போராடி எதிரிகளைத் தடுக்க முயன்றார்கள். பழங்குடிப் படை உர்ரியைத் தாண்டி அக்டோபர் 25 ஆம் தேதி மஹூராவை அடைந்தது. மஹூராவில் இருக்கும் புனல் மின் நிலையம் தான் ஸ்ரீ நகருக்கு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது. பழங்குடிப்படை அங்கு சென்ற பிறகு ஸ்ரீ நகருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. காஷ்மீர் அரசர் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்தார். அவரும் அவர் குடும்பத்தாரும், அவருக்கு நெருக்கமானவர்களும் ஸ்ரீ நகரைக் காலி செய்தார்கள். அரசரும், அவரைச் சார்ந்தவர்களும் அதிக விலைமதிப்புள்ள பொருள்களுடன் ஜம்முவுக்குச் சென்றார்கள்.

“மஹுராவை பழங்குடிப்படை கைப்பற்றிய பிறகு பிரிகேடியர் ராஜிந்தர் சிங் கொல்லப்பட்டார்.பூஞ்ச் கலவரத்தை அடக்க காஷ்மீர் படையின் ஒரு பகுதி அங்கு தங்கி விட்டது.இருக்கும் படை வீரர்களும் படைத் தலைவர் கொல்லப்பட்டதால் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் இழந்தனர். படை மிகவும் மோசமான வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.”

பழங்குடிப்படையின் காஷ்மீர் முற்றுகைக்கும், பூஞ்ச் கலவரத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதனால் தான் ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை, “காஷ்மீர் சமஸ்தானப் படைகளை சிதற வைத்து, பலவீனப்படுத்துவதை உறுதி செய்ய பூஞ்ச் கலவரத்தை விட சிறந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று எழுதியது.

பழங்குடிப் படையின் காஷ்மீர் முற்றுகை நடக்கும் அந்த வேளையில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் திட்டம் பலருக்கும் புரிய ஆரம்பித்தது. பாகிஸ்தானின் பிரதம மந்திரி ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்தும் மும்முனை தாக்குதல் திட்டத்தின் முதல் பகுதி பூஞ்ச் கலவரத்தின் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்வது; மேலும், அதை எரிபொருள் கொட்டி வளர்த்துவிடுவது. காஷ்மீர் அரசு தன் படைகளை அங்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி இல்லை. அங்கு நிரந்தரமாக ஒரு படையை நிறுத்திவைப்பதால் தலைநகரின் பாதுகாப்பு சற்று பலவீனப்பட்டுவிடுகிறது. இப்போது பழங்குடிப் படையை திடீர் முற்றுகை இட வைத்து சுலபமாக வெற்றி பெறுவதுதான் பாகிஸ்தானின் நோக்கம். இது தெளிவாகும் போது பூஞ்ச் கலவரத்துக்கும் பாகிஸ்தானுக்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்ற ஸ்னீடன் போன்றவர்களின் வாதம் உடைந்து போகும்.

0

ஒரு சில மணி நேரமும் அறுபது ஆண்டு கால விவாதமும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 6

hindustan-times-jandk-problem-oct-28-19471947 நவம்பர் 5 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் ‘தி டான்’ பத்திரிகையில் பாகிஸ்தானின் முதல் பிரதம மந்திரி லியாகத் அலி கான் காஷ்மீர் இணைப்பு பற்றி கூறிய கடுமையான கருத்து வெளியானது. ‘ நாங்கள் இந்த இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவுடனான காஷ்மீர் இணைப்பு ஒரு மோசடி வேலை. இது காஷ்மீர் மக்கள் மீது அதன் கோழை அரசரால் திணிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் அராஜகப் போக்கு துணை செய்தது.’

இதை முழுமையாக ஆமோதிப்பது போல சில வெளிநாட்டு நூலாசிரியர்களின் கருத்துகள் உள்ளன. அவர்களுள் அலஸ்டர் லாம்ப் மிக முக்கியமானவர். அவர் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பல நூல்களை எழுதியவர். இந்தியா, காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்ற கடுமையான விமரிசனத்தை அவர் முன் வைக்கிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அதனோடு சேர்ந்து ஒலிப்பதாகவே உள்ளது அவர் குரல். இந்தியா மோசடி செய்து காஷ்மீர் இணைப்பு நாடகத்தை நடத்தி தன்னுடைய ராணுவத்தை காஷ்மீரில் இறக்கி அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஆன்ரூ ஒயிட்ஹெட் இதைத்தான் கூற வருகிறார்.

அக்டோபர் 26 ஆம் தேதி வி.பி.மேனன் ஜம்மு சென்று காஷ்மீர் அரசரிடம் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் வாங்கவில்லை என்று அடித்துக் கூறுகிறார் அலெஸ்டர் லாம்ப். தான் பலரிடம் பேசி இதனைத் தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார். அது உண்மை என்றால் 26 ஆம் தேதி மாலை மீண்டும் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆன்ரூ ஒயிட்ஹெட்டும், லாம்பை வழிமொழிவது போல எழுதுகிறார். அவர்கள் இருவரும் அல்லது அவர்களைப் போன்ற சிலரும் பாகிஸ்தானியர்கள் பலரும் கிளப்பும் சந்தேகங்கள் இவைதாம்.

1. 1947 அக்டோபர் 25 ஆம்தேதி இரவு 2 மணிக்கு அரசர், அவர் குடும்பத்தினர், அவருடன் வந்தவர்கள் ஆகியோருடன் காரில் பயணம் செய்து 26 ஆம்தேதி மாலை ஜம்மு அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாரா?

2. 26 ஆம் தேதி மாலை வி.பி.மேனன் தில்லியில் இருந்து ஜம்மு அரண்மனைக்குச் சென்று இணைப்பு ஆவணத்தில், காஷ்மீர் அரசரிடம் கையொப்பம் வாங்கினாரா?
இந்த ஐயப்பாடுகளை அவர்கள் கிளப்புவதன் மூலமாக அவர்கள் சொல்ல வருவது ஒன்றுதான். இந்திய அரசு, காஷ்மீர் சட்டப்படி இந்தியாவுடன் இணைவதற்கு முன்பாக தன் ராணுவத்தை ஸ்ரீ நகரில் இறக்கிவிட்டது.

இந்தியாவில் அப்போது டகோடா விமானங்கள் பயன் படுத்தப்பட்டு வந்தன. பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் டகோடா விமானம் பற்றிய அடிப்படைத் தகவல்களை அளிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டாக்லஸ் ஏர்கிராஃப்ட் கம்பெனி தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ளது. அது ராணுவத்துக்கும், பொதுமக்கள் பயணிப்பதற்கும் டகோடா விமானங்களை உற்பத்தி செய்கிறது. முதல் டகோடா விமானம் 1935 இல் பறந்தது. டகோடா டர்போ புரொப்பெல்லர் விமானங்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. டகோடா விமானத்தின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 185 மைல்கள். அந்த வேகத்தில் அவை 10,000 அடிகள் உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தவை. குறைந்த நீளம் கொண்ட விமான தளத்தில் கூட விமானிகள் அவற்றை இயக்கி மேலே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் வசதியானவை.

புது தில்லியில் இருந்த சாஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்தோ,அங்கிருந்து ஒன்பது மைல்கள் தொலைவில் இருக்கும் பாலம் விமான நிலையத்தில் இருந்தோ ஜம்முவில் இருக்கும் சத்வாரி விமான நிலையத்துக்கு அதிக பட்சமாக இரண்டு மணி நேரத்தில் வி.பி. மேனன் சென்றிருக்க முடியும். வி.பி. மேனன் 26 ஆம் தேதி ஜம்மு செல்லவில்லை என்று கூறுபவர்கள் அதற்கு ஒரு முக்கியக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

1947 இல் மாலை தில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டால் இரவில் ஜம்மு சத்வாரி விமான நிலையத்தில் தரை இறங்க வசதி இல்லை. அதாவது விமான ஓடு தளத்தில் மின்சார விளக்கு வசதி அப்போது இல்லை என்கிறார்கள். இரவு நேரத்திலும், அதிகாலையிலும், மாலையிலும் விமான ஓடு தளத்தில் விமானத்தை தரை இறக்கவும்,மேலே பறந்து செல்லவும் விளக்கு வெளிச்சம் அவசியம். ஆனால் மின்சார விளக்குகள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கவும்,மேலே பறக்க அதை செலுத்தவும் மாற்று வழி நிச்சயமாக உள்ளது.

அக்டோபர் 26 ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் வி.பி. மேனன், மகாஜன், கர்னல் சாம் மானெக் ஷா, ஏனைய விமானக் குழுவினர் ஆகியோர் தில்லி செல்ல இருக்கிறார்கள். அன்று நடந்தவற்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். காலை சுமார் ஐந்தரை மணி அளவில் அவர்கள் அங்கு இருந்திருக்கவேண்டும். விமான ஓடு தளத்தில் இரவு விளக்கு வசதி இல்லை. அதனால் பைன் மரக்கட்டையில் பந்தம் கொளுத்தி வந்து விளக்குகள் ஏற்றி விமானி விமானத்தை ஓட்டி மேலே செலுத்த சிலர் உதவினார்கள். இதனை மானெக் ஷா, மேஜர் ஜெனரல் கே.எஸ்.பஜ்வா வின் ‘ஜம்மு காஷ்மீர் (1947-48) – பொலிட்டிகல் அண்ட் மிலிட்டரி பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னால் பிரேம் சங்கர் ஜாவுக்கு அளித்த ஒரு பேட்டியிலும் இதைக் கூறியுள்ளார்.

விமான ஓடு தளத்தின் ஓரங்களில் வரிசையாக எளிதில் அணையாத எண்ணெய் விளக்குகள் வைத்து அவற்றை பந்தம் கொண்டு ஏற்றுவார்கள். விமான ஒடு தளத்தில் வெளிச்சம் உண்டாக்குவதற்கு ராணுவத்தில் இப்போது இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

26 ஆம் தேதி இரவு உணவுக்குப் பிறகு நேரு தில்லியில் இருந்த காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜனிடம் அவரும் வி.பி. மேனனும் அன்று இரவே மீண்டும் ஜம்முவுக்கு சென்று அரசரை சந்திக்கும்படி கூறியிருக்கிறார். இதன் மூலமாக நமக்கு ஒன்று தெளிவாகிறது. அப்போது இரவில் விமானம் மூலமாக தில்லியில் இருந்து ஜம்மு செல்ல முடியும். மேலும், மகாஜனிடம் வேண்டுகோள் வைப்பவர் சாதாரணமானவர் அல்லர், இந்தியப் பிரதமர் நேரு.

அடுத்த சந்தேகம் காஷ்மீர் அரசர் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி மாலை ஜம்மு அரண்மனைக்குப் போய் சேர்ந்தாரா என்பது. இன்றைக்கு ஸ்ரீ நகரில் இருந்து ஜம்முவுக்கு செல்ல என் .ஹெச். – 1 தேசிய நெடுஞ்சாலை வழியாக ச் சுமார் 183 மைல்களைக் கடக்க வேண்டும். (பின்னர் என். ஹெச். -44 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). என்.ஹெச் -1 தெசிய நெடுஞ்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் இணைக்கிறது. இது வடக்கில் ஜம்மு காஷ்மீரின் உர்ரியில் தொடங்கி ஜலந்தர் வரை செல்கிறது.

பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ள பனிஹால் கணவாய் வழியாக அரசரின் கார்கள் சென்றன. இந்தக் கணவாய் காஷ்மீரில் இருக்கும் காசிகுண்டையும், பிர் பாஞ்சால் மலைத் தொடரின் மறுபக்கம் 22 மைல்கள் தொலைவில் ஜம்முவில் இருக்கும் பனிஹால் நகரத்தையும் இணைக்கிறது. என் ஹெச். -1 தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்தக் கணவாய் அமைந்துள்ளது.

பிர்பாஞ்சால் மலைத் தொடர் என்பது உள் இமாலயப் பகுதியில் உள்ள மலைகளைக் குறிக்கிறது. இது தென் கிழக்கில் தற்போதைய இமாசலப் பிரதேச மாநிலத்தில் தொடங்கி வட மேற்கில் இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதி; பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீர் வரை அமைந்துள்ளது.
காஷ்மீர் அல்லது காஷ்மீர் பள்ளத்தாக்கு (அல்லது ஜீலம் பள்ளத்தாக்கு), பிர் பாஞ்சால் மலைத் தொடருக்கும் ஜன்ஸ்கார் மலைத் தொடருக்கும் இடையே சுமார் 15,948 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத் தாக்கு எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் அனந்த் நாக், பாரமுல்லா, குப்வாரா, புல்வாமா ஆகிய மாவட்டங்கள் இதில் அமைந்துள்ளன. ஜீலம் நதி அனந்த் நாக் மாவட்டத்தில் வியரினாக்கில் உள்ள ஊற்றில் தொடங்கி இந்தப் பள்ளத்தாக்கில் பாய்ந்து பாரமுல்லாவில் இருந்து வெளியேறுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு கடலில் இருந்து சராசரியாக 1850 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனைச் சுற்றி உள்ள மலைகளின் சிகரங்கள் எப்போதும் பனி மூடி இருக்கும். அவை சுமார் மூவாயிரம் முதல் நாலாயிரம் மீட்டர் உயரம் கொண்டவை.

பிர்பாஞ்சால் மலைத் தொடர் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் வெளி இமயமலைப் பகுதியையும் பிரிக்கிறது. இது 2621 கிலோ மீட்டர் நீளமும், 50 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அதில் உள்ள பனிஹால் கணவாய் கடல் மட்டத்தில் இருந்து 2832 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. பனி காலத்தில் வண்டிகள் செல்ல முடியாத அளவுக்கு அங்கே பாதையை பனி மூடிக்கொண்டிருக்கும். அதனால் பனிஹால் கணவாய்க்குக் கீழே மலையைக் குடைந்து ஜவகர் குகைச் சாலை அமைக்கப்பட்டது.

1956 இல் ஜவகர் குகை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 2200 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது பனிஹால் கணவாய்க்கு 632 மீட்டர் கீழே மலையைக் குடைந்து இது அமைக்கப்பட்டுள்ளது. ஜவகர் குகைச்சாலையின் நீளம் 1.6 மைல். இந்த குகைக்குள் இரு புறமும் வாகனங்கள் செல்ல இரண்டு இணை சாலைகள் உள்ளன.

2011 ஆம் ஆண்டில் இருந்து 5.25 மைல்கள் நீளம் கொண்ட புதிய இரட்டை குகைச் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அமைய இருப்பவை இணையான இரண்டு குகைகள். ஒவ்வொன்றிலும் இரண்டு சாலைகள் இருக்கும். இரண்டு குகைகளை இணைக்கும் வழிகளும் உள்ளன. இந்தப் புதிய இரட்டை குகைகள் ஜவகர் குகைக்கு சுமார் 400 மீட்டர் கீழே அமைந்துள்ளன.அதனால் பயணத் தொலைவு இன்னும் குறையும்.

2013 ஜூன் 26 ஆம் தேதி அப்போதைய பாரதப் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் ஜம்முவின் பனிஹால் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் ரயிலை கொடி அசைத்து அனுப்பினார். அந்த ரயில் காஷ்மீரில் உள்ள காசிகுண்ட் சென்றடைந்தது. அது செல்லும் குகை புதிதாக உருவாக்கப்பட்ட பிர் பாஞ்சால் ரயில் பாதை குகை. இதன் மூலமாக இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் சாலை வழியாக செல்லும்போது இருக்கும் 35 கிலோமீட்டர்களில் இருந்து 17.5 கிலோமீட்டர்களாகக் குறைந்து விட்டது.

1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி காஷ்மீர் அரசரின் கார்கள் அணிவகுத்து பனிஹால் கணவாய் வழியாக சென்ற போது ஜவஹர் குகை கூட உருவாக்கப்படவில்லை. கார்கள் சென்றது மோசமான, கட்டை வண்டிகள் செல்லும் சாலையில். ஸ்ரீ நகருக்கும், ஜம்முவுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 183 மைல்கள். இதனை சாலை வழியாக ஒரு மோட்டார் வண்டியில் இப்போது சுமார் 4 மணி நேரத்தில் கடந்துவிடலாம். ஆனால் ஜவகர் குகை மூலமாகக் கிடைக்கும் சீரான சாலை; உயரம் தாழ்ந்த இடத்தில் தூரம் குறைவது இவை எல்லாம் இல்லாத காரணத்தால் அரசரின் கார்கள் ஜம்முவை அடைய அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மிகவும் மோசமான விமரிசகர்கள் கூட ஒப்புக்கொள்வது 14 மணி நேரம்.

காஷ்மீர் அரசர் 25 ஆம் தேதி இரவு 2 மணி அளவில் ஸ்ரீ நகர் அரண்மனையில் இருந்து காரில் புறப்படுகிறார். 26 ஆம் தேதி மாலை 4 அல்லது 5 மணி அளவில் அவர் நிச்சயம் ஜம்மு அரண்மனையை அடைந்திருக்க முடியும். அதன் பின் தில்லியில் இருந்து மகாஜனுடன் விமானத்தில் புறப்பட்ட வி.பி. மேனன் ஜம்மு வந்து இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பம் வாங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. அரசரும் அவருடன் சென்றவர்களும் 26 ஆம் தேதி மாலை ஜம்மு அரண்மனைக்கு வந்து சேர்ந்ததை இளவரசர் கரன் சிங் தனது சுய சரிதையான ‘தி ஹேர் அப்பாரன்ட்’ இல் விவரித்துள்ளார்.

‘அரசருடைய வண்டிகளின் அணிவகுப்பு இரவில் நிதானமாக, தேவையான இடங்களில் சற்று நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்தது. 9000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள பனிஹால் கணவாய் வழியாக வண்டிகள் ஊர்ந்து சென்றபோது வானத்தில் வெளிச்சம் தெரிந்தது. அரசரின் (எங்கள்) குடும்பம் ஜம்முவில் இருந்து 60 மைல் தொலைவில், குந்த்வில் தங்கி சற்று ஓய்வு எடுத்தது. அதன் பிறகு வண்டிகளின் அணி வகுப்பில் வெளிர் மஞ்சள் நிற கார் ஒன்று இணைந்துகொண்டது. அதில் சுவாமி சந்த் தேவ் இருந்தார். நாங்கள் மாலை ஜம்முவை அடைந்தோம்.’

விவகாரம் இதோடு முடியவில்லை. அறுபது ஆண்டுகள் கடந்த பிறகும் கூட அவிழ்க்கப்படாத சில மர்ம முடிச்சுகள் விமரிசகர்களாலும், நூலாசிரியர்களாலும் இன்றும் முன் வைக்கப்படுகின்றன.

(தொடரும்)

காஷ்மீர் இணைப்பும் முதல் போரும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 5

downloadகாஷ்மிர் இந்தியாவுடன் முறைப்படி இணைந்து விட்டதால், இந்திய அரசாங்கம் காலாட் படை பெட்டாலியன் ஒன்றை ஸ்ரீ நகருக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி இந்திய ராணுவத்தின் முதல் விமானம் அக்டோபர் 27 ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்பட்டு காலை 8.30 மணி அளவில் ஸ்ரீ நகர் விமான தளத்தில் தரை இறங்குகிறது. இங்கு தான் பாகிஸ்தானியர்களும், சில எழுத்தாளர்களும் ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். இந்தியாவின் ராணுவ வீரர்களை ஏற்றி வந்த முதல் விமானம் ஸ்ரீ நகரில் அக்டோபர் 27 ஆம் தேதி தரை இறங்குகிறது. இது முறைப்படி காஷ்மீர் இந்தியாவுடன் தன்னை இணைத்துக் கொண்ட பிறகா அல்லது அதற்கு முன்னரா?அதாவது காஷ்மீர் அரசர் இணைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்த பின், அதில் இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் மவுண்ட்பேட்டன் ஒப்புதல் கையொப்பமிட்ட பிறகா அதற்கு முன்னரா?

பாகிஸ்தானின் வாதம் காஷ்மீர் இந்தியாவுடன் முறைப்படி இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இந்தியா தன் ராணுவத்தை காஷ்மீருக்குள் இறக்கி விட்டது என்பதுதான். பாகிஸ்தான் இன்னும் சரியாக திட்டமிட்டு போர் நடத்தியிருந்தால், காஷ்மீரை முழுவதுமாகக் கைப்பற்றி இருக்கலாம் என்று ஆதங்கப்படும் சில வெளிநாட்டு எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்தும் இதுதான். பாகிஸ்தான் அனுதாபிகளான இவர்களும், பாகிஸ்தானும் சொல்ல வருவது இதைத்தான். இந்தியா மோசடி வேலையில் ஈடுபட்டது; காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொள்ள உலகை ஏமாற்றி அதில் தன் ராணுவத்தை இறக்கியது.

அவர்கள் கூற்றில் காஷ்மீர் விவகாரமும், போரும் தொடர்வதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டு மறைமுகமாக அடங்கியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அவர்களுடைய குற்றச்சாட்டுகள் சரியானவை தானா என்று முடிவு செய்ய, முதல் போர் தொடங்குவதற்கு முன் நடந்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

1947 அக்டோபர் 22 :

பாகிஸ்தான் அனுப்பிய பதானியப் படை அபோத்தாபாத் சாலை வழியாக முசாபராபாத்துக்கு அருகில் காஷ்மீருக்குள் நுழைகிறது.

1947 அக்டோபர் 23 :

காஷ்மீர் அரசர் ஹரி சிங் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி மெஹர்சன் மகாஜனுடன் ஸ்ரீ நகர் விமான தளத்தில் இறங்குகிறார். அவர்கள் இருவரும் ஜம்முவில் கலவரம் நடந்த இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார்கள். தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்றுதான் ஸ்ரீ நகர் வந்தார்கள். அவர்களிடம் முந்தைய நாள் நடந்த பதான் பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகை பற்றி அதிகாரிகள் தெரிவித்தார்கள். அப்போது அரசர் தன் படைகளை வைத்து அவர்களை விரட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்க வேண்டும். அதே வேளையில் அரசர் தன்னிடம் இருந்த முஸ்லிம் படை ஓடிவிட்டதை அறியவில்லை. அரசர் தன்னுடைய துணைப் பிரதமர் ஆர்.பி. ராம்லால் பத்ராவை தில்லிக்கு அனுப்பி இந்திய அரசாங்கத்தின் உதவியைக் கோரினார். காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன் தன்னுடைய சுயசரிதையான ‘லுக்கிங் பேக்’ (மும்பை,1963) புத்தகத்தில் இதைப் பற்றி எழுதியுள்ளார்.

1947 அக்டோபர் 24 :

பத்ரா ஸ்ரீ நகரில் இருந்து தில்லிக்குப் புறப்படுகிறார். அவரிடம் காஷ்மீர் அரசர் கொடுத்த காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்புதல் கடிதம்நேருவுக்கும்,வல்லபபாய் படேலுக்கும் அவர் தனித் தனியே எழுதிய கடிதங்கள் ஆகியவை இருந்தன. காஷ்மீர் அரசர் அந்தக் கடிதங்கள் மூலமாக முழு ராணுவ உதவியைக் கோரி இருந்தார். பத்ரா இந்திய அரசாங்கத்திடம் சேர்ப்பித்த ஒப்புதல் கடிதம் வரலாற்றுவியலாளர்களைப் பொருத்த அளவில் மிக முக்கியமான ஒன்று. இந்தக் கடிதம் 2003 ஆம் ஆண்டு ஒயிட் ஹெட்டுடன் பிபிசியில் பணியாற்றிய ஒருவர் மூலமாக அவருக்குக் கிடைத்தது.

ஸ்ரீ நகர், காஷ்மீர்
1947 அக்டோபர் 23

இந்தக் கடிதத்தின் மூலமாக என்னுடைய துணைப் பிரதம மந்திரி ஆர்.பி. ராம் லால் பத்ராவுக்கு, என் சார்பாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அதிகாரம் அளிக்கிறேன். ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்கும் போது ஹைதராபாத் நிஜாமுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் என்ன நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுமோ அவை இப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இதற்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன்.

ஹரி சிங்
மகாராஜா
ஜம்மு-காஷ்மீர்

இந்தக் கடிதத்தில் அரசர் கையொப்பமிட்டுள்ளார். இந்தக் கடிதம் இந்திய அரசாங்கத்துக்கு கிடைத்ததற்கான ஆதாரமாக 1947 நவம்பர் மாதம் ஒலிபரப்பான நேருவின் வானொலி உரை அமைந்துள்ளது. அதில் அவர், ‘அக்டோபர் 24 ஆம் தேதி முதல் முறையாக, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான வேண்டுகோளும், ராணுவ உதவிக்கான வேண்டுகோளும் காஷ்மீரிடம் இருந்து வந்தன’ என்று குறிப்பிட்டார். வாசகர்கள் இந்தக் கடிதத்தை காஷ்மீர் அரசர் கொடுத்த இறுதியான இணைப்பு ஒப்புதல் கடிதம் என்று தவறாகக் கருதவேண்டாம். அது பிறகுதான் வந்தது.

அதே நாள் இரவில் ஸ்ரீ நகரில் நடந்தவை அரண்மனையில் நிலவிய சூழலைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். ஹரி சிங்கின் அரச வாரிசு கரண் சிங் தன்னுடைய இடுப்பில் ஏற்பட்ட பிரச்னைக்காக நியூ யார்க் சென்று சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். தன்னுடைய சுயசரிதையில் கரண் சிங் 24 ஆம் தேதி இரவு அரண்மனையில் நடை பெற்ற தசரா விருந்து பற்றி விவரித்துள்ளார். சக்கர நாற்காலியில் கரண் சிங் அமர்ந்திருக்க, தர்பாரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அரசர் தன்னுடைய தங்க அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். பலரும் வந்து அவருக்கு மரியாதை செலுத்தியபடி இருந்தார்கள். ஒரு கணத்தில் மற்ற அனைவரும் அரண்மனைக்கு வெளியே இருக்க அரசரும், இளவரசரும் உள்ளே இருந்தார்கள். தீடீரென மின்வெட்டு ஏற்பட்டு எங்கும் இருள் சூழ்ந்தது. இருட்டில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. ஏதோ பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை, தான் உணர்ந்து கொண்டதாக கரண் சிங் எழுதியுள்ளார். மேலும் அந்த வேளையில் காஷ்மீரில் ஒரு படையெடுப்பு நடந்து கொண்டிருப்பது தனக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஸ்ரீ நகரில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவில் இருந்த மஹூரா மின் நிலையத்தை பதானியப் படை கைப்பற்றிவிட்டது. பணியாளர்கள் ஓடி விட்டார்கள். ஸ்ரீ நகர் முழுவதும் இருளில் மூழ்கி விளக்குகள் அணைந்த போதும் தசரா விருந்து தொடர்ந்து நடைபெற்றது. அரண்மனைக்கு சிறப்பு மின்சாரம் வழங்கும் ஏற்பாடு இருந்த படியால் அது சாத்தியமானது என்று மகாஜனும் அந்த தசரா விருந்து பற்றி தமது நூலில் எழுதியுள்ளார். இருந்தாலும் நகரம் முழுவதும் மின் வெட்டை ஏற்படுத்தி, எதிரிகள் முன்னேறி வருவதால் நிர்வாகத்தில் இருந்த பலர் பயந்து ஓடி விட்டார்கள்.

அக்டோபர் 25 :

காலை 11 மணி அளவில் கவர்னர் ஜென்ரல் மவுண்ட்பேட்டன் தலைமையில் கேபினட் பாதுகாப்பு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அதில் பதானியர்களின் காஷ்மீர் முற்றுகை; காஷ்மீர் இணைப்பு பற்றியும், ராணுவ உதவி பற்றியும் வந்த வேண்டுகோள்கள் ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டன. காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் இணைக்கப்படும் வரையில், இந்தியா காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பக்கூடாது என்று மவுண்ட் பேட்டன் உறுதியாகத் தெரிவித்தார். பாதுகாப்பு கமிட்டி வி.பி. மேனனை ஸ்ரீ நகருக்கு அனுப்ப முடிவு செய்தது. தில்லியில் இருந்து ஸ்ரீ நகர் செல்ல விமானப் பயண தூரம் சுமார் 400 மைல்கள். தரை வழி தூரத்தைவிட விமான வழி தூரம் குறைவாக இருக்கும்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் புது தில்லியில் இருந்து சுமார் பத்து மைல் தொலைவில் பாலம் என்ற இடத்தில் உள்ளது. அங்கிருந்து ஸ்ரீ நகர் சுமார் 400 மைல் தொலைவில் உள்ளது. வி.பி. மேனன் பயணித்த விமானம் இந்திரா காந்தி விமான நிலைய முனையத்தில் இருந்து சுமார் 9 மைல் தொலைவில் தில்லியில் உள்ள சஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்து சென்றது.

தில்லியில் சஃப்டார்ஜங் நினைவிடத்துக்குத் தெற்கே 1928 இல் வில்லிங்டன் விமான தளம் அமைக்கப்பட்டது. அது பின்னர் வில்லிங்டன் விமான நிலையமாக மாற்றப்பட்டது. அதன் பிறகு அதற்கு சஃப்டார்ஜங் விமான நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவே அப்போது தில்லியில் இருந்த முக்கிய விமான நிலையம். 1962 ஆம் ஆண்டு வரை பிரயாணிகள் விமானங்கள் புது தில்லியில் இருக்கும் சஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட்டு வந்தன.

இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) கட்டப்பட்ட பாலம் விமான நிலையம் பிரிட்டிஷாரால் ராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. 1962 முதல் பயணிகள் விமான சேவை, பாலம் விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பயணிகள் அதிகரிப்பால் மிகப்பெரிய இரண்டாவது சர்வதேச விமான நிலைய முனையம் மே மாதம் 1986 ஆம் ஆண்டு தன் சேவையைத் தொடங்கியது. அப்போது பாலம் விமான நிலையத்துக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

1947 இல் வி.பி. மேனன் டகோடா பிரயாணிகள் விமானத்தில் சஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீ நகர் விமான நிலையம் சென்றிருந்தால், சுமார் இரண்டரை மணி நேரத்தில் அவர் அதை அடைந்திருக்கவேண்டும். முறைப்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பின்னர் தான், இந்தியா உதவிக்கு ராணுவத்தை அங்கு அனுப்பமுடியும் என்பதை அரசரிடம் விளக்கவேண்டியது அவர் வேலை. அவருடன் ராணுவ அதிகாரி சாம் மானெக்ஷாவும் சென்றார். அவர்கள் இருவரும் 25 ஆம் தேதி ஸ்ரீ நகர் சென்று அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அப்படி ஒரு குழப்பம் நிறைந்த சூழலை அதுவரை எங்கும் தான் பார்த்ததில்லை என்று மானெக்ஷா கூறுகிறார். மேலும் தனது வாழ்நாளில் அவ்வளவு நகைகளை ஒரே இடத்தில் கண்டதில்லை என்கிறார். விலை மதிப்பு மிக்க முத்து மாலைகளும், ரத்தினக்கற்களும் ஓர் அறை முழுவதும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. விலைமதிப்புமிக்க பொருள்கள் கட்டி வைக்கப்பட்ட பெட்டிகள் நிறைய இருந்தன. அரசர் ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு ஓடிக் கொண்டிருந்தார். வெளியே வாகனங்கள் அணிவகுத்து நின்றன.வி.பி.மேனன் அரசரிடம் உடனே அவர் ஜம்முவுக்குச் சென்று விடுவது நல்லது என்று கூறினார்.

அக்டோபர் 26:

அரசர் தன் குடும்பத்தினருடன் ஜம்முவுக்குச் செல்ல தயாராகி விட்டார்.விடியலுக்குப் பல மணி நேரம் முன்னதாக சுமார் இரண்டு மணி அளவில் அரசரின் வாகனங்கள் புறப்பட்டன. அவர்கள் எவ்வாறு ஜம்முவுக்கு பயணமானார்கள் என்பதை இளவரசர் கரண் சிங் தன்னுடைய சுய சரிதையில் எழுதியுள்ளார். தன்னுடைய காரை அரசரே ஜம்மு வரை ஓட்டியுள்ளார். ஸ்ரீ நகரில் இருந்து ஜம்மு சுமார் 182 மைல்கள் தொலைவில் உள்ளது. அரசர் காரை ஓட்ட அவர் அருகில் விக்டர் ரோசென் தால் அமர்ந்து கொண்டார். இரண்டு அதிகாரிகள் கைத்துப்பாக்கியுடன் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டார்கள். ராணி சில பெண்களுடன் பின் தொடர்ந்த காரில் வந்தார். மற்ற பெண்கள் இருந்த கார்கள் அதனைத் தொடர்ந்து வந்தன. இடுப்பில் மாவுகட்டு போடப்பட்டிருந்ததால் இளவரசரை காரில் ஏற்ற முடியவில்லை. மன்னர் வேட்டைக்குச் செல்லும் போது பயன்படுத்தும் வேகன் ஒன்றில் இருந்த இருக்கையில் அவர் தூக்கி உட்கார வைக்கப்பட்டார். 9000 அடிகள் உயரமான பனிஹால் கணவாய் வழியாக வண்டிகள் சென்றன. ஜம்முவை அடையும்வரை அரசர் எதுவும் பேசவில்லை. குளிர் காலத் தலைநகரமான ஜம்முவில் இருந்த அரண்மனைக்கு வந்த பிறகு விக்டரிடம் ஒரே வரியில் எல்லாவற்றையும் தெரிவித்தார் அரசர்.‘நாம் காஷ்மீரை இழந்து விட்டோம்.’

26 ஆம் தேதி காலை வி.பி. மேனனும், மகாஜனும் தில்லிக்குத் திரும்ப, விமான தளம் செல்ல தயாரானார்கள். அரசர் சென்ற காருடன் எல்லா கார்களும் சென்றுவிட்டபடியால் ஒரு பழைய ஜீப்பைத் தவிர அங்கு வேறு ஒன்றுமில்லை. அவர்கள் இருவரும், விமானக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஏழு பேரும், அந்த ஜீப்பில் ஏறி விமான தளம் சென்றார்கள். அன்று காலை உணவு வேளையில் தில்லியை அடைந்தார்கள்.

வி.பி. மேனன், காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன், இந்தியப் பிரதம மந்திரி நேருவையும், துணைப் பிரதம மந்திரி படேலையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். மகாஜன் நேருவிடம் ஸ்ரீ நகரைக் காக்க இந்தியாவின் ராணுவ உதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நேரு தெளிவான எந்த பதிலும் அளிக்கவில்லை. பேசிக்கொண்டிந்த போது ஒரு நிலையில் நேரு கோபப்பட்டார் என்று மகாஜன் கூறுகிறார். அப்போது நேருவிடம் ஒரு துண்டு தாள் கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்து ஷேக் அப்துல்லாவும் இதைத்தான் விரும்புகிறார் என்று நேரு சத்தமாகக் கூறுகிறார். பக்கத்து அறையில் இருந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லா அந்த அறைக்கு வந்து அந்தக் கருத்தை ஆமோதிக்கிறார். அதன் பிறகு நடைபெற்ற கேபினெட் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் வி.பி. மேனனும், மானெக்ஷாவும் ஸ்ரீ நகர் நிலவரம் பற்றித் தெரிவித்தார்கள். அடுத்த நாள் அக்டோபர் 27 ஆம் தேதி ஒரு காலாட்படை பெட்டாலியனை ஸ்ரீ நகருக்கு அனுப்புவது என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. அதற்கு ராணுவ விமானங்களையும், சில சிவில் விமானங்களையும் பயன்படுத்த விரும்பியது.

அமைச்சகம் காஷ்மீர் அரசருக்குத் தேவையான இணைப்பு ஆவணத்தைத் தயார் செய்தது. ஒரு கடிதமும் அதனோடு அனுப்பப்பட்டது. ‘ஒப்பந்தம் தாற்காலிகமானது. மக்களின் கருத்தை அறியும் வரையில்’ என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவுடன் அரசர் ஷேக் அப்துல்லாவின் தலைமையில் ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இருந்தது.

வாசகர்கள் ஒப்பந்தம் தாற்காலிகமானது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பற்றி குழப்பம் அடையத் தேவையில்லை. அரசர் ஒப்பந்த ஆவணத்தில் கையொப்பமிட்டு அதன் கீழ் இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டன் கையொப்பமிட்டுவிட்டால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது சட்டப்படி உறுதியாகிவிடும். அதுவேதான் நடந்தது. 26 ஆம் தேதி காலையில் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் முடிந்து ஒப்பந்தமும், கடிதமும் தயாரானவுடன் வி.பி. மேனன், காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜனுடன் ஜம்முவுக்கு விமானத்தில் புறப்பட்டுவிட்டார்.

தில்லி சஃப்டார்ஜங் விமான நிலையத்துக்கும் ஜம்முவில் உள்ள சத்வாரி விமான தளத்துக்கும் இடையே உள்ள விமான வழிப் பயண தூரம் சுமார் 325 மைல்கள். டகோடா விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரத்தில் அதைக் கடக்கலாம். வி.பி. மேனன் தன்னுடைய ‘தி ஸ்டோரி ஆஃப் தி இன்டெகரேஷன் ஆஃப் தி இண்டியன் ஸ்டேட்ஸ்’ (1957) என்ற நூலில் இதைப் பதிவு செய்துள்ளார். அவரும் மகாஜனும், ஜம்முவை அடைந்து அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அங்கு விலையுயர்ந்த பொருள்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. அரசர் பயணக் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். உதவியாளர்கள் அவரை எழுப்பிய பின் வி.பி. மேனன் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் நடந்தவை பற்றிக் கூறினார்.

அரசர் காஷ்மீரை இந்தியாவுடன் உடனே இணைத்துக்கொள்ளத் தயாராக இருந்தார். அவர் கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டனுக்கு காஷ்மீரின் பரிதாபகரமான நிலையை விளக்கி, ராணுவ உதவி கோரி ஒரு கடிதம் தயார் செய்து கொடுத்தார்.அதில் ஷேக் அப்துல்லா, மகாஜனுடன் சேர்ந்து வழி நடத்த ஓர் இடைக்கால அரசாங்கத்தை தான் அமைப்பதாகவும் கூறி இருந்தார்.உடனடியாக ஸ்ரீ நகரில் இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது என்று முடித்துக் கொண்ட அவர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

வி.பி. மேனன் இணைப்பு ஆவணம், அரசரின் கடிதம் ஆகியவற்றுடன் தில்லிக்கு விமானத்தில் பறந்தார். அவருடன் மகாஜனும் சென்றார். விமான நிலையத்தில் வல்லபபாய் படேல் வி.பி. மேனனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் நேராக அன்று மாலையில் நடந்த பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்துக்குச் சென்றார்கள். அங்கு நீண்ட விவாதத்துக்குப் பிறகு எல்லோராலும் காஷ்மீர் இணைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் அடுத்த நாள் 1947 அக்டோபர் 27 ஆம் தேதி காலாட் படை பெட்டாலியன் ஒன்றை ஸ்ரீ நகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

26 ஆம் தேதி தில்லியில் இரவு உணவு வேளையின் போது, நேரு தமக்கு ஒரு தகவல் அனுப்பியதாக காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவரும் வி.பி.மேனனும் மீண்டும் ஜம்முவுக்கு விமானம் மூலம் சென்று இணைப்பு ஆவணத்தின் சில கூடுதல் ஆவணங்களில் அரசரின் கையொப்பம் பெற்று வரவேண்டு மென்று கேட்டுக் கொண்டார்.

அக்டோபர் 27:

கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் காஷ்மீர் அரசர் கையொப்பமிட்டு அனுப்பிய இணைப்பு ஆவணத்தில் இந்தியாவின் சார்பாக கையொப்பமிட்டார்.

காலை 8.30 மணி அளவில் இந்திய ராணுவத்தின் முதல் விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தில் தரை இறங்கியது. இரண்டு, மூன்று நாள்கள் சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் மகாஜன் தில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் வீட்டில் தங்கி ஒய்வு எடுத்தார். அன்று காலை நடந்தவற்றை அவரே தமது நூலில் விவரிக்கிறார்.

‘27 ஆம் தேதி காலை பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் வீட்டின் மேல் ஸ்ரீ நகருக்குச் செல்லும் ராணுவ விமானத்தின் சத்தம் கேட்டது. 9 மணி அளவில் ஸ்ரீ நகர் விமான தள அதிகாரி இந்திய ராணுவ விமானம் தரை இறங்கிய தகவலைத் தெரிவித்தார். அதன் பின் நானும் வி. பி. மேனனும் தில்லியில் இருந்து ஜம்முவுக்கு விமானத்தில் சென்றோம். சில ஆலோசனைகளுக்குப் பிறகு கூடுதல் ஆவணங்களில் அரசர் கையொப்பம் இட்டார். அவற்றுடன் வி. பி. மேனன் தில்லி திரும்பினார்.’

இங்கு ஒன்றை நன்றாக கவனிக்கவேண்டும். அக்டோபர் 27 ஆம் தேதி காஷ்மீர் அரசர் கையொப்பம் இட்ட ஆவணங்கள் ‘சப்ளிமென்டரி டாக்குமென்ட்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற இணைப்பு ஆவணம் தொடர்பான கூடுதல் ஆவணகள்தாம். ஏனென்றால் காஷ்மீர் இணைப்பு ஒப்பந்த ஆவணத்தில் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி அரசர் கையொப்பம் இட்டு விட்டார். 27 ஆம் தேதி அதில் மவுண்ட்பேட்டன் கையொப்பம் இட்டவுடன் காஷ்மீர் சட்டப்படி இந்தியாவுடன் இணைந்து விட்டது.

ஆக்கிரமிப்புகளும் தயாரிப்புகளும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 5

12241622874161946 அக்டோபர் 30 ஆம் தேதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதிக்கும் இடையே மிகப்பெரிய இனப்படுகொலைகள் பீகாரில் நடந்தன. இம்முறை மிகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  5,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஓர்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்கள். ஜின்னா பதறினார். பிரிவினைக்கு முழு அழுத்தம் கொடுத்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பழி தீர்ப்பதற்காக பீகார் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்ற கருத்து பரவியதுதான்.

இந்தியாவைப் பிரித்து தனி பாகிஸ்தான் கேட்டவர்கள் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள். பிரிவினை வேண்டாம் என்றவை  மற்ற பெரிய கட்சிகளான காங்கிரஸும் இந்து மகாசபையும். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணப் பொதுத் தேர்தல் அறிக்கையில் இரண்டு கட்சிகளும் தங்கள் தேசப்பிரிவினை எதிர்ப்பைத் தெளிவாகக் குறிப்பிட்டன. முஸ்லிம் லீகைத் தவிர மற்ற முஸ்லிம் அமைப்புகளும் வெளிப்படையாகப் பிரிவினையை எதிர்த்தன. முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற லட்சியத்தை அடைய  பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்களைப் பிரிப்பதையே நம்பி இருந்தது. ஏனென்றால் மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் முஸ்லிம்கள் மிகுதியாக உள்ளார்கள். பீகாரில் மூஸ்லிம்கள் சுமார் 10 சதவீதம் தான். அங்கே பெரும்பான்மையினராக இந்துக்கள் இருக்கிறார்கள். அதனால் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லிம்களை அவர்கள் மிரட்டிக் கொல்ல ஆரம்பித்தார்கள் என்று நம்புவது எளிது.

பீகாரில் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிரிவினையை விரும்பாத காங்கிரஸ் சுதந்தரத்துக்குப் பிறகு மதச்சார்பற்ற குடியரசை நிறுவுவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. அப்போது பீகாரில் நிறைய முஸ்லிம் போலீஸ் அதிகாரிகள் பணியில் இருந்தார்கள். இந்நிலையில் அங்கு என்னதான் நடந்தது என்பது எல்லோரும் அறிந்துகொள்ள நினைக்கும் ஒன்று. கலவரங்கள் நடந்த இடங்களில் நேரடியாகப் பார்த்த சாட்சிகள் கொடுக்கும் தகவல்கள்தாம் உண்மையை அறிந்து கொள்ள உதவும்.

ஒரு வருடத்துக்கு முன்பாக எந்த வன்முறையையும் சந்திக்காத முங்கெர் கற்பனைக்கு எட்டாத வன்முறைகளை 1946 இல் சந்தித்தது. அகில இந்திய அளவில் இனக்கலவரங்கள் பல இடங்களில் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூரில் அது எப்படி தொடங்கி வளர்ந்தது என்பதை நாம் இங்கே கண்டு கொள்ளலாம். முங்கெர் எப்போதுமே முஸ்லிம் லீக் துடிப்புடன் செயல்படும் மாவட்டம். இந்தக் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக சாதகமான சூழ்நிலை ஏற்படும்வரை மூஸ்லிம் லீக் காத்திருந்ததாகவே தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தில் ஒரு கணிசமான அளவு அதிகாரிகள் இஸ்லாமியர்களாகவும், முஸ்லிம் லீகின் கொள்கைகளை ஆதரிப்பவர்களாகவும் இருந்த காலகட்டத்தை  அது சரியாகப் பயன்படுத்த நினைத்தது. இந்துக்களின் விழாக்களில் இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டது முஸ்லிம் லீக். இதற்கு உள்ளூர் அதிகாரிகள் ஆதரவாக இருந்தார்கள். பீகாரை ஆளும் காங்கிரஸ் அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது.

கல்கத்தா, நவகாளி போன்று  பீகாரிலும் முஸ்லிம் லீக் பாகிஸ்தானை எப்படியாவது அடைந்து விடும் நோக்கில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது. இருந்தபோதும் இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை வகித்த நேரு, ‘வன்முறையில் ஈடுபடும் இந்துக்கள்மீது விமான குண்டு வீச்சு நடத்தக்கூடத் தயங்கமாட்டேன்’ என்றார்.

இந்தியப் பிரிவினையை எதிர்த்த காங்கிரஸின் கொள்கைக்கு எதிராக ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதே அவருக்கு மிக முக்கியமானதாக இருந்திருக்கவேண்டும். கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பிறகு பெரிய அளவில் கலவரம் நடைபெறக்கூடாது என்பதே அனைவரின் எண்ணம். நேருவும் விடுதலைக்கு முன்பு எத்தகைய கலவரத்தையும்  இந்தியாவில் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றே நினைத்திருப்பார். அந்தச் சமயத்தில் பீகாரில் இந்துக்கள், இஸ்லாமியர்களை பழி தீர்க்கிறார்கள் என்ற செய்தியாலும் அவர் நேரடியாக பீகாரில்  கண்டவற்றாலும் எரிச்சல் அடைந்திருக்கவேண்டும். பெரும்பான்மை மக்களாக  இந்துக்கள் இருக்கும் இடத்தில்  முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற ஜின்னா போன்றவர்களின் குற்றச்சாட்டினால் அவர்  மன நெருக்கடிக்கு ஆளானார். அதைத்தான் முஸ்லிம் லீக் விரும்பியது. படிப்படியாக ஜின்னா தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி பெற்று வந்தார்.

0

1947 ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராயாகப் பதவி ஏற்றார் மவுண்ட்பேட்டன். அவர் அறிவித்த ஜூன் 3 ஆம் தேதி திட்டத்தின்படி அல்லது மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி பிரிட்டிஷ் இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு டொமினியன்களாகப்   பிரிக்கப்பட்டன. 1947 ஜூன் மாதம் 3 ஆம் தேதி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்  மவுண்ட்பேட்டன் அந்தத் திட்டத்தை அறிவித்தார். அதன் முக்கிய அம்சம் பஞ்சாப், வங்காள மாகாணங்களின் பிரிவினை பற்றியது. பஞ்சாப், வங்காள சட்டசபைகளில் இந்து, சீக்கிய, முஸ்லிம்  உறுப்பினர்கள்  அனைவரும் பிரிவினை வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வாக்களிப்பார்கள்.பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தால் இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்படும். சிந்து மாகாணம் எந்த ப்க்கம் இணையவேண்டும் என்பதை அதுவே முடிவு செய்து கொள்ளும். வடமேற்கு எல்லை மாகாணமும், அசாமின் சில்ஹெத் மாவட்டமும்  இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டுமா அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதை  பொது வாக்கெடுப்பின் மூலம்  முடிவு செய்து கொள்ளலாம். 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்தரம் பெறும்; பிரிவினை இருக்கும் பட்சத்தில் பிரிவினை கமிஷன் ஒன்று அமைக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூன் 2 ஆம் தேதியே இந்தியாவின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மவுண்ட்பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள். திட்டத்தில் ஐநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஜூன் 3 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் சமஸ்தானங்கள் விடுதலை பெறவுள்ள இரண்டு டொமினியன்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்துவிடும்படி அறிவுரை கூறினார்.

மவுண்ட்பேட்டனுக்கு முன்பு  வைஸ்ராயாக பதவி வகித்த வேவல்  இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான எல்லைக் கோட்டை ஓரளவு வகுத்திருந்தார். புதிதாகப் பிறக்க இருந்த  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு சர். சிரில் ராட்கிளிஃபை நியமித்தது. அவர் இரண்டு எல்லை கமிஷன்களுக்குத் தலைமை வகிப்பார். ஒன்று வங்காளத்தையும், மற்றொன்று பஞ்சாபையும் பிரிக்கும்.

இஸ்லாமியர்கள் மிகுதியாக  இருக்கும் பகுதி பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்கள் மிகுதியாக இருக்கும் பகுதி இந்தியாவுக்கும் கொடுக்கப்படும். இரண்டு கமிஷன்களிலும் நான்கு பிரதிநிதிகள் இருப்பார்கள். இருவர் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்களாகவும், இருவர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இரண்டு கட்சிகளுக்குமிடையே இருக்கும் பகையைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை முறியும் நிலை ஏற்பட்டால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ராட்கிளிஃப் கையில் கொடுக்கப்படும்.

பிரிவினைக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த இந்தியாவின் மொத்தப் பரப்பளவு சுமார் 15 லட்சத்து 67 ஆயிரம் சதுர மைல்கள். 1941 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 38 கோடியே 90 லட்சம். தேச விடுதலையின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு தனி டொமினியன்கள் ஆயின. மதச்சார்பற்ற இந்தியா ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்றும்; முஸ்லிம்களின் பாகிஸ்தான் ‘டொமினியன் ஆஃப் பாகிஸ்தான்’ என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டையும் பிரிக்கும் எல்லைக்கோடுதான் ராட்கிளிப் கோடு. அதை உருவாக்கிய ராட்கிளிப்பின் பெயரால் அது அழைக்கப்பட்டது.

தேசப் பிரிவினையின் அடிப்படை இதுதான். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த வடமாகாணங்களில் முஸ்லிம்கள் மிகுதியாக வாழும் மாகாணங்கள் தாம் தனி பாகிஸ்தான் என்ற கட்டடத்தின் அஸ்திவாரம். அதன்படி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 91.8% இருக்கும் பலுசிஸ்தான் மாகாணமும்,முஸ்லிம்கள் 72.2% இருக்கும் சிந்து மாகாணமும் முழுமையாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.முஸ்லிம்களின் மக்கள் தொகை மிக அதிகமாக இல்லாத மாகாணங்களான வங்காளமும் பஞ்சாபும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும்.

வங்காளத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 54.4%; பஞ்சாபின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 55.7%. வட மேற்கு எல்லை மாகாணம் தேச விடுதலைக்குப் பிறகு பொது வாக்கெடுப்பில் கிடைத்த முடிவின்படி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. பின்னாளில் அதன் பெயர் கைபர் பக்துன்குவா என்று மாற்றப்பட்டது. அசாம் மாகாணத்தின் சில்ஹெத் மாவட்டமும் பொது வாக்கெடுப்புக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

ராட்கிளிப் கோடு 1947 ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது .அது ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட 8.8 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகளைப் பிரித்தது. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி பிரிக்கப்பட்ட பகுதிகளில் ங்பஞ்சாப்,வங்காளம்சி இருந்து இந்தியா பக்கம் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர வேண்டும்.மொத்தம் ஒரு கோடியே 45 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 72 லட்சத்து 27 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதே போல 1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்துக்களையும், சீக்கியர்களையும் சேர்த்து பார்க்கும்போது சுமார் 72 லட்சத்து 96 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி இந்த இடப்பெயர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். பலர் உயிருக்குப் பயந்து ஓடி வந்தார்கள். இது இரு தரப்பு மக்களுக்கும் பொருந்தும்.

இந்தியப் பிரிவினையில் இறந்தவர்கள் 4 லட்சம் பேர் என்று வைத்துக்கொண்டால், அவர்களுள் 2 லட்சம் பேர் முஸ்லிம்கள்; இந்துக்கள்,சீக்கியர்கள், மற்ற மதத்தவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை 2 லட்சங்கள். சுமார் 75 ஆயிரம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.

பிரிவினை பூகம்பம் பஞ்சாபை மிக மோசமாகப் பாதித்து உலுக்கியெடுத்தது. இடம் பெயர்ந்த ஒரு கோடியே 45 லட்சம் பேரில் சுமார் ஒரு கோடி பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.பிரிவினை வன்முறைகளின் போது உயிர் இழந்தவர்களில் மிகுதியானவர்களும் அவர்கள்தாம்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது இருந்த பஞ்சாப் என்பது 29 மாவட்டங்களை உள்ளடக்கியது. அது டெல்லி, ஜலந்தர், லாகூர், ராவல்பிண்டி, முல்தான் ஆகிய ஐந்து பிரிவுகளையும், 43 சமஸ்தானங்களையும் கொண்டது. அவற்றுள் 16 சமஸ்தானங்கள் பெரியவை. சமஸ்தானங்களையும் சேர்த்து பஞ்சாப் மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 34 ஆயிரம் சதுர மைல்கள்.

தேச பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் கிடைத்த மேற்கு பஞ்சாப் மாகாணம் சுமார் 62 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பின்னாளில் சுமார் 17ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்ட பகவல்பூர் சமஸ்தானம் அதனோடு இணைக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தோடு இஸ்லாமாபாத் தலைநகர் பகுதி சேர்ந்திருந்தது. 1955 இல் அது பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பிரிவினையின் போது 16 மாவட்டங்கள் மேற்கு பஞ்சாபுக்குக் கொடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாபின் எஞ்சிய பகுதி கிழக்கு பஞ்சாபாக இந்தியாவுக்குக் கிடைத்தது. அதற்கு 13 மாவட்டங்களும், ஐந்து சமஸ்தானங்களும் கிடைத்தன.

(தொடரும்)

பிரிவினைக்கு முன்பு

mahatma gandhi_0_1பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 3

17 அக்டோபர் 1946 தேதியிடப்பட்ட மனு ஒன்று பேகம்கன்ஜ் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.

திருமதி.பாரமாலா ராய்(மறைந்த மோனோ மோகன் ராயின் மனைவி)
கோவிந்தாபூர்,பேகம்கன்ஜ் காவல் நிலையம்,
நவகாளி மாவட்டம்.

‘கடந்த திங்கள் கிழமை அன்று (14-10–1946) சில மனிதர்கள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களை என்னால் அடையாளம் காட்டமுடியும். ஆனால் அவர்களுடைய பெயர்கள் எனக்குத் தெரியாது. ஒருவனின் பெயர் மூசா என்று அறிந்தேன். அவர்கள் அனைவரும் ஆயுதம் வைத்திருந்தார்கள். அவர்கள் வாசலுக்கு வந்தவுடன் நானும் மற்றவர்களும் நடைக்கதவை மூடிவிட்டோம். அவர்கள் கதவுகளை உடைக்க முற்படும்போது நாங்கள் வீட்டின் கூரை மேல் ஏறிவிட்டோம். மேலே இருந்து பார்க்கும்போது சுற்றியிருந்த அறைகளுக்கு அவர்கள் தீ வைப்பது தெரிந்தது. அவை எரிந்து கொண்டிருந்தன. சில ரவுடிகள் நடையின் கூரையில் இருந்த எங்களில் சிலரை இழுத்துக் கீழே போட்டார்கள். நாங்கள் வீட்டின் கூரைக்கு ஏறிக் கொண்டிருந்தபோது மேலிருந்து எங்கள் வீட்டு ஆண்களைப் பார்த்தோம். அவர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உதைக்கப்பட்டார்கள்; கத்தியால் குத்தப்பட்டார்கள்; ஈட்டியால் தாக்கப்பட்டார்கள்.

கீழே இருந்த பெண்களும் குழந்தைகளும் குளிக்கும் இடத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே என் கணவரின் மூத்த சகோதரரை பலமாகத் தாக்கியிருந்தார்கள். தலையில் அடிபட்ட அவர் எங்களுடன்தான் இருந்தார். அவர் மனைவி அவருக்கு முதலுதவி செய்ய முயன்று கொண்டிருந்தாள். குண்டர்கள் அவரைக் கீழே இழுத்தார்கள். அவரைத் தூக்கிச் சென்று துர்கா பூஜைக்காகப் போடப்பட்டிருந்த சிறிய அலங்கார பந்தலுக்குக் கீழே எரிந்து கொண்டிருந்த தீயில் உயிருடன் வீசினார்கள். இன்னும் பலரை அவ்வாறு கொன்றார்கள். எங்களோடு இருந்த என் கணவரின் தம்பி ரமணி மோகனை அழைத்தார்கள். அவரை லத்தியால் அடித்து நெருப்புக்குள் வீசினார்கள். இப்போது குளிக்கும் இடத்தின் அருகில் படிகளின் மேல் இருந்த எங்களுக்கு துர்கா மண்டபத்தின் முன்பகுதி சரியாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கும்பல் அங்கு இருந்தது. ஓரளவு எங்களால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முடிந்தது. எங்கள் குடும்பத்தினர் பலரும் தீக்குள் எறியப்பட்டார்கள். தீக்காயங்களுடன் வெளியே வந்தவர்களைக் குண்டர்கள் மீண்டும் தீக்குள் தள்ளினார்கள்.

அண்டை வீட்டுக்காரர் பரத் பவுமிக் இழுத்து வரப்பட்டு துர்கா மண்டபத்தின் முன்னே கொலை செய்யப்பட்டார். இந்தப் பேய்த்தனமான அட்டூழியங்களைப் பார்த்து சில பெண்கள் மயக்கமுற்று விழுந்தார்கள். அதன் காரணமாக நாங்கள் பவுமிக்கின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். இதனிடையே எங்கள் நகைகளையும் அணிகலன்களையும் அவர்கள் பறித்துக்கொண்டார்கள். அப்போது எங்களுடைய மூக்கும் காதுகளும் காயமடைந்தன. ஆடைகளும் கிழித்தெறியப் பட்டன. ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டாள். பட்டரிபாரியைச் சேர்ந்தவர்கள் எங்களை பவுமிக்கின் தோட்டத்தில் தங்க வைத்தார்கள். அதன்பின் நாங்கள் பட்டரிபாரியில் தங்க வைக்கப்பட்டோம். நேற்று நண்பகல் நாங்கள் போலீஸாரால் மீட்கப்பட்டு, நவகாளி நகரத்துக்கு அழைத்து வரப்பட்டோம். மற்ற பெண்களின் நிலை பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் 17 பேர் பட்டரிபாரியில் இருந்து மீட்கப்பட்டோம். இதில் கொடுக்கப்பட்ட அனைத்தும் என்னிடம் மீண்டும் படித்துக் காட்டப்பட்டது. அதை நான் நன்றாக புரிந்து கொண்ட பிறகு கையொப்பமிட்டேன்.

உண்மையுள்ள,

திருமதி பாரமாலா ராய்
நவகாளி
17-10-1946

இது போன்ற எத்தனையோ புகார்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டன. மதமாற்றம் என்பது மிகவும் கொடிய தண்டனை. அதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவர் மதம் மாற மறுக்கிறார். அவர் புதல்வர்களும் மதம் மாறமுடியாது என்கிறார்கள். உடனே மிரட்டிக் கொண்டிருக்கும் கும்பல் அவர் மகன்களை ஒவ்வொருவராக கழுத்தை அறுத்துக் கொல்கிறது. இவ்வாறு வன்முறையாளர்கள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்துக்கே சென்றார்கள்.

நவகாளி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மற்றொரு புகார்:

“நான் இந்த இடத்துக்கு வருவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக இது நடந்தது. ஒரு நாள் இரவு முஸ்லிம் வன்முறைக் கும்பல் ஒன்று என் வீட்டுக்கு வந்து முஸ்லிம் லீகுக்கு நன்கொடை கொடுக்கும்படி கூறியது. கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியது. நான் 100 ரூபாய் கொடுத்து அந்தக் கூட்டத்தை விரட்டிவிட்டேன். அதன் பிறகு ஒரு நாள் அந்தக் கும்பல் என் கடையை சூறையாடியது. அதிலிருந்த அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இனி அங்கு வாழ முடியாது என்ற நிலையில் நான், என் குடும்பத்தை அழைத்துக்கொண்டு கல்கத்தா வந்துவிட்டேன். இதேபோல இன்னும் பல குடும்பங்கள் உடமைகளை முற்றிலுமாக இழந்துவிட்டன. இழப்பீட்டுக்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எதுவும் செய்யவில்லை.

பக்கத்து கிராமங்களில் இந்துக்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள். குழந்தைகள் தீக்குள் உயிரோடு வீசப்பட்டார்கள். பலர் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு மாட்டு இறைச்சி உணவாகக் கொடுக்கப்பட்டது. பெண்கள் கடத்தப்பட்டார்கள். வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். மேலும் அந்தப் பெண்களின் தொடையின் மேல்பகுதி முதல் வயிறு வரை உள்ள பகுதியும், மார்பகங்களும் வெட்டி எறியப்பட்டன. கடத்திச் செல்லப்பட்ட பெண்களில் எங்கள் உறவினர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. எங்கள் சஹா குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியை ரவுடிகளிடமிருந்து காப்பாற்ற முற்பட்ட அவள் அண்ணனின் கை,கால் தலை எல்லாம் பலமாக காயம் அடைந்தன. இவற்றையெல்லாம் பார்த்த பின், இன்னும் பலவற்றைக் கேள்விப்பட்டபின் இந்து மகா சபையின் உதவியோடு சந்த்பூர் நிவாரண முகாமுக்கு வந்தோம். இப்போது காங்கிரஸ் கமிட்டி 2 வது வார்டில் இருக்கிறேன்.

உண்மையுள்ள
பிரியா நாத் சென்
உஜியல்பூர் காவல் நிலையம்
சதார், நவகாளி மாவட்டம்.

வீடு வீடாகச் சென்ற வன்முறையாளர்கள் முஸ்லிம் லீகுக்கு நன்கொடை கேட்டு மிரட்டுவது பல இடங்களில் நடந்தது. பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் உள்ள முதியவர் தலை வெட்டப்படுகிறது. அப்போது அங்கிருந்த தன் தந்தையைக் காப்பாற்ற ஓர் இளம் பெண் பணம், நகை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறாள். ஒரு கையால் அவளிடம் இருந்தவற்றை வாங்கும் ஒருவன், மறுகையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவள் தந்தைக்கு மரண அடி கொடுத்து விட்டுப் போகிறான். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தன. தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் அடிமைகளை விட மோசமான நிலையில் மக்கள் அவதிப்பட்டார்கள்.

நவகாளி வன்முறையை எப்படிச் சிலர் திட்டமிட்டு செயல்படுத்தினார்கள் என்பதை மாடர்ன் ரெவ்யூ பத்திரிகை தொகுத்து எழுதியது. அது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது. கல்கத்தா படுகொலைகளுக்கும் நவகாளி படுகொலைகளுக்கும் வேறுபாடு இருந்தது. அதாவது கல்கத்தா படுகொலைகள் நிகழ்வதற்குக் காரணமானவர்கள் புதிய அணுகுமுறையை நவகாளியில் கையாண்டார்கள். முதலில் முஸ்லிம் லீக் அதிகாரத்தில் இருந்த வங்காள அரசு, பத்திரிகை செய்திகளைக் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தியது. ஏனென்றால் கல்கத்தா படுகொலைகள் பற்றி அப்போது பரவலாக செய்திகள் வெளியாயின. அதன்மூலமாக நடந்தவற்றில் பல வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் மக்கள் அவற்றை அறிந்துகொண்டார்கள். வங்காள அரசு பதற்றத்தைத் தவிர்ப்பதற்கும், மதக்கலவரம் தொடராமல் இருப்பதற்கும் பத்திரிகைத் தணிக்கை அவசியம் என்றது. தபால் நிலையங்களுக்கு வந்த கடிதங்கள்கூட ஆய்வுக்கு பின்னே தான் அனுப்பப்பட்டன. இந்தத் தடைகளை எல்லாம் மீறி வங்காளத்தின் கிழக்கு மாவட்டங்களில் இருந்து வன்முறை தொடர்பான செய்திகள் கசிந்து வந்துகொண்டே இருந்தன. ஆட்சியாளர்கள் உண்மையில் மக்களின் அச்சத்தைக் குறைப்பதற்கோ, வன்முறைகளைத் தடுப்பதற்கோ எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக சில பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளும் செயல்பட்டார்கள்.

கல்கத்தாவில் இருந்து நவகாளிக்கு ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மூலம் சென்று விடலாம்.இருந்த போதும் மீட்புப்பணிகள் நடப்பதற்கும், உதவிகள் கிடைப்பதற்கும் பல நாள்கள் ஆயின. பத்திரிகை ஊடகம் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. காவல் துறை அதிகாரிகளும் தற்காலிக நீதிபதியும் முஸ்லிம்கள். அக்டோபர் 10 முதல் 14 ஆம் தேதிவரை வன்முறையாளர்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் முடிந்த அளவுக்கு எல்லா தடயங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிட்டார்கள். அவர்களிடம் சிக்கிக்கொண்டவர்கள் வாய் திறக்க முடியாதபடி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டார்கள்.
ஒன்றை நடக்க வைப்பதற்கு சில வாதங்கள் வேண்டும். அந்த வாதங்களுக்கு சில நிரூபணங்கள் தேவைப்படுகின்றன. அவை கண்முன்னே நடந்த நிகழ்வுகளாக இருக்கும்போது யாராலும் மறுக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் அவர்களின் ஆழமான உணர்வுகளுக்கும் அவற்றில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் காரணிகள் நியாயங்கள் ஆகிவிடுகின்றன. எனவே இந்தியா பிரிக்கப் படவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

நவகாளி, திப்பேரா அட்டூழியங்களுக்குப் பிறகு தலைவர்கள் பலரும் நம்பிக்கை இழந்தார்கள். அவர்களில் பிரிவினையை விரும்பாத முஸ்லிம் தலைவர்களும் அடங்குவார்கள். வங்காள கவர்னர் பரோஸ் இனி இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்று கருதினார் அதனால் தான் அவர், ‘அங்கு நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதென்பது மிகக்கடுமையான நீண்டகாலம் பிடிக்கும் செயல் என்பதை என்னால் உணர முடிகிறது. முஸ்லிம் சிறுத்தையும், இந்துக் குழந்தையும் அருகருகே இருக்க அந்தப் பகுதியில் இன்னும் ஒரு டஜன் காந்திகள் தேவைப்படுவார்கள்.’ என்று கூறினார்.

ஆனால் ஒருவர் மட்டும் இன்னும் இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழமுடியும் என்று நம்பினார். அவர்தான் மகாத்மா காந்தி. 7 நவம்பர் 1946 அன்று காந்தி நவகாளியின் சவுமுஹானி ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். அது ஒரு வியாபார மையம். அங்கு ஜோகேந்திர மஜும்தார் வீட்டில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தார். அதன் பிறகு உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவை நேரடியாகப் பார்த்து அறிவதற்காக தத்தபாராவை நோக்கிப் பயணமானார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அவர் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தார். கிராமம் கிராமமாகச் சென்றார். இந்துக்களுடனும் முஸ்லிம்களுடனும் பேசினார்; பிரார்த்தனை செய்தார். சமாதானத்தை அவர்களிடம் விதைக்க முயன்றார்.
ஏழு வாரங்களில் 116 மைல்கள் செருப்பு அணியாத பாதங்களால் நடந்தே பயணித்து 47 கிராமங்களுக்குச் சென்றார். குடிசை குடிசையாகச் சென்று மக்களைச் சந்தித்தார். வன்முறையின்போது கொலையில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளில் போய் அமர்ந்தார். அவர்களுக்கு தர்மசங்கடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. கத்தியால் குத்தியவர்களை அன்பால் குத்தினார் காந்தி என்றார்கள். ராஜேந்திரலாலின் வீடு கொளுத்தப்பட்டபோது கொல்லப்பட்ட ஆண்களின் தலைகள் கொய்யப்பட்டன. தலையற்ற உடல்கள் கோணிகளில் கட்டப்பட்டு சிற்றாறுகளில் இறக்கப்பட்டன.க õந்தி அங்கு சென்றபோது படகுக்காரர்கள் துணையோடு ஒரு கோணி வெளியே எடுக்கப்பட்டது. அதில் பதினைந்து தலை இல்லாத உடல்கள் இருந்தன.

எரிக்கப்பட்ட ராஜேந்திர லாலின் வீட்டை காந்தி பார்வையிட்டார். அதில் சாம்பலுக்கு அடியிலிருந்து ஒரு குழந்தையின் மண்டை ஓட்டைக் கண்டெடுத்தார். அதுவே இந்தியா பலி கொடுத்த கடைசி உயிராக இருக்கட்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் தேசப் பிரிவினையின்போது பல லட்சக்கணக்கான உயிர்களை மதக்கலவரம் காவு கொள்ள இருக்கிறது என்பதை அவர் உள்பட பலரும் அப்போது கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

விசாரணைக் கமிஷன் அறிக்கைகளைத் தூக்கி வங்காள அரசு கிடப்பில் போட்டது. மத்திய பிரிட்டிஷ் அரசு வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவரையும் தண்டிக்கவில்லை. போலீஸ் துறையும், அதிகாரிகளும், ராணுவமும் செய்ய முடியாதவற்றை காந்தி என்ற தனி மனிதர் செய்து காட்டினார். மனிதனின் உள்ளம் தான் அவர் அதிகமாக நம்பிக்கை வைத்த நீதிமன்றம். அங்கே கடவுள் சாட்சியாக ஒருவருடைய மனசாட்சி வெளிப்படையாக உண்மையைப் பேச, மனிதன் ஒருவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது வழக்கு முடியும். நவகாளியில் அவருடைய புனிதப்பயணம் முழு வெற்றி அடையவில்லை என்பது ஒரு சாராரின் கருத்து. அவ்வாறு இருக்குமானால் எது மனித வாழ்க்கையின் வெற்றி, எது தோல்வி என்ற கேள்விக்கும் நாம் விடை காணவேண்டும். அப்போதுதான் நாம் தெரிவிக்கும் கருத்துக்கு உண்மையான அர்த்தம் இருக்கும். துவேஷத்தை வளர்ப்பவர்களுக்கு கலவர பூமி பயிற்சிக்களம். இன்னும் பல போர்களை நடத்த அவர்களுக்கு நிறைய சாட்சிகள் கிடைத்தன. காந்தி அந்த கொலைக் களத்தில் சமாதான விதைகளை விதைத்தார். அவை வளர்ந்து இந்தியாவை நேசிப்பவர்களுக்கு ஆதாரமாக உள்ளன.

ஹொரேஸ் அலெக்ஸாண்டர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சமாதானப் போராளி. ஆசிரியர்; எழுத்தாளர் ; பறவையியலாளர் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பர் என்று காந்தியால் அழைக்கப்பட்டவர். காந்திக்கும், இர்வின் பிரபுவுக்கும் இடையே தூதராக செயல்படுவதற்காக அவர் இந்தியா வந்தார். 1931 ஆம் ஆண்டு காந்தியை இங்கிலாந்தில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தவர் அவர் தான்.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு சுதந்தரம் என்று முடிவாகிவிட்ட நிலையில் அதற்குச் சில நாள்களுக்கு முன்னதாக அலெக்ஸாண்டரை தான் சந்திக்க விரும்புவதாக காந்தி கடிதம் எழுதினார். காந்தியின் விருப்பப்படி அவர் இந்தியா வந்து பிகாரில் இருந்த காந்தியைச் சந்தித்தார். இருவரும் அதன் பின் கல்கத்தா சென்றார்கள். அங்கே தன் ஆசிரமத் தொண்டர் ஒருவர் வீட்டில் சில இரவுகள் தங்கி இருக்க காந்தி திட்டமிட்டிருந்தார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இருவரும் கிழக்கு வங்காளம் செல்ல முடிவு செய்திருந்தார்கள். ஆனால் கல்கத்தாவில் இருந்த முஸ்லிம்கள் சிலர் காந்தி சுதந்தரம் கிடைக்கும் நாளில் கல்கத்தாவில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவர் இருந்தால் இந்து முஸ்லிம் கலவரம் கல்கத்தாவில் மீண்டும் வெடிக்காது என்று அவர்கள் நம்பினார்கள். காந்தி முதலில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு கிழக்கு வங்காளத்தில் இருக்கும் இந்துக்களுக்கு சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்த பின் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகத் தன்னை ‘கிழட்டுப் பொய்யர்’ என்று வர்ணித்த சுகர்வாடியை காந்தி அழைத்தார். அப்போது அவர் வங்காளத்தின் முதலமைச்சர் பதவியில் இல்லை. இருவரும் தங்கியிருக்க கல்கத்தா கலவரத்தில் காலி செய்யப்பட்ட முஸ்லிம் ஒருவரின் வீடு தெரிவு செய்யப்பட்டது. அது பெல்காத்தில் இருந்தது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி நண்பகல், அலெக்ஸாண்டர் ஒரு நண்பரின் உதவியோடு அங்கு சென்றார். வீட்டைச் சுற்றி இந்து இளைஞர்கள் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். காந்தி நண்பர் ஒருவர் வந்திருக்கிறார் என்று அறிந்ததும் அவர்கள் காந்தியை கல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு கோஷமிட்டார்கள். அவர்களில் சிலர் காந்தியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். அவர் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் வெளியேறி உருவாகயிருக்கும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றார்கள். காந்தி அந்த இளைஞர்களிடம் மலரவிருக்கும் சுதந்தர இந்தியா இவ்வாறு பிறக்கக்கூடாது என்றார். மேலும் இந்தியா சகிப்புத்தன்மையும், பெருந்தன்மையும் கொண்ட பூமி என்று எடுத்துக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அமைதியை ஏற்படுத்தும் அவர் முயற்சிக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதாக அவர்கள் கூறிவிட்டுப் போனார்கள்.

மறு நாள் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுகர்வாடி இல்லாததை சில இளைஞர்கள் கவனித்து விட்டார்கள். அவர் எப்படியும் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். சுகர்வாடியின் ரத்தம் வேண்டும் என்று அவர்கள் கத்தினார்கள். பிரார்த்தனை முடிந்தபிறகு காந்தி வீட்டுக்குள் ஜன்னலின் அருகே நின்றார். ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்து தாழ்ந்த குரலில் பேசினார். அவர்கள் நடவடிக்கைகளுக்காக கடிந்து கொண்டார். சுகர்வாடியின் பழைய செயல்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றார். இப்போது சுகர்வாடி அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். சுகர்வாடியை காந்தி தன் முன்னே வரவழைத்தார். அப்போது அவர் தோளை காந்தி தன் கையால் பற்றியிருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் ‘கடந்த ஆண்டில் (ஆகஸ்ட் 1946) நடந்த கல்கத்தா படுகொலைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?’ என்று ஆவேசமாகக் கேட்டார்கள்.

அவர் உடனே, ‘ஆமாம். நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். மேலும் அவற்றுக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்றார்.

அதன் பின்னர் காந்தி, ‘இந்தச் சூழலை தூய்மைப்படுத்த பொது மக்கள் மத்தியில் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதைத் தவிர சிறந்த ஒன்று இருக்கமுடியாது. அந்தக் கணத்தில் சுகர்வாடி அவர்களை வென்று விட்டார்’ என்று அலெக்ஸாண்டரிடம் கூறினார். இவை எல்லாவற்றையும் அலெக்ஸாண்டர் தன் எழுத்தில் விவரித்திருக்கிறார். சுதந்தரத்துக்கு முன்பு மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள இவை நமக்கு உதவுகின்றன.

(தொடரும்)

தொடக்கப்புள்ளிகள்

பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 2

image026பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்தியா போராடத் தொடங்கியது. 1930க்கு பிறகு இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமான திருப்பத்தைச் சந்தித்தது. மத வேறுபாடு பாராட்டாமல், எல்லோரும் இந்தியர்களாக இணைந்து பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது மிகுதியான மக்களின் எண்ணம். பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்ற வாதத்தை முன் வைத்தது ஜின்னா தலைமையில் இயங்கிய இந்திய முஸ்லிம் லீக். இந்த வாதத்துக்குள் இருக்கும் சந்தேகம் சில அரசியல் தலைவர்களிடமும் இருந்தது. அதாவது ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இந்து அரசியல் தலைவர்கள் தங்கள் நலன்களை உதாசீனம் செய்வார்கள்; தங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் முஸ்லிம் மக்களின் முன்பே இவர்கள் வைத்தார்கள். இப்போது அது மக்கள் பிரச்னை ஆகிவிட்டது.

இந்தியர்களே இந்தியாவை ஆளும் அனுபவத்தை அப்போது வாழ்ந்த யாரும் நேரடியாகக் கண்டிருக்கவில்லை. ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது சரியாக யாருக்கும் தெரியாது. படிப்பறிவில்லாத பொது மக்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம். விடுதலை என்று சொல்லும்போதெல்லாம் ஒரு சாராருக்கு அச்சம் அதிகமான சமயம் அது. வெள்ளையர்களே ஆட்சியைத் தொடரட்டும் என்று கூடச் சிலர் கருதினர். தமிழகத்திலும் அப்படிப்பட்ட குரல்கள் எழுந்தன. பெரிய அரசியல் அமைப்பான இந்திய தேசிய காங்கிரஸ் வட நாட்டவர் பிடியில் உள்ளது. அதுவும் உயர் சாதியினரே அதை நடத்துகிறார்கள். வெள்ளையரிடமிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். தலைவர்களுக்கே இப்படிப்பட்ட அச்சங்கள் எழும்போது பாமர மக்களுக்கு எழாமல் இருக்குமா? முஸ்லிம் லீக் கட்சி இதை மேலும் ஊதிப் பெரிதாக்கியது.

1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்தியாவின் முழு ஒத்துழைப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. ஜப்பான் படை இந்தியாவின் எல்லைகளைத் தொடும் வேளையில் இந்தியாவில் எந்தவிதமான பெரிய கிளர்ச்சியையும் அரசு விரும்பவில்லை. அதனால் 1942 மார்ச் மாதம் ஒரு தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் அக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அவர் அப்போது வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால மந்திரி சபையில் இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து தான் கொண்டு வந்த திட்டத்தை விளக்கினார். மாகாணங்களுக்கு டொமினியன் அந்தஸ்து; அவை தனியாக செயல்படுவதற்கு அதிகாரம்; ஒரு பொது அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவது போன்ற அம்சங்களைக் கொண்டது கிரிப்ஸ் திட்டம். அந்தப் பொது அரசமைப்பு சட்டத்தை அப்படியே பிரிட்டிஷ் அரசங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் அதில் அடங்கியிருந்தது. அதனால் அதை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்கவில்லை. திவாலான வங்கியின் ‘பின் தேதியிட்ட காசோலை’ என்று அதை அவர்கள் வர்ணித்தார்கள். எனவே கிரிப்ஸ் தூதுக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. விடுதலையை நோக்கி ஒருமுகப்படுத்தபட்ட நாட்டை காந்தி, கப்பலை இயக்கும் கேப்டனைப் போல வழி நடத்தினார்.

இந்தச் சமயத்தில்தான் ஜின்னாவும் அவருடன் இருந்தவர்களும், முஸ்லிம்களுக்கு தனி நாடு அவசியம் என்று தெளிவாக அறிவித்தார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். விடுதலை கைக்கு எட்டும் தொலைவில் இருப்பதை உணர்ந்த ஜின்னா பேரம் சீக்கிரம் முடிய வேண்டும் என்று விரும்பினார். 1946 இல் எல்லாம் முற்றிய நிலையில் ஜின்னா இதற்கு மேல் நாங்கள் பொறுக்க முடியாது என்று அனைவருக்கும் காட்ட முடிவெடுத்தார்.

1946 இல் நடைபெற்ற மாகாணத்தேர்தல்களுக்குப் பிறகு வங்காளத்தில் முஸ்லிம் லீக்கின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டது. அது இந்தியாவை தற்போதுள்ள பாகிஸ்தான், வங்க தேசம் சேர்த்து விடுதலை பெற்ற டொமினியனாக அறிவிக்க முடிவு செய்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது முஸ்லிம் லீக். அது இந்தியாவும், பாகிஸ்தானும் விடுதலை பெற்ற இரண்டு தனி டொமினியன்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் முஸ்லிம் லீக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 1946 ஜூலை 27 ஆம் தேதி முஸ்லிம் லீக் பம்பாயில் கூடியது. பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் முடிவை அது நிராகரித்தது. மேலும் 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிகப்பெரிய நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தப் போவதாக அறிவித்தது. அந்த தினத்துக்கு ‘நேரடி நடவடிக்கை நாள்’என்று பெயரிட்டது.

ஹர்த்தால் என்பது மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹர்த்தால் என்பது கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு குஜராத்திச் சொல். தென்னாப்பிரிக்காவில் இருந்த கறுப்புச் சட்டத்தை எதிர்க்க அங்கிருந்த இந்தியர்களைத் திரட்டி 1906 ஆம் ஆண்டு உலகின் முதல் ஹர்த்தாலை நடத்திக் காட்டினார் காந்தி. முதல் உலகப் போரில் (1914-18) இந்தியா, பிரிட்டிஷ் அரசுக்கு உதவியது. காந்தி முழு ஒத்துழைப்பு நல்கினார். ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதற்கும் உதவினார். களப்பணியாற்றினார். போருக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று பலருடன் சேர்ந்து அவரும் நம்பினார்.

1919 இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சந்தேகத்துக்குள்ளான நபர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கலாம். அது போன்ற இன்னும் பல அடக்குமுறைகளைச் செயல்படுத்த அந்தச் சட்டம் உதவியது. விடுதலைப் போராட்டக்காரர்களைக் குறி வைத்தே அது கொண்டு வரப்பட்டது. அதனால் காந்தி உள்பட அனைவரும் அந்தச் சட்டத்தை எதிர்த்தனர். 1919 மார்ச் 6 ஆம் தேதி நாடு தழுவிய ஹர்த்தால் நடைபெற்றது. அப்போது இந்தியர்கள் அனைவரும் தங்கள் பணிகளை ஒரு நாள் நிறுத்தி உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அதுவே இந்தியாவில் காந்தியால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் ஹர்த்தால். அது நாட்டின் விடுதலைக்காக சுகபோக வாழ்வையும், நிம்மதியையும் இழக்கத் தயாராக இருந்த பல தரப்பட்ட மக்களால் நிகழ்த்திக்காட்டப்பட்டது. அத்தகைய ஹர்த்தாலை நேரடி நடவடிக்கை நாளன்று நடத்துவதற்குத்தான் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டம் எவ்வளவு கூடினாலும் முந்தைய ஹர்த்தாலின் அனுபவம் இருப்பதால் மக்களைக் கட்டுப்படுத்துவது எளிதாகத்தான் இருக்கும் என்று பொதுவாக பலரும் நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு.

அப்போது ஒன்றுபட்ட வங்காளத்தின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்கள் 56% பேரும், இந்துக்கள் 42% பேரும் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மிகுதியாக கிழக்குப் பகுதியில் தான் வசித்தார்கள். கல்கத்தாவை எடுத்துக்கொண்டால் அதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63%; இஸ்லாமியர்கள் 33%. ஜின்னா ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தவுடன் வங்காளத்தின் முதலமைச்சர் (பிரீமியர்) உசைன் சாகித் சுகர்வாடி துடிப்புடன் செயல்பட்டார். அவர் வங்காளத்தின் தலைமைச் செயலாளர் ஆர்.எல். வாக்கரின் அறிவுரைப்படி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பொது விடுமுறை என்று அறிவிக்கும்படி வங்காளத்தின் கவர்னர் சர் ஃப்ரெடரிக் பரோசைக் கேட்டுக்கொண்டார். அன்று அரசாங்க அலுவலகங்கள், வியாபார மையங்கள், கடைகள் எல்லாம் மூடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தது. இது இஸ்லாமியர்கள் மிகுதியாக இல்லாத இடங்களிலும் மக்கள் மீது ஹர்த்தாலைத் திணிக்கிறது என்று கூறியது.

வங்காள சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரஃபுல்ல சந்திர கோஷ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இந்துக்கள் ஹர்த்தாலில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முஸ்லிம் லீக் ஹர்த்தாலை நடத்துவதில் தீவிரம் காட்டியது. முஸ்லிம் நாளிதழ் ‘ஸ்டார் இண்டியா’ நேரடி நடவடிக்கை தினத்தின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. அதன்படி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளைத் தவிர மற்ற எல்லாம் நிறுத்தப்படும். அரசு அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் மூடப்படும். ஊர்வலங்கள் கல்கத்தா, ஹௌரா, ஹூக்ளி, மெட்டியா புரூஸ், 24 பர்கானாக்கள் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு ஆக்டெர்லோனி நினைவிடத்தில் வந்து சேர வேண்டும். அங்கே முதலமைச்சர் முன்னிலையில் ஒரு பேரணி நடைபெறும்.

நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் நேரடி நடவடிக்கை நாள் பிரச்னை ஏதுமின்றி கடந்து போனது. ஆனால் அது கல்கத்தாவை உலுக்கி எடுத்தது. பகல் 12 மணிக்கு கல்கத்தாவில் பேரணி நடந்தது. நண்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னரே நண்பகல் தொழுகை முடிந்தபின் பல பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் அங்கு வந்து குவியத் தொடங்கிவிட்டார்கள். கவாஜா நாசிமுதினும், முதலமைச்சர் சாகித் சுகர்வாடியும் முக்கியப் பேச்சாளர்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அங்கே கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் இரும்புத் தடிகளையும் கம்புகளையும் வைத்திருந்தார்கள். மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் அங்கு நடந்தவை பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.

நாசிமுதின் அமைதியைப் போதித்து தன் பேச்சை ஆரம்பித்தாலும் அதன் பின் அன்று காலையில் கல்கத்தாவில் தொடங்கிய மதக்கலவரத்தைப் பற்றிப் பேசலானார். காலை 11 மணி வரை அடிபட்டவர்கள் இஸ்லாமியர்கள்தாம் என்றார். மேலும் இஸ்லாமியர்கள் தற்காப்பு நடவடிக்கையாகச் சில செயல்களைச் செய்யவேண்டியிருந்தது என்று கூறினார். உண்மை நிலவரம் அதுவல்ல. லால் பஜார் போலீஸ் தலைமையகம் காலை பத்து மணிக்கு முன்னதாகவே கலவரம் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தது. கடைகளைத் திறந்து வைத்திருந்தவர்களைச் சிலர் மிரட்டி மூட வைத்தார்கள். சண்டைகள், கத்திக்குத்து, கல்வீச்சு அனைத்தும் நடந்தன.

அடுத்த 72 மணி நேரத்தில் கல்கத்தாவில் 4,000 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்தார்கள். ஆறு நாள்களுக்கு மதக்கலவரம் தொடர்ந்தது. 21 ஆம் தேதி வங்காளம் வைஸ்ராயின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது. அங்கு என்னதான் நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. ராணுவ அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட மத்தியப் புலனாய்வு அதிகாரி ஒருவர் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்தார். அவருடைய தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று கவர்னர் பரோஸ் கருதினார். முதலமைச்சர் சாகித் சுகர்வாடி லட்சக்கணக்கானோர் கூடியிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வரி ஒன்றைப் புலனாய்வு அதிகாரியின் குறிப்பில் கண்டு கவர்னர் உள்பட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ‘போலிஸும் ராணுவமும் குறுக்கிடாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்.’

இதன்மூலமாக ராணுவத்தையும் போலிஸையும் செயல்படவிடாமல் தன்னால் கட்டுப்படுத்தமுடியும் என்பதையே அவர் தெரிவிக்கிறார். அவர் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டிருந்தாலும், அங்கிருந்த கூட்டம் ஒன்றைப் புரிந்துக்கொண்டது. கலகம் செய்வதற்கு வெளிப்படையான அறிவிப்பு வந்துவிட்டது. அங்கிருந்து புறப்பட்டவர்கள் நிகழ்த்தி அனைத்தும் அதை நிரூபிப்பதாகவே இருந்தன. அவற்றைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய குண்டர்கள் டிரக்குகளில் வந்து கல்கத்தாவின் ஹாரிசன் ரோட்டில் இறங்கினார்கள். இந்துக்களின் கடைகளைத் துவம்சம் செய்தார்கள்.

பாதிக்கப்பட்ட இந்துக்களும், சீக்கியர்களும் எதிர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் கலவரம் உச்சக் கட்டத்தை அடைந்தது. எதிர்ப் பிரிவு கும்பலிடம் சிக்கும் மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி, ஏழு நாள்களுக்கு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றன. அதனால்தான் அந்த வாரத்திற்கு ‘நீண்ட கத்திகளின் வாரம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களுக்கு இணையாக கொலைவெறித் தாண்டவம் ஆடினார்கள்.இந்து வன்முறைக் கும்பல், கண்களில் அகப்படும் இஸ்லாமியர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்றது. கல்வி நிறுவனங்களில் இருந்த மாணவர்களும் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை. வீடுகளுக்குள் இருந்தவர்களும், கல்விச்சாலையில் இருந்தவர்களும் வெளியே இழுத்து வரப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

தாக்குதல் முற்றிய நிலையில் கல்கத்தாவைவிட்டு முஸ்லிம்கள் பலர், அவர்கள் மிகுதியாக இருக்கும் கிழக்கு வங்காளத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.
நேரடி நடவடிக்கை நாளுக்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேலும் கொடுமையான தினமாக அமைந்தது. கல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைகள் மிகுந்த இடம் மெட்டியா புரூஸ். அப்போது கார்டன் ரீச் துணியாலை ஊழியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அப்துல்லா ஃபரூக்கி. இவர் எலியன் மிஸ்திரி என்ற கொடிய இஸ்லாமிய வன்முறையாளரை அழைத்துக்கொண்டு ஒரு கும்பலோடு பிர்லாவின் கேசோராம் பஞ்சாலைக்குள் நுழைந்தார். ஆலைத் தொழிலாளர்கள் பலர் உள்ளே இருந்தார்கள். அவர்களுள் ஒரிசாவைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஃபரூக்கியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த இந்துத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 500 முதல் 800 வரை இருக்கும். சில முஸ்லிம் தொழிலாளர்களும் அந்தத் தாக்குதலில் இறந்துபோனார்கள்.

முதலமைச்சர் சாகித் சுகர்வாடி சீல்டா ராணுவ ஓய்வு முகாமில் இருக்கும் ராணுவத்தினரை வரவழைக்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் சற்று மெதுவாகவே செயல்பட்டார்கள். 16ஆம் தேதி இரவு 1.45 மணிக்கு பிறகுதான் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஒரு கட்டத்தில் மக்கள் கல்கத்தாவைவிட்டு உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். ஹௌரா பாலத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியது. ஹௌரா ரயில் நிலையத்தை அடைந்து, கல்கத்தாவைவிட்டுப் போவதற்காக மக்கள் பாலத்தைக் கடந்தார்கள். ஆனால் கல்கத்தாவைவிட்டு வெளியேறினாலும் மரணம் அவர்களைத் துரத்தி வந்தது.

சத்தியப் பிடிவாதம் கொண்ட அகிம்சாவாதியான காந்தியை மதக்கலவரம் கடுமையான கவலைக்குள்ளாக்கியது.பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த காந்தி மனம் உடைந்து போனார். அதனால்தான் வேவல் பிரபு காந்தி தன்னிடம் இப்படி ஒரு கருத்தைக் தெரிவித்தார் என்றார். ‘இந்தியா ரத்தத்தில் நீராட விரும்பினால் அப்படியே ஆகட்டும்.’

(தொடரும்)