ஒரு நாஸி மாமி படிக்கும் கீதை – 2 (கீதையும் தலித் விடுதலையும்)

பொதுவாக சமுதாய அதிகார அமைப்பில் மேலடுக்கில் இருப்போரின் பார்வையை அர்ஜுனன் முன்வைக்கிறான். பெண்களின் கற்பின் அடிப்படையில் சமுதாய அமைப்பு இருக்கிறது. அது கெட்டுப்போனால் சமூகப்பிரிவுகள் ஒன்றோடொன்று கலந்து சமுதாயம் அழிந்துவிடும். நாஸிகள் மட்டுமல்ல, பொதுவாக ஐரோப்பிய சமுதாயத்திலும் இதே போன்ற கோட்பாடுகள் 1940-கள் வரை நிலவின என்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக கத்தோலிக்கர்களின் வணக்கத்துக்குரிய போப் பன்னிரெண்டாம் பத்தியப்பர் (Pius XII) இத்தாலிக்குள் நுழைந்துகொண்டிருக்கும் நேச நாட்டுப் படைகளிடம் வெள்ளையரல்லாத படை வீரர்களை இத்தாலிக்குள் கொண்டுவர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வெள்ளையரல்லாத படைவீரர்கள் இத்தாலியப் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வார்கள் என அவர் கருதினார்.

இன அடிப்படையில் அல்லாமல் குல அடிப்படையில் அர்ஜுனன் இதே மனநிலை சார்ந்தவனாகவே பேசுகிறான். அவன் குலதர்மங்கள் சனாதனமானவை என்கிறான். குல தர்மங்களும் சாதி தர்மங்களும் சாஸ்வதமானவை, தொன்றுதொட்டு வந்தவை என்கிறான்.

இதற்கான பதில்களாக கிருஷ்ணர் பகவத் கீதையில் எதை முன்வைக்கிறார் என்பதை நாம் பார்க்கவேண்டும். மேலை இந்தியவியலாளர்கள் சாதியமே பகவத் கீதையின் மையம் எனக் கருதுகிறார்கள். இதோ ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்தியவியலாளர் கூறுகிறார்:

சாதி அமைப்பை நிலைநிறுத்துவது என்பதே பகவத் கீதையின் மையக் கருத்தாக இருக்கிறது. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் என்று கூறுவதன்மூலமும் (பகவத் கீதை 4:13); மக்கள் தங்கள் சமுதாய நிலை முடிவு செய்யும் கடமைகளைச் செய்ய வைப்பதற்காக உண்மையை அவர்களிடம் சொல்லக்கூடாது என்று சொல்வதன்மூலமும் (பகவத் கீதை 3:26, 29) இதனை பகவத் கீதை செய்கிறது.

ஹிந்து புத்தெழுச்சியாளர்கள், கிருஷ்ணர் கீதையில் வர்ணம் என்பது குண-கர்ம அடிப்படையில் எழுந்தது எனச் சொல்வதைச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இதுவும் போதுமான ஆதாரம் அல்ல எனச் சொல்கிறார் பெல்ஜிய இந்தியவியலாளரான கொயன்ராட் எல்ஸ்ட்.

ராமானுஜர்

சமூகச் சீர்திருத்தவாதிகளின் நிலைப்பாட்டுக்கு நான் ஆதரவாளனே. ஆனால் கீதையை இப்படி வியாக்கியானம் செய்வது ஒரு சிக்கலான விஷயம் என்றே கருதுகிறேன். அது நல்ல முயற்சியாக இருந்தாலும்கூட கீதை ‘பிறப்பினால் அல்ல ஆனால் குணத்தின் கர்மத்தின் அடிப்படையில்’ என்று சொல்லவில்லை. ஏனெனில் ஒருவரது குணமும் கர்மமும் அவரது பிறப்பினால் தீர்மானிக்கப்படலாம்… குணங்கள் ஓரளவு பிறப்படிப்படையில் வருவதாகவும் தொழில்கள் பொதுவாக குடும்பச்சூழலில் சொல்லித்தரப்படுபவையாகவுமே இருக்கின்றன. ஆக, தொழில் என்பது பிறந்த குடும்பத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக அமைந்துள்ளது. இந்த பகவத் கீதை, பிறப்படிப்படையிலான சாதியை ஏற்கவில்லை என இந்த மேற்கோளின் மூலம் காட்டமுடியாத அதே வேளையில், பகவத் கீதையில் பிறப்படிப்படையில் சாதி அமைவதை ஆதரிக்கும் மற்ற வரிகள் இருக்கின்றன.

இந்த மற்ற வரிகள் எவை? எல்ஸ்ட் கூறுகிறார்:

அர்ஜுனனும் கிருஷ்ணனும் போர் குறித்து முழுக்க முழுக்க எதிரான நிலைப்பாடுகள் எடுக்கின்றனர். ஆனால் இருவருமே தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ‘வர்ண ஸங்கர:’ (வர்ணக் குழப்பம்) ஏற்பட்டுவிடும் எனும் ‘ஆபத்தையே’ காரணமாகச் சொல்கிறார்கள். இரண்டு எதிர் பார்வைகளை ஒரே மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவ முயல்கிறார்கள் என்றால் அந்த மதிப்பீடே அவர்கள் வாழும் சமுதாயத்தின் அடிப்படைக் கோட்பாடாக இருக்கவேண்டும். இதற்கும் விளக்கம் அளிக்கலாம்: இங்கு வர்ணக் கலப்பு என்பது தொழில் கலப்புதானே ஒழிய, பிறப்படிப்படையிலான சாதிக் கலப்புகளைச் சொல்லவில்லை என்று. ஆனால் அது சுற்றிவளைக்கும் வியாக்கியானம் என்பதுடன் ‘பெண்களின் கற்பு’ இந்த வர்ணக் கலப்புடன் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதால் அடிபட்டுவிடுகிறது.

எல்ஸ்ட் கூறுவதை மேற்கத்திய வெறுப்பின் அடிப்படையில் விளைந்தது என ஒதுக்க முடியாது. ஹிந்து சமூக வரலாற்றை விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆழ்ந்து படித்தவர் எல்ஸ்ட். எனவே இதற்கான விடையை நாம் கீதையில் தேடவேண்டும்.

அர்ஜுனனின் முதல் அத்தியாயச் சொற்கள் அனைத்துமே வாதங்கள் என்றுகூட கீதை சொல்லவில்லை. அவை அவனது உணர்ச்சி மிக்க மனக்குழப்பத்தின் விளைவுகளாகவே காட்டப்படுகின்றன. அதனால் எல்ஸ்ட் சொல்வதுபோல, பின்னர் கிருஷ்ணர் பேசும் வார்த்தைகளை அர்ஜுனனின் வார்த்தைகளுக்கான எதிராடல்களாக நாம் கொள்ள முடியாது. அல்லது அர்ஜுனன் முன்வைக்கும் சமுதாயப் பார்வை அல்லது உலகப்பார்வையை ஏற்பதாகவும் கருத முடியாது. ஆனாலும் எல்ஸ்ட் கூறுவது சரியா என்பதற்கான ஆதாரபூர்வமான உண்மையை கிருஷ்ணர் எவ்விதமான காரணங்களை ‘குழப்பம்’ ஏற்படுவதற்குக் காரணமாகக் கூறுகிறார் என்பதைப் பார்த்தாலே அறிந்துவிடலாம்.

எல்ஸ்ட் குறிப்பிடும் அந்த ஸ்லோகம் மூன்றாவது அத்தியாயத்தில் வருகிறது (கர்ம யோகம்):

நான் கர்மத்தை செய்யாமல் போனால் இவ்வுலகங்கள் அழிந்து போகும். மேலும் கலகத்துக்குக் கர்த்தா ஆவேன். இந்த ஜனங்களை அழித்தவனாகவும் ஆகிவிடுவேன் (பகவத் கீதை 3:24)

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கிருஷ்ணர் இங்குக் கலகம் அல்லது குழப்பம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது வர்ணக் குழப்பமா அல்லது சமுதாயக் குழப்பமா என்பது பற்றியெல்லாம் அவர் சொல்லவில்லை. இந்த வார்த்தையை அர்ஜுனன் மனக்குழப்பத்தில் கூறிய வர்ணக் குழப்பத்துடன் முடிச்சு போட முடியுமா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக, தன் இயக்கமின்மையே குழப்பத்தை உருவாக்குகிறது என கிருஷ்ணர் கூறுகிறாரே தவிர, பெண்களின் கற்பை முடிச்சுப் போடவில்லை. ‘குழப்பம்/கலகம்’ என்கிற வார்த்தையை உரையாசிரியர்கள் சாதிக் குழப்பம் என்றும் உரை எழுதியிருக்கிறார்கள். சாதியையோ வர்ணத்தையோ குறிப்பிடாமலே, மனிதர்கள் வாழ்க்கையில் குழப்பம் அடைவார்கள் என்றும் உரை எழுதியிருக்கிறார்கள். ராமானுஜர் இந்த ஸ்லோகத்துக்குப் பொருள் எழுதும்போது, ‘சமுதாயத்தின் இயக்கம் நின்றுவிடும்’ என்றுதான் சொல்கிறார்.

அடுத்து, குண-கர்மம் என்பதே வர்ணத்தின் அடிப்படை என்பது பிறப்பு அடிப்படையிலான சாதியத்துக்கு எதிரானதல்ல என்று எல்ஸ்ட் சொல்கிறார். இது சரியா எனப் பார்க்கலாம்.

பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தில் குலம்/பிறப்பு சார்ந்த வர்ண அமைப்பின் மீது ஒரு மனவெறிப் பற்றே (obsession) அர்ஜுனனுக்கு இருப்பது காட்டப்படுகிறது. ஏழு ஸ்லோகங்களுக்குள் குலம் என்னும் வார்த்தையை அர்ஜுனன் பத்து முறை பயன்படுத்துகிறான். ஆனால் கிருஷ்ணர் எந்த இடத்திலும் குல தர்மம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. குலதர்மக் கோட்பாட்டையே முழுமையாகப் புறந்தள்ளுகிற கிருஷ்ணர், ஸ்வதர்மம் என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறார்.

ராமானந்தர்

மகாபாரத சமுதாயம், குலத்தின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில், சமுதாய அடுக்குமுறை நிலவிய சமுதாயமாகவே இருந்திருக்கவேண்டும் என்பதைக் கணக்கில்கொண்டு இதைப் பார்க்கவேண்டும். பிறப்படிப்படையிலான சமூக அந்தஸ்து மகாபாரதத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்றைக்கும் வளர்ந்த நாடுகள் என்றும் சாதியம் இல்லாத நாடுகள் என்றும் கருதப்படும் நாடுகளில்கூட பிறப்படிப்படையிலான சமூக அந்தஸ்து தேடுவது ஒரு பணம் செய்யும் பிசினஸாகவே மாறியுள்ளது. இந்தச் சூழலில் குலதர்மத்தை சாஸ்வதமானது, சனாதனமானது என நம்பும் ஒருவனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் வர்ணம் என்பது குல-ஜன்ம அடிப்படையில் அமைவது என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இந்தப் பார்வையில் பார்க்கும்போதுதான் குண-கர்ம அடிப்படையிலேயே வர்ணம் அமைகிறது (பகவத் கீதை 4:13) என்பது மிகப்பெரிய பார்வை மாற்றமாக அமைகிறது.

இவ்வாறு பாரம்பரிய தேக்கத்துக்கு எதிரான ஒரு வலிமையான பார்வை மாற்றத்தை முன்வைக்கும் குணம் பாகவதம் காட்டும் கிருஷ்ணரின் குணச்சித்திரத்துடன் பொருந்துவதாகவே உள்ளது. பரமண்டலத்து தேவனுக்கு பலி கொடுக்காமல் கோவர்த்தன மலை எனும் இயற்கையின் உள்ளுறை இறைத்தன்மையை வணங்க வைத்த பார்வை மாற்றத்தை அது நினைவூட்டுகிறது.

சாதியத்தை கீதை எதிர்க்கிறதா? தெளிவாக சாதியம் தவறு எனச் சொல்லும் குரல் கீதையில் இருக்கிறதா? கீதையின் பதினாறாவது அத்தியாயம் தெய்வ-அரக்க குணங்களைப் பட்டியலிடுகிறது. தெய்வீகக் குணங்களில் உயர் குலப்பிறப்பு ஒன்றாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் அரக்க குணமாக, குலச்செருக்கு சொல்லப்படுகிறது. அரக்க குணம் உடையவன் இப்படி நினைக்கிறானாம்:

செல்வம் படைத்தவனாகவும், உயர் குலத்துதித்தவனாகவும் நான் இருக்கிறேன். எனக்குச் சம்மானவன் வேறொருவன் எவன் இருக்கிறான்? நான் யக்ஞம் செய்வேன். நான் தானம் செய்வேன். நான் களிப்பேன். (பகவத் கீதை 16:15)

பகவத் கீதை கூறப்பட்ட காலகட்டத்தில் தீண்டாமை கிடையாது, மனு ஸ்மிருதி உருவான காலகட்டத்தில்கூட தீண்டாமை ஏற்படவில்லை என அம்பேத்கர் கருதுகிறார். ஆனால் தீண்டாமையின் அடிப்படை உடல்ரீதியிலான இழிவுபடுத்தும் மனப்பான்மையும் வெறுப்பும். கீதையில் இந்தச் சித்தாந்தம் கண்டிக்கப்படுகிறது. கீதையின் இந்த சுலோகம் தலித் விடுதலைக்கான இறையியலை முன்வைக்கும் முதல் சுலோகம் என்றே சொல்லலாம். அரக்க இயல்பினரின் குணமாக கிருஷ்ணர் சொல்வதாவது:

அகங்காரத்தையும், பலத்தையும். செருக்கையும், காமத்தையும், கோபத்தையும் கைக்கொண்டவர்களாய், தங்கள் உடலிலும் பிறர் உடலிலும் உள்ள என்னைப் பகைப்பவர்களாய், நல்லவர்களைச் சகியாதவர்களாய் இருப்பர். (பகவத் கீதை 16:19)

உடல்ரீதியான வெறுப்பைப் பிறரிடம் காட்டுபவன் தன்னையும் அடிமைப்படுத்துகிறான். இதைச் சொல்வதுடன், சக-மனிதனிடமான வெறுப்பு ஒரு மனநோய் என்றே உளவியல் காரணங்களும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைக்கு தலித் சமுதாயத்தினர்மீது ஆதிக்கச் சாதிகளால் ஏவிவிடப்படும் வன்முறை, நலிந்த வகுப்புப் பெண்கள் மீதான தாக்குதல், வன்கொடுமை ஆகியவற்றினை இந்த அடிப்படையில் புரிந்துகொள்ளும்போது தலித் விடுதலை என்பது உண்மையில், ஆதிக்க சாதிகளும் அடைப்பட்டிருக்கும் சாதியம் என்பதிலிருந்து கிடைக்கும் விடுதலை என்பது புரியும். இதற்கான இறையியல் இந்த சுலோகத்தில் நிச்சயமாக முன்வைக்கப்படுகிறது.

இப்போது இன்னொரு கேள்வியை முன்வைக்கலாம். இதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் சமூக அளவில் பகவத் கீதை மேல்சாதி அடக்குமுறையை ஆதரிக்கும் நூலாகத்தானே இருந்திருக்கிறது. அப்போது அதை எவ்வாறு தலித் விடுதலைக்குரிய இறையியலை முன்வைக்கும் நூலாகக் கையில் எடுக்க முடியும்?

இந்திய வரலாற்றின் சமூகநீதிக்கான இயக்கங்களில் பகவத் கீதையின் இறையியல் எவ்விதம் செயலாற்றியிருக்கிறது என்பதை நாம் சிறிது ஆராய்ந்தால் இதற்கான பதிலைக் கண்டடைய முடியும்.

இந்து சமுதாயம் தேக்கநிலை அடைந்தபோது ராமானுஜரே மிக முக்கியமான சமுதாய எழுச்சியை ஏற்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்து, கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அந்தணராகும் உரிமை இருப்பதை மீண்டும் நினைவூட்டி, சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத சமூக விடுதலைக்கான கருத்தியல் மாற்றம் இது. இதற்கான ஆன்மிக-கருத்தியல் உத்வேகத்தை ராமானுஜர் எங்கிருந்து பெற்றார் எனும் கேள்வி எழுகிறது.

பதினெட்டாம் அத்தியாயத்தில் (மோட்ச சன்னியாச யோகம்) பகவத் கீதை குணங்களின் அடிப்படையில் அறிவை மூவிதமாகப் பிரிக்கிறது. இதில் உயர்ந்ததான சத்வ அறிவை இப்படி வரையறை செய்கிறது:

வெவ்வேறாகவுள்ள பொருள்கள் அனைத்திலும் வேறுபாடில்லாததும் அழிவில்லாததுமான ஒரே வஸ்துவை எவன் பார்க்கிறானோ அந்த ஞானத்தை சாத்வீகம் என அறி. (பகவத் கீதை 18:20)

இந்த சமத்துவப் பார்வை எப்படி சமுதாய விடுதலைக்கு வழிகோலும் எனக் கேட்கலாம். ஆனால் ராமானுஜர் தன் பாஷ்யத்தில் இதனை சமுதாயச் சூழலில் மானுடத் தளத்தில் பொருத்திப் பேசுகிறார். ‘சாதி வித்தியாசங்களுக்கும், சமூகப் பொறுப்புகளுக்கும், உடல் அமைப்புகளுக்கும் அப்பால், அனைவரிடத்திலும் ஒரேபோல உறையும் அழியாத பிரம்மத்தைக் காண்பதே சாத்வீக அறிவு’ என அவர் கூறுகிறார். ராமானுஜரின் கீதை வாசிப்பு அவரது ஆன்ம நேய சமத்துவப் பார்வையைச் செதுக்கிக் கூர்மைப்படுத்தியது. அதுவே அன்றைய தேக்கநிலைச் சமுதாயத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

அது தமிழ்நாட்டுடனோ தென்னிந்தியாவுடனோ தேங்கி நின்றுவிடவில்லை. வடக்கில் அன்னிய ஆக்கிரமிப்பின் பேரிருள் கவிழ்ந்தபோது கட்டாய மதமாற்றம், சமூகத் தேக்கநிலை ஆகிய இரண்டையும் எதிர்த்துச் செயல்பட்ட பக்தி இயக்கமாக மாறிப் பரவியது. ராமானுஜரின் ஸ்ரீ சம்பிரதாயத்தில் வந்த ராகவாச்சாரியாரிடம் விசிஷ்டாத்வைதத்தைப் பயின்ற ராமானந்தர் அதனை பக்தி மூலம் சமூக இயக்கமாக மாற்றி, வட இந்தியா எங்கும் பரப்பினார். ஒருபுறம் மதவெறியும் மறுபுறம் சாதியக் கட்டமைப்பும் நெருக்கிய மக்களுக்கு, பக்தி இயக்கம் அருமருந்தாக விளங்கியது. பின்னாட்களில் பக்தி இயக்கமே மராட்டியர், கால்ஸா போன்ற சமூக-ஆன்மிக விடுதலை இயக்கங்களாக மாறி, பாரதப் பண்பாட்டை காப்பாற்றியது. இல்லையேல் 1947-ன் பாகிஸ்தானியப் பிரிவினை எல்லைகள் இன்றைய இந்தியாவின் இதயப்பகுதிக்குள் வந்திருக்கும். இந்தியா என்கிற நாடே இருந்திருக்காது.

கபீர் தாசர்

ராமானந்த பக்தி இயக்கம் சமூக நீதியையும் வலியுறுத்தியது. இந்த பக்தி இயக்க மார்க்கங்களில் முக்கியமானது கபீர் பந்த். இந்திய சமூக விடுதலைப் போராட்டத்தில் இது அளித்த பங்கு, வேறெந்த சமூக இயக்கத்தைக் காட்டிலும் ஆதாரமானது. அம்பேத்கரின் குடும்பம், கபீர் பந்த் குடும்பமே. சிறுவயதில் கபீர் பந்த் பாடல்கள் கேட்டே அவர் வளர்ந்தார். பின்னாள்களில் ஹிந்து சமுதாயத்தின் சாதிய வக்கிரங்களைக் கண்டு மேல்சாதி ஹிந்து மதத்தின்மீது அம்பேத்கர் வெறுப்பு அடைந்தபோதிலும், தலித் சமுதாயம் ஹிந்து/இந்தியப் பண்பாட்டைவிட்டு வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தமைக்கு ஒரு முக்கியக் காரணம் இதாகவே இருக்கவேண்டும். அவருக்குள் எப்போதும் கனன்றுகொண்டிருந்த சமூக நீதிக்கான நெருப்பு; அதே நேரத்தில் இனவாத-வெறுப்புக் கோட்பாடுகளுள் சிக்காமல் அப்போராட்டத்தை அவர் முன்னெடுத்த விதம் – இவை அனைத்திலும் ராமானுஜ->ராமானந்த->கபீர் பாரம்பரியத்தின் தாக்கத்தை உணர முடியும். அவர் பௌத்த மதத்துக்கு மாறியபிறகு, அவரது மரணத்துக்குச் சிறிது நேரம் முன்னால்கூட, அவர் கபீர் பாடல்களைத் தனக்குள் பாடிக்கொண்டிருந்தார் என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்ஜய் கீர்.

ஆக, பகவத் கீதையின் பங்கு இந்திய சமூக நீதி வரலாற்றிலும் முக்கியமானது. இதுவே பகவத் கீதையை தலித் விடுதலைக்கான போராட்ட இறையியலை முன்வைக்கும் முக்கிய நூலாக மாற்றுகிறது.

மேலதிக விவரங்களுக்கு:

* கொயன்ராட் எல்ஸ்ட், “The Gita and Varna-sankara (From RISA)” எனும் கட்டுரைத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கான பதில்: http://jagadanandadas.blogspot.com/2007/02/gita-and-varna-sankara-from-risa.html

* தனஞ்ஜய் கீர், Dr. Ambedkar: life and mission, Popular Prakashan, 1971

* ஜான் கார்ன்வெல், Hitler’s Pope: The Secret History of Pius XII, வைகிங் 1999

* ஸ்ரீ ராமானுஜ கீதா பாஷ்யம், (ஆங்கிலம்: மொழி பெயர்ப்பு சுவாமி அதிதேவானந்தா), ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 2009