No announcement available.

யாருக்கு ஓட்டுப் போடுவது?

oped-2016--621x414

நரேந்திர மோடியை ஏன் எதிர்க்கிறேன்? என்று விரிவாக தமிழ்பேப்பரில் எழுதிய பிறகும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரை எதிர்த்து எழுதிய போதும் நான் எதிர்கொண்ட பிரதான கேள்வி “மோடி வேண்டாம் எனில் வேறு யாரை ஆதரிப்பது?” என்பதுதான். அதாவது காங்கிரஸ் கழிசடை என்று தெரிந்ததால் தான் மாற்றாக மோடி வர வேண்டும் என்கிறோம், அவரும் ஆபத்து எனில் வேறு யாரைத் தான் ஆதரிப்பது என்று சொல் என்பதே இந்தக் கேள்வியின் அடிப்படை.

உண்மையில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல எனக்கு உவப்பில்லைதான். உதாரணமாக ஒவ்வொருக்கும் பிடித்தமான அல்லது உகந்ததான உணவு என்ன என்பதை அவரவர் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உரிமை மற்றும் சுதந்திரம். அங்கே ஏற்கனவே உணவுகளைப் பற்றித் தெரிந்த ஒருவர் இருந்தால் அவர் இது விஷம், இதை உண்ணாதே என்று வேண்டுமானால் எச்சரிக்கை விடுத்து சில குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்க்கச் செய்யலாம். மற்றபடி என்ன உண்ண வேண்டும் என்பதை அவரவரே தீர்மானிக்க வேண்டும்.

இதே முறையைத் தான் தேர்தலில் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் தான் நரேந்திர மோடி வேண்டாம் என்று எதிர்த்து வருகிறேன். ஆனால் அதைத் தாண்டி வேறு யார்? என்ற கேள்வியை அடிக்கடி சந்திக்க வேண்டி இருப்பதால் நான் எப்படி ஓட்டளிப்பேன் என்பதைச் சொன்னால் அதிலிருந்து அவரவர்க்கு உகந்த விஷயங்களை எடுத்து முடிவு செய்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

*

பொதுவாக ஒரு கட்சியின் அல்லது தலைவரின் கடந்த கால தவறுகள் அல்லது அவர்கள் குறித்த எதிர்கால பயத்தின் அடிப்படையில்தான் அவரை நிராகரிக்கும் முடிவு வாக்காளர்களால் எடுக்கப்படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2002 குஜராத் கலவரங்களில் நரேந்திர மோடியின் நேரடிப் பங்களிப்பை நான் நம்புகிறேன் என்பதாலும், அயோத்தி ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 370ஐ ரத்து செய்தல், பசு வதைத் தடுப்புச் சட்டம் போன்றவற்றில் எனக்கு ஆர்வமில்லை என்பதாலும், அவரது நேர்மறை விஷயங்களாக முன்வைக்கப்படும் குஜராத் வளர்ச்சி விஷயங்களில் கணிசமானவை ஊதிப் பெருக்கப்பட்டவை என்று நான் கருதுவதாலும், அவருக்கு இணையான அல்லது மேலான நிர்வாகிகள் அவர் இருக்கும் பிஜேபி உட்பட பல கட்சிகளிலும் முதல்வர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதாலும், அவர் வந்தால் தான் இந்தியா முன்னேறும் என்ற முரட்டுத்தன நம்பிக்கையை நான் கொண்டிக்கவில்லை என்பதாலும், பிஜேபியில் மோடிக்கு எதிராய் கருத்து கொண்ட அத்தனை தலைவர்களும் ஓரம் கட்டப்பட்டு உட்கட்சி ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதாலும், அதன் நீட்சியாக எதிர்காலத்திலும் மோடி கட்சியில் மட்டுமல்ல, ஆட்சியிலும் சர்வாதியாகவே நீடிப்பார் என்பதாலும்,  ஆர்எஸ்எஸ் என்ற இந்துத்துவ அமைப்பின் வலுவான கட்டுப்பாட்டில் தான் இன்னமும் பிஜேபி இருக்கிறது என்பதாலும், வாஜ்பாய் போன்ற மிதவாதிகள் இருந்த காலத்திலேயே அதை எதிர்கொள்வதில் சிரமங்கள் இருந்தன, நாளை மோடி என்ற மதவாதி வந்தால் ஆர்எஸ்எஸ் தான் நாட்டை ஆளும் என்பதாலும், அது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதாலும், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என்பதாலும் பிஜேபியை நிராகரிக்கிறேன்.

அடுத்து, கடந்த பத்தாண்டுகளாக ஊழல் மலிந்த, திறனற்ற நிர்வாகம் கொண்ட ஆட்சியை வழங்கி தேசத்தை சீரழித்ததற்காகவும், ஈழ இறுதி யுத்தத்தில் ராஜீவ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு இலங்கைக்குப் போர் உதவிகள் செய்து தமிழர்கள் (விடுதலைப்புலிகள் அல்லாத பொதுமக்கள்) இறந்துபட நன்கு அறிந்தே காரணமாக இருந்ததாலும், தொடர்ந்து அதே பழிதீர்க்கும் வெறியை இலங்கை மீதான போர்க்குற்ற விசாரனை தொடர்பான ஐநா சபை வாக்கெடுப்பு, ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் விடுதலை எனப் பல விஷயங்களிலும் காட்டி வருவதாலும், அதன் தற்போதைய பிரதமர் வேட்பாளராக ஆக வாய்ப்புள்ள ராகுல் காந்தி அதற்கான எந்த அறிவோ தகுதியோ இல்லாத அட்சர சுத்தமான தற்குறி என்பதாலும், தற்போது காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் சுதந்திரமாய் செயல்படவில்லை. அவரது முடிவுகள் முழுக்க சோனியா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கையில் தான் இருந்தது என்று பிரதமர் அலுவலக முக்கியஸ்தர் ஒருவரே தெளிவாகத் தன் புத்தகத்தில் சொல்லி இருப்பதாலும், அதனால் ஒருவேளை ராகுலுக்கு பதிலாய் வேறு எவர் பிரதமராய் அமர்த்தப்பட்டாலும் அவரும் இப்படித்தான் பொம்மையாய் செயல்பட வேண்டி இருக்கும் என்பது புரிவதாலும், நம்பிக்கை அளிக்கும் வேறு நல்ல தலைவர்களே அக்கட்சியில் தென்படவில்லை என்பதாலும் காங்கிரஸையும் நிராகரிக்கிறேன்.

இந்த இரண்டையும் நிராகரித்து விட்டு மீதம் இருப்பவர்களால் ஒரு வலுவான மூன்றாம் ஆணி உருவாக வேண்டும், அதில் ஆம் ஆத்மியும் பங்கேற்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. உத்தேசமாய் காங்கிரஸ் 100க்குள், பிஜேபி 200க்குள் என்ற எண்ணிக்கையில் சீட்கள் பெற்றால் சுமார் 250 இடங்களை மூன்றாம் அணியும், ஆம் ஆத்மியும், மூன்றாம் அணியில் சேராத பிற கட்சிகளும் பெறும்.

இவர்களில் ஒத்த கருத்துடைய கட்சிகள் மட்டும் (குறைந்தபட்சம் 200 எம்பிக்கள் வேண்டும்) இணைந்து நின்று தங்களுக்குள் அதிக தொகுதிகள் பெற்ற ஏதேனும் கட்சியிலிருந்து நல்ல நிர்வாகத் திறமை கொண்ட ஒரு வலுவான தலைவரைத் (உதாரணமாய் நிதிஷ் குமார், நவீன் பட்நாயக், மாணிக் சர்க்கார், மம்தா பேனர்ஜி) தேர்ந்தெடுத்து ஆட்சி அமைப்பது. இன்னொரு தேர்தலைத் தவிர்க்க காங்கிரஸ் இந்த அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும். இது தான் இம்முறை என் எதிர்பார்ப்பு.

இதில் முக்கிய விஷயம் மூன்றாவது அணியின் வழியாக ஊழல் கறை படிந்த, பிற்போக்கு சிந்தனை கொண்ட, சர்வாதிகார மனப்பான்மையுடைய ஜெயலலிதா, முலாயம் சிங், மாயாவதி போன்ற யாரும் பிரதமராக வருவதை ஏற்க முடியாது. அதே போல் முதிர்ச்சியற்ற நிலையிலிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலும் பிரதமர் ஆகக்கூடாது. அதற்கேற்ற மாதிரி இக்கட்சிகள் குறைந்த எண்ணிக்கையிலான எம்பிக்களே பெற வேண்டும். ஆனால் பிராந்திய பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் இவர்கள் இந்தக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெறலாம். அது தேவையைப் பொறுத்து. ஆபத்துக்குப் பாவமில்லை என்ற அடிப்படையில்.

இதில் இருக்கும் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் நேர் எதிராக இருக்கும் இரு பிராந்தியக் கட்சிகள் இது போல் ஒன்று சேர்ந்து அமைச்சரவையில் பங்கேற்க ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். உதாரணமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ். இந்த நிலையில் ஆட்சி அமைக்கத் தோதானது எந்தக் கட்சி என கொள்கைகளின்  அடிப்படையிலும், முந்தைய செயல்பாடுகளின் கணக்கிலும், எம்பிக்களின் எண்ணிக்கை சார்ந்தும் மூன்றாம் அணி முடிவு செய்ய வேண்டும்.

இதை எல்லாம் ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒரு சிறந்த தலைமை இப்போது மூன்றாம் அணியிடம் இல்லை தான். ஆனால் அது இப்போது சாத்தியமோ அவசியமோ இல்லை எனத் தோன்றுகிறது. அதில் கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து ஒவ்வொரு கட்சியிலுமே பிரதமர் கனவு கொண்டவர்கள் இருப்பது தான் காரணம்.

ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தம் பிரதமர் கனவுகள் எல்லாம் தகர்ந்து நிதர்சனத்தின் அடிப்படையில் இக்கட்சிகள் ஒன்று கூடும் போது இது சாத்தியம் தான். அப்போது அவரவர் பலத்தின் அடிப்படையில் ஒரு தலைமை உருவாகும்.

இது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலான இடைக்கால ஏற்பாடு என்பதாக அல்லாமல் பொதுவாகவே இரண்டு பெரிய தேசிய கட்சிகளையும் மக்கள் நலனை முன்னிட்ட, மதச்சார்பற்ற நேர்ப்பாதைக்குக் கொண்டு வர குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளுக்கேனும் இந்த மாதிரி வைத்தியம் அவசியம் எனத் தோன்றுகிறது.

நான் அறிந்த வரை இந்தியா என்ற தேசத்தை மிகச் சிறப்பாக வழிநடத்திச் சென்ற பிரதமர்கள் இருவர்தாம்: ஒருவர் ஜவாஹர்லால் நேரு. இன்னொருவர் விபி சிங். இப்போது நம்மிடையே இருக்கும் தேசிய கட்சிகளில் நேரு இல்லை. அதனால் பிராந்தியக் கட்சிகளிலிருந்து விபி சிங் போன்றவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

*

அகில இந்தியாவைப் பொறுத்தவரை இதுதான் என் எதிர்பார்ப்பு மற்றும் கனவு. இனி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளில் இந்தக் கனவை செயல்படுத்த நான் எப்படி வாக்களிக்கப் போகிறோம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் இம்முறை ஆறுமுனைப் போட்டி. இதில் பிஜேபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஏற்கெனவே நிராகரித்து விட்டோம். பிஜேபியில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளான பாமக (சாதி வெறிக் கட்சி), மதிமுக (சந்தர்ப்பவாதக் கட்சி), தேமுதிக (தகுதியற்ற தலைமை) ஆகியவற்றையும் நிராகரித்து விடலாம். மீதமிருப்பது அதிமுக, திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்கள். இவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜெயலலிதா ஒருவரே போதும் அதிமுகவை நிராகரிக்க. அவர் மீது இருக்கும் பெரும்பாலான ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் வெளியே வரவில்லை. அடுத்து அவர் சாதிய மனோபாவம் கொண்டவர். 2011 பரமக்குடி கலவரம் ஓர் உதாரணம். பிராமணியத்தையும் மூட நம்பிக்கைகளையும் தூக்கிப் பிடிப்பவர்.

அவர் மோசமான சந்தர்ப்பவாதியும் கூட. சமீப நிகழ்வில் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மரபார்ந்த முறையில் அமைதியாய் விடுவிப்பதை விட்டு விட்டு அரசியல் லாபத்திற்காக ஸடண்ட் அடித்து, பிரச்சனையை சிக்கல் ஆக்கியது ஓர் உதாரணம். உண்மையில் அவர் ஒருபோதும் ஈழத்தமிழர் நலனுக்கு யோசித்தவரே அல்ல. அவர் எவர் பேச்சையும் மதிக்காத சர்வாதிகாரி. கட்சியிலும் சொல்லிக் கொள்ளும்படி வலுவான இரண்டாம் மட்டத்தலைவர்கள் தலையெடுக்கவில்லை. இந்தக் காரணங்களால் தமிழகத்தில் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும்.

அடுத்து திமுக. தேசிய அளவில் மிக மிக மோசமான ஊழல் வழக்குகளில் இவர்களுக்கு நேரடித் தொடர்பிருப்பதும், ஈழ இறுதிப் போர் தொடர்பாய் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாததாலும், கலைஞர் தன் குடும்பத்தினர் நலன் தவிர வேறெதையும் யோசிக்க விரும்பாத சுயநலவாதியாகி விட்டார் என்பதாலும், தமிழகத்தின் கணிசமான தொழில்களில் திமுககாரர்கள் மட்டுமே செழித்தனர் என்பதாலும், கட்சியின் அனைத்து மட்டத்திலும் குடும்ப அரசியலில் ஆழமாக வேரூன்றி இருப்பதும் திமுகவை நாம் நிராகரிக்கப் போதுமான காரணங்கள். இனி ஸ்டாலின் வந்து தன் காலத்தில் இதை எல்லாம் சரி செய்ய முயற்சித்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவுக்கு வாக்களிப்பதைப் பற்றி யோசிக்கலாம். அதுவரைக்கும் திமுக என்ற கட்சிக்கு படிப்பினையான இத்தண்டனை அவசியமே.

எல்லாவற்றுக்கும் மேலாக அதிமுகவும் திமுகவும் தேர்தலுக்குப் பின் தேவை எனில் பிஜேபி கூட்டணியில் சேர்ந்து விடுவார்கள். அதனாலேயே இந்த நிராகரிப்பு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஈழ இறுதி யுத்தத்தில் எந்த நேர்மையான முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் அவர்களையும் நிராகரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கூட்டணி மாற்றும் புதிய தமிழகம் மீதும் நம்பிக்கை இல்லை. இது போக பிற ஜாதி கட்சிகளையும், முஸ்லிம் கட்சிகளையும் அவரவர் இருக்கும் கூட்டணி கட்சிகளின் காரணமாக நிராகரிக்க வேண்டியதாகிறது.

இப்போது சுயேட்சைகள் போக மீதமிருப்பது இரண்டு அணிகள் மட்டும் தான்: 1) 21 தொகுதிகளில் போட்டியிடும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 2) 25 தொகுதிகளில் போட்டியிடும் எளிய மக்கள் கட்சி எனும் ஆம் ஆத்மி கட்சி.

இதில் ஆம் ஆத்மி கட்சியின் மீது எனக்கு குழப்பங்கள் உள்ளன; அவநம்பிக்கைகள் இருக்கின்றன; கேள்விகள் பதிலற்றே நீடிக்கின்றன. இலங்கைத் தமிழர், தமிழக மீனவர், இட ஒதுக்கீடு, அணு உலைகள், பொருளாதார வளர்ச்சி, வெளியுறவு போன்ற பல விஷயங்களில் அதன் துல்லியமான நிலைப்பாடு என்னவெனத் தெரியவில்லை. ஊழல் உள்ளிட்ட நான்கைந்து விஷயங்களையே அது முக்கிய எதிர்ப்பு வஸ்துவாகக் கட்டமைக்கிறது. பெரும்பாலான அதன் மேல்மட்டத் தலைவர்கள் ஊடக விளம்பரப் பிரியர்களாகவும் அதிர்ச்சி மதிப்பீடுகளை விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள். எதிலும் நீண்ட கால விளைவுகளை உத்தேசிக்காமல் உடனடி பலன்களை எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

டெல்லியைத் தவிர்த்துப் பார்த்தால் இன்னும் அக்கட்சியில் சாதாரணர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. அதன் மறைமுக கார்பரேட் ஆதரவு நிலைப்பாடுகள் அதிகார பரவலாக்கத்துக்கே எதிரானது. ஆம் ஆத்மி என்பது ஒரு வருடமே வயதான குழந்தை என்கிற காரணம் இது போன்ற தடுமாற்றங்களுக்கு சொல்லப்பட்டாலும் அக்கட்சி குறித்த என் இப்போதைய நிலைப்பாடு இது தான்.

இதே போல் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடும் திருப்திகரமாய் இல்லை. தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் வாலாகவே கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றன இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும். அதன் உச்சமாக பிஜேபியின் ஆதரவில் ஜெயலலிதா பிரதமரானாலும் சந்தோஷம் தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன் சொல்லுமளவு மோசமான நிலையில் கம்யூனிஸ்ட்கள் தம் சுயமரியாதையை இழந்து நிற்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரை மக்களிடம் கட்சியை எடுத்துச் செல்லுமளவு வலுவான தலைவர்கள் உருவாகவே இல்லை. நல்லக்கண்ணு, பி.மோகன் என சில தலைவர்கள் ஓரளவு நன்றாக செயல்பட்டாலும் தற்போது மக்களுக்கு தொலைவான ஓர் இடத்திலேயே கம்யூனிஸ்ட்கள் நிற்கிறார்கள்.

இப்போது கம்யூனிஸ்ட்களைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் கூட பெரும்பாலானோரிடமிருந்து ஒரு நமுட்டுச் சிரிப்பு தான் பதிலாய்க் கிடைக்கும்.

ஆனால் நான் சொல்லப்போவது அது தான். தமிழகத்தில் திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தவிர்த்த ஒரு நிஜமான மூன்றாவது அணியைக் கொண்டு வர நாம் கம்யூனிஸ்டுகளைத் தான் பிரச்சனை அடிப்படையில் ஆதரிக்க வேண்டியுள்ளது.

கம்யூனிஸ்ட்கள் ஒப்பீட்டளவில் பெரும்பாலான விஷயங்களில் கறையற்றவர்கள் என்பது தான் இதற்கு முக்கியக் காரணம். நான் கம்யூனிஸ்ட் அல்ல. இதற்கு முன் வேறு எந்தத் தேர்தல்களிலும் அவர்களை ஆதரிக்க யோசித்தவனும் இல்லை. ஆனால் இன்றைய தேவை அப்படி இருக்கிறது. அதனால் வேறு வழி இல்லை.

ஆனால் கம்யூனிஸ்ட்கள் இருக்கும் நாற்பதில் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டி இடுகிறார்கள். 3 தொகுதிகளில் போட்டியிடும் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் ஆதரவளிக்கிறார்கள். இவர்கள் கர்நாடகத்தில் மூன்றாவது பெரிய கட்சி. தற்போது மூன்றாவது அணியிலும் இருக்கிறார்கள். இவர்களை ஆதரித்து இவர்கள் வென்றால் மூன்றாம் அணியின் பலம் கூடும். அதனால் அந்த அடிப்படையில் இவர்களையும் ஆதரிக்கலாம்.

இவை போக இருக்கும் 19 தொகுதிகளுக்கு வேறு ஒரு கட்சியைத் தேடினால் மீதமிருப்பதில் ஓரளவு ஒப்புக் கொள்ளக்கூடியதாக உள்ளது ஆம் ஆத்மி தான்.

அதன் பலம் அதில் இருக்கும் மாற்றம் விரும்பும் இளைஞர்கள், அரசியலுக்குப் புதிதாய் வந்திருப்பவர்கள், சமூக சேவகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் போராட்டக்காரர்கள் மற்றும் சிந்தனையாளர்கள். இது போன்ற விஷயங்களால் அக்கட்சியின் மீது ஒருமுறை வாய்ப்புக் கொடுத்துத் தான் பார்ப்போமே என்கிற ஆதங்கம் சார்ந்த ஒரு மென்முனை மனதின் ஓரத்தில் வரத்தான் செய்கிறது.

அதனால் ஆம் ஆத்மி போட்டியிடும், அதே சமயம் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடாத தொகுதிகளாய் உள்ள 12 இடங்களில் அவர்களை ஆதரிக்கலாம். கூடங்குளம் போராட்டக்காரர்களான எஸ்பி. உதயகுமார் (கன்னியாகுமரி), எம். புஷ்பராயன் (தூத்துக்குடி) ஆகிய இருவரும் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் கம்யூனிஸ்ட்களும் போட்டியிடுகிறார்கள். அவற்றில் மட்டும் கம்யூனிஸ்ட்களா இவர்களா என அப்பகுதிகளில் இருக்கும் நிலவரம் சார்ந்து முடிவு செய்யலாம்.

ஆரம்பத்தில் நான் கூடங்குளம் போராட்டக்காரர்கள் மூவரையுமே கட்சி தாண்டி அவர்களின் போராட்ட குணத்திற்காக ஆதரிக்க வேண்டும் என்று தான் எண்ணி இருந்தேன். ஆனால் சமீபத்தில் வெளியான எம். புஷ்பராயன் இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் எஸ்பி. உதயகுமார் மீது சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் இல்லை. தற்போது அது போலிக் கடிதம் என எம். புஷ்பராயன் சொன்னாலும் அவரது பழைய ஃபேஸ்புக் நிலைத் தகவல்களின் அடிப்படையில் தர்க்கரீதியாக அக்குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதோ இல்லையோ அக்கடிதம் எழுதப்பட்டது உண்மையாகவே இருக்கும் என்பதே என் புரிதல். அதனால் அவர்களை ஆதரிப்பதில் தயக்கம் உள்ளது. ஆனால் அவர்களின் போராட்டப் பங்களிப்பை மறுதலிக்க முடியாது என்பதால் அந்த தொகுதிக்காரர்களே அவர்களின் தகுதியை வைத்து முடிவு செய்யட்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக எழுத்தாளர் டி.ரவிக்குமார் திருவள்ளூர் தொகுதியில் நிற்கிறார். ஆனால் அவர் மீது சமீபத்தில் வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதாலும், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் மேல் நமக்கு விமர்சனங்கள் உண்டு என்பதாலும் அவரை நிராகரிக்கிறோம்.

திருநங்கை கல்கி விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் திருநங்கைகளின் குரல் அரசிடம் சேர்வது முக்கியம் தான் என்றாலும் முதலில் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வென்றால் தான் அவர்களுக்கு தேவையான / முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச சரியாக இருக்குமென நினைக்கிறேன். அது போக ஒருவேளை அவர் வென்றால் பிஜேபிக்கோ, காங்கிரஸுக்கோ போக மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் இந்த லோக்சபா தேர்தலில் அவரை ஆதரிக்க இயலாது.

கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி என 33 தொகுதிகளில் இப்போது நாம் யாருக்கு ஆதரவளிக்கிறோம் என முடிவு செய்தாயிற்று. மீதமிருக்கும் 7 தொகுதிகளில் சுயேட்சையாக யாரேனும் தகுதியானவர் நிற்கிறார்களா எனப் பார்க்க வேண்டும். அப்படி இல்லை எனில் 49-ஓ என்ற நோட்டா (NOTA) பதிவு செய்ய வேண்டும்.

(நோட்டா போட்டாலும் மீதமிருக்கும் வாக்குகளின் படி மற்றவர்கள் ஜெயிப்பார்கள் தானே, அப்புறம் அதனால் என்ன பயன் உண்டு என யோசிப்பவர்களுக்கு: நீங்கள் சொல்வது சரியே, ஆனால் அதை மீறி நோட்டா போடச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அடுத்த கட்டுரையில் அது குறித்து விரிவாய் எழுத முயல்வேன்.)

சுருக்கமாய்ச் சொன்னால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தான் முதல் சாய்ஸ்; அவர்கள் நிற்காத தொகுதிகளில் ஆம் ஆத்மி; இக்கட்சிகள் நிற்காத தொகுதிகளில் தகுதியான சுயேட்சைகள் அல்லது நோட்டா.

அவ்வளவு தான் விஷயம்!

*

தொகுதிவாரியான பட்டியல் அளித்தால் எளிதாய் இருக்கும் எனத் தோன்றுகிறது:

 1. திருவள்ளூர் (தனி) – ஏஎஸ் கண்ணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
 2. வட சென்னை – யூ. வாசுகி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 3. தென் சென்னை – எம். ஜாகிர் ஹுஸைன் (ஆம் ஆத்மி)
 4. மத்திய சென்னை – ஜே. பிரபாகர் (ஆம் ஆத்மி)
 5. ஸ்ரீபெரும்புதூர் – எஸ்ஏஎன். வசீகரன் (ஆம் ஆத்மி)
 6. காஞ்சிபுரம் (தனி) – தகுதியான சுயேட்சை அல்லது நோட்டா
 7. அரக்கோணம் – எஸ். ராஜேஷ் (ஆம் ஆத்மி)
 8. வேலூர் – இம்தாத் ஷெரீஃப் (ஆம் ஆத்மி)
 9. கிருஷ்ணகிரி – என்எஸ்எம். கௌடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்)
 10. தர்மபுரி – தகுதியான சுயேட்சை அல்லது நோட்டா
 11. திருவண்ணாமலை – எம்ஆர். மாணிக்கவேலு (மதச்சார்பற்ற ஜனதா தளம்)
 12. ஆரணி – தகுதியான சுயேட்சை அல்லது நோட்டா
 13. விழுப்புரம் (தனி) – ஜி. ஆனந்தன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 14. கள்ளக்குறிச்சி – கே. முகமது யாசின் (ஆம் ஆத்மி)
 15. சேலம் – சதீஷ் குமார் (ஆம் ஆத்மி)
 16. நாமக்கல் – கலைவாணன் (மதச்சார்பற்ற ஜனதா தளம்)
 17. ஈரோடு – கேகே. குமாரசாமி (ஆம் ஆத்மி)
 18. திருப்பூர் – ஆர். சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
 19. நீலகிரி (தனி) – பேராசிரியர். எம்டி. ராணி (ஆம் ஆத்மி)
 20. கோயம்புத்தூர் – பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 21. பொள்ளாச்சி - தகுதியான சுயேட்சை அல்லது நோட்டா
 22. திண்டுக்கல் – என். பாண்டி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 23. கரூர் – ஆர். வளையாபதி (ஆம் ஆத்மி)
 24. திருச்சிராப்பள்ளி – எஸ். ஸ்ரீதர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 25. பெரும்பலூர் – தகுதியான சுயேட்சை அல்லது நோட்டா
 26. கடலூர் – கே.பாலசுப்ரமணியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
 27. சிதம்பரம் (தனி) – தகுதியான சுயேட்சை அல்லது நோட்டா
 28. மயிலாடுதுறை – தகுதியான சுயேட்சை அல்லது நோட்டா
 29. நாகப்பட்டினம் (தனி) – ஜி. பழநிச்சாமி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
 30. தஞ்சாவூர் – எஸ். தமிழ்ச்செல்வி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 31. சிவகங்கை – எஸ். கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
 32. மதுரை – பி. விக்கிரமன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 33. தேனி – ஜே. ராம்பிரகாஷ் (ஆம் ஆத்மி)
 34. விருது நகர் – கே. சாமுவேல்ராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
 35. இராமநாதபுரம் – ஆர்டி. உமா மகேஸ்வரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
 36. தூத்துக்குடி – ஏ. மோகன்ராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அல்லது எம். புஷ்பராயன் (ஆம் ஆத்மி)
 37. தென்காசி (தனி) – பி. லிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
 38. திருநெல்வேலி – எம்பி. ஜேசுராஜ் (ஆம் ஆத்மி)
 39. கன்னியாகுமரி – ஏவி. பெல்லர்மின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) அல்லது டாக்டர். எஸ்பி. உதயகுமார் (ஆம் ஆத்மி)
 40. புதுச்சேரி – ஆர். விஸ்வநாதன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

(இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் சுத்தி அருவாள்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் கதிர் அருவாள்; மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னம் கதிர் சுமக்கும் பெண்; ஆம் ஆத்மியின் சின்னம் விளக்குமாறு. நோட்டாவுக்கு தனிச் சின்னம் ஏதுமில்லை – “NOTA” என எழுதி இருப்பார்கள்.)

இது கட்சிகளின் நிலைப்பாட்டை ஒட்டிய பட்டியல் மட்டுமே. தனிப்பட்ட எந்த வேட்பாளர்களைப் பற்றியதும் அல்ல. அந்தந்த உள்ளூர்க்காரர்களுக்கு இந்த வேட்பாளர்களைப் பற்றி இன்னும் அதிகமாய், நேரடியாய்த் தெரிந்திருக்ககூடும். அப்படி ஏதாவது இதில் இருப்பவர்கள் பற்றிய ஊழல் உள்ளிட்ட எதிர்மறை விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லலாம். நான் அதைப் பரிசீலிப்பேன்.

அதனால் இந்தப்பட்டியலை ஒருவர் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. மோடிக்கு ஓட்டு போட வேண்டாம் எனில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பரவலான கேள்விக்குத் தான் சிந்தனாப்பூர்வமாய் பதிலளிக்க முயன்றிருக்கிறேன்.

இது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கோ ஆம் ஆத்மிக்கோ மேற்கொள்ளும் பிரச்சாரம் இல்லை (அப்படி நான் பிரச்சாரம் செய்ய நினைப்பது ஆலந்தூர் இடைத்தேர்தலில் நிற்கும் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஞாநி ஒருவருக்கு மட்டும் தான்).

மற்றபடி என் தர்க்கத்தின் வழி நான் கண்டடைத்திருக்கும் பட்டியல் தான் இது. அந்தத் தொகுதிகளில் எனக்கு வாக்கு இருந்திருந்தால் இப்படி அளித்திருப்பேன்.

Happy voting, folks!

0

Share/Bookmark

2014 – கணிப்பும் கனவும் : 2

பகுதி 1

reincarnation-2குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவரை குஜராத் மக்கள் இரண்டு முறை வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை மதிக்கவேண்டும். என்றாலும் ஒருவேளை வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு காரணத்துக்காக வாக்களித்திருக்கக்கூடும். அதிலும் 50-60 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்திருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் மோடியை ஆதரிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்தானே. எனவே அந்தத் தீர்ப்பை நிரபராதித்துவத்துக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது.

நீதிமன்றத் தீர்ப்பையும் ஒரளவுக்குத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால், சட்டத்துக்கு ஒரு குற்றத்தை நிரூபிக்க தெளிவான சாட்சியங்கள் தேவைப்படும். அது கிடைக்கவில்லை என்பதால் ஒருவர் நிரபராதி என்று சொல்லிவிட முடியாது. எனவே, மோடிக்கு குஜராத் கலவரத்தில் பங்கில்லை என்று இவற்றின் அடிப்படையில் சொல்லிவிட முடியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில், அவருடைய பங்கு என்பது குற்றச் செயலை முன்னின்று நடத்தியதோ, தூண்டியதோ அல்ல. குற்றவாளிகளை அவர் பாதுகாத்திருக்கிறார்.

விசாரணை முறையாகத்தானே நடைபெற்றிருக்கிறது. சிறப்பு புலனாய்வு அமைப்பானது மோடியின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுதானே. மோடியை எப்படியாவது வழக்கில் சிக்க வைத்துவிடவேண்டும் என்று நினைப்பவர்களின் வழிகாட்டுதலில் இயங்கிய ஒன்றுதானே.

அதுதான் சொன்னேனே… சட்டத்துக்கு தெளிவான சாட்சியங்கள் தேவை என்று. நீதி மன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, அதற்கு முன்பாக, ஆட்சியில் இடம் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் அவர் மீதான கறைகள். காரில் போகும்போது ஒரு  நாய்க்குட்டிக்கு அடிபட்டுவிட்டால் நமக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும் என்ற அவருடைய பதிலில் குட்டி நாய்க்கு அடிபட்டாலே நமக்கு வருத்தம் ஏற்படும். பல மனித உயிர்கள் பலியானது என்றால் எவ்வளவு பெரிய வலி இருக்கும் என்று அவர் சொன்னதாக புரிந்துகொள்ள முடியும்தான். ஆனால், இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். இந்த இடத்தில் இந்த சாதுரியமான பதிலைச் சொல்லியிருக்க வேண்டாம். ஒட்டு மொத்தமாகவே கோத்ரா படுகொலையைத் தொடர்ந்து நடந்த விஷயங்களை அவர் நல்லவிதமாகக் கையாண்டிருக்கலாம்.

அது நடந்த உடனேயே துணை ராணுவத்தை அழைத்திருக்கிறார். காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கூட சில இந்துக்களும் இறந்திருக்கிறார்கள். ஆட்சிப் பொறூப்பேற்று நான்கு மாதமே ஆகியிருந்த நிலை. ஒரு முதல்வரால் என்ன செய்ய முடியுமோ அதைத்தானே அவர் செய்திருக்கிறார்.

அவர் ஒரு சொரணையுள்ள இந்துவாக நடந்துகொண்டிருக்கிறார். கருணையுள்ள இந்துவாக நடந்து கொண்டிருக்கலாம். நான் பொதுவாக ஒரு விஷயம் சரியா தவறா என்ற கேள்வி வரும்போது காந்தி இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பார் என்று யோசித்துப் பார்ப்பேன். அவர் என்ன செய்திருப்பார்… இறந்த கர சேவகர்களின் அஸ்தியை தேசம் முழுவதும் பாத யாத்திரையாக எடுத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருவருக்கும் தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு ராமர் கோயிலைக் கட்டியிருப்பார். அதைக் கட்டும் லட்சியத்தில்தானே அந்த உயிர்கள் பலிகொடுக்கப்பட்டிருந்தன. தேசம் முழுவதும் 58 ராமர் கோயில்களைக் கட்டியிருப்பார். அதுவும் எப்படி? கோயில் முதல் அஸ்திவாரச் செங்கல்லை ஒரு முஸ்லிமை விட்டு வைக்கச் சொல்லியிருப்பார். அந்தவகையில் கோத்ரா எரிப்பை இந்திய ஒற்றுமைக்கான அஸ்திவாரமாக ஆக்கிக் கொண்டிருந்திருப்பார். மத நல்லிணக்கத்தின் கோயிலை அவர் கட்டி எழுப்பியிருப்பார். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த மோடியும் அதையே செய்திருக்கலாம். இதையேதான் ராமர் மசூதி பிரச்னைக்கும் சொல்வேன்

ராமர் – மசூதியா?

ஆமாம். ராமர் கோயிலை இடித்துக் கட்டிய மசூதி.

ஆனால், அங்கு தொழுகைகள் எதுவும் நடந்திருக்கவில்லையே.

அது சரிதான். உண்மையில் ராமர் கும்மட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

சரி, அந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கலாம் என்று சொல்கிறீர்கள்.

அந்த இடத்தை தேசிய ஒற்றுமைக்கான இடமாக மாற்றிக்கொள்ளலாம். கலங்கரை விளக்கம் போல் பிரமாண்டமான தூண் ஒன்று. அதின் உச்சியில் திரிசூலம் போல் மூன்று கட்டுமானங்கள். திரிசூலத்தின் நடுக்காலில் ஐநூறு பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும் படியான ஓர் அரங்கம். அதில் பாரத மாத சிலை. அதன் கையில் தேசியக் கொடி படபடவென பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும். திரிசூலத்தின் வலது பக்க ஆரக்காலில் இமயம் முதல் குமரி வரையிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களாலான அருமையான ராமர் கோயில். இடது பக்கத்தில் வெண் பளிங்கிலான மசூதி. இந்துக்களுக்கு காசி போல், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல் இந்தியர்களுக்கான புனித யாத்திரை பூமியாக அந்த இடம் ஆக்கப்படும். இன்று தேசத்தை பிளவு படுத்திக்கொண்டிருக்கும் அதே இடமானது தேசத்தை ஒன்றுபடுத்தும் புண்ணியஸ்தலமாக ஆக்கப்படும். காந்தி இதைத்தான் செய்திருப்பார்.

இவையெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நிஜத்தில் வேறு விஷயங்கள் அல்லவா நடக்கின்றன. இந்துத்துவம் என்பது வேறு முகத்துடன் அல்லவா வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இந்துத்துவம் என்றாலே விமர்சிக்க வேண்டிய ஒன்றாக அல்லவா ஆகிக் கொண்டிருக்கிறது.

அதுதான் ஏன் என்கிறேன்?

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கவேண்டும். இந்தியாவில் இருப்பவர்கள் அனைவருமே இந்துக்கள் என்றெல்லாம் சொன்னால் அந்த இந்துத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இதற்கான பதிலைக் கொஞ்சம் விரிவாகத்தான் சொல்லியாக வேண்டும். எந்த இந்து அமைப்பும் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் ஓடிப் போய்விடவேண்டும் என்று சொல்லவில்லை.

சாவர்க்கரின், நாம் அல்லது நமது தேசியத்தின் விளக்கம் என்ற நூல்  அதைத்தானே சொல்கிறது.

இல்லை. அப்படிச் சொல்லவில்லை. இந்தியாவை உன் தேசமாக ஏற்காமல் இருந்தால் ஓடிப் போய்விடு என்கிறது. அதோடு ஆர்.எஸ்.எஸின் அந்த ஒற்றை புத்தகத்தை வைத்துக் கொண்டு அதை விமர்சிப்பதைவிட அவர்களுடைய ஆயிரக்கணக்கான செயல்பாடுகளை வைத்து அதை மதிப்பிடவேண்டும். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவமனைகளில் ஆரம்பித்து எந்த இடத்திலும் இஸ்லாமியர்களை அவர்கள் மறுதலிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸின் ஸ்தாபகர் ஹெட்கேவாரின் நினைவு மண்டபத்தைக் கட்டியதே இஸ்லாமியர்கள்தான். பாலா சாஹிப் தேவரஸ் காலகட்டத்தில் பல இஸ்லாமியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேர்ந்து பணி புரிந்திருகிறார்கள். இன்றும் இஸ்லாமியர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். ஒப்பீட்டளவில் செல்வாக்குடன் இருக்கும் வட இந்தியாவில் திரையுலகம் ஆரம்பித்து பொருளாதார அமைப்புகள் வரை பலவற்றில் இஸ்லாமியர்களே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள்.

எப்படி இஸ்லாத்தின் புனித நூலான குர்ரானில் பிற மத வெறுப்பு வாசகங்கள் அபரிமிதமாக இருந்த நிலையிலும் நடைமுறையில் இந்திய முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்களோ அதைவிட குறைவான வெறுப்பு வாசகங்களே ஆர்.எஸ்.எஸ். நூல்களில் இருக்கின்றன. அவர்களுடைய நடவடிக்கைகள் கூடுதல் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.

ஆனால், தொகாடியாக்கள் வேறுவிதமாக அல்லவா செயல்படுகிறார்கள்.

திராவிட இயக்கத்தை தீப்பொறி ஆறுமுகங்களை வைத்து எடைபோடக்கூடாது. ஓவைஸிகளை வைத்து இஸ்லாமை எடைபோடக்கூடாது. வெறுப்புப் பேச்சுகளுக்கு அதற்குரிய முகியத்துவம் மட்டுமே தரவேண்டும். இந்துத்துவம் என்பதற்கான உண்மை அர்த்தத்தை பார்ப்போம். இந்து என்ற சொல் மதத்தை மட்டும் குறிக்கவில்லை. நிலவியல் ரீதியான அர்த்தமும் அதற்கு உண்டு. சிந்து நதியின் கீழ் பக்கம் வசித்த அனைவரையுமே இந்து என்று அழைத்தார்கள். அப்படித்தான் பாரதவாசிகளுக்கு இந்து என்ற பெயரே வந்தது. இரண்டாவதாக, கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பாரதத்தில் இந்துக்கள்தான் இருந்திருக்கிறார்கள். சமணம், பவுத்தம் எல்லாம் இந்து மதத்தின் மறு வடிவங்கள்தானே. மேலும் இன்று இந்தியாவில் இந்து மதத்தோடு அவர்கள் கலந்துவிட்டனர். இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் எல்லாம் இந்து வேர்களைக் கொண்டவர்களே. அவர்கள் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டார்களா… பணத்துக்காக மதம் மாறினார்களா… இந்து மதத்தின் சாதிய இறுக்கத்தை எதிர்த்து மதம் மாறினார்களா என்பது ஆய்வுக்குரியதுதான். இந்து மதத்தின் சாதிய கட்டுமானத்தை எதிர்த்து மட்டுமே மாறியிருந்தார்கள் என்றால் இன்று இந்திய கிறிஸ்தவத்துக்குள்ளும் இஸ்லாமுக்குள்ளும் இருக்கும் சாதி அணுகுமுறையை ஒருவரால் எப்படி விளக்க முடியும் என்று தெரியவில்லை. இருந்தும் போராளிகள் சொல்வதுபோல் சாதிக் கட்டமைப்புக்கு எதிராகத்தான் மாறியிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

மேலும் யேசுவையும் அல்லாவையும் வணங்கத் தொடங்கிவிட்ட பிரிவினரை பழைய அடையாளமான இந்து என்ற பழைய அடையாளத்துடன் இணைப்பது சரியல்லதான். என்னை அப்படி அடையாளப்படுத்தாதீர்கள் என்று ஒருவர் சொல்லும்போது அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆர்.எஸ்.எஸும் இதை ஏற்கத்தான் செய்கிறது. ஆனால், இந்துக் கலாசாரத்தை இகழாதீர்கள்…. இந்தியாவை உங்கள் தேசமாக கெளரவத்துடன் சொல்லுங்கள் என்றுதான் அது கேட்டுக் கொள்கிறது.

அதோடு இந்து என்றால் யார்? உருவ வழிபாட்டைப் பின்பற்றுபவர்… சிறு குழு மனப்பான்மை கொண்டவர்… ஒருவருடைய வாழ்க்கையை அவருடைய பிறப்பும் வாழும் சூழலும் தீர்மானிக்கும் என்று நம்புபவர்… இறந்தவர்களை வணங்குபவர்… சுருக்கமாகச் சொல்வதானால், இந்து என்றால் பிற குழுக்களின் வாழ்க்கைப் பார்வைகளை, வழிபாட்டு வழிமுறைகளை மதிப்பவர் என்று பொருள். அதாவது பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்பவர் என்று பொருள். கிறிஸ்தவமும் இஸ்லாமும் அப்படிச் செய்பவை அல்ல. அவை ஒற்றைப் படைத்தன்மையை வலியுறுத்துபவை. அவற்றின் மரபணுவிலேயே பிற மத ஒறுப்பு உண்டு. இந்தியாவில் இருப்பதானால், நீங்கள் மத நல்லிணக்கத்தைப் பின்பற்றியாகவேண்டும். பிற மத நம்பிக்கைகளை மதித்தாகவேண்டும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதைத்தான் இந்துவாக இரு என்று சொல்கிறோம். பிற மத நம்பிக்கைகளை மதி என்று சொல்வதும் இந்துவாக இரு என்று சொல்வதும் ஒன்றுதான். இந்துத்துவத்திம் அந்த அம்சத்தை மட்டும் பிற மதத்தினர் ஏற்றுக்கொண்டால் போதும் என்றுதான் இந்துத்துவம் சொல்கிறது.

நான் மதத்தால் முஸ்லிம்… கலாசாரத்தால் இந்து என்று வெளிப்படையாகச் சொன்ன இஸ்லாமியர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். கம்பராமாயணத்துக்கு விளக்க உரை எழுதிய நீதிபதி இஸ்மாயில், சபரி மலையில் தர்ம சாஸ்தாவைத் தூங்க வைக்க தினமும் பாடப்படும் ஹரிவராசனத்தைப் பாடிய ஜேசுதாஸ், இந்துஸ்தானி இசையில் உச்சத்தை எட்டிய கலைஞர்கள் என இந்து கலாசாரத்துக்கு வளம் சேர்த்த எத்தனையோ இஸ்லாமியர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்று பாடியவரே ஒரு இஸ்லாமியர்தானே… இஸ்லாமிய விழாக்களில் உற்சாகத்துடன் பங்கேற்கும் இந்துக்கள் ஏராளம் உண்டே… நோன்புக் கஞ்சி குடிக்காத ஒரு இந்து அரசியல் தலைவரைக் காட்டுங்கள். இரண்டு கலாசாரங்கள் கலக்கும்போது பரஸ்பர மாற்றங்கள், கொடுக்கல் வாங்கல்கள் இருக்கத்தானே செய்யும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சாதி அமைப்பு அனைவரையும் பிரித்து வைக்கிறது என்று சொல்லித்தான் இந்து மதத்தையே விமர்சிக்கிறார்கள். அதே இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு அனைத்து சாதிகளை மட்டுமல்ல அனைத்து  மதத்தினரையும் ஒன்று சேர்த்து அரவணைத்து ஓர் அடையாளத்தை முன்வைத்தால் அப்போதும் அதை வெறுக்கிறார்கள். அதுவும் இந்து சக்திகள் கேட்பது மிகவும் குறைவான ஒன்றுதானே. பாகிஸ்தானில் இருக்கும் ஒரு இந்துவை நீ பாகிஸ்தானி என்பதை மட்டும் ஒப்புகொள் என்று மட்டுமா கேட்டுக்கொண்டார்கள். முஸ்லிமாக மாறிவிடு என்று சொல்லி அல்லவா மாற்றிவிட்டார்கள். இந்துத்துவம் அப்படி எதையும் சொல்லவில்லையே. உங்களுடைய இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றிக் கொள்ளுங்கள் என்றுதானே இப்போதும் சொல்கிறது.

இன்றைக்கு இந்து என்ற பெயரை ஒப்புக்கொள் என்பார்கள். நாளை இந்துவாக மாறிவிடு என்பார்கள்.

இந்த பயம்தான் மிகையானது. இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது இஸ்லாமிய இந்தியாவாக மாறிவிடும் என்ற பயத்தில் இருக்கும் நியாயத்தில் துளி கூட இந்த பயத்தில் கிடையாது. ஏனென்றால், இந்து ஒருபோதும் அப்படியான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. சாதிகளுக்குள்ளேயே கூட ஒவ்வொரு பிரிவினரின் மதிப்பீடுகளை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள இடமளித்திருக்கிறது. அப்படி இருப்பவர்கள் பிற மதத்தினர் மீது அதைத் திணிப்பார்களா என்ன? பிரிவினை காலகட்டத்தில் நடந்ததையே எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரிவினையின் தீ நாக்குகள் பாகிஸ்தான் முழுவதும் பற்றி எரிந்தன. அனைத்து முஸ்லிம் கட்சிகளும் மத அமைப்புகளும் தெருவில் இறங்கி நர வேட்டையாடின. ஆனால், மாறாக இந்தியாவில் என்ன நடந்தது. இந்துகளின் கட்சிகள் என்ன செய்தன? இந்து மத அமைப்புகள் என்ன செய்தன… ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது? இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதி நீங்கலாக 90 சதவிகித இந்தியாவில் இந்துக்களின் மத்தியில் இருந்த இஸ்லாமியர்களில் ஒரு சிறு கீறலாவது விழுந்ததா? பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிக் கொண்டு பத்து சதவிகித இந்துக்களில் ஒருவராவது விட்டு வைக்கப்பட்டாரா..?

பிரிவினை போன்ற கோரச் செயல் நடந்தபோதே அமைதியாக இருந்த பெரும்பான்மை அல்லவா இந்துப் பெரும்பான்மை. இன்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் வெடிகுண்டு வைத்துக் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கையையும் இந்து தீவிரவாதத்தால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். முற்போக்காளர்களும் இன்ன பிற போராளிகளும் என்னதான் இந்துவுக்கு கோரைப் பல்லையும் கூர் நகங்களையும் ஒட்டினாலும் அது அவர்கள் உடம்பில் ஒருபோதும் ஒட்டாது. இவ்வளவு ஏன் நீங்கள் கட்டம் கட்டித் தாக்கும் மோடியிஸம் உச்சத்தில் இருக்கும் குஜராத்திலேயே இஸ்லாமியர்கள் நலமாகத்தானே இருக்கிறார்கள். மோடியின் இந்துத்துவமும் நீங்களாக அடிக்காதவரை திருப்பி அடிப்பதில்லைதானே. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், குஜராத் கலவரம் நடந்ததால்தான் இன்று இந்துத்துவம் விமர்சிக்கப்படுகிறது என்றில்லை. அதற்கு முன்பும்கூட இதே வேகத்தில் விமர்சிக்கப்பட்டுத்தான் வந்தது. குஜராத் கலவரம் அவர்களுடைய வெறுப்புப் பிரசாரத்துக்கு சிறு நியாயத்தை அளித்துவிட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

மோடியிஸத்தில் இவ்வளவு நியாயங்கள் இருப்பதாகச் சொல்லும் நீங்கள் பிறகு எதற்கு மோடி இஸ்லாமியரைப் பதவியில் அமர்த்திவிட்டு குஜராத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்கிறீர்கள்?

காரணம் வேறொன்றுமில்லை. தேசத்தை சீர் குலைக்கும் சக்திகள் மோடியை காரணம் காட்டி தங்கள் நாச வேலைகளைத் தீவிரப்படுத்தக்கூடும். மோடியினால் உற்சாகம் பெற்றிருக்கும் இந்து சக்திகள் அதைச் சரியாக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குக் குறைவுதான். எனவேதான் மோடி கொஞ்சம் பின் அரங்குக்குச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன். கல்லெறிந்தால் கொத்தும் என்ற பயம் இருந்தால் போதும். எப்போதும் படத்தைத் தூக்கிக்கொண்டு திரியத் தேவையில்லை.

0

காம்ரேடுகள் கவனத்துக்கு

1390376470டெல்லியில் 2013 அக்டோபர் 30 அன்று சிபிஐ (எம்) கட்சி நடத்திய மதவாத எதிர்ப்புக் கூட்டத்தில் 17 கட்சிகள் கலந்து கொண்டன. ‘மதவாதத்திலிருந்து நாட்டைக் காப்பது மட்டுமே இந்தக் கூட்டத்தின் நோக்கம்’ என்று இக்கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார்.

மதவாதம் என்று இந்தக் கட்சியினர் குறிப்பிடுவதெல்லாம் பா.ஜ.க. வின் அரசியலையும், நாடாளுமன்ற அதிகாரத்துக்கு வருவதற்காக அக்கட்சி நடத்தும் தேர்தல் போட்டியையும், பிரதம மந்திரி பதவி மீதான மோகத்தில் மோடி மேற்கொண்டு வரும் பிரசாரத்தையும்தானே தவிர, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் உண்மையான மதவாத உணர்வுகளையல்ல.

அவரவர் மதம் போதிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், மதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதும் பொதுவாக அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வழக்கமாகும்.  ஆனால், ஒரு சாரார் தங்களின் மத நம்பிக்கைகளைப் பொதுவில் வைத்து, மக்கள்மீது திணிக்கும் போதுதான் மதவாதம் தலைதூக்குகிறது.  இந்த மதவாதம் வெறும் கருத்தாக்கத்தோடு நிற்காமல், மதவெறியாக மாறி வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது.  மனித உயிர்களைக் காவு வாங்குகிறது.  மக்களின் உடைமைகளைச் சூறையாடுகிறது.  மக்கள் அமைதியுடன் வாழ்வதற்கான சமூகச் சூழலையே அழித்துவிடுகிறது.

சகல மதங்களையும் கடைப்பிடிக்கும் சர்வ சமயவாதத்தையே இந்திய ஆட்சியாளர்கள் சமயச்சார்பின்மை என்று அழைக்கிறார்கள்.  அதையே சிபிஐ (எம்) கட்சியும் ஏற்றுக் கொள்கிறது.  இப்படிப் பலப்படித்தான சமயச்சார்பின்மை கண்ணோட்டம் கொண்டிருப்பதால்தான் இக்கட்சியினரால் சாதி-சமய, இனவாத, பிராந்தியவாதக் கட்சிகளோடு எளிதில் ஐக்கியமாகிவிட முடிகிறது.  இதன் விளைவாகவே இவர்கள் தேசியவாத காங்கிரஸ், அஇஅதிமுக (தற்போது தாற்காலிகமாக முறிந்திருக்கிறது – அதுவும் பெரிய கொள்கைக்காக உள்ளே சென்று, அந்த கொள்கை ஏற்கப்படவில்லை என வெளியே வரவில்லை – 2 சீட் கூட கிடையாது என்பதற்காக வெளியேற்றப்பட்டது), ஜார்கண்ட் விகாஸ் பரிஷ‌த், அசாம் கன பரிஷ‌த், போன்ற பிரிவினைவாதக் கட்சிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.

அதோடு தாற்காலிகமாக எந்தெந்த கட்சிகள் பாஜகவுக்கு எதிராக இருக்கின்றனவேஅவையனைத்தையும் மதவாதத்துக்கு எதிரான கட்சிகளென்று இவர்களாகவே மதிப்பிட்டு பறைசாற்றிக் கொள்கிறார்கள்.  இவர்களின் இந்த மேடையில் பங்கேற்ற தலைவர்கள் யாவருமே ஏதாவது ஒரு தருணத்தில், தங்களின் கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டு, தேர்தலில் ஜெயித்து அவரவர் மாநிலங்களில் ஆட்சி அமைத்துக் கொண்டவர்கள்தாம்.

அதிமுக தற்போது பாஜக கூட்டணியில் இல்லை.  அதற்காக இவர் மதவாதத்துக்கு எதிரானவர் என்றாகிவிடுவாரா?  அயோத்திக்கு பூஜிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பியவர்கள் அதிமுகவினர்.  குஜராத்தில் மோடி ஆட்சியமைத்தவுடன் விமானத்தில் சென்று அகமகிழ்ந்து வாழ்த்தியவர் செல்வி ஜெயலலிதா.  தமிழகத்தில் ஆட்சியமைந்ததும் மோடியை அழைத்து கெளரவித்தவர் இவர்.

மேற்படி மதவாத எதிர்ப்பு கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரையில், ‘கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவில் மதவாதம் அதன் ஆபத்தான கரங்களைப் பரப்பி வருகிறது.  இதனால் மத மோதல்களும், மத அடிப்படையிலான அரசியல்களும், மதவாத சக்திகளும் தமது அரசியலில் தலைதூக்கியுள்ளன’ என்று செல்வி ஜெயலலிதா கூறுகிறார்.  ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக நமது அரசியலில் தலைதூக்கியுள்ள மத அடிப்படையிலான அரசியல்களும், மதவாத சக்திகளும் எவையெனக் குறிப்பிட மறந்துவிட்டார், இல்லையில்லை குறிப்பிடாமல் மறைத்துவிட்டார்.

இவர் மறைத்திருக்கலாம், ஆனால் இதன்மூலம் தனது உடன்பிறவா சகோதரரான மோடியையும், அவரது மதவெறி அரசியலையும் செல்வி.ஜெயலலிதா மறைத்துப் பாதுகாப்பதோடு, தனது இந்துத்துவ மத ஆதரவு நிலைப்பாட்டுக்கு மதச்சார்பின்மை முக்காடு போடுகிறார் என்ற உண்மை மார்க்சிஸ்ட் மேதாவிகளான பிரகாஷ் காரத், ராமகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுக்கு எட்டாமல் போனதுதான் விந்தை.

மூன்றாவது அணி கலகலத்துப் போய், தனது பிரதம மந்திரி கனவு நனவாகாது என்றால், இன்று மதச்சார்பின்மை அணியிலிருக்கும் அதிமுக மதவாத பாஜகவுடன் கைகோர்க்கும் என்ற தர்க்க நியாயம் கூட இவர்களின் பொது அறிவுக்கு எட்டாமல் போனது விந்தையிலும் விந்தை.

மேலும் மதவாதம் எனும்போது பாஜகவை மட்டும் குறிவைத்துத் தாக்குவதும், மதவாதத்துக்கு ஆதரவான பிற அரசியல் சக்திகளை அடையாளங்காண மறுப்பதும் இக்கட்சி தொடர்ந்து கடைப்பிடித்துவரும் வஞ்சகச் செயலாகும்.  1984ம் வருடம் காங்கிரஸ் ஆட்சியின்போது பம்பாயில் கூலி உயர்வுக்காகப் போராடிய மில் தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.  அதை இந்து முஸ்லீம் கலவரத்தின் விளைவு என சித்தரித்தது காங்கிரஸ்.  பாபர் மசூதியை இடித்தது ஆர்எஸ்எஸ் ஆக இருக்கலாம், ஆனால் காங்கிரஸின் ஆசியுடன், இந்திய ராணுவம் துணை நிற்கத்தான் மசூதி இடிக்கப்பட்டது.  காங்கிரஸின் ஊழலைச் சுட்டிக்காட்டும் இவர்கள் இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக காங்கிரஸ் அனுமதிக்கிற நர வேட்டையைக் கண்டு கொள்வதில்லை.

கூட்டணியிலிருந்து விலகிவிட்டாலும் இன்னும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலேயே கருணாநிதியை இந்த மதவாத எதிர்ப்புக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை என திரு ராமகிருஷ்ணன் கூறினார்.  உண்மையில் தமிழ்நாட்டில் பாஜகவுடன் அரசியல் ரீதியான நுழைவுக்கு ஜெயலலிதா காரணமாக இருந்தாலும், அதன் மதவாத அரசியலை தமிழ் மண்ணில் வேறூன்றச் செய்தவர் கருணாநிதிதான்.  1999ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்து அது ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு உதவியவர் இவர்.  தன்னைப் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வருபவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி 1992 ல் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக நின்றவர். குஜராத் கலவரம் பற்றி பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அது ஒரு மாநிலத்தின் பிரச்னை என்று பதில் கூறினார்.

இவ்வளவு ஏன்? பாபர் மசூதி இடிப்புக்கு முன்னோட்டமாக அத்வானி ஒரு மோட்டார் யாத்திரையை நடத்தினார். வழியெங்கும் வன்முறைகள் நிகழ்ந்தன.  ஆனால் மேற்கு வங்கத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு அத்வானியை கைது செய்யவில்லை.  மாறாக பிகாரில் நுழையும்போது லாலு பிரசாத் அவரைக் கைது செய்தார்.  இந்துக்கள் ஓட்டுகளை இழந்துவிடுவோம் என்று  ஜோதிபாசு அமைதியாக இருந்துவிட்டார்.

சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ இரண்டும் முழுமையாக முதலாளித்துவக் கட்சிகளாக அவதாரமெடுத்து பல வருடங்கள் கடந்து விட்டன. சிபிஐ (எம்) கட்சி தன்னை நாடாளுமன்ற கட்சியென்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது.  அதற்கு பின்பாட்டுப்பாடும் சிபிஐ அம்மாவுக்குக் குழலுதும் அமைப்பாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது.

சிபிஐ க்கு சொந்தமான அச்சகத்தில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக நோட்டீஸ் அடிப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டால் தனது உயர்ந்தபட்ச மார்க்சிய மெய்ஞானத்தைக் கொண்டு கொள்கை வேறு வியாபாரம் வேறு என்று புத்தம் புதிய பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்துகிறார் தா.பாண்டியன். தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் சிபிஐ (எம்) கட்சி சென்னை நகரில் கட்டியிருக்கும் 3 மாடி அலுவலகத் திறப்பு விழாவுக்கு தமிழக பாஜக தலைவர்களையும் அழைத்து விருந்தோம்பல் செய்தது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகளைக் கொண்டு வர வேண்டுமென்பதற்கு எதிராக ஊழல் மற்றும் ரத்தக்கறை படிந்து கிடக்கும் அத்தனை முதலாளித்துவக கட்சிகளுடனும் சேர்ந்து ஊளையிட்டு, தங்களின் ஊழல் ஆதரவு நிலைப்பாட்டை இந்தக் காம்ரேடுகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எப்படியாவது நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் தங்கள் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாஜகவின் வெற்றிக்குத் தோள் கொடுத்த, அவர்களுடைய தயவால் பதவி அனுபவித்த பல்வேறு கட்சிகளுடன் இந்தத் தோழர்கள் தேர்தல் உறவு கொள்கின்றனர்.

செல்வி ஜெயலலிதாவைப் பிரதமராக்குவது குறித்துப் பரிசீலிப்போம் என்கிறார் சிபிஐ (எம்) கட்சியின் ராமகிருஷ்ணன்.  இவருக்கு ஒருபடி மேலே சென்று மோடியைவிடத் திறமையானவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என்கிறார் தா.பா (நன்றி ஜூ வி 25/09/13).  இதன்மூலம் 90 வருடங்களாகத் தங்கள் கட்சி செயல்பட்டு வந்தாலும் இந்தியப் பிரதமராகும் தகுதிபடைத்த எவரும் தங்கள் கட்சியில் இல்லை என்பதையே இவர்கள் பிரகடனப் படுத்துகிறார்கள்.

உச்சரிப்பது மார்க்சியம் என்றாலும், நடைமுறையில் காவி நிறத்துக்கும் சிவப்பு நிறத்துக்கும் இணைப்புப் பாலமிடும் சமரசப் பணியையே இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் இன்னும் பல நகைச்சுவை காட்சிகளை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

0

வளர்ச்சியா வீழ்ச்சியா?

bajrandal_AFP380இந்தியா சுதந்தரம் பெற்ற நாள் தொடங்கி இதுவரை எந்தக் கட்சியும் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவித்து வாக்குகள் சேகரித்ததில்லை. ஒரு ஜனநாயகத்தில் இதுதான் பொதுவான நடைமுறை. தங்கள் பிரதம மந்திரி யார் என்பதை வாக்களிக்கும் மக்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். அதுதான் சரியான முறையும்கூட.

அதனாலேயே காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் அறிவித்து தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. இப்போதும் அதைத்தான் செய்திருக்கிறது.

ஆனால் பாஜக அந்த முறையை மாற்றி ஒரு சர்வாதிகார தேசத்தில் நடப்பது போன்று பிரதமர் வேட்பாளாரை முன்னிறுத்தி வாக்கு கேட்டு வருகிறது. மக்கள்மீது அக்கறையில்லாத, மக்களாட்சியின்மீது அக்கறையில்லாத ஒரு கட்சியால்தான் இப்படிச் செய்யமுடியும்.

இதுவரை பதவி வகித்த எந்தப் பிரதமர் மீதும் கலவரங்களுக்குத் துணை போனதற்கான வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மத, இன உணர்வுகளை எந்தவொரு பிரதமரும் இதுவரை தூண்டிவிட்டதில்லை. ஆனால் பாஜகவின் பிரதம மந்திரி வேட்பாளரின் களமான குஜராத்தில் மத மோதல்கள் ஏற்பட்டு, அப்பாவி இந்துக்களும் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மோடியின் நிர்வாகம் செயலற்று அல்லது செயல்பட மறுத்து அமைதி காத்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை பாஜக தனது வேட்பாளராக எதற்கு முன்னிறுத்தவேண்டும்?

தனது கட்சியின் கொள்கைகளை முன்னிறுத்தி வாக்கு கேட்பதற்குப் பதில் தனியொரு நபரை வைத்து வாக்கு வேட்டை நடத்துகிறது பாஜக.

மோடி தன்னையே கட்சியாக கருதி நடந்துகொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது. நாங்கள் என்றுகூட அவர் சொல்வதில்லை, நான் என்றே முழங்குகிறார்.  இப்படிப்பட்ட ஒருவரால் எப்படி வேற்றுமையை ஒன்றுபடுத்தி தேசத்தை ஆளமுடியும்?

மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, கடந்த 15 வருடங்களாகக் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் தனது கூட்டணியை முறித்துக்கொண்டது.

வெளிப்படையாக பாசிஸத்தைக் கடைபிடிக்கும் மகாராஷ்ராவின் நவ் நிர்மான் சேனாவுடன் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. மத உணர்வைத் தூண்டிவிடும் சிவ சேனாவுடனும் கைகோர்த்துள்ளது. இந்த மதவாதக் கூட்டணியையா நாம் ஆட்சியில் அமர்த்தவேண்டும்?

பாஜக தலைமையிலான இத்தகைய கூட்டணி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அல்ல, வீழ்ச்சிப் பாதையில்தான் அழைத்துச் செல்லும். அப்படியொரு நிலைமை வராமல் தடுக்கவேண்டியது நம் கடமை.

0

புரிந்துகொள்ள முடியாத நபர்

modiஅறுபதுகளின் தொடக்கத்தில் சுதந்தர இந்தியாவின் முதல் ஆன்மிகச் சாமியார் என்று அழைக்கப்பட்ட பாண்டுரங் சாஸ்திரி அதவாலே என்பவரின் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்டு வந்திருக்கிறார் மோடி. அவர் உரையாற்றும் தன்மை தன்னை அதிகம் கவர்ந்ததாக மோடி குறிப்பிடுகிறார். தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபோது இவருக்கு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.

தன் மறைவுக்கு முன்னர் அதவாலே தன் வளர்ப்பு மகளான ஜெயஸ்ரீ அதவாலே என்பவரைத் தனது இயக்கத்தின் (ஸ்வத்யாய் இயக்கம் மற்றும் பரிவார்) ஆன்மிக வாரிசாக நியமித்தார். ஜூன் 2006ல் அகமதாபாத்தில் பங்கஞ் திரிவேதி என்னும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கும் ஜெயஸ்ரீ இயக்கத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. கொல்லப்படுவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் மோடியை திரிவேதி தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஜெயஸ்ரீ பரிவார நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நடைபெறுவதாகவும் அவர்களால் தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று தான் அஞ்சுவதாகவும் திரிவேதி மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். சுமார் ஐந்தாண்டு காலத்துக்கு மீடியாவில் இந்த விவகாரம் தொடர்ந்து அலசப்பட்டது.  தனக்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்பதாக மோடி விலகிக்கொண்டார்.

மோடி புரிந்துகொள்ளமுடியாத ஒரு நபராகவே அன்று தொடங்கி இன்றுவரை நீடிக்கிறார் என்கிறார் கிங்ஷுக்நாக். தன் குடும்பத்தினர் உள்பட யாருடனும் அவர் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொண்டதில்லை. அரசியல் களத்தில்கூட மோடிக்கு நெருக்கமானவர்கள் என்று யாரையும் சொல்லமுடிவதில்லை. எந்தப் பெயர்களையும் குறிப்பிடமுடியவில்லை. ஜஷோதாபென் சிமன்லால் என்பவருடனான மோடியின் இளவயது திருமணம் குறித்து பத்திரிகைகளில் சில செய்திகள் வருவதற்கு முன்பு தங்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்று பாஜகவிலேயே பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே எழுதப்பட்டதைத் தவிர புதிதாக எந்த உபயோகமான தகவலும் கிடைக்கப்போவதில்லை என்பதால் நிலஞ்சன் முகோபாத்யாய் இது பற்றி மோடியிடம் எதுவும் கேட்கவில்லை.

மோடியின் முரண்பட்ட பர்சனாலிட்டிக்கு இது ஓர் உதாரணம் என்கிறார் முகோபாத்யாயிடம் உரையாடிய ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர். தான் எப்படிப்பட்டவர் என்பதை மோடி ஒரு போதும் பொதுவெளியில் வெளிக்காட்டியதில்லை. அவர் வெளிக்காட்டும் தோற்றம்தான் நிஜமானது என்று நினைப்பதும் தவறு என்கிறார் இவர். மோடி தன் மனைவியை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, முறைப்படி விவாகரத்தும் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இவர்.

இது மோடியின் பிரச்னை மட்டுமல்ல என்கிறார் முகோபாத்யாய். சங் பரிவாரத்தில் பெண்களுடனான திருமண மற்றும் நட்புரீதியான உறவுமுறை நீண்டகாலமாகவே குழப்பம் மிகுந்ததாக இருந்து வருகிறது என்கிறார் அவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நிறுவிய கே பி ஹெட்கேவாரின் மரணத்துக்குப் பிறகு பல இயக்கத் தலைவர்களின் உறவுமுறைகள் குறித்து மீடியாவில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விவாதங்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மோடியும்கூட மிரட்டலையும் சமரசத்தையும் பயன்படுத்தி தன் திருமணம் குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கச் செய்தார்.  ஆனால் அவருடைய முயற்சிகள் குஜராத்தைத் தாண்டி வெற்றிபெறவில்லை.

தன் திருமணம் குறித்து மட்டுமல்ல பொதுவாகவே தனது கடந்த காலத்தைப் பற்றி எந்தவித செய்திகளும் வெளிவரக்கூடாது என்பதில் மோடி கவனமாக இருந்திருக்கிறார். சிறு வயதில் மோடி ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறார் என்பதைக் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருக்கிறார் ஒரு நிருபர். மோடிக்கு நன்றாக நடிக்க வருகிறது, இளம் வயதிலிருந்தே இயல்பாக அவருக்கு நடிக்க வந்துவிட்டது என்றும் அவர் எழுதிவிட்டதால் மோடி கோபம் அடைந்துவிட்டாராம்.

குஜராத் மாநிலம் உருவாகி இரு ஆண்டுகளில், அதாவது 1962ல் இந்திய சீனப் போர் மூண்டுவிட்டது. துருப்புகள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. 12 வயது மோடி மெஹ்சானாவுக்குத் திரும்பி ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் தன்னார்வப் பணிகளில் இணைந்துகொண்டார். இந்தியப் போர்வீரர்களுக்கு ஆடைகள் வாங்குவதற்காக எல்லோரிடமிருந்தும் நிதி சேகரித்துக்கொண்டிருந்தார்கள். மோடியும் அதில் சேர்ந்துகொண்டார். தேநீரும் தின்பண்டங்களும் கொண்டு சென்று வீரர்களுக்கு விநியோகித்தார்.

சீனப் போர் முடிவடைந்ததும் 1965ல் இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடங்கிவிட்டது. ஒப்பந்தங்களைமீறி ஊடுருவலும் தாக்குதல்களும் தொடர்ந்தன. செப்டெம்பர் 19ம் தேதி அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேதா, அவர் மனைவி இருவரும் குஜராத் பாகிஸ்தான் எல்லையைப் பார்வையிட சென்றபோது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருவரும் இறந்துபோனார்கள்.

இந்தக் காலகட்டம் தன் வாழ்வில் முக்கியமான ஒரு பகுதியாக விளங்கியது என்கிறார் மோடி. நேரு, சாஸ்திரி இருவரும் மரணமடைந்துவிட ஒரு வலுவான தலைவர் நாட்டுக்குத் தேவை என்னும் உணர்வு எங்கும் பரவியிருந்த சமயம் அது. தேசபக்தியுணர்வு தன்னையும் பற்றிக்கொண்டதாக மோடி நினைவுகூர்கிறார். சர்தார் வல்லபபாய் படேல் ஏன் பிரதமராகவில்லை என்று குஜராத்தில் இருந்த பலரையும் போல் மோடியும் அப்போது ஆதங்கப்பட்டிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டது குறித்தும் சங் பரிவார் பணிகள் குறித்தும் மோடி பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார். வகில் சஹாப் என்று அழைக்கப்பட்ட சங் பரிவார் தலைவர் லஷ்மண்ராவ் இனம்தாருடன் மோடிக்குப் பரிச்சயம் ஏற்பட்ட காலமும் இதுவே. அப்போது மோடி ஒரு பால சுவயம்சேவக். வகில் சஹாபின் உரைகள் அவரை மிகவும் கவர்ந்தன. பின்னர் அவர் பெயரில் குஜராத்தில் பள்ளி ஒன்றை அவர் தொடங்கிவைத்தார்.

(தொடரும்)

நான் மோடியை ஆதரிக்கிறேன் (கண்டிஷன்ஸ் அப்ளை)

Narendra-Modiசெவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கி வரும் ஒருவர் ஏதாவது ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டாலோ ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்தாலோ அறிவுஜீவிகளின் உரைகளைக் கேட்டாலோ மதக்கலவரங்கள் பற்றி ஒரே ஒரு முடிவுக்குத்தான் வருவார். அதாவது சுதந்தர இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே மதக்கலவரம் வெடித்துள்ளது. அதிலும் நரேந்திர மோடியே அந்தக் கலவரத்துக்கு முழுக்காரணம்!

இதுதான் எங்கு திரும்பினாலும் கேட்கும் கோஷமாக இருக்கிறது. ஆனால், பகுத்தறிந்து பார்க்கும் ஒருவரின் மனசாட்சியோ, உண்மை அது அல்ல என்பதைச் சொல்லும். மத்தியில் இனி கூட்டணி அரசே சாத்தியம் என்று ஆகிவிட்ட நிலையில் பிஜேபி ஆட்சியைப் பிடிக்கப் பெரும் தடையாக இன்றும் இருந்துவருவது மோடிபற்றி ஊடகங்களும் அறிவுஜீவிவர்க்கமும் உருவாக்கியிருக்கும் அந்தப் பிழையான கோஷமே.

இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. பிஜேபி தரப்பில் மோடியே பிரதமராக நிறுத்தப்படப்போகிறார். மோடியின் சாதனைகள் பற்றி எவ்வளவுதான் பிஜேபி முன்வைத்தாலும் குஜராத் கலவரங்களே பிற கட்சிகளின் பிரதான ஆயுதமாக இருக்கப்போகிறது. இந்தநிலையில் சுதந்தர இந்தியாவில் இதுவரை நடந்திருக்கும் கலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்பது மிகவும் அவசியம்.

1967க்குப் பிறகு 47 இடங்களில் 58 மிகப் பெரிய வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியில் 10, கிழக்குப் பகுதியில் 12, மேற்குப் பகுதியில் 16, வடக்கில் 20. 1964க்குப் பிறகு அகமதாபாத்தில் ஐந்து மிகப் பெரிய கவலரங்கள் வெடித்துள்ளன. ஹைதராபாத்தில் 4. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களிலே 1990களில்தான் மிக அதிக வன்முறைச் சம்பவங்கள் அதாவது 23 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 1970களில் ஏழு, 1980களில் 14, 2000 களில்13. இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 12,828 (தெற்கில் 597, மேற்கில் 3426, கிழக்கில் 3581, வடக்கில் 5224).

ஐந்து நபர்களுக்குக் குறைவாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வகுப்புவாதம் சார்ந்த குண்டுவெடிப்புகளும் இதில் சேர்க்கப்படவில்லை.

100க்கு அதிகமாவர்கள் இறந்த வன்முறைச் சம்பவங்களில் எந்தெந்த கட்சி ஆட்சியில் இருந்ததிருக்கிறது. யார் முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்பதை முதலில் பார்ப்போம்.

1967க்குப் பிறகு நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அப்போது ஆட்சியில் இருந்த கட்சியும்.

எண் வருடம் இடம் உயிரிழப்பு ஆண்ட கட்சி முதலமைச்சர்
1 1967 ஹாதியா ராஞ்சி 183 ஜன கிராந்தி தளம் எம்.பி.சின்ஹா
2 1969 அகமதாபாத் 512 காங்கிரஸ் ஹிதேந்திர கே தேசாய்
3 1970 ஜல் காவ் 100 காங்கிரஸ் வசந்தராவ் நாயக்
4 1979 ஜம்ஷேட்பூர் 120 ஜனதா கட்சி கர்பூரி தாகூர்
5 1980 மொராதாபாத் 1500 காங்கிரஸ் வி.பி.சிங்.
6 1983 நெலே, அஸ்ஸாம் 1819 ஜனாதிபதி ஆட்சி  
7 1984 பிவந்தி 146 காங்கிரஸ் வசந்ததா பட்டில்
8 1984 டில்லி 2733 காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்) -
9 1985 அகமதாபாத் 300 காங்கிரஸ் எம்.எஸ்.சோலன்கி
10 1989 பகல்பூர் 1161 காங்கிரஸ் எஸ்.என்.சிங்
11 1990 டில்லி 100 யூனியன் பிரதேசம்  
12 1990 ஹைதராபாத் 365 காங்கிரஸ் சென்னா ரெட்டி
13 1990 அலிகர் 150 ஜனதாதளம் முலாயம் சிங்
14 1992 சூரத் 152 காங் + ஜனதா தளம் சிமன்பாய் படேல்
15 1992 கான்பூர் 254 ஜனாதிபதி ஆட்சி  
16 1992 போபால் 143 ஜனாதிபதி ஆட்சி  
17 1993 மும்பை 872 காங்கிரஸ் சுதாகர் ராவ் நாயக்
18 2002 குஜராத் 1267 பி.ஜே.பி. நரேந்திர மோடி

மேலே இடம்பெற்றிருக்கும் 18 கலவரங்களில் 10 காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது நடந்திருக்கின்றன. மூன்று ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோதும் நான்கு பிற கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நடந்திருக்கின்றன. பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது ஒன்று.

இன்னொரு முக்கியமான புள்ளிவிவரம் நேரு குடும்பத்தின் ஆட்சி காலம் பற்றியது. 1950-1964-ல் நேரு இறப்பதுவரையிலான காலகட்டத்தில் சிறிதும் பெரிதுமாக 243 கலவரங்கள், 16 மாநிலங்களில் நடைபெற்றுள்ளன. இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 15 மாநிலங்களில் 337 கலவரங்கள் நடைபெற்றுள்ளன.

ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில் 16 மாநிலங்களில் 291 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும் 1984-ல் தன் அம்மாவின் படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு இணையாக இந்தியாவில் நடந்த எந்தவொரு வன்முறையையும் சொல்ல முடியாது. ஏனென்றால் அது இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறை அல்ல. ஒரு கட்சியின் ரவுடிகள் ஒரு சமூகத்தின் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் அது.

1950லிருந்து 1995 வரை 1194 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 871 அதாவது 72.95 சதவிகிதம் காங்கிரஸின் காலத்தில் நடந்தவை.

இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 1995 வரை குஜராத்தில் மட்டும் 245 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத்தின் மத மோதல் வரலாறு இது. மோடியின் ஆட்சி காலத்தில் 2002க்குப் பிறகான பத்து வருடங்களில் எந்த பெரிய மத மோதலும் நடந்திருக்கவும் இல்லை. இத்தனைக்கும் மோடி பெரும் வில்லனாகச் சித்திரிக்கப்படும் அந்த  வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் 30%த்தினர் இந்துக்கள்.

இவையெல்லாம் மோடி செய்தது சரிதான் என்று சொல்வதற்காகப் பட்டியலிடப்பட்டவை அல்ல. உண்மையில் மோடியும் பி.ஜே.பி.யினரும் எந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்களோ அதைவிட பல மடங்கு கூடுதலாக காங்கிரஸும் அதன் தலைவர்களும் விமர்சிக்கப்படவேண்டும். ஆனால், ஊடகங்களையும் அறிவுஜீவிகளையும் பொறுத்தவரை மோடி மட்டுமே இந்தியாவின் ஒரே வில்லன்.

இந்தியாவில் நடைபெற்ற கலவரங்களில் சுதந்தரத்துக்கு முந்தைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போதும் இந்துக்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் காந்தியடிகள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக முயற்சிகள் எடுத்த நேரம் அது. 1920-1940கள் வரையிலான காலகட்டத்தில் நடந்த கலவரங்கள் பற்றி அம்பேத்கர் தனது தாட்ஸ் ஆன் பாகிஸ்தான் நூலில் சில புள்ளிவிவரங்கள் சொல்லியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து ஒரு தேசமாக வாழ முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் என்னும் அளவுக்கு கலவரங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன.

இந்தியாவில் மதக் கலவரங்கள் ஏற்படுவது சகஜம்தான். இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது என்ற கோணத்தில் இவற்றைச் சொல்லவில்லை. ஆனால், 2002க்கு முன்பாகவும் மத மோதல்கள் நடந்துள்ளன. அதன் பிறகும் நடந்துவருகின்றன என்பதை ஒருவர் கவனத்தில் கொள்ளத்தானேவேண்டும்.

மதக் கலவரங்கள் எதனால், எப்படியெல்லாம் நடக்கின்றன?

இரு சமூகங்களுக்கு இடையே இருக்கும் அதிருப்தியும் கோபமும் மெள்ள மெள்ள வெடி குண்டு ஒன்றில் கெட்டிப்படுத்தப்படும் வெடி மருந்துபோல் இறுகிக்கொண்டே வரும். அரசாங்கம் உரிய தீர்வுகளைத் தராமல் இருக்கும்போது ஏதாவது அரசியல் கட்சி சிறு தீப்பொறியைப் பற்ற வைத்தால் போதும் வன்முறை வெடித்துக் கிளம்பும். பொதுவாக இரண்டு பக்கத்து அடிப்படைவாத சக்திகள்தான் இந்த கலவரத்தில் ஈடுபடும். இரு தரப்பிலும் இருக்கும் பெரும்பான்மை மக்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள்தான் பெரும் அழிவுக்கு ஆளாகவும் செய்வார்கள்.

சமூகத் தளத்தில் : தனிமைபடுத்தப்பட்டது போன்ற உணர்வு. பொதுவாக, மைய நீரோட்ட நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் இருந்து விலகி நிற்கும் சிறுபான்மையினரிடம் இந்த தனிமைப்படுத்தல் நிகழும்.

பொருளாதாரம் : கைவிடப்பட்டதுபோன்ற உணர்வு. மோசமான கல்வி, வேலையின்மை போன்றவை பின்தங்க வைக்கும். நுகர்வுகலாசாரத்தின் கண்ணைக் கவரும் ஆடம்பரங்கள் பெரும் இழப்பின் வலியை ஏற்படுத்தும்.

அரசியல் : வோட்டு வங்கியைக் குறிவைத்துச் செயல்படும் அரசியல்வாதிகள் தமது சமூகம் பெரும் இழப்பை சந்தித்துவருவதாக தூண்டிவிடுவார்கள்.

நிர்வாகம் : காவல்துறை, குடிமை அரசு யந்திரம் போன்றவற்றால் குறிவைத்துத் தாக்கப்படுவதாக உணர்தல். தமது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கருதுதல்.

மதம் : ‘அபாயம்’ நிறைந்த பகுதியில் நடக்கும் சிறு ஊர்வலம், சத்தமாகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை, புனித இடங்கள் இழிவுபடுத்தப்படுதல் என சிறு நெருப்பு போதும்.

வர்த்தகம் : பாரம்பரியமாக ஒரு சமூகம் வெற்றிகரமாக இயங்கிவரும் துறையில் இன்னொரு சமூகம் நுழைவதால் ஏற்படும் போட்டி, பொறாமை.

ஆவேசப் பேச்சுகள் : எதிர் தரப்பைச் சீண்டும் வகையிலான பேச்சுகள், ஒரு பிரிவுக்கு மட்டும் அதிக சலுகைகள் தருவதாக தூண்டிவிடுதல்.

வகுப்பு மோதல்களைப் போன்றதுதான் வெடி குண்டு சம்பவங்களும். ஏதாவது ஒரு பிரிவின் அடிப்படைவாத சக்திகள் தமது ஆத்திரத்தை அப்பாவி மக்களைப் பொது இடங்களில் வெடிகுண்டு வைத்துக் கொல்வதன் மூலம் வெளிப்படுத்துவதுண்டு. இதில் குற்றம் இழைத்தவர்களை கலவரங்களில் ஈடுபடுபவர்களைப்போல் எளிதில் அடையாளம் காண முடியாது.  அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து வன்கொடுமையை நிகழ்த்திவிட்டுத் தப்பித்துப் போகிறவர்களாகவும் இருக்கக்கூடும். இதனால் எங்கு வெடி குண்டு வெடித்தாலும் பகை தேசத்தின் மீது பழியைப் போடுவது வாடிக்கை. ஆனால், எந்தவொரு வெடி குண்டு வெடிப்பும் உள்ளூர் ஆதரவு இல்லாமல் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

1993 மும்பை வெடி குண்டு வெடிப்பில் இருந்து இந்தியாவில் வெடி குண்டு தாக்குதல்களின் அணிவரிசை ஆரம்பித்தன. 1993-ல் இருந்து 2013 மார்ச் மாதம் வரை நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 1446 இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4333 பேர் காயமடைந்திருக்கிறார்கள். காஷ்மீரிலும் அஸாமிலும் நடந்துவரும் வெடிகுண்டு தாக்குதல்களை இதில் சேர்க்கவில்லை.

எங்கெங்கு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அப்போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்திருக்கிறது?

எண்    வருடம்      இடம்                     உயிரிழப்பு      ஆண்ட கட்சி

1       1993          மும்பை                             257     காங்கிரஸ்

2       2003         மும்பை கேட்வே         52      காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

3       2006         மும்பை ரயில்             209    காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

4       2008         26/11                                   186     காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

5       2002         காந்தி நகர்                           25      பி.ஜே.பி.

6       2005         டெல்லி, பரன்ஜி               63      காங்கிரஸ்

7       2006         வாரணாசி                           28      சமாஜ்வாதி கட்சி

8       2006         மாலேகாவ்                          28      காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

9       2007         சம்ஜோதா எக்ஸ்பிரஸ்   66      காங்கிரஸ்

10      2007         பானிப்பட்                                66      காங்கிரஸ்

11      2007         ஹைதராபாத்                        42      காங்கிரஸ்

12      2008         ஜெய்பூர்                                     63      பி.ஜே.பி.

13      2008         அகமதாபாத்                           50      பி.ஜே.பி.

14      2008         குவஹாத்தி                            84      காங்கிரஸ்

மேலே கூறப்பட்டுள்ள 14 வெடி குண்டு தாக்குதல்களில் 10 காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்துள்ளன.

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பி.ராமன் 2009-ல் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும். 1981க்குப் பிறகு நான்கு மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. நான்கிலுமே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். 1991க்குப் பிறகு அயல் நாட்டினர் மூன்று முறை குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு ஜம்மு காஷ்மீரில். ஒன்று மும்பையில். மூன்று சம்பவங்களின்போதும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான்.  1971க்குப் பிறகு ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின்பேரில் ஏழு விமானக் கடத்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஆறு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது. ஒன்று பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது. ஏர் இந்திய விமானம் ஒரு முறை வானில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு 250க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸே.

வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 1446 பேர்களில் 52% பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முதல்வர்களோ தலைவர்களோ மும்பையை வெடி குண்டுதாக்குதல்களில் இருந்து காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள். இந்த தாக்குதல்களுக்கு அவர்களைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டிருக்கிறார்கள்?

வன்முறைக் கலவரங்களைத் தடுக்கத்தான் முடியவில்லை. அது நடந்த பிறகாவது நீதித்துறையும் காவல்துறையும் சரியாக நடந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த விஷயத்திலும் காங்கிரஸின் ஆட்சிக் காலமே பிஜேபியைவிட பல மடங்கு படு மோசமாக இருந்துவருகிறது.

இடதுசாரி மற்றும் ”நடுநிலை’ அறிவுஜீவிகள் இந்த விஷயங்களை ஒருபோதும் கவனத்தில் கொண்டதே கிடையாது. பி.ஜே.பி. குறிப்பாக நரேந்திர மோடி மட்டுமே அவர்களுடைய செல்ல இலக்காக இருந்துவருகிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்து அடிப்படைவாத சக்திகள் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்ற அணுகுமுறையே அவர்களிடம் இருக்கிறது. மோடியைப் பார்க்கும்போது பூதக்கண்ணாடியை அணிந்துகொள்பவர்கள், காங்கிரஸைப் பார்க்கும்போது கண்களையே கழட்டிவைத்துவிடுகிறார்கள்.

இந்த உலகில் எல்லா நாடுகளிலும் மதக் கலவரங்களும் வெடிகுண்டு விபத்துகளும் நடந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உண்டு. உலகின் பிற பகுதிகளில் எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்த அடிப்படைவாத சக்திகளே அதிக தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கும். இந்தியாவில் மட்டுமே சிறுபான்மை மதம் அதிக தாக்குதல்களை நிகழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், பெரும்பான்மை மதத்தின் அடிப்படைவாத சக்திகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெரும்பான்மை மதமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கட்டம் கட்டப்பட்டுவருகிறது. இது இரட்டை அநியாயம்.

மேலே சொல்லப்பட்டிருப்பவை நவீன கால உதாரணங்கள் மட்டுமே. சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டால் இந்த சித்திரத்தின் முழு பரிணாமம் புரியவரும். ஆனால், ஊடகங்களும் அறீவுஜீவி வர்க்கமும் ஒருதலைப்பட்சமான நிலைபாட்டையே எடுத்துவருகின்றன.

பிரிவினை காலகட்டத்தில்கூட இந்தியாவும் (இந்து, சீக்கியர்களும்) பாகிஸ்தானுக்கு (முஸ்லீம்களுக்கு) இணையாக வன்முறையில் ஈடுபட்டது என்று சொல்வதில்தான் அவர்களுக்கு மிகுந்த உற்சாகம். பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லீம்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட பத்து சதவிகித இந்துக்கள் அனைவருமே தாக்கப்பட்டனர். இந்தியாவிலோ பஞ்சாபை ஒட்டிய எல்லைப் பகுதி நீங்கலாக பிற 20க்கு மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 85% இந்துக்களுக்கு மத்தியில் இருந்த பத்து சதவிகித முஸ்லீம்கள் மேல் ஒரு கீறல்கூட விழுந்திருக்கவில்லை. இந்த உண்மை ஒரு எளிய விஷயத்தை நம் முன் அழுத்தமாகச் சொல்கிறது: எல்லைப் பகுதியில் நடந்த எதிர் தாக்குதல்கூட மத துவேஷத்தால் நடந்திருக்கவில்லை. சொத்து சுகங்களையும் பூர்விக மண்ணையும் விட்டு அநாதையாகத் துரத்தப்பட்ட சோகமும் ஆத்திரமுமே இந்தியத் தரப்பு தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்து மத அடிப்படைவாதத்துக்கு இந்துப் பெரும்பான்மையின் ஆதரவு துளிகூடக் கிடையாது என்பதை உணர்த்தும் எளிய உண்மை இது. இதை நீங்கள் எந்த அறிவுஜீவியின் மயிர்பிளக்கும் வாதத்திலும் கேட்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் அஹிம்சை வழியிலான சுதந்தரப் போராட்டத்தை எள்ளி நகையாட இந்த பிரிவினைக் கால வன்முறையை முன்வைக்கும் அபத்தத்தைக்கூட நீங்கள் கேட்க முடியும்.

இந்த அரசியல் சரி (?) தன்மையின் இன்னொரு வடிவம்தான் மோடிமட்டுமே மத கலவரத்தின் அடையாளமாகச் சித்திரிக்கப்படுவதும். இதையெல்லாம் எதற்காக அவர்கள் செய்கிறார்கள். ஒருவேளை உலக வரலாற்றில் மத ரீதியான வெறுப்பு மிக மிகக் குறைவாக இருந்துவந்திருக்கும் இந்தியாவில், அனைத்து மத அகதிகளுக்கும் அடைக்கலம் தந்த இந்தியாவில், உலகில் எந்த நாட்டையும் மத ரீதியாக வன்முறைமூலமோ ஆசை காட்டியோ அடக்கி ஒடுக்க ஒருபோதும் முன்வந்திருக்காத பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியாவில் இப்படி ஒரு மதம் சார்ந்த மாநில அரசு அமைந்தது குறித்த வேதனை அவர்களை ஆழ்மனத்தில் இருந்து வாட்டுகிறதா? அதனால்தான் வள்ளல் பரம்பரையில் பிறந்த கருமியைக் கரித்துக் கொட்டுவதுபோல் மோடியை சுற்றி வளைத்துத் தாக்குகிறார்களா?

கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் சரித்திரத்தின் பக்கங்களில் பெருக்கெடுத்தோடச் செய்திருக்கும் ரத்த ஆறுகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கும். அதனால்தான் அது குறித்து பெரிதும் எதுவும் சொல்வதில்லையா..? ஓநாய் 10 பேரைக் கடித்துக் கொன்றது என்று சொன்னால் அதில் எந்த அதிர்ச்சியும் ஒருவர் அடையப்போவதில்லை. பசு ஒருவரைத் தன் கொம்புகளால் தூக்கி எறிந்தது என்றால் அது அதிர்ச்சி தரும் விஷயம் மட்டுமல்ல. அபாயமானதும்தானே. அந்தவகையில் அவர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ள முடிந்த ஒன்றுதான். மோடி இப்படி நடந்துகொண்டிருக்கக்கூடாது. அதுவும் எந்த ஆன்மிகப் பாரம்பரியம் உலகுக்கு எல்லா நதிகளும் கடலை நோக்கியே என்ற பெரும் உண்மையை உரத்துச் சொன்னதோ அந்த வழியில் பிறந்த பிறகும் மத அடையாளத்தை மையமாக வைத்து வெறுப்பை வெளிப்படுத்தியது மிக மிகத் தவறான செயலே.

உயிரிழப்பு என்பது எப்போதுமே வேதனைக்குரிய விஷயமே. அது இந்துவாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும். எல்லா அடிப்படைவாத சக்திகளும் விமர்சிக்கப்படவேண்டியவையே. ஆனால், கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் தப்பித்துப் போகவிட்டுவிட்டு ஜேப்படி திருடனை மரத்தில் கட்டிவைத்து அடிப்பது என்பது நல்ல காவலனுக்கு அழகல்ல. உண்மையைப் பேசுவது பெரும்பான்மை அடிப்படைவாத சக்திகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற பயத்தினால் அறிவுஜீவிகள் இப்படியான விசித்திரமான நிலைப்பாடை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது, மிகவும் தவறான, வீணான பயமே.

அந்தவகையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அறீவுஜீவி வர்க்கமும் குஜராத் பற்றியும் மோடி பற்றியும் பேசிவருவதை ஒருவர் பொருட்படுத்தத் தேவையே இல்லை. அதில் உண்மையும் இல்லை. நேர்மையும் இல்லை. சமூக அக்கறையும் இல்லை. இருப்பதெல்லாம் இந்துத்துவ துவேஷம் மட்டுமே.

ஆனால், இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னொருவர் செய்யும் தவறு நம் தவறை ஒருபோதும் நியாயப்படுத்திவிடமுடியாது. மோடி மட்டுமே தவறு செய்தார் என்று சொல்வது எப்படித் தவறாகுமோ அதுபோலவேதான் மோடி தவறே செய்யவில்லை என்று சொல்வதும். இரண்டு எதிர்நிலைகளுமே மிகவும் அபாயகரமானவையே.

குஜராத்தில் இந்து-முஸ்லீம் கலவரங்கள் நீண்டகாலமாகவே நடந்துவருவது உண்மைதான். என்றாலும் அந்த மண்ணுக்கு இன்னொரு மகத்துவமும் உண்டு. அது காந்தி பிறந்த மண். உலகுக்கு அஹிம்சையையும் மத நல்லிணக்கத்தையும் போதித்தவர் பிறந்த மண். பிரிவினைக்கால கலவரத்தில் தன் மகன் கொல்லப்பட்டதற்கு என்ன பதில் என்று ஆவேசத்துடன் கேட்ட இந்துவைப் பார்த்து, இதே போல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவா… அதுவும் அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீமாகவே வளர்த்து வா என்று சொன்னவர் பிறந்த மண். அங்கு இப்படியான வன்முறை நடந்தது என்பது ஜீரணிக்கவே முடியாத விஷயமே.

கோத்ராவில் கர சேவகர்களின் படுகொலை நடந்தபோது காந்தி இருந்திருந்தால் இப்படி நரகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்க முடியுமா? சில அடிப்படைவாத சக்திகள் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த சமூகத்தைப் பழிவாங்கும் வெறிச்செயலை எப்படி ஒரு உண்மையான இந்துவால் பொறுத்துக்கொள்ள முடியும்? இந்துத்துவவாதிகளுக்குப் புரியும் மொழியில் கேட்பதானால், மோடியின் அரசு முஸ்லீம்களையா கொன்றது? சக இந்தியர்களை அல்லவா கொன்று குவித்திருக்கிறது. இந்தியர்களைக் கொன்று குவித்துப் பெறும் வெற்றியை உண்மையான இந்துவோ இந்தியனோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

காங்கிரஸ் அரசு இந்தியாவின் அழிவுக்காக அயராது பாடுபடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தலைவி எவ்வழி… தொண்டர்கள் அவ்வழி. ஆனால், வலுவான பாரதத்தை உருவாக்குவதாகச் சொல்லும் ஒருவர் ஒரு சமூகத்தைத் தனிமைப்படுத்தித் தாக்குவது எந்தவகையிலும் தேச நலன் சார்ந்த செயலாக இருக்கமுடியாதே.

அமெரிக்காவின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்க முடியும் என்றாலும் ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று போராடுவார்கள். அதில் எவ்வளவு ரத்த ஆறு பெருக்கெடுத்தாலும் பரவாயில்லை… ஆனால், தங்கள் பூமியில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதனால்தான் 9/11 தாக்குதலில் ஈடுபட்டது முஸ்லீம்கள்தான் என்பது தெரிந்த பிறகும் கண்ணில் தென்பட்ட முஸ்லீம்களை எல்லாம் வெட்டிக் குவிக்கவில்லை. தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு, ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் குறிவைத்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களுடனான நட்பை முறித்துக் கொள்ளவில்லை. தொலைதூர எதிரிகளைத் தங்கள் இலக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அம்பைத் தாக்கவில்லை. அம்பை எய்த கரங்களை வெட்டி எறிந்தார்கள்.

அவர்கள் ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் செய்துவரும் அராஜகத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஒரு அமெரிக்கராக இருந்து பார்த்தால் புஷ்ஷும் ஒபாமாவும் அவர்களுடைய ரட்சகரே. மோடியோ இந்துத்துவம் பேசி இந்தியர்களைக் கொல்லும் தவறை அல்லவா செய்துவிட்டிருக்கிறார். அமெரிக்க ரட்சகர் போல் வெண்ணிற அங்கிக்குள் குறுவாளை மறைத்து வைத்திருக்கும் தந்திரம் நமக்குத் தேவை இல்லை. ஆனால், சொந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்ற விஷயத்தை மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

கோத்ராவில் கரசேவகர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி தெரிய வந்ததும் என்ன செய்திருக்கவேண்டும்? உண்மையில் இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்க விரும்பிய சதிகாரர்கள் செய்த நாசகாரச் செயல் அது. ஒரு திட்டமிட்ட பொறி. புத்தியுள்ள ஒருவர் அதில் விழாமல் தப்பிக்கத்தானே பார்த்திருக்கவேண்டும். இந்து முஸ்லீம் இடைவெளியை பெரிதாக்கச் செய்யப்பட்ட அந்த செயலைக் கொண்டே இந்து – முஸ்லீம் ஒற்றுமையை அல்லவா பலப்படுத்தி இருக்கவேண்டும். கொல்லப்பட்ட கரசேவகர்களின் அஸ்தியை தேசம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்சென்று 56 சமஸ்தானங்களிலும் ஒரு பிரமாண்ட இராமர் கோவிலை இஸ்லாமிய சமூகத்தின் ஆதரவுடன் கட்டி எழுப்பி இருக்கவேண்டும். சில அடிப்படைவாத சக்திகள் நீங்கலாக, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இதற்கு நிச்சயம் கல்லெடுத்துக் கொடுத்திருக்கும். அப்துல்கலாம் போன்ற எத்தனையோ மத நல்லிணக்க சிந்தனைகொண்ட முஸ்லீம் தலைவர்களை முன்வைத்து அதை எளிதில் நிகழ்த்தியிருக்க முடியும்.

அப்படியாக பழி வாங்குதலின், வெறுப்பின் அடையாளமாக இன்று இருக்கும் கோத்ராவை தியாகத்தின் சின்னமாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆக்கியிருக்கவேண்டும். மனதில் இருக்கவேண்டிய மத நல்லிணக்க தெய்வத்தை விரட்டி அடித்துவிட்டு வெளியில் கருங்கல்லால் ஆன கோவிலைக் கட்டிவைத்தால் அது கோவிலாக இருக்காது. மிகப் பெரிய சமாதியாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு இஸ்லமியர்களைக் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துவதுபோல் அன்றே ஆத்மார்த்தமாக நட்பின் கரங்களை நீட்டிருக்கவேண்டும். அன்றும் மோடி ஒரு கரத்தை நீட்டினார். ஆனால் அந்தக் கரத்தில் ரத்தம் தோய்ந்த கொலை வாளல்லவா மின்னியது. காந்தியின் மண்ணில் பிறந்த அவரால் எப்படி அதைச் செய்ய முடிந்தது. காந்திய வழியில் நின்று மது விலக்கைப் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமல்படுத்திவந்திருக்கும் மோடி காந்தியிடமிருந்து மத நல்லிணக்கத்தையும் அல்லவா கற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

இப்போதும் எதுவும் கெட்டுப் போகவில்லை. மோடிக்கு இந்தியாவை வழி நடத்தும் தலைமைப் பதவி வரவிருக்கிறது. பதவி உயர்வுகளுடன் சில பொறுப்புகளும் சேர்ந்து வரும். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வளர்ச்சியே தன்னுடைய இலக்கு என்பதை மோடி வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். கோத்ரா கலவரங்கள் தன் ஆட்சியின் முதல் கலவரம் மட்டுமல்ல… அதுவே கடைசி கலவரமும்கூட என்ற வாக்குறுதியைத் தரவேண்டும். நடந்த துர்நிகழ்வுகளுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.

அறிவிஜீவிகளுக்கும் ஊடகங்களுக்கும் பிஜேபியும் மோடியும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ஓர் எளிய இந்தியனுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். வேறென்ன… அவர்களின் அனுமதியைக் கேட்டுத்தானே வீதி வீதியாக வலம் வரப்போகிறார்கள்.

(ஆழம் ஜூன் 2013 இதழில் வெளியான, ‘மோடி மட்டும்தான் வில்லனா?’ கட்டுரையின் முழுமையான வடிவம்).

பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 1)

ஹிந்துக்களின் மிகப் பெரிய காவலன் என்று அவர்கள் சொல்வார்கள். இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் என்று இவர்கள் சொல்வார்கள். எது உண்மை? நடுநிலையுடன் ஆராய்கிறது இந்நூல்” என்று புத்தகத்தின் அட்டையிலேயே கொட்டை எழுத்தில் பிரகடனம் செய்துவிட்டுத்தான் நூல் துவங்குகிறது. அதாவது இந்தியாவின் மிக முக்கியமான சமூக இயக்கமான ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒருபக்கச் சார்பின்மையுடன் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்பது இது சொல்லவரும் கருத்து.

ஆனால், நூலின் துவக்கத்திலேயே நூலாசிரியர் பா.ராகவனின் நடுநிலை தெரியத் துவங்கிவிடுகிறது. “ஆதியிலே அந்த ஊருக்கு லவபுரி என்று பெயர்… அதற்கு ஆதாரம் தேடத் தொடங்கினால் இன்னோர் அயோத்தி அபாயம் ஏற்படும்…” – இதுதான் லாகூர் குறித்த ஆசிரியரின் அறிமுகம். (பக். 9) அதாவது நடுநிலை என்ற பெயரில், வரப்போகும் அத்தியாயங்களில் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் இங்கேயே கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.

உண்மையில் நடுநிலை என்பது என்ன? எந்த ஒரு பொருளைப் பற்றி எழுதப் புகுகிறோமோ, அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் – சாதகமானவை, பாதகமானவை உள்பட- கிரகித்து, நெஞ்சுக்கு நீதியுடன், ஆய்வுத் தெளிவுடன் எழுதப்பட்டால்தான் அது நடுநிலைப் பார்வை. அதில், லாகூர் குறித்த அறிமுகம் போன்ற பகடிகள் இருக்காது. இந்த நூலில் அத்தகைய பல பகடிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல வந்து செல்கின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம்…

காந்தி கொலையும் ஆர்.எஸ்.எஸ்.சும்:

 அத்தியாயம்: 4, பக்: 40. காந்திகொலையானபோது ஆர்.எஸ்.எஸ். ஒன்று செய்திருக்கலாம். கோட்சேவைக் கண்டித்து ஓர் அறிக்கை. போதும். செய்யவில்லை என்று கூறுகிறார் ராகவன். இதற்கு என்ன அடிப்படை? எந்த அடிப்படையுமே இல்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரும் காந்தி படுகொலையின்போது தலைவராக இருந்தவருமான குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் பத்திரிகைகளுக்கு அசோசியேட் பிரஸ் மூலமாக அனுப்பிய செய்தியறிக்கையில் கோட்சேவின் செயலை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அதற்கு முன்னதாக பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் படேல், காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு அனுப்பிய கடிதங்களில் காந்தியின் மறைவுக்கு கவலை தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. கோல்வல்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் அடங்கிய ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம் 12 பாகங்களாக *1 தமிழில் வெளியாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்தக் களஞ்சியத்தில், 10வது தொகுதியில் முதலிலுள்ள நூறு பக்கங்கள், மகாத்மா காந்தி கொலையை அடுத்து அரசுக்கும் கோல்வல்கருக்கும் நடந்த கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அம்சங்களே உள்ளன.

குறிப்பாக பக்கம்: 6 ,7 , 8 -ல் இக்கடிதங்கள் உள்ளன. பக்கம்: 9 , 10-ல் அசோசியேட் பிரஸ்சுக்கு அனுப்பிய அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோல்வல்கர் கூறுகிறார்: ”…அந்தச் செயலைச் செய்த தீயவன் நம் நாட்டவனாகவும் ஹிந்துவாகவும் இருப்பதால் அதன் தன்மை மேலும் கொடியதாக இருக்கிறது…. இதனால் உண்மையுள்ள நம் நாட்டவன் ஒவ்வொருவனும் வெட்கமுறுகிறான்…

1948 , பிப். 1 தேதியிட்ட இந்த அறிக்கை பல பத்திரிகைகளில் அரைகுறையாகவே வெளியிடப்பட்டது என்ற தகவலும் அதில் காணப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான அரசியல் சூழலில் பத்திரிகைகளின் போக்கு புரிந்துகொள்ளக் கூடியதே. பத்திரிகைகள் இதனை முழுமையாக வெளியிடாததற்கு ஆர்.எஸ்.எஸ். எப்படி பொறுப்பாக முடியும்?

இதே தொகுதியில், அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.சை காங்கிரசில் இணைக்குமாறு படேல் கூறியது, நேருவின் முரட்டுப் பிடிவாதம், நடுநிலையாளர்களின் சமரச முயற்சிகள், அரசின் நிபந்தனைகள், அதனை கோல்வல்கர் ஏற்க மறுத்தது (பக்கம்: 87 , 88 ) – அனைத்தும் இதில் பதிவாகியுள்ளன. குறிப்பாக மகராஷ்டிரா சட்டமன்றத்தில் நடந்த விவாதமும் அதில் அமைச்சர் மொரார்ஜி தேசாய் அளித்த பதிலும் (பக்கம்: 104 ) முக்கியமானவை. அதில் எந்த நிபந்தனையும் இன்றி ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கிக் கொள்ளப்பட்டதை மொரார்ஜி உறுதி செய்கிறார்.

அரசிடம் மண்டியிட்டதா ஆர்.எஸ்.எஸ்?

 ஆனால், பா.ராகவன் தனது புத்தகத்தில் (பக்: 39 ) ‘நேருவின் நிபந்தனைகளை கோல்வல்கர் ஒப்புக்கொண்டார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு. இதனை குருஜி சிந்தனைக் களஞ்சியத்தின் தொகுதி 10ல் , பக்கம்: 102ல் உள்ள கோல்வல்கரின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இந்த அறிவிப்பு ‘ஹிதவாத’ ஆங்கில நாளிதழில் 1949 , ஆகஸ்ட் 1ல் வெளியானது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மீது புழுதி வாரித் தூற்றுபவர்கள் பல்லாண்டு காலமாக, அரசுக்கு அடிபணிந்து தடையை விளக்கிக் கொண்டதாகவே எழுதி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் பின்னணி உள்ளதால் அதுகுறித்த சங்கடம் ஏதும் எழவில்லை. ஆனால், நடுநிலை நோக்குடன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்நூலில் அத்தகைய கருத்து எழ அனுமதித்திருக்கலாமா?

உதாரணமாக, அரசு நிபந்தனைகள் காரணமாகவே சில நிர்வாக அடுக்குமுறைகளை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றவேண்டி இருந்தது (பக்: 58) என்று குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு சர்கார்யவாஹ் பொறுப்பை சுட்டிக்காட்டி இருக்கிறார். உண்மையில், இந்தப் பொறுப்பு மட்டுமல்ல, இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்.சில் நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான நிர்வாக அடுக்குமுறைகள் அனைத்தையும் 1940க்கு முன்னதாகவே அதன் நிறுவனர் ஹெட்கேவார் உருவாக்கிவிட்டார். சங்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்த கோல்வல்கர் 1938லேயே சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுசெயலாளர்) ஆகிவிட்டார். *2 பொதுவாக ஆர்.எஸ்.எஸ்.சின் பொதுச் செயலாளராக இருப்பவரே அதன் அடுத்த தலைவராவது மரபாக இருந்து வருகிறது. அதாவது தலைவர் பொறுப்புக்கு தயார்நிலையில் உள்ளவராகவே ஒருவர் அங்கு உருவாக்கப்படுகிறார். எனவே, முந்தைய தலைவரின் பரிந்துரைதான் அடுத்த தலைவரின் நியமனமாகிறது என்ற கருத்தை சற்றே ஆராய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த பிரசாரகர்கள், மாநிலங்களின் நிர்வாகிகள் கொண்ட குழுவே (அகில பாரத கார்யகாரி மண்டல் – இதுவும் 1940 -க்கு முன்னமே உருவாகிவிட்டது) சங்கத்தின் பொதுsசெயலாளரைத் தேர்வு செய்கிறது. அவரே சங்கத்தின் நிர்வாகிகளை அறிவிக்கிறார். இந்த உரசலற்ற ஏற்பாடு ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு. இந்த பொதுசெயலாளரே பிற்பாடு முந்தையth தலைவரால் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். அதை அகில பாரத கார்யகாரி மண்டல் ஏற்பது நடைமுறை. இதில் எங்கும் ஜனநாயக நெறிமுறையே ஊடுபாவி இருப்பதைக் காண முடியும். ஆனால், பா.ராகவன் போகிற போக்கில், எந்த ஒரு அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் முறையைப் பின்பற்றுவது இந்திய வழக்கம்… இந்த இலக்கணம் பொது. ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு உட்பட்டு இயங்கும் இயக்கமாகத்தான் கருதப்படுகிறது. ஆனாலும், தலைமைத் தேர்வு என்பது முந்தைய தலைவரின் தேர்வுதான்” என்று (பக்: 58) கூறிச் செல்கிறார். இந்தக் கருத்தில் உள்ள நுண்ணிய தாக்குதல், அவரது நடுநிலையை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

ஒரு இயக்கம் குறித்த படைப்பின் ஆக்கத்தில் நடுநிலையை உறுதிப்படுத்த வேண்டுமானால், அந்த இயக்கம் குறித்த நடுநிலையாளரின் கருத்தையே மேற்கோளாகக் காட்ட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். குறித்த மேற்கோள்களை இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குறித்து நூல் எழுதிய ஒருவரது – தேஷ் ராஜ் கோயல் – கருத்தையே ஒரு சோறு என்ற தலைப்பில் பிரசுரித்திருப்பது பொருத்தமில்லை. அப்படியானால், ஆர்.எஸ்.எஸ்.சை அற்புதமாக வழிநடத்திய கோல்வல்கரின் கருத்து ஏதாவது ஒன்றை மேற்கோளாக வெளியிட்டிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி அதில் பா.ராகவனின் கருத்து ஒன்றை மேற்கோளாகக் காட்டினால் எப்படி இருக்கும்? இந்த ஒருசோறு பதம் – புத்தகத்துக்குப் பதமாக இல்லை.

தொண்டனா? தலைமையா?

பக். 56 ல் கட்சிகள் தொண்டர்களால் வாழ்கிறது. ஆர்.எஸ்.எஸ். அதன் தலைமையால் வாழ்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இக்கருத்து மேலோட்டமாகப் பார்த்தால் சரியானது போலத் தெரியும். உண்மையில் கட்சிகள்தான் இந்தியாவில் தலைவர்களால் தலைவர்களுக்காக வாழ்கின்றன. காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, அதிமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம்… என பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள் தவிர்த்த எந்தக் கட்சியும் தலைமையால்தான் (இந்தப் பாசாங்கை நூலாசிரியர் முந்தைய பக்கங்களிலேயே குறிப்பிட்டும் விடுகிறார்) வாழ்கின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படியல்ல.

ஆர்.எஸ்.எஸ்.சைப் பொருத்தவரை, அதன் அடிமட்டத் தொண்டனும் ஸ்வயம்சேவகனே; அகில பாரதத் தலைவரும் ஸ்வயம்சேவகனே. ஸ்வயம்சேவகத் தன்மையே இவர்களிடையிலான பிணைப்பு. யாரும் வலியுறுத்தாமல், எந்த ஒரு இயக்க உறுப்பினர் படிவமும்கூட நிரப்பாமல், தானாக முன்வந்து செயல்படுபவரே ஸ்வயம்சேவகர். சிறு கிராமத்தில் ஷாகா நடத்தும் ஸ்வயம்சேவகன், அதே கண்ணோட்டத்துடன் தேசிய அளவில் சங்கப் பணிகளை வழிநடத்தும் ஸ்வயம்சேவகனை மரியாதையுடன் தலைவராகக் கொள்கிறான். முழுவதும் உளப்பூர்வமான முறையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்ள இணையதளக் கட்டுரைகள் உதவாது. சர்க்கரை இனிப்பானது என்பதை உணர அதை சுவைத்துப் பார்ப்பது எப்படி முக்கியமோ அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்வது அதில் இணைந்தால்தான் சாத்தியம். அல்லாதவரை, குருடர்கள் யானையை கற்பனை செய்தது போன்ற நிலைமையே ஏற்படும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஸ்வயம்சேவகனே மேலானவன். “நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வார் இரண்டாவது தலைவர் கோல்வல்கர். இந்தத் தலைப்பில் ஒரு நூலே கிடைக்கிறது*3. ஒவ்வொருவரும் சங்கத்தில் இணைந்து அதற்கு தன்னால் இயன்ற அளவில் நேரம் ஒதுக்கிப் பணி புரிகிறார். அப்போது அவரது ஆர்வம், சிரத்தை, முயற்சி, திறமை, தன்னலமின்மை போன்ற பண்புகளின் அடிப்படையில் அவரே சங்கப் பொறுப்புகளை ஏற்கிறார். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இங்கு கிடையாது. இன்னொருவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதால் (கவனிக்கவும்: பதவியல்ல) யாரும் பொறாமை கொள்வதும் இங்கு கிடையாது.

ஒரு ஸ்வயம்சேவகன் தனது கடுமையான உழைப்பால் மாநிலத் தலைவரும் ஆகலாம்; அகில பாரதத் தலைவரும் ஆகலாம். அதற்கு அவன் தியாகங்கள் செய்யத் துவங்க வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து பிரசாரக் ஆக வேண்டும்; எந்த அறிமுகமும் இல்லாத ஊரில் சங்கவேலை செய்ய வேண்டும்; அடக்குமுறைகள், கல்லடிகளைத் தாங்கி சங்கத்தை வளர்க்க வேண்டும்; தனது தகுதிகளைக் கூடவே உயர்த்திக் கொள்ளவேண்டும். அதாவது சங்கத்தின் வளர்ச்சியும் தனிப்பட்ட ஸ்வயம்சேவகனின் வளர்ச்சியும் தியாகத்தின் அடிப்படையிலானது. வேறெந்த அளவுகோலும் இங்கு கிடையாது. அதனால் தான் 85 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ் உடைக்க முடியாத இயக்கமாகவும், மேலும் மேலும் வளரும் குடும்பமாகவும் இருக்கிறது.

இங்கு புத்தக ஆசிரியர் குறிப்பிடுவது போல (பக்: 59) பிரசாரகர்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; தானாக முன்வந்து, குடும்பவாழ்வை மறுத்து பிரசாரக் ஆகும் ஸ்வயம்சேவகனே மாற்றங்களை உருவாக்குகிறான். இங்கு யாரும் பிரசாரகர்களுக்கு (பக்: 60) மனதை ஊடுருவும் பயிற்சிகளும் அளிப்பதில்லை; பிரமச்சரியமும் தேசபக்தியும் உள்ள உறுதியுமே பிரசாரகர்களின் வலிமை. இங்கு எந்த திரைமறைவுப் பயிற்சிகளும் (பக்: 62) இல்லவே இல்லை. ஆண்டுதோறும் திறந்தவெளியில் நடக்கும் ஆளுமைப் பண்பு பயிற்சி முகாம்களே (சிக்ஷண வர்க) ஸ்வயம்சேவகர்களையும் பிரசாரகர்களையும், சங்க நிர்வாகிகளையும் பட்டை தீட்டுகின்றன. இந்த முகாம்களை யாரும் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

யாருக்கும் எதிரியல்ல

புத்தகத்தின் 69 -வது பக்கத்தில் இடதுசாரிகளின் புகழைக் குறைப்பது, வீச்சைக் கட்டுப்படுத்துவது என்னும் அடங்காப் பேரவாவைத் தீர்த்துக் கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் ஆர்.எஸ்.எஸ்.சுக்குக் கிடைத்தது” என்று கூறுகிறார் ஆசிரியர். இதுவும் தவறான கருத்து. சங்கத்தின் மூத்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டவருமான பண்டித தீனதயாள் உபாத்யாய, ஏகாத்மா மானவவாதம் (Integral Humanism) என்ற கருத்தை*4 உருவாக்கியவர். இவர் குறித்த சிறு குறிப்பும்கூட இந்தப் புத்தகத்தில் இல்லாதது குறையே. இவரே இன்றைய பாஜகவின் அடிப்படையான சித்தாந்தங்களை வடிவமைத்தவர். இவர் தனது நூலில்*5 இடதுசாரிகள் எங்கே வழி தவறுகிறார்கள், அவர்களது சித்தாந்தத்தின் சாதகம், பாதகம் என்ன என்றெல்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறார். இடதுசாரிகள் நமது நாட்டிற்கு இயைந்த வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. இன்று பாரதத்தின் பிரதான கட்சியாக இருந்திருக்க வேண்டிய இடதுசாரிகள் அந்த வாய்ப்பை தவற விட்டதற்கு இந்த மறுபரிசீலனை இல்லாததே காரணம் எனில் மிகையில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துகளை முற்றிலும் வலதுசாரியாகக் கருதிக்கொண்டு அதை எதிர்ப்பது இடதுசாரிகளின் அடிப்படையாகவே மாறிவிட்டிருக்கிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பில்லை. அடிப்படையில் இந்தியாவை ஒரு நாடாகக் கருதாமல் பல குறுந்தேசியங்களின் கூட்டமைப்பாக அணுகுவதே இடதுசாரிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான அடிப்படை வேற்றுமை. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக விட்டுக் கொடுக்காது. அதற்காக இடதுசாரிகளின் புகழைக் கெடுக்க, மெனக்கெட்டு வேலை செய்ய அதற்கு நேரமும் கிடையாது.

இதே அடிப்படைதான் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான மோதலுக்கும் வழி வகுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் ஹிந்துத்துவம் மத எல்லைகளைத் தாண்டியது. இதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 99) ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் மத விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மத அடிப்படையில் எந்தப் பகுதியில் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகின்றனரோ அப்பகுதியில் தேசவிரோதக் கருத்துக்கள் வேகமாகப் பரவுகின்றன. அப்பகுதிகளில் பிரிவினை கோஷங்கள், சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு சவாலான நடவடிக்கைகள் எழுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், பஞ்சாப், கேரளாவின் மலப்புர மாவட்டம், தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டம், கோவை நகரின் கோட்டைமேடு பகுதி போன்றவை உதாரணம். எனவேதான் ஹிந்துப் பெரும்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இன்று காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துக்களாக வாழ்ந்தவர்கள்தானே? மதம் மாறியதால் அவர்களது வேர்கள் மாறிவிடுமா? இதையே ராமாயணம் படிக்கும் இந்தோனேசிய முஸ்லிம்களுடன் ஒப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். சுட்டிக் காட்டுகிறது. நம்மைப் பிரிக்கும் மதங்களைவிட நம்மை இணைக்கு ஹிந்துத்துவப் பண்பாடு இனிமையானது என்றே ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இக்கருத்து இன்னும் சிறுபான்மையினரால் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. அதற்கு ஊடகங்களும் காரணமாக உள்ளன. இந்தப் புத்தகத்தின் தலைப்பும் (ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்) அதையே நிரூபிக்கிறது.

”தேசத்தில் இரண்டே விதமான ஸ்வயம்சேவகர்கள்தான் இருக்கிறார்கள் – முதல் பிரிவினர் இன்றைய ஸ்வயம்சேவகர்கள்; பிறர் நாளைய ஸ்வயம்சேவகர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் கூறப்படுவதுண்டு. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் சங்கம் இயங்கி வருகிறது. சங்கம் எக்காலத்திலும் யாருக்கும் எதிரியல்ல; ஒன்றுபடுத்துவதே அதன் மார்க்கம். இதனை ‘சிவனை அறிய வேண்டுமானால் சிவமாகவே ஆக வேண்டும்’ என்ற தத்துவப்படி அணுகினால்தான் புரியும்.

மோடியும் மண்டைக்காடும்

புத்தகத்தின் 14வது அத்தியாயம், பக். 134 ல் குஜராத் கலவரங்களுக்கும் அதன் அனைத்துக் கோர விளைவுகளுக்கும் முதல்வர் நரேந்திர மோடி பின்னணியில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக காங்கிரஸ் ஆதரவு ஊடகமான தெகல்கா சுட்டப்பட்டுள்ளது. உண்மையில் குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து மோடி ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்டு வருகிறார். மோடிக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் தருணம் இது. தவிர, மோடி தொடர்பான சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளவை. இந்நிலையில், முன்யூக முடிவுகளுடன் கூடியதாக எதையும் எழுதுவது தவறு. நமது ஊடகங்கள் இதைத்தான் செய்து வருகின்றன.

குஜராத் கலவரம் கண்டிப்பாக வெறுக்கப்பட வேண்டியது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை, மோடியின் அரசு எடுத்த நடவடிக்கையால், துப்பாக்கிச்சூட்டால் நூற்றுக்கணக்கான கலவரக்காரர்கள் (இதில் மதத்தைக் குறிப்பிட வேண்டாமே!) கொல்லப்பட்டதும் உண்மை*6. இதனை மூடிமறைக்கும் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாகக் கூச்சலிட்டு ஒரு கருத்தை உருவாக்க முயன்றதே மோடி மீதான அவதூறுகளுக்குக் காரணம். நானாவதி கமிஷன் அறிக்கை குஜராத் அரசுக்கு சாதகமாகவே வெளியானதை யாரும் மறக்கக்கூடாது.

அதே சமயம், இதேபோன்ற கலவரங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படும்போது ஊடகங்கள் பட்டும் படாமல் நடந்துகொள்வது ஏன்? உதாரணமாக, பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த ஹிந்துப் பெண்கள் கடலில் குளிக்கச் சென்றபோது கிறிஸ்தவ மீனவர்களால் மானபங்கப்படுத்தப்பட்டதே மண்டைக்காடு கலவரத்துக்குக் காரணம். இதற்கு அடிப்படைக் காரணம் மதமாற்றம். இதை அரசே புரிந்துகொண்டதால்தான் அங்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால், இந்த காரணத்தை குமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லும் காரணம்‘ என்று அடிக்குறிப்பாக தருகிறார் இதே புத்தகத்தில் (பக்: 93) பா.ராகவன். அதாவது ஆர்.எஸ்.எஸ்.மீது குற்றம் சுமத்தும்போது தானே முன்வந்து குற்றம் சுமத்துபவர், சிறுபான்மையினர் மீதான புகார் வரும்போது தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டுகொண்டு எதிர்த்தரப்பையே புகார்தாரர் ஆக்குகிறார். இது தற்கால ஊடக மனநிலையின் பிரதிபலிப்பே. யாரைக் குற்றம் கூறினால் யாரும் கேள்விகேட்க மாட்டார்களோ அவர்கள் முதுகில் கும்மாங்குத்து குத்துவது; எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைக் கண்டால் அடக்கி வாசிப்பது. இந்த மனநிலைக்கு பா.ராகவனும் விதிவிலக்கில்லை.

இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தேசப்பிரிவினைக் காலக் காட்சிகளில் பலவும் ‘நேரடி நடவடிக்கை’யில் இறங்கிய முஸ்லிம் லீக்காரர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், அவற்றைக் குறிப்பிடும்போதுகூட, இரு சமூகத்தினரையும் சமமாக வைப்பதாக நினைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை வன்முறையாளராக சித்தரிப்பதைக் காண (பக்: 14) முடிகிறது. தற்காப்பு நடவடிக்கைக்கும் கலவர நடவடிக்கைக்கும் வேறுபாடு இல்லையா? ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளராக இருந்த ஹொ.வெ.சேஷாத்ரி எழுதிய தேசப்பிரிவினையின் சோக வரலாறு*7, இப்புத்தகத்தின் ஆசிரியர் படிக்க வேண்டிய முக்கியமான நூல் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

பிழைகள் சரித்திரம் ஆகலாமா?

மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். குறித்து புத்தகம் எழுதினால் அதன் எதிர்ப்பாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்துடேயே, அதனை சமண் செய்யும் உத்திகளுடன் இந்தப் புத்தகத்தை பா.ராகவன் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம், அவரது அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையிலான போராட்டம்.

இருந்தபோதும், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை ஹிந்து இயக்க நண்பர்கள் பலர் ஆர்வமாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. அவர்களது சங்கம் பற்றி சங்கமல்லாத நிறுவனம் ஒன்று வெளியிடும் நூல் இது என்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது, இதில் குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகளை அவர்கள் சான்றிதழாகவேகூட நினைத்திருக்கலாம். உண்மையில் சிறுபான்மையினரின் அட்டகாசங்கள் அத்துமீறும்போதுதான் பெரும்பான்மை மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைகிறார்கள். இதற்கு கோவை (1998 கலவரங்கள்) உதாரணம். பெரும்பாலான மக்கள் ஆர்.எஸ்.எஸ். மீது கூறப்படும் புகார்களை நற்சான்றிதழாகக் கருதுவதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 97) குறிப்பிடுகிறார்.

ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. கிழக்கு பதிப்பகம் போன்ற நல்ல நம்பகத்தன்மை கொண்ட நூல் வெளியீட்டு நிறுவனம் வெளியிடும் புத்தகத்தில் உள்ள தவறுகள் நாளை சரித்திரமாக பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கமே எனது விமர்சனத்தின் நோக்கம். மக்களை மதரீதியாக பாகுபடுத்திக் குளிர்காயும் வாக்குவங்கி அரசியல் கட்சிகளைவிட, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் மோசமானதில்லை; சிறுபான்மையினரை தாக்குவது (பக்: 132) அதன் நோக்கமுமில்லை. அதற்கென, ‘அகண்ட பாரதம்; உலகின் குருவாக பாரதம் ஆக வேண்டும்’ என்பது போன்ற மாபெரும் லட்சியங்கள் உள்ளன.

மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பிறர் எழுதாத நல்ல பல கருத்துக்களும் உள்ளன. எழுதியிருக்க வேண்டிய – விடுபட்ட பல முக்கியமான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

-          தொடரும்

(ஆர்.எஸ்.எஸ்., கிழக்கு பதிப்பகம், பா.ராகவன், விலை 75 ரூ.)

அடிக்குறிப்புகள்:

1 . குருஜி சிந்தனைக் களஞ்சியம்- டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை, 2006 ,

2. ஸ்ரீ குருஜி- வாழ்வே வேள்வி- பி.ஜி.சஹஸ்ரபுத்தே, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1998 , பக்: 58

3. நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்- சக்தி புத்தக நிலையம், சென்னை, 1997

4 . INTEGRAL HUMANISM – http://en.wikipedia.org/wiki/Integral_humanism_(India)

5 . ஏகாத்ம மானவ வாதம்- பண்டித தீனதயாள் உபாத்யாய, பாரதீய ஜனசங்கம், சென்னை, 1970

6. http://www.gujaratriots.com/24/myth-5-gujarat-police-was-anti-muslim/

7. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – ஹொ.வெ.சேஷாத்ரி, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1996.