சர்வதேச மகளிர் தினம் : அன்றும் இன்றும்

imagesதற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.

ஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.

அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.

பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன.

1908 ஆம் ஆண்டு சுமார் 15,000  பெண்கள் தங்களுக்கு வேலைக்குத் தகுந்த சிறப்பான சம்பளம், குறைந்த நேரப் பணி மற்றும் வாக்குரிமை கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் போராட்டம் என்பதைவிட சோஷியலிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருந்தது. 1913 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.

1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. அதில் ஜெர்மனி சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் ‘மகளிர் அலுவலக’த் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்  என்பது அவரது யோசனை. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக இவரது யோசனையை வரவேற்றனர்.

1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி  முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது. சுமார் ஒரு மில்லியன் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாகத் திரண்டு பிரசாரத்திலும் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக மார்ச் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏற்பட்ட ‘முக்கோண தீ விபத்து’ 140 உழைக்கும் மகளிரின் உயிரைப் பறித்தது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்தக் கொடும் சம்பவம் பெண்களின் உழைக்கும் சூழலைப்  பற்றிய மோசமான நிலையை உலகுக்கு அறிவித்தது. இதே ஆண்டில் உழைக்கும் மகளிர் Bread and Roses என்ற போராட்டமும் நடத்தினர். இதில் பங்கு பெற்ற மகளிர் We want Bread but we want roses, too என்று எழுதப்பட்ட கொடிகளை தாங்கி ஊர்வலம் சென்றனர்.

1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8  சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பெண்களின் நிலை:

வேத காலத்தில் பெண்கள் மெத்தப் படித்தவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையாக வாழ்ந்து வந்ததாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகளைப் பற்றி உபநிடதம், ரிக் வேதமும் பேசுகின்றன.

ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை சரியத் தொடங்கியது. சதி (கணவன் உயிர் துறந்த பின் பெண்ணும் அவனுடன் தீக் குளிக்கும் வழக்கம்) குழந்தை திருமணங்கள் பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்பது போன்ற சமுதாயச் சடங்குகள் பெண்களுக்கு எதிராக இருந்தன.

மிகவும் சிறிய வயதில் நடந்த திருமணங்களில் பெண் வயதுக்கு வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்தப் பெண்கள் ஆயுள் முழுவதும் விதவை பட்டத்துடன் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது. மறுமணம் என்பது அவர்களால் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தாராலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக கருதப்பட்டது. பெற்றோர் ஆதரவிலோ அவர்களது மறைவுக்குப் பின் கூடப் பிறந்தவர்களின் நிழலிலோ அவர்களது குடும்பங்களின் சம்பளமில்லா வேலைக்காரிகளாக இந்தப் பெண்கள் வாழ நேர்ந்தது.

கோவில்களில் நாட்டியமாடும் பெண்கள் தேவதாசி என்றழைக்கப்பட்டனர். நாட்டியக்கலையை வளர்த்ததில் இவர்களது பங்கு மிக முக்கியமானது.  கடவுளுக்கே என்று தாங்களாகவே ‘பொட்டு’ கட்டிக் கொள்ளும் இவர்கள் ‘நித்ய சுமங்கலி’ என்று அழைக்கப்பட்டனர். கடவுளுக்கு தாசிகளாக இருந்து, கோவிலின் வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தனர். கோவில்களின் வருமானம் குறையக் குறைய  இவர்களது நிலையும் சிறிது சிறிதாக மாறி மனிதர்களின் – குறிப்பாக பணம் படைத்த ஆண்களின் – ஆசை நாயகிகளாக மாறும் அவல நிலைக்கு ஆளாகினர். இதனால் சமுதாயத்தில் எந்தவித உயர்ந்த மரியாதையும் இவர்களுக்கு மட்டுமில்லை இவர்களது வாரிசுகளுக்கும் கிடைக்கவில்லை. உயர்ந்த நிலையில் இருந்த இவர்கள் விலைமாது என்கிற பட்டத்தை சுமக்க வேண்டியதாயிற்று.

இந்தியப் பெண்களின் இன்றைய நிலை:

சர்வதேச மகளிர் தினத்தை  (மார்ச் 8, 2013) கொண்டாடும்  நாம் இந்தியப் பெண்களின் இன்றைய நிலையைச் சற்று ஆராயலாம்.

வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாகச் சொல்வார்கள். பெண்களின் நிலையும் இந்தியாவில் முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு புறத்தில் ஏதோ ஒரு வெளிநாட்டில் அழகிப் போட்டிக்காக நம் பெண்கள் நீச்சல் உடையில் போட்டி போட்டுக் கொண்டு  வரிசையில் நின்று சிரித்துக்(!) கொண்டிருப்பார்கள்!

ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள்   என்று உலகம் பெருமைப்பட சொல்லிக் கொண்டாலும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை.

பால்ய விவாகங்கள் நடந்து, பால்ய விதவைகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். வரதட்சணை கொடுமைகள், மரியாதை கொலைகள் என்று எல்லாமே பெண்களின் வாழ்வைத்தான் சூறையாடும் மேற்கண்ட கொடுமைகளை வாய்மூடி பார்க்கும் இந்திய சமூகம், நடிகைகள் தங்களுக்குக் கிடைத்த வாழ்வை முறித்துக் கொண்டு வருவதைப் பார்த்து ‘உச்’ கொட்டும்! இவர்களது பலமுறை மணங்களை செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் போட்டு தங்கள் விற்பனையை உயர்த்திக் கொள்ளும்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்குப் பயந்து கொண்டு தங்கள் துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மன அமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களும், நீதி மன்றங்களும் வாய்மூடி மௌனம் காப்பார்கள்.

மற்ற நாடுகளில் பெண்களின் நிலை என்ன?

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பெண்கள் முன்னேறியிருப்பது போலத் தோன்றினாலும் இது மிகவும் சிறுபான்மை தான். மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகவே அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு ‘பெண்கள் சுதந்திரம், பாலியல் விடுதலை’ என்பது புரியாத, அவர்களுக்கு சம்மந்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இன்னும் பல பெண்களுக்கு ‘கள்’ ளானாலும் கணவன், ‘ஃபுல்’ லானாலும் புருஷன் என்கிற நிலைதான்.

1975 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் அடித்தட்டுப் பெண்களுக்கும், மேல்வர்க்க பெண்களுக்கும் இடையே பூதாகாரமான இடைவெளி இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியது. இந்த அடித்தட்டுப் பெண்களில் பெரும்பாலோர் எழுத்தறிவு இல்லாமலும், போஷாக்கு குறைந்தவர்களாகவும், வளர்ச்சியடையாத கிராமப் பகுதிகளில் இருப்பவர்களாகவும், ஏழைமையிலும், உடல்நலக் குறைவிலும் சிக்கித் தவிப்பவர்களாகவும்  இருக்கிறார்கள்.

பெண் குழந்தை தங்களுக்கு கடன் சுமையை அதிகரிக்கப் பிறந்திருப்பதாகவும், ஆண் குழந்தை தங்களை காப்பாற்றுவான் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். உணவு, ஆரோக்கியம், படிப்பு என்று எல்லா விஷயத்திலும் இவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அடிப்படை உரிமை என்பதுகூட இல்லாமல் பெற்றோர் காட்டும் ஒருவனை மணந்து வாழ்க்கை முழுவதும் அல்லல் படுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையிலும்கூட வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் பொறுப்பான அரசியல் பொறுப்புகளை பெண்கள் ஏற்று நடத்தி வருவது ஒரு நல்ல அறிகுறியாகவே தெரிகிறது. இதனால் பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு மேற்கத்திய மந்திரச்சொல்லாக மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் நாடுகளிலும் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

images (1)2013 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கான உரிமையை உறுதிப் படுத்தவும், உலகெங்கும் உள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் ஐக்கிய நாடுகள் சபை ‘ஒன் வுமன்’ (One Woman) என்ற ஒரு பாடலை மகளிர் தினத்தன்று வெளியிட இருக்கிறது.

சீனாவிலிருந்து கோஸ்டா ரிக்கா வரையிலும், மாலியிலிருந்து மலேசியா வரையிலும் இருக்கும் புகழ் பெற்ற பாடகர்கள், இசை வித்தகர்கள், பெண்கள், ஆண்கள் எல்லோரும் சேர்ந்து தங்களது ஒற்றுமை, ஐக்கியத்தை பற்றிய ஒரு செய்தியை அறிவிக்க இருக்கிறார்கள்: அந்தச் செய்தி தான் : நாங்கள் எல்லோரும் ஒருவரே என்று சொல்லும் ‘ஒன் வுமன்’ பாடல்.

‘பெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அயர்ந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப்போம்’ என்பதுதான் இந்த வருட மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும்  செய்தி.

உலகெங்கும் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்!

0

ரஞ்சனி 

ரம், ரமா, ரம்மி!

அர்ச்சனா. பள்ளி ஆசிரியர். அவருடைய நான்கு வயது மகள் மிக அழகாக எழுதுவாள். நன்றாகப் படிப்பாள். அவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, “நீங்கதான் மெச்சிக்கறீங்க. இவ பிறக்கும்போது ரொம்பச் சிக்கலாகிவிட்டது. ஆபரேஷன் முடிந்து, மயக்கம் தெளிந்தபோது அருகில் கணவர் இல்லை. என் கண் குழந்தையைத் தேடுது… என்ன பொட்ட புள்ளையைப் பெத்துப் போட்டிருக்கே!. பையன்னு நினைச்சு வாசல்லேயே கிடையா கிடந்தோம்ன்னு சொன்னார் என் மாமியார். நாலு வருஷமாகியும் அந்தப் பேச்சு மறக்கலை. உயிர் பிழைச்சு வந்திருக்கேன். என்னை ஒரு வார்த்தை எப்படி இருக்கேன்னு கேட்கலை. நான் படிச்சதெல்லாம் சிபிஎஸ்சி பள்ளியில். வட இந்தியால இருந்ததால ஹிந்தி, பெங்காலி எல்லாம் நல்லா தெரியும். எனக்கு விருப்பமானது ஆசிரியர் வேலைதான். வேலைக்குப் போறேன்னு வீட்டில் அரைகுறையாக விடக்கூடாது. வீடு, குழந்தையை முழுசா பார்த்துக்கறதோட வேலைக்குப் போறதுன்னா எங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னாங்க… என்ன படிச்சாலும் திறமை இருந்தாலும் நம்மளை ஒருநாளும் அங்கீகரிக்க மாட்டாங்க’ என்றார். அர்ச்சனாவின் மாமியார் ஒன்றும் படிக்காதவரோ, விஷயம் தெரியாதவரோ இல்லை. ஆனாலும் பெண் என்றவுடன் அவரையும் அறியாமல், அவர் மூளையில் பதிந்துள்ள பிம்பம் வெளிப்பட்டுவிட்டது.

45 பி பேருந்து. கூட்டம் அதிகம். எனக்கு அருகில் ஒரு பெண் நிற்க முடியாமல் நின்றுகொண்டிருந்தார். சைதாபேட்டையில் ஏறிய ஒருவன் அந்தப் பெண்ணை இடித்துக்கொண்டே இருந்தான். அந்தப் பெண் வேறு பக்கம் போக முயற்சி செய்தார். கூட்ட நெரிசலில் முடியவில்லை. “என்னால முடியலை. கொஞ்சம் தள்ளி நில்லுங்க. டிரெஸ் மட்டும் டீசண்டா பண்ணினால் பத்தாது’ என்று கத்தினார். உடனே அவன் திரும்பிப் பார்த்தான். பின்னால் நான்கு கல்லூரி மாணவியர் நின்றுகொண்டிருந்தனர். உடனே ஆங்கிலத்தில், “அழகான சின்னப் பொண்ணுங்க நீங்க இருக்கும்போது, இவங்களை இடிக்கிறேன்னு சொல்றதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கா?’ என்று கேட்டவுடன், அந்த மாணவியர் வெட்கத்துடன் சிரித்துவிட்டு, அந்தப் பெண்ணை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஸ்மார்ட்டாக இருந்து, ஆங்கிலத்தில் பேசிவிட்டால் அவன் தப்பு செய்திருக்க மாட்டான் என்ற முடிவுக்கு அந்தப் பெண்கள் எப்படி வந்தார்கள்? முன்பெல்லாம் பேருந்துகளில் அடிக்கடி பெண்கள் சண்டை போடுவார்கள். இப்போதெல்லாம் கத்துவதோ, சண்டை போடுவதோ கூட அநாகரிகம் என்று படித்த பெண்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் தவறைக் கண்டு ஒதுங்கிப் போய்விடுகிறார்கள்.

ஈவ் டீசிங் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு பெண் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பிரச்னைகளை எதிர்த்து நின்று போராட வைக்காமல், இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது எது? ஒருபக்கம் தவறைக் கண்டுகொள்ளாமலும் இன்னொரு பக்கம் பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமலும் செய்துவிட்டதா இன்றைய கல்வி முறை?

நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்கள் அனைவரும் படித்தவர்கள். நல்ல பொருளாதாரச் சூழலில் இருப்பவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கணவர்களிடம் ஒருமுறையாவது அடி வாங்கியிருக்கிறார்கள். கணவர் அடித்தால் அதில் நியாயம் இருக்கும் என்றும் கணவர் அடிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் உலகறியச் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.

இன்று 56 சதவிகித இந்தியப் பெண்கள் தினம் தினம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையில் சிலமுறையாவது கணவர்களிடம் அடி வாங்கிய பெண்கள் சுமார் 83 சதவிகிதம் பேர். (முன்பை விட தற்போது குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது.) மனைவி தன்னைப் போல் ஓர் உயிர் என்று அடிக்கும் ஆண்களுக்குத்தான் அறிவில்லை, அடிவாங்குற பெண்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? எப்பேர்ப்பட்ட பிரச்னைகளையும் பேசித் தீர்த்துவிட முடியாதா? சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னை லேசாக ஆரம்பிக்கும்போதே கணவன் வந்து மனைவியை அடித்து, அந்தப் பிரச்னையை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்! சிலர் அடித்த பிறகுதான் விசாரணை நடத்துகிறார்கள். ஆண்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? அடிப்பது ஆண்களின் உரிமை, அதை ஏற்றுக்கொள்வது பெண்களின் கடமை என்று சொல்லி வைத்தது யார்? அடிக்கும் ஆண்களை எதிர்ப்பது இருக்கட்டும், முதலில் அடிப்பது தவறு என்று கூட பெண்கள் நினைக்கும் நிலையை இன்னும் எட்டவில்லையே, ஏன்?

அதேபோல நிறைய படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்களைக் கூட திருமணத்தின்போது 50 பவுன், 100 பவுன் என்று வாங்கிக்கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவரும் ஒரே நிலையில் இருக்கும்போது கூட ஆணுக்கு வரதட்சனை தந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழலை ஏன் பெண் ஏற்றுக்கொள்கிறாள்? பெண்களுக்குத் திருமணம்தான் வாழ்க்கையின் உன்னதமான, உயர்ந்தபட்ச இலக்காகச் சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த தோழி சொன்னாள்,  ‘படிக்காதவனுக்குக்கூட 40,50 லட்சம் கொடுத்து மருத்துவ சீட் வாங்கிவிடுகிறார்கள். திருமணத்தின்போது அவன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்றாலும் ஒரு கோடி, ரெண்டு கோடின்னு வரதட்சனை வாங்கி விடுகிறார்கள்’ என்றாள்.

வட இந்தியாவில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ரம், ரமா, ரம்மி’ இது மூன்றும் இருந்தால் ஒரு மனிதன் உருப்பட மாட்டான். ரம், ரம்மி சரி. இதில் ரமா எங்கே இருந்து வந்தாள்? குடி, சூதாட்டத்துடன் ரத்தமும் சதையும் உள்ள பெண்ணை இணைக்கும் போக்கு எப்படி வந்தது? நம் மண்ணில் பெண்கள் பற்றிய புரையோடிப் போன எண்ணங்களின் விளைவே இதுபோன்ற கருத்துகள்.

பெண்கள் படித்து, கை நிறையச் சம்பாதித்தாலும் எத்தனை ஆண்கள், தங்கள் மனைவியிடம் ஏடிஎம் கார்டுகளைக் கொடுக்கிறார்கள்? அலுவலகங்களில் உயர்ந்த பொறுப்பு வகிக்கும் பெண்கள் தங்கள் வீடுகளில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். கணவரை எதிர்த்து கருத்து சொன்னால், படித்த திமிர் என்ற பட்டம் கிடைத்துவிடுமோ என்ற பயத்தில், வேலைக்குச் செல்லும் சலுகையாவது கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், கணவர் தவறாகச் சொன்னாலும் எதிர்த்துப் பேச மாட்டேன் என்கிறார் ஒரு கல்லூரிப் பேராசிரியை! அந்தப் பேராசிரியையின் மகன் அடிக்கடி, அவன் அம்மாவிடம் சொல்லும் வார்த்தை, “போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்பதுதான். கணவர் சொல்வதைக் கேட்டு, அவனும் அப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். அவனுக்காவது புரிய வைக்கக்கூடாதா என்றால், “என் பிள்ளையிடம் முட்டாள் பட்டம் வாங்கிறதில் எனக்கொன்றும் வருத்தமில்லை’ என்றார்! விட்டுக் கொடுத்து வாழலாம், ஆனால் எதை விட்டுக் கொடுப்பது என்பது முக்கியம் அல்லவா!

வேலைக்குப் போவதோ, வேலையை விடுவதோ பெண்ணின் முடிவாக இங்கு பெரும்பாலும் இல்லை. எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் வரும் வார்த்தைகள், “வேலையை விடு. என் சம்பளத்தில் குடும்பம் நடத்திக்கலாம்’ என்பதுதான். பொருளாதாரச் சுதந்தரம் இருந்தால் பெண்கள் தாங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுக்க மாட்டார்கள் என்று ஆண்கள் நினைப்பதன் விளைவே இந்தக் கோரிக்கை.

பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், வரதட்சனை, கல்வி, ஆரோக்கியம், ஊட்டச் சத்து குறைபாடு என்று ஏராளமான பிரச்னைகளைப் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்க வேண்டியது எல்லோரின் கைகளிலும்தான் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் பிரச்னைகளை, பெண்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னைகளைத் தீர்க்கவும், ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகளைப் பெறவும் போராட வேண்டும்.

இன்று காலையில் இருந்து குறுஞ் செய்திகளிலும் தொலைபேசியிலும் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் மனைவிக்கு/அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தீர்களா என்றால் இல்லை என்றார்கள். சிலர் மகளிர் தினத்துக்காக ட்ரீட் கேட்டார்கள். மகளிர் தினம் என்றால் என்ன? என்று கேட்டதும், “வாலண்டைன்ஸ்டே மாதிரி வுமன்ஸ்டே’ என்றார்கள்!

இன்றைய இந்தியாவில் வாலண்டைன்ஸ் டே, மதர்ஸ் டே வரிசையில் பெண்கள் தினத்தையும் சேர்த்து, வியபார உலகம் கொண்டாடி வருவது வருத்தத்தை அளிக்கிறது. நகைக்கடை, புடைவைக் கடை, செருப்புக் கடை, விமானக் கட்டணம், உணவு விடுதி போன்றவற்றில் சிறப்புச் சலுகைகளை அளித்து, இந்த நாளையும் ஒரு வெற்றிகரமான வியாபார தினமாகப் பார்க்கும் உத்தியைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரிலும் பஃபிலும் இருக்கும் பெண்களைப் போட்டு, பெண்கள் தினம் என்று திட்டமிட்டுச் செய்தி பரப்பும் ஊடகங்களைக் கண்டிக்க வேண்டும். இதுவரை உலக அளவில் 10 கோடி பெண்கள் மாயமாகியிருக்கிறார்கள். அதில் 5 கோடி பெண்கள் இந்தியாவில் இருந்து மாயமானவர்கள். பண்பாடு என்ற பெயரில் இன்னும் பெண்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை அனுமதிக்க முடியாது!

0

திலகவதி