தீர்ப்பு அரசியல்

பகுதி ஒன்று

கடந்த வாரங்களில், (தமிழ்ச் சூழலுடன் தொடர்பில்லாத) எனக்குத் தெரிந்த சில இடதுசாரிச் சிந்தனைச் சாய்வுள்ள நண்பர்களுடன் உரையாட நேரும்போதெல்லாம், ‘அயோத்தி தீர்ப்பு’ குறித்து அவர்கள் கொதிப்புடன் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கொதிப்புக்கான நியாயங்களை அடுக்குவதும், அந்த நியாயங்களைப் புரிந்துகொள்வதும் கடினமல்ல; என்றாலும் என்னால் அவர்களுடன் உணர்வுபூர்வமாக இந்தக் கொதிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

கடந்த 18 ஆண்டுகளாக, பணி நிமித்தம் தமிழ்ச் சூழலுக்கு வெளியே வசிக்கும் இடதுசாரி நண்பர்களுடன் அரசியல் பேசுவதும், அவர்களுடன் கருத்து மற்றும் உணர்வுரீதியாகப் பகிர்ந்துகொள்வதையும் ஒரு பழக்க தோஷமாகக் கொண்டிருப்பதால், நான் இவ்வாறு சொல்வதற்கு ஓர் உள்ளர்த்தம் ஏற்படுகிறது.

இரண்டு வருடங்கள் முன்பு, மாதக்கணக்கில் தினமும் செய்திகளுடன் தொடர்ந்த இலங்கைப் போரின் இன அழிப்பின்போது, இவர்கள் எல்லோரும் ரொம்ப சாதாரணமாக, அப்படி ஒன்று நடந்துகொண்டிருப்பது குறித்த பிரக்ஞைகூட இல்லாமல் இருந்ததை, மிகுந்த ஆத்திரத்துடன் அன்றாடம் கவனித்து வந்திருக்கிறேன். நடந்துகொண்டிருந்தவை குறித்து அவர்கள் முற்றிலும் அறியாமல் இல்லை; நேர்ப்பேச்சிலும், மின்னஞ்சல்களிலும் நானே (சில குதர்க்கக் கேள்விகள் உட்பட) சில இடையீடுகள் செய்து, பின் பயனில்லை என்று நிறுத்தியிருக்கிறேன்.

பல்லாயிரம் அப்பாவி மக்கள் அன்றாடப் பயங்கரத்தின் இடையே கொல்லப்பட்ட கொடூரம் இங்கிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் நடந்தபோது இல்லாத கொதிப்பை, ஒரு நிலரீதியான ஆக்கிரமிப்பை, மூன்றில் இரண்டு பங்கு அநியாயத்துடன் அங்கீகரிப்பதாகக் கருதக்கூடிய ஒரு தீர்ப்புக்கு, அதனால் பாதிக்கப்பட்டவர்களைவிட அதிகமாகக் கொதிநிலைக்குச் செல்வதைப் பார்த்து, சிரிக்கலாமா கூடாதா என்கிற அரசியல் குழப்பம் என்னுள் நிலவுகிறது. (தீர்ப்பு குறித்து தமிழ்ச் சூழலுக்குள் ஆத்திரமடைபவர்களைப் பற்றி இங்கே பேசவில்லை.)

நான் அவர்கள் நடிப்பதாகவோ, மிகைவினை செய்வதாகவோ நினைக்கவில்லை. ஆனால் எனக்கு இந்தக் கொதிப்பெல்லாம் ஒருவகை அரசியல் obsessionஆக மட்டும்தான் தெரிகிறது. முஸ்லீம் சமுதாயத்தின் நலன், உரிமை என்கிற அக்கறைகளினால் உந்தப்படுவதாக இல்லாமல், இவர்கள் தர்க்கப்படுத்தி, பின் நம்பிக்கைகள் ஆக்கிக்கொண்ட அரசியல் நிலைப்பாடுகளினால் உந்தப்படுவதாகவே இதைக் கருத முடிகிறது.

தனிப்பட்ட முறையில் அயோத்தி தீர்ப்பு வருவது குறித்துப் பெரிய அக்கறைகள் எதுவும் இல்லாத நிலையில்தான் நான் இருந்தேன். இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய படுகொலைகளும் இன அழிப்பும் ஈழத்தில் நடந்தேறியபோது, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதான ஒரு நினைவை, தமிழரல்லாத அனைத்திந்திய மனம் உருவாக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராக, தமிழ் நாட்டைப் பெரிதாக பாதிக்கப் போகாத ஒரு பிரச்னை குறித்து விவாதிப்பதைத் தவிர்ப்பதும் ஓர் அரசியல் என்று கருதி வருகிறேன். குறைந்தபட்சம் எல்லா விவாதங்களிலும், ஈழத்து இன அழிப்பால் தீவிரமான மனப்பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள் இவ்வாறு சிலமுறையாவது சொல்லவாவது வேண்டும் என்று நினைக்கிறேன். அயோத்தி போன்ற ஒரு பிரச்னை வெடித்து, வட இந்தியாவில் எல்லோரும் ‘அடித்துக் கொள்ளட்டும்’ என்று யாரேனும் கருத்து சொன்னால்கூட, அதை வக்கிரம் என்று நான் சொல்ல மாட்டேன். ஈழத்தில் நடந்தவை குறித்து மௌனம் சாதிப்பதும், அதை மறுப்பதும், பொய்யான ஏமாற்று விஷயங்களைப் பேசுவதும் பேசியதும்தான் வக்கிரமே தவிர, ஒரு கோபத்தைக் குறிப்பதற்கு இவ்வாறு சொல்ல மட்டும் செய்வதில் எந்த வக்கிரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

2000-த்தின் தொடக்கத்தில், அலகாபாதில் ஒன்றரை வருடம் வாழ்ந்தபோது, இந்துத்துவத்தின் தீவிர முகத்தைப் பார்த்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து வேறுபட்ட பார்ப்பனியத்தின்/சாதியத்தின் தீவிர முகத்தை எதிர்கொண்டிருக்கிறேன். சற்றும் எதிர்பாராத ஒரு நாளில் ஷியா-சுன்னி கலவரம் மூண்டு, அதன் வெறித்தனத்தையும் உணர்ந்திருக்கிறேன். இந்தப் பிரச்னைகள் சார்ந்த நம் அரசியல் பார்வையினால், நிரடலான உணர்வை அனுபவிக்காமல் அங்கே இருக்க முடியாது.

ஆனால் இத்தனையும்மீறி நாம் நேசிக்கக் கூடிய ஒரு வெகுமனம் அங்குள்ள மக்களிடம் இருப்பதை உணரமுடியும். இத்தகைய முரண்பாட்டை இந்தியச் சமுதாயத்தில் பல சந்தர்ப்பங்களில் காணலாம். தேவர் சாதியைச் சேர்ந்த மூதாட்டியின் ஒரு வெறித்தனமான பேச்சுக்கு எந்த நியாயத்தையும் வழங்கமுடியாது; அதே நேரம் அவரிடம் இருக்கும் ஒரு புனிதமான வெகுமனத்தை வெறுக்க முடியாது என்கிற பக்குவத்தை நான் அடைந்துவிட்டேன். (இதை பார்ப்பன சாதியைச் சேர்ந்த மூதாட்டியை வைத்தும்கூட உதாரணிக்கலாம்.)

இந்த நிலையில், அயோத்தி பிரச்னையின் காரணமாக ‘அவர்கள் அடித்துக்கொண்டு சாகவேண்டும்’ என்று எனக்கு ஒரு நினைப்போ, நடக்காததில் நிராசையோ உண்மையில்  இருக்கமுடியாது; இருந்ததில்லை. தவிர, தொடர்ந்து ஒரு அரசியல் நிலைப்பாடாக மட்டும், குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிப் பேசாமலும் சிந்திக்காமலும் ஒரு வீம்பைத் தொடர்வதும் சாத்தியமில்லை. குறிப்பிட்ட பிரச்னை குறித்து சிந்திப்பதும், கருத்து சொல்வதும், அந்தப் பிரச்னையின் தீவிரம் மற்றும் அக்கறை என்பதற்கு நாம் கற்பிக்கும் காரணங்களைவிட, புற உலகம் தொடர்ந்து நம்மைச் சிந்திக்கவும், கருத்துகளை (நேராகவோ, உருமாற்றியோ) பிரதிபலிக்க வைப்பதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்த வகையிலும் அயோத்தி குறித்து எனக்கான கருத்துகளை வந்தடையாமல் இருக்கவியலாது. அவ்வாறு வந்தடைந்த கருத்துகளை மேல்பரிசீலனை கருதி இங்கே பதிவு செய்கிறேன். என் கருத்துகள் பரிசீலனைக்குரியவை, மாறக்கூடியவை.

0

அயோத்தி தீர்ப்பு இந்துத்துவத்துக்குச் சாதகமான தீர்ப்பா என்று ஒரு கேள்வியாகக் கேட்கக்கூட எந்த நியாயமும் இல்லை. எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்துத்துவத்துக்கு ஆதரவான, இதுவரை இந்துத்துவவாதிகள் முன்வைத்து வந்த வாதங்களை அங்கீகரிக்கும் தீர்ப்புதான். இதன் நடைமுறை ஆதாரமாக இந்துத்துவவாதிகள் தெளிவாக, தீர்ப்பு சார்ந்த தங்களின் சந்தோஷத்தையும் நிறைவையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமையாகக் கோரியதில் முழு வெற்றியில்லை எனினும், எதிர்பார்த்திருந்ததற்கு அதிகமாகப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

முஸ்லீம்கள், தீர்ப்பு சார்ந்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், பெரிய கோபமோ ஆத்திரமோ அவர்களிடம் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. தீர்ப்பு வெளிவந்து சில மணி நேரங்களுக்கு, ஏதோ ஒரு முஸ்லீம் பிரதிநிதியின் கருத்தைக்கூடத் தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்து நான் அறியேன். தொலைக்காட்சிகள் தொடர்புகொள்ள முயன்றும், யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லையா, அல்லது யாரேனும் ஒரு முஸ்லிமின் கருத்தையாவது உடனடியாகப் பதிவு செய்வது அவசியம் என்று ஊடகங்கள் நினைக்கவில்லையா என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

ஆனால் பொதுவாக இந்தத் தீர்ப்பை ஊடகங்கள் கொண்டாடியதிலும், ஒரு சமரசத் தீர்ப்பாகக் கருத்து பிம்பத்தை உருவாக்கச் செய்த பிரயத்தனத்திலிருந்தும், இதை ஒரு நினைவுடன் கூடிய பாரபட்சமாகத்தான் கருத முடிகிறது.

என்றாலும் இந்தத் தீர்ப்பை உடனடியாக எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவியதாகக் கருதமுடியும் . தங்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வந்து, அதன் மூலமாக எதிர்கொள்ளவேண்டிய மேற்படி பிரச்னைகள் குறித்த பயத்தில் இருந்ததாலோ, அல்லது முற்றிலும் எதிர்மறையாக வரும் என்று எதிர்பார்த்ததாலோ, இப்படி ஒரு எதிர்பாராத (மூன்றில்) ரெண்டும் கெட்டான் தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு உடனடித் தெளிவின்மை இருந்ததாக ஊகிக்க முடிகிறது. ஓரிரு நாட்கள் கழித்தே அதிருப்தியை ஊடகங்களில் தெரிவிக்க முடிந்தது.

இன்னமும்கூட வட இந்திய மைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில், முஸ்லிம்களின் அதிருப்தியை நான் காணவில்லை; எல்லோருக்கும் நிறைவான தீர்ப்பு என்கிற பிரசாரம் மட்டுமே கேட்கிறது. (அவுட்லுக்கில் வந்தது மற்றும் இணையத்தில் வாசித்த சில கட்டுரைகள் தவிர.) தமிழ் சேனல்களிலும் விளிம்பு நிலையில் இருப்பது போன்றிருக்கும், ‘மக்கள்’, ‘இமயம்’, ‘வின்’ டீவிக்களில்தான் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைப்  பதிவு செய்ததைக் காணமுடிந்தது. அதே நேரம் பல முஸ்லிம்கள் இந்தத் தீர்ப்பை அப்படியே ஏற்று, வேறு பிரச்னைகளை கவனிக்க விரும்பியதாகச் சொன்னதையும் – குறிப்பாக அயோத்திவாழ் முஸ்லிம்கள் சிலரும் ஷியா அமைப்புகளும் சொன்னதையும், சிலர் இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான வாய்ப்பாக வர்ணித்ததையும் நான் மறந்துவிட்டுப் பேச முடியாது.

ஆனால் முஸ்லிம்கள் தீர்ப்பில் அதிருப்தி கொள்வதும், மேல் முறையீடு செய்யவேண்டும் என்பதும் இயல்பான எதிர்வினையாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, வன்முறை கலந்த பிரச்னைகள் எதுவும் வெடிக்காததில் பெருமூச்சு விட்டு, இதை இப்படியே ஏற்கவேண்டும் என்று சில முஸ்லீம்கள் சொல்வதும் இயல்பாக உள்ளன.

இதற்கு மாறாக, வழக்கம்போல இடதுசாரிகளும் பெரியாரிஸ்டுகளும் முஸ்லிம்களுக்குகூட இல்லாத கோபத்துடனும் ஆத்திரத்துடனும் எதிர்வினை செய்கின்றனர். இது விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த உளவியலும் புரிந்துகொள்ளக்கூடியதே. அதைப் புரிந்துகொள்வது அல்லது விமரிசிப்பதைவிட, பிரச்னையின் தீர்வு என்று ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தோமானால் அதற்கு என்ன வகையில் இந்த எதிர்வினைகள் உதவ முடியும் என்று பார்க்கவேண்டியதே முக்கியம் என்று நினைக்கிறேன். அது குறித்துப் பின்பாதியில் வருகிறேன்.

இந்த தீர்ப்பு நியாயமா என்று, நமக்கான நியாயங்களை வைத்து, ஆய்ந்து உறுதியான முடிவுக்கு வர, தீர்ப்பின் 1,000 பக்கங்களையும் படிக்க வேண்டும். அந்த அளவுக்குக் கறார்த்தனம் கொண்ட மிக நிச்சயமான முடிவு தேவை என்று எனக்கு தோன்றாததால், சாராம்சமாக அறிந்ததையே எடுத்துக்கொள்கிறேன். அப்படி நோக்குகையில் இந்துத்துவச் சார்பு அரசியல் உடையவர்களைத்தவிர, மற்ற எல்லோருக்குமே இந்தத் தீர்ப்பு ஏதோ ஒருவகையில் நியாயமற்ற தீர்ப்பாகவே தோன்றமுடியும் என்றே நினைக்கிறேன். இந்த நியாயமற்ற தன்மை ‘அயோக்கியத்தனம்’ என்று ஆத்திரப்படுவதிலிருந்து, நிதானமாக விமர்சனம் செய்வதுவரை அவரவர் அரசியல்/அற/அறிவு நிலைப்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடும். இந்தத் தீர்ப்பு குறித்த விமரிசனங்களைப் பலர் முன்வைத்துவிட்ட நிலையில், என் பார்வையில் தோன்றுவதைச் சுருக்கமாக இங்கே தொகுக்கிறேன்.

-நாளை வரும்.