போதி தருமரின் குறைப்பிரசவம் – உபயம்: முருகதாஸ் அன்கோ

போதி தர்மர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். குங்ஃபூ கலையையும் ஜென் பாரம்பரியத்தையும் ஆரம்பித்தவராக சீனர்களால் போற்றி வணங்கப்படுபவர். மருத்துவக் கலையிலும் சிறந்து விளங்கியிருக்கிறார். இவ்வளவு பெருமைக்கு உரியவர் ஒரு தமிழர். ஆனால், தமிழ் நாட்டில் அவரைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை என்ற விஷயம் இயக்குநரைச் சிந்திக்க வைத்திருக்கிறது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்படும் வெகு ஜன ஊடகம் ஒன்றில் இப்படியான அக்கறைகள் இடம்பெறுவது நல்ல பலனைத் தர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை வீணடித்திருக்கிறார்.

தமிழ் நாட்டை ஆண்ட மற்றவர்களால் தமிழனின் பெருமை நமக்குத் தெரியாமல் போய்விட்டது என்கிறார் இயக்குநர். விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் ஆண்டதால் ஏற்பட்ட இழப்பை விட நம்மை நாமே ஆண்டுகொண்டிருக்கும்போது ஏற்படும் அழிவுகள்தான் அதிகமாக இருக்கின்றன. மற்றவர்கள் ஆண்டபோது நம் சிற்பக் கலையில் ஆரம்பித்து எந்தப் பாரம்பரியக் கலையும் அழிந்துவிட்டிருக்கவிலை. நாம்தான் கோயில் சிற்பங்களை மணல் வீச்சு மூலமும் அரிய ஓவியங்களை வெள்ளை அடித்தும் அழித்து வருகிறோம். தாய் மொழிக் கல்வியை ஓரங்கட்டிவிட்டு ஆங்கிலத்தின் வால் பிடித்துக் கொண்டு நாம்தான் செல்கிறோம். சித்த மருத்துவத்தைப் புறக்கணித்துவிட்டு அலோபதிக்கு நாம்தான் அடிமையாக இருக்கிறோம். வேட்டி, சேலையைத் தூக்கி எறிந்துவிட்டு நம் தட்ப வெப்பத்துக்குப் பொருந்தாத ஆடையை அணிந்து கொண்டு நாம்தான் வலம் வருகிறோம். மற்றவர்களைப் பழிப்பதற்கு முன்னால் நாம் நம்மை விமர்சித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுதான் உண்மை.

இந்தியன்னா வெளிநாட்டுல மதிக்க மாட்டேங்கறான்… தமிழன்னா இந்தியால மதிக்க மாட்டேங்கறான் என்று ஒரு இடத்தில் வசனம் வருகிறது. ஆனால், தலித்துன்னா தமிழ் நாட்டுல கூட மதிக்க மாட்டேங்கறான் என்ற இன்னொரு உண்மையும் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு நாட்டோட ஒன்பது நாடு மோதறது வீரம் இல்லை… அது துரோகம்… தமிழன் திருப்பி அடிக்கணும் என்று தூண்டிவிடுபவர் அந்த 9 நாடுகளில் தாய்த் தமிழகமும் ஒண்ணு என்று சுய விமர்சனத்தையும் சேர்த்து அல்லவா வைத்திருக்க வேண்டும். அல்லது இலங்கையில் அந்தப் படத்தை வெளியிடும்போது அந்த வீர வசனத்தை வெட்டி விட்டு வெளியிடுவதில் பச்சை துரோகமும் வர்த்தக தந்திரமும் மட்டும்தானே இருக்கிறது.

போதி தருமரின் வாழ்க்கை நிகழ்வுகளாகப் படத்தில் இடம்பெறும் வரலாற்றுக் காட்சிகளை முதலில் பார்ப்போம்.

தன் குருமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அவர் போன நேரத்தில் சீனாவில் மிகப் பெரிய நோய் ஒன்று தாக்கி ஒரு கிராமத்தில் இருக்கும் பலரும் செத்துவிழுகிறார்கள். போதி தர்மர் அந்த நோய்க்கு மருந்து தயாரித்து அவர்களைக் காப்பாற்றுகிறார். சீனா முழுவதும் அந்த நோய் பரவியிருந்ததால் பலர் வந்து அந்த மருத்துவத்தைக் கற்றுக்கொண்டு செல்கிறார்கள். அடுத்ததாக அந்த கிராமத்தினருக்கு ஒரு கொள்ளைக் கூட்டத்திடமிருந்து ஆபத்து வருகிறது. தனி ஆளாக போதிதருமர் நிஜமாகவே புழுதி பறக்க சண்டை போட்டு அவர்களைத் தோற்கடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், நோக்கு வர்மத்தின் மூலம் அந்தக் கொள்ளைக்காரர்களை வசியம் செய்து அவர்களைத் தமக்குள்ளாகவே அடித்துக் கொண்டு மடியும்படியும் செய்கிறார். பலவருடங்கள் கழிகின்றன. போதி தர்மர் தாய்நாடு திரும்ப விரும்புகிறார். அவருடைய உடல் தங்கள் நாட்டிலேயே புதைக்கப்பட்டால் நோய் நொடிகளில் இருந்து தங்கள் நாடு காப்பாற்றப்படும் என்று நினைத்து சீனர்கள் அவருக்கு விஷம் கலந்த உணவைத் தருகிறார்கள். உணவில் விஷம் கலந்திருப்பது தெரிந்த பிறகும் அதை புன்முறுவலுடன் எடுத்துச் சாப்பிட்டு உயிர் துறக்கிறார் போதிதருமர். இதுதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை.

போதி தருமரைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களில் எது உண்மை எது புனைவு என்று உறுதியாக எதுவும் சொல்லிவிடமுடியாது. அந்தவகையில் ஒருவர் தனக்கு உகந்த ஒரு கதையை உருவாக்கி முன் வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்தக் கதையானது நம்பும்படி இருக்க வேண்டும்.

உதாரணமாக, போதி தர்மர் தமிழகத்தில் இருந்து சுமார் 17 வயதில் புறப்பட்டுப் போயிருக்கிறார். அப்போது அவர் எந்தப் புத்தகத்தையும் எழுதியிருக்கவில்லை. ஆனால், படத்தில் 17 வயதில் சீனாவுக்கு அவர் புறப்படும்போதே ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகக் காட்டப்படுகிறது. அதிலும் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த அரிய புத்தகத்தை ஏதோ லெண்டிங் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்வதுபோல் கதாநாயகி ஜோல்னா பையில் போட்டு எடுத்துச் சென்று படித்துவிட்டுத் திருப்பிக் கொடுக்கிறார். அதில் ஜெனட்டிக் மெமரி பற்றியெல்லாம் எழுதப்பட்டிருப்பதாக அடித்துவிடுகிறார். சீனாவில் கொடிய நோய் ஏற்பட்டது போதிதருமருடைய குருவுக்குத் தெரிந்திருந்ததாகவும் அதைக் குணபடுத்தத்தான் அங்கு போனதாகவும் இஷ்டத்துக்கு ஒரு கதை புனைகிறார்.

அடுத்ததாக, போதி தருமர் போடும் சண்டை இருக்கிறதே… சந்திரமுகி படத்தின் அறிமுகக் காட்சியில் சூப்பர் ஸ்டார் காலாலேயே புயலை வரவைத்ததுபோல் போதிதருமர் இரண்டு கைகளிலும் தலா இரண்டு விரல்களால் ஒரு சுழற்று சுழற்றி மினி புயலை உருவாக்கி அதைக் குறிபார்த்து எதிரிகள் மீது ஏவியும்விடுகிறார். போதிதருமரை தமிழ்ப்பட ஹீரோ ரேஞ்சுக்கு கீழிறக்கியதைத்தான் உலகத் தமிழர்கள் நெஞ்சு நிமிர்த்திப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டுமா? கைக்குக் கிடைக்கற கதாபாத்திரம் யாரா இருந்தா என்ன… கயிற்றைக் கட்டி சண்டை போட வைக்கத்தான் தெரியும் என்பதை ஊரறிய உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதை எப்படி ஒரு தமிழன் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்?

போதி தருமர் குங்ஃபூவின் ஒரு வகையான ஷாவோலின் குங்ஃபூ என்ற தற்காப்புக் கலையை உருவாக்கியவராகச் சொல்லப்படுகிறார். அதாவது, ஷாவோலின் மடாலயத்தில் இருந்த துறவிகள் மிகக் கடுமையான விரதம், புலனடக்கம் போன்றவற்றால் உடலளவில் மிகவும் பலவீனமாக இருந்ததைப் பார்த்த போதிதருமர் அவர்களுக்கு உடலைப் பலப்படுத்த சில உடற்பயிற்சி வழிமுறைகளைக் கற்றுத் தந்திருக்கிறார். அதுவே பின்னாளில் குங்ஃபூ கலையாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அது யாரையும் கொல்வதற்காகப் பயன்படுத்தப்படுவது அல்ல. வர்மக் கலையில் கூட எதிரியின் உடலின் சில பாகங்களைச் செயல் இழக்க வைப்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் போதிதருமர் நோக்கு வர்மத்தை பயன்படுத்தி எதிரிகள் பலரைக் கொல்லுகிறார். இது அகிம்சையை போதித்த புத்தரின் வழி வந்த போதி தருமருக்கும் எதிரானது… வர்மக் கலைக்கும் முரணானது.

இதைவிட அசட்டுத்தனம் என்னவென்றால் அந்த வர்மக் கலைக்கு ஒரு சில வரையறைகள் உண்டு. குறிப்பிட்ட தொலைவுக்குள் இருக்கும் ஒருவரின் கண்களைப் பார்த்துத்தான் வசியம் செய்ய முடியும். இந்தப் படத்தில் காட்டியிருப்பதுபோல் 50-60 அடி தொலைவில் இருப்பவர்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும்போக, வசியம் செய்யப்பட்டவரை நாம் சொல்வது போல் நடக்க வைக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், நம் மனதுக்குள் என்ன இருக்கிறதோ அதையெல்லாம் செய்யும்படி வைக்க முடியாது. இதைச் செய் அதை செய் என்று உத்தரவு கொடுத்த பிறகுதான் அதைச் செய்வார். இந்தப் படத்திலோ கண்ணால் பார்த்தே எல்லாவற்றையும் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

அதிலும் வில்லன் இந்த வர்மக் கலையைப் படுத்தும் பாடு இருக்கிறதே சகிக்க முடியவில்லை. போலீஸ்காரரை துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவைக்கிறார். சக போலீஸ்காரர்களைக் கொல்ல வைக்கிறார். ஆட்டோக்காரரைப் படு வேகமாக வாகனத்தை ஓட்ட வைக்கிறார். தெருவில் இருக்கும் அனைவரையும் தங்கள் கைவசம் இருக்கும் வாகனத்தை அதி வேகமாக ஓட்டிச் சென்று நாயக, நாயகியைக் கொல்ல முயற்சி செய்ய வைக்கிறார். இதாவது பரவாயில்லை… பல வருடக் கடின பயிற்சிக்குப் பின் கைவரக்கூடிய குங்ஃபூ கலையை ஒரு பெண்ணை அரை விநாடி உற்றுப் பார்ப்பதன் மூலமே கற்றுக் கொடுத்துவிடுகிறார். ரோட்டோரமாக பாவமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி அடுத்த விநாடியே பறந்து பறந்து சண்டை போட ஆரம்பித்துவிடுகிறார்.

இது சாத்தியமென்றால் பயோ வார் என்று கார்ப்பரேஷன் ஊழியர்போல் நாய்க்கு ஊசிபோடற வேலையில் எல்லாம் இறங்க வேண்டிய அவசியமே இல்லையே… இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரையும் உற்று உற்றுப் பார்த்தே இந்திய விரோதச் செயல்களில் ஈடுபட வைத்துவிடலாமே…

இது இப்படியென்றால், போதி தருமரின் மரணம் தொடர்பான காட்சிகள் அதைவிட மோசம். கிடைத்திருக்கும் ஆவணங்கள், புனைவுகளின் அடிப்படையில் அவர் மிகவும் முதியவரான பிறகுதான் மரணமடைந்திருக்கிறார். ஒரு சில ஆவணங்களில் 75 வயதில் இறந்ததாகவும் சிலவற்றில் 150 வயதில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தில் ஒரு துளி சுருக்கம் கூட இல்லாமல், சுமார் 40-50 வயதில் இருக்கும்போதே இறந்ததுபோல் காட்டியிருக்கிறார்கள். சரி அதாவது பரவாயில்லை பிரம்மச்சரியம், சைவ உணவு, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றால் இளமையாகவே இருந்திருந்திருப்பார் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவருடைய மரணத்துக்கு முருகதாஸ் அன்கோ யோசித்திருக்கும் காரணம் இருக்கிறதே… சகிக்கவில்லை.

போதி தருமர் தாய் நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறாராம். அவருடைய மரணம் சீனாவில் நடந்து, உடல் அங்கேயே புதைக்கப்பட்டால், சீனா நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற முடியும் என்று சீனர்கள் நம்புகிறார்களாம். அதனால் அவருடைய சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து கொடுத்துவிடுகிறார்களாம். அவர்கள் கொடுத்த சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பது தெரிந்தும் அன்பே உருவான போதி தருமர் புன்முறுவலுடன் அதைச் சாப்பிட்டு அவர்கள் விருப்பப்படியே உயிர் துறக்கிறாராம். என்ன இழவு காரணம் இது… ஒரு துறவி தங்களுடைய ஊரிலேயே சமாதி அடைய வேண்டும் என்று ஒரு சமூகத்தினர் விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் இப்படியா செய்வார்கள்? விஷம் கொடுத்தாலும் அதை புன்முறுவலுடன் சாப்பிடும் ஒருவரை ஊருக்குப் போகவேண்டாம்; இங்கேயே உயிர் பிரியும் வரை வாழுங்கள் என்று சொன்னால் கேட்கமாட்டாரா?

விஷயம் என்னவென்றால், உண்மைக் கதை கொஞ்சம் விபரீதமானது. போதி தருமர் தனது வாரிசாக ஒருவரை நியமிக்கிறார். அது பிற சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரப் போட்டியில் போதிதருமருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். இதை அறிந்து வேதனைப்படும் போதி தருமர், சீடர்கள் தரும் விஷத்தை மிகுந்த வேதனையுடன் உண்டு உயிர் துறக்கிறார். இது அவருடைய மரணம் பற்றிச் சொல்லப்படும் ஒரு கதை. இன்னொரு கதையில் அவர் ஒரு கூட்டுக் கொலை ஒன்றில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தெளிவான வரலாறு இல்லாத நிலையில் ஒரு நிகழ்வை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடந்த ஒரு நிகழ்வுக்கு மறு வாசிப்பு கொடுப்பதும் நியாயமான ஒரு செயல்தான். ஆனால், அந்தப் புதிய கோணம் வலுவானதாக இருக்க வேண்டும். நம் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். முட்டாள்தனத்தை முன்வைப்பதாக இருக்கக்கூடாது.

அடுத்ததாக விஞ்ஞானக் காட்சிகள்…மரபணுவில் பெரிய கண்கள், சிவந்த தேகம், சுருள் சுருளான முடி என ஒரு மனிதரின் உடல் கூறு அம்சங்கள்தான் பதிவாகி இருக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறன் ஒருவருக்கு இருந்தால் அதுவும் மரபணு வழியாக கைமாற்றித் தரப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஒருவர் கற்றுக்கொண்டதால் கிடைத்த அறிவை அந்த வம்சாவளியில் வந்த இன்னொருவருக்கு அப்படியே பரிமாற்றித் தருவது மிகவும் சிரமம். நான்கு வயதுக் குழந்தை சற்றும் சம்பந்தமில்லாத ஒரு மொழியைத் தெளிவாகப் பேசுகிறது… முன் பின் பார்த்திராத ஒரு இடத்தைப் பற்றிய தகவல்களை ஒருவர் துல்லியமாகச் சொல்கிறார் என என்னதான் பூர்வ ஜென்ம வாசனை தொடர்பாக பல கற்பனைக் கதைகள் உலவுகின்றன என்றாலும் நவீன விஞ்ஞானம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தில் வரும் இளம் பெண் விஞ்ஞானி, பூர்வ ஜென்ம வாசனையை ஜெனட்டிக் மெமரி என்று நவீன வார்த்தைகளில் முன்வைக்கிறார்.

அதிலும் மரபணுவில் மறைந்து கிடக்கும் திறமைகளை பன்னிரண்டே நாட்களில் வெய்யில் படாமல் சிகிச்சை செய்து தூண்டிவிடுவது என்பது விஞ்ஞானத்தின் அடிப்படையான பகுத்தறிவுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு ஊசியைப் போட்டு உடம்பெல்லாம் ஒயரைச் சொருகி வைத்து தண்ணிக்குள் தொங்கவிட்டால் மரபணு சிலிர்த்துக் கொண்டு எழுந்துவிடும் என்று விஞ்ஞான புருடாவிட நிஜமாகவே நிறைய தில் வேண்டும்.

அதிலும் 12 நாட்கள் வரை வெய்யிலே படக்கூடாது என்பதையும் மீறி தமிழ் கதாநாயகன் என்பதால் 11வது நாளிலேயே மரபணு தூண்டப்பட்டுவிடுகிறதாம். இவ்வளவு அசாதாரண ஆராய்ச்சியை சென்னைக்குள் யாருக்கும் தெரியாத காட்டுக்கு நடுவில் இருக்கும் ஓர் சோதனைச்சாலையில் சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களாம்.

அப்பறம் போதி தருமரின் வம்சாவளிகள் தொடர்பான ஆராய்ச்சியை இளம் பெண் விஞ்ஞானி ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், போதி தருமரின் டி.என்.ஏ. பெருமளவுக்கு ஒத்துப்போகும் நாயகனிடம் மட்டும் அதுபற்றி எதுவுமே சொல்லாமல் சுற்றிச் சுற்றி வருகிறாராம். என்ன எழவுக்கு? கதாநாயகனின் குடும்பத்தினரிடம் சொன்னதுபோல் அவனிடமும் விஷயத்தைச் சொல்லிப்புரிய வைத்திருந்தால் உடனே ஆராய்ச்சிக்கு சம்மதித்திருப்பானே… போதி தருமரை உயிர்ப்பிக்க ஆப்பரேஷன் ரெட் என்ற ஒன்று நடக்கும்வரை ஒன்றரை வருடம் காத்திருக்கத் தேவையே இல்லையே… மளமளவென வேலைகளைச் செய்து முடித்திருக்க வேண்டாமா? அதுவும் சென்னையில் ஐ.ஐ.டி. கேம்பஸில் யாருடைய உதவியும் இல்லாமல் 12 நாட்களில் அந்த ஆராய்ச்சியைச் செய்ய முடியுமென்றால் எதற்காக ஒவ்வொரு அரசாங்கத்துக்காக பேப்பர் அனுப்பி அனுமதிக்குக் காத்திருக்க வேண்டும்? நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்லையே மேடம்.

அப்பறம் வில்லனுக்கு உதவும் தமிழக விஞ்ஞானி மிகவும் ரகசியமான மின்னஞ்சல்களையெல்லாம் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் தன் கம்ப்யூட்டரில் வைத்திருப்பாராம். பாஸ்வேர்டை ஒவ்வொரு தடவையும் அடிக்கச் சோம்பல்பட்டு பலர் அப்படிச் செய்வது உண்டு. ஆனால், அதி ரகசியங்கள் உள்ள இ.மெயில் அக்கவுண்ட்டை அப்படித் திறந்து போடமாட்டார்கள். சீன அரசு 300 கோடி ரூபாய் தந்த விவரத்தை மெயிலில் தெரிவிக்கிறார்களாம். அதை அவர் அப்படியே மின்னஞ்சலில் பத்திரமாக வைத்திருக்கிறாராம். இப்படிப்பட்ட ஆளை வெச்சுக்கிட்டா இந்தியாவையே அழிக்கப்போறாங்க? அந்த பேராசிரியர் வில்லனோட ஆளுன்னு தெரிஞ்சதும் கதாநாயகன் நாலு தட்டு தட்டினாரு. உண்மையையெல்லாம் தெரிஞ்சிடுச்சுன்னு கதையைக் கொண்டு போயிருந்தாலே போதுமே… எதுக்கு இந்த மெனக்கெடல்கள் எல்லாம்.

நான் எழுதினால் திரைக்கதையை நிச்சயம் வேறுவிதமாகத்தான் எழுதுவேன். அதை வேண்டுபவர்கள் சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் ஒரு கனமான கவரை அனுப்பி வைக்கவும்.

0

– மகாதேவன்

வெறும் கை

சில நாள்களுக்கு முன்பு என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். அவரது ஒரு கண் மட்டும் பால்வெள்ளையாய் இருந்தது. கராத்தே பயிற்சியின்போது ஏற்பட்டது என்று புன்னகைத்தார். எனக்கு சற்றுச் சந்தேகமாக இருந்தது. அதைச் செய்தவன் என்று தனுஷ் மாதிரி ஒரு பையனைக் காட்டியபோது இன்னும் சந்தேகமாக இருந்தது. குறைந்தது சத்யராஜ் மாதிரியாவது எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கராத்தே பயில தனுஷ் மாதிரி இருந்தால்கூட போதும்தான்.

எல்லாருக்கும் அறிமுகமானது போல் எனக்கும் கராத்தே சினிமாவில்தான் அறிமுகமானது. பாளையம்கோட்டை கலைவாணி தியேட்டரில் ஜெயபாரதி முண்டுடுத்தியும் இல்லாமலும் குளிக்கும் ரதி நிர்வேதங்களுக்கு நடுவே அவ்வப்போது வெளியிடும் சாவலின் வெர்சஸ் லாமா வகைப் படங்களில் அறிமுகமானதுதான் கராத்தே மற்றும் அதைப் போன்ற போர்க் கலைகள். நான் காலையில் ரதி நிர்வேதம் பார்த்துவிட்டு மதியம் ரோட்டோரக் கடையில் காய்ந்த புரோட்டா சாப்பிட்டுவிட்டு புரூஸ் லீயையும் பார்ப்பேன்.

புரூஸ் லீ நடித்த என்டர் ட்ராகன், பிஸ்ட் ஒப் ப்யூரி போன்ற படங்கள்தான் உலகமெங்கும் போர்க் கலைகள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தின என்று தைரியமாகச் சொல்லலாம். ஆனால் 1930களிலேயே அதைப் பற்றி ஹாலிவுட்டில் படங்கள் வரத் துவங்கிவிட்டன என்றாலும், போர்க் கலைகள் என்று பொதுவாகச் சொன்னாலும் அவை பெரும்பாலும் சீனப் போர்க் கலைகளே. அதுவரை அவை பிரபலம் ஆகாததற்கு வேறு காரணங்களும் இருந்தன.

சீனப் போர்க் கலைகளை, ஆசியர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது தடுக்கப் பட்டிருந்தது. புரூஸ் லீக்கே அவர் அம்மா பாதி வெள்ளையர் என்பதால் சொல்லித் தரத் தயங்கினார்கள். புரூஸ் லீ அமெரிக்காவில் மற்ற வெள்ளையர்களுக்குச் சொல்லித் தந்ததையும் கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு சவால் போட்டியில் அவர் வென்ற பிறகே அவரை அனுமதித்தார்கள் என்பார்கள். இது தவிர சீனாவில் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் பழமையான எல்லா சீனக் கலைகளையும் அவர்கள் வெறுத்தார்கள். அதன் பிறகு மனதை மாற்றிக் கொண்டு அவற்றை வளர்க்கவும் பரப்பவும் முயற்சி எடுத்தார்கள்.

பிஸ்ட் ஒப் ப்யூரி 1971ல் வந்தது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ‘வாட்டர்கேட் புகழ்’ நிக்சன் சீனாவுக்கு விஜயம் செய்தார். அவருடன் பெரிய பத்திரிகையாளர் மற்றும் அறிஞர் கூட்டமும் சென்றது. அங்கு அவர்களுக்கு சீனத்தின் பாரம்பரியப் பெருமைகள் அணிவகுத்துக் காட்டப்பட்டன. எங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒன்றுமே இல்லை, இன்னும் துவங்கக்கூட இல்லை என்பது சூசகம் செய்யப்பட்டது. மயக்க மருந்தே இல்லாமல் அக்கு பங்க்சர் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்து காட்டப்பட்டது. நிக்சனின் ஒற்றைத் தலைவலியைக்கூட சரி பண்ணியதாகச் சொல்லப் படுகிறது.

நிக்சன் என்றால் நமக்கு ஊழல்தான் நினைவு வருகிறது. ஆனால் இந்த நபர்தான் வியட்நாம் யுத்தத்தை நிறுத்தியவர். சோவியத்துடன் நட்புறவுக்கு முயற்சி செய்தவர். சீனத்துக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி. ரொம்ப மோசமில்லை. ஆள் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அமெரிக்காவை சீனாவிற்குத் திறந்துவைத்தார். இந்த சீனப் பயணத்தின் மூலமாக சீனாவும் ஓரளவாவது மேற்கிற்கு திறக்கப்பட்டது. ஏற்கெனவே ஜப்பானியத் தொடர்புகள் மூலமாக சீனக் கலைகள்மேல் சற்று ஆர்வம் இருந்தது தீயைப் போல் பற்றிக் கொண்டுவிட்டது. இதற்கு நல்லதொரு வாசலாக இங்கிலாந்தின் கையில் அப்போது இருந்த ஹாங்காங்கில் மேற்கும் கிழக்கும் கைக் குலுக்கிக்கொண்டன. அங்கிருந்து அமெரிக்காவிற்கு சீன உணவிலிருந்து சீனப் படங்கள், சீனக் கலைகள், சீன மருத்துவம் என எல்லாம் ஏற்றுமதியாகின. அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.

1973 -புரூஸ் லீயின் என்டர் தி டிராகன் வந்தது அவ்வளவுதான் அமெரிக்காவே புரூஸ் லீ ஜுரத்தில் எரிந்தது. நாடெங்கும் போர்க் கலைகளைப் பயிற்றுவிப்பவர்கள் தோன்றி அமெரிக்க மக்களை பெண்டு நிமிர்த்தினார்கள். போர்க் கலைப் படங்கள் வரிசையாக வந்து வசூலை அள்ளிக் குவித்தன. அது இன்றைக்கு அங்கு மில்லியன்கள் புழங்கும் பெரியதொரு வணிகம்.. அங்கு புரூஸ் லீ ஒரு சிறிய தேவன் போல் ஆனார். அவரைப் பற்றி நிறைய புராணங்கள் புனையப்பட்டன. அவரது மரணம்கூட ஒரு பெரிய காவியத்தின் முடிவு போலவே விவரிக்கப் படுகிறது.

இந்தியாவுக்கும் இந்தப் படங்கள் வந்தன. ஏற்கெனவே கர்லாக் கட்டை தூக்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அவற்றைக் கடாசிவிட்டு பைஜாமா அணிந்து கராத்தே கற்றுக் கொல்லப் போனார்கள். எழுத்துப் பிழை இல்லை. கொல்லதான். அமெரிக்க ராணுவம்கூட இவற்றைப் பயின்றது. அமெரிக்காவில் எந்த அலை அடித்தாலும் இந்தியாவிலும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் அதே அலை அடிக்கும். இப்போது இணையம் சாட்டலைட் எல்லாம் வந்துவிட்டதால் இந்த இடைவெளி குறைந்திருக்கிறது. ஆனால் எந்த ஒரு போக்கையும் ஆரம்பிக்கிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் பிரான்சிலிருந்து இவற்றைக் கடன் வாங்குகிறார்கள் என்றொரு கிசுகிசுப்பு உண்டு. உண்மையா தெரியவில்லை.

இந்தியாவிலும் கராத்தே அலை புரூஸ் லீயோடு வந்தது. ஒரு தலைமுறையே கராத்தே கற்றுக் கொள்ள முயற்சித்தது – என்னையும் சேர்த்து. போர்க் கலைகளில் பல வகைகள் உண்டு. கராத்தே அதில் ஒரு வகைதான். ஆனால் எல்லாவற்றையுமே கராத்தே என்றே நாம் புரிந்துவைத்திருந்தோம். உண்மையில் ப்ரூஸ் லீ போட்டதே கராத்தே கிடையாது. அவர் அதன் பெயர் ஜி க்வண்டோ என்று சொல்லிக் கொண்டார். வூ சு, குங் பூ என்று பல வகைப் போர்க் கலைகளின் அவியல் இது.

போர்க் கலைகளில் அகிடோ, ஜூடோ, டேக் வண்டோ, குங் பூ, தை சி, சம்போ நிஞ்சா, கராத்தே கெஞ்சு, கெண்டோ எனப் பல வகைகள் உண்டு. பெரும்பாலும் ஆயுதமற்ற சண்டை முறைகள். எனினும் நிஞ்சா, களரி போன்ற ஆயுதச் சண்டை முறைகளும் உண்டு. அதேபோல் சீனக் கலைகள் மட்டுமல்லாது ஜப்பானியக் கொரிய பிரசிலிய இந்திய மரபுக் கலைகள் எனத் தனித்தனியாக உண்டு. கராத்தே ஜப்பானியர்களின் கலை. களரி நம்முடையது.

உண்மையில் மொத்த சமாச்சாரமும் இந்தியாவிலிருந்து போனது என்றொரு கதை உண்டு. அதுவும் தமிழ் நாட்டிலிருந்து போனதாகச் சொல்கிறார்கள்.

போதி தர்மர் என்ற காஞ்சிபுரத் துறவி சீனத்துக்கு மதத்தைப் பரப்பப் போனபோது, அங்கிருந்த பௌத்தத் துறவிகள் எல்லாம் உட்கார்ந்தே தியானம் செய்து செய்து, வட காற்றில் அலையும் சருகுகள் போலிருப்பதைக் கண்டு, ஒரு உடற்பயிற்சியாகவும், அப்போது சீனா முழுக்க சுற்றிக் கொண்டிருந்த கொள்ளைக்கார பிரபுக்களிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கலையாகவும் இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்கு நம் பக்கமிருந்து ஓர் ஆதாரமும் கிடையாது. எல்லாம் சீனர்கள் எழுதியதே.

தமிழ்நாட்டில் பௌத்தம் எந்த அளவில் இருந்தது என்பதையே நாம் சரியாகப் பதிவு செய்யவில்லை. தலைவன் தலைவி ஊடல், களவு கற்பு பசலை உசிலை என்றிருந்துவிட்டோம். போதிதர்மர் ஒரு பல்லவ குல இளவரசன் என்றும் போர்க் கலைப் பிராமணர் என்றும் இரு வேறு அனுமானங்கள் உலவுகின்றன. அந்தச் சமயத்தில் சேர தேசத்துப் பிராமணர்கள், களரி வர்மம் போன்ற அடிமுறைகளில் சிறந்து விளங்கினார்கள். பொன்னியின் செல்வனில் ஆதித்திய கரிகாலனைக் கொன்றதாக வரும் ரவிதாசன் கிரமவித்தன் நினைவிருக்கிறதா? அவன் ஒரு கேரள நம்பூதிரியே. காந்தளூர்ச் சாலை என்று அவர்களது படைப் பயிற்சி நிலையத்தை, ராஜ ராஜ சோழன் பின்னாளில் அழித்தான். ஆகவே போதிதர்மர் பௌத்தத்துக்கு மாறிய ஒரு பிராமணனாக இருந்ததற்கு வாய்ப்புகள் உண்டு.

இந்த போதிதர்மர் மஞ்சள் ஆற்றை ஒரு மூங்கில் கீற்று மீது நின்றுகொண்டே கடந்து ஷாவலின் என்ற இடத்துக்குப் போய் ஒரு மடத்தை நிர்ணயித்து அங்கு காந்தளூர்ச் சாலை போலவே ஒரு பெரிய போர்க் கலைப் பயிற்சி நிலையத்தை நிறுவினார். அங்கு அவருக்கு இன்னமும் ஒரு கோயில் இருக்கிறது. அங்கு இன்னமும் அவரது வழியென்று சொல்லும் சீடப் பரம்பரை இருக்கிறது. அடிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.

அங்கு மட்டுமல்ல, ஜப்பானிலும் போதி தர்மர் உண்டு. அங்கு போதி தர்மர் தருமா என்றழைக்கப்படுகிறார். நம்மூர் செட்டியார் பொம்மைகளைப் போல் உருண்டையான அவரது சிகப்புப் பொம்மைகள் அங்கு லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். வருடத்தில் ஒருநாள் இப்படி சேர்ந்த போதிதர்மர் பொம்மைகளை ஓர் இடத்தில் போகி போல் குவித்து எரித்துவிட்டு புது பொம்மைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.

வேறு அடிமுறைகளும் இந்தியாவில் இருந்தாலும் கராத்தேதான் இந்தியாவில் பிரபலம். அதற்கான தேசிய அளவு போட்டிகள் உண்டு. சிறு நகரங்களில்கூடப் பயிற்சி தருபவர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே வருடக் கணக்கில் பயில்பவர்கள் உண்டு. வெள்ளை பெல்ட், மஞ்சள் பெல்ட் என்று ஆரம்பித்து கருப்பு பெல்ட் வரை பல நிலைகள் உண்டு. பெண்களும் பயிலும் போர்க் கலை இது. தெளிவாக வரையறுக்கப்பட்ட பயிற்சி முறைகளும் மூச்சுப் பயிற்சிகளும் உணவு வரையறைகளும் மனப் பயிற்சிகளும் உண்டு.

கராத்தே என்றால் வெறும் கை என்று அர்த்தம். வெறும்கைப்போர் அது. வெறுமனே தாக்குவது மட்டுமல்ல. தாக்கும் முன்பு அவர்கள் செய்யும் கட்டாக்கள் எனப்படும் அசைவுகள் ஒரு நடனத்தைப் போலவே இருக்கும். என் நண்பர் -அவர் ஒரு கருப்பு பெல்ட் மாஸ்டர்-அதை ஒரு வாழ்க்கை முறை என்பார்.

பொதுவாகவே இந்தக் கலைகளில் பௌத்தத்தின் செல்வாக்கு உண்டு. தத்துவ நோக்கு உண்டு. புரூஸ் லீக்கு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியின் தத்துவத்தில் எல்லாம் பரிச்சயம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என் நண்பர் ஒரு கராத்தே மாஸ்டர் எதற்கும் பதற்றப் படக் கூடாது என்பார். நான் இயல்பிலேயே அதிகம் படபடப்பவன். ஆகவே அதற்கு ஒரு சிகிச்சையாகவே அவர் என்னையும் கராத்தே கற்றுக் கொள்ளச் சொன்னார். ஆசை யாரை விட்டது? ஆனால் நான் முட்டைகூட சாப்பிட மாட்டேனே என்றேன். அது ஒரு விசயமில்லை என்றார் அவர். அவரும் ஒரு சைவ உணவாளர்தான் என்று தெரிந்ததும் எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது.

முதலில் ஒரு தயாரிப்பாக அவர் இரு சிறிய மணல் மூட்டைகளை என்னிடம் கொடுத்து கையில் கட்டிக் கொண்டு அலையும்படிச் சொன்னார். அது என் கைகளைப் பலப் படுத்த உதவும் என்று சொன்னார். நான் அன்று முழுவதும் அந்த மூட்டைகளோடு திரிந்தேன். அன்றிரவு அந்த மூட்டைகளோடுதான் தூங்கினேன். அன்றிரவு கனவில் சக் நாரிசை (chuck norris – புரூஸ் லீயின் சீடர், நடிகர்) மயிர்க் கூச்செறியும் அலறல்களோடு எகிறி எகிறி மிதித்தேன்.

மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது எனது இரண்டு தோள்பட்டைகளையும் தூக்க இயலவில்லை. கடுமையான வலி. இரண்டும் வீங்கி விட்டன. டாக்டரிடம் செல்லவேண்டியதாயிற்று. அதன்பிறகு நான் ஒருபோதும் கராத்தே கற்றுக் கொள்வது பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஜாக்கி சானின் கராத்தே கிட் படம் பார்த்தபோதுகூட.