சிந்து சமவெளி நாகரிகம் – IV

Shiva_Pashupatiபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 27

மத நம்பிக்கைகள் 

புரிந்துகொள்ள முடியாத எழுத்துககள் காரணமாக, சந்து சமவெளியினரின் சமூக வாழ்க்கை, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள, நாம் கலைப்பொருட்கள், இலச்சினைகள் ஆகியவற்றைத்தாம் நம்பவேண்டியிருக்கிறது.

ஏராளமான இலச்சினைகளில் இருக்கும் ஓர் உருவம் பசுபதி. இது சிவபெருமானைக் குறிக்கிறது என்கிறார்கள். பசு  என்றால், வடமொழியில் ஜீவராசிகள் என்று அர்த்தம்: பதி  என்றால் தலைவர். அதாவது, எல்லா ஜீவராசிகளையும் காப்பவர், அவர்களின் தலைவர். படைப்பின் மூலகுரு, ஆண் வடிவம். சிந்து சமவெளியில் கிடைத்த இலச்சினையில் பத்மாசனம் என்னும் யோகா போஸில் உட்கார்ந்திருக்கிறார். மூன்று முகங்கள், தலையில் பெரிய கொம்பு. அவரது வலது பக்கம் ஒரு காண்டாமிருகம், ஒரு எருமை: இடது பக்கம் யானை, புலி: காலடியில் இரண்டு மான்கள்.  பசுபதியை லிங்க் வடிவமாகவும் வணங்கினார்கள்.

சக்தி வடிவில் தெய்வம்

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பல களிமண் சிற்பங்களில் பெண் தெய்வீக உருவங்கள் உள்ளன. சில விக்கிரகங்களில், பெண் உருவத்தின் வயிற்றிலிருந்து செடி ஒன்று வளர்ந்திருக்கிறது.  எல்லாப் படைப்புகளுக்கும் ஆதார சுருதியான பெண் சக்தியாக மக்கள் வணங்கிய தெய்வம். உடை அரைகுறையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தபோதிலும், பல நகைகளும், விசிறி போன்ற தலை அலங்காரமும் அம்மனை அணி செய்கின்றன. ஏராளமான சிலைகளின்மேல் புகை படிந்திருக்கிறது. சாம்பிராணி போன்ற பூசைப்பொருட்களால் வழிபாடு செய்திருக்கலாம் என்று இந்தப் புகைப்படலம் சொல்கிறது.

விநோதக் காளை

பல இலச்சினைகள் காளைகளின் உருவம் தாங்கி இருக்கின்றன. மக்களின் முக்கியத் தொழில்கள் விவசாயமும், அதிலிருந்து எழுந்த வியாபாரமும். இவை இரண்டுக்கும் காளைகள் அவசியத் தேவை – நிலங்களை உழும் ஏர்களில் பூட்டவும், தானியங்களை வண்டிகளில் கொண்டு செல்வதற்கும். ஆகவே, காளைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் புரிகிறது.

ஆனால், ஏராளமான முத்திரைகளில் ஒரு ஒற்றைக் கொம்புக் காளை (Unicorn) ஏன் தோன்றுகிறது என்று தெரியவில்லை. இந்தக் காளையின் உச்சந்தலையில் தொடங்கும் கொம்பு முன்னால் நீண்டு மேல் நோக்கி வளைந்திருக்கிறது. முதுகில் திமில் இல்லை. எல்லா இலச்சினைகளிலும் காளை வலதுபுறமாக மட்டுமே திரும்பியவாறு இருக்கிறது. காளையின் முன்னால் தீவனத் தொட்டி இருக்கிறது. காளைகளைக் கோவில்களுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

அரசமரம்

அரசமரம் தெய்வீகத்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது, வணங்கப்பட்டது. அரசமரமும், அதன் இலைகளும் பல முத்திரைகளில் தோன்றுகின்றன. இந்தப் பழக்கம் இன்றும் நம் நாட்டில் தொடர்கிறதே?

பிற தெய்வங்கள்

எருது, காளை, புலி ஆகியவற்றையும் வழிபட்டார்கள். இன்னொரு விசித்திர உருவமும் வணங்கப்பட்டது. உடல் மனித உருவம்: காளைபோல் கொம்பு, குளம்பு, வால். இப்படி  மனிதன் – காளை இணந்த கற்பனை உருவம். இவற்றோடு, சூரியன், நெருப்பு, தண்ணீர் ஆகியவையும் தெய்வங்களாக இருந்தன.

(மூட) நம்பிக்கைகள்

ஏராளமான தாயத்துகள் கிடைத்துள்ளன. நோய்கள், விலங்குகளின் தாக்குதல்கள், உடைமைகளுக்கு ஏற்படும் இழப்புகள், இயற்கையின் சீற்றமான வெள்ளப் பெருக்கு, மழை பொய்த்தல், சூறாவளிக் காற்று ஆகியவற்றுக்குத் தீய சக்திகளும், தெய்வ குற்றங்களும் காரணங்கள் என்று நம்பினார்கள்.  தீய சக்திகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தாயத்துக்கள் கட்டிக்கொண்டார்கள். தெய்வ குற்றங்களுக்குப் பரிகாரமாக விலங்குகளைப் பலியிட்டார்கள். பல் இடங்களில் விலங்குகளைப் பலியிடுவதற்காகவே குழிகள் வெட்டப்பட்டிருந்தன.

இப்படி நம்பிக்கைகளும் வழிபாடுகளும் இருந்தபோதும், கோவில்கள் எழுப்பி, சடங்குகள் நடத்தி பூஜைகள் செய்யும் வழக்கம் இல்லை என்று தோன்றுகிறது.

இறுதிச் சடங்குகள்

நகரங்களுக்கு வெளியே இடுகாடுகள் இருந்தன. இறந்தவர் யாராக இருந்தாலும், இங்கேதான் புதைக்கவேண்டும் என்னும் விதி இருந்தது. இடுகாடுகளில் சவக்குழிகள் வடக்கு தெற்காக வெட்டப்பட்டிருந்தன. அவற்றில், உடல்களை மல்லாக்கப் படுத்த நிலையில் வைத்து, தலைகளை வடக்குப் பக்கமாகத் திருப்பிவைத்துப் புதைத்தார்கள்.  உடல்களோடு, அவர்கள் அணிந்த நகைகளையும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களும் மண்ணுக்குள் ஐக்கியமாயின.

சடலங்களை எரிக்கும் வழக்கம் பின்னால் வந்தது. அஸ்தியைக் களிமண் குடுவைகளில் சேகரித்துச் சேமித்தார்கள். மறுபிறவி எடுப்பதில் அவர்கள் நம்பினார்களா இல்லையா என்று தீர்க்கமாகத் தெரியவில்லை.

நாகரிக மறைவு

இத்தனை மாபெரும் சிறப்புக்கள் கொண்ட ஒரு நாகரிகம் விட்டுச் சென்றிருக்கும் அடையாளங்களும் ஆதாரங்களும் மிகக் குறைவு. ஏன்? பிற பண்டைய நாகரிகங்களை நாம் பார்க்கும்போது, நமக்கு என்ன தெரிகிறது? அந்தப் பாடங்கள் சிந்து சமவெளி பற்றிப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமா? பார்ப்போம்.

சுமேரிய நாகரிகம் சரிந்தது ஏன்? முதல் காரணம், உள்நாட்டுப் போர்கள். இதனால், மாவீரன் அலெக்ஸாண்டர் போர் தொடுத்து வந்தபோது, சுமேரியா அவர் காலடியில் விழுந்தது. நாகரிகத்தைத் தாங்கிப் பிடித்த இயற்கையும் தன் சோதனைகளைத் தொடங்கியது. திடீர்ப் பருவநிலை மாற்றங்கள் வந்தன: வெள்ளப் பெருக்கு, கடும் குளிர், கொடிய வெப்பம் ஆகியவை வந்தன. உயிர்நாடியான விவசாயம் பாதிக்கப்பட்டது. வறட்சி இருநூறு வருடங்களுக்குத் தொடர்ந்தது. இதனால், பிற முன்னேற்றங்களும் சரிந்தன, மறைந்தன.

சீன நாகரிகம் கி.மு. 5000 முதல் இன்றுவரை, 7000 ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்து நிற்கிறது. ஆனால், பாரம்பரியப் பெருமைகள் மெள்ள மெள்ள மறைந்துவருகின்றன.  முதலாளித்துவப் பாதையில் நடக்கத் தொடங்கும் முயற்சிகள்  பொருளாதார வளர்ச்சி தரும் அதே நேரத்தில், ஏழை, பணக்காரர் என்னும் இரு வர்க்கங்களை உருவாக்கிவருகின்றன. அவர்களுக்கிடையே  இடைவெளி விரிவாகிவருகிறது. அமெரிக்கக் கலாசார சுனாமி சீனப் பெருமைகளை விழுங்கிவிடும் அபாயம் தொடர்கிறது.

ஆகவே, புராதன நாகரிகங்கள் திடீரென மறைவதில்லை. முதலில் தேக்க நிலையில் இருக்கின்றன: பிறகு, மெள்ள மெள்ளச் சரிகின்றன.

சிந்து சமவெளியைப்  பொறுத்தவரையில், இந்த “மெள்ள மெள்ள” என்னும் இடைநிலை இல்லை.  மொஹஞ்சதாரோவில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகள் குவிந்து கிடந்தன. ஊருக்கு வெளியே இடுகாடுகளை அமைத்து, இறந்தவர்களைச் சீராக அடக்கம் செய்த ஒரு சமுதாயத்தில் இது எப்படி சாத்தியம்?  மக்கள் ஒட்டுமொத்தமாக எப்படி மரணம் அடைந்திருப்பார்கள்? மர்மம், மர்மம்.

தடயங்கள் அதிகம் இல்லாமல் அழிவு வந்தது என்றால், எதிர்பாராத முடிவு வந்திருக்கவேண்டும். இந்தத் திடீர் முடிவு எப்படி வந்திருக்கலாம்?

ஆராய்ச்சியாளர்களின் யூகங்கள் பல:

  • கடுமையான நில நடுக்கம் சிந்து சமவெளிப் பகுதியையே அழித்திருக்கலாம்.
  • சிந்து நதியில் பெருவெள்ளம் வந்து நிலப் பிரதேசத்தை மூழ்கடித்திருக்கலாம்.
  • சிந்து, யமுனை, சட்லெஜ் ஆகிய நதிகளின் போக்குகள் மாறி, வறட்சி வந்திருக்கலாம்.
  • அருகில் இருக்கும் ராஜஸ்தான் போன்ற பகுதிகள் பாலைவனங்கள். இயற்கை மாற்றங்களால், சிந்து சமவெளிப் பகுதியும் பாலைவனமாகியிருக்கலாம்.
  • கைபர் கணவாய் வழி வந்த ஆரியர்கள் உள்ளூர் மக்களை ஈவு இரக்கமின்றி ஒழித்துக்கட்டியிருக்கலாம். அகழ்வாராய்ச்சிகளில் வாள், ஈட்டி, கத்தி போன்ற ஆயுதங்கள் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. எனவே, நிராயுதபாணிகளான சிந்து சமவெளியினர் ஆரியர்களிடம் தோற்றதும், காணாமலே போனதும், ஆச்சரியமான சமாச்சாரங்கள் அல்ல.
  • பெரும் தொற்று நோய்க்கு மக்கள் பலியாகியிருக்கலாம்.

எதற்கும் திட்டவட்டமான பதில் இல்லை.

0