காலனியமும் கல்வியும்

அத்தியாயம் 5

schoolingtheworld4

கரீபிய நாவலாசிரியரான ஜார்ஜ் லாமிங் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘காலனியம் என்பது வரலாற்றில் ஒரு கட்டத்தில் வந்து இன்னொரு சமயம் மறைந்து ஓடிவிடுகிற ஒரு விஷயமல்ல. அது தொடர்ச்சியானது; வாழ்ந்துகொண்டிருப்பது. காலனிய சூழல் முடிவுக்கு வந்தபிறகும்கூட நினைவுகளில் அது தொடர்ந்து வாழ்கிறது.’

2012ம் ஆண்டு பிரிட்டன் ஹை கமிஷனர் சர் ஜேம்ஸ் பெவன் உறையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சீக்கியர் எழுந்து நின்று இடைமறித்தார். ‘நான் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர். ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டுப் போராடியதற்காக நீங்கள் என்னைச் சிறையில் அடைத்தீர்கள். அதற்காக ஏன் பிரிட்டன் இப்போது மன்னிப்பு கேட்கக்கூடாது?’ இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சார்லஸ் ஆலென் தி டெலிகிராஃப் இதழில் எழுதுகிறார். ‘அந்த சீக்கிய அதிகாரியிடம் பிரிட்டிஷ் அதிகாரி திருப்பிக்கேட்டிருக்கவேண்டும். ஜனநாயகம் குறித்தும் தேசியம் குறித்தும் யோசிக்கவேண்டும் என்று முதலில் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் யார்? தவிரவும் காலனியாதிக்கத்துக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்பது என்பது ஜோன் ஆஃப் ஆர்க் கொல்லப்பட்டதற்காக இப்போது மன்னிப்பு கேட்கச் சொல்வதற்கு ஒப்பானது.’

சார்லஸ் ஆலெனைப் பொருத்தவரை காலனியம் என்பது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர்மீது தங்கள் கருத்துகளைப் பலவந்தமாகத் திணிப்பது. இந்திய வரலாற்றை ஆராயும்போது இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்துள்ளதைப் பார்க்கலாம் என்கிறார் ஆலென். உள்ளூர் ஆதிவாசிகள்மீதான ஆரியர்களின் ஆக்கிரமிப்பை மகாபாரதம் புகழ்ந்து போற்றுகிறது. வேத காலத்தில் ஆக்கிரமிப்பாளரே ஆட்சியாளராக இருந்துள்ளார். அவருடைய கடமை தனது ஜனபதாவை (ராஜ்ஜியம்) மகாஜனபதாவாக (சாம்ராஜ்ஜியம்) மாற்றுவதுதான். ஆக்கிரமிப்புகள்மூலமே இது சாத்தியம். என்னைப் பொருத்தவரை இவையனைத்துமே ஏகாதிபத்தியம்தான் என்கிறார் சார்லஸ் ஆலென். பௌத்தத்துக்கு மாறிய பிறகு அசோகர் இத்தகைய ஆக்கிரமிப்புகளை எதிர்த்தார் ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்கிறார் ஆலென்.

மைசூரைக் கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல ஹைதர் அலியும்கூடத்தான் ஆக்கிரமித்தார். ராஜபுத்திர ராஜ்ஜியங்களை மராத்தியர்கள் ஆக்கிரமித்தனர். பஞ்சாபை சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். இதில் பிரிட்டனின் காலனியாதிக்கம் பிறவற்றில் இருந்து எப்படி, ஏன் மாறுபடுகிறது? ஏன் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஆலென். அதற்கான பதிலை அவரே அளிக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தை அதிகம் சீரழித்தது பிரிட்டனின் காலனியம்தான். மான்செஸ்டரும் பிர்மிங்ஹாமும் செழித்து வளர்ந்தபோது இந்தியாவின் கிராமப்புறங்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாயின. மற்றவர்களைப் போலன்றி இந்தியக் கலாசாரத்தை பிரிட்டன் தாழ்வாகப் பார்த்தது. ஆங்கிலத்தை இந்தியா முழுமைக்கும் சிபாரிசு செய்த தாமஸ் மெக்காலே ஓர் உதாரணம்.

இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த மற்ற ஆட்சியாளர்களுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வேறுபாட்டை ஈ.எம்.எஸ். நம்பூதரிபாட்  சுட்டிக்காட்டுகிறார். மற்ற ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை ஓர் அந்நியப் பிரதேசமாகவே கருதி ஆட்சி நடத்தினார்கள். இந்தியாவுடன் அவர்கள் ஒன்றவில்லை. தங்கள் கலாசாரத்தை, தங்கள் பண்பாட்டை, வழிபாட்டு முறையை, சமூக மதிப்பீடுகளை அவர்கள் இந்தியாமீது திணிக்க முயன்றனர். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் முகலாயர்கள் பிரிட்டனைப்போலன்றி இந்தியர்களுடன் ஒன்று கலந்தனர்.

பிரிட்டனின் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும்; காலனியம் பற்றிக் குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தானில் பிரிட்டன் இழைத்த கொடுமைகள் பற்றிப் போதிக்கவேண்டும் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். ‘என் குழந்தைகள் ட்யூடர்கள் குறித்தும் நாஜிகள் குறித்தும் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் காலனியத்தால் கொல்லப்பட்டதை அவர்கள் கற்பதேயில்லை. மலையளவு குவிந்துகிடக்கும் மண்டையோடுகளின்மீதுதான் காலனிய ஆட்சி நடைபெற்றது என்பதை மக்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்‘ என்கிறார் டால்ரிம்பிள்.

பிரிட்டிஷ் மாணவர்கள் மட்டுமல்ல காலனியத்தின் தாக்கத்துக்கு உட்பட்டுக்கிடக்கும் இந்தியர்கள் குறிப்பாகக் காலனியம் பற்றி விரிவாகக் கற்கவேண்டியிருக்கிறது. அதற்கு முதல் படியாக தனது கலாசார அடையாளத்தை இந்தியா கண்டெடுக்கவேண்டும் என்கிறார் பவன் கே வர்மா. இந்தியர்களின் உள்ளத்திலும் கலாசார பழக்கவழக்கங்களிலும் பிரிட்டிஷ் ராஜ் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு நம்முடைய கலாசார வேர்களைச் சென்றடைவதுதான் நம்முன் இப்போதுள்ள மிகப் பெரிய சவால் என்கிறார் பவன் கே வர்மா. யூனியன் ஜாக் கொடியைக் கீழிறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருளில்லை. நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டை இன்னொன்று ஆண்டிருக்கிறது என்னும்போது கடந்தகாலம் நிச்சயம் நிகழ்காலத்தோடு கலந்தே இருக்கும் என்கிறார் வர்மா.

சமூகக் கட்டமைப்பில் பிரிட்டன் கொண்டுவந்த முக்கிய மாற்றம் உயர்குடிகளைக் கொண்டிருந்த ராணுவத் தலைமையை மாற்றி நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தையும் கொண்டுவந்ததுதான் என்கிறார் ஆங்கஸ் மாடிசன். மற்றொரு மாற்றம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக  அறிமுகப்படுத்தியது. பிரிட்டனின் வருகைக்கு முன்பு பெருமளவில் மதம் சார்ந்த போதனைகளே உயர் கல்வி என்னும் பெயரில் அரபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்பட்டன. தொடக்கத்தில் பிரிட்டன் இந்தக் கல்விமுறையை ஊக்குவிக்கவே செய்தது. கல்கத்தாவிலுள்ள மதராஸாவுக்கும் பெனாரஸ் சமஸ்கிருத கல்லூரிக்கும் பிரிட்டன் நிதியுதவி அளித்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹாஸ்டிங்ஸ் சஸ்கிருதம், பெர்ஷியன் உள்ளிட்ட மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். சர் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததோடு 1785ம் ஆண்டு ஏஷியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் என்னும் அமைப்பை உருவாக்கவும் செய்தார்.

Thomas Babington Macaulay

Thomas Babington Macaulay

ஆனால் தாமஸ் மெக்காலேவுக்கு ஓரியண்டல் காதல் இல்லை. இந்திய இலக்கியங்களால் பயன் எதுவும் இல்லை, அவற்றை ஆதரிப்பது வீண் வேலை என்பது அவர் கருத்து. ஆய்வுகள் என்னும் பெயரில் பிரிட்டன் பணத்தை இந்தியாவில் வீணடிக்கிறது. இந்திய இலக்கியங்களை மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது ஆகியவற்றால் காகிதங்கள்தான் பாழாகின்றன. இந்திய வரலாறு, தத்துவம், மதம், அறிவியல் அனைத்தும் முட்டாள்தனமாவை என்று மெக்காலே அறிவித்தார். பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப்போல் எனக்கு சமஸ்கிருதம், அரபி இரண்டும் தெரியாது என்றும் பெருமிதப்பட்டுக்கொண்டார். இந்தியா, அரேபியாவில் எழுதப்பட்ட அனைத்து இலக்கியப் பதிவுகளையும்விட ஒரே ஒரு அலமாரி நல்ல ஐரோப்பிய இலக்கியம் மேலானது என்பது மெக்காலே வந்தடைந்த முடிவு.

இந்த மனநிலையோடுதான் ஆங்கிலம் இங்கே நுழைக்கப்பட்டது. இது நல்லதுதானே, ஆங்கிலம் நம் அறிவின் வாசலை அல்லவா திறந்து வைத்தது? வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காக மட்டுமாவது நாம் காலனியத்துக்கு நன்றி செலுத்தவேண்டாமா என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில் மெக்காலேயிடமிருந்தே வருகிறது. ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என்ன என்பதை அவரே சொல்கிறார். ‘இங்குள்ள மக்கள் கூட்டம் அனைவருக்கும் கல்வி போதிப்பது என்பது முடியாத செயல். அப்படியொரு முயற்சி மேற்கொள்வதற்குக்கூட நம்மிடம் வசதியில்லை. நாம் ஆளப்போகும் லட்சக்கணக்கானவர்களுக்கும் நமக்கும் பாலமாகச் செயல்படக்கூடிய ஓர் இடைநிலை வர்க்கத்தை உருவாக்குவதே நம்முடைய இப்போது பணி. இவர்கள் நிறம், உடலில் பாயும் ரத்தம் ஆகியவை இந்தியர்களுடையதாகவே இருக்கும். ஆனால் இவர்களுடைய ரசனை, சிந்தனைகள், அறம், அறிவு அனைத்தும் ஆங்கிலேயர்களுடையதாக இருக்கும். இந்நாட்டின் பல்வேறு வட்டார வழக்குகளை மேம்படுத்தும் பணியை இந்த வர்க்கத்தினரிடம் நாம் விட்டுவிடலாம்.’

இந்தப் பணி என்னவானது? ஆங்கிலக் கல்விமுறையால் விளைந்த பலன் என்ன? 1857ம் ஆண்டு கல்கத்தா, மெட்ராஸ், பாம்பே ஆகிய இடங்களில் மூன்று பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால் இவை மேற்பார்வையிடும் நிறுவனங்கள் மட்டுமே. அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட பிற பல்கலைக்கழகங்களில் இரண்டாண்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மனனம் செய்து எழுதும் பாடமுறையே இங்கு கையாளப்பட்டது. இங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரைகுறை ஆங்கில அறிவு, மேற்கத்திய மோகம் ஆகிய இரண்டையும் மட்டுமே சம்பாதித்துக்கொண்டனர். 19ம் நூற்றாண்டு முழுக்க பெண்களுக்குக் கல்வி சென்று சேரவில்லை. ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கல்வியைக் கொண்டு மூட பழக்கவழக்கங்களை அகற்றியிருக்கமுடியும். மத ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கமுடியும். பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கமுடியும். ஆனால் கல்வியை அப்படியொரு உபகரணமாகப் பயன்படுத்தும் நோக்கம் மெக்காலேவுக்கும் இல்லை, பிரிட்டனுக்கும் இல்லை. அவர்கள் எதிர்பார்த்தபடி படித்த, சிறிய இடைநிலை வர்க்கத்தை மட்டும் இந்தக் கல்விமுறை உருவாக்கியது.

காந்தி 1921ம் ஆண்டு கீழ்வருமாறு எழுதினார்.

‘தற்போது ஆங்கிலம் கற்பிக்கப்படும் வழிமுறை, இந்திய மாணவர்களின்மீது அதிகச் சுமையை ஏற்றி, ஆங்கிலம் பயின்ற இந்தியர்களை வலிமையற்றவர்களாக மாற்றிவிட்டது என்பது என் முடிவான கருத்து. அது நம்மைப் போலிகளாக ஆக்கிவிட்டது. பிராந்திய மொழிகள் ஆங்கிலத்தால் ஒதுக்கப்பட்டது ஆங்கிலேயர்களின் தொடர்பினால் நடந்த மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் எண்ணங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ளவும் வேண்டிய நெருக்கடி இருந்திருக்காவிட்டால், ராம் மோகன் ராய் இன்னும் பெரிய சீர்திருத்தவாதியாகவும், லோகமான்ய திலகர் மேலும் பெரிய அறிவாளியாகவும் இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஆங்கில இலக்கியம் என்னும் புதையலில் இருந்து நல்ல அறிவை அடைந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை அவர்களுடைய தாய்மொழியிலேயே கிடைத்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் எனும் இனத்தை உருவாக்குவதால் என்றுமே எந்த ஒரு நாடும் தேசமாகிவிடாது. பைபிளின் அதிகாரபூர்வமான பிரதி கிடைத்திராவிட்டால், ஆங்கிலம் (ஆங்கிலேயர்கள்) என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். சைதன்யர், கபீர், நானக், குரு கோவிந்த் சிங், சிவாஜி மற்றும் பிரதாப் ஆகியோர் ராம் மோகன் ராய், திலகர் இவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று நம்புகிறேன். ஆங்கில மொழி அறிவு இன்றி ராஜாவும் லோகமான்யரும் இந்தவிதமாகச் சிந்திருக்கமுடியாது என்பதை நம்ப மறுக்கிறேன்.

சுதந்தர உணர்ச்சியை மக்களிடம் விதைப்பதற்கும் சரியான எண்ணங்களை உருவாக்கி வளர்ப்பதற்கும் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளிலும் மிகவும் பெரியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரே மாதிரியான கல்வித் திட்டம்தான் இருந்தது என்பதையும், ஒரே மொழியில்தான் அவை நம்மீது திணிக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். அதனால் இப்போதுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கல்வி இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்போம் என்று தெரிந்துகொள்ள நம்மிடையே எந்தத் தகவல்களும் இல்லை. ஒன்று மட்டும் தெரியும். இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று ஏழ்மையாக இருக்கிறது. கல்விமுறைதான் இதில் மிகவும் பழுதடைந்த பகுதி. சுதேசக் கல்விமுறை பயனில்லாதது மட்டுமல்ல மிகவும் மோசமானது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள உண்மையாகவே நம்பினர். அவர்கள் முன்வைத்த கல்விமுறை தவறிலேயே பிறந்தது. இந்தியர்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றைக் கூனிக் குறுகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அது உருவாக்கப்பட்டது.’

நேருவும் இதையேதான் வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டுகிறார் பவன் கே வர்மா. ஆங்கிலம் கற்ற இந்திர்கள் தனியொரு உலகில் பிற இந்தியர்களிடம் இருந்து விலகி வாழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் வருந்தினார். ‘இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் வரும் என்று சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். சொற்பமான மேல் தட்டு அறிவுஜீவிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய ஒன்றாக அது இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. பெரும்பாலானோருக்கான கல்வி, கலாசாரத்தைப் பற்றி பிரச்னைகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் முதலியவற்றில் அதுவும் உலகளவில், அதிகமாக உபயோகப்படும் மொழியாக ஆங்கிலம் ஆகப்போகிறது என்பது உண்மைதான். ஆனால் உலகைப் பற்றிய சமநோக்கோடு கூடிய சித்திரம் கிடைக்கவேண்டுமென்றால், நாம் ஆங்கிலம் என்னும் மூக்குக் கண்ணாடியின்மூலம் மட்டுமே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.’

1947 வாக்கில் 88 சதவிகித இந்தியர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டி பிரிட்டனின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறார் மாடிசன். பிரிட்டிஷ்  அதிகாரிகள் தங்களை ஆளும் வர்க்கமாகவும் ஆளும் சாதியினராகவும் வலுப்படுத்திக்கொண்டனர். இந்திய உயர் சாதியினரைப் போலவே இவர்கள் தாழ்ந்த சாதியினருடன் நெருங்கி பழகாமலும் அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமலும் தனித்து நின்றனர். அவர்களுடைய குழந்தைகள் பூர்விக இந்தியக் குழந்தைகளுடன் ஒன்று கலக்கவில்லை. (ஆனால் முகலாயர்கள் இப்படி விலகி நிற்காமல் இந்தியாவுடன் ஒன்று கலந்தனர் என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). மொத்தத்தில், பிரிட்டனின் ஆட்சி மேல்மட்ட அளவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன என்றபோதும் பெருமளவிலான மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆங்கஸ் மாடிசன்.

மேற்கொண்டு வாசிக்க :

  1. The history of India is a history of colonialism, Charles Allen, The Telegraph
  2. Class Structure and Economic Growth, Angus Madisson
  3. Becoming Indian, Pavan K Varma, Penugin/Viking
  4. இந்தியன் ஆவது எப்படி? பவன் கே. வர்மா, கிழக்கு பதிப்பகம்

காலனியம் : ஆதரவும் எதிர்ப்பும்

அத்தியாயம் 4

empire_main
பிரிட்டிஷ் முடியாட்சியை நீண்டகாலம் தலைமை தாங்கி நடத்திய விக்டோரியா மகாராணி தனது அறுபதாவது ஆண்டுவிழாவை ஜூன் 1897ம் ஆண்டு விமரிசையாகக் கொண்டாடினார். உலகின் வண்ணமயமான, வளமான சாம்ராஜ்ஜியமாக பிரிட்டன் அப்போது செழிப்புடன் இருந்தது. 1860 வாக்கில் பிரிட்டனின் நிலப்பரப்பு 9.5 மில்லியன் சதுர மைல். 1909 வாக்கில் இந்த எண்ணிக்கை 12.7 மில்லியன். உலகின் நிலப்பரப்பில் இது 25 சதவிகிதம். ஒப்பீட்டளவில் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம். ஜெர்மானிய சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம். பிரிட்டனின் ஆளுகையின்கீழ் 444 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்கா, தூரக் கிழக்கு, மலேயா, நியூ கினியா, பசிபிக் தீவுகள் என்று தொடங்கி உலகம் முழுவதும் வாழ்ந்து வந்தனர். ஒரு கண்டம், நூறு தீபகற்பங்கள், இரண்டாயிரம் நதிகள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பத்தாயிரம் தீவுகள் ஆகியவை பிரிட்டனுக்குச் சொந்தமாக இருந்தன. விக்டோரியா மகாராணி நிச்சயம் மன நிறைவுடன் தனது வைர விழாவைக் கொண்டாடியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த மனநிறைவு வேறு பலரிடமும் இருந்தது. உலகம் இதுவரை கண்ட நன்மைகளில் சிறந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்றார் லார்ட் கர்ஸன். மனித வரலாற்றிலேயே மிகப் பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட சுதந்தரம் என்றால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்தான் என்று பெருமிதத்துடன் அறிவித்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். புகழ்பெற்ற ஸ்காட்டிஷ் வரலாற்றாசிரியரான நீல் ஃபெர்குசன் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தன் பாணியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்றளவும் உயர்த்திப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் மனிதாபிமான முகம் கொண்டது என்று கர்ஸன், ஸ்மட்ஸ் ஆகியோரைப் போல் நீல் ஃபெர்குசன் நிறுவ முயற்சி செய்யவில்லை என்றபோதும் பிரிட்டனின் பங்களிப்பு அதன் அனைத்துக் குறைபாடுகளையும் கடந்து பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அடிமைகளைப் பயன்படுத்தி செல்வம் குவித்தது உண்மை. அதைப் பெருமிதமாக அந்நாடு கருதியதும் உண்மை. ஆனால் எந்த அளவுக்குத் தீவிரமாக அடிமைகளைக் குவித்துக்கொண்டதோ அதே தீவிரத்துடன் அடிமை ஒழிப்பிலும் ஈடுபட்டது என்கிறார் ஃபெர்குசன். கடுமையாக இனப் பாகுபாட்டைக் கடைபிடித்த அதே பிரிட்டன் இன்று மாறிவிட்டது. 1857ம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் திரண்டு எழுந்தது. ஜமைக்காவில் 1831 மற்றும 1865ம் ஆண்டுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் 1899ம் ஆண்டும் இதே போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதெல்லம் பிரிட்டன் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி கலகக்காரர்களை ஒடுக்கியது. அயர்லாந்தில் 1840களிலும் இந்தியாவில் 1870களிலும் பஞ்சம் பரவியபோது பிரிட்டன் அவ்வளவாக அசைந்துகொடுக்கவில்லை. பல சமயங்களில் பஞ்சத்துக்கு அதுவே காரணமாகவும் இருந்திருக்கிறது. இவையனைத்தையும்மீறி வரலாற்றில் பிரிட்டன் வகித்த முக்கியப் பாத்திரத்தை நாம் மறந்துவிடக்கூடாது என்கிறார் ஃபெர்குசன்.

Nial Ferguson

Niall Ferguson

19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பண்டங்கள், மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் சுதந்தரமான நடமாட்டத்தை பிரிட்டன் அளவுக்கு வேறு எந்த நாடும் உயர்த்திப் பிடித்ததில்லை என்கிறார் இவர். மேற்கத்திய சட்டம், ஒழுங்கு, ஆட்சிமுறை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டுசென்ற பெருமை பிரிட்டனையே சேரும். சிற்சில விதிவிலக்குகள் போக, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஊழல் இருந்ததில்லை. இத்தனைப் பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றிருந்தும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் சரிந்தது ஏன்? பலரும் நினைப்பதுபோல் டப்ளின் தொடங்கி டில்லி வரை பரவிய தேசியவாதப் போராட்ட அலை அல்ல நிஜக் காரணம். பிரிட்டனுடன் போட்டிப் போட்ட பிற சாம்ராஜ்ஜியங்களே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் ஃபெர்குசன்.

காங்கோவில் பெல்ஜியம் இழைத்த கொடுமைகள் அதீதமானவை. ரப்பர் தோட்டங்களும் ரயில்வே பாதைகளும் காங்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் பலன்கள் அனைத்தும் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட் வசமே சென்று சேர்ந்தது. இவர் ஆட்சியில் ஏற்பட்ட படுகொலை, பஞ்சம், நோய் ஆகியவற்றின் காரணமாக பத்து லட்சம் காங்கோ மக்கள் உயிரிழந்தனர். மொத்த மக்கள் தொகையில் இது சரி பாதி. இதே காங்கோவை ஆண்ட பிரெஞ்சும் இத்தகைய ஆட்சியையே நடத்தினர். அல்ஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பிரான்ஸின் காலனியாதிக்கம் அளவற்ற உயிரழப்புகளையே ஏற்படுத்தியது. இப்படி பெல்ஜியம், பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி என்று பிற நாடுகள் உலகைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த சூழலில் பிரிட்டன் இந்தப் போட்டியைச் சமாளிக்க அவர்களுடன் மோத வேண்டியிருந்தது. இந்த மோதல் பிரிட்டனின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. எனவே பிரிட்டன் வேறு வழியின்றி தனது காலனியக் கொள்கையைக் கைவிட்டது.

இந்த வாதத்தின்மூலம் நீல் ஃபெர்குசன் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, ஒப்பீட்டளவில் பிற காலனியாதிக்கச் சக்திகளைவிட பிரிட்டன் அதன் காலனிகளிடம் நியாயமாகவே நடந்துகொண்டது. காலனிகளின் நலனுக்காக, அவர்களை உய்விப்பதற்காகத்தான் காலனியாதிக்கம் தோன்றியது என்று சொல்லமுடியாவிட்டாலும் இறுதியில் பிரிட்டன் தீமைகளைக் காட்டிலும் நன்மைகளையே அதிகம் வழங்கியது. ஒருவேளை பிரிட்டனின் காலனியாக இல்லாமல் போயிருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம், தனிமனித சுதந்தரம், ஆங்கில மொழி போன்ற உயர்வான பங்களிப்புகள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஃபெர்குசன். இரண்டாவது, பிரிட்டன் தன் காலனியக் கொள்கைகளைக் கைவிட்டது பெரும் உலக நன்மைக்காக. இது ஒரு தியாகம். இந்தத் தியாகத்தின் பலனாக அதன் பிற தீமைகள் அனைத்தும் உதிர்ந்து சிதறிவிட்டன.  அதாவது, அச்சு நாடுகளின்  அணியில் இருந்த ஜெர்மனி மற்றும் இத்தாலி பெரும் ஆதிக்கச் சக்திகளாக நீடித்திருந்தால் உலகம் வேறு பாதையில் சென்றிருக்கும். அதனைத் தடுக்கவேண்டுமானால் அவர்களுடைய காலனிகள் உதிர்ந்து அவர்களுடைய பலம் குறைந்தாகவேண்டும். அதற்கு முன்நிபந்தனையாக பிரிட்டன் முதலில் தன் காலனிகளை உதறித் தள்ளியது.

ஃபெர்குசனின் வாதத்தை பங்கஜ் மிஷ்ரா திட்டவட்டமாக மறுக்கிறார்.  ஐரோப்பாவை, மேலை நாட்டு மதிப்பீடுகளை, வெள்ளை நிறவெறியை உயர்த்திப் பிடிக்கும் போக்கு வரலாற்றில் நீண்டகாலமாகவே நிலவிவருகிறது என்கிறார் மிஷ்ரா. வெள்ளை நிறத்தவரே உலகை ஆளும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை அவர்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளை நிறவெறியுடன் கூக் க்ளக்ஸ் கிளான் குழுவினர் கறுப்பின மக்களை எரித்துக்கொன்றனர். வெள்ளையினம் அழிந்துவிடப்போகிறதே என்று அஞ்சினார் தியோடர் ரூஸ்வெல்ட். இஸ்லாமியர்கள் உலகின்  விரோதிகள் என்று பலர் வெளிப்படையாகவே எழுதினர். நாஜிகளின் இனவெறுப்பு சித்தாந்தத்துக்கு மேற்குலகில் பல ஆதரவுக் குரல்கள் எழுந்தன. பலமானதே உலகை ஆள்வதற்கு வல்லது என்னும் கருத்து வலுவாக ஆதிக்கம் செலுத்தியது. நீல் ஃபெர்குசன் அத்தகையோரில் ஒருவர் என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. பிரிட்டனின் காலனியாதிக்கத்தை மட்டுமல்ல அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தையும்கூட ஃபெர்குசன் நியாப்படுத்தவே செய்கிறார் என்பதையும் மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார்.

நாகரிகமற்றோரை முன்னேற்றுவதைக் கடமையாக வரித்துக்கொண்ட வெள்ளைக்காரர்களின் சுமையைக் கண்டு பரிதாபப்படும் ஃபெர்குசனின் அணுகுமுறை வலதுசாரிகளின் எழுச்சியால் முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் பிரிட்டனைவிட அமெரிக்காவில் இத்தகைய குரல்களுக்கு ஆதரவும் மரியாதையும் பெருகியிருப்பதையும் பங்கஜ் மிஷ்ரா சுட்டிக்காட்டுகிறார். நீல் ஃபெர்குசனின் சிவிலைசேஷன் : தி வெஸ்ட் அண்ட் தி ரெஸ்ட் என்னும் புத்தகத்தின் தலைப்பே அவருடைய போக்கை உணர்த்திவிடுகிறது. அனைத்து பலங்களையும் கொண்ட, அற்புதங்கள் நிறைந்த, மனித குலத்துக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும் ‘தி வெஸ்ட்’ ஒரு பக்கம். இவையனைத்துக்கும் எதிராக உள்ள ‘தி ரெஸ்ட்’ இன்னொரு பக்கம். இப்படித்தான் உலகை ஃபெர்குசன் பிரிக்கிறார். அவரைப் பொருத்தவரை நாகரிகம் என்பது என்ன? மனித வாழ்வில் தொடர்ச்சியாக முன்னேற்றங்களைக் கொண்டுவரும் திறன். கடந்த ஐந்நூறு ஆண்டுகளை எடுத்துவைத்துப் பார்க்கும்போது உலகின் பிற நாடுகளைவிட அதிக அளவிலான முன்னேற்றங்களை மனித வாழ்வில் ஏற்படுத்தியது மேலை நாடுகள்தாம். மேற்கத்திய நாகரிகம் 1500ம் ஆண்டு தொடங்கி ஆறு முக்கிய அம்சங்களில் பிற நாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்கிறார் ஃபெர்குசன். சொத்துரிமை, போட்டி மனோபாவம், அறிவியல், மருத்துவம், நுகர்வோர் சமூகம், பணி சார்ந்த விழுமியங்கள் ஆகியவையே நாகரிகத்தை இயக்கும் ஆறு ‘கில்லர் ஆப்ஸ்’ ஆகும். இவற்றைக் கொண்டே மேற்கு பிறவற்றைவிட முன்னேறியது; பிறவற்றை ஆளவும் செய்தது.

வலிமையானது பலவீனமானதை ஆள்வது இயற்கையானது, இயல்பானது என்று நிறுவ முயலும் ஃபெர்குசனை ஏற்க மறுக்கிறார் பங்கஜ் மிஷ்ரா. முதலாளித்துவ நவீனத்துவத்தை வந்தடைந்து அதன்மூலம் உலகமயமாக்கலை மேற்கு தோற்றுவித்தது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் ஃபெர்குசன். மேற்கு உண்மையில் பிற நாடுகளைவிடச் சிறந்துள்ளதா என்று அவர் பார்க்க விரும்வில்லை. அது ஏன் சிறந்த விளங்குகிறது என்று மட்டுமே கேட்கிறார். அதாவது, மேற்கு உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தது என்னும் முன்முடிவுடன் தன் ஆய்வை அவர் தொடங்குகிறார். இது தவறான அணுகுமுறை என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. வரலாறு இவ்வளவு தட்டையானதோ எளிமையானதோ அல்ல. ஃபெர்குசனின் வாதத்தை மறுக்க சி.ஏ. பெய்லியின் வாதம் ஒன்றை மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார். பெய்லியின் பார்வையில், நவீன ஐரோப்பா மற்றும் நவீன அமெரிக்காவின் உருவாக்கத்தில் ஆசியாவின் பங்களிப்பு அழுத்தமாகவே உள்ளது. ஹாம்பர்க், நியூ யார்க் பூர்ஷ்வா முதலாளிகளைப் போலவே சீன முதலாளிகளும் தென் கிழக்கு ஆசிய வர்த்தகத்துக்கும் பண்ட பரிமாற்றங்களுக்கும் பங்காற்றியுள்ளனர். வர்த்தகம் மட்டுமல்ல கலை, அறிவியல், கலாசாரம் என்று பல துறைகளில் ஆசியாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் வழக்கம் மேற்கத்திய ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது. காலனியாதிக்கம் சரியானதுதான் என்று வாதிடுபவர்களில் பலர் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தாம்.

ஃபெர்குசனின் மதிப்பீட்டின்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்பது உலகம் பின்பற்றப்படவேண்டிய ஒரு மாடல். தற்போதுள்ள நிலையில் பிரிட்டனின் இடத்தைப் பிடிப்பதற்கான தகுதி கொண்ட ஒரு நாடு அமெரிக்கா. அமெரிக்கா பிரிட்டன் வழியில் நடக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். ‘செயல்திறன் மிக்க ஒரு லிபரல் சாம்ராஜ்ஜியம் உலகுக்கு இன்றும் தேவைப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.  அந்தப் பாத்திரத்தை வகிக்க அமெரிக்கா பொருத்தமான நாடு. அதன் பாதுகாப்புத் தேவைகளுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான நோக்கத்தின்  அடிப்படையிலும் அமெரிக்கா இந்தப் பதவிக்குப் பொருத்தமானதுதான். அதற்கான தனித்துவம் மிக்க தகுதிகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது.’

அதே சமயம் அமெரிக்காவிடம் சில குறைபாடுகளும் உள்ளன என்கிறார் ஃபெர்குசன். அதன் அரசியல் கலாசாரம், பொருளாதார அமைப்பு, சமூகத் தோற்றம் ஆகியவற்றில் சில மாற்றங்களை அமெரிக்கா செய்யவேண்டியிருக்கும் என்கிறார் அவர். பிரிட்டனின் பாதையில் சென்று அதே சமயம் பிரிட்டனின் சில தவறுகளைச் செய்யாமல் இருந்தால் அமெரிக்கா ஓர் வலுவான சாம்ராஜ்ஜியமாக உருமாறும், உலகையும் உருமாற்றும் என்பதே ஃபெர்குசனின் நம்பிக்கை. அமெரிக்காவுக்கு அடுத்த சக்தி அவரைப் பொருத்தவரை சீனா. இந்த இரண்டும் ஒன்றுசேரவேண்டும் என்னும் தன் கனவையும் ஃபெர்குசன் இன்னோரிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவும் சீனாவும் கைகுலுக்கிக்கொண்டால் ஒன்றின் குறையை இன்னொன்று நிறைவுசெய்யும் வகையில் அந்தக் கூட்டணி அமையும் என்று அவர் கருதுகிறார்.

உலகின் முன்னேற்றத்துக்கு ஒரு வலிமையான தலைமை தேவையா? பின்தங்கிய நாடுகளை இத்தகைய வலிமையானதொரு தலைமை தத்து எடுத்துக்கொள்வது அவசியமா? தொடக்கத்தில் கார்ல் மார்க்ஸ் இத்தகைய நம்பிக்கையே கொண்டிருந்தார். 1853ம் ஆண்டு நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூனில் எழுதும்போது  பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அடிப்படைப் புரட்சியை ஏற்படுத்துகிறது என்றும் ஆசியாவின் சமூக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்றும்தான் குறிப்பிட்டார். இந்த நடைமுறை வலி மிகுந்தது என்றபோதும் பல ஆண்டுகளாக குவிந்துகிடக்கும் பிசகுகள் அகல இந்த ஆட்சிமுறை உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பதை அவர் வெகு விரைவில் கண்டுகொண்டார். தன் கருத்தை உடனடியாகத் திருத்திக்கொள்ள அவர்  தயங்கவில்லை.

0

மேற்கொண்டு வாசிக்க :

  1. Why we ruled the world, Niall Ferguson, niallferguson.com
  2. The Global Empire of Niall Ferguson, Janet Tassel, Harvard Magazine
  3. Watch This Man, Pankaj Mishra, London Review of Books
  4. Civilization : The West and the Rest, Niall Ferguson
  5. Empire: How Britain Made the Modern World, Niall Ferguson