வன்மங்களின் நவீன வடிவம்

87567932ஆதி தொட்டு மனிதர்களால் மனிதர்கள் மீதான வன்மம் தொடர்ந்து கொண்டே வருவது போலத்தான், வன்மத்தை ஏவும் வழிகளும்  பரிணாமமடைந்து கொண்டு வருகிறது. சமகாலத்தில் அதன் புதிய வடிவம் “வாட்ஸ் அப்” எனப்படும், அலைபேசி அப்ளிகேஷன் ஆகும்.

சமூகம் எனும் கட்டமைப்பு அறிவியல் வளர்ச்சிகளைக் கொண்டு முன்னேற்றங்களை வளர்த்துக்கொள்கிற அதே வேளையில், அதன் அத்தனை குரூரங்களையும் வளர்த்துக்கொண்டேதான் இருக்கிறது, என்பதுதான் இதில் சிக்கலான விடயம். அதிலும் முக்கியமாக இந்த குரூர வன்மங்கள் எப்போதும் ஆயிரம் கசைகள் கொண்டு முழுக்க முழுக்க பெண்னை, பெண் உடலைத்தான் குறிபார்த்து வீசப்படுகின்றன என்பதும் மறுக்கவியலாத
உண்மை.

சம்பவம் 1 

மாநிலத்தின் எதோ ஒரு மூலையில் சமூகத்தின் வரையறைகளுக்கு  பொருந்தாத இரு உள்ளங்களின் காதல், அவர்களின் தீர்வை அடையும் அதேவேளையில் அவர்களின் முடிவைக்குறித்து அத்தனை மக்களுக்கும் வாட்ஸ் அப்பில் சேதி காட்டுத்தீயாக பரவுகிறது. பிறகு அவர்களின் படங்களோ, அல்லது அவர்கள் எனச்சொல்லி அவர்களல்லாத வேறு யவரோ இருவரின் படங்களோ அந்தரங்க காட்சிகளுடன் அனவரது அலைபேசியிலும்
பெறப்படுகிறது. குறிப்பாக அந்த ஆண் தவிர்த்து பெண்ணின் உடலைக்காட்டும் படங்களே பெரும்பாலும் பெறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அந்தக்காதலைக் குறித்து மக்களால் சமூக வலைதளங்களில் கருத்துப்பறிமாற்றங்கள் நிகழ்த்தப்படுகிறது. நகைச்சுவை படங்கள் (மிமீ) தயார் செய்யப்படுகிறது.. அதுவும் பரவச்செய்யப்படுகிறது.. சமூகம் இச்சம்பவத்தை வைத்து சில பொழுதுகளை இனிதே கழிக்கின்றன. மேலும்
மேலும் பரவப்பரவ கருத்துப்பரிமாற்றங்கள் சுழற்சியாக தொடர்கிறது.

சம்பவம் 2

ஒரு பெண் எட்டுமாதமாக ஒருவனை காதலித்துக்கொண்டே இடையில் இன்னொரு இளைஞனுடனும் பழகி வந்திருக்கிறாள், ஒரு கட்டத்தில் தனக்கு தோதானவன் இரண்டாமவன் என முடிவு செய்து, முதலாமானவனை தவிர்க்கப்பார்த்திருக்கிறாள். இப்போது அந்த இரண்டு இளைஞர்களும் அறிமுகமாகி அவளைப்பற்றித் தெரிந்துகொண்டு அந்தப்பெண்ணிடம் அலைபேசி.. ஆடியோவை பதிவு செய்கிறார்கள்.. மேலும் மேலும் தகாத வார்த்தைகளைப்பேசி, அவளை பரத்தையருடன் ஒப்பீட்டு அவமானப்படுத்துகிறார்கள்.. மேலும் இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீட்டில் காட்டி அவளை அவமானப்படுத்தப்போவாதாக மிரட்டுகிறார்கள்.. பிறகு அந்த ஆடியோவையும், அந்தப்பெண்ணின் புகப்படங்களையும் வாட்ஸ் அப்பில் பரப்பிவிடுகிறார்கள். இந்த சம்பவமும் அந்தப்பெண் பற்றிய பல்வேறு மதிப்பீடும், மாநிலம் முழுதும் சமூக

வலைதளங்களில் பேசு பொருளாகிறது, விவாதமாகிறது, நகைச்சுவையாகிறது, மக்களின் பொழுதுகள் இனிதே கழிகிறது.

சம்பவம் 3

காதலை முறித்துக்கொண்டு, அடுத்த காதலுக்கு போய்விட்ட பெண்ணின் புகைப்படமும், அவளின் அலைபேசி எண்ணும் மாவட்டத்தின் சிறந்த பரத்தை, என வாட்ஸ் அப்பில் முன்னாள் காதலனால் பரவச்செய்யப்படுகிறது.

இந்த மூன்று சம்பவங்களில் இரண்டு பெண்கள் எக்ஸ்ட்ரீமானவர்களாக இருக்கிறார்கள்..  அவர்களின் நடத்தையும் சரியில்லை, எனவே அவர்கள் கேலிக்குரியதாவதில், எந்தத்தவறும் இல்லை என்பதுதான் சமூகத்தில் பெரும்பாலனவர்களின், பொதுப்புத்தியால் வைக்கப்படுகிற பதிலானதாக இருக்கிறது. விகிதாசாரமாகவே எடுத்துக்கொண்டாலும், இந்த எக்ஸ்ட்ரீம் வகையில் ஆண் வர்கம்தான் அதிகமானதாக இருக்கும். இதே
போல ஒரு ஆணை கேலிக்குரிய பேசு பொருளாக ஆக்கிவிடமுடியுமா? என்றால் முடியும். ஆனால் அந்த ஆண் பிரபலமாக இருந்தால் அல்லது சமூகத்தின் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தால் மட்டுமே அது முடியும். அதைவிடுத்து எந்தவொரு சாமானிய ஆணையும் இதுபோன்ற சம்பவங்களினால் எதுவும் செய்துவிட முடியாது. இதுவே பெண்கள் என்றால் அதன் கணக்கே வேறு, பிரபலமாக இருந்தாலும் சரி சாமானியப் பெண்ணாக இருந்தாலும்சரி அசிங்கப்படுத்தி பரவச்செய்ய அவள் பெண்ணாக இருக்கும் ஒரு தகுதி போதுமானதாக இருக்கிறது.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஒருவார காலத்திற்க்குள் பரவியவை.. இந்தநிலை இப்படியே தொடர்ந்து கொண்டே இருக்குமெனில், எதிர்காலத்தில் பெண்கள் பரஸ்பர புரிதல் இல்லாமல் தன் எதிர் இனத்தோடு கொண்ட உறவுகளை முறிக்க நினைத்தாலோ, முறித்தாலோ, அந்தந்த ஆண்களின் வன்மங்கள் வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களால் தொடர்ந்து தீர்க்கப்படும். என்பதுதான் இங்கே பெருங்கவலையையும் கவனத்தையும் கொள்ள
வைக்கிறது.

ஸ்மார்ட்போன் யுகத்திலும்  ஆதிக்கப்போக்கில் பெண்களை அடக்கியாள முற்படும் வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களில், தணிக்கையோடு கூடிய சட்ட வரைமுறைகளும், பெண்களின் மீதான வன்மங்களைப் பரப்புவோருக்கு தண்டனைகளைப் பெற்றுத்தர சட்டரீதியிலான பாதுகாப்பும் வேண்டும் என்பது எதிர்கால பெண்ணினத்தின் மிக அத்தியாவசியமான அம்சம் ஆகும்.

இன்றும் தனக்குப் பிடிக்காத, தன்னைப்பிடிக்காத பெண்களைப்பற்றி வக்கிரமாக எழுதிவைக்கும் மனிதர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால் பொதுக்கழிப்பறை சுவர்தான் ஸ்மார்ட் அப்களாக பரிமாணம் அடைந்துவிட்டன.. ஆகவே முன்னைவிட இன்னும் கூடுதல்  கவனத்துடன் இருங்கள் பெண்களே.. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லா சமூகமும், ஸ்மார்ட்டானதல்ல.

மங்கள்யான் : செவ்வாய் செல்லும் இந்தியன்

mangalyanசெவ்வாய் கிரகத்துக்கு (Mars) ‘விண்கலம் அனுப்புவது’ என்பது அத்தனை அபூர்வமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியா அனுப்புகிறது என்பது பெருஞ்செய்தி. இதுவரை அந்த கிரகத்தை அடைய எடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட முயற்சிகளில் பாதிக்கும் மேல் தோல்வி என்பதும் இத்திட்டத்துக்குக் கூடுதல் கவனத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தனைக்கும் அனுப்பியவர்கள் அனைவரும் விண்வெளி ஆராய்ச்சியில் நம்மைவிட முன்னேறியவர்கள்.

ஒப்புநோக்கு அளவில் மற்ற நாடுகளின் செவ்வாய் திட்டங்களைவிட, நமது மங்கள்யான் குறைந்த செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நாசாவும் செவ்வாய்க்கு MAVEN என்கிற விண்கலத்தை அனுப்புகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் (450 கோடி ரூபாய்) செலவைவிடப் பத்து மடங்கு அதிகம். எப்படி விண்கலத்தைக் குறைந்த செலவில் செவ்வாய்க்குக் கொண்டுசேர்க்கப்போகிறது இஸ்ரோ?

வேகப்பந்து வீச்சாளர் போடும் பந்தில் இருக்கும் வேகம்போல், பிரபஞ்சமே நமக்கு அபிரிமித சக்தியை வழங்கியுள்ளது. அந்தச் சக்தியை திறமையான பேட்ஸ்மேன்போல் உபயோகித்து பந்தை இலக்குக்கு அனுப்பவேண்டும். இங்கு நாம் உபயோகிக்கப்போவது பூமியின் ஈர்ப்பு சக்தியை. இதை விளக்க மற்றொரு விளையாட்டைத் துணைக்கு அழைப்போம். வட்டெறிதல் தெரியுமா? Discus Throw? அதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த வீரர்கள் சில தடவை சுழன்று, ஒவ்வொரு சுற்றுக்கும் வேகம் பெற்று கடைசிச் சுற்றில் வட்டை அப்பால் எறிவார்கள். கீழே இருக்கும் படத்தில் கிருஷ்ணா பூனியாதான் பூமி. வட்டுதான் மங்கள்யான்.

Mars trajectory and poonia

PSLV ராக்கெட்டைக் கொண்டு விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில்தான் இப்போது சேர்த்திருக்கிறோம். அதற்குமேல் அதனை செவ்வாய் நோக்கி அனுப்புவது பூமியின் சக்தி, கலத்திலேயே இருக்கும் சிறிய எஞ்சின் மற்றும் அதனை இயக்கும் எரிபொருள். ஒவ்வொரு சுற்றுக்கும் கலத்தில் இருக்கும் எரிபொருளைக் கொண்டு கலத்தின் சுற்றுப்பாதையை விரிவாக்க (அதாவது) வேகத்தை அதிகரிக்க சின்னத் திருத்தம் செய்யப்படும். கடைசிச் சுற்றில் செவ்வாயை நோக்கி மங்கள்யானைக் கடாசிவிட வேண்டியது.

கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் இது மிகச் சிக்கலான விளையாட்டு. நவம்பர் மாத இறுதியில்தான் இதன் முடிவு தெரியும். இதற்கு மாறாக நாசா அனுப்பும் ராக்கெட்டோ சக்தி வாய்ந்தது. நேரடியாகச் செவ்வாய்க்கு செல்லும் பாதையில் கலத்தை செலுத்திவிடுகிறது. அதனால் அதிகச் செலவு, ஒப்பீட்டளவில் சுலபமானது. நாசாவின் அதிகச் செலவுக்கு வேறு சில காரணிகளும் உண்டு.

இந்த முதல் வெற்றியைவிட முக்கியமான வெற்றி, செவ்வாயை நெருங்கும்போது தேவைப்படுகிறது. விண்கலத்தைச் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட்டில் wide ball மாதிரி விண்கலம் செவ்வாயின் கையில் சிக்காமலே போய்விடக்கூடும்; ஒரே வித்தியாசம், இங்கு பவுண்டரியே கிடையாது. ஜப்பானின் கலம் இப்படித்தான் வழுக்கிக்கொண்டு செவ்வாயை கடந்து சென்றுவிட்டது. மேலும் கதிர்வீச்சுகளால் விண்கலத்திற்கு பாதிப்புகள் வரக்கூடும். பத்து மாதங்கள் அண்டத்தின் குளிரில் பயணித்தபிறகு, கலத்தின் இயந்திரங்கள் மீண்டும் ஒழுங்காக உயிர் பெறவேண்டும். இப்படிப் பல ‘டும் டும் டும்’கள். இதன் முடிவு 2014 செப்டெம்பர் 24 அன்று தெரிந்துவிடும்.

எதற்கு இத்தனைச் சிரமப்பட்டு அனுப்புகிறோம்? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எப்படி இல்லாமல் ஆனது, உயிர்கள் இருப்பதற்கு அறிகுறியான மீத்தேன் உண்டா போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது, மண் மற்றும் கனிம வளங்களை அளப்பது போன்ற ஆராய்ச்சிகளை மங்கள்யான் மேற்கொள்ளும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு விண்கலன்களை அனுப்பும் அந்த மாபெரும் ஞானம்… அதை வளர்த்துக்கொள்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

டூர் போய்விட்டு கேமரா இல்லை என்றால் எப்படி? மங்கள்யானில் ஒரு கலர் கேமராவும் உண்டு. இந்த உபகரணங்களின் மொத்த எடையே பதினைந்து கிலோதான். இவை தங்களுக்குத் தேவையான மின்சக்தியை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ளும்.

தரையில் இருந்துகொண்டு எப்படிக் கலத்தை இயக்கப்போகிறோம்? செய்திகளைப் பெறப்போகிறோம்?

பெங்களூருதான் தலைமைக் கட்டுப்பாட்டகம். அத்துடன் பிஜி  தீவுக்கு அருகே இரு கப்பல்கள் தேவையான கருவிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நாசாவின் நெட்வொர்க்கும் இதில் நமக்கு சிறிது உதவப்போகிறது. கட்டளைகளை விண்கலத்துக்குப் பிறப்பித்துவிட்டு, அதன் முடிவு நமக்குத் தெரிய 6 முதல் 45 நிமிடங்கள்வரை ஆகலாம். மிக மெதுவான இணைய இணைப்பு உள்ள கணினியில் ஒரு லின்க்கை அழுத்திவிட்டு அந்த வலைத்தளம் திரையில் தோன்றும்வரை திட்டிக்கொண்டே காத்திருப்போமே, அதுமாதிரி. இதனாலும் கூடுதல் சிக்கல்கள்.

இப்போதுதான் (2008-ல்) நாம் நிலவையே நெருங்கினோம். அதற்குள் கடினமான செவ்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுவும் இத்திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது 2012-ல்தான். அதன்பிறகு ஒரே வருடத்தில் விண்கலம் தயார்! ஏன் இந்த அவசரம்?

சீனாவின் சமீபத்திய செவ்வாய்த் திட்டம் தோல்வி என்றும் அதனால்கூட நாம் வேக வேகமாக ஒன்றை அனுப்பி அவர்களை முந்தப்பார்க்கிறோம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது பனிப்போர் வகைச் சண்டைகளை விரும்பும் மேலை நாடுகளால் சொல்லப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசால் இது ஒரு சாதனையாகக்கூடக் காட்டப்படக்கூடும். ஆனால் இதெல்லாம் பல ஆண்டுகள் முன்னமேயே தொலைநோக்காகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது; மற்ற நாடுகளின் திட்டங்களோ, தேர்தல்களோ நம் திட்டங்களை மாற்றி அமைக்க முடியாது என்று ISRO கூறுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை இது ஒரு ‘காஸ்ட்லி’ திட்டம்தான். இந்தப் பணத்தில் நிச்சயம் சுகாதாரமான கழிவறைகள் பலவற்றைக் கட்டமுடியும். பாதாள சாக்கடைகளைச் சுத்தப்படுத்தும் கருவிகளைக் கண்டுபிடிக்கலாம். இவை ஒரு விண்கலத்தைவிட முக்கியமும் அவசியமும்கூட. ஆனால், எது முக்கியம் என்பதைவிட எது அவசியம் என்பதில் இதற்கு ஒரு விடை கிடைக்கக்கூடும். பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி சிலைகளை வைப்பது, உயிர்களைக் கொல்லும் ஆயுதங்கள் தயாரிப்பது போன்ற தேவையில்லாத திட்டங்களில் போடப்படும் பணத்தை, மனிதனின் அறிவைப் பல மடங்கு பெருக்கும் ஒரு விஞ்ஞான முயற்சியில் போடுவது நல்லது அல்லவா? செவ்வாய் என்பது நிச்சயம் அடையவேண்டிய, பெருமையான ஓர் இலக்கு. பிரபஞ்சத்தை அளக்க சந்திரயான் நாம் வைத்த முதல் அடி. மங்கள்யான் இரண்டாவது.

நன்றி : http://www.isro.org/mars/home.aspx

விக்கிபீடியா

செய்யுள் முதல் கண்ணதாசன் வரை

PoetKannadasanசெய்யுள்களும் சிக்கல்களும்

செய்யுள்களையும் காவியங்களையும் மொழிபெயர்க்க முடியும் என்ற விவாதம் மிகவும் பழமையானது. எவ்வளவுதான் உண்மையாகவும், சாதுர்யமாகவும் மொழிபெயர்த்தாலும், செய்யுளின் ஜீவனைக் கொண்டு வர முடியாது என்று எட்னா செயிண்ட் வின்சன் மிலே என்பவர் குறிப்பிடுகிறார்.

செய்யுள் என்பது மொழிபெயர்க்கக்கூடியதுதான் என்று ஜான்சன், போப், ஹொரேஸ் ஆகியோர் கருதுகின்றனர். செய்யுளை வேறு மொழிக்குக் கொண்டு போவது என்பது அநேகமாக இயலாத ஒன்றாகும் என்கிறார் டிரைடன் என்ற அறிஞர். கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு கயிறுமீது நடனம் ஆடுவதற்கு ஒப்பாகும் என்றும் அவர் வர்ணிக்கிறார்.

ஷெல்லி இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். ஒலியும் உணர்வும்தான் செய்யுளின் ஜீவன். இதனை மொழி மாற்றம் செய்வது வீணான வேலை என்கிறார் அவர்.

செய்யுளை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் கடினமான பணிதான். இருந்தும் உலகம் பூராவும் பாராட்டப்படும் மொழிபெயர்ப்புகள் நான்கை இங்கே குறிப்பிடவேண்டும்.

 1. ஷேக்ஸ்பியரின் பதினேழு நாடகங்களை ஜெர்மன் மொழியில் Schlegel மொழிபெயர்த்தது.
 2. கதேயின் ஃபாஸ்ட் ஆங்கிலத்தில் Bayard Taylor என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
 3. உமர்கயாமின் ருபியாத் எட்வர்டு ஃபிட்ஜெரால்டால் மொழிபெயர்க்கப்பட்டது.
 4. கீதை சம்ஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் சுவாமி பிரபாவானந்தா மற்றும் கிறிஸ்டோபர் ஷர்வுட் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

நவீன மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு முறையைப் பரிசோதித்து வருகிறார்கள்.

 • மூலத்தின் ஒலியையும் மற்ற மொழியையும் இணைப்பது.
 • வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பது.
 • மூலச் செய்யுளின் மாத்திரைகளைக் கணக்கில் கொள்வது.
 • உரைநடையில் சொல்வது.
 • எதுகை மோனையைக் கணக்கில் கொள்வது.
 • செய்யுளுக்கு அர்த்தம் (பொழிப்புரை) தருவது.
 • செய்யுளை விளக்குவது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையது என்றாலும் செய்யுளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல் தீரவில்லை.

மேடைப் பேச்சும் மொழிபெயர்ப்பும்

மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் எழுதியதை மொழிபெயர்ப்பவருக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. எழுத்தை மொழிபெயர்ப்பவருக்குச் சிறந்த எழுத்துத் திறமை வேண்டும். மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியில் வெளிப்படுத்தும் திறமை வேண்டும். இதனால்தான் மொழிபெயர்ப்பாளர்கள் ஒரே ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். குறிப்பாக, தங்களுடைய தாய்மொழியை. மூல மொழியைப் புரிந்துகொள்வதும், அந்த மொழி பேசும் நாட்டின் நாகரிகத்தைப் புரிந்துகொள்வதும் சிறந்த அகராதிகளைக் கொண்ட படிப்பகத்தைப் பயன்படுத்துவதும், துணை நூல்களை வைத்துக் கொள்வதும் அவசியமாகும்.

ஆனால், மேடை மொழிபெயர்ப்பாளரின் பணி கொஞ்சம் வித்தியாசமானது. அவர் தொடர்ச்சியாகவம் உடனடியாகவும் மொழிபெயர்க்க வேண்டும். எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்க முடியாது. ஒரு புறம் மூல மொழியிலிருந்து மொழிபெயர்த்துக் கொண்டே மற்றொரு புறம் மூல மொழியில் பேசப்படுவதையும் கவனிக்கவும் வேண்டும். மனதில் அடுத்த வாக்கியத்துக்கான வார்த்தை அடுக்குகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்த்ததை சரி பார்க்கக்கூட நேரம் இருக்காது. விரைவுதான் முக்கியம். இல்லை என்றால் பேச்சாளர் சொன்னது மறந்து விடும்.

பொதுவாக பேச்சாளர் குறிப்பிட்ட கால அளவில் நிறுத்தி மொழிபெயர்ப்பாளருக்கு அவகாசம் கொடுப்பார். தொடர்ச்சியான மொழிபெயர்ப்பின் போது அவர் குறிப்புகளை எடுத்துக் கொள்வார். இந்தக் குறிப்புகள் ஒரு உதவியாளரின் குறிப்பு போன்று இராது. அது மூலப் பேச்சாளரின் சிந்தனையின் குறியீடாக இருக்கும்.

எழுத்தை மொழிபெயர்ப்பவருக்கும், பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டு. அதே சமயம் இருவருமே மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் ஆழமான ஞானம் உடையவர்களாக இருக்க வேண்டும். விஷய ஞானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இங்கு ஒரு மொழியின் வார்த்தைக்குப் பதிலாக வேறு மொழி வார்த்தையை இட்டு நிரப்பினால் போதாது. ஒரு மொழியில் கூறப்பட்ட சிந்தனையை மற்ற மொழியில் சொல்லவேண்டும். அவர் மூல மொழி வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கிறார். அந்த அர்த்தத்துக்கு மாற்று மொழியில் வார்த்தைகளைக் கொடுக்கிறார்.

மேடையில் மொழிபெயர்ப்பவர்

 • பேசப்படும் பொருள் பற்றிய முழுமையான ஞானம் வேண்டும்.
 • இரண்டு மொழியின் கலசாரத் தன்மை பற்றிய முழுமையான தெளிவு வேண்டும்.
 • இரண்டு மொழி வார்த்தைகளையும் நன்கு தெரிந்து பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
 • சிந்தனைகளைத் தெள்ளத்தெளிவாக இரண்டு மொழியிலும் வெளிப்படுத்தும் திறமை வேண்டும்.
 • தொடர்ச்சியாக மொழிபெயர்க்கும் போது குறிப்புகளைத் திறமையாக எடுக்கத் தெரிய வேண்டும்.
 • உடனடி மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

தகவல் தொழில் நுட்பமும் மொழிபெயர்ப்பும்

தாஷ்கண்ட நகரில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்து போனார். டெலி பிரிண்டரில் வந்திருந்த செய்தியை ‘தினமலர்’ பத்திரிகை டெலிபிரிண்டர் செய்தி வந்த காகிதத்தையே போட்டோ பிடித்து முதல் பக்கத்தில் போட்டது. தமிழ் நாளிதழ்களில் இது புதுமையாகப் பேசப்பட்டது.

இன்று கம்ப்யூட்டர் மூலம் மொழிபெயர்க்கும் காலம் வந்து விட்டது. எட்டு வயது சிறுவன் Popeye கார்ட்டூன் பார்க்கிறான். Popeye தமிழ் பேசுகிறான். அலை மாறினால் இந்தி பேசுகிறான். வங்க மொழியும் தெலுங்கும்கூடப் பேசுகிறான்.

அன்று தந்தி வந்தால் குடல் பதற ஆங்கிலம் தெரிந்தவரைத் தேடி ஓடுவோம். தமிழ்நாடடிலிருந்து சென்ற எம்.பி. நல்லசிவன் அவர்கள் தமிழிலேயே தந்தி அனுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.

தகவல் தொழில் நுட்பத்தின் காரணமாக மொழிபெயர்ப்பு பணி குறைந்து விட்டதா என்றால் இல்லை; அது அதிகமாகியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி, அரசு அலுவலகங்கள் என்று மொழிபெயர்ப்பின் தேவை கூடி வருகிறது. இதன் காரணமாக அனுபவமும் பயிற்சியும் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களால் பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட வேடிக்கை விநோதங்களைக் கதை கதையாகச் சொல்லலாம். பத்திரிகைத் துறை நண்பர் ஒருவரின் வேடிக்கையான மொழிபெயர்ப்பைப் பார்க்கலாம். பஞ்சாப் முதலமைச்சருக்கு தொல்லைக் கொடுக்கிறார் என்று கருதிய இந்திரா காந்தி அம்மையார், கியானி ஜெயில் சிங்கை மத்திய அமைச்சரவைக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரோ மத்திய அரசாணைகளை மூலம் பஞ்சாப் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டார்.

Jail Singh interferes in Punjab through his fiat என்று விமரிசனம் வந்தது. பத்திரிகை நண்பர் இதைத் தமிழ்ப்படுத்தும்போது, ‘ஜெயில்சிங் தன்னுடைய ஃபியட் காரை ஓட்டுவது போல் பஞ்சாப் அரசை ஓட்டுகிறார்’ என்று எழுதியிருந்தார். ஃபியட் எனும்போது அது அரசாணையைக் குறிக்கிறது என்ற விஷய ஞானம் இல்லாதாதல் இந்தத் தவறு ஏற்பட்டது.

ஆரம்ப காலத்தில் சில இந்தி தொடர்கள் தமிழில் பேச ஆரம்பித்தன.

வருகிறேன் சாப்பிட.
போகிறேன் வீட்டுக்கு.

என்கிறரீதியில் பாத்திரங்கள் பேசும். வினைச் சொல் முதலில் வரும்; கேட்பவன் நொந்து போவான்.

மொழிபெயர்ப்பில் தமிழ் மொழியின் நளினம்,மென்மை,மேன்மை தெரியாதவர்களைப் பயன்படுத்துவதல் எற்படுவது இது.

நவீன தொழில்நுணுக்கத்துக்கும் ஈடு கொடுக்க வேண்டும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன் திருமண வீடுகளில் வாத்தியக்கரர்கள், நாதஸ்வரமாயினும், பாண்டுவாத்தியமாயினும் ஒரு பாட்டை வாசிக்கமல்இருக்க மாட்டார்கள். அதுவும் பெண்ணோ,மாப்பிள்ளையோ ஊர்வலமாகவரும்போது கண்டிப்பாக வாசிப்பார்கள். அது

கல்யாண
ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும் –மகிழ்ந்து நான்
ஆடிடுவேன்

என்ற பாடலாகும். இது இந்தி படத்தின் திரைப்பாடலாகும்.  ‘அவன்’ என்ற  படத்தின் பாடல். இந்தியில் ‘Aah’ என்று வந்த படத்தின் டப்பிங் வடிவமாகும்.

ராஜ்கபூர் ,நர்கீஸ் நடித்தார்கள்.இசை அமைத்தவர்கள்சங்கர்-ஜெய்கிஷன்.பாடலை எழுதியவர் ஷைலேந்தர் என்ற உருதுக் கவிஞர்.

ராஜா கி- ஆயேகி பாராத்
ரங்கீலி ஹோகீ ராத், மகனு மே நாசூங்கி

என்பது அந்தப் பாடல்.

இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் பிரபலமானவை. ஜி.கிருஷ்ணவேணிஎன்ற ஜிக்கி பாடியவை. அந்தக்காலத்தில் இசைத் தட்டு விற்பனையில் முதலிடம் பெற்றவை. தமிழ் பாடலைக் கேட்டு ஷைலேந்திரா பாடலாசிரியரை பார்க்க தமிழ்நாடு வந்தார். ஐயா! மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை நான் உருது மொழியில்மொழிபெயர்த்தது போல் இருக்கிறது என்றாராம் அவர்.

மனதில் கவித்துவமும்,மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

அந்தப் பாடலாசிரியர், கண்ணதாசன்.

0

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்

தவறான திசையில் ஓடும் உலகம்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 11

Icepits near Allahabad. Drawing by Fanny Parks c. 1830

இந்தியாவில் பிரிட்டிஷார் சற்றும் எதிர்பார்த்திராத இன்னொரு விஷயமும் நடந்துவந்தது. சுட்டெரிக்கும் வெய்யில் நிறைந்த நம் தேசத்தில் செயற்கை முறையில் ஐஸ் தயாரிக்கப்பட்டு வந்ததைப் பார்த்ததும் அவர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. அவர்கள் இமயமலை வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கவில்லை. எனவே, இந்தியாவில் பனிக்கட்டியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பனிக்கட்டி நிறைந்த பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் ஐரோப்பியர்களுக்கு செயற்கையாக அதை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவில் அப்போது பனிக்கட்டி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து சர் ராபர்ட் பார்க்கர் (எஃப்.ஆர்.எஸ்) (1775) மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

கட்டுரையை ஆரம்பிக்கும்போதே, அவர் ஆய்வு மேற்கொண்ட அலகாபாத், கல்கத்தா பகுதிகளில் எங்கும் தெருவிலோ சமவெளிகளிலோ பனிக்கட்டிகளே கிடையாது. வெப்பமானியும் உறை நிலை வெப்பத்தை ஒருபோதும் சுட்டிக்காட்டியதில்லை என்றுதான் ஆரம்பிக்கிறார். இயற்கை பனிக்கட்டி என்பது கிடையாது; இந்தப் பகுதியில் செயற்கையாகவேதான் பனிக்கட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவே அவர் அப்படியான குறிப்புடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். டிசம்பரில் இருந்து பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பெருமளவுக்கு ஐஸ்கட்டி உற்பத்தி செய்யப்பட்டதை நேரில் பார்த்து எழுதியிருக்கிறார். வேறு சிலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். என்றாலும் இதுதொடர்பாக வெறும் மேலோட்டமான தகவல்களே எங்கும் அதிகம் இருப்பதால் விரிவாக எழுத முடிவெடுத்ததாகச் சொல்கிறார். அவர் சொல்வதன் சாராம்சம் இது.

மிகப் பெரிய திறந்த வெளியில் 30 அடி சதுரத்தில் இரண்டடி ஆழத்தில் ஒரு பாத்திபோல் மூன்று நான்கு குழிகள் வெட்டப்பட்டன. எட்டு அங்குல அளவுக்கு கரும்பு அல்லது மக்காச்சோளத் தட்டைகொண்டு நிரப்பப்பட்டன. இந்தப் படுகை மேலே உறைய வைக்க வேண்டிய நீரானது சிறு சிறு பானைகளில் ஊற்றப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. இந்த நீரானது கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும். இப்படி மாலை நேரத்தில் வைக்கப்படும் நீரானது சூரியன் உதிப்பதற்கு முன்பாக சேகரிக்கப்படும். எந்த அளவுக்கு பனிக்கட்டியாக ஆகியிருக்கிறதோ அது அப்படியே கூடைகளில் சேகரிக்கப்பட்டு வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு 14-15 அடிக்குக் குழி தோண்டப்பட்டிருக்கும். அந்தக் குழியில் முதலில் வைக்கோல் போடப்பட்டிருக்கும். அதன் பிறகு கரடு முரடான போர்வை போன்ற ஒன்று போடப்படுகிறது. இந்தக் குழிக்குள் கூடை வைக்கப்பட்டு குழியின் மேல் பகுதி மீண்டும் காற்றுப் புகாதபடி வைக்கோல் போட்டு மூடப்படும். இந்தக் குழிகளுக்கு மேலே பந்தல் போல் கூரை வேயப்பட்டிருக்கும்.

கரும்பு அல்லது சோளத்தட்டைகளின் ஸ்பாஞ்ச் போன்ற தன்மை பானைகளுக்குக் கீழே குளிர்ந்த காற்று சென்று வர வழிசெய்கின்றன. பானையில் இருக்கும் சிறு துவாரங்கள் குளிர்ந்த காற்று உள்ளே செல்ல வழி செய்து தருகின்றன. சம தளத்தில் இருந்து ஒரு அடி கீழே இவை வைக்கப்பட்டிருப்பதால் சம தளக் காற்றினால் எந்த அதிர்வுக்கும் ஆளாகாமல் இருக்க வழி செய்கிறது. இவை எல்லாமே மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமே கண்டடையப்பட்டிருக்க வேண்டும்.

இந்த ஐஸ் உற்பத்தியில் பின்பற்றப்பட்டிருக்கும் விஞ்ஞானம் மிகவும் எளியது. பிற பொருட்களில் இருந்து வெப்பம் வந்து சேர முடியாதபடி நீர், திறந்த வெளியில் வைக்கப்பட்டால் சுற்றுப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு சில டிகிரிகள் அதிகமாக இருக்கும்போதே நீரானது பூஜ்ஜியத்தை எட்டிவிடும். இந்தப் பனிக்கட்டியானது பெருமளவுக்குச் சேகரிக்கப்பட்டு முறையாக மூடிவைக்கப்பட்டால் உறை நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.

சர்பத்கள் அல்லது உறைய வைக்கப்படவேண்டிய திரவங்களானது ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றப்பட்டு ஐஸ்கட்டிகள், வெடியுப்பு, சாதா உப்பு போன்றவை இருக்கும் பெரிய பாத்திரத்தினுள் வைக்கப்படும். கிண்ணத்துக்குள் வைக்கப்படும் திரவமானது ஐஸ்க்ரீம் போல வெகு அருமையாக உறைந்துவிடும். ஐரோப்பாவில் நாம் எந்த அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறோமோ அதே அளவுக்கு இந்திய ஐஸ்க்ரீம்களும் இருக்கின்றன.

இந்த வழிமுறையானது இந்தியர்கள் தாமாகவே கண்டுபிடித்ததுதான். பனை ஓலை விசிறியில் ஆரம்பித்து வெட்டி வேர் தட்டிகள் வரை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியக் குடிசைகள் என்பவை வெய்யில் காலத்தில் குளிர்ச்சியாகவும். மழைக்காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் சக்திகொண்டவை. இன்றைய கான்க்ரீட் வீடுகளோ சுண்ணாம்புக் காளவாய்போல் தகித்துவருகின்றன. இந்த நவீன மனிதன்தான் நேற்றைய மனிதனைப் பார்த்து தொழில்நுட்பத்தில் நீ பின்தங்கியவன் என்று சொல்கிறான்.

காகிதத்தைக் கண்டுபிடித்தது சீனர்கள்தான் என்றாலும் இந்தியாவிலும் அது உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷார் பைபிள் அச்சடிக்கப் பயன்படுத்திய காகிதத்தை இந்திய பேப்பர் என்றே அழைத்திருக்கிறார்கள். சீனாவுடனும் அவர்களுக்கு தொடர்பு இருந்திருக்கிறது என்றபோதிலும் பைபிள் அச்சடிக்கப் பயன்படுத்திய தரமான காகிதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  பிற தேசத்துக் கண்டுபிடிப்பையும் தனது திறமையைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் திறமை நம்மிடம் இருந்தது  புலனாகிறது. இது ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் இருந்து வந்ததன் அடையாளம்.

இந்தியா மிகவும் சிறந்து விளங்கிய இன்னொரு துறை விவசாயம். ஊடுபயிரில் ஆரம்பித்து இயற்கை வழியில் உரங்களை உற்பத்தி செய்வது வரை எத்தனையோ விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட காலகட்டத்தில் ஒரு சமூகம் அந்தத்துறையில் சிறந்து விளங்குவது இயல்புதான். என்றாலும் நீர்பாசனத்தில் நாம் அடைந்த உச்சம் வேறு எந்த நாடும் நினைத்தே பார்த்திருக்க முடியாதது. வற்றாத நதிகள் எதுவும் இல்லாத தமிழகத்தில் ஏரிப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கின்றன (வரும் அத்தியாயங்களில் இது பற்றி விரிவாகப் பார்ப்போம்).

மனிதர்கள், குறிப்பாக இந்தியர்கள் தமது சுற்றுச்சூழல், வாழ்க்கைத் தேவைகள், அனுபவங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். எப்போதுமே மனித வாழ்க்கையின் இலக்கு என்பது சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான். ஒவ்வொருவரும் தமது சந்தோஷத்துக்கு ஒவ்வொரு வழியைத்தேடிக் கண்டைவதுண்டு. அனைவருக்கும் பொதுவான ஒன்றை முன்வைத்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை மதிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவே போய் முடியும்.

துணிகளை வெளுக்கும் தொழில் ஈடுபட்டவர்கள் அதற்கான வேதிப் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கூடவே சுமைகளைச் சுமந்து செல்ல கழுதைகளை வளர்ப்பு மிருகங்களாக்கிக் கொண்டார்கள். விவசாயிகள் கலப்பை போன்றவற்றைக் கண்டுபிடித்ததோடு காளை மாட்டைக் கொண்டு உழவுத் தொழிலைச் செய்துகொண்டார்கள். உடல் வலு குறைவென்பதால் உடல் உழைப்பில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்ட பிராமணர்கள், மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேடி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். அதனால் தத்துவார்த்த, இருத்தியல் சிக்கல்களை நோக்கி அவர்களுடைய நகர்வு அமைந்தது. உடல் உழைப்பில் ஈடுபட்டுவந்த பிரிவினர் வேத வேதாந்தங்களைப் படிக்க முடியவில்லையே என்று மூலையில் சோர்ந்துபோய் உட்காராமல் தமது வேலை சார்ந்த தொழில்நுட்பங்களை வெகு நேர்த்தியாகக் கண்டடைந்துவந்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்த அறிவானது அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்பட்டு தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. அப்படியாகக் கடந்த கால இந்திய சமூகத்தில் (உலகின் பிற சமூகங்களைப் போல) வேலைகளை மாற்றிக்கொள்ளத்தான் வழி இருந்திருக்கவில்லையே தவிர, ஒவ்வொருவரும் தமது வேலையைச் செழுமைப்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை.

நவீன காலகட்டத்தில், ஒரு சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் இருந்த இத்தகைய அறிவானது பொதுத்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அது சார்ந்து சிந்தித்து ஒவ்வொரு தொழிலையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மேற்குலகில் இந்த நவீன யுகச் செயல்பாடுகள் அவர்களுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மிக இயல்பாக நடந்தேறி இருக்கிறது. இந்தியாவிலோ அது நேர்மாறாக ஆகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது அனுபவம் சார்ந்து கற்று உருவாக்கியிருந்த தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறைகளும் ஒற்றை வரியில் நிராகரிக்கப்பட்டன. ஒருவேளை இந்திய பாரம்பரிய அறிவானது அதன் இயல்பான போக்கிலேயே வளரவிடப்பட்டிருந்தால் மேற்குலகின் பேராசை பிடித்த முன்னேற்றத்துக்குப் பதிலாக இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு வளர்ச்சியை நாம் அடைந்திருக்கமுடியும். ஒருவேளை பிரிட்டிஷார்கள் தமது ஆதிக்க மனோபாவத்தை விட்டொழித்து உலகின் பல பகுதிகளில் இருந்த அறிவைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தால் உலகமே மிகவும் நிதானமான வளர்ச்சியை நோக்கிப் போயிருக்கும்.

ஜே.சி.குமரப்பா ஐந்துவகை பொருளாதாரம் பற்றிச் சொன்னார். சிங்கம் புலி போல் பிறரை அழித்து தன்னை வளர்த்துக் கொள்ளும் வேட்டைப் பொருளாதாரம் ஒரு முனையில் இருக்கிறது. இதற்கு நேர் எதிர்முனையில் தாயன்புடன் பிரதிபலன் எதிர்பார்க்காமல், குறைந்த தேவைகளுடன் தியாக மனப்பான்மையுடன் திகழும் சேவைப் பொருளாதாரம் இருக்கிறது. மேற்குலகம் வேட்டைப் பொருளாதார மனநிலையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா சேவைப் பொருளாதார மனநிலையை கொண்டது. குமரப்பா பொருளாதாரத்துக்குச் சொன்னதை அதற்கு அடிப்படையான தொழில்நுட்பத்துக்கும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். இன்றைய மேற்கத்திய தொழில்நுட்பத்தின் மூலம் மனித குலம் அனுபவித்துவரும் வளர்ச்சியானது அபாயகரமானது. நிலைமை கைமீறிப் போவதற்கு முன் அதை உணர்ந்துகொள்வதுதான் நமக்கு நன்மை தரும்.

0

நிழலாய் வருவேன்!

Bee’s Kopitiam (Chennai, TN)
Only for foursquare users 🙂
Free Chicken Wings or Vietnamese Rolls every 3rd Check In

மேலே உள்ளது ஒரு விளம்பரம். இதை நீங்கள் ஹிந்துவிலோ, தினந்தந்தியிலோ, டைம்ஸிலோ, தினகரனிலோ பார்த்திருக்க முடியாது. உங்கள் வீட்டு டிவி சேனலில் இது வராது. நீஙகள் கும்மியடிக்கும் வலைத்தளங்களில் இதை பார்க்க முடியாது. அப்புறம் என்னதான் இது?

மவுண்ட் ரோட்டினையொட்டி, ஸ்பென்சர் பக்கமாகப் போனால், உங்கள் மொபைலில் வரும். “பஜாஜ் லைப் இன்ஷூரன்ஸில் முதலீடு செய்வீர்” என்று வரும் பல்க் குறுஞ்செய்தி இல்லை. மாறாக, உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப,  நீங்கள் அனுமதி கொடுத்த தளங்களிலிருந்து வரும் தள்ளுபடிகள்.

முதலில் இமெயில். அப்புறம் சாட். பின் ட்விட்டர். அதன்பின் பேஸ்புக். இப்போது location based apps. மனிதன் தொடர்பில் இருக்கத்தான் எத்தனை வழிகள்.

location based apps (LBA) என்பவை உங்களின் இடம்,விருப்பம், தொடர்புகள் சார்ந்து இயங்கும் செயலிகள். சுருக்கமாக, இடம் சார்ந்த செயலிகள். மேற்சொன்ன விளம்பரம் நீங்கள் மவுண்ட்ரோடு போனால் மட்டுமே வரும். இடம், பொருள், ஏவல் என்பதை இடம்,பொருள், எல்பிஏ என்று மாற்றிக் கொண்டால், சுலபம். உங்கள் மொபைலில் முதலில் எல்பிஏ செயலி வேண்டும். இது இலவசம். இதைத் தரவிறக்கிக் கொண்டால், நீங்கள் எங்கே போனாலும் செக்-இன் செய்யலாம்.

செக் இன் ஹியர்!

செக்-இன் என்பது, “நான் இங்கே அயினாவரம் டாஸ்மாக்கில் இருக்கிறேன்” என்பது மாதிரி. நீங்கள் மட்டுமே ஒரு புது இடத்துக்கு முதல் முறையாக செக்-இன் செய்து, வேறு யாரும் அங்கு செக்-இன் செய்யவில்லையென்றால், நீங்கள் தான் அந்த இடத்துக்கு மேயர். மேயர் என்பது ஒரு விரிச்சுவல் பாட்ஜ்.

“இது என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு” என்று நினைக்காதீர்கள். கடந்த ஐந்தாம் தேதி, போர்ஸ்கொயர் என்கிற எல்பிஏ தளம் தொழில்நுட்பக் காரணங்களினால், படுத்துவிட்டது. அமெரிக்காவில் பாதி பேர் வீட்டை விட்டு நகரவில்லையாம். எல்லாம், வெளியே போனால் பாட்ஜ் கிடைக்காது என்பதால். டவிட்டர், பேஸ்புக் என ஒரே ஒப்பாரி, புலம்பல். 11 மணிநேரத்துக்குப் பிறகு சேவை சரி செய்தவுடன்தான் பாதி பேருக்கு, கால்கள் என்றிருப்பது நடக்க, வெளியே செல்ல என்பதே தெரிய வந்தது.

கிறுக்குத்தனமாகத் தெரிகிறதா? அப்படிப் பார்த்தால், கருத்து கந்தசாமிகளாக இருக்கும் மில்லியன் வலைப்பதிவுகளும், 90 மில்லியன்++ ட்வீட்டுகளும், “பக்கத்து வீட்டு மாமி பாவாடையை காய போடறாங்க” என சொல்லும் பேஸ்புக் ஸ்டேடஸ் தகவல்களும் கூட கிறுக்குத்தனம் தான்.

இயல்பாகவே அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கிறது எனும் அடிப்படை உளவியல் ரீதியான வாயூரிஸமமும், “எந்திரன் செம மொக்கைப்பா. போன தடவை எல்.ஏல ஸ்பீல்பர்கோட ஜூராசிக் பார்க் பார்த்தேன், அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஜுஜூபி” எனறு திண்ணையில் காலாட்டும் அலட்டலும் மனிதர்களின் ஜெனடிக்கல் மேப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பெருமை எவ்வளவு சுலபமாக பரப்பப்படுகிறதோ, அவ்வளவு சுலபமாக நாமும் அதற்குள் மசிந்து விடுவோம். இதனாலேயே எல்பிஏக்கள் நம் தலைமுறைக்கான ஏழாவது விரலாக மாறும் சாத்தியங்கள் இருக்கிறது.

எப்படி பதிவுகள் எழுத்தாளர்களுக்கும், ட்விட்டர் அரை/முக்கால்/முழு வேக்காடுகளுக்கும், கூகிள் ஆட்வேர்ட்ஸ் நிறுவனங்களும் மாறியதோ, அதற்கு ஈடான பெரும் மாற்றத்தை எல்பிஏகளால் கொண்டு வர முடியும். வெறுமனே செக்-இன், பாட்ஜ், மேயர் மாதிரியான ஜில்பான்ஸ்களில் என்ன பெரிய லாபமிருக்கிறது ?

எக்கச்சக்கமாக இருக்கிறது.

உங்கள் மொபைல்தான் இனி உங்களுடைய ஷாப்பிங் மால். மொபைலில் எல்பிஏக்கள் இருந்தால், cooooooool என்று பெண்கள் வட்டமிடுவார்கள், ஒரு நாளைக்கு 2 பெண்கள் வீதம் உங்கள் படுக்கையறையில் என்றெல்லாம் புரூடா விடலாம். அது நடக்குமா, நடக்காதா என்று தெரியாது. ஆனால், உங்கள் இருப்பிடம் சார்ந்து பல வேலைகள், எளிமைப்படுத்தப்பட்டு விடும். பெசன்ட் நகரிலிருந்து அண்ணா நகர் போக வேண்டும், ஆட்டோ 250ரூ கேட்பார் என்று தெரியும், 4ஸ்கொயரில் கொஞ்சம் துழாவினால், யார் யார் உங்கள் பக்கத்திலிருந்து, அண்ணாநகர் போகும் தேவையில் இருப்பார்கள் என்று தெரியும், பேசாமல் அழைத்து, ஷேர் பண்ணால் செலவு மிச்சம்.

இது ஒரு மாதிரியான சேவை. யார் கண்டது, தியேட்டர் ஈயடித்துக் கொண்டிருந்தால், கிராஸ் செய்யும்போது “30% தள்ளுபடி அடுத்த 15 நிமிடங்களே உள்ளன” என்று தியேட்டர்கள் காலி சீட் ரொப்பலாம். இது மாதிரி, இடம் சார்ந்து எண்ணற்ற புத்தம்புது சேவைகளை நம்மால் யோசிக்க முடியும். சேல்ஸ் ரெப்கள் கவனிக்க: மொக்கையாய் ஐநாக்ஸில் செக்-இன் செய்துவிட்டு, மேனேஜரிடம் “2.45க்கு நான் கிளையண்டோட சீரியஸா பேசிட்டு இருந்தேன் சார்” என உதார் விட்டு மாட்டிக் கொள்ளாதீர் (பொது நலன் கருதி வெளியிடுவோர்: பார்க்கில் உட்கார்ந்து மார்க்கெட் ரிசர்ச் டேட்டா முடிக்கும் சங்கம்)

சிறு வணிகர்களுக்கு இந்த மாதிரி எல்பிஏ ஒரு பெரிய வரப்பிரசாதமாக மாறும். 12.40க்கு பைலட் தியேட்டர் கடக்கும்போது “இன்ப ரகஸ்யங்கள்” செக்-இன் செய்தால் 10% தள்ளுபடி என்றோ, ராயப்பேட்டையை சாயந்திரம் 3.37க்குக் கடக்கும்போது, ஏதாவது ஒரு முட்டுச்சந்தில் மாமா போடும் மசால்வடையும், 7.23க்கு ஜாபர்கான் பேட்டை போனால், பாய் போடும் குஸ்காவும், சிக்கன் கவாபும்,  உங்களுக்குத் தெரியுமானால், உங்களால் எத்தனை முறை அதைத் தவிர்த்து வேறு வேலை செய்ய முடியும்?

‘பாய்ஸில்’ செந்திலுடைய கதாபாத்திரம் செய்வது அத்தனையும், அதற்கு மேலும் இனி உங்கள் மொபைல் செய்யும். (பார்த்தசாரதி கோயில் புளியோதரை, மயிலாப்பூர் கதம்ப சாதம், போத்தீஸ் ஆபர், பாட்டா ஷோரூம் டிஸ்கொவுண்ட் சேல்ஸ் – “இன்பர்மேசன் இஸ் வெல்த்”).

இன்னும் கொஞ்ச நாளில் “பரிந்துரைகள்” (Recommendations) ஆரம்பித்து விடுவார்கள். ஒரு ரெஸ்டாரெண்டோ, டிஸ்கவுண்ட் சேலோ, நீங்கள் நுழைந்து செக்-இன் செய்யும்போதே உங்கள் நண்பர்கள் அதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது (“மச்சான், போவாதே டிஸ்கவுண்ட்னு போட்டு பழைய ஸ்டாக் தள்றானுங்க”, “எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சூப்பர், வுட்ராதே” “மூணாவது ரோல உக்காரத, கப்பு அடிக்கும்”) அப்பட்டமாகத் தெரிந்து விடும். இன்றைக்கு டிவிட்டர் விஷய பரிமாற்றங்களை எளிது படுத்தியதைப் போல, 100 மடங்கு விஷயங்களை எல்பிஎ சாதிக்கும்.

இது தாண்டி, சிறு/பெரு வணிகர்களுக்கு இதை விடச் சிறந்த விளம்பர யுக்தி வேறெதுவும் இருக்க முடியாது. நீங்கள் இந்த மாதிரி ஏதேனும் நிறுவனத்தை நடத்தினாலோ, பணி புரிந்தாலோ போர்ஸ்கொயர் தளத்தில் பதிந்து கொள்ளுங்கள். யார் கண்டது, உங்கள் விற்பனை எகிறி, இன்கிரிமெண்ட் வாங்கி, பொண்டாட்டியோடு ஆபிஸ் காசில் செந்தோசா பார்க்கப் போனால், மனைவியைத் தீண்டாத நேரத்தில் என்னையும், எல்பிஏவையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்னும் கொஞ்ச நாளில், மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ்ஸில் நுழைவதற்கு முன் போர்ஸ்கொயரில் பார்த்துவிடலாம் – ஏதாவது நச்சு, ரம்பம், டார்ச்சர் கேஸ்கள் இருக்கிறார்களா, இல்லை நமக்குக் கடன் கொடுத்தவன் உள்ளே அடையை வாயில் அடைத்துக் கொண்டிருக்கிறாரா என்று.

அதுவரைக்கும், மூணாம் நம்பர் டேபிளுக்கு ஒரு முட்டை பரோட்டா பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்……