க்ரோனஸ் என்னும் கொடியோன்

கிரேக்க இதிகாசக் கதைகள் / 1

Rubens_saturnக்ரோனஸ் இப்பொழுது வான மண்டலங்கள் மற்றும் பிற உலகங்களுக்கெல்லாம் ஏகாதிபதி ஆகிவிட்டான். பேருலக ஆட்சி அதிகாரம் அவன் கையில் வந்ததால் அவனுடைய உடன்பிறப்புகளுக்கெல்லாம் அதிகாரத்தைப் பகிர்ந்துளித்துவிட்டு மாமன்னனாக வலம் வருகிறான். தங்கை முறையிலுள்ள ரியா என்பவளை மணந்துகொள்கிறான். அவருக்கும் பேருலகத்தின் பேரரசி என்ற பட்டம் கிடைத்துவிட்டது. ஆதி தேவன் யூரேனஸை ஆட்சியைவிட்டு அகற்ற மற்ற உடன்பிறப்புகளைப் போன்று தனக்கு உறுதுணையாக உதவி புரியாமல் ஒதுங்கிக்கொண்ட ஒரே டைட்டன் ஒஷனஸ் என்பவனை எப்பொழுதும் போல் கடல் தேவனாகவே இருக்குமாறு விட்டுவிட்டான் க்ரோனஸ். அவனால் தொல்லை இல்லை என்பதால் இந்த ஏற்பாடு.

ஆனால் ஒரு கவலை மட்டும் தீரவேயில்லை க்ரோனஸுக்கு. நான் என் தந்தையைக் கொன்று பதவியைப் பிடித்துக்கொண்டதைப்போல் நாளை என் பிள்ளைகள் என்னைக் கொன்றால் என்னாகும்? இந்த நினைப்பு அவன் நெஞ்சில் காட்சியாக விரிந்து பயமுறுத்துகிறது. எப்படியாவது தன் உயிரையும் பதவியையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கிறான். குழந்தை பிறந்தவுடன் அப்படியே வாயில் போட்டு விழுங்கிவிடவேண்டும் என்று தீர்மானிக்கிறான்.

ஒரு நாள் ரியா தன்னுடைய முதல் பெண் குழந்தையை ஆசையோடு எடுத்துவந்து தன் கணவனிடம் தருகிறாள். க்ரோனஸ் அந்தப் பச்சிளம் குழவியைக் கையிலே வாங்கி ஒரே விழுங்காக விழுங்கி விடுகிறான். அடுத்தடுத்து பிறந்த இரு பெண் சிசுக்களையும் இதேபோன்று விழுங்கி விடுகிறான். பிறகு பிறந்த இரு ஆண் குழந்தைகளுக்கும்கூட இதே கதிதான். கடைசியாக ரியா கர்ப்பமடைந்தபோது, ரியாவின் தாய் ஜியா அவளிடம், “இனி பிறக்கின்ற குழந்தையை க்ரோனஸிடம் காட்டாதே. அவன் கேட்டால், குழந்தை அளவுக்கு ஒரு கல்லைத் துணியிலே சுற்றி  இதுதான் குழந்தை என்று கொடுத்துவிடு. கல்லை விழுங்கட்டும் அந்தக் கல்நெஞ்சுக்காரன். பின் நடக்கப் போவதைப் பார்” என்றாள். இதன் பிறகு ரியா மலைகள் சூழ்ந்த க்ரீட் தீவுக்குச் சென்று, டிக்ட் என்ற மலைப் பொதும்பில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைதான் ஸீயஸ். தன் பணியாட்களிடம் குழந்தையை ஒப்படைத்து, அத்தீவின் மன்னனான மெலிஷியஸ் என்பவனின் புதல்வியான மோகினிகள் – இடா, அட்ரேஸ்டியா ஆகியோரின் கவனிப்பில் க்ரோனஸுக்குத் தெரியாமல் வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறான். ஆயுதம் தரித்தவாறு, பிள்ளையைப் பாலூட்டி சீராட்டி தோளிலிட்டு, தூங்க வைத்தும் விளையாடச் செய்தும் வேண்டிய வண்ணம் கடமைகளை எல்லாம் தவறாது மூன்று கியூரிடஸ்கள் செய்கிறார்கள். இவர்கள் மூவர் அல்ல, பதின்மர் என்ற கூற்றும் உண்டு. இடாவும், அட்ரேஸ்டியாவும் குழந்தை ஸீயஸைக் கொஞ்சுவதும் கொள்ளைப் பாசமும் பிரியமும் ததும்ப, கொண்டாடுவதுமாக இருக்கிறார்கள். அன்னையின் அருகாமையும் அரவணைப்பும் இல்லாத குறை தெரியாது வளர்கிறான் ஸீயஸ்.

ரியா திட்டப்படி கருங்கல்லை க்ரோனஸிடம் கொண்டுபோய் கொடுக்கிறாள். க்ரோனஸ் அதையும் கையிலே வாங்கி,  வாயைத் திறந்து விழுங்கிவிடுகிறான்.

காலம் ஓடுகிறது. குழந்தையாக இருந்த ஸீயஸ் இப்பொழுது குமரனாக மாறிவிடுகிறான். வாலிபத்தின் வனப்பும் வசீகரமும் அவனைப் பொலிவுறச் செய்து பார்ப்பவரை எல்லாம் கவர்ந்து இழுக்கிறது. ரியா தன் மகனை யாரோ ஒருவனுடைய பிள்ளையைப் போல் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறாள். ஸீயஸும் ரியாவும் சேர்ந்து க்ரோனஸைத் தீர்த்துக் கட்டுவது என்று தீர்மானிக்கிறார்கள். க்ரோனஸ் இதுவரை விழுங்கிய தன் குழந்தைகளை முதலில் வெளிவரச் செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதற்கு அவன் வாந்தி எடுத்தாகவேண்டும். அதற்கொரு மருந்து தயாரித்துத் தருகிறாள் ரியாவின் சகோதரன், ஓஷனஸின் மகள் மெட்டீஸ்.

ஒரு நாள் க்ரோனஸ் குடிப்பதற்கு ஏதேனும் கொண்டுவரச் சொல்ல, இதுதான் தகுந்த சந்தர்ப்பம் என்று எண்ணி, மெட்டீஸ் ஒரு பானத்துடன் மருந்தைக் கலந்து ஸீயஸிடம் கொடுத்து,  அதை க்ரோனஸ் குடிப்பதற்குக் கொடுக்கச் சொல்கிறாள். மகன் என்று அறியாமலேயே தனக்குப் பானத்தை எடுத்து வந்த ஸீயஸிடமிருந்து க்ரோனஸ் அதை வாங்கிக் குடிக்கின்றான். அவ்வளவுதான், குமட்டல் ஏற்படுகிறது. குடல் புரளுகிறது. கண்கள் சுழல்கின்றன. தள்ளாடுகின்றான் க்ரோனஸ். வயிற்றிலிருந்து ஒரு புயல், வேகமாகப் புறப்பட்டு வந்தது போல் வாந்தி எடுக்கிறான். முதலில் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டு வந்த விழுந்தது கருங்கல்தான். அதன் பிறகு குழந்தைகள் ஒவ்வொன்றாக வந்து குதிக்கின்றன. சில குழந்தைகள் வளர்ந்திருந்தன. சிலர் வாலிபப் பருவத்தை எட்டியிருந்தனர்.

க்ரோனஸுக்குப் புரிந்துவிடுகிறது. தன் முன்னால் நிற்பவன் தன் மகன் என்பதை அவன் உணர்கிறான். ஆத்திரமும் ஆங்காரமும் கொண்டு ஆர்ப்பரிக்கிறான். ஸீயஸையும் அவன் உடன் பிறப்புக்கள் அத்தனைப் பேரையும் ஒழித்துக் கட்டியே தீருவேன் என்று சபதம் செய்கிறான். பூதாகர உடலுடன் போர்ப் பிரகடனம் செய்கிறான்.

சமரில் வென்றான் ஸீயஸ்

போர் தொடங்கிவிட்டது. ஸீயஸுக்கு முன் பிறந்த மூத்தவர்களான ஹேடஸ், பொசிடான் ஆகிய இருவரும் போர் உடை பூண்டு, ஆயுதம் தாங்கி ஸீயஸுக்குப் பக்க பலமாக நிற்க, அவனுடைய உடன் பிறந்த சகோதரிகளான ஹேஸ்டியா (Hestia), திமெதர் (Demeter), ஹீரா (Hera) ஆகியோர் தங்களுக்கேற்ற வகையில் தன் சகோதரன் வெற்றி காணவும் தந்தை முறியடிக்கப்படவும் வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலாயினர். பாட்டி ஜியாவினால் பெற்றெடுக்கப்பட்ட அரக்கர்கள் சிலரை வைத்துக்கொண்டு போரைத் தொடங்கிவிடுகிறான் ஸீயஸ்.

க்ரோனஸ், டைட்டன்களான தன் உடன்பிறந்தார் அனைவரையும் ஒன்றுகூட்டி விடுகிறான். ஆனால் கடல் தேவனான ஓஷனஸ் மட்டும் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கிவிடுகிறான். மூர்க்கன் க்ரோனஸ், அவனது சகோதரர்களான டைட்டன்கள், அவர்கள் காவலர்கள், ஏவலர்கள் என்று படை திரள்கிறது. மற்றொரு பக்கமும் ஸீயஸ், அவனது சகோதர-சகோதரியர், துணைக்கு சில அரக்கர்கள் என்று ஒரு படை.

தெஸ்ஸாலி என்ற இடமே போர்க்களமாகி விடுகிறது. ஸீயஸும் அவனது படையும் ஒலிம்பஸ் மலையைக் கைப்பற்றிவிடுகின்றனர். க்ரோனஸின் படையினர் ஒத்ரிஸ் மலையைப் பிடித்து, நிலைப்படுத்திக்கொண்டனர். டைட்டன் படையின் பலப்பிரயோகம் ஸீயஸின் படையினரைத் திணறடிக்கின்றது. இப்படியே இருபடையினரும் தாக்கிக் கொள்வதும் திணறிப்போவதுமாக பத்தாண்டு காலத்தைக் கழிக்கிறார்கள்.

ஸீயஸின் பாட்டி ஜியா, யூரேனஸைப் பெற்றெடுத்துப் பின் அவனை மணந்து அதன்பின் அவனையே ஒழித்துக் கட்ட க்ரோனஸுக்குத் துணை நின்றவள். இப்பொழுதோ, க்ரோனஸை ஒழித்துக்கட்ட ஸீயஸுக்கு உதவ முன்வந்தாள். அவளது ராஜ வியூகம் செயல்படத் தொடங்கியது. அவளுக்குப் பிறந்த சைகிளாப்ஸ் என்ற ஒற்றைக் கண்ணர்களையும் மற்றொரு பிரிவினரான நூறு கரங்கள் கொண்ட அரக்கர்களையும் ஸீயஸ் பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்று கணிக்கிறாள். ஆனால் இவர்களைத் தன் சகோதரனான டான்டரஸ் சிறைபிடித்துள்ளான் என்பதை அறிந்து அவர்களை விடுவிக்கச் சொல்கிறாள். இது ஓர் அசாத்திய காரியம். டான்டரஸ் கேம்ப் என்ற பூதத்தின் பொறுப்பில் இவர்கள் சிக்கியிருந்தனர்.

ஜியா ஸீயஸுக்குத் துணையாக மின்னல், இடி இரண்டையும் அனுப்புகறாள்.ஸீயஸ் தன் படை, இடி, மின்னலோடு சென்று தன் உடன் பிறந்தவர்களான ஹேடல் அளித்த தலைக்கவசத்தை அணிந்துக்கொண்டு மற்றொரு சகோதரன் போசிடான் அளித்த அற்புத வாளை ஏந்தியபடி செல்கிறான். மின்னல் ஒளி கண்டு கேம்ப் கண்கள் கூசுகின்றன. இடியும் இடிக்க, ஒரே கணத்தில் கேம்ப்பை வெட்டி வீழ்த்துகிறான் ஸீயஸ். சைக்கிளாப்ஸ் மற்றும் அரக்கர்களை விடுவிக்கிறான்.

பெரும் பலம் திரண்டதும் ஸீயஸ் க்ரோனஸின் டைட்டன்களை எல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தான். வெற்றி முரசு கொட்ட எதிரிகளை விரட்டிக்கொண்டே வருகிறான். முதுகிலும் தலையிலும் பலமாக அடிபட்டுப் பெரிய உடம்பைத் தூக்க முடியாமல் மூச்சு வாங்கியபடி, வானுலக அரசைவிட்டு ஓடுகிறான் க்ரோனஸ்.

ஒரு காலத்தில் தன் தந்தையை எந்தக் கடலில் வெட்டி வீசினானோ, அதே கடலுக்கு அடியில் அபயம் புகுந்தான் க்ரோனஸ். அங்கும் அமைதியாக அவனால் இருக்கமுடியவில்லை. தன்னை ஸீயஸ் துரத்துவதாகவோ அல்லது அவனைச் சார்ந்தவர்கள் துரத்துவதாகவோ எண்ணிக்கொண்டு, குனிந்தபடி நீர் வழிய, வழிய ஒரு கையைத் தொங்கப்போட்டுக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கடல்நீரின் அடியில் ஓடிக்கொண்டே இருக்கிறான். இவனைக் கிழட்டுச் சனி என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இவனது பார்வை யார் மீது விழுந்தாலும் அல்லது இவனை யார் பார்த்தாலும் அவர்களுக்குக் கஷ்டகாலம் ஆரம்பித்துவிடுமாம்.

மணிமுடியும் மணமாலையும்

பத்தாண்டுக்காலப் போர் முடிந்தது. பாட்டி ஜியாவின் தந்திரமும் தயவும் ஸீயஸை வெற்றி வேந்தனாக ஆக்கிவிட்டன. க்ரோனஸையும் அவனது சக டைட்டன்களையும் முறியடித்து வாகை சூடுகிறான் ஸீயஸ். வான மண்டலத்துக்கும் பூவுலகத்துக்கும் இனி ஸீயஸே சக்கரவர்த்தி. எனவே அவன் ஈடும் இணையுமற்று அரியணை அமர்கின்றான்.

பட்டத்து ராணியாக, பக்கத்தில் ஒருத்தி இருந்தால் தானே சிம்மாசம் மேலும் பொலிவு பெறும்? பாட்டி ஜியா கைப்பிடித்துக்கொடுக்க தன் சகோதரியான ஹீரா என்றழைக்கப்படும் ஜூனோ (Juno) என்பவளை மணமுடிக்கிறான். தன் தந்தையின் உடன் பிறப்புகளான ஆதி தேவியரும், பாட்டி ஜியா பெற்றெடுத்த மற்றவர்களும், சகோதர சகோதரிகளும் பிரசன்னமாகி இவனது திருமணத்தை நடத்திவைக்கின்றனர். வான மண்டலமே விழாக்கோலம் பூணுகிறது.

பாட்டி ஜியா, திருமணப் பரிசாகத் தங்க ஆப்பிள்களை ஹீராவுக்கு வழங்கினாள். இந்தத் தங்க ஆப்பிள்களைப் பாதுகாப்பதற்கு ஓர் ஏற்பாடும் செய்யப்படுகிறது. ஹெஸ்பெரிடஸ் என்ற மூன்று சகோதரிகள் இவற்றைக் காவல் காக்கவேண்டும். மேலும் லெடான் என்ற அரக்கன்/அரக்கியும் கூடுதல் பாதுகாப்புக்கு இருக்கவேண்டும். இந்த ஆப்பிள்களின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அதனைப் பிறகு பார்க்கலாம்.

(தொடரும்)

கலவரங்கள் ஆரம்பம்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 2

Calcutta_1946_riot

1942ல் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் முழு ஒத்துழைப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. ஜப்பான் படை  இந்தியாவின் எல்லைகளைத் தொடும் வேளையில் இந்தியாவில் எந்த விதமான பெரிய கிளர்ச்சியையும் அரசு விரும்பவில்லை. அதனால் 1942 மார்ச் மாதம் ஒரு தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் அக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அவர் அப்போது  வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால மந்திரி சபையில்  இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து, தான் கொண்டு வந்த திட்டத்தை விளக்கினார். மாகாணங்களுக்கு டொமினியன் அந்தஸ்து; அவை தனியாக செயல்படுவதற்கு அதிகாரம்; ஒரு பொது அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவது போன்ற அம்சங்களைக் கொண்டது கிரிப்ஸ் திட்டம். அந்தப் பொது அரசமைப்பு  சட்டத்தை அப்படியே பிரிட்டிஷ் அரசங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் அதில் அடங்கி இருந்தது. அதனால் அதை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்கவில்லை. திவாலான வங்கியின்  ‘பின் தேதியிட்ட காசோலை’ என்று அதை அவர்கள் வருணித்தார்கள்.

எனவே கிரிப்ஸ் தூதுக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. விடுதலையை நோக்கி ஒருமுகப்படுத்தபட்ட நாட்டை காந்தி, கப்பலை இயக்கும் கேப்டனைப் போல வழி நடத்தினார்.

இந்த வேளையில் தான் ஜின்னாவும் அவருடன் இருந்தவர்களும், முஸ்லிம்களுக்கு தனி நாடு அவசியம் என்று தெளிவாக அறிவித்தார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். விடுதலை கைக்கு எட்டும்  தொலைவில் இருப்பதை உணர்ந்த ஜின்னா பேரம் சீக்கிரம் முடியவேண்டும் என்று விரும்பினார். 1946 இல் எல்லாம் முற்றிய நிலையில் ஜின்னா இதற்கு மேல் நாங்கள் பொறுக்க முடியாது என்று அனைவருக்கும் காட்ட முடிவெடுத்தார்.

1946 இல் நடைபெற்ற மாகாணத்தேர்தல்களுக்குப் பிறகு வங்காளத்தில் முஸ்லிம் லீக்கின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டது. அது இந்தியாவை தற்போதுள்ள பாகிஸ்தான், வங்க தேசம் சேர்த்து விடுதலை பெற்ற டொமினியனாக அறிவிக்க முடிவு செய்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது முஸ்லிம் லீக். அது இந்தியாவும், பாகிஸ்தானும்  விடுதலை பெற்ற இரண்டு தனி டொமினியன்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் முஸ்லிம் லீக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 1946 ஜூலை  27 ஆம் தேதி முஸ்லிம் லீக் பம்பாயில்  கூடியது. பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் முடிவை அது  நிராகரித்தது. மேலும்  1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிகப்பெரிய நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தப் போவதாக அறிவித்தது. அந்த தினத்துக்கு  ‘நேரடி நடவடிக்கை நாள்’என்று பெயரிட்டது.

நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி  எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் பிரச்சனை ஏதுமின்றி கடந்து போனது. ஆனால் அது கல்கத்தாவை உலுக்கி எடுத்தது. முஸ்லிம் லீக் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருந்தது. வெகு முன்னதாகவே ரயில் தண்டவாளங்களைப் பயன்படுத்தி கொடிய ஆயுதங்களை தயார் செய்து தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்தது. நேரடி நடவடிக்கை நாளன்று முஸ்லிம் லீக் தொண்டர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும்  கடைகளை மூடச் சொல்லி  மிரட்டினார்கள். மறுப்பவர்கள் கடைகளை சூறையாடினார்கள்.  முஸ்லிம்கள் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொல்ல, இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களைக் கொல்லத் தொடங்கினார்கள். சில இடங்களில் மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டர்கள். கல்வி நிறுவனங்களுக்குள் புகுந்து மாணவர்களைச் சிலர் வெளியே இழுத்து வந்து கொலை செய்தார்கள்.

இஸ்லாமிய மக்கள் மிரண்டு போய் உயிருக்கு பயந்து கிழக்கு வங்காளத்துக்குத் தப்பிச் செல்ல புறப்பட்டது உண்மை. அதனால் ஹவுரா பாலம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் மிகக் கவனமாக மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை திட்டமிட்டு தொண்டர்களுக்கு ரகசிய சுற்றறிக்கைகளை விநியோகித்து, ஆயுதங்களும் வழங்கி வன்முறைகளை ஒருங்கிணைத்தது முஸ்லிம் லீக் கட்சிதான்.

இணைந்திருந்த வங்காளத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தது முஸ்லிம் லீக்தான். அதனால் ஆட்சியாளர்கள் கல்கத்தா படுகொலைகள் நடக்க குண்டர்களுக்கும், முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்களுக்கும்  முழு ஆதரவும், ஆசியும் அளித்தார்கள். ரேஷன் முறையில் பெட்ரோல் வழங்கப்பட்ட அக்காலத்தில் பெட்ரோல் கூப்பன்களை அவர்களுக்கு  தாராளமாக  வழங்கினார்கள். அதிகாரத்தையும், திறமையையும் பயன்படுத்தி  வன்முறையை அனுமதித்தார்கள்.

வங்காளத்தின் முதலமைச்சர் பிரீமியர் ஷாகித் சுகர்வாடி ஒரு மோசமான மதக்கலவரம் நடைபெறுவதற்குக் காரணமானார். காவல் நிலையங்களுக்குள் சென்று போலீசார் கைது செய்து வைத்திருந்த முஸ்லிம் லீக் தொண்டர்களையும் சமூக விரோதிகளையும் விடுதலை செய்தார். இது சில காவலர்களின்  வாக்குமூலங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.   சுகர்வாடி போன்ற வங்காள முஸ்லிம் தலைவர்கள் முழுமூச்சுடன் நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். அவர்கள் பாகிஸ்தான்  என்ற பரிசைப் பெறுவதற்கு சில கடினமான முறைகளைக் கையாள்வதில் துளியும் தவறில்லை என்று எண்ணி இருக்கலாம். இந்துக்கள் திருப்பித் தாக்குவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதன் காரணமாகவே  ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஆயுதங்களோடு, ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயாராக இருந்தன.

அகிம்சாவாதியான காந்தியை மதக்கலவரம்  கடுமையான கவலைக்குள்ளாக்கியது . பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த காந்தி மனம் உடைந்து போனார். அதனால்தான்  வேவல் பிரபு காந்தி தன்னிடம்  இப்படி ஒரு கருத்தைக் தெரிவித்தார் என்றார். “இந்தியா ரத்தத்தில் நீராட விரும்பினால் அப்படியே ஆகட்டும்.”

கடைசியாக பதிவு செய்யப்பட்ட  தகவல்களின்படி கல்கத்தா கலவரத்தில் சுமார் 7000 முதல் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்; ஒரு லட்சம் பேர் காயமடைந்தார்கள். ஆகஸ்ட் 21 ஆம் தேதி ராணுவத்தின் ஐந்து பெட்டாலியன்களும், நான்கு கூர்க்கா  பெட்டாலியன்களும் வந்து இறங்கின. நிலைமை கட்டுக்குள் வந்தது. எதிர்வினையாற்றிய இந்துக்கள் சிலர் தற்காப்பு நடவடிக்கைகளிலும்,  கொலை செய்வதிலும் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள், 1945 முதல் கல்கத்தாவில் தங்கி இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கி பயன்படுத்தினார்கள். சில மார்வாரிகள் கலவரம் நடக்கப்போவதை எதிர்பார்த்து அமெரிக்க ராணுவ வீரர்களிடம் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்தார்கள் என்று கல்கத்தா படுகொலைகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கை கூறுகிறது. உயிரோடு குழந்தைகளை தீக்குள்  வீசி எறிவது ; காருக்குள் இருந்த குடும்பத்தை காரோடு சேர்த்து கொளுத்துவது போன்றவற்றில் முஸ்லிம் வன்முறையாளர்கள் ஈடுபட்டார்கள். படித்த நாகரீகமான மனிதர்கள் கூட மோசமான மன நிலைக்கு நிரந்தரமாகத் தள்ளப்படுவார்கள் என்றார் நேரு.

வரலாறு காணாத படுகொலைகள் நடந்தபோது வங்காளத்தின் அரசு இயந்திரமும், காவல் துறையும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதும், குறிப்பாக முதலமைச்சர் என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் பலருக்கும்  எழும் முக்கியமான கேள்விகள். இவற்றுக்கு விடை காண பத்திரிகை செய்திகளைப் பார்த்தால் மட்டும் போதாது. சில காவல் துறை ஆவணங்களும், புலனாய்வுத்துறை குறிப்புகளும் தேவைப்படும்.  பிற்காலத்திலும் அவை சில உண்மைகளை வெளிக்கொணர்ந்து விடும் என்று ஆட்சியில் உள்ளவர்கள் கருதினார்கள். அப்போது வங்காளத்தில் ஆட்சியில் இருந்த முஸ்லிம் லீக்கைச்  சேர்ந்தவர்கள்,பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த பல நூறு மனுக்கள், முறையீடுகள், இன்னும் பல ஆவணங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றை அழித்தார்கள். இருந்தும் எல்லாவற்றையும்  நீக்கவோ, அழிக்கவோ முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள், கல்கத்தா போலீஸார் பல பேருடன் நடத்திய விசாரணைகள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவை விசாரணைக் கமிஷனிடம் அளிக்கப்பட்டன.

காவல் துறை கொடுத்த  ஆவணங்கள்; இந்திய தேசிய காங்கிரஸிடமும், இந்து மகாசபையிடமும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுக்கள் ஆகியவற்றை கமிஷன் முறையாக பதிவு செய்துள்ளது. அவை எல்லாம் கல்கத்தா, டெல்லி அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக உள்ளன. இவற்றோடு,  பலர் தங்கள் நினைவுகளில் இருந்து கூறியவையும், உண்மை நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. தேதி வாரியாக , ஒவ்வொரு மணி நேரமும் நடத்தப்பட்ட படுகொலைகள், சூறையாடல்கள் ஆகியவை கல்கத்தா போலீஸ் ஆவணங்களில் பதிவாகியுள்ளன. அவற்றை எல்லாம் பார்க்கும்போது, அது  தவறி நடந்த கலவரமாகத் தெரியவில்லை. ஒரு நோக்கத்துக்காக திட்டமிட்டு இழைக்கப்பட்ட கொடுமைகள் அவை.

தனி நாடு கேட்டவர்கள் அதை அடைய கொடிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அதன் பிறகு தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அவர்களில் பலர், 1971 இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் போதும், அதற்கு  முன்பும்,  கிழக்கு வங்காளத்தில் பல லட்சம் முஸ்லிம்களைக் கொன்றார்கள்.

0

தற்போதிருக்கும் வங்கதேசத்தில் மொத்தம் ஏழு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன. அவற்றுள்  மிகப்பெரியது தென்கிழக்கில் உள்ள சிட்டாகோங் பிரிவு. இந்தப் பிரிவை வட மேற்கில் இருந்து தென்கிழக்காக பார்த்துக் கொண்டே வர வேண்டும். அப்போது வரிசையாக இந்த  நிர்வாகப் பிரிவில் நாம் பிரம்மன்பாரியா, கொமிலா, சந்த்பூர், லட்சுமி பூர், நவகாளி, ஃபென்னி, சிட்டாகோங், காகரசாரி, ரங்கமதி, பந்தர்பன், காக்ஸ் பஜார் ஆகிய பதினோரு மாவட்டங்களைப் காணலாம். இவற்றில் முதல்  ஐந்து மாவட்டங்களை (37.6%) வட மேற்கு மாவட்டங்கள் எனவும் எஞ்சியுள்ள ஆறு மாவட்டங்களை (62.4%) தென்  கிழக்கு மாவட்டங்கள் எனவும் எளிதாகப் பிரித்துவிடலாம். வரைபடத்தில் பார்த்தால் தென் கிழக்கு மாவட்டங்கள் உள்ள பகுதி பிற்சேர்க்கை போல தொங்கிக் கொண்டிருக்கும். இப்போது தனி நிர்வாகப் பிரிவாக இருக்கும் சில்ஹெத்தின் ஆறு மாவட்டங்கள் 1995 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிட்டாகோங் பிரிவோடு சேர்ந்திருந்தன.

நமக்கு வேண்டியது  1946 இல் பிரிட்டிஷ் இந்தியாவில் மேற்கு வங்காளமும், கிழக்கு வங்காளமும் (வங்க தேசம் இணைந்த வங்காள மாகாணத்தில்  சிட்டாகோங் பிரிவின் நிலை. வங்காள மாகாணத்தில் சிட்டாகோங் ஒரு நிர்வாகப் பிரிவாக (யூனிட்)  இருந்தது. அதன் தலைநகரம் துறைமுக நகரமான சிட்டாகோங். நவகாளியும், திபேராவும் சிட்டாகோங் நிர்வாகப் பிரிவில் இருந்த இரு மாவட்டங்கள்.

1946ல் இனஅழிப்பு வன்முறைகள் அரங்கேறிய நவகாளி மாவட்டம் என்பது தற்போது இருக்கும் வங்க தேசத்து நவகாளி, லட்சுமி பூர், ஃபென்னி ஆகிய மாவட்டங்கள் சேர்ந்த பகுதியாக இருந்தது. திப்பேரா மாவட்டம் (Tippera) என்பது தற்போதைய வங்கதேசத்தின்  கொமிலா, சந்த்பூர், பிரம்மன்பாரியா ஆகிய மாவட்டங்கள் சேர்ந்த பகுதியாக இருந்தது.

அப்போதிருந்த சிட்டாகோங் நிர்வாக பிரிவில் ஹில் திப்பேரா சமஸ்தானமும் இணைந்திருந்தது. அகர்தலாவைத் தலைநகராகக் கொண்ட அந்த சமஸ்தானத்தின் பரப்பளவு 1941 இல் 10,660 சதுர கிலோமீட்டர். ஹில் திப்பேரா அல்லது திரிபுரா  சமஸ்தானம்  இந்திய விடுதலைக்குப் பிறகு 1949 இல் இந்தியாவுடன் இணைந்து கொண்டது. தற்போது திரிபுரா இந்தியாவின் ஒரு மாநிலமாக உள்ளது. அது பூகோள அமைப்பின்படி வங்க தேசப் பகுதிகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு மாநிலம். அதன் மேற்கு,வடக்கு,தெற்கு எல்லைகளில்  வங்கதேசப் பகுதிகள் உள்ளன. அதன் கிழக்கில் இந்தியாவின் மிசோராம் மாநிலமும்,வட கிழக்கில் அசாம் மாநிலமும் உள்ளன.

வன்முறைகள் நடந்தபோது நவகாளி மாவட்டத்தில் ராம் கன்ஜ் ; பேகம் கன்ஜ்; ராய்பூர்; லட்சுமிபூர்; சாகல் நையா; சந்த்விப் காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  திப்பேரா மாவட்டத்தில்  ஹஜிகன்ஜ்; பாரித் கனஜ்; சந்த்பூர்; லக் ஷம்; சவுத கிராம் காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகள் நரகமாயின. மொத்தம் 2000 சதுர மைல்கள் பரப்பளவுள்ள பகுதி மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. நவகாளி, திப்பேரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 5000 இந்துக்கள் கொலை செய்யப்பட்டார்கள்; பெண்கள் வல்லுறவு கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள்.

கல்கத்தாவில் இருந்து நவகாளிக்கு விமானத்தில் பயணித்தால் ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததால் ராணுவம் உள்ளே நுழைய அதிக சிரமப்பட்டது. படகுகள் செல்லும் நீர்வழிகள் எல்லாவற்றிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதனால்  விமானம் மூலம் வந்த ராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய ஒரு வார காலமானது. ஒரு மாத காலத்துக்குப் பிறகு தான் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடந்தன.

நவகாளி, திப்பேரா கொலைகள் பற்றியும், கட்டாய மதமாற்றம் பற்றியும்  பத்திரிகைகளில் செய்திகள் வர ஆரம்பித்தன. முஸ்லிம் லீக்கின் ஸ்டார் பத்திரிகை கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக வந்த செய்திகளை மறுத்தது. வங்காள சட்டசபையில் திரேந்திரநாத் தத்தா வன்முறைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்றார். அப்போது பதிலளித்த முதலமைச்சர் சாகித் சுகர்வாடி அந்தப் பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர்  கல்கத்தாவில்  இந்துக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டது; கொள்ளையடிக்கப்பட்டது; கட்டாய மதமாற்றம் நடைபெற்றது என்றும் ஒப்புக் கொண்டார். பாலங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. சாலைகளில் பயணிக்க முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீர் வழிகளும் பயணிக்க முடியாத நிலையில் உள்ளன. அதனால் பாதுகாப்புப் படைகளை உடனடியாக அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

நவகாளி வன்முறைகள் வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்ததும் அரசியல் அமைப்புகளும், மதம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்தன. இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய ராணுவம், பாரத சேவாசிரம சங்கம், இந்து மகாசபை, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளோடு இன்னும் பல அமைப்புகளும் உதவிகள் செய்யவும், களப்பணியாற்றவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டன. 30 தொண்டு நிறுவனங்களும், ஆறு மருத்துவ மிஷன்களும் பணியாற்றின. இவை போக காந்தியின் கீழ் இருபது முகாம்கள் செயல்பட்டன. இந்துமகா சபையின் பொதுச் செயலாளர் அஷுதோஷ் லாகிரி நவகாளி வன்முறைகள் பற்றி செய்திகள் வந்தவுடன் சந்த்பூர் சென்றார். ராணுவப் பாதுகாப்புடன் விமானத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி, நிர்மல் சந்திர சாட்டர்ஜி, பண்டிட் நரேந்திர நாத் தாஸ் போன்ற  தலைவர்களும், தொண்டர்களும் கொமிலாவை அடைந்தார்கள். அரிசி, ரொட்டி, பால், மருந்துகள் எல்லாம் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கல்கத்தாவில் தஞ்சம் அடைந்தவர்கள் நகரத்திலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் 60 மையங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். பொது மக்கள் தாராளமாக பணம் கொடுத்து உதவினார்கள். நவகாளி, திப்பேரா மாவட்டங்களில் இருந்த நிவாரண முகாம்கள் ஒவ்வொன்றிலும் நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. அவற்றைத் திறமைமிக்க மருத்துவ அதிகாரிகள் வழி நடத்தினார்கள். நவகாளியில் வன்முறையை எதிர்த்துப் போராடி உயிர் விட்ட  ராஜேந்திரலால் என்பவரின் நினைவாக 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை லட்சுமிபூரில் தொடங்கப்பட்டது. அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் துணை அமைப்பான சடோகிராம் மகிள சங்கம் சார்பில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக  நவகாளி நிவாரணக் குழு அமைக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தலை சிறந்த போராளி லீலா ராய் டிசம்பர் மாதம் சவுமுஹானியிலிருந்து 90 மைல்கள் நடந்து சென்று  ராம்கன்ஜ் அடைந்தார். அவருடைய தேசிய சேவை அமைப்பு 17  நிவாரண முகாம்களை அமைத்தது. லீலா ராய் வன்முறையாளர்களால் கடத்தப்பட்ட  1307 அபலைப் பெண்களை மீட்டார்.

நவகாளி, திப்பேரா இன அழிப்பு வன்முறைகளுக்குப் பிறகு வங்காளத்தின் அண்டை  மாநிலமான பிகாரை பெரும் கலவரம் ஒன்று உலுக்கியது. 1946 அக்டோபர் 30 ஆம் தேதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதிக்கும் இடையே மிகப்பெரிய படுகொலைகள் அங்கு  நடந்தன. இம்முறை மிகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  5000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஓர்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள்.

ஜின்னா பதறினார். பிரிவினைக்கு முழு அழுத்தம் கொடுத்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்கு பழி தீர்ப்பதற்காக பிகார் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்ற கருத்து பரவியது தான். உண்மை அது வல்ல.

அங்கு அமைதியாக இருந்த மாவட்டத் தலை நகரங்களிலும், பல கிராமங்களிலும் கல்கத்தா, நவகாளி போலவே முஸ்லிம் லீக் மதக்கலவரத்தை பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தியது. அது  டாக்டர் பி.எஸ்.மூன்ஜ் போன்றோரால் அம்பலப்படுத்தப்பட்டது. அவர் உயிரைப் பணயம் வைத்து மேலும் சிலருடன் வன்முறையால் பாதிக்கப்பட்ட  நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்தார். அங்கு இந்துக்களின் எதிர் தாக்குதல்கள்  கடுமையாக இருந்தன என்பது  உண்மை. ஆனால்அவை கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்கு பழி தீர்ப்பதற்காக நடத்தப்பட்டவையல்ல என்பது அவர் அறிக்கைகள் முலம் தெளிவானது. அமைதியாக இருக்கும் மக்களை கொடிய திட்டங்கள் மூலம் தூண்டிவிட்டது முஸ்லிம் லீக். தொண்டர்களையும், சமூக விரோதிகளையும் ஏவி விட்டு மதக்கலவரத்தை தொடங்கி வைத்தது அது தான்  என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

கல்கத்தாவில் ஓடிய ரத்த ஆறு  நவகாளியையும், திப்பேராவையும் அழித்து, பிகாரைத் தொட்டது.அதன் பின் இணைந்த மாகாணங்களில் படுகொலைகள் நடந்தன. இணைந்த மாகாணம் என்பது கிட்டத்தட்ட தற்போதைய உத்தரப் பிரதேச மாநிலத்தையும், உத்தரகண்ட் மாநிலத்தையும் கொண்ட பகுதியைக் குறிக்கிறது. தற்போது பாகிஸ்தானில் உள்ள வட மேற்கு  எல்லை மாகாணம், சிந்து ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டன. அதே வேளையில் பாகிஸ்தானை உருவாக்க நினைத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள் விடுதலைக்கு முன் இணைந்திருந்த பஞ்சாப் மாகாணத்தை மற்ற எல்லா இடங்களையும்விட அதிகமாக தாக்கி சீரழித்தன. ஏனென்றால் தனி பாகிஸ்தானை அடைய நடக்கும் போரில் முஸ்லிம் லீகுக்கு வங்காளத்துக்கு அடுத்தபடியாக  இணைந்திருந்த பஞ்சாப் பிரிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். பஞ்சாபில்  சீக்கியர்கள் படுபயங்கரமான எதிர் தாக்குதல் நடத்தியபோது அது தேசப்பிரிவினைக்காக நடத்தப்படும்  உள் நாட்டுப்போராக மாறிவிட்டது.

(தொடரும்)

கதையின் கதை

 

பஞ்ச தந்திரக் கதைகள் / 1

Mendhut-Tantri02கி.மு. 200ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் மகிழாரூப்பியம் என்ற நகரத்தை அமரசக்தி என்ற அரசர் ஆண்டார். அவருக்கு பஹூசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி என்ற பெயர்களில் மூன்று மகன்கள் இருந்தனர்.

அந்த மூவர்க்கும் உலக அறிவு என்பது சிறிதளவும் இல்லை. சுகபோகங்களில் நாட்டம் கொண்டிருந்த அவர்கள் கல்வியின் மீது கொஞ்சமும் நாட்டமில்லாமல் இருந்தார்கள். வருங்காலத்தில் நாட்டை ஆளவேண்டிய தமது மகன்கள் இப்படி பொறுப்பில்லாமல் திரிவதைக் கண்டு கவலை கொண்ட அரசர் அமரசக்தி அவர்களுக்கு அறிவொளியை ஊட்டுவதற்காக விஷ்ணு சர்மா என்ற பண்டிதரை நியமித்தார்.

கல்வி என்றாலே வேப்பங்காயாக வெறுக்கும் இளவரசர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அவர்களுக்கு உலக அறிவையும், நீதி நெறியையும் புகட்டுவதற்காக விஷ்ணு சர்மா ஒரு புதிய வழியைக் கையாண்டார்.
அவர் ஆறு மாதங்கள் அம் மூவருக்கும் உலக அறிவினை வடமொழியில் ஊட்டினார். வெறும் வார்த்தைகளால் அல்ல, அழகிய கதைகளால். அதுவும் அரசியல் தந்திரங்களை மையப்படுத்திப் பறவை, விலங்குகளைக் கதைமாந்தர்களாக அமைத்து, சுவாரஸ்யம் குறையாமல் கதை சொன்னார்.
அவர் கூறிய கதைகளின் தொகுப்பே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’.

மித்திரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்தநாசம் அல்லது லப்தஹானி, அசம்பிரேக்ஷ்ய காரித்வம் ஆகிய ஐந்தும் இணைந்ததே ‘பஞ்ச தந்திரம்’ ஆகும்.

  • முதல் தந்திரம் – மித்திரபேதம் – நட்பைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்.
  • இரண்டாம் தந்திரம் – சுகிர்லாபம் – தமக்கு இணையானவர்களுடன் பகையின்றி வாழ்தல்.
  • மூன்றாம் தந்திரம் – சந்திவிக்கிரகம் – பகையை உறவாடி வெல்லுதல்.
  • நான்காம் தந்திரம் – அர்த்தநாசம் – கிடைப்பனவற்றையெல்லாம் அழித்தல்.
  • ஐந்தாம் தந்திரம் – அசம்பிரேக்ஷ்ய காரித்வம் – எவற்றையும் சிந்திக்காமல் செய்தல்.

மொத்தம் ஐந்து பெருங்கதைகள். அவை ஒவ்வொன்றுக்குள்ளும் உப கதைகள் சில. ஆக மொத்தம் 87 கதைகளைக் கூறினார். அக் கதைகளின் வழியே உலகையும் அரசாட்சியின் சூட்சுமங்களையும் இளவரசர்கள் மூவரும் அறிந்து கொண்டனர்.

இக் கதைகளை நாமும் தெரிந்துகொண்டால் தற்கால அரசியலை மட்டுமல்ல, எக்காலத்தின் அரசியலையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். உலகத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் இக்கதைகள் பேருதவி புரியும்.

பஞ்ச தந்திரக் கதைகளைப் பலமொழிகளில் பலரும் எழுதியுள்ளனர். வெளிநாடுகளிலும் இந்தக் கதை பரவலாக உள்ளது. இவை எதிர்காலத்தில் பெரிய ஆளுமைகளாக உருவாகவுள்ள சிறார்களுக்கான கதைகள். பெரியவர்களும் இக் கதைகளைப் படித்து, தங்களின் நிலைப்பாடுகளைச் சீர்செய்து, சிறந்த ஆளுமைகளாக உருமாற முடியும்.

தாண்டவராய முதலியார் ‘பஞ்சதந்திரம்’ என்ற தலைப்பில் இக் கதைகளைத் தமிழில் எழுதினார். அது 115 பக்கங்களில் புத்தகமாக கி.பி.1963ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் சைவ சமயப் பற்றுடையவர். அதனால், ‘விஷ்ணு சர்மா’ என்ற பெயரை ‘சோம சன்மா’ என்று பெயர் மாற்றம் செய்தார். ‘அமர சக்தி’ என்ற அரசனின் பெயரினை ‘சுதரிசனன்’ என்று மாற்றினார். இவரைப் பின்பற்றித் தமிழில் இக்கதைகளை எழுதியவர்கள் ‘வர்த்தகர் வர்த்தமானன்’ என்ற பெயரை ‘மருதப்பச் செட்டியார்’ என்று மாற்றினர். ‘செட்டியார்கள் மட்டுமே வணிகத்தில் சிறந்தவர்கள்‘ என்ற நினைப்பும் சாதியுணர்வும் இதற்குக் காரணம். இவற்றையெல்லாம் தாண்டித்தான் நாம் நீதியையும் தர்மத்தையும் கண்டடையவேண்டும்.

***

கதை வழிப் பாடம்

பண்டிதர் விஷ்ணு சர்மாவுக்கு இது சவாலான காரியம்தான்!

அவர் இதுவரை எத்தனையோ அறிவார்ந்த சிறுவர்களுக்கு உலகியல் அறிவினையும் கலை, இலக்கிய அறிவையும் அரசியல் நுணுக்கங்களையும் திறம்படக் கற்றுக்கொடுத்து அவர்களைச் சிறந்த மனிதர்களாக உருவாக்கியுள்ளார். அவர்களுள் யாரும் மன்னராகவில்லையே தவிர, பலர் அரசவையில் பணியாற்றியுள்ளனர். இன்னும் பலர் பெரும் அறிவாளிகளாக, சகலகலா விற்பன்னர்களாக பல நாடுகளையும் சுற்றி வந்து பெயரும் புகழும் பெற்றுத் திகழ்கிறார்கள். அவ்வளவுக்கு பெருமை பெற்றவர் விஷ்ணு சர்மா.
அந்தப் பெருமைக்கெல்லாம் பெரும் சோதனையாக வந்திருக்கிறார்கள் மகிழாரூப்பியம் மன்னரின் புதல்வர்கள்.

மன்னர் அமரசக்தியிடம் வருங்காலத்தில் மன்னராகவுள்ள அவரது மூன்று அறிவற்ற சிறுவர்களுக்கு வாழ்வியலோடுகூடிய அரசியல் பாடம் கற்றுத் தந்து சிறந்த அறிவாளிகளாக உருவாக்குவதாக வாக்களித்து வந்திருக்கிறார் விஷ்ணு சர்மா. அதை செயல்படுத்துவது எப்படி என்பதுதான் அவரது முதல் யோசனையாக இருந்தது.

கல்வி பயிலுவதில் மூவருக்கும் துளியும் ஆர்வமில்லை. அதை கசப்பு மருந்துபோல் பாவித்தார்கள். ஆனால் அந்தக் கசப்பு மருந்தை இவர் கண்டிப்பாக அவர்களுக்கு புகட்டித்தான் தீரவேண்டும். எனில் கசப்பு மருந்தை எந்த இனிப்புடன் சேர்த்துத் தருவது?

பண்டிதர் ஆழ்ந்து சிந்தித்தார். சிறுவர்களுக்கு என்ன பிடிக்கும்? கதை கேட்கப் பிடிக்கும்! எனில் இளவரசர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நீதிகளையும், வாழ்வியல் பாடங்களையும் இவர்களுக்கு கதையாகவே போதித்தால் என்ன?
கதைகளில் மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் பறவைகளும் வந்தால், பேசினால், கருத்துக்களைக் கூறினால் சிறார்கள் மேலும் சுவாரஸ்யமாகக் கேட்பார்களே; விஷ்ணு சர்மாவுக்கு பொறி தட்டியது.

உலகியல், அரசியல் ஆகியவற்றில் உள்ள நுணுக்கங்களை விலங்கினங்கள், பறவையினங்கள் வழியாக மனிதர்களுக்குக் கூறுவதுபோல மகா கற்பனைக் கதைகளை ஒரு வரிசையில் தொடர்புபடுத்திக் கூறினால் இளவரசர்கள் ஆர்வமாகக் கேட்பார்கள், தான் சொல்ல வரும் கருத்து அவர்கள் மனத்தில் ஆழமாகப் பதியும் என்று நினைத்தார்.

உலகியல், அரசியல் தொடர்புடைய நீதி, அநீதி சார்ந்த கருத்துக்களை மனத்தில் தொகுத்துக்கொண்டார். தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டார். அவரின் ஆழ்மனத்திற்குள்ளிருந்து விலங்குகளும் பறவைகளும் பாய்ந்தும் பறந்தும் வந்து அவரின் நாவில் அமர்ந்து குதியாட்டம் போட்டன. பண்டிதர் தன் வெண்தாடியைத் தடவிக்கொண்டு, அந்த மூன்று இளவரசர்களையும் அழைத்தார். பாடத்தை, நல்ல கதைகளின் வழியாகச் சொல்லத் தொடங்கினார்.

முதல் தந்திரம் – மித்திரபேதம்

1. நட்பைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்

அது ஒரு பெரும் நகரம். அங்கு அழகான குளங்களும் குன்றுகளும் இருந்தன. நிறைய கோயில்களும் மாடவீடுகளும் இருந்தன. அங்கே, ஏழைகளும் பணக்காரர்களும் சம அளவில் வாழ்ந்தனர். எங்கும் பசுமை நிறைந்து, செழிப்புடன் அந்த நகரம் விளங்கியது. அங்கு வாழ்ந்த வணிகர்கள் பலர். அவர்கள் செய்த தொழில்கள் மிகப்பல. அவற்றின் வழியாக அவர்கள் ஈட்டிய செல்வங்களை அளந்தறிய முடியாது.

அவர்களுள் ஒரு வணிகன் மட்டும் சற்று வித்தியாசமாகச் சிந்தித்தான். அவன் பெயர் வர்த்தமானன். அவனிடம் செல்வம் மிகுதியாக இருந்தது. அவன் செய்துவரும் தொழில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், அவன் மனம் அலைபாயத் தொடங்கியது.

‘இப்போது வைத்திருக்கும் செல்வம் போதுமா? அல்லது இன்னும் வேண்டுமா? ‘போதும்’ என்று முடிவெடுத்துவிட்டால், இனி வணிகம் செய்யவேண்டாமா? ‘இன்னும் வேண்டும்’ என்றால், எப்படி வணிகத்தை விரிவாக்கிக்கொள்வது?’
‘வணிகம் செய்யவில்லை என்றால், இப்போது இருக்கும் செல்வம் அப்படியே குறையாமல் இருக்குமா? செலவு செய்யாமல் இருந்தால் குறையாதுதானே! செலவு செய்யாமல் எப்படி வாழ்வது? ‘இருக்கும் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து வாழ்வதும் இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழ்வதும் சிறந்த புண்ணிய வாழ்வு. அத்தகைய வாழ்வினை வாழ்பவனே மேலுலகத்தில் குறையின்றி வாழ்வான்’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படியானால், என்னிடம் இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குக் கொடுக்கவேண்டும் அல்லவா?’

‘அப்படிக் கொடுத்தால் செல்வம் குறையுமே! குளத்தில் இருக்கும் தண்ணீர் மழை பொழிந்தால்தானே கூடுதலாகும். குளம் நிறைந்து வழியும்! மழை பொழியவில்லையென்றால் குளத்தில் உள்ள நீர் சூரிய ஒளியாலும் வறண்ட நிலத்தாலும் உறிஞ்சப்பட்டு குளமே வற்றிவிடுமே! அதுபோல செல்வமும் கரைந்துவிடுமே!’

‘செல்வம் இல்லாதவன் இந்த நகரத்தில், ஏன் இந்த உலகத்தில் வாழ்வது சாத்தியமா? பணம் இல்லாதவன் பிணம்தானே! செல்வம் இல்லையென்றால் நான் இறக்கவேண்டியதுதான். அதனால், நிறைய செல்வம் வேண்டும். அதற்கு வணிகத்தை விரிவாக்க வேண்டும்’

‘வணிகத்தை விரிவாக்கிப் பெருஞ்செல்வம் சேர்த்தால் மட்டும் போதுமா? சேர்த்த செல்வத்தை எப்படிக் காப்பாற்றுவது? முறையாகச் செல்வத்தைக் காப்பாற்றத் தவறிவிட்டால், ஏதாவது ஒரு வழியில் மொத்தச் செல்வமும் அழிந்துவிடுமே! ஆகையால் எப்படியாவது செல்வத்தைக் காப்பாற்ற வேண்டும்.’

‘எப்படி வணிகத்தை விரிவாக்குவது? இப்படியே இந்த நகரத்திலேயே வணிகம் செய்தால், குறிப்பிட்ட அளவில்தான் செல்வம் சேரும். இந்த நகரத்தை விட்டு அருகில் உள்ள காட்டைக் கடந்து வேறு சில நகரங்களுக்குச் சென்று வணிகம் செய்தால் அளவுக்கு அதிகமான செல்வம் வந்து சேரும்.’

‘ஆம்! அதுதான் சரியான வழி. வேறு நகரத்திற்குச் சென்று, வணிகம் செய்து, செல்வம் சேர்த்து, அதனைக் கொண்டு செல்வச் செழிப்புடன் இருக்கலாம். ஏழைகளுக்குக் கொடுக்கலாம். அதனால், புண்ணியம் உண்டாகும். அந்தப் புண்ணியத்தை வைத்துக்கொண்டு மேலுலகிலும் நன்றாக வாழலாம். சரி, இன்றே புறப்படலாம்’ என்று ஒரு வழியாக முடிவெடுத்தான் வணிகன் வர்த்தமானன்.

அன்று மாலையில், தன்னுடைய வணிகப் பொருள்களை ஓர் இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றினார் அந்த வணிகர். அந்த மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட ஒரு மாட்டின் பெயர் சஞ்சீவகன். மற்றொரு மாட்டின் பெயர் நந்தகன். இரண்டு வண்டிச் சரக்குகளை ஒரே வண்டியில் ஏற்றினால் எப்படியிருக்கும்? அவை என்ன பஞ்சுப் பொதிகளா? தானிய மூட்டைகள் அல்லவா! பாரம் தாங்காமல் சஞ்சீவகனும் நந்தகனும் திண்டாடின.

புறப்படும்போது அந்த இரண்டு மாடுகளும் திடகாத்திரமாகத்தான் இருந்தன. அதனால்தான், அவற்றை நம்பி இத்தனைச் சுமையுடன் நெடுந்தொலைவு செல்வதற்கு வர்த்தமானன் துணிந்தார். அன்று மாலை வரை எல்லாம் சுமுகமாகத்தான் போனது. மாலை மங்கி இருளத் தொடங்கும்போதுதான் அந்த விபத்து நேர்ந்தது.

வண்டி நகரைக் கடந்து, வெகுதூரம் வந்து, காட்டுவழியில், இருட்டில், தட்டுத்தடுமாறிச் சென்றது. அப்போது ஒரு கல் தடுக்கவே சஞ்சீவகன் தடுமாறிவிட்டது. வண்டியின் பாரம் அதன் கணுக்காலை உடைத்தது. வலியின் காரணமாக அது நொண்டி நொண்டி நடக்கத் தொடங்கி மேலும் வண்டியை இழுக்க முடியாமல் அப்படியே படுத்து விட்டது.

வணிகன் வர்த்தமானனுக்கு வருத்தம் உண்டாகியது. ‘முதன்முதலாக தன் நகரம் விட்டு, வேறு ஒரு நகரம் நோக்கி வாணிகம் செய்யலாம் என்று நினைத்தால், இப்படி ஒரு தடை வந்துவிட்டதே!’ என்று மனங்கலங்கினான்.
காட்டுவழியில் ஓர் அடிமையைத் தேடிப் பிடித்தான். அவனிடம் பணம் கொடுத்து, வேறொரு வண்டி மாட்டினை வரவழைத்தான். அதனை சஞ்சீவகனுக்குப் பதிலாகத் தன் வண்டியில் பூட்டினான். சஞ்சீவகனுக்குத் துணையாக அந்த அடிமையை நிறுத்திவிட்டு, அவனிடம் சிறிதளவு பணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த அடிமை வர்த்தமானனைச் சந்தித்து, ‘உங்கள் மாடு கால் உடைந்ததால் ஏற்பட்ட காயத்தாலும் வலியாலும் துடித்துத் துடித்து இறந்துவிட்டது‘ என்று ஒரு பொய்யினை உண்மையைப் போலச் சொன்னான்.
உண்மையில், வர்த்தமானனிடம் பணம் பெற்றுக்கொண்ட அந்த அடிமை சஞ்சீவகனுக்குத் துணையாக அந்தக் காட்டில் இருக்காமல், காட்டுக்குள் சஞ்சீவனை அப்படியே விட்டு விட்டு வந்துவிட்டான்.. இரண்டு நாள் கழித்து, வர்த்தமானனைச் சந்தித்துப் பொய் கூறினான்.

‘காட்டுக்குள் நொண்டித் திரிந்த சஞ்சீவகன் உயிர் பிழைத்ததா?’ என்று பண்டிதரிடம் மூத்த இளவரசர் பஹூசக்தி கேட்டார். ‘சஞ்சீவகன் பிழைத்துக்கொண்டது!’ என்று கூறிய பண்டிதரிடம், குட்டி இளவரசர் அனந்த சக்தி, ‘எப்படி?’ என்று கேட்டார். காட்டில் வாழும் சஞ்சீவகன் பற்றி அவர்களுக்கு விரிவாகக் கூறத் தொடங்கினார் பண்டிதர் விஷ்ணு சர்மா.

(தொடரும்)

ஒரு நாடு உருவான கதை

பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 1

Pakistan-Flag-Art-Desktop-Wallpaper-Collectionபொதுவாக ஒரு நாடு எப்படி பிறக்கிறது என்பதை யாராலும் தெளிவாகக் கூற முடியாது. ஒரு நதியின் கதை எவ்வளவு  பழமையானதோ அதே போன்ற கணிக்க முடியாத கால ஓட்டத்தைக் கடந்து ஒரு நாடு பிறக்கிறது. இந்தியா போன்ற மிகப் பழமையான நாடுகளுக்கு இது மிகச்சரியாகப் பொருந்தும். அதே வேளையில் நம் கண் முன்பே சில நாடுகள் புதிதாக பிறந்துள்ளதையும் நாம் கண்டிருக்கிறோம். 1947ல் பிறந்த பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம்.

முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கொள்கையை ஜின்னாவுக்கு முன்னால்  முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்  சர் சையத் அகமது கான்ங (1817—1898). எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்கள் சிலரிடம் தோன்றி இருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்தர இந்தியா மலர்ந்தது. அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்னமே செதுக்கப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. இந்தக் கூற்று  தேசப்பிரிவினை பற்றி  ஜின்னா போன்றவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு மிக மிக நெருக்கமாக இருக்கும். இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களில் இருந்து  பண்பாடு, மதம் ஆகியவற்றால் வேறுபட்ட முஸ்லிம் இன மக்களை மட்டுமே கொண்ட ஒரு தனி நாடாக பாகிஸ்தான் ஜின்னாவின் கொள்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஒரு தனி சிலையாகச் செதுக்கி எடுக்கப்பட்டது என்பது அவர் முதலில் கொண்டிருந்த  நம்பிக்கை. பாகிஸ்தான் என்பது செதுக்கப்பட்ட சிலை அல்ல, இந்தியாவிடம் இருந்து உடைக்கப்பட்ட ஒரு பகுதி என்று சொல்பவர்களும் உள்ளனர்.

தனி பாகிஸ்தானைப் பெற்று அதிகாரத்தில் அமர கனவு கண்ட சிலர் அதை எவ்வழியில் அடைந்தார்கள் என்பது எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அவர்கள் அப்போது  கையாண்ட முறைகள் அவர்களுடைய அரசியல் சித்தாந்தத்திலும், கொள்கையிலும் ஒன்றுகலந்தன. அவை இன்றும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில்  தொடர்ந்து வெளிப்படுகின்றன.

கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இந்தியப்  பிரிவினை. அதன் காரணமாகப் பிறந்த  பாகிஸ்தான் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பலவேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாதப் பிரதிவாதங்கள் நிறைய இருக்கின்றன.

0

இந்திய விடுதலைச் சட்டம் 1947 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 1947 ஜூலை மாதம் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் கிடைத்தது. இந்தச் சட்டத்தின்படி ஒரே நாடாக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு டொமினியன்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு சுதந்தரம் பெற்றன. 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவும் விடுதலை அடைந்தன. இந்திய விடுதலைச் சட்டம் 1947ல் இந்தியப் பிரிவினை பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ளன. அதன் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வங்காளம், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அளிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. பிரிவினை ஒப்பந்தப்படி அனைத்தும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அவற்றில் இந்தியக் கருவூலம்; இந்திய அரசுப் பணி; இந்திய ராணுவத்தின் தரைப்படை,  கப்பல் படை, விமானப் படை மற்றும் எஞ்சி இருக்கும் அத்தனை நிர்வாக அமைப்புகளும் அடங்கும்.

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் அப்போதைய தலைநகரம் கராச்சி. பளிங்கு கற்களால் ஆன ஓர் அரண்மனையில், பாகிஸ்தான் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக கிட்டத்தட்ட ஓர் அரசனைப் போல் ஜின்னா இருந்தார். இந்தப் பாகிஸ்தான் அவ்வளவு எளிதாக அவருக்கும் அந்த மாபெறும் கனவை நனவாக்கத் துடித்த அவர் சகாக்களுக்கும் கிடைத்து விடவில்லை. பெரும் விலையை இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கொடுக்கவேண்டியிருந்தது. பாகிஸ்தான் உருவான கதையின் சாரம் என்பது அந்தத் தேசத்துக்காகக் கொடுக்கப்பட்ட பெரும் விலைதான்.

பிரிவினைக்கு முன்பும் அதற்குப் பின்பும்  இந்தியாவில்  இந்துக்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் முஸ்லிம் மக்கள்தாம். இந்தியாவின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களுடைய  பங்களிப்பு  கணிசமானது. அதனால்தான் மத அடிப்படையிலான அந்தத் தேசப் பிரிவினையை மிகுதியான மக்களும் தலைவர்களில் பலரும் விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக  வாழும் நாட்டை மத அடிப்படையில் பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் கருதினார்கள். இந்தியாவைக் கிட்டத்தட்ட  இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் பிரிட்டிஷார். அதற்கு முன்னால் சுமார் முந்நூறு ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. அன்றும் ஒன்றுபட்ட பெரும் இந்தியா இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் மதஅடிப்படையிலான பிரிவினைக் கருத்து மக்களிடையே – குறிப்பாக முஸ்லிம் மக்களிடையே தலைதூக்கவில்லை. இதன் காரணமாகவே 1947 இல் இயங்கிக் கொண்டிருந்த  பல முஸ்லிம் அரசியல் கட்சிகள்  பிரிவினையை எதிர்த்தன.

ஆனால் இந்திய முஸ்லிம் லீக் பிரிவினைக் கொள்கையில் உறுதியாக இருந்தது. 1940ல் நடைபெற்ற லாகூர் கூட்டத்தில் ஜின்னா முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேசப் பிரிவினை அதிகாரப்பூர்வமாக நிழ்ந்த 1947 வரை ஏழு வருடங்களாக நாடு பெரும் இன்னல்களைச் சந்தித்தது. அதற்குப் பிறகும் இன்னல்கள் தொடர்ந்தன.

பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா அந்நாடு உருவாவதற்கு  முக்கியப் பங்காற்றியவர். பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்துவில் பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். ஒரு தேசியவாதியாக முகமது அலி ஜின்னா உருவானார். இங்கிலாந்தில் இருந்தபோதே தாதாபாய் நௌரோஜி போன்ற தலைவர்களால் அவர் ஈர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு வந்து 1906ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு தொடங்கப்பட்ட  முஸ்லிம் லீக்கில் சேர்வதற்குத் தயக்கம் காட்டினார். ஆனால் 1913ல் முஸ்லிம் லீக்கில் இணைந்த அவர் மூன்று ஆண்டுகளில் அதன் தலைவராகி விட்டார். அந்நியர்கள்  ஆண்டபோது வராத கவலை, முஸ்லிம் தலைவர்களை அப்போது வாட்டியது. இந்தியா சுதந்தரம் பெற்றால் இந்துக்கள் தங்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். 1906 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள இந்து உறுப்பினர்கள் மீது  முஸ்லிம் தலைவர்கள் கொண்ட சந்தேகத்தின் காரணமாக இந்திய முஸ்லிம் லீக்  தொடங்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் எழுத்தாளர் அலாமா இக்பால்   தலைமை உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். “இந்துக்கள் மிகுதியாக இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியமாகிறது.பிரிவினை வெகு சீக்கிரத்தில் நடக்கும் என்பதே என் கணிப்பு.”

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுத்தது இந்திய பாகிஸ்தான் பிரிவினை. அது எல்லைக் கோட்டின் இருபுறமும் சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிர் இழக்கக் காரணமாக இருந்தது.

1905 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய் கர்சன் பிரபு வங்காளத்தை கிழக்கு, மேற்கு பகுதிகளாகப் பிரித்தார். அதன்மூலம் இந்து முஸ்லிம் பகையை வளர்த்து, இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று அவர் எண்ணினார். எதிர்ப்புகள் வலுக்கவே 1911ல் மீண்டும் வங்காளத்தின் பகுதிகள் இணைக்கப்பட்டன. அது ஒரு முக்கியமான நிகழ்வுக்குக் காரணமானது. அதுதான் இந்திய முஸ்லிம் லீக்கின் தொடக்கம். மேலும் அது இந்தியாவை மத ரீதியில் பிரிப்பதற்கு ஒத்திகை பார்த்தது போலாகிவிட்டது.

பரந்து விரிந்து பலவிதமான  பழக்க வழக்கங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழும்  நாடு இந்தியா. இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றாக  இருந்தது என்பது  மிகவும் வியப்பான ஒரு விஷயம்தான்.  ஏனென்றால் அப்போது இந்தியாவில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்ட மாகாணங்கள் தவிர, நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஐநூறுக்கும் மேலான  சமஸ்தானங்கள் இருந்தன.

முதலில் இந்தியாவை ஆண்டது கிழக்கிந்திய கம்பெனிதான். ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயர் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பிரபலம் அடையத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவில் இருக்கும் பல நாடுகளையும், அவற்றைத் தாண்டி பசிபிக் கடலில் இருக்கும் பெரும் தீவுக் கூட்டங்களையும் ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயரால் அழைத்தார்கள். அதன் படி ஈஸ்ட் இண்டீஸ் என்பது இந்திய துணைக்கண்டம்; தென்கிழக்கு ஆசிய நாடுகள்; பசிபிச் கடலில் இருக்கும் ஆஸ்திரேலியாவோடு இன்னும் பல தீவுக் கூட்டங்கள்; மேலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் குறிக்கும் ஒரு சொல்.

1600 ஆம் ஆண்டு  லண்டனில் தொடங்கப்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி தான் ஐரோப்பாவில் இருந்தவற்றில் மிகவும் பழமையானது. இந்த கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களாக பெரும் வியாபாரிகளும், பிரபுக்களும் இருந்தார்கள். எலிசபெத் அரசி அதற்கு  ராஜ உரிமை அளித்தார். இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  அதில் பங்குகள் எதுவும் இல்லை. அரசாங்கம் மறைமுகமாக அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.1707 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ஆனது. 1757 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் உறுதியானது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் வரை கிழகிந்திய கம்பனி ஆட்சி தொடர்ந்தது. 1858 இல் இயற்றப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின் படி, இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 60 சதவிகிதம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுமையில் இருந்தது. எஞ்சிய 40 சதவிகிதம் 565 பல்வேறு சமஸ்தானங்களின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானங்களின் அரசர்கள், அரசர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. சுதந்தரத்துக்குப் பிறகு இவற்றுள் அதிக விவாதத்திற்குள்ளான சமஸ்தானங்கள் காஷ்மீர், ஹைதராபாத், தற்போது குஜராத்தில் இருக்கும் ஜுனாகத் ஆகியவை தாம். முஸ்லிம்கள் மிகுதியாக உள்ள காஷ்மீரை ஓர் இந்து அரசர் ஆள்கிறார். இந்துக்கள் மிகுதியாக உள்ள ஹைதராபாத்தையும், ஜுனாகத்தையும்  முஸ்லிம் அரசர்கள் ஆள்கிறார்கள். இவை விசித்திரமான முரண்பாடுகள். அதே வேளையில் இவை இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம் மக்களும் எவ்வாறு கலந்து, கலாசாரத்தால் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சிகளாகவும் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அனைத்து சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருப்பதற்கு  ஒப்பந்தம் செய்து கொண்டன. மொத்த சமஸ்தானங்களில்  21 சமஸ்தானங்கள் மட்டுமே  தங்களுக்கென மாநில அரசாங்கம் வைத்திருந்தன. அவற்றிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய நான்கு மட்டுமே பெரியவை. மற்ற எல்லா சமஸ்தானங்களும் சிறியவை.அவற்றின் அரசர்கள்  இந்திய வைஸ்ராயின் ஒப்பந்தக்காரர்கள் போல செயல்பட்டார்கள்.

இந்தியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த  பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சமஸ்தானங்களை மேய்ப்பது ஒரு  முக்கியமான வேலையாக இருந்தது. சிறிய ஜமீன்கள் போன்றவை நீங்கலாக இருநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பாதுகாப்புப் படை வைத்திருந்தன. இந்த சமஸ்தானங்களில் இரண்டு மோதிக் கொள்ளும் போதும் ஒரு பெரிய சமஸ்தானம் சிறிய ஒன்றைப் பிடிக்க முயலும் போதும், பிரச்னை எழுந்தது. அந்தச் சமயங்களில் இந்தியாவில்  ஆட்சி செலுத்தும் பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரம் கேள்விக்குள்ளானது. இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் பிரிட்டன் நீடிப்பதற்குக் காரணமாக இருப்பவை ஆங்கிலேயர்களின் அறிவு, திறமை, உழைப்பு ஆகியவைதாம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதே வேளையில் இங்கிலாந்து நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் அல்ல என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரிட்டானியர் என்ற பெயருக்கும் அவர்கள் உரிமையானவர்கள் அல்ல. ஏனென்றால் இங்கிலாந்தின் பூர்வ குடிகள் செல்டிக் மக்கள். இப்படி தொடக்கம் முதலே பிறரை அடக்கியாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்தது. இந்தியாவிலும் இது பிரதிபலித்தது.

(தொடரும்)

கிரேக்கம் உங்களை வரவேற்கிறது

கிரேக்க இதிகாசக் கதைகள் / முன்னுரை

Ancient-Greek-Mythologyவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பியல்பு மனிதனுக்கு மட்டும் உள்ளது. அவன் சிந்திக்கத் தெரிந்தவன். அவனால் கற்பனை செய்யமுடியும். கற்பனைகள் அவனை வளப்படுத்தின, உற்சாகப்படுத்தின.  அச்சம், வீரம், காதல், இரக்கம் போன்ற உணர்வுகளின் பிரவாகத்தில், ஒருவகை ‘கலா மோகத்தில்’ அவன் தன்னை ஆட்படுத்திக்கொள்ள அவை உதவின.

மனிதனின் கலை வெளிப்பாடு என்பது பண்டைய காலம் முதலே தொடங்கிவிட்டது.  பூமி உருண்டையின் எல்லாப் பக்கங்களிலும் பேசப்படுகின்ற கதைகளே இதற்குச் சான்று.  விதவிதமான மொழிகளில், விதவிதமான வடிவங்களில் இந்தக் கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து உருவாயின. இந்தத்  தொன்மக் கதைகள் அனைத்தும் செவிவழிக் கதைகளாக பல தலைமுறைகளைத் தாண்டி நம்மை வந்தடைந்துள்ளன. இருந்தும் இன்றும் அவற்றை வாசிக்கும்போது நம் நெஞ்சம் கொள்ளை போய்விடுகிறது.

அமானுஷ்ய விஷயங்களின் மீது மனித சமூகம் காலங்காலமாகக் கொண்டிருக்கும் ஈர்ப்பும் ஈடுபாடும் இக்கதைகளில் வெளிப்படுகின்றன. இக்கதைகளின் மூலப் பெருமை தங்களுடையதே என்ற உரிமைக் குரலொலிகள் எல்லாப் பக்கங்களிலும் கேட்கின்றன. உண்மையில் இவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை என்றுதான் சொல்லவேண்டும். கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், எகிப்து, சீனா என்று உலகம் முழுவதிலும் தொன்மக் கதைகள் உருவாகியுள்ளன. சமயம் இந்தக் கதைகளின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட இதனைக் காணலாம்.

இந்நூல் கிரேக்கத் தொன்மக் கதைகளை அறிமுகம் செய்து வைக்கிறது. கிரேக்க நாட்டுக் கதைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற எத்தனையோ சொற்பதங்களுக்கு கிரேக்கக் கதைகள் மூலமாக அமைந்துள்ளன. அட்லஸ், ஏரியன், டைட்டன், ஒலிம்பிக்,  ஹெர்குலஸ், அப்பல்லோ என்று நமக்குப் பரிச்சயமான கிரேக்கப் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை கிரேக்கக் கதைகளே. ஹெர்குலிஸும், ஹெலன் ஆஃப் ட்ராயும் மறக்கமுடியாத பாத்திரங்கள். இந்தச் சுவாரஸ்யமான கிரேக்கக் கதைகளில் இந்தியத் தொன்மக் கதைகளின் அம்சங்களும் அடையாளங்களும், ஏன் கதை நிகழ்வுகளும்கூட அதிகமாகக் காணப்படுவதை ஒருவர் உணரலாம்.

***

ஒலிம்பஸ் மலைத் தொடர்

மாசிடோனியாவையும் தெஸ்ஸாலியையும் அணைத்துக் கொண்டு, கிழக்குப் பக்கமாய் ஆழக் கடலைத் தொட்டுக் கொண்டு, வானத்தை 9800 அடிகள் முட்டிக்கொண்டு பிரமாண்டமாக விரிந்திருக்கிறது ஒலிம்பஸ் என்னும் மலைத்தொடர். கிரேக்க நாட்டின் ஆதர்சனம் இது.

கிரேக்கத்தின் மிகவும் உயரமான, மாபெரும் மலைத்தொடர் மட்டுமல்ல ஒலிம்பஸ். பண்டைய கிரேக்க மக்கள் புனைந்த கதைகளின் மையமும் இதுதான்.  நாயகர்கள், நாயகிகள், தெய்வங்கள் என்று பல சுவாரஸ்யமான கதபாத்திரங்கள் ஒலிம்பஸை சுற்றியே படைக்கப்பட்டுள்ளன. யதார்த்தத்தையும் பகுத்தறிவையும்மீறி உருப்பெற்ற கற்பனைக் கடவுள்களை கிரேக்கர்கள் ஒலிம்பியன் கடவுள்கள் என்றே அழைத்தனர்.

இந்த அறிமுகத்தோடு இனி கதைகளுக்குள் நுழையலாம்.

***

1) ஆதிதேவன் யுரேனஸ்

uranusஜீ அல்லது ஜீயா (Gaea) என்பவள் கிரேக்கர்களின் ஆதி தெய்வம். இவள் பிரபஞ்சங்களும் படைப்புகளும் உருவாகும் முன்பே தோன்றியவளாம். இவளுக்கு டான்டரஸ் என்ற சகோதரன் உண்டு. பூமி வடிவத்தில் இருந்த  ஜீ துணை யாருமில்லாமல் வான் தேவனான யுரேனஸ்ஸையும், மலைகளின் தேவனான ஊரியாவையும் (Ourea) கடல் தேவனான போன்ட்டஸையும்  (Pontus) பெற்றெடுக்கின்றாள்.  பின்னர் யுரேனஸ்ஸை மணந்து கொள்கின்றாள். யுரேனஸ் தேவலோக மன்னனாக முடி சூட்டிக் கொள்கின்றான்.

இவர்களது இல்லறத்தின் அடையாளமாக ஒற்றைக் கண்ணர்களையும் (Cyclopes). பின்னர் பிரமாண்ட தோற்றமும் அமானுஷ்ய ஆற்றலும் கொண்ட பன்னிரு ஆதி தேவர்களையும்  (Titans)  நூறு கைகளை உடைய மூன்று அரக்கர்களையும் ஜீ பெற்றெடுக்கிறாள். ஆனால் ஒற்றைக் கண்ணர்களையும் அரக்கர்களையும் காணப் பிடிக்காமல் யுரேனியஸ் அவர்களை பூமியின் வயிற்றில் அடைத்து வைக்கின்றான். பூமியான ஜீக்கு இது தாளமுடியாத வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு முடிவு காண வேண்டுமென்று நினைக்கிறாள்.

மேலும், யுரேனஸ் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட டைட்டன்களையும் விரட்டி, டான்டரஸ் (Tantarus) என்ற தேவனிடம் (இவனுடைய மாமனிடம்) ஒப்படைத்து அவனிடம் அடிமைப்பட்டுக் குற்றேவல் புரிய விட்டவிடுகிறான். இந்நிலையில் டைட்டன்களுக்குத் துணிச்சல் ஊட்டி மாற்றத்தை ஏற்படுத்தி, புரட்சி ஒன்றை நடத்தி தந்தை யுரேனஸைப் பதவியைவிட்டு நீக்கி, தான் தலைமைப் பீடத்தில் அமர வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறான் டைட்டன்களில் ஒருவனான க்ரோனஸ்.

இதனை எப்படியோ அறிந்துகொண்ட இவனுடைய தாய் ஜீ, க்ரோனஸ்ஸைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறாள். யுரேனியஸின் கொடுமைகளை ஒடுக்க ஒரு கருவியாக க்ரோனஸ் பயன்படுவான் என்று ஜீ நம்புகிறாள். தந்தையைக் கொன்றால் பதவியை நீ கைப்பற்றிக்கொள், நான் உனக்கு உதவுகிறேன் என்கிறாள் ஜீ. கூடவே, அரிவாள் ஒன்றைத் தயார்செய்து அவனுக்குக் கொடுக்கிறாள். சரியான சந்தர்ப்பம் வரும்போது சொல்கிறேன், செயல்படு என்றும் அறிவுரை சொல்கிறாள்.

ஒருநாள் யுரேனஸுடன் உறங்கும்போது, மறைவாகப் பதுங்கியிருந்த க்ரோனஸுக்கு ஜீ சமிக்ஞை அளிக்கிறாள். உடனே அவன் யுரேனஸ் மீது பாய்கிறான். ஆயுதத்தையும் செலுத்துகிறான். யுரேனஸின் உடல் பாகங்களை வெட்டி துண்டுகளாக்கி கடலில் தூக்கி வீசுகின்றான். ஆனால், க்ரோனஸ் யுரேனஸை வெட்டும்போது வெளியான ரத்தம் ஜீ மீது பட்டுவிடுகிறது. உடனே ப்யூரிஸ் (Furies) என்ற குண்டோதரனும், மெலியா என்ற மோகினியும் (Ash nymphs) தோன்றுகின்றனர். யுரேனஸின் உடல் பாகங்கள் கடலில் விழுந்தவுடன் கடல் கொந்தளிக்க, நுரை பொங்குகிறது. அலைகள் எழுகின்றன. அந்த நுரைப்பின் வழியே ஆஃப்ரோடைட் என்ற அழகு தேவதை தோன்றி வருகிறாள். தந்தையை ஒழித்துக்கட்டிவிட்டு க்ரோனஸ் ஆட்சியைப் பிடிக்கிறான்.

யுரேனஸை ஒழித்துக்கட்டுவதில் க்ரோனஸுடன் உடன் பிறந்தவர்களான டைட்டன்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றபோதிலும், ஓஷனஸ் என்ற டைட்டன் மட்டும் ஒதுங்கி நிற்கிறான். மேலும், தன் தந்தையான யூரேனஸை முறையற்ற விதத்தில் வீழ்த்தினார்கள் என்ற மனக்குறை இவனுக்கு இருந்தது. (இதனால்தான் இதேபோன்ற ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ நிகழ்வு மறுபடி நேரிட்ட வேளையில் இதே க்ரோனஸை எதிர்த்து அவனது மகன் ஸீயஸ் போர்க்கொடி தூக்கியபோதுக்ரோனஸுக்குத் துணையாக எல்லா சகோதர டைட்டான்களும் உடன் நின்றபோது ஓஷனஸ் மட்டும் ஒதுங்கிக் கொள்கிறான்).

யுரேனஸின் ஆதிக்கம் மறைந்து, க்ரோனஸின் ஆட்சி தொடங்குகிறது. ஜீயா போன்டஸ் (Pontus) மூலமாக ஏராளமான குழந்தைகள் பெற்றுக் குவிக்கிறாள். நீரஸ், தாவுமஸ், போர்சிஸ், செட்டோ, யூரிபியா ஆகியோரைப் பெற்றெடுக்கிறாள்.  இவர்களைத் தவிர ஏராளமான அரக்கர்கள் அரக்கியர்களையும் உருவாக்குகிறாள். எகிட்னா என்ற பயங்கர அரக்கியையும் தைபூன் என்ற ராட்சசஅரக்கனையும் டான்டரஸ் மூலம் பெற்றெடுக்கிறாள். இவர்களில் தைபூன் என்பவன் பின்னர் ஸீயஸை எதிர்த்துப் போர் புரிந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

சீனாவில் இருந்து உலகத்துக்கு

சீன இதிகாசக் கதைகள் / முன்னோட்டம்

Chinese-Painting-for-Chengyu-Cherishing-Official-Appointments-PhotosCom-135366482-676x450நமக்கெல்லாம் ‘இதிகாசம்’ என்றால் என்னவென்று தெரியும். நம் நாட்டில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இதிகாசங்கள் ராமாயணமும் மகாபாரதமும் ஆகும். இந்தக் கதைகளை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Mythology என்ற சொல் தமிழில் ‘தொன்மம்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.  இருந்தும் இந்தப் புத்தகத்தில் சீன இதிகாசக் கதைகள் என்னும் தலைப்பே எளிமை காரணமாக வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உலகில் பேசப்படுகின்ற மொழிகள் ஒவ்வொன்றும் தமக்கென்று தனித்தன்மையோடு கூடிய வரலாறு, பண்பாடு, இதிகாசங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. தொன்மக் கதைகள் ஆதிமனிதர்கள் காலத்திலே தொடங்கியிருக்கவேண்டும். மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்றெல்லாம் மனிதச் சமூகம் காலங்காலமாகக் கொண்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடே மனிதனின் சமூக, சமய வரலாற்றை வடிவமைக்கக் காரணமாயிற்று.

எல்லா மொழிகளிலும் உள்ள இதிகாசக் கதைகளைப் போலவே சீன மொழிக் கதைகளிலும் கற்பனை வளம், ஆற்றல், யதார்த்தத்தை உதைத்துக் கொண்டு துள்ளி எழுகின்ற மனித மனத்தின் ஆர்வ ஜாலங்கள், அமானுஷ்ய நிகழ்வுகள் வினோத கதாபாத்திரங்கள் ஆகியவை நிரம்பியுள்ளன. வாய்மொழி கதைகளாகத் தொடங்கி தலைமுறைகளைத் தாண்டி, இன்று வரை இவை பேசப்படுகின்றன. சீன இதிகாசம் உலகில் மிகத் தொன்மையானது என்பதற்கு அதன் தொடக்கம் கி.மு. 12ம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளதிலிருந்து தெரிய வருகின்றது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எழுத்து வடிவத்தை எட்டாமலே ‘மொழிதல்’ இலக்கியமாகத் தொடர்ந்து பின்னர் சற்றேக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்து வடிவில் இந்தக் கதைகள் உருப்பெற்றுள்ளன. தொடக்கத்தில் எழுத்தில் வடிக்கப்பட்ட நூல் ‘ஷன்-ஹாய்-ஜிங்’ (Shan Hai Jing) என்பதாகும்.

சீன நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளின் தன்மைக்கேற்ப அங்கங்கே வட்டார வழக்கிலும் ‘மொழிதல் இலக்கியம்’ வளர்ந்து, பின்னர் இவை நாட்டுப்புற மற்றும் நாடோடிப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன  இவையாவும் பிற்காலங்களில் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன.

மகாபாரதத்தைப் போன்று நீண்ட கதைகளை ஊர் ஊராகச் சென்று ‘கதைச் சொல்லிகள்’ இசைக் கருவிகளை இசைத்து சொல்லி இருக்கிறார்கள். ஊருக்கு ஊர், ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம் ஒரே கதையே அனேக மாற்றங்களுடன் உருவாகியுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கதைகளே பின்னர் சீன இலக்கியத்தின் பண்டைய இலக்கியங்களாக இடம் வகித்துள்ளன. சில குறிப்பிட்ட சீன இனக் குழுக்களின் பங்களிப்பில் இத்தகைய இலக்கியங்களின் பெரும் பகுதி வெளிப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக சீன நாட்டின் வரலாறு, மன்னராட்சி வரலாறு, சமய நம்பிக்கைகள், சமூக நடைமுறைகள், மாயா விநோதங்கள் ஆகியன நீள் கதைகளாகப் படைக்கப்பட்டு மக்களிடையே வைக்கப்பட்டன. இத்தகைய மக்கள் இலக்கியம் கதைகளாக ,வாய்மொழியாகச் சொல்லப்பட்டும், நாடகங்களாக நடத்தப்பட்டும் நிலைகொண்டன.

முதல் முதலாக நெடுங்கதை வடிவில் கி.மு.பத்தாம் நூற்றாண்டளவில் ‘ஹேய்யான் சுவான்’ என்ற பெயரில் (கார் இருட்டிலே என்பது இதற்குப் பொருள்) ஒரு காப்பியம் இயற்றப்பட்டது. ஹன் தேசிய இனத்தின் ஒரே காப்பியம் இது. அவர்களுடைய வாழ்விடமாக அமைந்த ஷென்னோன்ங்கியா (Shennongjia) என்ற மலையகப் பகுதியின் நிகழ்ச்சிகளை, அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் இயல்புகளை, கற்பனை வளர்ச்சியை எடுத்துக்காட்டக் கூடியதாக இது விளங்குகின்றது.

மேலும் சில படைப்புகள் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்.

  1. செய்யுள் வடிவில் அமைந்த ‘லிசாவ்’ (Lisao); இதனை க்யூ யுஆன் (Qu Yuan) என்ற ‘Chu’ என்ற பகுதியைச் சேர்ந்தவரால் புனையப்பட்டது.
  2. Feng Hen yanyi என்ற பெயரில் Zhou  இனத்தினர் உருவாக்கிய கடவுளின் கதைகள். இவை மிகவும் விறுவிறுப்பானவை என்று அறியப்பட்டவை.
  3. சீனாவிலிருந்து இந்திய நாட்டுக்கு புனிதப் பயணம் செல்வதைக் கூறும் நெடுங்கதை. கதையின் தலைப்பு- “மேற்கு நோக்கிப் பயணம்” (Journey to the West) என்பதாகும். இதை எழுதியவர் யூ சென்ஜென் (Wu Chengen) என்பவர். ஸுவான்ஜாங் (Zuan Zang) என்ற ஊரிலிருந்து மலைகளையெல்லாம் கடந்து இந்தியாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றபோது எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள், அச்சமூட்டும் பேய்கள், பூதங்கள், ராட்சஷர்கள், காண நேர்ந்த வினோத காட்சிகள் போன்றவை இதில் உள்ளன.
  4. ஒர் அற்புதமான காதல் கதையும் சீன இதிகாசத்தில் தலையாய இடம் வகிக்கின்றது. அது Baishe Zhuan. இதனை உருவாக்கியிவர் ஹாங் ஷுவு (Hang Zhou). இந்தக் கதையில் ஒரு பாம்பு மனித உருவில் பெண்ணாக மாறி ஒரு மனிதனைக் காதலிக்கும். சாகசங்கள், அறைகூவல்கள் அச்சுறுத்தல்கள், அமாஷ்ய நிகழ்வுகள் எல்லாமே இதில் உண்டு.

நுவா உலகில் ஏற்பட்ட ஊழிப்பெருவெள்ளத்திலே தப்பிப் பிழைத்த ஒரே பெண். இவளுடன் மிஞ்சி இருந்த இன்னொரு மனித உயிர் இவளுடைய சகோதரன். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் இருவருமாக மீண்டும் மனித இனத்தைப் பூமியிலே நிலைபெறச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே இவர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

மண்ணிலே மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் வேகவேகமாக பெருகவேண்டும். அப்பொழுதுதான் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதி, நுவா களிமண்ணைக் கொண்டு மனிதர்களை, விலங்குகளை, பறவைகளைப் படைக்கின்றாள். கடவுள் அவற்றை உயிர்பெறச் செய்கின்றார்.

ஒரு பிரளயத்தை ஒட்டி இப்படி ஒரு கதையைப் புனைந்தனர்.  கி.மு ஏழாம் நூற்றாண்டளவில் இந்த நுவா கதை தோன்றியுள்ளது.  இந்தக் கதை Three August Ones, Five Emperors ஆகிய சீன இதிகாசங்களில் சொல்லப்படுகின்றன. நுவா கதை மற்றும் இந்த இரண்டு இதிகாசங்களும் ஜியா வம்ச ஆட்சிக்காலத்தில் (கி.மு.2850-கி.மு.2205) தொகுக்கப்பட்டுள்ளன.

‘உலகம் தோன்றிய கதை’ என்பது பான்-கூ என்பவனைப் பற்றிக் கூறுவது. உலகத் தோற்றம் குறித்த சுவையான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. மன்னர்களைப் பற்றி சொல்லப்பட்ட கதைகள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. அவை ஹூவாங்டடி, யூ-ஹுவாங், ஷென்நாங், ஷாஹுவா, யாவோ, ஷன், யூ போன்ற பேரரசர்களின் கதைகள்.

இந்தக் கதைகளில் மன்னர்கள் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்வார்கள். சில மன்னர்கள் கடவுளாகவே இருந்துள்ளனர். ‘ஜாட்’ என்ற மன்னன் மூவுலகங்களுக்கும் அதிபராக இருந்து நியாயத் தீர்ப்பு வழங்குவதாகச் சொல்லப்படுகின்றது.

பல நூறு ஆண்டுகள் ஒரே மன்னர் குலம் ஆட்சி புரிந்துள்ளதும் தெரியவருகிறது. அப்படி ஆண்ட மன்னர் குல ஆட்சிகள் : ஜியா வம்சத்தினர் மற்றும் ஷாங் வம்சத்தினர்.

சீனாவில் மிகப்பழமையான மன்னர்களாகவும், மிகவும் போற்றத்தக்க வகையில் தூய்மையான அரசை நடத்தியவர்களாகவும் தங்களின் மைந்தர்களை அரச பாத்யதைக்கு உரியவர் ஆக்காமல், வெளியிலிருந்து ஆட்சி நடத்துகின்ற தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சி உரிமையை அவர்களுக்கு அளித்தவர்களாகவும் இருந்த மாமன்னர்கள்  “முப்பெரும் வேந்தர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பேரரசர் யாவோ, பேரரசர் ஷுன், பேரரசர் யூ ஆகியோராவார். ஆனால் மூன்றாவது பேரரசர் யூ மனம் மாறி, அவர் தேர்ந்தெடுத்தவர் தகுதியற்றவர் என்று தெரிந்தபிறகு தன் மைந்தனையே தன் வாரிசாகதேர்ந்தெடுக்கிறார். இவையாவும் வரலாற்று நிகழ்ச்சிகள். சீன இதிகாசக் கதைகளில் இவை இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று மன்னர்களோடு மேலும் இரு மன்னர்களைச் சேர்த்து ஐந்து பேரரசர்கள் என்று அழைத்து அவர்கள் பெருமை கதைகளாக உருப்பெற்றுள்ளன. சில மாயவிநோதங்கள் இவற்றில் சுவைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

மன்னர் கதைகளில் டிராகன்கள் வகின்றன. அந்த டிராகன்கள் வகை, வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பல விநோதப் பறவைகளும் விலங்குகளும் வருகின்றன. ‘சீனாவின் பெருந்துயரம்’ எனப்படும் பெருவெள்ளப் பேரிடர் அடிக்கடி கதைகளில் வருகின்றது.

மொத்தத்தில் வரலாற்று வாசனை இல்லாத கதைகள் என்று எதுவும் சீன இதிகாசங்களில் இல்லை. அதனால்தான் பல கதைகள் நிகழ்ந்த காலகட்டத்தை வரலாற்றாசியர்களால் கணிக்கமுடிந்திருக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுக்கு சீனர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

கி.பி.220-420 வரையிலான காலக்கட்டத்தில் தாவோ சமயத்தவர்களும், பௌத்தர்களும் கதைகளில் அதிக தாக்கம் செலுத்துகின்றனர். அவர்களுடைய மாய மந்திரங்கள், ஆவிகள் பற்றிய கற்பனைகள் ஆகியவை கதைகளில் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கடல் தொடர்புகள், கடல் பயணிகளின் அனுபவங்களுடன் கூடிய கற்பனைக் கதைகள் பல படைக்கப்பட்டுள்ளன. மேலும் ரசவாதிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய யூகங்களும் உண்மைகளும்கூட கதைகளாக உருவாகியுள்ளன.

டாங் (Dong) பரம்பரை ஆட்சிக்காலத்தில் கதைப் படைப்பதில் படைப்பாளிகளின் முன்னேற்றம் தெளிவாகப் புலப்படுகின்றன. அப்போதுள்ள கதைகளில் (செய்யுள் நடைகளிலும்கூட) மனித வாழ்வைப் பிரதிபலிக்கின்ற நிகழ்வுகள், சமூக வாழ்க்கையின் நேர்க்காட்சிகள், மனித உறவுகள், பண்புகள், கயமைகள் என்று பல்வகைப் பொருள்கள் கதையின் தளங்களாக இடம்பெற்றுள்ளன.

அறிவுரை கூறும் எளிய கதைகளிலும்கூட கதைக்களமும் கதாபாத்திரங்களின் இயல்பும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதிகாசங்களில் இருந்து முன்னேறி அடுத்த கட்டமாக இலக்கியப் போக்குடன் கூடிய கதைகள் புனையப்பட்டன. பிறகு ஒரு கட்டத்தில் மீண்டும் இதிகாசத்துக்குக் கதைகள் திரும்பின. இதிகாசத்தின்மீது சீனர்களுக்கு அசைக்கமுடியாத ஆர்வம் இருந்ததை இந்தப் போக்கு உணர்த்துகிறது.

யுவான், மிங், கிங் ஆகிய மன்னர் பரம்பரையினரின் ஆட்சிக்காலத்தில் பேர்பெற்ற பல காவியங்கள். புனைக்கதைகள் கிளைமொழிகளில் தோன்றின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ‘மூன்று ராஜாக்களின் காதல் கதை’ (Romance of the Three Kingdom) நீர்க்கரைகள் (Water Margin), மேற்கு நோக்கிப் புனிதப் பயணம், (Pilgrimage to the West) பண்டிதர்கள், (The Scholars) சிவப்பு மாளிகைக் கனவு (Dream of the Red Mansions) ஆகியவை.

இந்தக் கதைகளைப் படைத்தவர்கள் சாமானியர்களாகவும் இருக்கலாம், பண்டிதர்களாகவும் இருக்கலாம். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுடைய படைப்புகளின் அடிநாதம், மனித உணர்வுகள். அதனாலேயே இந்தக் கதைகள் சீனர்களுக்கு மட்டுமின்றி மனிதகுலம் முழுவதற்கும் சொந்தமானவை.

(தொடரும்)

 

21ம் நூற்றாண்டு மார்க்ஸ்

Figure-1-Marx_940கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 – 14 மார்ச் 1883) பிறந்த தினமான இன்று அவரை நினைவுகூரும் வகையில் இந்தத் தொடர் பகுதியை இங்கே தொடங்கி வைக்கிறேன்.

மார்க்சியத்தை விரிவாக விளக்கி ஆராய்வது அல்ல இதன் நோக்கம். அதற்கேற்ற ஆற்றலை இன்னமும் நான் வளர்த்துக்கொள்ளவில்லை. மார்க்ஸ் எங்கெல்ஸ் மூலநூல்களை முழுமுற்றாக வாசித்து புரிந்துகொள்வது என்பது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் பணி. அதை மிகச் சமீபத்தில்தான் முறைப்படி தொடங்கியிருக்கிறேன். இந்தத் தொடர் மார்க்ஸ் குறித்து எழுதப்பட்ட இரண்டாம்பட்ச ஆதார நூல்களையே (Secondary Sources) பெரும்பாலும் சார்ந்து இருக்கப்போகிறது.

இந்தத் தொடரின் நோக்கங்கள் இரண்டு. முதலாவதாக, 21ம் நூற்றாண்டில் மார்க்ஸ் தேவைப்படுவாரா; ஆம் எனில் ஏன் என்னும் வினாவை எழுப்பி அதற்கு விடை தேடவேண்டும். இரண்டு, மார்க்சியம் குறித்து உலகம் முழுவதிலும் இப்போது நடைபெற்று வரும் விவாதங்களை அறிமுகப்படுத்தவேண்டும். இந்த இரண்டையும் செய்யத் தொடங்கும்போது மார்க்சியத்துக்கான ஓர் எளிய அறிமுகமும் இதிலிருந்து வெளிப்படும் என்று நம்புகிறேன்.

21ம் நூற்றாண்டு மார்க்ஸ் அடுத்த வாரம் ஆரம்பமாகும்.

0