விருதுநகர் : அண்ணாச்சிகளும் மானேஜ்மெண்ட் பாடங்களும்

முதல் பகுதி 

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தான் அண்ணாச்சி என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு சமூக அடையாளம் இருக்கிறது. விருதுநகர் வட்டாரத்தில் அது ஒரு மரியாதைச் சொல். விருதுநகரைப் பொருத்தவரையில், அங்குள்ளவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராயினும், வயது வித்தியாசமில்லாமல் எல்லோருமே அண்ணாச்சிகள்தாம். ஒரு தாயின் இடுப்பிலிருந்து கொண்டு கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கைக்குழந்தையைப் பார்த்து, கல்லாவில் உட்கார்ந்திருந்த மூத்த அண்ணாச்சி, ‘அண்ணாச்சி என்ன பாக்குறீங்க? அண்ணாச்சிக்கு என்ன வேணும்?’ என்று கேட்டபோது, வாங்க, போங்க என்பது மாதிரி, அண்ணாச்சி என்பதும் அங்கே ஒரு மரியாதைச் சொல் என்று புரிந்தது.

விருதுநகரின் தொழில் வர்த்தகச் சூழலைப் பற்றி அண்ணாச்சிகளுடன் கலந்துரையாட எம்.எல்.ஏ. திரு பாண்டியராஜன் விரும்பியதையொட்டி, எம்.எல்.ஏ. வீட்டிலே ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. விரும்பினால் நீங்களும் கலந்துகொள்ளலாமே என்று எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டதால் அண்ணாச்சிகளுடன் உட்கார்ந்துகொண்டேன். புளி, புண்ணாக்கு, மிளகாய், உளுந்து, கடலை, கட்டடச் சாமான்கள், தீப்பெட்டி, ஃபயர் வொர்க்ஸ், டிராவல்ஸ், துணிக்கடை என்று பழகிப் போன, இக்கால இளைஞர்களை அவ்வளவாகக் கவராத தொழில் பின்னணி அவர்களுடையது.  கணுக்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிய நாலுமுழ வேட்டிகளுடன் அமர்ந்திருந்தார்கள். இவர்களில் பலரின் வணிகப் பரிவர்த்தனை கோடிகளைத் தாண்டும். வழங்கப்பட்ட தேநீரை மறுத்துவிட்டு, ஒரு டம்ளர் பச்சைத்தண்ணி போதும் என்று அவர்கள் வாங்கி அருந்தியபோது, ஆச்சரியப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

அது சாம்பிரதாயமான கூட்டமல்ல. ஒரு informal get together. அண்ணாச்சிகள் பிரச்னைகளைப் பேச, அம்மாதிரியான பிரச்னைகளை வேறு இடத்தில் சந்தித்தவர்கள், அவற்றை எப்படி கையாண்டார்கள் என்ற உதாரணங்களை எம்.எல்.ஏ. எடுத்துச் சொன்னார். உங்களால் முடியும், நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்று அவர்களை உசுப்பேற்றாமலும், உருமா கட்டிவிடாமலும், வாங்க சென்னைக்குப் போவோம், மந்திரியைப் பார்ப்போம் என்றோ, அந்த செக்ரட்ரி என் கூடத்தான் வாக்கிங் வருவாறு, இந்த செக்ரட்ரி எங்கூடப் படிச்சவரு என்று பில்டப் கொடுக்காமல், Backward/ Forward Linkages, Industry/ Service Clustering, Value Chain போன்ற நிர்வாகக் கருத்தாக்கங்களின் அடிப்படையில், அண்ணாச்சிகளுக்கு புரிகின்ற பாஷையில் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். எம்.எல்.ஏ வீட்டு வரவேற்பறை, சிறிது நேரம் வகுப்பறையாக மாறிவிட்டது.

தொழில்நுட்பத்தில், மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் எப்படி நம்முடைய பல பிரச்சனைகளைத் தீர்த்துவைத்தனவோ, அது மாதிரி, சமூகவியலிலும் உளவியலிலும் நிர்வாகவியலிலும் அறிமுகமான சில கருத்தாக்கங்கள் நமக்குத் தெளிவை உண்டாக்கி, பிரச்னைகளைக் எளிதாகக் கையாளும் மனோதிடத்தை அளித்திருக்கின்றன. எம்.எல்.ஏ பேசிய தொடர்புகள் (Backward/ Forward Linkages), குழுமங்கள் (Industry/ Service Clustering), பொருள் மற்றும் சேவையின் சங்கிலித் தொடர் (Value Chain) இவையெல்லாம் எம்.பி.ஏ வகுப்பறைப் பாடமல்ல. அவை கார்ப்பரேட் கருத்தாக்கங்களும் அல்ல.  மக்களின் அன்றாட ஜீவனோபாயத்துடன் நேரடியாவை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவை. நாம் உண்ணும் சீவல், சீடை, சீனி மிட்டாய்க்குக்கூட Backward/ Forward Linkages உள்ளன.Value Chain உண்டு. இதைப் புரிந்து கொள்ளும் அனுபவம் இருந்ததாலும், நானேகூட பங்கேற்பு Value Chain-ஐ சில இடங்களில் பரீட்சித்துப் பார்த்து அதன் பலன்களை உணர்ந்துகொண்டிருந்ததாலும், எம்.எல்.ஏ கலந்துரையாடலிலிருந்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது.

எம்.எல்.ஏ தொடர்ந்தார். ஒரு பொருளின் Value Chain-ல், மூலப்பொருள் (Raw Material Supply) சப்ளை செய்தவர்கள் சில காலம் நல்ல லாபம் பார்த்தார்கள். அதை பிராசஸ் செய்து பொருளாக்கியவர்களுக்கு சிலகாலம் லாபம் கிடைத்தது. சில காலம் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்தது. இந்த லாப விகிதம் எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பொருளின் Value Chainல் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் சமநிலையையும் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் எந்த நிலையைப் பிடிப்பது, எதை விடுவது என்று திட்டமிட வேண்டும்

இளம் தொழில் முனைவோருக்கான ஒரு அமைப்பு இருந்தால் வணிகத்தைப் பற்றியும், வணிகச் சூழலில் ஏற்படும் சவால்களைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பேற்படும் என்று கூறிய எம்.எல்.ஏ, அப்படிப்பட்ட ஓர் அமைப்பை விருதுநகரில் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று சொன்னபோது, அந்த கருத்தை எல்லா அண்ணாச்சிகளும் வர்வேற்றார்கள். அந்த அமைப்புக்குப் பொருத்தமான பெயரிடவேண்டுமென்றும் (Branding), அப்பெயரே அந்த அமைப்பின் நோக்கத்தை எடுத்துக் கூறுவதாக இருக்கவேண்டும் என்றும் சொன்னபோது, அதைப் புரிந்துகொண்ட அண்ணாச்சிகளில் ஒருவர், பெயரில்தானே இருக்கின்றது பெருமாளுக்கான மகிமை என்பதுமாதிரி, கேரளாவை மையப்படுத்தி தான் செய்துவந்த வணிகத்தால், ‘கேரளா டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்று தன் கடைக்குப் பெயரிட்டதையும், அதனால் உண்டான சாதகங்களையும் சுவைபட கூறினார்.

அரசியல், அரசியல் ரீதியான தொடர்புகள், முறைகேடாக சம்பாதித்த முதலீடு, அரசின் தவறான கொள்கை முடிவுகள் போன்றவை ஒரு பொருளின்/ சேவையின் சங்கிலித் தொடரில் (Value Chain) குழப்பத்தை உண்டாக்கி, ஆண்டாண்டுகாலமாக அதையே ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கும் பலரை ஓரங்கட்டி ஓட்டாண்டிகளாக்கிவிடுவதை நாம் பார்த்திருக்கின்றோம். Traffic Route தெரிந்தால் எப்படி நம் பயணத்தை சுலபமாக்கிக் கொள்ளமுடிகின்றதோ, Disease Chain தெரிந்தால் எப்படி ஒரு நோய்த் தாக்கதிலிருந்து நம்மால் தப்பிக்க முடிகின்றதோ, அது மாதிரி Value Chain பற்றிய தெளிவு இருந்தால் தொழில் மற்றும் வணிகச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியும் அல்லவா?

சாதி/மத உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கும், அரசியல் தொடர்புகளால் எளிதாக சலுகைகளைப் பெற்றுக்கொள்ளமுடிந்தவர்களுக்கும் அறிவார்ந்த தெளிவு தேவைப்படாதுதான். தொழிலில் வெற்றிபெறுவதென்பது அவர்களுக்கு எளிதாக இருந்தாலும், அத்தகைய வெற்றி தாற்காலிகமானதே. எந்தஒரு செயலிலும் அறிவார்ந்த தெளிவே ஸ்திரத்தன்மையை அளிக்கும். அப்படிப்பட்ட அறிவார்ந்த தெளிவை உருவாக்க விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாண்டியராஜன் முயல்கிறார்.

0

பேரா. எஸ்.ரெங்கசாமி

விருதுநகர் – ஒரு பேராசிரியரின் வித்தியாசமான அனுபவம்

1

ஒரு நண்பர் மூலம் விருதுநகர் எம்.எல்.ஏ. திரு. மாஃபாய் பாண்டியராஜன் அவர்களுடன் அறிமுகம் இருந்தாலும், நேரில் சந்திக்க அவ்வளவாக வாய்ப்புகள் இருந்ததில்லை. எம்.எல்.ஏ என்னைப் பார்க்க விரும்புவதாக அவர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட, அதையொட்டி விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டேன்.  ஓர் அரசியல்வாதி போல் அவர் இல்லை.  இந்தியாவின் மிகப்பெரிய மனிதவளத் தேடல் மற்றும் மேம்பாடு நிறுவனத்தைக் கட்டமைத்து, அதை வெற்றிகரமாக நடத்திவரும் ஒரு மனிதராகவே அவர் தோன்றினார். எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கே உரிய சில சாமுத்திரிகா லட்சணங்களை அங்கே பார்க்க முடியவில்லை. கரை வேட்டிக்காரர்களைவிட,  இளைஞர் கூட்டமே அதிகம். கணினிகளின் முன் உட்கார்ந்து பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, அவரைப் பொறுத்தவரை வருமானமீட்டும் வாய்ப்பல்ல. மாஸ்லோவின் மானுடத் தேவைப் படிநிலைகளின் உயர்நிலையான “ஆத்ம மேன்மைக்காக” அவர் தனது காலத்தையும், காசையும் விருதுநகரில் செலவழித்துக் கொண்டிருப்பதாகப்பட்டது.

என்னை அவர் அழைத்ததற்குக் காரணம் இருக்கிறது. தனது தொகுதியையும், தனது தொகுதி மக்களையும், அவர்களது வாழ்வையும் சரியான கோணத்தில், அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள அவர் விரும்பினார். தொகுதி முழுதிலும், சமூகப் பொருளாதாரப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நடத்தவும் விரும்பினார். தன்னுடைய தேவையை, விருப்பத்தை, சுற்றி வளைக்காமல் மிக ரத்தினச் சுருக்கமாக திரு. பாண்டியராஜன் எடுத்துச் சொன்னார். “நான் போட்டியிடும் போதே என் தொகுதியைப் பற்றி, அரசியல் கடந்த புரிதல் இருந்திருக்கவேண்டும். கடந்த ஒன்பது மாதத்தில் தொகுதியில் அலைந்து, அலைந்து அனுபவம் மூலமாக பலவற்றை அறிந்துகொண்டேன். அதில் காலமும் பொருளும் விரயமாவது போல் தெரிகின்றது. என்னுடைய புரிதல் அறிவார்ந்ததாக இருக்கவேண்டும். நான் எங்கிருந்தாலும் விழித்தெழும் போது என் தொகுதியில் விழிக்கும் மாதிரி என் தொகுதியைப் பற்றிய வரைபடமும், தகவல்களும் என் கணினியிலும் செல்போனிலும் இருக்கவேண்டும். தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும், யாருடைய உதவியும் இல்லாமல் தெரிந்துகொள்ளும் முறை எனக்கு வேண்டும். ஒரு நபரிடமிருந்தோ, கிராமத்திலிருந்தோ கோரிக்கை ஒன்று வந்துவிட்டால் அக்கிராமம் பற்றிய தகவல்கள் என் மனபிம்பத்தில் தன்னிசையாக ஓட வேண்டும். ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவன் என்ற முறையில் எனக்கு சில வரையறைகள் உண்டு. அதையும் தாண்டி என்தொகுதி மக்கள் என்னையும், நான் அவர்களையும் சென்றடைய வேண்டும். I need a methodology to achieve this”.

பங்கேற்பு முறைகளில் (Participatory Methods-PRA) பரிச்சயமும், நம்பிக்கையும் கொண்டிருந்த எனக்கு, இது மாதிரியான பணிகளில், அதுவும் எண்ணிக்கை (Head Counting) சார்ந்த புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளின் வரையறை புரிந்திருந்தது. எனவே, மையப்படுத்திய, பொருட்செலவில்லாத, அதே நேரத்தில் நம்பகத்தன்மை மிக்க மாற்றுத் தகவல் சேகரிப்பு முறைகளை திரு. பாண்டியராஜன் அவர்களிடம் பரிந்துரைத்தேன்.

நான் பரிந்துரைத்த செயல்முறைகளின் அடிப்படைகள் இவை.

  • தகவல் சேகரிப்பு முறைகள் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கத்தக்க அணுகுமுறை கொண்டதாக இருக்க வேண்டும்.
  • தேவைப்படும் பட்சத்தில் சில வேலைகளுக்கு satellite images கூட பயன்படுத்த வேண்டியிருக்கும். கணினி பயன்பாடு அதிகமிருக்கும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
  • சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஏதாவதொரு வடிவில், உள்ளடக்கத்துடன் இணையத்தைப் பயன்படுத்தி பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும். தகவல்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற உணர்வு ஆரம்பத்திலே உருவானால்தான் தகவல் சேகரிப்பில் சிரத்தை உருவாகும். நம்பகத்தன்மை மேம்படும்.
  • பணி முடிவடையும் போது இதை வெளியிலிருந்து வந்த ஒரு ஆலோசகர்/ நிபுணர் குழு செய்து கொடுத்தது என்றில்லாமல், அனைவரும் உடனிருந்து செய்தோம் என்ற குழு உணர்வு எம்.எல்.ஏ. அலுவலகப் பணியாளர்களிடமும், அவரைச் சார்ந்தவர்களிடமும்  ஏற்படவேண்டும்.

திரு. பாண்டியராஜன் அவர்கள் விரும்பிய சட்டமன்ற தொகுதி தகவல் தொகுப்பு (Constituency Profile) எப்படிச் செய்யப்படவேண்டுமென்பதற்கு முன்மாதிரிகள் அதிகம் இல்லாததால், எங்களுக்கான முன்மாதிரிகளை நாங்கள்தான் உருவாக்கவேண்டியிருந்தது. ஒன்றிரண்டு கிராமப் பஞ்சாயத்துகளில் எல்லாக் குடும்பங்களையும் உள்ளடக்கிய குடும்பத் தகவல் (Household Information) தொகுப்புகளையும், தொகுதி உள்ளடக்கிய கிராமத் தகவல் (Village Profiles) தொகுப்புகளையும், இதில் அரசுத்துறைகள் தரும் தகவல்களை ஒருங்கிணைத்து, அரசுத் தகவல்களுக்கு எப்படி மதிப்புக் கூட்டுவது என்பது பற்றியும் சிந்திக்கப்பட்டது. எங்கள் செயல்முறைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், அணுகுமுறைகளை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாங்கள் எப்படிச் செய்ய ஆரம்பித்தோம் என்ற செயல்முறை விளக்கம் இங்கே தேவையில்லை. நாங்கள் பணியை ஆரம்பித்தவுடன் எங்களுக்கு கிடைத்த ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் எங்களுக்குப் பாடங்கள். ஆச்சரியம் என்னவென்றால் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையும், தாக்குப் பிடிக்கும் திறமும் தான். அதிர்ச்சி என்னவென்றால் மக்களை புரிந்து கொள்ளமுடியாத அல்லது புரிந்து கொள்கின்ற மறுக்கின்ற நமது மட்டித்தனம். நமது என்பதில் அரசு அதிகாரவர்க்கத்திற்கே அதிகப் பங்கு.

ஒரு முயற்சியில் இறங்கும் முன் அதைப் பற்றிய பின்புலத் தகவல்கள் இருந்தால் களப் பணியில் தெளிவு உண்டாகுமே என்ற ஆதங்கத்தில் விருதுநகர் தொகுதிக்குட்பட்ட பஞ்சாயத்துக்கள், அதன் உட்கடை கிராமங்கள் பற்றிய தகவல்கள் கேட்டபோது, எம்.எல்.ஏ அலுவலகத்தில் மாட்டிவைக்கப்பட்டிருந்த தொகுதி வரைபடம் உதவியாய் இருந்தது. நமது நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள் என்ற பெயரில் சமுதாய முன்னேற்றத்துக்கான உலகின் மிகப் பெரிய நிர்வாகக் கட்டமைப்பை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியிருந்தும், அதில் தொழில்நுட்பக் கல்விமுடித்த, துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்கள் பணியிலமர்த்தப்பட்டிருந்தும், அவர்களால் இதுவரைக்கும் முழுமையான ஒன்றிய வரைபடத்தை உருவாக்கித் தரமுடியவில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தங்கள் பணிகளுக்கென்று உருவாக்கிக் கொண்ட வரைபடங்கள்தாம், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் பயன்படுகின்றது. வேறு துறையினர் தங்கள் தேவைகளுக்கு உருவாக்கிய ஒரு limited purpose map மாற்றுருவாக்கமே செய்யப்படாமல் பயன்படுத்தப்படுவதற்கு எம்.எல். ஏ அலுவலகத்தில் இருந்த, அரசிடமிருந்து பெறப்பட்ட அந்த வரைபடமே அத்தாட்சி.

விரிவான தகவல் சேகரிப்புக்கு ராம்கோ சிமெண்ட் ஆலையின் பின்புறம் அமைந்துள்ள, விருதுநகர் ஒன்றியத்தைச் சேர்ந்த, தம்பநாயக்கன்பட்டி கிராமப் பஞ்சாயத்து  பரிந்துரைக்கப்பட்டது. தம்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து, அதனுடன் சேர்த்து, 1.எதிலப்பன்பட்டி, 2.காமராஜர்புரம், 3.சேடபட்டி, 4.அம்மாபட்டி மற்றும் 5.துருசுபட்டி@துரைராஜபுரம் (தற்போது யாரும் குடியிருக்கவில்லை) என்று ஆறு கிராமங்களை உள்ளடக்கியது. 667 வீடுகளும், 3461 மக்களும் கொண்டிருப்பதாக அரசுத் தரப்பிலிருந்து பெறப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகப் புள்ளிவிவரம் தெரிவித்தது. இந்தப் புள்ளிவிவரம் எப்பொழுது எடுக்கப்பட்டது என்று தெரியாது. ஆனால் நாங்கள் கேட்டபொழுது, இதைத்தான் அரசிடமிருந்து பெறமுடிந்தது என்று எம்.எல்.ஏ அலுவலகப் பணியாளர்கள் சொல்லிவிட்டார்கள். புள்ளிவிவரம் உண்மையா பொய்யா என்பது முக்கியமல்ல. அது குறிப்பிட்ட ஒரு போக்கைப் புரிந்து கொள்ள உதவினாலே போதும். ஆனால் அதைக்கூட அந்த அரசுப் புள்ளிவிவரத்தால் செய்ய முடியவில்லை.

இத்தனைக்கும் புள்ளிவிவரச் சேகரிப்புக்கு கோடிக்கணக்கில் செலவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவர்களும் பயன்படுத்துவதில்லை, பிறருக்கும் தருவதில்லை. அப்படியென்ன சொல்லமுடியாத ரகசியங்கள் அதில் புதைந்துள்ளனவோ தெரியவில்லை. கேட்டால் ஏதோ ஆப்பிரிக்கா கண்டத்ததிலிருந்து இடமாற்றம் பெற்றுவந்தவர் மாதிரி “இங்கேவந்து  நாலைந்து மாதங்கள் தாம் ஆகின்றது” என்பார்கள். சரியான தகவல் சேகரிப்பு தொகுப்பு முறைகளை உருவாக்கி இருந்தால், ஒருமணி நேரம்கூட ஆகாது ஒரு பஞ்சாயத்து யூனியனைப் புரிந்துகொள்ள. சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல எம்.எல்.ஏ.  /எம்.பி. எல்லோருக்கும் பட்டைநாமம்தான் சாத்தபடுகின்றது என்பதற்கு, அங்கிருந்த அரசுப் புள்ளிவிவரங்கேளே சாட்சி.

2

GPS tracking பொருட்டு முதலில் நாங்கள் சென்ற கிராமம் எதிலப்பன்பட்டி. அந்தக் கிராமத்துக்குச் செல்லும் பாதையும், அக்கிராமமும் ராம்கோ சிமெண்ட் ஆலையின் பின்புறச் சுற்றுச் சுவரையொட்டி அமைந்துள்ளது. ஆலையின் உயர்ந்த புகைபோக்கிகளும், சுற்றுச்சுவரும் நிச்சயமாக அவ்வூராரின் மனபிம்பத்தில், மரபணுக்களில் பதிந்துவிட்டிருக்கும். ஆலைக்கும், அவ்வூருக்குமான தொடர்புகளை அறிந்துகொள்வது அன்றைக்கு எங்கள் நோக்கமாக இல்லாவிட்டாலும், இந்திய கட்டுமானத் துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிய ஒரு ஆலைக்கும், அதன் புறக்கடையில் அமைந்த ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திற்கும் ஆக்கபூர்வமான தொடர்புகள் இல்லாமலிருப்பதைக் கண்டபோது கஷ்டமாக இருந்தது. எத்தனை எத்தனையோ வழிகளில் அறம் வளர்க்கும் ராம்கோ நிறுவனம், தன் காம்பவுண்டு சுவரருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் மீது கரிசனத்தைக் காட்ட மறுத்திருக்காது. அதற்கான வாய்ப்புக்களை உருவாக்க அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது. Corporate Language தெரிந்த திரு.பாண்டியராஜன், அந்த ஆலையின் புகையுனூடே கொஞ்சம் கரிசனத்தையும் இனிமேல் கசியவிட ஆவண செய்யலாம்.

ஐந்து கிராமங்களின் சாலைகளையும், தெருக்களையும் GPS Track எடுத்துமுடிக்க, இருநாட்களில் 12 மணிநேரம் செலவிட்டோம். எங்களைவிட அதிகத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் satellite images ஐப் பயன்படுத்தி இன்னும் குறைவான நேரத்தில் இதைச் செய்திருக்கமுடியும்தான். பங்கேற்பு முறைகளில் Transect Walk என்ற செய்முறை மிக முக்கியமானது. தெருத்தெருவாக நடக்கும் போது கிடைக்கும் ஞானம் ஒப்பற்றது. எங்களுடன் வந்த உள்ளூர்க்காரர்களோடு மட்டும் பேசிக்கொண்டே நடந்தோம். கிராமத் தெருக்களில் நடந்து செல்வது ஞானம் பெறுவதற்கான நல்ல வழி.

கிராமம் என்பது பொதுவான ஒரு சொல்லாடல். வார்த்தை. மனிதர்கள் தோற்றத்திலும், குணத்திலும் வேறுபட்டிருப்பதைப் போன்று கிராமங்களும் வேறுபட்டது என்பது அனுபவம். தெருத்தெருவாக நாங்கள் நடந்தது எங்களின் அனுபவத்தை மேலும் நம்பத்தூண்டியது.

விவசாயத்தை நம்பிய ஜீவனோபாய முறைகள் முற்றிலும் கைவிடப்பட்டு, வேளாண்மை சாராத மாற்று ஜீவனோபாய முறைகளுக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள். இந்த மாற்று ஜீவனோபாய முறைகள் அரசின் மதியூகத்தால் உருவானதல்ல. அரசின் கட்டமைப்பு வசதிகள் மக்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்கமுடியாது. உதாரணமாக சாலைகள், மின்சாரம்  போன்ற கட்டமைப்பு வசதிகளை அரசால் மட்டுமே தரமுடியும். இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி தூக்கம் கலைவதும், எழுந்து நடப்பதும், குதிரைப் பாய்ச்சலில் ஓடுவதும் அந்தந்த சமூகங்களின் (கிராமங்களின்) உள்வலிமையைப் பொறுத்தும், உள்ளொளியைப் பொறுத்தும் அமைகின்றது. அதை அந்த கிராமங்கள் காட்டியது. கிராமத்துச் சாலைகள், மின்சாரம், நிலத்தடிநீர், பள்ளி, போக்குவரத்து போன்ற கட்டமைப்பு வசதிகள் மீது மக்கள் ஓராயிரம் விதமாக தியானிக்கின்றார்கள். அவர்கள் தியானத்திலிருந்து பெறப்படும் ஞானமும் ஓராயிரம் விதமாக வெளிப்படுகின்றது. அதிலெல்லாம் அழகும், அர்த்தமும் மிளிர்கின்றது, அந்த ஞானமே அவர்களின் ஜீவனோபாயம்.

காமராஜர்புரம் என்ற உட்கடை கிராமத்தைப் பற்றி அரசுப் புள்ளிவிவரம் சொன்னதற்கும் நாங்கள் நேரில் பார்த்ததற்கும் எவ்வளவு வித்தியாசம்! மிகச் சமீபகாலத்தில் அங்கே கோடிகோடிகளில் கட்டுமானத்துறையில், நூற்றுக்கணக்கில் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பலவீடுகளின் வடிவமைப்பும், கட்டுமானச் செலவுகளும் எங்களை ஆச்சர்யப்படவைத்தன. கட்டுமானத் துறையில் இம்மாதிரி வெளியிட முதலீடுகளைக் கவர, காமராஜர்புரத்திலோ, அந்தப் பஞ்சாயத்திலோ எந்தத் தலைமையும் திட்டமிட்டு வியூகம் அமைக்கவில்லை. அங்கே கிடைக்கும் நிலத்தடிநீரும், RR நகரில் நடந்து வரும் CBSE பள்ளியும்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது. அங்கே புதிய வீடுகளைக் கட்டியவர்கள் தவறான முறையில் பொருளீட்டி அதைச் செய்தமாதிரி தெரியவில்லை. பழங்களைப் பதப்படுத்த, பினாயீல் தயாரிக்கக்கூட இந்த நாட்டில் வரிந்துகட்டி பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆனால் ஒரு குடும்பத்தின் வாழ்நாள் கனவான, வீடு கட்டுவதைப் பற்றி எந்தவொரு ஆலோசனையும் முறையாகச் சொல்ல ஏற்பாடுகள் நாம் செய்துவைக்கவில்லை. வீடு கட்டும் சாதாரண மக்கள் ஏமாற்றப்படுவதற்கும், அவர்கள் படும் துயரங்களுக்கும் அளவே இல்லை. இலவச வீடுகளைக் கொடுப்பது இருக்கட்டும். இலவசங்களை எதிர்பார்க்காமல் வீடு கட்டுபவருக்கு நாம் என்ன கொடுக்க உத்தேசித்திருக்கின்றோம்? மற்றெல்லா துறைகளிலும், வேளாண்மை, கால்நடை, ஊட்டச்சத்து, ஏன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட விரிவாக்கக் கல்வியும், கவுன்சிலிங்கும் கொடுப்பது நடைமுறை வழக்கமாகிவிட்ட இந்த நாட்டில் சிவில் வொர்க்ஸ்க்கு விரிவாக்கக் கல்வி இல்லாதது மிகப் பெரிய குறையே. வீடு கட்டுவதில் வாஸ்து என்ற ஒன்றைத் தவிர வேறு உருப்படியான கல்விமுறைகள் இல்லைதானே?

சுமாரான சாலைகள், குடிப்பதற்கு ஏற்ற நிலத்தடி நீர், தரமான கல்வி/ மருத்துவ வசதி மின்சாரம் போன்றவை, குறிப்பாக அது இது என்றில்லாமல் ஒரு ஏதுவான சூழ்நிலை (Enabling Environment) அரசு மூலமாகவோ, தனியார் மூலமாகவோ உருவானால், அது மக்களை  நம்பிக்கையுடன் செயல்படத் தூண்டும் என்பதற்கு காமராஜர்புரம் விரிவாக்கமே நல்ல உதாரணம்.

தம்பநாயக்கன்பட்டி என்ற தாய்க் கிராமம். நெருக்கமான சிறுசிறு வீடுகள். அனைத்து ஜாதிக்கும் சொந்தமுடையது என்று கல்வெட்டில் பெருமிதமாக் பதித்துக் கொண்ட இந்துக் கோயில். பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் சர்ச். பள்ளி. சமத்துவத்தைப் பறைசாற்றும் பாங்கு. ஊருக்கான பொது விநியோகக் கடையே காலனியில் அமைந்துள்ளது. சமத்துவ மயானம். மக்கள் தொகை அதிகமுள்ள இந்தக் கிராமம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சமத்துவமான ஒரு வாழ்வியலை உணர வழி காட்டியிருக்குமோ?

பெரிய, பெரிய வீடுகளைக் கொண்ட அம்மாபட்டி என்ற உட்கடை கிராமத்தில் அதிக ஆள் நடமாட்டமில்லை. இளைஞர்களையோ, இளம் பெண்களையோ பார்க்க முடியவில்லை. ஆனால் வீடுகளெல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றது. அந்த ஊரில் மனித நடமாட்டம் அதிகமில்லை. பலர் இடம் பெயர்ந்து விட்டார்கள். ஆனால் வீடுகளை அவர்கள் பராமரிக்கும் பாங்கைப் பார்த்தால், அந்த மண்மீது தங்கள் பிறப்பிடத்தின் மீது அம்மக்கள் வைத்திருக்கும் ஈடுபாடு புலப்படுகின்றது. அந்த ஊரின் செழுமை ஒரு காலத்தில் வேளாண்மையால் வந்திருக்கிறது. ஆனால் இப்போது வேறுவகையில் தக்க வைக்கப்பட்டு வருகின்றது. தாங்கள் பிறந்த மண் மீது, ஊர்மீது தீராக் காதல் கொண்ட அவர்கள் வேறு எங்கோ வாழ்கின்றார்கள். அவர்களிடம் உள்ள அந்த இடம் சார்ந்த பெருமித உணர்வு. அதைத் தூண்டி விட்டால், அது கொழுந்துவிட்டு எரியும். அந்த வெளிச்சம் அப்பகுதிக்கே புது வாய்ப்புகளைத் தரும்

அடுத்து 13 குடும்பங்களே வாழ்ந்த, இன்று யாருமே குடியிருக்காத (uninhabited settlement) துரைராஜபுரம் என்ற துருசுபட்டி. அங்கிருந்த 13 வீடுகளையும் அரசு சென்றடைந்திருப்பதைப் பார்க்கும் போது (மின்சாரம், குடிநீர்)  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. ஏகாந்தப் பெருவெளியில் அமைந்துள்ள எளிமையான ஓட்டுவீடுகள். சுற்றி, ஒரு காலத்தில் வாழ்வளித்து, இன்று கருவேலம் காடாய், தரிசாக மாறிப் போன நிலங்கள். அந்த மண்ணில் ஜீவனிருக்கிறது என்பதைக் காட்டும் முகமாக 150 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கொக்காடி, குருவாடி கிராமங்களிலிருந்து மேய்ச்சலுக்காக ஆடுகளைக் கொண்டு வந்து மாதக்கணக்கில் தங்கியிருக்கும் இடையர் குடும்பங்கள் அமைந்துள்ளன. ஜீவனுள்ள ஏகாந்தப் பெருவெளி. சரியாகத் திட்டமிட்டால் அந்த ஏகாந்தப் பெருவெளியை மையப்படுத்தி அதை ஒரு Eco Village ஆக மாற்றலாம்.

பிரதான சாலைக்கு ஒருபுறம் சேடபட்டி (தம்பநாயக்கன்பட்டி ஊராட்சி), மறுபுறம் கன்னிசேரி புதூர் ஊராட்சி. தீர்க்க தரிசனமற்ற எல்லைப் பிரிப்பு. குடியிருப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத அரசு ஊழியர்களின் அரைவேக்காட்டுத்தனமான ஊராட்சி எல்லைப் பிரிப்புக்கு சேடபட்டி சரியான உதாரணம்.

வீடுகளின் நெருக்கமும் அமைப்பும் எதையோ சொல்லவருகிறது. வீடுகள் நெருக்கமாக அமைந்திருந்தாலும், வீட்டின் உரிமையாளரை அடையாளப்படுத்த மக்கள் தயங்கிய விதம். அதில் அவர்கள் பட்ட சிரமங்கள். அந்த கிராமத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கொஞ்சம் அதிகம்தான். அதைத் தவிர லைன் வீடுகள் என்று சொல்லத்தக்க 10க்கும் மேலான குடியிருப்புகள். 100 குடும்பங்கள் அந்த மாதிரியான வீடுகளில் குடியிருக்கிறார்கள். சில நகரங்கள் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களை கவர்ந்திழுப்பது மாதிரி, fire works வேலைவாய்ப்பு நிறைய ஏழைகளை சேடபட்டியை நோக்கி இழுப்பதைப் பார்க்கமுடிந்தது.

நெசவுத் தொழில் செய்த தேவாங்கச் செட்டியார்கள் அதிகம். அதற்கு அத்தாட்சி ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கதர் குடியிருப்பு லயன் வீடுகள். அவை இப்போதுள்ள தொகுப்பு வீடுகள் மாதிரிதான். ஆனால் அந்த வீடுகள் கட்டப்பட்ட பாங்கைப் பார்த்தால், தொகுப்பு வீடுகள் கட்டப்படுவதில் தென்படும் பொறுப்பின்மை மாதிரியில்லாமல், “இந்த வீடுகளில் மனிதர்கள் வாழப் போகின்றார்கள்” என்ற எண்ணம் வெளிப்படுகிறது. ஆண்டுகள் பலவாகியும் அந்த வீடுகள் உறுதியான கட்டமைப்புடன் இருப்பதைப் பார்க்கும் போது, அரசுத் துறைகள் அக்காலத்தில் நன்முறையில் செயல்பட்டது தெரிகிறது. யார் முயற்சியில் அந்த வீடுகள் அங்கு வந்திருக்கும்?. அதை முன்னின்று கட்டிய அந்தப் புண்ணியவான் யார்? என்றெல்லாம் அறிந்தால், எந்தெந்தத் துறைகளில் அரசு (Policy) ஜெயித்தது-எதில் தோற்றது?- அவ்வூர் மக்களின் அடிப்படை ஜீவனோபாயமான நெசவுத் தொழில் எப்பொழுதிருந்து பலவீனமடைய ஆரம்பித்தது? எப்படி fireworks அவர்களுக்கு மாற்று ஜீவன வழிகளை உருவாக்கியது? ஆகியவை தெரியவரும்.

ஃபயர் ஆபீசை நம்பிய பிழைப்பு. அவ்வூருக்குள் நாங்கள் நடமாடியதே மக்களை பயப்படவைத்தது. காரணம் ஃபயர் வொர்க்ஸ் பற்றிய அரசு கண்ணோட்டம். கெடுபிடிகள். தெருக்கள் போக்குவரத்துக்கு மட்டும் அல்ல. குறிப்பாக, சிமெண்ட் பாவப்பட்ட தெருக்கள் அம்மக்களின் ஜீவனமுறைகளுடன் சம்பந்தப்பட்டது. அகலமான சிமெண்ட் தெருக்கள் இருந்தால் இன்னும் அதிகமான workspace (திரிகளைக் காயவைக்க) அவர்களுக்கு கிடைக்கின்றது. அதிக வருமானமீட்ட முடிகின்றது. இதைத் தனியாகக் கட்டப்பட்ட ஒரு காலனியில் கண்டோம். நல்ல தெருக்கள் நல்ல ஜீவனத்தை/ பிழைப்பை உறுதி செய்கின்றது. அந்த ஊருக்கான நல்ல திட்டங்களில் ஒன்று தெருக்களில்  சிமெண்ட் பாவுவதுதான். சிமெண்ட் தெருவாக இருந்தால் அவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்.

ஊர் விரிவாகிக் கொண்டு வருகின்றது. விரிவாக்கப் பகுதிகளில் சாலை மற்றும் சில வசதிகளைச் செய்துகொடுத்தால், மக்கள் வீடுகளில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். சேமிப்புப் பழக்கம் உயரும். அந்த ஊரில் வாடகை வீடுகளுக்கான தேவை (rental housing) / மார்க்கெட் உள்ளது. சிக்கனமான, சுலபத் தவனைகளில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தையோ, அதற்கான வங்கிக் கடனுதவியோ பெற்றுத் தந்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தரமான வீடுகளில் வசிக்க அவர்களுக்குத் தகுதியுள்ளது. இலவச வீடுகள், தொகுப்பு வீடுகள், பசுமைக் குடியிருப்பு என்ற பெயரில் அவர்களைக் காத்திருக்க வைக்காமல், இப்பொழுது அவர்கள் செலுத்தும் வாடகையான 400 லிருந்து 600 ரூபாய் மாதத்தவணை கட்டத்தோதாக நீண்டகால வீட்டுக் கடனுதவி செய்தாலே போதும்.

3

கிராமங்கள் மாறிவருகிறது என்று சொல்லாதே, மாறிவிட்டன என்று சொல் என்று முகத்திலடித்தாற்போல் சொன்னது இந்தக் களப்பணியின் மூலம் பெற்ற அனுபவம். விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்டு, வேளாண்மை சாராத (Non-Farm Activities) ஜீவனோபாய முறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு காலத்தில், ஒரு வட்டாரத்தில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்தான் அவ்வட்டாரக் கலாசாரத்தை தீர்மானித்தது. நெல், பருத்தி, கடலை, மிளகாய், காய்கறி விவசாயம், கால்நடைவளர்ப்பு என்று ஒவ்வொரு தொழில்முறையும் தனக்குரிய கலாசாரத்தை வடிவமைத்தது. ஆனால் நாங்கள் பார்த்த கிராமங்களில் தீக்குச்சி ஆலைகளும் ஃபயர் வொர்க்ஸும் தங்களுக்குரிய கலாசாரத்தை வடிவமைத்துள்ளன. இதைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் அரசு அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ இருப்பதாகத் தெரியவில்லை. விருதுநகர் எம்.எல்.ஏ. திரு. பாண்டியராஜன் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்.

கிராமத்திலே வாழ்ந்தாலும், அடிக்கடி கிராமங்களுக்குச் சென்றாலும், நேற்று நாம் பார்த்த கிராமங்களை இன்று பார்க்கமுடியவில்லை. விவசாயம் பிரதானமாக இருந்த கடந்த காலத்தில் கிராமங்களில், கிராமங்களிடையே பொதுத்தன்மையைக் காணமுடிந்தது. வேளாண்மை தவிர்த்த பிற பிழைப்பு முறைகள், விதவிதமான சமூகப் பொருளாதாரக் கலாசார உறவுகளை உருவாக்குகிறது. மிகவும் சிக்கலான மாற்றங்கள் கிராமங்களில் ஏற்பட்டு வருகின்றன. அவற்றைப் புரிந்து கொள்ளவும், சிக்கலின்றி சமூக மாற்றுருவாக்கத்திற்கு கையாளவும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. நாம் பலவற்றை எளிமைப்படுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். இலவசங்கள் என்ற ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, அதை மக்களிடம் சேர்பிக்க, சரியான முகவரிகளைத் தேடும் “கொரியர் பையன்கள்” மாதிரி அரசுத் துறைகளும் அரசியல்வாதிகளும் மாறிவிட்டார்கள்.

4

எங்கள் செயல்முறையின் முதல்நிலையான சாலைகளையும் தெருக்களையும் GPS Tracking செய்யும் பணிதான் முடிவடைந்துள்ளது. தெருத் தெருவாக நடக்கும்போது (Transect Walk) ஞானம் பிறக்குமென்பது பங்கேற்பு  முறையின் நம்பிக்கை. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தனக்கு எவ்வளவு ஒதுக்கிக்கொள்ளலாம் என்றென்னாத சட்டமன்ற உறுப்பினர் நம் பின்னால் இருக்கிறார், தன்னுடைய உலகளாவிய பார்வையாலும், தேசியப் பார்வையாலும் வாய்ப்புகளைக் கண்டறிந்து தான் தொடங்கிய தொழிலில் வெற்றி பெற்ற பாண்டியராஜன் என்ற ஒரு தொழில் முனைவரின் ஆளுமை நம் பின்னால் இருக்கின்றது என்ற எண்ணமே எங்களை நம்பிக்கையுடன் இப்பணியில் ஈடுபட வைத்தது.

இந்தப் பணியில் இன்னும் நாங்கள் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளது. அதைச் செய்து முடிக்கும் போது, ஒரு பாராளுமன்றத் தொகுதியையோ, சட்டமன்றத் தொகுதியையோ எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கான ஒரு முன்மாதிரி உருவாக்கப்பட்டிருக்கும். ஒருவரிடமுள்ள பணபலத்தை வைத்து, அவரால் தேர்தலில் எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை வைத்து வேட்பாளர் தேர்வு நடைபெறும் முறையை, சற்றே மாற்றி, பணம் மட்டுமல்ல, தொகுதியைப் பற்றி அவருக்கு என்ன தெரியும், அத் தொகுதியிலுள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைச் சரியாகக் கையாளும் பட்சத்தில், கட்சியை, அதன் செல்வாக்கை அத்தொகுதியில் எப்படியெல்லாம் ஸ்திரப்படுத்தலாம் என்பதில் தெளிவுள்ளவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்கின்ற நிலை உருவாகவேண்டும். வேட்பாளர் தேர்வுக்கான நேர்முகக் காணலில், போதுமான ஆதாரங்களுடன் தொகுதி பற்றிய விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது, தகவல்களை தொகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்போதைக்கு நம்முடைய அரசியல் கலாசாரத்தில் இது பகல் கனவாகத் தோன்றினாலும், இதை ஒருசில அரசியல் இயக்கங்களாவது முன்னெடுப்பார்கள். அதற்கான முன்மாதிரியை விருதுநகர் தொகுதி உருவாக்கும். அதற்கு திரு. பாண்டியராஜன் அவர்கள் அடித்தளமிட்டிருக்கின்றார்.

5

தகுதியற்றவர்களோடு கூட்டு சேர்ந்தமைக்காக வேதனைப்படுவதாக, தே.மு.தி.க. கூட்டணியைப் பற்றி முதல்வர் கருத்து தெரிவித்த நாள் அது. திரு. பாண்டியராஜனின் விருதுநகர் தொகுதியில் ஒரு தன்னார்வக் குழு கையில் GPS கருவியை வைத்துக்கொண்டு காலை பத்து மணியிலிருந்து சூரியன் மறையும் வரை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. தனது தொகுதியையும், தனது மக்களையும், அவர்களது வாழ்வையும் சரியான கோணத்தில், அறிவியல்பூர்வமாக அறிந்து கொள்ள விரும்பிய அவருடைய ஆசைக்கு வடிவம் கொடுக்க, அவர் மீது அபிமானம் கொண்ட என்னைப் போன்ற தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியிருந்தோம்.

நமது சட்டமன்றம் சந்தேகத்திற்கிடமில்லாமல் மாண்புமிக்கதுதான். அதிலுள்ள உறுப்பினர்களும் கூட மாண்புமிக்கவர்கள்தாம். அந்த உறுப்பினர்களில் பலர் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். கட்சி அரசியலோடு சம்பந்தப்படாத என்னை அழைத்து அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்கமுடியாது.  ’ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவன் என்ற முறையில் எனக்கு சில வரையறைகள் உண்டு. அதையும் தாண்டி என்தொகுதி மக்கள் என்னையும், நான் அவர்களையும் சென்றடைய வேண்டும். I need a methodology to achieve this!’ இந்த உத்வேகத்தை வேறு யாரிடமாவது நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

திரு. பாண்டியராஜன் தமிழகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஜனரஞ்சகமான அரசியல்வாதியல்ல. ஆனால் தகுதியானவர்களைக் கண்டுபிடித்து தன் பக்கம் வைத்துக் கொள்வதில்தான் ஒரு தலைவனின் தகுதி அறியப்படும். அந்த வகையில் எதிர்க் கட்சித் தலைவரான திரு. விஜயகாந்த் அவர்கள், அறிவியல்பூர்வமான அணுகுமுறையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட திரு. பாண்டியராஜன் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்திருப்பதால், மற்றெந்த தலைவரைவிடவும் மிக அதிகத் தகுதி வாய்ந்தவராகவே உயர்ந்து நிற்கிறார்.

0

பேரா. எஸ். ரெங்கசாமி