தீர்ப்பு அரசியல்

பகுதி ஒன்று

கடந்த வாரங்களில், (தமிழ்ச் சூழலுடன் தொடர்பில்லாத) எனக்குத் தெரிந்த சில இடதுசாரிச் சிந்தனைச் சாய்வுள்ள நண்பர்களுடன் உரையாட நேரும்போதெல்லாம், ‘அயோத்தி தீர்ப்பு’ குறித்து அவர்கள் கொதிப்புடன் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கொதிப்புக்கான நியாயங்களை அடுக்குவதும், அந்த நியாயங்களைப் புரிந்துகொள்வதும் கடினமல்ல; என்றாலும் என்னால் அவர்களுடன் உணர்வுபூர்வமாக இந்தக் கொதிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

கடந்த 18 ஆண்டுகளாக, பணி நிமித்தம் தமிழ்ச் சூழலுக்கு வெளியே வசிக்கும் இடதுசாரி நண்பர்களுடன் அரசியல் பேசுவதும், அவர்களுடன் கருத்து மற்றும் உணர்வுரீதியாகப் பகிர்ந்துகொள்வதையும் ஒரு பழக்க தோஷமாகக் கொண்டிருப்பதால், நான் இவ்வாறு சொல்வதற்கு ஓர் உள்ளர்த்தம் ஏற்படுகிறது.

இரண்டு வருடங்கள் முன்பு, மாதக்கணக்கில் தினமும் செய்திகளுடன் தொடர்ந்த இலங்கைப் போரின் இன அழிப்பின்போது, இவர்கள் எல்லோரும் ரொம்ப சாதாரணமாக, அப்படி ஒன்று நடந்துகொண்டிருப்பது குறித்த பிரக்ஞைகூட இல்லாமல் இருந்ததை, மிகுந்த ஆத்திரத்துடன் அன்றாடம் கவனித்து வந்திருக்கிறேன். நடந்துகொண்டிருந்தவை குறித்து அவர்கள் முற்றிலும் அறியாமல் இல்லை; நேர்ப்பேச்சிலும், மின்னஞ்சல்களிலும் நானே (சில குதர்க்கக் கேள்விகள் உட்பட) சில இடையீடுகள் செய்து, பின் பயனில்லை என்று நிறுத்தியிருக்கிறேன்.

பல்லாயிரம் அப்பாவி மக்கள் அன்றாடப் பயங்கரத்தின் இடையே கொல்லப்பட்ட கொடூரம் இங்கிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் நடந்தபோது இல்லாத கொதிப்பை, ஒரு நிலரீதியான ஆக்கிரமிப்பை, மூன்றில் இரண்டு பங்கு அநியாயத்துடன் அங்கீகரிப்பதாகக் கருதக்கூடிய ஒரு தீர்ப்புக்கு, அதனால் பாதிக்கப்பட்டவர்களைவிட அதிகமாகக் கொதிநிலைக்குச் செல்வதைப் பார்த்து, சிரிக்கலாமா கூடாதா என்கிற அரசியல் குழப்பம் என்னுள் நிலவுகிறது. (தீர்ப்பு குறித்து தமிழ்ச் சூழலுக்குள் ஆத்திரமடைபவர்களைப் பற்றி இங்கே பேசவில்லை.)

நான் அவர்கள் நடிப்பதாகவோ, மிகைவினை செய்வதாகவோ நினைக்கவில்லை. ஆனால் எனக்கு இந்தக் கொதிப்பெல்லாம் ஒருவகை அரசியல் obsessionஆக மட்டும்தான் தெரிகிறது. முஸ்லீம் சமுதாயத்தின் நலன், உரிமை என்கிற அக்கறைகளினால் உந்தப்படுவதாக இல்லாமல், இவர்கள் தர்க்கப்படுத்தி, பின் நம்பிக்கைகள் ஆக்கிக்கொண்ட அரசியல் நிலைப்பாடுகளினால் உந்தப்படுவதாகவே இதைக் கருத முடிகிறது.

தனிப்பட்ட முறையில் அயோத்தி தீர்ப்பு வருவது குறித்துப் பெரிய அக்கறைகள் எதுவும் இல்லாத நிலையில்தான் நான் இருந்தேன். இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய படுகொலைகளும் இன அழிப்பும் ஈழத்தில் நடந்தேறியபோது, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதான ஒரு நினைவை, தமிழரல்லாத அனைத்திந்திய மனம் உருவாக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராக, தமிழ் நாட்டைப் பெரிதாக பாதிக்கப் போகாத ஒரு பிரச்னை குறித்து விவாதிப்பதைத் தவிர்ப்பதும் ஓர் அரசியல் என்று கருதி வருகிறேன். குறைந்தபட்சம் எல்லா விவாதங்களிலும், ஈழத்து இன அழிப்பால் தீவிரமான மனப்பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள் இவ்வாறு சிலமுறையாவது சொல்லவாவது வேண்டும் என்று நினைக்கிறேன். அயோத்தி போன்ற ஒரு பிரச்னை வெடித்து, வட இந்தியாவில் எல்லோரும் ‘அடித்துக் கொள்ளட்டும்’ என்று யாரேனும் கருத்து சொன்னால்கூட, அதை வக்கிரம் என்று நான் சொல்ல மாட்டேன். ஈழத்தில் நடந்தவை குறித்து மௌனம் சாதிப்பதும், அதை மறுப்பதும், பொய்யான ஏமாற்று விஷயங்களைப் பேசுவதும் பேசியதும்தான் வக்கிரமே தவிர, ஒரு கோபத்தைக் குறிப்பதற்கு இவ்வாறு சொல்ல மட்டும் செய்வதில் எந்த வக்கிரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

2000-த்தின் தொடக்கத்தில், அலகாபாதில் ஒன்றரை வருடம் வாழ்ந்தபோது, இந்துத்துவத்தின் தீவிர முகத்தைப் பார்த்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து வேறுபட்ட பார்ப்பனியத்தின்/சாதியத்தின் தீவிர முகத்தை எதிர்கொண்டிருக்கிறேன். சற்றும் எதிர்பாராத ஒரு நாளில் ஷியா-சுன்னி கலவரம் மூண்டு, அதன் வெறித்தனத்தையும் உணர்ந்திருக்கிறேன். இந்தப் பிரச்னைகள் சார்ந்த நம் அரசியல் பார்வையினால், நிரடலான உணர்வை அனுபவிக்காமல் அங்கே இருக்க முடியாது.

ஆனால் இத்தனையும்மீறி நாம் நேசிக்கக் கூடிய ஒரு வெகுமனம் அங்குள்ள மக்களிடம் இருப்பதை உணரமுடியும். இத்தகைய முரண்பாட்டை இந்தியச் சமுதாயத்தில் பல சந்தர்ப்பங்களில் காணலாம். தேவர் சாதியைச் சேர்ந்த மூதாட்டியின் ஒரு வெறித்தனமான பேச்சுக்கு எந்த நியாயத்தையும் வழங்கமுடியாது; அதே நேரம் அவரிடம் இருக்கும் ஒரு புனிதமான வெகுமனத்தை வெறுக்க முடியாது என்கிற பக்குவத்தை நான் அடைந்துவிட்டேன். (இதை பார்ப்பன சாதியைச் சேர்ந்த மூதாட்டியை வைத்தும்கூட உதாரணிக்கலாம்.)

இந்த நிலையில், அயோத்தி பிரச்னையின் காரணமாக ‘அவர்கள் அடித்துக்கொண்டு சாகவேண்டும்’ என்று எனக்கு ஒரு நினைப்போ, நடக்காததில் நிராசையோ உண்மையில்  இருக்கமுடியாது; இருந்ததில்லை. தவிர, தொடர்ந்து ஒரு அரசியல் நிலைப்பாடாக மட்டும், குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிப் பேசாமலும் சிந்திக்காமலும் ஒரு வீம்பைத் தொடர்வதும் சாத்தியமில்லை. குறிப்பிட்ட பிரச்னை குறித்து சிந்திப்பதும், கருத்து சொல்வதும், அந்தப் பிரச்னையின் தீவிரம் மற்றும் அக்கறை என்பதற்கு நாம் கற்பிக்கும் காரணங்களைவிட, புற உலகம் தொடர்ந்து நம்மைச் சிந்திக்கவும், கருத்துகளை (நேராகவோ, உருமாற்றியோ) பிரதிபலிக்க வைப்பதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்த வகையிலும் அயோத்தி குறித்து எனக்கான கருத்துகளை வந்தடையாமல் இருக்கவியலாது. அவ்வாறு வந்தடைந்த கருத்துகளை மேல்பரிசீலனை கருதி இங்கே பதிவு செய்கிறேன். என் கருத்துகள் பரிசீலனைக்குரியவை, மாறக்கூடியவை.

0

அயோத்தி தீர்ப்பு இந்துத்துவத்துக்குச் சாதகமான தீர்ப்பா என்று ஒரு கேள்வியாகக் கேட்கக்கூட எந்த நியாயமும் இல்லை. எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்துத்துவத்துக்கு ஆதரவான, இதுவரை இந்துத்துவவாதிகள் முன்வைத்து வந்த வாதங்களை அங்கீகரிக்கும் தீர்ப்புதான். இதன் நடைமுறை ஆதாரமாக இந்துத்துவவாதிகள் தெளிவாக, தீர்ப்பு சார்ந்த தங்களின் சந்தோஷத்தையும் நிறைவையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமையாகக் கோரியதில் முழு வெற்றியில்லை எனினும், எதிர்பார்த்திருந்ததற்கு அதிகமாகப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

முஸ்லீம்கள், தீர்ப்பு சார்ந்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், பெரிய கோபமோ ஆத்திரமோ அவர்களிடம் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. தீர்ப்பு வெளிவந்து சில மணி நேரங்களுக்கு, ஏதோ ஒரு முஸ்லீம் பிரதிநிதியின் கருத்தைக்கூடத் தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்து நான் அறியேன். தொலைக்காட்சிகள் தொடர்புகொள்ள முயன்றும், யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லையா, அல்லது யாரேனும் ஒரு முஸ்லிமின் கருத்தையாவது உடனடியாகப் பதிவு செய்வது அவசியம் என்று ஊடகங்கள் நினைக்கவில்லையா என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

ஆனால் பொதுவாக இந்தத் தீர்ப்பை ஊடகங்கள் கொண்டாடியதிலும், ஒரு சமரசத் தீர்ப்பாகக் கருத்து பிம்பத்தை உருவாக்கச் செய்த பிரயத்தனத்திலிருந்தும், இதை ஒரு நினைவுடன் கூடிய பாரபட்சமாகத்தான் கருத முடிகிறது.

என்றாலும் இந்தத் தீர்ப்பை உடனடியாக எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவியதாகக் கருதமுடியும் . தங்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வந்து, அதன் மூலமாக எதிர்கொள்ளவேண்டிய மேற்படி பிரச்னைகள் குறித்த பயத்தில் இருந்ததாலோ, அல்லது முற்றிலும் எதிர்மறையாக வரும் என்று எதிர்பார்த்ததாலோ, இப்படி ஒரு எதிர்பாராத (மூன்றில்) ரெண்டும் கெட்டான் தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு உடனடித் தெளிவின்மை இருந்ததாக ஊகிக்க முடிகிறது. ஓரிரு நாட்கள் கழித்தே அதிருப்தியை ஊடகங்களில் தெரிவிக்க முடிந்தது.

இன்னமும்கூட வட இந்திய மைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில், முஸ்லிம்களின் அதிருப்தியை நான் காணவில்லை; எல்லோருக்கும் நிறைவான தீர்ப்பு என்கிற பிரசாரம் மட்டுமே கேட்கிறது. (அவுட்லுக்கில் வந்தது மற்றும் இணையத்தில் வாசித்த சில கட்டுரைகள் தவிர.) தமிழ் சேனல்களிலும் விளிம்பு நிலையில் இருப்பது போன்றிருக்கும், ‘மக்கள்’, ‘இமயம்’, ‘வின்’ டீவிக்களில்தான் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைப்  பதிவு செய்ததைக் காணமுடிந்தது. அதே நேரம் பல முஸ்லிம்கள் இந்தத் தீர்ப்பை அப்படியே ஏற்று, வேறு பிரச்னைகளை கவனிக்க விரும்பியதாகச் சொன்னதையும் – குறிப்பாக அயோத்திவாழ் முஸ்லிம்கள் சிலரும் ஷியா அமைப்புகளும் சொன்னதையும், சிலர் இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான வாய்ப்பாக வர்ணித்ததையும் நான் மறந்துவிட்டுப் பேச முடியாது.

ஆனால் முஸ்லிம்கள் தீர்ப்பில் அதிருப்தி கொள்வதும், மேல் முறையீடு செய்யவேண்டும் என்பதும் இயல்பான எதிர்வினையாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, வன்முறை கலந்த பிரச்னைகள் எதுவும் வெடிக்காததில் பெருமூச்சு விட்டு, இதை இப்படியே ஏற்கவேண்டும் என்று சில முஸ்லீம்கள் சொல்வதும் இயல்பாக உள்ளன.

இதற்கு மாறாக, வழக்கம்போல இடதுசாரிகளும் பெரியாரிஸ்டுகளும் முஸ்லிம்களுக்குகூட இல்லாத கோபத்துடனும் ஆத்திரத்துடனும் எதிர்வினை செய்கின்றனர். இது விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த உளவியலும் புரிந்துகொள்ளக்கூடியதே. அதைப் புரிந்துகொள்வது அல்லது விமரிசிப்பதைவிட, பிரச்னையின் தீர்வு என்று ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தோமானால் அதற்கு என்ன வகையில் இந்த எதிர்வினைகள் உதவ முடியும் என்று பார்க்கவேண்டியதே முக்கியம் என்று நினைக்கிறேன். அது குறித்துப் பின்பாதியில் வருகிறேன்.

இந்த தீர்ப்பு நியாயமா என்று, நமக்கான நியாயங்களை வைத்து, ஆய்ந்து உறுதியான முடிவுக்கு வர, தீர்ப்பின் 1,000 பக்கங்களையும் படிக்க வேண்டும். அந்த அளவுக்குக் கறார்த்தனம் கொண்ட மிக நிச்சயமான முடிவு தேவை என்று எனக்கு தோன்றாததால், சாராம்சமாக அறிந்ததையே எடுத்துக்கொள்கிறேன். அப்படி நோக்குகையில் இந்துத்துவச் சார்பு அரசியல் உடையவர்களைத்தவிர, மற்ற எல்லோருக்குமே இந்தத் தீர்ப்பு ஏதோ ஒருவகையில் நியாயமற்ற தீர்ப்பாகவே தோன்றமுடியும் என்றே நினைக்கிறேன். இந்த நியாயமற்ற தன்மை ‘அயோக்கியத்தனம்’ என்று ஆத்திரப்படுவதிலிருந்து, நிதானமாக விமர்சனம் செய்வதுவரை அவரவர் அரசியல்/அற/அறிவு நிலைப்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடும். இந்தத் தீர்ப்பு குறித்த விமரிசனங்களைப் பலர் முன்வைத்துவிட்ட நிலையில், என் பார்வையில் தோன்றுவதைச் சுருக்கமாக இங்கே தொகுக்கிறேன்.

-நாளை வரும்.

மனுநீதியின் வெற்றி

பாபர் மசூதி - இடிக்கப்படுவதற்கு முன்

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவதற்கு காப்மேயர் வழங்கியதைக் காட்டிலும் சுலபமான ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. புதிதாக ஒன்றுமில்லை.  தமிழ் சினிமா லாஜிக்தான். கெடுத்தவனுக்கே பெண்.  இடித்தவனுக்கே கோயில்.

ஐந்நூறு ஆண்டு கால மசூதியை இடித்து, உள்ளே ராமர் சிலையை கொண்டுவந்து வைத்த இந்து தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல.  எதை இடித்தார்களோ, அதை அவர்களுக்கே சட்டப்படி அளித்திருக்கிறது அலகாபாத் நீதிமன்றம்.  இது வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல என்று அத்வானி அண்ட் கோ கள்ளச்சிரிப்பு சிரிக்கும்போதே தெரிந்துவிடுகிறது.  இது அநீதியின் சிரிப்பு.  மனு தர்மத்தின் சிரிப்பு.  சோ கால்ட் செக்யூலரிசத்தின் சிரிப்பு.

நீதிபதிகள், தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்காட் உல்லா கான் மூவரும் ஆளுக்கொரு தீர்ப்பு வழங்கினாலும், சில பொதுவான அம்சங்களில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.   முதல் முக்கியமான விஷயம், சர்ச்சைக்குரிய இடத்தில், இந்துக்களுக்குப் பங்கு உண்டு என்பது.  எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?  1949ம் ஆண்டு ராமர் சிலையை எங்கே கொண்டு வந்து வைத்தார்களோ, மிகச் சரியாக அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கின்றது. இதற்கு என்ன ஆதாரம் என்றால் இந்துக்களின் புனித நம்பிக்கை என்று பதிலளிக்கிறது நீதிமன்றம்.  இந்துக்கள் என்றால் யார்?  அவர்கள் நம்பிக்கை எப்படி அளவிடப்பட்டது?  என்னென்ன காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டன?  கருத்து கணிப்புகள் ஏதேனும் நடத்தப்பட்டதா?

எனில், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அளவிடப்பட்டதா? ராமர் கோயில் மீது இந்துக்களுக்கு இருந்த நம்பிக்கைக்கு எந்த விதத்தில் குறைந்தது மசூதி மீது இஸ்லாமியர்கள் கொண்டிருந்த நம்பிக்கை?  இரண்டையும் எப்படி ஒப்பிட்டுப் பார்த்து தீர்ப்பு எழுதினார்கள்?

இப்படித்தான். இந்துக்களின் நம்பிக்கை என்றால் டிசம்பர் 1992ல் மசூதியை இடித்த கர சேவகர்களின் நம்பிக்கை. அவர்களை இயக்கிய விஹெச்பி, பிஜேபியின் நம்பிக்கை. தலைமை தாங்கிய அத்வானியின் நம்பிக்கை.  இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்றால் சிறுபான்மையினரின் நம்பிக்கை.  இந்துக்களின் நம்பிக்கையோடு ஒப்பிடுவதற்கு அருகதையற்ற இரண்டாம் தர குடிமக்களின் நம்பிக்கை. எனவே, வலியது மெலியதை வீழ்த்தி வென்றிவிட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இந்துக்களும் இஸ்லாமியர்களும் 2.77 ஏக்கர் அயோகத்தி நிலத்தில் வழிபாடு செய்ததற்கான தெளிவான ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.   1949ல் இந்து தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக மசூதிக்குள் நுழைந்து ராமர் சிலையை நிறுவினர்.  அதற்குப் பிறகு, மசூதி பூட்டப்பட்டு, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால், 1986ல் மசூதியின் கதவு இந்துக்களுக்காக மட்டும் திறந்துவிடப்பட்டது.  இப்போதைய தீர்ப்பின்படி 2.77 ஏக்கர் நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  ஒரு பங்கு இந்துக்களுக்கு (சாமியார்கள் அடங்கிய நிர்மோகி அகாரா என்னும் குழு), ஒரு பங்கு இஸ்லாமியர்களுக்கு (வக்ஃப் சன்னி மத்தியக் குழு), இன்னொரு பங்கு இந்துக்களுக்கு (ராமர் சிலை இருந்த இடத்துக்குச் சொந்தக்காரர் என்று சொல்லப்படும் ராம் லாலா விராஜ்மான் குழுவுக்கு).

இந்தத் தீர்ப்பு தர்க்க நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்கிறார் வரலாற்று ஆய்வாளரான இர்ஃபான் ஹபீப்.  ‘1949ல் சட்டவிரோதமான முறையில் இந்துக்கள் ராமர் சிலையைக் கொண்டு வந்து வைத்ததை இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்கிறது.   தீர்ப்பின் பல இடங்களில் இந்த 1949ம் ஆண்டு சம்பவம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.  ஆனால், 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது பற்றி தீர்ப்பு மௌனம் காக்கிறது.  இதன் மூலம், மசூதி இடிப்பு அப்படியொன்றும் பெரிய விஷயம் அல்ல என்பதைதான் இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது!’ என்கிறார் இர்ஃபான் ஹபீப். (‘Historical Evidence ignored, says historians’, The Hindu, October 1, 2010).

இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் (கான் தவிர்த்து இருவரும்), ராமர் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பாபர் மசூதி கட்டப்பட்டது தொடர்பான வரலாற்று ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள் என்பது பல வரலாற்று ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று குறிப்புகள் தெளிவில்லாமல் இருக்கின்றவாம்.  ஆனால், ராமர் பிறந்த தேதி, நேரம், இடம் அனைத்தும் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

வரலாற்று ஆவணங்களையும், ஆதாரங்களையும் ஆராயாமல், இறை நம்பிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்கிறார், டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர், டி.என். ஜா.  ‘நம்பிக்கைதான் அடிப்படை என்றால், இது இறையியல் தொடர்பான பிரச்னை.  தொல்லியலுக்கு இங்கே வேலையில்லை.  இறையியல் ஆதாரங்களைக் கொண்டுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதவேண்டுமா?’ என்று கேள்வி எழுப்புகிறார் ஜா. (ஆதாரம், மேற்கூறிய கட்டுரை).

‘2003ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய அகழ்வாராய்ச்சி, பாபர் மசூதிக்குக் கீழே, இந்து மதக் கோயில் இருந்ததற்கான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இருப்பதைக் கண்டறிந்து தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.’  இந்த வாதத்தை தொல்லியல் அறிஞர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.  ‘ஏ.எஸ்.ஐயின் ஆய்வறிக்கை வெளிவந்தபோதே அதிலுள்ள பல குறைகளை தாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.  அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை அல்ல இது.’

சுப்ரியா வர்மா, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.  ஏ.எஸ்.ஐ நடத்திய ஆய்வில் பங்கேற்றவர். ‘குறிப்பிட்ட அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது’என்கிறார் இவர்.  அகர்வால், ஷர்மா இருவரும் ஏ.எஸ்,ஐ அளித்த ஆதாரங்களைக் குறிப்பிடவேயில்லை என்பதையும் சுப்ரியா சுட்டிக்காட்டுகிறார்.  இந்துக் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியை கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி கான் குறிப்பிட்டிருப்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் ஏ.எஸ்.ஐ யின் அறிக்கையும்கூட, சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறதே தவிர, இந்துக்கோயிலை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிறுவவில்லை. சிதிலமடைந்த கோயிலை மட்டுமல்ல, விலங்குகளின் எலும்புளைக்கூடத்தான் ஏ.எஸ்.ஐ சர்ச்சைக்குரிய இடத்தில் கண்டறிந்திருக்கிறது.  ராமர் கோயிலில், எலும்புகளுக்கு என்ன வேலை?

இடிக்கப்பட்டது மசூதியே அல்ல, அது ஒரு கும்மட்டம் மட்டுமே என்று வக்கணையாக தர்க்கம் செய்பவர்கள் இன்னொரு உண்மையையும் மறந்துவிடுகிறார்கள்,  அகழ்வாராய்ச்சியில், விலங்குகளின் எலும்புகளோடு இஸ்லாமியர்கள் பயன்படுத்தும்  மண் பாண்டங்களும் சடலங்களும்கூட அல்லவா கிடைத்தன?

இந்தியா போன்ற ஒரு நாட்டில், எங்கே தோண்டினாலும், சிதிலமடைந்த கோயில்களும் தேவாலயங்களும் மசூதிகளும் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதே உண்மை.  வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் வெவ்வோறு காலகட்டத்தில் பல மோதல்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும்கூட நிறையவே காணக்கிடைக்கும். அந்த வகையில், அனைத்து வழிபாட்டு இடங்களும் சர்ச்சைக்குரியதே.  அந்த வகையில், அயோத்தி உள்பட அனைத்து வழிபாட்டு இடங்களிலும் ரத்தத்தின் சுவடுகள் உள்ளன.

மொத்தத்தில், வரலாற்று ஆதாரமும் இல்லை, தொல்லியல் ஆதாரமும் இல்லை. இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது.  அந்த வகையில், இது மனுநீதியின் வெற்றி என்று மட்டுமே சொல்லமுடியும்.

மசூதியை இடித்து இனிப்பு பகிர்ந்து கொண்டாடியதைப் போலவே இதையும் இனிப்பு வழங்கி இந்து தீவிரவாதிகள் கொண்டாடிக்கொள்ளலாம்.   மறைந்து நின்று வாலியைக் கொன்றதன் மூலம், நீதியை நிலைநாட்டிய ராமர், 1949ல் அயோத்தியில் பிறந்து, அலகாபாத் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி, மீண்டும் நீதியை நிலைநாட்டியிருக்கிறார். காந்தி கனவு கண்ட ராம ராஜ்ஜியம் இதோ, மலர்ந்துவிட்டது.

அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து வக்ஃப் சன்னி மத்தியக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறது.  அங்கேயும் நிச்சயம்  ராமர் தோன்றுவார்.

இந்துக்கள் 2 – முஸ்லிம்கள் 1

ஏதோ ஹாக்கி, கால்பந்து ஸ்கோர் போல உனக்கு 2, அவனுக்கு 1 என்ற கோல் கணக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்ச் அளித்ததுபோலத் தோன்றும்.

ராமஜன்மபூமி வழக்கில் வியாழன் அன்று தீர்ப்பு வெளியானது. உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு நிறுத்திவைத்து, நாடெங்கும் அசம்பாவிதம் நடைபெறுமோ என்று பலரும் பயந்து நடுங்கி, பின் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது. காலத்தின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, நாடெங்கிலும் மக்கள் பொறுமையாக கம்ப்யூட்டர்களில் தீர்ப்பைப் படித்தார்கள். ஆனால் நீதிமன்ற வாசலிலோ வக்கீல்கள் ஒருவர் தலைமேல் ஒருவர் ஏறிக்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி, 1992-ன் கரசேவகர்களை நினைவுபடுத்தினார்கள்.

மொத்தம் மூன்று நீதிபதிகள். தீர்ப்பைப் போலவே, அங்கும் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்கள், ஒரு பங்கு முஸ்லிம். :- சிப்கத்துல்லா கான், சுதீர் அகர்வால், வெள்ளிக்கிழமையுடன் ஓய்வுபெறும் தரம் வீர் சர்மா. மூவரும் ஆளுக்கு ஒரு தீர்ப்பாக எழுதித் தள்ளினார்கள். பின்னிணைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்தால், தீர்ப்பு மொத்தம் 8,189 பக்கம் வருகிறது.

இந்தத் தீர்ப்பின் சில அம்சங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்:

1. மூன்று நீதிபதிகளுமே கிட்டத்தட்ட ஒரு மனதாகத் தீர்மானித்திருப்பது, இந்த இடம் முஸ்லிம்கள், இந்துக்கள் என இருவருக்குமே சொந்தம். மூவரும் ஒட்டுமொத்தமாக (ஆனால் தனித்தனியாக) முடிவெடுத்திருப்பது, மொத்த நிலத்தில் 2/3 பகுதி இந்துக்களுக்கு, மூன்றாவது பகுதி முஸ்லிம்களுக்கு. மூவரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக முடிவெடுத்திருப்பது, இப்போது ராம்லல்லா சிலைகள் வைக்கப்ப்ட்டிருக்கும், 1992-ல் இடிக்கப்பட்ட கும்மட்டம் இருந்த இடம் இந்துக்களுக்குப் போய்ச்சேரவேண்டும் என்பது.

மேற்குறிப்பிட்டபடி மூவரும் ஒரேமாதிரியான முடிவை நோக்கி வந்தாலும் மூவரது வழிமுறைகளிலும் பல மாற்றங்கள் உள்ளன.

2. 1992-ல் உடைக்கப்பட்ட இடம், ஒரு மசூதிதான் என்கிறார் கான். ஆனால் அது மசூதியே அல்ல என்கின்றனர் அகர்வாலும் சர்மாவும். சர்மா எண்ணற்ற இஸ்லாமிய ஹதீஸ்களையும் புத்தகங்களையும் துணைக்கு அழைத்துவந்து அந்தக் கட்டடம் ஏன் ஒரு மசூதியாக இருக்கவே முடியாது என்று அடுக்குகிறார்.

3. மசூதியோ இல்லையோ, அந்த இடத்தில் கட்டப்பட்ட ஒரு இஸ்லாமியக் கட்டடம் எதன்மீது கட்டப்பட்டது? கான், தொல்லியல் துறையின் ஆவணத்தை மேற்கோள் காட்டி, அந்த இடத்தின் அடியில் இந்துக் கோயில் ஒன்று இருந்தது; ஆனால் அது ஏற்கெனவே சிதிலமடைந்திருந்தது; அதன் ஒரு சில பகுதிகளைக் கொண்டு மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். அகர்வாலும் சர்மாவும் கோயிலுக்குமேல்தான் இஸ்லாமியக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்கிறார்கள். சர்மா ஒருபடி மேலேபோய் கோயில் இருந்த இடத்தில் மசூதிகளைக் கட்டக்கூடாது என்று இமாம் அபு ஹனீஃப் சொல்லியிருக்கிறார்; இவரது வழியைப் பின்பற்றியவர்தான் பாபர்; எனவே பாபருக்கு அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதியே கிடையாது; மீறி அவர் கட்டியிருந்தால் அல்லது கட்டுவித்திருந்தால், அது மசூதி என்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்கிறார்.

4. குறிப்பிட்ட இடம் ராமர் பிறந்த இடம்தானா என்ற கேள்விக்கு மூவரும் அளிக்கும் பதில் நுணுக்கமானது. அந்தப் பெரும் இடத்தில் ஏதோ ஒரு பகுதியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்கிறார் கான். ஆனால் அந்த நம்பிக்கை, குறிப்பாக, 1992-ல் இடிக்கப்பட்ட அந்த ஓர் இடத்தைத்தான் குறிக்கிறது என்றில்லை எனவும் சொல்கிறார். ஆனால் மற்ற இருவரும் வேற்படுகிறார்கள். 1992-ல் இடிக்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்கிறார் அகர்வால். சர்மாவும் இதனை ஏற்றுக்கொள்கிறார்.

இந்த வேறுபாடுகள் பொதுவான இந்து மனநிலைக்கும் முஸ்லிம் மனநிலைக்கும் இடையேயான வேறுபாடுகள்தானா? நீதிபதிகளுக்கு சொந்த விருப்பு வெறுப்புகள் என்று எவையுமே இருக்கக்கூடாது என்பார்கள். ஆனாலும் இந்த வேறுபாடுகளையும் தாண்டி மூன்வரும் ஒரேவிதமான முடிவுக்கு வந்திருப்பது ஒருவகையில் ஆச்சரியமே.

இந்த வழக்கின் தீர்ப்பில் மூவருமே சொன்ன ஒரு விஷயம், 23 டிசம்பர் 1949 அதிகாலைப் பொழுதில்தான் ராம லல்லா சிலைகள் பிரச்னைக்குரிய இடத்தில் கொண்டுவைக்கப்பட்டன. இது நிச்சயமாக ஒரு சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல். அதேபோல நீதிபதிகள் எதுவும் சொல்லாவிட்டாலும் டிசம்பர் 1992-ல் பிரச்னைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டதும் சட்டத்துக்கு எதிரான செயல். இந்துக் கும்பல்கள் ஈடுபட்டுச் செய்த இந்த இரு சட்டத்துக்குப் புறம்பான செயல்களால் நீதி வேறுமாதிரி இருந்திருக்கவேண்டும் என்று வாதிடுவோர் சிலர். ஆனால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. 1949, 1992 சம்பவங்கள் இரண்டும் கிரிமினல் வழக்குகள். அவற்றை வேறு முறையில் கையாளவேண்டும். அதனால் இந்தக் குறிப்பிட்ட நிலம் தொடர்பான சிவில் வழக்கின் முடிவு வேறு மாதிரியாக இருக்கவேண்டிய அவசியம் அல்ல.

இந்த வழக்கு மேற்கொண்டு நிச்சயம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போகிறது. அங்கு என்ன தீர்ப்பு வந்தாலும் ஒன்றுமட்டும் நிச்சயம். இந்தியா 1992-லிருந்து மிகவும் முன்னே சென்றுள்ளது. கலவரம், அடிதடி என்று நாம் அனைவரும் பயந்தமாதிரி ஒன்றும் நிகழவில்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.