மகாராஷ்டிரா : செழுமையும் வறட்சியும்

தி ஹிந்துவில் பிப்ரவரி 27, 2013 அன்று பி. சாய்நாத் எழுதிய How the other half dries கட்டுரையின் மொழியாக்கம்

27Sainath_jpg_1378079gஎவ்வாறு மறுபகுதி வறண்டு போகிறது ?

“அடுக்குமாடி குடியிருப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக் கனவு. அரசனின் மகுடத்தின் உச்சியில் பதிக்கப்படும் நவரத்தினம் போன்றது இது.”  படாடோபமான வாழ்க்கை முறை அவற்றை இன்னும் பெரியதாகச் சொல்கிறது.  ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திலும் சொந்தமாக நீச்சல்குளம் இருக்கிறது.  “மிக ஆடம்பரமானது”, “சிறப்பான கலைநயமான வடிவமைப்புகள்” “உங்கள் வாழ்நிலை உயர்வுக்கு பொருந்தும் அமைப்புகள்” என்று விளம்பரங்கள் பளபளக்கின்றன.

 தோட்டங்களுடன் கூடிய தனி வீடுகளை (வில்லா) உருவாக்குபவர்களும் கட்டடக் கட்டுமான முதலாளிகளும் இப்படிப்பட்ட குடியிருப்புகளை “முதல் தரத்தில் மதிப்பிடக் கூடியவை” என்று உயர்வாக சொல்கின்றனர்.  அவை 9000 முதல் 22000 சதுர அடி அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் நீச்சல் குளம் உண்டு.  இன்னும் வரவிருக்கிற ஒரு குடியிருப்பு வளாகத்தின் உச்சியில் அதாவது மேல்தளத்தில் ஓர் ஆச்சர்யம் அமையவிருக்கிறது. ஆம், நீங்கள் அனுமானிப்பது போல் அங்கும் ஒரு நீச்சல் குளம் இருக்கும்.

இவையெல்லாம் புனே நகரத்தில் மட்டும்.  இவையனைத்துக்கும் கூடுதலான வசதிகளோடு, கூடுதலான தண்ணீரும் தேவைப்படுகிறது. ஒரு சிறிய ஆனால் கர்வம் கொள்ள வைக்கும் போக்கு யாதெனில், இன்னும் இது போல் நிறைய வரப்போகிறது என்பதுதான்.  எந்த மண்டலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வறட்சி நிலவி வருகிறதோ, அங்குதான்  இவையனைத்தும் தற்போது தோன்றியுள்ளன.  மகாராஷ்டிராவில் அதன் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவாண் பார்வையில், அந்த மாநிலம் இது வரை சந்தித்திராத மிக மோசமான வறட்சியைச் சந்திக்கிறது.  அந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தற்போது தண்ணீர் லாரியின் வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றன.  ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் லாரி வந்தால் நீங்கள் அதிருஷ்டசாலி. இல்லாவிட்டால் வாரத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வரும்.

ஆம், நீச்சல் குளங்களுக்கும், வறண்ட ஏரிகளுக்குமிடையே தொடர்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அது பற்றி நிச்சயமாக சிறிய அளவிலான விவாதம்கூட இல்லை.  கடந்த 24 ஆண்டுகளில், 12-க்கும் மேற்பட்ட நீர் நிலை பூங்காக்கள், செயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், நீர் விளையாடு களங்கள் உள்ள (தீம் பார்க்) பொழுதுபோக்கு பூங்காக்கள் தோன்றியுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.  ஆனால் ஒரு கட்டத்தில் அவை மாநகர் மும்பையில் மட்டும் இருப்பனவாக அமைந்தது.

பெரிய அளவிலான மாற்றங்கள்

 

மாநிலம் முழுவதும் அனைத்து வறட்சி பாதித்த மண்டலங்களிலும் நம்பிக்கையின்மை வளர்ந்தது.  7000 கிராமங்களுக்கு மேல் கடுமையான வறட்சி அல்லது உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.  அலுவலக விவரங்களின்படி இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மண்டலங்களும் மோசமடைந்து வருகின்றன.  ஆனால் வறட்சி பாதித்த பகுதி என வகைப்படுத்தப்படவில்லை. அது போல் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் மிகச் சிலர் சிறிய அளவில் உதவிகள் பெற்றனர்.  அதாவது அந்தப் பகுதிகளுக்கு தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.  ஏறக்குறைய ஐம்பது லட்சம் கால்நடைகள் வளர்ப்பு முகாம்களை நம்பியிருக்கின்றன.  நம்பிக்கையின்மையின் காரணமாக கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.  நீர் தேக்கங்களில் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பு இருந்தது.  சிலவற்றில் அவையும் இன்றி வறண்டிருந்தன.  ஆனால் 1972ல் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்கு பிறகு தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியாகும்.

கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பிவிடப்பட்டது.  அதே போல் வாழ்க்கை தரத்தை மாற்றிக் காட்டுகிறோம் என விளம்பர உத்தியை கையாண்ட வியாபார நிறுவனங்களுக்கும் தண்ணீர் பெருமளவில் அளிக்கப்பட்டது.  கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அவ்வாறு திருப்பிவிட்ட வகையில் மக்களின் ரத்தம் சிந்தப்பட்டது.  மாவல் நகரத்தில் 2011ல் கோபமுற்ற விவசாயிகளை நோக்கி காவல்துறையினர் சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் காயமுற்றனர்.  பாவனா அணையிலிருந்து பிம்ரிசின்ச்வாட் எனுமிடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல விளைநிலங்களின் வழியாக குழாய்கள் அமைத்த அரசின் நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் போராடியபோது அந்த சம்பவம் நடைபெற்றது.

இதனால் ஏற்படப்போகும் நீர் இழப்பை கணக்கிட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  அந்த நேரத்தில் அரசு சுமார் 1200 பேர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தது.  வன்முறையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது.

துணை முதலமைச்சர் அஜித்பவார் அவர் பங்கிற்கு விவசாயத்தை மூடும் வகையில் தொழிற்சாலைகளின் கட்டுபாட்டில் நிலங்களை கொண்டு வந்தார்.  இன்னும் சற்று மோசமாகும் வகையில் சட்டத்திருத்தமே அவரால் கொண்டு வரப்பட்டது.  ஏற்கெனவே மோசமாக உள்ள மகாராஷ்டிரா நீர்வள சீரமைப்பு அதிகார ஆயச்சட்டத்தில் ஒரு புதிய ஷ‌ரத்தைச் சேர்த்து தண்ணீர் விநியோக கொள்கை முடிவை யாரும் எதிர்க்க இயலாத வண்ணம் தடை ஏற்படுத்தினார்.

பொழுது போக்கு கேளிக்கைகளுக்கு தண்ணீரை திருப்பிவிடுவது ஒன்றும் புதிதல்ல என்ற போதிலும், 2005ல் பெரிய அளவில் கேளிக்கை மற்றும் உணவு கிராமம், நீர் விளையாட்டுகள் நிறைந்த மகிழ்வு பூங்காக்கள் ஆகியவை நாக்பூர் மாவட்ட ஊரக பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.  உண்மையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிய நேரம் அது. அந்தக் கேளிக்கை கிராமத்தில் 18 விதமான நீர் வீழ்ச்சிகள், நீர் விளையாட்டு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  அந்த இடத்தில்தான் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை பனி மலை மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் அமையப்பெற்றது.  47 டிகிரி வெப்பம் நிலவுகையில் தொடர்ந்து பனிக்கட்டியாக பராமரிப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல.  அதற்கு மிக அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், அந்த மண்டலத்தில் வசித்த சாதாரண மக்களுக்கு 15 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டது.  மேலும் அதிக அளவிலான நீரும் அதற்காக செலவிடப்பட்டது.

 லாவாசா மற்றும் விவசாயம்

கடந்த ஆண்டுகளில் சில கோல்ப் மைதானங்கள் தோன்றியதும் இந்த மாநிலத்தில்தான்.  ஆழ்துளை குழாய்கள் பதிக்கப்பட்டு தற்போது 22 மைதானங்கள் உள்ளன.  கோல்ப் மைதானத்தை பராமரிக்க மிகுதியான தண்ணீர் செலவழிக்கப்படுகிறது.  கடந்த காலங்களில் இதனால் விவசாயிகளிடம் கோபத்தை விளைவித்து பல மோதல்கள் நடைபெற்றுள்ளது.  கோல்ப் மைதானங்களைப் பராமரிக்க அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகள் தூவப்படுவதால் அவை மற்ற நீர் ஆதாரங்கைளயும் மாசுபடுத்துகிறது. இவற்றுக்கு அப்பாற்பட்டு “சுதந்தர இந்தியாவின் முதல் மலை நகரம்” என்றழைக்கப்படும் லாவாசா திட்டத்துக்காக பெருமளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து பல எதிர்ப்பு இயக்கங்களை நாங்கள் இந்த மாநிலத்தில் பார்க்க முடிந்தது.

மாநிலத்தில் மிகுதியான வறட்சி நிலவுகையில் தனது குடும்ப திருமணத்தை ஆடம்பரமாக நிகழ்த்தியதற்காக சரத்பவார் தனது சொந்த கட்சியின் அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் என்பவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்காக பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.  ஆனால் மத்திய விவசாயத் துறை அமைச்சரான பவார் எப்போதும் லாவாசா திட்டத்தைப் பற்றி பெருமை பேசுவதிலேயே நேரத்தைச் செலவழித்தார்.  லாவாசா திட்டம் குறித்து இணையத்தளத்தில் உள்ள புள்ளி விவரங்களிலிருந்து 0.87 டிஎம்சி தண்ணீரை இருத்தி வைக்க அனுமதி உள்ளதாக தெரிய வருகிறது.  அதாவது ஏறக்குறைய 24.6 பில்லியன் லிட்டர் தண்ணீர் ஆகும்.

எந்த மாநிலமும் குறைவான பாசனத்துக்கு மிகுதியான பணம் செலவழிப்பது இல்லை.  பொருளாதார ஆய்வறிக்கை 2011-12 லிருந்து கடந்த 12 ஆண்டுகளில் 0.1 சதவீத நிலங்களில்தான் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிய வருகிறது.  அதாவது இந்த மாநிலத்தில் 18 சதவீதத்திற்கு குறைவான நிலங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.

பத்தாயிரம் கோடிகளில் பணம் செலவழிக்கப்பட்டு பல கோடீஸ்வரர்களை உருவாக்குகிறது. மறுபுறம் மிகக் குறைவாகவே பாசனம் மேற்கொள்ளப் படுகிறது.  விவசாயம் குறைந்து கொண்டே வரும் அதே நேரத்தில் பெரும் அளிவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டது. (2011-12 பொருளாதார ஆய்வின்படி உணவு தானிய உற்பத்தியில் 23 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது).

ஒருபுறம் உணவு தானிய உற்பத்தி குறைந்த போதிலும் மகாராஷ்டிராவில் மூன்றில் 2 பங்கு நிலங்களில் வறட்சி மிகுந்து, தண்ணீர் கிடைக்காத நிலையிலும் கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.  ஒரு மாவட்ட ஆட்சியர்கூட இந்த வறட்சி காலத்தில் கரும்பு பிழிவதை நிறுத்த தலைப்படவில்லை.  கரும்பாலைகள் தினசரி 90 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தின.  சர்க்கரை ஆலை முதலாளிகளின் அதிகாரத்தால் கரும்பு பிழிவதை தற்காலிக இடை நீக்கம் செய்வதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர்கள் தற்காலிக இடை நீக்கம செய்யப்பட்டனர்.

ஒரு ஏக்கரில் பயிராகும் கரும்புக்கு தேவையான தண்ணீரை கொண்டு 10 முதல் 12 ஏக்கர் நிலங்களில் ஜோவார் போன்ற உணவுப் பயிர்களை விளைவித்துவிட முடியும்.  மகாராஷ்டிராவில் பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரில் பாதி இந்த கரும்பிற்கு செல்வதால், 6 சதவீத நிலங்கள் மட்டுமே பாசனம் பெறும் பகுதியாக இருந்தது.  கரும்புக்கு 180 ஏக்கர் இன்ச் தண்ணீர் தேவை.  அதாவது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு 3000 ஊரக பகுதி வீடுகளின் ஒரு மாத தண்ணீர் தேவையை நிறைவேற்றிவிட முடியும்.

சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் நீர் தேவை என்ற கணக்கின்படி,  இந்த மண்டலத்தில்தான் நீர் இருப்பு பட்டியல் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இவையெல்லாம் மகாராஷ்டிராவில் பயிரிடப்படும் ரோஜாப்பூ விவசாய உற்சாகத்தை குறைத்துவிடவில்லை.  அதற்கு கிடைக்கும் சிறிய உத்திரவாத வியாபார போக்கினால் மேலும் சிலரை அந்தப் பயிருக்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.  ரோஜாக்களுக்கு அதிக நீர் தேவை.  அதற்கு “212 ஏக்கர் இன்ச்” தண்ணீர் தேவை.  அதாவது 21.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு ஏக்கருக்கு. ரோஜா உற்பத்தி சிறிதளவானாலும் மாநிலத்தில் நடைபெறும் சில கொண்டாட்டங்களால் அதற்கு வரவேற்பு உள்ளது.  இதன் ஏற்றுமதி இந்த வருடம் 15 – 25 சதவீதம் உயர்ந்துள்ளது.  ரூபாயின் வீழ்ச்சி, நீடித்த குளிர்காலம், மற்றும் “காதலர் தினம்” போன்றவை ரோஜா உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் சீரமைப்பு நடவடிக்கைகள் என்பதைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தண்ணீரைத் தனியார்மயப்படுத்துதலில்தான் இருந்துள்ளது.  இந்த இயற்கை வளத்தின் மீதான சமூக கட்டுப்பாடு மிகவும் வேகமாக செயலிழக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் நிலத்தடி நீரை மிகுதியாக வீணடிப்பதாலும் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.  தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை அங்கு கொண்டுவர மகாராஷ்டிரா கடுமையாக உழைத்துள்ளது. கடல் போல் விரிந்து பரந்த வறண்ட நிலங்களுக்கு நடுவில் தனியார் நீச்சல் குளங்கள்.  பணக்காரர்களுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இல்லை.  ஆனால் மீதமுள்ளவர்களின் எதிர்பார்ப்பு தினந்தோறும் ஆவியாகிக்கொண்டிருக்கிறது.

0

நன்றி : பி. சாய்நாத், தி ஹிந்து / தமிழில் : எஸ். சம்பத்

தாக்கரேவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது?

இன்றைய தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் : மருதன்.

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.

பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’

ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)

ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.

தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது. மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை. ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.

தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு. இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர். அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள். இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள்.  இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.

பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும். இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம். மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.

நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது. ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும். வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.

எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.

0

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

அழிவிற் சிறந்தது – அப்துல் கலாம் கட்டுரைகளை முன்வைத்து

அப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு ‘கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்’ என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும்கூட தெரியும்.

ஆகையால் கலாம் கூடன்குளம் சென்று, ‘ஆய்வு செய்து’, கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அக்கருத்து அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டது; இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக மாறிவிட்டது. பொதுமக்கள் எல்லார் மனங்களிலும் படிந்துவிட்ட பிம்பமான, ‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி‘யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார்.

கலாம் அணு விஞ்ஞானியா இல்லையா என்பது, அணு மின்சாரம் சார்ந்த ஒரு விவாதத்தில் ஒரு முக்கிய பிரச்சினை அல்ல; கூடன்குளம் அணு உலைக்கு அவர் அளிக்கும் சான்றிதழ், அவர் அணு விஞ்ஞானி என்று சொல்லப்பட்டு, அந்த அதிகாரத்தின் பாற்பட்டு முன்வைக்கப்படுகிறது. அவரின் கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதாகவும் ஆக்கப்படுகிறது. அவர் அளித்த உத்தரவாதத்தையும் மீறி, எதிர்ப்பாளர்கள் பிடிவாதம் பிடிப்பது அறிவுக்கும் நாட்டிற்கும் எதிரானதாகப் பரப்புரை செய்யப்படுகிறது.

அணு உலை, அணு மின்சாரம் குறித்து ஓரளவு அறிதல் உள்ள எவரும் கருத்து சொல்லி, அது விவாதப் பொருள் ஆகலாம். ஆனால் இங்கே எதிர் கருத்துக்களை விவாதமின்றி முறியடிக்க, அவரை தலை சிறந்த விஞ்ஞானியாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு முன்வைப்பதுதான் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு சார்ந்த கோஷங்களால், கலாமை அவதூறு செய்து, அணு மின்சாரம் சார்ந்த அவரது வாதங்களை நிராகரிப்பது அபத்தம் என்றால், அதைவிட அபத்தம் அவரது செலிபிரிடி நிலையை முன்வைத்து, எல்லாம் அறிந்த விஞ்ஞானியின் கூற்றாக அவர் சொல்வதைப் பரப்புவது.

இந்த காரணங்களால், கலாம் ஓர் அணு விஞ்ஞானி என்கிற ‘உண்மையை’ மறுதலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறியியலாளராக தொடங்கி, பல்வேறு அனுபவங்கள் மூலம் அவர் பெற்றிருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை பற்றி சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் கலாம் எந்த விதத்திலும் ஒரு அணு விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வகையில் நேரடியான பங்களிப்பை அறிவியலுக்கு செய்வது என்ற வகையில், ஒரு விஞ்ஞானி என்று கூட அவரை அழைக்க முடியாது. நான் அறிந்தவரை, ஆக்கபூர்வம் அழிவுபூர்வம் என்கிற எந்த நோக்கில் பார்த்தாலும், எந்த ஒரு தனித்துவமான அறிவியல் பங்களிப்பையும் அவர் செய்யவில்லை. இதற்கு மாறான தகவலை யார் எங்கிருந்து தந்தாலும் பரிசீலித்து கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கலாமை பற்றிய பொய்யான தகவலைச் சொல்லி, அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து தரப்பிற்கு பலம் சேர்க்க முயல்வதாலும், அவரை ஒரு அணு விஞ்ஞானியாக அணுமின்நிலைய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களும் பார்ப்பதாலும் மட்டுமே இதைச் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழ் மக்களை ஓர் அணு உலை விபத்திற்குப் பலிகடாவாக்குவதுதான் இந்திய மையஅரசின் அடிப்படை நோக்கம் என்று சொல்வது எவ்வளவு ஆதாரமற்ற அவதூறோ, அதைப் போலவே கூடன்குளம் உலையை எதிர்ப்பது அன்னிய நாட்டுச் சதி என்பதும், மதரீதியான உள்நோக்கங்கள் கற்பிப்பதும். அவை ஆதாரமற்ற அவதூறுகள். பிரச்சினையைத் தீர்க்காமல் இழுத்துக்கொண்டு போவதுதான் நோக்கம் என்றால், தாரளமாக இந்த இரு எதிர் எதிர்த் திசைகளில் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கலாம். இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒரு எதிர்ப்பை பற்றிப் பேச தொடங்கும் ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் திடீரென கிளம்பிய எதிர்ப்பாக இதை வர்ணித்துவிட்டுத் துவங்குவதைக் காணலாம்.

அணு உலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்கள், பதில்கள் பல்லாண்டுகளாக ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கலாமின் கட்டுரை புதிய வெளிச்சம் எதையும் தரவில்லை.

ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை பலியிடும் திட்டத்துடன் நிச்சயமாக கூடன்குளத் திட்டத்தைத் தொடங்கவில்லை. ஆகையால் அணு உலைக்கான பாதுகாப்பு என்கிற வகையில் என்னவெல்லாம் இன்றைய நிலையில் சாத்தியமாகுமோ, அவையனைத்தும் கொண்டதாக கூடன்குளம் அணு உலை இருக்கும் என்று அரசாங்கம் சொல்வதையே நேரடியாக நம்பலாம். அதை தாண்டி கலாம் ஆய்வு செய்து சொல்ல என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு பெறுவதைத் தவிர, ஒரு நாளில் கூடன்குள அணு உலையில் என்ன ஆய்வை அவர் செய்திருக்க முடியும் என்பதும் புரியவில்லை. கலாமின் ஆங்கிலம்  மற்றும் தமிழ்  இரண்டு கட்டுரைகளும் ஓர் ஆய்வுக் கட்டுரையின் எந்தப் பண்பையும் கொண்டது அல்ல; மாறாக முழுக்க பிரசார தொனியில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தகவல்களை அளிப்பது மட்டுமே. புதிது என்று தோன்றக்கூடிய, தோரியத்தை முன்வைத்து அவர் சொன்ன தகவல்களும் ஏற்கெனவே என்டிடிவி வரை வெளிவந்த செய்திகள்தான்.

கலாமின் கட்டுரையில் தரப்படும் உலையின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை யாவும் உண்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். வேறு ஒரு அணு உலை தொழில் நுட்ப நிபுணர் அதில் கருத்து வேறுபாடும், ஐயங்களும், பிரச்சினைகளும் கொள்ள இயலலாம். ஆனால் அரசாங்கத்தின் கையாளாக கலாம் திட்டமிட்ட பொய்யை சொல்வதாக நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம், விபத்து நேரவே நேராது, விபத்திற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்ற உத்தரவாதத்தை அளிக்காது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றுவரை மனித சமுதாயம் படைத்த எந்த தொழில்நுட்பமும், மனிதப் பிழை மற்றும் இயந்திரக் கோளாறு சார்ந்து, தவறு என்று எதுவுமே நடக்காமல் ஒரு விதிவிலக்காக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற அடிப்படை விதியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். துல்லியம் என்பது கணித அறிவியல் விதிகளின்படியே முழுதும் கறாரான ஒரு சாத்தியமில்லை. எல்லா சோதனைகளும், கணித்தல்களும் பிழை அளவுகட்கு உட்பட்டவைதான். இந்தப் பிழையின் இடைவெளியை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே செல்ல இயலுமே ஒழிய, பிழையே இல்லாமல் சோதனைகளும், அறிவியல் செயல்பாடுகளும் சாத்தியமில்லை.

அந்த வகையில் அணு உலையிலும், மனிதர்கள் இழைக்கும் தவறுகளும், இயந்திரங்கள் குறித்த கணித்தல்களில் நிகழும் எதிர்பாராத தவறுகளும் முற்றிலுமாக தவிர்க்க கூடியது அல்ல; முன்னேறிய நாடுகளிலேயே இது சாத்தியமில்லை என்பதைத்தான் அமேரிக்க, ரஷ்ய, ஜப்பானிய விபத்துக்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அணு உலையில் பலவேறு தளங்களில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலானாவை. அதில் எதிரே பார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சினைகள் நிச்சயமாக ஏற்படலாம்; எந்த நிலையிலும், எந்தச் சிக்கலும், என்றுமே உருவாகாது என்று சொல்ல இங்கு யாரும் கடவுள் அல்ல.

இன்று பிரச்சினையுள்ளதாக கருதப்படும் ஃபுகுஷிமா உலையை, சென்ற வருட சுனாமிக்கு முன்பு யாரும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், அவர்கள் செய்த மூன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும், உலையின் செயல்பாடு நின்றபின் குளிரூட்ட இயலாமல் வெடித்தது. நம்மூர் கூடன்குளத்தில் ஃபுக்குஷிமா விபத்தின் அதே சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளிப்பதால், விபத்திற்கான எதிர்பாராத வேறு சாத்தியங்கள் இல்லை என்று நம்புவதற்கு அறிவியல்ரீதியான எந்த அடிப்படையும் இல்லை. அவ்வாறு நம்புவது அறிவியல் மனம் அல்ல; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மமதை மட்டுமே.

ஒரே ஒரு உயிரை காக்க ஜப்பானிய அதிகார வர்க்கம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும், பொதுவாகவே பாதுகாப்பு சார்ந்து, ஜப்பானியர்கள் அதீத obsessionடன் எடுக்கும் முன்னேற்பாடுகளையும் கணக்கில் கொண்டு, ஃபுகுஷிமா விஷயத்தில் நடந்த தவறைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்பார்த்து செய்திருந்த அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, கண்களைக் கட்டி விட்டிருக்கிறது இயற்கை. பொது மக்களின் உயிர்கள் குறித்து நம் அரசின், அதிகார வர்க்கத்தின் அதீத உதாசீனங்களுக்கு விளக்கமும் ஆதாரமும் காட்டத் தேவையில்லை. உதாசீனமும் ஊழலும், இன்னும் பல சீர்கேடுகளும், நெருக்கடியான தருணத்தில் நம் பொதுமக்களின் பொறுப்பற்றதன்மை எல்லாம் கலந்து, எந்த வித அழிவிற்கும் நம்மை இட்டுச் செல்லுக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

‘விபத்து நடந்த காரணத்தால் நாமெல்லாம் விமான பயணம் போவதில்லையா’ என்கிற அபத்த உதாரணத்தை கலாமும் கேட்பது எரிச்சலூட்டினாலும், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. விமான விபத்துக்களையும், அணு உலை விபத்துக்களையும் இணையாக வைத்து ஒப்பிட்டு பேசுவது ஒரு அறிவுள்ளவாதமா என்கிற சுய சந்தேகம் கிஞ்சித்தும் இல்லாமல், ரொம்ப கூலாக எல்லா அறிவாளிகளும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு அணு உலை விபத்திற்கும், விமான விபத்திற்கும் – விபத்தின் பாதிப்பு, அளவு (magnitude) சார்ந்த பரிமாணங்கள், தொடரப்போகும் பின் விளைவுகள் என்ற – வித்தியாசங்களை பற்றிய கேள்விகளையும் புரிதல்களையும், அவரவர் மனவிவாதத்திற்கு விட்டுவிட்டு, நேரெதிராக இந்த வாதத்தை எதிர்கொள்வோம்.

‘நூறு விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடு’ என்று சொல்லப்படுவதுடன்தான், விபத்து நடந்த எல்லா விமானங்களும், விபத்து நடப்பதற்குமுன் பறக்கத் தொடங்கின; மீறி தவறுகள் நடக்கின்றன. விமானத்தில் போகிறவர்கள், விபத்து நடப்பதற்கான சிறிய சாத்தியம் இருப்பதை நன்றாக உணர்ந்து, தெளிவாக முன்னமே அறிந்து, தங்கள் தேர்வாகப் பயணம் செய்கிறார்கள். மாறாக கூடன்குளம் விவகாரத்தில் விபத்து நடக்கவே நடக்காது, அதற்கான சாத்தியம் பூஜ்யம், நூறு சதவிகித பாதுகாப்பு என்று பொய் சொல்லி அணு உலையை இயக்கப் போகிறார்கள்; கூடன்குள அணு மின் உற்பத்திக்கான தேர்வை அரசும், அதிகார வர்க்கமும் முடிவு செய்து, நம் எலீட் சமூகம் அதற்கு ஆதரவாக பேசி பிரசாரம் செய்து, அதே எலீட் சமூகம் அதன் பயனை மிகுதியாக துய்க்கப் போகிறது. அபாயம் அதை தேர்வு செய்யாத, அதை எதிர்க்கும் மக்களுக்கு மட்டும்.

கலாம் தனது கட்டுரையில் விசித்திரமான ஒரு பாயிண்டை சொல்கிறார். ‘Many accidents followed, and even today air accidents kill more than 1,500 people every year’ என்கிற தகவலை தந்துவிட்டு அதனால் பறப்பதை நாம் விட்டுவிட்டோமா என வினவுகிறார். நல்ல உதாரணம்; இன்றய நமது முன்னேறிய நிலையில் கூட நம்மால் ஆண்டிற்கு 1500பேர் விமான விபத்துக்களில் சாவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும் பறக்கிறோம். அதே போன்ற வாதத்தைதானே மக்களிடம் கூடன்குள விவகாரத்திலும் முன்வைக்க வேண்டும்?

‘நாங்கள் எங்களால் முடிந்த எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். அதையும் மீறி ஏதேனும் நடக்க சிறு வாய்ப்பு உண்டு; விபத்து நடக்க சில வாய்ப்புகள் உள்ளதால் மட்டும் மின்சார உற்பத்தியை எங்களால் நிறுத்த முடியாது’ என்று நேரடி யதார்த்தமான கூற்றை மக்கள் முன்வைத்திருக்க வேண்டும். பல லட்சம் தடவைகள் பயன்படுத்தி பயன்பாட்டில் நாம் மிகவும் முதிர்ந்த பின்னும் விமான விபத்துக்கள் இன்றும் நடக்க்கிறது; ஒப்பீட்டளவில் பயன்பாட்டில் இன்னமும் முதிரா நிலையில் இருக்கும் அணு மின்னுற்பத்தியின் போது என்னவகை விபத்து நடக்கக்கூடும் என்பதையும் மக்களுக்கு முன்னமே சொல்லி, நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்வதுதானே நியாயம். அதற்குப் பிறகும், கூடன்குளம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அந்த ஒருவேளை நடக்க சாத்தியக்குறைவுள்ள ஆனால் சாத்தியமுள்ள ஆபத்தை எதிர்கொள்ளத் தயராக இருக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். நூறு விழுக்காடு பாதுகாப்பு உள்ளதாக கூறி, விபத்து நடக்க சாத்தியம் இல்லவே இல்லை என்று மறுப்பது ஏமாற்று வேலையல்லவா?

அணு உலையின் பலனான மின்சாரத்தையும், முன்னேற்றத்தையும், வேறு ஒரு மேல்தட்டு சமூகம் நுகர, பாதிக்க சாத்தியமுள்ள மக்களை ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ என்கிற அரிய கருத்தை சொல்லி ஏமாற்ற முனைவது என்னவகை நேர்மை? பேரணைகள் எழுப்பும்போதும், கனிமங்களுக்காக மக்கள் நிலத்தை பிடுங்கும்போது சொல்லப்படும் அதே நேர்மையற்ற ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ வாதம்தானே இது.

ஃபுகுஷிமாவில் பொருட்சேதம் ஏற்பட்டாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று ஒரு வாதத்தை கலாம் முன்வைக்கிறார். நியாயமாக அவர் செய்திருக்க வேண்டியது, ஜப்பானில் நடந்த அதே விபத்து அப்படியே இங்கே நடந்திருந்தால், என்னவகை பாதிப்பு நடந்திருக்கும் என்று நம் சூழலில் கற்பனையில் நிகழ்த்தி ஒப்பிட்டு பார்ப்பதுதான். குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் லட்சக்கணக்கில் உயிர்சேதம் நடந்தது. அதைவிட வலிமை வாய்ந்த பல பல ஜப்பானிய பூகம்பங்களில் வெறும் 25 பேர் கூட பலியாகவில்லை. ஒரு பேரழிவின் போதும் ஜப்பானியர் காட்டும் பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அதி தீவிர துரித நடவடிக்கை, இவை எல்லாவற்றையும் நாம் நம் சூழலுடன் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. பத்து லட்சம் மக்கள், கூடன்குள அணு உலையிலிருந்து, 30 கிமீ ஆரத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள்; இது சரியென்றால், நம் ஊரில் விபத்து நிகழ்ந்தால் ஏற்படும் உயிர் சேதத்தைக் கற்பனையே செய்து பார்க்கமுடியாது.

அணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு முக்கிய வாதம் – ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழக்கூடிய சாத்தியத்தின் அச்சுறுத்தல். ஏனோ கலாம் இந்த பிரச்சினையை சுத்தமாகக் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் மூலமோ, வேறு வகை சதிகளின் மூலமோ அணு உலைக்கு எந்தத் தீங்கும் யாராலும் நிகழ்த்த முடியாது என்று எந்த உத்தரவாதமும் அவர் தரவில்லை. (பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் தருவது நோய்க்கூறு கொண்ட நகைச்சுவையாக இருக்கும்.)

தொடர்ந்து அரசு மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, எல்லாவகை தடுப்புகளையும் மீறி அணு உலையில் இருந்து வெளிப்படப்போகும் (ஆபத்தில்லை என்று கருதப்படும்) கதிர்வீச்சின் அளவு குறித்து அரசு உண்மை தகவல்களை முன்வைப்பதில்லை என்பது. கலாம், பொத்தாம் பொதுவாக இதுவரையான அரசு அறிக்கையைப் போலவே, பாதுக்காப்பான கதிர்வீச்சே ஊருக்குள் கலக்கிறது என்கிறாரே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாக எதுவும் சொல்லவில்லை.

நடைமுறையில் மக்களை அன்றாடம் பாதிக்கப் போவதாக சொல்லப்படும் பல பிரச்சினைகளை, மிகைப்படுத்தப்பட்ட பயம் என்று எளிதாக கலாம் புறம் தள்ளுகிறார். அணு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள், அணு உலை உள்ள ஊரில் வசிப்பவர்கள் பலவிதப் புற்றுநோய்களால் பாதிக்கபடுவதாகப் பல புள்ளி விவரங்கள் வந்துள்ளன. நான் நேரடியாக இந்தப் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதிலும், சரிபார்ப்பதிலும் ஈடுபட்டவன் அல்லன். ஆனால் அவை அத்தனையும் மிகை என்று ஒரு வாக்கியமாக கலாம் சொல்வதைமட்டும் வைத்து நம்பவது சாத்தியமில்லை. இது குறித்து செய்திகளை முதலில் கேள்விப்பட்டு, சரி பார்த்து, பின் தகவல்ரீதியான எதிர் பதிலை கைவசம் வைத்து கொண்டுதான் சொல்கிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றிய செய்திகள் பரப்பப்பட்ட பொய் என்றால், பொய் என்று நிறுவி, பொய்த் தகவல்களை தேசத்தின் முக்கியப் பிரச்சினைகளின்போது பரப்பியதற்கு, அதைப் பரப்பியவர்களின்மீது நடவடிக்கை எடுத்தால் நாமும் கலாமின் கட்டுரையை நம்புவது பற்றி யோசிக்கலாம். உதாரணமாக இங்கேயும், இங்கேயும் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எதிரான ஆறுதல்களை கலாமின் கட்டுரையில் காண முடியவில்லை.

விபத்து என்பது சாத்தியக்கூறு மட்டும் உள்ள, தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யகூடிய ஒன்று. விஞ்ஞானத் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவான எல்லா வாதங்களையும், விபத்து நிகழ்வதை முன்வைத்துச் சொல்லப்படும் வாதத்திற்கு எதிராக முன்வைக்கலாம். நிதர்சனமான பிரச்சினை அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது; அதாவது பாதுகாப்பது.

கலாம் அது குறித்தும் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான இடத்தில் வைத்து நூறு ஆண்டுகாலம் பாதுகாக்கலாம் என்கிறார். சரி, அதற்குப் பிறகு? சில லட்சம் வருடங்களை half-life காலமாகக் கொண்டவற்றை, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? அதனுடைய கதீர்விச்சு சில நூறு வருடங்களில் மங்கி, பாதுகாப்பான அளவிற்குள் வந்துவிடும் என்பது ஒரு வசதியான கணிப்பு மட்டுமே. நூறு வருடங்களுக்கு பிறகும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொண்டதாகவே எதிர்கால சந்ததியினருக்கு அது இருக்கும்.

இப்போதய நமது மின்தேவை, முன்னிலிருந்து பன்மடங்கு பெருகி, அணு மின்சாரம் இல்லாமல் ஆகாது என்கிற நிலையில் உள்ளது. அது exponentialஆக வளர்ந்து, இன்னும் பல பல பெருமடங்குளாகவே எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அப்துல் கலாம் வேறு நாம் 2030இல் நிச்சயம் வளர்ந்த நாடாகிவிடுவோம் என்கிறார். அதற்கு ஏற்ப இன்னும் மின் தேவை எத்தனை மடங்கு பெருகும் என்பதையும் அவரே சொல்கிறார். அதற்கு இன்னும் எவ்வளவு உலைகள் வேண்டுமோ? மேலும் மேலும் அப்புறப்படுத்த வழியில்லாத, தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், சேர்மானம் ஆகிக்கொண்டே  இருக்க போகும் அணுக் கழிவை பற்றி எந்த பொறுப்புமே இல்லாமல் சாதாரணமாக ஒரு இடத்தில் வைத்து சமாளிக்கலாம் என்கிறார். பத்ரியாவது, பிரச்சினைதான், ஆனால் எதிர்காலத்தில் சமாளித்துவிடலாம் என்று தன் அறிவியல் மனம் நம்புவதாக மட்டும் சொன்னார்.

நம் நுகர்வு கலாசாரம் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக்கை சாமாளிப்பதற்கே, உருப்படியான எந்த நடைமுறை உத்தியும், உலகம் முழுக்க எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. நாம் வாழும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விடுவோம். காட்டையும், கடலையும் பிளாஸ்டிக் கழிவுகள் அழித்து வருகின்றன. கடலில் சேரும் கழிவுகளில் பெரும் விழுக்காடு ப்ளாஸ்டிக் கழிவுகள். பல கடல்வாழ் உயிரினங்களின் அழிவுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக உள்ளன. சில திமிங்கல இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள ஆவணப் படங்களைப் பார்த்தால் எவ்வளவு அற்புத உலகை நாம் அயோக்கியத்தனமாக அழித்து வருகிறோம் என்று அறியலாம்,

இந்த யதார்த்தத்தில் அணுக் கழிவுகளை பிரச்சினையின்றி சமாளிப்போம் என்று அறிஞர்கள் சொல்வது அத்தனையும், நம்மை ஏமாற்றும் வேலை மட்டுமின்றி அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. அவர்களில் பலருடைய அறிவியல் மனமே எதிர்காலத்தில் அணுக்கழிவுகளை சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் போடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறது. மறு சுழற்சி என்பது ப்ளாஸ்டிக் விஷயத்தில் பயனாளிகளுக்கு மனச்சமாதானத்தை தந்து, குற்றவுணர்வு நீக்கும் ஒரு பொய் நாடகம்; ஏனெனில் செய்யப்படும் அற்ப மறு சுழற்சிகள், தொடர்ந்து பெருமளவில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாகும் சூழலைத் தடுக்கவில்லை. மாறாக இது மறுசுழற்சியாகிறது என்று, அதைப் பயன்படுத்துபவரின் குற்றவுணர்வை மட்டுமே நீக்குகிறது. அணுக்கழிவுகள் விஷயத்திலும் மறு சுழற்சி என்பது வாதத்திற்காகவும் மனச்சமாதானத்திற்காகவும் சொல்லப்படுவதே. கழிவுகள் மேலும் மேலும் சேர்வதையும், அதை பாதுகாக்கும் பிரச்சினையும் இதனால் தவிர்க்கப்பட போவதில்லை. இந்த அணுக்கழிவுகளை சமாளிப்பது, என்றென்றைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு – ஒருவேளை அவர்கள் எல்லா வகை எதிர்கால அழிவுகளையும் தாண்டி பிழைத்திருந்தால்-அணு மின்சார உற்பத்தியை நிறுத்திய பின்பும்- பெரும் பிரச்சினையாக இருக்கும். அதாவது முந்தய தலைமுறை அனுபவித்துவிட்ட பயனின் பாவத்திற்காக, அடுத்த தலைமுறை பெரும் செலவுகளையும், பெரும் அர்பணிப்புகளையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இது தவிர ஒவ்வொரு நிலையிலும் அணு கழிவுகளை பாதுகாக்கும்போது கையாள்வதிலும், இடமாற்றம் செய்யும் போக்குவரத்திலும் எந்த பிரச்சினையும் நேரவே நேராது என்பதற்கும் உத்தரவாதமில்லை. கலாம் சொல்வதுபோல் அணு மின்சாரம்தான் நம் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படை என்றானபின், பெருமளவில் சேர்ந்துகொண்டே இருக்கப்போகும் கழிவுகளைத் தொடர்ந்து கையாண்டுகொண்டே இருக்க வேண்டும். மருத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சுற்று சூழல் கேடு எதைப் பற்றியும் – தன் வீட்டிற்கு வெளியே – எந்த தளத்திலும் பிரக்ஞை இல்லாத நம் நடுத்தர வர்க்கமும், எலீட் மக்களும் இருக்கையில், பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் நிச்சயம் இல்லை.

அப்துல் கலாம் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகம் அடையக்கூடிய வளர்ச்சிப் பாதையில் அசையா நம்பிக்கை உடையவர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரான மனம் என்று ஒன்று இருக்கமுடியாது. எல்லா வகை பழைமைவாதிகளும்கூட தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் தங்கள் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எத்தனையோ விதங்களில் கடந்த ஒரு நூற்றாண்டு தொழில்நுட்பம் நம்மை விடுதலை செய்திதிருக்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாத எல்லா வகை பற்றுக்களைப் போலவே தொழில்நுட்ப வெறியும் புதிய நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும்.

ஒருமுறை கேள்விக்கு பதில் சொல்லும்போது, பிருத்வி ஏவுகணை வானில் எழுந்ததையே தன் வாழ்வின் மகத்தான தருணமாக அப்துல் கலாம் சொல்கிறார். எவுகணைக்கான தவிர்க்க முடியாத அவசியம் பற்றி நாட்டுப்பற்றுள்ள ஒருவர் வாதிட்டால் புரிந்துகொள்ளலம். ஆனால் ஏவுகணை வானில் எழுவதை வாழ்வின் மகத்தான தருணமாக நினைக்கும் மனதை விமர்சனம் செய்து கொள்வதில், தொழில்நுட்பம் தரும் நெருக்கடியையும் அழிவையும் எதிர்கொள்வதன் தொடக்கம் இருக்கலாம்.  இன்றைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கும் பேராசையும், பெருந்தேவைகளையும், பெரும் நெருக்கடிகளையும் பற்றிப் பலர் பேசும்போது, தொழில்நுட்பத்தின்மீது மதப்பற்று போன்ற தீவிர ஆதரவுடன், முழுக்க ஒரு பிரசாரத்திற்கான மொழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலாம் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதை அரசும் ஊடகங்களும் பரப்புரையாக மக்கள் மனதில் திணிக்கிறது.

 

ன்னளவில் கலாமின் கட்டுரையில் எதிர்க்க மட்டும் செய்யாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. கலாம் தனது கட்டுரையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின் உற்பத்தி முறையாக அணு மின்சாரத்தைக் குறிப்பிடுகிறார். இதைக் குறிப்பிடும்போது புவி சூடேற்றம் பற்றியும், அதன் ஆபத்துக்கள் பற்றியும் பேசுகிறார். இந்த வாதமும் ஏற்கெனவே வேறு சிலரால் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டதுதான்.

கலாம் புவி சூடேற்றம் பற்றி பேசுவதன் நேர்மையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் சூழலியவாதிகள் புவி சூடேற்றத்தை முன்வைத்து பேசுவதை எல்லாம் எள்ளி நகையாடும் ஒரு எலீட் கூட்டம், அணு மின்சாரத்திற்கு ஆதரவாக வாதிடும்போது மட்டும் புவி சூடேற்றத்தை ஒரு வாதமாக முன்வைப்பது அப்பட்டமான நேர்மையின்மை.

அணுக்கழிவுகளைத் தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையிலிருந்து கழற்றி வைத்துவிட்டுப் பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் கலாம் சொல்வதுபோல் மற்றவகை மின் உற்பத்திகளை நிறுத்தி, அணு மின்சார உற்பத்தியை மட்டும் மேற்கொண்டால் Green house வாயு உமிழ்வுகள் உண்மையில் குறையுமா? தன் வாதத்திற்கு ஆதரவாகப் பல புள்ளி விவரங்களைத் தருகிறார். உதாரணமாக 26% CO2 வெளியேற்றம் (அணு சாராத மற்ற) மின் உற்பத்தியால் மட்டும் ஏற்படுகிறது என்கிறார். அவற்றை நான் சரி பார்க்க முயலவில்லை. ஆனால் நான் காண விரும்பிய ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரத்தை அவர் தரவில்லை.

ஜப்பான் போன்ற நாடுகள் பெருமளவில் அணு உற்பத்தியை மட்டும் சார்ந்து நிற்கத் தொடங்கியபின், அந்நாட்டிலிருந்து வெளியேறும் கரிமில வாயுவின் அளவு கூடிக்கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டிருக்கிறதா என்பதன் புள்ளி விவரம்தான் எனக்கு முக்கியமானதாகத் தெரிகிறது. கரிமில வாயு உமிழ்வுப் புள்ளிவிவரம், வரைபடத்தில் மேல் நோக்கிய வளைவாக, செங்குத்தாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. ஆகையால் அணு மின் உற்பத்தி புவி சூடேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக நம்ப ஆதாரம் உண்மையில் இல்லை; மாறாக மின்பற்றாக்குறை நீங்கி, அபரிமிதமான மின்சாரம் கைவசம் இருக்கும்போது, பொறுப்பற்ற எல்லாவகைக் குளிரூட்டுதலாலும் புவி சூடேற்றம் அதிகமாகவே எல்லா சாத்தியங்களும் உள்ளது.

நிலக்கரி, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களின் இருப்பு வற்றும் நிலைமையில், நாம் அணு எரிபொருளைத் தேடவேண்டியுள்ளது என்கிறார் கலாம். மட்கிக் கிடக்கும் இயற்கை எரிபொருட்கள் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப் பிரச்சினை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும். இன்னும் நேரடியாக அணு சக்தியிலேயே ஓடக்கூடிய கார்களையும், விமானங்களையும் படைத்து விட்டால் மிகவும் உசிதம்; உண்மையிலேயே அதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய வாகனங்களைப் போலப் புகை கக்க வேண்டிய தேவையும் இருக்காது. அணுக் கழிவுகளை மட்டும் எப்படி ஒவ்வொரு குடிமகன்களும் சமாளிப்பார்கள் என்பதை எதிர்கால அறிவியல் முன்னேற்றத்திடம் விட்டுவிடலாம்.

புவி சுடேற்றத்தை அணு மின்சாரம் குறைக்கும் என்கிற வாதம் சந்தேகக் கேஸாக இருந்தாலும், எதிர்காலத்தை பற்றிக் கவலை கொள்ளாமல், உடனடிச் சூழல் மாசை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற அனல், புனல் மின்சாரங்களுக்கு அணு மின்சாரம் மேல்தான். உதாரணமாக கலாம் நிலக்கரிச் சுரங்கங்கள் நிகழ்த்தும் நாசத்தை முன்வைத்து அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார். இந்த சந்தர்ப்பத்திற்கான ஒரு சாமர்த்தியமான வாதமாக இல்லாமல், அணு மின்சாரம் தொடங்கிய உடன், நிலக்கரிக்காகத் தோண்டுவதை நம் கார்ப்பரேட்டுகள் நிஜமாகவே முழுக்க விட்டுவிடுவார்கள் என்றால், அந்த வகையில் கலாம் சொல்வதை- சேரப்போகும் அணுக்கழிவு குறித்து யோசிக்காத நிலையில்- ஒப்புக் கொள்ளலாம்.

என்னை பொருத்த அளவில் எல்லா விதத்திலும் அழிவை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மட்டுமின்றி, கடலையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. புவி சூடேற்றம் பற்றிக் கறாரான புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பின்பும், நன்றாய்ப் படித்த அறிவாளிகளே கிராக்குத்தனமான வாதங்களால் மறுக்கிறார்கள். இன்னும் பைத்தியக்காரத்தனமான தீர்வுகளையும் தருகிறார்கள். இதற்குமேல் வெடிக்க சாத்தியமுள்ள போர்கள், முதலீட்டியம் எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் தீவிர சுரண்டல், அளிக்கக்போகும் நெருக்கடிகள் என்றும் ஏராளமாக இருக்கின்றன. இதில் உடனடி ஆபத்து என்று பார்த்தால் அணுக்கழிவுகள் குறைந்த வீர்யத்துடனேயே இருப்பது போல் தெரிகிறது.

ஆற்றலுக்காக நவீனமான வாழ்க்கையில் எத்தனையோ விதத்தில் அழிவை தேடுகிறோம்; அணு மின்சாரம் உற்பத்தி மூலம் இன்னொன்றை இழுத்துக்கொண்டு அழிவைத் தேடுவதில் என்ன குடி முழுகப்போகிறது என்றால் – பதில் எதுவும் இல்லை. ஆகையால் நேர்மையாக அழிவிற் சிறந்தது எது என்பதைப் பற்றி விவாதிப்போம். அதில் அணு ஆற்றல்தான் நம் பார்வையில் இப்போதைக்கு சாதகமான அழிவு என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். சைனா இந்தப் பாதையில்தானே போகிறது, நாம் பின்தங்கி விட மாட்டோமா என்று கேட்கிறார்கள். உண்மைதான்; எல்லோரும் அழிவுப்பாதையில் போகும்போது நாமும் அதையே செய்வோம். தனிமைப்பட்டுத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. தவிர்க்க முயன்றாலும் மற்றவர்கள் அனுமதிக்கப் போவதில்லை. புவி சூடேற்றப் பிரச்சினையிலும் மற்ற நாடுகள் யோக்கியமாக நடக்காதபோது, கரிமில வாயு உமிழ்வை நாம் மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மைதான்; மற்றவர்கள் செய்யும் போது நாமும் நம் பங்களிப்பை அழிவிற்குச் செலுத்த வேண்டாமா?

எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளைப் போல நவீனமாதலின் பயன் நம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை; நாம் சைனா போன்ற எதேச்சதிகார அரசமைப்பு கொண்ட நாடும் அல்ல. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில், நம் (அதாவது நானும் உறுப்பினராகியுள்ள மேல்தட்டின்) தேர்வுக்கு, வேறு ஒரு மக்களை விலை கொடுக்கச் சொல்லக் கூடாது. வேறு ஒரு மக்கள் என்று கூடன்குளத்தில் வசிக்கும் மக்களை போன்றவர்களைத்தான் சொல்கிறேன். (எதிர்கால சந்ததியினரை நம் பாவங்களை சுமக்கத்தான் உருவாக்குகிறோம் என்பதால் அவர்களை சொல்லவில்லை.) எத்தனையோ விஷயங்களில், எத்தனையோ விதங்களில் ஒரு தட்டினரின் தேர்விற்கு வேறு யாரோ விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதிலும் செய்தாலென்ன என்று நேரடியான ஒரு கேள்வியை எலீட் கூட்டம் கேட்பது ஒருவேளை அடுத்த கட்ட வாதமாக இருக்கலாம்.

இந்த புலம்பல்களை விட்டுவிட்டு இதற்கான மாற்றுத் தீர்வு என்னவென்று கேட்டால், நிறைவான பதில் எதுவும் எனக்கு தெரியவில்லை. அணு உலையை எதிர்ப்பவர்கள் காற்றாலை, சூரிய மின்சாரம் என்று பலவற்றை முன்வைக்கிறார்கள். விரிந்துகொண்டே போகும் தேவைகளை அது முழுவதும் தீர்த்து வைக்கும் என்று கலாமை போலவே எனக்கும் நம்பிக்கையில்லை. உருவாக்கி கொண்டே செல்லும் தேவைகளை குறைக்காமல், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் எந்த தீர்வையும் எட்டமுடியாது. டெவலப்மெண்ட் என்கிற வளர்ச்சியின் வன்முறையையும், அழிவையும் உணராமல் அது குறித்து யோசிக்க வாய்ப்பில்லை. தொடர்ந்த மின் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஒருவேளை நம்மை யோசிக்க வைக்கலாம். அந்த வகையில் கூடன்குளம் அணு மின்சாரம் வந்து நம் மின்பற்றாக்குறையை தீர்க்குமானால், நாம் யோசிக்கவே போவதில்லை.

ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு, இயக்காமல் இருந்த பல அணு உலைகளின் காரணமாக, ஜப்பானியர்கள் மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது; மின்சிக்கனம் குறித்த பரப்புரை செய்யப்பட்டது. குளுரூட்டுதலை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஒட்டு மொத்த ஜப்பானே மின் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் கடந்த பல வருடங்களைவிட குளிர்ந்து இருந்ததாக ஒரு செய்தி வாசித்தேன். இது போன்ற ஒரு செயல் இந்தியர்களாகிய நம்மாலும் முடியும் என்று கூறுவதற்கான முகாந்திரம் இல்லாததால்தான், கலாம் அணு மின்சாரத்தில் ஜப்பானை போல நாம் சாதித்து காட்ட முடியும்… முடியும்… முடியும்… என்று கோஷிக்கிறார் போலும்.

பி.கு. 1. கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து எந்த அளவிற்கு நிறைவான, நியாயமான பதில்களை கலாம் கூறியிருக்கிறார் என்று அலச நான் முயலவில்லை. வேறு யாராவதுதான் அந்த வேலையைச் செய்யவேண்டும்.

பி.கு. 2. ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலத்திலும், பின் கலாமின் வலைத்தளத்தில் முதலில் வெளியாகி பின் விகடனில் தமிழிலும் இரண்டு கட்டுரைகள் கலாமின் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. இரண்டுமே இணை ஆசிரியர்களாக வேறு ஒருவரையும் கொண்டது. ஶ்ரீ ஜன்பால் சிங் ஆங்கிலக் கட்டுரையிலும், பொன்ராஜ் தமிழ்க் கட்டுரையிலும் இணை ஆசிரியர்கள். ஆய்வுக் கட்டுரையாக அல்லாமல், வெகுஜன வாசிப்பிற்கான ஒரு பரப்புரை கட்டுரையில், இவர்கள் பங்கு என்னவென்று தெரியாவிட்டாலும், பலரும் இதைக் கலாமின் கட்டுரையாகவே வாசிக்கின்றனர். என் கருத்தில், கலாமின் மேற்பார்வையில், இந்த இரண்டு கட்டுரைகளுமே முழுமையாகவே மற்றவர்களால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு நிறைய உள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் இங்கே கலாமின் கட்டுரை என்று விளித்துள்ளதன் பொருள், அவர் எழுதியது என்பதல்ல. அவரின் பெயரால் முன்வைக்கப்பட்டதை எதிர்கொள்வதுதான்.

- ரோஸா வசந்த்

 

 

மனுநீதியின் வெற்றி

பாபர் மசூதி - இடிக்கப்படுவதற்கு முன்

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவதற்கு காப்மேயர் வழங்கியதைக் காட்டிலும் சுலபமான ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. புதிதாக ஒன்றுமில்லை.  தமிழ் சினிமா லாஜிக்தான். கெடுத்தவனுக்கே பெண்.  இடித்தவனுக்கே கோயில்.

ஐந்நூறு ஆண்டு கால மசூதியை இடித்து, உள்ளே ராமர் சிலையை கொண்டுவந்து வைத்த இந்து தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல.  எதை இடித்தார்களோ, அதை அவர்களுக்கே சட்டப்படி அளித்திருக்கிறது அலகாபாத் நீதிமன்றம்.  இது வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல என்று அத்வானி அண்ட் கோ கள்ளச்சிரிப்பு சிரிக்கும்போதே தெரிந்துவிடுகிறது.  இது அநீதியின் சிரிப்பு.  மனு தர்மத்தின் சிரிப்பு.  சோ கால்ட் செக்யூலரிசத்தின் சிரிப்பு.

நீதிபதிகள், தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்காட் உல்லா கான் மூவரும் ஆளுக்கொரு தீர்ப்பு வழங்கினாலும், சில பொதுவான அம்சங்களில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.   முதல் முக்கியமான விஷயம், சர்ச்சைக்குரிய இடத்தில், இந்துக்களுக்குப் பங்கு உண்டு என்பது.  எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?  1949ம் ஆண்டு ராமர் சிலையை எங்கே கொண்டு வந்து வைத்தார்களோ, மிகச் சரியாக அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கின்றது. இதற்கு என்ன ஆதாரம் என்றால் இந்துக்களின் புனித நம்பிக்கை என்று பதிலளிக்கிறது நீதிமன்றம்.  இந்துக்கள் என்றால் யார்?  அவர்கள் நம்பிக்கை எப்படி அளவிடப்பட்டது?  என்னென்ன காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டன?  கருத்து கணிப்புகள் ஏதேனும் நடத்தப்பட்டதா?

எனில், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அளவிடப்பட்டதா? ராமர் கோயில் மீது இந்துக்களுக்கு இருந்த நம்பிக்கைக்கு எந்த விதத்தில் குறைந்தது மசூதி மீது இஸ்லாமியர்கள் கொண்டிருந்த நம்பிக்கை?  இரண்டையும் எப்படி ஒப்பிட்டுப் பார்த்து தீர்ப்பு எழுதினார்கள்?

இப்படித்தான். இந்துக்களின் நம்பிக்கை என்றால் டிசம்பர் 1992ல் மசூதியை இடித்த கர சேவகர்களின் நம்பிக்கை. அவர்களை இயக்கிய விஹெச்பி, பிஜேபியின் நம்பிக்கை. தலைமை தாங்கிய அத்வானியின் நம்பிக்கை.  இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்றால் சிறுபான்மையினரின் நம்பிக்கை.  இந்துக்களின் நம்பிக்கையோடு ஒப்பிடுவதற்கு அருகதையற்ற இரண்டாம் தர குடிமக்களின் நம்பிக்கை. எனவே, வலியது மெலியதை வீழ்த்தி வென்றிவிட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இந்துக்களும் இஸ்லாமியர்களும் 2.77 ஏக்கர் அயோகத்தி நிலத்தில் வழிபாடு செய்ததற்கான தெளிவான ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.   1949ல் இந்து தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக மசூதிக்குள் நுழைந்து ராமர் சிலையை நிறுவினர்.  அதற்குப் பிறகு, மசூதி பூட்டப்பட்டு, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால், 1986ல் மசூதியின் கதவு இந்துக்களுக்காக மட்டும் திறந்துவிடப்பட்டது.  இப்போதைய தீர்ப்பின்படி 2.77 ஏக்கர் நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  ஒரு பங்கு இந்துக்களுக்கு (சாமியார்கள் அடங்கிய நிர்மோகி அகாரா என்னும் குழு), ஒரு பங்கு இஸ்லாமியர்களுக்கு (வக்ஃப் சன்னி மத்தியக் குழு), இன்னொரு பங்கு இந்துக்களுக்கு (ராமர் சிலை இருந்த இடத்துக்குச் சொந்தக்காரர் என்று சொல்லப்படும் ராம் லாலா விராஜ்மான் குழுவுக்கு).

இந்தத் தீர்ப்பு தர்க்க நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்கிறார் வரலாற்று ஆய்வாளரான இர்ஃபான் ஹபீப்.  ‘1949ல் சட்டவிரோதமான முறையில் இந்துக்கள் ராமர் சிலையைக் கொண்டு வந்து வைத்ததை இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்கிறது.   தீர்ப்பின் பல இடங்களில் இந்த 1949ம் ஆண்டு சம்பவம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.  ஆனால், 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது பற்றி தீர்ப்பு மௌனம் காக்கிறது.  இதன் மூலம், மசூதி இடிப்பு அப்படியொன்றும் பெரிய விஷயம் அல்ல என்பதைதான் இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது!’ என்கிறார் இர்ஃபான் ஹபீப். (‘Historical Evidence ignored, says historians’, The Hindu, October 1, 2010).

இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் (கான் தவிர்த்து இருவரும்), ராமர் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பாபர் மசூதி கட்டப்பட்டது தொடர்பான வரலாற்று ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள் என்பது பல வரலாற்று ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று குறிப்புகள் தெளிவில்லாமல் இருக்கின்றவாம்.  ஆனால், ராமர் பிறந்த தேதி, நேரம், இடம் அனைத்தும் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

வரலாற்று ஆவணங்களையும், ஆதாரங்களையும் ஆராயாமல், இறை நம்பிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்கிறார், டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர், டி.என். ஜா.  ‘நம்பிக்கைதான் அடிப்படை என்றால், இது இறையியல் தொடர்பான பிரச்னை.  தொல்லியலுக்கு இங்கே வேலையில்லை.  இறையியல் ஆதாரங்களைக் கொண்டுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதவேண்டுமா?’ என்று கேள்வி எழுப்புகிறார் ஜா. (ஆதாரம், மேற்கூறிய கட்டுரை).

‘2003ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய அகழ்வாராய்ச்சி, பாபர் மசூதிக்குக் கீழே, இந்து மதக் கோயில் இருந்ததற்கான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இருப்பதைக் கண்டறிந்து தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.’  இந்த வாதத்தை தொல்லியல் அறிஞர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.  ‘ஏ.எஸ்.ஐயின் ஆய்வறிக்கை வெளிவந்தபோதே அதிலுள்ள பல குறைகளை தாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.  அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை அல்ல இது.’

சுப்ரியா வர்மா, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.  ஏ.எஸ்.ஐ நடத்திய ஆய்வில் பங்கேற்றவர். ‘குறிப்பிட்ட அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது’என்கிறார் இவர்.  அகர்வால், ஷர்மா இருவரும் ஏ.எஸ்,ஐ அளித்த ஆதாரங்களைக் குறிப்பிடவேயில்லை என்பதையும் சுப்ரியா சுட்டிக்காட்டுகிறார்.  இந்துக் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியை கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி கான் குறிப்பிட்டிருப்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் ஏ.எஸ்.ஐ யின் அறிக்கையும்கூட, சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறதே தவிர, இந்துக்கோயிலை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிறுவவில்லை. சிதிலமடைந்த கோயிலை மட்டுமல்ல, விலங்குகளின் எலும்புளைக்கூடத்தான் ஏ.எஸ்.ஐ சர்ச்சைக்குரிய இடத்தில் கண்டறிந்திருக்கிறது.  ராமர் கோயிலில், எலும்புகளுக்கு என்ன வேலை?

இடிக்கப்பட்டது மசூதியே அல்ல, அது ஒரு கும்மட்டம் மட்டுமே என்று வக்கணையாக தர்க்கம் செய்பவர்கள் இன்னொரு உண்மையையும் மறந்துவிடுகிறார்கள்,  அகழ்வாராய்ச்சியில், விலங்குகளின் எலும்புகளோடு இஸ்லாமியர்கள் பயன்படுத்தும்  மண் பாண்டங்களும் சடலங்களும்கூட அல்லவா கிடைத்தன?

இந்தியா போன்ற ஒரு நாட்டில், எங்கே தோண்டினாலும், சிதிலமடைந்த கோயில்களும் தேவாலயங்களும் மசூதிகளும் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதே உண்மை.  வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் வெவ்வோறு காலகட்டத்தில் பல மோதல்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும்கூட நிறையவே காணக்கிடைக்கும். அந்த வகையில், அனைத்து வழிபாட்டு இடங்களும் சர்ச்சைக்குரியதே.  அந்த வகையில், அயோத்தி உள்பட அனைத்து வழிபாட்டு இடங்களிலும் ரத்தத்தின் சுவடுகள் உள்ளன.

மொத்தத்தில், வரலாற்று ஆதாரமும் இல்லை, தொல்லியல் ஆதாரமும் இல்லை. இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது.  அந்த வகையில், இது மனுநீதியின் வெற்றி என்று மட்டுமே சொல்லமுடியும்.

மசூதியை இடித்து இனிப்பு பகிர்ந்து கொண்டாடியதைப் போலவே இதையும் இனிப்பு வழங்கி இந்து தீவிரவாதிகள் கொண்டாடிக்கொள்ளலாம்.   மறைந்து நின்று வாலியைக் கொன்றதன் மூலம், நீதியை நிலைநாட்டிய ராமர், 1949ல் அயோத்தியில் பிறந்து, அலகாபாத் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி, மீண்டும் நீதியை நிலைநாட்டியிருக்கிறார். காந்தி கனவு கண்ட ராம ராஜ்ஜியம் இதோ, மலர்ந்துவிட்டது.

அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து வக்ஃப் சன்னி மத்தியக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறது.  அங்கேயும் நிச்சயம்  ராமர் தோன்றுவார்.

உண்மையான கரசேவை

அயோத்தி பிரச்னையில் ஒரு வழியாக அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. கரசேவகர்களால் உடைக்கப்பட்ட கும்மட்டத்தின் மையப்பகுதி – குழந்தை ராமன் வைக்கப்பட்டிருந்த பகுதி – ஹிந்துக்களுக்கு எனச் சொல்லியிருக்கிறது தீர்ப்பு. நிச்சயமாக மேல் முறையீடு இருக்கும். ஆனால் இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது.

டிசம்பர் 6, 1992  என்பது ஏதோ இந்த நாட்டுக்கே இழைக்கப்பட்டுவிட்ட தேசிய அவமானம் என்றும், முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் ஒரு பெரிய பிரசாரத்தை இந்த தேசத்தில் அறிவுஜீவிகள் மேற்கொண்டார்கள். ஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் சராசரி ஹிந்து, சராசரி இந்தியன் குற்ற உணர்வும் அச்ச உணர்வும் கொள்ளச் செய்தார்கள். பாபர் மசூதி, பாபர் மசூதி என மீண்டும் மீண்டும் ஏதோ தினசரி தொழுகை நடக்கும் ஒரு மசூதியை ஹிந்து வெறியர்கள் உடைத்தெறிந்துவிட்டது போலக் கூக்குரலிட்டார்கள். இதை நம்பிய முஸ்லீம் சகோதரர்கள் இயல்பாக, பாதுகாப்பற்ற உணர்வில் ஆழ்ந்தார்கள். அன்னிய முதலீட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு இரையானார்கள். இது ஒரு விஷச்சுழலை உருவாக்கியது.

தொடக்கம் முதல் ஹிந்துத்துவ இயக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த ஒரு விஷயம், இது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மதப்பிரச்னை அல்ல என்பதுதான். ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்கள் தெளிவாகவே சொன்னார்கள் “ஸ்ரீ ராம ஜென்மபூமியாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்துக்கள் வழிபடும் இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில் செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள் கட்டித்தருகிறோம்.”

இஸ்லாமிய சகோதரர்கள் ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் களமிறங்கினார்கள் இடதுசாரி அறிவுஜீவிகள். அது மசூதிதான் என்றார்கள். ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரம் எதுவுமில்லை என்றார்கள். அதெல்லாம் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்றார்கள். ஜனவரி  1991 இல் மார்க்ஸிய வரலாற்றறிஞர் ஆர்.எஸ்.ஷர்மாவும் 42 அறிவுஜீவிகளும் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டார்கள். “அங்கே கோவில் இருந்ததற்கான சான்றுகளே இல்லை.”

ஹிந்து தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில் பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில் என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்; ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக் குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன ராமர் கோவிலுக்கு ஆதாரங்கள் அளிக்கப்பட்டபோது அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள் இந்த இடதுசாரிகள்.

அகழ்வாராய்ச்சியாளர் பி.பி.லால், ராம ஜென்ம பூமி – பாப்ரி அமைப்பு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர். அவர் அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதை உறுதி செய்தார். இடதுசாரிகளோ, இல்லவே இல்லை அது பொய். லால் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறார் என்றார்கள். அவரது ஒரிஜினல் அறிக்கையில் அவர் அதைக் கூறவே இல்லை என்றார்கள். அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது இதை மறுத்தார். 1977களில் பாப்ரி அமைப்பினையொட்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இருந்த ஒரே முஸ்லீம், தான் மட்டுமே என்பதை நினைவுபடுத்திய அவர் ”பாப்ரி அருகே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்துக்கு நான் சென்று பார்த்தேன். அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதைக் கண்டேன்” என திட்டவட்டமாக கூறினார்.

இடதுசாரிகள் விடவில்லை. நாடு முழுக்கத் தங்கள் இயக்கங்களைப் பயன்படுத்தி, பெரிய பிரசாரம் செய்தார்கள். பொதுமக்களிடம் அல்ல.  ஊடகங்களிலும் அறிவுஜீவிகளிடமும். புத்த கயாவின் கதை என்ன? அதை ஹிந்துக்கள் அழிக்கவில்லையா? ஆக்கிரமிக்கவில்லையா? ஆனால் உண்மை அப்படி அல்ல. வரலாற்றாராய்ச்சியாளர் டாக்டர்.அப்துல் குதோஸ் அன்ஸாரி விளக்கினார்:

பௌத்தம் செழித்து வளர்ந்திருந்த புத்த கயா பகுதியில் இஸ்லாமின் சிலை உடைப்புத் தீவிரம் பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும்.  இதன் விளைவாக அங்கே பௌத்தர்களே இல்லாமல் அழிந்துவிட்ட நிலையில் அங்கு (சிதைக்கப்பட்ட) பௌத்த விகாரங்களை வழிபட, பராமரிக்க ஆளில்லாத நிலையில் பிராமணர்கள் தங்கள் மதக்கடமைக்கு வெளியே சென்று அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் இத்தகைய வரலாற்று நுண் உண்மைகளைக் குறித்துப் பேசிடும் நிலையில் இல்லை இடதுசாரி பிரசாரகர்கள். வலுவான ஊடகமும் அதிகார வர்க்கமும் ஒரு பக்கம் அணிதிரள, அயோத்தியில் ராமனுக்கு ஓர் ஆலயம் இல்லையா என்கிற ஆதங்கம் வெகுஜன மக்கள் மனத்தில் அலையடிக்க ஆரம்பித்தது. இஸ்லாமியர் மனத்திலோ, அது ஒரு மசூதி என்கிற எண்ணம் ஆழப்பதியத் தொடங்கியது. ஆக, இடதுசாரிகள் செய்த வரலாற்று மோசடியே பாப்ரி கும்மட்டம் ஊடகங்களில் மசூதியாக உருமாற்றம் பெற்றது.

இந்த தேசத்தின் தேசிய ஆதங்கத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட அறிவுஜீவி துரோகம் இது. துரோகங்கள் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்தன.

கரசேவகர்கள் உச்சநீதி மன்றத்துக்கு வாக்களித்து அதை மீறிவிட்டார்கள் என்று ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் டிசம்பர் ஆறு 1992 க்குப் பிறகு சோக கீதம் இசைத்தன. இதே கரசேவகர்கள் 1991ல், இதே உச்சநீதிமன்றம் சொன்னதைக் கேட்டு அமைதி காத்தபோது ‘கரசேவை பிசுபிசுத்துவிட்டது; ராமஜென்மபூமி மீட்பு இயக்கம் சக்தி இழந்துவிட்டது’ என்று பேசின.

இத்தனை உணர்ச்சி பூர்வமான விஷயத்தில், லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கும் இருந்து வந்து அயோத்தியில் குழுமியிருக்கும் ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது சில வாரங்கள் தாமதமானால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் தாமதமானால்? தங்கள் பொறுமை அதிகார வர்க்கத்தால் துச்சமாக விளையாட்டுப்பொருளாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டனர் கரசேவகர்கள். அதனால்தான் டிசம்பர் ஆறு 1992இல் பொங்கியெழுந்தனர். அது துரோகமென்றால், துரோகத்தின் முதல் கல்லை இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மை பேசும் அதிகார வர்க்கம் அவர்கள்மீது வீசியது. .

அதன் பின்னர் 2003இல் வழக்குக்காக  அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தது. ஒரு கனேடிய புவியியல் நிறுவனம் முதலில் ஆராய்ந்து, அங்கே பாப்ரி அமைப்புக்குக் கீழே மற்றொரு அமைப்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தது. அகழ்வாராய்ச்சியில் தேவநாகரி கல்வெட்டு உட்பட, சில மனித உருக்கொண்ட விக்கிரகங்களும் கிடைக்க ஆரம்பித்தன. நவீத் யார் கான் என்ற ஒரு பாப்ரி ‘மசூதி’ ஆதரவாளர் அகழ்வாராய்ச்சிக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்திடம் கோர, அது தள்ளுபடி ஆயிற்று.

அரவிந்தன் நீலகண்டன்

ஜூன் மாதத்தில் மீண்டும் ஊடக காமெடி தொடங்கியது. ஜூன் 11 2003 இல் வெளியான செய்திகளில் “பாப்ரி மசூதிக்குக் கீழே ஓர் அமைப்பு இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்பதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளைப் படிக்கும்போது எந்த அளவுக்குத் தங்கள் வாசகர்களை எவ்வித மனச்சாட்சியும் இல்லாமல் மடையர்கள் என இந்தப் பத்திரிகைகள் கருதுகின்றன என்பது புரியும். உதாரணமாக, ’தி ஹிந்து’ தனது செய்தியின் தொடக்கத்தில் இப்படி முழங்கியது:

‘இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் பாப்ரி மசூதியின் கீழே வேறொரு அமைப்பு இருப்பதற்கான எவ்வித அமைப்புரீதியிலான வித்தியாசங்களையும் தான் தோண்டிய 15 புதிய குழிகளிலும் காண முடியவில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.’

ஆனால் விலைச்சலுகையில் புள்ளி வைத்து  சிறிய எழுத்தில் ஆப்பு வைக்கும் சாமர்த்திய வியாபாரியின் நேர்மையின்மையுடன் இறுதியில் அந்த செய்தி சொல்கிறது:

‘அமைப்புரீதியிலான வித்தியாசங்களைத் தான் ஆராய்ச்சி மேற்கொண்ட வேறு 15 குழிகளில் கண்டறிந்ததாக அறிக்கை சொல்கிறது.’

இப்போது நாம் அனைவரும் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டிய கேள்வி -  எது இந்திய மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி? திட்டமிட்டுப் பொய் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு மசூதியாக சிறுபான்மை மக்கள் மனத்தில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா? அல்லது தாக்கப்பட்டு, குண்டடி பட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப்பட்டு, அந்த கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?

படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ எனப் போவான் என்று பாரதி சொன்னான்.

உடைக்கப்பட்டது மசூதி அல்ல; ஒரு கும்மட்டம்தான். அந்த இடம் இந்த தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களிடமும் ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு பெயர் ஸ்ரீ ராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி கடுவன் மள்ளனாருக்கும் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன். ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன் பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை சீக்கியரும் பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை  தென்னிந்தியரையும் இணைக்கும் பண்பாட்டு உன்னதம் ராமன். அவனுக்கு ஆலயம் அமைக்கவே ஓர் அன்னிய அடிமைத்தளையின் சின்னம் அகற்றப்பட்டது. அதைத்தான் அலகாபாத் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

இந்த உண்மையைத்தான் நம் நேர்மையில்லாத ஊடகங்கள் மறைத்தன. மனச்சாட்சியில்லாத அறிவுஜீவிகள் வசை பாடினர். ஆனால் தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மவுண்ட்ரோடு மாவோ செய்திதாளில் வரும் புலம்பல்கள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன. எனவே ஹிந்துத்துவர்களுக்கு இந்தத் தீர்ப்பு அடுத்த சவாலை முன்வைக்கிறது. இத்தீர்ப்பு சொல்லும் உண்மையைப் பொது மக்களிடம் – குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்களிடம்  கொண்டு செல்ல வேண்டும். அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு அமைக்கப்படும் ஆலயம் இந்த தேசத்தின் அனைத்து மக்களின் அன்புடனும், அனைத்து சமுதாயத்தினரின் சமரச நல்லிணக்க மனோபாவத்துடனும் எழுப்பப்படுவதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கரசேவையாக அமையும்.

அரவிந்தன் நீலகண்டனின் ‘சிந்தனை செய்’ என்னும் இப்பத்தி, தினமும் வெளியாகும்.