ஓ காதல் கண்மணி – ஸ்வீட் நத்திங்

Oh-Kadhal-Kanmani-poster-1மணி ரத்னத்தின் காதல் திரைப்படங்கள் பொதுவாகவே இரண்டு வகையானவை. ஒன்று, மிக தீவிரமான சமூகப் பிரச்சினை அல்லது அரசியலின் ஊடே மலர்ந்து வருபவை. இன்னொன்று, குழந்தைத்தனமான காதல் காட்சிகளான ஸ்வீட் நத்திங்கை முதன்மையாக வைக்கும் படங்கள். தீவிரமான பிரச்சினைகளைக் கையாளும் படங்களில்கூட அவர் பிரச்சினையின் தீவிரத்தையும் அதன் அலசலையும் கைவிட்டுவிட்டு அதன் பின்னணியில் காதல் திரைப்படங்களையே எடுத்திருக்கிறார். காதல் திரைப்படங்களுக்கே உரிய அத்தனை அம்சங்களையும் இந்தப் படங்களிலும் காட்டிவிட்டு பிரச்சினையின் பின்னணியில் படத்தை முடித்துவிடுவார். இவற்றிலிருந்து விலகிய மணி ரத்னத்தின் படங்கள் மிகக் குறைவே. எல்லாக் குழந்தைத்தனமான பப்பி லவ் படங்களின் காதல் காட்சிகளிலும் ஏதோ ஒரு வகை ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்.  இப்போது அதே வகையில் குழந்தைத்தனமான காதலை ஒரு படம் முழுக்க, முழுக்க என்றால் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை தந்திருக்கிறார்.

 

இன்றிருக்கும் இயக்குநர்களில் மிக நளினமான அழகான ரசனையான காதல் காட்சிகளை எடுக்கத் தெரிந்த ஒரே இயக்குநர் மணி ரத்னமாக மட்டுமே இருக்கமுடியும். வேறு சில இயக்குநர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் எடுத்திருக்கலாம். ஆனால் இதில் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருபவர் மணி ரத்னம் மட்டுமே. அலைபாயுதேவில் வரும் ‘எங்க உங்களை பிடிச்சிருவேன்னு சொல்லிடுவேனோன்னு பயமாயிருக்கு’ என்பது அந்தக் கால (இன்றும்கூட) கல்லூரி பப்பி காதலர்களின் வேத வாக்கியமானது. அதே போல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் வரும் சிம்ரன் – மாதவன் காதல் காட்சிகள் (அக்காவின் முன்னாலேயே காதலர்கள் கட்டிக்கொள்வது) மிகச் சிறப்பான ஒன்றே. ஒவ்வொரு காதல் காட்சியின் பின்னணியிலும் மணி ரத்னம் மிகக் கடுமையான விமர்சனங்களைப் பெறுவார். குழந்தைத்தனமான காதலை முன்வைத்து அவரவர் வீட்டுக்குத் தெரியாமல் தாலி கட்டிக்கொண்டு மறைத்துக்கொண்டு வாழ்வதாக இருந்தாலும் சரி, ஒரு சிறு பையன் சிறிய பெண்ணைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்வதாக (அஞ்சலி) இருந்தாலும் சரி, மணி ரத்னத்தின் படங்கள் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையைக் கொண்டு வருபவையே. அதிலும் அலைபாயுதே திரைப்படம் தந்த புதிய கலாசாரத்தை நாம் இன்றும் சமூகத்தில் பார்க்கலாம்.

இந்தப் பின்னணியில்தான் ஓ காதல் கண்மணி வருகிறது. படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் வழக்கமான மணிரத்னத்தின் படங்கள் போலவே கதைக்குள் சென்றுவிடுகிறது. ஒரு கிறித்துவத் திருமணத்தின் பின்னணியிலேயே பார்வையாளர்கள் மிகத் தெளிவாக இந்தப் படத்தின் நாயகன் நாயகியின் காதலை உணர்ந்துகொள்கிறார்கள். அக்காட்சி மிகச் சிறப்பாகத் திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிலேயே இருவரின் சிந்தனைகளும் தெளிவாக்கப்பட்டுவிடுகின்றன. பார்வையாளர்களும் இந்தப் படம் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றியது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் இதுவென்றால், படத்தின் மிகப்பெரிய பலவீனம், கதை இந்த ஒரே புள்ளியிலேயே எவ்வித திருப்பமும் இன்றி சுற்றிக்கொண்டிருப்பதுதான்.

ஒரு எளிய காதல் திரைப்படத்துக்குரிய திரைக்கதைக்கான களங்களை மிகத் தெளிவாக அமைத்துக்கொண்ட பின்பும் படம் முன்னோக்கி நகரவே இல்லை. பிரகாஷ் ராஜ் தம்பதியினரின் கதை நமக்கு மிக எளிதாகவே ஒன்றைப் புரியவைத்துவிடுகிறது. மற்ற சாதாரண கமர்ஷியல் திரைப்படங்களிலும் சிவாஜி வகையறா திரைப்படங்களிலும் வருவதைப் போல, மனமொத்த வயதான தம்பதியரைப் பார்த்து காதலர்கள் மனம் திருந்துவதைப் போன்ற எளிய காட்சிதான் இப்படத்தின் உச்சகட்ட காட்சியே என்னும்போது மிகவும் ஏமாற்றமே ஏற்படுகிறது. இதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?

எந்த விஷயத்தை திரைக்களமாக எடுத்துக்கொண்டாலும் அதைவிட்டுவிட்டு காதலைப் பேசுவதையே இந்தப் படத்திலும் மணி ரத்னம் செய்திருக்கிறார். திருமணமின்றிச் சேர்ந்து வாழ்வது தரும் பிரச்சினைகளைப் பற்றியோ அதனால் ஏற்படப்போகும் அனுகூலம் அல்லது அதிர்வுகளைப் பற்றியோ மணி ரத்னம் மூச்சே விடவில்லை. அந்த எல்லைக்குள் எங்கேயும் படம் நுழையவே இல்லை. படம் முழுக்க இருவரும் மூக்கோடு மூக்கு உரசி உடலோடு உடல் உரசி வார்த்தைகளோடு வார்த்தைகள் உரசி பார்வையாளர்களை அலுப்படைய வைக்கிறார்கள். படத்தின் கடைசி நேரக் காட்சிகள்கூட படத்தின் தொடக்க கட்ட காட்சிகளைப் போன்ற காதல் காட்சிகளால் நிறைந்திருக்குமானால் அந்தப் படத்தை எப்படிப் பொறுமையாகப் பார்ப்பது?

தேவையற்ற வகையில் படம் மெதுவாகச் செல்கிறது. மெதுவாக என்றால் மிக மெதுவாக. மாறி மாறி பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் லூட்டி அடித்துக்கொண்டும் இருப்பதுதான் படம் நெடுக. மிக சுமாரான அலைபாயுதே திரைப்படம்கூட ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கைக்குள்ளும் கொஞ்சம் பரபரப்புக்குள்ளும் சென்றது. இப்படம் அந்நிலையை அடையவே இல்லை. மிக கிளிஷேவான கதாபாத்திரங்களாக பிரகாஷ்ராஜும் அவரது மனைவியும், நாயகியின் அம்மாவும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள்தான் கதைக்கு மிக முக்கியமானவர்கள். அவர்களின் படைப்பே இந்த வகையில்தான் இருக்கிறது. ஆனால் அதே சமயம் நாயகனின் தொழிலும் நாயகியின் தொழிலும் அவரவர்கள் வாழ்க்கைப் பார்வையோடு தொடர்புபடுத்தும் வகையில் அமைந்திருப்பது மிகவும் அருமை. இந்த அர்ப்பணிப்பு மற்ற கதாபாத்திர உருவாக்கத்தில் இல்லை.
எப்படியும் சேர்ந்து வாழ்வதை பிரசாரம் செய்து மணி ரத்னம் எடுக்கப்போவதில்லை என்பதை, பிரகாஷ் ராஜ் தம்பதியரை வைத்து படம் ஆரம்பித்த கணத்திலேயே நாம் முடிவு செய்துவிடலாம். கடைசியில் அப்படித்தான் படமும் முடிகிறது. கலாசார காவலர்கள் தங்கள் வேலையைப் பார்க்கலாம். பிரச்சினையில்லை. வழக்கம்போல திருமணத்துக்கு முன்பே உடலுறவு ஒரு பிரச்சினையே அல்ல என்பது இப்படத்திலும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இப்படமே திருமணமின்றிச் சேர்ந்து வாழ்வதைப் பற்றியது என்னும்போது யாரும் ஒன்றும் சொல்லமுடியாமல் போய்விடுகிறது.
துல்கர் சல்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். மணி ரத்னம் கடைசியில் நடிக்கத் தெரிந்த ஓர் அழகான நடிகரைக் கண்டுபிடித்துவிட்டார். தொடர்ந்து இருவரும் சேர்ந்து பல படங்கள் செய்வார்கள் என்று நம்பலாம். நித்யா மேனோன் சில காட்சிகள் அழகாக இருக்கிறார். நிறைய காட்சிகளில் அழகாக நடிக்கிறார். சில காட்சிகளில் தேவைக்கு அதிகமாகவும் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் அலட்டலே இல்லாமல் மிகப் பணிவாக நடித்திருப்பது ஆறுதல். பிரகாஷ் ராஜின் மனைவியாக வரும் நடிகையும் மிக நன்றாக நடித்திருக்கிறார். இவர் முகத் தோற்றமே நம்மை பரிதாபம் கொள்ள வைத்துவிடுகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் இரண்டு பாடல்கள் மிக அருமை. ஓகே கண்மணி பாடல் வீணடிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் பெரும்பாலும் பாடல்களில் ஹம்மிங்குகளே இசைக்கப்பட்டுள்ளன. கேமரா பிரமாதம்.

படம் இத்தனை மெதுவாகச் சென்றிருக்கவேண்டியதில்லை. கடைசி வரை அவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழப் போகிறார்களா அல்லது கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார்களா என்பதுதான் கதையே என்பது பெரிய இழுவையாக உள்ளது. இந்த இரண்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஏதோ இன்னும் கொஞ்சம் தேறியிருக்கும்.

மதிப்பெண்: 39/100

 

பின் குறிப்பு: இந்த விமர்சனம் சுஹாசினிக்கு சமர்ப்பணம். திரைப்படங்களே ஓடாத நிலையில் படம் வந்த நாளே விமர்சனம் செய்யவேண்டாம் என்று மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்தேன். சுஹாசினியின் தேவையற்ற கருத்தால் முதல்நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு இந்த விமர்சனத்தை எழுதுகிறேன். மணி ரத்னம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என்பதால் இத்தோடு விட்டு வைக்கிறேன். இல்லையென்றால்…!

ஜீவனற்ற ஜீவா

Jeeva-12-900x0

ஜீவா என்ற இளைஞனை மையமாகக் கொண்ட கதை. ஜீவாவுக்கு மூன்று வயதான போதே அவனுடைய அம்மா இறந்துவிடவே, பக்கத்தில் இருக்கும் கருணையே உருவான கிறிஸ்தவர்களின் வீட்டில் வளர்கிறார்.  ஜீவாவுக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம். ஆனால், அவனுடைய அப்பாவோ (மின்சாரவாரியத்தில் பணிபுரிகிறார்) அவனை ஒழுங்காகப் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.  கிறிஸ்தவ வளர்ப்புத் தந்தை அவனுடைய கிரிக்கெட் கனவுகளுக்கு உதவுகிறார். இதனிடையில் ஜீவாவின் பக்கத்து வீட்டில் இன்னொரு கிறிஸ்தவ குடும்பம் வந்து சேர்கிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஜென்னிக்கும் ஜீவாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது.
இருவருடைய பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஜென்னியின் அப்பா அவளை வேறொரு ஊரில் இருக்கும் சொந்தக்காரருடைய வீட்டுக்கு அனுப்பி அங்கு தங்கிப் படிக்கச் சொல்கிறார். காதலியைப் பிரிந்ததால் ஜீவா தாடி வளர்த்து, தண்ணி அடித்து வாழ்க்கையையே தொலைக்கப் பார்க்கிறார். ஜீவாவுக்குப் பிடித்த இன்னொரு விஷயத்தில் அவனுடைய மனதைத் திருப்பினால்தான் அவனைக் காப்பாற்ற முடியும் என்று கிறிஸ்தவ தந்தை உண்மையான தந்தையிடம் சொல்கிறார். அதன்படியே அவரும் மகனை கிரிக்கெட் அகடமியில் சேர்த்துவிடுகிறார். ஜீவா மளமளவென கிரிக்கெட்டில் திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறுகிறான்.  அங்கு ரஞ்சித் என்பவனுடைய நட்பு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து விளையாடி பல போட்டிகளை ஜெயிக்கிறார்கள். ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாட இருவரும் தேர்வாகிறார்கள்.

இதனிடையில் ஜீவா தன்னுடைய முதல் காதலி ஜென்னியை மீண்டும் சந்திக்கிறான். ஜீவா கிறிஸ்தவராக மதம் மாற வேண்டும். கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஏதாவது ஒரு வேலையில் சேரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜென்னியின் அப்பா திருமணத்துக்கு சம்மதிக்கிறார். ஜீவா இந்து என்பதால் மதம் மாறுவதில் அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கிரிக்கெட்டை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. எப்படியும் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று தொடர்ந்து முயற்சிசெய்கிறான்.

ஆனால், தமிழ் நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான பார்த்தசாரதி பிராமணர் அல்லாதவர்களை நைஸாக ஓரங்கட்டுவதில் கை தேர்ந்தவர். ஜீவாவையும் ரஞ்சித்தையும் அடுத்த கட்டத்துக்குப் போகவிடாமல் முடக்குகிறார். இதனால் மனம் வெதும்பும் ரஞ்சித் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறான். ஜீவாவும் கிரிக்கெட்டில் சாதிக்காமல் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சொல்லிவிடுகிறான். இப்படியாக நண்பனையும் காதலியையும் இழந்து லட்சியத்தையும் அடைய வழியின்றித் தவிக்கும் நிலையில் அவனுக்கு ஓர் அதிர்ஷ்டம் அடிக்கிறது. கிரிக்கெட் உலகில் சி.பி.எல். என்ற போட்டிகள் ஆரம்பிக்கின்றன. ஜீவாவின் விளையாட்டுத் திறமையைப் பார்த்து ராஜஸ்தான் அணியின் கேப்டனான இர்ஃபான் அவனைத் தனது அணிக்கு எடுத்துக்கொள்கிறான். ஜீவா அந்தப் போட்டியில் அபாரமாக ஆடி அதன் மூலம் இந்திய அணியில் சேரும் வழியை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறான். பிராமண சதியால் முடங்கிப் போன தன் நண்பனை நினைத்து வருந்தியபடி பேட்டி கொடுக்கிறான். இப்படிப் பேசுவதால் தனது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியானாலும் பரவாயில்லை என்று தைரியமாகப் பேசுகிறான். படம் அதோடு முடிகிறது.

இந்தப் படத்தின் அடிப்படையான குறைபாடுகள் என்னவென்றால், அது பிராமண சாதி உணர்வின் மீதான விமர்சனமாகவும் வரவில்லை. கிரிக்கெட்டின் ஆன்மாவைத் தொட்டுக்காட்டுவதாகவும் வரவில்லை. எளிய சூழலில் பிறந்து வாழ்க்கையில் வெற்றிபெற்றவனின் கதையாகவும் உருவாகியிருக்கவில்லை. எல்லாமே தனித்தனியாக அழுத்தமாக விரிவாக சித்திரிக்கத் தகுந்தவையே. ஆனால், இந்தப் படத்தில் மூன்றுமே படு மேலோட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் எந்தக் கதையை எடுத்தாலும் அதில் காதலைச் சேர்க்காமல் எடுக்கத் தெரியாது. காதல் நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உணர்வு என்பதால் அது இடம்பெறுவதில் தவறில்லை. ஆனால், அது கதையின் குவி மையத்தைச் சிதைப்பதாக இருக்கக்கூடாது. இந்திய அணிக்குத் தேர்வாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒருவனுடைய வாழ்க்கையில் இப்படி சாவகாசமாக காதல் கத்திரிக்காய்களுக்கெல்லாம் இடம் இருக்கவே முடியாது. சர்வதேச அளவில் ஒரு துறையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் பத்து வயதில் இருந்தே உங்களுடைய அனைத்து சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் முட்டைகட்டிவைத்துவிட்டு உங்கள் கனவைத் துரத்தியபடி கண்மூடித்தனமாக ஓடியாகவேண்டியிருக்கும். வேண்டுமானால் உங்களுடைய கனவை நிறைவேற்ற ஏதேனும் ஒரு பெண் உறுதுணையாக இருக்கலாம். அவளுடன் ஆடிப்பாடி, கூடில் குலவி கொஞ்சுவதெல்லாம் உங்கள் கனவு நனவான பிறகுதான் சாத்தியமாகும். தேசிய அளவில் வெற்றி பெறுவது என்பது அத்தகைய தவத்தைக் கோரும் ஒன்று. ஏதோ பார்டைம் ஜாப் போல் அதைச் செய்ய முடியாது. இந்தப் படத்தில் ஜீவா – ஜென்னி காதல் வழக்கமான காதல் படங்களைப்போல் விலாவாரியாகச் சித்திரிக்கப்படுகிறது. அது முறிந்த பிறகே நாயகன் தன் லட்சியம் ஞாபகம் வந்து அதன் பின்னால் ஓட ஆரம்பிக்கிறான். மீண்டும் காதல் ஞாபகம் வந்ததும் கிரிக்கெட்டை மூட்டைகட்டிவிட்டு டூயட் பாடப் போய்விடுகிறான். இப்படியாக லட்சியத்தில் அவனுக்கே அக்கறையில்லையென்றால் பார்க்கும் நமக்குமட்டும் எப்படி வரும்?

அடுத்ததாக பிரமண சதியினால் ஜீவாவும் ரஞ்சித்தும் தங்கள் கனவை அடைய முடியாமல் தவிப்பதாகக் காட்டப்படுகிறது. கிரிக்கெட் உலகில் பிராமண ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் அதைவிட அதிகமாக இருப்பது ரீஜனல் பாலிடிக்ஸ். அதிலும் மும்பையின் மேலாதிக்கம் இந்திய கிரிக்கெட்டில் மிக அதிகம். அது பிற மாநிலங்களை வெகுவாக ஓரங்கிட்டிவந்திருக்கிறது. உண்மையில் தமிழக பிராமன கிரிக்கெட் வீரர்கள்கூட அந்த வட இந்திய பாலிடிக்ஸினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘பெரியார் மண்’ என்பதால் பிராமணர்-பிராமணர் அல்லாதார் என்ற கவர்ச்சிகரமான கருவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர். அதையும் வெகு மேலோட்டமாகக் காட்டியிருப்பதால், ரஞ்சித் கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்ளும்போது பரிதாபத்துக்கு பதிலாக எரிச்சலே வருகிறது.

இந்தியா கிரிக்கெட்டில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு. பிராமண சாதி அரசியலால் அது எந்தப் பின்னடைவையும் சந்தித்திருக்கவில்லை. சர்வதேசப் போட்டிகளில் எந்தப் பிரிவின் டாப் டென்னை எடுத்தாலும் அதில் நாலைந்து இந்திய சாதனைகள் நிச்சயம் இருக்கும். வேண்டுமானால், தயிர் சாத அணுகுமுறையினால் வேகப்பந்து வீச்சாளர்களும் அதிரடி வீரர்களும் அதிகம் தோன்றியிருக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கலாம். ஆனால், அதற்குக்கூட   பிராமண சாதியைக் குற்றம் சொல்லமுடியாது. நேற்றைய டெஸ்ட் போட்டி என்பது உலகம் முழுவதுமே நிதானமான அணுகுமுறையைக் கொண்டதுதான். பிற சாதிகள் மீதான விமர்சனம் என்றால் அந்த சாதியைச் சேர்ந்தவர்களாலேயே வைக்கப்படுவதாகக் காட்டியாகவேண்டியிருக்கும். அல்லது அந்த சாதியில் இருக்கும் நல்லவர்களையும் காட்டியாகவேண்டியிருக்கும். பிராமணர் மீதான விமர்சனம் என்றால் ‘கலைச் சுதந்தரத்துடன்’ இயங்க முடியும் என்பதால் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் (ஜீவா என்ற பெயர் இருந்தும் அவன் பிராமனராக இருப்பானோ என்று தோளில் தட்டிக் கொடுக்கும் சாக்கில் பார்த்தசாரதி பூணூல் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கும் அபத்தக் காட்சியும் உண்டு.  நுட்பமாகக் காட்சிப்படுதறாராமாம்).ஆனால், பிராமண சாதி உணர்வினால் நாம் எந்தப் பெரிய இழப்பையும் சந்திக்காத ஒரு துறையில் அதைக் காட்டியிருப்பதால் திரைக்கதை வலுவிழந்து நிற்கிறது.

உண்மையில் கிரிக்கெட்டின் ஆன்மா என்பது முற்றிலும் வேறானது. அது இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை முற்றாக இடம்பெயர்த்திருக்கிறது. சமகால விளையாட்டுகளில்கூட, துப்பாக்கிச் சுடுதல், குத்துசண்டை, ஹாக்கி, கபடி என இந்திய அணி உலக அளவில் வெற்றி பெற்ற போட்டிகளைக்கூட அது ஓரங்கட்டியிருக்கிறது.  தங்கப்பதக்கங்கள் பெற்ற குத்துச்சண்டை வீரரும், கபடி வீரரும் அன்றாடத் தேவைகளுக்காக அடிமாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்க, ஊழலிலும், சூதாட்டத்திலும், குடி கேளிக்கைகளிலும் திளைக்கும் கிரிக்கெட் வீரர்  ஒரு ஹீரோவாகப் போற்றப்படும் அபத்தங்களை இங்கு காண முடிகிறது. கிரிக்கெட் மீதான விமர்சனத்தை இந்தக் கருக்களில்தான் அழுத்தமாக முன்வைக்கமுடியும். அதற்கு கிரிக்கெட் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்திருக்கவேண்டும்.

இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றால் கிரிக்கெட் தெரிந்த ஒருவரைக் கதாநாயகனாக ஆக்கியிருக்கிறார்கள். அதுவே அந்த கிரிக்கெட் காட்சிகளை ஓரளவுக்கு ரசிக்கவைக்கிறது. தமிழ் திரையுலகில் காணக்கிடைக்காத செய்நேர்த்தி இது.

இந்தப் படத்திலும் மறைமுக மத அஜெண்டாக்கள் இருப்பதாகச் சிலர் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. சாதி உணர்வு பிராமணர்களுக்கு மட்டும்தானே உண்டு; எனவே பிரதான வில்லன் நெற்றியில் சிவந்த திருமண் அடையாளத்துடன் வருகிறார். ஜம்சேத் ஆர்யா படத்தை வாங்கி வெளியிட்டிருப்பதால் ஜீவாவுக்கு உதவும் ராஜஸ்தான் கேப்டன் இர்ஃபானாக இருந்துதானே ஆகவேண்டும். அப்பறம் கதாநாயகனான இந்து ஜீவாவின் அம்மா மூன்று வயதிலேயே இறந்துவிட்டதால் கருனையின் ஹோல்சேல் ப்ரொப்பரைட்டர்களான கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் அவர் வளர்ந்து வருவதும் மிகவும் இயல்பானதுதானே. எனவே, படத்தில் எந்தவித மத காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ கிடையாது. வதந்திகளை நம்பாதீர்.

வீரம்

veeram-ajith-movie-new-stills

தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல…

தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல…

தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல…

தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல…

தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல…

தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல…

0

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதுவதென்றால், மொத்த பக்கத்துக்கும் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். ஆனால், தமிழ் கூரும் நல்லுலகம் இப்படியான அல்டிமேட் விமர்சனத்துக்குத் தயாராகவில்லையென்பதால், 247 எழுத்துகளைக் கலைத்துப் போட்டு முயன்றவரை எழுதுகிறோம். ஆனால், தல… தல….தல… இதற்கு மேல் எதைச் சொல்லியும் இந்தப் படம் தந்த உணர்வை உணர்த்திவிடமுடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறோம்.

ஊருக்குள் அடி தடி வன்முறையில் ஈடுபட்டு கவுரவமாக வாழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார். அடி தடி என்றாலே வெறுக்கும் நாயகியைக் காதலிக்க ஆரம்பித்ததும், அனைத்தையும் தாண்டிப் புனிதமான அந்தக் காதலுக்காக, அடி தடியை விட்டுவிடுகிறார். ஆனால், மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லையே… நாயகியையும் அவருடைய குடும்பத்தையும் கொல்ல கொலைவெறியுடன் அலைகிறான் வில்லன். அவனிடமிருந்து நாயகியின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நாயகன் வன்முறையைக் கையில் எடுத்தே ஆகவேண்டும். வன்முறையே வேண்டாம் என்று சொல்பவர்களைக் காப்பாற்றக்கூட வன்முறை தேவைப்படுகிறது!

இந்த அருமையான ஒன் லைனுக்கு பரபரவென ஒரு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் பாருங்கள்… ஆவ்(வே)சம்.

முதல் பாதி படு ஜாலியாகப் போகிறது. இடையிடையே அஜீத்தின் ஆக்‌ஷன் ஹீரோ இமேஜை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் காட்சிகள் கன கச்சிதமாக வருகின்றன. பஞ்ச் டயலாக்குகளும் அஜீத்தின் படு கம்பீரமான குரலும் வாய்ஸ் மாடுலேஷனும் ஒலிப்பதிவும் பட்டையைக் கிளப்புகின்றன.

அஜீத்தின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இயக்குநர்களுக்கும் அவரை எப்படிக் காட்டவேண்டும் என்பது நன்கு தெரிந்துவிட்டிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அதைவிட சண்டைக் காட்சிகளுக்கு முந்தைய லீட்கள் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவையே அதிரடி சண்டையை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கின்றன.

தவறு நடக்கும்போது தட்டிக்கேட்க தல அங்கு வந்துவிடுவார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவர் எப்படி அந்த இடத்துக்கு வருகிறார் என்பதுதான் இந்தப் படத்தை வெகு சுவாரசியமானதாக ஆக்கியிருக்கிறது.

ஒரு காட்சியில் அவருடைய நான்கு தம்பிகளை வில்லன் டாட்டா சுமோவில் அருவாளுடன் துரத்துவான். நால்வரும் உயிரைக் கையில் பிடித்தபடியே ஊரைவிட்டு வெளியே ஓடுவார்கள். எதிரும் புதிருமாக சுமோக்கள் அவர்களைச் சுற்றி வளைத்ததும் காலியாகக் கிடக்கும் வயல் வழியாக விழுந்தடித்து அங்கிருக்கும் பிரமாண்ட மரம் ஒன்றை நோக்கி ஓடுவார்கள். சுமோவில் துரத்திய வில்லனின் ஆட்கள் அருவாளையும் வேல் கம்பையும் எடுத்துக்கொண்டு பாய்வார்கள். பயந்து ஓடிய நான்கு தம்பிகளும் மரத்தை நெருங்கியதும் சிரித்தபடியே திரும்புவார்கள்.

வில்லன் சற்று அதிர்ந்து மிரட்டும் தொனியில் கேட்பான்… நாலு பேரும் ஏண்டா நின்னுட்டீங்க…

நாலு பேர் இல்லடா… நாங்க அஞ்சு பேரு…

அஞ்சு பேரா… யார்றா அந்த அஞ்சாவது ஆளு…

அஞ்சாவது ஆளு இல்லடா… யாருக்குமே அஞ்சாத ஆளு என்று ஒரு தம்பி பஞ்ச் டயலாக் பேசுவார்.

அந்த நேரத்தில் மரத்தில் பின்னால் இருந்து ஊஞ்சலில் ஆடியபடியே ஸ்லோமோஷனில் தல ஃப்ரேமுக்குள் நுழைவார் பாருங்கள்… தியேட்டரே வீரத்தில் வீறீட்டு எழுந்தது (இனிமேல் தல படம் என்றால் தியேட்டர்காரரிடம் இந்த அரங்கம் எவ்வளவு ஹெர்ட்ஸ் கூக்குரலைத் தாங்கும் சக்தி கொண்டது என்பதைக் கேட்டு உறுதி செய்துகொண்டு செல்லவேண்டும்).

அதுபோல் ரயில் சண்டை, லெவல் க்ராஸிங் சண்டை, க்ளைமாக்ஸ் சண்டை ஆகியவையும் அவற்றுக்கு முந்தைய பில்டப்களும் படத்தை எங்கோ கொண்டு செல்கின்றன. அஜீத்தால் மட்டுமே முடியும்படியான ஸ்க்ரீன் டாமினேஷன்.

சந்தானம், தம்பி ராமையா வரும் காட்சிகள் அதிரடியான ஆக்‌ஷன் படத்துக்கு இதமான நகைச்சுவை வடிகாலாக இருக்கின்றன.

அப்பறம் தமன்னா… தேவலோகத்தில் ஏதோ ஒரு சிறிய்ய தவறு செய்ததற்காக சபிக்கப்பட்டு பூமிக்கு வந்திருக்கும் அப்சரஸ்களில் ஒருவராகத்தான் இருக்கவேண்டும். இல்லையென்றால் இப்படியான மாந்தளிர் மேனியுடன் ஒருவர் மானுடருக்குப் பிறக்க வாய்ப்பே இல்லை. குட்டையோ குட்டை பாவாடைகள், சீ த்ரூ புடவைகள், காற்றில் பறந்து போய்விடும் துப்பட்டாக்கள் என இறுக்கிப் பிடித்த உடம்புக்கு இதமான ஆடைகளை அணிந்து அவர் திரையில் சில காட்சிகளில் வருகிறார். போகிறார். ஆனால், நம் மனத்திரையில் அவருடைய பிம்பம் விட்டு விலகுவதுமில்லை. நம்மைக் கைவிடுவதுமில்லை.

பொங்கல் நேரத்தில் வெளியாகிற படம் என்பதால், விவசாயிகள் பிரச்னையைப் பற்றிய சில பஞ்ச் டயலாக்குகள், காட்சிகள் என போகிற போக்கில் இடம்பெறுகின்றன. அஜீத் அப்படி கஷ்டப்பட்டு சமூக அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள  வேண்டியதே இல்லை. அவரைப் போன்றவர்கள் திரையில் தோன்றி மக்களை மகிழ்விப்பதே மிகப் பெரிய சமூக சேவை.

இசையைப் பற்றிச் சொல்வதென்றால், டிரெய்லரில் ஜனகணமன சாயலில் கம்பீரமாக ஒலிக்கும் அந்த ஒரு பிட்டே போதும்… அஜீத்துக்கு இணையாக அத்தனை மிரட்டலுடன் இருக்கிறது. பாடல்கள், அதற்கான நடனம் என எல்லாமே மிகுந்த ஒத்திசைவுடன் இடம்பெற்றிருக்கின்றன.

வசனங்கள் எல்லாம் அருவாள் போல் கூர்மை. தேவர்ன்னு நினைச்சா தேவர்… வன்னியர்ன்னு நினைச்சா வன்னியர்… தலித்துன்னு நினைச்சா தலித்… ஐயர்ன்னு நினைச்சா ஐயர்… நீ என்ன எப்படி நினைக்கறியோ அந்த சாதிடா நான்… என்று கர்ஜிக்கிறார் ஒரு காட்சியில்.

என் ஆட்களை அடிக்கணும்னா என்னை அடிச்சுப் போட்டுப் போனாத்தாண்டா அது முடியும். தைரியம் இருந்தா தொட்டுப் பார்றா என்ற எளிய வசனத்துக்கு இத்தனை வலிமையைக் கொடுக்க, நாடி நரம்பு ரத்தம் புத்தின்னு எல்லாத்துலயும் மாஸ் ஊறியிருக்கற ஒருத்தராலதான் முடியும்.

ஆரம்பம் படத்தின் மயக்கமே தெளியாத நிலையில் இப்படி உடனே வீரம் என்று புறப்பட்டிருக்கிறாரே என்ற கவலை படம் ஆரம்பிக்கும் வரை இருந்தது. ஆனால், இந்தக் கதை-திரைக்கதையின் மீதான தன்னம்பிக்கைதான் அவரைத் துணிந்து களமிறங்கி ஜெயிக்கவும் வைத்திருக்கிறது.

தலை கால் தெரியாம ஆடறவனுங்க எந்த ஜில்லால இருந்தாலும் இந்தப் படத்தைப் பார்த்தா தல யார் அப்படிங்கறதைத் தெரிஞ்சிக்கிட்டு தலை தெறிக்க ஓடிருவானுங்க.

என்ன நாஞ் சொல்றது..!

அஜீத் ரசிகர் மதிப்பெண் : 90/100

பொது பார்வையாளர் : 9/10.

ஏ. ஆர். ரஹ்மான்: இசையின் நவீனம்

The more I compose, the more I know that I don’t know it all!

–    A. R. Rahman (The Times of India, 27th August 2013)

topimg_19280_ar_rehman_600x400ஏ. ஆர். ரஹ்மான் என்றழைக்கப்படும் அல்லா ரக்கா ரஹ்மான் இந்தியத் திரை இசையின் நவீன முகம். இரு தசாப்தங்களாக இந்த தேசத்தின் இசை ரசனையில் – குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் – வலுவான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பவர்.

சென்னையில் ஓர் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த திலீப் குமார் தான் இன்று சர்வதேச அளவில் தன் இசைச்சிறகுகளை விரிந்திருக்கும் இந்த ரஹ்மான். பிறப்பால் இந்துக்கள்தான் என்றாலும் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு சில‌ சிக்கல்கள் தீர்ந்த நம்பிக்கையில் இஸ்லாத்திற்கு மாறியது அவர் குடும்பம்.

ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகரும் ஒரு புகழ் பெற்ற இசையமைப்பாளரே. அவர் பெரும்பாலும் பணியாற்றியது மலையாளப் படங்களில். ரஹ்மானுக்கு முதலில் இசை பயிற்றுவித்தவர் அவரே. ஆனால் சிறுவயதிலிருந்தே வீட்டில் இசைக் கருவிகளும் சினிமாக்காரர்களும் சூழ வாழ நேர்ந்தால் இசையின்மீதும் சினிமாவின் மீதும் பெரிய ஆர்வம் ஏதும் ரஹ்மானுக்கு ஏற்பட‌வில்லை. ஒரு மின்பொறியாளர் ஆக வேண்டும் என்பதே அவரது சிறுவயதுக் கனவாக இருந்தது.

பிற்பாடு இசையின்மீது ஆர்வம் வந்தது இரு காரணங்களால். ஒன்று அவரது தந்தை வைத்திருந்த நவீன மின்னணு இசைக் கருவிகள். ரஹ்மானின் ஆர்வம் மின்பொறியியல் என்பதால் இந்தக் கருவிகள் அவரை வசீகரித்தன. அதாவது ஒரு தொழில்நுட்ப மாணவனாகவே அவர் இசைக் கருவிகளை அணுகினார். தொடக்க காலம் முதல் இன்று வரை அவரது இசையின் பிரதானக்கூறும் தனித்துவமும் இந்தத் தொழில்நுட்பத் துல்லியமே என்பதற்கான பின்புலக் காரணம் இதுதான்.

இரண்டாவது காரணம் ரஹ்மானின் பத்தாவது வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட, வீட்டின் மூத்த ஆண் என்ற வகையில் குடும்பச் சுமை அவர் தலையில் விழுந்தது. பள்ளி சென்று கொண்டிருந்த அந்த வயதில் கற்றிருந்த ஒரே விஷயமான இசையைத்தான் அவர் தொழிலாகத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

ரஹ்மான் என்ற‌ அற்புதம் நிகழ்ந்தது சூழலின் அழுத்தம் ஏற்படுத்திய விபத்தே.

*

இசைக் குழுக்களில் வாசிப்பவராகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

இந்த ஆரம்பகட்டத்தில் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், எல். சங்கர் ஆகியோரிடம் ரஹ்மான் பணியாற்றியிருக்கிறார். இளையராஜாவிடம் (விஜய் மேனுவல் என்பவரின் கீழ்) கீபோர்டிஸ்டாக இருந்த‌போது ரஹ்மான் வாசித்த புன்னகை மன்னன் தீம் ம்யூஸிக் மிகப் பிரசித்தம்.

சிறுவயதில் தூர்தர்ஷனின் வொன்டர் பலூன் என்ற குழந்தைகள் நிகழ்ச்சியில் ஒரே சமயம் நான்கு கீபோர்ட் வாசித்திருக்கிறார். மலேஷியா வாசுதேவனுடன் இணைந்து டிஸ்கோ டிஸ்கோ, மால்குடி சுபாவுடன் இணைந்து ஸெட் மீ ஃப்ரீ, டீன் இசை மாலை என்ற சூஃபி இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தார். 90களில் அவர் இசையமைத்த‌ சில விளம்பரங்கள்: 1) http://www.youtube.com/watch?v=e4Rch0KTRmc 2) http://www.youtube.com/watch?v=lBj4FampoE4 3) http://www.youtube.com/watch?v=kEHQRuE_7ck 4) http://www.youtube.com/watch?v=7TVmI9OJ_MM 5) http://www.youtube.com/watch?v=xN9b4qIGoOE

1992ல் மணி ரத்னத்தின் இயக்கத்தில் கே. பாலச்சந்தர் ஒரு படம் தயாரித்தார். அப்போது இருவருமே இளையராஜாவுடன் – இசை அல்லாத வேறு தனிப்பட்ட காரணங்களால் – கசப்புற்று இருந்தனர். பாலச்சந்தர் ஏற்கெனவே மரகதமணியை (எம். எம். கீரவாணி) வைத்துப் படங்களுக்கு இசைய‌மைத்துக் கொண்டிருந்தார்.

இருவரும் இணைவதால் மணி ரத்னமும் இம்முறை இளையராஜாவை விடுத்து வேறொரு இசையமைப்பாளரைத் தன் படத்துக்குப் பயன்படுத்தத் தீர்மானித்தார்.

ராஜீவ் மேனன் அப்போது திரைப்பட ஒளிப்பதிவாளராக வந்திருந்த புதிது. அது போக‌, விளம்பரப் படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது விளம்பரப் படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருந்தார். மணி ரத்ன‌த்திடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார் மேனன். அந்தத் திரைப்படம் ரோஜா.

ரஹ்மான் திரை வாழ்க்கை தொடங்கியது. ஓர் இசைச் சகாப்தத்தின் ஆரம்பம் அது.

ரோஜாவின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுஜாதாவிடம் அப்போது ரஹ்மானை அறிமுகம் செய்திருக்கிறார் மணி ரத்னம். பாடல்களைக் கேட்டு விட்டு “புகழுக்குத் தயாராகுங்கள்” என்று சொல்லி இருக்கிறார் சுஜாதா. பிற்பாடு நடந்தது அதுதான்.

ரோஜா என்ற‌ அந்த‌ முதல் முயற்சியிலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார் ரஹ்மான். அந்த விருதிலும் சுவாரஸ்யம் ஒன்று இருக்கிறது. 1992ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதின் இறுதிப் போட்டியில் தேவர் மகனும் ரோஜாவும் இருந்தன. இரண்டு படங்களும் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம நிலையில் இருந்தன. பாலு மகேந்திரா தான் விருதுக் குழு தலைவர். அவர் போடும் ஓட்டே விருதைத் தீர்மானிக்கும் என்ற நிலை. “ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மாமலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன். தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன்” என்று சொல்கிறார் பாலு மகேந்திரா (இந்திர விழா என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் இதைப் பகிர்ந்து கொண்டார்).

முதல் படத்திலேயே நாடறிந்த இசையமைப்பாளர் ஆனார் ஏ. ஆர். ரஹ்மான்.

*

ஏ. ஆர். ரஹ்மான் சினிமாவில் நுழைந்து 21 ஆண்டுகள் ஆகிறது. அவரது இசைப் பயணத்தை நான்கு முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் தமிழ் நாட்டில் பிரபலமடைந்தார். இரண்டாம் பகுதியில் இந்திப் படங்களின் மூலம் வட இந்தியாவில் அறிமுகமானார். மூன்றாம் பகுதியில் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். நான்காம் பகுதியில் சர்வதேசிய‌ அளவில் பிரசித்தி பெற்றார்.

1992 முதல் 1995 வரை. ரோஜா, புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்குச்சீமையிலே, திருடா திருடா, டூயட், மே மாதம், காதலன், கருத்தம்மா, பம்பாய், இந்திரா ஆகிய படங்களுக்கு இசை அமைத்தது இந்த ஆரம்ப ஆண்டுகளில் தான். என் வரையில் ரஹ்மானின் ஆகிச் சிறந்த படைப்பூக்கம் வெளிப்பட்ட‌ காலகட்டம் இதுவே.

1996 முதல் 2000 வரை ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா வழியாக இந்தியில் பிரவேசித்தாலும் தாள் (தாளம்), தில் சே (உயிரே) தவிர அங்கே நிறைய படங்கள் பணியாற்றவில்லை. தொடர்ந்து தமிழ் படங்களில் கோலோச்சினார். மின்சாரக் கனவுக்காக தேசிய விருது பெற்றார். வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்டார். ரஜினி படங்களுக்கும் (முத்து, படையப்பா), கமல் படங்களுக்கும் (இந்தியன், தெனாலி) இசையமைத்தது இந்தக் காலகட்டத்தில் தான். லவ்பேர்ட்ஸ், காதல் தேசம், மின்சாரக் கனவு, இருவர், ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, என் சுவாசக் காற்றே, காதலர் தினம், சங்கமம், ஜோடி, தாஜ்மஹால், முதல்வன், அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

2001 முதல் 2007 வரை. லகான், ரங் தே பசந்தி, யுவா (ஆய்த எழுத்து) ஸ்வதேஸ், குரு, ஜோதா அக்பர், ஜானே து யா ஜானே நா, கஜினி, பாம்பே ட்ரீம்ஸ் (ஆல்பம்) ஆகிய படங்களின் வழி இந்தித் திரையுலகில் ரஹ்மான் இசைச் சக்கரவர்த்தியாக உயர்ந்த ஆண்டுகள் இவை. லகான், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்கு தேசிய விருதுகள் பெற்றார். க்ரெய்க் ஆம்ஸ்ட்ராங் என்ற ஸ்காட்லாண்ட் இசை அமைப்பாளருடன் இணைந்து சேகர் கபூரின் Elizabeth: The Golden Age படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். பாபா, பாய்ஸ், சில்லுனு ஒரு காதல், வரலாறு, சிவாஜி ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

2008 முதல் இன்று வரை. உலக‌ அளவில் ரஹ்மான் புகழ் பெற்றதும் Slumdog Millionaire படத்துக்காக கிராம்மி, ஆஸ்கர், பாஃப்டா, கோல்டன் க்ளோப் ஆகிய சர்வதேசிய விருதுகளை அவர் பெற்றதும் இந்தக் காலத்தில் தான். சக்கரக்கட்டி, டெல்லி 6, விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன், ராக்ஸ்டார், 127 Hours, கடல், மரியான் ஆகிய படங்களுக்கு இந்த ஆண்டுகளில் இசைய‌மைத்தார்.

தற்போது கோச்சடையான், ஐ, சட்டென்று மாறுது வானிலை, காவியத் தலைவன், ஹைவே, பாணி, விண்டோ சீட், The Hundred-Foot Journey, Million Dollar Arm, Mumbai Musical ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மானின் சொந்தத் திரைக்கதையில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன‌.

இன்னும் அவர் நிறைய தூரங்கள், பிரதேசங்கள் செல்வார். பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிப்பார். காலம் காத்திருக்கிறது; ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

*

சந்தேகமே இல்லாமல் இளையராஜா என்ற இசை மேதமைக்கு அடுத்தபடியாக இந்தியா சினிமா கண்ட ஆகச்சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

இளையராஜாவுடையதைப் போல் ஆன்மாவிலிருந்து இயல்பாய்ப் பிரவாகிக்கும் ஊற்று அல்ல ரஹ்மானின் இசை; அது ஒரு க்ராஃப்ட். ஒரு விஞ்ஞானம்; ஒரு கணிதம்; திட்டமிட்ட, துல்லியமான கலை; மிக‌ உயிர்ப்புள்ள தொழில்நுட்பம்.

ரஹ்மான் கடுமையான உழைப்பாளி. ஒரு பாடலுக்கென மனதில் தோன்றும் ஒரு மிகச் சிறிய பொறியிலிருந்து தொடங்கி, அதைக் கவனமாய்ச் செதுக்கி, நுட்பமாய் மெருக்கேற்றி, அழகாய் அலங்கரித்து மிகச் சிறப்பான படைப்பாய்த் தருகிறார்.

இதன் காரணமாகவே அவரது பாடல்களில் பல அடுக்குகள் சாத்தியமாகிறது. நாம் நூறாவது முறை கேட்கும் போதும் ஒரு புதிய விஷயம் அகப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அதனால் தான். அவர் அப்பாடலில் தன் நூறாவது முயற்சியில் அந்த வியப்பைச் சொருகி இருக்கக்கூடும். அவ்வளவு தூரம் சிறந்த படைப்பாக வர ரஹ்மான் மெனக்கெடுகிறார். அதனால் தான் அவர் பொதுவாய் இசை அமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார். போன்ஸாய் உருவாக்கும் ஒரு ஜப்பானிய தோட்டக்காரனின் பொறுமையையும் துல்லியத்தையும் இதனோடு ஒப்பிடலாம்.

ரஹ்மானின் பிற்காலத்திய பாடல்கள் பெரும்பாலும் நமக்கு முதல் கேட்டலில் அவ்வளவாய் ஈர்க்காமல் போவதற்குக் காரணம் அவற்றின் நுட்பமான அடுக்குகள் ஆரம்பத்தில் நம‌க்குப் பிடிபடாமல் போவது தான். தொடர்ந்த கேட்டலில் மெல்ல முடிச்சுக்கள் அவிழ்கின்றன. உண்மையில் ரஹ்மான் இசையினூடாக நம்மைக் குழந்தைகளாக்கி வேடிக்கை காட்டுகிறார். ரஹ்மான் கடைசியாய் அமைத்த எளிமையான மெட்டு ‘சின்ன சின்ன ஆசை’ (ரோஜா) எனத் தோன்றுகிறது.

அவர் இசையின் இலக்கணங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில்லை. அவற்றில் அவருக்குப் பாண்டித்யம் இருந்தாலும் அதை உடைக்க தொடர்ந்து முயல்கிறார். தன்னிடம் பணியாற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கிறார். அவர்களின் சேஷ்டைகள் மூலமாக தன் படைப்பு இன்னும் மெருகேறும் என்றால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார். சினிமா இசை என்பது ஒரு கூட்டுக் கலை என்பதை சுத்தமாகப் புரிந்து வைத்திருப்பவர்.

ரஹ்மானின் முக்கிய சாதனை இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்தது தான். தொழில்நுட்பத்தின் குழந்தை அவர். அந்த வகையில் இளையராஜாவுக்கு ஹார்மோனியம் என்றால் ரஜ்மானுக்கு சிந்த்தசைஸர் எனலாம். அதனால் தான் அவரது பாடல்களின் ஒலியமைப்பு மிகுந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஏ. ஆர். ரஹ்மான் சினிமா இசையை முழுமையாய் நவீனமாக்கினார். அதாவது இசையின் உள்ளடக்கம் மட்டுமல்லாது அதன் மொத்த‌ ஆக்கத்திலும் நவீனத்தைப் புகுத்தினார். இரண்டிலுமே தொடர்ந்து சர்வதேச அளவில் என்னென்ன புதிய விஷயங்கள் வருகின்றனவோ உடனடியாக அதற்கேற்றாற் போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள அவர் ஒருபோதும் தவறியதில்லை. அது தான் அவரது USP.

Panchathan Record Inn and AM Studios என்ற கோடம்பாக்கத்தில் அவரது வீட்டுக்குப் பின்னாலேயே இருக்கும் அவரது ஸ்டூடியோ அதற்கு உதாரணம். இசையைப் பொறுத்தவரை ஆசியாவின் மிக நவீனமான ஸ்டூடியோக்களில் ஒன்று இது. ஒலியமைப்புக்கு தேசிய விருதுகள் பெற்ற ஏ. எஸ். லக்ஷ்மிநராயணன், ஹெச். ஸ்ரீதர் ஆகியோர் ரஹ்மானின் இந்த‌ ஸ்டூடியோவில் பணியாற்றியவர்கள்.

வெளிநாட்டிலிருந்து கொண்டே மின்னஞ்சல் மூலம் இசைக்குறிப்புகளை அனுப்பி இங்கே பாடல் பாடி பதிவு செய்யப்ப‌டும் அளவுக்கு அவர் நவீனமாய் இருந்தார்.

*

ரஹ்மானின் இசை இந்த மண்ணோடு சம்மந்தப்பட்டதல்ல. அவர் பிரபஞ்சத்தின் பிரதிநிதி. அவர் இசையமைத்த கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா, தாஜ்ம‌ஹால் போன்ற கிராமியப் படங்களில் கூட தமிழிசையை அமுக்கி விட்டு நவீனமே மேலோங்கி நின்றது. குறிப்பிட்ட இசையில் நேட்டிவிட்டி இருந்தால் கிட்டும் படைப்பு நேர்மையை விட அதுவரை யாரும் செய்திராத புதுமை முயற்சியாய் இருக்க வேண்டும் என்பதற்கே அவர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ரஹ்மான் ஒரு கட்டத்தில் முழுக்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தியதால் இங்கே தமிழில் மணி ரத்னம், ஷங்கர், ரஜினி இவர்களுக்கு மட்டும் இசை அமைத்துக் கொடுத்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் யோசித்துப் பார்த்தால் அது தானே சரியானது! வளர்ச்சிப் பாதையில் இருக்கும் எந்த இளைஞனும் அவ்வாறே முடிவெடுக்க முடியும். பத்தாண்டுகளுக்கு மேலாய்ப் போதுமான அளவு இங்கே பங்களித்து விட்டு தான் அங்கே சென்றார்.

இந்தியிலும் ஆங்கிலத்திலும் இசையமைத்ததை மேலும் உயரத்திற்குப் போனார் என்று சொல்வதை விட மேலும் பரவலாய் மக்களைச் சென்றடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அதாவது ஆழ உழுவதை மறுதலித்து அகல உழுதார்.

ரஹ்மான் தமிழ் இசையை வடக்கிலோ, இந்திய இசையை மேற்கிலோ அறிமுகம் செய்யவில்ல. அங்கே அந்தத் திரைப்படங்களுக்குத் தேவையான அவர்கள் பாணி இசையையே கொடுத்தார். அங்கு அவர்களின் ஆள் பணிபுரிந்திருந்தால் என்ன இசையை உருவாக்கி இருப்பாரோ அதையே ரஹ்மான் அவர்களுக்கு இணையாய், சமயங்களில் இன்னும் சிறப்பாய் உருவாக்கினார். Bombay Dreams, Slumdog Millionaire இரண்டும் தான் அவர் இந்திய இசையை உலகிற்குச் சொன்ன இரு முயற்சிகள். இவற்றில் Slumdog Millionaireல் அவரது மிகச்சாதாரண இசையே வெளிப்பட்டது.

மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ் என அவர் அழைக்கப்படுவதில் ஓசை நயத்தைத் தாண்டி வேறேதும் பொருத்தமில்லை. ஐரோப்பிய சாஸ்திரிய சங்கீதத்தில் தன் படைப்பாளுமையை மோஸார்ட் அழுந்தப் பதிவு செய்ததைப் போல் ரஹ்மான் இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் (கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, சூஃபி இசை போன்றவை) பெரிய முயற்சிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஓர் அபார திரை இசைக்கலைஞராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அதிலும் அப்ப‌டங்களின் தேவைக்கேற்பவே தன்னைத் தகவமைத்துக் கொண்டார். ஒருவகையில் ஹாலிவுட் இசைக்கலைஞர் ஆலன் மென்கெனுடன் ரஹ்மானை ஒப்பிடலாம். உண்மையில் மென்கென் ஆஃப் மெட்ராஸ் தான் ஏ. ஆர். ரஹ்மான்.

பின்னணி இசையில் ரஹ்மான் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் அது அவரது போதாமை என்றில்லாமல் முக்கியத்துவம் தாராதால் தான் அப்படி நிகழ்வதாகத் தோன்றுகிறது. அதாவது பாடல்களே அவரை மக்கள் மத்தியில் புகழ் பெறச் செய்கிறது. அதற்காக அவர் சிரத்தை எடுக்கிறார். பின்னணி இசை அதற்கு இணையாக இல்லை என்பதை பொதுமக்கள் கவனிப்பதே இல்லை. அது விமர்சகர்களின் திடல். அங்கு தன்னை அவர் முன்வைக்க மெனக்கெடுவதில்லை ரஹ்மான். ஆனால் அவரது பின்னணி இசை மிக‌ச் சிறப்பாக அமைந்த‌ ரோஜா, இந்தியன் போன்ற படங்களைக் கொண்டு பார்த்தால் அதிலும் அவர் நன்றாகப் பரிமளிக்கக்கூடியவர் என்றே தெரிகிறது.

வெகுஜன வெற்றியின் சூத்திரம் எதுவோ அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறார். திறமையை வெளிப்படுத்துவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

*

தமிழ் மக்களைத் தாளம் போட வைத்தவர், இந்திய இளைஞர்களை ஆட்டம் போட‌ வைத்தவர். இன்று உலகெங்கும் இருப்பவர்களைத் தன் பக்கம் திருப்பி இருப்பவர்.

சினிமா தாண்டி சாஸ்திரிய இசையிலும் அழுத்தமாய் தன் முத்திரைகள் பதிப்பார்.

அவரது அடக்கம் மற்றும் அமைதியான தோற்றம் அவரை இந்தியாவில் யூத் ஐகான் ஆக்கி இருக்கிறது. அதற்கும் அவரது இசைப் பங்களிப்பிற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் இந்தியர்கள் பொதுவாய் ஒழுக்கத்தையும் திறமையுடன் சேர்த்து ஒரு பேக்கேஜாகவே செலிப்ரிட்டிகளிடம் எதிர்பார்க்கிறார்கள். டெண்டுல்கர் போல் ரஹ்மானும் இவ்விஷயத்தில் ரசிகர்களின் ஐடியல் ஃபிகராகத் திகழ்கிறார்.

ரஹ்மான் பொதுவாகப் பேட்டிகளில் மிக அடக்கமாகப் பதில் சொல்வது வழக்கம். ஆனால் அதை இயல்பாக அல்லாமல் திட்டமிட்டே செய்வதாகக் குறிப்பிடுகிறார். புதிய தலைமுறை இதழுக்கு 2010ல் அளித்த பேட்டியில் “நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு காரசாரமாகப் பதில் சொல்வது ஒரு வழி. அமைதியாய், நிதானமாய் பதில் சொல்வது இன்னோர் வழி. நான் இந்த இன்னோர் வழியைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். ஆஸ்கர் விழாவில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பினைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னதன் நீட்சி இது.

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளர் ரஹ்மான் தான்.இடையில் அவர் முஸ்லிம் என்பதால் தன் சம்பாத்தியத்தில் தீவிரவாதத்திற்கு பண உதவி செய்வதாய் பொய்ச்செய்தி வெளியானது (நக்கீரன் என நினைவு).

இன்று தன் பெயர் ஒட்டிய லேபிளைக் கொண்டே அந்த இசையை அபாரம் என்று சிலாகிக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார் ரஹ்மான். அப்படிக் கண்மூடித்தனமாய் ரசிக்குமளவு அவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியதே ரஹ்மானின் தனிச் சாதனை தான். இசையில் அவர் ஒரு ரஜினி.

ரஹ்மான் இன்னும் பரவலாய் உலகமெங்கும் கோடானு கோடி பேர்களைச் சென்றடைவார் என்பதில் சந்தேகமே இல்லை. சமகாலத்தில் உலக மக்களை அதிகம் வசீகரித்த இசையமைப்பாளராக உருவாகுவார். இந்திய இசை அவரின் மூலமாக உலகை அடையவில்லை என்றாலும் இந்தியா என்ற தேசம் அவரால் மரியாதையாகப் பார்க்கப்படும். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு வாழ்த்துக்கள்!

சமீபத்தில் குமுதம் இதழில் அளித்த ஒரு பேட்டியில் “இசையிலும் ரசனை மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு ராஜாவைத் தாண்டி நாளைக்கு என்னையும் தாண்டி இசை ரசனை வளர்ந்து போய்க் கொண்டு தான் இருக்கும்” என்கிறார் ரஹ்மான். அதாவது காலத்திற்கேற்ப மாறும் ஃபேஷனாகவே அவர் இசையைச் சித்தரிக்கிறார். அதற்கேற்பவே அவர் மாறிக் கொள்கிறார்.

ஆனால் உண்மையில் இசை என்பது பூரணமான கலை. தொழில்நுட்பம் காலாவதியாகும்; ஆனால் நல்ல கலை சாஸ்வதமானது. மோஸார்ட், பேக், பீத்தோவன், தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, எல்லாம் அப்படித் தான் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களைக் கடந்து போவதெல்லாம் மேலோட்டமான ரசனை கொண்ட அந்தந்தக் காலத்து வெகுஜன தலைமுறைகள் மட்டுமே. தேர்ந்த ரசனை கொண்டவர்கள் வழியாக இவை வரலாற்றில் நிற்கும்.

ராஜா காலம் கடந்து நிற்பது போலவே ரஹ்மானும் காலம் கடந்து நிற்பார்.

0

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2013

29thangameengal 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகவும் செழிப்பான ஆண்டு. குறிப்பிட்டுச் சொல்லும் எண்ணிக்கையில் சிறப்பான படங்களும் சுவாரஸ்யமான முயற்சிகளும் நடந்தேறி இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் இது தொடரவும் அதிகரிக்கவும் வேண்டும். ஓர் எளிய‌ ரசிகனாய் அதை அங்கீகரிக்கும் முறையில் தொடர்ந்து 12வது ஆண்டாக இவ்வருடமும் எனது விரிவான‌ திரைப்பட விருதுப் பட்டியலை வெளியிடுகிறேன். தமிழ் பேப்பரில் இவை வெளியாவது இது மூன்றாவது முறை.

விருதுகளுக்கான விதிமுறைகளை இங்கே காணலாம் : http://www.tamilpaper.net/?p=7298

0

பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்

* தங்க மீன்கள் * ஓநாயும் ஆட்டுக்குட்டியும் * பரதேசி * விஸ்வரூபம் * சூது கவ்வும் * மதயானைக் கூட்டம் * உதயம் NH4 * சிங்கம் 2 * பாண்டிய நாடு * மூடர்கூடம் * ஹரிதாஸ் * கௌரவம் * இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா * கல்யாண சமையல் சாதம் * ஐந்து ஐந்து ஐந்து * இவன் வேற மாதிரி * வருத்தப்படாத வாலிபர் சங்கம் * பிரியாணி * வத்திக்குச்சி * கடல் * விடியும் முன் * 6 * இரண்டாம் உலகம் * ஆரம்பம் * என்றென்றும் புன்னகை * ராஜா ராணி * தில்லுமுல்லு * தீயா வேலை செய்யனும் குமாரு * அமீரின் ஆதி பகவன் * ஆதலினால் காதல் செய்வீர் * தேசிங்கு ராஜா * மரியான் * டேவிட் * ஆல் இன் ஆல் அழகுராஜா * சேட்டை * நய்யாண்டி * கேடி பில்லா கில்லாடி ரங்கா * தலைவா * சென்னை எக்ஸ்ப்ரஸ் * அலெக்ஸ் பாண்டியன் * அம்பிகாபதி * எதிர்நீச்சல் * கண்ணா லட்டு தின்ன ஆசையா * நேரம் * சென்னையில் ஒரு நாள் * சமர் * அன்னக்கொடி * (மொத்தம் 47)

0

விருதுகள்

 1. சிறந்த திரைப்படம் – தங்க மீன்கள்
 1. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்
 1. சிறந்த இயக்குநர் – பாலா (பரதேசி)
 1. சிறந்த திரைக்கதை – மிஷ்கின் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)
 1. சிறந்த வசனம் – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)
 1. சிறந்த கதை – ராம் (தங்க மீன்கள்)
 1. சிறந்த பின்னணி இசை – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)
 1. சிறந்த ஒளிப்பதிவு – செழியன் (பரதேசி)
 1. சிறந்த படத்தொகுப்பு – மகேஷ் நாராயணன் (விஸ்வரூபம்)
 1. சிறந்த கலை இயக்கம் – லால்குடி ந‌. இளையராஜா (விஸ்வரூபம்)
 1. சிறந்த ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி (பரதேசி)
 1. சிறந்த ஒப்பனை – பரதேசி
 1. சிறந்த ஒலிப்பதிவு – குணால் ராஜன் (விஸ்வரூபம்)
 1. சிறந்த VFX – மதுசூதனன் (விஸ்வரூபம்)
 1. சிறந்த சண்டை அமைப்பு – Lee Whittaker (விஸ்வரூபம்)
 1. சிறந்த நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)
 1. சிறந்த பாடல் இசை – யுவன் ஷங்கர் ராஜா (தங்க மீன்கள்)
 1. சிறந்த பாடல் ஆசிரியர் – நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
 1. சிறந்த பின்னணி பாடகர் – ஸ்ரீராம் பார்த்தசாரதி (ஆனந்த யாழை – தங்க மீன்கள்)
 1. சிறந்த பின்னணி பாடகி – சைந்தவி (யாரோ இவன் – உதயம் NH4)
 1. சிறந்த நடிகர் – கமல்ஹாசன் (விஸ்வரூபம்)
 1. சிறந்த நடிகை – பார்வதி மேனன் (மரியான்)
 1. சிறந்த துணை நடிகர் – ஸ்ரீ (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)
 1. சிறந்த துணை நடிகை – சினேகா (ஹரிதாஸ்)
 1. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)
 1. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – விஜி சந்திரசேகர் (மதயானைக் கூட்டம்)
 1. சிறந்த வில்லன் நடிகர் – ராகுல் போஸ் (விஸ்வரூபம்)
 1. சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (என்றென்றும் புன்னகை)
 1. சிறந்த குழந்தை நடிகர் – பேபி சாதனா (தங்க மீன்கள்)
 1. சிறந்த டைட்டில் கார்ட் – தங்க மீன்கள்
 1. சிறந்த ட்ரெய்லர் – பரதேசி
 1. சிறந்த திரைப் புத்தகம் – Conversations with Mani Ratnam (Baradwaj Rangan)
 1. சிற‌ந்த திரை விமர்சகர் – அராத்து (https://www.facebook.com/araathu.officialpage)

0

ஆரம்பம் – ‘தல’ தீபாவளி

aarambamதவிர்க்கமுடியாத சில காரணங்களினால், அக் 31- மாலைக் காட்சிக்குத்தான் போக முடிந்தது. திரையரங்க இணைய தளத்தில் புக்கிங் சார்ஜஸ் மட்டுமே வாங்கினார்கள். கவுண்டரில் அவர்கள் சொல்லும் தொகையைத் தந்தாகவேண்டும்… ஐநூறும் கேட்கலாம் ஆயிரமும் கேட்கலாம் என்று கண்ணில்பட்டவர்களெல்லாம் பயமுறுத்தினர். ஆனால், முறையாக வருமான வரி கட்டும் அஜீத்தின் படத்தைத் திரையிடும் திரையரங்கத்தினர் அஜீத் விஷயத்தில் மட்டுமாவது நேர்மையாக நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் திரையரங்குக்குச் சென்றேன்.

6.30 ஷோவுக்கு 5.15க்கே சென்றுவிட்டதால் இணைய டிக்கெட் கவுண்டரில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. முன்னால் நின்றுகொண்டிருந்த தலயின் தளபதிகளுக்கு சிறிய  சிக்கல் ஏற்பட்டிருந்தது. 15-20 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தனர். 100 ரூபாய் டிக்கெட் விலை என்று யாரோ சொன்னதை நம்பி 600 ரூபாய் மட்டுமே கொண்டுவந்திருந்தனர். கவுண்டரில் 120 ரூபாய் சொல்லிவிட்டார்கள். ஐந்து பேருக்குத்தான் எடுக்க முடியும். ஆறாவது நபருக்கு என்ன செய்ய என்று தவித்துக்கொண்டிருந்தார்கள். டிக்கெட் கொடுப்பவர் அவர்களைக் கொஞ்சம் தள்ளி நின்று தவிக்கும்படிச் சொன்னார்.

நான் இணைய பதிவு சீட்டை நீட்டினேன். ஒரு டிக்கெட்டா என்றார். ஆமாம் என்றேன். 150 என்றார். இது தப்பாச்சே என்று மனத்துக்குள் தோன்றியது. டிக்கெட்ல விலையை பதிவு செஞ்சு கொடுங்க என்று கேட்கலாமா… மீடியா என்று சொல்லலாமா… (கூடுதல் அடையாளங்களை வெளிப்படுத்தினால் படம் பார்க்கும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற பயமும் இருந்தது) என்ற யோசனைகள் தோன்றின. கூடவே, அதிகப்படியான முப்பது ரூபாய் என்பது அந்த வயதான டிக்கெட் கவுண்டர் நபருக்குத்தான் செல்லும் என்பது தெரிந்ததால், வேறு எதையும் யோசிக்காமல் சட்டென்று எடுத்துக் கொடுத்தேன்.

அணையில் சேகரமாகும் மழைக்கால நீரைப்போல் ரசிகர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து கட் அவுட்டுக்கு பால் அபிசேகத்தில் ஆரம்பித்து ஓ என்ற ஊளைகள், வீல் என்ற விசில் சப்தம் என தளும்ப ஆரம்பித்தது. ரசிகர் மன்றமே வேண்டாம்னு சொல்லிட்டாரே தல… அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம்கூட வேண்டாம். வெறும் அஜித் குமார்ன்னு பேர் மட்டும் போட்டால் போதும் என்று சொல்லிட்டாரே தல என்றெல்லாம் ரசிகர் கூட்டம் தன் கவலையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. அவர்களுடைய ஆதங்கத்தைப் பார்த்தபோது, அஜீத் தனது ரசிகர் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் வேலைகளை இனியாவது முன்னெடுக்கலாமே என்று தோன்றியது. எவ்வளவு அடிச்சாலும் நின்று அடிவாங்கக்கூடிய கூட்டம் அல்லவா அது. தோல்விகள் கண்டு விட்டுவிட்டு ஒருநாளும் ஓடினதே கிடையாதே… அஜீத் தவறு செய்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் என் யோசனை தவறு என்பதை தலையின் தளபதிகள் சீக்கிரமே நிரூபித்தனர். அடுத்த முதல்வர் அஜித் குமார் என்ற கோஷங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. ஆஹா… ரசிகர் மன்றம் வேண்டாம்னு சரியாத்தான் சொல்லியிருக்காரு என்று சட்டென்று புரிந்தது.

மூடியிருந்த திரையரங்கின் கதவுகள் 6.20க்குத் திறக்க வைக்கப்பட்டன. ஏதோ அஜீத்தே திரைக்கு முன்னால் தமக்காகக் காத்திருப்பதுபோல் கூட்டம் திமு திமுவென்று ஓடியது. இந்த ஸ்க்ரீன்லதான தல வரப்போறாரு என்று திரையை விழுந்து வணங்கி, தொட்டு முத்தமிட்டு, கட்டித் தழுவி எல்லாமும்  நடந்தது. கிழித்துப்போட வண்ணக்காகிதங்கள் கொண்டுவந்திராத பால்கனி தளபதிகள் ரூபாய் நோட்டைச் சேகரித்து வைத்துக்கொண்டனர்.

எனது இருக்கைக்கு இடமும் வலமுமாக ஆறு இருக்கைகளில் விஜய் ரசிகர்கள் என்று நம்பும்படியான சிலர் வந்து உட்கார்ந்தனர். பாஸு… நாங்க சேர்ந்து உட்காரணும். அங்க போய் உட்காரு என்று அன்பாகச் சொன்னதாலும் வியாழக்கிழமை யாருடனும் சண்டைக்குப் போவதில்லை என்ற விரதத்தில் நான் இருப்பதாலும் சொன்னபடிச் செய்தேன். ஆனால், யாரையும் இன்று படம் பார்க்க விடக்கூடாது என்ற முடிவுடன் அவர்கள் வந்தது விரைவிலேயே தெரிந்தது. அருந்தியிருந்த பானம் அவர்களை மேலும் தீவிரப்படுத்தியிருந்தது.

படத்துக்கு முன்பாக, அம்மாவின் நல்லாட்சியில் ஒகேனக்கல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நால்வரை அதிரடிப் படையினர் ஹெலிகாப்டரில் கயிறு கட்டி இறங்கிக் காப்பாற்றிய ரீல் (சுழல) விடப்பட்டது. அவர்களைப் பார்த்த விஜய் ரசிகர்கள், ஹே… தல… தல… சூப்பர் தல… என்று ஆர்ப்பரிக்கும் பாவனையில் கூக்குரலிட்டு கேலி செய்தனர். தலை ரசிகர்களுக்கு மெள்ள கோபம் வர ஆரம்பித்தது. முன்னாலும் பின்னாலும் இருந்தவர்கள் இவர்களை அமைதியாக இருக்கும்படி அன்பாகச் சொன்னார்கள். மொதல் ஷோன்னா அப்படித்தான் இருக்கும். இப்ப என்னாங்கற என்று ஆறு பேரும் மல்லுக்கட்ட ஆரம்பித்தனர். அஜீத் ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் மூடில் வந்திருந்தால் பேசாமல் அமைதியாக உட்கார்ந்தனர். படம் ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவர்கள் எந்த வசனத்தையும் கேட்கவிடாமல் அசட்டு கமென்ட்கள் அடித்து சூழலை நாறடித்து வந்தனர்.

அதிலும் ஆர்யா, உசிலை மணி போன்ற உடலுடன் ஆரம்பத்தில் வந்த காட்சிகளையும் அவருக்கென்று ஒரு முழு நீளப் பாடலும் படத்தில் இருந்ததைப் பார்த்ததும் விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம். படம் காலிடா என்ற உற்சாகத்தை வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தனர். அஜீத் ரசிகர்களுக்கும் கோபம் தலைக்கேற ஆரம்பித்தது. சரி… இன்னிக்கு படம் பார்த்த மாதிரித்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால், அந்த விஜய் ரசிகர்கள் அரை மணி நேரத்தில் பொட்டிப்பாம்பாக அடங்கினார்கள். அடக்கப்பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தலயின் ரசிகர்கள் அல்ல. தலயே அவர்களை அடக்கினார். ஒவ்வொரு விஜய் ரசிகருக்குள்ளும் ஒரு அஜீத் ரசிகன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அன்று புரிந்துகொண்டேன். அப்படியாகத் திரைக்கதை ஆரம்ப தடங்கல்களுக்குப் பிறகு பரபரவென பற்றிக்கொண்டு வெடிக்கும் சரவெடியாக வெடித்துத் தீர்த்தது.

அஜீத் ஏற்று நடித்திருக்கும் அஷோக் என்ற ஒரே கதாபாத்திரம் இரண்டு கெட்டப்பில் வருகிறது. முதல் பாதியில் அவர் செய்யும் செயல்கள் அவரைத் தீவிரவாதியாகக் காட்டுகின்றன. இரண்டாவது பாதியில் அவர் ஏன் அந்த ‘தீவிரவாதச் செயல்’களைச் செய்தார் என்ற முடிச்சு அவிழ்க்கப்படுகிறது. அந்தச் செயல்களுக்கு புதிய கோணம் கிடைத்ததும் அஜீத் கதாபாத்திரம் பற்றிய நம் முதல் மனப்பதிவும் அப்படியே தலைகீழாக மாறுகிறது.

கம்ப்யூட்டர் ஹேக்கராக ஆர்யா. அவருடைய துணையுடன் அஜீத் வில்லன்களின் சாம்ராஜ்ஜியத்தை ஹைடெக்காகத் தகர்க்கிறார். நயந்தாரா, டாப்ஸி என கோயில் சிலைகளும் படம் முழுவதும் தரிசனம் தருகின்றன. டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்தாலும் இப்பயும் கை நாட்டுத்தான் (ஸ்விஸ் வங்கிக் கணக்கின் பாதுகாப்பு தொடர்பான காட்சியில்), கோழைக்கு தினம் தினம் சாவு… வீரனுக்குச் சாவே கிடையாதுடா… பொய்தான் பயப்படும்… உண்மைக்கு பயம் கிடையாது… என எளிய பஞ்ச்கள் பொருத்தமான இடங்களில் இடம்பெற்று படத்தை சுவாரசியமாக்குகின்றன.

பொய்க்குற்றம் சுமத்தி அஜீத்தை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் ஒரு காட்சியில் சக காவலர், குற்றவாளியைப் பிடிப்பதுபோல் அஜீத்தின் கையைப் பிடிக்க வருவார். அப்போது அஜீத் ஒரு லுக் விடுவார் பாருங்கள்… இளைய தலைமுறை ஏன் அஜீத் பின்னால் அலைபாய்கிறது என்பதற்கான எளிய உதாரணம் அந்தக்காட்சி. அப்பறம் கூலிங் கிளாஸ் என்ற ஒன்று வடிவமைக்கப்பட்டதே அஜீத்துக்காகத்தான் என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு ஸ்டைலாக அணிகிறார். கழட்டுகிறார். அண்ணாமலை படம் முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, முதல் பாதியில் ஏழைப் பால்காரராக குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார். இரண்டாம் பாதியில் கோட் சூட் போட்ட பணக்காரராக நெடுக்கும் குறுக்குமாக நடக்கிறார்… படம் சில்வர் ஜீப்ளிதான் என்று சொன்னார். அந்த தமிழ் பாரம்பரியத்தை அச்சு பிசகாமல் அஜீத்தும் தொடர்கிறார்.

திரைப்படத்தில் இடம்பெற்ற அனைவருடைய கையிலோ பையிலோ துப்பாக்கிகள் கட்டாயம் இருக்கின்றன. பட் பட் என்று பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்கள். கெட்டவர்கள் சுடும் தோட்டாக்கள் மிகச் சரியாகத் தவறான இலக்கில்போய் படுகின்றன. நல்லவர்கள் சுடும் தோட்டாக்கள் கெட்டவர்களின் உடம்பைச் சரியாகத் துளைக்கின்றன. அதிலும் அஜீத் சுடும் தோட்டாக்கள் எல்லாம் கெட்டவர்களின் நெற்றிப் பொட்டில் குங்குமத் திலகம் வைப்பதுபோல் மிகத் துல்லியமாகப் பாய்கின்றன.

Arrambam-Movie-Stills-01காவல்துறையினருக்கு புல்லட் புரூஃப் வாங்குவதில் ஊழல் நடக்கிறது. அந்த ஊழலினால் கதாநாயகனின் ஆருயிர் நண்பன் கொல்லப்பட்டுவிடுகிறான். அந்த ஊழலில் ஈடுபட்ட காவல்துறை உயர் அதிகாரி, பண புரோக்கர், பிரதான வில்லனான அமைச்சர் என அனைவரையும் வேட்டையாடி தர்மத்தை நிலை நாட்டுகிறார் தல. அந்த ஊழலில் மட்டுமல்லாமல் வேறு பல ஊழல்களிலும் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்குக்கு அப்படியே அலேக்காக டிரான்ஸ்ஃபர் செய்துவிடுகிறார். நாம் வல்லரசுத் தகுதியை எட்ட ஓரிரு படிகள்தான் பாக்கி. அடுத்த படத்தில் அதையும் செய்துமுடிப்பார் என்று நிச்சயம் நம்பலாம்.

ஒரு திரைப்படத்தின் உயிர் மூச்சு திரைக்கதைதான் என்பதைப் புரிந்துகொண்டவர்கள் எடுக்கும்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கான தமிழ் உதாரணம் இந்தப் படம். ஐந்து நிமிடத்துக்கு ஒரு ட்விஸ்ட்… அதுவும் அதிகம் யூகிக்க முடியாத டிவிஸ்ட்கள்.

படத்தின் ஒரே ஒரு குறை ஒரு கட்டத்துக்கு மேல் துப்பாக்கி சண்டைகள் திகட்ட ஆரம்பித்துவிடுகின்றன. ஜாக்கிசான், ஜேம்ஸ்பாண்ட் போன்றோரின் படங்களில் ஆக்‌ஷன் ஸீக்வென்ஸ்களுக்கென்று மெனக்கெட்டு தனியாக ‘திரைக்கதை’ எழுதியிருப்பார்கள். அந்த சண்டைக்காட்சிகள் புத்திசாலித்தனத்துடனும் அதி சாகசத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். தமிழ் படங்களில் வெறுமனே டமால் டுமீல் என்று சுட்டுக்கொள்வதாகவே இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியான காட்சிகள் சில இருக்கின்றன. மற்றபடி திரைக்கதையின் வலு, ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட சமகால நிகழ்வையொட்டி கதையை உருவாக்கியிருப்பது, அஜீத்தின் கம்பீரம், ஸ்டைல், மெல்லிய பஞ்ச் டயலாக்குகள் என ஒரு தமிழ் ஆக்ஷன் மூவிக்கான அனைத்து மசாலாக்களும் அருமையாகக் கலக்கப்பட்ட கலவையாக வெளிவந்திருக்கும் ஆரம்பம் தமிழ்கூரும் நல்லுலகுக்கு அஜீத் தந்திருக்கும் அட்டகாசமான அமர்க்களமான தீபாவளிப் பரிசு.

ஆரம்பம் – மார்க் ஷீட்

அஜித் ரசிகர் – 15/10

விஜய் ரசிகர் – 9.5/10  (வேற வழியில்லை!)

தமிழ்பேப்பர் – 7.5/10

 

ஆறு மனமே ஆறு

6-Movie-Pre-Release-Posterடேக்கன் – 2008, டேக்கன் – 2012, சிக்ஸ் புல்லட்ஸ் – 2012.

ஆறு – 2013 (2011-ல் ஆரம்பிக்கப்பட்டது).

இந்தப் படங்களுக்கெல்லாம் உள்ள ஓர் ஒற்றுமை, இவை எல்லாமே குழந்தைக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லர்கள். இந்த வருடம் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பபட்டிருக்கும் படமான தி குட் ரோடு படம் கூட காணாமல் போன சிறுவனைத் தேடுவதை மையமாகக் கொண்டதுதான்.

இதுபோல் வேறு பல படங்களும் வந்திருக்கக்கூடும். ஆனால், ஷாம் நடித்து, துரை இயக்கி, ஜெயமோகன் வசனம் (கிரெடிட் தரப்படாவிட்டாலும் திரைக்கதையும் அவருடையதாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில் கதைக் களம் ஒருவகையில் ஏழாம் உலகத்தோடு தொடர்புடையது) எழுதியிருக்கும் ஆறு (மெழுகுவர்த்திகள்) படம், தமிழின் பிற படங்களை ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்ந்து நிற்கிறது.

ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடும் சிறுவன் கவுதம் பெற்றோருடன் கடற்கரையில் ஜாலியாக இருக்கையில் கடத்தப்பட்டுவிடுகிறான். அதன் பிறகு அவனுடைய தந்தை ராம் அவனை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.

கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருக்கும் பகுதி நேரப் பிச்சைக்காரனிடம் இருந்து குழந்தை ஆந்திராவுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைக்கிறது. அங்கு போய் விசாரித்தால் அந்த புரோக்கர் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகிறான். அதன் பிறகு ஒரு டாக்ஸி டிரைவர் மூலம் வாரங்கல்லுக்குக் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. அங்கு போய் பார்க்கிறார்கள். குழந்தை அங்கிருந்து கரீம் நகர் என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அங்கு போய் விசாரித்தால் போபாலுக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரிகிறது. இப்படியாக ஒவ்வொரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு கதை நகர்கிறது. இதன் மூலம் குழந்தைக் கடத்தல் தொழில் நடக்கும் பாதாள உலகம் ஒன்றின் கதவுகள் லேசாகத் திறந்து காட்டப்படுகிறது.

ஏராளமான வில்லன்கள் நிறைந்த இந்தப் படத்தில் அவர்கள் அனைவருமே வெகு சிறப்பாகவும் அழுத்தமாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். திவாகரன் (நாயர்) எளிதில் முதலிடத்தைப் பிடித்துவிடுகிறார்.

நாயகனைப் பொறுத்தவரையில் அவர் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு தகுந்த அளவுக்கான நடிப்பு வெளிப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியவில்லை. பெரும்பாலும் திரைக்கதையின் பலத்திலேயே காட்சிகள் உயிரோட்டத்தைப் பெற்றிருக்கின்றன.

பொதுவாக, தமிழ்ப் படங்களில் கதைக் கருவானது தமிழ் மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாக இருக்காது. கதை யதார்த்தமாக இருந்தால் திரைக்கதை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்தப் படத்திலும் திரைக்கதை, கதாநாயகனின் அதீத சாகசங்களை மையமாகக் கொண்டதுதான். என்றாலும் கதையின் கரு மிகவும் வலுவாக இருப்பதால், படத்துடன் எளிதில் ஒன்றிவிட முடிகிறது. பத்து ரவுடிகளை சாமானியன் ஒருவனால் அடித்துப் போடமுடியுமா என்ற கேள்விக்கு, மகனைப் பறிகொடுத்த தந்தைக்கு அது நிச்சயம் முடியும் என்ற பதில் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது.

ஆங்கிலப் படங்களில் இந்தக் கேள்வியை வேறோரு கோணத்தில் அணுகியிருப்பார்கள். டேக்கன் படத்தின் நாயகன் அமெரிக்க உளவுத் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரியாக இருப்பான்.  சிக்ஸ் புல்லட்ஸ் படத்தின் நாயகன் இதுபோன்ற கடத்தல்காரர்களைப் பிடிப்பதில் நிபுணனாக இருப்பான். போதாத குறையாக, அதில் குழந்தையைப் பறிகொடுத்த தந்தையும் சண்டைக் கலையில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். ஒரு எளிய மனிதனால், படுபயங்கரமான கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களை எப்படிப் போராடி ஜெயிக்க முடியும் என்ற நியாயமான கேள்விக்கு அவர்கள் நம்பும்படியான பதிலைத் தரும் நோக்கில் திரைக்கதையை அப்படி அமைத்திருப்பார்கள். தமிழில் கதாநாயகனால் முடியாதது எதுவுமே இல்லை என்பதால், அவனை சாஃப்ட்வேர் இன்ஜினியராகவே சித்திரித்திருக்கிறார்கள்.

படத்தின் அரசியல் என்று பார்த்தால், இந்தக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருமே ஊரில் நல்லவர்களாக, குறிப்பாக தெய்வ பக்தி மிகுந்த, அப்பாவி இந்துக்களாக வேடம் போட்டுக்கொண்டு மிகக் கொடூரமான செயலைச் செய்பவர்களாகப் படத்தில்   சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். தீவிரவாதத்தை (திரைப்பட) முஸ்லீம்கள் குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல் இந்தக் கடத்தல் தொழிலை இந்துக்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நாயகனுக்கு உதவும் இந்து கதாபாத்திரங்களின் இந்துத்தன்மை படு மேலோட்டமாகவும் அவனுக்கு உதவும் இஸ்லாமிய கதாபாத்திரத்தின் அடையாளம் படு தூக்கலாகவும் காட்டப்பட்டிருக்கிறது. நாயகி இயேசு நாதரை மனமுருகப் பிரார்த்திக்கிறாள். அவளுடைய இந்து கணவனோ (மதம் மாறினானா தெரியவில்லை) கடவுளால எல்லாம் முடியாது. என் பையன் நான் வந்து காப்பாத்துவேன் என்று காத்துக்கிட்டிருப்பான் என்று வசனம் பேசுகிறான்.

திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குறிப்பிட்ட ஓர் அடையாளத்துடன் காட்டப்பட்டால் அந்த அடையாளத்தைப் பின்பற்றும் அத்தனை பேரும் அப்படி என்று சொன்னதாக அர்த்தமில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் அந்த அடையாளத்துடன் சித்திரிக்கப்பட்டிருப்பதில் ஒரு தெளிவான அரசியல் இருக்கத்தான் செய்கிறது என்பதும் உண்மைதானே. ஆனால், இந்த அம்சங்களையும் தாண்டி படம் சில உச்சங்களைத் தொடுகிறது என்பதுதான் இந்தப் படத்தை முக்கியமானதாக்குகிறது.

தன் குழந்தையைப் பறிகொடுத்த ஒருவன் அதுபோல் பல குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும் காட்சிகளில் எப்படி நடந்துகொள்கிறான் என்பது இந்தப் படத்தை பிற படங்களில் இருந்து (ஆங்கில மூலப்படங்களில் இருந்துகூட) ஒரு சில படிகள் மேலே உயரவைத்திருக்கிறது.

நாயகனுக்கு உதவி புரியும் டாக்ஸி டிரைவர் ரங்கன் பாத்திரம் அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தமே இல்லாத அவன் எதற்காக இவ்வளவு உதவி செய்கிறான் என்ற கேள்விக்கு கதையில் சொல்லப்பட்டிருக்கும் பதிலானது வெறும் திரைக்கதையின் சாமர்த்தியங்களில் ஒன்று மட்டுமே அல்ல.

கதாநாயக சாகசத்தை வெறும் அடிதடியாக மட்டுமே காட்டவில்லை. அவன் புத்திசாலித்தனமாக சில செயல்கள் செய்கிறான். வாரங்கல்லில் அரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லும் வில்லன் ஒருவனை அவன் குழத்தைக் கடத்தல்  தொழிலில் ஈடுபடுபவன்தான் என்பதைக் கண்டுபிடிக்கும் காட்சி அதற்கான உதாரணம். அதுபோல் மலையாள வில்லன் ஒருவனை அவன் குடிக்கும் மலபார் பீடி மூலம் கண்டுபிடிக்கும் இடமும் அப்படியான ஒன்றே. இவை படத்தின் சுவாரசியத்தன்மையைத் தக்கவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குழந்தையைத் தொலைத்தல் என்ற மிகவும் உணர்ச்சிமயமான ஒரு கருவை எடுத்துக்கொண்டு அந்தத் தொழிலில் ஈடுபடும் வில்லன்களைத் தேடிப் பந்தாடும் திரில்லர் படமாகக் கொண்டுசென்றிருப்பதை விமர்சிப்பதானால், கைக்காசைப் போட்டு, இதே கதையை ஒரு எளிய மனிதனின் (குடும்பத்தின்) வேதனைப் போராட்டமாகச் சித்திரித்த பிறகுதான் செய்யவேண்டியிருக்கும். எனவே, ஒரு பார்வையாளராக இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கும் சில உணர்வெழுச்சித் தருணங்களை முன்வைத்து இந்தப் படத்தை தமிழ் பார்வையாளர்கள் வரவேற்கவேண்டும்.

படம் முடிந்து வெளியே வந்தபோது, திரையரங்கின் பணியாளர் ஒருவரைப் பார்த்தோம். சொற்ப எண்ணிக்கையில்தான் கூட்டம் வந்திருந்தது. சேது படம் போல் லேட் பிக் அப் ஆகும் படத்தை ஒரு வாரத்தில் தூக்கிவிடாதீர்கள் என்றோம். ஒரு வாரத்தில் பிக் அப் ஆகாவிட்டாலும் நிச்சயம் தூக்கமாட்டோம். வேறு குப்பைப் படங்களைத் திரையிட்டு நாலு காசு சம்பாதிப்பதைவிட இந்தப் படத்தை 25-30 நாள் ஓட்டி நாலு காசை இழந்தாலும் பரவாயில்லை என்றார். தமிழ் பார்வையாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் மிகவும் துல்லியமான நபர்களில் அவரும் ஒருவர் என்பதால், இந்தப் படம் நிச்சயம் ஓடும். ஓட வேண்டும்.

0