தங்க முட்டை

33416-aதமிழில் இதுவரை வந்த எல்லா கலை அல்லது அவார்டு சினிமாக்களும், அவை பேசும் அரசியலும், பெரும்பாலும் குறியீடுகள் பொருத்திய காட்சியின் ஊடாக அதன் கலைத்தன்மை மாறாமல் ரசிக்கும் ரசிகன் உள்வாங்கிக் கொள்கிற மாதிரி மட்டுமே வந்திருக்கின்றன. அவை ஒரு  சாமானியனின் கதையே ஆனாலும், அதைப் பார்க்கும் எந்த சாமானியனும் இது தனக்காக, தன்னைப்பற்றி பேசும் படம் எனத்தெரியாமலேயேதான் அதைக் கடந்தும் போயிருக்கிறான். அதி சிறந்த / தேர்ந்த சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அது போன்ற சினிமாக்கள்,  ஒருவகையில் தெலுங்கு கீர்த்தனைகள் இசைக்கும் கர்நாடக சங்கீதம் போலானது. எதற்காக ரசிக்கிறார்கள் என எதுவுமே புரியாமல், கூட்டத்தோடு கூட்டமாக தலையாட்டும் கர்நாடக சங்கீத கூட்டத்தில், பாடறியேன் படிப்பறியேன் என மண்ணின் மொழியைப் புகுத்தி கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தி சாமானியனிடம் கொண்டு சேர்த்த  ராஜாவின் படைப்பாளுமை போலானாதுதான் மணிகண்டனின் காக்கா முட்டை.

சாமானியனுக்கு பிடித்த எதுவும் இலக்கிய மண்டைகளுக்கு பிடிக்காது என்ற ஆதிகாம விதிப்படி, படம் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் வந்த மூவாயிரம் விமர்சனங்களில், ஒரு சில தேர்ந்த எழுத்தாள முகநூல் பிரபலங்களின் கூற்றுப்படி இந்தப்படம், ஒற்றை அறை ஜீவித மக்கள் வாழ்வியலை, வெறுமனே காட்சிப்படுத்தியிருக்கிறதே தவிர, அம்மக்களின் நிலைக்கான காரணங்களின் அடியாழங்களுக்குச் சென்று, அவர்தம் சமூகநிலை முன்னேற்றம், தற்போதைய நிலைக்கான மாற்று என எதையுமே, பேசவில்லை என்பதும், நல்லபடம் ஆனால் சிறந்தபடம் இல்லை என்பதாகவுமே இருந்தது.

ஆம், அவர்கள் எதிர்ப்பார்ப்பதைப்போல இந்தப்படம், எதையும் நேரடியாக வசனங்களில் பொருத்தி பேசவில்லையே ஒழிய, எடுத்துக்கொண்ட களமும், காட்சியினூடே வெளிப்படும் தீவிரமும், சுற்றிப் பின்னப்பட்ட களமும், பக்கம்பக்கமாக பேசும் வீரதீர வசனங்களுக்கு பல மடங்கு மேலானது.  ஆரம்பித்த முதல் பிரேமிலேயே மிக எளிமையாக அவை ஆரம்பிக்கிறது. அரசின் எச்சரிக்கை வாசகமான, “மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு” என்பதை சிரித்தபடி விளையாட்டுத்தனமாக சொல்வதை தொடர்ந்து,  நமக்கு மிகப் பரிச்சயமான நிகழ்வான குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கவிதையான காட்சியாக்கி துவங்குகிறது அடுத்த ஐம்பதாண்டுகள்  கொண்டாடப்போகும் காக்காமுட்டை எனும் காவியத் திருவிழா.

வெட்டிச்சாய்க்கப்பட்ட மரத்தினைக் கண்டு மற்ற குழந்தைகள் கைதட்டி ஆரப்பரித்து, “யே…. இனிமே உங்கனால காக்கா முட்டை துண்ண முடியாதே? “நீயும் தான இங்க விளையாண்டுனு இருந்த.. உன்னாலயும்தான் இனிமே இங்க விளையாட முடியாது” எனத் தங்கள் வாழ்வியலோடு பிண்ணிப்பிணைந்திருந்த பாரம்பரியமிக்க ஒரு நிலம், அதிகாரங்களினால் கைப்பற்றப்படும் போது, எந்த பிரக்ஞையும் இல்லாது வெறித்த மற்றும் குதுகலித்த கண்களோடு இரண்டு குழு சிறுவர்களும் பேசிக்கொள்ளும் ஒற்றைக்காட்சியைப் பார்த்தும், இந்தப்படம் எதையுமே பேசவில்லை என்பதெல்லாம், புத்திசாலிகளின் முட்டாள்தனங்களில் சேர்த்தி.

இத்தனை ஆண்டுகளாக வந்த தமிழ் சினிமாக்கள் நிகழ்த்திய கதைக் களங்களில்  இந்தப்படத்தின் களமும் காட்சிகளும், மேற்பார்வைக்கு எவ்வளவு எளிமையாக தோன்றுகிறதோ அதற்கு நேர்மாறாக அது கிளறி விடும் சிந்தனைகள்  மிக மிக ஆழமானது.

வீட்டிலிருந்து உணவை சேகரித்து வந்து, காக்கைகளுக்கு இரையிட்டு, கிடைக்கும் மூன்று முட்டைகளை காக்காவுக்கு ஒன்றென மீதம் வைத்துவிட்டு, இரு சிறுவர்கள் பங்கிட்டு கொண்டு வாழும், அந்த நிலத்தின் பாரம்பரிய வாழ்வியலை சட்டென அழித்துவிட்டு முளைக்கும் அந்நிய சந்தை, அந்த இடத்தைப் புழங்கிவந்த பாரம்பரிய மக்களை அந்நியப்படுத்தி வைக்கும் அதன் பகட்டு கட்டிடம், சந்தைப்பொருளை உசுப்பேத்தி விற்க வைக்க கொண்டு வரும் நட்சத்திரம், பகட்டுக் கட்டடத்தின் உள் நுழைய எளியவர்கள் எதிர்கொள்ளும் போராட்டம், அவ்வாறான போராட்டத்தின் தேவையாக உடை வாங்க சென்று மற்றொரு கட்டடத்தைக் கண்டு “ப்பா..இதுக்குள்ள நம்ள சத்தியமா விடமான்னானுக..” என இரண்டு சிறுவர்களும் தாமாகவே புரிந்து கொள்ளும் வர்க முரண்பாட்டின் இடைவெளி, எல்லா நிகழ்விலும் காசு பார்க்கத்துடிக்கும் அரசியல்வாதி, டிவியில்  உலகமயமாக்கள் குறித்த விவாத நிகழ்ச்சியில், விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து விவாதிப்போம் எனக் கூச்சமின்றி நடந்தேறும், மீடியாக்களின் லாபி, இரண்டு வர்க சிறுவர்களின் நட்புக்களுக்கு இடையில் துருத்திக்கொண்டிருக்கும் கம்பிவேலி, கம்பிக்கு அந்தப்புறம் மேடாகவும், இந்தப்புறம் தாழ்வாகவும் இருக்கும் அபார்ட்மெண்ட் வெளிச்சுவர் அமைப்பு, வணிக நோக்கத்கோடு சேரி சிறுவர்களுக்கு, முதலாளிகள் அளிக்கும் மரியாதை, தொழிலாளியை தண்டித்து தன் வியாபரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முதலாளித்துவம், கோடிகளில் செய்த நிலக்கரி ஊழல் இன்னமும் விசாரிக்கப்படாத இதே நாட்டில் ஒரு ஓரமாக மூலையில் குவித்த நிலக்கரியை திருடிய ஊழியரை தண்டிக்கும் ஆதிக்க நிலை என எல்லாவாற்றையும் தாண்டி நம்ம வீட்டு நாய் கூட சாப்பிடாது, இதுக்கு ஆயா சுட்ட தோசையே நல்லாருந்தது, என பகட்டு, கவர்சிகள் தாண்டி அதற்குப் பின் உள்ள மாற்று உணவின் உண்மை முகம் என இதன் களமும், காட்சியமைப்பும் ஆயிரமாயிரம் பக்க வசனங்கள் பேசாத அரசியலை சாமானியனுக்கும் புரியும்படி மிக எளிமையாக பேசிவிடுகிறது.

உறங்க, உடை மாற்ற, உண்ண, கழிக்கவென ஒற்றை அறைக்குள் நாய்க்குட்டியும் சேர்த்து ஐந்து பேர் வாழும் வீட்டைச் சார்ந்த இவர்களுக்கு விளையாட, காக்கா முட்டை தர இருந்த ஒரு பொறம்போக்கு இடமும் பறிபோகும் அதே நகரில் வசதிமிக்க அபார்ட்மெண்டும் அதன் மைதானத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட அனுமதி கிடைக்கும் அவர்களும் இருக்கிறார்கள் எனக் காட்சிப்படுத்தியதும், அபார்ட்மெண்ட் நாய்க்கு 25,000 விலை வைக்கும் அதே நகரில் குடிசை நாய்க்கு எந்த மதிப்பும் இல்லை என்பதும், தனக்கு வைக்கும் உணவை காக்கைக்கும்,நாய்க்கும் வைக்கும் இவர்களும், தான் உண்ட உணவை ஏழை சிறுவர்களுக்கு தரும் அவர்களும், இவர்களுக்கு உடைகள் மேல் ஆசை, அவர்களுக்கு பானி பூரியின் மேல் ஆசை என படம் முழுக்க பேசும் வர்க அரசியல் மிக முக்கியமானது.

ஒரு காலத்தில் சாமானியர்களுக்கு அந்நியமாகியிருந்த அரிசி உணவை, எல்லோரும் எளிதில் புழங்கும் காலம் வாய்த்தபின், இத்தாலியிலிருந்து வேறு உணவைக் கொண்டுவந்து வர்க்க வேறுபாடுகளை வரையறுத்துக்கொண்ட, இனிமேலும் அப்படி மாற்றி மாற்றி வரையறுத்துக்கொண்டே  இருக்கப்போகும் இந்தச் சமூகத்தின் தற்போதைய மாற்று உணவான பீட்சா எனும் சப்பை உணவுக்குப் பின்னான வர்க்க அரசியலை கதையின் மையச்சரடாக வைத்துக்கொண்டு, உலகமயமாதல், எளிய ஒடுக்கப்பட்ட மனிதர்களை வைத்து அதிகாரங்களால் செய்யப்படும் அரசியல், சமகால மீடியாவின் போலி நீள் நாக்கு, கிடைக்கும் எல்லா பிரச்னைகளையும் பேசு பொருளாக்கி, கருத்தைப் பரப்பி, பொழுதைக் கழிக்கும் சமூக வலைத்தளங்களின் போக்கு  என சமகால சமூக சூழ்நிலையை, அரசியலை, அச்சு அசலாக பிரதிபலிக்கும் கண்ணாடிதான் காக்காமுட்டை.

இத்தனை அரசியலை, அனாயசமாக பேசும் இந்தப் படத்தில், வெறுமனே மேல்தட்டு மற்றும் பொதுப் புத்திக்கு தேவையான அரிப்பெடுக்க கிளர்ச்சியடைய வைக்கும் வசனங்கள் வைக்கவில்லை என்பதற்காகவெல்லாம் இது நல்ல படம், ஆனால் சிறந்த படமில்லை என ஒதுக்கிவிட முடியாது. இனி அடுத்த ஐம்பதாண்டுகளில் வழக்கு எண் 18/9 க்கு அடுத்து நாம் மெச்சிக்கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் தங்கமுட்டைதான்  இந்த காக்கா முட்டை.

இந்த அற்புதமான தங்க முட்டையை குறும்பட மெட்டீரியல் என ஒதுக்கி வைக்க முனையும் எல்லா அறிவாளிகளுக்கும் சேரி, குப்பம் என்பதெல்லாம் இலக்கியம், சினிமாவைத்தாண்டி நேரடியாகப் பரிச்சயமில்லாத வாழ்வியல் களம். ஆகவே அவர்களால் அவ்வாறுதான் புரிந்து கொள்ளமுடியும். கிடக்கட்டும்.  நகர்ப்புறச்சேரியில் பிறந்து வளர்ந்த என் போன்ற சாமானியர்கள் அனுபவித்து, இழந்த, எங்கள் வாழ்க்கையை, திரைப்பிரதியின் வழியே எங்கள் அகத்திரையில் நெக்குருக நிறுவிய இயக்குனர் திரு. மணிகண்டனுக்கு கோடி நன்றிகளும் அன்பு முத்தங்களும்.

கலைப்படம் என்பது இலக்கிய ரசனை கொண்ட தேர்ந்த சினிமா ரசிகர்களுக்கானது என்ற நடைமுறையை, நம்பிக்கையைக் கட்டுடைத்து கலைப்படம் என்பதும் சாமனியர்களுக்கானதே என நிறுவியிருக்கும் இந்தப்படம் இந்தியாவின் முக்கிய சினிமா என்பதற்கு தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளோடும் கரவொலியோடும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வெற்றியே சாட்சி.

இறுதியாக, பீட்சா கடையில் சிறுவர்களுக்குக் கிடைக்கும் மரியாதைக்கும், பீட்சாவுக்கும் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்பும் அத்தனை ரசிக கண்மணிகளுக்கும் சொல்லிக்கொள்ள ஒன்றுதான் இருக்கிறது. சிறுவர்களின் நீண்ட போராட்டத்தின் முடிவில் அவர்களுக்கு  பீட்சா கிடைத்ததற்கு கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் நீங்கள்தான், அத்தகைய மக்களின் இடஒதுக்கீடு பற்றிய  உணர்வுப்பூர்வமான விவாதத்தில் வேறு வகையான பிம்பங்களை நிறுவுகிறீர்கள். நிதானமாக சிந்தியுங்கள்.

0

ஜீவனற்ற ஜீவா

Jeeva-12-900x0

ஜீவா என்ற இளைஞனை மையமாகக் கொண்ட கதை. ஜீவாவுக்கு மூன்று வயதான போதே அவனுடைய அம்மா இறந்துவிடவே, பக்கத்தில் இருக்கும் கருணையே உருவான கிறிஸ்தவர்களின் வீட்டில் வளர்கிறார்.  ஜீவாவுக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம். ஆனால், அவனுடைய அப்பாவோ (மின்சாரவாரியத்தில் பணிபுரிகிறார்) அவனை ஒழுங்காகப் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.  கிறிஸ்தவ வளர்ப்புத் தந்தை அவனுடைய கிரிக்கெட் கனவுகளுக்கு உதவுகிறார். இதனிடையில் ஜீவாவின் பக்கத்து வீட்டில் இன்னொரு கிறிஸ்தவ குடும்பம் வந்து சேர்கிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஜென்னிக்கும் ஜீவாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது.
இருவருடைய பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஜென்னியின் அப்பா அவளை வேறொரு ஊரில் இருக்கும் சொந்தக்காரருடைய வீட்டுக்கு அனுப்பி அங்கு தங்கிப் படிக்கச் சொல்கிறார். காதலியைப் பிரிந்ததால் ஜீவா தாடி வளர்த்து, தண்ணி அடித்து வாழ்க்கையையே தொலைக்கப் பார்க்கிறார். ஜீவாவுக்குப் பிடித்த இன்னொரு விஷயத்தில் அவனுடைய மனதைத் திருப்பினால்தான் அவனைக் காப்பாற்ற முடியும் என்று கிறிஸ்தவ தந்தை உண்மையான தந்தையிடம் சொல்கிறார். அதன்படியே அவரும் மகனை கிரிக்கெட் அகடமியில் சேர்த்துவிடுகிறார். ஜீவா மளமளவென கிரிக்கெட்டில் திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறுகிறான்.  அங்கு ரஞ்சித் என்பவனுடைய நட்பு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து விளையாடி பல போட்டிகளை ஜெயிக்கிறார்கள். ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாட இருவரும் தேர்வாகிறார்கள்.

இதனிடையில் ஜீவா தன்னுடைய முதல் காதலி ஜென்னியை மீண்டும் சந்திக்கிறான். ஜீவா கிறிஸ்தவராக மதம் மாற வேண்டும். கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஏதாவது ஒரு வேலையில் சேரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜென்னியின் அப்பா திருமணத்துக்கு சம்மதிக்கிறார். ஜீவா இந்து என்பதால் மதம் மாறுவதில் அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கிரிக்கெட்டை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. எப்படியும் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று தொடர்ந்து முயற்சிசெய்கிறான்.

ஆனால், தமிழ் நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான பார்த்தசாரதி பிராமணர் அல்லாதவர்களை நைஸாக ஓரங்கட்டுவதில் கை தேர்ந்தவர். ஜீவாவையும் ரஞ்சித்தையும் அடுத்த கட்டத்துக்குப் போகவிடாமல் முடக்குகிறார். இதனால் மனம் வெதும்பும் ரஞ்சித் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறான். ஜீவாவும் கிரிக்கெட்டில் சாதிக்காமல் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சொல்லிவிடுகிறான். இப்படியாக நண்பனையும் காதலியையும் இழந்து லட்சியத்தையும் அடைய வழியின்றித் தவிக்கும் நிலையில் அவனுக்கு ஓர் அதிர்ஷ்டம் அடிக்கிறது. கிரிக்கெட் உலகில் சி.பி.எல். என்ற போட்டிகள் ஆரம்பிக்கின்றன. ஜீவாவின் விளையாட்டுத் திறமையைப் பார்த்து ராஜஸ்தான் அணியின் கேப்டனான இர்ஃபான் அவனைத் தனது அணிக்கு எடுத்துக்கொள்கிறான். ஜீவா அந்தப் போட்டியில் அபாரமாக ஆடி அதன் மூலம் இந்திய அணியில் சேரும் வழியை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறான். பிராமண சதியால் முடங்கிப் போன தன் நண்பனை நினைத்து வருந்தியபடி பேட்டி கொடுக்கிறான். இப்படிப் பேசுவதால் தனது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியானாலும் பரவாயில்லை என்று தைரியமாகப் பேசுகிறான். படம் அதோடு முடிகிறது.

இந்தப் படத்தின் அடிப்படையான குறைபாடுகள் என்னவென்றால், அது பிராமண சாதி உணர்வின் மீதான விமர்சனமாகவும் வரவில்லை. கிரிக்கெட்டின் ஆன்மாவைத் தொட்டுக்காட்டுவதாகவும் வரவில்லை. எளிய சூழலில் பிறந்து வாழ்க்கையில் வெற்றிபெற்றவனின் கதையாகவும் உருவாகியிருக்கவில்லை. எல்லாமே தனித்தனியாக அழுத்தமாக விரிவாக சித்திரிக்கத் தகுந்தவையே. ஆனால், இந்தப் படத்தில் மூன்றுமே படு மேலோட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் எந்தக் கதையை எடுத்தாலும் அதில் காதலைச் சேர்க்காமல் எடுக்கத் தெரியாது. காதல் நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உணர்வு என்பதால் அது இடம்பெறுவதில் தவறில்லை. ஆனால், அது கதையின் குவி மையத்தைச் சிதைப்பதாக இருக்கக்கூடாது. இந்திய அணிக்குத் தேர்வாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒருவனுடைய வாழ்க்கையில் இப்படி சாவகாசமாக காதல் கத்திரிக்காய்களுக்கெல்லாம் இடம் இருக்கவே முடியாது. சர்வதேச அளவில் ஒரு துறையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் பத்து வயதில் இருந்தே உங்களுடைய அனைத்து சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் முட்டைகட்டிவைத்துவிட்டு உங்கள் கனவைத் துரத்தியபடி கண்மூடித்தனமாக ஓடியாகவேண்டியிருக்கும். வேண்டுமானால் உங்களுடைய கனவை நிறைவேற்ற ஏதேனும் ஒரு பெண் உறுதுணையாக இருக்கலாம். அவளுடன் ஆடிப்பாடி, கூடில் குலவி கொஞ்சுவதெல்லாம் உங்கள் கனவு நனவான பிறகுதான் சாத்தியமாகும். தேசிய அளவில் வெற்றி பெறுவது என்பது அத்தகைய தவத்தைக் கோரும் ஒன்று. ஏதோ பார்டைம் ஜாப் போல் அதைச் செய்ய முடியாது. இந்தப் படத்தில் ஜீவா – ஜென்னி காதல் வழக்கமான காதல் படங்களைப்போல் விலாவாரியாகச் சித்திரிக்கப்படுகிறது. அது முறிந்த பிறகே நாயகன் தன் லட்சியம் ஞாபகம் வந்து அதன் பின்னால் ஓட ஆரம்பிக்கிறான். மீண்டும் காதல் ஞாபகம் வந்ததும் கிரிக்கெட்டை மூட்டைகட்டிவிட்டு டூயட் பாடப் போய்விடுகிறான். இப்படியாக லட்சியத்தில் அவனுக்கே அக்கறையில்லையென்றால் பார்க்கும் நமக்குமட்டும் எப்படி வரும்?

அடுத்ததாக பிரமண சதியினால் ஜீவாவும் ரஞ்சித்தும் தங்கள் கனவை அடைய முடியாமல் தவிப்பதாகக் காட்டப்படுகிறது. கிரிக்கெட் உலகில் பிராமண ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் அதைவிட அதிகமாக இருப்பது ரீஜனல் பாலிடிக்ஸ். அதிலும் மும்பையின் மேலாதிக்கம் இந்திய கிரிக்கெட்டில் மிக அதிகம். அது பிற மாநிலங்களை வெகுவாக ஓரங்கிட்டிவந்திருக்கிறது. உண்மையில் தமிழக பிராமன கிரிக்கெட் வீரர்கள்கூட அந்த வட இந்திய பாலிடிக்ஸினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘பெரியார் மண்’ என்பதால் பிராமணர்-பிராமணர் அல்லாதார் என்ற கவர்ச்சிகரமான கருவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர். அதையும் வெகு மேலோட்டமாகக் காட்டியிருப்பதால், ரஞ்சித் கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்ளும்போது பரிதாபத்துக்கு பதிலாக எரிச்சலே வருகிறது.

இந்தியா கிரிக்கெட்டில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு. பிராமண சாதி அரசியலால் அது எந்தப் பின்னடைவையும் சந்தித்திருக்கவில்லை. சர்வதேசப் போட்டிகளில் எந்தப் பிரிவின் டாப் டென்னை எடுத்தாலும் அதில் நாலைந்து இந்திய சாதனைகள் நிச்சயம் இருக்கும். வேண்டுமானால், தயிர் சாத அணுகுமுறையினால் வேகப்பந்து வீச்சாளர்களும் அதிரடி வீரர்களும் அதிகம் தோன்றியிருக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கலாம். ஆனால், அதற்குக்கூட   பிராமண சாதியைக் குற்றம் சொல்லமுடியாது. நேற்றைய டெஸ்ட் போட்டி என்பது உலகம் முழுவதுமே நிதானமான அணுகுமுறையைக் கொண்டதுதான். பிற சாதிகள் மீதான விமர்சனம் என்றால் அந்த சாதியைச் சேர்ந்தவர்களாலேயே வைக்கப்படுவதாகக் காட்டியாகவேண்டியிருக்கும். அல்லது அந்த சாதியில் இருக்கும் நல்லவர்களையும் காட்டியாகவேண்டியிருக்கும். பிராமணர் மீதான விமர்சனம் என்றால் ‘கலைச் சுதந்தரத்துடன்’ இயங்க முடியும் என்பதால் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் (ஜீவா என்ற பெயர் இருந்தும் அவன் பிராமனராக இருப்பானோ என்று தோளில் தட்டிக் கொடுக்கும் சாக்கில் பார்த்தசாரதி பூணூல் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கும் அபத்தக் காட்சியும் உண்டு.  நுட்பமாகக் காட்சிப்படுதறாராமாம்).ஆனால், பிராமண சாதி உணர்வினால் நாம் எந்தப் பெரிய இழப்பையும் சந்திக்காத ஒரு துறையில் அதைக் காட்டியிருப்பதால் திரைக்கதை வலுவிழந்து நிற்கிறது.

உண்மையில் கிரிக்கெட்டின் ஆன்மா என்பது முற்றிலும் வேறானது. அது இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை முற்றாக இடம்பெயர்த்திருக்கிறது. சமகால விளையாட்டுகளில்கூட, துப்பாக்கிச் சுடுதல், குத்துசண்டை, ஹாக்கி, கபடி என இந்திய அணி உலக அளவில் வெற்றி பெற்ற போட்டிகளைக்கூட அது ஓரங்கட்டியிருக்கிறது.  தங்கப்பதக்கங்கள் பெற்ற குத்துச்சண்டை வீரரும், கபடி வீரரும் அன்றாடத் தேவைகளுக்காக அடிமாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்க, ஊழலிலும், சூதாட்டத்திலும், குடி கேளிக்கைகளிலும் திளைக்கும் கிரிக்கெட் வீரர்  ஒரு ஹீரோவாகப் போற்றப்படும் அபத்தங்களை இங்கு காண முடிகிறது. கிரிக்கெட் மீதான விமர்சனத்தை இந்தக் கருக்களில்தான் அழுத்தமாக முன்வைக்கமுடியும். அதற்கு கிரிக்கெட் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்திருக்கவேண்டும்.

இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றால் கிரிக்கெட் தெரிந்த ஒருவரைக் கதாநாயகனாக ஆக்கியிருக்கிறார்கள். அதுவே அந்த கிரிக்கெட் காட்சிகளை ஓரளவுக்கு ரசிக்கவைக்கிறது. தமிழ் திரையுலகில் காணக்கிடைக்காத செய்நேர்த்தி இது.

இந்தப் படத்திலும் மறைமுக மத அஜெண்டாக்கள் இருப்பதாகச் சிலர் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. சாதி உணர்வு பிராமணர்களுக்கு மட்டும்தானே உண்டு; எனவே பிரதான வில்லன் நெற்றியில் சிவந்த திருமண் அடையாளத்துடன் வருகிறார். ஜம்சேத் ஆர்யா படத்தை வாங்கி வெளியிட்டிருப்பதால் ஜீவாவுக்கு உதவும் ராஜஸ்தான் கேப்டன் இர்ஃபானாக இருந்துதானே ஆகவேண்டும். அப்பறம் கதாநாயகனான இந்து ஜீவாவின் அம்மா மூன்று வயதிலேயே இறந்துவிட்டதால் கருனையின் ஹோல்சேல் ப்ரொப்பரைட்டர்களான கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் அவர் வளர்ந்து வருவதும் மிகவும் இயல்பானதுதானே. எனவே, படத்தில் எந்தவித மத காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ கிடையாது. வதந்திகளை நம்பாதீர்.

குயில் கூட்டில் ஒரு காக்கைக் குஞ்சு

cockooo-600x324கண் உள்ள ஆம்பளை எல்லா இடத்துலயும் இருப்பான். ஆனா  (நல்ல) மனசு உள்ள ஆம்பளை எல்லா இடத்துலயும் இருக்கமாட்டான் என்ற அருமையான வரியை (கண் தெரியும் ஒரு பெண் சொல்லியிருந்தால் இந்த வரிக்குக் கூடுதல் கனம் கிடைத்திருக்கும்)  இயக்குநர் ராஜு முருகனால் சிந்திக்க முடிந்திருக்கிறது. ஆனால், அதை அதற்குரிய மரியாதையுடன் படம் பிடிக்க முடியாமல் ஏதோ ஒன்று தடுத்துவிட்டிருக்கிறது. தமிழ் வணிக சினிமாச் சூழலா… இயக்குநர் ஏற்கெனவே புழங்கிய அதிகம் விற்றுத் தொலைக்கும் இதழ்களின் பின்புலமா… எதுவென்று தெரியவில்லை. குயிலாகக் கூவியிருக்க வேண்டிய ஒன்று காகமாகக் கரைந்துவிட்டிருக்கிறது.

நாயகனுக்குக் கண் தெரியாது… நாயகிக்கும் கண் தெரியாது. இருவரும் வழக்கமான தமிழ் சினிமா மோதல்களுக்குப் பிறகு வழக்கமான தமிழ் சினிமா காதலில் விழுகிறார்கள். அந்தக் காவியக் காதலுக்கு வழக்கம் போலவே நாயகியின் அண்ணன் வில்லனாக வருகிறான். பற்பல தடைகளுக்குப் பிறகு வழக்கம் போலவே நாயகனும் நாயகியும் ஒன்று சேருகிறார்கள்.

எந்தவகைப் படமானாலும் சரி… எந்தக் கதாபாத்திரமானாலும் சரி… காதலில் ஆரம்பித்து காதலில் முடிக்கவேண்டும் என்பதுதான் தமிழ் திரையுலகத்தினருக்குத் தெரிந்த ஒரே ஒற்றையடிப்பாதை. மன வளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தைக்கூட காதலினூடாகத்தான் சித்திரிக்கவே அவர்களால் முடியும். இந்தப் படத்தில் வெறும் கண் பார்வை இல்லாதவர்கள்தானே. அவர்களுக்கு ஆசா பாசங்கள், காதல் கத்திரிக்காயெல்லாம் தாராளமாகவே உண்டே அப்படியாக தமிழின் காதல் குப்பை மேட்டில் இன்னொரு பறவைத் தூவல்.

கண் தெரியாதவர்கள் இயற்கையாலும் கைவிடப்பட்டவர்கள்… சமூகத்தாலும் கைவிடப்பட்டவர்கள். இவர்களை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கும்போது இந்த இரண்டு அம்சங்களையும் அழுத்தமாகப் பதியவைக்கவேண்டும். படம் பார்ப்பதற்கு முன்பாக நாம் பார்வையற்றவர்களை எப்படிப் பார்த்துவந்தோமோ அதைச் சிறிதாவது ஒரு படம் மாற்றவேண்டும். ஒரு சொட்டு கண்ணீராவது சிந்த வைக்கவேண்டும். பார்வையில்லாதவர்கள் மட்டுமே உணரும் வலியைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் நம் பார்வையை மாற்றி அமைக்கவேண்டும். கலை, இலக்கியம், உலகத் தரம் என்பவையெல்லாம் வேண்டாம். செய்வனத் திருந்தச் செய் என்ற குறைந்தபட்ச இலக்குகூட இல்லாமல் இருந்தால் அதை என்னதான் சொல்ல?.

கண் தெரிந்த கபோதிகளான நாம் உருவாக்கிய உலகம் போட்டி, பொறாமை, அதிகாரம், அராஜகம், வன்முறை, ஒடுக்குமுறை, ஏற்றத் தாழ்வு என மலினப்பட்டுப் போயிருக்கிறது. உடல் குறைபாடுடையவர்களோ நம்மிடம் இருக்கும் எந்தவொரு இழிவான குணமும் இல்லாதவர்கள். இதை நாலைந்து காட்சிகள் மூலம் சித்திரித்திருக்கலாம்.

ஹாஸ்டலில் இருப்பவர்களுக்கு தீபாவளிக்கு புதிய உடை எடுத்துக் கொடுக்கிறார்கள். நாயகன் தன்னுடைய உடையை அணியாமல் எடுத்துவைத்துக் கொள்கிறான். ஒரு சில நாட்கள் கழித்து அழுக்குத் துணிகளை வெளுக்க வரும் சலவைத் தொழிலாளியை அறைக்கு அழைத்துச் சென்று தனக்கு தரப்பட்ட புதுத் துணியை எடுத்து அவருக்குக் கொடுக்கிறான். ஊருக்கெல்லாம் துணி வெளுத்துக் கொடுத்திருக்கேன். எனக்கு இதுவரைக்கும் யாரும் ஒரு கோமணம் கூட கிழிச்சுக் கொடுத்ததில்லை… கோடித் துணியை இப்படி எடுத்துக் கொடுத்திட்டியே என்று அவர் கண் கலங்கி நிற்கிறார். கண் தெரியாதவரின் சாதி சார்ந்த சமத்துவ உணர்வைக் காட்டி சாதி உணர்வு மீதான விமர்சனத்தை வைத்திருக்கலாம். ஒரு ஏழைக்கு, ஒரு தொழிலாளிக்கு அவர்கள் காட்டும் கருணையைக் காட்டி அவர்கள் மீது நமக்குப் ப்ரியம் வரும்படிச் செய்திருக்கலாம். ஆனால், இயக்குநரோ 35 ரூபாய் சம்பளம் வாங்கும் நபரைப் பார்த்து வறுமைக்கோட்டுக்கு மேல போயிட்ட என்றும் சர்ச்சில் இருக்கும்போது கரண்ட் கட்டானதும் மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றச் சொல்லி சர்ச்சில் பிரார்த்தனை பண்ணலாமா ஃபாதர் என்றும் கலாய்க்கும் லூசுப்பையனாகச் சித்திரித்துச் செல்கிறார்.

கண் தெரியாதவர்களை நாம் நடத்தும்விதம் தவறு என்ற விமர்சனம் படத்தில் இல்லவே இல்லை. நாயகனும் நாயகியும் ஒரு ஹோட்டலில் பிறந்தநாளைக் கொண்டாடும்நோக்கில் சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்து சர்வருக்கு மனசார 20 ரூபாய் டிப்ஸ் கொடுக்கிறார்கள். அந்த சர்வரோ, நீங்க எடுக்கறதோ பிச்சை… அதுல இருந்து எனக்கு டிப்ஸ் கொடுக்கறீங்களா என்று திட்டுகிறான். நாயகனும் நாயகியும் கண்களில் நீர் வழிய, நாங்க பிச்சையெடுக்கலைங்க என்று சொல்கிறார்கள். நீங்க என்ன செய்யறீங்களோ எனக்குத் தெரியாது…. ஆனா உங்க கிட்ட டிப்ஸ் வாங்கிச் சாப்பிடற அளவுக்கு என் நிலைமை ஆகிடலை என்று தெனாவட்டாகச் சொல்கிறான். இதுதானே நாம் பார்வையற்றவர்களைப் பார்க்கும்விதம்.

இப்படி ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. எல்லாரும் நல்லவர்கள் என்று காட்டுவதில் எந்த நியாயமும் இல்லையே (உண்மையில் எல்லாரையும் இயக்குநர் நல்லவராகவும் காட்டிவிடவில்லை. படத்தில் கண் தெரியாதவர்களுக்காகப் பாடங்கள், கதைகள் படித்துக்காட்டும் நபர் ஒருவரைக் காட்டுகிறார். அப்படியானவர்கள் நிச்சயம் கண் தெரியாதவர்கள் மீது கருணை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர் நாயகிக்கு பழைய துணியைக் கொடுத்து அவமானப்படுத்துவதாக காட்சி அமைத்திருக்கிறார். கண் தெரியாதவர் மீது கருணை வருவதற்குப் பதிலாக நமக்கு ஒருவித அதிர்ச்சியும் அவ நம்பிக்கையும்தான் வருகிறது.).

நிச்சயமாக இயக்குநர் கண் தெரியாதவர்களின் உலகுக்குள் லேசாக எட்டிப் பார்த்திருக்கிறார். அதை மறுக்க முடியாது. நாயகனுக்கு மட்டும் தான் லேசான மிகை நடிப்பைப் பரிந்துரைத்திருக்கிறார். நாயகியாக கண் தெரியாத ஒருவரையே நடிக்கவைத்திருக்கிறார் (நாயகிக்குப் படத்துக்கு முன்பு வரை கண் தெரிந்துதான் இருந்தது. படத்துக்குப் பிறகும் கண் தெரியத்தான் செய்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் படப்பிடிப்பு காலத்தில் நாயகிக்கு கண் பார்வை இருந்ததற்கான தடயம் எதுவுமே இல்லை). தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய பரிசு அந்த நாயகி. அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் போவதில்லை என்ற நிலையிலும்.

துணைக் கதாபாத்திரங்களும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் நாயகனின் தோழனாக வரும் நபரும் அவருடைய டிரேட் மார்க் சிரிப்பும் மெல்லிய கமெண்ட்களும் படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட்கள்.

நாயகனுக்கும் அவன் பாடகராகப் பணிபுரியும் மெல்லிசை ட்ரூப்பில் இருப்பவர்களுக்குமிடையிலான நட்பும் இதமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு பணத் தேவை வரும்போது ”எம்.ஜி.ஆர்.’ தன் கழுத்து செயினை கழட்டிக் கொடுக்கும் காட்சி மனதை நெகிழவைக்கிறது.

இப்படியான யதார்த்த அம்சங்களே படத்தை சுவாரசியமானதாக ஆக்கும்நிலையில் டெம்ப்ளேட் காதலுக்குள் தஞ்சமடைந்திருக்கவே வேண்டாம். அப்படியே காதல்தான் தேவையென்றால் கண் தெரியாதவர்களின் ஆத்மார்த்தமான காதலையே அழுத்தமாகச் சித்திரித்திருக்கலாம். படத்தின் ஆதார பஞ்ச் லைன் அதைத்தான் மையப்படுத்தியும் இருக்கிறது. சினிமாத்தனமாக யோசித்துச் சேர்த்திருக்கும் விஷயங்கள் மிகவும் க்ளிஷேத்தனமாகவும் பலஹீனமாகவும் இருக்கின்றன. அதிலும் அந்த வில்லன் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

கல்லூரியில் படித்துவரும் தங்கைக்கு அரசு வேலை வாங்கித் தந்து அவளுக்குக் கிடைக்கும் சம்பளத்தை அப்படியே எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறான் அவன். அம்மா இல்லாத தங்கையை வளர்த்து ஆளாக்கிய ஒரு அண்ணனுக்கு வரும் இயல்பான எண்ணம்தான் அது. அரசு வேலைக்கு லஞ்சமாக 3 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு அண்ணன் என்ன செய்வான்? கையில் இருக்கும் சொத்து பத்துகளை விற்று அந்த லஞ்சத்தைக் கொடுத்து அரசு வேலையை வாங்க முயற்சி செய்வான். கையில் பணம் இல்லையென்றால், எப்படியாவது வட்டிக்காவது வாங்கிக் கொடுக்கப் பார்ப்பான். அரசு வேலை கிடைத்த பிறகு எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். அதன் பிறகு அவள் மூலம் கிடைப்பவை எல்லாமே  லாபம்தான். இதுதான் ஒரு அண்ணனின் எளிய கணக்காக இருக்கும்.

இந்தப் படத்தில் வரும் அண்ணனும் அரசு வேலை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறான். ஆனால், அதை நண்பனிடம் இருந்து வாங்குகிறான். அந்த நண்பன் அதற்குப் பிரதியுபகாரமாக அவளைத் திருமணம் செய்து கொடுக்கச் சொல்கிறான். அன்ணனும் சம்மதித்துவிடுகிறான். வேலை மொதல்ல கிடைக்கட்டும். நண்பனை அப்பறம் கழட்டிவிட்டுடலாம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மனப்பூர்வமாக நண்பனுக்கு திருமணம் செய்து தர முன்வருகிறான். இப்படிச் செய்வதால் அந்த அண்ணனுக்கு எந்த லாபமும் இல்லையே.

தங்கைக்கு திருமணமே நடக்காமல் பார்த்துக்கொண்டால்தானே அவனுக்கு லாபம். பொன் முட்டையிடும் வாத்தை அவனே வைத்துக் கொள்ளத்தானே விரும்புவான். நண்பனுக்கு இலவசமாகக் கொடுப்பானா என்ன..? நண்பன் தரும் மூன்று லட்சம் என்பது நேராக லஞ்சமாகத்தானே போகிறது. அண்ணனுக்கு எதுவும் கிடைக்காதே… ஒருவேளை அவன் ரொம்ப நல்லவன் என்று காட்டவிரும்புகிறாரா இயக்குநர். அப்படியானால், நாயகியின் காதலையே நிறைவேற்றிவைத்திருக்கலாமே. கதையின் பிரதான முடிச்சே பலவீனமாக இருக்கிறது.

கண் தெரியாதவர்களின் காதலுக்குத் தடையாக அண்ணனின் பேராசையே காரணமாக இருக்கிறது என்ற ஒற்றைத் தடையே படத்துக்கு போதிய டிராமாவைக் கொண்டுவருமே… எதற்காக தேர்தல், போலீஸ், ஆக்ஸிடெண்ட், ரயில்வே ஸ்டேஷன் களேபரம் என கலந்துகட்டி படு செயற்கையாக திரைக்கதை அமைக்கவேண்டும்?

கண் தெரியும் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கண் தெரியாத நாயகி தீர்மானமாக இருக்கிறாள். கண் தெரியாதவரைத் திருமணம் செய்துகொண்டால் குழந்தைக்கும் கண் தெரியாமல் போய்விடக்கூடும் என்ற பிழையான பயம் காரணமாக இருக்கலாம். அப்பா, அம்மா இரண்டு பேருக்குமே கண் தெரியாமல் இருந்தால் குழந்தையை எப்படி நன்கு வளர்க்க முடியும் என்று நினைத்து அந்த முடிவை எடுத்திருக்கலாம்.

இதை மீறி கண் தெரியாத நாயகனின் பேரன்பினால் அவள் அவனை ஏற்றுக் கொள்கிறாள். இதுவரையான நிகழ்வுகளை வைத்தே இடைவேளை வரை படத்தை நகர்த்தியிருக்கலாம். இடைவேளையின்போது ஒரு ட்விஸ்ட். அவர்களைச் சேர விடாமல் அவளுடைய அண்ணன் தடுக்கிறான். அந்தத் தடைகளை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள். கடைசியில் அவர்களுடைய உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு காதலுக்கு மரியாதை செய்கிறான் என்று இயல்பாக திரைக்கதை அமைத்துப் படமாக்கியிருந்தால் அது உண்மையான குயிலின் கூவலாக இருந்திருக்கும். வணிக அளவிலும் நிச்சயம் இதைவிடப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.

அல்லது, கண் தெரியும் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற கொஞ்சம் அதிகப்படியான லட்சியத்தையே படத்தின் மைய முடிச்சாக வைத்திருக்கலாம். கண் தெரியாத நாயகியின் வார்த்தைகளைக் கேட்டு நாயகனும் கண் தெரியும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதுதான் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்லது என்று புரிந்துகொள்கிறான். கண் தெரியாதவர்களுக்கு பாடங்களைப் படித்துக் காட்டி சேவை செய்யும் ஒரு ஆணும் பெண்ணும் இந்தக் கண் தெரியாதவர்களைத் திருமணம் செய்துகொள்ள முன்வருகிறார்கள். இரண்டு ஜோடிக்கும் ஒரே மண்டபத்தில் ஒரே நேரத்தில் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால், கண் தெரியும் நபர்கள் ஒருவித லட்சிய வேகத்தில் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்திருக்கிறார்கள்… அவர்களுடைய பெற்றோருக்கு இந்தத் திருமணத்தில் அவ்வளவாக விருப்பமில்லை என்பதெல்லாம் கண் தெரியாத நாயகன் நாயகிக்குத் தெரியவருகிறது.

தாலி கட்டப் போகும் நேரத்தில் நாயகனும் நாயகியும் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார்கள். பொறக்கப் போற குழந்தைங்களை நினைச்சு நாங்க இந்த முடிவை எடுத்தோம். ஆனால், உங்களை வளர்த்து ஆளாக்கின உங்க அப்பா அம்மாவுக்கு கஷ்டத்தைத் தர்ற இந்தச் செயலைச் செய்ய மனசு கேக்கலை. அடுத்த தலைமுறையைப் பத்தி யோசிச்சோம். முந்தின தலைமுறையைப் பத்தியும் யோசிச்சிருக்கணும்.

அதுமட்டுமில்லாம, குழந்தையை நல்லா வளர்க்க கண்ணு தெரியனும்னு அவசியமில்லை. பாசமுள்ள மனசு இருந்தாப் போதும். இனம் இனத்தோடதான் சேரணும். ஏழையா இருக்கறவங்க ஏழையைத்தான கல்யாணம் செஞ்சுக்கறாங்க… பணக்காரரையா கல்யாணம் செஞ்சுக்கறாங்க. அப்படி ஏழையும் பணக்காரரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டா ரெண்டு பேருக்குமே அது பின்னால பிரச்னையாத்தான் ஆகும். கண் தெரிஞ்ச ரெண்டு பேருக்கே இந்தக் கதின்னா… வேற வேற உலகத்துல வாழற நாம எப்படி சேர முடியும். கண் தெரியாதவனுக்கு கண் தெரியாத ஒருத்திதான் நல்ல துணையா இருக்க முடியும். கண் தெரிஞ்ச ஒருத்தருக்கு நாங்க எப்பவுமே ஒரு சுமைதான். கால்ல கல்லைக் கட்டிக்கிட்ட மாதிரிதான் இருக்கும். நாம ஜோடி மாறிக் கல்யாணம் செஞ்சுக்கறதுதான் நல்லது என்று சொல்லி இடம்மாறுகிறார்கள்.

கண் தெரிந்த ஜோடி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தங்கள் முடிவில் உறுதியாக நிற்கிறார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்கள் விரும்பியதுபோலவே திருமணம் நடக்கிறது. கண் தெரியாத இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக கைகளைப் பற்றிக்கொள்கிறார்கள்.

இப்படி எதையும் யோசிக்காமல், இரண்டு சாதாரண நபர்களுக்கு இடையே வரும் காதலுக்கான காட்சிகளை யோசித்துவிட்டு கடைசியில் இருவருக்கும் கண் தெரியாது என்ற ஒரு செல்லிங் பாயிண்டைத் திணித்திருப்பதுபோலவே திரைக்கதை அமைத்ததன் மூலம் நல்ல வாய்ப்பை இயக்குநர் வீணடித்திருக்கிறார்.

(இந்த மாற்றுத் திரைக்கதைகள்தான் ஆகச் சிறந்தவை என்ற தொனியில் இங்கு விவரிக்கப்படவில்லை. அவற்றின் பின்னால் இருக்கும் அணுகுறை, மனோபாவம் இதுவே முக்கியம். அதை அடிப்படையாகவைத்து வேறு காட்சிகளும் கதையும் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற கோணத்திலேயே ஒரு உடனடி உதாரணமாக அவை இங்கு சொல்லப்படுகின்றன).

கோஷிஷ் என்றொரு ஹிந்தி திரைப்படம். ஜெயா பாதுரியும் சஞ்சீவ் குமாரும் நடித்தபடம். அதில் அவர்கள் இருவருமே டெஃப் அண்ட் டம்ப் ஆக இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையுடன் ஒருநாள் சஞ்சய் குமார் கிலுகிலுப்பையை வைத்து விளையாடுவார். வலது காது பக்கம் குலுக்குக் காட்டுவார். குழந்தை எந்த எதிர்வினையும் இல்லாமல் இருக்கும். இடதுபக்கம் அசைத்துக் காட்டுவார் அப்போதும் குழந்தை பொம்மை போல் இருக்கும். அப்பாவுக்கு பதற்றம் தொற்றிக்கொள்ளும். இரண்டு பக்கமும் கிலுகிலுப்பையை மாறி மாறி ஆவேசமாக அசைப்பார். குழந்தை எந்த எதிர்வினையும் இன்றி படுத்திருக்கும். குழந்தைக்குக் காதுகேட்கவில்லை என்று பதறியபடியே சமையலறையில் இருக்கும் மனைவியை அழைத்துவந்து காட்டுவார். அவரும் கிலுகிலுப்பையை அசைத்துப் பார்ப்பார். குழந்தையிடம் எந்த அசைவும்  இருக்காது. இருவரும் துடிதுடித்துப் போவார்கள். சஞ்சய்குமார் விழுந்தடித்து ஓடிப் போய் மருத்துவரை அழைத்துவந்து காட்டுவார். கிலுகிலுப்பையை எடுத்து வேகமாக ஆட்டிக் காட்டி குழந்தைக்கு காது கேட்கவில்லை என்று சொல்லிக்காட்டுவார். மருத்துவர் கிலுகிலுப்பையை வாங்கி அசைத்துப் பார்ப்பார். அதில் ஓசை எழுப்பும் மணிகள் இல்லாமல் இருக்கும். அவர் சிரித்தபடியே, ஒரு சொடக்குப் போடுவார். குழந்தை சட்டென்று அந்த திசையில் திரும்பிப் பார்க்கும். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இன்ப அதிர்ச்சி ஏற்படும். மருத்துவர் மெள்ள கிலுகிலுப்பையைத் திறந்து அதில் குண்டு மணிகள் இல்லாததைச் சுட்டிக்காடுவார். காது கேட்காதவர்களின் வாழ்க்கையை, வேதனையை நுட்பமாக சித்திரிக்கும் காட்சி இது. இந்தப் படத்தில் அப்படியான ஒரு காட்சி கூட இல்லை.

கண் தெரியாதவர்களை ஏதோ வேதனை இருட்டில் உழல்பவர்களாகச் சித்திரிக்கத் தேவையில்லைதான். ஆனால், அவர்களை சராசரி மனிதர்கள் போலவே லந்து பண்ணித் திரிபவர்களாகவே சித்திரித்திருக்கவும் வேண்டாம். அதுமட்டுமல்லாமல் மூன்று லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இரவில் தனியாக பஸ்ஸில் போகிறான். கண் தெரியும் ஒருவரே கூட செய்யத் தயங்கும் செயல் இது (அதுநாள் வரை அவன் ரயிலில் மட்டுமே போய்க்கொண்டிருந்தான். அன்று பார்த்து பஸ்ஸில் போகிறான். தேர்தல் நேரம் வேறு. வோட்டுக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் பணம் என போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். நல்ல போலீஸ் ஒருவர் (மலையாளி என்பதால் ரொம்ப நல்லவரும் இல்லை… 50 ஆயிரம் ரூபாயை ஆட்டையப் போட்டுவிடுகிறார்) காப்பாற்றி அனுப்புகிறார்).

அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் நாயகன் தனியாகவே மும்பைக்கு ரயிலேறிச் செல்கிறான். புனேயில் தானாகவே இறங்குகிறான். மீண்டும் ஏறுகிறான். நாயகியின் கடிகார மணிச் சத்தம் கேட்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கிறான். பெருங் கூட்டத்துக்கு நடுவே அவளைத் தேடி அலைகிறான். அவர்கள் காதலித்த நாட்களில் சொல்லிக் கொண்டதுபோல் ஐந்தாம் பிளாட்ஃபாரத்தின் ஐந்தாம் படியில் நின்று கொண்டு ஸ்டிக்கால் ஓங்கி ஓங்கித் தட்டுகிறான். அவளும் அந்தப் பேரிரைச்சல் நிறைந்த ரயில் நிலையத்தில் நாயகனின் இந்தத் தட்டுகளைக் கேட்டுக் கண்டுபிடித்துவிடுகிறாள். தமிழ் சினிமாதான்… ஒத்துக்கொள்கிறோம். இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ராஜு முருகன்.

கண் தெரியாதவர்களுக்கு காது மிகக் கூர்மையாக இருக்கும் என்பது உண்மைதான். நாயகியின் செருப்பு சத்தத்தை வைத்து நாயகன் அவளைக் கண்டுபிடித்துவிடுவதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார். குறைந்தது அந்தக் காலில் ஒரு கொலுசை மாட்டிவிட்டிருக்கக்கூடாதா..? கொலுசுக்கும் காதலுக்குமான பந்தம் என்பது நிலவுக்கும் காதலுக்குமான பந்தத்தைப் போலவே நீண்ட நெடு பாரம்பரியம் கொண்டதாயிற்றே. கண் தெரியாதவர்களின் உலகில் செருப்பு சத்தத்தவிட கொலுசுச் சத்தம் கூடுதல் ரம்மியமாக ஒலிக்குமே. அதிலும் இளம் பெண்ணின் நிலம் புரளும் பாவடையும் அதற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் மென்மையான முயல் குட்டி போன்ற பாதங்களும் அதில் அணியப்பட்டிருக்கும் கொலுசும் கலையழகு மிளிரும் காமக் காட்சிகள் அல்லவா…. அசட்டு ரப்பர் செருப்பின் ஒலியைப்போய் காதலனின் செவி கூர்ந்து கண்டுபிடிப்பதாகப் போய் காட்டி வீணடித்தது ஏன்?

க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த ஸ்டிக்கில் ஒரு சலங்கை மணியைக் கட்டிவிட்டிருந்தால் குறைந்தபட்ச நம்பகத்தன்மையாவது இருந்திருக்கும். எங்கோ ஆழத்தில் சலங்கை சத்தம் கேட்க, நாயகி அதைக் கண்டுபிடித்து அந்த ஓசை வரும் திசை நோக்கி நடக்க நடக்க அந்த ஓசை பெரிதாகிக் கொண்டேவர, மற்ற பேரிச்சைச்சல் எல்லாம் மறைந்துபோல் காதலின் ஒற்றைச் சலங்கை ஒலி மட்டுமே அவளை வழிநடத்திச் செல்ல அங்கே நாயகன் வாக்கிங் ஸ்டிக் ஒடிய தட்டிக் கொண்டிருக்கிறான். நாயகி அவனை நெருங்க நெருங்க அதிகரித்துவரும் சத்தம் ஒரு கட்டத்தில் நின்றுபோய்விடுகிறது. ஸ்டிக் உடைந்து போய்விடவே சலங்கை தெறித்து எங்கோ விழுந்துவிடுகிறது. நாயகன் பதறியபடியே தரையில் அதைத் தேடித் துழாவுகிறான். தரையில் விழுந்த சலங்கை நேராக உருண்டு போய் நாயகியின் காலில் சென்று முட்டுகிறது. அதை எடுத்து அவள் ஒலிக்கிறாள். அதைத் தேடிவரும் நாயகன் அந்த ஒலியை வைத்து அவளைக் கண்டு பிடிக்கிறான். கண் தெரியாதவர்களை அவர்களுடைய காதலின் குறியீடான சலங்கையும் அதன் மெல்லிய ஒலியும் ஒன்று சேர்க்கிறது என்று முடித்திருக்கலாம்.

கல்ர் ஆஃப் பாரடைஸ் படத்தில் கண் தெரியாத சிறுவன் மீது நமக்கு ப்ரியம் உண்டாக அருமையான காட்சி ஒன்றைச் சித்திரித்திருப்பார் இயக்குநர். மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்ட பறவைக் குஞ்சு ஒன்றை அதன் மெல்லிய அலறலை வைத்தே கண்டுபிடித்து அதைக் கஷ்டப்பட்டு மரத்திலேறி அதன் கூட்டில் விடுவான் (பூனை ஒன்று அந்தக் குஞ்சைக் கொல்லவருவதைக் கேட்டு விரட்டியும் அடிப்பான்). கண் தெரியாதவர்களுக்குக் கேட்கும் சக்தி கூர்மையாக இருக்கும் என்பதை அப்படியும் காட்டலாம்.

இதுதான் இப்படியென்றால், கண் தெரியாத ஜோடி என்பதால் கதைக்கு எக்கச்சக்கமாக கனம் கூடிவிட்டதாக நினைத்துக்கொண்டு அதை பேலன்ஸ் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் எல்லாம் சிரிக்கும்படியாக இருந்தாலும் இந்தக் கனமான கதையைக் கீழிறக்கவே செய்கின்றன.

கண் முன்னே கஷ்டப்படுபவர்களைக் கண்டு வருந்தாமல் தன் பேரன் இருக்கும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் கலவரத்தைக் கண்டு வருந்தும் டெம்ப்ளேட் பிராமணர், நல்லிதயம் கொண்ட டெம்ப்ளேட் கிறிஸ்தவ கதாபாத்திரங்கள், விலாவாரியான சர்ச் காட்சிகள், அவுட் ஆஃப் ஃபோகஸிலேயே காட்டப்படும் இந்துக் கடவுள்கள், நள்ளிரவில் மாராப்பு இல்லாமல் கண்முன் வது நிற்கும் லட்டு போன்ற பெண்ணை சகோதரியாகப் பார்க்கும் கறுப்புச் சட்டை தமிழ் தேசியவாதி (அவருடைய வாகனத்தின் பெயர் தமிழ்த் தாய்), 3 லட்சம் லஞ்சம் கேட்பவர் அடிக்கடி ஜபிக்கும் நமச்சிவாய நாமம் என இயக்குநர் மிகத் தெளிவான அரசியலுடன்தான் களமிறங்கியிருக்கிறார். படியளக்கிற எஜமானின் பாட்டுக்கு ஏற்பத்தானே ஆடியாகவேண்டும். இயக்குநருக்கு அந்தக் கலை நன்கு கைவந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் வில்லன் மற்றும் அடியாட்களின் பெயர் எல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பெயராக இருக்கும். ரஜினி படங்களில் கூட இதை நாம் பார்க்க முடியும். அதற்கான பதிலடி என்று இதைச் சிலர் சொல்வார்கள். விஷயம் என்னவென்றால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் அப்படிப் பெயர் வைத்ததை அவர்களுடைய பிற மத வெறுப்பாக  எடுத்துக்கொள்ளவே முடியாது. ஏனென்றால், அவர்களுடைய பிற ஒட்டு மொத்த செயல்பாடுகளில் அப்படியான பாரபட்சத்தை, வெறுப்பை நீங்கள் பார்க்கவே முடியாது.

ஆனால், இன்றைய தமிழ் சினிமாவில் கிறிஸ்தவ, தமிழ் தேசிய சிலாகிப்புகளும் இந்து, இந்திய காழ்ப்புகளும் மிகத் தெளிவான அரசியல் திட்டமிடல் மூலமாக இடம்பெறுகின்றன. இன்று அந்த சக்திகளுக்கு அதிக பலம் இல்லை. ஆனால் ,நாளை அவர்கள் செல்வாக்கு பெற்றுவிட்டால், இந்த வெறுப்புகள் வேறு உச்சங்களை எட்டும். அது அபாயகரமானது. அப்படியாக குக்கூ காகமாகப் போன வருத்தத்தோடு, நாளை அது கழுகாக மாறிவிடுமோ என்ற பயமும் வருகிறது. எந்த வணிக நிர்பந்தங்கள் குயிலைக் காகமாக ஆக்கினவோ அவையே கழுகாக ஆகாமலும் காக்கவேண்டும்.

ஏ. ஆர். ரஹ்மான்: இசையின் நவீனம்

The more I compose, the more I know that I don’t know it all!

–    A. R. Rahman (The Times of India, 27th August 2013)

topimg_19280_ar_rehman_600x400ஏ. ஆர். ரஹ்மான் என்றழைக்கப்படும் அல்லா ரக்கா ரஹ்மான் இந்தியத் திரை இசையின் நவீன முகம். இரு தசாப்தங்களாக இந்த தேசத்தின் இசை ரசனையில் – குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் – வலுவான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பவர்.

சென்னையில் ஓர் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த திலீப் குமார் தான் இன்று சர்வதேச அளவில் தன் இசைச்சிறகுகளை விரிந்திருக்கும் இந்த ரஹ்மான். பிறப்பால் இந்துக்கள்தான் என்றாலும் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு சில‌ சிக்கல்கள் தீர்ந்த நம்பிக்கையில் இஸ்லாத்திற்கு மாறியது அவர் குடும்பம்.

ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகரும் ஒரு புகழ் பெற்ற இசையமைப்பாளரே. அவர் பெரும்பாலும் பணியாற்றியது மலையாளப் படங்களில். ரஹ்மானுக்கு முதலில் இசை பயிற்றுவித்தவர் அவரே. ஆனால் சிறுவயதிலிருந்தே வீட்டில் இசைக் கருவிகளும் சினிமாக்காரர்களும் சூழ வாழ நேர்ந்தால் இசையின்மீதும் சினிமாவின் மீதும் பெரிய ஆர்வம் ஏதும் ரஹ்மானுக்கு ஏற்பட‌வில்லை. ஒரு மின்பொறியாளர் ஆக வேண்டும் என்பதே அவரது சிறுவயதுக் கனவாக இருந்தது.

பிற்பாடு இசையின்மீது ஆர்வம் வந்தது இரு காரணங்களால். ஒன்று அவரது தந்தை வைத்திருந்த நவீன மின்னணு இசைக் கருவிகள். ரஹ்மானின் ஆர்வம் மின்பொறியியல் என்பதால் இந்தக் கருவிகள் அவரை வசீகரித்தன. அதாவது ஒரு தொழில்நுட்ப மாணவனாகவே அவர் இசைக் கருவிகளை அணுகினார். தொடக்க காலம் முதல் இன்று வரை அவரது இசையின் பிரதானக்கூறும் தனித்துவமும் இந்தத் தொழில்நுட்பத் துல்லியமே என்பதற்கான பின்புலக் காரணம் இதுதான்.

இரண்டாவது காரணம் ரஹ்மானின் பத்தாவது வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட, வீட்டின் மூத்த ஆண் என்ற வகையில் குடும்பச் சுமை அவர் தலையில் விழுந்தது. பள்ளி சென்று கொண்டிருந்த அந்த வயதில் கற்றிருந்த ஒரே விஷயமான இசையைத்தான் அவர் தொழிலாகத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

ரஹ்மான் என்ற‌ அற்புதம் நிகழ்ந்தது சூழலின் அழுத்தம் ஏற்படுத்திய விபத்தே.

*

இசைக் குழுக்களில் வாசிப்பவராகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

இந்த ஆரம்பகட்டத்தில் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், எல். சங்கர் ஆகியோரிடம் ரஹ்மான் பணியாற்றியிருக்கிறார். இளையராஜாவிடம் (விஜய் மேனுவல் என்பவரின் கீழ்) கீபோர்டிஸ்டாக இருந்த‌போது ரஹ்மான் வாசித்த புன்னகை மன்னன் தீம் ம்யூஸிக் மிகப் பிரசித்தம்.

சிறுவயதில் தூர்தர்ஷனின் வொன்டர் பலூன் என்ற குழந்தைகள் நிகழ்ச்சியில் ஒரே சமயம் நான்கு கீபோர்ட் வாசித்திருக்கிறார். மலேஷியா வாசுதேவனுடன் இணைந்து டிஸ்கோ டிஸ்கோ, மால்குடி சுபாவுடன் இணைந்து ஸெட் மீ ஃப்ரீ, டீன் இசை மாலை என்ற சூஃபி இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தார். 90களில் அவர் இசையமைத்த‌ சில விளம்பரங்கள்: 1) http://www.youtube.com/watch?v=e4Rch0KTRmc 2) http://www.youtube.com/watch?v=lBj4FampoE4 3) http://www.youtube.com/watch?v=kEHQRuE_7ck 4) http://www.youtube.com/watch?v=7TVmI9OJ_MM 5) http://www.youtube.com/watch?v=xN9b4qIGoOE

1992ல் மணி ரத்னத்தின் இயக்கத்தில் கே. பாலச்சந்தர் ஒரு படம் தயாரித்தார். அப்போது இருவருமே இளையராஜாவுடன் – இசை அல்லாத வேறு தனிப்பட்ட காரணங்களால் – கசப்புற்று இருந்தனர். பாலச்சந்தர் ஏற்கெனவே மரகதமணியை (எம். எம். கீரவாணி) வைத்துப் படங்களுக்கு இசைய‌மைத்துக் கொண்டிருந்தார்.

இருவரும் இணைவதால் மணி ரத்னமும் இம்முறை இளையராஜாவை விடுத்து வேறொரு இசையமைப்பாளரைத் தன் படத்துக்குப் பயன்படுத்தத் தீர்மானித்தார்.

ராஜீவ் மேனன் அப்போது திரைப்பட ஒளிப்பதிவாளராக வந்திருந்த புதிது. அது போக‌, விளம்பரப் படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது விளம்பரப் படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருந்தார். மணி ரத்ன‌த்திடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார் மேனன். அந்தத் திரைப்படம் ரோஜா.

ரஹ்மான் திரை வாழ்க்கை தொடங்கியது. ஓர் இசைச் சகாப்தத்தின் ஆரம்பம் அது.

ரோஜாவின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுஜாதாவிடம் அப்போது ரஹ்மானை அறிமுகம் செய்திருக்கிறார் மணி ரத்னம். பாடல்களைக் கேட்டு விட்டு “புகழுக்குத் தயாராகுங்கள்” என்று சொல்லி இருக்கிறார் சுஜாதா. பிற்பாடு நடந்தது அதுதான்.

ரோஜா என்ற‌ அந்த‌ முதல் முயற்சியிலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார் ரஹ்மான். அந்த விருதிலும் சுவாரஸ்யம் ஒன்று இருக்கிறது. 1992ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதின் இறுதிப் போட்டியில் தேவர் மகனும் ரோஜாவும் இருந்தன. இரண்டு படங்களும் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம நிலையில் இருந்தன. பாலு மகேந்திரா தான் விருதுக் குழு தலைவர். அவர் போடும் ஓட்டே விருதைத் தீர்மானிக்கும் என்ற நிலை. “ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மாமலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன். தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன்” என்று சொல்கிறார் பாலு மகேந்திரா (இந்திர விழா என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் இதைப் பகிர்ந்து கொண்டார்).

முதல் படத்திலேயே நாடறிந்த இசையமைப்பாளர் ஆனார் ஏ. ஆர். ரஹ்மான்.

*

ஏ. ஆர். ரஹ்மான் சினிமாவில் நுழைந்து 21 ஆண்டுகள் ஆகிறது. அவரது இசைப் பயணத்தை நான்கு முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் தமிழ் நாட்டில் பிரபலமடைந்தார். இரண்டாம் பகுதியில் இந்திப் படங்களின் மூலம் வட இந்தியாவில் அறிமுகமானார். மூன்றாம் பகுதியில் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். நான்காம் பகுதியில் சர்வதேசிய‌ அளவில் பிரசித்தி பெற்றார்.

1992 முதல் 1995 வரை. ரோஜா, புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்குச்சீமையிலே, திருடா திருடா, டூயட், மே மாதம், காதலன், கருத்தம்மா, பம்பாய், இந்திரா ஆகிய படங்களுக்கு இசை அமைத்தது இந்த ஆரம்ப ஆண்டுகளில் தான். என் வரையில் ரஹ்மானின் ஆகிச் சிறந்த படைப்பூக்கம் வெளிப்பட்ட‌ காலகட்டம் இதுவே.

1996 முதல் 2000 வரை ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா வழியாக இந்தியில் பிரவேசித்தாலும் தாள் (தாளம்), தில் சே (உயிரே) தவிர அங்கே நிறைய படங்கள் பணியாற்றவில்லை. தொடர்ந்து தமிழ் படங்களில் கோலோச்சினார். மின்சாரக் கனவுக்காக தேசிய விருது பெற்றார். வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்டார். ரஜினி படங்களுக்கும் (முத்து, படையப்பா), கமல் படங்களுக்கும் (இந்தியன், தெனாலி) இசையமைத்தது இந்தக் காலகட்டத்தில் தான். லவ்பேர்ட்ஸ், காதல் தேசம், மின்சாரக் கனவு, இருவர், ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, என் சுவாசக் காற்றே, காதலர் தினம், சங்கமம், ஜோடி, தாஜ்மஹால், முதல்வன், அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

2001 முதல் 2007 வரை. லகான், ரங் தே பசந்தி, யுவா (ஆய்த எழுத்து) ஸ்வதேஸ், குரு, ஜோதா அக்பர், ஜானே து யா ஜானே நா, கஜினி, பாம்பே ட்ரீம்ஸ் (ஆல்பம்) ஆகிய படங்களின் வழி இந்தித் திரையுலகில் ரஹ்மான் இசைச் சக்கரவர்த்தியாக உயர்ந்த ஆண்டுகள் இவை. லகான், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்கு தேசிய விருதுகள் பெற்றார். க்ரெய்க் ஆம்ஸ்ட்ராங் என்ற ஸ்காட்லாண்ட் இசை அமைப்பாளருடன் இணைந்து சேகர் கபூரின் Elizabeth: The Golden Age படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். பாபா, பாய்ஸ், சில்லுனு ஒரு காதல், வரலாறு, சிவாஜி ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

2008 முதல் இன்று வரை. உலக‌ அளவில் ரஹ்மான் புகழ் பெற்றதும் Slumdog Millionaire படத்துக்காக கிராம்மி, ஆஸ்கர், பாஃப்டா, கோல்டன் க்ளோப் ஆகிய சர்வதேசிய விருதுகளை அவர் பெற்றதும் இந்தக் காலத்தில் தான். சக்கரக்கட்டி, டெல்லி 6, விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன், ராக்ஸ்டார், 127 Hours, கடல், மரியான் ஆகிய படங்களுக்கு இந்த ஆண்டுகளில் இசைய‌மைத்தார்.

தற்போது கோச்சடையான், ஐ, சட்டென்று மாறுது வானிலை, காவியத் தலைவன், ஹைவே, பாணி, விண்டோ சீட், The Hundred-Foot Journey, Million Dollar Arm, Mumbai Musical ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மானின் சொந்தத் திரைக்கதையில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன‌.

இன்னும் அவர் நிறைய தூரங்கள், பிரதேசங்கள் செல்வார். பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிப்பார். காலம் காத்திருக்கிறது; ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

*

சந்தேகமே இல்லாமல் இளையராஜா என்ற இசை மேதமைக்கு அடுத்தபடியாக இந்தியா சினிமா கண்ட ஆகச்சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

இளையராஜாவுடையதைப் போல் ஆன்மாவிலிருந்து இயல்பாய்ப் பிரவாகிக்கும் ஊற்று அல்ல ரஹ்மானின் இசை; அது ஒரு க்ராஃப்ட். ஒரு விஞ்ஞானம்; ஒரு கணிதம்; திட்டமிட்ட, துல்லியமான கலை; மிக‌ உயிர்ப்புள்ள தொழில்நுட்பம்.

ரஹ்மான் கடுமையான உழைப்பாளி. ஒரு பாடலுக்கென மனதில் தோன்றும் ஒரு மிகச் சிறிய பொறியிலிருந்து தொடங்கி, அதைக் கவனமாய்ச் செதுக்கி, நுட்பமாய் மெருக்கேற்றி, அழகாய் அலங்கரித்து மிகச் சிறப்பான படைப்பாய்த் தருகிறார்.

இதன் காரணமாகவே அவரது பாடல்களில் பல அடுக்குகள் சாத்தியமாகிறது. நாம் நூறாவது முறை கேட்கும் போதும் ஒரு புதிய விஷயம் அகப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அதனால் தான். அவர் அப்பாடலில் தன் நூறாவது முயற்சியில் அந்த வியப்பைச் சொருகி இருக்கக்கூடும். அவ்வளவு தூரம் சிறந்த படைப்பாக வர ரஹ்மான் மெனக்கெடுகிறார். அதனால் தான் அவர் பொதுவாய் இசை அமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார். போன்ஸாய் உருவாக்கும் ஒரு ஜப்பானிய தோட்டக்காரனின் பொறுமையையும் துல்லியத்தையும் இதனோடு ஒப்பிடலாம்.

ரஹ்மானின் பிற்காலத்திய பாடல்கள் பெரும்பாலும் நமக்கு முதல் கேட்டலில் அவ்வளவாய் ஈர்க்காமல் போவதற்குக் காரணம் அவற்றின் நுட்பமான அடுக்குகள் ஆரம்பத்தில் நம‌க்குப் பிடிபடாமல் போவது தான். தொடர்ந்த கேட்டலில் மெல்ல முடிச்சுக்கள் அவிழ்கின்றன. உண்மையில் ரஹ்மான் இசையினூடாக நம்மைக் குழந்தைகளாக்கி வேடிக்கை காட்டுகிறார். ரஹ்மான் கடைசியாய் அமைத்த எளிமையான மெட்டு ‘சின்ன சின்ன ஆசை’ (ரோஜா) எனத் தோன்றுகிறது.

அவர் இசையின் இலக்கணங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில்லை. அவற்றில் அவருக்குப் பாண்டித்யம் இருந்தாலும் அதை உடைக்க தொடர்ந்து முயல்கிறார். தன்னிடம் பணியாற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கிறார். அவர்களின் சேஷ்டைகள் மூலமாக தன் படைப்பு இன்னும் மெருகேறும் என்றால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார். சினிமா இசை என்பது ஒரு கூட்டுக் கலை என்பதை சுத்தமாகப் புரிந்து வைத்திருப்பவர்.

ரஹ்மானின் முக்கிய சாதனை இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்தது தான். தொழில்நுட்பத்தின் குழந்தை அவர். அந்த வகையில் இளையராஜாவுக்கு ஹார்மோனியம் என்றால் ரஜ்மானுக்கு சிந்த்தசைஸர் எனலாம். அதனால் தான் அவரது பாடல்களின் ஒலியமைப்பு மிகுந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஏ. ஆர். ரஹ்மான் சினிமா இசையை முழுமையாய் நவீனமாக்கினார். அதாவது இசையின் உள்ளடக்கம் மட்டுமல்லாது அதன் மொத்த‌ ஆக்கத்திலும் நவீனத்தைப் புகுத்தினார். இரண்டிலுமே தொடர்ந்து சர்வதேச அளவில் என்னென்ன புதிய விஷயங்கள் வருகின்றனவோ உடனடியாக அதற்கேற்றாற் போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள அவர் ஒருபோதும் தவறியதில்லை. அது தான் அவரது USP.

Panchathan Record Inn and AM Studios என்ற கோடம்பாக்கத்தில் அவரது வீட்டுக்குப் பின்னாலேயே இருக்கும் அவரது ஸ்டூடியோ அதற்கு உதாரணம். இசையைப் பொறுத்தவரை ஆசியாவின் மிக நவீனமான ஸ்டூடியோக்களில் ஒன்று இது. ஒலியமைப்புக்கு தேசிய விருதுகள் பெற்ற ஏ. எஸ். லக்ஷ்மிநராயணன், ஹெச். ஸ்ரீதர் ஆகியோர் ரஹ்மானின் இந்த‌ ஸ்டூடியோவில் பணியாற்றியவர்கள்.

வெளிநாட்டிலிருந்து கொண்டே மின்னஞ்சல் மூலம் இசைக்குறிப்புகளை அனுப்பி இங்கே பாடல் பாடி பதிவு செய்யப்ப‌டும் அளவுக்கு அவர் நவீனமாய் இருந்தார்.

*

ரஹ்மானின் இசை இந்த மண்ணோடு சம்மந்தப்பட்டதல்ல. அவர் பிரபஞ்சத்தின் பிரதிநிதி. அவர் இசையமைத்த கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா, தாஜ்ம‌ஹால் போன்ற கிராமியப் படங்களில் கூட தமிழிசையை அமுக்கி விட்டு நவீனமே மேலோங்கி நின்றது. குறிப்பிட்ட இசையில் நேட்டிவிட்டி இருந்தால் கிட்டும் படைப்பு நேர்மையை விட அதுவரை யாரும் செய்திராத புதுமை முயற்சியாய் இருக்க வேண்டும் என்பதற்கே அவர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ரஹ்மான் ஒரு கட்டத்தில் முழுக்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தியதால் இங்கே தமிழில் மணி ரத்னம், ஷங்கர், ரஜினி இவர்களுக்கு மட்டும் இசை அமைத்துக் கொடுத்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் யோசித்துப் பார்த்தால் அது தானே சரியானது! வளர்ச்சிப் பாதையில் இருக்கும் எந்த இளைஞனும் அவ்வாறே முடிவெடுக்க முடியும். பத்தாண்டுகளுக்கு மேலாய்ப் போதுமான அளவு இங்கே பங்களித்து விட்டு தான் அங்கே சென்றார்.

இந்தியிலும் ஆங்கிலத்திலும் இசையமைத்ததை மேலும் உயரத்திற்குப் போனார் என்று சொல்வதை விட மேலும் பரவலாய் மக்களைச் சென்றடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அதாவது ஆழ உழுவதை மறுதலித்து அகல உழுதார்.

ரஹ்மான் தமிழ் இசையை வடக்கிலோ, இந்திய இசையை மேற்கிலோ அறிமுகம் செய்யவில்ல. அங்கே அந்தத் திரைப்படங்களுக்குத் தேவையான அவர்கள் பாணி இசையையே கொடுத்தார். அங்கு அவர்களின் ஆள் பணிபுரிந்திருந்தால் என்ன இசையை உருவாக்கி இருப்பாரோ அதையே ரஹ்மான் அவர்களுக்கு இணையாய், சமயங்களில் இன்னும் சிறப்பாய் உருவாக்கினார். Bombay Dreams, Slumdog Millionaire இரண்டும் தான் அவர் இந்திய இசையை உலகிற்குச் சொன்ன இரு முயற்சிகள். இவற்றில் Slumdog Millionaireல் அவரது மிகச்சாதாரண இசையே வெளிப்பட்டது.

மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ் என அவர் அழைக்கப்படுவதில் ஓசை நயத்தைத் தாண்டி வேறேதும் பொருத்தமில்லை. ஐரோப்பிய சாஸ்திரிய சங்கீதத்தில் தன் படைப்பாளுமையை மோஸார்ட் அழுந்தப் பதிவு செய்ததைப் போல் ரஹ்மான் இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் (கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, சூஃபி இசை போன்றவை) பெரிய முயற்சிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஓர் அபார திரை இசைக்கலைஞராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அதிலும் அப்ப‌டங்களின் தேவைக்கேற்பவே தன்னைத் தகவமைத்துக் கொண்டார். ஒருவகையில் ஹாலிவுட் இசைக்கலைஞர் ஆலன் மென்கெனுடன் ரஹ்மானை ஒப்பிடலாம். உண்மையில் மென்கென் ஆஃப் மெட்ராஸ் தான் ஏ. ஆர். ரஹ்மான்.

பின்னணி இசையில் ரஹ்மான் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் அது அவரது போதாமை என்றில்லாமல் முக்கியத்துவம் தாராதால் தான் அப்படி நிகழ்வதாகத் தோன்றுகிறது. அதாவது பாடல்களே அவரை மக்கள் மத்தியில் புகழ் பெறச் செய்கிறது. அதற்காக அவர் சிரத்தை எடுக்கிறார். பின்னணி இசை அதற்கு இணையாக இல்லை என்பதை பொதுமக்கள் கவனிப்பதே இல்லை. அது விமர்சகர்களின் திடல். அங்கு தன்னை அவர் முன்வைக்க மெனக்கெடுவதில்லை ரஹ்மான். ஆனால் அவரது பின்னணி இசை மிக‌ச் சிறப்பாக அமைந்த‌ ரோஜா, இந்தியன் போன்ற படங்களைக் கொண்டு பார்த்தால் அதிலும் அவர் நன்றாகப் பரிமளிக்கக்கூடியவர் என்றே தெரிகிறது.

வெகுஜன வெற்றியின் சூத்திரம் எதுவோ அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறார். திறமையை வெளிப்படுத்துவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

*

தமிழ் மக்களைத் தாளம் போட வைத்தவர், இந்திய இளைஞர்களை ஆட்டம் போட‌ வைத்தவர். இன்று உலகெங்கும் இருப்பவர்களைத் தன் பக்கம் திருப்பி இருப்பவர்.

சினிமா தாண்டி சாஸ்திரிய இசையிலும் அழுத்தமாய் தன் முத்திரைகள் பதிப்பார்.

அவரது அடக்கம் மற்றும் அமைதியான தோற்றம் அவரை இந்தியாவில் யூத் ஐகான் ஆக்கி இருக்கிறது. அதற்கும் அவரது இசைப் பங்களிப்பிற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் இந்தியர்கள் பொதுவாய் ஒழுக்கத்தையும் திறமையுடன் சேர்த்து ஒரு பேக்கேஜாகவே செலிப்ரிட்டிகளிடம் எதிர்பார்க்கிறார்கள். டெண்டுல்கர் போல் ரஹ்மானும் இவ்விஷயத்தில் ரசிகர்களின் ஐடியல் ஃபிகராகத் திகழ்கிறார்.

ரஹ்மான் பொதுவாகப் பேட்டிகளில் மிக அடக்கமாகப் பதில் சொல்வது வழக்கம். ஆனால் அதை இயல்பாக அல்லாமல் திட்டமிட்டே செய்வதாகக் குறிப்பிடுகிறார். புதிய தலைமுறை இதழுக்கு 2010ல் அளித்த பேட்டியில் “நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு காரசாரமாகப் பதில் சொல்வது ஒரு வழி. அமைதியாய், நிதானமாய் பதில் சொல்வது இன்னோர் வழி. நான் இந்த இன்னோர் வழியைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். ஆஸ்கர் விழாவில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பினைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னதன் நீட்சி இது.

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளர் ரஹ்மான் தான்.இடையில் அவர் முஸ்லிம் என்பதால் தன் சம்பாத்தியத்தில் தீவிரவாதத்திற்கு பண உதவி செய்வதாய் பொய்ச்செய்தி வெளியானது (நக்கீரன் என நினைவு).

இன்று தன் பெயர் ஒட்டிய லேபிளைக் கொண்டே அந்த இசையை அபாரம் என்று சிலாகிக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார் ரஹ்மான். அப்படிக் கண்மூடித்தனமாய் ரசிக்குமளவு அவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியதே ரஹ்மானின் தனிச் சாதனை தான். இசையில் அவர் ஒரு ரஜினி.

ரஹ்மான் இன்னும் பரவலாய் உலகமெங்கும் கோடானு கோடி பேர்களைச் சென்றடைவார் என்பதில் சந்தேகமே இல்லை. சமகாலத்தில் உலக மக்களை அதிகம் வசீகரித்த இசையமைப்பாளராக உருவாகுவார். இந்திய இசை அவரின் மூலமாக உலகை அடையவில்லை என்றாலும் இந்தியா என்ற தேசம் அவரால் மரியாதையாகப் பார்க்கப்படும். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு வாழ்த்துக்கள்!

சமீபத்தில் குமுதம் இதழில் அளித்த ஒரு பேட்டியில் “இசையிலும் ரசனை மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு ராஜாவைத் தாண்டி நாளைக்கு என்னையும் தாண்டி இசை ரசனை வளர்ந்து போய்க் கொண்டு தான் இருக்கும்” என்கிறார் ரஹ்மான். அதாவது காலத்திற்கேற்ப மாறும் ஃபேஷனாகவே அவர் இசையைச் சித்தரிக்கிறார். அதற்கேற்பவே அவர் மாறிக் கொள்கிறார்.

ஆனால் உண்மையில் இசை என்பது பூரணமான கலை. தொழில்நுட்பம் காலாவதியாகும்; ஆனால் நல்ல கலை சாஸ்வதமானது. மோஸார்ட், பேக், பீத்தோவன், தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, எல்லாம் அப்படித் தான் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களைக் கடந்து போவதெல்லாம் மேலோட்டமான ரசனை கொண்ட அந்தந்தக் காலத்து வெகுஜன தலைமுறைகள் மட்டுமே. தேர்ந்த ரசனை கொண்டவர்கள் வழியாக இவை வரலாற்றில் நிற்கும்.

ராஜா காலம் கடந்து நிற்பது போலவே ரஹ்மானும் காலம் கடந்து நிற்பார்.

0

டிடிஎச்-க்கு என்ன பதில், கமல்ஹாசன்?

imagesகோவிந்த் நிஹிலானியும் கமல்ஹாசனும் வசனமெழுதிய படம் குருதிப் புனல். கமல்ஹாசன்தான் நாயகன். போலிஸ் அதிகாரி வேடம். சிறைபிடிக்கப்பட்ட தீவிரவாதியிடம், அவன் சினிமாவைப் பார்த்து பலஹீனமான இளைஞர்களை நம்பியிருப்பதாக அந்த போலிஸ் அதிகாரி வசனம் பேசுவதாக காட்சி வரும்.

இந்த வசனத்தின்படி சினிமா பார்க்கும் இளைஞர்களை பலவீனமானவர்கள் என்பதாக சித்தரிக்க முடிந்த கமல்ஹாசனால், அந்த பலவீனமான ரசிகர்களைக் கொண்டே, தனக்கென ஓர் உயர்ந்த பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

தன்னளவில் பலத்தை அதிகரித்துக்கொண்டு ஒரு ஹீரோவாக வளர்ந்த கமல்ஹாசன், புதுமைகளுக்குப் பெயர் போனவர். வித்தியாசமான மேக்கப், காட்சி அமைப்புகளில் பரிசோதனை முயற்சி, பத்து வேடங்கள், வயது கடந்த கிழவனை ஹீரோவாகக் காட்டும் சினிமா… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இதெல்லாம் Movie Making எனப்படும் சினிமா எடுப்பதில் மட்டும் செய்து கொண்டிருந்த புதுமைகள். இப்போது சினிமாவை விற்பதில் புதுமை செய்யலாம் என நினைத்துத் தனது புதிய படமான விஸ்வரூபத்தினை., டிடிஎச் தொலைக்காட்சியில் ரிலீஸ் என்று அறிவித்தார். அதுவும் அந்தப் படம் ஜனவரி 10ம்தேதி இரவு ஒன்பதரை மணிக்கு டிடிஎச் சானல்களில் காட்டப்படும்.. அதன் பின்னர் மறுநாள் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. ஏர்டெல் டிடிஎச் சேவைக்காக பிரத்யேக ப்ரஸ் மீட் நடந்து இந்தத் திட்டம் மிக வேகமாக பிரபலமடையத் தொடங்கியது.

இது மாதிரி டிடிஎச் ரிலீஸ் செய்ய பல டிடிஎச் சேவை நிறுவனங்கள் முன்வந்தன. அந்த நிறுவனங்களின் சானல்களில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான கமல்ஹாசனே தோன்றி விளம்பரங்கள் செய்தார். இதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தை, டிடிஎச் சானலில் பார்க்க ஒரே ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் சந்தாதாரர்கள் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட்து. கமல்ஹாசனின் விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் இந்த சந்தாவினைக் கட்டத் தொடங்கினார்கள்.  இப்படி வசூல் ஆன தொகை ஒரு கட்டத்தில் முன்னூறு கோடியினைக் கடந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தச் சமயத்தில் இந்த திரைப்படத்தை டிடிஎச் தளத்தில் வெளியிட தியேட்டர் ஓனர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது.

திரைப்படத்தினை சினிமா தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும். டிடிஎச்-சில் வெளியிட்டால் அது சினிமா தியேட்டர்களின் வருவாயைப் பாதிக்கும் என்பது தியேட்டர் முதலாளிகள் தரப்பின் வாதம்.

டிடிஎச்-சில் படம் பார்க்கும் ரசிகர்கள் வெறும் மூன்று சதவிகிதம்தான். அதனாலே தியேட்டரில் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் கூட்டம் மாறப் போவதில்லை. தியேட்டர் ஓனர்களின் பயமும் எதிர்ப்பும் நியாயமில்லை. அநாவசியமானது, அர்த்தமில்லாதது என்று விளக்கம் சொல்லி கமல்ஹாசனின் அறிக்கையும் பேட்டியும் வெளியானது. அந்த  அறிவிப்பில், வீட்டிலே சுவற்றிலே பெருமாள் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்காக திருப்பதிக்கு பெருமாளை வழிபடச் செல்கின்றவர்கள் குறைந்துவிட்டார்களா என்ன, வீட்டிலே சிறந்த சமையல் மூலம் சுவையான உணவு கிடைக்கிறது என்பதற்காக மக்கள் ஹோட்டலுக்குப் போவதில்லையா என்ன என்று மிகவும் உருக்கமாக கமல்ஹாசன் சொன்னதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன், தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கமும், குடியரசும் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றம் என்பதாகவும் சொன்னார்.

இந்த திரைப்படத்தை டிடிஎச்சில் வெளியிட இருக்கும் தனக்கு இதனால் பல தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்களிடமிருந்து மிரட்டல் வருவதாகப் பேட்டிகளில் சொன்ன கமல்ஹாசன், இது குறித்து காவல் துறையில் புகாரும் தந்தார். மிரட்டலுக்குத் தான் பயப்படப் போவதில்லை என்றும் படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதி டிடிஎச்-சில் வெளியாகும் என்றும் அறிவித்தார்.

தனக்கு சட்டப்படி இருக்கும் உரிமையைக் குறிப்பிடும் கமல்ஹாசன், இந்தப் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்திருப்பதாகவும், அப்படி செய்ய தன்னை யாரும் நிர்பந்திக்கவில்லை எனவும், அப்படி யாரும் தன்னை நிர்பந்திக்க இயலாது என்றும் பேட்டியில் சொன்னார்.

அதே பேட்டியில், இந்தப் படத்தை டிடிஎச்-சில் வெளியிடும் அதே நாளில், திரையரங்குகளிலும் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களின் சங்கங்கள் கோரிக்கை வைத்திருப்பதாகவும், சினிமா துறையின் நன்மையினைக் கருதி அந்தக் கருத்தினை தான் ஏற்றுக் கொள்ளக் கூடும் என சூசகமாகத் தெரிவித்தார். தனது உழைப்பும் உரிமையுமான இந்தப் படத்தினை எப்படி எங்கே வெளியிட வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும், இதற்கு எதிராக தனக்கு இடர் தருகின்றவர்கள் Competion Act 2002 ன் ஷரத்துகளின் படி Competition Commisison of India உரைத்துள்ள தீர்ப்புகளின்படி தவறு இழைத்தவர்களாக ஆகின்றார்கள் என்றும் சொல்லி, அதன் அடிப்படையில் பதிமூன்று பேருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகவும் பேட்டியின் போது சொன்னார்.

தன்னை நம்பி , டிடிஎச் மூலம் இந்தப் படத்தை வெளியிட தன்னுடன் இணைந்து நின்ற டிடிஎச் சேனல்களைத் தன்னுடைய பார்ட்னர்கள் என்றே குறிப்பிட்ட கமல்ஹாசன், அவர்களைத் தான் கைவிடப் போவதில்லை என அழுத்தமாகப் பல முறை அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், படத்தின் கதாநாயகன், சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற முன்னணி நடிகர் எனும் அடிப்படையில், டிடிஎச் சானல்களின் விளம்பரம் மூலம் தியேட்டருக்கு வருவதற்கு ஒருநாள் முன்பு, டிவி சேனலில் இந்த திரைப்படம் வரும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கி, ரசிகர்களை சிறப்புச் சந்தா செலுத்த வைத்திருந்த தன்னுடைய செயலைக் குறித்து கமல்ஹாசன் இந்தப் பேட்டியில் எந்த வார்த்தையும் பேசவில்லை. இது அவரை நம்பி சந்தா செலுத்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதை கமல்ஹாசன் அறிவித்த நிலையில், டிடிஎச் சேனல்களும் செயலில் இறங்கின. கமல் முன்னர் அறிவித்தபடி இந்தப் படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே டிடிஎச் சேனல்களில் வெளியாகாது என்று சொல்லி சில சேனல்கள் சந்தா செலுத்தியவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரத் தொடங்கின. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றப்பட்ட நிலைதான்.

பணம் செலுத்திய சந்தாதாரர்கள் டிடிஎச் சேவை வழங்கும் சேனல்களின் தொலைப்பேசி சேவை வழியே மேலும் விபரம் தெரிந்து கொள்ள முயன்றனர்.. ஆனால் அவர்களுக்கு திட்டவட்டமான பதில் கிடைக்கவில்லை. இந்த திரைப்படம் எப்படியும் ஒரு நாள் டிடிஎச் சேனல்களில் வெளியாகும்; ஒளிபரப்பாகும் தினத்தன்று பார்த்துக் கொள்ளுங்கள் என்ற பொறுப்பற்ற பதில் கிடைத்தவர்கள்தான் ஏராளம். இந்த நிலையில், தங்கள் பணம் திரும்பக் கிடைக்குமா என்கிற குழப்பம் பலருக்கும் நீடித்தது.

புதிதாக, ‘விஸ்வரூபம் படம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது’ எனும் அறிவிப்பை வெளியிட்டது இந்தப் படத்தைத் தயாரிக்கும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல். ஆனால், முன்னர் அறிவித்தபடி டிடிஎச் சேனல்களில் இந்த திரைப்படம் வெளியாகுமா, ஆகாதா எந்த தேதியில் வெளியாகும் என்பன போன்ற திட்டவட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தன்னுடைய பேட்டியிலும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தனக்கும் இருக்கும் சர்ச்சைகள், சுமூக உறவு ஏற்பட மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து மட்டுமே பேசிய கமல்ஹாசன், ரசிகர்கள் குறிப்பாக டி.எச் சேனல்களில் இவரது படத்தைப் பார்ப்பதற்கு பணம் கட்டிய ரசிகர்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், கமல்ஹாசன் என்னுடைய பணம் எங்கே என்றொரு வெளிப்படையான கடிதம் வெளியானது.

டிடிஎச் சானல்களில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து, ரசிகர்களைப் பணம் கட்ட வைக்கக் காரணமான கமல்ஹாசனுக்கு, தான் தொழில் செய்வதில், இடைஞ்சல் வந்த நிலையில், தனக்குள்ள சட்டபூர்வமான உரிமையினை, ஆணித்தரமாக சொன்ன கமல்ஹாசனுக்கு, தான் தொழில் செய்வதைத் தடுத்து மிரட்டுகிறார்கள் என்று காவல் துறையிடம் நேரில் சென்று புகார் கொடுத்து, பாதுகாப்பு வேண்டிய கமல்ஹாசனுக்கு, தனக்கிருக்கும் சட்டபூர்வமான உரிமையினை எடுத்துச் சொல்லி இடர் தந்தவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய கமல்ஹாசனுக்கு, சட்டத்தின் மூலமாகவே சில கேள்விகளை முன் வைக்கலாம்.

முதல்கேள்வி :

கமல்ஹாசன் முன்னர் விளம்பரங்களில் அறிவித்ததுபோல் திரையரங்குகளில் வெளியாகும் முன்பு, டி.டி எச் சேனல்களில் ஏன் விஸ்வரூபம் வெளியாகவில்லை?

இந்தப் படத்தை டி. டி ஹெச் சானல்களில் வெளியிட்ட மறுநாளே திரையரங்குகளில் வெளியிட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி விளம்பரத்தில் சொன்னபடி சேவை வழங்க வேண்டும். இது கமல்ஹாசனுக்குத் தெரியுமா ?

விளம்பரங்களில் சொன்னபடி திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு முன்பு டிடிஎச் சானல்களில் வெளியிடாத நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர் Misleading Advertisement செய்தவராகவும், Unfair Trade Practiceக்குத் துணை போனவர் ஆகிறார் என்று கருத வாய்ப்புள்ளது என்பதை கமல்ஹாசன் தெரிந்து வைத்திருக்கிறாரா?

இரண்டாவதுகேள்வி :

திரையரங்குகளுக்கு முன்பு, டிடிஎச் சேனல்களில் விஸ்வரூபம் வெளி வராத நிலையில் அதற்கான நியாயமான காரணத்தினை நுகர்வோருக்குச் சொல்லவும் கடமைப்பட்டவராகிறார் என்பது கமல்ஹாசனுக்குத் தெரியுமா?

அப்படி காரணம் சொல்லாமல் இருப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக் குறைவு என்று கருத வாய்ப்பு உண்டு என்பதும் கமல்ஹாசனுக்குத் தெரியுமா

மூன்றாவது கேள்வி

இந்த சந்தா வசூல் விவாகரத்தில் இத்தனை கோடி வசூல் ஆன நிலையில் சந்தாதாரர்களுக்கு விளம்பரத்தில் சொன்னபடி முதலில் திரைப்படம் வெளியிடப்படாத நிலை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 418ன் படி மோசடி என கருத வாய்ப்புண்டாகும் என்று தெரியுமா?

*

இந்தக் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் சொல்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பதில் சொல்வாரேயானால் அவர் சொன்னது போலவே பக்ரீத் பண்டிகையின் போது விருந்து வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு பிரியாணி செய்து பரிமாறலாம். முன்பு ஒருதரம் ஆனந்தவிகடன் பேட்டியில் கமல்ஹாசன் ஆசைப்பட்டு சொன்னது மாதிரி, அவர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியையும் அந்த விருந்துக்கு அழைக்கலாம். விருந்துக்கு அழைப்பவரின் நேர்மை, காந்திக்குப் பிடிக்குமா என்பதையும் Moral Angle-லில் நின்று கொண்டு கமல்ஹாசன் யோசித்துப் பதில் சொல்லலாம்.

One man cannot do right in one department of life whilst he is occupied in doing wrong in any other department of life. Life is indivisible whole என்று சொல்லி அப்படியே கடைபிடித்தவர் காந்தி.

0

சந்திரமௌளீஸ்வரன்

குருதிப் புனல் – 2

என் திரைக்கதையை நிச்சயம் வேறுவிதமாகத்தான் எழுதுவேன்.

ஆப்ரேஷன் தனுஷில் பங்குபெறும் காவல்துறை ஒற்றர்கள் இருவரைத்தான் கதாநாயகன், துணைக் கதாநாயகனாக ஆக்குவேன். ஒருவர் பெயர் ஆதி. இன்னொருவர் பெயர் அப்பாஸ். சிவா, ஆனந்தன் ஆகியோரை காவல்துறை டெபுடி கமிஷனர்களாக ஆக்கிப் பின்னுக்குத் தள்ளிவிடுவேன். அவர்கள் வலுவான கதைக்கான பாத்திரங்கள் அல்ல.

ஆதியும் அப்பாஸும் புரட்சிகர இயக்கத்துக்குள் எப்படி நுழைகிறார்கள் என்பதிலிருந்துதான் கதையை ஆரம்பிப்பேன். புரட்சிகர இயக்கத்தின் வீதி நாடகங்கள், சாலை மறியல்கள், தொழிற்சாலைகள் முன் உண்ணாவிரதங்கள் போன்ற ஜனநாயகச் செயல்பாடுகளில் இவர்கள் இருவரும் தீவிரமாக ஈடுபடுவார்கள். காவல்துறையால் இவர்கள் இருவரும் கட்டம் கட்டித் தாக்கப்படுவார்கள். அதுதான் புரட்சிகர இயக்கத்தில் இவர்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கச் செய்யப்படும் முதல் தந்திரம்.

அடுத்ததாக, இதுபோன்ற ஜனநாயகப் போராட்டங்களால் எந்தப் பலனும் கிடையாது என்று ஆதியும் அப்பாஸும் கட்சிக் கூட்டங்களில் பேசுவார்கள். இயக்கம் அவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க ஆரம்பிக்கும். மெள்ள கட்சியின் தீவிரவாத உறுப்பினர்களுடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும். ஆயுதப் பயிற்சிகள், சித்திரவதைகளுக்கு உடம்பைப் பழக்குதல் என கடுமையான சோதனைகளைக் கடந்து கட்சியின் தீவிரவாதப் பிரிவின் அடுக்குகளில் மேலேறுவார்கள்.

ஒரு நாள் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று காவலர்கள் வளைத்துப் பிடித்துவிடுவார்கள். தீவிரவாதிகள் அனைவரும் சட்டென்று சயனைட் குப்பியை முழுங்கிக் கீழே விழுவார்கள். ஆதிக்கும் அப்பாஸுக்கும் என்ன செய்வதென்றே தெரியாது. காவலர்களுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதா… தப்பித்து ஓடுவதா… சயனைடை விழுங்குவதா என்று தெரியாமல் தவிப்பார்கள். சட்டென்று அப்பாஸ், ஆதிக்குக் கண் ஜாடை காட்டி சயனைட் குப்பியை முழுங்கும்படிச் சொல்வார். இருவரும் சட்டென்று சயனைடை முழுங்கிவிடுவார்கள். அவர்கள் அதை முழுங்கியதுதான் தாமதம், பட படவென கைத்தட்டல் சத்தம் கேட்கும். கீழே விழுந்து கிடந்தவர்கள் எல்லாரும் எதுவும் நடக்காததுபோல் எழுந்து நிற்பார்கள். காவல் உடையில் வந்தவர்கள் தொப்பியைக் கழட்டி ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுத்துக் கொள்வார்கள். விஷயம் என்னவென்றால், புதிதாக இயக்கத்தில் சேருபவர்களின் விசுவாசத்தைச் சோதிப்பதற்காக தீவிரவாதிகளாலேயே நடத்தப்பட்ட நாடகம் அது. காவல்துறை சுற்றி வளைத்தால் உடனே சயனைடை சாப்பிட்டுவிடவேண்டும் என்பது அந்த இயக்கத்தின் விதிகளில் ஒன்று. ஆதியும் அப்பாஸும் அதைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பதைச் சோதிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் அது.

தனியாக இருக்கும்போது அப்பாஸிடம் ஆதி எப்படி இதைக் கண்டுபிடித்தாய் என்று கேட்பான். வந்திருந்த தீவிரவாதிகளில் ஒருவன் கையில் கட்சியின் சின்னத்தை பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தேன். அதோடு சயனைட் சாப்பிட்டதுபோல் கீழே விழுந்தவர்களில் சிலர் அதன் பிறகு லேசாக கண்ணைத் திறந்துபார்த்து மூடியதையும் பார்த்தேன். இதையெல்லாம் வைத்து இது நாடகமாகத்தான் இருக்கும் என்று யூகித்தேன். அது சரியாகவும் இருந்துவிட்டது என்று சிரித்தபடியே சொல்வான்.

அடுத்ததாக, காவல்துறையினருக்கு உதவும் கிராம மக்கள் சிலரைக் கொல்லச் சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும். வேறு வழியில்லாமல் கொல்லப்போவார்கள். சாவதற்கு முன் அந்த மக்களின் கதறலும் கெஞ்சலும் ஆதியையும் அப்பாஸையும் நிலை குலைய வைத்துவிடும். அன்றிரவு இருவருக்கும் தூக்கம் வராது. ஆயிரம் பேரைக்  காப்பாற்ற ஒரு சிலரைக் கொல்வதில் தவறில்லை என்று என்னதான் நியாயம் பேசினாலும் அதை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் வேதனை நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்பாஸும் ஆதியும் அதற்கெல்லாம் பழக்கப்படாதவர்கள். இரவெல்லாம் தவிப்பார்கள். அதன் பிறகு தூக்கம் வராத இரவுகளின் அணி வகுப்பு ஆரம்பமாகும்.

காவல்துறையில் சிலரைக் கொல்லும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படும். கடை நிலையில் இருக்கும் அவர்களைக் கொல்லவேண்டாம் என்று ஆதியும் அப்பாஸும் சொல்வார்கள். அப்படியானால், மேல் நிலையில் இருக்கும் சிலரைக் கொன்றுவிட்டுவாருங்கள் என்று துப்பாக்கியைக் கொடுத்து அனுப்புவார்கள். வேறு வழியில்லாமல் அந்தக் கொலைகளையும் செய்ய வேண்டிவரும்.

எனது திரைக்கதையில் இந்த ஒற்றர்கள் ஒண்ணுக்குப் போகப் போகிறேன். ரெண்டுக்குப் போகப் போகிறேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு காவலர்களுடன் வாக்கி டாக்கியில் தகவல் அனுப்புவதாகக் காட்டமாட்டேன். கடிதம், தந்தி, மின்னஞ்சல் மூலமாகத் தகவல் அனுப்புவதாகவே காட்டுவேன். அதோடு, இதுபோன்ற நேரங்களில் எப்படி தகவல் அனுப்பப்படும் என்பதைக் காவல் துறையினரிடம் முதலில் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.

ஒரு காட்சியில் ரயில் ஒன்றை கவிழ்க்கச் சொல்லி அப்பாஸுக்கும் ஆதிக்கும் உத்தரவு தரப்படும். அவர்களும் ஒரு பாலத்தின் மையப்பகுதியில் வெடிகுண்டைப் பொருத்திவிடுவார்கள். அதோடு நிறுத்தாமல் அந்த தகவலை காவல்துறைக்கும் அனுப்பிவிடுவார்கள். ஆனால், அந்தத் தகவலோ காவல்துறையில் இருக்கும் துரோகி ஒருவருடைய கைக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அவர் அதை நேராக தீவிரவாதிகள் தலைவனுக்கு அனுப்பிவிடுவார். அந்த ரயில் விபத்தில் சிக்கி பலர் இறந்துவிடுவார்கள். தீவிரவாதிகள் அந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள். அப்பாஸும் ஆதியும் உள்ளுக்குள் அழுதபடியே அந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பார்கள்.

தாங்கள் போகும் பாதை சரிதானா என்ற கேள்வியை அவர்களுடைய ஒவ்வொரு செயலும் எழுப்ப ஆரம்பிக்கும். ஒருவேளை இந்த ஆப்பரேஷன் தனுஷ் தோற்றுவிட்டால் இதுவரை செய்த கொலைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்ற கேள்வி இருவரையும் வாட்ட ஆரம்பிக்கும். அதோடு தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன கதியாகும் என்ற பயம் வேறு அவர்களைத் துரத்த ஆரம்பிக்கும். புலி வாலைப் பிடித்தாயிற்று. சவாரியும் செய்ய முடியாது. விட்டுவிட்டு ஓடவும் முடியாது. மாட்டிக்கொண்டு தவிப்பார்கள்.

கடைசியாக ஒரு பெரிய பிரச்னை அவர்கள் முன்னால் வந்து நிற்கும். அதை அவர்கள் துளியும் யோசித்திருக்கவே மாட்டார்கள். ஒருநாள் அப்பாஸ் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டுவிடுவார். ஆப்பரேஷன் தனுஷ் என்ற காவல்துறையின் திட்டத்தில் இன்னொருவரும் இயக்கத்துக்குள் ஊடுருவி இருப்பதாகத் தீவிரவாதிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கும். அந்த இன்னொருவன் யார் என்ற உண்மையை அப்பாஸிடமிருந்து வரவழைக்கும் பொறுப்பு ஆதியிடம் கொடுக்கப்படும்.

ஆதியும் அப்பாஸும் கல்லூரி நாட்களில் இருந்தே நண்பர்கள். காவல்துறையில் சேர்வதுதான் லட்சியம் என்று வளர்ந்தவர்கள். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுவேறு அவர்களுடைய நட்புக்கு கூடுதல் ஆழத்தைத் தந்திருக்கும். இவையெல்லாம் மீள் நினைவுக் காட்சிகளாக என் திரைக்கதையில் இடம்பெறும். ஆதி உயர் படிப்பு படிக்க அப்பாஸ்தான் பண உதவி செய்திருப்பான். அப்பாஸின் மதம் காரணமாக அவனுடைய நேர்மை சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டபோதெல்லாம் ஆதிதான் அவனுக்கு உறுதுணையாக இருந்திருப்பான். அப்படியான ஆருயிர் நண்பனைத்தான் சித்திரவதை செய்ய வேண்டிவந்திருக்கிறது. ஒருவேளை உண்மையைச் சொல்லவில்லையென்றால் கொன்றுவிடச் சொல்லியும் உத்தரவு வந்திருக்கிறது.

ஆதி நிலைகுலைந்துபோவான். நான்தான் அந்த இன்னொரு ஆள் என்பதைச் சொல்லிவிடுகிறேன் என்று புறப்படுவான். அப்பாஸ் அவனைத் தடுத்துத் தேற்றுவான். நாட்டுக்காக, கடமைக்காக இதைச் செய். நாம் இதுவரை செய்த செயல்களுக்கு ஓர் அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதற்காக என்னைக் கொன்றுவிடு என்று கேட்டுக்கொள்வான். ஆதியால் அது முடியாது. நீ உடம்பைத்தான் கொல்கிறாய். ஆன்மாவை அல்ல என்று அப்பாஸ் கீதையை மேற்கோள் காட்டிப் பேசுவான். அப்பாஸுக்கு கீதையைச் சொல்லிக் கொடுத்ததே ஆதிதான். இன்று அதையே அப்பாஸ் சொல்லிக்காட்டுவான்.

ஆதி வேதனையின் உச்சியில் தன்னைத்தானே சுட்டுக் கொல்லப் போவான். அப்பாஸ் அவனைத் தடுத்து நிறுத்துவான். என் ஒருவனுடைய உயிரைப் பற்றி கவலைபடாதே… எத்தனையோ அப்பாவிகளின் உயிர் காக்கப்படவேண்டுமென்றால், என்னைக் கொன்றுதான் ஆகவேண்டும். உன் இடத்தில் நான் இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பேன். ஆனால், வலி தெரியாதவகையில் என்னைக் கொன்றுவிடு. அதன் பிறகு என் உடம்பை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைத்துக் கொள். சித்ரவதை செய்து பார்த்தேன். உண்மையைச் சொல்லவில்லை கொன்றுவிட்டேன் என்று சொல்லிவிடு என்பான்.

அவன் எவ்வளவு சொல்லியும் ஆதி முடியாது என்று மறுத்துவிடுவான். எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவன் உண்மையைச் சொல்லவில்லை. வேண்டுமென்றேகூடப் பொய்யாக நம் ஆட்கள் யாருடைய பெயரையாவது அவன் சொல்லிவிடக்கூடும். எனவே, இப்படியே விட்டுவிடுவோமென்று பத்ரியிடம் ஆதி சொல்வான். அவரோ கேட்கமாட்டார். இல்லை நீ கடுமையான சித்ரவதை வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் உண்மையைச் சொல்லிவிடுவான். நம்மிடம் அதற்கு ஒரு அறை இருக்கிறது. நீ அவனிடம் விசாரணையை ஆரம்பி என்று உத்தரவிடுவான். அந்த அறையில் வீடியோ கேமரா வேறு பொருத்தப்பட்டிருக்கும். தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆப்பரேஷன் தனுஷ் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆருயிர் நண்பனை சித்ரவதை செய்ய ஆரம்பிப்பான்.

சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமைகளில் முக்கியமானதாகச் சொல்லப்படுவது, அழுகையை சிரிப்பாகவும் சிரிப்பை அழுகையாகவும் மாற்றும் திறமை. எந்தவொரு நடிகருக்குமே சவாலான காட்சி அது. பார்வையாளர்களை எளிதில் கவர்ந்திழுக்கக்கூடிய காட்சி அது. இந்தக் காட்சி அந்தவகையில் மிகவும் சவாலான காட்சி. டேபிளின் மேலே உங்கள் ஆருயிர் நண்பன் கிடத்தப்பட்டிருக்கிறான். அவனை நீங்கள் அணு அணுவாகச் சித்ரவதை செய்தாக வேண்டும். அவனுடைய கைகளை முறிக்கும்போது அது உங்களுக்கு உதவி செய்த நிமிடங்கள் நினைவுக்கு வரும். அவனுடைய பற்களை உடைக்கும்போது அவனுடைய வெள்ளந்தியான சிரிப்பு நினைவுக்கு வரும். அவனுடைய தோளில் அடிக்கும்போது உங்களை ஒரு இக்கட்டான நேரத்தில் தோளில் போட்டுக் கொண்டு சுமந்து கொண்டு சென்றது நினைவுக்கு வரும்.

ஒன்றாக வேலைக்கான பயிற்சியில் ஈடுபட்டது… பெண்கள் பின்னால் சுற்றியது… ஒருவருடைய காதலுக்கு இன்னொருவர் உதவியது… திருமணத்துக்குப் பிறகு இரு குடும்பத்தினரும் ஒன்றாக வாழ்வது என ஒவ்வொரு நினைவுகளும் மனதில் அலை அலையாக வந்து மோதும். ஆனால், அந்த ஆருயிர் நண்பனைத்தான் சித்ரவதை செய்தாகவேண்டும்.

ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு ஆயுதத்தால் அப்பாஸின் உடம்பைச் சிதைக்கும்போதும் அவன் தேசத்தைப் புகழ்ந்து பேசுவான். தீவிரவாதிகளை வசைமாரி பொழிவான். உண்மையை மட்டும் செல்லவே மாட்டேனென்று கர்ஜிப்பான். ஆதி அழுகையை அடக்கிக் கொண்டு ஒவ்வொரு கேள்வியாகக் கேட்பான். ஆயுதங்களை அவ்வப்போது கீழே போட்டுவிட்டு, கேமராவின் பார்வையில் இருந்து நழுவி கீழே குனிந்து அழுதுகொள்வான். எழுந்து நின்று வெறிச்சிரிப்புடன் சித்ரவதையைத் தொடருவான். கடைசியில் வலி தாங்காமல் அப்பாஸ் உயிரைவிட்டுவிடுவான். ஆதி ஸ்தம்பித்து நின்றுவிடுவான். கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வெளி வந்துவிடும். சட்டென்று அதை மறைத்துக்கொண்டு கேமராவைப் பார்த்து, செத்துட்டான் துரோகி என்று சொல்வான். சொல்லிவிட்டு தனியறைக்குச் சென்று கதவையும் ஜன்னலையும் சாத்திக்கொண்டு பீறிட்டு அழுவான். அதுவரை மது அருந்தாதவன் பாட்டில் பாட்டிலாக விழுங்குவான்.

தீவிரவாதிகள் குழுவுக்கு ஆதி மீதும் லேசான சந்தேகம் வந்திருக்கும். அதனால்தான் அப்பாஸைச் சித்ரவதை செய்யும் பொறுப்பை ஆதியிடம் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவன் அப்பாஸைக் கொன்றுவிட்டதால் அந்த இன்னொரு ஒற்றனாக அவன் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பிவிடுவார்கள். ஆதி அந்த இயக்கத்தில் இரண்டாவது இடத்துக்கு உயர்ந்துவிடுவான். கிட்டத்தட்ட தீவிரவாத வலைப்பின்னலின் பெரும்பாலான தொடர்புகள் அவனுக்குத் தெரியவரும்.

இதனிடையில் ஒருநாள் தீவிரவாதிகளின் தலைவனைப் பார்க்க சின்ன சுவாமிஜி வந்திருப்பதாக ஆதிக்குத் தகவல் கிடைக்கும். காவல் துறையில் இருக்கும் அந்த துரோகியைப் பார்க்க ஆதி எவ்வளவோ முயற்சி செய்வான். ஆனால், அது முடியாமல் போய்விடும். தீவிரவாதிகளின் தலைவரும் சின்ன சுவாமிஜியும் மட்டும் தனியாக ஒரு அறையில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆதி சட்டென்று தனக்கு நெஞ்சுவலி வந்ததுபோல் நடிப்பான். எல்லாரும் பரபரவென உதவிக்கு ஓடிவருவார்கள். தீவிரவாதிகளின் தலைவரும் என்ன சத்தம் என்று கேட்டபடியே வெளியே வருவார். சின்ன சுவாமிஜி மட்டும் அந்த அறைக்குள்ளேயே இருந்துவிடுவார். ஆனால், அறையின் கதவு மட்டும் வீசும் காற்றில் திறந்து திறந்து மூடும். ஆதி மெள்ள சுதாரித்துக்கொண்டு அந்த அறைக்குள் இருப்பவரைப் பார்க்க முயற்சி செய்வான்.  முடியாமல் போய்விடும்.

ஓரளவுக்கு ஆதிக்கு சரியானதும் தீவிரவாதிகளின் தலைவர் தன் அறைக்குள் போவார். அவர் நுழைந்ததும் சின்ன சுவாமிஜி கதவுக்கு அருகில் வந்து அதைச் சாத்துவார். அப்போது ஆதிக்கு அவருடைய முகம் தெரிந்துவிடும். அவர் வேறு யாருமில்லை… ஆதியின் மேலதிகாரியான டி.ஐ.ஜி.தான். ஆதி அதிர்ச்சியில் உறைவான். தான் இத்தனை காலமும் நம்பிய அந்த பெரிய அதிகாரியா காவல்துறையின் கறுப்பு ஆடு. இத்தனை காலமும் அவருக்கா விசுவாசமாக இருந்தோம் என்று துடிப்பான்.

உண்மை என்னவென்றால், அந்த டி.ஐ.ஜி. தீவிரவாதிகளின் கையாள்தான். ஆப்பரேஷன் தனுஷ் என்ற ஒன்று உண்மையில் கிடையவே கிடையாது. அது அந்தத் துரோகியும் தீவிரவாதத் தலைவனும் சேர்ந்து தீட்டிய திட்டம்தான். ஆயிரம் பேரைக் காப்பாற்ற நூறு பேரைக் கொல்வதில் தவறில்லை என்று அவர் சொன்னது உண்மையில் நூறு பேரைக் கொல்லவைப்பதற்கான தந்திரம்தான். ஆதியையும் அப்பாஸையும் தீவிரவாதிகளின் கையாள் ஆக்குவதற்காகத்தான் அப்படியான நாடகமே ஆடியிருக்கிறார். இது தெரியவந்ததும் ஆதிக்குக் கோபம் தலைக்கேறும். எதைப் பொறுத்துக்கொண்டாலும் அப்பாஸைத் தன் கைகளாலேயே கொல்ல வைத்ததை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். எதிரிகளின் கோட்டைக்குள் இருக்கிறோம் என்பதைக்கூட யோசிக்காமல், அந்த அறைக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்வான். சின்ன சுவாமிஜியை சரமாரியாக அடிக்க ஆரம்பிப்பான். தீவிரவாதிகள் அவனை மடக்கிப் பிடித்து கட்டிப்போடுவார்கள்.

சின்ன சுவாமிஜி எகத்தாளமாகச் சிரிப்பார். அவரது ஒவ்வொரு சிரிப்பும் ஆதியை பைத்தியம் பிடிக்கவைக்கும். தான் இத்தனை காலம் செய்த வன்முறைச் செயல்கள் எல்லாமே நல்ல நோக்கம் கொண்டவை அல்ல என்பது தெரிந்ததும் உடைந்துபோய்விடுவான். தன் ஆருயிர் நண்பன் கண் முன்னால் இறந்தது அவன் கண் முன் வந்து வந்து போகும்.

சின்ன சுவாமிஜி விடைபெறுவார். தீவிரவாதிகளின் தலைவன் உங்க சிஷ்யனை என்ன செய்ய என்று கேட்பான். வாளெடுத்தவனுக்கு வாளால் மரணம். துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியால மரணம். ஆருயிர் நண்பனை சித்திரவதை செஞ்சு கொன்னவனுக்கு சித்திரவதையால மரணம் என்று சொல்லிச் சிரித்தபடியே விடைபெறுவார்.

தீவிரவாதிகள் ஆதியை படு மோசமாகத் தாக்குவார்கள். இவனை இப்படிக் கொன்றுவிட்டால் பத்தாது. சிகிச்சை கொடுத்து மறுபடியும் தேற வைத்து அடிப்போம் என்று தீவிரவாதிகள் தலைவன் சொல்வான். அதன்படியே ஆதியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். ஒரு சில நாட்களில் உடம்பு ஓரளவுக்குத் தேறிவரும். அங்கிருந்து அவன் தப்பித்து ஒரு காவல் துறை அதிகாரியிடம் அடைக்கலம் அடைவான். ஆனால், தீவிரவாதிகள் கூட்டத்தில் ஆதி பயிற்சி பெற்ற போட்டோக்களை தீவிரவாதிகளின் தலைவனிடமிருந்து சின்ன சுவாமிஜி வாங்கி ஆதியை தீவிரவாதி என்று பத்திரிகைகளில் செய்தி வரவைத்துவிடுவார். ஆதிக்கு அடைக்கலம் கொடுத்த காவல்துறை அதிகாரி அதை நம்பிவிடுவார். ஆதி எவ்வளவுதான் கெஞ்சியும் நம்பாமல் அவனைச் சிறையில் அடைத்துவிடுவார்கள்.

சிறையில் அவனைப் பார்க்க சின்ன சுவாமிஜி வருவார். தேச பக்தி, காக்கிச் சட்டையின் பெருமை, தனி மனித நேர்மை என அவர் ஆதிக்கு ஆலோசனைகள் வழங்குவார். ஆதி உள்ளுக்குள் குமுறும் எரிமலையை அடக்கியபடி மவுனமாகக் கேட்டுக் கொண்டிருப்பான்.

ஆதிக்குத் தூக்குதண்டனை விதிக்கப்படும். சின்ன சுவாமிஜியின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்படும். சின்ன சுவாமிஜி வேடிக்கையாக, ஆதி உன்னோட கடைசி ஆசை என்னன்னு சொல்லு என்று கேட்பார். பின்பக்கமாகக் கைகள் கட்டப்பட்ட ஆதி, உங்களுடன் சில நிமிடங்கள் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்வான். சரி என்று காவலர்களை வெளியே அனுப்பிவிட்டு பேச முன்வருவார். எல்லாரும் வெளியே போனதும் கதவை சாத்தி உள்பக்கம் தாழிட்டுவிட்டு திரும்பிப் பார்க்கும் சின்ன சுவாமிஜி அதிர்ச்சியில் உறைந்துவிடுவார். ஆதியின் கை கட்டுகள் அவிழ்க்கப்பட்டிருக்கும். அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்குள் ஆதி அவரைப் பாய்ந்து அடித்து கைகளைக் கட்டிவிடுவான்.

உண்மையில் அந்த சிறையில் வார்டனாக இருப்பவருக்கு ஆதி மீது நல்லெண்ணம் உண்டு. அவருடைய மகளின் படிப்புக்கு ஆதிதான் உதவிகள் செய்திருப்பான். நடந்த உண்மைகளையெல்லாம் ஆதி முந்தின நாள் இரவில் அவரிடம் சொல்லியிருப்பான். டி.ஐ.ஜி. மீதான குற்றச்சாட்டை சட்டப்படி நிரூபிப்பது கடினம். நாளை என்னைத் தூக்கிலிடுவதற்கு முன் ஒரு பத்து நிமிடம் அவருடன் தனியாக என்னை இருக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டிருப்பார். அதன்படித்தான் ஆதியின் கையைக் கட்டியபோது தளர்வாக அந்த வார்டன்  கட்டியிருப்பார்.

கைகள் கட்டப்பட்ட டி.ஐ.ஜி.யை தூக்குமேடையில் ஏற்றிவிட்டு ஆதி தன் பழி வாங்கலை ஆரம்பிப்பான். எத்தனை பேரை நீ சித்ரவதை செஞ்சிருப்ப. வாளெடுத்தவனுக்கு வாளால் மரணம். சித்ரவதை செய்தவனுக்கு சித்ரவதையால் மரணம் என்று சொல்லி சின்ன சுவாமிஜியை அணு அணுவாகச் சித்திரவதை செய்வான். நீ செய்த எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வேன். ஆனால், தேசத் துரோகி நீ, தேச பக்தி பற்றி எனக்கு அறிவுரை செய்ததை மட்டும் என்னால் தாங்க முடியவில்லை. உன்னை மாதிரியான துரோகிகளினால்தான் ஒரு தேசமே சீரழிகிறது. நீ இந்த உலகத்தில் இனி ஒரு நொடி கூட இருக்ககூடாது. நீ துடி துடித்துச் சாவதை நான் என் கண்ணால் பார்க்க வேண்டும் என்று சொல்லி முகத்தில் கறுப்புத் துணி மாட்டாமல் தூக்கில் தொங்கவிட்டு லிவரை இழுப்பான். சின்ன சுவாமிஜி கண்கள் பிதுங்க, நாக்கு வெளியே தள்ள துடி துடித்து இறப்பார்.

படத்தின் ஐம்பதாவது நாள் விழாவில் வெளியிடப்படும் போஸ்டரே அதுதான். கமல் கைதி உடையில் லிவரைப் பிடித்து இழுத்தபடி நின்றுகொண்டிருப்பார். காவல் துறை உயர் அதிகாரி சீருடையுடன் தூக்குக் கயிற்றில் நாக்கு வெளியே தள்ள இறந்துகிடப்பார்.

உண்மையில் இந்த வெர்ஷனானது வணிக ஃபார்முலாவுக்கு உட்பட்ட ஒன்றுதான். இதை பி செண்டர்களில் மட்டும் வெளியிடுவேன். ஏ செண்டர்களுக்கு என்று வேறொரு வெர்ஷன் திரைக்கதை எழுதுவேன். அதில், சின்ன சுவாமிஜிதான் காவல் துறையில் இருக்கும் கறுப்பு ஆடு என்ற விஷயமும் ஆப்பரேஷன் தனுஷ் என்பது அவருடைய சதித்திட்டம்தான் என்பது தெரிந்ததும் ஆதிக்கு புத்தி பேதலித்துவிடும். தீவிரவாதிகளும் அவனை ஒரு பாலத்தின் அடியில் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். குடியரசு தினத்தன்று சின்ன சுவாமிஜிக்கு 25 வருடம் காவல் துறையில் நேர்மையாகப் பணியாற்றியதற்கு பாராட்டுப் பத்திரமும் பதக்கமும் வழங்கிக் கவுரவிப்பார்கள். மாநகரின் தெருக்களில் ஆதி பைத்தியமாக அலைந்துகொண்டிருப்பான் என்பதாக என் படம் முடியும்.

இது B.R. மகாதேவனின் 25வது பட விமரிசனம்.

0

B.R. மகாதேவன்

குருதிப் புனல் – 1

ஆப்ரேஷன் தனுஷ் என்ற காவல்துறையின் அதி ரகசிய செயல் திட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த ஆப்ரேஷனின் நோக்கம் தீவிரவாத இயக்கம் ஒன்றினுள் சிவா, ஆனந்தன் என்ற இரண்டு காவல் துறை ஒற்றர்களை அனுப்பி, தீவிரவாதிகளின் ஒட்டு மொத்த வலைப்பின்னலைக் கண்டுபிடித்துச் செயலிழக்க வைப்பதுதான். உண்மையில் அந்த ஒற்றர்கள்தான் கதையின் மையமாக இருந்திருக்கவேண்டும்.

தீவிரவாத இயக்கத்துக்குள் அந்த ஒற்றர்கள் எப்படி ஊடுருவுகிறார்கள், தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க என்னென்ன செய்கிறார்கள், எப்படி தீவிரவாத இயக்கத்தைச் சுற்றி வளைக்க உதவுகிறார்கள் என விறுவிறுப்பான திரைக்கதைக்கு அதில்தான் அதிக வாய்ப்பு உண்டு. படத்தில் இது தொடர்பான நான்கு வரி வசனம் இடம்பெறவும் செய்கிறது. ஆனால், படத்தை அப்படி எடுப்பதென்றால் தீவிரவாத இயக்கம் பற்றி அதிகம் வெளியில் தெரியாத பல்வேறு நுட்பமான தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருக்கும். அதற்கான முனைப்பு இல்லாததால் அந்த ஒற்றர்களை வழிநடத்தும் காவல்துறை உயர் அதிகாரிகளான ஆதியையும் (கமல்ஜி) அப்பாஸையும் (அர்ஜுன்ஜி) மையமாகக்கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் இடம்பெறும் தீவிரவாத இயக்கம் எது என்ற தெளிவான அடையாளப்படுத்தல் இல்லை. தீவிரவாத இயக்கம் பற்றி நாலைந்து பத்திரிகைச் செய்திகளைப் படித்தால் தெரிந்துகொள்ள முடிந்த தகவல்கள்கூட படத்தில் இடம்பெறவில்லை. ஏதாவது ஒன்றை மட்டும் குறிப்பிட்டுக் காட்டாமல் பல்வேறு வாசிப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் ஒன்றை உருவாக்குவது படைப்பில் அனுமதிக்கப்பட்ட விஷயம்தான். ஆனால், அது இந்தப் படத்தில் அதற்கான வலுவோடு இடம்பெறவில்லை. மொட்டையாக புரட்சிகர இயக்கம் என்று காட்டப்பட்டிருக்கிறது. தீவிரவாத இயக்கத்தின் தலைவனுக்கு பத்ரி நாராயணன் என்ற பெயர், அவனுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள் கிடைக்கிறதா என்ற அசட்டுத்தனமான கேள்வி, தீவிரவாதிகள் வசம் சயனைட் குப்பிகள்…  இப்படியாக இந்து அடிப்படைவாதம், அயல்நாட்டுச் சதி, ஈழப் போராட்டம் ஆகியவை போதிய இட ஒதுக்கீடுகளுடன் படத்தில் இடம்பெற்று விஷயத்தைக் குழப்பவே செய்கின்றன.

ஹே ராம் போன்ற படங்களில் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சித்திரிக்கும்போது ஹிட்லரின் படத்தைப் பின்னணியில் காட்டுவதுவரை அதி நுட்பமாக (?!) செயல்படும் கமல், புரட்சிகர இயக்கம் என்றதும் பன்முக வாசிப்புக்கு இடம்கொடுக்க முனைந்துவிடுகிறார். அரசியல் கதாபாத்திரங்களைக் காட்டும்போது மொட்டையாக தலைவர் வாழ்க… தலைவர் வாழ்க என்று துணை நடிகர்களை விட்டு கோஷம் போடவைப்பார்களே அதுபோல் பொத்தாம்பொதுவாக புரட்சிகர இயக்கம் என்று சொல்லி முடித்துவிடுகிறார்.

இந்தப் புரட்சி என்ற வார்த்தையை வைத்து அந்த இயக்கத்தை நக்சலைட் அல்லது மாவோயிஸ இயக்கமாக நாம் யூகித்துக்கொண்டால், அந்த இயக்கத்துக்கு தமிழகக் காவல்துறையினர் விழுந்து விழுந்து சேவகம் செய்வதாகப் படத்தில் காட்டப்பட்டிருப்பது மிகப் பெரிய அபத்தமாகவே தோன்றும். எனவே, புரட்சிகர இயக்கத்தை நாமும் ஏதோவொரு பொரட்சிகரமான இயக்கமாகவே கற்பிதம் செய்துகொண்டு படத்தைப் பார்ப்போம். அதுதான் நமக்கு நல்லது.

சரி… காவல்துறையின் கோணத்தில்தான் படம் நகர்கிறது. அந்தக் காவல்துறை கதாபாத்திரங்களாவது உருப்படியாக வார்க்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

படத்தில் டி.ஐ.ஜி.யாக வரும் சீனிவாசன் தீவிரவாதிகளால் எட்டு வருடங்களாக பிளாக் மெயில் செய்யப்பட்டு காவல்துறையின் திட்டங்களை உடனுக்குடன் அவர்களுக்குத் தெரிவிக்கும் துரோகத்தைச் செய்துவருகிறாராம். டி.ஐ.ஜி. போன்ற உயர் பதவியில் இருக்கும் ஒருவரை அப்படி பிளாக்மெயில் செய்துவிட முடியுமா? அதுவும், உன் குடும்பத்தைக் கொன்றுவிடுவேன் என்று வெறுமனே மிரட்டியே எட்டு வருடங்கள் பணியவைத்துவிட்டார்களாம்.

அவரைப் போன்ற உயர் அதிகாரியை யாராவது மிரட்டினால் என்ன செய்வார்? தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்துவார். ஒருவேளை அவர் கொஞ்சம் தயிர் சாதப் பிரியர் என்றால் முதலில் தன் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவார். அவர்களைத் தனியாக எங்கும் போகவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார். தீவிரவாதிகள் அதையும் மீறி தாக்குவார்கள் என்று தெரிந்தால், வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிச் செல்வார். அல்லது பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு ஆபத்தில்லாத வேலைக்குப் போவார். எந்த ஒரு முட்டாளாவது, தீவிரவாதிகளின் இந்த வெத்து மிரட்டலுக்குப் பயந்து எட்டு வருடம் அவர்களுடைய கையாளாகச் செயல்படுவாரா?

அதிலும் பிளாக் மெயில் என்பது ஒருவரை அல்லது ஒரு சிலரைக் கடத்திச் சென்று அதிகபட்சம் ஓரிரு கோரிக்கையை முன்வைத்து செய்யப்படும் அதிரடி பேரம். அதில் அவர்கள் கேட்பதை நாம் செய்துவிட்டால் பிணைக்கைதியை நாம் மீட்டுக்கொண்டுவிடலாம். அதோடு அந்த பேரம் முடிந்துவிடும். உன் குடும்பத்தினரைக் கொன்றுவிடுவேன்… என்று எட்டு வருடங்களாகப் பூச்சாண்டி காட்டியே ஒருவரை பிளாக் மெயில் செய்யவெல்லாம் முடியாது.

ஒருவேளை அந்த உயர் அதிகாரி பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த துரோகத்தைச் செய்திருக்கலாம்… நாயகன் கேட்கும்போது குடும்பத்தினரைக் கொன்றுவிடுவதாக தீவிரவாதிகள் மிரட்டியதால் அப்படிச் செய்தேன் என்று நல்லவன்போல் வேஷம் போட்டிருக்கலாம். அது உண்மையென்றால், அதற்கான குறிப்புகள் படத்தில் எங்காவது இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தப் படத்திலோ அந்த உயர் அதிகாரியின் துரோகச் செயல்கள் வெளியே தெரியவந்ததும் பதற்றத்தில் சிகரெட் பற்றவைக்கிறார். என்னைப் பற்றி நிறைய விஷயங்கள் உனக்குத் தெரியாது என்கிறார். குற்ற உணர்ச்சி மேலிட அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்கிறார். தன்னைத்தானே நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு கவரி மான் போல் உயிரை விட்டுவிடுகிறார். பணத்துக்காக துரோகம் செய்தவர் என்றால், அதே பணத்தை வைத்து அவருக்கு அதில் இருந்து வெளியேவரவும் தெரிந்திருக்கும். அதைத்தான் முயன்றிருப்பார்.

இது இப்படியென்றால், ஹமாம் சோப்புக்கு அடுத்தபடியாக நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் கதாநாயகன் ஆதியும் அந்த டி.ஐ.ஜி.யைப் போலவே தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்கிறாராம். உன் வீட்டில் எங்களுடைய ஆட்கள் இரண்டுபேர் விருந்தாளிகள் போல் தங்கிக் கொள்வார்கள். அதற்கு அனுமதி கொடு என்று தீவிரவாதி இரவில் மிரட்டுகிறான். நாயகனும் நல்ல புள்ளையாகக் காலையில் எழுந்து அலுவலகத்துக்குப் போகும்போது தன் மனைவியிடம் கெஸ்ட் ஹவுஸை விருந்தினருக்குச் சரிசெய்து வைக்கும்படிச் சொல்லிவிட்டுப் போகிறான். இரவோடு இரவாக தன் குடும்பத்தை எங்காவது பாதுகாப்பான இடத்துக்குக்கொண்டு செல்ல வேண்டியதுதானே. அல்லது, விருந்தாளியாக வருபவர்களைப் பிடித்து சிறையில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டினால், தீவிரவாதிகள் பற்றி மேலும் தகவல்கள் கிடைத்துவிடப்போகிறது.

இத்தனைக்கும் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஏற்கெனவே சிறையில்தான் இருந்திருக்கிறான். தன் குடும்பத்துக்கு இரண்டாம் நிலை தீவிரவாதிகளிடம் இருந்து ஏதாவது தீங்கு நேர்ந்தால் தலைவனைச் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்று பதிலுக்கு அருமையாக மிரட்ட முடியும். இவ்வளவு ஏன்… ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவன் உங்கள் வசம் சிக்கியிருக்கிறான். அது ஒன்றே போதுமே அந்த இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய. அவனிடம் இருந்துதான் காவல்துறையில் இருந்த கறுப்பு ஆடு சீனிவாசன் பற்றிய தகவலைச் சித்திரவதை நிபுணர் என்று படத்தில் அடிக்கடி நினைவுபடுத்தப்படும் நாயகன் கறந்திருக்கிறான். அந்த வலைப்பின்னலின் ஒட்டுமொத்த தகவல்களையும் அந்த இயக்கத்தின் தலைவரிடமிருந்து மெள்ள மெள்ளக் கறந்துவிடமுடியாதா என்ன?

இதோடு, காவல் துறையினர் அனுப்பிய ஒற்றர் சிவா வேறு அந்தப் பொரட்சிகர இயக்கத்தில் மிக உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறார். அவர் தரும் தகவல்களை வைத்து ஒட்டுமொத்த கும்பலையே வளைத்துப் பிடித்துவிடமுடியுமே. வேட்டை மிருகத்தைச் சுற்றி வளைத்ததோடு நில்லாமல் அதன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வேறு வைத்து அழுத்தியாகிவிட்டது. வன் மிருகத்தைச் செயல் இழக்க வைக்க இதற்கு மேல் வேறு என்ன தேவை? இவ்வளவுக்குப் பிறகு ஒரு துணை கமிஷனர், இரண்டம் நிலை தீவிரவாதியின் மிரட்டலுக்குப் பயந்து கைக்குக் கிடைத்த தீவிரவாதத் தலைவனை விடுதலை செய்து, பிறகு திடீரென்று வீரம் பொங்கி எழுந்து அவனுடைய கோட்டைக்குள் தனியாகப் போய்மாட்டிக்கொண்டு உயிரைத் தியாகமெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், தீவிரவாதிகளின் கோட்டைக்குள் இருக்கும்போது அதன் தலைவனை ஸ்க்ரூ டிரைவரால் நாயகன் குத்தி கொன்றுவிடுவார். ஆப்ரேஷன் தனுஷ் கிட்டத்தட்ட வென்றுவிட்டநிலைதான். இதற்குப் பிறகு நாயகன் எதற்காக வீணாக தன் உயிரைத் தியாகம் செய்கிறான் என்பது புரியவே இல்லை. சதுரங்க ஆட்டத்தில் எதிர் தரப்பின் ராஜாவைக் கொன்றுவிட்டால் ஆட்டம் அதோடு முடிந்துவிடும். அதைவிட்டுவிட்டு தன்னுடைய சிப்பாயை வைத்து ஒரு ராஜா தன்னையே கொல்லச் சொல்வது எல்லாம் ரொம்பவும் டமாஷானவை. பின்லாடனைக் கொன்ற பிறகு ஒபாமா தன்னையும் கொன்றுவிடும்படிக் கேட்டுக்கொள்வதைப் போன்றது இது. பிற தீவிரவாத இயக்கங்கள் பற்றிய தகவல் தெரிய வேண்டுமானால் அதற்கு வேறொரு ஆப்ரேஷனால்தான் முடியும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஆப்ரேஷன் தனுஷ் என்ற ரகசியத் திட்டம் பற்றி டி.ஐ.ஜி.க்கு எதுவுமே தெரியாதாம். அவருக்குக் கீழே பணி புரியும் டெபுடி கமிஷனர்களுக்கு மட்டுமே தெரியுமாம். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை. எந்தவொரு மேலதிகாரிக்கும் தெரியாமல் அவருடைய கீழதிகாரிகளுக்குப் பெரிய அசைன்மெண்ட்களைத் தரமாட்டார்கள். அந்த டி.ஐ.ஜி. சீனிவாசன் கொஞ்சம் சந்தேகத்துக்கு இடமான மனிதர். எனவே, அவருடைய மேலதிகாரிகள் அவரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அனைத்து முக்கியமான மீட்டிங்களிலும் அவரும் இடம்பெறுவதாகவே காட்டப்படுகிறது. ஆக, காவல் துறையின் அதிகார தரவரிசை எப்படிப்பட்டது… திட்டங்கள் எப்படி  செயல்படுத்தப்படுகின்றன என்பதுபற்றிய புரிதல் இல்லாத ஒருவரால்தான் இப்படி கதையை யோசிக்க முடியும்.

அதோடு இந்த டெபுடி கமிஷனர்களுக்கு என்ன சீருடை என்பதே தெரியவில்லை. பாடல் காட்சியில் காஸ்ட்யூம் மாற்றுவதுபோல் ஒரு நேரம் காக்கிச் சட்டையும் குச்சியுமாக வருகிறார்கள். இன்னொரு நேரம் பூனைப்படை வீரர்கள் போல் கறு நீல ஆடையில் வருகிறார்கள். பிறிதொரு நேரம் டிராஃபிக் போலீஸ் போல் வெள்ளை சட்டை அணிந்து வருகிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பொரட்சிகர இயக்கத்தின் கமாண்டரும் காவல்துறை அதிகாரிகள் போலவே கறு நீல சஃபாரி உடையில் வருகிறார். மொத்தமா வாங்கினால் தள்ளுபடி என்று அறிவித்திருப்பார்கள் போலிருக்கிறது. காஸ்ட்யூம் டிசைனர் பட்ஜெட்டை மிச்சம் பிடிக்க எல்லாருக்கும் ஒரே சீருடையாகத் தைத்துவிட்டார்.

இப்படியாக படத்தின் ஆதார அம்சங்களிலேயே இத்தனை குளறுபடிகள்.

இரண்டாம் நிலை விவரணைகளில் இருக்கும் பிரச்னைகளை அடுத்தாகப் பார்ப்போம். பொதுவாக, இவ்வகைப் பிழைகள் ஓரளவுக்கு மன்னிக்கத் தகுந்தவையே. குறிப்பாக, தமிழ் படங்களைப் பொறுத்தவரையில். ஆனால், பெரிய பிழைகளைச் செய்வதற்கு பல்வேறு சமரசங்களை சாக்குப் போக்காகச் சொல்லும் தமிழ் படைப்பாளிகள் இந்தச் சிறிய விஷயங்களில் செய்யும் தவறுகளுக்குத் தங்கள் திறமையின்மையைத் தவிர வேறு எதையும் காரணமாகச் சொல்ல முடியாது. ஒருவர் திறமை குறைந்தவராக இருப்பதில் தவறே இல்லை. ஆனால், அதையே தனது சாதனையாக முன்வைக்கும்போதுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.

அதோடு கமல்ஹாசன் அதி நுட்பமான விஷயங்களையெல்லாம் அதைவிட நுட்பமாகச் செய்யக்கூடியவர் என்ற பெயர் வேறு இருக்கிறது. அவருடைய அருமை பெருமை பற்றி அவருடன் இருப்பவர்கள் அல்லது அவருடைய கடைக்கண் பார்வைக்காக க்யூ வரிசையில் காத்திருப்பவர்கள் எல்லாரும் ரொம்பவே பேசுவதுண்டு.

உதாரணத்துக்கு, ஏதேனும் ஒரு காட்சியில் கமல் வலது கையில் சிறிய காயத்துக்காக பேண்டேஜ் ஒன்றைக் கட்டியிருப்பாராம். அதனுடைய தொடர்ச்சியான காட்சி சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து என்றாவது எடுக்கப்படும். அப்போது வேண்டுமென்றே இடது கையில் அந்த பேண்டேஜைக் கட்டிக் கொள்வாராம். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா முன்னேற்பாடுகளும் முடிந்து காட்சியை படமாக்க ஆரம்பிப்பார்கள். கேமரா மேன் லைட்டிங் பற்றி தன் திருப்தியை தெரிவிப்பார். இயக்குநர் வ்யூ ஃபைண்டரில் (மானிட்டரில்) ஃப்ரேமைப் பார்த்துவிட்டு, ஸ்டார்ட் கேமரா ஆக் ஷன் என்று சொல்வார். மயான அமைதி நிலவ கேமரா ஓட ஆரம்பிக்கும். அந்த நேரம் பார்த்து, லைட்ஸ் ஆஃப் என்று கமல் கர்ஜிப்பாராம்.

ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவும் இடி கேட்ட நாகம் போல் நடுங்கும். கேமரா மேன், டைரக்டர்  எல்லாரும் பதறி அடித்தபடி கமல் சாரை நெருங்குவார்கள். அவரோ போலியான  கோபத்துடன், உதவி இயக்குநர்களைப் பார்த்து, முந்தின காட்சியில நான் எந்தக் கையில பேண்டேஜ் போட்டிருந்தேன் என்று அதிரடியாக ஒரு கேள்வி கேட்பார். உதவி இயக்குநர் அவசர அவசரமாக தன் குறிப்பேட்டைப் புரட்டிப் பார்ப்பார். அதில் வலது கையில் பேண்டேஜ் என்று எழுதப்பட்டிருக்கும். கமல் சார் இடது கையில் ஒட்டப்பட்டிருக்கும் பேண்டேஜைப் பிய்த்தெடுத்து எல்லாரையும் அலட்சியப் பார்வை பார்த்தபடி வலது கையில் ஒட்டிக்கொள்வார். ஒட்டு மொத்த யூனிட்டும் தெய்வமே… எங்கயோ போயிட்டீங்க என்று அவர் காலில், பொது இடம் என்று கூடப் பார்க்காமல் விழும். இப்படி அவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்குவார் என்று  அவரைப் பற்றி பல புராணங்கள் உருவாக்கப்பட்டு அவை உண்மை எனவும் நிலைபெற்றுவிட்டிருக்கின்றன. எனவேதான் கமலின் படத்தில் தென்படும் சிறிய பிழைகளையும் பட்டியலிடுவது மிகவும் அவசியமாகிறது.

இவற்றை மாற்றி அமைப்பதால் படத்தின் தரம் அதிகரிக்குமா என்பது பார்ப்பவர்களைப் பொறுத்ததுதான். ஒரு காட்சியில் ஜோவென மழை பெய்து அதற்கு தொடர்ச்சியான அடுத்த காட்சியில் சுள் என்று வெய்யில் அடித்தால் யாருக்கெல்லாம் நெருடலாகத் தெரியுமோ அவர்களுக்கானவைதான் இந்தக் கட்டுரைகள்.

குருதிப்புனல் படத்தின் தொடக்கத்திலேயே இப்படியான பிழைகள் வரிசைகட்ட ஆரம்பித்துவிடுகின்றன. கதாநாயகன் ஆதி காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதி மனைவியிடம் கொடுத்துவிட்டு தீவிரவாதிகளின் கோட்டைக்குப் போகிறான். படமே ஒருவகையில் அந்தக் கடிதத்தின் வாயிலாக விவரிக்கப்படுவதுபோல்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கமல் தன்னை  எழுத்துத்திறமை உடையவராகவே இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார். செல்லுலாய்ட் காவியங்கள் செதுக்க வேண்டிய மிகப் பெரிய கடமை தனக்கு இருப்பதால் தனக்குள் இருக்கும் எழுத்து ராட்சஸனைக் கொஞ்சம் பின்வரிசைக்கு அனுப்பிவைத்திருக்கிறார். ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த ராட்சஸன் திமிறி எழுந்து முன்னால் வரத் தவறுவதில்லை. இந்தப் படத்தின் முதல் காட்சியில் இடம்பெறும் கடிதத்தில் அந்த ராட்சஸன் தன் கோர முகத்தை வஞ்சனையில்லாமல் வெளிப்படுத்துகிறான்.

நாட்டில் அரசியலும் வன்முறையும் அக்னி சாட்சியாக ஜோடி சேர்ந்துவிட்டன என்று ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம். அடுத்த வரியில் என்ன சொல்கிறார் என்றால், ஊழல் தீயில் நேர்மையை ஊற்றி யாகங்கள் செய்யப்படுகின்றன என்கிறார். தீ என்பது உவமை. ஊழல் என்பது அதற்கான உவமேயம். தொக்கி வந்திருக்கும் அடுத்த உவமை நெய். அதற்கு இணையான உவமேயமாக இடம்பெற்றிருப்பது நேர்மை! தீயும் நெய்யும் நண்பர்கள். ஆனால், ஊழலும் நேர்மையும் நண்பர்கள் அல்ல. அந்தவகையில் நேர்மையை நெய்யாக உவமித்தது தவறு. ஊழலுக்கு நண்பனாக இருக்கும் சுயநலம், பிழையான சித்தாந்தம், வெறுப்பு போன்ற எதிர்மறை விஷயங்கள்தான் அங்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஊழல் தீயில் நேர்மையைப் போட்டு எரித்து யாகங்கள் செய்யப்படுகின்றன என்று சொல்லியிருக்க வேண்டும். சரி இதாவது தமிழ் தெரியாததால் வந்த பிழையாகப் பொறுத்துக்கொண்டுவிடலாம்.

நேர்மைக்கு உதாரணமாக யார் யாரெல்லாம் காட்டப்படுகிறார்கள் தெரியுமா..? காந்தியடிகள், தெரேசா… மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். மூன்றாவதாகக் காட்டப்படுவது ஸ்ரீமதி இந்திரா காந்திஜி. காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமல்ல… இந்திராவுக்கே இது ஒரு புதிய செய்தியாகத்தான் இருந்திருக்கும்.

அடுத்ததாக வரும் வசனம் என்ன தெரியுமா? அரசாங்கத்தின் கவனத்தை நியாயத்தின் பக்கம் திருப்ப சில நேர்மையான போராளிகள் துப்பாக்கி ஏந்தினர். அவர்களையும் ஊழல் தீ சுட்டுவிட்டது. அந்தத் தீப்பொறிகளில் ஒன்றுதான் பத்ரி எனும் பத்ரி நாராயணன் (நாஸர்) என்று அறிமுகப்படுத்துகிறார்.

இந்த பத்ரி நாராயணனாகப்பட்டவர் ரகசியமாகச் செயல்படும் ஒரு பொரட்சிகர இயக்கத்தின் தலைவர். படத்தில் அவருடைய சித்தாந்தம் என்ன என்பது அவருக்குமே தெரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அவர் எந்த ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகப் படத்தில் காட்டப்படவில்லை. சித்தாந்தம் என்ற வஸ்துவுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருப்பதாகத்தான் காட்டவும்படுகிறார். ஆனால் அவரை ஊழல் தீப்பொறிகளில் ஒன்றாக அறிமுகப்படுத்துகிறார் கமல்ஜி. ஆக, கமல் தனக்கு ஊழல் என்றால் என்ன, நேர்மை என்றால் என்ன, பொரட்சி என்றால் என்ன என எதுவுமே தெரியாது என்று படம் ஆரம்பித்தவுடனேயே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிடுகிறார். அதையும் மீறி படத்தைப் பார்த்துவிட்டு இந்தக் காட்சி சரியில்லை… அந்த வசனம் சரியில்லை என்று சொன்னால் அதற்கெல்லாம் அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்?

இந்த வீர வசனங்கள் முடிந்த பிறகு ஒரு காட்சி வருகிறது. அதில் கதாநாயகன் ஆதி காவல்துறை ஜீப்பில் போய்க்கொண்டிருக்கிறார். பின்னால் இன்னொரு காவல் வேனும் வருகிறது. வழியில் கிளைச்சாலை ஒன்றில் இருந்து மூன்றாவதாக ஒரு பள்ளிக்கூட பஸ் வருகிறது. அந்தப் புறவழிச்சாலையில் இவற்றைத்தவிர வேறு எந்த வாகனங்களும் கிடையாது. முன்னால் போகும் காவல்துறை வண்டிகளை முந்தும்படி பள்ளிக் குழந்தைகள் ஓட்டுநரிடம் ஆர்வத்துடன் சொல்கிறார்கள். அவரும் சரசரவென வண்டியை முடுக்கிவிட்டு ஓவர் டேக் செய்கிறார். எந்த திசையில் தெரியுமா? முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடப்பக்கமாக!

நெடுஞ்சாலைகளில் இடப்பக்கமாக ஓவர் டேக் செய்வது எப்போதாவது நடக்கும் செயல்தான். ஆனால், யாரும் காவல்துறை வண்டியை அப்படி ஓவர் டேக் செய்யமாட்டார்கள். அதுவும் பள்ளிக்கூட பேருந்தை ஓட்டுபவர் அப்படிச் செய்ய வாய்ப்பு குறைவு. அதோடு சாலையில் வலதுபக்கம் தாராளமாக இடம் இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் மீறி அந்த ஓட்டுநர் ஏன் இடது பக்கமாக ஓவர்டேக் செய்கிறார் என்றால், முன்னால் போகும் ஜீப்பில் கமல் சார் இடது பக்கமாகத்தானே உட்கார்ந்திருக்கிறார். குழந்தைகள் அவரைப் பார்த்து சாரே ஜஹான் சே அச்சா என்ற பாடல் பாட வேண்டியிருக்கிறதே. அதனால், இடதுபக்கமாக ஓவர் டேக் செய்கிறார் டிரைவர். அப்படியாக திரைப்பட விதிகளை மட்டுமல்லாமல், சாலை விதிகளையும் கமல் தனக்காக வளைக்கும் திறமை கொண்டவர் என்பது இதன்மூலம் வெளிப்படுகிறது. விதிகள் என்றாலே மீறத்தானே.

கமல் சார் செல்லமாகக் குழந்தைகளைக் கடிந்துகொள்கிறார். டிரைவரைச் சரியான வழியில் ஓவர் டேக் செய்யச் சொல்லி உத்தரவிடுகிறார். அப்படியே அந்த ஓட்டுநரும் வண்டியைப் பின்னால் கொண்டுசென்று வலது பக்கமாக ஒவர் டேக் செய்கிறார். இந்த இடத்தில்தான் ஹாலிவுட் பரபரப்பு படத்தில் தொற்றிக்கொள்கிறது. ஆரம்ப காட்சியிலேயே பரபரப்பு!

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் காவல்துறை வேனைக் குறிவைத்துத் தகர்க்கத் திட்டமிடுகிறார்கள். அதற்கு அவர்கள் செய்யும் உலகமகா காரியம் என்ன தெரியுமா. சாலையில் வழியில் இருக்கும் சிறிய பாலம் ஒன்றின் குறுக்கே கயிறைக் கட்டி பாம் ஒன்றைப் பொருத்துகிறார்கள். ஒரு ஆடோ நாயோ கடந்துபோனால் கூட கால் பட்டு வெடித்துவிடும்வகையிலான வெடி குண்டு. அந்தக் கண்ணி வெடியைப் பொது வழியில் பொருத்திவிட்டு சிறிது தள்ளிப் போய் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கிறார்கள். பள்ளிக்கூடப் பேருந்து சாலையில் வருவதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார்கள். அடங்கொய்யால… சாலையில் காவல் துறை வேன் மட்டுமே வரும் என்று நினைத்துத்தான் அந்த வெடிகுண்டைப் பொருத்தினார்களா..? காவல்துறை வேனைத் தகர்ப்பதென்றால், கையெறி குண்டு பயன்படுத்தலாம். லெவல் கிராஸிங்கிலோ வேறு எங்காவதோ காவல் வேன் நிற்கும்போது நைஸாக பாமை அதில் வைத்துவிடலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு பாலத்துக்குக் குறுக்கே கயிறுகட்டிவைத்துவிட்டு பள்ளிக்கூட பஸ் வந்ததும் தலையில் அடித்துக்கொள்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதும் அதுதானே!

அதிலும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தைப் பார்த்தால் அதைவிட பரிதாபம்.. படத்தின் நான்காவது நிமிடம் 15வது நொடியில் வரும் அந்தக் காட்சியை நிறுத்தி வைத்துப் பார்த்தால் பாம் எங்கோ வெடிக்கிறது. பேருந்து வேறு எங்கோ இருக்கிறது. காட்சியை எழுதியதில் மட்டுமல்ல, எடுத்தவிதத்திலும் குழறுபடி.

குண்டு வெடித்து பேருந்தில் வந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். பின்னால் வரும் காவல் ஜீப்பில் இருந்து பதறியபடியே இறங்கி ஓடிவரும் கமல் சார் கேமராவுக்கு சோகமாக போஸ் குடுத்தபடி பாலத்தின் மேலே நிற்கிறார். நிற்கிறார். நின்று கொண்டே இருக்கிறார். ஓடிச் சென்று யாருக்காவது உயிர் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று கூடத் தோன்றவில்லை. காட்சி ஊடகம் என்றால் ஃப்ரேம் பியூட்டிதானே முக்கியம். சரி கதாநாயகனுக்குத்தான் அந்த லட்சியம் என்றால் உடன் வந்த காவலர்களில் ஒருவர் கூடவா வெடித்து விழுந்த பஸ்ஸைப் போய் எட்டிப் பார்க்கக்கூடாது. இத்தனையும் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்துக்குள் நடைபெறும் சாதனைகள்.

இரண்டரை மணி நேரப்படத்தை இப்படிப் பிரித்து மேய்வதென்றால் இதற்கென்றே தனி புத்தகம்தான் போடவேண்டியிருக்கும். எனவே, இந்தக் கட்டுரைக்கு ஏற்ற வகையில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

கதாநாயகன் ஆதியிடம் ஆப்ரேஷன் தனுஷ் என்ற ஒரு அசன்மெண்ட் ஒப்படைக்கப்படுகிறது. அதாவது, சிவா, ஆனந்தன் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்ட இரண்டு காவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பு அவனிடம் துணைக் கதாநாயகனால் ஒப்படைக்கப்படுகிறது. அதை வெறுமனே ஒப்படைத்திருக்கலாம். ஆனால், அதற்கு ஒரு காரணம் கற்பிக்கிறேன் என்ற பேரில் மடத்தனம் வெளிப்படுத்தப்படுகிறது. ஒருவர் முட்டாளாக இருப்பதில் தவறில்லை. அதை அடிக்கடி வெளிப்படுத்திக்கொண்டிருப்பது அநாவசியம் அல்லவா. ஆதி சித்திரவதைக் கலையில் நிபுணராம். அதனால் ஆப்பரேஷன் தனுஷின் பொறுப்பு அவருக்குத் தரப்படுகிறதாம். தீவிரவாதிகளில் சிலர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க நீதான் சரி என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது. ஒற்றர்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்பதை சித்திரவதை நிபுணரிடமா கேட்கவேண்டும். அதிலும் அவர் சொல்லும் ஆகப் பெரிய ஆலோசனை என்ன தெரியுமா… சதித்திட்டத்தை வெளியில் யாருக்கும் சொல்லிவிடாதே… பிடிபட்டால் சயனைட் சாப்பிட்டு உயிரைவிட்டுவிடு. இப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஒண்ணாம் வகுப்பு பாடம் கற்றுக் கொடுக்க உண்மையிலேயே ஒருவருக்கு அசாத்திய திறமை வேண்டும்.

ஒருவழியாக காவல் துறை ஒற்றர்கள் தீவிரவாத இயக்கத்துக்குள் ஊடுருவிவிடுகிறார்கள். பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே ஒரு வருடத்தில் அவர்கள் அந்த இயக்கத்தின் பெரிய பதவிக்கும் வந்துவிடுகிறார்கள். அவர்களில் ஒருவன், தீவிரவாதிகளில் முக்கியமான யாரோ இரண்டு பேர் திருச்சிக்கு போகிறார்கள் என்ற தகவலை கதாநாயகனுக்கும் துணைக் கதாநாயகனுக்கும் தெரிவிக்கிறார். ஆனால், தீவிரவாதிகள் அவரைக் கையும் டாக்கியுமாகப்  பிடித்துவிடவே சயனைடு அருந்தி உயிர்த்தியாகம் செய்துவிடுகிறார். அவருடைய உடல் நடுக்காட்டில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்படுகிறது. அதை வேதனையுடன் பார்க்கும் நாயகனும் துணை கதாநாயகனும் திருச்சி டிரெயினுக்கு நேரமாகிவிடவே ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைகிறார்கள். அங்கு பார்த்தால் அந்த ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கிறார்கள்.

இந்திய ரயில்வேத் துறையின் வசம் இருக்கும் ஒரே ஒரு கவுரவம் அது குறிப்பிட்ட நேரத்துக்குப் புறப்படுவதுதான். இயற்கைச் சீற்றம், ரயில் மறியல் போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத நேரத்தில் இந்திய ரயில்கள் பொதுவாக சரியான நேரத்தில் புறப்பட்டுவிடும். சேரும் நேரம் பற்றி சொல்வதானால், ஏதாவது ஒரு ரயில் குறிப்பிட்ட நேரத்தில் தன் டெஸ்டினேஷனைச் சென்று சேர்ந்துவிட்டதென்றால், அது முந்தின நாள் வந்து சேரவேண்டிய ரயிலாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்குத்தான் அதன் தரம் இருக்கிறது. புறப்படும் நேரத்தில் இப்படியான தாமதம் சாத்தியமில்லை. ஆனால், படத்தில் திருச்சி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தங்கிலீஷில் அறிவிக்கிறார்கள்.

எதற்காக இந்தத் தாமதம் என்றால், கதையில் இரண்டு சம்பவங்கள் நடக்க வேண்டியிருக்கிறது. முதலாவது, கதாநாயகன் மாபெரும் அதிகாரி என்றாலும் அவருக்கும் குழந்தை குட்டிகள், குடும்பம் உண்டு. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லவர்… அதே நேரத்தில் சிறிது நேரம் கிடைத்தாலும் குடும்பத்துடன் சேரத் துடிப்பவர்… அதாவது, குடும்பத்தையும் அலுவலகத்தையும் சரியாக பேலன்ஸ் செய்யும் சராசரி மனிதர் என்று காட்டுவதற்காக ஒழுங்காகப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய ரயிலை இரண்டு மணி நேரம் தாமதப்படுத்துகிறார்.

இரண்டாவது காரணம் என்னவென்றால், ரயிலில் ஏறவிருக்கும் தீவிரவாதிகளை நாயகன் யதேச்சையாகக் கண்டுபிடிக்கவும் இந்தத் தாமதமே வாய்ப்பளிக்கிறது. குடும்பத்தினருடன் பொது தொலைபேசியில் பேச ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வரும் நாயகன், அங்கு வந்து நிற்கும் கார் ஒன்றில் தீவிரவாதி ஆளுயர துப்பாக்கியைத் எடுத்து வைப்பதைப் பார்த்துவிடுகிறார். ரயிலில் ஏறி திருச்சிக்குப் போக வேண்டிய தீவிரவாதிகள் எதற்காக இவ்வளவு பெரிய ஆயுதத்தைக் கையில் கொண்டுவந்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த காரை ஓட்டி வந்த டிரைவர்தான் தீவிரவாதிகளின் தலைவர். அவரிடம் பொட்டு வெடி துப்பாக்கி கூடக் கிடையாது. அவருடன் வந்த சீடரிடம், ஆளுயரத் துப்பாக்கி, பேண்ட் பாக்கெட்டில் சொருக முடிந்த குட்டி துப்பாக்கி என சகல சம்பத்துகளும் இருக்கின்றன.

கதாநாயகன் தீவிரவாதியை ஒளிந்திருந்து மடக்கத் திட்டம் போடும்போது அவருடைய வாக்கி டாக்கிக்கு செய்தி ஒன்று வரவே அந்த சத்தத்தைக் கேட்டு தீவிரவாதி சுதாரித்துவிடுகிறார். நாயகனுக்கும் தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தீவிரவாதியின் தோளில் குண்டு பாய்ந்துவிடுகிறது. இதைப் பார்த்ததும் டிரைவர், காரை வேகமாக எடுத்துக்கொண்டு தப்பிக்கப் பார்க்கிறார். பதற்றத்தில் அருகில் இருந்த சுவரில் மோதி மாட்டிக்கொண்டுவிடுகிறார். காவலர்கள் அவரைச் சுற்றி வளைத்ததும் பதறியபடியே எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்பதுபோல் நான் டிரைவர்தான் என்று வாக்குமூலம் தருகிறார்.

இதனிடையில் குண்டடி பட்ட இன்னொரு தீவிரவாதி நேராக, ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்துவிடுகிறார். எங்காவது ஒளிந்துகொள்ளலாமென்று நினைக்காமல் நேராக மக்கள் அதிகமாக இருக்கும் நடைமேடைக்கு வந்துசேருகிறார். பயணிகளில் ஒருவரை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அந்த ரயில் நிலையமோ மிகவும் விசித்திரமான ஒன்று. அதில் நடைமேடையில் மட்டும்தான் மக்கள் இருப்பார்கள். ஓவர் பிரிட்ஜில் ஒரு ஈ காக்காய் கூட இருக்காது. எனவே, தீவிரவாதி பிணைக்கைதியைக் கேடயமாகப் பிடித்தபடி ஓவர் பிரிட்ஜில் ஏறி தப்பிக்க முயற்சி செய்வார். நாயகனும் துணை கதாநாயகனும் அதிரடியாக அவனை மறைந்திருந்து சுட்டுக் கொன்றுவிடுவார்கள்.

அதன் பிறகு டிரைவரை விசாரணை செய்ய ஆரம்பிப்பார்கள். அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று சாதிப்பார்.

அடுத்ததாக, மத்திய அமைச்சர் ஒருவர் காவல் துறையினரின் எச்சரிக்கைகளையும் மீறி ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அந்த ஊருக்கு வருவார். அவரைக் கொல்ல தீவிரவாதிகள் போட்ட திட்டம் ஒற்றர் மூலமாகக் காவலர்களுக்குத் தெரியவரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் அந்த அமைச்சரை ராக்கெட் லாஞ்சர் மூலம் கொல்லத் தீர்மானித்திருப்பார்கள். இந்த லாஞ்சரை ஏவப் போகிறவர் பொரட்சிகர இயக்கத்தின் சித்தாந்தத்துடன் ஒத்திசைவு இல்லாதவராம். அதாவது, அவர் ஃப்ரீலான்ஸாக போட்டோ பிடிப்பது, வீடியோ படம் எடுப்பதுபோல் ராக்கெட் லாஞ்சரை வைத்து அப்பப்ப யாரையாவது சுட்டு காலத்தை ஓட்டுபவர். அதற்கான பயிற்சியை எந்த சித்தாந்தப் பின்புலமும் இல்லாமல் எங்கோ ஆறு மாத டிப்ளமா கோர்ஸ் போல் படித்திருக்கிறார் போலிருக்கிறது. இதாவது பரவாயில்லை. படத்தில் வரும் பொரட்சிகர இயக்கமானது மிக முக்கியமான தாக்குதலுக்குக்கூட அவுட் சோர்ஸ்தான் செய்யும் போலிருக்கிறது.

இதில் இன்னொரு டமாஷ் என்னவென்றால், மத்திய அமைச்சரை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல ஆதி சொல்லும் ஐடியா இருக்கிறதே… அபாரம். நெடுஞ்சாலை வழியாக அழைத்துச் சென்றால் பிரச்னை. காட்டுக்குள்ளாகக் கொண்டு செல்வோம் அதுதான் பாதுகாப்பு என்று அடித்துச் சொல்கிறார் (அது ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் என்று படத்தில் சொல்லப்படுகிறது. என்றாலும் மறைவிடங்கள் மிக அதிகமாக இருக்கும் காட்டுப் பகுதி எப்படியும் பாதுகாப்பானதாக இருக்க வழியில்லை). அவர் சொல்வதுபோலவே மந்திரியைக் காட்டுப் பகுதிவழியாக அழைத்துச் செல்கிறார்கள். முன்னால் சோதனை செய்தபடியே போகும் நாயகன் ஆதிக்கு காட்டில் ஒரு இடத்தில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்கிறது. அங்கு ஜீப்பை நிறுத்தி கண்காணிக்கிறார். அவருடைய கணிப்பு சரிதான். ஆனால், தீவிரவாதியின் தாக்குதலில் இருந்து மந்திரியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. ஆதியின் கண்ணுக்கு முன்னாலே ராக்கெட் லாஞ்சர் மந்திரி வந்த காரை தாக்கி அழித்துவிடுகிறது.

இதைப் பார்த்ததும் கதாநாயகன் தீவிரவாதியைத் துரத்துகிறார். மந்திரியின் கூடவே சுமார் 20 கார்கள் வந்திருக்கின்றன. அதில் ஒவ்வொன்றிலும் சராசரியாக நான்கு பூனைப்படை வீரர்கள் என்று வைத்துக்கொண்டால் சுமார் 80 பேர் இருப்பார்கள். ஆனால், தீவிரவாதியை கமல் சார் மட்டுமே அந்தக் காட்டுக்குள் துரத்திக்கொண்டே செல்கிறார். கடைசியில் சில பல சண்டைக்குப் பிறகு அந்தத் தீவிரவாதியை துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கிறார். மிகச் சரியாக பூனைப்படையும் வந்து சேருகிறது.

அந்தத் தீவிரவாதியை விசாரணை செய்யும்போது முன்பே சிறையில் பிடிபட்டிருக்கும் டிரைவர்தான் அந்தத் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பத்ரி நாராயணன் என்ற திடுக்கிடும் உண்மை தெரியவருகிறது. கதை சூடு பிடிக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் வெடி குண்டு விபத்தில் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளின் புகைப்படங்களை மேஜையில் பரத்தி வைத்து பத்ரியிடம் ஆதி விசாரணையை ஆரம்பிக்கிறார். இந்த அப்பாவிகளை எதற்காகக் கொன்றாய்..? உனக்கு தைரியம் இருந்தா எங்க கூட மோத வேண்டியதுதான என்கிறார். பத்ரியோ பேசாமல் இருக்கிறார். உண்மையில் காவல் துறை அதிகாரிகளைக் கொல்லத் திட்டமிட்டுத்தான் அந்த வெடி குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் எதிர்பாராதவிதமாக குழந்தைகள் மாட்டிக்கொண்டுவிட்டார்கள். எனவே, அது ஒரு விபத்து என்பதை பத்ரி சொல்லியிருக்க வேண்டும்.

தீவிரவாதிகளிடம் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும். ஒரு தாக்குதலை நிகழ்த்தினால் அதற்கு பொறுப்பேற்று ஓர் அறிக்கையை நிச்சயம் வெளியிடுவார்கள். அவர்களுடைய ஆதரவாளர்களிடையே மதிப்பையும் நிதி சேகரிக்க வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால்தான் அப்படிச் செய்கிறார்கள் என்றாலும் பொதுவாக தாங்கள் செய்த செயலை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அப்படியே ஒருவேளை செய்த தவறை மறைத்தாலும் செய்யாத ஒன்றைச் செய்ததாக மார்தட்டிக் கொள்ளமாட்டார்கள். அதுவும்போக காவல் துறை அதிகாரி நேருக்கு நேர் மோது என்று சவால் விடும்போது, நாங்கள் அதைத்தான் செய்ய முயன்றோம். குறி தப்பிவிட்டது என்பதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஏனோ வாய் மூடி மவுனம் காக்கிறார்.

அடுத்ததாக, தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் ஒரு வண்டியில் அதிகாலை நான்கு மணி அளவில் செக் போஸ்ட் வழியாகப் போகப் போவதாகத் தகவல் வருகிறது. ஆதி, அப்பாஸ் அன்கோ அந்த செக் போஸ்டைச் சுற்றிக் காவலுக்கு நிற்கிறார்கள். சரியாக அதிகாலை 3.50க்கு வண்டி வந்து சேருகிறது. தீவிரவாதி ஒருவன் லாக் புக்கை எடுத்து வந்து எண்ட்ரி போடச் சொல்கிறான். அந்த நேரம் பார்த்து அப்பாஸும் ஆதியும் பின்னால் இருந்து அவனை மடக்கிப் பிடித்துவிடுகிறார்கள். இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை மெதுவாக மேஜையில் வைக்கச் சொல்லி அப்பாஸ் உத்தரவிடுகிறார். அந்த தீவிரவாதியும் அதைச் செய்கிறான். ஒரு காவலரை அனுப்பி அதை எடுத்து வைக்கச் சொல்லி அப்பாஸ் உத்தரவிடுகிறார். கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் அந்தக் காவலர், தீவிரவாதியின் துப்பாக்கியை மேஜையில் இருந்து எடுத்து ஒதுக்கி வைக்கிறார். தீவிரவாதி பயந்து சுவர் ஓரம் ஒதுங்குகிறார். அந்த நேரம் பார்த்து திடீரென்று அலாரம் கிர் என்று ஒலிக்கவே அந்தக் காவலர் பயந்து துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்திவிடுகிறார். தீவிரவாதி அதில் மாட்டி இறந்துவிடுகிறார்.

இந்தக் காட்சியில் எழும் சந்தேகம் என்னவென்றால், நான்கு மணிக்கு ஆயுதங்கள் கடத்தப்படப் போவதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் ஒரு பெரிய காவல் படையே அந்த செக் போஸ்டை முற்றுகை இட்டிருக்கிறது. அங்கு பணி புரியும் காவலர் நான்கு மணிக்கு எழுப்பும் வகையில் அலாரத்தை செட் செய்து வைப்பாரா? முந்தின நாட்களில் வேண்டுமானால், அப்படித் தூங்கியிருக்கலாம். அதிலும் செக் போஸ்டில் இரவு பணியில் இருப்பவர் அலாரம் வைத்துக் கொண்டு தூங்குவார் என்பது நம்ப முடியாத ஒன்றுதான். அவருடைய பணியே இரவு நேரக் கடத்தலைத் தடுப்பதுதான். கடமைக்காக இல்லை என்றாலும் கடமை மீறலுக்காகக் கிடைக்கும் லஞ்சத்துக்காகவாவது முழித்துக்கொண்டுதான் இருப்பார். சாலை வழியாக மட்டுமல்ல… பக்கத்து வயல்கள் தோப்புகள் வழியாகவும் ஏதேனும் வாகனங்கள் போகிறதா என்று படு உஷாராக டார்ச் அடித்துத் தேடிக் கொண்டிருப்பார். ஆனால், இங்கோ பெரும் காவலர் குழுவே சூழ்ந்திருக்கும் நிலையில் அவர் ஜாலியாக நான்கு மணிக்கு அலாரம் செட் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

அப்படியாக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டுவிடவே பத்ரிக்கு கோபம் வருகிறது. ஆதியைத் தன் பக்கம் வந்துவிடும்படி வலை விரித்துப் பார்க்கிறார். ஆதிக்கும் நேர்மைக்கும் இடையிலான பிணைப்பு ஃபெவிக்கால் பிணைப்பைவிட வலுவானது என்பது தெரியவந்ததும் தன் கைவரிசையைக் காட்டுகிறார். ஆதியின் குழந்தையின் செல்ல நாய்க்குட்டியைக் கொல்கிறார். ஆதிக்குக் கோபம் முற்றுகிறது. பத்ரியைப் போட்டு பின்னி எடுக்கிறார். அது போதாதென்று நார்க்கோ அனாலிசிஸ் டெஸ்டுக்கு உட்படுத்துகிறார். போதை மருந்தின் தாக்கத்தினால் பத்ரி விட்டு விட்டுப் பேசுகிறார். எட்டு வருஷமா… எட்டு வருஷமா என்று  சொல்கிறார். பிறகு உன் மகன் பாவம். சீனிவாஸ் நீ சாகப் போற என்று சொல்கிறான்.

அடுத்த காட்சியில் ஆதியின் மகன் சீனிவாஸ் நீச்சல் குளத்தில் இருக்கும்போது காலில் சுடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். ஆனால், நாயகன் ஆதிக்கோ சட்டென்று தன்னுடைய மேலதிகாரியான டி.ஐ.ஜி. சீனிவாஸன்தான் தீவிரவாதிகளுக்கு உதவுபவர் என்று தெரியவந்துவிடுகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. இதை நான் ஒரு சந்தேகமாகத்தான் கேட்கிறேன். கமல்தான் திரைக்கதை ஆசிரியர் என்பதால் அவருக்கு அந்த டி.ஐ.ஜி. கதாபாத்திரம்தான் கறுப்பு ஆடு என்பது தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், கதாநாயகன் ஆதிக்கு எப்படித் தெரியவந்தது. பத்ரி போதை மருந்தின் பாதிப்பில் சினிவாஸ்… நீ சாகப் போற என்றுதான் சொல்கிறார். அதன்படியே ஆதியின் மகன் சீனிவாஸ்தான் துப்பாக்கியால் சுடவும் படுகிறான். இதை வைத்து டி.ஐ.ஜி.தான் துரோகி என்று எப்படி ஆதி கண்டுபிடிக்கிறார்?

இதைத் தொடர்ந்து வேறு சில மிரட்டல் நடவடிக்கைகள் நடக்கின்றன. ஆதி பயந்துவிடுகிறான். டி.ஐ.ஜி. போல் தானும் தீவிரவாதிகளுக்கு உதவத் தயாராகிவிடுகிறான். இத்தனைக்கும் தீவிரவாதிகள் தலைவன் காவலர்களுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறான். ஆனால், ஆதி வீர சாகசங்கள் செய்யும் காவலர் அல்ல. பந்த பாசத்துக்குக் கட்டுப்பட்ட யதார்த்தமான காவலர் என்பதால் தீவிரவாதிகள் சொல்வதையெல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். பத்ரியைத் தப்பித்துப்போக விட்டுவிடுகிறார். இதனால் ஆதியின் நடவடிக்கைகளில் அப்பாஸுக்கு சந்தேகம் வருகிறது.

ஒருநாள், தீவிரவாதிகளின் தலைவனைச் சந்திக்க ஆதி தனியாகச் செல்லும்போது அப்பாஸும் பின்னாலே போகிறான். ஆனால், அவன் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறான். தீவிரவாதிகள் தலைவன், ஆதியை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு தனுஷ் யார் என்று கேட்டு அப்பாஸை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறான். அப்பாஸ் மறுத்துவிடவே கடைசியில் அவனைக் கொன்றுவிடுகிறான்.

இதைத் தொடர்ந்து வந்த சோகக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது. காரணம் என்னவென்றால், அப்பாஸின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அவருடைய இஸ்லாமிய மனைவி மட்டுமல்ல ஆதியின் மனைவிகூட வெண்ணிற விதவை உடையை அணிந்துகொண்டு அழுவார். கமல் சாரின் கலாசார புரிதலை நினைத்துப் பார்த்ததும் எதற்கும் கலங்காத என் கண்ணின் மதகுகளையும் கண்ணீர் வெள்ளம் உடைத்துவிட்டது.

இதற்கு அடுத்ததாக என்ன நடக்கிறதென்றால், கமல் சாரின் பேனா வேறு அவதாரம் எடுக்க ஆரம்பிக்கிறது. ஆருயிர் நண்பன் கொல்லப்பட்டதும் தமிழ் கதாநாயகன் ஒரு ஒன் மேன் ஆர்மி அல்லவா என்ற உண்மை அவருக்கு நினைவுக்கு வந்துவிடுகிறது. தீவிரவாதிகளின் கோட்டைக்கு தனி ஆளாக ஒற்றத் துப்பாக்கியுடன் (அதையும் அவர்கள் முதலிலேயே பறித்துவிடுவார்கள் என்பது தெரிந்த பிறகும்) க்ளைமேக்ஸ் ஆவேசத்துடன் போய்சேருகிறார். தீவிரவாதிகளுடைய அநியாயத்தை இனியும் பொறுக்க வேண்டாம் என்று தோன்றினால், அவர்களுடைய இருப்பிடத்தைத் தன் ஒற்றன் மூலம் கேட்டறிந்து அவர்களைச் சுற்றி வளைத்து ஒரேயடியாக முடித்துவிடலாம். ஆனால், ஆதியோ க்ளைமேக்ஸில் தன் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காக தனி ஒரு மனிதனாக தீவிரவாதத்தை எதிர்த்துக் களத்தில் குதிக்கிறார்.

தீவிரவாதிகளின் தலைவன் சிறையில் அடைபட்டுக் கிடந்தபோது பாசக்கார தந்தையாக நடந்துகொண்ட ஆதி, அவன் அவனுடைய கோட்டையில் முழு பலத்துடன் இருக்கும்போது தன் முஷ்டி பலத்தை நம்பி சண்டைக்குப் புறப்பட்டுவிடுகிறார். ஆனால், க்ளைமேக்ஸ் சண்டையெல்லாம் போட்டு தீவிரவாதிகள் தலைவனைக் கொன்றதும் ஆப்பரேஷன் தனுஷின் ஞாபகம் வந்துவிடுகிறது. சிவாவிடம், தனி மனிதனை விடக் கடமைதான் முக்கியம். இந்த தீவிரவாத கும்பலைப் பற்றி மேலதிக விவரங்கள் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது. பத்ரியும் இறந்தாகிவிட்டது. அடுத்த தலைவர் நீதான். எனவே, என்னைக் கொன்றுவிடு. நான் பத்ரியைக் கொன்றேன். நீ என்னைக் கொன்றுவிட்டாய் என்று சொல்லிவிடு. அனைவரும் உன்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று சொல்கிறார்.

சிவாவோ தன் உயரதிகாரியைத் தானே கொல்வதா என்று தயங்குகிறான். நம் அப்பாஸுக்காகக் கொல்லு… நம் ஆப்பரேஷன் தனுஷ் வெற்றி பெற வேண்டும் அதற்காகக் கொல்லு… ஷூட் மீ மை மேன்… ஷூட் மீ மை பாய் என்று உணர்ச்சிபூர்வமாகக் கெஞ்சுகிறார். சிவாவோ உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கிறான். என்ன சொல்லியும் அவன் கொல்லாமல் சிலை போல் நிற்கவே, கடைசியாக, இது என் உத்தரவு… கொல்லுடா என்னை என்று ஆதி கர்ஜிக்கிறார். உத்தரவுகளுக்குப் பழகிப் போன சிவா சட்டென்று டிரிகரை அழுத்துகிறான். தோட்டாக்கள் ஆதியின் உடம்பை சல்லடையாகத் துளைக்கின்றன. அப்படியாக ஆப்பரேஷன் தனுஷுக்காக தன் உயிரைத் தியாகம் செய்கிறார் ஆதி.

இதோடு படம் முடிந்தது என்று நினைத்தால் கமல்ஜி இன்னொரு செய்தியையும் படத்தின் முடிவில் காட்டுகிறார். அதாவது, அப்பாஸ், ஆதி ஆகியோரின் விதவை மனைவிகள் வெண்ணுடை தரித்து மத்திய அரசு தரும் பரிசைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆதியின் மகன் சீனிவாஸ் அந்த பரிசு பத்திரத்தை காரில் வைக்கிறேன் என்று கேட்டு வாங்கிக்கொண்டு ஓடுகிறான். அப்போது இரண்டு சிறுவர்கள் அவனை வழிமறிக்கிறார்கள். நான் கோவிந்தனின் மகன் என்கிறான் ஒருவன். நான் நரசிம்மனின் மகன் என்கிறான் இன்னொருவன். ஆதியின் மகனிடமிருந்து பதக்கத்தைப் பறித்து வானில் தூக்கி எறிகிறார்கள். பிறகு மதில் ஏறிக் குதித்து வெளியேறுகிறார்கள். தீவிரவாதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தைச் சொல்வதுபோல் பின்னணிக் குரலில் இறந்து போன ஆதியின் ஆவி பேசுகிறது.

இந்தக் காட்சியின் செயற்கைத் தன்மையை விட்டுவிடுவோம். காவல் துறையும் ராணுவமும் அப்பாவிகளை தீவிரவாதிகள் என்ற போர்வையில் சுட்டுக் கொல்லும்போது அதனால் ஆத்திரமடைந்து பாதிக்கப்பட்ட சிலர் தீவிரவாதத்தின் பக்கம் போவது உண்டு. அதைச் சொன்னால்தான் தீவிரவாதி உருவாவதன் நியாயத்தைச் சொன்னதாக ஆகும். அதைவிட்டுவிட்டு தீவிரவாதிகளைக் கொன்றதால் அவர்களுடைய மகன்களும் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? உயிரோடு இருக்கும் பாத்திரங்களே உளறிக் கொட்டும்போது ஆவி மட்டும் உருப்படியாகப் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறுதான் இல்லையா?

(தொடரும்)