மதுவிலக்கு: அரசியலும் வரலாறும்

 

Madhu Vilakku Front2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுவிலக்கைப் பிரதான கோரிக்கையாக, தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் முன்னிறுத்தி வருகிற சூழலில், 1920 முதலே தேர்தல் அரசியலை மையப்படுத்தியே மதுவிலக்கு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்கிற வரலாற்றுச் செய்தியுடன் தொடங்குகிறது இந்த நூல்.

1921ல் சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்ற செய்தியிலிருந்து 2016 தேர்தல் களநிலவரம் வரை மதுவிலக்கு அரசியலின் துணைகொண்டு தேர்தல் நிலவரங்களையும் சேர்த்து அலசுகிறார் நூலாசிரியர்.

சேலம் உட்பட நான்கு மாவட்டங்களில் மதுவிலக்கை அமல்படுத்தியதோடு, திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா, கருணாநிதி போன்றோர்களிடமும், மதுவிலக்கை ரத்து செய்துவிடாதீர்கள் என்று இறுதிவரை போராடிய மூதறிஞர் இராஜாஜியின் போராட்டத்தை  இந்த நூல் முழுமையாகப் பதிவு செய்கிறது. அதேவேளையில், சென்னை மாகாணம் முழுவதிலும் மதுவிலக்கைக் கொண்டு வந்ததோடு, அதனால் எழுகின்ற வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நடவடிக்கை என்றுகூறி, பள்ளிக்கூடங்களையும் மூடாமல், சமூக நீதியையும் பாதுகாத்திட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சமூகத் தொண்டையும் அழுத்தமாகப்,பதிவு செய்கிறது.

பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைப்பதற்கு இராஜாஜி கையில் எடுத்த கேடயமே மதுவிலக்கு என்பதை காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தியின் பதிவிலிருந்து எடுத்துக்காட்டுவது சிறப்பு.

ராஜாஜி கொண்டுவந்த மதுவிலக்கை அவருடன் எதிர் கொள்கை கொண்ட அண்ணா  ஏற்றுக்கொண்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி அய்யர் மதுவிலக்குக் கொள்கையை  ஏற்றுக்கொள்ளவில்லை என்பது போன்ற சுவாராசியம் நிறைந்த தரவுகள் நூல் முழுவதும் விரவியிருக்கின்றன. இந்தி எதிர்ப்புப் போராளிகளை கள்ளச்சாராய வியாபாரிகள் என விளித்த முதல்வர் பக்தவத்சலத்தின் பேச்சு, மதுவிலக்கு கோரிக்கையும் தமிழ்த்தேசிய அரசியலும் வரலாற்றில் சந்தித்து கொண்ட இடம்.

1971 ல் மதுவிலக்கை கருணாநிதி தளர்த்தியபோது, அதற்கு வாழ்த்து சொன்ன ஒரே கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. வாழ்த்தியவர் தோழர் எம். கல்யாணசுந்தரம். இத்தகைய வரலாற்று தரவுகளையும் சேர்த்து தங்கள் போராட்ட நெறிமுறைகளை வகுத்து கொள்ள இடதுசாரிகளுக்கு இந்நூல் உதவும்.

மதுவிலக்கை கடைப்பிடித்த அண்ணாவிற்கு அறிவுரையையும், மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதிக்கு வாழ்த்தையும் தெரிவித்த பெரியாரின் மற்றொரு பரிணாமம் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர் என்பதைவிட கள்ளுக்கடை எதிர்ப்பு போராளி என்கிற பிம்பத்தையே, மாணவர் பருவத்திலிருந்து படித்துவரும் பொதுப்புத்திக்கு மேற்கண்ட செய்தி புதிதாக இருக்கும்.

பள்ளிக்கூடங்கள் மற்றும் கோவில்கள் பக்கத்திலிருக்கும் மதுபானக் கடைகளை முதலில் அகற்றுங்கள் என்கிற கோரிக்கையை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களிடம் முன் வைக்கப்படுகிறது. அதற்கு, பள்ளிக்கூடத்திற்கும் கோவிலுக்கும் எம்ஜிஆர் கொடுத்த புதுவிதமான வரையறையை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவைச் சேர்ந்தவர்களோ, என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ சாராய உற்பத்தித் தொழிலில் ஈடுபடமாட்டார்கள் என முதலமைச்சராக இருந்த கருணாநிதி 45 வருடங்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதி இன்றைய ஊடக விவாதங்களுக்கு பயன்படும்.

இன்று மதுவிலக்குப் போராளிகள் முன்னிறுத்தும் தலைவர்களின் மற்றொரு பரிணாமத்தை நேர்மையுடன் பதிவு செய்கிறது. அதேசமயம், காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் சாராயக் கடைகளைத் திறந்ததாகச் சொன்ன கட்சிகள், பிற்காலத்தில் பொருளீட்டும் நோக்கத்திற்காகச் சாராய வணிகத்தை ஊக்குவிக்கும் நிலையை வந்தடைந்ததை வரலாற்றின் போக்கில் அழகான தரவுகளுடன் விளக்கியிருக்கிறார் ஆர்.முத்துக்குமார்

மதுவிலக்கு பிரச்சனையை இரண்டு திராவிட கட்சிகளோடு மட்டும் இணைத்து, புரிந்து வைத்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு, சமூக நீதி, இந்தி எதிர்ப்பு, ஆட்சி கலைப்பு, மத்திய அரசின் செயல்பாடு, மத்திய மாநில உறவுகள்  என பல்வேறு பரிணாமங்களுடன் பாடம் எடுக்கிறது இந்நூல்.

மதுவிலக்கு அரசியல் குறித்த மயக்கம் தெளிய ஆர்.முத்துக்குமாரின் இந்நூல் ஓர் ஊட்டச்சத்துமிக்க பானம் என்று உறுதியாகச் சொல்லலாம்

நூலாசிரியருக்கு சிறிய வேண்டுகோள்: மதுவிலக்கு குறித்த அம்பேத்கரின் கருத்துகளையும் தொகுத்து வெளியிட்டால், புத்தகம் இன்னும் சிறப்பாக இருக்கும். அடுத்த பதிப்பில் அதை எதிர்பார்க்கிறேன்.

நூல் : மதுவிலக்கு அரசியலும் வரலாறும்

எழுத்தாளர்:ஆர்.முத்துக்குமார்

பதிப்பகம்:சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்

புத்தகத்தை டயல் ஃபார் புக்ஸ் வழியாக வாங்க:

94459 01234

9445 97 97 97

www.nhm.in

 

வீரவாளும் வெற்றிவேலும்

சங்க காலம் / தேடல் – 19

640px-Puhar-ILango

தம் வீர வாளினைச் சுழற்றிய திசையெங்கும் வேந்தர்களுக்கு வெற்றிதான். அவர்களுக்கு உதவியாக இருந்த படைவீரர்கள் வேலேந்தினர். வாளும் வேலும்கொண்டு படையை நடத்தி, குடிகாத்து, நாட்டினை விரிவாக்கினர். முடியுடை மூவேந்தர் மரபினரின் வெற்றிகள் அனைத்தும் இவ்வகையில் பெறப்பட்டவையே. ஒரு விதத்தில் போர்களின் வழியாகத்தான் வேந்தர்களை நாம் அடையாளம் காணமுடிகின்றது.

மூவேந்தர்களின் மரபில் சங்ககாலச் சேரர்கள், சங்ககாலச் சோழர்கள், சங்ககாலப் பாண்டியர்கள் பற்றியும் அவர்களுக்கு நட்பாக அல்லது எதிரியாக இருந்த வேளிர்கள், சிற்றரசர்கள் பற்றியும் அறிந்துகொண்டால்தான் சங்க காலத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய தெளிவான ஒரு வரைபடம் நமக்குக் கிடைக்கும்.

போர்

மூன்று வேந்தர் மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை, குடை, முடி, கோல் என்பனவாகும். “வெண்கொற்றக்குடை“ என்பது, காவல் தொழிலையும் “மணிமுடி“ என்பது, அரசியல் தலைமையையும் “செங்கோல்“ என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தமக்கு நிலைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே போர் மேற்கொண்டனர். போர் இரண்டு நிலைகளில் நடைபெற்றது. ஒன்று தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள. மற்றொன்று தன் நாட்டை விரிவாக்கிக்கொள்ள.

அக்காலப் போர்க்களத்தில் வில், அம்பு, வாள், வேல், குந்தம், கோல், கைக்கோடரி, எஃகம், முசலம் போன்றவற்றை ஆயுதங்களாகவும் இரும்பாலான மெய்மறைகள், கடுவாத்தோலால் செய்யப்பட்ட சட்டை, கேடயம், உடலில் போர்த்தும் கவசம் ஆகியன தடுப்பாயுதங்களாகவும் பயன்படுத்தினர். போரைத் தொடங்கும் முன்பு கொம்பு, சங்கு, முரசு போன்றவற்றை முழக்கினர். முரசில் வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு என மூன்று வகைகள் இருந்தன. போரில் வீர முரசினை முழக்கினர். பகைவர் போரைத் தவிர்க்க விரும்பினால் அவரிடமிருந்து திறைப்பொருளினைப் பெற்றுக்கொண்டனர்.

எதிரிகளின் கோட்டை வாயில்களையும் சுற்றுச் சுவர்களையும் உடைக்க யானைப் படையினைப் பயன்படுத்தினர். வேந்தர்களுக்கு யானைகளே தாம் உலா வரும் வாகனமாகவும் போர்க்கள வாகனமாகவும் பயன்பட்டன. போர்க்களத்துக்குச் செல்லும் முன் படையானைகளுக்கு மதுவினை ஊட்டி வெறியேற்றியுள்ளனர். தேர்கள் மிகுதியாகப் பொதுவாழ்வில் பயன்படுத்தப்பட்டன. சிறுபான்மையாகப் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. தேர்ப்படையில் பலவகைத்தேர்கள் அணிவகுத்தன. தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித்தேர் என்பன அத்தேர்களுள் முதன்மையானவை. பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையே பயன்படுத்தினர். யானைகள் பூட்டப்பட்ட தேர்களும் இருந்துள்ளன. குதிரைப் (இவுளி) படைகள் பெரும்பாலும் போர்வீரர்களால் பயன்படுத்தப்பட்டன. வாளும் வேலும் ஏந்திய வீரர்கள் குதிரைமீது சென்று எதிரிகளைத் தாக்கினர். தமிழக வேந்தர்கள் இக் குதிரைப் படைகளால்தான் தமிழகத்தின் மீது படையெடுத்த வம்பமோரியர்களையும் மோரியர்களின் தடுத்தனர். நூறு எண்ணிக்கையிலான வேல் ஏந்திய காலாட்படை வீரர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, அணிவகுத்தனர். இப் படையினைத் தூசுப்படை என்றனர். போரில் இப்படையினரே முன்சென்றனர். கடல்வழியாக வரும் எதிரிகளைத் தாக்கக் கப்பற்படையினையும் வேந்தர்கள் வைத்திருந்தனர். இது அவர்களின் கடல் வாணிபத்திற்குப் பாதுகாப்பாக இருந்தது. சேரர்களின் கப்பற்படையும் யானைப் படையும் புகழ்பெற்றவை. ஈழத்தை இக் கப்பற்படையினால்தான் இரண்டாம் கரிகாற்சோழன் (பெருந்திருமாவளவன்) வெற்றிகொண்டார்.

ஒவ்வொரு வேந்தரும் நிலையான படைகளை வைத்திருந்தனர். போர்க்காலத்தில் கூடுதல் படைக்காக வாட்குடி மக்களைத் திரட்டிப் படையினைப் பெருக்கிக்கொண்டனர். அப்படையில் மறவர், எயினர், மழவர், மல்லர் போன்ற மறக்குடியினரே இருந்துள்ளனர். தனக்குக் கீழ் உள்ள சிற்றரசுகளின் படைகளை உரிமையோடு தம் படையுடன் இணைத்துக்கொண்டனர். படைவீர்ர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளித்தனர். இப் போர்ப் பயிற்சிப் பட்டறைக்கு “முரண் களரி“ என்று பெயர். போரற்ற காலங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும் படையினரின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. இதனை “வாளுடைவிழா“ என்றனர்.

போருக்குச் செல்லுதலை ஒரு விழாவாகவே கொண்டாடியுள்ளனர். இதற்காகப் பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. நன்னிமித்தம் பார்த்தல், நற்சொல்கேட்டல் (வரிச்சி), போர்வாளினை நீராட்டுதல், குடை மற்றும் முரசினைக்கொண்டு அணிவகுப்பினை நடத்துதல், வஞ்சின மொழி கூறுதல், கொற்றவை வழிபாடு (பலியிடுதலுடன்), மரபுக்குரிய மாலையணிதல், தங்கள் சின்னம் தாங்கிய கொடியினை ஏந்துதல், அடையாளப் பூவினைச் சூடுதல் போன்றன போருக்குச் செல்லும்முன் செய்யப்பெற்ற சடங்குகளாகும். வேந்தர் தன் வீரர்களுக்கு உணவளித்து மகிழ்விப்பார். இதனைப் “பெருஞ்சோற்றுநிலை“ என்பர்.

போர் நிகழும் இடத்துக்குச் சற்று தூரத்தில் வேந்தர் பாசறை அமைத்துத் தங்குவதும் உண்டு. இது கூதிர் பாசறை, வேனிற் பாசறை என இரண்டு வகைப்படும். இந்தப் பாசறை ஓர் ஊர் போலத்தோன்றும். ஆதலால், இதனைக் “கட்டூர்“ என்றனர். பாசறைப் பணியாளர்களுள் பெண்களும் இருந்தனர்.

போருக்குப் பின்னரும் சில சடங்குகள் செய்யப்பட்டன. போரில் வீரமரணம் அடைந்தவருக்கு நடுகல் எடுத்துள்ளனர். அந் நடுகல்லைச் சுற்றி வேல் நட்டி, அரண் அமைத்துக் கோவிலும் அமைக்கப்பட்டது. அங்கு நெல் உகுத்து, நீராட்டி, நாட்பலி ஊட்டி, விளக்கேற்றி வழிபட்டுள்ளனர். போரில் வெற்றிபெற்றால் வேந்தர் வீரர்களுடன் சேர்ந்து துணங்கைக் கூத்தாடுதலும் நடைபெற்றுள்ளது. வேந்தர் தம் வீரர்களுக்கு “உண்டாட்டு“ நடத்துவர். இதில் கள்ளும் உண்வும் மிகுதியா இருக்கும். பகைநாட்டில் கொள்ளையிட்ட பொருட்களின் சில பகுதியை வரிசையறிந்து வீரர்களுக்கு வழங்குவதும் உண்டு.

தாம் வெற்றிபெற்ற நாட்டில், கொள்ளையிட்ட பின்னர் தீயிட்டு அழித்தல் (மழபுல வஞ்சி, கொற்றவள்ளை ஆகிய துறைகள் இவை பற்றி விளக்கியுள்ளன), வயல்களைக் கழுதைபூட்டப்பட்ட ஏர்கொண்டு உழுதல், நீர் நிலைகளில் யானையை இறக்கிப் பாழாக்குதல், பெண்களின் கூந்தலை அறுத்தல், ஆண்களின் பற்களைப் பிடுங்குதல் போன்ற வன்முறைகளை மேற்கொண்டனர். தாம் போர்தொடுத்த நாட்டில், ஊரில் உள்ள காவல்மரத்தை அழித்தனர். ஏன் காவல் மரத்தை அழிக்கவேண்டும்? அதன் பின்னணியில், “ஒரு குலத்தின் கருவறுத்தல் சார்ந்ததொரு பெரிய நம்பிக்கை“ இருக்கின்றது.

ஓர் இனக்குழு, மூதாதையர் உறவு வைத்துக்கொள்ளும் உயிரினமே குலக்குறி. எருமை, புலி, சிங்கம், பாம்பு, கங்காரு, மீன், பல்வேறு வகை மரங்கள், செடி – கொடிகள், புறா, கோழி, மயில், முதலான பறவைகள் இனக்குழு வாழ்வில் குலக்குறியாகக் கொள்ளப்பெற்றன. இக்குலக்குறி அந்த இனத்தின் அடையாளச் சின்னமாக அமைந்தன.

புறப்பாடல்களில், மூவேந்தர்கள் பகைவர்களை வெற்றிகொள்ளும்போது அவர்களுடைய காவல் மரங்களையும் காவல் மரங்கள் இடம்பெற்றுள்ள காவற்காட்டினையும் கோடரியால் வெட்டி எரிக்கின்ற செயல் விரித்துக்கூறப்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதன் பகைவர்களின் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. புறநானூற்றின் 3, 23, 59 ஆகிய பாடல்கள் “காவல்மரம்“ பற்றி எடுத்துரைத்துள்ளன. காவல் மரங்கள் சூரிய ஒளிக்கதிர்கள் நுழைய முடியாதவாறு அடர்ந்த சோலைக்குள் (காவு) இருந்ததாகச் சுட்டியுள்ளன. சங்க காலத்தில் இனக்குழு மக்களால் காவல் மரங்கள் புனிதமானவையாகவும் வழிபாட்டிற்குரியனவாகவும் கருதப்பெற்றிருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் காவற்காட்டினைக் காவு, கடிமிளை என்று குறிப்பிட்டுள்ளன.

காவல் மரம் வழிபாட்டுக்குரிய புனிதப் பொருளாகக் கருதப்பட்டதால்தான் அதனை அவமதிக்கும் வகையில் வேந்தர் அதனை இழிவுபடுத்தும் நோக்கோடு அதில் தமது யானைகளைக் கட்டுதல், வெட்டுதல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். “ஓர் இனத்தினை அழிக்கும்போது அவ் இனத்தின் உயிர் ஆற்றலாகவும் வளமாகவும் இருக்கும் குலக்குறியினை அழித்துவிட்டால் அவ் இனம் முற்றாக அழிந்துவிடும்“ என்ற நம்பிக்கையில் இச்செயல்கள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன.

சிறந்த படைத்தலைவருக்கு வேந்தர், “ஏனாதிப் பட்டம்“ வழங்கினார். இப்பட்டம் அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கும் குடியிருப்புப் பகுதிக்கு “ஏனாதிப்பாடி“ என்ற பெயரும் இருந்துள்ளது.

சங்கச் சேரர்கள்

கொங்கணக் கடற்கரைக்குத் தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரையும் கெங்குநாடும் இணைந்த பகுதி சேரநாடாகும். மங்களுருக்கு அருகில் கடலோடு கலக்கும் சந்தகிரி ஆற்றுக்குத் தெற்கிலுள்ள மலைப்பாங்கான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சேரநாடு அமைந்திருந்தது. சேரர்கள் மலைநாட்டுக்காரர்கள். “சேரல்“ என்பது மலையைக் குறிக்கும். மலைவேடர்களுக்கு வில்லும் அம்பும் வேட்டை ஆயுதமாக இருந்ததால், அவற்றையே தங்களின் சின்னமாகக் கொண்டனர். கரூவூர், தொண்டி, நறவு, மாந்தை, வஞ்சி முதலானவை சேரநாட்டின் முதன்மையான பெரிய ஊருகளாகும். சேரநாடு “உம்பற்காடு“ என்றும் “வேழக்காடு“ என்றும் அழைக்கப்பட்டது. சேரர்களைச் சேரர், வானவர், வில்லவர், குடவர், குட்டுவர், பொறையர், மலையர் என்று அழைத்தனர்.

சேரரில் இரண்டு கிளைவழியினர் உண்டு. 1. உதியன் சேரலாதன் கிளைவழி, 2. இரும்பொறை கிளைவழி. உதியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பெருஞ்சேரலாதன், செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் உதியன் கிளைவழியில் தோன்றியவர்கள். அந்துவன் சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலியோர் இரும்பொறை கிளைவழியினர்.

சேர நாட்டின் தெற்கில் உதியன் சேரலாதன் மரபினரும் வடக்கில் இரும்பொறை மரபினரும் ஆதிக்கம் செலுத்தினர். இரும்பொறையினர் கரூரைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்தனர்.

சேரநாட்டை முதன்முதலில் வரிவாக்கம் செய்தவர் உதியன் சேரலாதன். இவர் குழுமூரில் இருந்துகொண்டு, சேரநாட்டைச் சிறுகச்சிறுக விரிவாக்கினார். இவ் ஊரில் உள்ள ஏழை, எளியவருக்கு இவர் தொடர்ந்து உணவளித்துள்ளார். ஆதலால், இவ் ஊர் “உதியன் அட்டில்“ என்று அழைக்கப்பட்டது. இவர், பாடலிபுத்திரத்தினை ஆண்ட இறுதி நந்த மன்னரின் காலத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில், இறந்தவர் நினைவாக இருப்போருக்கு உணவளிக்கும் வழக்கம் (பெரும்பிடி, பொருஞ்சோறு) தமிழகத்தில் மிகுதியாக இருந்துள்ளது. அதனைப் பின்பற்றி இவர் முன்னோர் வழிபாட்டுச் சடங்கினைப் பெரியளவில் நடத்தினார். முன்னோர் நினைவாகத் தம் படையினருக்குப் “பெருஞ்சோறு“ அளித்துள்ளார். ஆதலால், இவரைப் “முதியர்ப் பேணிய உதியன் சேரலாதன்“ என்று சிறப்பித்துள்ளனர். பாடலிபுத்திரத்தில் நந்த மன்னருக்கும் சந்திரகுப்தமோரியருக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, நந்த மன்னருக்கு உதவியாகப் படைநடத்திச் சென்றுள்ளார். வேணாட்டு வேளிர்கள் இவருக்கு வேண்டியவர்களாக இருந்ததால், காலம் கனிந்தபோது தம் நாட்டுக்குத் தெற்கே தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று, தென் கடற்கோடியைத் தம் நாட்டுக்கு எல்லையாக்கினார். இவர் இரண்டாம் நன்னனைப் போரில் வென்றார்.

உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி தம்பதியருக்குப் பிறந்தவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவர் வடஇந்தியாவரை படையெடுத்திச் சென்றுள்ளார். யவனர்களுடனும் கடற்கொள்ளையருடனும் போரிட்டு வென்றுள்ளார். இவர் கடம்பர்களை வென்று அவர்களின் காவல் மரத்தினை வெட்டித் தனக்கு முரசு செய்தார். இவர் காலத்தில் பாடலிபுத்திரத்திற்கும் தமிழகத்திற்கும் நட்புறவு நீடித்தது. அது இந்தியாவின் உள்நாட்டு (வட, தென் இந்திய) வாணிபத்திற்கு உதவியது. இவரைக் “குடக்கோ நெடுஞ்சேரலாதன்“, “குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்“, “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்“ என்றெல்லாம் அழைத்துள்ளனர். 58ஆண்டுகள் ஆட்சிசெய்த இவர், போர்வை என்ற இடத்தை ஆண்ட சோழவேந்தர் “பெருவிறற்கிள்ளி“ என்று அழைக்கப்பட்ட வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியுடன் போஓர் என்னுமிடத்தில் போரிட்டு மாண்டார்.

இவருக்குப் பின்னர் இவரது தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆண்டார். இவர், மலை நாட்டுப் பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட “உம்பற்காடு“ எனும் பகுதியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார். இவர் காலத்தில் “கொற்றவை“ வழிபாடு சிறப்புற்று இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவர், “தான் சேர நாட்டிற்குரிய அனைத்துப் பகுதிகளையும் ஆளும் வரை மணிமுடி அணியாமல், களங்காயால் செய்த கண்ணியும் நாரால் செய்த முடியும் அணிந்துதான் அரசாட்சி புரிவேன்“ என்று கூறி, அவ்வாறே அரச பதவியினை ஏற்றமையால் இவருக்கு இப்பெயர் வந்தது. இவர் நேரிமலையில் இருந்து சேர நாட்டினைச் சீர்ப்படுத்தினார். இவர் சேர நாட்டையொட்டி மேலைக் கடற்கரையில் வியலூரை ஆண்ட மூன்றாம் நன்னன்வேண்மானை வாகைப் பெருந்துறையில் எதிர்கொண்டு அழித்தார். அவ்வெற்றியின் வழியாகச் சேரநாடு இழந்திருந்த பகுதிகளைத் திரும்பப் பெற்றார்.பூழிநாட்டின் மீது படையெடுத்து அதனையும் சேரநாட்டுடன் இணைத்தார். சேர நாட்டுப் பெருவழிகளில் இருந்த கள்வர் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தினார். பசும்பூண் பாண்டியருக்கும் தனக்கும் பகையாக இருந்த நெடுமிடல் என்ற மன்னரை அழித்ததோடு, அம் மன்னனின் வளமான நாட்டினையும் அழித்தார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை தம்பதியருக்குப் பிறந்த வெல்கெழுகுட்டுவன் ஆட்சிக்கு வந்தார். இவரைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “செங்குட்டுவன்“ என்று வரலாற்றாசிரியர்கள் பலர் தவறாகக் கணித்துள்ளனர். இவர் கடற்கொள்ளையரை முற்றாக அழித்தார். ஆதலால், இவருக்குக் “கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன்,“ “கடற்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவன்“ போன்ற சிறப்புப் பெயர்கள் வழங்கலாயிற்று. இவர் காலத்தில் மோகூரைப் பழையன் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மீது வெல்கெழுகுட்டுவனின் நண்பர் அருகை என்பவர் பகைகொண்டார். பழையன், அருகையைப் போரில் வென்று, அவரைப் புறமுதுகிடச்செய்தார். அருகை தலைமறைவானார். இதனை அறிந்த வெல்கொழுகுட்டுவன் பழையன் மீது போர்தொடுத்தார். “மோகூர்“ என்ற பெயரில் பல ஊர்கள் இருந்துள்ளன. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சிக்கு அருகில், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்கு அடுத்து, பொதியமலைக்கு அருகில் என இருந்த இ்ம் மூன்று மோகூர்கள் அல்லாத ஒரு மோகூரை ஆண்ட பழையனை அழித்து, அந்த மோகூரை வெல்கெழுகுட்டுவன் கைப்பற்றினார். பழையனின் காவல் மரமான வேம்பினை வெட்டிப் பழையனின் மனைவியரின் கூந்தல்களை அறுத்து, அவற்றைக் கொண்டு கயிறுதிரித்து, அக்கயிற்றின் (மயிர்க்கயிறு) ஒரு முனையினை வீழ்த்தப்பட்ட வேம்புமரத்தினைப் பிணைத்து, மறுமுனையினை யானைக் காலில் கட்டி, யானையால் அம் மரத்தினை இழுக்கச்செய்தார். அந்த அதன் நினைவாக அப்பகுதியில் இருந்த ஒரு ஊருக்கு “குட்டுவனஞ்சூர்“ என்ற பெயரிடப்பட்டது. இது “குட்டுவன் அஞ்சிய ஊர்“ அல்ல. இதனைக் “குட்டுவனைக் கண்டு அஞ்சிய ஊர்“ என்று பொருள் கொள்ளவும். இவர் வியலூர், கொடுகூர், நேரிவாயில் போர்களில் வெற்றிபெற்றார்.

இவரது மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது இயற்பெயர் “அத்தி“. இவர் இளமையில் ஆடற்கலையில் சிறந்து விளங்கி “ஆட்டனத்தி“ என்ற பெயரினைப் பெற்றவர். இவர் இயல், இசை, நாடகம், ஆடல், பாடல் ஆகிய கலைகளைக் கற்றும் கற்பித்தும் வந்தார். இவர் முதற்கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியை மணந்தார். கழாஅர் முன்துறையில் காவிரி நீரில் இவர் நடனமாடும்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை மருதி என்பவள் காப்பாற்றி அவரை மணந்துகொண்டாள். தன் கணவரைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் மருதி இவரை ஒப்படைத்துவிட்டு, கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாள். இவரது நாட்டின் வடஎல்லையில் வாழ்ந்திருந்த ஓரினத்தவர் இவரது நாட்டிற்குள் புகுந்து ஆட்டு மந்தையினைக் கவர்ந்து சென்றனர். இவர் தாமே சென்று அவ் ஆட்டுமந்தையினை மீட்டுவந்தமையால் இவருக்கு, “ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவருக்குப் பின்னர் அந்துவன் சேரல் முதலான சிலர் ஆட்சிக்கு வந்தனர். அப்போது சோழநாட்டினை முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி ஆண்டுவந்தார். இச்சேரர்களின் காலத்தில் பூழிநாடும் கொங்குநாடும் சேரநாட்டுடன் இணைக்கப்பெற்றன.

இவர்களைத் தொடர்ந்து செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் காலூன்றியது. இவ் வேந்தரும் மற்ற சீறூர் மன்னர்களும் வணிகர்களும் பௌத்த துறவிகள் தங்குவதற்காகக் குகைகளைச் செப்பம்செய்து வழங்கினர். புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடும் “கோ ஆதன் செல்லிரும் பொறை“ இவராகவும் இருக்கக்கூடும்.

இவரது மகன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார். இவர் “அஞ்சி“ என்ற மன்னரை எதிர்த்துத் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டார். யார் இந்த அஞ்சி? வரலாற்றில் இரண்டு அஞ்சிகள் உள்ளனர். ஒருவர் அதியமான் நெடுமான் அஞ்சி. மற்றொருவர் இவரின் முன்னோரான அஞ்சி. இருவரையுமே “அஞ்சி“ என்றே குறிப்பிட்டுள்ளனர். தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு குதிரைமலை (குதிரை மூக்கு மலை) உள்ளிட்ட நாட்டினை ஆட்சிபுரிந்தவர் அதிய மரபினரான அதியமான் நெடுமான் அஞ்சி. “எழினி“ என்பது, இவருக்குரிய குடிப்பெயராகும். இவரைக் “கொங்குநாட்டு மழவர்“ என்றும் குறிப்பிடுகின்றனர். அஞ்சி தன்னைப் பகைத்த ஏழு அரசர்களையும் எதிர்த்தவர். அஞ்சி மலையமான் திருமுடிக்காரியின் மீது படையெடுத்துச் சென்று அவருடைய திருக்கோவலூரை அழித்தார். திருமுடிக்காரி தம்பியோடிச் சென்று சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் கொல்லிமலை ஓரியும் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் பகையில் இருந்தார். காரியின் துணையுடன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின்மீது படையெடுத்தார். இதனை அறிந்த பாண்டியரும் சோழரும் அதியமானுக்குத் துணையாகப் படைகொண்டுவந்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை பகைவர் அனைவரையும் துணிந்து தாக்கித் தோல்வியடையச் செய்தார். அதியமானைக் கொன்று, களவேள்வி செய்தார். இவரின் தகடூர் வெற்றியைத் “தகடூர் யாத்திரை“ என்ற நூல் விரித்துரைத்துள்ளது. “முன்னொரு காலத்தில் 14 வேளிர்கள் ஒன்றுகூடிக் காமூரை எறித்தார்கள்“ என்று புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய காமூர் நாட்டை ஆண்டவர் கழுவுள். இவர் ஆயர்குலத் தலைவர். இவர் மூவேந்தருக்கும் அடங்காமல் இருந்தார். இவரைப் பெருஞ்சேரல் இரும்பொறைத் தாக்கி, காமூரை எறித்து, கழுவுள் கோட்டையினைக் கைப்பற்றினார். சேரநாட்டின் எல்லைக்கு வெளியிலிருந்த பூழி, கொல்லிக்கூற்றம் ஆகிய பகுதிகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார். இவரது காலத்தில் பாண்டிய நாட்டில் அறிவுடை நம்பியும் சோழ நாட்டில் கோப்பெருஞ்சோழனும் ஆட்சியிலிருந்தனர். அவ் இருவருக்கும் இணையான பெருவேந்தராக இவர் விளங்கினார்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இளஞ்சேரல் இரும்பொறை. இவரது காலத்தில் சோழரும் பாண்டியரும் சேரநாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை இவர் வென்றார். விச்சி மலையினையும் அதனைச் சூழ்ந்திருந்த காட்டையும் குறுநிலங்களையும் ஐந்து பெருங்கோட்டைகளையும் கைப்பற்றினார்.

இவருக்குப் பின்னர் ஆண்ட யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் தலைநகர் தொண்டியாகும். இவரது இயற்பெயர் “வேழநோக்கின் விறல்வெஞ் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை“ என்பதாகும். இவரது கண் யானையின் கண்போன்று இருந்தமையால் இவ் அடைமொழியைப் பெற்றார். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தலையாலங்கானப் போரில் தோல்வியடைந்து கைதியானார். பின்னர் இவருக்கும் சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, சோழருக்குத் துணையாக வந்த முள்ளூர் மலைப்பகுதியினை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியிடம் (இவர் மூவேந்தரில் யார் படையுதவிகோரினாலும் உதவுவார்.) சேரர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோல்வியுற்றார்.

இவருக்குப் பின்னர், குட்டுவன்கோதை ஆண்டார்.“வானவன்“ என்று அழைப்பர். வானவன் சேரமான் குட்டுவன் கோதையின் படைத்தலைவர் பிட்டன். இவரைப் பிட்டங்கொற்றன் என்றனர். அதியர் குடியைச் சேர்ந்த அஞ்சிக்கும் எழினிக்கும் உரிமையாக இருந்த குதிரைமலைப் பகுதியைச் சேரர் கைப்பற்றித் தன் படைத்தலைவராகிய பிட்டங்கொற்றனுக்கு வழங்கினார். அதன்பின்னர் பிட்டங்கோற்றன் குதிரைமலைப் பகுதியினை ஆண்டுவந்தார். இவர் கொங்கு நாட்டிலுள்ள குறும்பொறைக்குக் கிழக்கேயுள்ள ஆமூரை ஆண்டக் கொடுமுடியைத் தாக்கினார். கொடுமுடி வென்றார். சோழநாட்டிலும் ஆமூர் உள்ளதால், இந்தக் கொடுமுடியைச் சோழரின் படைத்தலைவர் என்று கருதலாம்.

வானவன் சேரமான் குட்டுவன் கோதைக்குப் பின்னர் திருக்குட்டுவன், இளம்கடுங்கோ ஆகியோர் ஆண்டனர்.

அதன் பின்னர் கோக்கோதை மார்பன் மாரிவெண்கோ ஆட்சிக்கு வந்தார். மாந்தரஞ்சேரல் இறந்தவுடன் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சிமாநகரை முற்றுகையிட்டார். கோக்கோதை மார்பன் கோட்டைக்குள் ஒளிந்திருந்தார். “ஒளிந்திருக்கும் வேந்தரைத் தாக்குவது உமது சிறப்பிற்கு அழகல்ல“ என்று புலவர் ஆலத்தூர் கிழாரும் புலவர் மாறோக்கத்து நப்பசலையாரும் கூறியதைப் புறக்கணித்துவிட்ட கிள்ளிவளவன், வஞ்சிமாநகரின் அகழியையும் நீர்நிலைகளையும் மதிலையும் ஊர்களையும் அழித்தார். தொண்டியைத் தலைநகராகக்கொண்டு சேரநாட்டினை ஆண்டதாக மற்றொரு கோக்காதை மார்பனும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர், கிள்ளிவளவன் மதுரைப் பாண்டியரைத் தாக்கமுயற்சித்தபோது, அவரைத் தடுத்துப் போரிட்ட, பழையன்மாறன் என்பவரிடம் தோல்வியுற்றதனை அறிந்து, மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சேரப் பேரரசு தொய்வடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டபோது சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவர் ஞாயிற்றுச் சோழனுடைய மகள் நற்சோணையை மணந்தார். இத்தம்பதியருக்குப் பிறந்தவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவன்தான் சேரர் குலம் மீண்டும் உயர்வடையக் காரணமாக இருந்தார். இவரது மனைவி இளங்கோவேண்மாள். இவரது காலத்தில் இலங்கையை முதலாம் கயவாகு ஆண்டுவந்தார். “கயவாகு பொ.யு.171 முதல் பொ.யு. 193 வரை ஆண்டார்“ என்று இலங்கை வரலாற்று நூலான மாகவம்சத்தைப் புதுப்பித்த கெய்சர் குறிப்பிட்டுள்ளார். சாதவாஹனர் ஸ்ரீ சதகர்ணியும் இவரது காலத்தவரே. கொடுங்கூரை ஆண்ட கொங்கரை எதிர்த்துச் செங்களத்தில் செய்தபோரிலும் வட ஆரியரோடு புரிந்த வண்டமிழ்ப் போரிலும் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற போரிலும் இமயத்தை நோக்கிய படையெடுப்பிலும் வெற்றிபெற்றார். இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி, கண்ணகிக்குச் சிலைசெய்து, கோயில் அமைத்துப் பத்தினித் தெய்வ வழிபாட்டினை நடத்தினார். அவ் விழாவில் இலங்கை வேந்தர் கயவாகுவும் கலந்துகொண்டார். இது தொடர்பான செய்திகளைச் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகின்றது.

சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தர் கணைக்கால் இரும்பொறை ஆவார். இவர் சோழ வேந்தர் வெங்கணானிடம் தோல்வியுற்றார்.

சங்கச் சோழர்கள்

காடுகளை அழித்துக் கழனிகளாக்கிய (கழனி – விளைநிலம்) பெருமையுடையோர் சோழர்கள். இவர்கள் நாட்டைச் “சோழநாடு“ அல்லது “சோணாடு“ என்று அழைத்தனர். வடக்கில் நெல்லூரிலிருந்து தெற்கில் புதுக்கோட்டை வரையுள்ள பகுதி சோழநாடு. காடுகளில் வாழ்ந்த புள்ளிப்புலிகளின் நினைவாக இவர்கள் தமது கொடியில் புலிச்சின்னத்தைப் பொறித்தனர். சோழர்களைச் சென்னி, செம்பியன், வளவன், கிள்ளி என அழைத்துள்ளனர். புகார், உறையூர், அழுந்தூர், ஆவூர், குடமூக்கு போன்றன சோழநாட்டின் முதன்மையான நகரங்களாகும். வளம்மிகுந்த நன்செய் நிலங்களை உடைய இப்பகுதியில் நெல்விளைச்சல் மிகுதி. முதற்சோழன் வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. இவர் இங்கு ஆட்சிசெய்தபோது வட இந்தியாவில் நந்தர்கள் ஆண்டனர். சேரநாட்டினை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆண்டார். சேரரும் சோழரும் பகைகொண்டு, போர்க்களத்தில் கடும்போர் புரிந்து, அக்களத்திலேயே இருவரும் மாண்டனர்.

இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி. வரலாற்றில் “இளஞ்சேட்சென்னி“ என்ற பெயரில் நால்வர் உள்ளனர். உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, வம்ப வடுகரை ஓட்டிப் பாழியை அழித்த இளம்பெருஞ்சேட்சென்னி. இவர்கள் நால்வரும் ஒருவரே என்ற கருத்தும் உள்ளது.

இவரது காலத்தில் சேரநாட்டினை வெல்கெழு குட்டுவனும் பாண்டிய நாட்டினைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் ஆண்டுவந்தனர். மோரியர் மற்றும் கோசர்கள் இணைந்து கூட்டுப்படை நடத்திவந்து எதிர்த்தபோது, அப் படைகளைச் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி எழில்மலை பாழிகோட்டையில் எதிர்கொண்டார். வெற்றிபெற்றார். இவரது படையில் தேர்ப்படைக்கு முதன்மைத்தன்மை தரப்பட்டுள்ளது. இவர் வம்பவடுகரை வென்றார். இவர் வேளிர் குலத்துடன் மணவுறவு கொண்டவர். இவரின் மனைவி கருவுற்றிருந்த போது, இவர் ஒரு போர்க்களத்தில் மாண்டார். குழந்தை பிறந்தது. அக் குழந்தைதான் முதலாம் கரிகாற்சோழன் (கரிகால் வளவன்). இவரை இவரது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) வளர்த்தார். கரிகால் வளவனை அழிக்கப் பெரும் எரியூட்டும் சதி நடந்தது. அதிலிருந்து தப்பும்போது இவரது கால் தீயால் கருகிப் புண்ணாகியது. அதனால் “கரிகாற்சோழன்“ என்று குறிப்பிடப்பட்டார். அதன் பின்னர் பல எதிர்ப்புகளையும் தாண்டி, தன் தாய்மாமன் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் கரிகாற்சோழன் தன் இளம்வயதிலேயே ஒரு பெரும்போரினை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சிறுவன்தானே எளிதில் வென்றுவிடலாம் என்ற தவறான கணிப்புடன், சேரரும் பாண்டியரும் வேளிர் ஒன்பதுபேர்களுடன் கூடிப் பெரும்படைநடத்தி, நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள “வெண்ணி“ என்ற ஊரின் வாசலில் (கோவில்வெண்ணி), முதலாம் கரிகாற்சோழனை எதிர்த்தபோது, துணிவுடன் போராடி அனைவரையும் அழித்தார். இவர் சேரன் பெருஞ்சேரலாதன் மீது எறிந்த வேல், பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து, முதுகின் வழியாக வெளிப்பட்டது. முதுகில் புண் ஏற்பட்டதால், அவமானமடைந்த பெருஞ்சேரலாதன் போர்க்களத்தில் வடக்கு திசைநோக்கி அமர்ந்து, உண்ணா நோம்பிருந்து (உண்ணாவிரதம்) இருந்து உயிர்நீத்தார். அப்போர் நடந்த ஊர் “வெண்ணிவாயில்“ என்றும் அவ் ஊரின் வெளிப்புறங்கள் போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டதால் “வெண்ணிப் பறந்தலை“ என்றும் இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் கோசர்கள் ஆண்டுவந்தனர். முதலாம் கரிகாற்சோழன் முதலில் உறையூரையும் பின்னர் புகாரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தார். இவர் தன் மகள் ஆதிமந்தியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று அறியப்பட்ட அத்திக்கு (ஆட்டனத்தி) மணம்செய்து கொடுத்தார். இவர் ஆட்டனத்தி கழாஅர் முன்துறையில் (கழுதகாரன் துறை) நடனம் செய்ததனைக் கண்டுகளித்துள்ளார். வலிமையான கடற்படையை நிறுவி, இலங்கைமீது படையெடுத்து வென்றார். ஊளியர், அருளாளர், வடவர், வேளிர் குலத் தலைவர் இருக்கோவேள் ஆகியோரையும் வென்றார். கழாஅர் முன்துறையை ஆண்டவர் “மத்தி“. இவர் பரதவர் குலச் சிற்றரசர். இவர் கரிகாற்சோழருக்குக் கீழ்ப் பணிந்திருந்தார். ஒருமுறை யானை பிடிக்கக் கடமைப்பட்டிருந்த எழினி என்பவர் வராததால், கரிகாற்சோழர் சினம்கொண்டார். அவரது ஏவலின்பேரில் மத்தி, எழினியைத் தேடிச்சென்றார். நெடுந்தொலைவில் இருந்த எழினியைக் கண்டுபிடித்து அவரின் பல்லினைப் பிடுங்கி, அதனை வெண்மணி வாயில் கோட்டைக் கதவில் பதித்தார். தன் பெயர் எழுதிய கல்லை அவ் ஊரின் நீர்த்துறையில் அமைத்தார்.

கரிகாற்சோழருக்குப் பின்னர் தித்தன் ஆட்சிக்கு வந்தார். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்ற வேளிரின் மகன் தித்தன். இவர் சோழரின் மகளை மணந்து சோழரானார். இவரது முழுமையான பெயர் “வீரை வேண்மான் வெளியன் தித்தன்“ என்பதாகும். ஆர்க்காட்டுத் தலைவர் ஆட்சியில் இருந்த உறையூரை வென்று அங்குச் சோழ அரசினை நிறுவினார். உறையூரைச் சுற்றிலும் காவற்காட்டினை அமைத்து உறையூரைப் பாதுகாப்பான நகராக மாற்றினார். இவருக்குக் கோப்பெருநற்கிள்ளி, வெளியன் என்ற மகன்களும் ஐயை என்ற மகளும் இருந்தனர். வெளியனின் பெயர் “தித்தன் வெளியன்“ என்பதாகும். பொருநன் என்பவர் உறையூரைத் தாக்கியபோது, தித்தனுக்கு உதவியாகப் போர்வையை (போஓர்) ஆண்ட பொருநற்கிள்ளி என்பவர் உதவ விரும்பினார். ஆனால், தித்தன் அவர் உதவியைப் பெறாமலே, பொருநனை எதிர்கொண்டார். தித்தன் கொடைத்தன்மை மிகுந்தவராகவும் இருந்துள்ளார். இவரது காலத்தில் “பெருந்துறை“ சோழர்களின் முதன்மையான துறைமுகமாக இருந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் இங்குப் பெருகியிருந்தது. தித்தன் வெளியனின் படைத்தளபதியாகப் “பிண்டன்“ என்பவர் இருந்தார். இவர், தித்தன் வெளியனின் கட்டளைப்படி முதலாம் நன்னனின் தலைநகரான பாழியைத் தாக்கியபோது, நன்னனால் தேற்கடிக்கப்பட்டார்.

தித்தனின் மகன் கோப்பெருநற்கிள்ளி. இவர் ஆட்சிக்கு வரும்முன்னரே ஆமூர் மல்லனை வென்றார். இவர் போர்வை (போர்அவை, போஓர்) கோப்பெருநற்கிள்ளி என்று அறியப்பட்டார். ஆட்சிக்கு வந்தபின்னர் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியானார். “இராஜசூயம் யாகம்“ செய்ததால் இவரை “இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி“ என்று அழைத்தனர். இவரது காலத்தில் கரூரைத் தலைநகராகக்கொண்டு மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். பாண்டிய நாட்டினைக் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆண்டுவந்தார். இவர் உறையூர்ப் பகுதியை ஆட்சிசெய்த போது அழுந்தூர்ப் பகுதியைப் பெரும்பூண் சென்னி ஆண்டதாகக் கூறுகின்றனர். இவரே கழுமலத்தில் வெற்றிவாகை சூடியதாகக் கூறப்படுகின்றது.

இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைத் தொடர்ந்து கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் ஆண்டனர்.

இரண்டு சோழ வேந்தர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போட்டி நிலவியுள்ளது. நலங்கிள்ளிக்கு அஞ்சி உறையூர், ஆவூர் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகளில் மாறிமாறி நெடுங்கிள்ளி ஒழிந்துகொண்டார். பின்னர், காரியாறு என்ற இடத்தில் அவர் கொல்லப்பட்டார்.

நலங்கிள்ளிக்குப் பின்னர் அவரின் மகன் கிள்ளிவளவன் ஆட்சிக்கு வந்தார். இவரின் தந்தைப் பெயரின் பின் பின்னொட்டான “கிள்ளி“ (நலங்கிள்ளி) என்பதனையும் அவரின் தந்தைப் பெயரின் பின்னொட்டான “வளவன்“ (கரிகால்வளவன்) என்பதனையும் இணைத்து இவருக்குக் “கிள்ளிவளவன்“ என்று பெயரிட்டுள்ளனர். இவர் பாண்டியன் பழையன் மாறனை வென்று கூடல்நகரினைக் கைப்பற்றினார். இவர் வடதிசையில் இருந்த கோசரையும் அழித்துள்ளார். பாண்டிய நெடுஞ்செழியன் மதுரையிலும் சோழன் கிள்ளி வளவன் உறையூரிலும் ஆட்சியிலிருந்தபோது தொண்டையர் கடல்வழியாக்க் கூடூருக்குள் நுழைந்து வேங்கடலைப் பகுதியில் ஊடுருவினர். அவ்வாறு வந்த தொண்டையர் மரபில் மூத்தவர் திரையன். இவர் காஞ்சிபுரத்தினைத் தலைநகராகக்கொண்டு ஆண்டார். இவர் கடலரசர் குடியைச் சேர்ந்தவர். இரண்டாம் கரிகாற்சோழன் சிறுவனாக இருந்தபோது, இத்திரையன் சோழப்பேரரசினைக் கைப்பற்றியுள்ளார். இவரைப் பல்வேல் திரையன், தொண்டைமான் இளந்திரையன் என்றும் போற்றியுள்ளனர். கிள்ளிவளவனால் பாடப்பெற்ற புகழையுடைய சிற்றரசன் “பண்ணன்“. இவர் அருமனையை அடுத்துள்ள சிறுகுடியை ஆண்டவர். இவர் வயதில் முதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியநெடுஞ்செழியன் காலத்தில் இருந்து வாழ்ந்துவருபவர். இவர் காலத்தில் செம்பியனும் சேரனும் மற்ற ஐவரும் தலையாலங்கானத்தில் கொல்லப்பட்டனர். இவரது உதவியால் சோழநாடு நெடுஞ்செழியனின் மேலாண்மைக்கு வந்த்து. இவர் பாண்டியரோடும் நல்லுறவு கொண்டிருந்தார். இவர் துறவி இயக்கனுக்குப் பாழி (சமணர் படுக்கை) அமைத்துக்கொடுத்துள்ளார். இவர் “செழியன் பெருங்குளம்“ என்ற பெயரில் ஒரு குளத்தை வெட்டியுள்ளார். இவரின் முதுமையைப் போக்கக் கிள்ளிவளவன் தன் இளமையைத் தர விரும்பினார்.

சோழன் கிள்ளி வளவனுக்குப் பின்னால் பெருந்திருமாவளவன் (இரண்டாம் கரிகாற்சோழன்) ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன் இவர் சிறைப்பட்டிருந்தார் என்று குறிப்புகள் உள்ளன. இவர் காவிரிக்குக் கரை எழுப்பினார். இவர் வெட்டிய வாய்க்கால்களுள் ஒன்று “பெருவளவாய்க்கால்“ ஆகும். இவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வடக்கில் திரையர்கள் வலிமையுடன் இருந்துள்ளனர். காஞ்சியைத் தொண்டைமான்களின் மரபினர் ஆண்டனர். இரண்டாம் கரிகாற்சோழன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்த வீரர்களை அடிமைகளாக்கிச் சோழநாட்டின் நிர்மாணப் பணிகளுக்குப் பயன்படுத்தினார்.

இவருக்குப் பின்னர் செங்கணான், நல்லுருத்திரன் போன்றார் ஆட்சிக்கு வந்தனர். செங்கணான் சிவாலயங்கள் பலவற்றை ஏற்படுத்தினார். இவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவனின் சமகாலத்தவர். செங்கணானைப் ‘பெரும்பூட்சென்னி’ என்றும் அழைத்துள்ளனர்.இவரது கழுமலப்போர் குறிப்பிடத்தக்கது. சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தரான கணைக்கால் இரும்பொறையை இவர் கைதுசெய்தார்.

சங்கப் பாண்டியர்கள்

வடக்கில் வெள்ளாறிலிருந்து தெற்கில் கன்னியாகுமரி வரையிலும் கிழக்கில் சோழமண்டலக் கரையிலிருந்து மேற்கில் கேரளாவிற்குச் செல்லும் அச்சன் கோயில் கணவாய் வரையிலும் உள்ள பகுதி பாண்டியநாடு. பாண்டியர்களின் கொடியிலுள்ள சின்னம் மீன். பாண்டியர்களை மீனவர், கவுரியர், பஞ்சவர், தென்னர், செழியர், மாறர், வழுதி, தென்னவர் என்றெல்லாம் அழைத்துள்ளனர். பாண்டியர் மரபில் பழைமையானவராகக் கருதப்படுபவர் முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன். அவருக்குப் பின்னர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் நிலந்தரு திருவிற் பாண்டியன்.

பாண்டியருக்கு முன்னர் மதுரையை (கூடல்) ஆண்டவர் அகுதை. இவர் ஆண்ட கூடல் நகரினை “அகுதைகூடல்“ என்று புலவர் கபிலர் குறிப்பட்டுள்ளார். இவர் வெளியன் வேண்மான் ஆஅய் எயினனுடன் நட்புடன் இருந்தார். ஆஅய் எயினன் புன்னாட்டினை ஆண்டவருடன் நட்புடன் இருந்தார். புன்னாட்டின் மீது பாழிநாட்டை (இது சேரநாட்டின் வடகோடியில் உள்ள எழிற்குன்றத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதி) ஆண்ட முதலாம் நன்னன் தொடர்ந்து போர்தொடுத்து அம்மக்களை வாட்டினான். இந்த அறமற்ற செயலைக்கண்டு வருந்திய ஆஅய் எயினன், நன்னனின் பாழி நாட்டின் மீது போர்தொடுத்தார். அப்போரில் நன்னனின் படைத்தலைவர் மிஞிலி, ஆஅய் எயினனுடன் மோதினார். இப்போரில் ஆஅய் எயினன் மாண்டார். போர்க்களத்தில் இருந்த ஆஅய் எயினனின் உடலை அப்புறப்படுத்த விரும்பாத நன்னன் அதனைப் பறவைகள் உண்ணட்டும் என்று இருந்துவிட்டார். இக்கெடுமையைக் கண்டு கொத்தித ஆஅய் எயினனின் நண்பர் அகுதை பாழிநாட்டின் மீது படையெடுத்தார். ஆஅய் எயினனின் உறவினரின் துன்பத்தை அகுதை நீக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. ஆஅய் எயினன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரரின் படைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் படைத்தலைவரைக் கொன்ற நன்னன்மீது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் படையெடுத்துச்சென்றுப் பெருந்துறைப்போரில் நன்னனை அழித்தார் என்பது தனிவரலாறு.

வலிமை மிக்க அகுதையைப் பூதப்பாண்டியனின் மகனான நெடியோன் விரட்டியடித்துவிட்டு, கூடலில் பாண்டியப் பேரரசிற்குக் கடைக்காலிட்டார். தப்பியோடிய அகுதைக்குக் கோசர் அடைக்கலம் தந்தார். நிலம் தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியர்தான் பாண்டிய நாட்டினை விரிவாக்கம் செய்தார். ஆதலால், இவரைப் “பன்னாடு தந்த பாண்டியன்“ என்று சிறப்பிக்கின்றனர்.

இவரை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர்வழுதி ஆவார். இவரைப் புகழந்து இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) பாடியுள்ளார். இவர் முதற்கரிகாற்சோழனின் தாய்மாமன் ஆவார். இவரது காலத்தில் சேரநாட்டினைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சோழநாட்டினை உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னியும் ஆண்டுவந்தனர்.

இவரை அடுத்து உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆண்டுள்ளார். இவரது காலத்தில் சேரநாட்டினை மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினை முடித் தலைக்கோ பெரு நற்கிள்ளியும் ஆண்டனர். இவர் வேங்கை மார்பன் என்ற அரசரின் பெரிய கோட்டையினைக் கைப்பற்றியதால் “கானப்பேரெயில்கடந்த“ என்ற அடைமொழியினைப் பெற்றுக் “கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி“யானார்.

இவரைத் தொடர்ந்து அறிவுடைநம்பி என்ற பாண்டியர் ஆண்டார். இவர்காலத்தில் சேரநாட்டினைக் கருவூர் ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினைக் கோப்பெருஞ்சோழனும் ஆண்டனர்.

இவருக்குப் பின்னர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆட்சிக்கு வந்தார். “ஒல்லையூர்“ என்பது, புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்து வட்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதனை மீட்டுத் தன்வசப்படுத்தியதால் இவருக்கு “ஒல்லையூர் தந்த“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவரை அடுத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சியினை ஏற்றார். இவரது காலத்தில் சேரநாட்டினை யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். அவ் வேந்தரைத் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் இருக்கும் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற இடத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். அவரைக் கைதுசெய்து தன் சிறையில் அடைத்தார். அச் சிறையிலிருந்து யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் தப்பிச் சென்றார். இவரை எதிர்த்துச் சோழரும் சேரரும் பெரும்படையோடு “கூடற்பறந்தலை“ என்ற இடத்தில் இவருடன் மோதினர். இவர் அவ் இருவரின் படையோடும் கடுமையாகமோதினார். அவர்கள் தமது வெற்றிமுரசினைப் போர்களத்தில் விட்டுவிட்டுப் புறமுதுகிட்டனர். அவர்களைத் துரத்திச் சென்றபோது அவர்கள் தலையாலங்கானம் என்ற இடத்தில் இவரை எதிர்த்து எழுவர் (சேரர், சோழர், திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன்) ஒன்றாகப் படைதிரண்டனர். அவர்கள் அனைவரையும் நெடுஞ்செழியன் ஒருபகற்பொழுதிலேயே வீழ்த்தி வெற்றிபெற்றார். இவர் பாண்டிய நாட்டினை நல்லூர் வரை விரிவுபடுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்புக்கோயில் என்று அழைக்கப்படும் அழும்பில் என்ற இடத்தை ஆண்டுவந்த விறல்வேள் என்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்துத் தன் நாட்டினை இழந்தார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியருக்குப் பின்னர் அழும்பில் சோழர் கைக்குச் சென்றது. பின்னாட்களில் விறல்வேள் மரபினர் தம்மை “அழும்பில்வேள்“ என்ற பெயரில் அழைத்துக்கொண்டு அழும்பிலை ஆளத்தொடங்கினர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை “வென்வேற்செழியன்“ என்றும் “நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவரின் படைத்தளபதி அதிகன் என்பார் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் கொங்கரை எதிர்கொண்டார். கொங்கர் பாண்டியரின் யானைப் படையினை அழித்தார். செய்தியறிந்த நெடுஞ்செழியன் வாகைப் பறந்தலைக்கு விரைந்தார். கொங்கரை அழித்து, கொங்கருக்குரிய நாடுகள் பலவற்றைக் கைப்பற்றினார். இவரைத் “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்“ என்றும் “பாண்டிய நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது படைத்தலைவன் “கடலன் வழுதி“. இவர் “விளங்கில்“ என்ற ஊரில் ஆட்சிசெய்தவர். துறவி இயக்கனுக்கு மலைக்குகையில் படுக்கை (சமணப் பாழி) வெட்டிக்கொடுத்தவருள் இவரும் ஒருவர். இவர் கணிய நந்தி என்பவருக்கும் பாழி அமைத்துக்கொடுத்துள்ளார். இதனை மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியங்களில் “நெடுஞ்செழியன்“ என்ற பெயரில் இரண்டு பாண்டிய அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மற்றொருவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். “செழியன்“ என்ற பெயர் சங்க இலக்கியத்தில் 23 இடங்களில் வந்துள்ளது. இச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே குறித்துள்ளது. இவரையே பசும்பூட்செழியன், பசும்பூண் பாண்டியன், பசும்பூண் வழுதி என்றும் குறித்துள்ளனர்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தர் உக்கிரப் பெருவழுதியாவார். இவரே, சித்திரமாடத்துச் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுள்ளது.

பசும்பூண் பாண்டியன் என்ற வேந்தர் பற்றிய செய்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவரைப் பாண்டியர் மரபில் எவ் இடத்தில் இணைப்பது என்று தெரியவில்லை.

கூடல்நகரில் பாண்டிய அரசினை நிறுவிய நெடியோனின் மகன் பசும்பூண் பாண்டியர் ஆவார். இவர் யானைப் படையுடன் சென்று கொல்லிமலையை ஆண்ட சிற்றரசரான அதிகனை வென்று, அங்குத் தன் யானைப்படையின் வெற்றி அணிவகுப்பினை நடத்தினார். அதன்பின் அதிகன் இவருக்கு நண்பராகி, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தன் நாட்டினை இழந்து, பாண்டியருக்குப் படைத்தலைவராக மாறினார். அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவராக இருந்தார். இவர் பாண்டியருக்கு நண்பராகியதால் அவர்களும் பாண்டியருக்கு நண்பர்களாகினர். இச் சூழலில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர வேந்தர்களுடன் இணைந்து கீழைக் கொங்கர்கள் மீது படையெடுத்தபோது, கீழைக்கொங்கர்களுக்கு ஆதரவாகப் படைநடத்திய பசும்பூண் பாண்டியர் மேலைக்கொங்கரை வென்றார். இவருக்குப் படைத்தலைவராக இருந்தவர் “அதிகன்“ என்றும் “நெடுமிடல்“ என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவரை வில்கெடு தானைப் பசும்பூட் பாண்டியன், நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன், பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியர், இயல்தேர்ச்செழியன், கைவன் செழியன், கொடித்தேர்ச் செழியன், கொற்றச் செழியன், மறப்போர்ச் செழியன் என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர்.

சங்கப் பாண்டியரின் இறுதி வேந்தர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவார். இவரைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.

– – –

குயவரும் கொல்லரும்

சங்க காலம் / தேடல் – 16

22THEF_TAMIL3_jpg_133005gபழந்தமிழர்களின் பயன்பாட்டுப் பொருள்கள் (புழங்குபொருட்கள்) பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டவையே. நெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடித்துப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் அவர்கள் மண்ணைப் பாத்திரங்களாகப் பயன்படுத்தும் நுட்பத்தை அறிந்தனர். மண்ணாலான பாண்டங்களைத் தயாரிக்க அவர்களுக்குச் சக்கரமும் நெருப்பும் முதன்மைத்தேவையாக இருந்தன. மட்பாண்டத் தயாரிப்பில் தொல்தமிழர் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தைத்தான் இன்றளவும் நாம் பயன்படுத்திவருகிறோம். மட்பாண்டத் தொழில் தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களுள் ஒன்று.

நெருப்பினை ஊதிப் பெருக்கி அதன் வெப்ப நிலையை உயர்த்தத் தெரிந்துகொண்டபின்னர், இரும்பினை உருக்கிப் பயன்படும் வகையில் கருவிகள், ஆயுதங்கள் போன்ற பலவற்றை உருவாக்கத் தொடங்கினர்.

ஆறுவகை மட்பாண்டங்கள்

சங்கத் தமிழர்கள் மட்பாண்டங்களைக் “கலம்“ என்றனர். அவற்றைச் செய்யும் குயவரைக் “கலம் செய்கோவே“ என்று புறநானூற்றின் 32ஆவது பாடல் சிறப்பித்துள்ளது. இக்காலத்தில் அவர்களைக் “குலாலர்கள்“ என்கிறோம். தொல்தமிழர் தயாரித்த மட்பாண்டங்களைப் பானை, குடம், தாழி, குழிசி, தசும்பு, நெற்கூடு (குதிர்) என ஆறு வகைப்படுத்தலாம்.

இடையர்களால் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்ட மட்பாண்ட வகை பானை. இடையன் என்று அறியப்பட்ட சங்க கால “அதளன்“ பசுக் கூட்டங்களை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது, தன்னுடைய கைப்பொருட்களாகத் தீக்கடைக்கோல், தோற்படுக்கை, பானை முதலியவற்றை மூட்டையாகக் கட்டித் தன் தோளில் மாட்டிய உறியில் தொங்கவிட்டுச் சென்றதாக அகநானூற்றின் 274ஆவது பாடல் கூறியுள்ளது. இடையர் இந்தப் பானையை உணவுகளைச் சமைக்கப் பயன்படுத்தி இருக்கலாம். ஆய்ச்சியர்கள் தயிர்கொண்டு செல்லும் மிகப்பெரிய பானை என்ற பொருளில் “மிடாப்பானை“ என்ற சொல் நற்றிணையின் 84ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது.

குடம்“ என்பது, பானையைவிடச் சிறியது. மெலிந்து உயர்ந்த வடிவினையுடையது. பலாப்பழத்தின் மிகப்பெரிய பழத்துக்குக் குடம் உவமையாக நற்றிணையின் 353ஆவது பாடலில் சுட்டப்பட்டுள்ளது. மகளிர் குடிநீரைக் கொண்டுவர வேலைப்பாடுகள் நிறைந்த குடத்தினைப் பயன்படுத்தியதாக அகநானூற்றின் 336ஆவது பாடல் தெரிவித்துள்ளது. கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெற்றுள்ள குடத்தில் பசுவின் பால் கறக்கப்பட்டது என்ற செய்தி குடத்தின் பயன்பாட்டினை நமக்கு உணர்த்துகின்றது.

குழிசி“ என்ற மட்கலம் பல்வேறு பயன்பாட்டுக்குரியதாக இருந்துள்ளது. அகநானூற்றின் 393 பாடலில் இக் குழிசியில் உணவு சமைத்த செய்தி இடம்பெற்றுள்ளது. நெல்லை உரலிலிட்டு, இடித்து அரிசியாக்கி அதனையும் சுனைநீரையும் களிமண்ணால் செய்யப்பட்ட குழிசியில் இட்டுக் கல் அடுப்பில் ஏற்றிச் சோறுபொங்கியதாக அப்பாடலில் குறிப்பு உள்ளது. புறநானூற்றின் 168, 237, 371, 393 ஆகிய பாடல்கள் குழிசி சோறாக்கப் பயன்படுத்தப்பட்டமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

குழிசி ஓலை முறை“ அதாவது “குடவோலைமுறை“ என்று அறியப்பட்ட அக்காலத் தேர்தல் முறைக்கு இக்குழிசியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை அகநானூற்றின் 77ஆம் பாடல் தெரிவித்து்ளளது.

தயிரைக் கடைய இக்குழிசியினைப் பயன்படுத்தியுள்ளதாகப் பெரும்பாணாற்றுப்படையின் 158, 159 ஆகிய அடிகளும் புறநானூற்றின் 65ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளன. முல்லைநிலத்தைச் சார்ந்த ஆய்ச்சியர் பால் காய்ச்சும் பாத்திரமாகவும் இக்குழிசி பயன்பட்டுள்ளது. அவ்வாறு பால் காய்ச்சி பயன்படுத்திய பின்னர் அக்குழிசியில் கமழும் பால் வாசத்தைப் போக்க விளாம்பழத்தை அதனுள் இட்டுள்ளனர். இச்செய்தியினை நற்றிணையின் 12 பாடல் தெரிவித்துள்ளது.

தசும்பு“ என்ற மட்பாண்டத்தைப் பெரும்பான்மையாக முல்லைநில மக்களான ஆய்ச்சியர்கள் மத்துகொண்டு தயிர் கடைய இத் தசும்பு மட்பாண்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இச்செய்தியினை நற்றிணையின் 84ஆவது பாடல் கூறியுள்ளது. இத்தசும்பில் மதுவையும் வைத்துள்ளனர் என்ற செய்தியினைப் புறநானூற்றின் 33, 239 ஆகிய பாடல்கள் சுட்டியுள்ளன.

தாழி“ என்று குறிப்பிடப்படும் மட்பாண்டத்தைப் பூச்செடிகள், பருத்திச்செடி, பிணம் போன்றவற்றை வைக்கப் பயன்படுத்தியுள்ளனர். அழகுக்காக வைக்கப்படும் பூந்தொட்டியாகத் தாழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை அகநானூற்றின் 369 மற்றும் 165 ஆகிய பாடல்கள் உறுதிபடுத்தியுள்ளன. பருத்திச் செடிகளைத் தாழியில் வைத்து வளர்த்துள்ளமையை அகநானூற்றின் 129ஆவது பாடல் கூறியுள்ளது. இறந்தோரின் உடலை நல்லடக்கம் செய்யவும் இத்தாழிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைப் புறநானூற்றின் 256, 228 ஆகிய பாடல்களின் வழியாக அறியமுடிகின்றது. தாழிகள் ஒரு மீட்டர் உயரமுள்ளவை. அகழ்வாய்வில் முதுமக்கள் தாழிகள் என்ற பெயரில் பல்வேறு தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சில தாழிகளில் மேற்புறத்தில் “தமிழி“ எழுத்தில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சில அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய தாழிகளைப் போலவே இப்போதும் சில குயவர்களால் இத்தாழிகள் செய்யப்படுகின்றன. மதுரை கிடாரிப்பட்டியில் உள்ள குயவர்களின் குடிசை வீட்டடின் முன்புறம் இத்தாழிகளில் குடிநீர் நிறைத்துவைத்துள்ளமையை இப்போதும் காணமுடிகின்றது.

குதிர்“ என்று அறியப்பட்ட நெற்கூடு பண்டையத் தமிழரின் விவசாயக் கருவூலமாக இருந்துள்ளது. குறிப்பாக இதில் விதைநெல்லைச் சேமித்துள்ளனர். இவற்றில் சேமிக்கப்படும் விதைநெல் அவர்களுக்கு ஓராண்டுக்குப் பின்னர்தான் தேவைப்படும். ஓராண்டு வரை நல்ல நிலையில் இருக்கக்கூடிய நெற்கூடுகளை அவர்கள் மண்ணால் உருவாக்கினர். அந்த நெற்கூடை அழகுற அமைத்திருந்தனர். இக்கூடுகள் நெடுநாள் நல்ல நிலையில் இருந்தமையால் அவற்றைக் “குமரி மூத்த கூடு“ என்று குறிப்பிட்டனர். இச்சொல்லுக்கு “ஒரு பெண் பருவமெய்திப் பல ஆண்டுகள் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னி நிலை“ என்று பொருள். அப்பெண்ணின் கற்புபோல இக்கூடும் சிதையாது இருக்கின்றது என்ற பொருளில் இந்த நெற்கூடினைக் “குமரி மூத்த கூடு“ என்று குறிப்பிட்டு அதன் சிறப்பினைப் பெரும்பாணாற்றுப்படையின் 245 முதல் 247வரையிலான அடிகள் விவரித்துள்ளன.

விதை நெல்லை மட்டுமல்ல உணவுக்காக உள்ள நெல்லையும் வரகையும் பிற தானிய வகையறாக்களையும் கூட தமிழர்கள் இத்தகைய குமரி மூத்த கூடுகளில் பாதுகாத்துவந்துள்ளனர். இதுகுறித்துப் புறநானூற்றின் 148ஆம் பாடலும் பெரும்பாணாற்றுப் படையின் 182, 186 ஆகிய அடிகளும் தெரிவித்துள்ளன. இந்த நெற்கூடுகளின் நிழலில் ஓர் எருமை மாடு படுத்துறங்கியதாகப் பட்டினப்பாலையின் 14, 15 ஆகிய அடிகள் தெரிவித்துள்ளன. இதன் வழியாக நெற்கூடுகளின் அளவு புலப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன் பழநி சங்கிலித்தேவர் சந்தில் வசிக்கும் சித்ரா அழகேசனுக்குரிய இடத்தில் வீடு கட்டும் பணிக்காத் தோண்டப்பட்ட குழியில் சங்க காலத்தைச் சார்ந்த தானியக் குதிர் கண்டெடுக்கப்பட்டது. அதனை நேரில் சென்று ஆய்வுசெய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, “இது எட்டு அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட வெற்றிடக் குழியாக உள்ளது. முட்டை வடிவிலான இக்குழியைச் சுற்றிலும்,தட்டையான கற்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேல்பகுதியில் ஓர் அடி தடிமன் கொண்ட, கல்மூடி போன்ற அமைப்பு காணப்படுகிறது. இக்குழியின் மேல்வாய் தரையில் இருந்து நான்கடி ஆழத்தில் துவங்குவதால், சங்ககாலம் என உறுதிப்படுத்தலாம். இப்பகுதியில் கிடைத்த மண்பாண்ட ஓடுகள், 2000 ஆண்டுகளுக்கு முன்(சங்ககால) பயன்பாட்டில் இருந்தவை. விளிம்புப் பகுதியில் கலைநயத்துடன் கூடிய வரிவடிவம், குடுவை போன்ற அமைப்புடன் உள்ளது. தானியக்குதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இருப்பினும் வெள்ளைச்சோளம், மல்லிகைச் சோளம், இறுங்கச்சோளம், செஞ்சோளம் உள்ளிட்ட ஆறுவகைகள் மட்டுமே பதனப்படுத்தி வைப்பர். பிற தானியங்களை, இதில் பதனப்படுத்த முடியாது.

40 முதல் 50 மூட்டை சோளம் நிரப்பும் வகையில் குழியமைவு உள்ளது. வைக்கோலைப் பரப்பி, அதன்மீது சோளத்தை நிரப்புவர். பின்னர் புங்கை மர இலைகள் பரப்பி, மணலால் மூடி விடுவர். பூச்சி தாக்குதல், மழையால் ஈரப்பதம் அடைதல், கெட்டுப்போதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும். உணவுத் தேவையின்போது, இவற்றை எடுத்துப் பயன்படுத்துவர். இருப்பினும் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களால், தானியத்தை எடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. இதனைத் தவிர்க்கத் தனியக் குதிருக்குள் இறங்கும் நபர் இறங்கும் முன்பும் மேலே வந்த பின்பும் சம்பந்தப்பட்ட சுக்கு, கருப்பட்டி ஆகியவற்றை உண்பார். 1930-க்குப் பின் பதனப்படுத்தலில் நாகரிக வளர்ச்சி காரணமாக, தானிய குதிர் முறை அழிந்து விட்டது1என்று தெரிவித்துள்ளார்.

மட்கலத்திலும் “காப்பி“

தமிழகத்தில் திருக்காம்புலியூர், உறையூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் வழியாகக் கண்டெடுக்கப்பெற்ற கறுப்புசிவப்பு நிற மட்கலன்கள் சிலவற்றில் கீறல் குறியீடுகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படிகின்றன. சிலவற்றில் நேர்கோடுகள், குறுக்குநெடுக்குக் கோடுகள், வளைந்த கோடுகள் போன்ற தன்மையில் வண்ணங்கள் தீட்டியிருப்பதனையும் காணமுடிகின்றது.இப்பகுதிகளில் கருஞ்சிவப்புக் கலவை பூசிய மட்கலன்களையும் கண்டெடுத்துள்ளனர்.

வெளிப்பரப்பில் வெண்மையான வண்ணம் தீட்டப்பட்டுப் பளபளப்பான தோற்றத்துடன் கூடிய தனிக்கறுப்பு நிற மட்கலன்கள் சிலவற்றைக் கல்லூர், கொற்கை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கண்டெடுத்துள்ளனர்.

ரோமானியர்களின் “ரௌலட்டட் மட்கலன்கள்“ மிருதுவான களிமண்ணால் நேர்த்தியாகச் செய்யப்பட்டவை. இவை எஃகின் நிறமாகவோ அல்லது சாம்பல் நிறமாகவோ இருக்கும். இவற்றின் உட்பகுதியில் புள்ளிகளாலான ஒப்பனைகள் வட்ட, முக்கோண, அறுகோண, கண், முட்டை வடிவங்களில் ஒன்றினைக் கொண்டிருக்கும். இத்தகைய மட்பாண்டங்கள் உறையூர், காஞ்சிபுரம், கொற்கை, வசவசமுத்திரம், செங்கமேடு, நத்தமேடு, காரைக்காடு, கரூர் ஆகிய பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன.2 ரோமானியர்களால் செய்யப்பெற்ற ரௌலட்டட் மட்பாண்டங்களைக் கடல்வணிகத்தின் வழியாகத் தமிழகத்துக்கு வந்தன. அவற்றைப் பார்த்து வியந்த தமிழகக் குயவர்கள், அவற்றைப்போலவே தாமும் செய்ய முயன்றுள்ளனர். தமிழகக் குயவர்கள் செய்த உள்ளுர் ரௌலட்டட் மட்கலன்களை அரிக்கமேடு, உறையூர், காரைக்காடு போன்ற இடங்களில் கண்டெடுத்துள்ளனர். ஆனால், இவர்கள் செய்தவை, தரத்திலும் அழகிலும் அவற்றைப் போல் இல்லை.

ரோமானியர்கள் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய மற்றொரு மட்கலம் “ஆம்போரா சாடிகள்“. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குத் திரவங்களைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்லும் வசதியுடன் செய்யப்பட்டிருந்தன. இவற்றின் அடிப்பாகம் கூர்மையாகவும் வாய்ப்பகுதியில் மூடியும் கழுத்துப் பகுதியின் இரண்டு புறங்களிலும் கைப்பிடிகளும் காணப்படுகின்றன. இவற்றைக்கொண்டு மதுபானங்களை மண்ணில் நீண்ட நாட்கள் புதைத்து வைக்கலாம் என்ற சிந்தனையோடு தமிழகக் குயவர்கள், ஆம்போரா சாடிகளின் வடிவமைப்பில் கைப்பிடிகள் இல்லாமல் பல சாடிகளைத் தயாரித்துள்ளனர். இவற்றைக் காஞ்சிபுரத்தில் கண்டெடுத்துள்ளனர்.

ஊது உலை

எரியும் உலையில் காற்றினை அழுத்தத்துடன் வேகமாகச் செலுத்தி வெப்பத்தினைப் பெருமளவு உயர்த்தும் தொழில்நுட்பம் ஊது உலையில் செயல்படுத்தப்படுகின்றது. அவ்வுலைக்குள் காற்றினை அழுத்தத்துடன் விரைவாகச் செலுத்தும் கருவிக்குத் “துருத்தி“ என்றுபெயர். சங்க காலத்தில் ஊது உலையில் மூன்று விதமாக துருத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை 1. மிதிதோல் துருத்தி, 2. விசைத் துவாங்கு துருத்தி, 3. கைத் துருத்தி என்பனவாகும்.

முதல்வகையான மிதிதோல் துருத்தியால் இயக்கப்படும் ஊது உலையில், தோலாலான மிதி உலையை மிதித்துக் கொல்லர் காற்றை உலைக்குள் செலுத்துவார். இத்துருத்தி பற்றிய செய்திகள் அகநானூற்றின் 202ஆவது பாடலிலும் குறுந்தொகையின் 172ஆவது பாடலிலும் பெரும்பாணாற்றுப்படையின் 207 மற்றும் 208ஆவது அடிகளிலும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் வகையான விசைத் துவாங்கும் துருத்தியால் இயக்கப்படும் ஊது உலையின் செயல்பாடு பற்றி த. சாமிநாதன், “துருத்தியின் தோற்பை, காற்றை வெளியிலிருந்து உள்ளிழுத்து விரியவும் காற்றை நெருப்பில் ஊதச் சுருங்கவுமாகச் செயல்பட, அத்துடன் மேலே பொருத்தப்பட்ட சிறு சக்கரம் வழியாகக் கயிறு ஒன்று இணைக்கப்படும். கயிற்றின் ஒரு முனையை மேலிருந்து கீழே இழுக்கக் காற்றை ஊதி தோற்பை சுருங்கும். கயிற்றை விடத் தோற்பை காற்றை இழுத்து விரியும். ஊதப்படும் காற்றின் வேகம், கயிற்றை இழுக்கும் வேகத்தைப் பொறுத்தது”“3என்று விளக்கியுள்ளார். இந்த வகையான துருத்திகொண்ட ஊது உலை பற்றிய செய்தியை அகநானூற்றின் 96, 224 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

மூன்றாவது வகையான கைத் துருத்தியால் இயக்கப்படும் ஊது உலை சற்று வேறுபட்டது. கைத்துருத்தியில் உள்ள தோற்பையில் சிறிய அளவிலான இரண்டு இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவ்விரண்டு தகடுகளும் கதவுகள் போல் திறக்கவும் மூடவும் செய்யும். தோற்பை கையால் இயக்கப்படும்போது, மூடிகள் இரண்டும் திறந்து காற்றை இழுத்துக்கொள்ளும். அழுத்தப்படும்போது மூடிக்கொள்ளும். அப்போது காற்று உலைக்குள் சென்று நெருப்பின்மீது அழுத்தும். கைத்துருத்திகள் பற்றிய குறிப்பினைப் புறநானூற்றின் 345ஆவது பாடலில் காணமுடிகின்றது. இந்த மூவகையாக துருத்திகளும் தற்காலத்திலும் கொல்லர் பட்டறைகளில் செயல்பாட்டில் உள்ளன.

உருகும் இரும்பு

சங்க காலத்தில் ஊது உலைகளின் உதவியால் இரும்பினைப் பெருமளவில் உருக்கியுள்ளனர். உருகிய இரும்பின் நிறம் எருமை மாட்டுக் கொம்பின் நிறத்தை ஒத்தது என்று அகநானூற்றின் 56ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. இரலை மானின் கரிய கொம்புபோன்றது என்று அகநானூற்றின் 4ஆவது பாடல் சுட்டடியுள்ளது. உருகிய இரும்பால் வார்த்துச் செய்யப்பட்ட இரும்புப் பட்டையானது புன்னை மரத்தின் கரிய நிறமுடைய கிளைக்கு ஒப்பானது என்று நற்றிணையின் 249ஆவது பாடல் தெரிவித்துள்ளது. இந்த மூன்று உவமைகளிலிருந்து, அவர்கள் பயன்படுத்திய இரும்புத் தாதுவின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு இரும்பின் நிறம் சற்று மாறுபட்டுத் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இரும்புப் பட்டறை

உருக்கி வார்க்கப்பட்ட இரும்பினைத் தேவைக்கு ஏற்ப அடித்து, வளைத்து கருவிகள், பொருட்கள் செய்ய சங்கத் தமிழர்களுக்கு நான்கு கருவிகள் உதவின. அவை 1. உலைக்கல், 2. சம்மட்டி, 3. கொறடு, 4. பனைமடல்.

உலைக்கல் என்பது பட்டறைக்கல்லைக் குறிக்கும். அடித்து வளைக்க வேண்டிய சூடான இரும்பினை உலைக்கல்லின் மீது வைத்து, அதனைச் சம்மட்டியால் அடித்துள்ளனர். ஆண் யானையின் பெரிய கொம்புக்குப் பூண் மாட்டுவதற்காக இரும்பினை அடித்து வளைத்த உலைக்களத்தின் நிகழ்வினைப் புறநானூற்றின் 170ஆவது பாடல் விளக்கிக் கூறியுள்ளது. அந்த உலைக்கத்தில் “கூடம்“ என்று சுட்டப்பட்ட சம்மட்டியும் “உலைக்கல்“ என்று அழைக்கப்பட்ட பட்டறைக்கல்லும் இருந்துள்ளமையை இப்பாடல் சுட்டியுள்ளது.

கொல்லன் பட்டறையில் உள்ள கவை போன்ற கொடிற்றை“ என்று கொறடினைப் பெரும்பாணாற்றுப்படையின் 206, 207ஆகிய அடிகள் குறிப்பிட்டுள்ளன. “பெண்யானை பிளந்ததால் நார் உரிக்கப்பட்ட வெள்ளிய பாலை மரங்களின் கிளைகள் கொடிறு போன்று இருந்தன“ என்று நற்றிணையின் 107ஆவது பாடல் கொறடினைச் சுட்டியுள்ளது.

உருக்கி, வார்க்கப்பட்ட இரும்பின் அதிவெப்பத்தைத் தணிக்கப் பனைமடலில் நீரைத் தோய்த்துத் தெளித்துள்ளனர். இதுபற்றிய குறிப்பினை நற்றிணையின் 133ஆவது பாடலின் வழியாக அறியமுடிகின்றது. பட்டறையில் கொல்லர் இரும்பினை அடிக்கும் போது எழும் தீப்பொறிகளின் சித்திரத்தினை அகநானூற்றின் 72ஆவது பாடல் காட்சிப்படுத்தியுள்ளது.

இப்பாடலில் இரும்பினைப் புலவர் “பொன்“ என்று குறிப்பிட்டுள்ளார். “பொன்“ என்பது, அக்காலத்தில் பொதுவாக உலோகங்களைக் குறித்தது. இச்சொல் தங்கத்தைக் குறிக்கும் ஒருசொல்லாகவும் இருந்துள்ளது.

இரும்பாயுங்கள்

இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான ஆயுதங்களையே செய்தனர். வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே“ என்று புறநானூற்றின் 312ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து கொல்லரின் அடிப்படைத்தொழில் இரும்பாலான ஆயுதங்களைச் செய்தலே என்பது தெரியவருகின்றது. கொல்லர் செய்த ஆயுதங்கள் சில வருமாறு வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், ஐயவித்தூலம், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம்.

வரகுக் கதிர்களை இரும்பாலான அரிவாளால் அரியப்பட்ட செய்தியினை மலைபடுகடாமின் 113ஆவது அடி தெரிவித்துள்ளது. கானவனின் கைகள் இரும்பினை வடித்துவைத்தது போன்று இருந்ததாக அகநானூற்றின் 172ஆவது பாடல் உவமைப்படுத்தியுள்ளது. அரிவாள் பற்றிய குறிப்புகளை நற்றிணையின் 195, 275ஆகிய பாடல்களிலும் புறநானூற்றின் 379ஆவது பாடலிலும் பொருநராற்றுப்படையின் 242ஆவது அடியிலும் காணமுடிகின்றது.

கொல்லர் செய்த வேல் இலைவடிவமுடைய முனையையும் நீண்ட காம்பினையும் உடையது என்பதனைப் புறநானூற்றின் 180ஆவது பாடலின் வழியாக அறியமுடிகின்றது. வேல்கள் கூரிய முனையினை உடைய என்ற குறிப்பினைப் புறநானூற்றின் 42ஆவது பாடலின் வழியாகத் தெரிந்துகொள்ளமுடிகின்றது. பழுக்கக் காய்ச்சி கூர்மையாக வடிக்கப்பட்ட வேல் என்று புறநானூற்றின் 295ஆவது பாடல் சுட்டியுள்ளது. வேலினை நீண்ட இரும்புக் காம்பின் முனையில் திருகப்பட்டு (உலோகத்தில் திருகு அமைக்கும் தொழில் நுட்பம்) இணைக்கப்பட்டிருந்தது. இச்செய்தியினைப் புறநானூற்றின் 97ஆவது பாடலின் வழியாக அறியமுடிகின்றது. “வேல்“ பற்றிய குறிப்புகளை அகநானூற்றின் 215, 272, 312 ஆகிய பாடல்களிலும் பெரும்பாணாற்றுப்படையின் 119, மலைபடுகடாமின் 490, மதுரைக்காஞ்சியின் 739, நெடுநல்வாடையின் 176ஆகிய அடிகளிலும் காணமுடிகின்றது.

பகழி, கணை, எஃகு என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் “அம்பு“ பற்றிய குறிப்புகளை அகநானூற்றின் 9, 215, 289, 371 ஆகிய பாடல்களிலும் புறநானூற்றின் 23, 181 ஆகிய பாடல்களிலும் பரிபாடலின் 18ஆவது பாடலிலும் நற்றிணையின் 329ஆவது பாடலிலும் பதிற்றுப்பத்தின் 45ஆவது பாடலிலும் காணமுடிகின்றது.

வாள்“ பற்றிய குறிப்புகளைப் புறநானூற்றின் 50, 109, 278 ஆகிய பாடல்களின் வழியாக அறியமுடிகின்றது. குறுவாளை “உடைவாள்“ என்றனர். இது பற்றி மதுரைக்காஞ்சியின் 635, 637ஆவது அடிகளில் அறியலாம். இரும்பு வாள் மிகச் சரியாக வெட்டுவதற்குப் பயன்படும் என்ற கருத்தினைப் பரிபாடலின் ஏழாவது பாடல் குறிப்புணர்த்தியுள்ளது.

எதிரிகளின் படைக் கருவிகளிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் “கேடயம்“ பற்றிய செய்தியைப் புறநானூற்றின் நான்காவது பாடலின் வழியாக அறியமுடிகின்றது. Nflஇதனைக் “கேடகம்“, “தோல்“, “கிடுகு“ என்றும் சுட்டியுள்ளனர்.

வீரர்கள் தங்களை ஆயுதங்கள் தாக்காதவாறு உடல் முழுவதும் மறைத்துக்கொள்ளும் வகையில் இரும்பாலான கவசம் அணிந்துள்ளனர். இக் கவசத்தினை “மெய்ம்மறை“ என்றனர்.Nfஇதனை “மெய்ப்பை“, “மெய்யாப்பு“ என்றும் குறித்துள்ளனர். இதுகுறித்து புறநானூரின் 14, 21, 65 ஆகிய பாடல்களும் பரிபாடலின் இரண்டாவது பாடலும் முல்லைப்பாட்டின் 60ஆவது அடியும் சுட்டியுள்ளன.

மதில்களையும் அரண்களையும் எதிரிகளிடமிருந்து காக்க, எந்திரங்களைக் கொண்டு ஆயுதங்களை எறியும் திறனையும் சங்கத் தமிழர் பெற்றிருந்தனர். இந்த எந்திரங்கள் இரும்பாலானவை. இவை மிகப்பெரிய அளவிலும் மிகச்சிறிய அளவிலும் அமைக்கப்பட்டிருந்தன. இவை மிகச்சிறந்த பாதுகாப்பினை நல்கியுள்ளன. இதுகுறித்துப் பதிற்றுப்பத்தின் 53ஆவது பாடலும், புறநானூற்றின் 177ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 66, 67 அடிகளும் குறிப்பிட்டுள்ளன.

இரும்புக் கருவிகள்

அக்காலத்தில் ஆயுதங்களை எறிவதற்கு மட்டுமல்ல பிற தொழில்களுக்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கரும்பு பிழிதலுக்கு இரும்பாலான எந்திரங்கள் பயன்பாட்டிலிருந்துள்ளன. இது பற்றிப் புறநானூற்றின் 322ஆவது பாடலும் பொரும்பாணாற்றுப்படையின் 259 முதல் 262 வரையிலான ஆகிய அடிகளும் ஐங்குறுநூற்றின் 55ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 258ஆவது அடியும் மலைபடுகடாமின் 340, 341ஆகிய அடிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

மரங்களை வெட்டுவதற்குரிய கைக்கோடரிகளை “நவியம்“ என்று அழைத்தனர். சில கோடரிகளில் நெடிய காம்புகள் (கைப்பிடி) உண்டு என்ற செய்தியையும் இலக்கிய அடிகளின் வழியாக அறியமுடிகின்றது. புறநானூற்றின் 23, 36 ஆகிய பாடல்கள் நவியம் பற்றிப் பகர்ந்துள்ளன.

உழவுக்கருவிகளான கொழு, கணிச்சி (குந்தாலி அல்லது கூந்தாலம்), உளிவாய்ப் பாரை போன்றவற்றையும் இரும்பால் செய்துள்ளனர். உழுகருவியான கலப்பையின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும் கொழுவின் வலிமையினைப் பெரும்பாணாற்றுப்படையின் 197 முதல் 200 வரையிலான அடிகளும் பொருநராற்றுப்படையின் 117, 118 ஆகிய அடிகளும் பதிற்றுப்பத்தின் 58 ஆவது பாடலும் சுட்டியுள்ளன. கணிச்சியின் திறன் குறித்து அகநானூற்றின் 399ஆவது பாடலும் நற்றிணையின் 240 ஆவது பாடலும் சுட்டியுள்ளன. கரிய கரம்பு நிலத்தைப் பண்படுத்தப் பயன்படும் உளிவாய்ப் பாரையின் செயல்பாடு பற்றிப் பெரும்பாணாற்றுப் படையின் 91,92 ஆகிய அடிகள், “இரும்பாலான பூண் தலையிலே கட்டப்பட்டுத் திரட்சி உடைய மரத்தாலான கைப்பிடி உடையதும் உளிபோலும் வாயை உடைய பாரைகளாலே கட்டிகள் கீழ் மேலாக வரும்படி குத்திக் கிண்டினர்“ என்று கூறியுள்ளன.

நெய்தல் நிலத்தினைச் சார்ந்த பரதவர்கள், எறிஉளியைப் பயன்படுத்தினர். இது மீன்வேட்டைக்குப் பயன்பட்டுள்ளது. பெரிய மீன்களை எறிஉளியை எறிந்து கொன்றுள்ளனர். கயிற்றில் கட்டப்பெற்ற எறி உளியையும் ஒளிமிகுந்த விளக்குகளையும் பரதவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது கைப்பொருளாகக் கொண்டுசென்றனர் என்ற தகவலை நற்றிணையின் 388 ஆவது பாடல் தெரிவித்துள்ளது. கொம்பினை உடைய சுறாமீனைக் கொல்லப் பரதவர்கள் எறிஉளியைப் பயன்படுத்தினர் என்ற செய்தியைக் குறுந்தொகையின் 304 ஆவது பாடல் கூறியுள்ளது. சிறிய அளவினை உடைய மீன்களைப் பிடிக்கத் தூண்டில்களைப் பயன்படுத்தினர். தூண்டிலில் உள்ள முள்ளினை (மடிதலை) இரும்பால் செய்துள்ளனர். இத்தூண்டில் குறித்த பதிவினைப் பெரும்பாணாற்றுப்படையின் 284 முதல் 287 வரையிலான அடிகளில் காணமுடிகின்றது.

உளிகளில் பல வகைகளைச் செய்து பயன்படுத்தியுள்ளனர். யானைத்தந்தங்களில் வேலைப்பாடுகளைச் செய்வதற்காக “மரஉளி“யையும் நடுகல் அமைக்க “கல்உளி“யையும் கைவினைப்பொருட்களைச் செய்ய “நுண்உளி“யையும் பயன்படுத்தியுள்ளனர். மரஉளி பற்றிய செய்தியை நெடுநல்வாடையின் 115 முதல் 123 வரையிலான அடிகளிலும் சிறுபாணாற்றுப்படையின் 252, 253 ஆகிய அடிகளிலும் காணமுடிகின்றது. கல் உளி குறித்த செய்தியை அகநானூற்றின் 343 ஆவது பாடலிலும் நுணு் உளி பற்றிய குறிப்பினைச் சிறுபாணாற்றுப்படையின் 51 முதல் 54 வரையிலான அடிகளிலும் காணமுடிகின்றது.

இரும்பால் செய்யப்பட்ட விளக்குகளையும் (தகளி) அக்காலத் தமிழர் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி நெடுநல்வாடையின் 41,42ஆகிய அடிகள் சுட்டியுள்ளன. நார்களைப் பின்னுவதற்கும் தோல்களைத் தைப்பதற்கும் இரும்பு ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைப் புறநானூற்றின் 82ஆவது பாடலும் பதிற்றுப்பத்தின் 42, 74ஆவது பாடல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

கிணற்றிலிருந்து நீரை இறைக்க இரும்பாலான இறவை வாளிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தின் 22ஆவது பாடலில் காணமுடிகின்றது.

தானியங்களை உரலிலிட்டு குற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மர உலக்கையின் நுனியில் இரும்பால் பூண் இட்டனர். இது பற்றிய குறிப்பு, சிறுபாணாற்றுப்படையின் 193, 194 ஆகிய அடிகளிலும் அகநானூற்றின் ஒன்பதாவது பாடலிலும் இடம்பெற்றுள்ளது. உலக்கைக்கு மட்டுமல்ல யானையின் தந்தத்திற்கும் இரும்புப்பூண் இட்டுள்ளனர். இது பற்றிப் புறநானூற்றின் 370 ஆவது பாடலிலும் பெரும்பாணாற்றுப்படையின் 436, 437ஆகிய அடிகளிலும் காணமுடிகின்றது.

கத்திரிக்கோல் என்று அறியப்பட்ட கத்திரிகையையும் பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளனர். இது இரும்பாலானது. இது பெரும்பாலும் மகளிரின் கூந்தலை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இதனை மயிர்குறைக் கருவி என்றனர். இதற்கு “வாள் இடை“ என்றும் “எஃகு இடை“ என்றும் பெயருண்டு. இதுபற்றிய குறிப்பினைப் பொருநராற்றுப்படையின் 29,30 ஆகிய அடிகளிலும் கலித்தொகையின் பாலைக்கலி 31, 35 ஆவது பாடல்களிலும் காணமுடிகின்றது.

தொடர்“ என்று குறிப்பிடப்படும் சங்கிலிகளை இரும்பால் செய்து அதனைச் சிறைக் கைதிகளைப் பிணைக்கப் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றிப் புறநானூற்றின் 74 பாடலில் குறிப்புள்ளது.

யானைகளை அடக்கும் அங்குசத்தை இரும்பால் செய்துள்ளனர். அங்குசத்தின் நெடிய காம்பு மரத்தாலும் அதன் கூர்முனை இரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும். அங்குசத்திற்குத் “தோட்டி“ என்று பெயருண்டு. இது பற்றிக் கலித்தொகையின் நெய்தல் கலி 21ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

இலவம் பஞ்சுக் காய்களிலிருந்து பஞ்சினைப் பிரித்தெடுக்க இரும்பாலான மத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த இரும்பு மத்து பற்றி அகநானூற்றின் 217ஆவது பாடலில் குறிப்பு உள்ளது.

மிகக் கூர்மையான கருவிகளுள் ஒன்று “அரம்“. இது இரும்பாலானது. பிற இரும்புக் கருவிகளையும் ஆயுதங்களையும் கூராக்கவும் வழவழப்பாக்கவும் அரங்கள் பயன்படுத்தப்பட்டன. அரங்கள் பற்றிப் புறநானூற்றின் 36ஆவது பாடலும் அகநானூற்றின் 199ஆவது பாடலும் மலைபடுகடாமின் 35முதல் 37வரையிலான அடிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

சங்கினை அறுத்து வளையல் செய்யும் தொழில்நுட்பத்தினைச் சங்க கால மக்கள் பெற்றிருந்தனர். சங்கு வளையல் அணிவது அக்காலப் பண்பாடாக இருந்துள்ளது. சங்கினை அறுக்கவும் அரம் பயப்படுத்தப்பட்டுள்ளது. சங்கு அறுக்கும் அரம் பற்றி அகநானூற்றின் 125, 349ஆகிய பாடல்களும் நற்றிணையின் 235ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளன.

அரவுவாள்“ என்று சுட்டப்பட்ட ரம்பமும் அக்காலப் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதனை “வாளரம்“ என்றும் அழைத்தனர். இது மரங்களை அடியோடு அறுக்கப் பயன்படுத்தப்பட்டது. இது பற்றி நற்றிணையின் 235ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளது.

கொடுவாள்“ என்று சுட்டப்பெற்ற சிறிய அளவிலான கருவியினைக் காய்கறிகளையும் இறைச்சிகளையும் நறுக்கப் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றிப் பெரும்பாணாற்றுப்படையின் 471, 472ஆகிய அடிகளில் குறிப்பு உள்ளது.

சங்கத் தமிழர்களின் புழங்குபொருட்கள், ஆயுதங்கள் உருவாக்கத்தில் குயவரும் கொல்லரும் பெரும்பங்காற்றியுள்ளனர். புழங்குபொருட்கள் தமிழரின் வாழ்க்கைக்கும் ஆயுதங்கள் தமிழரின் உயிருக்கும் உறுதுணையாக அமைந்தன.

– – –

அடிக்குறிப்புகள்

  1. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=218578

  2. மாரிசாமி, நா., தொல்லியல், . 162.

  3. சாமிநாதன், ., சங்க காலத் தொழில்நுட்பம், பக்.67,68.

அற்புதம் அம்மாவே… உங்களை ஆதரிக்க முடியும்; உங்களை வைத்து நடக்கும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

imagesமரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல்/கொள்கை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கானாலும் சரி… சாதாரண கைதிகளுக்கானாலும் சரி… ஏனென்றால், அரசியல் விஷயத்தில் எந்தத் தரப்பின் பக்கமும் முழு நியாயம் இருப்பதில்லை.  சாதாரண கைதிகளோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டிருப்பார்கள். அவர்களுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு தரவேண்டும். இந்தக் காரணங்களினால் மரண தண்டனை என்பது தார்மிக ரீதியிலும் தவறு. சட்டரீதியிலும் சரியாக இருக்க வாய்ப்பு குறைவு. அதிலும் ஓர் அரசு என்பது பல்வேறு ஊழல்கள் மலிந்த அமைப்பு. எனவே அதன் கையில் ஓர் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை ஒருபோதும் தரவே கூடாது.

இது பொதுவான ஒரு கருத்து. ஆனால், குற்றங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகைப்பட்டவை என்பதால் அதற்கான தீர்ப்பும் பொத்தாம் பொதுவாக இருக்கவும் முடியாது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிக்கியவர்கள் சிலர். தப்பித்தவர்கள் பலர். சிக்கியவர்களில் அந்தப் படுகொலையில் சொற்ப பங்களித்தவர்களில் ஆரம்பித்து கொஞ்சம் கூடுதலாகப் பங்களித்தவர்கள்வரை பல அடுக்குக் குற்றவாளிகள் உண்டு. இவர்களில் யாரும் நிச்சயமாக இந்தக் குற்றத்தைப் பொறுத்தவரையிலும் மரண தண்டனை தரவேண்டிய அளவுக்குக் குற்றவாளிகள் அல்ல. இத்தனை வருடங்கள் சிறையில் அடைக்கப்படும் அளவுக்கான குற்றம் செய்தவர்களும் அல்ல. எனினும் பிடிபட்டவர்கள் அந்த முக்கிய குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்காமல் இருந்து வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகச் சொல்லி பயமுறுத்தி வந்ததில் ஒருவித நியாயம் இருக்கவே செய்கிறது.

இந்த வழக்கில் இன்னொரு விந்தையான விஷயம் என்னவென்றால், காவலர்களின் பிடியில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகும் எந்தவொரு குற்றவாளியும் கிடைத்த ஆதாரங்களுக்குக் கூடுதலாக ஒற்றை வார்த்தைகூட வழக்கு தொடர்பாக கக்கியிருக்க இல்லை. பிரதான குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கவும் இல்லை. இவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியவர்கள் அந்த அளவுக்கு சாமர்த்தியசாலிகள் என்பது மட்டுமே இதற்கான காரணமாக இருக்கமுடியாது. விசாரணை நடந்தவிதத்திலும் பல குழறுபடிகள் இருக்கின்றன. பிரதான குற்றவாளிகளை நோக்கி ஒருபோதும் விசாரணை போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தேர்தல் நெருங்கும் இந்தப் பொன்னான நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பைத் தரும் வகையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததோடு மத்திய அரசு விரும்பினால் இவர்களை விடுதலைகூடச் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. கருணை மனு தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் செய்யப்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கருணை மனு தொடர்பாக இத்தனை நாட்களுக்குள் முடிவெடுத்தாகவேண்டும். மவுனம் சாதித்தால், தண்டனைக்கு ஒப்புக்கொள்வதாகவே அர்த்தம் என்று கடைசியாக ஒரு கெடுவை நிதிமன்றம் விதித்திருக்கவேண்டும். ஆனால், அது தொடர்பாக எந்த அழுத்தமான தீர்மானமும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களின் தண்டனையை மட்டும் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்போடு நாடகம் நிறைவுற்றிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது எளிதாகியிருக்கும். ஆனால், அப்படியான ஒரு சாதகமான சூழல் எதிரணிக்குப் போவதைத் தடுக்கும் நோக்கில் ஜெயலலிதா ஏழு பேரையும் விடுதலை செய்வதாக பதறிக்கொண்டு அறிவித்தார். அது உண்மையிலேயே ஈழ அரசியல் அன்கோவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்தான். ஏனென்றால் ஈழப் போராலிகள் தொடர்பாக ஜெயலலிதா இதுவரை எடுத்துவந்திருக்கும் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவருக்கு அது மிகப் பெரிய பின்னடைவே. எனவே அவரை அந்த முடிவை எடுக்கவைத்தவர்களின் சாமர்த்தியம் என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.

ஏனென்றால், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததன் மூலம் காங்கிரஸ் தலைமையில் தேமுதிக, திமுக கூட்டணி உருவாகியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதன் மூலமாக மக்கள் மத்தியில் அந்தக் கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று ஜெயலலிதா நம்பியது ஒருவகையில் மிகப் பெரிய தவறு. அவர்கள் தனித்தனியாக இருந்தால் அதிமுகவுக்கு எவ்வளவு சாதகமோ அதைவிட அதிக பலன் அவர்கள் கூட்டாகச் சேர்வதில் உண்டு. ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதுநடந்துகொண்டவிதம் தொடர்பாக கோபம் இருக்கிறது. போதாத குறையாக ஊழல் தொடர்பாக பெரும் வெறுப்பும் அந்தக் கட்சி மீது இருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கு அது பின்னடைவையே தரும். எனவே ஜெயலலிதா அந்தக் கூட்டணியைக் கண்டு இந்த அளவுக்குப் பயந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை. எனினும் அவர் திரைப்படங்களில் வாழ்க்கையில் துடுக்குத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்துப் பெற்ற வெற்றியை மனத்தில் கொண்டு அரசியல் வாழ்க்கையில் அதிரடிப் பெண்மணியாக ஒரு பிம்பத்தை வளர்த்தெடுக்க விரும்பியிருக்கிறார். சந்தர்ப்ப சூழல் அதற்குத் தோதாக அமைந்திருக்கவே அவரும் அந்த வேடத்தை இதுநாள் வரை வெற்றிகரமாக நடிக்கவும் முடிந்திருக்கிறது. இன்றைய சூழலில் அவருடைய இலக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராகக் காய் நகர்த்தும் அதிரடியாக மாறியிருக்கிறது (அவருடைய பிரதமர் கனவு நிறைவேறினால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பைவிட அவர் ஆகாவிட்டால் கூடுதலாக நடக்கும் என்பதே இப்போதைய யதார்த்தம்).

ராஜீவ் கொலை என்ற வழக்கில் பேரறிவாளர் என்ற அப்பாவியும் அற்புதம்மாள் என்ற போராளியும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலைப்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளமுடியும். இது மிகவும் தந்திரமான வலை.

இலங்கைத் தமிழர் பிரச்னையின் பிற அனைத்து விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒரு அப்பாவியைத் தூக்கிலிடலாமா என்ற தார்மிகக் கேள்வியில் வந்து நிற்கிறது. இதனூடாக இந்தியாவின் அற உணர்வு இன்று கேள்விக்குபடுத்தப்பட்டிருக்கிறது.

பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தார் என்ற பூஞ்சையான குற்றச்சாட்டுடன் ஒருவரை நளினி, முருகன், சாந்தன் போன்ற ஒரிஜினல் குற்றவாளிகளுடன் கோர்த்துவிட்டதில் இருக்கிறது கிரிமினல் சாணக்கியத்தனம். ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் அந்த அப்பாவியின் பின்னால் ஒளிந்துகொண்டு எளிதாக வெளியே வந்துவிட ஒரு வழி அன்றே ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையை நியாயப்படுத்துபவர்கள் அதை வெளிப்படையாகச் செய்வது சிரமம் என்பதால் அவர்களுக்கு ஒரு துருப்புச் சீட்டு பேரறிவாளர் உருவில் அழகாக உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

அவர் சொல்லாததைச் சொன்னதாக வாக்குமூலம் பதிவு செய்தேன் என்று காவலர் இன்று சொல்லியிருக்கிறார். அன்று அவருக்கு (மே)லி(டம்) இட்ட உத்தரவின்படி பொய் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். உண்மைக் குற்றவாளிகளைத் தப்புவிக்க உள் நுழைக்கப்பட்ட பலியாடுதானே பேரறிவாளர். அல்லது தெரிந்தே இந்த தியாகத்தை அவர் செய்ய முன்வந்திருக்கலாம். நிச்சயம் இந்தக் கொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்படமாட்டாது என்ற உத்தரவாதம் நம்பத் தகுந்தவட்டாரங்களில் இருந்து வந்திருக்கும். எனவே இந்தப் பிரச்னையை போராளித் தாய் – அப்பாவி மகன் ஆகியோரின் பாசப் போராட்டம் என வெறும் உணர்ச்சிமயத்தோடுமட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுவோம்.

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் சொல்லாமல் விடும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவையே இந்தப் பிரச்னையின் முக்கிய கூறுகள். மரண தண்டனை தரலாமா கூடாதா என்பதெல்லாம் உண்மையான பிரச்னையே அல்ல.

உண்மையில் ஏழு பேருக்கு விடுதலை தரவேண்டும் என்பவர்களின் மனத்தில் இருக்கும் முக்கியமான ஒரு விஷயம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை; அமைதிப்படையை அனுப்பி இலங்கைத் தமிழர்களை அவர் கொன்றொழித்தார். எனவே, அவருக்கு தக்க தண்டனை தரப்பட்டது என்பதுதான்.

இதுதான் பேரறிவாளரின் விடுதலையை விரும்புபவர்களில் பெரும்பாலானவர்களின் மனத்தில் இருக்கும் விஷயம். ஆனால், அநது தொடர்பான கேள்வி அவர்களிடம் கேட்கப்படுவதில்லை. பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்குத் தூக்கா என்ற வசனத்தை அவர்கள் தர்ம ஆவேசத்துடன் கேட்க மற்றவர்கள் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கோட்டை அழிக்காமலேயே அதைச் சிறியதாக ஆக்கவேண்டும்னெறால், பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை வரை என்றுசொல்வார்களே அதுபோல் ஒரு கொலைகாரனை கொலைப் பழியில் இருந்து தப்புவிக்கவேண்டுமென்றால், ஒரு அப்பாவியை அவனோடு கோர்த்துவிடு. அப்பாவியின் வெகுளித்தனத்தை மட்டுமே பேசிப் பேசி கொலைகாரனையும் எளிதில் வெளியில் கொண்டுவந்துவிடலாம். இந்த தந்திரமே இங்கு கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உண்மை புரியவேண்டுமென்றால், அப்பாவி பேரறிவாளரை விடுதலை செய்துவிடுகிறோம். எஞ்சியவர்களைத் தூக்கில் இடுகிறோம் உங்களுக்கு இது சம்மதமா என்று கேட்டுப்பாருங்கள். அமைதிப்படைப் படையின் படுகொலைகளில் போய் அந்த பதில் முட்டிக்கொண்டு நிற்கும்.

இந்த இடத்தில் இந்த அடிப்படை விஷயம் தொடர்பான தெளிவு பிறந்தாக வேண்டியிருக்கிறது.

உண்மையில் அமைதிப்படையினர் தமிழ் பெண்களைக் கற்பழித்தல், ஈழத் தமிழ் போராளிகளையும் அப்பாவிகளையும் கொன்றழித்தல் என அத்துமீறினார்களா? இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? சிங்கள அண்ணனும் தமிழ் தம்பியும் சேர்ந்துகொண்டு இந்திய அமைதிப் படையை இலங்கை மண்ணில் இருந்து விரட்டியடிக்க நடத்திய நாடகத்தின் ஓர் அங்கமா இந்திய அமைதிபடையின் மீதான அவதூறுகள்? அப்படியே அமைதிப்படையினர் அத்துமீறி நடந்திருந்தாலும் அதற்காக ராஜீவைக் கொன்றது எந்தவகையில் நியாயம்? தமிழர்களை நிர்மூலமாக்கு என்று சொல்லியா அவர் அமைதிப்படையை அனுப்பினார். மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய கோட்பாட்டின்படி இலங்கையின் ஒரு மாநிலமாக ஈழம் இருக்கட்டும் என்பதுதானே அவருடைய அமைதிப் பேச்சுவார்த்தையின் சாராம்சம். பங்களாதேஷைப் போல் தனி நாடாகப் பிரிக்கப்பட முடிந்த நாடு அல்லவே இலங்கை. இந்த அமைதி முயற்சியை வெற்றி பெற வைக்கத்தானே ராஜீவின் அரசு அமைதிப்படையை அனுப்பியது. யாழ்பாணம் சிங்களப் படைகளால் முற்றுகையிடப்பட்டபோது பூமாலை ஆப்பரேஷன் நடத்தியதுகூட தமிழர்களின் நலனுக்காகத்தானே. அமைதிப்படை செய்த அல்லது செய்ததாகச் சொல்லப்படும் அத்துமீறல்களுக்கு ராஜீவை எப்படிப் பொறுப்பாக்க முடியும்? எப்படி அவரைப் படுகொலை செய்ய முடியும்? இந்தக் கேள்விகள் எதற்குமே விடை கிடையாது.

உண்மையில் இரண்டாம் முறை ராஜீவ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அமைதிப்படையை அனுப்பும் வாய்ப்பு மிகவும் குறைவே. ஆனால், அவர் இந்தியப் பிரதமரானால், தனி நாடு கிடைக்கும் வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும் என்ற அச்சமே அவரைக் கொல்லக் காரணமாக இருந்திருக்கிறது. அமைதிப்படையின் அட்டூழியங்கள் என்பவை அதற்கான நியாயப்படுத்தலாகக் கண்டடையப்பட்டிருக்கிறது. எனவே, ராஜீவைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு என்பது எந்தவகையிலும் நீதியின்பாற்பட்டதாக இருக்க முடியாது.

அப்படியே அமைதிப் படை செய்த தவறுகளுக்கு ராஜீவைக் கொன்றது சரி என்றால், 18 அப்பாவி காவலர்களையும் பொதுமக்களையும் கொன்றதற்கு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கியதில் என்ன தவறு இருக்கிறது?

ஈழப் போராட்டத்தில் சக போராளிக் குழுக்களைக் கொன்றது, முஸ்லீம்களை அகதிகளாக வீட்டை விட்டுத் துரத்தியது, அவர்களைப் படுகொலை செய்தது, போரை விரும்பாத மக்களையும் மிரட்டி பண வசூலில் ஆரம்பித்து படையில் சேர்த்துப் பலி கொடுத்ததுவரை எத்தனையோ அநீதிகளை பிரபாகரன் தரப்பும் செய்திருக்கிறது. அதற்கு யார், என்ன தண்டனை தருவது? இந்தியாவில் இனி யாரும் பிரபாகரன் பெயரை உச்சரிக்கவோ, படத்தைப் பயன்படுத்துவதோ கூடாதுஎன்ற குறைந்தபட்ச தண்டனையாவது அவர்களுக்கு விதிக்க முடியுமா? அல்லது அவர்களாகவே பொறுப்புணர்ச்சியுடன் அந்த முடிவை எடுப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் நீதி, தார்மிகம் எல்லாம் அவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படவேண்டும். அவர்களுடைய செயல்களில் அந்த நற்பண்புகளை யாரும் தேடக்கூடாது. ஏனென்றால் அவர்கள் ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் செய்வது எல்லாமே சரி. அல்லது சூழ்நிலை அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது. ஆனால், மற்றவர்கள் யோக்கியர்களாக இருந்தாகவேண்டும். ஒரு நாட்டின் தலைவரை அவர்களுடைய நாட்டில் வைத்துக் கொன்றாலும் அவர்கள் மட்டும் நீதியின்படி நடந்துகொண்டாகவேண்டும்.

உண்மையில் ஈழப் பிரச்னை என்பது இன்று தமிழர்களை/தமிழகத்தை இந்திய அரசுக்கு / ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிரானதாக ஆக்கும் நோக்குடனே முன்னெடுக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியா ராஜீவைக் கொன்ற பயங்கரவாத இயக்கமாக புலிகள் இயக்கத்தைப் பார்க்கிறது. அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் தமிழர்களை பிரிவினைவாதிகளாகப் பார்க்கிறது. தமிழ் போராளிகள் தரப்போ ஈழம் கிடைக்காமல் போனதற்கு இந்தியாதான் காரணம் என்று சொல்லிக்கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவைத் தன்னுடைய எதிரியாகப் பார்க்கிறது. இப்படியாக எதிரும் புதிருமான இரண்டு சக்திகள் உருட்டி விளையாடும் பகடைக் காய்களே இந்த ஏழு உயிர்கள். எனவே இந்த ஏழு உயிர்களின் அம்மா அப்பாக்கள், மகன் மகள்கள், மாமன் மச்சான்கள், தம்பி தங்கைகள் கோணத்தில் இருந்து பிரசனையைப் பார்ப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.

சுய முனைப்பு இல்லாமல் தோற்பது அல்லது சாதகமாக இருந்த அநீதியான சூழல் மாற்றி அமைக்கப்படும்போது ஏற்படும் இழப்புகளை அராஜகமாகச் சித்திரிப்பது, வெறுப்பை அடிப்படையாக வைத்து பிரிவினை நெருப்பை மூட்டிக் குளிர் காய நினைப்பது போன்ற வழிகளைப் பின்பற்றுபவர்களைவிட கூடுதல் பொறுப்பு உணர்வும் அற நெறியும் நிச்சயம் ஒரு தேசத்துக்கு இருந்தாகவேண்டும். அந்த வகையில் அது ஏழு பேரை நிச்சயம் விடுதலை செய்தாகவேண்டும். ஆனால், அந்த தேசம் வேறு சில உத்தரவாதங்களையும் பெற்றுக்கொண்டாக வேண்டும்.

உங்களை விடுவிக்கிறேன். பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.? உங்கள் பிரிவினைவாத கோஷங்களைக் கைவிடுவீர்களா? ராஜீவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து விழுந்து வணங்குவீர்களா? 18 அப்பாவித் தமிழர்களின் உருவப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி புலிகளால் கொல்லப்பட்ட சக குழுக்களின் தலைவர்களின் படங்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கும். மசூதிகளில் தொழுகை நடத்தியபோது கொல்லப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் திருவுருவப்படங்களும் அங்கு இருக்கும். வலுக்கட்டாயாமாக துப்பாக்கி திணிக்கப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களும் அங்கு இருக்கும். அந்த நினைவு மண்டபத்தில் ஒரு மிதியடியும் போடப்பட்டிருக்கும். அதில் பிரபாகரனின் உருவப்படம் பதித்திருக்கும். அதை மிதித்தபடி சென்று நீங்கள் அத்தனை படங்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் செய்வீர்களா போராளி அற்புதம் அம்மாவே… அப்பாவி பேரறிவாளரே… உங்களைப் போலவே அப்பாவிகள்தானே கொல்லப்பட்ட அத்தனை பேர்களும். அவர்களைக் கொன்ற இயக்கத்தின் சார்பில்தானே இன்றும் நீங்கள் இயங்கிவருகிறீர்கள். உங்களை ஆதரிக்க முடியும். ஆனால், உங்களை முன்வைத்து நடத்தப்படும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

அற்புதம் அம்மா… உங்கள் மகன் இன்னமும் உயிருடன் இருக்கிறான். நீதி கேட்டு மன்றாட ஓர் இடம் இந்த இந்தியாவில் இன்றும் இருக்கிறது. பிரபாகரனின் ஈழத்தில் அப்படியான ஒரு இடம் ஒருபோதும் இருந்ததே இல்லையே. திராவிட இயக்கப் பின்புலம் இருந்த பிறகும் சுய சிந்தனை கொண்டவராக நீங்கள் இருக்கக்கூடும். உங்கள் நிஜமான கண்ணீர்த்துளிகளைக் கொஞ்சம் இவர்களுக்காகவும் சிந்துங்களேன். ஒட்டு மொத்த இந்திய மனசாட்சியை நோக்கி அல்லவா உங்கள் மன்றாடல்களை முன்வைக்கிறீர்கள். நீங்களும் அதன் பெருங்கருணைக்குக் கொஞ்சம் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்களேன். ஏனென்றால் உங்கள் மகன் வெறும் உங்கள் மகன் மட்டுமே அல்ல. துரோக நாடகத்தின் துருப்புச் சீட்டு. பிரிவினை விளையாட்டின் பிரதான அம்பு.

***

பாஞ்சாலங்குறிச்சி : அறியப்படாத பலவீனங்கள்

veerapandiya_kattapomman_tamil_king_statue_tamil_naduகட்டபொம்மன் பற்றிய கதைப்பாடல் மற்றும் கட்டபொம்மன் பற்றிய திரைப்படங்கள் கட்டபொம்மனை ஒரு வீர, தீரப் பேரரசனாகக் காட்டுகின்றன. ஆனால், ஆவணங்கள் வேறுவிதமாக அவரைக் காட்சிப்படுத்துகின்றன.

கட்டபொம்மனின் முன்னோர்களின் செயல்பாடுகள் மெச்சத்தக்கவையாக இல்லை. கட்டபொம்மனின் நிர்வாக முறைமை போற்றத்தக்கதல்ல. நீங்கள் இதுநாள் வரை கட்டபொம்மன் மீது கொண்ட வியப்பும் ஒருவிதத்தில் மாயையும் பின்வருபவற்றை வாசிக்கும்போது உங்களிடமிருந்து விலக வாய்ப்புள்ளது.

அவரது பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு இந்திய விடுதலைக்கு கணிசமான அளவில் உதவியது என்பது உண்மையே. ஆனால், கொண்டாடும் அளவுக்கு இல்லை.

பாஞ்சாலங்குறிச்சி – ஒரு பின்னோட்டம்

மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்த பின்னர் அவர்களுக்கு வரி கொடுத்தும் படைவீரர்களைத்  திரட்டிவழங்கியும் வந்த பாளையக்காரர்கள் தனிக்காட்டு ராஜாக்களாக மாறினர். இந்நிலையில் ஆர்க்காட்டு நவாபு வெறும் பொம்மை மன்னராக கர்நாடகத்தில் வசித்து வந்தார். நாட்டின் முழு நிர்வாகமும் பிரிட்டிஷாரின் கைகளில் இருந்தன.

கிழக்கிந்திய கம்பெனியினர் ஆர்க்காட்டு நவாபுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி திருநெல்வேலிச் சீமையின் வரி பெறும் உரிமையைத் தம் வசம் மாற்றிக்கொண்டனர். நான்கு ஆண்டுகள் கழித்து நவாபு அவ்வுரிமையை கி.பி. 1785ஆம் ஆண்டு தன்னுடையதாக்கிக்கொண்டார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1790ஆம் ஆண்டு பிரிட்டிஷார் அவ்வுரிமையை நவாபிடமிருந்து பறித்துக்கொண்டனர்.

இக்காலக்கட்டத்தில் திருநெல்வேலிச் சீமையின் பாளையப்பட்டுகள் இரண்டாகப் பிளவுபட்டன. கிழக்குப் பகுதியில் தெலுங்கர்களின் கை ஓங்கியிருந்தது. இப்பகுதியிலுள்ள பாளையப்பட்டுகளுக்குப் பாஞ்சாலங்குறிச்சி தலைமையிடமாக இருந்தது.

பஞ்சாயத்துக்காரர்கள்

பாஞ்சாலங்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாளையப்பட்டுக்களைக் கம்பளத்து நாயக்கர்கள் ஆண்டனர். கம்பளத்தை விரித்து அதன்மீது அமர்ந்து நீதி வழங்கியதால் இந்த இனத்தவர்கள் இப்பெயரினைப் பெற்றனர். இக் கம்பளத்து நாயக்கமார்களுக்குப் போடி நாயக்கனூர், பேரையூர், சாப்டூர், தேவாரம், தொட்ட நாயக்கனூர், செக்க நாயக்கனூர், ஆயக்குடி, கண்டம நாயக்கனூர், அம்மைய நாயக்கனூர், இடையக்கோட்டை செங்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பதினெரு பாளையங்கள் உரிமையுடையனவாக இருந்தன.

வீரபாண்டியபுரம்

இன்றைய ஒட்டபிடாரம் அக்காலத்தில் அழகிய வீரபாண்டியபுரம் என்ற பெயரில் இருந்த்து. அங்கு ஆட்சிபுரிந்து வந்த நாயக்க வம்ச மன்னர் ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர்  இனத்தைச் சார்ந்தவர். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின்னர் தமிழில் கட்டபொம்மன் என்றாயிற்று.

பொல்லாப்பாண்டியன்

கி.பி. 1744ஆம் ஆண்டு நாயக்க பரம்பரையின் இறுதி வாரிசு விஷம் குடித்து மாண்டபின்னர் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக இரண்டாம் கட்டபொம்மு தன்னை சின்ன நவாபு என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினார்.  இவருக்குப் பொல்லாப்பாண்டியன் என்ற பெயரும் உண்டு.

கி.பி. 1755ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி கர்னல் ஹெரோன் பாஞ்சாலங்குறிச்சியின் மேல் போர்தொடுத்தார். அவருடன் இணைந்து நவாபின் முழுஅதிகாரம்பெற்ற படைத்தளபதி யூசுப்கானும் வந்தான். போரைத் தவிர்ப்பதற்காகப் பொல்லாப்பாண்டியன் ஆர்க்காட்டு நவாபுக்கு வரிசெலுத்து ஒப்புக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி பஞ்சத்தில் இருப்பதால் தவணைமுறையில் வரிசெலுத்துவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால், அவர் வரியினை முழுமையாகச் செலுத்தும் வரை பொல்லாப்பாண்டியனின் சில முக்கியமான ஆட்களை பிணைக்கைதிகளாக யூசுப்கான் அழைத்துச் சென்றுவிட்டான்.

இந்நிலையில் பூலித்தேவன் பாளையக்காரர்களைத் திரட்டி வரிகொடா இயக்கத்தை நடத்தினார். அதில் பொல்லாப்பாண்டியன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், யூசுப்கானுடன் இணைந்து பூலித்தேவனுக்கு எதிராகப் போர்புரிந்தார். 21.03.1756 இல் நடைபெற்ற இப்போரில் பூலித்தேவன் தோற்றார்.

பின்னர் திருநெல்வேலிச் சீமையின் வரிபெறும் உரிமையை 11லட்சரூபாய்க்குக் குத்தகையாக அழகப்ப முதலியாருக்குக் கிழக்கிந்திய கம்பெனி வழங்கியது. வரி பெறுதலில் குழப்பம் நிலவியது. வரிபெறும்பொறுப்பிலிருந்து நவாபு மபூஸ்கான் என்பவரை நீக்கினார். அவர் திருவிதாங்கூர் மன்னனின் உதவியுடன் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களின் மீது போர்தொடுத்தார். அப்போரில் பொல்லாப்பாண்டியன் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகப் போரிட்டார். இதற்காக அவருக்குச் சில கிராமங்களை பிரிட்டிஷார் பரிசளித்தனர். ஆனாலும், இவர் தரவேண்டிய வரிப்பணத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்ட பின்னரே பிணைக்கைதிகளாக அழைத்துச் சென்றவர்களை யூசுப்கான்  விடுவித்தான்.

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு

கி.பி. 1760ஆம் ஆண்டு பொல்லாப்பாண்டியன் இறந்தான். இவருக்குப்பின் பாஞ்சாலங்குறிச்சியின் தலைமையை ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு ஏற்றார்.

கி.பி. 1766ஆம் பிரெஞ்சுப்படை டிலாந்த் என்பவரின் தலைமையில் பூலித்தேவர் மற்றும் அவருக்கு வேண்டிய பாளையங்களின் மீது போர்தொடுத்தது. அந்நிலையில் பூலித்தேவர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்முவின் உதவியைக் கோரினார். ஆனால், ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு மறுத்துவிட்டார். தந்தை செய்த அதே தவறினைத் தானும் செய்தார். பூலித்தேவர் இப்போரிலும் தோற்றார்.

யூசுப்கான், நவாபுக்கும் பிரிட்டிஷாருக்கும் எதிராகச் செயல்படத் தொடங்கியதால் 15.10.1764ஆம் நாள் கொலை செய்யப்பட்டார். கூட்டணிகள் மாறின. காலம் கடந்தது.

பிரிட்டிஷ்காரன் வேண்டாம் டச்சுக்காரன் போதும்

கி.பி. 1767ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கர்னல் கோம்பெல் முன்னறிவிப்பின்றி கொல்லம் கொண்டான் கோட்டையை முற்றுகையிட்டார். மூன்று நாள் முயன்று கோட்டையைக் கைப்பற்றினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. கோபம் கொண்ட கர்னல் கோம்பெல் சேத்தூர், சிவகிரி ஆகிய பாளையங்களைத் தாக்கினார். அங்கும் மக்களோ, செல்வமோ, ஆயுதங்களோ இல்லை. அவருக்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு தன் கோட்டையை விட்டுத் தப்பியோடினார். பின்னர் டச்சுக்காரர்களின் உதவியுடன் தன் கோட்டைக்குத் திரும்பி, கோட்டையைப் பலப்படுத்தினார். இவர்களின் செயல்பாடுகள் குறித்து லார்டு இர்வின் பிரபு தன் தலைமையிடத்துக்குக் கடிதம் எழுதினார்.

கி.பி. 1783ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தளபதி புல்லர்டன் தலைமையில் ஒரு பெரும் படை புறப்பட்டு வந்தார். புல்லர்டனின் ஆட்கள் 08.08.1783ஆம் நாள் ஜெகவீர பாண்டிய கட்டபொம்முவைச் சந்தித்தனர். திறைப்பணத்தைத் செலுத்தக்கோரினர். தமக்கு டச்சுக்காரர்கள் துணைபுரிவதால் துணிவுடன் திறை செலுத்த மறுத்தார்.

ஒருநாள் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு நாயக்கன் சொக்கம்பட்டி என்ற பாளையத்தின் மீது போர் தொடுக்கச்சென்றார். அச் சூழலைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் தளபதி புல்லர்டன் பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்தார். கைப்பற்றினார். அங்கு 40,000 டச்சு வராகன்களும் துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வெடி மருந்துகளும்  புல்லர்டனுக்குக் கிடைத்தன.

இதனை அறிந்த ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு பாளையங்கோட்டை வழியாகச் சென்று சிவகிரி பாளைத்தில் ஒளிந்துகொண்டார். அங்குச் சென்ற புல்லர்டன் கோட்டையை முற்றுகையிட்டார். பின்னர் 1,500 டச்சு வராகன் கொடுத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீட்டுக்கொள்ளுமாறு தூது அனுப்பினார். அதற்கு ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு  ஒப்புக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் திரும்பப் பெற்றார்.

யார் இந்த நவாப்?

தமிழகப் பகுதிகளில் வரிவசூல் செய்வதற்காக மொகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் 1698ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் நவாப் எனும் பதவி. முதலில் மொகலாய வம்சாவழியினரான நேவாயெட்ஸ் நவாப் ஆகப் பதவி வகித்தனர். முகலாயப் பேரரசு நலிவுற்ற காலத்தில் வாலாஜா எனப்படும் வம்சா வழியினர் நவாப் பட்டத்திற்கு வந்தனர்.

கி.பி.1750ஆம் ஆண்டில் நேவாயெட்ஸ் வம்சத்தைச் சேர்ந்த சந்தாசாகிப்பிற்கும், வாலாஜா வம்சத்தைச் சேர்ந்த முகம்மது அலிக்கும் நடந்த பதவிச் சண்டையில், சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களையும், முகமது அலி பிரிட்டிஷ்காரர்களையும் அடியாள் படையாக அழைத்தனர். கர்நாடகப் போர் மூண்டது. முகமது அலி வென்றார். தன் வெற்றிக்குத் துணையாக இருந்த பிரிட்டிஷ்காரர்களுக்கு நன்றிக் கடன்பட்டார் முகமது அலி. இந்த நன்றிக்கடன் நாளடைவில் முகமது அலியின் பேராசையால் பணக்கடனாகியது.

பிரிட்டிஷாரின் படையைப் பயன்படுத்தியே இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவின் சக்ரவர்த்தியாகி விடலாம் என்பது முகமது அலியின் கனவு. எனவே, பாளையக்காரர்களுடன் வரிவசூல் தொடர்பாக எழும் சிக்கல்கள் தொடங்கி, எல்லா விவகாரங்களுக்கும் பிரிட்டிஷ் படைகளையே கூலிப்படையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். காலப்போக்கில் பிரிட்டிஷ் படைச்செலவுக்கு அடைக்கவேண்டிய கடன் தொகை மிகுந்தது.  ஒரு கட்டத்தில் நவாப் திவால் அடையும் நிலைக்குச் சென்றான். இறுதியில் வேறுவழியின்றி தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக முகமது அலி பிரிட்டிஷாருக்கு எழுதிக் கொடுக்கத் தொடங்கினார்.

கி.பி. 1785ஆண்டுக்கும் கி.பி. 1790ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் திருநெல்வேலிச் சீமையின் வரிவசூல் செய்யும் உரிமையை நவாப் தாமே எடுத்துக்கொண்டார். கி.பி. 1790ஆண்டுக்கும் கி.பி. 1795ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷார் நவாபின் உரிமைகளைப் பறித்துக்கொண்டனர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை சீர்கொடத்தொடங்கியது. இந்நிலையில்  ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு மாண்டார்.

கெட்டிபொம்மு மரபின் ஏழாவது மன்னர்

ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர்.

இவர்களுக்கு 03.01.1760ஆம் நாள் பிறந்த மகனே வீரபாண்டியன் அல்லது கருத்தையா எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனுக்கு குமாரசுவாமி என்ற சிவத்தையா, துரைசிங்கம் என்ற ஊமைத்துரை ஆகிய தம்பியர்களும் ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். கெட்டிபொம்மு மரபின் ஏழாவது மன்னரான வீரபண்டிய நான்காம் கட்டபொம்மு 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

மக்கள் விரோத அரசு

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்தார். அதற்கு நிதியாக மக்களிடம் 84 சதவிகித மகசூலைப் பெற்றார். மக்களின் உடைமைகளையும் பணத்தையும் பறித்தார். இவரது கொள்ளைகள் குறித்து கி.பி.1818ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியார் எழுதிய ‘திருநெல்வேலியின் அரசியல்’ என்ற நூல் விரிவாக விளக்கியுள்ளது. இவரின் ஆட்சி மக்கள் விரோ அரசாட்சியாகவே இருந்துள்ளது.

பாளையத்து எல்லையை நிர்ணயித்த ஆங்கிலேயர்கள் அருங்குளம், சுப்பலாபுரத்தை எட்டயபுரத்துக்கு வழங்கியதாலும், ஆற்காடு நவாப்பிடம் ஒப்பந்தம் செய்து பாஞ்சாலங்குறிச்சியில் ஆதிக்கம் செலுத்தியதாலும் கட்டப்பொம்மன் பிரிட்டிஷார் மீது கடுப்பில் இருந்தார்.

இந்நிலையில், கி.பி. 1797ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் கட்டபொம்மனிடம் கப்பம் கேட்டனர். கட்டபொம்மன் மறுத்தார். கி.பி.1797ஆம் ஆண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டார். அப்போரில் கட்டபொம்மன் வென்றார்.

வா ராஜா வா

கி.பி. 1797ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் பாளையக்காரர்கள் கலகம் செய்தனர். அதனை அடக்க பிரிட்டிஷ் அரசு டபிள்யு. எல். ஜாக்ஸன் என்பவரை திருநெல்வேலி கலெக்டராக நியமித்து, அனுப்பி வைத்தது.

அவர் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணைபிறப்பித்தார். அவரைச் சந்திப்பதற்காக கட்டபொம்மன் தன்னுடன் சிறிய படையுடன் பல மைல்கள் பயணித்தார். டபிள்யு. எல். ஜாக்ஸனைச் சந்திக்க இயலவில்லை. டபிள்யு. எல். ஜாக்ஸன் கட்டபொம்முவைச் சொக்கம்பட்டி, தேற்றூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பேறையூர், பாவாலி, பள்ளிமடை, கமுதி ஆகிய ஊர்களுக்கு அலைக்கழித்தார். அவரை இராமநாதபுரம் வரவழைத்துச் சிறைப்பிடிக்க டபிள்யு. எல். ஜாக்ஸன் திட்டமிட்டார்.

டபிள்யு. எல். ஜாக்ஸன் – கட்டபொம்முவின் சந்திப்பு 05.09.1798ஆம் நாள் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றி, கைலப்பில் முடிந்தது. பிரிட்டிஷ் படைத்தலைவன் கிளார்க் இறந்தார்.  கட்டபொம்முவையும் அவரின் சிறு படையினரையும் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிவர வெள்ளைத்தேவன் அல்லது பாதர் (பகதூர்) வெள்ளை என்பவர் உதவினார். ஆனால், பாஞ்சாலங்குறிச்சியின் செயலர் சுப்பிரமணிய பிள்ளை பிரிட்டிஷாரால் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

டபிள்யு. எல். ஜாக்ஸனின் இச்செயல்பாடு பிரிட்டிஷ் அரசுக்குப் பிடிக்கவில்லை. டபிள்யு. எல். ஜாக்ஸனை நீக்கியது. அவருக்குப் பதிலாக லூஷிங்டன் என்பவரை நியமித்தது. சுப்பிரமணிய பிள்ளை விடுவிக்கப்பட்டார். கட்டபொம்முவின் போக்கு  லூஷிங்டனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டது.

கெட்ட நேரம்

இந்நிலையில் மேஜர் பானர்மன் தலைமையில் பெரும்படை கி.பி. 1799ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியின் மீது மோதியது. ஆனால், அப்போது திருச்செந்தூர் விசாக விழாவை முன்னிட்டு கட்டபொம்முவின் சகோதரர்கள் பாதிப் படையுடன் திருச்செந்தூர் சென்றிருந்தனர். சுப்பிரமணிய பிள்ளை ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்தார். கட்டபொம்முவுடன் வீரபத்திரபிள்ளையும் கணக்கன் பொன்னைப் பிள்ளையும் மீதிப் படையினரும் இருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ் படைக்கு லெப்டினண்டு டல்லஸே தலைமைதாங்கினார். காலின்ஸ், ஓரெய்லி, புரூஸ், டக்ளஸ் டார் மிக்ஸ், பிளேக் பிரெய்ன் ஆகிய பிரிட்டிஷ் தளபதிகளும் உடனிருந்தனர்.

கோட்டைவிட்டனர்

05.09.1799 ஆம் நாள் அதாவது டபிள்யு. எல். ஜாக்ஸன் – கட்டபொம்முவின் சந்திப்பு நிகழ்ந்த ஓராண்டு கழித்து பிரிட்டிஷ் பிரங்கிகளால் பாஞ்சாலங்குறிச்சி பாதி தகர்க்கப்பட்டது.  இரண்டுநாட்கள் கழித்து 12 பவுண்டு திறனுள்ள பீரங்கிகளால் தாக்கினர். மண்கோட்டை தகர்ந்தது. ஆனால், அங்கிருந்து கட்டபொம்மனும் அவனுடைய ஆட்களும் தப்பிவிட்டனர். கோட்டை தாக்கப்படும் தகவல் அறிந்த சுப்பிரமணியபிள்ளையும் கட்டபொம்மன் தம்பியரும் வேறு வழியாக வந்து கட்டபொம்மனுடன் இணைந்துகொண்டனர்.

மேஜர் பானர்மனின் விரர்களும் எட்டயபுரப்பாளையக்காரரும் கட்டபொம்மனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கோலார் பட்டிக்கோட்டையில் கட்டபொம்மன் இருப்பதை அறிந்த பிரிட்டிஷார் அங்குசென்றனர். கட்டபொம்மன் அவர்களுடன் போரிட்டபடியே தன்னுடைய முதன்மையான ஆறு நபர்களுடன் தப்பிவிட்டார். கட்டபொம்மனின் 34 வீரர்களும் சுப்பிரமணியபிள்ளையும்  பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுப்பிரமணியபிள்ளை தவிர்த்து மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கட்டபொம்மனுக்குத் துணையாக இருந்த நாகலாபுரம், கோலார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களுள் காடல்குடி பாளையக்காரர் மட்டும் தப்பியோடினார். மற்றவர்கள் பிரிட்டிஷாரிடம் சரணடைந்தனர்.

மருமகனா? பணமா? 

சரணடைந்தோரில் சுந்தரபாண்டிய நாயக்கரை மட்டும் மன்னிக்காமல் அவரின் தலையைத் துணித்தனர். சுப்பிரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷ் படைத்தலைவன் காலின்ஸைக் கொன்ற வெள்ளைத்தேவனை பிரிட்டிஷாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் அவரைக் காட்டிக்கொடுப்பவருக்கு 1000 வெள்ளி பரிசு என்று அறிவித்தனர். இந்தியப் பணத்தில் ரூபாய் 5,000.00 மதிப்புடையது. வெள்ளைத்தேவனின் மாமன் அப்பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு தன் மருமகனான வெள்ளைத்தேவனைக் காட்டிக்கொடுத்தான். ஆற்றூரில் தானாபதி பிள்ளை குடும்பத்தைச் சிறை பிடித்து சென்னைக்குக் கொண்டு சென்றனர்.

இரண்டாவது தற்கொலைப் படைப் போராளிகள்

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தரலிங்கம். இவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தன் ஒற்றர் படைக்கு அவரைத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் பிரிட்டிஷாருக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்குப் பல பிரிட்டிஷ் சிப்பாய்கள் மாண்டனர்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க பிரிட்டிஷார் கி.பி. 1799ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். பிரிட்டிஷ் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பிரிட்டிஷ் படை குவிந்திருந்தது.

08.09.1799ஆம் நாள் சுந்தரலிங்கம் தன் முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமிட்டு பிரிட்டிஷாரின் வெடிமருந்து கிடங்குப் பகுதிச் சென்றார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலியின் பாணியினைக் கையாண்டு சுதந்திரப் போரின் இரண்டாவது தற்கொலைப் படைப் போராளிகளாகப் பெயரெடுத்தனர்.

சூழ்ச்சி விருந்து

கட்டபொம்மன் காட்டில் ஒளிந்திருப்பதை அறிந்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான், தன் தளபதி முத்துவைர அம்பலக்காரன் வழியாக அவரை விருந்துக்கு அழைத்து, அடைக்கலம் அளிப்பதுபோல் நாடகமாடி அவரை 01.10.1799ஆம் நாள் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்.

கட்டபொம்மனைக் கைதுசெய்த பிரிட்டிஷார் அவரை 16.10.1799ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள பழைய கயத்தாறு கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு புளியமரத்தில் தூக்கிலிட்டனர். கட்டபொம்மனின் தம்பி சிவத்தையாவும் ஊமைத்துரையும் சிறைபிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.

கோட்டைகள்தான் எதிரிகள்

பின்னர் ஆழ்ந்து சிந்தித்த பிரிட்டிஷ் மேஸர் பானர்மன் கோட்டைகள் இருப்பதனால்தானே இவர்கள் நம்மை வந்துபார் என்கிறார்கள்? கோட்டைகளை அழித்துவிட்டால் என்ன? என்று முடிவெடுத்தனர். தென் தமிழகத்தில் இருந்த பாளையக்காரர்களைப் பத்துநாட்கள் தம்முடன் வைத்துக்கொண்டு அவர்களின் ஆணையின்பேரில் 42 கோட்டைகளை பீரங்கிகளின் உதவியால் தரைமட்டமாக்கினர். அவரகளின் படைக்களங்களைப் பறிமுதல்செய்தான். கோட்டைகளைக் கட்டுவதும் படைக்களம் வைத்திருப்பதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரானது என்று அறிவித்தார்.

சிறைக் கலவரம்

அச்சிறையில் 02.02.1801ஆம் நாள் கலகம் விளைவித்து தப்பிய ஊமைத்துரையும் அவரது வீரர்களும் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையை வலுப்படுத்தத் திட்டமிட்டனர். கண்டிக்குப் போவதாகக் கடிதம் மூலம் பிரிட்டிஷாருக்குத் தகவல் அனுப்பிவிட்டு, பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தார். அங்குத் தொழிலாளிகளோடு தொழிலாளியாக நின்று ஆறு நாட்களில் கோட்டையைச் சீரமைத்தார். ஆளத்தொடங்கினர்.

இதனை அறிந்த பிரிட்டிஷார் மேஜர் மெக்காலே பெரும்படைகொண்டு பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தாக்கினர். முடியவில்லை. மீண்டும் அவரது தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801ஆம் நாள் முதல் 24.05.1801ஆம் நாள் வரை முற்றுகையிட்டது.

ஊமைத்துரையுடன் போரிட்ட  ‘பேக்கார்ட்‘ என்ற அதிகாரி போர் கைதியாக மாட்டிக்கொண்டார். அவர் மனைவி உயிர்பிச்சை கேட்க அவரை ஊமைத்துரை விடுவித்தார்.

பின்னர், திருச்சியிலிருந்து வந்த பிரிட்டிஷ் படையினர் 3,000பேர் சேர்ந்து பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக மலபாரிலிருந்தும் திருச்சியிலிருந்தும் துணைப் படைகள் வந்துசேர்ந்தன. அவற்றிற்கு கலோனப் அக்னியூ என்பவர் தலைமை தாங்கினார். கோட்டை தகர்க்கப்பட்டது.

ஜேம்ஸ் வெல்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரி எழுதிய ‘போர் நினைவுகள்‘ என்ற நூலில் “முருக பக்தர்கள் வேடமிட்டு ஊமைத்துரையும் செவத்தையாவும் மீட்கப்பட்டபோது சுமார் ஒரு மைல் தூரத்தில் தான் நிராயுதபாணியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் மதுவிருந்தில் களித்திருந்தனர். ஊமைத்துரையும் உடன்வந்த 200க்கு மேற்பட்ட வீரர்களும் அதைக் கவனித்திருந்தால் இன்று வரலாறே மாறியிருக்கும்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஊமைத்துரை தப்பியோடி, மருது பாண்டியரிடம் தஞ்சமடைந்தார். அவருக்கு அடைக்களம் கொடுத்ததற்காக பிரிட்டிஷார் மருதுபாண்டியரின் காளையார் கோயிலை 01.10.1801ஆம் ஆண்டு கைப்பற்றி, மருது பாண்டியர்களைத் திருப்பத்தூர் கோட்டைக்கு அருகில் தூக்கிலிட்டனர்.

ஊமைத்துரையைக் கைதுசெய்து, பாஞ்சாலங்குறிச்சியின் புதிய கோட்டையைத் தகர்க்கப் பயன்பட்ட பீரங்கிகளை வைத்திருந்த பீரங்கிமேட்டில் தூக்குமேடை அமைத்து அங்கேயே தூக்கிலிட்டனர்.

வரலாற்றிலிருந்து அழி

30 ஏக்கர் பரப்பளவுள்ள பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையும் கட்டபொம்மனின் தர்பார் மண்டபம், மருந்துப்பட்டறை, பீரங்கிமேடு, அந்தப்புரம், யானைகட்டிய மண்டபங்கள் ஆகியன அனைத்தும் முழுவதுமாக மண்ணோடு மண்ணாக்கப்பட்டு அந்நிலத்தில் உழுது ஆமணக்கு பயிரிடப்பட்டது. அப்போரில் உயிர்நீத்த 42 பிரிட்டிஷ் வீரர்களுக்குக் கல்லறை அமைக்கப்பட்டது.

பாஞ்சாலக்குறிச்சிப் பாளையம் எட்டயபுரம், மணியாச்சி முதலிய பாளையங்களிடையே பங்கிடப்பட்டது. திருநெல்வேலி கெஜெட்டிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் நீக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களிலும் அப்பெயர் கவனமாக நீக்கப்பட்டது.

 (இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்).

சாதி என்றொரு மாயம்

sultanateபறையர்கள் / அத்தியாயம் 2

முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.

தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.

பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.

அதாவது, கூட்டங்கள் அல்லது குழுக்கள் ஒவ்வொன்றும் குலத் தலைமை, தனிக் குல மரபுச் சின்னம், பொது மண உறவில் தடை ஆகியவற்றின் மூலமாக ஒன்றையொன்று வேறுபடுத்திக் கொண்டன. குலக் குழுக்களிடம் காணப்பட்ட இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளையே சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குரிய அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம். ஆதிகால மனிதன் அல்லது குழுக்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களே குழுக்களைப் பிரிக்கும் குலச் சின்னங்களாக அமைந்தன.

0

மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் படிநிலை சமூகம் அமைந்திருந்தது. ஆயர் அல்லது இடையரும், வேட்டுவர் அல்லது வேடரும் உழவருக்கு அடுத்த படியில் உள்ளவர்கள், பொற்கொல்லர், கருமான், தச்சர், குயவர், முதலிய கலைத் தொழிலாளர் ஆயர்களுக்கு அடுத்த படியிலுள்ளவர்கள். அவர்களுக்கு அடுத்தது, படையாச்சியர் அல்லது படைக்கலம் மேற்கொண்டவர்கள். வலையர் அல்லது மீன் தொழிலாளரும் புலையர் அல்லது தோட்டிகளும் கடைசிப் படியிலிருந்தார்கள்.

உயர் வகுப்பினர் தெருவில் சென்றபோது தாழ்வகுப்பினர் அவர்களுக்கு வழிவிட்டனர். பெருமகனைக் கண்ட புலையன் அல்லது தோட்டி வழிபடுபவன் போல இருகைகளையும் கூப்பித் தலைவணங்கினார்.

அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை. தமிழரிடையேயுள்ள மேற்காட்டிய வகுப்பு முறை மெகஸ்தனிஸ் கண்டு தீட்டிய பண்டை மகதப்பேரரசிலுள்ள மக்கள் நிலையைப் பெரிதும் ஒத்துள்ளன.

மெகஸ்தனிஸ் குறித்துள்ளபடி மக்கள் தொகுதி ஏழு வகுப்புகளாகப் பிரிவுபட்டிருந்தது.
முதலாவதாக, அறிவர் வகுப்பு. இவர்கள் தொகையில் மிகமிகக் குறைவானவர்களே. தனிப்பட்ட மனிதர்களால் அவர்கள் வேள்விகளிலும் மற்றத் திருவினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். அறிவர்கள் பொது மக்களுக்கு அந்த ஆண்டின் பஞ்சப்பருவங்கள், மழை, அரசியல் கோளாறுகள் ஆகியவை பற்றி அறிவுரை நல்கினர். இந்த அறிவர்கள் ஆடையற்றவர்களாகவே இருந்தார்கள்.

இரண்டாவதாக, உழவர் வகுப்பு. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரம் முழுவதையும் நிலம் பண்படுத்துவதிலேயே செலவிட்டனர். ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும், கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர்.

நான்காவது, தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும், கவசத் தொழிலாளரும், எல்லா வகைப்பட்ட கலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.

போர் வீரர் ஐந்தாம் வகுப்பினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்து வந்தனர். ஆறாவது வகுப்பு மேற்பார்வை செய்தது. நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ, தண்டலாளருக்கோ அறிவிப்பது அவர்கள் கடமை.

ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகரங்களில் பொது ஆட்சிக்காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தாரைக் கொண்டது.

ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறுவதற்கு அனுமதியில்லை. ஓர் உழவன் இடையனாகவோ அல்லது இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் கலைத்தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது. அறிவர் வகுப்புக்கு மட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக்களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல.

0

இன்று ஒவ்வொரு சாதியும் அகமண உட்சாதிகளாகப் பிரிந்து ஒவ்வொன்றுக்குள்ளும் கரை, கூட்டம், வகையரா, பரம்பரை, வம்சம், குலம் என்று சொல்லக்கூடிய பல புறமணக் குழுக்கள் உள்ளன.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு சாதியும் பல கால்வழிக் குழுக்களாகப் (வம்சம்) பிரிகின்றன. ரத்த உறவையும், சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையரா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்பட்டுகின்றன.

தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட சாதி இன்னல்களைக் கண்டு பல அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவர். இது மக்கள் சமூகத்தில் வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் திருமந்திரம்) என்று கூறி மக்களைத் திருத்த முயன்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். ராமலிங்க அடிகளார், சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த. அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதி குலமென்றும்…ஓதுகின்ற பேயாட்டம் என்றும் சாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.

0

ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும் ‘சாதி’ என்ற மாய கௌரவத்தை இங்கு யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

சாதிகளின் இருப்பு ஒருபுறம் இருந்தாலும் சாதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெருகவே செய்தது. கி.பி. 52க்குப் பின் மலபாரில் வந்து குடியேறிய அராபியர்கள் தொடர்பால் ‘மாப்பிள்ளை’ என்னும் சாதியினர் தமிழகத்தில் தோன்றினர். கி.பி. 6ம் நூற்றாண்டில் ஹர்ஷர் காலத்தில் சமூகத்துறையில் சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை ஆகியவை வலுவாக மேற்கொள்ளப்பட்டன.

கி.பி. 7ம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து வந்தது. பிறப்பால் சாதி தோன்றுகிறது என்னும் கருத்து வேரூன்றலாயிற்று. தொழில் அடிப்படையில் பிறந்திருக்கக்கூடிய சாதி, தொழில் மாறினாலும் மாறாத நிலையில் நிலைபெற்றது. இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், சிறுசிறு சாதிகளும் புது சிறு உட்சாதிகளும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயத்திலிருந்த சாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது.

13ம் நூற்றாண்டில் மன்னன் இறைவனாகவே கருதப்பட்டான். அவன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து நிலவியது. உடையார், ஆழ்வார், பெருமாள் ஆகிய சொற்கள் இருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன. சமய குருக்கள் அரசவையிலேயே சமயக் கடமைகளில் துணை புரிந்தனர். அவர்களுக்கும் உடையார் எனப் பெயர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கல்வி, உயர்மட்டத்திலிருந்த குடிமக்களுக்கே உரியதாக இருந்தது. வேதம், புராணம், இலக்கணம், தர்க்கம் போன்ற வடமொழிக் கல்வியே நிறுவனங்களில் அளிக்கப்பட்டது. பிற தொழில்நுட்பங்கள், கலைகள் ஆகியவை குல மரபில் வழிவழியாகவே கற்றுக் கொடுக்கப்பட்டன.

மக்களின் வேளாண் பெருமக்கள், வணிகப்பெருமக்கள், பிராமணர்கள், தேவரடியார்கள் சமுதாயத்தில் மேல்தட்டில் இருந்தனர். உழுவோர், படைவீரர்கள், தொழில் வினைநர்கள் ஆகியோர் அடுத்த நிலையிலும் விளங்கினர். நிர்வாகம்; நாடு, நகரம், சபை ஆகியவற்றின் கைகளில் இருந்தது. ஏனையோர் அனைவரும் இம்மூன்றைச் சார்ந்து வாழ்ந்தனர். வேளாளரில் இருந்தும் பிராமணரிலிருந்தும் அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றினர்.

வேந்தர்கள் குலங்களையும், பிராமணர்கள் கோத்திர, சூத்திரங்களையும் கொண்டிருந்தனர்.
சாதிகள் தொழிலடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அவரவர்க்குத் தனியான குடியிருப்புகளும் இருந்தன என்பதைக் கம்மாளச் சேரி, பறைச்சேரி, தளச்சேரி போன்ற பெயர்கள் காட்டும். மனுவின் நெறி இன்று சாதியொழுக்கத்தைக் காப்பதை அரசர்கள் தம் பெருமையாகக் கருதினர். அவ்வச் சாதியினர் தம் பெருமையினைப் பறைசாற்றிக் கொள்ள இலக்கியங்களையும் படைத்துக் கொண்டனர்.

0

தேவை இன்னொரு பசுமைப் புரட்சி!

1

எத்தனை பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தி அல்லவே? தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை!! நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப் பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக், பராக்!

சர்வதேச உணவு மற்றும் விவசாயக் கழகம், கடந்த ஜூலை மாதம் “உணவுக் குறியீடு” 213-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்த உணவுக் குறியீடு என்பது, குறிப்பிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் நிறைந்த ஒரு உணவுக் கூடையின் விலை. தற்போது ஒரே மாதத்தில் 6% அதிகரித்துள்ளதுதான் கவலைக்குரியது.

கடந்த 2008-ம் ஆண்டு இதேபோல உணவுத் தட்டுப்பாடும், தொடர்ச்சியாக விலைவாசி உயர்வும் இருந்தது நினைவிருக்கிறதா? அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் பழக்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது!

ஆனால், இந்த மற்றும் அடுத்த வருடம் அதைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.

2

கடந்த 56 வருடங்களாக இல்லாத அளவிலான அமெரிக்காவின் வறட்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கும்கூட. இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பெய்யாமல் பொய்த்துக் கெடுத்திருக்கும் பருவ மழை, ஐரோப்பாவில், சீனாவில், ஃபிலிப்பைன்ஸில் பெய்து கெடுக்கிறது. அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உணவுப் பயிர்களான சோளம் மற்றும் சோயாவை, இயற்கை எரிபொருளான ethenol தயாரிப்புக்காகத் திருப்பிவிட்டதும் பஞ்சத்துக்குக் கட்டியம் கூறிய இன்னொரு காரணம். சரி, இனி அந்தப் பயிர்களை உணவாக்கிக் கொள்ளலாமே என்றால், தற்போது விளைவிக்கப்படும் பெரும்பான்மையான பயிர் ரகங்கள் உண்ணத் தகுதியில்லாத, எரிபொருள் எடுக்க மட்டுமே லாயக்கான வகையிலானது. இவ்வகைப் பயிர்களை விளைவிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் மற்றும் வரிவிலக்கு கொடுத்து ஊக்குவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே உணவுக்கான சோளத்தின் உற்பத்தி 50% குறைந்துவிட்டது.

போகட்டும், இனியேனும் உணவுப் பயிர்களை விளைவிப்போமே என்றால், விளைநிலத்துக்கு எங்கே போவது? இருந்த விளைநிலங்கள் எல்லாமே ரியல் எஸ்டேட்டுகளால் பட்டா போடப்பட்டு, வீடுகளாக, பங்களாக்களாக, அடுக்கு மாடிகளாக, வணிக வளாகங்களாக உருமாறி விட்டதே!

அப்படியொன்றுமில்லை, கொஞ்சமாவது விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெல்லாம் விவசாயம் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், உலகம் உருண்டை – மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறோம். மழை இல்லாமல் வறட்சியால் தவிக்கும்போது எங்கே விவசாயம் செய்ய? அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது! மட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுமென்பதால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பணப்பயிர்களைத்தான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள்.

செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கிறோம்; நிலவில் நீரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இல்லாத மண்ணில் பொல்லாத உணவை விளையவைக்கத்தான் வழி தெரியவில்லை. சமீபகால ‘அரேபிய வசந்தம்’ புரட்சிகளின் தொடக்கப் புள்ளியான துனிஷியா புரட்சிக்கு வித்திட்டது அடிப்படையில் வயிற்றுப் பசியே. எனில், இன்னும் வருங்காலங்களில் எத்தனைப் புரட்சிகளைச் சந்திக்க இருக்கிறோமோ?

க்ளோபல் வார்மிங்கின் விளைவுகளைப் பற்றி இத்தனை நாட்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம். காலம் தப்பிய மழை, பொய்த்த மழை, அதீத வெயில் என்று காலநிலை மாற்றங்களை பார்த்தும் நாம் திருந்தவில்லை. நாம் அன்றாடம் வீடுகளிலும், விருந்துகளிலும், உணவகங்களிலும் வீணாக்கிய உணவுகள் மனக்கண்ணில் வந்துபோகுதா?

3

சரி இறக்குமதி செய்துகொள்ளலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், உலகமெங்கும் தட்டுப்பாடு பரவுகிறது. 2008-ல் நடந்ததுபோலவே, எல்லா நாடுகளும் உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும் சாத்தியங்கள் அதிகம். ரஷ்யா இவ்வருட இறுதிவரை மட்டுமே கோதுமை ஏற்றுமதி என்று இப்போதே அறிவித்துவிட்டது.

இதே போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் சீனா  போன்ற பல நாடுகள், செழிப்பான விளைநிலங்கள் அபரிமிதமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயத்தில் பெரும் முதலீடு செய்துள்ளன. இதில் கிடைக்கும் மிகுதியான விளைச்சலைத் தம்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வதுதான் நோக்கம்.

கடந்த ஜூன் மாதம் நடந்த ரியோ +20 ‘வளங்குன்றா வளர்ச்சி’ (Sustainable Development) உச்சி மாநாட்டில், ஐ.நா. செயலர் பான் கீ மூன், வறுமைப்பசியை ஒழிப்பதற்காக ‘Zero Hunger Challenge’ என்ற உலகளாவிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐந்து அம்ச திட்டமான இதில், சிறு-குறு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களைச் சரியான முறையில் ஆதரித்து, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தியை இருமடங்காகப் பெருகச் செய்வது மிக அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார்.

அதன் இன்னொரு அம்சம், உணவுப் பண்டங்களை வீணாக்குதலைத் தடுத்தல் மற்றும் முறையான உணவு நுகர்வு. விளைநிலங்கள் தொடங்கி, வீட்டு டைனிங் டேபிள் வரை நடக்கும் பெரும் விரயத்தைத் தவிர்த்தாலே பஞ்சம், பசியைப் போக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு, சஹாராவை மையப்படுத்திய ஆப்பிரிக்காவின் மொத்த உணவு உற்பத்திக்குச் சமம் என்றால் எந்தளவு விரயம் நடக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தள்ள ஆரம்பித்திருக்கும். சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களும் அந்த வெள்ளத்தில் வருடாவருடம் மிதக்கும். ஆனால், இந்த வருடம்? வெள்ளத்திலிருந்து தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட முடியாதபடி, வறட்சி நம்மை விரட்டிக் கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டிலும், வருட ஆரம்ப குறுவை சாகுபடி அப்போது நிலவிவந்த கடும் மின்சாரத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது செய்திருக்க வேண்டிய சம்பா சாகுபடிகள், மழை இல்லாததால் செய்யவில்லை.

மழை பொய்த்ததன் விளைவுகளில் ஒன்றாகத்தான், கடந்த ஆடிப்பெருக்கின்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனது. சென்னையின் நீராதாரமான வீராணம் ஏரி, இவ்வருடம் ஜூலை மாதத்திலேயே காய்ந்து விட்டது.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் போக்கு காட்டிய காவிரி கொண்ட கர்நாடகாவின் பி.ஜே.பி. அரசு மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளது. கேரளாவும் தன் தலைநகரில் குழாய்த் தண்ணீர் விநியோகத்துக்கு ரேஷன் முறை கொண்டுவரலாமா என்று ஆலோசிக்கும் அளவுக்கு, அங்கும் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஆனால், மழை இல்லாததால், விதைக்கும் பருவமும் தாண்டிப் போய்விட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி முறையாக நடக்கும் என்று கூறுகிறார். மந்திரக்கோல் எதுவும் வைத்திருக்கிறாரோ என்னவோ!

உணவுப் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல, மெத்தனமாக இருக்கின்றன. அவர்களுக்கென்ன, திட்டக் கமிஷனே, மக்களின் அன்றாடச் செலவுக்கு இருபத்தைந்து ரூபாய் போதும் என்று சொல்லிவிட்டதே.

பஞ்சம் அடித்தட்டு மக்களுக்குத்தானே தவிர, பணம் படைத்தவர்களுக்கல்ல என்கிற அலட்சியம். அவர்களுக்குப் புரியவில்லை, பணம் இருக்கும், ஆனால் வாங்க அரிசி இருக்காது – இதுதான் பஞ்சம் என்று. அப்போது பணத்தையா தின்னமுடியும்?

இந்தியாவில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான அவசியம் இப்போது வந்திருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இப்போதே தொடங்கினால்தான், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக வருங்காலங்களில் அடிக்கடி வர சாத்தியமுள்ள இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.

தற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.

பண்டைய காலத்தில் எகிப்தில் கடும்பஞ்சம் வரப்போகிறதென்றுஅந்நாட்டு அரசருக்குக் கனவில் அறிவிப்பு வந்ததும், முறையாகப் பயிரிடுதல், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும்கூட, ஏழு ஆண்டு கடும் பஞ்சத்தின்போது உணவளிக்க முடிந்தது.

தனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்!

0

ஹுஸைனம்மா