No announcement available.

மதன் கார்க்கியுடன் ஒரு மினி பேட்டி

ஆழம் ‍செப்டெம்பர் 2012 இதழில் சமூகவலைதளங்களில் பிரபலங்கள் குறித்த எனது கட்டுரை வெளியாகி உள்ளது. அந்தக் கட்டுரைக்காக‌ ட்விட்டரில் தீவிரமாக இயங்கும் பிரபலம் என்ற வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கியை தொலைபேசி வழி ஒரு மினி பேட்டி எடுத்தேன். பேட்டி சற்றே நீண்டு விட்டதால், தேவையானதை மட்டும் கட்டுரையில் பயன்படுத்திக் கொண்டோம். முழுப்பேட்டி இங்கே:

சமூக வலைதளங்களில் இருப்பதனால் ப்ளஸ்கள் என்னென்ன?

நான் ட்விட்டரில் மட்டும் இருக்கிறேன்; ஃபேஸ்புக்கில் இல்லை. ஆரம்பத்தில் சமூக வலைதளங்கள் எனக்கு அர்த்தமற்றவையாகவே தோன்றின. ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளிக்கும் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் தாம் இதன் அடிப்படை. பிறகு தான் இவற்றின் முக்கியத்துவம் மெல்லப் புரிந்தது.

படிப்பு முடித்து ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிய பின் எனது ஆராய்ச்சியின் போது தான் சமூக வலைதளங்களின் நிஜமான பலத்தை உணர்ந்தேன். ஒரு சந்தேகம் கேட்டு ட்வீட் போட்டால் உடனடியாக நூறு பேர் பதில் சொன்னார்கள். பின்னர் தமிழ் பாட்டுகளை வகை (genre) பிரிக்கும் ஒரு வேலையை செய்தோம். அப்போதும் ட்விட்டரில் சுமார் 800 பேர் பங்களித்து உதவினார்கள். பத்து மணிநேரம் செய்ய வேண்டிய வேலை பத்து நிமிடத்தில் முடிந்தது. இன்று எனது ஒரு பாடல் வெளியாகிறதென்றால் உடனடியாக 2500 – 3000 பேர் அது குறித்து கருத்துகள் பகிர்ந்து எதிர்வினை ஆற்றி விடுகிறார்கள். அது அடுத்தடுத்த வேலைகளில் நம்மை சரி செய்து கொள்ள உதவுகிறது.

இப்போது பட நிறுவனங்கள் பாடல் எழுத ஒப்பந்தம் செய்யும் போதே சமூக வலைதளங்களில் படத்தை ப்ரமோட் செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர்.

சமூகவலைதளங்களில் இருப்பதால் மைனஸ்கள் என்னென்ன?

சமூக வலைதளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் வெளிப்படைத்தன்மை காரணமாக எதிர்மறைக் கருத்துகள் வருவது சகஜம் வரும். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒரு சிலருக்கு இருப்பதில்லை என்பதால் சங்கடங்கள் உருவாகின்றன. இதை சமூக வலைதளங்களின் சிறிய மைனஸாகச் சொல்லலாம்.

ட்விட்டரில் நடந்த மறக்க முடியாத‌ சம்பவம் / அனுபவம் என்ன‌?

அப்பாவை ட்விட்டருக்கு அழைத்து வந்தது தான். முதலில் ஆர்வம் இல்லாது இருந்தவரை வாரம் ஒரு தடவை என்ன செய்கிறீர்கள் என்பது பற்றி மட்டும் ஒன்றிரண்டு விஷயம் சொன்னால் போதுமானது என்று சொல்லித் தான் வர சம்மதிக்க வைத்தோம். இப்போது அப்பாவுக்கே இது பிடித்துப் போய் விட்டது. ரெகுலராக பயன்படுத்துகிறார். முக்கிய சம்பவம்னா இதைத்தான் சொல்லனும்.

சமூக வலைதளங்கள் குறித்து வேறு ஏதேனும் குறிப்பிடத்தகுந்த விஷயம்?

சமீபத்தில் நடந்த விஷயம். மாற்றான் படத்தில் ஒரு சிச்சுவேஷனுக்கு இரண்டு பல்லவிகள் எழுதினேன். அவற்றில் ஒன்று தமிழில் தொடங்குவது; இன்னொன்றுஆங்கிலத்தில் தொடங்குவது. ஹாரிஸ் ஜெயராஜ், கே.வி.ஆனந்த் இருவருக்குமே இரண்டுமே பிடித்திருந்தது. என்ன செய்வதென்று யோசித்து கடைசியில் பாட்டை ரசிக்கப் போவது மக்கள் தான், அதனால் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களையே கேட்டு விடுவோம் என முடிவு செய்து ட்விட்டரில் கருத்துக் கேட்டோம். நிறையப் பேர் தமிழ் பாட்டு ஏன் ஆங்கிலத்தில் தொடங்க வேண்டும் என்று சொல்லி தமிழ் பல்லவிக்கே ஓட்டளித்தனர். அப்படித் தேர்வானது தான் மாற்றான் படத்தில் வரும் “கை கால் முளைத்த காற்றே” பாடலின் பல்லவி.

0

Share/Bookmark