சந்தை உங்களை வரவேற்கிறது
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 17
எலக்ட்ரானிகல் துறையில் ஆர்வமுள்ள நபர்களுக்கு சந்தையிலிருக்கும் சில வாய்ப்புகளை காண்போம். சில்லறை அங்காடிகளாகட்டும், பொருள்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகளாகட்டும், பார்க்கிங் லாட் எனப்படும் வாகனங்களை நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் இடங்களாகட்டும், போக்குவரத்து அலுவல்களாகட்டும் – அனைத்து இடங்களிலும் கோட் முறையில் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இங்கெல்லாம் பிரிண்டர்களோடு ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் பில்லிங் மிஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மொபைல் பிரிண்டர் மூலம் எளிமையாக ரசீதுகள் அளிக்கமுடியும். டிக்கெட் கவுண்டர், பெட்ரோல் பங்க், ஷாப்பிங் மால் என்று பல இடங்களில் இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அந்தந்த துறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இத்தகைய இயந்திரங்கள் 5000 முதல் 10,000 ரூபாய் வரை சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பராமரிக்க ஆண்டுக்கு 1000 முதல் 1500 வரை செலவாகும். இத்துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் இதற்கு நல்லதொரு சந்தை இருப்பதை உறுதி செய்கின்றனர். உள்நாட்டு வங்கிகளும் இத்தகைய இயந்திரங்களை உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டன.
வாடிக்கையாளரே எளிதாக இவற்றை கையாள முடியும். இத்தகைய மொபைல் பிரிண்டிங் இயந்திரங்களின் தேவை பல கோடிகளைத் தொடும் என்பது வல்லுனர்களின் கணிப்பு. இத்தகைய இயந்திரங்கள் வைரஸால் பாதிக்கப்படுவதில்லை. இயக்குவதற்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் தேவையும் இல்லை. இவற்றை உற்பத்தி செய்ய முடியுமானால் அது நல்லதொரு தொழிலாக இருக்கும். அல்லது, வெளிநாடுகளிலிருந்து முழுமையாகவோ, அதன் உதிரிப்பாகங்களையோ இயக்குமதி செய்து, ஒன்றாக இணைத்து விற்பனை செய்ய முன் வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.
ராகவபாய் ப்ரஜாபதி என்பவர் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபடுபவர். குஜராத் பூகம்பத்தால் சுற்று வட்டாரமே மண்ணோடு மண்ணாகி வாழ்விழந்த சூழலில் குறைந்த விலையில் ஏழைகளுக்கான குளிர்சாதனப் பெட்டியை இவர் உருவாக்கினார். இயற்கை களிமண்ணால் ஆன இந்த குளிர்சாதனப் பெட்டி வேலை செய்வதற்கு மின்சாரம் தேவையில்லை என்பது முதன்மையான விஷயம். காய்கனிகளை சுமார் 5அல்லது 6 நாள்கள் வரை கெடாமல் காக்கக்கூடியது இது. பால் மூன்று நாள்கள் வரை கெடாமல் இருக்கும். பலவிதமான குளிரூட்டும் பெட்டிகளை ஆராய்ந்து பார்த்து 3 ஆண்டுகள் செலவழித்து இதை அவர் வடிவமைத்தார்.
மின்சார சிக்கனத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இந்நாளில் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்தது. பல விதமான பெட்டிகளைச் செய்து அவர் குஜராத்தில் விற்பனையும் செய்துள்ளார். துன்பங்களிலிருந்து விடுபட்டு அந்தத் துன்பத்தையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் முன்னேறியவர்களில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. ஏழைகளுக்குப் பயன்படும் இத்தகைய குளிரூட்டும் பெட்டிகளை கிராமத்தில் விற்பது நல்ல லாபத்தை ஈட்டும்.
LED எனப்படும் Light Emitting display விளக்குகள் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் மின் சிக்கனத்தை ஏற்படுத்தும் பல்வேறு வகையான ஒளிர் விளக்குகள் இன்று சந்தைக்கு வந்துள்ளன. இத்தகைய விளக்குகளை உற்பத்தி செய்யவும் முனையலாம். ஆனால் முதலீடு கூடுதலாக தேவை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனையும் செய்யலாம். அதற்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தீவிரமாக இத்துறையை ஊக்குவித்தால் நல்ல வாய்ப்புகள் உள்ளன.
எலெக்ட்ரானிக்ஸ் துறையைப் பொருத்தவரை, புதிய பொருள்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டாலும், இருக்கும் பொருள்களை நல்ல விதத்தில் பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டர்களை உருவாக்கினால் நல்ல வரவேற்பு கிடைக்கும். லேப்டாப், மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றை சரிசெய்ய தரமான சர்வீஸ் சென்டர் இந்தியாவில் இன்னும் குறைவாகவே உள்ளது. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே இதில் நுழையலாம் என்றில்லை. ஒரு தொழிலை தொடங்கி தகுந்த நபர்களை நியமித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தால் லாபம் நிச்சயம்.
சூரிய சக்தியால் இயங்கும் சாதனங்கள், இன்வர்டர்கள் மற்றும் சில மின்னணுக் கருவிகளின் தேவை நம் நாட்டில் அதிகமாகவே உள்ளது. அதேபோல் கணினி சார்ந்த பொருள்கள் குப்பையாக செயலற்று ஒதுக்கப்படும்போது அவற்றை விஞ்ஞானப்பூர்வமாக மறு சுழற்சி செய்யும் தொழிலும் அதிக அளவில் இனி பேசப்படும்.
பாதுகாப்பு பற்றிய அச்சம் அதிகமாகிக் கொண்டுவரும் இன்றைய சூழலில் உயர் ரிசல்யூஷன் காமிராவின் பயன்பாடுகள் அதிகமாகும். பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய காமிராக்களை உற்பத்தி செய்கின்றன. இவற்றை வாங்கி விற்பது நல்ல தொழிலாக அமையும். சந்தை பற்றிய புரிதல், விற்பனை செய்யும் திறன் போன்றவை இருந்தால் இத்தகைய தொழில்களில் தாராளமாக இறங்கலாம்.
சிறு தொழிலில் ஈடுபடும் பலருக்கு சிறு சிறு கடைகள் வைத்து அதன் மூலம் காய் கனிகள், அலங்காரப் பொருள்கள், பரிசுப் பொருள்கள், ஃபேன்ஸி மற்றும் ஸ்டேஷனரி பொருள்கள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் எண்ணம் இருக்கலாம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், பெரும் வணிக வளாகங்களால் ஓரளவிற்கு வேலை வாய்ப்பும், போக்குவரத்து வசதியும் பெருகும் என்று எடுத்துக் கொண்டாலும், என் கண்ணோட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மக்களின் மனோபாவங்களிலும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை நகர்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் அந்தந்த பகுதிகளுக்கென்று ஒரு சிலர் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு, கணிசமாக அந்தந்த பகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சிறு வணிகர்களுக்கும் பகுதிவாழ் மக்களுக்கும் உள்ள உறவுமுறை காரணமாக வியாபாரம் தொடர்கிறது. மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் பொருள்களைப் பொறுமையாக நின்று வாங்குகிறார்கள். இந்தக் கடைகள் தங்களுக்குப் பொருத்தமாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். வாங்கும் பொருள்களின் தரத்தைப்பற்றிய நிறை குறைகளை, அந்தந்த கடை முதலாளிகளிடம் தைரியமாக வெளிப்படுத்தமுடியும்.
பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் உருவாகக்கூடிய பெரிய வணிக வளாகங்களால் மத்தியதர, பொருளாதார ரீதியாக கீழ்மட்டத்தில் இருக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தப் பெரும் வணிக வளாகங்கள் சில்லறைப் பொருள்களை அதிக அளவில் கொள்முதல் செய்வதால் குறைவான விலைக்கு பொருள்களை விற்கமுடியும். சுயமாக நூறுகட்டு கீரைகளை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து தெருக்களில் விற்பனை செய்யும், சுயவேலைவாய்பை செய்யும் பெண்கள், ஒரு கட்டுக்கு ரூ. 3 அல்லது ரூ. 4 நிகர லாபம் வைத்து விற்கும் நிலையில், இந்தப் பெரும் வணிக வளாகங்களில், அதே நிலையில் கீரைக்கட்டை 50 சதவிதம் குறைவான விலையில் விற்பார்கள். இந்தச் சில்லறை வியாபாரிகளோடு அந்த பகுதி மக்களும், உறவு முறையின் அடிப்படையில், சில சமயம் கடனுக்கு, பெருட்களை வாங்கிச் செல்வதும் உண்டு. அதே போல் பணத்தை கட்டிவிட்டு பொருள்களை பின்னர் வாங்கிக் கொள்வதும் உண்டு.
ஆனால் பெரும் வணிக வளாகங்கள் விலையுர்ந்த ஆடம்பரமிக்க, கண்ணாடி தடுப்புகளோடு கூடிய மின் விளக்கு அலங்காரத்தில் கேளிக்கை இடங்களாக விளங்குகின்றன. உள்ளே நுழைவதற்கே சாமான்ய மனிதன் மனத் தயக்கத்துக்கு உள்ளாவான். நம் வீட்டுக்கு அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் செல்லும்போது பெரிதாக நாம் ஒப்பனைகள் செய்துகொள்ளவேண்டிய அவசியமிருக்காது. ஆனால், இத்தகைய ஆடம்பர வளாகங்களுக்கு அப்படிப் போகமுடியாது என்று அவர்கள் நினைப்பார்கள்.
கடை முதலாளிகள் கல்லாவில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு இல்லாததால் வாடிக்கையாளர் தங்கள் குறைகளை நேரடியாகச் சொல்லும் வாய்ப்பு ஏற்படாது. ஆக பொதுமக்கள் ஒரு சில பொருட்களை குறைவான விலைக்கும், விளம்பரம் மிக்க பொருட்களை அதிகமாகவும் வாங்கும் சூழல் அமையும்.
மேலும் தங்கள் கையிருப்பில் உள்ள பணத்திற்கு பொருட்களை வாங்காமல், தங்கள் கௌரவத்திற்கென பொருட்களை வாங்கிக் குவிக்கும் சூழல் ஏற்படும். அடுத்து சாமானியனை மேலும் கடனாளியாக்கக் காத்திருக்கும் பல அயல் நாட்டு வங்கி நிறுவனங்கள் கடன் அட்டையைக் கொடுத்து சாமானியர்களை குறிவைக்கக் காத்துகிடக்கிறார்கள். கடன் அதிகமாகும் போது மன உளைச்சல்களும், அதிகமாகும் என்பது கண்டறிந்த உண்மை.
பன்னாட்டு முதலைகளிடம் இருந்து தொழில்முனைவோர் எப்படித் தப்பிப்பது?
0








