மதுமிதா : சில குறிப்புகள்

girl-silhouette351 

மதுமிதாவின் ஹேண்ட் பேகிலிருந்த‌ வஸ்துக்கள்…

காலியான‌ மினி வெல்வெட் பௌச், கண்ணாடி, சீப்பு, ஹேர் பின், ஹேர் க்ளிப், ரப்பர் பேண்ட், சேஃப்டி பின், ஸ்டிக்கர் பொட்டு, ரோஸ் பௌடர், டியோட்ரண்ட், பெர்ஃப்யூம், லிப் கார்ட், சன்ஸ்க்ரீன் லோஷன், ஃபேஸ் க்ரீம், மாய்ஸ்ச்சரைசர், நெயில் பாலீஷ், ஐ லைனர், வெட் டிஷ்யூ, மௌத் ஃப்ரெஷ‌னர், ஸ்விஸ் சாக்லேட், சூயிங் கம், கந்தர் சஷ்டி கவசம், Hopeless (Colleen Hoover) பேப்பர்பேக், ஐஃபோன் 5, ஐசிஐசிஐ மாஸ்டர் ப்ளாட்டினம் டெபிட் கார்ட், ஹெடிஎப்சி விசா சிக்னேச்சர் க்ரெடிட் கார்ட், சில புதிய இந்திய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், கிழிந்த‌ விஸ்வரூபம் பட பிவிஆர் டிக்கெட்கள் இரண்டு (10 பிப்ரவரி 2013), மணிப்பால் ஹாஸ்பிடல் கார்ட், பேண்ட் எய்ட், அனாசின், அவில், ஐபில் மாத்திரைக‌ள், பயன்படுத்தப்படாத சோஃபி சைட் வால்ஸ் சானிடரி நாப்கின், ஓர் ஆணின் வேர்வை கர்ச்சீஃப் மற்றும் காமசூத்ரா ப்ளெஷர் காண்டம்கள்.

~0~

மதுமிதாவுக்கு Orkutல் வந்திருந்த‌ Testimonialsலிருந்து…

Senthilnathan – Dec 02, 2011

நான் இதுவரைக்கும் நேர்ல பாத்ததிலயே சூப்பர் ஃபிகரு.

Vidhya S. – Apr 13, 2010

hmm. tym’s not enuf 2 describe tis wonderful frend- but lemme tel u wat it strikes 2 me now. madhu is a happy go lucky person. not much bothered bout nythg in life. kind, jovial, loving, caring, stupid.

 ~0~

மதுமிதாவின் Wardrobeலிருந்த‌ T-Shirtகளிலிருந்து…

Forbidden Fruits, Braille System, HTTP 403, Sample Specimen: Not For Sale, Catch Me If You Can, Click Here To Continue, Biological Inflation, Testers Wanted, Ripen Mangoes, This Is Not Touch-Me-Not.

 ~0~

மதுமிதாவின் ஐஃபோன் Bluetooth Received Filesலிருந்த ஃபோட்டோ…

(இது சென்ஸார் செய்யப்படுகிறது – ஆசிரியர்)

  ~0~

மதுமிதாவின் படுக்கையில் சிதறிக் கிடந்தவை…

11-inch Apple MacBook Air லேப்டாப், The Music Messiah (Ilayaraaja) டிவிடி, காமக்கடும்புனல் (மகுடேசுவரன்) கவிதைத் தொகுப்பு, கரீனா கபூர் படம் போட்ட ஃபிப்ரவரி 2013 VOGUE இதழ், இதய விடிவிலான சிவப்பு நிறத்திலான‌ குட்டி குஷன் தலையணை, கழற்றி எறியப்பட்ட‌ Wonderbra ப்ரேஸியர், Wacoal பேண்டீஸ், சால்வ் செய்யப்பட்ட‌ Rubik’s Cube, ஐஃபோன் சார்ஜர், குடித்து மீந்திருந்த மதுக்கோப்பை – அதில் கிடந்த ஒரு சிறிய‌…

  ~0~

 மதுமிதாவின் Apple MacBook Airலிருந்த‌ திரைப்படங்கள்

 Gangs of Wasseypur – 1 & 2, Inception, நந்தலாலா, The Isle, Love Sex Aur Dhokha, ஆரண்ய காண்டம், ரெட்ட்யூப் வலைதளத்திலிருந்து தரவிற‌க்கப்பட்ட சில பாலியல் படங்கள்.

   ~0~

மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Sent Items)…

Pappu

03-May-2012 21:09

sorry

 ~0~

மதுமிதாவின்  Yahoo! Messenger உரையாடலிலிருந்து…

———— IM 01 Jun 10:55 ————

Madhumitha : “யாரோ ஒருத்தன் தினம் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் பண்றான்டி, Idiot”

Saranya : “என்ன Lovable Idiot-ஆ? ;-)

Madhumitha : “ம். இல்ல‌. Sweet Bastard! :-)

Saranya : “அட, வெட்கத்தைப் பாருங்கடா!”

Madhumitha : “ச்சீய், போடி!”

  ~0~

மதுமிதாவுக்கு வந்திருந்த Birthday Cardலிருந்து…

 ம‌துமிதா எனப்படும் 17 வயது தேவதையே,

என் உயிர் குடிக்க‌ நிறைய மார்க்கமுண்டு.

ப்ளீஸ், உன் அழகை அதற்கு வீணாக்காதே!

Infinite more happy returns of the day and night ;-)

உந்தன் பப்பு,

Jul 21, 2012.

   ~0~

மதுமிதாவின் ரெக்கார்டட் Skype சம்பாஷணை ஒன்று…

 “டாடி தந்த‌ பர்த்டே கிஃப்ட் ஓர் அற்புதம். எத்தனை பணக்காரன் என்றாலும் இந்தப் பரிசு கொஞ்சம் ஜாஸ்தி. உடலின் பாகம் மாதிரி அதை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன். Love you, dad. But பப்பு கார்ட் ஒரு riot. I am having my periods, now. முட்டி வலிக்கிறது. ஆனால் பப்பு மனசுக்கு சுகமாய் இருக்கிறான்.”

 ~0~

மதுமிதா Hopeless நாவலில் அடிக்கோடிட்டிருந்த வரி…

“That moment when your lips touched mine? You stole a piece of my heart that night”

 ~0~

மதுமிதாவின் Facebook தளத்திருந்து…

 Madhumitha Natarajan

August 13, 2012 at 12:09am via mobile ·

காதலில் விழுந்தேன்!

Unlike · Comment · Unfollow Post · Share · Promote

Baskaran Deivasikamani, காயத்ரி சேஷாத்ரி, Victor Antony and 723 others like this.

View all 1026 comments

Victor Antony Who is that lucky guy? Aug 19, 2012 at 2:55am • Like

பார்வதி யமுனா கடைசில நீயும் விழுந்துட்டியா? Aug 20, 2012 at 1:11am • Unlike

Madhumitha Natarajan விழாமலே இருக்க முடியுமா! Aug 20, 2012 at 1:30am via mobile • Like

Write a comment…

~0~

மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Inbox)…

Pappu

30-Sep-2012 11:27

movie at pvr

 

 ~0~

மதுமிதா blogger வலைப்பதிவிலிருந்து… 

மதுமிதா மனசிலே…

 சில்MISSION

 திரையரங்க மெல்லிருட்டின்

தித்திக்கும் சில்மிஷங்களில்

திட்டித் தீர்க்கின்றேனுன்னை –

அடுத்தடுத்த‌ கட்டங்களுக்கு

அழகாய் அனுமதித்தவாறே.

Posted by மதுமிதா On Sunday, October 06, 2012

 

~0~

மதுமிதாவின் 2012 Personal Diaryயிலிருந்து…

November 5, Monday

எதற்கு பயந்திருந்தேனோ அல்லது எதை விரும்பினேனோ அது நடந்தே விட்டது. பப்பு திருட்டுப் பயல் எப்படித் தான் காண்டம் பாக்கெட் தயாராய்க் கையில் வைத்திருந்தானோ, ஆச்சரியம்தான்! ஒருவகையில் என்னைப்போல் அவனும் இந்நிகழ்விற்கென‌ எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறான் எனத் தோன்றுகிறது. பழுத்த அனுபவமுள்ள ஒரு டூரிஸ்ட் கைட் தனக்கு மிகப் பரிச்சயமான ஊரினை அலட்சியமாகச் சுற்றிக் காட்டுவதைப் போலத் தான் பப்பு இன்று நடந்து கொண்டான்.

அந்த விசித்திர‌ப் பள்ளத்தாக்குகளுக்கு, அந்த மிக‌ அழகிய மலைமுகடுகளுக்கு எந்தப் பதட்டமில்லாமல் புன்னகையுடன் என்னைக் கை பிடித்தழைத்துச் சென்றான். ஒரே சமயத்தில் ஒரு ராட்சசனைப் போலவும் ஒரு குழந்தையைப் போலவும் மாறி மாறி என்னை ஆக்ரமித்தான். கிட்டதட்ட‌ சாகடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இதன் ஞாபகமாய் பப்புவின் கர்ச்சீஃப்பை எடுத்து வந்து விட்டேன். அது எப்போதும் என்னோடு என் கைப்பையில் இருக்கும். இன்னமும் என் உடம்புக்குள் ஆங்காங்கே இனித்துக் கொண்டிருக்கிறான் ராஸ்கல். கொஞ்சம் வெட்கமாய்க் கூட‌ இருக்கிறது.

எல்லாம் முடிந்து இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் மிகச் சந்தோஷமாக உணர்கிறேன். காரணமேயில்லாமல் உப்புக்கண்ணீர் கன்னங்களில் பிசுபிசுக்கிறது.

Anyway, Virgin Mary turned into Bloody Mary, today. Let me celebrate it with a sip of Diva Vodka!

~0~

மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Draft)…

Shit, that’s not enough. I need you again and again, da.

 ~0~

மதுமிதாவின் blogger வலைப்பதிவின் draftலிருந்து…

மதுமிதா மனசிலே… · Post · காதல் காதல் காதல் · Publish · Save · Preview · Close

Compose | HTML

இந்த பப்பு ராட்சசன். மூன்றாம் முறைக்கு காண்டம் தீர்ந்து விட்டது. ஐபில் என்று ஏதோ ஒரு மாத்திரை இருக்கிறதாம், இன்று வாங்கி வ‌ருகிறேன் என்று சொல்லி இருக்கிறான். 36 மணி நேரத்துக்குள் போட்டுக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லையாம். இந்தப் பப்புவுக்கு எப்படித் தான் எல்லா விஷயமும் தெரிகிறதோ!

  ~0~

மதுமிதாவின் ஐஃபோன் Facetime உரையாடல் ஒன்று…

Pappu

15-Dec-2012 20:47

“அப்பாவிடம் சொல்லி விடப் போகிறேன்!”

“அதுக்கு என்ன அவசரம், அவசியம் இப்போ?”

“பொய் சொல்ல முடியல, பப்பு. சல்ஸா க்ளாஸ், ப்யானோ க்ளாஸ், ஜேஈஈ களாஸ் எல்லாம் கட் பண்றேன். ஃப்ரெண்ட்ஸ் கூட காஃபி டே, க்ரூப் ஸ்டடி, கெட்டுகெதர்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு உன்கிட்ட வந்து படுத்துக்கறேன். And I really feel guilty.”

“:-(“

 ~0~

மதுமிதாவின் Gmail – Sent Itemsலிருந்து…

from   Madhumitha N. <madhumitha1995@gmail.com>

to    “Natarajan Muthuraman” <mail2natarajan@gmail.com>

date   Sat, Dec 22, 2012 at 11:28 PM

subject            Help me, daddy!

டியர் டாடி,

எல்லாவற்றையுமே உங்களுடன் நேரிலேயே பேசிப் பழக்கப்பட்ட எனக்கு இதை மட்டும் உங்கள் முகம் பார்த்துச் சொல்ல முடியவில்லை. பயமோ, தயக்கமோ, வெட்கமோ காரணம் என்று நான் சொன்னால் நீங்கள் வழக்கம் போல் வீடதிரச் சிரிப்பீர்கள் எனத்தெரியும். நான் முதன் முதலில் இருமியபடி புகைப்பிடித்ததும், மெலிதாக மதுவ‌ருந்தியதும் உங்களுடன் தான். அம்மா தவறிய பின் இத்தனை ஆண்டுகளில் நீங்கள் எப்போதும் என்னை மகள் என்று போலி மரியாதை காட்டித் தள்ளி வைத்துப் பார்த்ததாய் நினைவில்லை. நானும் அப்படியே – always your friend.

ஆனால் இவ்விஷயம் ச‌ற்று வேறு மாதிரியானது. இதிலெல்லாம் ஒரு முடிவெடுக்க எனக்கு புத்தி வந்து விட்டதா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இருக்கட்டும்.

நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தீர்கள் என்று சொன்னால் கூட அது உண்மை திரித்ததாகி விடும். எந்தப் பொருள் என்றாலும், எவ்வளவு விலை என்றாலும் நான் கேட்க நினைக்கும் முன்பே அது என் கைகளில் இருந்தே பழகி விட்டது. கடந்து என் பிறந்த நாளுக்கு நீங்கள் தந்த பிறந்த நாள் பரிசு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

இப்போது நான் கேட்கவிருப்பது அதையெல்லாம் விட மதிப்பானது; விலை மதிப்பே இல்லாதது என்று சொல்வது தான் சரியாக இருக்கும் – அது உங்கள் கௌரவம்.

ஆம். கோடீஸ்வரரான உங்கள் மகள் எந்த வசதியும் இல்லாத, இப்போதைக்கு நிரந்தரமாக ஒரு வேலை கூட அற்ற ஓர் ஆசாமியைக் காதலிக்கிறாள் என்பது உங்களுக்கு நிச்சயம் அகௌரவம் தான். பப்பு என்ன ஜாதி என்பது கூட எனக்கு இன்று வரைக்கும் தெரியாது. அவனுக்கே தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எனக்குத் தெரியும். பப்பு திட்டமாய் நல்லவன் – உங்களை விட, என்னை விட‌. மற்றதெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. அவனைப் பார்த்துப் பேசினால் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். மயக்கி விடுவான்!

பதினெட்டு வயது கூட ஆகாத‌ எனக்கு என்ன அவசரம் என இப்போதும் உங்களுக்குத் தோன்றலாம். இதை உங்களிடமிருந்து மறைக்க மறைக்க அடிக்கடி பொய் சொல்ல வேண்டியிருக்கிறது; நிறைய கள்ளம் செய்ய‌ வேண்டியிருக்கிறது. எல்லாம் புதிதாய் இருக்கிறது. எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. அதையெல்லாம் நிறுத்த வேண்டும்.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் இக்கணம் உங்களுக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதைக் துல்லியமாக உணர்கிறேன். ஆனால் எனக்கு வேறு மார்க்கம் இல்லை. நீங்கள் ஒப்புக்கொண்டால் அதை இந்தப் புத்தாண்டுப் பரிசாகக் கொள்வேன்.

காத்திருக்கிறேன்.

Cheers,

மது

 ~0~

மதுமிதாவின் Twitter தளத்திருந்து…

மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012

பிடிக்காத கல்யாணத்தில் வாழ்வதை விட பிடித்த‌‌ காதலுக்காக சாகலாம்.‌

Expand

Sowmya @arattaigirl                                          Dec 31, 2012

குழந்தைகள் திரும்ப வாங்கி விடக்கூடிய பொருட்களையே போட்டு உடைக்கின்றன.. பெரியவர்களைப் போல மனங்களை அல்ல!

Retweeted by மதுமிதா

Expand

மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012

@writercsk பெத்த பொண்ண விட மத்ததெல்லாம் முக்கியமாப் போச்சா?

View conversation

மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012

Money, status, caste and blah-blah.. #love #fuck-off

Expand

 ~0~

மதுமிதாவின் Gtalk – Chat Historyயிலிருந்து…

from   பப்பு பப்பு <pappuinlove@gmail.com>

to    madhumitha1995@gmail.com

date   Fri, January 11, 2013 at 10:15 PM

subject            Chat with பப்பு பப்பு

பப்பு: மது

me: sollu pappu

பப்பு: என்ன ஆச்சு?

me: no change. still same. வேற மாப்பிள்ளை பாக்கறார்.

பப்பு: முடிவா என்ன சொல்றார்?

me: அவரு முருங்கை மர‌ வேதாளம்டா பப்பு.

பப்பு: so?

me: let us wait.

பப்பு: எவ்வளவு நாள்?

me: days, months or may be years too.

பப்பு: ஒத்துக்குவார்னு இன்னமும் நம்புறியா?

me: what to do, then?

பப்பு: சரி, விடு.

me: dai, chellam, kovama?

பப்பு: இல்ல‌.

me: இல்லன்னு சொல்றதுலயே கோவம் தெரியுதே.

பப்பு: கோபம் தான். ஆனா உன்னால என்ன பண்ண முடியும்?

me: true. am helpless. ஆனா hopeless இல்ல‌.

பப்பு: பாக்கலாம்

me: எதுவுமே முடியலைனா அதான் எப்பவுமே கையில வச்சிருக்கிறனே. அதை…

பப்பு: ச்சீ. என்ன எப்பப் பாத்தாலும் இதே பேச்சு. சரி, வெயிட் பண்ணலாம், மது.

me: I love you da, pappu.

பப்பு: ம்.

me: goodnight.

 ~0~

மதுமிதாவின் unofficial மரணவாக்குமூலத்திலிருந்து…

டியர் பப்பு,

இந்நாள் நமக்கு முதல் வேலண்டைன்ஸ் டே மட்டுமல்ல; கடைசியானதும் கூட‌!

இதை நீ படிக்கும் நேரத்தில் நிச்சயம் நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. நீ எண்ணிக் கொண்டிருந்தாயா தெரியாது – இக்கணம் நீ களைத்துறங்கக் காரணமான கலவி எண்ணிக்கையில் நூறாவது. இந்த நூறில் ஒவ்வொன்றையுமே தனித்தனியே அதனதன் பிரத்யேக அடையாளங்களுடன் எனக்கு நினைவு கூரவியலும். எப்போதும் வற்புறுத்தி அணியச் செய்யும் நானே இன்று காண்டம் வேண்டாம் என்று சொன்னது ஆச்சரியமாய் இருந்திருக்கலாம். அல்லது எப்போதுமே ‘அதற்கு’ மட்டும் மறுத்து விடுபவள் இன்று தானாக‌ முன் வந்ததும் விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம்.

கடிதம் மட்டுமல்ல, கலவி கூட இதுவே கடைசி. அணுஅணுவாய் அனுபவித்த இன்பத்துக்கெல்லாம் இறுதி நாள். ஆம். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாய், ஆனால் வேக‌ வேகமாய். இன்று நீ களித்துக் கிடந்த என் தேகம் உண்மையில் அரைப்பிணம். வரும் போதே அதை விழுங்கி விட்டுத்தான் வந்தேன்.

எப்போதும் கைப்பையில் வைத்திருக்கும் என் அப்பா தந்த‌ பரிசே எனக்கு எமனாய் விடியும் என்று அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தெரியும் போது மிக வருத்தப்படுவார். தலையிலடித்துக் கொண்டு தேம்பி அழுவார். அம்மா இறந்த போது அப்படித்தான் செய்தார் – எனக்குத் தெரிந்து அது தான் அவர் கடைசியாக அழுததும் கூட. ஒத்துக் கொண்டிருக்கலாமோ என்று கூட அப்போது யோசிப்பார். பாவமாய் இருக்கிறது. என்னை அவர் புரிந்து கொள்ளாதது போல் நானும் அவரை சரியாய்ப் புரிந்து கொள்ளாமலேயே மரித்துப் போவதற்காய் உச்சமாய் வருந்துகிறேன்.

ஆனால் இப்போது அப்பா நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது எனக்குத் புரிந்து விட்டது. வீட்டில் இப்போதெல்லாம் நிறைய கண்டிஷன்கள். போகும் இடம் சொல்ல வேண்டும், திரும்பும் நேரம் சொல்ல வேண்டும். எட்செட்ரா எட்செட்ரா. இப்போது கூட ஏரோபிக்ஸ் க்ளாஸ் போவதாகப் பொய் சொல்லித் தான் வந்திருக்கிறேன். லேட்டாகி விட்டது. ஏற்கனவே ஆங்காங்கே தேட ஆரம்பித்திருப்பார்கள். தேடட்டும்.

அப்பா எனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார். ஐரோப்பிய மாப்பிள்ளை. நிரம்பப் படித்திருக்கிறான். பெரிய வசதிக்காரன். பிஸ்னஸில் மகாபுத்திசாலி. அதை விட‌ முக்கியமாய் எங்கள் ஜாதிக்காரன். கொஞ்சம் நாள் போனால் எனக்கே அவனைப் பிடித்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது. நான் உனக்குக் கிடைக்கமாட்டேன் என்பது ஏமாற்றம் தான். ஆனால் துரோகத்தை விட ஏமாற்றம் தரும் வலி குறைவு தான். வேறொரு ஆணுடன் கலந்து நான் உனக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.

என் அப்பாவிற்குப்பின் நீ தான் என் வாழ்க்கையில் முக்கியமான ஆசாமி. ஒரு கட்டத்தில் அவரை விடவும் நீ முக்கியமானவனாகத் தோன்றப் போய், இப்போது உயிரை விடுவது வரை வந்தாயிற்று. நினைத்தபடி வாழவியலாவிடில் வாழ்ந்தென்ன லாபம். ஓர் அரசியை போல் கம்பீரமாய் இறந்து போவதே சௌக்கியம், சௌகரியம்.

ஃப்ராஸ்டின் “Miles to go before I sleep” நினைவுக்கு வந்து சங்கடப் படுத்துகிறது. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் எல்லாம் சற்று நேரத்தில் பூஜ்யமாகப் போகிற‌து. எல்லாவற்றிலுமே எனக்கு அவசரம் என்பார் அப்பா – இப்போது சாவிலும்.

உண்ட சங்கதி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது, பப்பு. உன்னிடத்தில் உன் மடியில் தான் உயிரை விட வேண்டும் என்ற பாழாய்ப் போன செண்டிமெண்ட் தான் என்னை இங்கே இழுத்தது. இதையே எனது Dying Declaration ஆக‌ போலீஸில் சேர்ப்பித்து விடு – உயிரற்ற உடலையும். பின் உனக்கு ஒரு தொந்தரவும் வராது.

இன்னுமொரு உதவி. கடைசி ஆசை என்று கூட சொல்லலாம் – Autopsy முடிந்தபின் சாத்தியமான என் அத்தனை உடற்பாகங்களையும் தானம் செய்ய விரும்புகிறேன்.

ஐ லவ் யூ டா, பப்பு. See you சொல்ல முடியாது; அதனால் Bye மட்டும்.

Cheers,

மது.

14/02/2013

 ~0~

 தினத்தந்தி (பெங்களூர் பதிப்பு, 15-02-2013) நாளிதழிலிருந்து…

அனாதைப் பெண் பிணம் – மர்ம நபர் வெறிச்செயல்

போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூர், ஃபிப்.14–

ஈஜிபுரா அருகே இன்னர் ரிங் ரோடை ஓட்டியிருக்கும் ஆர்மிக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத 18வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகக்கொடூரமான நிலையில் வயிறு கிழித்து கொலை செய்து அடையாளம் காண முடியாத அளவில் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோரமங்களா இன்ஸ்பெக்டர் ப‌சவப்பா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 ~0~

மதுமிதாவின் Post-Mortem Reportலிருந்து…

“கூர்மையான துருவேறிய ஆயுதத்தினால் (உதா: பேனாக்கத்தி‌) வயிற்றுப் பகுதி 3 இஞ்ச் ஆழத்துக்கு கிழிக்கப்பட்டு, பெருங்குடல் முழுக்க சேதாரமான‌தால் உடனடி மரணம். தவிர உணவுக்குழாய்ப்பாதை முழுக்கவும் ஆழமான‌ சிறுசிறு கீறல்கள்.”

  ~0~

மதுமிதாவின் அப்பா நடராஜனின் வாக்குமூலத்திலிருந்து…

“அந்த காலியான‌ மினி வெல்வெட் பௌச்சில் இருந்திருந்தவை பிறந்தநாள் பரிசாக நான் கொடுத்த ரூ. நூறு கோடி மதிப்புள்ள பதினேழு தென்னாப்பிரிக்க‌ வைரங்கள்!”

  ~0~

 (மதுமிதா கொலை வழக்கின் போலீஸ் விசாரணைக் குறிப்புகளிலிருந்து)

girl-silhouette351

உமா வரதராஜன் கதைகள்

உமா வரதராஜன் கதைகள், காலச்சுவடு, விலை: 125 ரூ, டிசம்பர் 2011.

Dial for books: 94459 01234 | 9445 97 97 97

நெடுஞ்சாலை யாத்திரீகன் குறிப்புகள்

என் முதல் கதையை எழுதியது நேற்றுப் போல் இருக்கிறது. 1974ல் எழுதி வெளியான எனது முதல் சிறுகதையின் தலைப்பு ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும். ” வெறுமனே ஒரு குறிப்பிட்ட சிறுகதைக்கான தலைப்பாக மாத்திரம் அதை இப்போது நினைக்கத் தோன்றவில்லை. நான் பினனாட்களில் எழுதப் போகும் கதைகளுக்கும், அவை உள்ளடக்கப் போகும் அம்சங்களுக்குமான ஒரு கட்டியகாரனின் குரல்-புனித யோவானின் பாலைவனக் குரல் போல- என்னையறியாமல் அந்தத் தலைப்புக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இருந்திருக்கிறது.

அந்தக் கதைகளிலும் சரி, பின்னர் எழுதிய வேறு கதைகளிலும் சரி, சூழ உள்ள மனிதர்களோடு, சொந்தங்களோடு, உறவுகளோடு எனக்குள்ள ஓர் ஒவ்வாமை அல்லது ஓர் உரசல் நிலை இன்றுவரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அற்பமான மனிதர்கள் மீது எனக்குள்ள ஓர் அதிருப்தி, எதிர்ப்புணர்வு பெரும்பாலும் என் கதைகளில் வெளிப்படுகின்றன.

எத்தனையோ மனிதக்கூடுகளைத் தன்னுள்ளே புதைத்துக்கொண்ட ஓர் இடுகாட்டினைப் போல அமுக்கப்பட்ட பல உணர்வுகளுடன் என் மனது அல்லலுறுகின்றது. எனினும் என் அன்புக்குரிய கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தன் ‘விலகிச் செல்லும் மையங்களில்’ கூறுவது போல இந்த இடுகாட்டில்தான் பட்டிப் பூக்கள், கழனிப்பூக்கள் போல எனது கதைகளும் மலர்கின்றன. உக்கிப் போன எலும்புக் கூடுகளுக்கிடையே முளைக்கின்ற எனது பட்டிப்பூக்கள் பற்றி அந்தக் கவிஞர் சொல்வதும் பொருந்திப் போகின்றது. ‘எச் சிறிய புல்லும் அதனளவில் முழுமை, இடுகாட்டில் முளைக்கின்ற கழனிகளும் அருமை. ‘

என்னுடைய எல்லாக் கதைகளையும் மொத்தமாக இப்போது படிக்கும்போது கதைகளைத் தாண்டி சில மனக்காட்சிகள் துலக்கம் பெறுகின்றன. ஒரு பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டிடத்தின் அடியில் நின்று ‘உள்ளே நுழைவதா, வேண்டாமா எனத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். குழவிக் கூடொன்றுக்குக் கல்லெறிந்துவிட்டு ஓட்டம் பிடிக்கின்றேன். ஆட்கள் இல்லாத ஒரு படகாக நான் ஆகி நீர்ப்பரப்பில் அலைந்து கொண்டிருக்கின்றேன். என் கை நீங்கிப் பறந்து ஆகாய வெளியில் கலக்கும் புறாக்களை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். முரட்டுக் கால்களால் மைதானமெங்கும் அலைக்கழிக்கப்படும் ஒரு பந்து போல் ஆகின்றேன். வேலை வெட்டியற்று நண்பர்களுடன் மதிலில் உட்கார்ந்திருக்கின்றேன். எங்கள் ஊர் கோயில் பெருவெளியின் கடைவீதியில் தாயுடன் செல்லும் ஒருத்தியைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். நிலமதிர வரும் கொடுங் கோலர்களின் முன்னால் மண்டியிட வைக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டிருக்கிறேன். மீட்பர்களுக்காகக் காத்துக்கிடக்கும் கண்களுடன் நான்.

இந்தக் கதைகளை எல்லாம் காலப் பிரகாரம் வரிசைப்படுத்திப் பார்க்கும்போது இப்போது ஓர் உண்மை புலப்படுகின்றது.. இடை நடுவே பள்ளிப் படிப்பை முறித்துக்கொண்டு தன் ஈடுபாடுகள் ஒரு புறமும், பொருந்தாத தொழில்கள் மறுபுறமுமாக அக -புற நெருக்குதல்களின் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருந்த ஒருவனுடைய சரிதமாகவும் இதைக் கண்டு கொள்ளலாம்.

எனது பார்வையில் ஓர் ஏளனமும், நையாண்டியும் கலந்திருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் எனது sense of humour என்கின்ற நகைச் சுவையுணர்வை வக்கரிப்பு என்று வசை பாடிக் கொண்டிருப்பதுமுண்டு. என் அனுபவங்கள் வாயிலாக இந்த உலகம் நையாண்டிக்குரியதாகவும், ஏளனத்துக்குரியதாகவுந்தான் எனக்குத் தோன்றுகின்றது. ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் இந்த நையாண்டிகள்தான் என்னுடைய பலமென்று நான் ஒரு போதும் கருதியதில்லை. இந்த நையாண்டி அம்சங்களைத் தவிர்த்து விட்டால் என் வாசகர்கள் என்னைக் கை விட்டுப் போய் விடுவார்கள் என்றெல்லாம் நான் மனக்கணக்கு போட்டு எழுதுவதும் கிடையாது.

நான் மற்றவர்களின் அனுபவங்களை அநேகமாகக் கதைகளாக்கியதில்லை என சிலர் சொல்வதுண்டு. மிக சில கதைகளைத் தவிர ஏனையவற்றில் நானே முழுமுதல் பாத்திரமாக அல்லது முக்கிய பாத்திரமாக இடம் பெற்றதால் ஏற்பட்ட அபிப்பிராயமாக இது இருக்கலாம். பாத்திரங்களை சித்தரிப்பதில் எனக்குள்ள தேர்ச்சி, பிரக்ஞை குறித்து என்னை நோக்கி எழுப்பப்படும் ஒரு வினாவாகவும் இதைக் கொள்ளலாம். பாத்திரச் சித்தரிப்புகளில் இயன்றவரை அக்கறை காட்டியிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அசோகவனம் என்ற என்னுடைய சிறுகதையில் நான் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து ஒரு பெண்ணாகி, கதையைக் கூறுகிறேன். ஜெனி என்ற என்னுடைய மற்றொரு கதையில் ஜெனி, ஜெனியின் தகப்பனார், தாய் என அனைவருமே துல்லியமான முறையில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பது என் நம்பிக்கை. மாலை சூட்டிகள் கதையில் வரும் சென்காவின் தர்மசங்கடமும், ஒரு வித பிடிவாதமும் கதை முழுவதும் சீராக வந்து அந்தப் பாத்திரம் கன பரிமாணங் கொண்டிருப்பதாக நம்புகிறேன். எலியத்தில் எலியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ஒருவன்-தொடர் துன்பங்களால் துவளும் ஒருவனை – சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேன். அதி மேதாவி வேஷத்துடனும், பாசாங்குடனும் தோன்றும் ஒருவனை வெருட்டியில் கொணர்ந்திருக்கிறேன். அரசனின் வருகையில் வரும் அந்தக் கொடுங்கோலனை எவரால் மறக்க இயலும்? பாத்திர சிருஷ்டிப்பில் பிரக்ஞையற்ற ஒருவனுக்கு இவையெல்லாம் சாத்தியமாகாத விஷயங்கள்.

என்னுடைய மொழிநடை பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியுள்ளது. மொழி என்பது புரிவதற்காக; திணறுவதற்காக அல்ல. ஒரு படைப்பை உருவாக்க உணர்வு சார்ந்த சொற்கள் தேவைப்படுகின்றன. நமது காலத்தின் புழக்கத்திலிருக்கும் சொற்களின் மத்தியிலிருந்தேதான் ஒரு படைப்பானது தன சொற்களைத் தேர்வு செய்துகொள்கின்றது. எனினும் இந்த சொற்களைக்கொண்டு தனித்துவமான மொழியொன்றை உருவாக்கிக் கொள்வதுதான் படைப்பாளி ஒருவனின் முன்னாலிருக்கும் சவால்.

ஓர் எழுத்தாளனின் மொழினடையினது உள்ளியல்புகளை நிர்ணயிப்பது அவனுடைய சிந்தனைமுறை மாத்திரமல்ல, அவன் ஈடுபடுகின்ற இலக்கிய வடிவமும் ஆகும். கவிதையின் நடையைக் கட்டுரையிலோ, கட்டுரையின் நடையைக் கதைகளிலோ காண நினைப்பது பொருத்தமற்ற காரியம் மட்டுமல்ல. சிறுகதையின் நடை நாவலுக்கோ, நாவலின் நடை சிறுகதைக்கோ சரிவரப் பொருந்திப் போவதில்லை என்ற உண்மையையும் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனின் சிறுகதையில் காணப்படும் டாம்பீக நடையை அவருடைய நாவல்களில் காண முடிவதில்லை. அது மட்டுமல்ல. ஒரே எழுத்தாளனின் ஒரு சிறுகதையில் உள்ள நடைக்கும் அதே எழுத்தாளனின் இன்னொரு சிறுகதையில் உள்ள நடைக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றது.

நான் கையாண்ட வௌ;வேறு விதமான மொழி நடையை என் கதைகளில் உணர முடியும். ‘அசோக வனத்தில்’ அந்த டீச்சரே கதையைச் சொல்கிறாள். ‘அலர்’ என்று சங்க காலத்தில் சொல்லப்பட்டதே, அத்தகைய ஊர் வம்புகளால் அவள் நொந்து போய் இருப்பவள். தவிர அவள் ஓர் ஆஸ்த்மா நோயாளி. அந்தக் கதையில் என்னுடைய மொழி நடை பாய்ச்சலும், துள்ளலுமாய் அமைவது பொருத்தமற்றது. ஆனால் என்னுடைய ‘சூரியனின் முன் புறம்’ கதையில் வருபவன் ஒரு வித அலட்சிய மனோபாவம் நிறைந்தவன். அவனுடைய மன நிலைக்கிசைந்த ஒரு வித மொழி நடையை அங்கே தெரிவு செய்ய வேண்டி ஏற்பட்டது. போரும், அடக்கு முறையும் நிலவிய ஓர் சூழலில் ‘கள்ளிச் சொட்டும்’, ‘அரசனின் வருகையும்’ வேறொரு வகை மொழி நடையைப் பற்றிக் கொள்கின்றது. ‘வெருட்டியில்’ நையாண்டி தொனிக்கும் மொழி நடையொன்று வெளிப் படுகின்றது.

நான் அடிக்கடி சந்திக்க நேர்கின்ற இன்னொரு கேள்வியும் உண்டு. சிறுகதை என்ற பெயரை வைத்துக்கொண்டு ‘கதை’ என்ற அம்சம் கொஞ்சமும் இல்லாமல் எழுதப்படுபவை சிறுகதைகள் ஆகுமா? வாசகர்களை பிரதான இலக்காகக் கொண்டு, அவர்களை மனதில் இருத்திக்கொண்டு கதைகள் சொல்லும் போக்கை நான் எப்போதும் நிராகரித்து வந்திருக்கிறேன். அனுபவங்களின் மீளுருவாக்கம், அல்லது நான் கண்டதை, கேட்டதை, அனுபவித்ததைப் பகிர்தல் என்ற நிலையிலேயே என் வெளிப்பாடு அமைந்து வந்திருக்கிறது.

ஆனால் சிறுகதையில் கதை அமைப்பு என்ற ஒன்றைப் பற்றி வாசகர் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பதை-அந்த எதிர்பார்ப்பின் நியாயத்தை- நான் அறியாதவன் அல்ல. கதை என்பது அதைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஓர் அவசியத்தை -நேர்மையானதும், உண்மையானதுமான அவசியத்தைக் கொண்டிருக்க வேண்டும். துப்பறியும் கதை, மர்மக் கதை போல் செயற்கையாக அது துருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல. டோல்ஸ்டோயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலில் கடைசி வரையில் அந்தப் பெண்ணின் கதியை நோக்கி நாம் மூச்சுப் படபடக்கப் போய்க் கொண்டிருக்கிறோம் அல்லவா?, தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற அவசியத்தை நேர்மையாகவும், உண்மையாகவும் வாசகனில் தொற்ற வைக்கும் உயர்ந்த கலைத் திறனுக்கு இதை சாட்சியமாக சொல்லலாம்.

இந்தப் பின்னணியில் என் கதைகளை நான் எடை போட்டுப் பார்த்ததுண்டு. என்னுடைய பல கதைகளின் கதையமைப்பு மிகவும் எளிமையானவை. வெறும் அவதானங்களும், அவதானங்களின் அசை போடல்களும் என்று சொல்லலாம். வாழ்க்கை என்பது ஒரு தொடர் வளர்ச்சி. தொடர்ந்த ஒரு நீண்ட பயணம். ஆனால் நிழல்களில் அவ்வப்போது தங்குகிறோம். இந்தப் பின் நோக்கல்களும், கதை பற்றிய உத்திகள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் வெளிப்படும் மீள் நினைவுகளும், மன நிலைகளும், ழேளவழடபயை களும் நவீன சிறுகதைகளுக்கு உரிய இலட்சணங்கள்தான் என்று நம்புகிறேன்.

ஈழத்தின் புனைவிலக்கியத்தை, அது சார்ந்த படைப்புகளை பொதுவாக மூன்று வகைகளுக்குள் அடக்கி விடலாம். 1. ஜனரஞ்சக எழுத்து. 2. முற்போக்கு எழுத்து 3. நவீன எழுத்துப் போக்கு. இதில் ஜனரஞ்சக இலக்கியம் என்பது வணிகத்தை முதன்மைப்படுத்தி அதை தன் இலக்காகக்கொண்ட து. இத்தகைய எழுத்துகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவற்றின் குறிக்கோள்களை எட்டுவது அதிசயமல்ல. ஈழமும் விதி விலக்கல்ல.

முற்போக்கு எழுத்தாளர்கள், முற்போக்கு இலக்கியம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஈழத்தில் விசேஷமான அழுத்தங்களுடன் உச்சரிக்கப்படுபவை. இந்த வகை எழுத்துகளில் எனக்கு அவ்வளவு ஈர்ப்போ, ஆர்வமோ இருந்ததில்லை. அவர்களுடைய எழுத்துகளின் கலைத் தரமும், அழகியலும் என்னை தள்ளிப்போகச் செய்திருக்கின்றனர். 1970களில் இவ்வகை இலக்கியம் அரசியல் பின்புலத்துடன் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் வாசகங்கள் எல்லாம் கவிதைகளாக அடையாளம் காணப்பட்டு பிரசுரம் ஆகிக் கொண்டிருந்தன. அரசியல் பிரசங்கிகள் எல்லோரும் கவிஞர்களாகவும், கதைஞர்களாகவும் ஞானஸ்நானம் பெற்றிருந்தனர். 1978ல் ஈழத்தின் கிழக்கில் வீசிய பெரும் புயலுக்கும், இந்த இலக்கிய அலைக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கவில்லை. கம்பீரத்துடன் காட்சியளித்த விருட்சங்கள் எவ்விதம் அந்தப் புயலுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல் சரிந்தனவோ, அதேபோல் பல நல்ல எழுத்தாளர்களும் அந்த அலையில் தலை மறைந்து போனார்கள்.

இந்தப் புயலிலும், அலையிலும் நானும் என்னைப் போன்ற மிகச் சிலரும் ஆமை நகர்வுடன் மெதுவாக ஊர்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. எந்த அலையைக் கண்டும் நான் இதுவரை மிரண்டதும் இல்லை. என்னைத் தாரை வார்த்ததும் இல்லை. அவற்றுக்கு சாட்சியங்களாக என்னுடைய கதைகள் அமைகின்றன.

கால நகர்ச்சியும், சூழ் நிலைகளும், உலக அனுபவங்களும் ஒருவனுடைய எழுத்துக்கு வலியையும், முதிர்ச்சியையும் அளிப்பதுதான் நியாயமானது. ஆனால் யதார்த்தத்தில் எதிர் மாறாகவும் இருந்து விடுவதுண்டு. அதிகாலை நகரின் அழகு படிப் படியாக இரைச்சல்களிலும், வெயிலிலும், புழுதியிலும் முகமிழந்து போவது போல் நிகழக் கூடிய சந்தர்ப்பங்களும் சாத்தியந்தான். என்னுடைய எழுத்தின் போக்கு தன்பாட்டில் அதன் திசையைக் கண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. எந்தக் கடிவாளத்தையும் என்னுடைய கைகள் பற்றியிருக்கவில்லை. ஒரே சந்தோஷம் கூலிக்கு மாரடிப்பவனாகவோ, துதிபாடியாகவோ என் படைப்புலக வாழ்க்கை இருக்கவில்லை.

1988ல் என்னுடைய பதின்மூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு ‘உள்மனயாத்திரை’ என்ற தலைப்பில் வெளியானது. அவற்றையும், அவற்றைத் தொடர்ந்து நான் எழுதிய மூன்று கதைகளையும் உள்ளடக்கியதாக இந்தத் தொகுப்பு வெளியாகின்றது. இவற்றை இப்போது மொத்தமாகப் படிக்க ஆர்வம்கொண்ட பலரின் வேண்டுகோளால் இது வெளியாகின்றது.

தொகுப்பதற்காக என் கதைகளை எல்லாம் திரும்பிப் படிக்க வேண்டி இருந்தது. ஆரம்ப காலக் கதைகளை இன்னும் கன கச்சிதமாக சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. பிரதான பாதையில் நடந்து கொண்டிருக்கும் போதே சந்து, பொந்துகளில், கிளைப் பாதைகளில் நுழைந்து வெளியேறியதை இப்போது உணரக் கூடியதாக உள்ளது. என் சின்ன வயதுப் புகைப்படங்களை இப்போது பார்க்கும் அனுபவம் இது. ஆனைக் காதுகள், கஞ்சா மயக்கத்துடன் சதா கிறக்கத்துடன் இருக்கும் கண்கள், ஒட்டகச் சிவின்கியினுடையதைப் போன்ற நீண்ட கழுத்து, ஒரு கோழிக் குஞ்சை ஒத்த உடம்பு… இவற்றோடு சில படங்களில் இருப்பேன். அதற்காக ‘அந்த வளரிளம் பையனை’ நான் இல்லை என்று சொல்லலாமா?

தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம், அரசனின் வருகை, மூன்றாம் சிலுவை என நான் ஒரு யாத்திரீகன் போல காரிருளில் நெடுஞ்சாலையில் நகர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.

குட்டையினுள்ளும், கிணற்றினுள்ளும், குண்டாஞ்சட்டியினுள்ளும் நான் வாசம் செய்ய விரும்புவதில்லை.

அன்புடன்
உமா வரதராஜன்
25. 11. 2011

(காலச்சுவடு வெளியீட்டில் வரவிருக்கும் ‘உமா வரதராஜன் கதைகள்’ புத்தகத்துக்கு உமா வரதராஜன் எழுதிய முன்னுரை.)

சென்னை புத்தகக் கண்காட்சி (2012) ஜனவரி 5ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. அதுவரை தொடர்ந்து தமிழ்பேப்பரில் பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவரும்புதிய புத்தகங்களில் இருந்தும், ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்டிருக்கும் முக்கியமான புத்தகங்களில் இருந்தும் முன்னுரைகள், அணிந்துரைகள் அல்லது புத்தகத்திலிருந்து சிறிய பகுதிகளைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம். இது வாசகர்களுக்குப் பலவிதமான புத்தகங்களை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறோம்.

தாய்மை யாதெனில்…

யுவன் சந்திரசேகர்

ரீனை உங்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஐரீன் என்ற பெயரில் தெரிந்திருக்காது, ஒருவேளை. கொஞ்சகாலம் எங்களுக்குள் ஒருவித அபிமானம் நிலவியது. பிறகு ஒருவருக்கொருவர் எட்டாத தொலைவுக்குப் போய்விட்டோம். அவளை என்னால் என்றுமே மறக்க முடியாது.  ஐரீனுக்கு என்னை நினைவிருக்குமா, அதுவும் அவளுடைய தற்போதைய சூழ்நிலையில், என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

நான் சென்னைக்கு மாற்றலாகி வரும்போது இருபத்தோரு வயது இளம்பெண் அவள். இருபது வருடங்கள் தொடர்ந்து பணிசெய்து, ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பியிருக்கிறேன் – அவளுக்கு இப்போதுதான் முப்பது வயது ஆகியிருக்கிறது. அவர்கள் வட்டாரத்தில் இளமை அவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை.

1989- 90 வாக்கில் நான் சென்னைக்கு வந்தேன். குழந்தைகளின் படிப்பை உத்தேசித்து. புதிதாகப் பறித்த ரோஜா மாதிரி எனக்குப் பக்கத்து இருக்கையில் ஐரீன் பெர்நார்டு. மெலிதான நறுமணத்துடன் வந்து உட்கார்வாள். அவளுக்கு இடதுபுறம் என்னுடைய கூண்டு. நான் காசாளராக இருந்தேன். அவள் எழுத்தர்.

ஆங்கிலோ இந்தியப் பெண் என்றாலும் பிடிவாதமாக தினசரி பருத்திப் புடவைகள் அணிந்து வருவாள ஐரீன். இடது தோளில் சிறகுபோல விறைத்து நீண்டிருக்கும் புடவை விளிம்பு. மார்க் கதுப்பு அவ்வப்போது பார்வையில் பட்டுத் தொந்தரவு செய்யும்.

ஆனால், பேசும்போது அவள் கண்களில் மலரும் வெகுளித்தனம் எனக்குள் அந்தக் கணம் வரை சேர்ந்திருக்கும் கசடுகளைப் பொசுக்கிக் கருக்கிவிடும். பத்தாம் வகுப்புப் படிக்கும் என் மூத்த மகள் ஒரே கணத்தில் முழுசாக விளைந்து பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்துவிட்ட மாதிரி உணர்வேன். கடுமையான குற்ற உணர்ச்சியில் மனம் குமையும்.

நல்லவேளை, இந்த அவஸ்தை அதிக காலம் நீடிக்கவில்லை. மிகச் சரியாக ஒன்றரை வருடம். ஐரீன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போனாள். அந்த இடத்துக்கு ஆராவமுதன் வந்து சேர்ந்தார். இளைஞர்களெல்லாம் சிகரெட் பான் பராக் என்று நவீனமடைந்து வந்த காலகட்டத்தில் இவர் மட்டும் பிடிவாதமாகப் பொடி போட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக, இந்தப் பழக்கம் உடையவர்கள் வலது கையைத்தான் பயன்படுத்துவார்கள் அல்லவா? என் தலையெழுத்து, ஆராவமுது இடதுகைப் பழக்கம் உடையவர்.

தினவெடுத்ததும் லெட்ஜரை நிதானமாக முன்னால் தள்ளி வைத்துவிட்டு – கணிப்பொறிகள் சரளமாகப் புழக்கத்துக்கு வந்திராத நாட்கள் அவை – நாசித்துவாரங்களில் பொடியைக் கெட்டித்துவிட்டு இடது கையை உதறுவார். என் கண்களில் நீர் நிரம்பிவிடும். ஐரீனின் ஞாபகம் காரணமா, மிச்சப் பொடி காரணமா என்று என்னால் ஒரு முடிவுக்கு வர முடிந்ததேயில்லை.

ஐரீன் இருந்த நாட்களில், நானும் அவளும் ஒன்றாகத்தான் மதிய உணவுக்குப் போவோம். தாளித்துக்கொட்டிய தயிர் சாதத்தையும் மோர் மிளகாயையும் உருட்டி, கவளம் கவளமாக நான் விழுங்கும்போது, விரல்களில் ஈரம் படியாமல் ரொட்டித்துண்டுகளை எடுத்து மெல்லுவாள் அவள். கிட்டத்தட்டக் கழிவறைக் கோப்பையின் சாயலில் இருக்கும் வாஷ்பேஸினில் நான் கையையும் எவர்சில்வர் டப்பாக்களையும் கழுவிக்கொண்டு வருவேன். கைப்பையிலிருந்து எடுத்த டிஷ்யூ காகிதத்தால் சாயம் கலைந்துவிடாதவண்ணம் நாசூக்காக உதடுகளை ஒற்றியெடுப்பாள் ஐரீன்.

அடுத்த பத்து நிமிடங்கள் பல்வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருக்கைக்குத் திரும்ப நாங்கள் முடிவெடுக்கவும், நிறை கர்ப்பம் போன்ற தொந்தி ஐந்து அடுக்கு டிபன் கேரியர் மற்றும் பெருத்த ஓசையெழுப்பும் ஏப்பத்துடன் மாணிக்கவாசகம் சாப்பாட்டு அறைக்குள் நுழையவும் சரியாக இருக்கும்.

ருநாள் எங்கள் வாடிக்கையாளப் பெண்மணி ஒருத்தி பற்றிப் பேச்சு வந்தது. எப்போதுமே அதீதமான ஒப்பனையுடன் வருபவள் அவள். எரிக்கும் நிறங்களில் சேலை. அநியாயத்துக்குக் குதி உயர்ந்த காலணி. வரும்போதை விட, போகும்போது மேலும் விகாரமாகத் தெரியும் நடை. அவள் வங்கிக்குள் நுழைந்தவுடன் நானும் ஐரீனும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொள்வோம்.

அன்று எங்கள் புன்னகை பாதியில் உறைந்துவிட்டது. அந்தப் பெண்மணி தன்னுடன் அழைத்து வந்திருந்த சிறுவன்தான் காரணம். பெரிதாக ஓலமிட்டவாறு உள்ளே வந்தான் அவன். தலை ஒரு நிலையில் நிற்காமல் சதா சுழன்றுகொண்டிருந்தது. சின்னஞ்சிறிய, சப்பை மூக்கு. கீறல்போல் இடுங்கிய, பீழை கோத்த கண்கள். ஓசையெழுப்புவதற்காகத் திறந்த வாயில் பாதி மென்ற எதுவோ வெண்ணிறமாக நுரைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பெண்மணியின் புடைவையை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தான். பள்ளிச் சீருடை அணிந்திருந்தான்.

மாணிக்கவாசகத்தின் இருக்கையில் சென்று டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசை நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். அந்தப் பையன் உரத்துக் கூவுவான். இவள் சிரித்த முகத்துடன் அவனிடம் ஏதோ சொல்லி சமாதானம் செய்வாள். இரண்டு விநாடி கழித்து அவன் மறுபடியும் ஓலமிடுவான். அவனுடைய கால்சட்டையில் ஈரம் படிந்திருந்ததை சற்று தாமதமாகத்தான் கவனித்தேன்.

மாணிக்கவாசகத்தால் சுறுசுறுப்பாகவும் வேலை பார்க்க முடியும் என்பதை அன்று அறிந்துகொண்டேன். சீக்கிரமே அந்தப் பெண்மணியின் காசோலை என்னிடம் வந்துவிட்டது. டோக்கன் எண் சொல்லி நான் அழைத்ததும் பையனையும் நடத்திக்கொண்டு கூண்டுக்கு அருகில் வந்தாள். மூத்திர நாற்றம் துளைத்தது. பணத்தை வாங்கும்போது அவளாகவே சொன்னாள்:

புது எடம்ங்குறதாலே பயப்புடுறான். இல்லாட்டி இவ்வளவு சத்தம் போட மாட்டான்.

நானும் உபசாரமாக ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டுமே என்று கேட்டேன்:

பள்ளிக்கூடம் போறானாம்மா?

ஆமா சார். கூப்புடப் போற ஆயா இன்னைக்கி வரலே. அதான் நான் போயிட்டு நேரா பேங்க்குக்கு வர வேண்டியதாயிருச்சு. நீங்க ஒரு மணிக்கிக் குளோஸ் பண்ணிருவீங்களே?

பையனை நடத்திக் கூட்டிக்கொண்டு போனாள். அவன் மழலையாக ’ம்மா, ம்மா’ என்று அழைத்து ஏதோ கேட்பதையும், இவள் குனிந்து அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே போவதையும் அந்த ஹாலில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்கள். கதவுக்கு அருகில் நின்று பையன் திரும்பிப் பார்த்தான். அத்தனைபேருக்கும் கையாட்டி விடைசொல்லிவிட்டு வெளியில் போனான் – அம்மாவின் புடைவையைப் பிடித்த பிடி விலகாமல்….

அந்தம்மா மேக்கப்பெப் பாத்து இவ்வளவு நாளும் எனக்குள்ளெ ஒரு வெறுப்பு ஏறியிருந்துச்சு ஐரீன்.

எனக்கு வெறுப்பெல்லாம் இல்லே மணி ஸார். இவ்வளவு பொருந்தாமெ மேக்கப் செஞ்சிக்கிட்டு ஒரு லேடி வருதூன்னா அதுக்கு ஏதாவது காரணம் உண்டும்னுதான் நான் நெனைக்கும். இதே எங்கம்மாவெப் பாருங்கோ. மேக்கப்பே போடமாட்டாது…

அது வாஸ்தவம்தான். ஐரீனைப் பார்க்கச் சிலசமயம் வங்கிக்கு வருவார் அவளுடைய தாய். குளித்துத் தலைசீவியவுடன் நேரே தெருவில் இறங்கிவிட்ட மாதிரிப் பளிச்சென்று இருப்பார். விழியோரங்களிலும், நெற்றியிலும் நாலைந்து வரிகளாக ஓடும் சுருக்கங்களும், தலைமுடிக்குப் பூசிய அடர் கறுப்புச் சாயமும் தவிர வேறு ஒப்பனை எதுவும் கிடையாது. ஆனால், ஒருநாளும் புடைவை கட்டி வரமாட்டார். இள நிறங்களில், முழங்காலுக்குச் சற்றுக் கீழோடு நின்றுவிடும் கவுன்தான் எப்போதும்.

…ஆங்கிலோ இண்டியன் கம்யூனிட்டியிலே இப்பிடி ஒரு ஆர்த்தடாக்ஸ் பொம்பளையைப் பாக்கவே முடியாது மணி ஸார். ஐயர் வீட்டுப் பொண்ணு மாதிரிப் பொத்திப் பொத்தியில்லே என்னெ வளக்குது.

சொல்லும்போது ஐரீனின் கண்கள் மினுங்கின. அதே கண்களில் நீர் மல்க, அதே தாயாரைப் பற்றி வேறு வாக்கியங்களில் பேசப்போகிறாள் ஐரீன் என்பது எங்கள் இருவருக்கும் அப்போது தெரியாது. ஆறே மாதத்தில் அந்த நாள் வந்துவிட்டது. அதைச் சொல்ல மனம் கனக்கிறது. கொஞ்ச நேரம் கழித்துச் சொல்கிறேனே. கெட்ட விஷயங்களைச் சற்று ஒத்திப்போட்டால் ஒன்றும் கெட்டுவிடாது, இல்லையா?…

அந்தப் பையன் சம்பந்தமா அந்தம்மாவுக்கு ஒரு இன்ஹிபிஷனும் இல்லே பாத்தியா ஐரீன்?

அதுதான் ஸார் மதர்ன்றதூ.

இதே வாக்கியத்தை இதே உணவறையில் வைத்து முந்தினமாதம் ஐரீனிடம் நான் சொல்லியிருந்தேன். சொன்னேன் என்பதைக் காட்டிலும் ஜம்னாவை மேற்கோள் காட்டினேன் என்பதுதான் சரி. அன்று நாங்கள் பேசிக்கொண்டிருந்ததும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது…

த்தலக்குண்டுவில் நாங்கள் ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருந்த நாட்கள். வீட்டு உரிமையாளர் கோவிந்த ராவ்… அவருடைய மகள் ஜம்னாவால் ஏற்பட்ட சிக்கலைத்தான் ஐரீனிடம் கதையாகவும் ஆறுதலாகவும் சொன்னேன்.

அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஐரீன் வீட்டுக்கு நேர் கீழே உள்ள குடும்பத்தில் ரிச்சர்டு என்று ஒரு பையன் இருந்தான். கித்தார் வாசிப்பதில் கெட்டிக்காரன். போனி எம் மின் பாடல்களில் ஐரீன் மாதிரியே அவனுக்கும் அபாரமான ஈடுபாடு.

மொட்டைமாடிக்குத தற்செயலாக ஐரீன் போயிருக்கிறாள். ரிச்சர்டு கித்தாரை வைத்து நோண்டிக்கொண்டிருந்தானாம். இவளைப் பார்த்தவுடன் உற்சாகமாக ‘ஹாய்’ என்றிருக்கிறான். இருவருமாக ‘பை த ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ பாடத் தொடங்கி நாலைந்து வரிகள் போயிருப்பார்கள். ஐரீனின் அம்மா வந்துவிட்டாள்.

பருந்திடமிருந்து குஞ்சைக் காப்பாற்றப் பாயும் தாய்க்கோழி மாதிரிப் பதட்டமாய் இருந்தாளாம். ஐரீனைப் பிடி விலகாமல் தரதரவென்று தங்கள் போர்ஷனுக்குள் இழுத்துப் போய்விட்டாள். உள்ளே நுழைந்தவுடன் பளாரென்று ஓர் அறை.

தென்னக ரயில்வேயில் என்ஜின் டிரைவராக இருந்து அகாலமாய் மரித்த அமரர் பெர்நார்டின் மறைவுக்குப் பிறகு – அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் – இவளை வளர்க்கத் தான் பட்ட பாட்டையும், கணவரின் இடத்தில் தனக்குக் கிடைத்த ரயில்வே உத்தியோகத்தில் எத்தனையோ ஆண்கள் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்தபோதும் மனசையும் உடம்பையும் கல்லாக்கிக்கொண்டு இவள் ஒருத்திக்காகவே வருஷக்கணக்காகத் தனியாக இருந்து வருவதையும் ஆயிரத்திச் சொச்சமாவது தடவையாகக் கண்ணீர் மல்க ஒப்பித்தாள்.

திட்டட்டும் மணி ஸார். நான் ஏதாவது மிஸ்டேக் பண்ணினா திட்டட்டும். யாராவது ஆம்பளைகூடப் பேசினாலே ‘ஊர் மேயுறே’ன்னு ஆரமிச்சா எப்பிடி ஸார். அதுலேயும் தமிள்லே திட்டுதூ. ஏதோ குப்பத்திலே கேக்குற மாதிரி அவளோ பச்சைபச்சையா இருக்கூ…

என்று கண்கலங்கினாள் ஐரீன். அவளுக்கு இதமாக இருக்கட்டும் என்றுதான் ஜம்னாவைப் பற்றிச் சொன்னேன். உண்மையில், நான் சொன்னது ஜம்னாவைப் பற்றி அல்ல. என்னுடைய அம்மாவைப் பற்றி.

ஒரே பையனான என்னையும் தன் மனைவியையும் விட்டுவிட்டு என் தகப்பனார் ஓடிப்போய்விட்டார். கம்பத்தில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் நர்ஸ் ஒருத்தியுடன் குடித்தனம் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டு, என் தாய்மாமன்கள் மூன்றுபேரும் கொதித்துக் கிளம்பினார்களாம். அம்மா வேண்டாமென்று தடுத்துவிட்டாள்.

ஒடஞ்ச கலயம். இன்னிமே ஒட்டாதுண்ணா

என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். மாமன்மார் மாதாந்திரம் கொடுத்த சொற்பத் தொகையும், அக்ரஹாரத்தில் நாலைந்து வீடுகளில் பாத்திரம் தேய்தது வந்த வருமானமும் கொண்டு என்னைப் படிக்க வைத்தாள் அம்மா.

தேசிய மய வங்கியில் வேலை கிடைத்து, நான் திண்டுக்கல் கிளையில் சேர்ந்தேன். அந்த வாரக் கடைசியில் ஊருக்கு வந்தபோது, விசாலாட்சியம்மனுக்குப் பட்டுப் புடைவை சாத்தினாள்.

கண் திறந்துட்டேடீம்மா. என் வயித்துலெ பாலெ வார்த்துட்டே.

என்று சந்நிதியில் குப்புற விழுந்து என் அம்மா கதறியதைப் பார்த்து கோட்டீஸ்வரக் குருக்கள் மிரண்டு போனார். அவரும் சின்ன வயதுதானே பாவம். என்னைவிடப் பத்து வயது அதிகமிருந்தால் ஜாஸ்தி. அர்ச்சனை முடித்துக் கிளம்பும்போது, என்னைத் தனியாக அழைத்து,

அம்பி, தாயாரெ ஒரு நல்ல டாக்ட்டர்ட்டேக் காமியேன். சித்தம் கலங்கினவ மாதிரின்னா நடந்துக்கறா.

என்று ஆலோசனை சொல்லி என் முறைப்பைப் பதிலாக வாங்கிக்கொண்டார்.

அவ்வளவு பிரியம் இருந்ததினாலேதான் அவ்வளவு ஆத்திரமும் வந்திருக்கு அவளுக்குன்னு புரியும்போது எனக்கு முப்பத்தைஞ்சு வயசாயிருச்சு ஐரீன். அம்மா காலமாயிப் பத்து வருஷம் ஆயிருந்தது…

என்று பெருமூச்சு விட்டேன். மாணிக்கவாசகம் ஏப்பம் விடும் ஒலி கேட்டது.

…சரி. நாளைக்கிக் கண்ட்டின்யூ பண்ணுவம்.

என்று எழுந்தேன்.

றுநாள் ஞாபகமாகக் கேட்டாள் ஐரீன். நானும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான கோவிந்த ராவ் பேருந்து நிலையத்துக்கு எதிரே ஓட்டல் வைத்திருந்தார். அவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும். மகனை எஸ்ஸெஸ்ஸெல்ஸி முடித்தவுடன் கல்லாவில் உட்கார வைத்துவிட்டார். பள்ளிக்கூடத்திலேயே முதலாவதாக வந்துகொண்டிருந்த பையனை மேற்கொண்டு படிக்கவிடாமல் கெடுத்துவிட்டார் ராயர் என்று தாயார் ருக்மிணிபாய் என் அம்மாவிடம் நாள்தவறாமல் சொல்லிப் புலம்புவாள். தினசரி இரவில் அவர்கள் குடும்பத்தில் பெரிய யுத்தம் நடக்கும் பெற்றவர்களுக்குள். ஒரு வார்த்தை விடாமல் எங்கள் போர்ஷனுக்குக் கேட்கும். ஆனால், கன்னடத்தில் நடக்கும் சண்டை என்பதால், எங்களுக்கு ஒரு வார்த்தையும் புரியாது.

மூன்றாவது மகள் ஜம்னா அருப்புக்கோட்டையில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். கணவர் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறவர். மூத்த பெண்கள் இருவரையும் கர்நாடகத்தில் ஓட்டல்களில் வேலை பார்க்கிறவர்களுக்குக் கொடுத்திருந்தது. கஷ்ட ஜீவனம்தான். ஆனால், அவர்களால் இவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஜம்னாவின் புருஷனோ ஓட்டலில் பங்கு கேட்கிறார்.

ஓட்டலை நம்பி குப்புராவின் படிப்பையும் கெடுத்தாகிவிட்டது. ருக்மிணிபாய் பங்கு கொடுக்கக் கூடாது என்கிறாள். ‘கொள்ளிபோட என்று இருப்பது ஒரே பிள்ளை. அவன் தலையில் ஓட்டலைக் கட்டி வாழ்க்கையைக் கெடுத்தது போதும். மகளை வாழ வைக்க என்று இன்னொரு தடவை கெடுக்க வேண்டியதில்லை.’

பங்கு கொடுத்தால் தப்பில்லை என்பது ராயர் தரப்பு. ‘தொழில் தெரிந்தவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான். பெரியகுளம் பஸ்ஸ்டாண்டில் இன்னொரு ஓட்டல் விலைக்கு வருகிறதாகச் சொல்கிறார்கள். மூன்றாம் பேர் அறியாமல் அதைக் குப்புவின் பேருக்கு வாங்கி விடலாம்.’

‘பங்கு கொடுத்தால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று பயமுறுத்துகிறாள் ஜம்னா. கொடுப்பது என்று ஆரம்பித்துவிட்டால் இத்தோடு நிற்காதாம்.

இதுதான் தினசரிச் சண்டைக்குக் காரணம் என்று ஜம்னா விளக்கினாள்… ஆனால், சண்டை கன்னடத்தில் நடக்கவில்லையாம். கோவிந்த ராவ் குடும்பத்தின் தாய்மொழி துளு.

நான் பார்த்த பெண்களிலேயே பேரழகி என்றால் அது ஜம்னாதான். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் நிறம். பிற்பாடு ஏதோவொரு சினிமாப் பாட்டில் ‘வெண்சங்குக் கழுத்து’ என்று உவமானம் வந்தபோது எனக்கு உடனடியாக ஜம்னாவின் ஞாபகம் வந்தது. ஆனால், ஜம்னாவின் அழகைப் பூரணமாக மறைத்த கருந்திரை அவளுடைய கண்கள்.

லேசாகப் பழுப்பு நிறம் மினுங்கும் பூனைக் கண்களில் நிரந்தரமாக இருந்து வந்த துக்கத்தின் தன்மை அப்படி. மின்வாரிய ஊழியர் பெண்டாட்டியை மட்டும்தான் பிறந்தவீட்டுக்கு அனுப்பியிருந்தார். இரண்டு வயதான இவர்கள் குழந்தையைத் தம்மிடமே வைத்துக்கொண்டு விட்டார். அதிகபட்ச அழுத்தம் கொடுக்காமல் சொத்தில் பங்கு வாங்க முடியுமா? தன் குழந்தையின் பிம்பத்தை வெட்டவெளி முழுவதும் தேடியவாறே நடமாடுகிறாள் ஜம்னா என்று தோன்றும் எனக்கு. ஆக, எனக்குப் பரிச்சயமான பெண்களில் தொட வேண்டும் என்ற விருப்பத்தைக் கடைசிவரை கிளர்த்தாத ஒரே பெண்ணும் அவள்தான்…

மணி ஸார், அப்ப நானு?

என்று கேட்டாள் ஐரீன். கண்களில் குறும்பு ததும்பியது.

அட நீ ஒண்ணு. நீ என் பொண்ணு மாதிரியில்லே இருக்கே. தவிர, அப்ப இருந்த வயசுக்கு இப்ப டபிளாயிருச்சே ஐரீன் எனக்கு?

என்றேன். இருவரும் சிரித்தோம்.

…ஆனால், என் அம்மாவுக்கு இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை. திண்டுக்கல்லிலிருந்து வார விடுமுறைக்கு நான் ஊர் வரும்போது, ஜம்னா சம்பந்தமாக நிச்சயம் ஒரு சண்டையாவது எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும். இத்தனைக்கும் ருக்மிணிபாயும் அம்மாவும் நெருங்கிய சிநேகிதிகள். ஒருவேளை, தன் பிள்ளை அவ்வளவு யோக்கியன் இல்லை என்று அம்மா நினைத்திருக்கலாம். நான் யோக்கியன் இல்லைதான். ஆனால், அம்மாவுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எந்த நேரமும் கொட்டித் தீர்த்துவிட ஆயத்தமாய் இருக்கும் கண்களைப் பார்த்ததுக்குப் பிறகும் ஒருத்தனுக்குக் காமம் எழும்புமா?

ஒரு சனிக்கிழமை. மொட்டை மாடியில் ஜம்னா என்னிடம் வழக்கம்போலத் தன் குழந்தை பற்றிய நினைவுகளைச் சொல்லிக் கலங்கிக்கொண்டிருந்தாள். அப்போது இவளுக்குப் பச்சை உடம்பாம். திடீரென்று மஞ்சள் காமாலை தாக்கிவிட்டது. குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். குழந்தையானால், வஞ்சகமில்லாமல் தாயிடம் குடிக்கக் கூடியவன். இவளுக்கும் தாராளமாகச் சுரக்குமாம். வீர் வீரென்று அவன் அழும்போது இவளுக்கு மார் கட்டிக்கொண்டு, மேலும் சிக்கலாகிவிட்டதாம்.

இதைச் சொல்லும்போது கரகரவெனக் கண்ணீர் வழிய, தன் நெஞ்சில் வலதுகையை வைத்து அழுத்திக்கொண்டாள் ஜம்னா. உதடுகள் கோணிவிடாமல் தடுக்கப் பெரும் பிரயாசைப் படுகிறாள். பாவம், அவளும் இதையெல்லாம் யாரிடம் சொல்லித் தீர்த்துக்கொள்வாள்?..

அந்தச் சமயத்தில் அம்மா மாடியேறி வந்தாள். ஜம்னாவின் புறம் திரும்பவேயில்லை. நேராக என்னைக் கண்ணுக்குக் கண் பார்த்தாள்.

மணி, கீழே வா. உங் கிட்டெக் கொஞ்சம் பேசணும்.

நாய்க்குட்டி மாதிரிப் பின்தொடர்ந்தேன். மறுத்து ஒரு சொல் பேசினாலும், ஜம்னாமீது பாய்ந்துவிடுவாளோ என்று அச்சம்.

அன்று நடந்த தகராறின் முடிவில் அம்மாவுக்கு நான் சில விளக்கங்களை எடுத்துரைக்க வேண்டி வந்தது.

1. காதல் திருமணம் செய்துகொள்ளும் உத்தேசம் எதுவும் எனக்குக் கிடையாது.
2. தவறிப் போய்க் காதலித்தாலும் மாத்வப் பெண்ணைக் காதலிக்க மாட்டேன்.
3. மாத்வப் பெண்ணாகவே இருந்தாலும் மணமான பெண்ணைக் காதலிக்க மாட்டேன்.
4. மணமான பெண்ணாகவே இருந்தாலும் நிச்சயம் ஜம்னாவைக் காதலிக்க மாட்டேன்.
5. ஒருவேளை ஜம்னாவைத்தான் காதலிப்பது என்று முடிவெடுத்துவிட்டேன் என்றால், எந்தக் கொம்பன், கொம்பியாலும் என்னைத் தடுக்க முடியாது.
6. அப்படி ஒரு வீம்பு எனக்குள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது அம்மாவின் பொறுப்புத்தான்.

கடைசி ஷரத்துக்கு விசுவாசமாகக் கடைசிவரை இருந்தாள் அம்மா என்று சொல்லிவிட முடியாது. அதற்குப் பிறகும் ஓரிரு தடவைகள் இதே பிரச்சினையை எழுப்பியிருக்கிறாள். என்ன, முந்தைய நான்கு விதிகளுக்கு நியாயமாய் நான் நடந்துகொண்டேன், பெரியவர்கள் பார்த்துவைத்த தாடகையைத்தான் திருமணம் செய்துகொண்டேன் என்பதை என் அம்மா உயிருடன் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. தாய்மாமன்கள்தான் என் திருமணத்தை நடத்திவைத்தார்கள்…

அப்பவே நீங்க பாய்ண்ட் பாய்ண்டாத்தான் பேசுமா மணி ஸார்?

பின்னே? அதெல்லாம் பிறவியிலேயே வர்ற வியாதி ஐரீன்.

மறுபடியும் இருவரும் சிரித்தோம். ரொட்டித் துண்டை விழுங்கிவிட்டு ஐரீன் கேட்டாள்:

ஒங்க அம்மா இப்பிடி சந்தேகப் படுதூண்றது அவுங்களுக்கு, அதான் அந்த ஜம்னா மேடத்துக்குத் தெரியுமா மணி ஸார்?

நான்தான் சொன்னேன். ஜம்னா எவ்வளவு தங்கமானவ ன்னு எனக்குத் தெரியவந்தது அப்பொத்தான். சட்டுன்னு பதில் சொன்னா. ‘அவுங்க நினைக்கிறதுலெயும் ஞாயம் இருக்குதானே மணி…’

பெருமூச்சு விட்டேன்.

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தோம். நான் அழுக்குக் கோப்பையிடம் சென்று திரும்பினேன். கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். இன்னும் நேரம் இருக்கிறது. விட்ட இடத்திலிருந்து ஐரீன் தொடர்ந்தாள்.

நீங்க இதெப்போயி அந்த மேடத்துக்கிட்டே சொல்லியிருக்க வேண்டாம் மணி ஸார். உள்ளுக்குள்ளெ எவ்வளவு சங்கடப்பட்டுருக்கும் அதூ?

வேணும்னு சொல்லலெ ஐரீன். சொல்ற மாதிரி சந்தர்ப்பமாயிருச்சு.

…ஜம்னாவின் இன்னொரு பரிமாணம் தெரிவதற்குக் காரணமான அந்தச் சம்பவம் மறுவாரமே நிகழ்ந்துவிட்டது. வாரக் கடைசியில் ஊர் திரும்புகிறேன். பயணம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே வயிறு கலக்க ஆரம்பித்துவிட்டது. முந்தின இரவு இரண்டாம் ஆட்டம் முடிந்து திரும்பும்போது அகாலத்தில் சாப்பிட்ட டபிள் ஆம்லெட்டும் சிலோன் புரோட்டாவும் ஒத்துக்கொள்ளவில்லையோ என்று சந்தேகம்.

வயிற்றுக்குள் பெரும் பிரளயம் நடக்கிறது. வத்தலக்குண்டுக்கு ரயில் வசதி இல்லை என்பதை ஏன் யாருமே கவனிக்க மாட்டேனென்கிறார்கள் என்று மிகமிக வேதனையாக உணாந்தவாறு தொடர்ந்து பயணம் செய்கிறேன். ஊர் வந்து விட்டது. பேருந்திலிருந்து படியிறங்கி நடக்க முடியவில்லை. வியர்க்க ஆரம்பித்துவிட்டது. முன்னங்கைகளில் முட்கள் பூத்த மாதிரி ரோமக்கால்கள் வியர்க்குரு தடிமனுக்குப் புடைத்துவிட்டன. மேற்கொண்டு எட்டு வைக்க முடியாதபடி கால்கள் பின்னுகின்றன. ஜட்கா அமாத்திக்கொண்டு போகலாமென்றால் வண்டித் தடதடப்புக்கு வயிறு வெடித்துவிடும் என்று பயமாய் இருக்கிறது.

எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை. நிலைவாசல் தாண்டி உள்ளே நுழைந்தவன், பேண்ட்டின் பித்தானைக் கழற்றுகிறேன். அதற்குமேல் பொறுமை காக்க முடியாத மலக்குடல் உள்ளாடை மீறிக் கழியத் தொடங்கியது. மூச்சுத் திணறவைக்கும் துர்நாற்றம். கிட்டத்தட்ட ஒரு மணிநேர வலி இதமாக வடிந்து இறங்குவதை ஆனந்தமாய் உணர்ந்தபடி சுவரில் சாய்ந்து நின்றேன். உடம்பு இரண்டு மூன்று தடவை சிலிர்த்து அடங்கியது.

அம்மா வந்து என் தோளைப் பிடித்துக்கொண்டாள். நான் சமனப்பட்டுவிட்டேன் என்று தெரிந்ததும் குளியலறைக்குப் போய் பிளாஸ்டிக் வாளி நிறையத் தண்ணீரும் குவளையும் கொண்டு வந்தாள். தோளில் சலவைத் துண்டு கிடந்தது.

நா வேணா அலம்பிவிடட்டுமாடா?

வேணாம் .வேணாம்.

என்று கூசினேன். துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பேண்ட்டையும் உள்ளாடையையும் கழற்றி அம்மாவிடம் கொடுத்தேன். அவள் சுருட்டி எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் போனாள். நான் கழிவறைக்குப் போனேன். சுத்தம் செய்துகொண்டு திரும்பும்போது உறைத்தது – எத்தனையோ வருடம் கழித்து அம்மா என்னை’டா’ போட்டுப் பேசினாள் அன்று.

மொட்டை மாடியில் நானும் ஜம்னாவும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து விசாலாட்சியம்மன் கோவில் வாசல் நன்கு தெரியும். அம்மா கோவிலுக்குள் நுழைகிறாள். வெளியூரிலிருந்து வந்து முகாமிட்டிருக்கும் கிழவர் ஒருவர் பாகவதம் பிரவசனம் செய்கிறார். தினசரி சாயங்காலம் அம்மா போய்க் கேட்டுவிட்டு வருகிறாள். உடன் இருக்கும் சிஷ்யன் பார்வையில்லாதவனாம். கதையைக் கிழவர் சொல்ல, இடையில் கீர்த்தனங்களை அவன்தான் பாடுகிறானாம். ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டு அவன் பாடும்போது, எது குரல் எது வாத்தியம் என்றே பிரித்துப் பார்க்க முடியாது என்று புல்லரித்தாள் அம்மா… ஜம்னா என்னிடம் கேட்டாள்:

சாயங்காலம் ரொம்ப வேகமா வந்தியே மணீ. என்ன ப்ராப்ளம்?

முழுக்கதையையும் சொன்னேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு,

இருபத்து மூணு வயசுப் பிள்ளைக்கிப் பீயள்ளி அலம்பிவிடறேங்கறால்லியா? அதான் அம்மா. உங்கம்மா மாதிரிப் பிரியமான தாயாரா என்னாலெல்லாம் இருக்க முடியுமான்னு தெரியலே மணி.

நீ அவளெப் பத்தி இப்பிடிச் சொல்றே. அவ உன்னை என்னன்னு நெனைக்கறா தெரியுமா?

ஜம்னாவின் பதில் கொடுத்த ஆச்சரியம் இன்றுவரை அடங்கவில்லை எனக்கு. என்னுடைய அம்மா தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்றுகூடக் கேட்டுக்கொள்ளாமலே அந்த பதிலைச் சொன்னாள்:

அவுங்க நினைக்கிறதுலெயும் ஞாயம் இருக்குதானே மணி… அவுங்க இடத்துலெ நான் இருந்தா, நானும் சந்தேகப்படத்தான் செஞ்சிருப்பேன்… போறது. நீ கீழெ இறங்கிப் போ மணி. இனிமே நாம தனியா உக்காந்து பேச வேணாம். தாயார் மனசெப் புண்படுத்தறது உனக்கும் நல்லதில்லே, எனக்கும் நல்லதில்லே.

கழுத்தில் கைவைக்காத குறையாக என்னை மாடியைவிட்டு இறக்கி அனுப்பிவிட்டாள். அதன் பிறகு அவள் என்னிடம் தனியாகப் பேசுவது என்ன, பொது இடத்தில் பேசுவதுமே வெகுவாகக் குறைந்து வந்து அறுதியாக நின்றே விட்டது…

அப்பறம் அந்த ஜம்னா என்ன ஸார் ஆனாங்க?

அதையேங் கேக்கிறே. அவுங்க ஓட்டல் வாசல்லே பீடாக் கடெ போட வந்த ராஜஸ்தான்காரனோடெ நெருக்கமாயி ஓடிப் போயிட்டாளாம். பிற்பாடு கேள்விப்பட்டேன். எங்க அம்மா இறந்துபோனதாலே நான்தான் திண்டுக்கல்லெயே ரூம் பார்த்துத் தங்கீட்டெனே.

அந்த மேடத்தோடெ கொளந்தே?

அது இன்னமும் கொளந்தையாவா இருக்கும்? இப்பொ ஒன் வயசைத் தாண்டியிருப்பான்.

ஓ.

என்றவாறு எழுந்தாள் ஐரீன். நானும் எழுந்தேன். உள்ளே வந்த மாணிக்கவாசகம் டிபன் கேரியரை லொட்டென்று வைத்தார்.

கவுண்ட்டரில் சென்று உட்கார்ந்தேன். ஐரீன் தொடர்பாக எனக்குள் நிலவிவந்த பிரகாசத்தில் லேசாக இருள் கலந்துவிட்ட மாதிரி உணர்ந்தேன். பின்னே? ஜம்னா என்ன ஆனாள் என்று அவ்வளவு ஞாபகமாகக் கேட்டுக்கொண்டவள், என் அம்மா ஏன் இறந்தாள் என்று கேட்கவே யில்லையே? ஒருவேளை, நான் சொன்ன கதையின் போக்கில் ஜம்னாவையும் தன்னையும்தான் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்ததோ என்னவோ அவளுக்கு.

ஐரீனுக்கு எப்படியென்றாலும் சரி. எனக்கு அம்மாவின் மரணத்தை நினைத்தால் அடிவயிற்றிலிருந்து பீதியும், குமுறலும் கிளம்பி வரும். பஸ் பிரயாணத்தில் தொந்தரவு பண்ண ஆரம்பித்த வயிறு நிரந்தரமாகப் படுத்த ஆரம்பித்ததும், தொடர் விடுமுறையில் இருந்துகொண்டு, ஆஸ்பத்திரிக்கும் கழிவறைக்கும் மாறி மாறி நான் ஓடித் திரிந்ததும், ஆசனவாயில் மிளகாயை அரைத்துத் தடவிய மாதிரி எந்நேரமும் காந்தல் இருந்ததும் எல்லாம் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில். அக்டோபர் ஆரம்பத்தில் அம்மா இறந்துவிட்டாள்.

ஒரே வாரம்தான். இன்ன வியாதியென்று டாக்ட்ர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இறந்துபோனாள். எனக்கு செரிமானம் தொடர்பாக வந்திருந்தது தீரா வியாதி என்று அறிவித்த குடும்ப டாக்டர் சத்தியசீலன் எம் டி, மறுமுறை எடுத்த சோதனைகளில் தடயமே இல்லாமல் வியாதி காணாமல் போய்விட்டதே என்று வியந்து சொன்னதை நானுமே ஆழ்ந்து அனுபவிக்க முடியாதபடி நிகழ்ந்து முடிந்திருந்தது அம்மாவின் மரணம்.

ள்ளிரவு தாண்டியும் தூங்கவிடாமல் ஐரீனைப் பற்றிய ஞாபகங்கள் இப்படி வரிசையாய் வந்து கொட்டுவதற்குக் காரணம் இருக்கிறது. இன்று சாயங்காலம் பல் மருத்துவரிடம் சென்றிருந்தேன். காத்திருக்கும் நேரத்தில் நோயாளிகள் படிப்பதற்காக ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சில பத்திரிகைகள் கிடந்தன. ஆங்கில மாதாந்தரி ஒன்றை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

ஏழாவது பக்கத்தில் பளபளவென்று ஐரீனின் புகைப்படம். அதுதான் முன்னமே சொன்னேனே, ஐரீன் என்று சொன்னால் இன்னார் என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவளுடைய தற்போதைய பெயரில் குறிப்பிட எனக்கு விருப்பமில்லை. இந்தப் பெயர் சூட்டிக்கொண்ட ஆரம்ப நாட்களின் வேதனை அவளுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம். எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

ஒருவார விடுப்பு முடிந்து அவள் பணிக்குத் திரும்பிய அந்த நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது. வழக்கமான மலர்ச்சி இல்லாது, கலங்கிய முகத்துடன் வந்து உட்கார்ந்தாள் ஐரீன். கடனேயென்று சொன்ன குட்மாணிங்கோடு சரி. பிரியமான அந்தப் புன்சிரிப்பைக் காணோம். அடிக்கடி கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

பனிரெண்டு மணி சுமாருக்கு ஐரீனின் அம்மா வங்கிக்கு வந்தார். புத்தம் புதிய ஐநூறு ரூபாய்க் கட்டுகள் இரண்டைத் தம் கணக்கில் கட்டினார். நான் விசாரிக்காமலே, நயமான ஆங்கிலத்தில், கிசுகிசுப்பாக, பக்கத்துக் கூண்டுக்குக் கேட்காதவாறு, முகமெல்லாம் சிரிப்புடன், சொன்னார்:

மிஸ்ட்டர் மணி. இது என்ன தெரியுமா? ஐரீன் வாங்கியிருக்கும் முதல் அட்வான்ஸ். அவள் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாள். நீங்கள் அவளுடைய நெருங்கிய நண்பர், நலம் விரும்பி என்பதால் உங்களிடம் தெரிவிக்க விரும்பினேன்.

மத்தியானம் உணவறையில் ஐரீனிடம் நான் விசாரித்துத் தொலைத்திருக்க வேண்டாம். பொங்கிக் குமுறிவிட்டாள்.

அது முன்பணம் இல்லை மணி ஸார். கூலி.

என்று விசித்தாள். பொதுவாக என்னிடம் ஆங்கிலத்தில் பேசாத ஐரீன் அன்று பேசிய நாலைந்து வாக்கியங்களில் செல்லமான கொச்சைத் தமிழ் எட்டியே பார்க்கவில்லை என்பதோ, என் கண்ணைப் பார்த்து அவள் ஒரு சொல்லும் பேசவில்லை என்பதோ அல்ல, அடுத்த நாளிலிருந்து என்னுடன் சேர்ந்து சாப்பிட வருவதை நிறுத்திவிட்டாள் என்பதுதான் எனக்குப் பெரிய துக்கம்.

மறு மாதம் வேலையை ராஜினாமா செய்தாள். ‘முதல் படத்திலேயே டூ பீஸ் நீச்சலுடையில் நடித்த புரட்சிக்காரி’ என்று பத்திரிகைகள் புகழ்ந்தன. பக்கத்து இருக்கையில் இருந்தபோது ஓரக்கண்ணுக்குத் தட்டுப்பட்டதைவிடப் பல மடங்கு பெரிய முலைகளுடன் தமிழ் வாராந்தரிகளின் அட்டைப்படத்தை அலங்கரிக்கத் தொடங்கினாள். எவ்வளவுதான் இருந்தாலும், அந்தக் கண்களில் இருந்த கள்ளமின்மையை யாராலும் எதுவும் செய்ய முடியாமல்தான் இருந்தது.

துரதிர்ஷ்டம், அந்தப் படம் தோற்றுப்போனது. தொடர்ந்து இரண்டு மூன்று தோல்விப் படங்களில் நடித்துவிட்டுக் காணாமல் போனாள் ஐரீன். புகழ் பெற்ற பத்திரிகைக் குடும்பத் தலைமகனின் பராமரிப்பில் சவுகரியமாக இருக்கிறாள் என்று ஏதோ பத்திரிகையில் கிசுகிசு வந்ததாக என் மனைவி படித்துச் சொன்னாள்.

இப்போது மருத்துவமனைப் பத்திரிகையில் பார்க்கும்வரை அவளுடைய ஞாபகம் இல்லாமலேதான் இருந்திருக்கிறது. இடையில், கார்கில் யுத்தம் முடிந்த சூட்டோடு வெளிவந்த ஹிந்திப் படம் ஒன்றை, என் மகன் எங்கிருந்தோ வாங்கிவந்த திருட்டு விசிடியில் பார்த்தேன். அகில இந்திய அளவில் பயங்கரமான வெற்றியைச் சம்பாதித்த படம் அது. அம்மா வேடத்தில் நடித்திருப்பது ஐரீன் என்பதே இடைவேளைக்குப் பிறகுதான் புரிந்தது எனக்கு.

புழுதியும், உச்சஸ்தாயியில் ஷெனாயும் வயலினும் சாரங்கியும் மாறி மாறி அலறும் நாராச ஒலியோடு, கண்ணீரும் ரத்தமும் சிதறி நிரம்பிய கடைசிக்காட்சியில், தேசத் துரோகியான மகனை பாக்கிஸ்தான் எல்லையில் வைத்து தன் சொந்தக் கைகளால் சுட்டுக்கொன்றுவிட்டுக் கதறிக் கதறி நாலுபக்கம் வசனம் பேசிவிட்டு தன்னையும் சுட்டுக்கொள்ளும் தாயார். அந்த வேடத்துக்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகை விருதை அந்த வருடம் கொடுக்காமல் விட்டது தவறு என்று கண்டனம் தெரிவித்தது முன்குறிப்பு. இந்தியாவின் பேரழகான தாய் என்பதுதான் அந்தப் பேட்டியின் தலைப்பே.

ஆனால், இன்று பார்த்த பத்திரிகைப் புகைப்படத்தில் இருந்தது ஐரீனே அல்ல. இந்தக் கண்களே வேறு. முற்றிவிட்டவை. இந்தியில் ஏழெட்டுப் படங்களில் நடிக்கிறாளாம். ‘எப்படியோ நன்றாக இருந்தால் சரி,’ என்று என் வயதுக்குப் பொருத்தமான ஆசி வாக்கியம் எனக்குள் எழுந்தது. என்ன, அந்தப் பேட்டியில் அவள் சொல்லியிருந்த இரண்டு மூன்று தகவல்கள்தாம் உறுத்தின.

1. பள்ளிக்கூடம் முடித்தவுடனே நேரே நடிக்க வந்துவிட்டாள் ஐரீன். அவளுடைய ஆதரிசங்கள் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ. இந்தியில் நர்கீஸ். தமிழில்? சந்தேகமென்ன, ஐரீனேதான். இதைச் சொல்லிவிட்டு அழகாகச் சிரித்தார் என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பு வேறு.
2 பூர்வாசிரமத்தில் தான் ஒரு ஹிந்துப் பெண். ராஜலட்சுமி என்று பெயர். சொந்த ஊர் ராஜமுந்திரிக்கு அருகில் உள்ள சிறு கிராமம்.
3 தன்னைத் திறமையான நடிகையாய் வளர்ப்பதில் தன் தாய்க்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு. இன்னொரு பிறவி எடுத்தாலும் திருமதி. மங்கம்மாவின் மகளாகவே பிறக்க ஆசைப்படுகிறாள் ஐரீன்.
4 தகப்பனார் ரோசைய்யா நிலச் சுவான்தார். தற்சமயம் அமரராகிவிட்டார்.

இந்தத் தகவல்கள் எதுவுமே உண்மையானவை அல்ல – அதனாலென்ன, அவளுடைய தற்போதைய கண்களுடன் ஒத்துப் போகிறவை… எப்படியோ, ஐரீன் புண்ணியத்தில் இன்று அம்மாவின் ஞாபகம் மிக மிக அதிகமாகச் சூழ்ந்திருக்கிறது என்னை.

ணியிலிருந்து ஓய்வு பெற்று மறுபடியும் வத்தலக்குண்டுவிலேயே வந்து ஸெட்டிலாக முடிவெடுத்தேன். வாழ்வின் இறுதிக் காலத்தை பால்யத்தின் இனிமையான ஞாபகங்களுடன் கழிக்கவேணடும் என்பதுதான் பிரதானமான விருப்பம். மிகக் கச்சிதமாக வட்டம் பூர்த்தியாகிவிடும் அல்லவா?

தவிர, என் குழந்தைகள் வளரவளர, அம்மாவின் ஆகிருதியும் எனக்குள் வளர்ந்து வந்திருந்தது. அவள் இருந்த காலத்திலெல்லாம் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் விடாமல் சண்டை போட்டுவிட்டு நான் போய்ச் சேரும் காலம் வந்த பிறகு அம்மாவிடம் இவ்வளவு பாசமும் அவளிடம் நான் நடந்துகொண்ட விதம் பற்றிய ஆதங்கமும் பொங்கியது சற்று விநோதமான சமாசாரம்தான். ஆனால், உள்ளுணர்வின் ஆழத்தில் அதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்திருக்கிறது என்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது.

‘சொந்த ஊரில் சென்று ஸெட்டில் ஆகட்டுமா’ என்று கேட்டபோது என் குழந்தைகள் உடனடியாக ‘சரி’ என்று சொல்லிவிட்டார்கள். பக்திப் பழமான என் மனைவி மட்டும், ‘பக்கத்துத் தெருவில் ஒரு சுவாமிஜி வந்திருக்கிறார். அவரிடம் சென்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னாள்.

என்னையும் வற்புறுத்திக் கூட்டிப் போனாள். சுவாமிஜி பார்வையில்லாதவர். விழிகள் இருக்க வேண்டிய இடத்தில் வெற்றுக் குழிகள் இரண்டு மட்டுமே இருப்பது மாதிரி, புடைப்பின்றி இமைகள் மூடியிருந்தன. சோழிகளை உருட்டிப் பிரஸ்னம் பார்க்கிறார். கொத்தாக அள்ளித் தரையில் விசிறிவிட்டு, எத்தனை சோழிகள், அவற்றில் நிமிர்ந்திருப்பவை எத்தனை கவிழ்ந்திருப்பவை எத்தனை என்று மிகக் கச்சிதமாகச் சொல்கிறார்.

என் மனைவியின் முறை வந்தது. ‘எந்த ஊரில் போய்க் குடியமர உத்தேசம்’ என்று வினவினார். இவள் சொன்னாள். சுவாமிஜி கொஞ்சநேரம் பேச்சை நிறுத்திவிட்டார். ஏதோ யோசிக்கிறவர் மாதிரி நெற்றியில் வரிகள் ஓடின. தியானம் மாதிரிக் கழிந்த ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, சுவாமிஜி சொன்னதன் சாரம் இதுதான்:

சுவாமிஜி இளைஞராக இருந்தபோது வத்தலக்குண்டுவுக்கு ஒருமுறை போயிருக்கிறார். தனியாக அல்ல. தமது குருவுடன்தான். அந்த ஊரில் பிரம்மாண்டமான விசாலாட்சியம்மன் கோவில் இருக்கிறதல்லவா? அங்கே இருபத்தோரு நாட்கள் பாகவதப் பிரவசனம் செய்தார்கள். குரு உரை நிகழ்த்துவார். இவர் பின்பாட்டு மட்டும். சில நேரம் முழு கீர்த்தனையையும் பாடச் சொல்லிச் சைகை செய்துவிடுவார் குரு. (‘அவருக்குப் பேச முடியாமெ மூச்சிரைக்கும்போது’ என்று சிரித்தார் சுவாமிஜி.)

இரண்டாவது வாரக் கடைசி. அந்த நாளை சுவாமிஜியால் மறக்கவே முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஜனங்களெல்லாம் கலைந்துபோன பிறகு, சுவாமிஜியும் குருவும் மட்டும் தனியாக இருக்கும்போது, ஓர் அம்மாள் வந்தாள். குரலை வைத்துச் சொன்னால் நடுவயதைக் கடந்தவளாக இருக்கலாம். குரல் ரொம்பத் தீனமாக இருந்தது. அவள் பிள்ளைக்கு ஏதோ வியாதி வந்திருக்கிறதாம். செரிமானம் சம்பந்தமாக ஏதோ பிரச்னை. டாக்டரிடம் தனியாகச் சென்று விசாரித்திருக்கிறாள். அவர் உதட்டைப் பிதுக்கிவிட்டாராம். ‘அதிக நாள் தாங்க மாட்டான் – வந்திருக்கிற வியாதி காட்டும் அறிகுறிகளைப் பார்த்தால் குடலில் புற்று இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது’ என்று சொன்னாராம்.

எங் கொழந்தையெ எனக்கு மீட்டுத் தாங்கோ ஸ்வாமி.

என்று சொல்லிவிட்டு தாயார் குமுற ஆரம்பித்தாள். குரு எத்தனையோவிதமாக ஆறுதல் சொல்லியும் அடங்காமல் அழுகிறாள்.

பகவானுடைய சித்தத்தை மனிதர்கள் போய் மாற்ற முடியாது அம்மா. நான் அவதூதனும் இல்லை, அவதாரமும் இல்லை. உள்ளே போய் அம்பாளிடம் சொல்லி அழு. அவள் மனசு இரங்குகிறதா பார்ப்போம்.

என்று குரு கறாராகச் சொல்கிறார். அந்த அம்மாள் ஓய மாட்டேனென்கிறாள். ஒரு கட்டத்தில்,

அட, என் காலை விடம்மா. நான் என்ன ஆண்டவனா?

என்று பதறுகிறார். முடிவாக ஒரு கட்டத்தில், கோபமாகக் கேட்கிறார்:

இவ்வளவு மன்னாடறியே? உன் உசிரைக் குடுப்பியா சொல்லு, உன் பிள்ளை உசிருக்குப் பதிலா?

உடனடியாக அழுகை நின்றுவிட்டது.

நிச்சியமாக் குடுப்பேன் சுவாமி. நிச்சியமாக் குடுப்பேன்.

குரலில் இருந்த உறுதியை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. (சுவாமிஜியின் முன்னங்கை ரோமங்கள் நிஜமாகவே குத்திட்டு நின்றதைப் பார்த்தேன்.) குரு சொன்னாராம்:

அப்படியானா ஒண்ணு செய். விசாலாட்சியோடெ வெளிப்பிரகாரத்தை ஒரு மண்டலம் அடிப்பிரதட்சிணம் பண்ணு. பலன் கிடைக்கும்.

அந்த அம்மாள் நமஸ்கரித்துவிட்டு எழுந்து போய்விட்டாள் போல. குரு சுருதி இறங்கிய குரலில் இவரிடம் சொன்னாராம்:

பைத்தியக்காரி. வாழ்க்கெலே இவ்வளவு அடிபட்டு நகர்ந்து வந்திருக்கா. சாவும் வாழ்வும் மனுஷக் கையிலே இல்லேங்கறதைப் புரிஞ்சுக்கலையே இன்னும். புராண காலத்திலே வாழ்ந்திருக்க வேண்டிய பிறவி.

அதற்கப்புறம் ஒரே வாரம்தான். கடைசிநாள் பிரவசனத்தை நடத்த முடியாமலே ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. உச்சிகால பூஜை முடிந்து சாத்திய கோவில் நடையை, சாயங்காலம் திறக்க முடியாமல் போனது. அந்த அம்மாள் காலமாகிவிட்டாள். அந்தப் பிள்ளை என்ன ஆனான் என்று தெரியவில்லை.

எதற்குச் சொல்கிறேன், விசாலாட்சியோட ஸ்தலம் மட்டுமில்லே, இப்படிப்பட்ட மஹாத்மா நடமாடி அடங்கின ஸ்தலமும்கூட அது. அங்கே போய்க் குடியமர்றதுக்கு இன்னொருத்தர்ட்டே யோசனை கேக்கணுமா? அங்கே இருக்கற அத்தனை பேருக்கும் மூணு தாயார் ஆசீர்வாதம் உண்டு.

என்று முடித்தார் சுவாமிஜி. சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விட்டார்கள்.

எனக்குத்தான் கடுமையாக மூச்சுத் திணறியது.

இலவசமாகக் கிடைத்த கையெழுத்து

அ. முத்துலிங்கம்

ஒரு விருந்திலே நண்பர் ஒருவர் என்னைக் கண்டு முறைப்பாடு செய்தார். நண்பர் என்றால் ஒன்றிரண்டு தடவை அவரை முன்னே பார்த்ததுண்டு. அவ்வளவுதான். ‘நீங்கள் புத்தகம் வெளியிட்டீர்களாமே. எனக்கு ஒரு புத்தகம்கூடத் தரவில்லை. உங்கள் கையெழுத்தை வைத்து ஒன்று தாருங்கள்’ என்றார். இவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு புத்தகம் வெளியிட்டால் அதை வீடு வீடாக எடுத்துச் சென்று கதவை தட்டி ஆட்களிடம் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

‘புத்தகக் கடையில் கிடைக்கிறது. நீங்கள் வாங்கலாமே?’ என்றேன். அவருடைய முகம் வேறு யாரோவுடைய முகம்போல மாறிவிட்டது. நான் அவருக்குப் புத்தகம் இலவசமாகத் தரவில்லையென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு குயவன் பானை செய்தால் அதனை இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? ஓவியர் படம் வரைந்தால் அதை மற்றவர்களுக்கு இலவசமாகத் தருவாரா? ஓர் எழுத்தாளர் பலவருட காலம் பாடுபட்டு உழைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டால் ஏன் அதை எல்லோரும் இலவசமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

நான் எப்படி இலவசமாகப் புத்தகம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டேனோ அப்படியே என்னுடைய புத்தகத்தையும் இலவசமாகக் கொடுக்க விரும்பமாட்டேன். யாராவது எனக்கு ஒரு புத்தகத்தைத் தரவந்தால் நான் அதற்குரிய விலையைக் கொடுக்கவே முயற்சி செய்வேன். அது ஒரு மரியாதை என்றே  நம்புகிறேன். இலவசமாக ஒரு நண்பருக்குப் புத்தகம் கொடுத்தால் அவர் அதை எப்படியும் வாசிக்கப்போவதில்லை. உங்களை சந்தோசப்படுத்தவே அவர் புத்தகத்தை ஏற்கிறார் என்பது என் கருத்து.

எனக்கு அகில் சர்மாவின் ஞாபகம் வந்தது. அவர் பிரபலமான ஆங்கில எழுத்தாளர். சிறுகதைகள் எழுதி பல பரிசுகள் பெற்றவர். அவருடைய An Obedient Father நாவலை வாசித்த பிறகு ஒரு பத்திரிகைக்காக நான் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அப்போது அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முழுநேர எழுத்தாளராக அப்போது இல்லை. நியூயோர்க்கில் ஒரு பிரபலமான சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஓர் எழுத்தாளர் என்பது அவருடன் வேலை பார்த்தவர்களுக்குத் தெரியாது. அவருடைய நாவல் வெளிவந்தபோது பல பத்திரிகைகள் அதைப்பற்றி எழுதின. தொலைக்காட்சி அவரைப் பேட்டி கண்டது. அப்பொழுது அவருடன்  வேலை செய்தவர்கள் அவரிடம் குறைபட்டுக்கொண்டார்கள். ‘நீங்கள் பெரிய எழுத்தாளராமே. எங்களுக்கு ஏன் சொல்லவில்லை. எனக்கு ஒரு நாவல்கூடத் தரவில்லையே.’

அகில் சர்மா சொன்னார். ‘இவர்கள் வருடத்துக்கு ஒரு மில்லியன் டொலர்களுக்குக் குறையாமல் சம்பாதிப்பவர்கள். என்னிடம் வந்து இருபது டொலர் நாவலை  இலவசமாகத் தரவேண்டும் என்று குறைபட்டார்கள். உண்மையில் அவர்கள்  நண்பர்கள் என்றால் எனக்கு மரியாதை செய்வதற்காக ஒரு நாவலைக் காசுகொடுத்து வாங்கி, அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லவேண்டும். அவர்களுடைய நட்பு 20 டொலர் இலவச நாவலைத் தாண்டவில்லை.’

மைக்கேல் சீடன்பேர்க் என்பவர் ஒரு பழைய புத்தகக்கடை நடத்தினார். ஒரு நாள் ஒரு காதலனும் காதலியும் அவருடைய கடைக்குள் நுழைந்தார்கள். அரை மணி நேரமாகப் புத்தகங்களைப் பார்வையிட்டபிறகு காதலன் கேட்டான், ‘உனக்கு ஒரு புத்தகம் வேண்டுமா?’ அவள் சொன்னாள்,  ‘இல்லையே, என்னிடம் ஏற்கனவே ஒரு புத்தகம் இருக்கிறது.’ இளையவர்கள் புத்தகம் படிப்பதில்லை என்பதை நிறுவுவதற்காக மேற்படி உதாரணத்தை சீடன்பேர்க் அடிக்கடி கூறுவார். ஆனால் உண்மை  எதிர் திசையில்தான் இருக்கிறது. காசு கொடுத்துப் புத்தகம் வாங்குவோரின்  எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வட அமெரிக்காவில் ஒரு வருடத்தில் விற்கும் புத்தகங்களின் மதிப்பு 26 பில்லியன் டொலர்கள். சென்னை புத்தகச் சந்தையில் விற்பனையாகும் புத்தகங்களின் தொகையும் கணிசமான அளவில் கூடிக்கொண்டே வருகிறது. முன்பு எப்பொழுதும் கண்டிராதபடி புத்தகங்கள் தரத்துடன் நல்ல தாளில் கண்ணுக்கு இதமான அச்சில் வெளிவருகின்றன.

ஒன்றிரண்டு பேர் இலவசப் புத்தகங்களை நம்பியிருக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் காசு கொடுத்துப் புத்தகம் வாங்குவதற்குத் தயங்குவதே இல்லை. யாழ்நூலகம் அழிந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்த நிலையில் அவர்களுக்குப் புத்தகங்கள் சேர்ப்பது முக்கியமானது. உலகத்தின் முதல் நூலகம் அலெக்சாந்திரியாவில் இருந்தது. சீசரின் எகிப்தியப் படையெடுப்பின்போது இந்த நூலகம் எரிந்து சாம்பலானது. இதுவே முதன்முதலில் எரிக்கப்பட்ட நூலகம். அமெரிக்காவின் Library of Congress பிரிட்டிஷ் படையெடுப்பின்போது எரியூட்டப்பட்டது. ஆனால் உலகத்திலேயே ஓர் அரசு தன் சொந்த நாட்டு நூலகத்தையும் அதிலிருந்த 97,000 நூல்களையும் எரியிட்டு அழித்தது என்றால் அது இலங்கையில்தான் முதன்முதல் நடந்தது.

இன்று அதே இடத்தில் எவ்வளவு பெரிய நூலகத்தைக் கட்டினாலும், எத்தனையாயிரம் புத்தகங்களை வாங்கி அடுக்கினாலும் அழிந்துபோன ஓர் ஓலைச்சுவடிக்கு அது ஈடாகாது. இது புலம்பெயர்ந்தவர்களுக்குத் தெரியும். அந்த அநீதியை அவர்களால் மறக்கவும் முடியாது. தாம் சென்று வாழும் இடங்களில் சொந்தமாகப் புத்தகங்களைச் சேகரித்து, அந்த இழப்பை ஓரளவுக்கு ஆற்றிக்கொள்கிறார்கள்.

நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்து எனக்கு ஒரு நண்பர் இருந்தார். பத்திரிகைகளில் வரும் முக்கியமான செய்திகளை எல்லாம் வெட்டி நறுக்குகளாகப் பாதுகாப்பார். மாத இதழ்கள், வார இதழ்கள், புத்தகங்கள் என்று தனியான அடுக்குகள் வைத்திருப்பார். அநேகமாகப்  பழைய புத்தகக் கடைகளுக்குப் போய் பழைய புத்தகங்களை வாங்குவார். நவீன இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், பழைய இலக்கியங்கள் என ஒன்றையும் தவறவிடமாட்டார். அவரிடம் ஒரு கொள்கை உண்டு. இருபது வயதுவரை கையிலே அகப்பட்டதை எல்லாம் படிக்கவேண்டும். இருபதிலிருந்து நாற்பதுவரை தேர்ந்த இலக்கியங்களையும், அறிவு நூல்களையும் படிக்கவேண்டும். அதற்குப் பிறகு என்று கேட்டால் தொடர்ந்து மற்றவர்கள் எழுதுவதையே படித்துக்கொண்டிருந்தால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். நாற்பது வயதுக்குப் பிறகு நீங்கள் சிந்திப்பது அதிகமாகவும் வாசிப்பது குறைவாகவும் இருக்கவேண்டும் என்பார்.

புத்தகம் வாங்குவதிலும் அவரிடம் ஒரு நுட்பம் இருந்தது. ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. உடனேயே அவருடைய புத்தகம் உலகளாவிய ரீதியில் விற்பனையாகி உச்சத்தைத் தொடுகிறது. நோபல் பரிசுத் தேர்வில் இரண்டாவதாக ஒருத்தர் வந்திருப்பார். அவரை ஒருவருமே கவனிப்பதில்லை. அவர் பெயர்கூட வெளியே வராது. அவர் எழுதிய நூல் எவ்வளவுதான் உயர்ந்ததாக  இருந்தாலும் அது கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. புறநானூறு தொகுப்பில் 401 வது பாடல் என்று ஒன்றிருந்திருக்கும். அது தொகுக்கப்படவில்லை. யார் கண்டது? அது உயர்ந்த கவிதையாக இருந்திருக்கலாம். எப்படியோ விடுபட்டுப்போய்விட்டது. புத்தகங்களைத் தேடும்போது விடுபட்டதையும் சேர்த்துத் தேடவேண்டும். பழைய புத்தகக் கடைகளில்தான் அபூர்வமாக விடுபட்ட புத்தகங்கள் கிடைக்கும் என்பது அவர் அடிக்கடி சொல்வது.

ஓர் உண்மைக் கதை. பழைய புத்தகம் ஒன்றை வாங்கிய என் நண்பர் ஒருவருக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆங்கிலப் புத்தகத் தொகுப்பை வெளியிட்டார். விற்றதுபோக மீதமிருந்த புத்தகங்களை எல்லாம் தன் நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். யாருக்கு அன்று அவர் புத்தகம் இலவசமாகக் கொடுக்கப்போகிறார் என்ற விசயம் முன்கூட்டியே தெரியாததால் பொதுவாக ‘அன்பு நண்பருக்கு’ என்று எழுதிக் கையெழுத்திட்டு எடுத்துப் போவார். நண்பர்களைக் கண்டதும் அதைக் கொடுப்பார். இப்படியே அவர் இலவசமாகக் கொடுத்து வந்ததில் ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்த கடைசிப் புத்தகத்தையும் கொடுத்துவிட்டார். ஏற்கெனவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தை நண்பரிடமிருந்து எப்படித் திரும்பப் பெறுவது? ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிக்கொண்டு போனதில் தற்செயலாக அவர் பதிப்பித்த புத்தகம் அகப்பட்டது. அதைத் திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. அந்தப் புத்தகத்தில் ‘அன்பு நண்பருக்கு’ என்று எழுதி இவருடைய  கையொப்பமும் இருந்தது. யாரோ அன்பளிப்பாகப் பெற்ற அவருடைய புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் விற்றுக் காசாக்கிவிட்டார்கள். நான் கடைசியாக விசாரித்த அளவில் நண்பர் அந்தப் புத்தகத்தை விற்றவரை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தையும் சொல்லவேண்டும். அதைச் சொல்வதற்காகவே இதை எழுதத் தொடங்கினேன். கடந்த 60 வருடங்களாக எழுதிவரும் மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர் ஒருவருடைய புத்தகத்தைக் கடந்த வாரம் வாங்கினேன். அதில் ஓர் இடத்தில்  எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஐந்தாறு ஆண்டுகளாகவே என்னால் பல விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளமுடியாமல் போவதை உணர்ந்திருக்கிறேன். என் குடும்பம்வரை இதை அவர்களும் உணர்ந்திருந்தாலும் என் நண்பர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒருநாள் மாலை சுமார் அரைமணி நேரத்திற்கு என் வீட்டுக்குச் செல்லும் வழி மறந்துவிட்டது. அதைவிட இன்னும் தீவிரமானது என் பெயர், முகவரி மறந்துவிட்டது. ஆனால் மொழி மறக்கவில்லை.’

ஓர் எழுத்தாளர் அவர் பெயரை மறந்தால் நிலைமை என்னவாகும். அவர் வேறு பெயரில்தான் எழுதவேண்டி வரும். அவருக்கு எழுத்துமூலம் கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் வேறு யாருக்கோ போகும். நல்ல காலமாக அந்த ஞாபகமறதி நீடிக்கவில்லை. அரை மணி நேரத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. அவர் பெயர் அசோகமித்திரன்.

நான் மதிக்கும் எழுத்தாளர்களில் இவரை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். இவர் எழுதிய புத்தகங்களில் அநேகமானவற்றைப்  படித்திருக்கிறேன். நானும் ஜெயமோகனும் கடைசியாகச் சந்தித்தபோது அரைவாசி நேரம் இவரைப் பற்றியே பேசினோம். நான் எழுத்தாளர்களின் கையெழுத்துகளைச் சேகரிப்பதில்லை. பல ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களைச் சந்தித்திருந்தாலும் அந்த எண்ணம் தோன்றியதில்லை. சிலநேரங்களில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்களைச் சந்தித்தபோது புத்தகங்களில் அவர்களுடைய கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாமே என்று நினைத்ததுண்டு. அதிலும் அசோகமித்திரனின் கையெழுத்திட்ட புத்தகம் என்னிடம் ஒன்றுகூட இல்லையே என்று நினைத்து சமயத்தில் வருந்தியிருக்கிறேன்.

நான் சமீபத்தில் வாங்கிய அசோகமித்திரனின் புத்தகத்தின் தலைப்பு ‘நினைவோடை.’ முதல் பக்கத்தைத் தற்செயலாகத் தட்டியபோது எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. அதிலே இப்படி அழகான கையெழுத்தில் எழுதியிருந்தது.

நண்பர் ராஜகோபாலுக்கு
மிக்க அன்புடன்
அசோகமித்திரன்
வேளச்சேரி, 27.2.2010.

இந்தப் புத்தகம் எப்படியோ என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. கையெழுத்து வைத்தவரோ, அதைப் பெற்றவரோ, புத்தகத்தை எனக்கு விற்றவரோ செய்த தவறு என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. இந்தப் புத்தகத்தை என்ன வந்தாலும் நான் திருப்பிக் கொடுப்பதாயில்லை. புத்தகத்தில் குறிப்பிட்ட விலையிலும் பார்க்க எட்டு மடங்கு காசு கொடுத்து அதை நான் வாங்கியிருந்தேன். இன்னும் எட்டுமடங்கு யாராவது தருவதாக இருந்தாலும் அது நடக்காது. இது எங்கே வரவேண்டுமோ அங்கே வந்திருக்கிறது. புத்தகமும் கையெழுத்தும் என்னுடனேயே இருக்கும்.