சிந்து சமவெளி நாகரிகம் – II

ancient-indus-mapபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 25

நகரங்கள், வீடுகள்

சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது.  இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது.

தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை. எல்லாச் சாலைகளும் செங்குத்தாகச் சந்தித்தன. இதனால், சாலைகளுக்கு நடுவே இருந்த பகுதிகள் செவ்வக வடிவம் கொண்டவை.  இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன.  கட்டுமானத்துக்கு உலையில் சுடப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும் விகிதத்தில் உயரம், அகலம், நீளம் என சமச் சீரானவை. ஒரு சில வீடுகள் மிகப் பெரியவை. மாடி வீடுகளும் இருந்தன. பெரிய வீடுகளில் விசாலமான முற்றம் இருந்தது.

பண்டைய நாகரிகங்களில் சிந்து சமவெளியில்தான் மிகச் சிறந்த சுகாதார வசதிகள் இருந்தன. எல்லா வீடுகளிலும், குடிநீர் வசதிகளும், குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன.  ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? நகரங்களில் கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. எல்லா வீதிகளிலும் மூடிய சாக்கடைகள் இருந்தன. வீடுகளின் அசுத்த நீர் இவற்றில் சென்று சேரக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.  5000 வருடங்களுக்கு முன்னால், இத்தனை கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும், வீடுகளுமா?

நெற்களஞ்சியங்கள் பிரம்மாண்டமானவை – 150 அடி நீளம், 75 அடி அகலம், 15 அடி உயரம். அதாவது, 1,68.750 அடி கொள்ளளவு. இவற்றுள் 3 வரிசைகள், 27 சேமிப்புக் கிடங்குகள்! இந்து சமவெளியின் விவசாயச் செழிப்புக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னொரு முக்கிய அம்சம், பொதுக் குளிப்பிடங்கள். வட்டச் சுவர்கொண்ட உயரமான கிணறுகள், படிக்கட்டுகளுடன் நீள்சதுரப் பொதுக் குளியல் துறைகள், அதைச்சுற்றிலும் சிறிய குளியல் அறைகள்.  இவற்றுள் பிரம்மாண்டம், மொஹெஞ்சதாரோவில் இருந்த பெரும் குளியலறை (கிரேட் பாத்) 179 அடி நீளமும், 107 அடி அகலமும் கொண்ட பகுதி இது. மையத்தில் 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம். அடியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்காகச் செங்கற்கள் நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருந்தன. குளத்தின் உள்ளே ஏறி, இறங்க வசதியாக இரண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.

குளத்தைச் சுற்றி ஆடைகள் மாற்றுவதற்கான அறைகள் இருந்தன. அவற்றில்  கிணறுகள் இருந்தன. கிணறுகளுக்குள் தண்ணீர் இறைத்துக் குளத்துக்குள் பாய்ச்சலாம். குளத்தின் அழுக்கு நீரை வெளியேற்ற வடிகால் குழாய்கள் இருந்தன.

நகரங்களில் இருந்த கட்டடங்கள் வியக்க வைப்பவை. சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட இவற்றில், சிமெண்ட் போன்ற சுண்ணாம்பும், செம்மண்ணும் சேர்ந்த ஒரு கலவையைப் பயன்படுத்தினார்கள். அருகருகே இரண்டு செங்கற்களை வைத்து, அவற்றின் நடுவே இன்னொரு செங்கல்லைப் பொருத்தி, கலவையைப் பூசினார்கள். உறுதியான கட்டடங்களை உருவாக்கும் இந்தப் பொறியியல் அறிவு நம்மை வியக்கவைக்கிறது.

நகரங்களுக்கு வெளியே, விசாலமான கோட்டைகள் இருந்தன. அவற்றுக்குள்ளும் வீடுகள் – சில மிகப் பெரியவை, பல சிறியவை. வெள்ளம், எதிரிகள் தாக்குதல் ஆகியவை நடந்தால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் இந்தக் கோட்டைவீடுகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆட்சி முறை  

இத்தனை வரைமுறைகளோடும், ஒழுங்காகவும் நகரங்களும், கிரமங்களும் இருந்தமையால், நிச்சயமாகக் கட்டுக்கோப்பான ஒரு தலைமை ஆட்சி செய்திருக்கவேண்டும். அகழ்வில் கிடைத்திருக்கும் முத்திரைகளும் இதை நிரூபிக்கின்றன. வணிகர்களின் விற்பனைப் பொருட்களை மேற்பார்வையிடவும், அரசுக்கான வரிப்பணம் வசூலிக்கப்பட்டுவிட்டதா என்பதை மேற்பார்வை செய்யவும், இந்த முத்திரைகள் அடையாளங்களாக உதவியிருக்கலாம். ஆனால், இவற்றுள் பல முடிவுகளின் அடிப்படை ஆதாரங்கள், பல அனுமானங்கள். விடை இல்லாத பல வினாக்கள் உண்டு:

  • பரந்து விரிந்து கிடந்த சிந்து சமவெளி வட்டாரம் ஒரே பேரரசின் கீழ் இருந்ததா, எனில் பேரரசர் யார்?
  • ஒரே குடும்பம் தொடர்ந்து ஆண்டதா?
  • தலைநகரம் எது?
  • ஒரே மன்னர் ஆண்ட ஆட்சியா அல்லது ஏராளம் குறுநில மன்னர்களோடு பேரரசர் பகிர்ந்துகொண்ட கூட்டாட்சியா?
  • நிர்வாக அமைப்பு எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது?

சமூக வாழ்க்கை

சிந்து சமவெளி நாகரிகம் ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்தது. இதைப் போலவே, சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் இருந்தன. ஆட்சியாளர்கள், வியாபாரிகள், பூசாரிகள் ஆகியோரிடம் பணம் / பதவி / அதிகாரம் இருந்தது. இவர்கள் உயர் மட்டத்தினர். இவர்கள் வீடுகளுக்கும், சாமானியர்  வீடுகளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். முதலாவதாக, வீடுகளின் அளவில் வித்தியாசம். பெரிய வீடுகளில் முற்றம், பல குளியலறைகள், ஏராளமான அறைகள் எனப் பல வசதிகள். சிறிய வீடுகளில் அடிப்படை வசதிகள் மட்டுமே.

உடையிலும், சாமானியர் எளிய சணல் ஆடைகளை அணிந்தார்கள். செல்வந்தர்கள் பருத்தி ஆடைகளில் பவனி வந்தார்கள். பெரும் குளியலறைகள் பணம், பதவி படைத்தவர்களின் ஏகபோக உரிமை. பொதுஜனங்கள் பொதுக் கிணறுகளில் குளித்தார்கள்.

வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளிலும் வியாபாரத்திலும் வேலைக்காரர்களையும், அடிமைகளையும் பயன்படுத்தினார்கள். அடிமைகள் எஜமானர்களின் “சொத்துக்கள்.”  அவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அடிமைகள் வியாபாரம் அனுமதிக்கப்பட்டிருந்தது. சிந்து  சமவெளி அடிமைகள் மெசப்பொட்டேமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது சாதாரண வழக்கம்.

தொழில்கள்

வியாபாரம்

ஏராளமானவர்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், வியாபாரத்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தது.  விவசாயிகள் உபரித் தயாரிப்பை நகரங்களுக்கும், அண்டைய நாடுகளுக்கும் விற்பனை செய்தார்கள். தானியங்களை எடைபோட்டு விற்க, எடைக் கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை கல், களிமண், உலோகம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை.

வியாபாரம் பண்டமாற்று முறையில் நடத்தப்பட்டது. பணம் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கிராமத்து விவசாயிகள் உணவுப் பொருள்களை  நகரத்தாரிடம் கொடுத்து, ஆடைகள், நகைகள் ஆகியவற்றைப் பகரமாகப் பெற்றார்கள். காலப்போக்கில், பிற தொழில்களுக்குத் தேவைப்பட்ட மாக்கல், செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி, பீங்கான், பருத்தி, கடல் சங்கு ஆகிய பொருள்களைப் பெறும் வழக்கம் வளர்ந்தது. சாலைச் சரக்குப் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகள் பயன்படுத்தினார்கள்.

சிந்து நதியின் துணையால், படகுப் போக்குவரத்து எளிமையாக இருந்தது, பிற நாடுகளோடு வியாபாரம் நடத்த வழி வகுத்தது. இதனால், சிந்து சமவெளியினரின் வணிக உறவுகள் தொலைதூர மெசப்பொட்டேமியா வரை நீண்டன. சிந்து சமவெளிப் பொருட்களை விற்பதற்காகவே, ஆப்கனிஸ்தானில் தனிச்சந்தை ஒன்று இருந்தது. மத்திய ஆசியப் பகுதிகளுடன் வியாபாரம் செய்ய இந்தச் சந்தை உதவியது.

குஜராத் மாநிலத்தில் லோதால் நகரம், அகமதாபாத் பவநகர் பாதையில், அகமதாபாதிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏராளமான மணிமாலைகள், வளையல்கள், நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், செம்பு உருக்கும் தொழிற்சாலைகள், வெண்கலத் தயாரிப்புத் தொழிற்கூடங்கள் இங்கே இருந்தன. இந்தத் தொழிற்கூடங்கள் 2400 சதுர அடியும், பதினான்கு அறைகளும் கொண்டவையாக இருந்தன. லோதாலின் முக்கிய ஏற்றுமதி மணிமாலைகளும், நகைகளும்: முக்கிய இறக்குமதி அரேபிய நாடுகளிலிருந்து செம்பு வார்ப்புக் கட்டிகள். ஏற்றுமதி, இறக்குமதியால் விறுவிறுப்பாகச் சுழன்ற லோதால் துறைமுகம் சிந்து சமவெளி நாகரிக ஏற்றுமதியின் மையப்புள்ளி.

கை நெசவு

அன்றைய சிந்து சமவெளியினர் சணலிலும், பருத்தியிலும் ஆடைகள் நெய்தார்கள். நூல் நூற்கும் தக்கிளிகள், தறிகள், சாயம் தோய்த்த பருத்தி ஆடைகள் என இதற்குப் பல ஆதாரங்கள்!

களிமண் பொருட்கள்  

களிமண், சிந்து சமவெளி முன்னேற்றத்தின் அற்புத வெளிப்பாடு. நகரங்களிலும், கிராமங்களிலும் சூளைகள் இருந்தன. நெருப்பின் சூடு எல்லாப் பாத்திரங்களுக்கும் சமமாகக் கிடைக்கும்படி சூளைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம், எப்படித்தான் செய்தார்களோ என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது.

களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், கலயங்கள், ஜாடிகள், அடுக்களை சாமான்கள் குயவர் சக்கரத்தால் உருவாக்கப்பட்டு, உலைகளில் சுடப்பட்டன. சில பானைகளில் மயில் வடிவ ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

0

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. குதிரைகளில் ஏறி வந்த ஆரியர்கள் பூர்வகுடிகளான திராவிடர்களைக் கொன்று அவர்களுடைய நகரங்களை நிர்மூலமாக்கினர். வேத கலாசாரத்தை இந்தியாவில் புகுத்தினர். வேதகால நாகரிகம் எனப்படும் அந்த கங்கைச் சமவெளி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் பொதுவாக நம் பள்ளிப் புத்தகங்களில் இன்றும் சொல்லித் தரப்படும் வரலாறு.

இதுதான் மத நம்பிக்கையைவிட படு மூர்க்கமாகப் பரப்பப்பட்டு வந்திருக்கும் கோட்பாடு. சமீபகாலமாகக் கிடைத்துவரும் ஆதாரங்களின் அடிப்படையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஆரியர் என்பவர் அந்நியர் என்பதே இன்றும், குறிப்பாகத் தமிழகத்தில், பதிந்துகிடக்கிறது.  The Lost River  என்ற நூலில் ஆசிரியர் மிஷல் தனினோ இந்தக் கோட்பாட்டின் அஸ்திவாரத்தை நிதானமாகத் தகர்த்திருக்கிறார்.

ஆரியர் படையெடுப்பு என்ற கற்பிதக் கோட்பாட்டை முன்வைப்பவர்கள் சரஸ்வதி நதி இந்தியாவில் பாய்ந்த நதியே அல்ல என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு நதி இருந்திருக்கவே இல்லை. அது வேத கால ரிஷிகளின் கற்பனையில் உதித்த நதி மட்டுமே என்று சொல்கிறார்கள். ஏனென்றால், சிந்து சமவெளி நாகரிக குடியிருப்புகளில் பெரும்பாலானவை சரஸ்வதி நதிக்கரையில்தான் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அந்த கலாசாரம் சிந்து -சரஸ்வதி கலாசாரம் என்றுதான் அழைக்கப்பட்டவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சரஸ்வதி நதியால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நதி வறண்டதைத் தொடர்ந்து அந்த மக்கள் கிழக்கு நோக்கி அதாவது கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டால், ஆரியர்களால் அழிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் என்ற கோட்பாடு வலுவிழந்துவிடும் என்பதால், சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்திருக்கவே இல்லை என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் மிஷல் தனினோ முதலில் சரஸ்வதி நதியின் முழு வரலாற்றை தனது நூலில் விரிவாகத் தொகுத்திருக்கிறார். சரஸ்வதி நதி தோன்றிய இடம், பாய்ந்து சென்ற வழித்தடங்கள், அது வறண்டவிதம், அதற்கான காரணங்கள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தையும் பழங்கால சமஸ்கிருத இலங்கியங்களில் ஆரம்பித்து சமகால விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் வரை கிடைத்திருக்கும் அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார். அடுத்ததாக, அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங் உட்பட பல்வேறு துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரமாண்டமான, முழுமையான சித்திரத்தை நம் முன் வைக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரமயமாக்க காலகட்டம் பொ.யு.மு. 1900 வாக்கில் மறைந்தது என்பது இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சரஸ்வதியின் பிரதான நீரோட்டம் வறண்டு போனதும் அதே காலகட்டத்தில் என்பதை தட்ப வெப்பவியலில் ஆரம்பித்து ஆரம்பித்து கிணற்று நீரில் ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் ஐசோடோப்பு சோதனை வரையான ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார். மிக நேர்மையாக, கடந்த காலம் பற்றிய ஓர் அவதூறுக்கான விடையை நாமாகவே புரிந்துகொள்ளவைக்கிறார்.

*

ரிக்வேதத்தில் மிகவும் உயர்வாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியானது இன்றைய கக்கர்-ஹக்ரா நதிதான் என்பதை லூயி தெ செயிண்ட் மார்த்தான், சி.எஃப்.ஒல்தாம் என்ற சர்ஜன் மேஜர், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (இந்திய அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்), லூயி ரெனேயு என பலரும் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நதி இமய மலையில் ஷிவாலிக் தொடரில் கட்ச் ராண் பகுதியில் சென்று கலக்கிறது (ரிக் வேதத்தில் சரஸ்வதி நதி மலையில் ஆரம்பித்துக் கடலில் கலப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது). லூயி ரெனே சரஸ்வதி மறைந்ததாகச் சொல்லப்படும் விநாசனம் என்ற இடத்தையும் அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு ஒரு நதி ஓடியதாகவும் அது வறண்டதால் அந்தப் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது என்றும் சொல்லும் செவி வழிக் கதைகளையும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

20-ம் நூற்றாண்டில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் சரஸ்வதி நதியின் படுகை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இன்று முழுவதும் வறண்டு கிடக்கும் அந்தப் பாலை நிலத்தில் நதி ஓடிய தடத்தில் மட்டும் ஈரப்பதம் மிகுதியாக இருப்பது புகைப்படங்களில் தெரியவந்தது. அந்த வழித்தடத்தில் கிணறுகள் தோண்டப்பட்டபோது மிகவும் நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் பிற பகுதிகளில் 100-200 அடி தோண்டியும் நீர் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் கக்கர் ஹக்ரா நதி ஓடிய படுகையில் 20-30 மீட்டர் ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. இவையெல்லாம் முன்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான நதி இங்கு பாய்ந்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. சட்லெஜ் நதியை கக்கர் நதியுடன் இணைத்த ஏராளமான குறு நதிகளின் வலைப்பின்னலும் அந்த புகைப்படத்தில் தெரியவந்தது.

இதற்கு அடுத்ததாக மிஷல் தனினோ சரஸ்வதி நதியின் மறைவுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஹரப்பா-மொஹஞ்ஜோதாரோ பகுதியில் ஏற்பட்ட வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். பொ.யு.மு. இரண்டாம் ஆயிரமாண்டு வாக்கில் உலகில் எகிப்து, துருக்கி, மெசபடோமியா (அக்காடிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவைக் கொண்டுவந்தது), ஆஃப்ரிக்காவில் பல இடங்கள், சீனா, வட அமெரிக்கா போன்ற பல இடங்களும் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த வறட்சிதான் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக்காரணம் என்று சொல்வது ‘எளியதொரு’ பதிலாக இருக்கலாம். ஆனால், அதை முழுவதாகப் புறக்கணிப்பது தவறாகவே இருக்கும் என்கிறார்.

அடுத்ததாக, வட மேற்கு இந்தியாவில் நடக்கும் பூகம்பங்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுவிட்டு சரஸ்வதி நதி வறண்டதற்கு பூகம்பத்தின் பின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்றொரு காரணத்தை முன்வைக்கிறார். சிந்து சமவெளி முழுவதும் கிட்டத்தட்ட சமதளமானது. சிறிய அளவுக்கு மேடு அல்லது பள்ளம் ஏற்பட்டாலும் நதியின் திசையானது முற்றிலும் மாறிவிடும். ஆரம்பத்தில் கக்கர் ஹக்ரா நதிக்கு அதாவது சரஸ்வதி நதிக்கு சட்லெஜ் மற்றும் யமுனை நதியில் இருந்து நீர் கிடைத்துவந்திருக்கிறது. பூகம்பத்தினால் யமுனையில் இருந்து வந்த நீர் திசை மாற்றப்பட்டுவிட்டது. இதனால் கக்கர்-ஹக்ரா நதியின் நீர் வரத்து குறைந்துவிட்டது.

அடுத்ததாக, சிந்து சமவெளி மக்களில் நகரங்கள், கோட்டைகள், தெருக்கள், இன்னபிற கட்டுமானங்களைப் பார்க்கும்போது அவர்கள் சுட்ட செங்கல்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கான சூளைகளுக்குத் தேவைப்பட்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுபார்க்கும்போது அந்தப் பகுதியின் மழை குறைவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.
இப்படியான காரணங்களினால் கக்கர் ஹக்ரா நதி மெள்ள வறண்டு போய்விட்டிருக்கலாம் என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, சிந்து சமவெளி நாகரிகம் அடியோடு மறைந்துபோய்விட்டது என்பதுதான் ஆரிய ஆக்கிரமிப்பு கோட்பாட்டாளர்களின் முக்கியமான வாதம். கங்கைச் சமவெளியில் முதல் ஆயிரமாண்டில் ஆரம்பித்த நாகரிகத்தில் அதன் தடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே கங்கைச் சமவெளி நாகரிகம் என்பதை நிரூபித்திருக்கிறார். அதாவது சரஸ்வதியின் மறு அவதாரம் கங்கை. சிந்து சமவெளி நாகரிகத்தின் மறு அவதாரம் கங்கைச் சமவெளி வேத நாகரிகம்.

சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் மண் பாண்டங்களில் காளை உருவம் பிரதானமாக பொறிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் அக்னி தேவனில் ஆரம்பித்து சூரியன் வரை அனைத்து கடவுள்களும் காளையுடனே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஆரியர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புக்குரிய விலங்காக காளையே இருந்திருப்பது தெரியவருகிறது, குதிரை அல்ல.

அதுபோல் கட்டடங்களின் கட்டுமானத்திலும் இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு கலாசாரங்களிலும் 5:4 என்ற விகிதம் பிரதானமாக இருக்கிறது. 1.9 மீட்டர் என்ற அலகின் மடங்கிலான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ‘குந்துமணி’ என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதே மதிப்புகள் ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாகப் பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (Metrologist) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மக்கள் தினமும் உபயோகிக்கும் பொருட்களும் பெரிதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்திருப்பதாக பி.பி.லால் சுட்டிக்காட்டியுள்ளார். குளியல் பொருட்கள், எண்ணெய் விளக்கு, கமண்டலம், மர விளிம்புகொண்ட சிலேட்டுகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விளையாட்டுப் பொருட்களிலும் ஹரப்பா குழந்தைகள் உபயோகித்த கிலுகிலுப்பை, ஊதல், பம்பரம், தட்டையான மண் தட்டுகள் ஆகியவற்றை வைத்துத்தான் இன்றைய (அல்லது மிக சமீப காலம் வரையிலும்) வட இந்திய குழந்தைகளும் விளையாடுகின்றனர். ஹரப்பாவாசிகளால் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க செய்து தரப்பட்ட பொம்மை வண்டிகள் கங்கை சமவெளிப்பிரதேசத்தில் பல இடங்களில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் பெண்கள் அணியும் வளையல்கள், நடு வகிட்டில் இட்டுக் கொள்ளும் குங்குமம் என பல விஷயங்களுக்கான வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகின்றன. ஸ்வஸ்திக் சின்னம், முடிவில்லா முடிச்சு (ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் போன்ற வடிவம்), ஆதி சிவனை (பசுபதி) நினைவுபடுத்துவது போன்ற உருவம், யோக நிலையில் இருக்கும் உருவம் என சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் பல விஷயங்கள் வேத கலாசாரத்திலும் தொடர்ந்து காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், சிந்து நதி நாகரிகத்துக்கும் பிந்தைய சரித்திரக் கால நாகரிகங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன; மண்பாண்டத் தயாரிப்பு முறைகள் பெரிய அளவுக்கு மாறவில்லை. நகைகள், வேறு விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகின்றன… (ஆகவே) சரித்திரத்துக்கு முந்தைய காலத்தையும் சரித்திரக் காலத்தையும் பிரிக்கும் ‘இருண்ட காலம்’ என்று ஒன்று உண்மையில் இல்லை என்று அகழ்வாராய்ச்சியாளரும் மானுடவியலாளருமான ஜே.எம். கெனோயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மிஷல் தனினோ முன்வைத்திருக்கும் ஆய்வுமுடிவுகளை இப்படித் தொகுக்கலாம்: இன்று வறண்டு கிடக்கும் கக்கர்-ஹக்ராதான் வேத கால சரஸ்வதி நதி; அந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் 60%க்கு மேற்பட்ட இடங்கள் இருந்திருக்கின்றன; பொ.யு.மு. 1900 வாக்கில் சரஸ்வதி நதி வறண்டுவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிந்து சமவெளி நகரமயமாக்க காலகட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. பிற்கால ஹரப்பாவினர் கிராமப் பகுதிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். மெள்ள தங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு கங்கைச் சமவெளியில் புதியதொரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். கலாசாரத்தில் ஆரம்பித்து லவுகீக அம்சங்கள் வரை அனைத்திலும் இரு சமவெளி நாகரிகங்களுக்கும் இடையில் தெளிவான ஒற்றுமைகள் இருக்கின்றன. தங்களை வாழ வைத்த சரஸ்வதியின் நினைவைப் போற்றும் வகையில் அதை கங்கை, யமுனை, நதிகளோடு சூட்சும வடிவில் கலந்ததாகச் சொல்லி திரிவேணி சங்கமம் என்ற ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். சரஸ்வதி நதியின் அனைத்து பெருமைகளையும் கங்கைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார்கள்.

மிஷல் தனினோ மேலே சொல்லப்பட்டிருக்கும் தீர்மானங்களை மிக விரிவாகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். சிந்து சமவெளி மக்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வேத கால கங்கைச் சமவெளி நாகரிகம் பற்றிய எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்றின் உடல் கிடைத்திருக்கிறது. இன்னொன்றின் தலை கிடைத்திருக்கிறது. அது ஒரே நபரின் உருவமே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் எளிய பகுத்தறிவு மட்டும்தான். நீங்கள் பகுத்தறிவு உள்ளவரா… அல்லாதவரா..? மிஷல் தனினோ மிக எளிதாக ஒரு கேள்வியை அமைதியாக முன்வைத்திருக்கிறார்.

 

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்ததாகச் சொல்லப்படும் அந்த ஆரியர்கள் அகழ்வாராய்ச்சியின் எந்தவொரு வரையறைக்கும் சிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். ஆரியர்கள் இந்த வழியாக வந்தனர்; இது ஆரியர்கள் உபயோகித்த வாள் அல்லது கோப்பை என்று சொல்லுமளவுக்கு எந்தவொரு மண்பாண்டமோ வேறு பொருளோ இதுவரை கிடைக்கவில்லை. – Jean Casal

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுவது பொ.யு.மு. 1500-1000 காலகட்டத்தில்தான். சிந்து சமவெளி நாகரிகம் சிதைவுற்றதோ பொ.யு.மு. 1900 வாக்கில். அதாவது ஆரியர்கள் வருவதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒரு நிகழ்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது!

ஆரியப் படையெடுப்பு எனும் கொலை வெறி கொண்ட காளை வரலாற்றின் குறுக்குச் சட்டத்துக்கு அப்பால் உறுமியபடி அலை பாய்ந்துகொண்டிருக்கிறது. பிரிவினையின் போதை ஏற்றப்பட்ட அதன் கோரமான விழிகள் பேரழிவின் கிலியை நமக்குள் விதைக்கின்றன. குறுகிய அரசியலின் வாடி வாசல் மெள்ளத் திறக்கப்படும்போது,அந்த வெறுப்பின் காளை மூர்க்கத்தனமாகப் பாய்ந்து வருகிறது. உண்மையின் நிலத்தில் காலூன்றியபடி நேருக்கு நேராக நின்று ஒருவர், அதன் ஒற்றைச் சார்பு தகவல்களின் கொம்புகளைப் பிடித்து மடக்கி, ஆதாரபூர்வமான தரவுகளின் காலால் போலி வாதங்களின் கழுத்தில் ஓங்கி மிதித்து அடக்குகிறார். கழுத்து மடங்கிய காளை தோல்வியின் நுரை தள்ளியபடி கண்கள் மலங்கக் கீழே விழுகிறது.

போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றி ஊர்ஜிதமாகிவிட்டது. தோல்வியை நேர்மையாக ஒப்புக் கொள்வதும் அடங்கா காளையை வளர்த்தவனுக்கு அழகுதான்.

0

B.R. மகாதேவன்

(மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த Saraswati: The Lost River என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. மொழிபெயர்த்திருப்பவர், வை. கிருஷ்ணமூர்த்தி).