ஆசிரியர் கி.வீரமணியுடன் ஒரு சந்திப்பு
திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டுவரும் சூழ்நிலையில் மூன்று முக்கிய மனிதர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. மூவருமே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்; சிந்தனையாளர்கள். தலைவர்கள். முதலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியுடனான சந்திப்பு பற்றி. பிறகு மற்ற இருவரையும் பற்றி.
நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தொடங்கியதில் இருந்தே ஆசிரியர் வீரமணியைச் சந்தித்துப் பேசவேண்டும் என்று விரும்பினேன். விடுமுறை தினங்களில் பெரியார் திடல் நூலகத்துக்குச் செல்வேன். குறிப்புகள் எடுப்பேன். ஆசிரியர் இருக்கிறாரா என்று விசாரிப்பேன். இல்லை அல்லது சந்திப்பில் இருக்கிறார் என்று சொல்வார்கள். திரும்பிவிடுவேன். தற்போது சந்தித்தே தீருவது என்று முடிவெடுத்தேன். காரணம், கிழக்கு பதிப்பகத்தின் புதிய அறிமுகமான ஆழம் மாத இதழ். புதிய இதழை ஆசிரியரிடம் நேரில் கொடுத்துவிட்டு, அவருடைய கருத்துகளைக் கேட்டுவரலாம் என்று நினைத்தேன்.
கல்கி பத்திரிகையில் இருந்தபோது ஆசிரியர் வீரமணியை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். விரிவான பேட்டி ஒன்றையும் கல்கியில் வெளியிட்டிருக்கிறேன். இடையில் சிலபல ஆண்டுகள் கடந்துவிட்டதால் ஆசிரியர் என்னை மறந்திருக்கக்கூடும். ஆகவே, முகநூல் நண்பர் திராவிடப் புரட்சியிடம் அதுபற்றிப் பேசினேன். அவரே பெரியார் திடலுக்கு என்னை அழைத்துச் சென்றார். அன்றைய தினம் எம்.என். ராயின் 125வது பிறந்த நாள் விழா பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் ஆசிரியர் கி. வீரமணி கலந்துகொண்டு பேசுவதாக இருந்தது.
விழா தொடங்குவதற்கு முன்னால் ஆசிரியரை சந்தித்துப் பேசினேன். நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தின் இரண்டு பாகங்களையும் (ஒன்று | இரண்டு ) அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார். திராவிட இயக்கம் தொடர்பான குறிப்புகளுக்காக நூலகத்தில் இருந்து புத்தகங்கள் வந்தபோது என்னுடைய புத்தகத்தின் பிரதி ஒன்று தன்னுடைய கவனத்துக்கு வந்ததாகச் சொன்னார். விரைவில் படிக்கவேண்டும் என்றார். புத்தக உருவாக்கத்தில் பெரியார் திடல் நூலகத்தின் பங்களிப்பு மற்றும் நூலகர் செய்த உதவிகளுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன்.
அடுத்து, ஆழம் இதழை அவரிடம் கொடுத்தேன். முகப்புக் கட்டுரையின் தலைப்பு, “ஸ்டாலின் தலைவராகலாமா?’ சமூக, அரசியல் இதழாகக் கொண்டுவருகிறோம், மாத இதழ் என்றேன். சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். விழா முடிந்ததும் படிக்கிறேன் என்றார். பிறகு, கிழக்கு பதிப்பகம் பற்றி விசாரித்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பத்ரி எழுதிய கட்டுரைகளைப் படித்தேன் என்றார். தான் எழுதிய கட்டுரை ஒன்றில் பத்ரியின் கருத்தை மேற்கோள் காட்டியதையும் சொன்னார்.
உடையும் இந்தியா பற்றிப் பேச்செடுத்தேன். அந்தப் புத்தகத்துக்கான மறுப்புரை புத்தகமாக வெளியாகி, வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கும் தகவலைப் பகிர்ந்துகொண்டார். ஆசிரியரின் மறுப்புரை மூலம் உடையும் இந்தியா புத்தகத்துக்குக் கிடைத்த விற்பனை வெளிச்சம் பற்றி எடுத்துச் சொன்னேன். சிரித்துக்கொண்டார். என்னுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகத்துக்கும் நீங்கள் மதிப்புரை எழுதினால் நன்றாக இருக்கும் என்றேன். அடேயப்பா, உடையும் இந்தியாவுக்குக் கொடுத்த ‘மதிப்பு’ரைக்குப் பிறகும் உங்கள் புத்தகத்துக்கு மதிப்புரை கேட்கிறீர்களே என்றார் சிரித்தபடியே.
நாங்கள் சந்தித்தது, இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை ஆணையத் தீர்மானம் தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டிருந்த சமயம். ஆகவே, எங்கள் பேச்சில் அதுவும் கலந்தது. ஐ.நா தீர்மானமே ஈழப்பிரச்னைக்கான இறுதித் தீர்வு என்று சொல்லிவிடமுடியாது; தீர்வை நோக்கி நகர்வதற்கான நல்ல தொடக்கம் என்றார். விழாவுக்கான நேரம் நெருங்கிவிட்டதால், பேசிக்கொண்டே விழா அரங்கு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
செல்லும் வழியில் என்னைப் பற்றி, என்னுடைய சொந்த ஊர், படிப்பு பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். மயிலாடுதுறைக்காரன் என்று சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி. அடடா, நம்ம மாயவரமா? என்றார். பிறகு ஆழம் இதழுக்காக சிறப்புப் பேட்டி ஒன்று வேண்டும் என்றேன். நிச்சயம் சந்திக்கலாம் என்றார். சுமார் இருபது நிமிட உரையாடலுக்குப் பிறகு விடைபெற்றுத் திரும்பினேன். ஆழம் இதழுக்காக மீண்டும் சந்திக்கவேண்டும்.
0
ஆர். முத்துக்குமார்








