கிரிக்கெட் வாரியத்தைக் கலைக்கவேண்டும்!

sriniஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் எவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று இப்போது தெரிந்துவிட்டது. புத்துணர்ச்சியூட்டும் அனுபவம் இது. செயலர், நிதி காப்பாளர், இந்திய பிரிமியர் லீக் தலைவர் என்று அனைவரும் கட்டுப்பாட்டுக் கழகத்தைவிட்டு வெளியேறுவதோடு, இன்னும் பலர் இந்தப் புனிதமான கொள்கைக்காக வெளியேற வரிசையாக நிற்கின்றனர்.

அதிகம் வசைபாடப்பட்ட தங்கள் தலைவரைத் தூக்கி வீச இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் இந்திய பிரிமியர் லீகும் ‘வெளியேற்று சூத்திரத்தைப்’ பயன்படுத்துகின்றன. ஆனால், சீனிவாசனை வெளியேற்றுவதன்மூலம் ஐபிஎல்லையோ அல்லது கிரிக்கெட்டையோ தூய்மைப்படுத்திவிடமுடியுமா என்ன?

கவனிக்கவும், அங்கு ஒரு பழம் மட்டும் அழுகிவிடவில்லை. மொத்தப் பழத்தோட்டமும் அழுகியுள்ளது. ‘மூன்று கிரிக்கெட் வீரர்கள் மட்டும்’ என்ற வாதம் ஒரு பெரிய மோசடி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய பிரிமியர் லீக் இரண்டையும் இந்த அழுகல் நாற்றமடிக்க வைத்துள்ளது. ஊடகம் சீனிவாசனின் உச்சந்தலைக்கு குறிவைத்துள்ளது. இதுவும்கூட ஒரு கேளிக்கையாகத்தான் இருக்கிறது.

நேற்றைய சீனிவாசனனின் விசுவாசிகள் நாளைக்குத் தன்னையும் தாக்குவார்கள் என்று சரத்பவாருக்குத் தெரியும். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து வெளியேறிய சஞ்சய் ஜெக்டால், அஜய் ஷிர்கே, ராஜிவ் சுக்லா ஆகியோர் அத்தகைய ஒரு கோப்பையை அடைய தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில், சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் (அல்லது பொது நலன் சம்பந்தப்பட்ட ஓர் அமைப்புக்கு) தலைமையேற்றிருக்கக்கூடாது. ஆனால் அதற்காக அவரது வெளியேற்றத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது அபத்தமானது.

சமீப காலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இந்திய பிரிமியர் லீகை உருவாக்கியவர்களுள் ஒருவர் லண்டனில் சட்டத்திலிருந்து தப்பி வாழ்பவர். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தனது நலனுக்கு உகந்ததாக விதிகளை மாற்றிக்கொண்டதை சட்டபூர்வமாக்கிய அந்தத் தலைவர் இப்போது வெளியே வந்துள்ளார்.

சரத்பவாரைப் பொருத்தவரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தபோது விவசாய அமைச்சரான அவர் விவசாயம் தொடர்பாக மேலை நாடுகளுக்குப் பறந்ததைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்காக பறந்ததுதான் அதிகம்.

கடந்த ஏப்ரல் மாதம், பம்பாய் உயர்நீதிமன்றம், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் நடந்தபோது, பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினருக்கான ஊதியத்தை வழங்கவேண்டுமென்று அந்தப் போட்டியை பார்க்க வந்த கூட்டத்தினருக்கு எரிச்சலுடன் உத்திரவிட்டது. அந்தத் தொகை சுமார் 9 கோடி இருக்கும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. அவ்வாறு பணம் செலுத்தாதவர்கள் சொத்தை ஜப்தி செய்யுமாறும் உத்திரவிட்டது. இறுதியில் முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, ஷாருக்கான் போன்றவர்களுக்குப் பலன் சென்றடையும் வகையில் 20 கோடி வரை கேளிக்கை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டது. மொத்தத்தில், அரசிடமே ஐபிஎல் பணம் பெற்றுள்ளது. ஆத்திரமடைந்த பம்பாய் உயர்நீதிமன்றம் அந்தத் தொகையை உடனே வசூலிக்க உத்திரவிட்டது. அதே நேரம், அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களைக்கூட ஏதோ சொற்ப தொகைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல்லுக்கு வாடகைக்கு விட்டது.

இந்தப் பின்னணியில் நாம் செய்யவேண்யதெல்லாம் ஒன்றுதான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையே கலைத்துவிட்டு புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவேண்டும். அதன் கடந்த காலத்தை ஒரு பொது தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும். பொது நலன் என்றாலே வெறுப்படையும் ஒரு துறை இந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். தண்டனையிலிருந்து விதிவிலக்கு வசதி, தனது அதிகாரத்தில் தனக்குள்ள நம்பிக்கை, பெரு நிறுவன அரசியல் மற்றும் ஊடகங்கள் துணை போன்றவையே இந்த நிலைக்குக் காரணம்.

இந்தத் தேசத்தின் பெயரில் செயல்படும் ஓர் அமைப்பு இந்தியக் கிரிக்கெட் அணியை நடத்தும்போது, அது பொறுப்பானதாக, பொதுமக்களுக்கு பதிலளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஆனால், அழகான ஒரு விளையாட்டின் ஆன்மாவையே அழித்துவிடும் ஒரு உயர்நிலை வர்த்தக நடவடிக்கையாக ஐபிஎல் உள்ளது. இது இழிவானதாகவும் தரமற்ற கட்டுமானம் கொண்டதாகவும் கலாசாரத்தைச் சீரழிப்பதாகவும் உள்ளது.

வர்த்தகரீதியான வெற்றி என்று சாக்குபோக்கு சொல்லி நடந்தவற்றுக்குப் பரிகாரம் கோருகிறது ஐபிஎல். அவர்களைப் பொறுத்தவரை இந்தச் ‘சிறிய தவறுகள்’ வர்த்தகரீதியான பலன்களால் சரிசெய்யப்படுகின்றன.

இந்தச் சறுக்கலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏதோ திடீரென்று கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது உண்மையல்ல. இந்தியாவிலுள்ள அனைத்து பிரதான ஊடகங்களும் தினந்தோறும் இத்தகைய மோசடிகளை வெளிக்கொண்டுவருவதைப் பார்க்கமுடிகிறது. இதே ஊடகங்கள்தான் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது அவற்றை உச்சியில் தூக்கிப் பிடிக்கின்றன.

ஊடகங்கள் தற்போது கொடுத்த நெருக்கடி பயனுள்ளது. டெல்லி, மும்பை காவல்துறை மூலமும், அமலாக்கப் பிரிவு மூலமும் இந்த ஊழல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு நிருபர்கள்மூலம் வெளிக்கொணரப்பட்ட பல சிறந்த வெளியீடுகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கே உரித்தான கலாச்சார பலத்தால் மறைக்கப்பட்டுவிட்டன. வாரியத்தின் சம்பளப் பட்டியலிலேயே இருந்துகொண்டு அதன் செயலை மிகைப்படுத்தி புகழ்ந்துரைக்கும் ஆலோசகர்களாகவே தொலைக்காட்சி ஊடகங்களில் சிலர் இருக்கின்றனர்.

அதில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளான முன்னாள் விளையாட்டு வீரர்களும் உள்ளனர். இதுநாள் வரை இந்த எதிரும் புதிருமான கருத்தாக்கங்களை விளம்பர நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஐபிஎல்லில் முதலீடு செய்துள்ள விளம்பரதாரர்கள் சரிவடையத் தொடங்கியதும் அந்தக் கவலை எழுந்துள்ளது. ஆனால், உண்மையில் அதிக சரிவைச் சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட்தான்.

ஒரு சில தவறுகள் நடந்துவிட்டதற்காக ஐபிஎல்லைப் பெரிய அளவில் காயப்படுத்திடவேண்டாம் என்று சிலர் சமாதானம் பேசுகிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கும், இந்திய பிரிமியர் லீகுக்குமான நலனை உண்மைக்குப் புறம்பான வகையில் சிறுமைப்படுத்துகிறது.

இந்திய கிரிக்கெட்டின் ஆத்மாவை ஐபிஎல் பாழ்படுத்திவிட்டது. ஓர் இந்திய வேட்கையை, உணர்வை தனியார்மயமாக்கியதுடன், ஊழல் வர்த்தகத்தையும் வளர்த்திருக்கிறது. தற்போது பெரிய நிறுவனங்களும், கார்ப்பரேட் குழுக்களும் அவர்களது அரசியல் சகாக்களும், திரைத்துறை நடிகர்களும், விளம்பரத் துறையினரும்தான் கிரிக்கெட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். கிரிக்கெட்மீது உண்மையான ஆர்வம் கொண்டுள்ள பொது ரசிகர்களிடமிருந்து என்றோ அது கைநழுவிவிட்டது. இந்தியாவின் சர்வதேச அணிகளைத் தேர்வு செய்யும் இந்திய உள்நாட்டுக் குழுமம் தற்போது தன்னைக் காயப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களை இந்தக் குழுமம் நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் தற்போது ஐபிஎல்லுக்கு வீரர்களை அளிக்கும் ஒரு களமாக சுருங்கிவிட்டது. மோசமான தரமுள்ள லீக் போட்டிகளில் விளையாடி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதைவிட்டுவிட்டு, ஏன் அநாவசியமாக ரஞ்சிக் கோப்பை போன்ற தரமான போட்டிகளில் ஒருவர் விளையாட வேண்டும்? உண்மையில் இந்த இந்தியன் பிரிமியர் லீக் இதுவரை எந்த நல்ல வீரரையும் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கவில்லை.

ஏதோ சில பழங்கள் மட்டும் அழுகிவிட்டது என்ற வாதமே ஒரு மோசடி. அசாதாரண சந்தர்பத்தில் பழத்தோட்டக்காரர்கள் என்ன செய்வார்களோ அதை நாம் செய்யவேண்டியுள்ளது. பழத்தோட்டத்தை முற்றாக எரித்துவிட்டு, புதிய செடியை நடுவோம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றாக கலைத்துவிட்டு, புதியதைத் தொடங்கவேண்டும். கிரிக்கெட்டை மறு பயிரிட்டு வளர்ப்போம்.

(தி ஹிந்துவில் கடந்த ஜூன் 1 அன்று வெளியான Burn the orchard, re-grow cricket என்னும் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம். அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், எஸ்.சம்பத்).

கிரிக்கெட் என்றொரு தேசபக்தி லேகியம்

ஒலிம்பிக் போட்டிகளின்  தொடக்க நாள் விழாவில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி கௌரவிக்கப்பட்டார். முதன்முதலாக குத்துச்சண்டை ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்று நாடு திரும்புகையில் அவரை வரவேற்க ஒருவரும் வந்திருக்கவில்லை. அவரது ஊரிலிருந்த ஓட்டலின் சர்வர் கூட அவருக்கு பரிமாறத் தயாரில்லை. கருப்பின தோலின் முன் தங்கம் கூட மினுமினுக்கவில்லை. தன் பதக்கத்தை கழற்றி ஆற்றில் வீசி எறிந்தார். அவருடைய மனஉளைச்சல் எந்த அளவு இருந்திருக்கும்!  இது போன்ற உளைச்சலில் தான் நம் இந்திய விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். நம் விளையாட்டு அமைச்சகம் அவர்களை அவ்வாறு தான் நடத்துகிறது.

இந்திய கால்பந்து அணி வீரர்கள் ஷுக்கள் வாங்க கிரிக்கட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.   ஹாக்கி வீரர்கள் உலகளவிலான சாம்பியன் பட்டம் வென்று வந்த போதும் அவர்களை வரவேற்க ஒருவரும் இன்றி ஆட்டோவில் வந்திறங்கியதைக் கண்டோம். அதிசயமாக பதக்கம் வெல்லும் வீரர்களையும் பாலின சோதனை என்று அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வேலை கேட்டு மன்றாடினாலும் அரசின் காதுகளுக்கு விழுவதில்லை.

இதே நிலையில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளை வென்றாலும் கூட மாலை மரியாதை, மேல தாளத்துடன் நகர் வலம் வர அரசு வழி செய்கிறது. அவர்கள் கேட்காமலேயே ராணுவத்தில் கௌரவ பதவிகள் அளிக்கிறது. ஏன் இந்த பாகுபாடு?

கிரிக்கெட்டைக் கொண்டாடும் இத்தனைக் கோடி மக்களில் எத்தனை பேருக்கு BCCI ஒரு தனியார் அமைப்பு என்பது தெரியும்? உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பும் கூட அது என்பதை அறிவார்களா? இந்திய அரசின் விளையாட்டுத் துறையின் கீழ் வராத, அதன் அதிகாரங்களுக்கு கட்டுப்படாத ஒரு தனியார் விளையாட்டு நிறுவனம் BCCI. விளையாட்டு அமைச்சகத்தின் விதிகளை ஏற்றுக் கொள்ளமுடியாது, அவை எங்களுக்கு பொருந்தாது என்று அண்மையில் வெளிப்படையாகவே எதிர்த்தார்கள்.

இப்போது சொல்லுங்கள், ஒரு தனியார் விளையாட்டு அமைப்புக்கு இவ்வளவு சலுகைகள் தேவையா? அவர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நம் வரி பணத்தை வாரிக் கொடுப்பதையும் ஏற்கமுடியுமா?

உதாரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மாட்ச் பிக்சிங் செய்தது தேசத்துரோக குற்றமாக பாவிக்கப்பட்டது. சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தியாவில் நிலையென்ன? மாட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்திருந்தால் பிரச்னையில்லை. இந்த தனியார் நிறுவனத்தார் “இந்திய அணி” என்ற லேபிள் ஒட்டி, தேசபக்தி லேகியம் விற்றே பெரும்பணக்கார அமைப்பாகி விட்டார்கள். தேசப்பற்றுக்கு எத்தனையோ விடயங்கள் இருக்க, கிரிக்கெட் தான் உடனடி தேசபக்தியை உசுப்பேற்றுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை ரசித்தால், ஆதரித்தால் தேசத்துரோகியாம். இலங்கை அணியை ஆதரித்தால் தமிழின துரோகியாம். கலைஞரின் பேரன் மைதானத்தில் இலங்கை அணியின் தொப்பியை மாட்டிக் கொண்டதற்கு தமிழின துரோகி பட்டம் கட்டினார்கள், என்னவோ குடும்பத்தில் அவர் மட்டும், அப்போது மட்டும் தான் துரோகியாக இருந்தது போல. மக்கள்தான் அறியாமையில் செய்கிறார்கள் என்றால், சமூக பொறுப்புணர்வு சிந்திக்கும் திறனோடு இருக்க வேண்டிய பத்திரிக்கைகள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.

BCCI யின் கிரிக்கெட் அணி வென்றதற்கும், ஈழப் போருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இதே போலத் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வென்றால், அவர்கள் ராணுவத்தையே வென்று விட்டது போல் மகிழ்வதும்.

BCCI vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமாம். சொல்கிறார்கள். ஊடகங்களின் இந்த கற்பனை தான் இன்னும் நம்மை ஏமாளியாக வைத்திருக்கிறது

IPL சென்னை அணியில் இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதும் முட்டாள் ஊடகங்கள் தமிழின உணர்வையெல்லாம் மூடிக் கொண்டு பிராந்திய துவேஷத்தை வளர்க்கலாயின. பழிவாங்குமா சென்னை என்னும் வாசகத்தை அடிக்கடி காண முடிந்தது. ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வென்றால் தான் BCCI அணி இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும் எனும் போது ‘தேசத்துரோகம்’ என்றும் பாராமல் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவேண்டிக் கொண்டார்கள்! இது போன்ற ரோதனைகளை படித்தவர்களின் ஊடகங்களான டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும்கூட காண இயலும்.

சானியா, சாய்னா, பூபதி, ஆனந்த் போன்றோரை இப்படிக் கொண்டாடியிருப்போமா? தனியார் நிறுவனங்களின் தொடர்ச்சியான விளம்பரங்களின் மூலமே நம் மூளையில் கிரிக்கெட் ஏற்றப்பட்டு பைத்தியமாக்கப்பட்டுள்ளோம்! நல்ல வேளை, ஹாக்கியில் ஹாலந்தையும் கால்பந்தில் பிரேசிலையும் ரசிப்பதெல்லாம் இன்னும் தேசத்துரோகமாக்கப்படவில்லை!

நுகர்வு கலாசார ஊடகங்களின் தாக்கம் அண்டை நாட்டிலும் இருக்கிறது. BCCI அணியின் ‘உலகக்கோப்பை?’ வெற்றியைக் கொண்டாடிய இலங்கை வாழ் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அடுத்த நாள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் ;  இப்போதும் BCCI அணியின் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து #TNfisherman தமிழக மீனவர்கள் மிகவும் அச்சத்துடனே இருக்கிறார்கள். இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறார்கள்.

ஐயா, ஒரு தனியார் அமைப்பின் விளையாட்டு  தேசபக்தி போதையை உங்களுக்குத் தரலாம். ஆனால் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு அது உயிரின் வாதை.

IPL போட்டிகள் நடந்த போது கலாசாரத்தை சீரழிக்கிறது என்றும், மின்சாரத்தை வீணடிக்கிறது என்றும் சிலர் வழக்கு தொடுத்தார்கள். அந்தப் பொதுநல ஆர்வலர்களிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான்.  இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும் BCCI கிரிக்கெட் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு தனியார் அமைப்பு என்று அவர்களைப் பகிரங்கமாக அறிவிக்கச் செய்யுங்கள். அரசு சாராத ஓர் அமைப்பு ‘இந்திய அணி’ என்று எப்படி பேனர் மாட்டிக் கொள்ளலாம்? இதை எதிர்த்து வழக்கு போடவேண்டாமா?

ஒரு விளையாட்டு 55 நாடுகளில் விளையாடப்பட்டால்தான் அது ஒலிம்பிக்ஸில் இணைத்துக்கொள்ளப்படும். அப்படி இல்லாத ஒரு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மற்ற விளையாட்டு வீரர்களை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு, பதக்கப் பட்டியலில் இடம் தேடுவது நியாயமா? அரசு இந்த விஷயத்தில் மாறுமா என்று தெரியாது. ஆனால், நாம் மாறியாகவேண்டும். அண்மையில் EURO கால்பந்து போட்டிகளுக்கு இந்தியர்கள் அளித்த உற்சாகம் அதற்கு முதல் படியாக இருக்கும்.

0

கரையான்

அய்யோ பாவம் விராத் கோஹ்லி!

திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான்.

பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாளர்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக் கண்டு பதற்றம் கொள்வதில்லை. இமால இலக்குகளைக் கண்டு மலைப்பதில்லை; வெற்றி.. வெற்றி. அதை மட்டுமே இலக்காக வைத்து விளையாடுகிறார் கோஹ்லி. இப்படியான வீரர்கள் அமைவது  எப்போதாவது நடக்கும் விஷயம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்தியாவுக்கு நடந்திருக்கிறது.

ஓரிரு போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது அல்லது முக்கியமான போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது என்றில்லாமல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் கோஹ்லி. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் நம்முடைய பெரிய வீரர்கள் அத்தனைபேரும் சொல்லிவைத்தது போல சொதப்பிய சமயத்தில், கோஹ்லி மட்டும் தன்னுடைய பங்களிப்பைக் கணிசமான அளவுக்குச் செய்தார். முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று, அவர் அடித்த சதம். நெருக்கடியான நிரம்பிய சமயத்தில் அடித்த சதம் அது.

அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் அந்த இமாலய ரன் குவிப்பைச் சொல்லவேண்டும்.  அதற்குரிய அங்கீகாரமாகவே அவருக்குத் துணை கேப்டன் பதவியைக்க் கொடுத்துக் கௌரவப்படுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

வங்கதேசத்தில் நடந்த ஆசியக்கோப்பைப் போட்டியின்போது மூன்று போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி, துணை கேப்டன் பதவிக்குத் தான் பொருத்தமானவனே என்று நிரூபித்திருக்கிறார் விராத் கோஹ்லி. வாழ்த்துகள்.

கோஹ்லியின் சாதனைகளை முன்னணி வீரர்கள் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை அத்தனை பேரும் பாராட்டுகிறார்கள். புகழ்கிறார்கள். கோஹ்லியைப் புகழ்வதில் ஊடகங்களுக்கு இடையே போட்டாபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. எல்லா ஊடகங்களும் இப்போது கோஹ்லி புராணத்தைத்தான் விடாமல் பாடிக்கொண்டிருக்கின்றன.

ஊடகங்கள் கோஹ்லியைக் கொண்டாடும் விதத்தைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் மனத்துக்குள் மகிழ்ச்சிக்குப் பதிலாக அச்சமே உருவெடுக்கிறது. ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுவிட்ட சூழ்நிலையில் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை கோஹ்லியே இந்தியாவின் அடுத்த டிராவிட் என்ற தலைப்பில் ஒரு சேனல் நிகழ்ச்சி நடத்துகிறது. அதில் கருத்து சொல்வதற்கென்று பல முன்னாள் வீரர்கள் முன்னால் வந்து நிற்கின்றனர்.

அதற்குப் போட்டியாக இன்னொரு சேனல், ஒருநாள் போட்டிகளில் சச்சினின் இடத்தை கோஹ்லியால் மட்டுமே நிரப்பமுடியும் என்று அடித்துச் சொல்கிறது. அந்தக் கருத்தை வலியுறுத்த இன்னொரு முன்னாள் வீரர்கள் குழு ஆவேசமாக இயங்குகிறது. இன்னும் இன்னும் பல கருத்துகள். பல ஆசைகள். பல விருப்பங்கள்.

புதிய வீரர் ஒருவர் இப்படியான அதிரடிகளை நிகழ்த்திக்காட்டுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, பல காலகட்டங்களில் பல வீரர்கள் பல அதிரடிகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சாகசங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அசாரூதீன்,சச்சின் என்று பலரைச் சொல்லலாம்.

விஷயம் என்னவென்றால், அப்போதெல்லாம் ஊடகங்கள் அவர்களுடைய ஆட்டத்திறனையோ, சாதனைகளையோ, சாகசங்களையோ இந்த அளவுக்குத் தூக்கிப்பிடிக்கவில்லை. அந்த வீரர்கள் மீது அளவுக்கு அதிகமான விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சவில்லை. அதேசமயம், அந்த வீரர்களைச் சுத்தமாகக் கண்டுகொள்ளாமலும் விட்டுவிடவில்லை. பேசினர். பாராட்டினர். அளவோடு நிறுத்திக் கொண்டனர்.

ஆனால் கோஹ்லி விஷயத்தில் ஊடகங்கள் எல்லை மீறிப் போகின்றன. செய்தி சானல்கள், விளையாட்டு சானல்கள், பொதுவான சானல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள் என்று எல்லாவற்றிலும் கோஹ்லியைப் பற்றியே பேசுகின்றன. ஊடகங்கள் கொடுக்கும் கூடுதல் முக்கியத்துவம் காரணமாக கோஹ்லி புராணம் இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே போகும்.

அது எங்கே சென்று முடியும்?

வர்த்தக நிறுவனத்தினர் அவருடைய வீட்டுவாசலில் அணிவகுக்கத் தொடங்குவர். என்னுடைய  நிறுவனத்து விளம்பரத்தில் நடி என்பார்கள். திடீரென கோஹ்லிக்கு ரெஸ்ட் கொடுப்பார்கள். ஆமாம்.. இத்தனை அடிக்கிற அவருக்கு ஓய்வு தேவைதான் என்பார்கள். ஓய்வு நேரத்தில் விளம்பரப் படப்பிடிப்பில் பிஸியாகிவிடுவார்.

விளம்பரங்கள் காரணமாகப் பணம் சேர்கிறது என்றால் அந்த இடத்தில் அரசியல் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் என்று இங்கே நான் சொல்லவருவது பெட்டிங், மேட்ச் பிக்சிங் போன்ற அம்சங்களை. மிகச்சிறப்பான முறையில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அசாருதீன், ஜடேஜா, ஹன்ஸி குரோனே போன்ற வீரர்கள் புக்கிகளின் பிடியில் சிக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. மிக இளம் வயது கொண்ட, சாதனைகளை நிகழ்த்த ஆரம்பித்துள்ள கோஹ்லி போன்ற வீரர்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற அதிகபட்ச ஊடக வெளிச்சம் நல்லதல்ல.

கோஹ்லி இப்போது சிறப்பாக ஆடுகிறார். வாழ்த்துகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.  ஒருவேளை, வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளிலோ அல்லது அடுத்துவரும் போட்டிகளிலோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் என்ன ஆகும்? இப்போது ஊதிவிடும் அத்தனை ஊடகங்களும் ஓவர்நைட்டில்  அவருக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த உதாரணம் சச்சின். அவருடைய தொண்ணூற்றி ஒன்பது சதங்களையும் கொண்டாடியவர்கள், நூறாவது சதத்தை அடிப்பதற்குக் கால அவகாசம் எடுத்துக்கொண்டபோது என்ன பேசினார்கள்? எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்ட்து ஒரு சேனல். ஒழுங்காக ஆடாத சச்சினை நீக்கும் அளவுக்கு தேர்வுக்குழுவின் முதுகெலும்பு வலுவாக இல்லையோ என்று கேலி செய்தது ஊடகம். நரம்பில்லா நாக்குகள் நாலும் பேசின. நூறாவது சதத்தை அடிப்பதற்குள் தனக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் பற்றி சமீபத்தில் சச்சினே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ஆகவே, ஊடகங்கள் இப்போது அளவுக்கு மீறி கோஹ்லியைப் பாராட்டுவதையும் புகழ்வதையும்  ஊக்கமருந்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது.  அவை அனைத்தும் அவர் மீது திணிக்கப்படும் நெருக்கடிகள். கொடுக்கப்படும் அழுத்தங்கள். அவை கோஹ்லியின் இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும். எல்லா போட்டிகளிலும்  அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  எழும்பும். இது எல்லோருக்கும், எப்போதும் சாத்தியமான விஷயமல்ல. இதன் காரணமாக, கோஹ்லிக்கு மெல்ல மெல்லப் பிரச்னைகள் ஏற்படும்.

இன்றைய நிலையில் கோஹ்லிக்கு உருவாகும் பிரச்னை இந்திய அணிக்கான பிரச்னை. ஆகவே, ஊடகங்கள் கோஹ்லியைத் துரத்தும் காரியத்தைக் கொஞ்சம் தள்ளிவைக்க வேண்டும். அவருடைய ஆட்டத்தை, அவருடைய போக்கைக் கொஞ்சம் தள்ளியிருந்து அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டும். அதுதான் கோஹ்லிக்கு நல்லது. அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது. முக்கியமாக, இந்திய அணிக்கு!

0

தமிழ்

யோகி – சமுராய் – டிராவிட்

For someone who has played 164 Test matches and scored 13,200-plus runs, no tribute can be enough. All I can say is there was, and is, only one Rahul Dravid and there can be no other. I will miss him in the dressing room and out in the middle. – Sachin Tendulkar

22 கெஜம். இரண்டு பக்கமும் தலா  3 ஸ்டம்புகள். இந்தப் பரப்பின் நீளம் தான் ஒரு பேட்ஸ்மெனை கிரிக்கெட் விளையாட்டில் நிர்ணயிக்கிறது. கேட்பதற்கும், காண்பதற்கும் மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த விஷயத்துக்குப்பின்தான் பல கனவுகளின் சரிவும், சில அசாதாரண நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. கிரிக்கெட் என்கிற விளையாட்டு ஆட ஆரம்பித்து இன்றோடு 135 வருடங்களாகிறது. இங்கிலாந்தில் கனவான்களின் விளையாட்டாக ஆட ஆரம்பித்து, பின்னர் இங்கிலாந்து ஆசியாவைக் காலனியாக்கி வைத்திருந்ததால், ஆசியாவில் பரவி, இன்றைக்கு ஆசிய அணிகள் பலம் பொருந்தியதாக மாறியிருக்கிறது.

இந்தியா கிரிக்கெட்டில் ஒரு தவிர்க்க முடியாத நாடு. லாலா அமர்நாத்திலிருந்து அந்தக் குடும்பத்திலேயே மூன்றாவது தலைமுறை ஆட தயாராக இருக்கிற இன்றைக்கு வரைக்கும் இந்தியாவில் உணவு, உடை, இருப்பிடம், செல்போனுக்கு பின் கிரிக்கெட் ஒரு அத்தியாவசியம். எல்லா தெருக்களிலும், ஏதேனும் நான்கு சிறுவர்கள் சுவரில் கரியில் கிறுக்கி ஆட ஆரம்பிக்கும் ஒரு எளிமையான ஆட்டம். இந்த எளிமையான, ஜனரஞ்சகமான ஆட்டத்துக்குப் பின்னான உழைப்பு யாருக்குமே தெரிவதில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்போதுதான் ஒரு சகாப்தம் முடிந்திருந்தது. சுனில் கவாஸ்கர் ஒரு இமயம். கபில்தேவ், விஸ்வநாத், ரோஜர் பின்னி, மதன்லால், சையது கிர்மானி, ஸ்ரீகாந்த், அமர்நாத், ரவி சாஸ்திரி, திலிப் வென்சர்கார், திலிப் தோஷி, மனீந்தர் சிங் பின்னாளில் மனோஜ் பிரபாகர், நவ்ஜோத்சிங் சிந்து, அசாருதீன், சஞ்சய் மஞ்ரேக்கர், அருண்லால், கெய்க்வாட் என நீண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் சுனில் கவாஸ்கருக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே நிலைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்திய டெஸ்ட் அணி என்பது சம்பிரதாயத்துக்கு இருந்து எல்லா நாடுகளுக்கும் போய் தோற்று வருவது என்பது வழமையாக இருந்தது. இதுதான் உலகக் கோப்பையை நாம் ஜெயித்த பிறகு நடந்தது.

நவீன இந்திய கிரிக்கெட் என்பது 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, அசாரூதினில் ஆரம்பிக்கிறது. அசார் தான் இந்திய அணியில் ‘பீல்டிங்’ என்றொறு துறை இருக்கிறது என்பதை எடுத்து சொன்னவர். இந்திய அணியின் கேப்டன் பதவி பல்வேறு கைகள் மாறி, சச்சின் வேண்டாம் என மறுத்து சவுரவ் கங்குலியிடம் வந்து சேர்ந்தது.

சவுரவ் பெங்காலி. பெங்காலிகளுக்கே உரிய கோபக்கார இளைஞர்.  எதைச் செய்தாலும் வெறித்தனத்தோடு அணுகும் பார்வை. எல்லாவற்றிலும் முழுமூச்சாகப் போராடும் குணம். இந்திய கிரிக்கெட் “வயதுக்கு வந்தது” அப்போது தான். அங்கே தான் ஆரம்பித்தது இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம். சச்சின், சவுரவ், ட்ராவிட், லக்‌ஷ்மண், கும்ப்ளே என ஐவராக எழுந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முகத்தை ஒரேயடியாக மாற்றிய காலகட்டம். இதில் பின்னாளில் இணைந்தது சேவாக்கும், ஹர்பஜன் சிங்கும்.

90களின் ஆரம்பத்தில் அது நிகழ ஆரம்பித்தது. முதலில் ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தான் போன அணியில் தெண்டுல்கர். பின்னால் சவுரவ் கங்குலி, ராகுல் சரத் ட்ராவிட். அதன் பின்னால் லக்‌ஷ்மண். யாருமே நம்பவில்லை. ராகுல் ட்ராவிட். பதினாறு வருடங்களுக்குமுன், ஒல்லியாக, வெடவெடவென்று லார்ட்ஸில் 95 ரன்கள் அடிக்கும் போது யாருக்குமே நம்பிக்கையில்லை. இந்த மாதிரி நிறைய one match wonderகளை இந்தியா பார்த்திருக்கிறது. சச்சின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். child prodigy. ஆனால் ராகுல் ட்ராவிட் அந்த மாதிரி இல்லை. சச்சின் பம்பாய் கிளப்பிலிருந்து வந்த ஆள். ராகுல் ட்ராவிட்டுக்கு காட் பாதர்களே கிடையாது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் பம்பாயில் இருந்தது. சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர், ரவி சாஸ்திரி, திலிப் வென்சர்கார் எல்லாவற்றையும் தாண்டி, இந்தியா கொண்டாடும் சச்சின் தெண்டுல்கர். ஆனால் ஒவ்வொரு முறை பம்பாயிலிருந்து யாரோ இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக மாறும் போது, பெங்களூரிலிருந்து ஒருவர் அந்த ஸ்டாரின் பின்புலமாகவே இருந்திருக்கிறார். கவாஸ்கர் ஆடியபோது குண்டப்பா விஸ்வநாத். சச்சினுக்கு பின்னால் ட்ராவிட். பாம்பே பாய்ஸ் Vs. பெங்களூர் பாய்ஸ் என்று ஒரு பிரிவினை ஏற்படுத்தினால், ‘பம்பாய் பாய்ஸை’ விட ‘பெங்களூர் பாய்ஸ்’ முக்கியமானவர்கள். ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட். இந்த மூவர் மீதும் நம்மால் ஒரு அவதூறும் சொல்ல முடியாது. அத்தனை நேர்மை, அர்ப்பணிப்பு. இதில் ராகுல் ட்ராவிட் வேறு தளம்.

கிரிக் இன்ஃபோவில் ராகுல் ட்ராவிட்டின் புள்ளி விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். இது ராகுல் ட்ராவிடின் புள்ளிவிவரங்கள் பற்றியதல்ல. டெஸ்டில் 13000 சொச்ச டெஸ்ட் ரன்கள். ஒரு நாள் போட்டியில் 10000 சொச்ச ரன்கள். 70 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர். 300+ கேட்சுகள். டெஸ்டில் 30000 பந்துகளை சந்தித்த ஒரே வீரர். இன்ன பிற.

புள்ளிவிவரங்களோ, ட்ராவிட்டின் 2003 அடிலெய்டில் முதல் இன்னிங்க்ஸில் 200+, இரண்டாம் இன்னிங்ஸில் 70+ அடித்து ஜெயித்த இன்னிங்ஸோ, 2001 லக்‌ஷ்மனோடு கொல்கத்தாவில் அடித்த 180, ராவல் பிண்டியில் அடித்த 270, ஹெட்டிங்லியில் அடித்த 148, 2011 இங்கிலாந்து தொடரில் மொத்த இந்திய அணியும் ஊத்தி மூட, ஒரு முனையில் ட்ராவிட் மட்டும் அடித்த மூன்று சதங்களோ, முதலில் இறங்கி கடைசி வரை நின்று, நாம் பாலோ ஆன் வாங்கி, வெறும் பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் களத்துக்கு வந்து ஆடிய தீரமோ இன்னபிற புள்ளிவிவரங்களோ ட்ராவிடை முழுமையாக காட்டவேயில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது உடல் உழைப்பையும், கூர்மையான கவனிப்பையும், தொடர்ச்சியான “க்ரீஸ்” இருப்பையும், கடுமையான மனோ பலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சரியான ‘டொக்கு பேட்ஸ்மென்யா’ என்று சர்வசாதாரணமாக உதாசீனப் படுத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது கிரிக்கெட்டின் உச்சக்கட்டம். வெறுமனே சிக்ஸரும் பவுண்டரியுமாகப் பறக்கும் 20-20 களிப்பாட்டமல்ல அது. எப்படி வேண்டுமானாலும் ஆடலாம், ஆனால் ரன்கள் வந்தால் போதும் என்கிற மனப்பாங்கினை கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆடமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது இமயமலையில் ஏறி எவரெஸ்ட் தொடுவதற்கு இணை. 20-20 என்பது பொழுதுப் போக்குக்காக ’ட்ரெக்கிங்’ போவது. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. இன்றைக்கு instant gratification தான் நிஜமென்று நம்பும், அதை நாடும் ஒரு தலைமுறைக்கு இதன் வேர்கள் புரிவது கடினம்.

ட்ராவிட் 16 வருடங்கள் இந்தியாவுக்காக எல்லா களங்களிலும் ஆடியது வெறும் ஆட்டமல்ல. அது ஒரு யோகியின் தவம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகங்கள் என்று எடுத்தால் இன்றைக்கு ஒரு 800 பெயர்கள் தேறும். ஆனால் நினைவில் நிற்பது வெகு சில பெயர்களே. அதற்கு காரணம், டெஸ்ட் கிரிக்கெட்டின் தேவைகள் மிக அதிகம். இந்த உழைப்பு, அர்ப்பணிப்பு, கவனம், தேர்ச்சி, இருப்பு, மனோபலம், உடல்தகுதி, பயிற்சி, சோர்வுறாமல் கூர்ந்து ஒவ்வொரு பந்தையும் கவனிப்பது என்பது சாமானியர்களுக்கு கைக்கூடிவராத ஒன்று.  அதை ட்ராவிட் தன்னுடைய அடையாளமாக மாற்றியிருக்கிறார். இதை சாத்தியப்படுத்த அவர் கொடுத்திருக்கும் உழைப்பு இந்திய அணியில் எவராலும் தரப்படாத உழைப்பு.

இதெல்லாம் சாத்தியமாவதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று சின்ன வயதிலிருந்து உங்கள் நாடி நரம்பு ரத்தத்தில் கிரிக்கெட் ஊறி, பள்ளிப் போட்டிகளிலேயே நீங்கள் ஜீனியஸாக கருதப்பட்டாலேயொழிய இது சாத்தியமில்லை. இது சச்சின், சுனில் கவாஸ்கர், டான் ப்ராட்மேன் வழி. இன்னொன்று கிரிக்கெட் என்கிற விளையாட்டின் மீது பெருங்காதலாய் வசீகரித்து, ஒரு யோகமாகக் கொண்டு, அதை தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கைவரப் பெற்று அதிலிருந்து சாதனைகளை நிகழ்த்தத் தொடங்குதல். இது இன்றைக்கு ட்ராவிட்டின் வழி. இதுவே ஸ்டீவ் வாஹ் (ஆஸ்திரேலியா), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) போன்றவர்களின் வழி.

மால்கம் க்ளாட்வெல் எழுதிய Outliers என்கிறப் புத்தகத்தில் ஒரு துறையில் நீங்கள் ஜீனியஸாக 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்று ஒரு கணக்கு சொல்லியிருப்பார். 30,000 பந்துகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய ஒரே பேட்ஸ்மென் ராகுல் ட்ராவிட். சரியாக 5,000 ஒவர்கள். ஒரு ஒவர் 5 நிமிடங்கள் என்று கொண்டால் ஒவர் கணக்கில் மட்டுமே 500 மணி நேரங்கள். இது டெஸ்டில் ஆடிய ஒவர் கணக்கு மட்டுமே. ஒரு நாள் போட்டிகள், 20-20 போட்டிகள், கவுண்டி கிரிக்கெட், பயிற்சி நேரங்கள், ரஞ்சி கிரிக்கெட், முதல் தர கிரிக்கெட், அதற்கு முன் பள்ளியில் ஆடியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டால் 10,000 மணி நேரங்கள் சர்வசாதாரணம். ஜீனியஸ் என்பது எடிசன் சொன்னதுப் போல 1% Inspiration. 99% perspiration.

ட்ராவிட் பற்றிய புகழாரங்களில் குண்டப்பா விஸ்வநாத் சொன்னது “ஒரு உள்ளூர் போட்டியில் ட்ராவிட் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆகிவிட்டார். ட்ரெஸ்ஸிங் ரூம் வந்து பொறுக்க முடியாமல், மாலையில் பந்தினை கட்டித் தொங்க விட்டு, சுமார் 1000 முறை அந்த குறிப்பிட்ட திசையில் ஆடி பயிற்சி எடுத்தார்.” இதுதான் ட்ராவிட். எதுவுமே ட்ராவிட்டுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து தரப்படவில்லை. விடாத பயிற்சி. தொடர்ச்சியாக தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டே வருதல். தன்னுடைய ஆட்டத்தினை மேம்படுத்திக் கொள்வதில் இருந்த ஆர்வம். அர்ஜுனனுக்கு பறவையின் கண் தெரிந்ததைப் போல ட்ராவிட்டுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் – தன்னுடைய விக்கெட்டினை காப்பாற்றுதல். ரன் சேர்த்தல். இந்தியாவை வெற்றிக்குக் கொண்டு செல்லுதல். இதுதான் + இதுமட்டுமே.

F1 டிரைவர் அர்டன் சென்னா ஒரு முறை சொன்னார் “I don’t compete with others. I just constantly wanted to compete with myself”

இது தான் ட்ராவிட்டின் முகம். இந்தியாவில் புகழ்பெற்றிருக்கும் எல்லா வீரர்களுக்கும் ஒரு முகம் இருக்கிறது. சேவாக் – எதிரணியை துவம்சம் செய்வது. சச்சின் – எந்தக் களமாக இருந்தாலும் எதிரணியைத் திண்டாட வைப்பது. கங்குலி – ஸ்பின்னர்களை ஆடுவதில் ஜித்தன். லக்‌ஷ்மண் – லெக் சைட்டில் 200 பேர் நின்றாலும், அனாசியமாய் ரன் குவிப்பது. ஆனால், இது எல்லாம் இருந்தும், அது எதையுமே முன் வைக்காமல் ஒரு முனையில் ஒரு யோகியைப் போல தன்னுடைய வேலையினை எவ்வித ஆர்ப்பாட்டங்களுமில்லாமல் தொடர்ச்சியாக ஒரு well oiled machine போல செய்துக் கொண்டே, பின்புலத்தில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததுதான் ட்ராவிடின் முகம். ஹெல்மெட்டிலிருந்து வியர்வை கொட்ட, முகமெல்லாம் வியர்த்து ஊற்ற, ஒரு பக்கம் ட்ராவிட் நிற்கிறார் என்றால், கமெண்ட்ரியில் சர்வ சாதாரணமாக as long as Dravid is at one end, India is in safe hands என்பதை ஆட்டம் தவறாமல் கேட்கலாம்.

ஒரு ஜப்பானிய சமுராய் வீரன் தன் தலைமைக்கு கட்டுப்பட்டு போர்க்களத்தில் சண்டையிடுவான். வேண்டுமானால் உயிர் துறப்பான். ட்ராவிட்டும் சமுராய்தான். டெஸ்ட்டில் ஏழாவது இடத்திலிருந்து, முதல் இடத்தில் ஒபனிங் வரை அணிக்கு என்ன தேவையோ, அதற்காக ஆடியவர். உலகில் டான் பிராட்மேனுக்கு பிறகு சிறப்பான No.3 பேட்ஸ்மென் ட்ராவிட் என்று புள்ளி விவரங்கள் சொல்லும். ஆனால் ஆட்டத்தில் எந்த வரிசை என்பது ட்ராவிட்டுக்கு முக்கியமே இல்லை. எங்கு இறங்கினாலும், அணிக்கான பங்களிப்பையும், ஆட்டத்தினை இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றுவது மட்டுமே ட்ராவிட் என்கிற சமுராயின் குறிக்கோள்.

இன்றைக்கு ஜாகிர் கானோ, பிரவீண் குமாரோ, இஷாந்த் சர்மாவோ, ரோஹித் சர்மமோ, உத்தப்பாவோ தொடர்ச்சியாக மூன்று தொடர்கள் ஆடுவது கடினம். பிசிசிஐ அரசியல் ஒரு புறம் இருக்க, யாருமே முழுமையான உடல் தகுதியோடு இல்லை. ஆனால் ஒரு சீசனில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, கவுன்டி கிரிக்கெட் என்று ட்ராவிட் ஆடியிருக்கிறார். இந்த அர்ப்பணிப்பு, உடல்தகுதி, அணிக்கான பங்களிப்பு, உழைப்பு, சீன் போடாமல் இருத்தல், முக்கியமாக,  தொடர்ச்சியாக வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காகவே அயராது தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்ட தன்மை என நீளும் குணநலன்களில், ட்ராவிட் வெறும் விளையாட்டு வீரர் இல்லை என்பது தெளிவாகும்.

மூன்று வருடங்கள் ப்ரோக்ராமர், இரண்டு வருடங்கள் டீம் லீட், அடுத்த வருடம் ப்ராஜெக்ட் லீட், அதற்கடுத்து ப்ராஜெக்ட் மேனேஜர், நடுவில் சில வருடங்கள் வெளிநாட்டு வேலை என டைம் டேபிள் போட்டு தன்னுடைய படிகளை நிர்ணயிக்கும் இன்றைய இளைஞர் சமுகத்துக்கு முன்னால் ட்ராவிட் ஒரு வேறு மாதிரியான ஆதர்சம். ரோல் மாடல். உண்மையான உழைப்பு, கடுமையான முயற்சி, வெற்றியைப் பற்றியே சிந்தனை, பிரபல்யத்துக்கான எந்த தடங்களும் இல்லாமல் தன்னுடைய துறையில் உச்சத்தினை அடைவதற்கான தொடர்ச்சியான மேம்படுத்தல், தன்னடக்கம், அமைதி, பிரபல்யத்தைத் தலைக்குக் கொண்டு போகாத குணம் என நீளும் தகுதிகள் old world virtues ஆக இருந்தாலும், அது தான் உலகின் நம்பர்.1 இல்லாமல் போனாலும், நம்பகமான ஒரு சாதனையாளனை முன்னிறுத்தியிருக்கிறது. இது தான் நிஜமான, கர்வப்படக்கூடிய வெற்றி. வாழ்நாள் சாதனை என்பதை வெறும் 39 வயதில் நிகழ்த்தி விட்டு இன்னமும் அமைதியாக இருக்கும் ஒரு மனிதனின், யோகியின், சமுராயின் வாழ்வனுபம்.

ட்ராவிடும் அப்படி தான். கிரிக்கெட் என்கிற விளையாட்டினை ரசிக்கிற, சுவாசிக்கிற, அணுஅணுவாய் வாசிக்கிற, சிலாக்கிக்கிற எல்லோருக்கும் ட்ராவிடின் ஆட்டம் பிடித்திருக்கும். ஏனெனில் இது வெறும் ஆட்டமல்ல. கொண்டாட்டம்.  ட்ராவிட்டின் கவர் டிரைவ் களை அப்படியே படம்பிடித்து கிரிக்கெட் பாடப் புத்தகத்தில் போடலாம். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கரின் கவர் ட்ரைவ்களில் அந்த perfection தெரியும். இடது கை ஆட்டக்காரர்களில் இங்கிலாந்தின் டேவிட் கோவர், மேற்கத்திய தீவின் கேரி சோபர்ஸ் போன்றவர்கள் ஆடும்போது அது தெரியும்.

கனக்கச்சிதம், ஸ்பஷ்டம் என்ற இந்த இரண்டு சொற்கள் இல்லாமல்  ட்ராவிடின் ஆட்டம்  முற்றுப் பெறாது. ஒரு கலையோ, வணிகமோ, விளையாட்டோ எப்போது ஆனந்தமாக, கொண்டாட்டமாக, முடிவுறா அனுபவமாக இருக்குமென்றால் அதுவே கதியாக, அதுவே ஒன்றாக உள்ளும் புறமுமாய் கலந்து அதை வெளிக்கொணரும்போது தான் அந்த கலைஞனின், விளையாட்டு வீரனின் ஆளுமை தெரிய வரும். இந்த ஆளுமை தான் ட்ராவிட். “Greatness was not handed to him; he pursued it diligently, single-mindedly ”

ஸ்டார் வார்ஸ் (Star Wars) ஜார்ஜ் லூகாஸ் இயக்கி உலகின் மிக பிரசித்திப் பெற்ற படம். ஸ்டார் வார்ஸில் எல்லா விதமான வீர, தீர சாகசங்களும், ’ஜெடாய்’(Jedi) க்களும், ஜந்துக்களும் வரும். ஆனால், ஸ்டார் வார்ஸ் கதாப்பாத்திரங்களிலேயே அமைதியும், தீர்க்கமும், அறிவும், மேன்மையும் கொண்டது ‘யோடா’(Yoda) என்கிற ’ஜெடாய்’களின் குரு. எவ்விதமான அலட்டல்களும் இல்லாமல், ஆனால் தீர்க்கமாக தன்னுடைய பார்வையினை முன்வைக்கும் ‘யோடா’ தான் ‘ஜெடாய்’களின் வழிகாட்டி.ஒய்வுக்குபின் ராகுல் ட்ராவிட் என்ன செய்யப் போகிறார் என்று தெரியாது. ஆனால் ஒரு ரசிகனாய், ஆர்வலனாய், கிரிக்கெட்டின் வாழ்நாள் உபாசகனாய் ராகுல் ட்ராவிட் இந்தியாவின் ‘யோடா’ வாக மாற வேண்டும். அவருக்கு தெரியாத நுணுக்கங்கள், ஆட்டத்திற்கு முன் எப்படி தயார் செய்தல், எப்படி அணுகுதல், எப்படி எதிர்கொள்ளல் என்று எதுவுமே இல்லை. நாளைய நட்சத்திரங்களுக்கு ஆர்வமிருக்கிறது; வெறியிருக்கிறது; ரன்கள் குவிக்கவேண்டுமென்கிற ஆசையிருக்கிறது. ஆனால் வழிகாட்ட தான் யாருமேயில்லை. ட்ராவிட் அந்தப் பணியை செய்ய வேண்டும்.

– நரேன்

You may not get anyone who will be able to replace Rahul Dravid but again you can not continue forever because it took 16 years and 13,000 runs in Test cricket to make a Rahul Dravid. – Sourav Ganguly

 

ராகுல் டிராவிட்டின் ஒருநாள் வாழ்க்கை

ராகுல் டிராவிட் செப்டம்பர் 2011ல் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அரணாக விளங்கிய டிராவிடின் திறமையை டெஸ்ட் போட்டிகளில் உலகம் அங்கீகரித்த அளவு, ஒரு நாள் போட்டிகளில் அங்கிகரிக்கவில்லை. கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்பவர்களை ஆல் ரவுண்டர் என்று சொல்வார்கள். ஆனால் டிராவிடின் கிரிக்கெட் காலத்திற்குப்பின் அவர்களைப் பாதி ஆல்ரவுண்டர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், விக்கெட் கீப்பிங், பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்துத் துறைகளிலும் அவர் இயங்கியிருக்கிறார்.

2007க்குப் பின்னர், திராவிடின் ஒருநாள் போட்டி வாழ்க்கை ‘உள்ளே வெளியே’ விளையாட்டுப் போல ஆகிவிட்டது. 2007இல் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 2009ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டார், ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் (பொதுவாகவே இந்தியர்களின் பலவீனமாக கருதப்படுவது) தடுமாறிய ரோகித் சர்மாவுக்குப் பதிலாக. அப்போது காயம் காரணமாக வெளியே இருந்த சேவாக்கும் மீண்டும் சேர்க்கப்பட முடியாத நிலையிலிருந்ததால் அந்த இடத்தை நிரப்ப டிராவிட்டின் உதவியையே இந்திய கிரிக்கெட் போர்ட் நாடியது.

பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளிலும் அவர் விளையாடினார்.இந்த இரண்டு போட்டித் தொடரிலும் அவரது சராசரி முறையே 33 மற்றும் 40. அதற்குப்பின் அவர் அணியிலிருந்து விலக்கப்பட்டர். இங்கிலாந்தில் தட்டுதடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் சரிவைத் தடுக்க மீண்டும் ராகுல் தேவைப்பட்டார். ஒருநாள் போட்டிக்கே தகுதியில்லாதவர் என்று வர்ணிக்கப்பவரை 20-20 போட்டிக்கும் சேர்த்துக்கொண்டது நகைமுரண்.

ராகுலை மீண்டும் ஒருநாள் போட்டியில் சேர்த்த செயல் ஏறக்குறைய அவரிடம் கிரிக்கெட் போர்ட் சரணாகதி அடைந்த செயலாகவே எனக்குத் தோன்றியது. மிகவும் சிக்கல் வாய்ந்த சூழ்நிலைகளில் தொழில் நுட்பமே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நிருபிப்பதைப் போல இந்த நிகழ்வுகள் அமைகின்றன. இது திராவிடுக்குத் தனிப்பட்ட முறையில் வெற்றி என்றாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய தோல்வி. இந்த நிலை நீடிக்காமல் இருக்க ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிராவிட். திராவிட் அறிவித்திருக்கும் இந்த ஒய்வு அவருக்கு மிகத் தேவையானது, மரியாதைக்குரியது.

டிராவிட் ஒரு நாள்போட்டிகளுக்கும், T20 போட்டிகளுக்கும் லாயக்கற்றவர் என்ற பிம்பம் பொதுவாக எல்லோர் மனதிலும் உண்டு. ஆனால் ஒருநாள் போட்டிகளில் நீங்கள் டிராவிடின் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் அப்படிப் பேச முடியாது.

–    344 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் தொப்பி அவர் தலையில் இருந்திருக்கிறது

–    மொத்தம் 10889 ரன்கள் எடுத்திருக்கிறார்

–    மிகக் குறைந்த பந்துகளில் 50 அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் யாருக்குத் தெரியுமா – மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் – டிராவிட்டுக்குத்தான்.

–    ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மிக அதிக பேட்டிங் ஆவரேஜ் – தோனிக்கு அடுத்தபடியாக அவருக்குத்தான். இந்த வரியைப் படித்துப் புருவத்தைச் சுருக்குபவர்களுக்காக – (73 ஆட்டங்களில் இவர் விக்கெட்டின் பின் இருந்திருக்கிறார்; அந்த ஆட்டங்களில் மொத்தம் 2300 ரன்கள் – சராசரியாக 44.23.) முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கில்கிரிஸ்ட், சங்ககாராகூட இவருக்குப் பின்தான் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

–    ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஜோடிகள், இதுவரை இரண்டு முறைதான் வந்திருக்கின்றன – அவை இரண்டிலும் டிராவிட் இருந்திருக்கிறார்.

–    இது தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கான ஜோடிகள் எடுத்த அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்புகள் இவருடையவை.

இப்படிப்பட்ட ஒரு ஆட்டக்காரரைத்தான் நாம் ஒருநாள் போட்டிக்கு லாயக்கற்றவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்தக் கூற்று முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். நவின கால கிரிக்கெட் மாறி விட்டதுதான் இந்தப் பிம்பத்திற்குக் காரணம். கிரிக்கெட் மெல்ல மெல்ல அதிரடி மட்டையாளர்களின் ஆட்டமாக மாறிக்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்படும் சராசரி ரன்கள் முந்தைய பத்தாண்டுகளைக் காட்டிலும் உயர்ந்து இருக்கிறது. முக்கியமாக 2001 முதலான பத்தாண்டுகளில் நடந்த ஆட்டங்களின் சராசரி ரன் ஓவருக்கு 4.93 ரன்கள். இதுவரை நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளில் ஏறக்குறைய 49% ஆட்டங்கள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆடப்பட்டிருக்கின்றன. இதுவரை ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட ரன்களும் இதே விகிதத்தில்தான் இருக்கின்றன. இத்தனை அதிக ரன்களும், ஓவருக்கு 5 ரன்கள் விகிதத்தில் எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் போட்டியின் தன்மை எப்படி மாறியிருக்கிறது என்பது புலப்படும்.

குறிப்பாக டிராவிட் ஆடவந்த 1996 முதலான ஆட்டங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்று பார்த்தால் கிட்டத்திட்ட ஓவருக்கு 4.9 ரன்கள் சராசரியாக ஒவ்வொரு ஓவரிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் டிராவிடின் strike rate ஒருநாள் போட்டிகளில் 71%தான். அதாவது. அவர் ஒரு ஓவர் முழுவதும் விளையாடினால் அவரால் 4.3 ரன்கள்தான் எடுக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமன்றி, இந்திய மட்டையாளர்கள் மத்தியிலும் குறைந்தது 100 ஆட்டங்கள் ஆடி 2000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தவர்களின் பட்டியலில்கூட டிராவிட் மிகவும் பின்தங்கியே இருக்கிறார். இவருக்கும் கீழே பட்டியலில் இருப்பவர்கள், அவருக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களே. (கீழே இருக்கும் பட்டியலில் அவரது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகள் கணக்கில் கொள்ளப்பட்டவில்லை.)

மட்டையாளர்களுக்குச் சாதகமான ஃபார்மெட்டாக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஆட்ட வடிவில், அவரது குறைவான ஸ்ட்ரைக் ரேட் அவருக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல், அவரது பிம்பத்துக்குக் காரணமாக அமைந்தது என்று நான் கருதும் மற்றொரு காரணி – அவர் சம்பிரதாய முறையிலிருந்து கொஞ்சமும் வழுவாமல் கிரிக்கெட் விளையாடுவதே. டெண்டுல்கருக்கு ஒரு பேடில் ஸ்வீப், சேவக்குக்கு ஒரு ஊப்பர் கட், தோனிக்கு ஒரு ஹெலிகாப்டர் ஷாட், பீட்டர்சனுக்கு ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் இருப்பது போல, டிராவிடுக்கு ஒரு முத்திரை ஸ்ட்ரோக் கிடையாது. அவர் புதிய ஸ்ட்ரோக் எதையும் ரன் எடுக்கும் பொருட்டு உருவாக்கவில்லை. ஒருநாள் போட்டியில்கூட கடைசி வரை அவர் ஆடியது காப்பி புக் கிரிக்கெட்தான். ஒரு கவர் ட்ரைவுக்கு, பந்தின் அருகாமை வரை காலை நகர்த்தி (lean for the drive என்று சொல்வார்கள்) இன்றும் ஆடும் மிகச்சில கிரிக்கெட்டர்களில் இவர் முக்கியமானவர்.

டிராவிட்டிற்குச் சமமானவர்கள் என்று நான் உலக கிரிக்கெட்டில் கருதும் சிலரின் சாதனைகளை கீழே தந்திருக்கிறேன் அதைப் பார்த்தால் டிராவிடின் ஒருநாள் சாதனை யாருக்கும் குறைந்ததில்லை என்பது புலனாகும்.

(மேலே இருக்கும் படத்தில் ஹாஷிம் ஆம்லா, பீட்டர்சன், ட்ராட் போன்றோரையும் நான் சேர்க்கவே விரும்புவேன் – ஆனால் அவர்கள் டிராவிடின் காலத்திற்குச் சற்று பின்னால் வந்தவர்கள் என்பதால் அவர்களது சாதனையை டிராவிடோடு ஒப்பிட விரும்பவில்லை.)

ஒருநாள் போட்டிகளில் டிராவிட்டின் சாதனைக்கான முக்கியமான காரணம் அவர் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு போராளியாகவே இருந்திருக்கிறார். கடினமான விளையாட்டுச் சூழ்நிலைகளிலும், அட்டம் கைநழுவும் சூழ்நிலைகளிலும் இந்தியாவின் வெற்றிக்காகச் சுழன்றிருக்கிறது அவர் மட்டை.

அவரது கேரியரின் துவக்கம் போற்றத்தக்க வகையில் அமையவில்லை. 1996ல் உலகக்கோப்பையை ஏந்திய கையோடு சிங்கப்பூருக்கு விமானம் ஏறிய இலங்கை அணிக்கு எதிராக, சிங்கர் கோப்பையில் அறிமுகமானார். உலகக் கோப்பை ஆட்டத்தின் அரை இறுதியில் தோற்ற கவலையில் அழுதுகொண்டே ஓடிய வினோத் காம்ப்ளிக்கு, பதிலாக அணியில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தார் டிராவிட். 2 ஆட்டங்களில் 7 ரன்கள் – மிகச்சிறிய படாங் மைதானத்தில். இந்த மைதானத்தில்தான் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 50 விளாசி உலக சாதனையை ஏற்படுத்தினார் ஜெயசூர்யா.

அதன் பிறகு சார்ஜா – பாகிஸ்தானுக்கு எதிராக. அந்தத் தொடரும் அவருக்கு எந்த வகையிலும் பெயர் தரவில்லை. இதே கதை கொஞ்சம் தொடர்ந்தது – அவர் தனது முதல் 8 போட்டிகளில் எடுத்திருந்தது 63 ரன்களே. இதற்கு மேலும் அவர் மேல் நம்பிக்கை வைத்துதான் இந்திய அணி அவரை டொரண்டோவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சேர்த்தது. இந்த நம்பிக்கைக்கான காரணம் இன்னதென தெளிவாகச் சொல்ல முடியாவிட்டாலும், ரஞ்சியில் அந்த வருடம்தான் அவர் அரை இறுதியில் 153 ரன்களும், இறுதி ஆட்டத்தில் 114ம் அடித்திருந்தார் – இவை காரணங்களாக இருந்திருக்கலாம். அவரது இந்த ஆட்டமே அதே வருடத்தில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட மஞ்ச்ரேக்கருக்கு பதிலாக டிராவிட் களம் புகக் காரணமாக இருந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் டிராவிடின் ஆட்டம் அபாரமாக அமைந்தது – இது குறித்து சவ்ரவ் கங்குலி Signature Sourav நிகழ்ச்சியில் பேசியிருப்பதை நீங்கள் கேட்கவேண்டும். மேலும், அப்போதைய இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தவர் குண்டப்பா விஸ்வநாத் என்பதை ஒரு செய்தியாக மட்டுமே பதிவு செய்கிறேன்.

டிராவிட் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சேர்க்கப்பட்டதற்குக் காரணம் அவரது டெஸ்ட் ஆட்டங்கள் என்றால் மிகையில்லை. அப்போது டெஸ்டிற்கு தனி அணி, ஒருநாள் போட்டிகளுக்குத் தனி அணி, தனித் தனி அணித் தலைவர் போன்ற சித்தாந்தங்கள் எல்லாம் நிலை பெற்றிருக்கவில்லை. அதனாலேயே டிராவிட்டின் டெஸ்ட் போட்டி ஆட்டங்கள் அவரது ஒருநாள் போட்டிகளில் அவரது இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவியன. டொரண்டோ பயணம், டிராவிட்டுக்குச் சிறந்த மாற்றத்தைக் கொடுத்தது – 5 போட்டிகளில் 220 ரன்கள் – சராசரி 44 ரன்கள். இந்திய அணிக்கு மட்டுமல்ல டிராவிட்டுக்கும், தான் ஒருநாள் போட்டிகளில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது இந்தத் தொடர்தான்.

பின்னர் 1997 முதல் 1999 வரையிலான காலகட்டம் டிராவிட்டின் ஒருநாள் போட்டிகளில் காலூன்றுவதற்கு உதவிய காலம் என்று சொல்லாம் – மொத்தம் 2995 ரன்கள், 82 ஆட்டங்களில். இதில் டிராவிட் விஸ்வரூபம் எடுத்தது பெப்சி சுதந்திரக் கோப்பை. இந்தத் தொடர், கிரிக்கெட் ஆர்வலர்களால், சயித் அன்வரின் 194 ரன்களுக்காக நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிறது.  (சென்னையில் ஆட்டத்திற்கு சில மணிநேரங்கள்முன் பெவிலியன் கடைக்குச் சென்று, வாங்கிய மட்டையால் இந்தச் சாதனையைச் செய்தார் என்பது பிரபலமான பேச்சாக இருந்தது.) அந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றாலும் இந்தியாவின் பதிலடியை முன்னெடுத்துச் சென்றவர் டிராவிட். அவர் அடித்த 107 அன்வரின் மெகா ஸ்கோர் முன் மறைந்ததுவிட்டது. இந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து ஒன் டிராப் இடத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டார். அதேபோல 1998ம் அண்டு இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டபோது அதில் இந்தியாவின் பேட்ஸ்மேன்களில் பரிமளித்தவர் டிராவிட்.

இன்னுமொரு முக்கியமான ஆட்டம் 1999ல் நடந்த உலக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டம்.  இந்த ஆட்டம் மிக முக்கியமான ஆட்டமாக இருந்தது. இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு சூப்பர் சிக்ஸில் இடம் உறுதி என்ற நிலையும் தோற்றால் சூப்பர் சிக்ஸுக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற நிலையும் இருந்தது. நடப்பு சாம்பியன்களாகவும், அட்டகாசமான ஃபார்மிலும் இருந்த இலங்கைக்கு எதிராக மிக அதிகமான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஒருநாள் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த ஜோடி என்ற பெருமையையும் டிராவிட் கங்குலி ஜோடி பெற்றது. காயமுற்ற மோங்கியாவுக்காக டிராவிட் விக்கெட் கீப்பிங்கும் செய்த போட்டி இது. பின்னர் இந்த பார்ட்னர்ஷிப் சாதனையை அவரே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முறியடித்தார்.

கேரியரின் இரண்டாம் பகுதியில் அவரது பங்கு பெரும்பாலும் அணியை ஒருங்கிணைத்துச் செல்வதாகவே இருந்தது. ஒரு பக்கத்தில் விக்கெட் வீழ்ந்துகொண்டிருந்தாலும், மறுபக்கத்தில் அரணாக இருந்து பல போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இந்த பணியின்போது, மூத்த கிரிக்கெட்டர்கள் என்றில்லை, இளைய தலைமுறையினருடனும் பல முக்கியமான போட்டிகளில் ஜோடி சேர்ந்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல சில ஆட்டங்கள்.

2000ம் அண்டு சார்ஜாவில் நடந்த கோகோ கோலா சாம்பியன்ஸ் போட்டியில், இந்திய அணியில் பேட்டிங் முழுவதுமே டிராவிட்டைச் சுற்றிதான் நடந்தது. முதல் பந்தில் ஆடத்துவங்கிய அவர் 45ம் ஓவரில்தான் ஆட்டமிழந்தார். அவரது ஆட்டத்தினாலே வலுவான இலக்கை நிர்ணயித்ததுடன், இந்தியா வெற்றியும் பெற்றது.

2002ல் மேற்கத்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், 324 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக இந்திய அணி அடைய டிராவிடின் ஆட்டமே காரணம். இந்த போட்டியில், பெரிய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த பின்னரும் யுவராஜ் சிங், கைஃப், சஞ்சய் பங்கருடன் சேர்ந்து விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் ஆட்டமிழக்கமல் அவர் எடுத்த ரன்கள் 109.

அதே போல 2006ம் ஆண்டு மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக கிங்க்ஸ்டனில் நடந்த போட்டியில் கைஃபுடன் அவர் இணைந்து ஆடி 45 ஓவரில் 251 ரன்கள் என்ற இலக்கை இந்தியா அடைந்து வெற்றி பெற்றது. இதிலும் அவர் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார்.

பொதுவாகவே அவருடைய சாதனைகள் மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக நன்றாகவே இருந்திருக்கின்றன. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் சராசரியாகவே இருந்திருக்கின்றது. 2007ல் அவர் அணியை விட்டு நீக்கப்படுவதற்கும் ஆஸ்திரேலியா சீரிஸும் காரணமாக அமைந்தது. அந்த தொடரில் அவர் 6 ஆட்டங்களில் மொத்தம் எடுத்ததே 51 ரன்கள்தான்.

ராகுல் டிராவிட் அளவிற்கு இந்திய கிரிக்கெட்டிற்கு முழுமையாக பங்களித்தவர்கள் யாரும் இல்லை – அணியின் தேவைக்கு ஏற்றபடி அவர் தன்னுடைய களங்களை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார், அவை அவருக்கு சௌகரியமில்லாதவையாக இருந்தாலும். இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கைகொடுத்ததிருக்கிறார் டிராவிட்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது ஒரு ஸ்பெஷலிஸ்ட்க்கான இடம். அவ்வளவு சுலபமான இடமல்ல. (இதன் அருமையை அறிந்தவர்களால் தோனியை குறை சொல்ல முடியாது.) பல காலம் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்க்கான இடம் சரியான ஆட்டக்காரரால் நிரப்பப்படாமலே இருந்தது. 2001ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஸ்டாண்டர்ட் பேங்க் மும்முனை போட்டியில், இந்திய அணிக்குக் கூடுதலான ஒரு பேட்ஸ்மேன் தேவைப்பட்டபோது, அந்தத் தொடருக்கான விக்கெட் கீப்பரான தீப் தாஸ் குப்தா அணியிலிருந்து நீக்கப்பட்டு லக்ஷ்மண் சேர்க்கப்பட்டார். அப்போது காலியாக இருந்த விக்கட் கீப்பர் பொறுப்பை ஏற்றுக்கொண்டர் டிராவிட். அதன்பிறகு தொடர்ச்சியாக அவர் விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார். அவருக்கு அந்தப் பொறுப்பு அதீத கஷ்டம் கொடுப்பதாகவே இருந்தது. அவர் இது குறித்து வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். பின்னர் பார்த்தீவ் படேல் அந்த இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் சரி வராமல், தோனியால் அந்த இடம் இப்போது நிரப்பப்பட்டிருக்கிறது. இப்போதுகூட நடந்த டெஸ்ட் போட்டியில், டிரவிட் தோனி பந்து வீசும்போது டிராவிட் கீப்பிங் செய்த தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே ரசித்திருப்பார்கள்.

டிராவிட் 2005 முதல் 2007 வரையிலான காலகட்டங்களில் இந்திய அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். சேப்பல் செய்த கூத்திற்குப்பின் கங்குலி கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர், இந்திய அணியை ஒருங்கிணைக்கும் சீனியர் ஒருவர் கேப்டனாக நியமிக்கும் தேவை ஏற்பட்டது. அந்த பொறுப்பு டிராவிட்டுக்கே கொடுக்கப்பட்டது. தோனி ஒரு ஸ்திரமான தலைவராக உருவாகும் காலம் வரை இந்தியத் தலைமை ஏற்றார் டிராவிட். அவர் தலைமையில் இந்தியா பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. உலகக் கோப்பையில், பங்களாதேஷிடமும், இலங்கையிடமும் உதை வாங்கினோம். சரியான சமயத்தில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.

இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் என்று சச்சின் பார்க்கப்படுவது எவ்வளவு சரியோ அந்த அளவிற்கு சரி, டெஸ்ட் போட்டிகளின் அடையாளமாக டிராவிட் பார்க்கப்படுவதும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவருக்கான நியாயமான இடம் வழங்கப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. அவர் போன்ற ஒரு முழுமையான கிரிக்கெட் அளுமையை உலக அரங்கிலேயே அடையாளம் காட்டுவது அரிது. எதிர்காலத்தில், இந்தியாவிற்கு இன்னொரு சச்சின் கிடைக்கக்கூடும். பல சேவாக்குகளும், தோனிகளும் கிடைக்கக்கூடும். ஆனால், டிராவிட் போன்ற ஒரு ஆட்டக்காரர் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. Puristகளின் கடைசி பிரதிநிதியாக இந்திய அணியில் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை ஆடிவிட்டு ஓய்வில் திரும்பியிருக்கிறார்.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தன்னை மற்ற ஆட்ட வடிவங்களிலிருந்து பிரித்துக்கொண்ட டிராவிட், இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெரும் அந்த நாளில்தான் anchor innings ஆடுபவர்களின் பங்கு கிரிக்கெட்டில் எவ்வளவு அளப்பரியது என்பதை நம்மால் உணர முடியும். ஆனால் அதுவரை டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்போடு இருக்கவேண்டும்.

-கிருஷ்ணன் சந்திரசேகரன்

 

ஜப்பானில் நாயர்

அத்தியாயம் 5

எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பல்வேறு துறைகளிலும் நெருக்கமான நண்பர்கள் நிறையப் பேர் உண்டு. அவர்களுள் ஒருவர் ஷங்கர் ரமணி. அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் பல எண்ணெய்க் கிணறுகளுக்குச் சொந்தக்காரர். அதைத் தவிர ஏகப்பட்ட பிசினஸ். அவர் 1985-ல், ஒருமுறை தன் மகன் அருணுக்கு உபநயனம் செய்விப்பதற்காகச் சென்னைக்கு வந்திருந்தார். அவரைப் பற்றி ஏதேச்சையாக எழுத்தாளர் சுஜாதா, கல்கி ராஜேந்திரனிடம் சொல்ல, உடனே சவேரா ஓட்டலில் தங்கி இருந்த ஷங்கர் ரமணியைச் சந்தித்து பேட்டி காணும்படி கல்கி ராஜந்திரனிடமிருந்து எனக்குத் தகவல் வந்தது.

சவேரா ஓட்டலுக்குப் போய் ஷங்கர் ரமணியைச் சந்தித்தேன். துளியும் பந்தா இல்லாமல், சாதாரணமான ஒரு பேண்ட், ஜிப்பா அணிந்துகொண்டிருந்த அவர், தன்னைப் பற்றிச் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவ்வளவு பெரிய மனிதருக்கு முன்னால் சரிக்கு சரியாக சோபாவில் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறோமே என்ற பிரமிப்புடனே அந்த உரையாடல் நிகழ்ந்தது.

நாமக்கல்லில் அந்தக்காலத்து மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர் ரமணி. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், அதனைத் தொடர்ந்து சென்னை பிரசிடென்ஸி கல்லூரியிலும் அவர் எடுத்துப் படித்த சப்ஜெக்ட், ஜியாலஜி. படிப்பை முடித்துவிட்டு, இங்கேயே அடுத்த மூன்றாண்டுகளில் ஐந்தாறு கம்பெனிகளில் வேலை பார்த்தார். கடைசியாக வேலை பார்த்த கம்பெனிக்கு ஒரு கனடா நாட்டு கம்பெனியுடன் கொலாபரேஷன். கனடாவிலிருந்து தொழில் நிபுணர்கள் இங்கே வந்து போவார்கள். அவர்களுடன் ஷங்கர் ரமணிக்குத் தொடர்பு ஏற்பட, கனடாவுக்குப் போனால் பிரகாசமான எதிர்காலம் இருப்பதைப் புரிந்துகொண்டார். 1965-ல் கனடாவுக்குச் சென்றுவிட்டார்.

கனடாவிலும் சரி, அதன் பிறகு அமெரிக்காவிலும் சரி, வாழ்க்கையில் ஏகப்பட்ட மேடுபள்ளங்களைச் சந்தித்தார். 1970-களில் பிசினஸ் பார்ட்னர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் பெரும் நஷ்டம். பெருத்த அடி வாங்கினாலும் மனுஷர் அசந்துபோகவில்லை. “பேசாமல் எங்கேயாவது மாசச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்துவிடு” என்று இந்திய நண்பர்கள் சொன்ன ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டு, மறுபடி பிசினசை ஆரம்பித்தார்.

விழுந்தபின் எழுந்த கதையைச் சொன்னார் ஷங்கர் ரமணி: “அமெரிக்காவைப் பொருத்தவரை கடுமையான உழைப்பு என்றைக்குமே வீண் போகாது; எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன் என்பதைவிட, நானே முயன்று ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதைச் சாதித்தவுடன், ‘அப்பாடா!’ என்று ஓய்ந்துபோகவில்லை; எதையோ பெரிசாகச் சாதித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்ளவில்லை; அடுத்த இலக்கு என்ன என்று நிர்ணயம் பண்ணிக்கொண்டு புறப்பட்டுவிடுவேன்.”

அமெரிக்காவில் பணத்தைவிட நேரத்துக்குத்தான் அதிக மதிப்பு. எனவே, தன் பிசினஸ் விஷயங்களைக் கவனிக்கத் தோதாக, சொந்தமாகவே ஒரு ஜெட் விமானம் வைத்திருந்தார். ‘இந்தியாவுக்குக் குடும்பத்துடன் வரும்போது சொந்த ஜெட் விமானத்தில்தான் வருவேன்’ என்று அவர் சொன்னபோது, சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துக்கொண்டிருந்த நான், பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்தேன்.

ஷங்கர் ரமணி ஒரு பரம கிரிக்கெட் ரசிகர். ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது, மேட்ச் பார்க்க லண்டன் வந்திருந்தார் ஷங்கர் ரமணி. அங்கே சீரிஸ் முடிந்தவுடன், மொத்த கிரிக்கெட் டீமையும் தன் ஜெட் விமானத்தில் அமெரிக்காவுக்கு ஹைஜாக் செய்துகொண்டுபோய், மேட்ச் ஆட ஏற்பாடு செய்தார். “அமெரிக்காவில் யார் கிரிக்கெட் மேட்ச் பார்க்க வருவார்கள்?” என்று கேட்டபோது, “என் ரத்தத்தை எடுத்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது ஏ, பி, ஏபி, ஓ என்று எதுவுமாக இருக்காது. என் ரத்தப் பிரிவு ‘சி’ அதாவது கிரிக்கெட்” என்றார். “எனக்கு நம்ம கிரிக்கெட்டர்களை ஆடவைத்து ஒரு மேட்ச் பார்க்கணுமுன்னு தோணிச்சு! லண்டனிலிருந்து, அமெரிக்காவுக்கு ஒரு டூரை ஸ்பான்சர் பண்ணிவிட்டேன். இந்திய கிரிக்கெட் அணி, அமெரிக்காவில் உள்ள சில லோக்கல் கிரிக்கெட் அணிகளுடன் மேட்ச்கள் ஆடியது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் திரளாக வந்திருந்து அந்த ஆட்டங்களைப் பார்த்து ரசித்தார்கள்” என்று சந்தோஷமாகச் சொன்னவரிடம், “இதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்?” என்று கேட்டபோது, “நான் கணக்கு பார்க்கவில்லை” என்று சிம்பிளாகப் பதில் சொல்லிவிட்டார்.

ஷங்கர் ரமணி ஒரு தமிழ் சினிமா கூட எடுத்திருக்கிறார். “சினிமா எடுக்கும் ஆசை எப்படி வந்தது?” சிரித்துக்கொண்டே அவர் சொன்ன பதில்: “எனக்கு சினிமா பத்தி ஒண்ணும் தெரியாது. சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பிசினஸ் வென்ச்சர் மாதிரி டிரை பண்ணுகிறேன். ரைட்டர் சுஜாதா கதை, வசனம் எழுதறார். இன்ஃபாக்ட், அவரோட ரசிகையான என் மனைவி அபயத்தோட சாய்ஸ்தான் சுஜாதா. சினிமா எடுப்பது, இட்ஸ் ஜஸ்ட் அவுட் ஆஃப் கியூரியாசிடி.”

அடுத்து, “உங்களைப் போல சினிமா அனுபவம் இல்லாதவர்கள் சினிமா எடுப்பது ரொம்ப ரிஸ்க் இல்லையா?” என்று கேட்டேன். “எதில்தான் ரிஸ்க் இல்லை? நான் லீசுக்கு எடுக்கிற நிலத்தைத் தோண்டிப் பார்க்கிறபோது, எண்ணெயோ, வாயுவோ கிடைக்காமல் போகிற ரிஸ்க் இல்லையா? அதுபோலத்தான். எடுக்கிற படத்துல லாபம் வந்தா, அதை வெச்சு இன்னொரு படம் எடுப்பேன்.”

ஷங்கர் ரமணி தயாரித்த படத்தின் டைட்டில்: உன்னிடத்தில் நான். சுஜாதாவின் மேடை நாடகங்களை டிவி சீரியலாக எடுத்த அருண் வீரப்பன்தான் டைரக்டர். இசை தாயன்பன். கேமரா: அஷோக் குமார். நேதாஜி, ஷியாம், நளினி, தேவி லலிதா என அன்றைய தினம் அத்தனை பிரபலமில்லாதவர்கள் நடித்தார்கள். கபில் தேவ், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற கிரிக்கெட்டர்கள் ஷங்கர் ரமணியின் முகதாட்சணியத்துக்காக படத்தில் கௌரவத் தோற்றத்தில் வந்து போனார்கள். படத்தின் வெற்றி, தோல்வி குறித்து ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைத்தான் கேட்க வேண்டும்.

***

ஷங்கர் ரமணியைப் போல நான் சந்தித்த இன்னொரு நபர் ஒரு ஜப்பானியர். பெயர்: நாயர்சான். (நாயர்-சான் என்றால் மரியாதைக்குரிய நாயர் என்று பொருளாம்.) தன் இருபது வயதில் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குப் போன நாயர்சான், அங்கிருந்தபடியே இந்திய சுதந்தரத்துக்குப் போராடியவர். ஜப்பான் வாழ் இந்தியர்களில் முக்கியமானவர். அவரை ஜப்பானிய சக்ரவர்த்திகூட விருதளித்து, கௌரவித்திருக்கிறார். அவர் சென்னை வந்திருந்தபோது, அன்றைய அமைச்சர் ராசாராம் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்.

அப்போதுதான் எனக்கு நாயர்சானைச் சந்தித்துப் பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. சோழா ஷெராட்டனின் காஃபி ஷாப்பில் அவரைச் சந்தித்தேன். என் வாழ்க்கையில் அன்றைக்குத்தான் நான் முதல் தடவையாக சோழா ஹோட்டலில் காஃபி சாப்பிட்டேன். அந்த சந்தோஷம் எனக்கு அடுத்த சில நாட்கள்வரை நீடித்தது.

நாயர்சான் பேட்டியின்போது, “ஜப்பானியர்கள் அமெரிக்க ஆதரவாளர்களா? இல்லை ருஷ்யா ஆதரவாளர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன அழுத்தமான பதில்: “இரண்டுமில்லை; ஜப்பானிய ஆதரவாளர்கள்.”

ஐய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் என்ற இயற்பெயர் கொண்ட நாயர்சான் கேரளாவில் பிறந்தவர்.படிக்கிற காலத்திலேயே சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நேதாஜியின் கம்பீரமான தலைமையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் தன்னை இணைத்துக்கொண்டவர். ஜப்பானுக்குப் போய், அங்கே க்யோட்டா பல்கலைக்கழகத்தில் இஞ்சினியரிங் படித்தவர்.

இந்திய சுதந்தரத்துக்குப் பிறகு, ஜப்பானிய அரசியலில் நுழைந்ததுடன், தொழிலதிபராகவும் ஒளிர்ந்தவர். ஜப்பானில் டோக்கியோவில் அவர் ஆரம்பித்த நாயர் ரெஸ்டாரனண்ட் மிகவும் பிரபலமானது. அங்கே முதல் முறையாகச் செல்லும் எவருக்கும் உணவு இலவசம். அடுத்த முறையிலிருந்து காசு வாங்கிக்கொள்வார். ‘இந்திரா’ என்ற பெயரில் இவர் தயாரித்து விற்பனை செய்த மசாலா ரகங்கள் ஜப்பானில் வெகு பிரபலம்.

தான் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்தாலும், தன் இரண்டு மகன்களுக்கும் கேரளாவிலிருந்து பெண் எடுக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனாலும் அவருக்கு ஜப்பானியப் பெண்களே மருமகள்களாக அமைந்தார்கள்.

1990-ல் நாயர்சான் இறந்தார். ஆங்கிலத்தில் வெளியான அவரது வாழ்க்கை வரலாறை பத்திரிகையாளர் ராணிமைந்தன் மொழிபெயர்க்க, பத்திரிகையாசிரியர் சாவி புத்தகமாக வெளியிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னால் நாயர்சானின் வாழ்க்கையை நாயர்சான் என்ற பெயரிலேயே ஒரு சினிமாவாக எடுத்தார்கள். நாயர்சானாக நடித்தவர் மோகன்லால். அதில் ஜாக்கிசான்கூட நடித்ததாக நினைவு.

நாயர்சானை நான் சந்தித்துப் பல வருடங்கள் கழித்து, பணம் என்ற தலைப்பில் பிரபலங்கள் பலரும் சொன்ன விஷயங்களைக் கேட்டு கல்கியில் வாராவாரம் எழுதினேன். அந்த வரிசையில் பத்திரிகை ஆசிரியர் சாவியை சந்தித்தபோது, அவர் நாயர்சான் பற்றி நிறையப் பேசினார். அப்போது அவர் நாயர்சான் பற்றிச் சொன்ன ஒருவிஷயம் மிகவும் சுவாரசியமானது.

சாவி பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தபோது ஒருசமயம் திடீரென்று சாவிக்குப் பண நெருக்கடி. என்ன செய்வதென்று தடுமாறிப் போனார். திடீரென்று அவருக்கு ஒரு ஐடியா. ஜப்பானில் வசித்த நாயர்சான், சாவிக்கு மிகவும் நெருக்கம். நாயர்சான், ஜப்பானில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, விமானம் ஏறி நேரே ஜப்பானுக்குப் போய்விட்டார் சாவி. நாயர்சானைச் சந்தித்து, தன் நிலைமையைச் சொன்னதும், மறுவினாடி அவர் சொன்னது, “உங்களுக்கு இப்போ எவ்வளவு பணம் வேணும்? இதுக்குப் போயி இவ்வளவு தூரம் நேரில் வரணுமா? ஒரு போன் செய்திருந்தால் போதுமே! நானே அனுப்பி வைத்திருப்பேனே!” என்பதுதான்.

அடி தூள்!

வெற்றிக்களிப்பில் லக்‌ஷ்மண்

Howzzat? என்று மிஷல் ஜான்சன் கேட்டவுடன் பிபி எகிறிவிட்டது. இதயம் வாய் வழியே எந்த நேரத்திலும் வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. முட்டாள் ஓஜா, கிரீஸுக்கு வெளியே வேறு நின்று கொண்டிருந்தான். அந்த த்ரோவும் மிஸ்ஸாகி ஒவர் த்ரோவில் 4 ரன்கள். அப்போதே, விதி ரங்காராவின் ‘மாயாபஜார்’ போஸில் ரிக்கி பாண்டிங் பக்கத்தில் நின்று சிரித்ததை எந்த கேமராவும் போகஸ் செய்யவில்லை. அடுத்த இரண்டாவது பந்து, ஒஜாவின் காலில் பட்டு கீப்பரிடம் அகப்படாமல் ஒட, 2 ரன்கள், இந்தியா ஆக்ரோஷமான, பரவசமான வெற்றி.

முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 428. இந்தியா 405. நாலு பேர் இந்தியாவில் ஐம்பதுக்கு மேல் எடுத்தும், சதமெடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்கள். சச்சின் சொதப்பலாக மிடில் ஸ்டம்புக்கு வந்த பந்தை கவனிக்காமல், லெக் சைடில் ஆடப் போய் 98ல் அவுட். திராவிடும் ரெய்னாவும் அவரவர்கள் பங்குக்கு சொதப்பி, சதத்தை விட்டார்கள். பரபரப்பான இரண்டாவது இன்னிங்ஸ், 23 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா.

முதல் விக்கெட்டுக்கு வாட்சனும் கேட்டிச்சும் அருமையாக ஆடினார்கள். இந்த முறையும், வாட்சன் ஐம்பதுக்கு மேல், மவனே இவன் இந்த இன்னிங்ஸும் செஞ்சுரி என்றபோதுதான் பந்து இஷாந்த் சர்மாவிடம் போனது. முதல் இன்னிங்க்ஸில், காலில் வலி என்று பாதி போலிங்கிலேயே கழண்டு உள்ளே போன இஷாந்த். போன சீசனில் மொக்கையான இஷாந்த். முன்பிருந்த வேகம் குறைந்த இஷாந்த்.

இஷாந்த் போட்ட அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்தை வாட்சன் சொதப்பலாக நேராய் ஆட முயற்சிக்க பந்து பேட்டில் பட்டு, உள்ளே போய், பெயில்ஸ் எகிறியது. இந்தியாவின் முதல் விக்கெட். அடுத்த பந்தை ரிக்கி பாண்டிங் எதிர்கொண்டவுடன், ஃபோர். ஆரம்பிச்சிட்டான்யா என்று நினைத்து முடிக்குமுன், அந்த கோல்டன் ஷார்ட் பால். பாண்டிங் ஹூக் செய்யலாம் என்று அரைகுறையாக நினைத்து முடிப்பதற்குள், ரெய்னா தாழ்வான பந்தைக் கையகப்படுத்த, ஒரே ஒவரில் 2 விக்கெட்டுகள். மீண்டும் ஒரு முறை பாண்டிங்குக்கு இஷாந்த் சிம்ம சொப்பனமாய்.

இன்றளவும் என் கண் முன் நிற்பது, போன சீசனில் (2008) டெஸ்டில், ரிக்கி பாண்டிங்குக்கு இஷாந்த் போட்ட பால். சரியான கிரிக்கெட்டிங் போஸில் முன்னால் வந்து ரிக்கி தடுத்தாட, இஷாந்தின் இன்ஸ்விங்கர் பேட்டுக்கும் உடம்புக்கும் இடைப்பட்ட சந்தில் புகுந்து மிடில் ஸ்டம்ப் பறந்த தருணம். எந்த வேகப்பந்து வீச்சாளனுக்கும் சொர்க்கம் பக்கத்தில் வந்து ஆசிர்வதிக்கும் தருணம்.

அடுத்த இரண்டாவது ஒவரில் இஷாந்த் மீண்டும் ஒரு ஷார்ட் பால். கிளார்க் முகத்தில் படாமல் இருக்க பேட்டைத் தூக்க, பந்து கிளவுஸில் பட்டு பாணா கிளம்பியது. தோனிக்கு அது பிராக்டிஸ் கேட்ச். அதன்பின் ஆஸ்திரேலியாவின் டீம், அறுபத்து மூவராக மாறி ஸ்பின்னர்களுக்கு விக்கெட்டுகளைத் தானம் கொடுத்தார்கள். ஸ்கோர் 165/7. மீண்டும் ஜாகீர் கான். முதல் இன்னிங்க்ஸ் நாயகன். ஜாகீர் அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப் போட்ட பந்து, மிஷல் ஜான்சன் தொடலாமா, வேண்டாமா என்று புதுமுக கதாநாயகன், கதாநாயகியைப் பார்க்கிறமாதிரி பார்த்து, பேட்டைத் தூக்குவதற்குள், பந்து பேட்டின் அடிமுனையில் கிஸ்ஸடித்து ஒரு லோ கேட்சாக மாற, தோனி லபக்கிக் கொண்டவுடன் 8வது விக்கெட் காலி.

அடுத்த ஒவரில் ஜாகீரின் பந்து ஸ்டம்பில் பட்டு ஆனால் பெயில்ஸ் விழாததால் நேதன் ஹாரிட்ஸுக்கு கொஞ்சம் ஆயுசு கெட்டியாக இருக்குமென்றே பட்டது. அல்ப ஆயுசு. அடுத்த ஓவர், ஜாகீர் சரியான இன் ஸ்விங்கர், மிடில் ஸ்டம்ப் காற்றில் பறந்து தரையில் செட்டிலாகுமுன், ஜாகீர் ‘கம் ஆன்’ என்று கத்திய கத்தலில், பில்லி போடனுக்கு நெஞ்சடைப்பு வந்திருக்கும்.

அதற்கு அடுத்த ஜாகீரின் ஒவர். வாசிம் அக்ரமின் துல்லியத்துடன் ஹில்பென்ஹாஸுக்குப் போட்ட யார்க்கர். காலை பாதுகாத்துக்கொள்ள கால் தூக்கியதோடு இன்னிங்க்ஸ் முடிந்தது. ஜாகீரின் 250வது டெஸ்ட் விக்கெட். ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் மாதிரியான வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பின் வந்த இந்தியாவின் முதல் தர வேகப்பந்து வீச்சாளன். ஆஸ்திரேலியா 192 ஆல் அவுட். முதல் இன்னிங்க்ஸ் 23 ரன்கள் லீடோடு, 216 எடுத்தால் இந்தியா வெற்றி.

முதல் ஒவர். சம்பிரதாயமாக காம்பீர் ஸ்ட்ரைக் எடுக்க, முதல் 3 பந்துகள் லெக் சைடில். நான்காவது பந்து சரியான இன் ஸ்விங்கர். காம்பீர் அவுட். ரீப்ளே பார்க்கும்போதுதான் தெரிந்தது. பந்து பேட்டில் பட்டு, பேடில் பட்டது. பில்லி போடன் ஒழிக. இந்தியா 0/1. தூண் என நிற்கும் ட்ராவிட் அடுத்து. சரியாக 7 ஒவர்கள். ட்ராவிட் அவுட் சைட் தேமே என்று போன பந்தைத் தொடப் போக, பெயின் வாரிக்கொண்டார். டோகி என்றழைக்கப்படும் டோக் பொலிஞ்சருக்கு முதல் விக்கெட். சச்சின் உள்ளே. இந்தியா 31/2. சரி 4வது நாளை சச்சினும் சேவாக்கும் சமாளித்து விடுவார்கள் என்று தோன்றியது. சனி அங்கேயும் வந்து சிரித்தது.

தேவையில்ல்லாமல், மீண்டும் டோகி போட்ட பந்தை சேவாக் அடிக்கப் போக, ஹஸ்ஸி செம்மையான கேட்ச். 48/3. ரெய்னா உள்ளே. பரவாயில்லை, இந்த மாதிரி மேட்சுகளுக்கு யாராவது ஒருத்தர் காவு கொடுக்கவேண்டும், அது சேவாகாய் இருக்கட்டும் என்று உள்ளுக்குள்ளேயே சமாதானம் செய்துகொண்டு ஒரு ஓவர்கூட ஆகவில்லை. ஹில்பென்ஹாஸின் தடாலடி ஷார்ட் பால். ரெய்னாவின் உயரத்துக்கு ஈடாக. ரெய்னாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பந்து சரியாக கல்லிக்குப் போக, நார்த் பிடிக்க, இங்கே கிலி உண்டானது. ரெய்னா டக். 48/4. உள்ளே ஹைட்ரோகுளாரிக் அமிலம் கொஞ்சம் அதிகமாகவே சுரந்தது. நாள் முடியுமுன்னர் இன்னொரு பலி கொடுக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், ஜாகீர் கான், நைட் வாட்ச்மென் என்கிற பலிகடா. சுதாரித்து ஆடி, 4வது நாளை முடிக்கும்போது 55/4.

161 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி. ஆறு சரியான விக்கெட் எடுக்கும் பந்துகள் வீசினால் ஆஸ்திரேலியா வெற்றி. ஐந்தாம் நாள் காலை.

நாள் ஆரம்பித்தவுடன், நம்பிக்கை வருமாறு கொஞ்சம் அடித்து ஆடினார்கள். ஆனால், ஹாரிட்ஸின் பந்தில், டொக்கு வைக்கலாம் என்று போய் ஜாகீர் ஸ்லிப்பில் நின்ற கிளார்க்குக்கு கேட்ச் பிராக்டிஸ் கொடுத்ததில், இந்தியாவின் 5வது விக்கெட் போனது. 76/5. உள்ளே வி.வி.எஸ். லக்‌ஷ்மண். இந்தியாவின் துருப்புச் சீட்டு. நான்காவது இன்னிங்க்ஸ் நாயகன். முதுகு வலியின் காரணமாக, பை-ரன்னரோடு (ரெய்னா) களமிறங்கினார். சரி, இரண்டு கிழட்டு சிங்கங்கள் களத்தில் பிரச்னை இல்லை. ஹாரிட்ஸின் அடுத்த ஓவர் செம காட்டு. சச்சின் ஒரு ஃபோர். லக்‌ஷ்மன் 2 ஃபோர். ஆகக்ககா என்று புலிகேசி பாணியில், மெச்சிக்கொண்டபோதுதான் அந்த முட்டாள்தனம் நடந்தது.

பொலிங்கரின் போன ஓவரிலேயே ஒரு மோசமான பவுன்சர் சச்சின் உள்கிளவுஸில் பட்டு ஆளில்லாத இடத்தில் போனதால் பிழைத்தார். அடுத்த ஓவர். உள்நோக்கி இடுப்புயரம் வந்த பந்தை சச்சின் முட்டாள்தனமாக ஒதுங்கி, கவர் திசையில் ஸ்கூப் செய்ய முற்பட, எமகாதகன் ஹஸ்ஸி கேட்ச் பிடிக்க, ஸ்டேடியமே ஸ்தம்பித்தது. சச்சின் அவுட். 119/6. அடுத்த ஐந்து நிமிடத்துக்கு சச்சினை ஊரில் இருக்கிற எல்லாக் கெட்ட வார்த்தைகளிலும் திட்டித் தீர்த்தாகிவிட்டது. தோனி உள்ளே. இந்தியாவின் கடைசி பேட்டிங் நம்பிக்கை நட்சத்திரம்.

லக்‌ஷ்மண் பந்தை நேர் திசையில் விளையாட, முட்டாள்தனமாக ரெய்னா கொடுத்த அழைப்பில், தோனி விக்கெட் கீப்பரை நோக்கி ஒட, ஹில்பென்ஹாஸின் மாங்காய் த்ரோவில் ஸ்டம்ப் எகிறியது. தோனி 2. இந்தியா 112/7.

போச்சுடா மேட்ச் என்று நினைத்து நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. டிவிட்டரில் எல்லாம், கிரிக்கெட் மறந்து, காமன்வெல்த் பேச ஆரம்பித்தார்கள். ஆஸ்திரேலியா ஆதரவாளர்களின் Go Aussy Go என்று விர்ச்சுவல் யுத்த பேரிக்கைகள் முழங்க ஆரம்பித்தன. ஹர்பஜன் சிங் உள்ளே. வந்தவுடனே, பொலிங்கர் போட்ட ஷார்ட் பாலில் தன்னுயரத்தை தாண்டி, முகத்தை பாதுகாக்க பேட்டை நீட்ட, மூன்றாம் ஸ்லிப்பில் பாண்டிங் தன் இரு கரம் நீட்டிப் பந்தை வரவேற்றார். 124/8.

இந்தியாவுக்கு 92 ரன்கள் தேவை, இருப்பதோ 2 விக்கெட்கள். முடிந்தது கதை. ஆஸ்திரேலியா வெற்றி என்று ஸ்டாம்ப் பத்திரத்தில் நீட்டாத குறையாக உறுதியளித்தபோதுதான் இஷாந்த் உள்ளே வந்தார்.

இஷாந்த் சர்மா, இதற்கு முன் டெஸ்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 27-ஓ, 28-ஓ. நாட்வெஸ்ட் சீரிஸில் 6 விக்கெட் போனதும், எப்படி முகமது கயிப்பும் யுவராஜ் சிங்கும் மேட்சைத் திசை திருப்பினார்களோ, அந்த மாதிரி ஒரு அதிசயம் நிகழ ஆரம்பித்தது. முப்பத்து முக்கோடி தேவர்கள் தங்களது அன்றைய அதிர்ஷ்ட நேரத்தினை இஷாந்துக்குக் கொடுத்தார்கள் போலும். பொறுமையாக, மெதுவாக, ஆனால் உறுதியாக, இஷாந்தும் லக்‌ஷ்மணும் ரன்கள் தேற்ற ஆரம்பித்தார்கள்.

பாண்டிங்குக்குத் தேவை 2 விக்கெட் எடுக்கும் பந்துகள். நேரம் ஓடியது. 41.4 ஓவர். ரெய்னா இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடி, விழுந்து புரண்டு ஒரு ரன் அவுட்டைத் தவிர்த்தார். உணவு இடைவேளைக்கு இன்னும் இரண்டே பந்துகள், அதில் இந்த டென்ஷன் வேறு. உணவு இடைவேளை. இந்தியா 162/8. இன்னமும் 54 ரன்கள். 2 விக்கெட்கள். லக்‌ஷ்மன் 48*, இஷாந்த் சர்மா 14*

இடைவேளை முடிந்த இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்து. ஹில்பென்ஹாஸ். அருமையான புல் ஷாட். ஃபோர். லக்‌ஷ்மண் 52*. கமெண்ட்டர்கள் போற்றி பரணி பாடாத குறை. இன்னமும் 48 ரன்கள். அதன்பிறகு, நிதானமான ஆட்டம். மிஷல் ஜான்சனின் 47வது ஒவர். இரண்டாவது பந்து. இஷாந்த். ஃபோர். முனையில் பட்டு மூன்றாவது ஸ்லிப் இல்லாமல், அதன் வழியே பவுண்டரியை நோக்கி. நான்காவது பந்து. உள்நோக்கி வந்த பந்தை இரண்டுங்கெட்டான்தனமாக பேட்டைத் திருப்ப, ஃபோர்.

இந்தியா 184/8. 53வது ஒவரின் கடைசிப் பந்து. மிஷல் ஜான்சனின் ஷார்ட் பால். இஷாந்த் அது பவுன்சராகும் என்கிற எண்ணத்தில் பேட்டைத் தூக்க, ஒரு அரைகுறை நிலையில், பந்து பேட்டில் பட்டு லாலி பாப் கேட்ச். ஷார்ட் லெக்கில் இருக்கும் கேட்டிச்சுக்குக் கொஞ்சம் முன்னால் விழுந்தது. அவுட்டாகவில்லை. இதயம் ஒரு முறை ஜெர்க்கடித்தது. இந்தியா 200/8. வெற்றிக்கு இன்னும் 16 ரன்கள்.

56வது ஒவரின் இரண்டாவது பந்து. ஹில்பென்ஹாஸ், இஷாந்துக்கு. சரியான அவுட் ப்ரேக். இஷாந்த் முன்னேறி தடுத்தாட, பந்து பேடில் பட, ஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் குரலெழுப்ப அம்பயரின் விரல் உயரும்போதே, இந்தியாவின் வெற்றி நம்பிக்கை கீழே போனது. இந்தியா 205/9. 11 ரன்கள். ரீப்ளேயில், அது down the leg side என்று தெரிந்தாலும், விதி வலியது. ஒரே விக்கெட். சீட்டின் நுனியில் எல்லாரும். இந்தியாவில் மேட்ச் பார்த்த எல்லோர் மனத்திலும் இஷ்ட தெய்வங்களுக்குப் பிரார்த்தனைகள்.

57வது ஒவர். லக்‌ஷ்மன் இரண்டு ரன்கள். வெற்றி இலக்கு 9 ரன்கள். 58வது ஒவர். ஓஜாவின் பேட்டில் பட்டு எட்ஜ் எடுத்து ஒரு ரன். அப்பாடா, லக்‌ஷ்மண் திரும்பவும் கிரிஸில். வெற்றிக்கு 8 ரன்கள். அடுத்த பந்து 2 ரன்கள். வெற்றி 6 ரன்களில். ஐந்தாவது பந்து, நேராக அடிக்க, அவசர குடுக்கை ஒஜா, ரன்னர் முனையிலிருந்து ஓட முயற்சிக்க, ரெய்னா பின் திரும்ப, லக்‌ஷ்மண் கோவப்பட… என்ன ட்ராமா இது. லக்‌ஷ்மண் இந்த இன்னிங்க்ஸ்லிலேயே கோவப்பட்டு அப்போதுதான் பார்க்கிறேன். வெற்றிக்கு 6 ரன்கள். 59வது ஓவர்.

இரண்டாவது பந்துதான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதியது. மிஷல் ஜான்சனின் சரியான உள்நோக்கி வந்த பந்து. அம்பயரின் கை உயராமல் போனது தோனியின் முன்னோர்கள் செய்த அதிர்ஷ்டம். அந்தப் பந்தில் ஓவர் த்ரோவில் 4 ரன்கள். அடுத்து லெக்-பையில் 2 ரன்கள்.

இந்தியா வெற்றி. அபார வெற்றி. டென்ஷனான வெற்றி. சீரிஸில் 1-0 என்கிற முதன்மை.

முதுகு வலி, பை-ரன்னர் மற்றும் ஒன்பதாவது விக்கெட்டிற்கு ஒப்புக்குச் சப்பாணியான இஷாந்தோடு நடந்த 81 ரன்கள் பங்காளி ஆட்டம், மீண்டும் ஒரு முறை நான்காவது இன்னிங்க்ஸின் நாயகன் தானே என்று நிரூபித்தார் வி.வி.எஸ் லக்‌ஷ்மண். இந்தியாவைப் பொருத்தவரை அயோத்திக்கு ராமர் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு லக்‌ஷ்மண்.