காஷ்மிர் டைரி – 3

நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்தபிறகு ஹோட்டலைக் காலி செய்துவிட்டு சிகாகோ என்னும் பெயர் கொண்ட ஷிகாராவுக்குக் குடிபுகுந்தோம். அடுத்த மூன்று மூன்று நாள்களுக்குப் படகுதான் வீடு.  முதல் நாள், டால் ஏரியை ஒட்டிய குடியிருப்பு மற்றும் கடைப் பகுதிகளைச் சுற்றினோம்.  பஞ்சாபி தாபாக்கள், மீன், இறைச்சிக் கடைகள், துணிக்கடைகள், காஷ்மிர் ஷால், போர்வைகள் விற்கும் கடைகள், கைவினை அங்காடிகள், சிறு உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றைக் கடந்து சென்றோம். காய்கறிகளை கை வண்டிகளில் கொண்டு சென்றார்கள் வியாபாரிகள். இந்துக்களைக் கவர சிவபெருமான் படமும், இஸ்லாமியர்களைக் கவர உருது வாசகங்களும் கடைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

தகரக் கூரையுடன் கூடிய வீடுகளின் தொகுப்புகள் இடையிடையே தென்பட்டன. இருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறு படகுகளைப் பலர் வைத்திருக்கிறார்கள். கடைகளுக்குச் சென்று வர, சாமான்கள் வாங்கி வர, சிறு பயணங்கள் மேற்கொள்ள இவை பயன்படுத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களும் பெண்களும் தன்னந்தனியே படகைச் செலுத்துகின்றனர்.  கடந்து செல்லும்போது குழந்தைகள் கையசைக்கிறார்கள். ஷிகாராவில் அமர்ந்திருக்கும்போது கடக்க நேரிட்டால், மலர் ஒன்றை எடுத்து புன்சிரிப்புடன் அளிக்கிறார்கள்.

செங்கல் வீடுகளின் கூரைகளும்கூட பிரமிட் போன்ற அமைப்புடன்தான் இருக்கின்றன. பனி மழை பொழியும்போது சிதறல்கள் எதுவும் வீட்டின் மேல் தங்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு. நாங்கள் சென்ற பொழுது, மரங்கள் இலைகளின்றி குச்சிக்குச்சியாக நின்றுகொண்டிருந்தன. காய்த்து தொங்கும் ஆப்பிள்களைப் பார்க்கமுடியவில்லை. ‘அது பரவாயில்லை, ஆப்பிள் மரங்களைக் கண்ட பலரால் பனிப்பொழிவைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அது பெரிய துயரமல்லவா?’ என்றார் நண்பர் ஒருவர்.

உள்ளூர் மக்கள் தங்களுக்கான ஆடைகளையும் உடைகளையும் இதுபோன்ற தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இருந்தே வாங்கிக்கொள்கிறார்கள். கம்பளி, கையுறை, காலுறை, அங்கிகள், தொப்பிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என்று பலவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இரு சக்கர வாகனங்களில், சட்டைகளையும் சுடிதார் துணிகளையும் கட்டி எடுத்து வந்து விற்கிறார்கள்.

தகரத் துணிக்கடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் ஒரு வியாபாரி. டால் ஏரியில் வசிக்கும் நடுத்தர வர்க்க ஷிகாரா பணியாளர்கள் சிலரை இவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்களும் படகு வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். ஒய்யாரமாக அல்ல ஒதுக்குப்புறமாக.  முழுக்க முழுக்க தகரத்தால் உருவாக்கப்பட்ட ஷெட்டுகள். வெடவெடக்கும் குளிரில் பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள் ஒடுங்கியிருக்கிறார்கள். ஆண்களில் சிலர் வியாபாரிகளாகவும் சிலர் துப்புறவுத் தொழிலாளர்களாகவும் சிலர் ஷிகாராவில் பணிபுரிபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கான அரசுத் தகரப் பள்ளிகள் அருகிலேயே இருக்கின்றன. ஒருவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்தோம். எலுமிச்சை தேநீர் கொடுத்து உபசரித்தார்கள்.  சுற்றுலாப் பயணிகளைச் சுற்றிச்சுற்றித்தான் இவர்கள் வாழ்க்கை இயங்கிக்கொண்டிருக்கிறது.

மீன் வற்றல் போன்ற ஒன்றை இவர் தன் வீட்டுக்கு வெளியில் காயவைத்துக்கொண்டிருந்தார். தயக்கத்துடனும் வெட்கத்துடனும் சிறிதே பேசினார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிநீர் தொட்டி இருக்கிறது. இந்தப் பகுதியில் மின்சாரம் கிட்டத்தட்ட தடையின்றி கிடைக்கிறது. ஏரிக்கரையை மாசுபடுத்துவது இவர்களுடைய வாழ்வாதாரத்தையே குலைத்துவிடும் என்பதால் கழவுநீரைத் தனியே இன்னொரு தொட்டியில் சேகரித்து அப்புறப்படுத்துகிறார்கள். டால் ஏரியை அவ்வப்போது துப்புறவுப் படகுகள் உலா வந்து தூர் வாருவதால் சுத்தமாகவே இருக்கின்றன. அடுப்புக்குப் பெரும்பாலும் விறகுகளே பயன்படுத்தப்படுகின்றன.

காஷ்மிரில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, பாதுகாப்பு வசதிகள் போதவில்லை என்றார் இவர். ‘சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சோன்மார்க், குல்மார்க் போன்ற இடங்களில் உள்ள ராணுவத்தினரும் ஸ்ரீ நகர் போன்ற பகுதிகளில் உள்ள ராணுவத்தினரும் வெவ்வெறான முறையில் உங்களை நடத்துவார்கள். உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு நீங்கள் இந்துவா, இஸ்லாமியரா என்பதைப் பொறுத்தும், நீங்கள் காஷ்மிர் வாசியா, சுற்றுலாப் பயணியா என்பதைப் பொறுத்தும் அமையும்.’

டால் ஏரியில் இயங்கும் மிதக்கும் தபால் நிலையம்.  சச்சின் பைலட், உமர் அப்துல்லா இருவராலும் 2011ல் திறந்து வைக்கப்பட்டது. புகைப்பட போஸ்ட்கார்ட், காஷ்மிர் பற்றிய சில புத்தகங்கள் ஆகியவையும் இங்கு கிடைக்கின்றன.

(தொடரும்)

Share/Bookmark

காஷ்மிர் டைரி – 2

ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இளஞ்சூடும் இளங்குளிரும் பரவிக்கொண்டிருந்தது. அங்கேயே வண்டி அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம். உள்நுழையும் வாகனங்களும் வெளியேறும் வாகனங்களும் பல அடுக்கு சோதனைச் சாவடிகளைக் கடக்கவேண்டியிருந்தது. எங்களுடன் வந்திறங்கியவர்களைத் தவிர வேறு ஆள்கள் யாரையும் விமான நிலையத்தில் காணமுடியவில்லை. ஒன்றிரண்டு டாக்ஸிவாலாக்கள் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதால், ஒன்றிரண்டு படங்களை மட்டுமே எடுத்து திருப்திபட்டுக்கொண்டேன்.

 

மக்கள் புழங்கும் இடத்தை அடைவதற்கு சில நிமிடங்கள் பிடிக்கின்றன. ஓரடி கடப்பதற்குள் குறைந்தது நான்கு ஏகே 47 ஜவான்களைச் சாலையின் இரு பக்கங்களிலும் காணமுடிந்தது. உருது மொழிப் பலகைகள் கொண்ட சிறு கடைகள் அடுத்தடுத்து விரிகின்றன. இரானியப் படங்களில் வருவதைப் போன்ற நீண்ட அங்கி அணிந்த ஆண்கள் சைக்கிளில் விரைந்துகொண்டிருந்தனர். மீண்டும் இரானியப் படங்களில் வருவதைப் போல் அழகாக வெள்ளை முக்காடு அணிந்த காஷ்மிர் மாணவிகள் எறும்பு வரிசையாக நடந்து சென்றனர். அவர்கள் கடந்து செல்லும்வரை எங்கள் வண்டி நிறுத்திவைக்கப்பட்டது.

நகருக்குள் நுழைய நுழைய, ஜவான்களின் அடர்த்தி சற்றே குறையத் தொடங்கியது என்றாலும், திரும்பும் பக்கமெல்லாம் ஏகே 47 முன்வந்து நின்று பயமுறுத்தியது. இவர்களைக் கடந்துசென்றே காஷ்மிரிகள் காலை தேநீர் அருந்தவேண்டும். பள்ளிக்கும் பள்ளிவாசலுக்கும் செல்லவேண்டும். காய்கறிகள் வாங்கவேண்டும். வேலைக்குப் போகவேண்டும்.

Waugh in Abyssinia என்னும் புத்தகத்தில் Evelyn Waugh, இப்படிப்பட்ட ஒரு காட்சியை வருணித்திருப்பார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் முசோலினியின் இத்தாலியப் படைகள் அபிசீனியாவை ஆக்கிரமித்திருக்கும். ஆனால், அதை ஆக்கிரமிப்பு என்று நேரடியாகப் பளிச்சென்று சொல்ல எவிலின் வாஹ் தயங்குவார். ராணுவ வீரர்கள் அபிசீனியர்களைப் பாதுகாப்பதற்காகப் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள் என்பார். அவர்கள் அபிசீனியர்களுடன் ஒன்றுகலந்து கொஞ்சிக் குலாவி பழகுவார்கள் என்றும், அபிசீனியக் குழந்தைகள் இத்தாலிய வீரர்களுக்கு பூக்கள் பரிசளிப்பார்கள் என்றும் பதிலுக்கு வீரர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய்கள் வழங்குவார்கள் என்றும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருப்பார். நமக்கே சந்தேகம் வந்துவிடும், இத்தாலியர்கள் அபிசீனியர்களை ஒழிக்கவந்தவர்களா அல்லது உய்விக்க அனுப்பப்பட்டவர்களா என்று.

சுமார் இருபது நிமிட பயணத்துக்குப் பிறகு, ஹோட்டலை அடைந்தோம். முன்னரே இணையம் வாயிலாக தங்குமிடம் (Srinagar Embassy Hotel) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சென்னையில் இருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சாவி வாங்கி அறைக்குள் நுழைந்தபோது, திருவல்லிக்கேணி பேச்சிலர் ரூமுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. போதாக்குறைக்கு, நாற்காலி, கட்டில், பூட்டு, டவல் என்று எதை தொட்டாலும் ஐஸ் குளிர். பாத்ரூமில் ஹாட் வாட்டர் ஹாத்தா நஹி என்று நியூஸ் வாசித்துவிட்டுப் போனார் ஹோட்டல் பணியாளர் ஒருவர். மற்ற நண்பர்கள் மதியத்துக்கு மேல் வரவிருந்தார்கள். பைகளை அங்கேயே போட்டுவிட்டு, இரண்டடுக்கு ஸ்வெட்டர், ஜெர்கின் அணிந்துகொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டோம்.

புவிப்பரப்பு, குளிர், மக்கள், கட்டடங்கள், உணவு, சாலைகள், கடைகள் என்று காஷ்மிரின் எந்தவொரு அம்சமும் இந்தியாவை நினைவுபடுத்தவில்லை. ஒரு புதிய நாட்டில் நடைபோடும் உணர்வே ஏற்பட்டது.

காஷ்மிர் மிகத் தாமதமாகவே உறக்கம் கலைந்து விழித்துக்கொள்கிறது. ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்தோம். மேகி, சப்பாத்தி, உப்புமா மூன்றும் கிடைப்பதாகச் சொன்னார் பணியாளர். உப்புமா ஆர்டர் செய்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த உணவகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். மிக மிக சாவகாசமாக அவர் நடந்து வந்து, தண்ணீர் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அடுப்பு மூட்டி, பிறகு வெளியில் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு, ஏதோ ஒரு வகை பாக்கை வாயில் கொட்டி, அசைபோட்டு, இடுக்கில் மாட்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் குத்தி எடுத்து, பிறகு உள்ளே சென்று உப்புமாவை ஒரு கிண்ணத்தில் கவிழ்த்து கொண்டு வந்து கொடுத்தார். அவரே பில் எழுதிக்கொடுத்தார். அவரே பணம் வாங்கிக்கொண்டார். வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

டால் ஏரியின் கரையில் வரிசையாக ஷிகாரா எனப்படும் படகு வீடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு படகு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தோம். நடுத்தர வயது கொண்ட ஒருவர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் படகு வீட்டைப் பராமரித்து, விருந்தினர்களை ஈர்த்து, வரவேற்று தங்கவைப்பது அவர் பணி. பெயர், உமர். ‘சென்னைக்கு ஒரு முறை வந்திருக்கிறேன். கடும் சூடு!’ என்றார். ஒரு பிளாஸ்க் நிறைய தேநீரும் (‘காஷ்மிர் சிறப்பு தேநீர், இடைவெளியின்றி அருந்திகொண்டே இருக்கலாம்’) இரு கோப்பைகளும் கொண்டு வந்து வைத்தார். வீட்டின் முகப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

‘சமீபமாக இங்கே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றாலும், எப்போதும் எதுவும் நடக்கலாம் என்னும் நிலையே நீடிக்கிறது. நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். அமைதியான இடத்தில்தான் வியாபாரம் செய்யமுடியும். குழந்தைகளைப் படிக்கவைக்கமுடியும். திருமணம் செய்துவைத்து வாழவைக்கமுடியும்.’

உமரின் ஷிகாரா ஒப்பீட்டளவில் சிறியது. இரு படுக்கையறைகளும் ஒரு வரவேற்பறையும் ஒரு சமையலறையும் கொண்ட நடுத்தர வர்க்கத்துப் பயணிகளுக்கான இருப்பிடம். ஒரு நாளுக்கு ஒருவருக்கு 500 ரூபாய். உயர்ரக வசதிகள் கொண்ட சொகுசு ஷிகாரா என்றால் சில ஆயிரங்கள் வரை பிடிக்கும்.  ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர், மின்சார இணைப்பு உள்ளது. கேரளாவில் உள்ள படகு வீடுகளைப் போல் காஷ்மிர் ஷிகாராக்கள் பயணம் செய்வதில்லை. ஏரியின் கரைகளில் நடப்பட்டுள்ள ஆடாத, அசையாத வீடுகள் இவை.

நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே சிறு படகுகள் அசைந்து அசைந்து எங்களிடம் வந்து சேர்ந்தன. ஓரிரு வியாபாரிகளைக் கொண்ட சிறிய அசையும் கடைகள் அவை. ஷிகாராவில் தங்கியிருப்பவர்களிடம் வியாபாரம் செய்வதே இவர்கள் நோக்கம். எங்களை நெருங்கியவர்கள் சல்வார், கம்பளி ஆடைகளை விற்பனை செய்பவர்கள். டால் ஏரி முழுக்க இப்படிப்பட்ட பல வியாபாரிகளைக் காணமுடியும். கைவினைப் பொருள்கள், குங்குமப்பூ, பெப்சி, ஸ்வெட்டர் என்று பலவற்றை இவர்கள் படகுகளில் கொண்டுவருகிறார்கள். நீங்கள் கடைகளைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. கடைகள் தாமாகவே உங்களைத் தேடிவரும்.

உமரின் குடும்பத்தினர் படகு வீட்டுக்குப் பின்புறத்தில் குடியிருந்தனர். வீட்டுக்கு அழைத்துச்சென்று காட்டினார். தகர மேற்கூரையுடன்கூடிய சிறிய கூடாரம் அது. சமைக்க, உறங்க என்று இரண்டு சிறு அறைகள் இருந்தன. கரைக்கு அருகில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துகொண்டிருந்தார் உமரின் மனைவி. படகு வீட்டில் தங்கும் விருந்தினர்களுக்குச் சமையல் செய்யும் பொறுப்பு இவருடையது. பிற பணியாளர்களைத் தேவைக்கு ஏற்ப அமர்த்திக்கொள்கிறார்கள். படகு வீட்டின் உரிமையாளர் காஷ்மிரில் வேறொரு பகுதியில் தங்கியிருந்தார்.

‘சுற்றுலாவை நம்பித்தான் காஷ்மிர் இயங்குகிறது. கைவினைப் பொருள்கள், துணி, மணிகள், மரவேலைப்பாடுகள் என்று இங்கு நாங்கள் மேற்கொள்ளும் தொழில்கள் அனைத்தும் காஷ்மிரிகள் அல்லாதவர்களுக்காகத்தான்.’

‘ஜவான்கள்மீது எனக்கு அதிக மரியாதை இருந்ததில்லை. இவர்கள் நடத்தும் ஆபரேஷன்கள் அச்சமூட்டக்கூடியவை. விசாரணை எதுவுமின்றி தண்டனை கொடுத்துவிடுவார்கள். இவர்கள் சுட்டுக்கொல்பவர்களில் எத்தனைப் பேர் உண்மையில் தீவிரவாதிகள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.’

(தொடரும்)

காஷ்மிர் டைரி – 1 

காஷ்மிர் டைரி – 1

 

 

‘உலகத்திலுள்ள தலைசிறந்த விஷயம் ஊர்சுற்றுவதுதான்’ என்கிறார் ராகுல் சாங்கிருத்யான். இரண்டு சேர் நெய்யை கீழே கொட்டிவிட்டதால் பயந்துகொண்டு, 22 ரூபாயை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறிய ராகுல்ஜி, தன் வாழ்நாளின் பெரும்பாலான பகுதியை ஊர்சுற்றுவதில்தான் செலவிட்டார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் அவருடைய சுயசரிதையை இப்போது படித்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. பிரயாணச் செலவுகளை விட்டுவிடுங்கள், அடுத்த வேளை உணவுக்குக்கூட கையில் காசிருக்காது. இருந்தும் துணிச்சலாக கிளம்பிவிடுவார்.

காசியில் தொடங்கிய அவர் பயணம், இலங்கை, ஐரோப்பா, அமெரிக்கா என்று படர்ந்து சோவியத் யூனியனில் முடிவடைந்தது. ரகுவம்சமும் லகுகௌமுதியும் அஷ்டவக்ர கீதாவும் பகவத் கீதையும் வாசித்துக்கொண்டிருந்த ராகுல்ஜி, மார்க்ஸையும் லெனினையும் கண்டுகொண்டது பயணங்கள் வாயிலாகத்தான். தன் வாழ்வை மட்டுமல்ல ஒவ்வொருவரின் வாழ்வையும் மாற்றியமைக்கக்கூடிய சக்தி பயணங்களுக்கு உண்டு என்பது ராகுல்ஜியின் நம்பிக்கை.

ராகுல்ஜியைப் போல் பயணம் செய்வது இன்றைய தேதியில் சாத்தியப்படாது. முகம் தெரியாத பலரும் வாருங்கள் என்று வரவேற்று குதிரையிலும் பேருந்திலும் ரயில் வண்டியிலும் அவரை அழைத்துச் செல்வார்கள். வரவேற்பு கிடைக்காவிட்டால் மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்துவிடுவார். மாநில எல்லைகளை மட்டுமல்ல, நாட்டு எல்லைகளையும்கூட நடந்தே கடந்திருக்கிறார். என் வீட்டில் தங்கிக்கொள்ளலாமே என்று அந்நியர்கள் வரவேற்பார்கள். சத்திரங்களும் பௌத்த மடங்களும் இருந்தன. எதுவும் சிக்காவிட்டால் கண்ணில் படும் இடம் படுக்கையறையாக மாறும். உணவு ஒரு பிரச்னையே இல்லை.

விசா வாங்கி செல்லும் காலம் வருவதற்குள் காஷ்மிர் செல்வதற்கான வாய்ப்பு சென்ற மாதம் கிடைத்தது. ஸ்ரீ நகரில் தங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இணையம் வாயிலாக சகாய விலையில் ஓட்டல் அறைகளை புக் செய்துவிட்டோம் (அந்த அறையை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது தனிகதை). மார்ச் 13 மாலை கிளம்பி, அன்றைய இரவை டெல்லியில் ஓர் உறவினர் வீட்டில் கழித்துவிட்டு, மறுநாள் டெல்லியைக் கொஞ்சம் சுற்றிவிட்டு, 15 தொடங்கி 18 வரை காஷ்மிரில் ஊர்சுற்றுவது திட்டம். (கோகுலம்) சுஜாதா, (குங்குமம்) வள்ளிதாசன், தோழர்கள் சுத்தானந்தம், மோகனா என்று 12 பேர் கொண்ட ஒரு குழுவில் நானும் என் மனைவியும் இணைந்துகொண்டோம்.

நாங்கள் தங்கியிருந்தது தெற்கு தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் டெவலப்மெண்ட் ஏரியாவில் (எஸ்டிஏ). சென்று சேர்வதற்குள் நள்ளிரவு ஆகிவிட்டதால், மறுநாள் காலை ஆறு மணிக்கு (இதமான குளிர்) கண்விழித்து, அருகிலுள்ள தெருக்களைச் சுற்ற ஆரம்பித்தோம்.

இந்தியாவைப் புரிந்துகொள்ள டெல்லியை ஒருமுறை வலம் வந்தால் போதும். ஒரு பக்கம் அகலமான, சுத்தமான சாலைகள், பளபளக்கும் ஷாப்பிங் மால்கள். பிரதான சாலையைக் கடந்து ஒரு கிளைப் பாதையைப் பிடித்து, ஒரு சந்துக்குள் நகர்ந்தால் சாக்கடைகள், குப்பைக்கூளங்கள், பாலிதின் விரித்து படுத்துறங்கும் மக்கள்.

சில வாரங்களுக்கு முன்பு, உலகப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக பிரகதி மைதானில் இருந்து சாணக்கியபுரா வழியாக விமான நிலையம் சென்றபோது இந்த வேறுபாடு முகத்தில் அறைந்தது. வழுக்கிக்கொண்டு ஓடும் கப்பல் சைஸ் கார்கள், நெரிசலில் சிக்கி நிற்கும்போது, கண்ணாடி கதவைத் தட்டி, அலுமினியத் தட்டை நீட்டுகிறார்கள். கந்தல் ஆடை பெண்களும் பரட்டைத் தலை குழந்தைகளும் சேதன் பகத், சிட்னி ஷெல்டன் புத்தகங்களை பிளாஸ்டிக் கவருக்குள் போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். கண்ணாடி கதவை கீழிறக்கி, பைசாக்களை உதிர்த்துவிட்டு சிறிது நகர்ந்தால், நந்தவனமாக சாலை விரிகிறது. பிரத்தியேகப் பூங்காக்களுடன் சீனத் தூதரகமும் பிரெஞ்சு தூதரகமும் ஹங்கேரிய தூதரகமும் கடந்து செல்கின்றன. அடுத்த சிக்னலில் மீண்டும், அம்மா தாயே!

இதமான குளிர். ஐ.ஐ.டி வளாகத்தில் ஸ்வெட்டர், கேன்வாஸ் ஷூக்களுடன் குதித்துக்கொண்டும் ஓடிக்கொண்டும் பாட்டு கேட்டுக்கொண்டும் டெல்லிவாசிகள் விரைந்துகொண்டிருந்தனர். ஆட்டோக்களைவிட ரிக்ஷாக்கள் அதிகம். நடைபாதை தேநீர் கடைகள் கேக், பன் தேநீருடன் சேர்த்து சுவையான குக்கீஸ் வகைகளையும் விற்றுக்கொண்டிருந்தன.

ஏசியாட் கிராமம், சஃப்தர்ஜங் செல்லும் பரபரப்பான நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள நடைபாதையில் மரத்தடியில் ஒரு நாற்காலி போட்டு, முடி திருத்திக்கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர். அதே மரத்தில் ஆணியடித்து கண்ணாடி மாட்டியாகிவிட்டது. உபகரங்களுக்கு ஒரு கையடக்கப் பெட்டி.

ஏழு மணிக்கு எழுந்து சாக்ஸ் மாட்டி, செருப்பு போட்டு பட்டன் பால் வாங்கிவந்து, குக்கர் வைத்து டெல்லி மக்கள் பொழுதை ஆரம்பிக்கிறார்கள். எஸ்டிஏ என்பது இங்குள்ள வீட்டு வசதி வாரியம் போன்றதுதான். ஆனால், ஒவ்வொரு அடுக்குமாடி கட்டடத்துக்கு அருகிலும் ஒரு பூங்கா இருக்கிறது. மரங்களும் பூச்செடிகளும் சாலையின் இரு பக்கங்களிலும் அணிவகுக்கின்றன. இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீடு, ஒரு கோடி ஆகும் என்றார்கள்.

அருகிலுள்ள சரோஜினி மார்க்கெட்டில் ஜீன்ஸ்களையும் (டெல்லியின் தேசிய ஆடை) டி ஷர்டுகளையும் குவித்துவைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கொட்டை எழுத்தில் 300 என்று எழுதியிருந்தால், இருபத்தைந்துக்குத் தருகிறாயா என்று ஆரம்பிக்கிறார்கள். பல்வேறு கிளை சந்துகளையும் குறுகலான வழித்தடங்களையும் கொண்ட இந்தச் சந்தையில் மிகச் சரியாக ஒரு வழியில் நுழைந்து, அதே வழியில் வெளியேறுவது சவாலான செயல்.

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்தோம். காஷ்மிரில் எதுவும் கிடைக்காது, இது இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்று சொல்லி ஒரு புட்டியில் வத்தக்குழம்பு ஊற்றி, நான்கு பிளாஸ்டிக் கவர் சுத்தி, ரப்பர் பேண்ட் போட்டு பெட்டியில் வைத்துவிட்டார்கள்.  இரண்டு கட்ட எக்ஸ்ரே பரிசோதனையைக் கடந்து வத்தக்குழம்புடன் காஷ்மிர் சென்றடைவது சாத்தியமா? கையெறிகுண்டு கொண்டு செல்லும் உணர்வுடன் விமான நிலையம் சென்றடைந்தோம். ராகுல்ஜி வீட்டை விட்டு ஓடிச் சென்றதன் காரணம் புரிந்தது.

(தொடரும்)