காலனியமும் கல்வியும்

அத்தியாயம் 5

schoolingtheworld4

கரீபிய நாவலாசிரியரான ஜார்ஜ் லாமிங் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘காலனியம் என்பது வரலாற்றில் ஒரு கட்டத்தில் வந்து இன்னொரு சமயம் மறைந்து ஓடிவிடுகிற ஒரு விஷயமல்ல. அது தொடர்ச்சியானது; வாழ்ந்துகொண்டிருப்பது. காலனிய சூழல் முடிவுக்கு வந்தபிறகும்கூட நினைவுகளில் அது தொடர்ந்து வாழ்கிறது.’

2012ம் ஆண்டு பிரிட்டன் ஹை கமிஷனர் சர் ஜேம்ஸ் பெவன் உறையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சீக்கியர் எழுந்து நின்று இடைமறித்தார். ‘நான் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர். ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டுப் போராடியதற்காக நீங்கள் என்னைச் சிறையில் அடைத்தீர்கள். அதற்காக ஏன் பிரிட்டன் இப்போது மன்னிப்பு கேட்கக்கூடாது?’ இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சார்லஸ் ஆலென் தி டெலிகிராஃப் இதழில் எழுதுகிறார். ‘அந்த சீக்கிய அதிகாரியிடம் பிரிட்டிஷ் அதிகாரி திருப்பிக்கேட்டிருக்கவேண்டும். ஜனநாயகம் குறித்தும் தேசியம் குறித்தும் யோசிக்கவேண்டும் என்று முதலில் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் யார்? தவிரவும் காலனியாதிக்கத்துக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்பது என்பது ஜோன் ஆஃப் ஆர்க் கொல்லப்பட்டதற்காக இப்போது மன்னிப்பு கேட்கச் சொல்வதற்கு ஒப்பானது.’

சார்லஸ் ஆலெனைப் பொருத்தவரை காலனியம் என்பது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர்மீது தங்கள் கருத்துகளைப் பலவந்தமாகத் திணிப்பது. இந்திய வரலாற்றை ஆராயும்போது இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்துள்ளதைப் பார்க்கலாம் என்கிறார் ஆலென். உள்ளூர் ஆதிவாசிகள்மீதான ஆரியர்களின் ஆக்கிரமிப்பை மகாபாரதம் புகழ்ந்து போற்றுகிறது. வேத காலத்தில் ஆக்கிரமிப்பாளரே ஆட்சியாளராக இருந்துள்ளார். அவருடைய கடமை தனது ஜனபதாவை (ராஜ்ஜியம்) மகாஜனபதாவாக (சாம்ராஜ்ஜியம்) மாற்றுவதுதான். ஆக்கிரமிப்புகள்மூலமே இது சாத்தியம். என்னைப் பொருத்தவரை இவையனைத்துமே ஏகாதிபத்தியம்தான் என்கிறார் சார்லஸ் ஆலென். பௌத்தத்துக்கு மாறிய பிறகு அசோகர் இத்தகைய ஆக்கிரமிப்புகளை எதிர்த்தார் ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்கிறார் ஆலென்.

மைசூரைக் கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல ஹைதர் அலியும்கூடத்தான் ஆக்கிரமித்தார். ராஜபுத்திர ராஜ்ஜியங்களை மராத்தியர்கள் ஆக்கிரமித்தனர். பஞ்சாபை சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். இதில் பிரிட்டனின் காலனியாதிக்கம் பிறவற்றில் இருந்து எப்படி, ஏன் மாறுபடுகிறது? ஏன் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஆலென். அதற்கான பதிலை அவரே அளிக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தை அதிகம் சீரழித்தது பிரிட்டனின் காலனியம்தான். மான்செஸ்டரும் பிர்மிங்ஹாமும் செழித்து வளர்ந்தபோது இந்தியாவின் கிராமப்புறங்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாயின. மற்றவர்களைப் போலன்றி இந்தியக் கலாசாரத்தை பிரிட்டன் தாழ்வாகப் பார்த்தது. ஆங்கிலத்தை இந்தியா முழுமைக்கும் சிபாரிசு செய்த தாமஸ் மெக்காலே ஓர் உதாரணம்.

இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த மற்ற ஆட்சியாளர்களுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வேறுபாட்டை ஈ.எம்.எஸ். நம்பூதரிபாட்  சுட்டிக்காட்டுகிறார். மற்ற ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை ஓர் அந்நியப் பிரதேசமாகவே கருதி ஆட்சி நடத்தினார்கள். இந்தியாவுடன் அவர்கள் ஒன்றவில்லை. தங்கள் கலாசாரத்தை, தங்கள் பண்பாட்டை, வழிபாட்டு முறையை, சமூக மதிப்பீடுகளை அவர்கள் இந்தியாமீது திணிக்க முயன்றனர். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் முகலாயர்கள் பிரிட்டனைப்போலன்றி இந்தியர்களுடன் ஒன்று கலந்தனர்.

பிரிட்டனின் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும்; காலனியம் பற்றிக் குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தானில் பிரிட்டன் இழைத்த கொடுமைகள் பற்றிப் போதிக்கவேண்டும் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். ‘என் குழந்தைகள் ட்யூடர்கள் குறித்தும் நாஜிகள் குறித்தும் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் காலனியத்தால் கொல்லப்பட்டதை அவர்கள் கற்பதேயில்லை. மலையளவு குவிந்துகிடக்கும் மண்டையோடுகளின்மீதுதான் காலனிய ஆட்சி நடைபெற்றது என்பதை மக்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்‘ என்கிறார் டால்ரிம்பிள்.

பிரிட்டிஷ் மாணவர்கள் மட்டுமல்ல காலனியத்தின் தாக்கத்துக்கு உட்பட்டுக்கிடக்கும் இந்தியர்கள் குறிப்பாகக் காலனியம் பற்றி விரிவாகக் கற்கவேண்டியிருக்கிறது. அதற்கு முதல் படியாக தனது கலாசார அடையாளத்தை இந்தியா கண்டெடுக்கவேண்டும் என்கிறார் பவன் கே வர்மா. இந்தியர்களின் உள்ளத்திலும் கலாசார பழக்கவழக்கங்களிலும் பிரிட்டிஷ் ராஜ் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு நம்முடைய கலாசார வேர்களைச் சென்றடைவதுதான் நம்முன் இப்போதுள்ள மிகப் பெரிய சவால் என்கிறார் பவன் கே வர்மா. யூனியன் ஜாக் கொடியைக் கீழிறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருளில்லை. நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டை இன்னொன்று ஆண்டிருக்கிறது என்னும்போது கடந்தகாலம் நிச்சயம் நிகழ்காலத்தோடு கலந்தே இருக்கும் என்கிறார் வர்மா.

சமூகக் கட்டமைப்பில் பிரிட்டன் கொண்டுவந்த முக்கிய மாற்றம் உயர்குடிகளைக் கொண்டிருந்த ராணுவத் தலைமையை மாற்றி நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தையும் கொண்டுவந்ததுதான் என்கிறார் ஆங்கஸ் மாடிசன். மற்றொரு மாற்றம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக  அறிமுகப்படுத்தியது. பிரிட்டனின் வருகைக்கு முன்பு பெருமளவில் மதம் சார்ந்த போதனைகளே உயர் கல்வி என்னும் பெயரில் அரபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்பட்டன. தொடக்கத்தில் பிரிட்டன் இந்தக் கல்விமுறையை ஊக்குவிக்கவே செய்தது. கல்கத்தாவிலுள்ள மதராஸாவுக்கும் பெனாரஸ் சமஸ்கிருத கல்லூரிக்கும் பிரிட்டன் நிதியுதவி அளித்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹாஸ்டிங்ஸ் சஸ்கிருதம், பெர்ஷியன் உள்ளிட்ட மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். சர் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததோடு 1785ம் ஆண்டு ஏஷியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் என்னும் அமைப்பை உருவாக்கவும் செய்தார்.

Thomas Babington Macaulay

Thomas Babington Macaulay

ஆனால் தாமஸ் மெக்காலேவுக்கு ஓரியண்டல் காதல் இல்லை. இந்திய இலக்கியங்களால் பயன் எதுவும் இல்லை, அவற்றை ஆதரிப்பது வீண் வேலை என்பது அவர் கருத்து. ஆய்வுகள் என்னும் பெயரில் பிரிட்டன் பணத்தை இந்தியாவில் வீணடிக்கிறது. இந்திய இலக்கியங்களை மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது ஆகியவற்றால் காகிதங்கள்தான் பாழாகின்றன. இந்திய வரலாறு, தத்துவம், மதம், அறிவியல் அனைத்தும் முட்டாள்தனமாவை என்று மெக்காலே அறிவித்தார். பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப்போல் எனக்கு சமஸ்கிருதம், அரபி இரண்டும் தெரியாது என்றும் பெருமிதப்பட்டுக்கொண்டார். இந்தியா, அரேபியாவில் எழுதப்பட்ட அனைத்து இலக்கியப் பதிவுகளையும்விட ஒரே ஒரு அலமாரி நல்ல ஐரோப்பிய இலக்கியம் மேலானது என்பது மெக்காலே வந்தடைந்த முடிவு.

இந்த மனநிலையோடுதான் ஆங்கிலம் இங்கே நுழைக்கப்பட்டது. இது நல்லதுதானே, ஆங்கிலம் நம் அறிவின் வாசலை அல்லவா திறந்து வைத்தது? வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காக மட்டுமாவது நாம் காலனியத்துக்கு நன்றி செலுத்தவேண்டாமா என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில் மெக்காலேயிடமிருந்தே வருகிறது. ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என்ன என்பதை அவரே சொல்கிறார். ‘இங்குள்ள மக்கள் கூட்டம் அனைவருக்கும் கல்வி போதிப்பது என்பது முடியாத செயல். அப்படியொரு முயற்சி மேற்கொள்வதற்குக்கூட நம்மிடம் வசதியில்லை. நாம் ஆளப்போகும் லட்சக்கணக்கானவர்களுக்கும் நமக்கும் பாலமாகச் செயல்படக்கூடிய ஓர் இடைநிலை வர்க்கத்தை உருவாக்குவதே நம்முடைய இப்போது பணி. இவர்கள் நிறம், உடலில் பாயும் ரத்தம் ஆகியவை இந்தியர்களுடையதாகவே இருக்கும். ஆனால் இவர்களுடைய ரசனை, சிந்தனைகள், அறம், அறிவு அனைத்தும் ஆங்கிலேயர்களுடையதாக இருக்கும். இந்நாட்டின் பல்வேறு வட்டார வழக்குகளை மேம்படுத்தும் பணியை இந்த வர்க்கத்தினரிடம் நாம் விட்டுவிடலாம்.’

இந்தப் பணி என்னவானது? ஆங்கிலக் கல்விமுறையால் விளைந்த பலன் என்ன? 1857ம் ஆண்டு கல்கத்தா, மெட்ராஸ், பாம்பே ஆகிய இடங்களில் மூன்று பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால் இவை மேற்பார்வையிடும் நிறுவனங்கள் மட்டுமே. அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட பிற பல்கலைக்கழகங்களில் இரண்டாண்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மனனம் செய்து எழுதும் பாடமுறையே இங்கு கையாளப்பட்டது. இங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரைகுறை ஆங்கில அறிவு, மேற்கத்திய மோகம் ஆகிய இரண்டையும் மட்டுமே சம்பாதித்துக்கொண்டனர். 19ம் நூற்றாண்டு முழுக்க பெண்களுக்குக் கல்வி சென்று சேரவில்லை. ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கல்வியைக் கொண்டு மூட பழக்கவழக்கங்களை அகற்றியிருக்கமுடியும். மத ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கமுடியும். பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கமுடியும். ஆனால் கல்வியை அப்படியொரு உபகரணமாகப் பயன்படுத்தும் நோக்கம் மெக்காலேவுக்கும் இல்லை, பிரிட்டனுக்கும் இல்லை. அவர்கள் எதிர்பார்த்தபடி படித்த, சிறிய இடைநிலை வர்க்கத்தை மட்டும் இந்தக் கல்விமுறை உருவாக்கியது.

காந்தி 1921ம் ஆண்டு கீழ்வருமாறு எழுதினார்.

‘தற்போது ஆங்கிலம் கற்பிக்கப்படும் வழிமுறை, இந்திய மாணவர்களின்மீது அதிகச் சுமையை ஏற்றி, ஆங்கிலம் பயின்ற இந்தியர்களை வலிமையற்றவர்களாக மாற்றிவிட்டது என்பது என் முடிவான கருத்து. அது நம்மைப் போலிகளாக ஆக்கிவிட்டது. பிராந்திய மொழிகள் ஆங்கிலத்தால் ஒதுக்கப்பட்டது ஆங்கிலேயர்களின் தொடர்பினால் நடந்த மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் எண்ணங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ளவும் வேண்டிய நெருக்கடி இருந்திருக்காவிட்டால், ராம் மோகன் ராய் இன்னும் பெரிய சீர்திருத்தவாதியாகவும், லோகமான்ய திலகர் மேலும் பெரிய அறிவாளியாகவும் இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஆங்கில இலக்கியம் என்னும் புதையலில் இருந்து நல்ல அறிவை அடைந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை அவர்களுடைய தாய்மொழியிலேயே கிடைத்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் எனும் இனத்தை உருவாக்குவதால் என்றுமே எந்த ஒரு நாடும் தேசமாகிவிடாது. பைபிளின் அதிகாரபூர்வமான பிரதி கிடைத்திராவிட்டால், ஆங்கிலம் (ஆங்கிலேயர்கள்) என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். சைதன்யர், கபீர், நானக், குரு கோவிந்த் சிங், சிவாஜி மற்றும் பிரதாப் ஆகியோர் ராம் மோகன் ராய், திலகர் இவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று நம்புகிறேன். ஆங்கில மொழி அறிவு இன்றி ராஜாவும் லோகமான்யரும் இந்தவிதமாகச் சிந்திருக்கமுடியாது என்பதை நம்ப மறுக்கிறேன்.

சுதந்தர உணர்ச்சியை மக்களிடம் விதைப்பதற்கும் சரியான எண்ணங்களை உருவாக்கி வளர்ப்பதற்கும் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளிலும் மிகவும் பெரியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரே மாதிரியான கல்வித் திட்டம்தான் இருந்தது என்பதையும், ஒரே மொழியில்தான் அவை நம்மீது திணிக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். அதனால் இப்போதுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கல்வி இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்போம் என்று தெரிந்துகொள்ள நம்மிடையே எந்தத் தகவல்களும் இல்லை. ஒன்று மட்டும் தெரியும். இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று ஏழ்மையாக இருக்கிறது. கல்விமுறைதான் இதில் மிகவும் பழுதடைந்த பகுதி. சுதேசக் கல்விமுறை பயனில்லாதது மட்டுமல்ல மிகவும் மோசமானது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள உண்மையாகவே நம்பினர். அவர்கள் முன்வைத்த கல்விமுறை தவறிலேயே பிறந்தது. இந்தியர்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றைக் கூனிக் குறுகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அது உருவாக்கப்பட்டது.’

நேருவும் இதையேதான் வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டுகிறார் பவன் கே வர்மா. ஆங்கிலம் கற்ற இந்திர்கள் தனியொரு உலகில் பிற இந்தியர்களிடம் இருந்து விலகி வாழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் வருந்தினார். ‘இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் வரும் என்று சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். சொற்பமான மேல் தட்டு அறிவுஜீவிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய ஒன்றாக அது இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. பெரும்பாலானோருக்கான கல்வி, கலாசாரத்தைப் பற்றி பிரச்னைகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் முதலியவற்றில் அதுவும் உலகளவில், அதிகமாக உபயோகப்படும் மொழியாக ஆங்கிலம் ஆகப்போகிறது என்பது உண்மைதான். ஆனால் உலகைப் பற்றிய சமநோக்கோடு கூடிய சித்திரம் கிடைக்கவேண்டுமென்றால், நாம் ஆங்கிலம் என்னும் மூக்குக் கண்ணாடியின்மூலம் மட்டுமே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.’

1947 வாக்கில் 88 சதவிகித இந்தியர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டி பிரிட்டனின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறார் மாடிசன். பிரிட்டிஷ்  அதிகாரிகள் தங்களை ஆளும் வர்க்கமாகவும் ஆளும் சாதியினராகவும் வலுப்படுத்திக்கொண்டனர். இந்திய உயர் சாதியினரைப் போலவே இவர்கள் தாழ்ந்த சாதியினருடன் நெருங்கி பழகாமலும் அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமலும் தனித்து நின்றனர். அவர்களுடைய குழந்தைகள் பூர்விக இந்தியக் குழந்தைகளுடன் ஒன்று கலக்கவில்லை. (ஆனால் முகலாயர்கள் இப்படி விலகி நிற்காமல் இந்தியாவுடன் ஒன்று கலந்தனர் என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). மொத்தத்தில், பிரிட்டனின் ஆட்சி மேல்மட்ட அளவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன என்றபோதும் பெருமளவிலான மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆங்கஸ் மாடிசன்.

மேற்கொண்டு வாசிக்க :

  1. The history of India is a history of colonialism, Charles Allen, The Telegraph
  2. Class Structure and Economic Growth, Angus Madisson
  3. Becoming Indian, Pavan K Varma, Penugin/Viking
  4. இந்தியன் ஆவது எப்படி? பவன் கே. வர்மா, கிழக்கு பதிப்பகம்

காலனியம் : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 1

india

இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவைக் கட்டுக்கோப்பான பலத்துடன் ஆட்சி செய்துவந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 18ம் நூற்றாண்டின் முதல் பாதியில் சரிந்து படிப்படியாக உடையத் தொடங்கியது. இந்தியப் பிரதேசங்களின் பெரும் பகுதியை ஆண்டுவந்த முகலாயர்களிடம் ஒரு கட்டத்தில் டெல்லியின் ஒரு சில சதுர மைல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதுவும்கூட நாளடைவில் பிரிட்டன் வசம் செல்ல, வரலாற்றுப் புகழ்மிக்க முகலாய சக்கரவர்த்தி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகை பெறும் ஒரு சாமானியராகச் சுருங்கிப்போனார்.  முகலாயர்களின் வீழ்ச்சி மத்தியகால இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கட்டுமானங்களின் குறைபாடுகளையும் போதாமைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

1757 பிளாசி போரின் முடிவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா வந்து சேர்ந்தது. 1857ம் ஆணடு சிப்பாய் புரட்சி வெடித்தபோது அதைக் கட்டுப்படுத்திய பிரிட்டன் இந்தியாவை ஒரு காலனி நாடாகத் தன்னுடைய நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தது. ஆனால் முந்தைய முகலாய சாம்ராஜ்ஜியத்தைப் போலவே பிரிட்டிஷ் பேரரசும் பலமிழக்கத் தொடங்கியபோது இந்தியா உள்ளிட்ட தனது காலனி நாடுகளைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இரண்டையும் மிகவும் விரிவாகப் பல வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பதிவு செய்துள்ளனர். நவீன இந்தியாவைப் பற்றிய நமது இந்தத் தேடல் காலனியத்தையும் அதன் பங்களிப்பையும் ஆராய்வதில் இருந்து தொடங்குகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின்படி Colonialism என்பது காலனியா (வயல், குடியிருப்பு) என்னும் ரோமானிய வார்த்தையில் இருந்து உருவான ஒருசொல்லாகும். பிற இடங்களில் குடியேறிச் சென்ற ஆனால் தொடர்ந்து ரோமானியர்களாக நீடித்த மக்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. முழுமையான அகராதி விளக்கம் இது: ஒரு புதிய நாட்டில் உருவான குடியிருப்பு… தாய்நாட்டின் தொடர்பைத் துண்டித்துக்கொள்ளாமல்  ஒரு புதிய பகுதியில் குழுவாகச் சென்று குடியேறிய மக்கள் கூட்டம்… முதல் முறையாகக் குடியமர்ந்தவர்கள் அல்லது அவர்களுடைய வழித்தோன்றல்கள்.

எல்லா இடங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு முறைகளில் இத்தகைய காலனியாதிக்கக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன  என்றாலும் ஒரு பொதுவான  அடிப்படையை அவற்றில் காணமுடியும் என்கிறார் காலனியம், பின்காலனியம் ஆகிய கோட்பாடுகளை ஆராய்ந்துள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அனியா லூம்பா. ஒரு புதிய பிரதேசத்துக்குள் நுழையும் காலனியக் குழுக்கள் ஏற்கெனவே அங்கு வசித்துவந்தவர்களுடன் இணக்கமான உறவு கொள்வதில்லை. மாறாக, மனித குல வரலாற்றின் மிகவும் குழப்பமான, வலி மிகுந்த உறவுகளில் ஒன்றாக இந்த இருவருக்கும் இடையிலான உறவுமுறை அமைகின்றது என்கிறார் லூம்பா. காலனியம் குறித்த அகராதி விளக்கத்தையும் அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார். ‘ஏற்கெனவே ஒரு சமூகம் குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்துவந்தபோது அங்குச் சிலர் குழுவாக வந்து குடியமர்ந்தனர் என்றால் அது எப்படி ‘புதிய பகுதி’ என்று அழைக்கப்படும்? ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம் ஒரு புதிய பிரதேசத்தில் குடிபுகுந்தபோது அங்கிருந்தவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களைக் குறிப்பதற்கு ஏன் சொற்கள் உருவாக்கப்படவில்லை?’

ஒரு காலனி நாடு தான் கண்டுபிடித்த ஒரு புதிய பகுதியில் தனது சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னால் முந்தைய சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் நொறுக்கித் தகர்க்கிறது. வணிகம், கொள்ளை, பேச்சுவார்த்தை, போர், இனப்படுகொலை, ஒடுக்குமுறை, அடிமைப்படுத்துதல் ஆகியவற்றின்மூலம் ஒரு புதிய சமூக முறையை காலனி நாடு உருவாக்குகிறது. வரலாற்றில் இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் ஆர்மினியா முதல் அட்லாண்டிக் வரை பரந்துவிரிந்திருந்ததற்குக் காரணம் காலனி ஆக்கிரமிப்புகள். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் மத்திய கிழக்கையும் சீனாவையும் ஆக்கிரமித்தனர். 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமஸ்தானங்கள் விஜயநகரப் பேரரசின்கீழ் கொண்டுவரப்பட்டன. தற்போதைய துருக்கியில் ஒரு சிறிய இஸ்லாமியப் பிரதேசமாக இருந்த ஒட்டமான் சாம்ராஜ்ஜியம் பெரும்பாலானா ஆசியா மைனர் மற்றும் பால்கன் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு தன்னைப் பலப்படுத்திக்கொண்டது.  வரலாறு நெடுகிலும் இத்தகைய பல உதாரணங்கள் விரவிக்கிடக்கின்றன.

Bipan Chandraஇந்தியாவில் காலனியம் இயங்கிய விதத்தைப் புரிந்துகொள்ள சரியான தொடக்கப்புள்ளி பிபன் சந்திரா (1928- 2014). இந்திய தேசியவாதிகளும் அறிவுஜீவிகளும் காலனியத்தை எப்படி அணுகினர், எப்படிப் புரிந்துகொண்டனர், எப்படிப் பதிவு செய்தனர் என்பதை பிபன் சந்திரா தனது படைப்புகளில் விரிவாக ஆராய்ந்துள்ளார். அவரைப் பொருத்தவரை தேசியவாதிகள் தொடக்கத்திலேயே காலனியம் குறித்து ஆராயவும் விவாதிக்கவும் தொடங்கிவிட்டனர் என்றபோதும் அவர்களுடைய படைப்புகள் முழுமையான, விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட பார்வையை அளிக்கவில்லை. கே.டி. ஷா, சி.என். வகீல், பால் கிருஷ்ணா, வாடியா, மெர்ச்சண்ட் போன்ற சில பொருளாதார ஆய்வாளர்கள்  ‘ஆரம்பால தேசியவாத அணுகுமுறைக்கு அனுபவ அறிவுரீதியான, தத்துவரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்கிவந்தனர்.’ ஆனால் ‘காலனியம் பற்றிய தீவிர ஆய்வுகள் மட்டுமல்ல அடிப்படையான அலசல்கள்கூட மிகச் சமீபத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டன.’

பிபன் சந்திராவின் கருத்துப்படி ‘ஒரு சமூக ஆதிக்க அமைப்பை முழுமையாக வலியுறுத்தும் ஒரு நவீன வகையாகக் காலனியம் என்கிற சொல் 1920களில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு தீர்மானத்தின் மூலமும், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரசாரம் மற்றும் போராட்டங்களின் மூலமும் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய மார்க்சிஸ்டுகள் மட்டுமே காலனியம் என்கிற கருத்து மற்றும் யதார்த்த நடைமுறை குறித்து மேற்கொண்டு நடந்த ஆய்வுக்குப் பங்களித்துள்ளனர்!’

முதன்மையான ஏகாதிபத்திய நாடுகளாக இருந்த பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகங்கள் காலனியத்தைத் தொடக்கத்தி வெளிப்படையாக ஆதரித்துள்ளன. 1945க்குப் பிறகு உலகம் தழுவிய அளவில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்த காலகட்டத்திலும்கூட காலனியம் குறித்த ஆய்வுகள் தீவிரமடையவில்லை. 1945க்குப் பிறகான இருபதாண்டுகளில் சோஷலிச நாடுகள் நீங்கலாக வேறு எங்கிருந்தும் காலனியம் குறித்த காத்திரமான ஆய்வுகள் வெளிவரவில்லை என்கிறார் பிபன் சந்திரா. காலனியத்தைத் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்து விமரிசனம் செய்துவந்ததால் கம்யூனிஸ்டுகள் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்தும் தேடித்தேடி விரட்டியடிக்கப்பட்டனர்.

1965ம் ஆண்டு வாக்கில் நிலைமை மாறியதற்குக் காரணம் தேசிய அளவில் நடைபெற்ற முக்கியப் போராட்டங்களும் அவற்றுக்குக் கிடைத்த கவனமும்தான். உதாரணத்துக்கு, கியூபப் புரட்சி, அல்ஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேச விடுதலைப் போர்கள் மற்றும் பிரேசில், சிலி, அர்ஜெண்டினா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைத் தொடர்ந்து காலனியம் குறித்து பல அடிப்படைக் கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்பட்டன. காலனியாதிக்கத்துக்கு உட்படும் ஒரு நாடு எத்தகைய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைச் சந்திக்கிறது? இந்த மாற்றங்கள் எல்லாமே தீமையானவை என்று சொல்லமுடியுமா? ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பண்புகள் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் நாட்டிடம் காணப்படுமா? காலனியாதிக்கத்துக்கு உட்படாமல் போயிருந்தால் ஒரு நாடு மேலான வளர்ச்சியை அடைந்திருக்குமா?

எந்தவொரு காலனி நாடும் தன் நோக்கங்களை நியாயப்படுத்தவே செய்யும். பிரிட்டனும் இங்கே அதைத்தான் செய்தது. இந்தியாவை ஒரு முதலாளித்துவ நாடாக மாற்றிக்காட்டுவோம் என்னும் முழக்கத்தை 19ம் நூற்றாண்டில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்துடன் முன்வைத்தனர். இதற்கு இந்தியாவிலேயே பலருடைய ஆதரவும் கிடைத்தது. இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டை பிரிட்டனின் ஆட்சி மேம்படுத்தவே செய்யும் என்று இவர்கள் வாதிட்டனர். விவசாயம், வர்த்தகம், ரயில்வே என்று இந்தியாவில் காலனியம் ஏற்படுத்திய மாற்றங்களைச் சுட்டிக்காட்டி காலனியத்தை இவர்கள் உயர்த்திப்பிடிக்கவும் செய்தனர். முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேச வளர்ச்சிக்கும் இத்தகைய மாற்றங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் மதிப்பிட்டனர்.

அப்படியென்றால் பல சமூகத் தளங்களில் ஏன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை? பிரிட்டனின் வருகைக்கு முன்னால் நிலவிவந்த நிலப்பிரபுத்துவத்தின் கூறுகள்  ஏன் களையப்படவில்லை? இன்னமும்கூட இந்தியா ஏன் வளரும் நாடாகவே உள்ளது? அதற்குக் காரணம் காலனியம் அல்ல, இந்தியச் சூழல்தான் என்று காலனிய ஆதரவாளர்கள் வாதிட்டனர். ‘காலனிகளில் உட்புகுந்து வெல்லமுடியாத அளவு நெருக்கமாக இருந்த சமூக, பொருளாதார, புவியியல், மக்கள்தொகை மற்றும் கலாசார நிலைமைகளே இந்நிலைக்குக் காரணம்’ என்றனர். காலனிய ஆதரவாளர்களைப் பொருத்தவரை முதலாளித்துவ வளர்ச்சியின் குறைபாடுகளுக்குக் காரணம் முதலாளித்துவமோ அதை அறிமுகப்படுத்திய ஆட்சியாளர்களோ அல்ல; மிகவும் தொடக்க நிலையில் இருந்து செயல்படவேண்டியிருந்த இந்திய நிலைமைதான். இன்றும்கூட இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுவதை ஒருவர் காணமுடியும்.

கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் காலனியாதிக்கத்தின் அடிப்படை நோக்கம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இதைத் தெளிவுபடுத்துவதை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். முதலாளித்துவம் ஓர் உலக அமைப்பு என்கிற வகையில் ‘அது அழிவின் விளிம்பில் இருக்கும் உலக நாடுகள் அனைத்தையும் முதலாளித்துவ நாடுகளாக ஆகுமாறு கட்டாயப்படுத்துகிறது. ஒரு வார்த்தையில் கூறினால், அது தன்னுடைய உருவத்தையொத்த ஒரு உலகத்தை உருவாக்குகின்றது’. முதலாளித்துவத்தால் ஒரு ஒற்றை நாட்டுக்குள் அல்லது பகுதிக்குள் முடங்கிக்கிடக்கமுடியாது; அதன் இயல்பு அப்படி என்பதை மார்க்ஸ் முதல்முதலில் உணர்த்தினார். ஒரு காலனியாதிக்க முதலாளித்துவ நாடு காலனி நாட்டிலும் தன்னுடைய முதலாளித்துவப் பண்பையே மறுஉற்பத்தி செய்யும் என்னும் மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்தை ராஜாராம் மோகன் ராய் ஏற்றுக்கொண்டார்.

வளர்ச்சியடைந்த ஒரு முதலாளித்துவ நாட்டால் ஆக்கிரமிக்கப்படும்போது காலனி நாட்டிலும் முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதை திறந்துவிடப்படும் என்று கருதுவது தவறு என்கிறார் பிபன் சந்திரா. காலனியாதிக்கம் ஒரு நாட்டை நிச்சயம் உருமாற்றும் ஆனால் அது ஆராக்கியமான மாற்றமல்ல.  ‘முதலாளித்துவம் ஒரு ஒற்றை உலக அமைப்பாகவும், காலனிகள் அதன் அடிப்படை உறுப்புகளாகவும் இருந்தாலும், அவை காலனியாதிக்க நாடுகளைப்போல அதே வகையில் முதலாளித்துவ நாடுகளாக ஆகிவிடுவதில்லை. முதலாளித்துவம் ஒரு உலக அமைப்பு. ஆனால் அது ஏகாதிபத்திய நாடுகளில் ஒரு முகத்தையும், காலனி நாடுகளில் வேறொரு முகத்தையும் கொண்டுள்ளது… ஏகாதிபத்தியம் காலனிகளை அச்சு அசலாக வளர்ந்த நாடுகளைப் போல் மாற்றவோ அல்லது காலனிகளை வளர்ப்பதில் அது வெற்றிபெறவோ இல்லை. அது அவற்றை வளர்ச்சி குன்றச் செய்கின்றது. அவற்றைக் காலனியச் சமுதாயங்களாக ஆக்குகின்றது. ஏகாதிபத்தியம் காலனி நாடுகளில் முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ உற்பத்தி முறையையும் முதலாளித்துவச் சொத்துறவுகளையும் புகுத்துகின்றது. ஆனால் வளர்ச்சியை அறிமுகப்படுத்துவதில்லை. அது பழைய பொருளாதாரத்தையும் சமூக வடிவத்தையும் அமைப்பையும் அழித்து மாற்றுகிறது. ஆனால் புதிய காலனிய பொருளாதாரமும் சமூக அமைப்பும் பிற்போக்குத்தனமானவையாக இருந்தன.’

சமூக வளர்ச்சியில் முதலாளித்துவம் என்பது ஒரு முன்னேறிய கட்டம். ஆனால் காலனியம் அப்படியானதல்ல என்கிறார் பிபன் சந்திரா. ‘அது காலனியாதிக்க முதலாளித்துவத்தின் ஒரு பிம்பம். ஆனால் எதிர்மறை பிம்பம்; அதன் எதிர்ப்பக்கம். அதன் வளர்ச்சியற்ற பகுதி.’ காலனியம் என்பது ஒரு உற்பத்தி முறையல்ல என்னும் முடிவுக்கும் வந்து சேர்கிறார் பிபன் சந்திரா. ‘3காலனியம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறை உள்பட பல்வேறு உற்பத்தி முறைகளும், உற்பத்தி உறவுகளும், சுரண்டல் வடிவங்களும் ஒத்து நிலவும் ஒரு சமூக அமைப்பாகும். நிலப்பிரபுத்துவம், அரை நிலப்பிரபுத்துவம், அடிமை முறை, கொத்தடிமை முறை, சிறு சரக்கு உற்பத்தி, வணிக மற்றும் கந்துவட்டிச் சுரண்டல், விவசாய, தொழில் மற்றும் நிதி முதலாளித்துவம் ஆகியவை ஒத்து வாழ்கின்றன. ஆனால் அவை அமைதியாகவோ அல்லது விரோதமின்றியோ உடனொத்து வாழ்ந்தன என்று கூறமுடியாது. காலனியப்படுத்தலின் முறைகளில் வெவ்வேறு வகையான கலவை வெவ்வேறு காலனிகளில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு கட்டங்களில் வேறுபட்டது. அனைத்து வேறுபட்ட உற்பத்தி முறைகளும் ஏகாதிபத்திய மூலதனத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருந்தன.’

காலனியக் கட்டமைப்பின் மூன்று அடிப்படைப் பண்புகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார்.

1) அந்நிய நலன்கள்

காலனி நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டு நலன்கள் மற்றும் தேவைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை.காலனியாதிக்க நாட்டின் பொருளாதாரம், அதன் முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைகள், நலன்கள் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. உலக முதலாளித்துவம், உலகச் சந்தை ஆகியவற்றுடன் காலனி நாட்டின் பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்படுவதில்லை. மாறாக, அவற்றுக்குக் கீழ்படிந்திருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறது.

2) சமமற்ற வேலைப்பிரிவினை

பரிவர்த்தனைகள் சமமற்றதாக இருக்கும். இந்தியத் தொழில்துறையின் நலன்களுக்கு அல்ல, பிரிட்டிஷ் உற்பத்தியின் தேவைகளுக்குச் சேவை செய்வதே நோக்கமாக இருக்கும். மார்க்ஸ், எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியதைப் போல் காலனி நாடுகள் கச்சாப் பொருள்களை உற்பத்தி செய்யும். தயாரிக்கப்பட்ட பொருள்கள் காலனியாதிக்க நாடுகளால் உற்பத்தி செய்யப்படும். காலனியாதிக்க நாடு உயர் தொழில்நுட்பம், உயர் உற்பத்தி ஆற்றல், உயர் ஊதியம் தேவைப்படும் சரக்குகளை உற்பத்தி செய்யும். காலனி நாடு கீழான தொழில்நுட்பம், கீழான உற்பத்தி ஆற்றல், குறைவான ஊதியம் தேவைப்படும் சரக்குகளை உற்பத்தி செய்யும். மொத்தத்தில், ஒரு சர்வதேச வேலைப்பிரிவினையைக் காலனியாதிக்கம் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

3) சுரண்டல்

ஒரு காலனியாதிக்க நாடு காலனி நாடுகளின் செல்வத்தைச் சுரண்டி தன்னிடத்துக்குக் கொண்டுசென்று சேர்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கும். இந்தியாவின் வறுமை, வளர்ச்சியின்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இந்தச் சுரண்டலையும் நாம் புரிந்துகொண்டாகவேண்டும். காலனி நாட்டின் செல்வம் அந்நாட்டின் பொருளாதாரத்திலும் மறு உற்பத்தியிலும் நுழையாமல் ஏகாதிபத்திய நாட்டின் பொருளாதாரத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இது ஒரு பக்கம் ஏழைமையையும் இன்னொரு பக்கம் செல்வத்தையும் அதிகரிக்கிறது.

0

மேற்கொண்டு வாசிக்க :

1) History of Modern India, Bipan Chandra, Orient Blackswan

2) Nationalism and Colonialism in Modern India, Bipan Chandra, Orient Blackswan

3) காலனியம், பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம்

4) Colonialsm/Post-Colonialism, Ania Loomba, Routledge

5) கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்