21ம் நூற்றாண்டு மார்க்ஸ்

Figure-1-Marx_940கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 – 14 மார்ச் 1883) பிறந்த தினமான இன்று அவரை நினைவுகூரும் வகையில் இந்தத் தொடர் பகுதியை இங்கே தொடங்கி வைக்கிறேன்.

மார்க்சியத்தை விரிவாக விளக்கி ஆராய்வது அல்ல இதன் நோக்கம். அதற்கேற்ற ஆற்றலை இன்னமும் நான் வளர்த்துக்கொள்ளவில்லை. மார்க்ஸ் எங்கெல்ஸ் மூலநூல்களை முழுமுற்றாக வாசித்து புரிந்துகொள்வது என்பது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் பணி. அதை மிகச் சமீபத்தில்தான் முறைப்படி தொடங்கியிருக்கிறேன். இந்தத் தொடர் மார்க்ஸ் குறித்து எழுதப்பட்ட இரண்டாம்பட்ச ஆதார நூல்களையே (Secondary Sources) பெரும்பாலும் சார்ந்து இருக்கப்போகிறது.

இந்தத் தொடரின் நோக்கங்கள் இரண்டு. முதலாவதாக, 21ம் நூற்றாண்டில் மார்க்ஸ் தேவைப்படுவாரா; ஆம் எனில் ஏன் என்னும் வினாவை எழுப்பி அதற்கு விடை தேடவேண்டும். இரண்டு, மார்க்சியம் குறித்து உலகம் முழுவதிலும் இப்போது நடைபெற்று வரும் விவாதங்களை அறிமுகப்படுத்தவேண்டும். இந்த இரண்டையும் செய்யத் தொடங்கும்போது மார்க்சியத்துக்கான ஓர் எளிய அறிமுகமும் இதிலிருந்து வெளிப்படும் என்று நம்புகிறேன்.

21ம் நூற்றாண்டு மார்க்ஸ் அடுத்த வாரம் ஆரம்பமாகும்.

0

அம்பேத்கரும் தோழர்களும்

ambedkarபுரட்சி / அத்தியாயம் 22

எந்த இந்து மதத்தை அம்பேத்கர் தெளிவாகவும் ஆழமாகவும் எதிர்த்தாரோ அந்த இந்து மதத்தின் ஒரு பகுதியாக அம்பேத்கரை மாற்றிவிடும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமூகத்தில் உள்ள அனைவரையும் சென்றடைவதற்காகவும் தனது ஆதார பலத்தைக் கூட்டிக்கொள்வதற்காகவும் தந்திரமாக சில உபாயங்களை இந்த அமைப்பு கடைபிடித்துவருகிறது. அதிலொன்றுதான் பகத் சிங், அம்பேத்கர் போன்றோரைத் தம் கூடாரத்துக்குள் இழுக்கும் முயற்சி. உயர் சாதி இந்துக்கள் மட்டுமல்ல அனைத்து இந்துக்களுக்கும் நாங்கள் காவலர்கள் என்று சொல்லும் முகமாக,  பிற்படுத்தப்பட்டவர்களையும் பழங்குடிகளையும் (இவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறார்கள்; ஆதிவாசிகள் என்று சொன்னால் ஆரியர்களுக்கும் முந்தையவர்கள் என்றாகிவிடும் அல்லவா?) தலித் பிரிவினரையும் அணைத்துக்கொள்ள ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது. இந்து மதத்தில் பிறந்த நான் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன் என்று தெளிவாக அம்பேத்கர் அறிவித்தபிறகும், அவர் தேர்ந்தெடுத்த பௌத்தம், இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள் இவர்கள்.

புத்தரையே ஓர் இந்து கடவுளாக வெற்றிகரமாக மதம் மாற்றிவிட்டவர்களுக்கு அம்பேத்கரை ஓர் இந்துவாக மாற்றுவது பெரிய விஷயமில்லைதான். ஆனால் அவர்களுடைய நோக்கம் அத்துடன் முடிந்துவிடவில்லை. ஓர் இந்துவாக மட்டுமல்ல, தம்மைப் போலவே அவர் ஓர் இஸ்லாமிய எதிர்ப்பாளரும்கூட என்று நிறுவும் முயற்சியிலும் அவர்கள் இறங்கிவிட்டார்கள்.

இந்துத்துவப் பிரசாரகர்களின் பொய்க் கதைகளை எடுத்துக்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆனந்த் டெல்டும்டே எழுதிய கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்’ என்னும் அந்தப் புத்தகத்தின் பதிப்புரை இவ்வாறு குறிப்பிடுகிறது.

‘சமகால வரலாற்றையே திரித்து, பார்ப்பன இந்து மதத்தையும் சாதியத்தையும் தம் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய முன்னோடிகளை நம் கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பை நிறுவனமயமாக்கும் இந்தச் சதியில் ஐயா வைகுந்தர், நாராயண குரு முதல் புரட்சியாளர் பகத் சிங் வரை அனைவரது மரபுக்கும் உரிமை பாராட்டும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், அம்பேத்கர் மீதும் கை வைத்துள்ளது… அம்பேத்கர் பிறந்த மராட்டியத்திலேயே இன்று சிவசக்தி, பீம்சக்தி, இந்துசக்தி என்ற முழுக்கத்தின் கீழ் தலித் மக்களைத் தன்பக்கம் இழுக்க முயன்று வருகிறது, சிவசேனா.’ குறிப்பாக தலித் மக்களிடையே இஸ்லாமிய எதிர்ப்பைப் பரப்பும் நோக்கில், ‘இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டுமென்று விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக’ அம்பேத்கரைப் பிசைந்து உருவாக்குவதே இவர்கள் லட்சியமாக இருக்கிறது.

ஆனந்த் டெல்டும்டே தொடர்கிறார். ‘இந்து மதம் சார்ந்த ஒவ்வொன்றையும் அம்பேத்கர் தீவிரமான திறனாய்வுக்கு உட்படுத்தியபோது, தொடக்கத்தில் இந்துத்துவ சக்திகள் அவரிடம் கடுப்புக் கொண்டன. இந்துமதத்தைக் கைவிட்டு அவர் புத்த சமயத்தைத் தழுவியபோது அதற்காக அவரிடம் பிணக்கம் காட்டின. ஆனால், இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 16% ஆக இருக்கக்கூடிய தலித்துகளில் மிகப் பெரும்பான்மையானவர்களின் நாட்டங்களின் குறியீடாக அவர் விளங்குகிறார் என்பதையும், எனவே அம்பேத்கரைப் பற்றிய எவ்வித விமர்சனமும் ஒட்டுமொத்த தலித் மக்களையும் சங்கப் பரிவாரத்திலிருந்து அந்நியப்படுததிவிடக்கூடும் என்பதையும் விரைவிலேயே அவை கண்டுகொண்டன. உடனே அம்பேத்கரை தம்மவராகச் சேர்த்துக்கொள்ளும் நரித் தந்திரத்தை அவை கைக் கொண்டன.’

அதே சமயம், முழுமையாக அவரை ஏற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுவதையும் காணமுடிகிறது. அம்பேத்கரை ‘சங்கப் பரிவாரம் தன் தரப்பில் சேர்த்துக்கொண்டாலும்,சாதிகள் ஒழிப்பு என்ற அவரது குறிக்கோளைப் பற்றியோ, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தியாவை உருவாக்கும் அவரது தரிசனத்தைப் பற்றியோ பேசுவதைக் கவனமாகத் தவிர்த்துவிடுகிறார்கள்.’

அம்பேத்கரைத் திரித்து காட்டும் முயற்சிகளை முறியடிக்கவேண்டுமானால் இந்துத்துவ முகாமில் இருந்து அம்பேத்கரை மீட்டு இடதுசாரி முகாமில் அவரை இணைக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இந்த இணைப்பு அத்தனை சுலபமானதல்ல. அம்பேத்கரால் அவர் வாழ்ந்த காலத்திலேயே இடதுசாரிகளுடன் ஒன்றிணைய முடியாமல் போய்விட்டது. அது ஏன் என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

அம்பேத்கர் ஒரு சாதி எதிர்ப்புப் போராளி மட்டுமல்ல. அம்பேத்கர் தொடங்கிய இண்டிபென்டண்ட் லேபர் பார்ட்டி (ஐஎல்பி) தீண்டத்தகாதவர்களுக்கான பிரத்தியேகக் கட்சியாக இல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களுக்குமான கட்சியாக இருந்தது. முன்னதாக, ஷெட்யூல்ட் காஸ்ட்ஸ் ஃபெடரேஷன் என்னும் அமைப்பைத் தீண்டத்தகாதவர்களுக்காக அவர் தொடங்கியிருந்தார். ஆறாண்டு இடைவெளியில் இந்த இரு இயக்கங்களும் தொடங்கப்பட்டன. பரவலான மக்களைத் திரட்ட ஐஎல்பி. குறிப்பாக, ஒரு பிரிவினரின் நலன்களைப் பிரதிபலிக்க எஸ்சிஎஃப்.

இது அம்பேத்கர் எதிர்கொண்ட ஒரு முக்கியக் குழப்பம் என்கிறார் கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலோ. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்கள் பிரச்னைக்குக் குரல் கொடுப்பதா? அல்லது கவனத்தை அகலப்படுத்தி தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதா? தீண்டத்தகாதவர்களில் ஒரு பெரும் பிரிவினர் தொழிலாளர்களாகவும் அல்லவா இருக்கிறார்கள்?

இந்த இடத்தில்தான், இந்தியத் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் பிராமணியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்பதை அம்பேத்கர் உணர்ந்துகொண்டார். இந்த இரண்டுமே ஒரே சமூகப் பிரிவினரைக் கொண்டதாக இருந்ததையும் அவர் கண்டுகொண்டார்.  தொழிலாளர்கள் குறித்த அம்பேத்கரின் பார்வையில் மார்க்சியத்தின் தாக்கம் காணப்படவில்லை என்கிறார் கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலோ. மாறாக, அவர் கம்யூனிஸ்டுகளை விமரிசித்தே வந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மார்க்சியத்தால் இந்தியாவுக்குப் பலன் எதுவும் இல்லை என்பதே அம்பேத்கரின் நிலைப்பாடாக இருந்தது.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களின் பிரச்னையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். இவ்வாறு அவர் கம்யூனிஸ்டுகளை விமரிசித்ததற்கு ஒருவேளை ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உயர் சாதி தலைவர்களின் ஆதிக்கம் பரவியிருந்தது’ காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் ஜேஃப்ரிலோ.

சாதிமுறை என்பது தொழில் பிரிவினையாக மட்டுமின்றி, தொழிலாளர்களின் பிரிவினையாகவும் விளங்குகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். சாதியின் பெயரால் பிளவுபட்டு நிற்கும் தொழிலாளர்களை வர்க்கத்தின் பெயரால் ஒன்றிணைக்கமுடியும் என்னும் நம்பிக்கை அவரிடம் காணப்படவில்லை. இதை அவர் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறார். அம்பேத்கரை மகர்களின் தலைவர் என்றே பரவலாகப் பலர் கருதியதால் மாங்குகள், சாம்பர்கள் ஆகியோர் அவரை நெருங்கி வரவில்லை.

மார்க்சியம் கூறுவது போல் பொருளாதார அடிப்படையில் மக்கள் பிரிந்திருக்கவில்லை என்றார் அம்பேத்கர். இல்லையென்றால், ஒரு பைசாவும் இல்லாத சாதுக்களையும் ஃபகீர்களையும் ஏன் மில்லியனர்கள் வணங்குகிறார்கள்? இந்தியாவைப் பொருத்தவரை மதமே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பது அம்பேத்கரின் வாதம். அதனால்தான் ‘ஒரு மாஜிஸ்ட்ரேட்டை விட ஒரு மதகுருவின் வாக்கியத்துக்கு மக்கள் கட்டுப்படுகிறார்கள்.’

புரட்சிகர முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதைக் காட்டிலும் சாதியை ஒழிக்கவேண்டியது பிரதானமானது என்பது அம்பேத்கரின் திடமான நம்பிக்கை. மார்க்சியத்தை அவர் விமரிசித்ததன் பிரதான காரணம் இதுவே. சோஷலிசத்துக்கு ஏன் ஆதரவு கிட்டவில்லை என்பதையும் அவர் விளக்குகிறார். ‘புரட்சி சாத்தியப்பட்டால் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள், எந்த வேறுபாடும் காட்டப்பட மாட்டாது, சாதியின் பெயரால் நம்பிக்கையின் பெயரால் அவர்கள் வேறுபடுத்தப்படமாட்டார்கள் என்று நம்பினாலொழிய மக்கள் புரட்சிக்கு ஆதரவு தர மாட்டார்கள்… உண்மையிலேயே சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சோஷலிஸ்டுகள் விரும்பினால், சமூகச் சீர்திருத்தம் அடிப்படையானது என்று அவர்கள் ஏற்கவேண்டும்.’

அம்பேத்கர் மார்க்சியத்தை விமரிசித்த ஒரே காரணத்துக்காக மார்க்சியவாதிகள் அம்பேத்கரையும் அம்பேத்கரியவாதிகள் மார்க்சியத்தையும் நிராகரிக்கவேண்டிய அவசியமில்லை. டபிள்யு.என். குபேர் எழுதுகிறார். ‘உழைக்கும் வர்க்கச் சிக்கலில், தலித் இயக்கமும், இடதுசாரி இயக்கமும் நெருங்கி வரவில்லை. அம்பேத்கர், ‘தொழிலாளர்களைக் காற்றுப் புகாத தனித் தனி அறைகளில் பிரித்து வைப்பதாக’ சாதியைக் கருதினார். ஆனால் மார்க்ஸ் சாதியை இனவழித் தொழிலாளர்கள் பிரிவினை என்று வகைப்படுத்தினார். இந்த இரண்டு விளக்கங்களும் வேறல்ல. ஒன்றே.’

எனில், மார்க்ஸையும் அம்பேத்கரையும் ஒன்றுசேர்க்கமுடியுமா? முடியும் ஆனால் அதற்கு அரசியல் தலையீடு தேவை என்கிறார் குபேர். ‘வர்க்க மோதலுக்கு சாதிச் சிக்கலும் தொடர்புடையதே என்பதையும் சாதியை அணி திரட்டுவதில் அதன் வர்க்க இயல்பைத் தவற விட்டுவிடக்கூடாது என்பதையும், மிகமிக அதிகமாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சாதிகள் சமுதாயப் புரட்சியில் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்க வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுகிற ஓர் அரசியல் வழி நமக்குத் தேவைப்படுகிறது… அத்தகைய அரசியல்வழி, பருண்மையான சமூக அரசியல் போராட்டங்கள் என்ற பொருளில் சிந்திக்கவேண்டும்.’

அம்பேத்கர், மார்க்ஸ் இருவருடைய பெயரால் நடத்தப்படும் இயக்கங்களையும் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளையும் ஒப்பிடுகிறார் ஆனந்த் டெல்டும்டே. ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தலித் விடுதலை இயக்கத்தையும் போல் முரண்பாடுகள் கொண்டது வேறு எதுவும் இருக்கமுடியாது. இரண்டு இயக்கங்களுமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் உதித்தன. ஒரே விஷயங்களைத்தான் பேசின. அல்லது ஒரே விஷயத்தை எதிர்த்துத்தான் பேசின. ஒரே மாதிரியாக வளர்ந்தன அல்லது பிளவுபட்டன. இரண்டு இயக்கங்களுமே இன்று நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கின்றன. இருந்தும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்ககூடத் தயாராக இல்லை.’

அம்பேத்கர் மார்க்சியத்தை விமரிசித்தார் ஆனால் முழுமுற்றாக நிராகரிக்கவில்லை என்கிறார் டெல்டும்டே. ‘அம்பேத்கர் ஒரு மார்க்சியவாதி அல்ல. கொலம்பிய பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதாரக் கல்லூரி என ஃபேபியர்களால் நிறுவப்பட்ட கல்வி மையங்களில் படித்தவர் என்பதால் அந்தச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு அவரிடம் இருந்தது. தனது அறிவுசார் ஆளுமைக்கு முழுக் காரணம் என்று அம்பேத்கர் மதிக்கும் ஜான் தவே ஓர் அமெரிக்க ஃபேபியன்.

‘இந்தச் சித்தாந்தமும் சோஷலிசத்தையே விரும்புகிறது என்றாலும் மார்க்ஸ் விரும்பியதைப் போன்றது அல்ல இது. சோஷலிசத்தைப் புரட்சியின் மூலம் கொண்டுவரமுடியாது. இயல்பான பரிணாம வளர்ச்சிப் போக்கில் அது உருவாகும் என்று ஃபேபியன்கள் நம்பினார்கள். இத்தகைய பாதிப்புகள் இருந்தபோதிலும் மாக்ஸை ஏற்றுக்கொள்ளாமலேயே மார்க்சியத்தை முக்கியமானதாகக் கருதியதோடு தன் வாழ்க்கையின் அனைத்து முடிவுகளையும் உரைத்துப் பார்க்க உதவும் உரைகல்லாகவும் அம்பேத்கர் பயன்படுத்தியிருக்கிறார்.

‘பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, அம்பேத்கரின் அரசியல் மார்க்ஸின் கோணத்தில் இல்லை என்றாலும் வர்க்கம் சார்ந்ததுதான். அவர் தான் எழுதிய முதல் கட்டுரையில் சாதிகளை மூடுண்ட வர்க்கங்களாகத்தான் வரையறுத்திருக்கிறார். தீண்டப்படாதவர்களைச் சுட்டும்போதுகூட அவர்களை ஒரு வர்க்கமாகத்தான் சொல்லியிருக்கிறார். அந்த அணுகுமுறை, வர்க்க அலசல் என்பது வெறும் கோட்பாடு சார்ந்ததாகவோ வெட்டவெளியில் நிகழ்வதாகவே இருக்கக்கூடாது. நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டதாக இருக்கவேண்டும் என்று சொன்ன லெனினுடன் அம்பேத்கருக்கு இருக்கும் ஒத்திசைவை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.’

அம்பேத்கர் தன் காலத்து கம்யூனிஸ்டுகளை நிராகரித்ததற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது என்கிறார் டெல்டும்டே. ‘அன்றைய மார்க்சியர்கள் மார்க்ஸ், லெனின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டகங்களை அப்படியே இந்திய சூழலில் திணித்தனர். மார்க்சியப் படிமங்களை யந்திரகதியில் புரிந்துகொண்டு இந்தியாவில் நடைபெற்ற சாதி எதிர்ப்புப் போராட்டங்களை ஒரு பொருட்டாக மதிக்க மறுத்தனர். பிராமணர்களைப் போல் ‘சித்தாந்த துய்மை’ குறித்த மோகம் கொண்டவர்களாகவும் ‘புனிதத்தை’ காப்பாற்றுபவர்களாகவும் இருந்தனர்.’
கம்யூனிஸ்டுகள் செய்த மாபெரும் தவறு அம்பேத்கரைத் தம்மில் ஒருவராக, ஒரு தோழராகக் காணாததுதான் என்கிறார் டெல்டும்டே. ‘அம்பேத்கரின் செயல்பாடுகள் தங்களுடைய பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதாக அவர்கள் பார்த்தனர். இதனால்தான் டாங்கே, 1952 தேர்தலில் உங்கள் வோட்டை செல்லாததாகக் கூட ஆக்கிக் கொள்ளுங்கள். ஆனால், அம்பேத்கருக்கு மட்டும் போட்டுவிடாதீர்கள் என்று சொல்லவைத்தது. அந்தத் தேர்தலில் அம்பேத்கர் தோற்கவும் செய்தார்.’

5892871வரலாற்றில் இருந்து நிறையவே கற்கவேண்டிய அவசியத்தில் இருக்கும் நாம் இதிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்கவேண்டும். நமது இன்றைய தேவை என்ன? குபேர் எழுதுகிறார். ‘மார்க்சியப் புரட்சிகர வேலைத்திட்டத்தை, இந்திய சமூகக் கட்டமைப்பைப் பற்றிய அம்பேத்கரின் உள்நோக்கத்தோடு இணைக்கும் செயல்பாடுகள்தாம் இன்றைக்குத் தேவைப்படுகிறது. எனவே ‘மார்க்ஸ் அல்லது அம்பேத்கர்’ இல்லை. ‘மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர்’ என்பதே வருங்காலப் புரட்சிகர வேலைத் திட்டத்தின் வழிகாட்டும் கொள்கை. அப்போதுதான், மனிதத் தன்மைக்குக் கீழ்ப்பட்ட நிலைமைகளில் கட்டாயமாகத் தள்ளப்பட்டு உழலும் பல லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்வதற்காக அந்த இரண்டு மாபெரும் தீர்க்கதரிசிகள் கண்ட கனவுகளை நிறைவேற்ற முடியும்.’

(அடுத்த பகுதி : ரஷ்யப் புரட்சியின் நாயகன்)

அம்பேத்கர் : ‘இந்துக்களின் தோட்டத்தில் ஒரு நச்சுப் பாம்பு!’

ambedkarபுரட்சி /அத்தியாயம் 19

இந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்னும் விருப்பத்துடன் தொடங்கப்பட்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் தன் வாழ்நாளின் மிகப் பெரும் தவறொன்றை 1936ம் ஆண்டு இழைத்தது. ஆரிய சமாஜத்தின் ஒரு கிளையான இந்த அமைப்பு, லாகூரில் நடக்கவிருந்த கருத்தரங்குக்குத் தலைமை தாங்கும்படி அம்பேத்கரைக் கேட்டுக்கொண்டது. ‘நீங்கள் மாபெரும் சிந்தனையாளர். உங்கள் அளவுக்கு சாதிப் பிரச்னையைப் பற்றி ஆராய்ந்தவர் வேறு யாருமில்லை. சாதி அமைப்பு எந்த மதக் கருத்துகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த மதக் கருத்துகளை அழித்தொழிக்காமல் சாதியை ஒழிப்பது சாத்தியமில்லை என்ற உங்கள் புதுக்கருத்தை விவரமாக  அறிய ஆவலாக உள்ளேன்.’ என்று மண்டலின் செயலாளர் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார்.

தொடக்கத்திலேயே அம்பேத்கர் மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்திருக்கிறார். ‘பொதுவாக சாதி இந்துக்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமூகச் சீர்திருத்தம் பற்றிய அவர்களின் நிலைப்பாட்டுக்கும் என் நிலைப்பாட்டுக்கும் ஒத்துபோவதில்லை. எனவே அவர்களுடன் சேர்ந்து இயங்குவது கடினமாக உள்ளது.’

ஆனால் அம்பேத்கரின் மறுப்பை மண்டல் ஏற்கவில்லை. தனது பிரதிநிதி ஒருவரை மும்பைக்கு அனுப்பி வைத்து அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் மரியாதையுடன் மீண்டுமொருமுறை வரவேற்றார்கள். அம்பேத்கரும் தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். அவர்களுடைய விருப்பத்துக்கிணங்க தனது தலைமை உரையை அம்பேத்கர் முன்கூட்டியே அவர்களுக்கு அனுப்பிவைக்கவும் செய்தார்.

பிரச்னை ஆரம்பமானது. 22 ஏப்ரல் 1936 அன்று ஜாத்-பட்-தோடக் மண்டலைச் சேர்ந்த ஹர் பகவான் என்பவர் அம்பேத்கருக்கு எழுதினார்.

‘…உங்கள் உரையின் இறுதிப் பகுதி எங்களுக்குக் கிடைத்ததும் அது மிக நீண்டு இருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவ்வளவையும் வெகு சிலரே படிக்க முடியும் என்பதே எங்கள் அச்சத்துக்குக் காரணம். மேலும் அதில் நீங்கள், இந்து சமூகத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துவிட்டதாகவும் ஒரு இந்து என்ற முறையில் அதுவே உங்கள் கடைசி உரையாக இருக்கும் என்றும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேதங்கள் முதலான இந்துக்களின் புனித நூல்களின் அறத் தன்மையையும் அறிவார்ந்த தன்மையையும் அநாவசியமாகத் தாக்கியுள்ளீர்கள். இந்து மதத்தின் சட்டப் பகுதியை விஸ்தாரமாக ஆராய்கிறீர்கள். எடுத்துக்கொண்ட பிரச்னையுடன் இது எவ்வித தொடர்புமற்றது. சில பகுதிகள் முற்றிலும் தலைப்புக்குப் பொருத்தமற்றதாகவும் சம்பந்தமற்றதாகவும் இருக்கிறது…

‘…மேற்சொன்ன பகுதிகளை நீக்கிவிடுங்கள்… அனாவசியமாகத் தூண்டிவிடும் விதமாக உரையை அமைப்பது அறிவுடைமையாகப்படவில்லை.

‘…உரையை முழுசாகத்தான் பதிப்பிக்க முடியும் என்று இன்னமும் நீங்கள் வற்புறுத்தினால் அது சாத்தியப்படாது என்று மிக்க வருத்தத்துடன் கூறுகிறோம்.

‘…சாதியமைப்பைப் பற்றிய உங்கள் உரை இது வரை எழுதப்பட்டவற்றிலேயே மதிப்புமிக்கது, அதை எழுதியதன்மூலம் எங்கள் மனதில் அழியாத இடம்பெற்றுவிட்டீர்கள் என்பதையும் நாங்கள் கூறவேண்டும். இதைத் தயாரிப்பதில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கெல்லாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.’

நான்கு தினங்கள் கழித்து அம்பேத்கர் பதில் அனுப்பினார்.

‘..நானும் என் பதிலைக் கூறியாகவேண்டும். சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி என் உரையைக் கத்தரித்தே ஆகவேண்டுமென மண்டல் வற்புறுத்தினால் நானும் கருத்தரங்கை ரத்து செய்யவே கூறுவேன்.

‘…என் முடிவு உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் தன் உரையைத் தயாரிப்பதற்கு ஒவ்வொரு தலைவருக்கும் உரிமை உண்டு. மாநாட்டில் தலைமை தாங்கும் கௌரவத்துக்காக அந்த உரிமையை விட்டுத்தர என்னால் முடியாது.’

படிக்க கஷ்டமாக இருக்கும் என்று மண்டலால் தீர்ப்பளிக்கப்பட்ட, மாற்றியெழுதுங்கள் என்று அறிவுறுத்தப்பட்ட அந்த நீண்ட உரையை அம்பேத்கர் தானே ஒரு தனி நூலாக வெளியிட்டார். அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞு என்று ஆங்கிலத்திலும் சாதி ஒழிப்பு என்று தமிழிலும் வெளிவந்த அம்பேத்கரின் புகழ்பெற்ற அந்த நூல் குஜராத்தி, தமிழ்,மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் என்று பரவலாக அவர் காலத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டு கடும் சர்ச்சைகளையும் வரவேற்பையும் ஒருசேர ஈர்த்தன. மண்டல் அமைப்பினரும் அம்பேத்கரும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் இந்நூலின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

மண்டலுக்கு பதிலளிக்கும் ஒரு கடிதத்தில் அம்பேத்கர் ஓரிடத்தில் எழுதுகிறார். ‘சாதியை ஒழிக்க மிகச் சிறந்த வழி என நான் கண்ட முடிவு (உங்களுக்குத்) திகைப்பூட்டுவதாகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கலாம். என் ஆய்வுமுறை தவறானது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சாதியின் பிரச்னைகளை அலசும் உரையில் சாதியை எப்படி ஒழிக்கமுடியும் என்பது பற்றி வெளிப்படையாக நான் விவாதிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்லமுடியாது.’

இன்னோரிடத்தில் எழுதுகிறார். ‘நான் இந்துக்களை விமரிசித்து இருக்கிறேன். இந்துக்களால் பூஜிக்கப்படுகிற மகாத்மாவின் மேலாண்மையை மறுத்திருக்கிறேன். இந்துக்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்களுடைய தோட்டத்தில் உள்ள நச்சுப் பாம்பாக என்னை அவர்கள் பார்க்கிறார்கள். அப்படி இருக்க, மரியாதை மிக்க இந்தப் பொறுப்பை ஏற்கும்படி என்னை அழைத்தது ஏன் என்ற அரசியல் அறிவுள்ள இந்துக்கள் கேட்கப்போகும் கேள்விக்கு மண்டல்காரர்கள் விளக்கம் தந்தாக வேண்டும்.’

சாதி அமைப்பின் தோற்றுவாய், வளர்ச்சி, சமூகத்தில் அது செலுத்தும் தாக்கம், அதனால் பெரும் பிரிவு மக்கள் அனுபவிக்கும் தீங்குகள் என்று விரிவாக ஆராயும் அம்பேத்கர்,சாதியின் அடித்தளத்தை நேரடியாகவே தாக்குகிறார்.  ‘உங்களுடைய சமூக அமைப்பை மாற்றினாலொழிய நீங்கள் முன்னேறவே முடியாது என்பதே என் கருத்து. தாக்குதலுக்கோ தற்காப்புக்கோ மக்களை ஒன்று திரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின்மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமை அடையாது.’

ஒரு காட்டுச்செடியைப் போல் சுயமாக முட்டி மோதி வளர்ந்து உச்சத்தைத் தொட்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) வாழ்க்கை தேவதைக் கதைகளை ஒருவருக்கு நினைவுபடுத்தக்கூடும். தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதும் இந்த அளவுக்கு தீர்க்கத்துடன் போராடுவதும் சாத்தியம்தானா என்னும் வியப்பையும் அச்சத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர அவரால் பல தரப்பினருக்கு அப்போது ஏற்படுத்தமுடிந்தது. தனது சொந்த அனுபவங்கள் மூலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் ஏற்படுத்திய அதிர்ச்சிகளாலும், விரிவான வாசிப்பின் வாயிலாகவும் அம்பேத்கர் தனது உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
செயற்பாட்டாளர், அரசியல் தலைவர், சமூக விஞ்ஞானி, பொருளாதார அறிஞர், சட்ட வல்லுநர் போன்ற எண்ணற்ற அடையாளங்களைத் தாண்டி அவர் அடிப்படையில் ஓர் அறிவுஜீவியாகவும் திகழ்ந்ததால் எதொன்றையும் நுணுக்கமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் அணுகி ஆராயும் போக்கு அவரிடம் இருந்தது. அவரது படைப்புகளிலும் செயல்பாடுகளிலும் இந்தப் போக்கு இறுதிவரை இடம்பெற்றிருந்தது.

இதனாலும்கூட அம்பேத்கர் பல சமயங்களில் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாத, சுலபமாகத் தொகுத்துக்கொள்ள முடியாத ஒரு சிந்தனையாளராக இருக்கிறார். ஜோதிராவ் புலே, பெரியார் போன்றவர்களிடம் இருந்த எளிமையான, நேரடியான கருத்துப் பரிமாற்ற முறை இவரிடம் இல்லாததற்குக் காரணம் இவர் ஒரே சமயத்தில் பல அறிவுத் துறைகளில் தொடர்ச்சியாக இயங்கி வந்ததும், தனது கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பரிசிலீத்து, மாற்றிவந்ததும்தான்.
தீவிரமாக விமரிசித்து இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்தைத் தழுவிய பிறகும், இந்துத்துவச் சிந்தனையாளர்களால் இன்றும் அம்பேத்கரை தம்மில் ஒருவராக உரிமை கொண்டாட முடிவதன் காரணம் இதுதான். அம்பேத்கரின் படைப்புகளில் இருந்து ஆங்காங்கே சில வாசகங்களை உருவிப்போட்டு அவரை ஓர் இந்து விசுவாசியாக, இஸ்லாமிய எதிர்ப்பாளராக, சந்தைப் பொருளாதார ஆதரவாளராக, மதவாதியாக, முதலாளித்துவ ஆதரவாளராக சிலரால் முன்னிறுத்தமுடிவதும் இதனால்தான்.

அம்பேத்கர் தனது சமூகத்தின் விடுதலைக்காகவும் தனது நிலையில் உள்ள பிற பிரிவினரின் விடுதலைக்காகவும் சிந்தித்தார். தொடக்கத்தில் காந்தி போன்ற சீர்திருத்தவாதிகளாலும், கோயில் நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட அணுகுமுறையாலும் அவர் ஈர்க்கப்பட்டது உண்மைதான். ஆனால், இவை விடிவை அல்ல ஆபத்தையே கொண்டுவரும் என்பதை அவர் விரைவிலேயே புரிந்துகொண்டார். சாதி எப்படி இயங்குகிறது, எங்கே வேர் கொள்கிறது, எப்படித் தன் கிளைகளைப் பரப்புகிறது, எங்கிருந்து பலம் பெறுகிறது, மாறும் சூழலில் எப்படித் தன்னை தகவமைத்துக்கொள்கிறது உள்ளிட்ட அனைத்தையும் அவர் முழுமையாகத் தெரிந்துகொண்டார்.

கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் எப்படி அவர் காலத்துத் தேவைகளை எதிர்கொண்டனவோ அவ்வாறே அம்பேத்கரின் சிந்தனைகளும் அவர் காலத்திய தேவைகளைப் பிரதிபலித்து, அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்தன. ‘உயர்சாதியினர் என்று அழைக்கப்படும் இந்துக்கள் அம்பேத்கரின் சமூகத்துக்கு ஒழுங்கு மீறிய கொடுமைகளை இழைத்தனர். இதனால் அம்பேத்கருக்குக் கடுமையான மன நிறைவின்மை ஏற்பட்டது. இந்த மனநிறைவின்மையில் இருந்துதான் அம்பேத்கரின் சிற்தனை எழுந்தது.’ என்கிறார் அம்பேத்கரிய ஆய்வாளர் டபிள்யூ.என். குபேர்.

மார்க்ஸைப் போலவே சமூகத்தை மாற்ற அம்பேத்கர் முன்மொழிந்த வழிமுறைகளிலும் கற்பனாவாதத் தன்மை இருக்கவில்லை. ‘அம்பேத்கர் ஒரு கற்பனாவாதி அல்லர். ஒரு செயல்முறை கோட்பாட்டாளர். அவர் ஒரு வலிமையான கருத்தியல் கோட்பாட்டைக் கொண்டிருந்தார். ’ என்கிறார் குபேர். இந்தக் கோட்பாட்டோடு முரண்படுபவர்கள் மார்க்ஸைப் புறக்கணித்ததைப் போலவே அம்பேத்கரையும் புறக்கணித்தனர்.

அம்பேத்கர் இந்திய அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் இருந்து எவ்வாறு ஓரங்கட்டப்பட்டார் என்பதை விவரிக்கும்போது கிறிஸ்டோஃபே ஜேஃப்ரிலோட் (Christophe Jaffrelot) தனது நூல் ஒன்றில் அடுக்கிக் காட்டும் சில உண்மைகளைப் பார்ப்போம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்திருந்த போதிலும் 1990ம் ஆண்டு வரை அம்பேத்கரின் உருவப் படம் இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை. அவுரங்காபாத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் கோரிக்கையுடன் 1978ல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்தபோது, அதிர்ச்சியடைந்த மேல்சாதி மாணவர்கள் அவர்கள்மீது வன்முறையைச் செலுத்தினர். ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். வி.பி. சிங் ஆட்சியில் 1990ம் ஆண்டுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

இத்தகைய புறக்கணிப்புகள் உணர்த்தும் தெளிவான ஓர் உண்மை, இன்னமும் இங்கே சாதி வெறி மறையவில்லை; எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரவில்லை என்பதைத்தான். இன்றைய சமூகத்தில் அம்பேத்ரின் தாக்கத்தையும் தேவையையும் மதிப்பிடும்போது நாம் முதலில் தெரிந்தகொள்ளவேண்டிய உண்மை இதுவே.

(அடுத்த பகுதி : அம்பேத்கர் : சாதி எதிர்ப்பும் அரசியலும்)

ஏன் தேவை மார்க்சியம்?

Karl-Marx-Buesten_dpaபுரட்சி / அத்தியாயம் 12

இன்று வரையிலும் மார்க்சியம் உலகில் செலுத்திவரும் தாக்கத்தை உணரவேண்டுமானால் லண்டனில் உள்ள ‘ஹைகேட் கல்லறைக்குச் செல்லுங்கள்.’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ‘19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ், ஹெர்பர்ட் ஸ்பென்சர் இருவரும் அருகருகே இங்கே புதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், ஹெர்பர்ட் வாழும் அரிஸ்டாட்டிலாக மதிப்பிடப்பட்டார். மாறாக, ஹாம்ப்ஸ்டெட் கீழ்ப்பகுதியில் தன் நண்பரின் பணத்தில் உயிர் வாழும் நபராக கார்ல் மதிப்பிடப்பட்டார். இன்றோ ஸ்பென்சர் இங்கே இருக்கிறார் என்பதே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் இந்தியாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும்கூட பார்வையாளர்கள் கார்ல் மார்க்ஸின் கல்லறையைத் தரிசிக்கிறார்கள்.’

வலிமையானது மட்டுமே பிழைத்திருக்கும் என்னும் புகழ்பெற்ற பதத்தை அறிமுகப்படுத்தியவர் ஹெர்பர்ட் ஸ்பென்சர். அறவியல், மதம், மானுடவியல், தத்துவம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் ஸ்பென்சர். ஐரோப்பாவின் ஒரே தனிப்பெரும் சிந்தனையாளர் என்று பெருமிதத்துடன் அவர் அழைக்கப்பட்டார். ஆனால் 1900க்குப் பிறகு ஐரேப்பா ஸ்பென்சரைக் கடந்து சென்றது. தொடக்க காலத்தில் ஸ்பென்சருக்குக் கிடைத்த புகழ் அவர் மரணம் வரைகூட நீடிக்கவில்லை. ஸ்பென்சரை இன்று ஒருவரும் நினைவுகூர்வதில்லை.

ஸ்பென்சரைப் போலவே மார்க்ஸும் அறவியல், மதம், மானுடவியல், தத்துவம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கியிருக்கிறார். ஸ்பென்சரைப் போலன்றி மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் எழுத்துகள் விரிவாக வாசிக்கப்படவில்லை. ஸ்பென்சருக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் ஒரு பங்குக்கூட மார்க்ஸுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ‘இறப்புக்குப் பிறகு மார்க்ஸுக்குக் கிடைத்த புகழ் சாதாரணமானதா என்ன?’ என்று வியக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

மார்க்ஸ் இறந்து இருபத்தைந்து ஆண்டுகளில், ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக அவர் பெயரில் கட்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 1918ம் ஆண்டுக்குப் பிறகு மார்க்ஸின் பெயரைச் சூட்டிக்கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமரத் தொடங்கின. ஜனநாயகம் இல்லாத நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் மார்க்சியம் பயின்ற மாணவர்கள் புரட்சிகரப் படைகளை அமைக்கத் தொடங்கினர். ‘மார்க்ஸ் மறைந்து எழுபதத்தைந்து ஆண்டுகளுக்குள் உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியில் கீழ் திரண்டுவிட்டனர்.’

இன்றுவரை உலகம் முழுவதிலும் அவர் படைப்புகள் பெரும் பகுதியினரிடையே அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வரலாற்றாசிரியர்கள், சமூக அறிஞர்கள், தத்துவஞானிகள், அரசியல் நிபுணர்கள் என்று பலரும் மார்க்சியத்தின் துணை கொண்டு உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இன்னொரு பிரிவினர் நடைமுறையில் மார்க்சியத்தைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

மார்க்ஸே முதல் பெரும் சிந்தனையாளர் என்று கருத்து கணிப்பு நடத்தி அறிவித்த பிபிசியை ‘நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்கிறார் ஹாப்ஸ்பாம். மாறாக, ‘இன்று கூகிளில் மார்க்ஸ் பெயரைத் தட்டச்சு செய்து பாருங்கள். டார்வின், ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மார்க்ஸே மிகப்பெரிய அறிவுத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தெரியவரும். நிச்சயம், ஆடம் ஸ்மித், ஃபிராய்ட் இருவரையும்விட அதிகமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.’
ஆனால், உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் தாய் நாடாகக் கருதப்பட்டு வந்த சோவியத் யூனியன் தகர்ந்துவிட்ட நிலையில், புரட்சியின்மூலம் நிறுவப்பட்ட செஞ்சீனம் சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவி நிற்கும் தருணத்தில் மார்க்சியத்தில் இருந்து நாம் எத்தகைய நம்பிக்கையை பெறுவது?

ஹாப்ஸ்பாம் இந்தக் கேள்வியை வேறு கோணத்தில் இருந்து அணுகுகிறார். முதலில் சோவியத் யூனியனையும் மார்க்சியத்தையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்கிறார் ஹாப்ஸ்பாம். சோவியத்தில் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்சியம் தோல்வியடைந்ததன் காரணமாக, மார்க்சியத்துக்கும் லெனினியத்துக்குமான தொடர்பு அறுபட்டது. இது ஒரு வகையில் நல்லதுதான் என்கிறார் அவர். மார்க்சியத்தை சோவியத் பரிசோதனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவது தவறு. ஹாப்ஸ்பாமின் இந்த வாதத்தை இன்னும் நீட்டித்தால் மார்க்சியத்தின் வெற்றி, தோல்விக்கும் சோவியத், சீனா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றின் வெற்றி, தோல்விக்கும் தொடர்பில்லை என்பது புரியவரும்.

லெனின், மாவோ போன்றவர்கள் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் தத்துவத்தை தங்கள் மண்ணுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியவர்கள். மார்க்சியத்தை முனைப்புடன் செழுமைப்படுத்தியவர்கள். அவர்களுடைய பரிசோதனைகள் மார்க்சியத்தை எந்தவகையிலும் பாதிக்காது. இவ்வாறு சொல்வதை சோவியத் மற்றும் செஞ் சீனத்தின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளமுடியாது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியை ஏன் மார்க்சியத்தின் வீழ்ச்சியாகக் கொள்ளமுடியாது என்பதற்கு ஹாப்ஸ்பாம் சில உதாரணங்கள் அளிக்கிறார். ஒரு முறை யுனைட்டெட் ஏர்லைன்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்பாமை அணுகி ஒரு கட்டுரை எழுதிக்கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். ஹாப்ஸ்பாம் திகைத்துப்போனார். விமானப் பயணிகளுக்கான ஒரு பிரத்தியேக இதழில் எழுதுமாறு எதற்காக ஒரு மார்க்சிஸ்டை அவர்கள் அணுகவேண்டும்? இத்தனைக்கும் அவர்களுடைய பயணிகளில் எண்பது சதவிகிதம் பேர் அமெரிக்கர்கள். ஓர் இடதுசாரியை வாசிக்க அவர்கள் விரும்புவார்களா என்ன? குழப்பங்கள் இருந்தபோதும், அழைப்பை மறுக்காமல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார் ஹாப்ஸ்பாம்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், கம்யூனிசத்தை அடி முதல் முடி வரை வெறுத்த ஒரு எழுத்தாளர் ஹாப்ஸ்பாமை அணுகி, ‘மார்க்ஸைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது மீண்டும் அவர் திகைத்துப்போனார். நான் என்ன சொல்வேன் என்று தெரிந்தும் என்னிடம் வந்து மார்க்ஸைப் பற்றி இவர் ஏன் விசாரிக்கவேண்டும்?எதற்காக திடீரென்று முதலாளிகளும் முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் மார்க்ஸ் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்? எதற்காக மார்க்ஸ்மீது அவர்களுக்கு இந்தத் திடீர் ஆர்வம்?
சோவியத் யூனியனின் கதை முடிந்துவிட்டது, மார்க்சியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் எழுதி சலித்துவிட்ட பிறகு எதற்காக மீண்டும் மார்க்ஸை இவர்கள் இழுக்கிறார்கள்? தன்னை அணுகிய நண்பரிடம் இதே கேள்வியை ஹாப்ஸ்பாம் வீசியபோது அவர் இப்படிப் பதிலளித்திருக்கிறார். ‘ஓ அந்த மனிதன், 150 ஆண்டுகளுக்கு முன்பே முதலாளித்துவம் குறித்து சிந்தித்திருக்கிறாராமே! அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று கவனிக்கவேண்டும் அல்லவா?’

karlmarxcardராய்டர்ஸ் செய்திக்குறிப்பின்படி 2008ல் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் கிழக்கு ஜெர்மனியில் 52 சதவிகிதிம் பேர் சுதந்தரச் சந்தையால் தங்களுக்குப் பலனில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். 43 சதவிகிதம் பேர் சோஷலிசம் மீண்டும் வேண்டும் என்கிறார்கள். ஜெர்மானிய வங்கி ஒன்று (Sparkasse) தனது மாஸ்டர் கார்ட் கடன் அட்டையில் யாருடைய படத்தைப் பொறிக்கலாம் என்று தங்கள் வாடிக்கையாளர்களைக் கேட்டபோது பெரும்பாலானவர்கள் கார்ல் மார்க்ஸின் பெயரை முன்மொழிந்தனர். இறுதியில் அவருடைய படமே அட்டையில் இடம்பெற்றது.

மார்க்சியம் பரவிய நாடுகளை மட்டுமல்ல மார்க்சியம் பரவாத நாடுகளையும்கூட நாம் ஆய்வு செய்யவேண்டும். அங்கே ஏன் மார்க்சியம் நுழையவில்லை என்னும் கேள்வியை எழுப்பவேண்டும் என்கிறார் The Marxists என்னும் நூலின் ஆசிரியர் சி. ரைட் மில்ஸ்.

மார்க்சியக் கோட்பாடு மகத்தான ஆற்றல் கொண்டது. ஏனெனில் அது உண்மையானது என்கிறார் லெனின். ‘நீ ஏழையாக இருப்பதற்கு நீ காரணமல்ல. நீ ஏழையாக நீடிக்கவேண்டிய அவசியமும் இல்லை.’ என்று எடுத்துச் சொன்னதோடு நில்லாமல் அந்த நிலையை மாற்றுவதற்கான வழியையும் சொல்லிக்கொடுக்கிறது மார்க்சியம். ‘முதலாளித்துவம் நீடிக்கும்வரை உன்மீதான சுரண்டல் ஒழியாது. முதலாளித்துவம் என்பது முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அது பாதிக்கிறது. உன்னை ஏழையாக மாற்றிவைத்திருக்கும் இந்த சமுதாய முறையை உன்னால் மாற்றிமைக்கமுடியும். உன்னை அடியில் போட்டு வைத்து ஆதிக்கம் செலுத்துபவர்களின் அதிகாரம் ஒருநாள் தகர்ந்துபோகும். அதற்கான அடியை நீ எடுத்துவைக்கப்போகிறாய். மனிதன்மீது மனிதன் செலுத்தும் அடுக்குமுறையை அழிக்க நீ புரட்சிக்குத் தயாராகவேண்டும்.’

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்கிறது என்கிறது உலகில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது புத்தகமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (முதலாவதுபைபிள்). அமெரிக்காவில் இன்று முதலாளித்துவம் உயிர்த்திருப்பதற்கு சீனாவின் வங்கிகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சுரண்டல் இல்லாமல் செல்வம் வளர்வதில்லை. இன்று ஒரு பிரிவினர் ஐ பாட், ஐ ஃபோன் யுகத்துக்கு முன்னேறியிருப்பதற்கு விலை கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் சீனத் தொழிலாளர்கள்.

பொருளாதார நெருக்கடியின்போது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பிணையில் மீட்டெடுத்தவர்கள் தொழிலாளர்கள்தாம். ஆனால் வேலை பறிபோன பணியாளர்களைப் பிணையில் மீட்க யாருமில்லை. அப்பட்டமாக கண்முன்னால் அரசும் முதலாளித்துவமும் கூட்டணி அமைத்துக்கொண்டு செயல்படுவதைக் கண்ட தொழிலாளர் வர்க்கம் தவிர்க்கவியலாதபடி மார்க்சியத்தின் பக்கம் திரும்புகிறது. மார்க்ஸின் மூலதனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய நூல்களின் விற்பனை குறிப்பாக 2008 தொடங்கி அதிகரித்திருக்கிறது என்னும் தி கார்டியனின் செய்திக்குறிப்பை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

மார்க்சியம் தொழிலாளி வர்க்கத்துக்குத் தேவை. காரணம் அது நேரடியாக அவர்களுடன் உரையாடுகிறது. 21ம் நூற்றாண்டில் முதலாளிகளுக்கும் மார்க்சியம் தேவைப்படுகிறது. காரணம் முதலாளித்துவம் எப்படி வளர்கிறது, எப்படி செல்வம் சேர்க்கிறது என்பதை மட்டுமல்ல எப்படி, ஏன் தடுமாறுகிறது, எப்படி வீழ்ச்சியடைகிறது என்பதையும் சேர்த்தே மார்க்ஸ் அலசியிருக்கிறார்.

ஆனால் கார்ல் மார்க்ஸ் இன்று நமக்குத் தேவைப்படுவதற்கு இவை மட்டும் காரணமல்ல என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். கார்ல் மார்க்ஸின் பொருளாதாரப் பங்களிப்புக்காக அல்ல; அவர் ஓர் அரசியல் ஆய்வாளர் என்பதால் அல்ல; நவீன சமூக அறிவியலின் தந்தை என்பதால் அல்ல. ‘கார்ல் மார்க்ஸ் மனித குலம் முழுமைக்கும் சேர்த்து சிந்தித்தவர்.’

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து கால் நூற்றாண்டுக்குப் பிறகு அந்நூலில் ஆசிரியர்கள் 1872ல் அதன் ஜெர்மன் பதிப்புக்காக முன்னுரையில் இப்படி எழுதினார்கள்.‘கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியனாவையே.’ இன்றும்கூட இந்த வார்த்தைகள் பொருந்தும்.

எதிர்கால நம்பிக்கையுடனும் பெருமிதமான வார்த்தைகளுடனும் இந்த அறிக்கை முடிவடைகிறது. ‘பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கோ அனைத்து உலகமும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’

0

பின்குறிப்பு 1 :

  • புதிதாக மார்க்சியம் பயில விரும்புபவர்களுக்குப் பொதுவாக இரு நூல்கள் சிபாரிசு செய்யப்படுவதுண்டு. ஒன்று, ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய மார்க்சீய மெய்ஞ்ஞானம். இரண்டாவது, மாரிஸ் கார்ன் ஃபோர்த் எழுதிய ‘மார்க்சிய நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி’. முதல் நூல் தத்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி, மார்க்சிய அடிப்படைகளையும் முக்கியப் பதங்களையும் அறிமுகப்படுத்தி மார்க்சியத்தின் பங்களிப்பை எளிமையாகப் புரியவைக்கிறது. இரண்டாவது புத்தகத்தின் நோக்கம் இன்னமும் விரிவானது. மார்க்ஸ், எங்கெல்ஸ் தொடங்கி லெனின், மாவோ, ஸ்டாலின் என்று மார்க்சியத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றவர்களின் மூலநூல்களை அறிமுகப்படுத்தி அவற்றை வாசிப்பதற்கு நம்மைத் தயார்படுத்தும் பணியை மாரிஸ் கார்ன் ஃபோர்த் இந்நூலில் நிறைவேற்றியுள்ளார். மலையாகக் குவிந்துகிடக்கும் மூலநூல்களை எங்கிருந்து, எப்படிப் படிக்கத் தொடங்குவது என்று அறியாமல் மயங்கியிருக்கும் வாசகர்களுக்கு இது ஒரு திறவுகோலாக அமையும்.

பின்குறிப்பு 2 :

  • ஸ்பார்டகஸ் தொடங்கி இன்று வரையிலான முக்கியப் புரட்சியாளர்களை அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் மார்க்ஸ்-எங்கெல்ஸை நெருங்கும்போது வழக்கத்துக்கு மாறாக விரிவடைந்துவிட்டது. இந்தத் தொடர் புத்தக வடிவம் பெறும்போது, முந்தைய மற்றும் இனி வரும் பகுதிகள் எழுத பயன்படுத்திய புத்தகங்கள், கட்டுரைகள், இணையத்தளங்கள் ஆகியவை பற்றிய விவரம் விரிவாக அளிக்கப்படும்.

(அடுத்த பகுதி : சிமோன் பொலிவார்)

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : அடிப்படைகள் 3

marx_engelsபுரட்சி / அத்தியாயம் 11

வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் சரித்திரத்துக்கு விசை தந்து முன் செலுத்தும் சக்திகளாக இருக்கின்றன. எனவேதான் வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்கின்றனர் மார்க்ஸும் எங்கெல்ஸும். ‘பொருளாதார நிலைமைகள் (அதாவது இன்னும் கணக்காகச் சொல்வதானால் உற்பத்தி முறை) உருமாற்றம் அடைந்ததன் விளைவாகத்தான் முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் தோன்றின. ஆரம்பத்தில் நடந்து வந்த கைத்தொழில் உற்பத்திமுறை மாறிப் பட்டறைகளில் உற்பத்தி செய்யும் முறை வந்தது. அதற்குப் பிறகு நீராவி விசையும் இயந்திர சக்தியும் வந்த பிறகு அதிலிருந்து மாறிப் பெரிய அளவு இயந்திரத் தொழில் உற்பத்தி முறை வந்தது. இந்த இடைநிலை மாறுதல்தான் இந்த இரு வர்க்கங்களும் வளர்வதற்குக் காரணமாயிருந்தது.’

வர்க்கப் பிரிவினைகள் சமுதாய வாழ்வின் அடிமுதல் முடிவரை ஊடுருவிச் சென்று பாதிக்கின்றன. மார்க்சிய லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படைகள் என்னும் நூல், ‘வர்க்கப் போராட்டம் பல்வேறு வர்க்கங்களின் நேர் எதிரிடையான சமூக நிலைகள் மற்றும் முரண்பாடான நலன்களால் வெளிப்படுகிறது’ என்கிறது. தற்போது முதலாளிகளும் தொழிலாளிகளும் அல்லது பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும் பகைமை வர்க்கங்களாவர். காரணம் அவர்களுடைய நலன்கள் நேர் விரோதமானவை.

பாட்டாளி வர்க்கம் தனது போராட்டத்தை மூன்று பிரதான வடிவங்களில் நடத்துகிறது. அவை, பொருளாதாரம், அரசியல் மற்றும் சித்தாந்தத் துறைகள். சம்பள உயர்வு, வேலை நேரம் குறைப்பு, பணிச்சூழல் மேம்பாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் பொருளாதாரத் துறையில் நடைபெறுகிறது. அன்றாடத் தேவைகளுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தால் தொழிலாளர் வாழ்நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் தொழிலாளர் சுரண்டப்படுவதை இது ஒழித்துவிடாது.

சில முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளரின் வாழ்க்கைத் தரம் சற்று உயர்ந்திருப்பது உண்மையே என்றாலும் அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளிலும்கூட பல லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். மேலும், பொருளாதாரப் போராட்டத்தின்மூலம் கிடைக்கும் கூடுதல் ஊதியமும் மேம்பட்ட வாழ்க்கைத் தரமும்கூட பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, நெருக்கடி போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகிறது. அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்கமுடியாமல் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் திண்டாடுகின்றனர். வளர்ந்த நாடுகளிலும்கூட இதுவேதான் நிலைமை. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களைவிட சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களும்கூட சுரண்டலுக்குத்தான் ஆட்படுகிறார்கள். எத்தகைய மேலான வளர்ச்சியை அடைந்தாலும் ஒரு முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தோடு ஒன்றிணைவது சாத்தியப்படாது. தவிரவும், இந்த முன்னேறிய நாடுகளில் உள்ள நலன்கள் யாவும் தொழிலாளி வர்க்கத்தால் உருவாக்கப்பட்டவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அடுத்து, அரசியல் தளத்தில் நடத்தப்படும் போராட்டம். இதில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வரை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்படும் போராட்டம் வரையான பல வடிவங்களை இது கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அமைதி வழிப் போராட்டம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகரப் போராட்டம் ஆகிய இரு வழிமுறைகளும் இதில் கடைபிடிக்கப்படுகின்றன.

பொருளாதாரப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் அல்லது குறிப்பிட்ட தொழிலாளர்கள் சிலரால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்களும் முதலாளிகளும் வர்க்கங்கள் என்ற முறையில் முழுமையான ஒருவரையொருவர் எதிர்த்து அணிவகுக்கின்றனர். பொருளாதாரப் போராட்டம் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றால் அரசியல் போராட்டம் பொதுப்பட்ட வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இன்னொரு முக்கிய வேறுபாடும் இருக்கிறது. ‘பொருளாதாரப் போராட்டம் பாட்டாளிகளுக்குத் தேவைப்படும் நிறுவனத்தை தொழிற்சங்கங்கள் வடிவில் வழங்குகிறது. அரசியல் போராட்டமோ ஒரு மார்க்சிய அரசியல் கட்சி, பாட்டாளி வர்க்கத்தின் ஆக உயர்ந்த வடிவிலான வர்க்க ஸ்தாபனம் அவசியம் என்று கோருகிறது.’

மூன்றாவதாக வரும் சித்தாந்தப் போராட்டம், பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கிய வடிவமாகும். பொருளாதார மற்றும் அரசியல் போராட்டத்துக்குத் தொழிலாளர்களை அணிதிரட்ட சித்தாந்தப் போராட்டம் அவசியம். தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை உணர்த்துவதோடு அந்தச் சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் இந்தப் போராட்டம் கற்றுக்கொடுக்கிறது. இந்தப் போராட்டம்‘தொழிலாளர்கள் மனங்களில் இருந்து பூர்ஷ்வா கருத்துகளையும் தப்பெண்ணங்களையும் அகற்றும் நோக்கம் கொண்டதாகும். தன்னியல்பான தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் மார்க்சிய சோஷலிஸ்டு சித்தாந்தத்தைப் புகுத்துவதால் இந்த இயக்கம் மேலும் உயர் வளர்ச்சி மட்டத்தை எட்டும். எனவே, வர்க்கப் போராட்டத்தின் சித்தாந்த வடிவம் இதர வடிவங்கள் போலவே பாட்டாளிகளின் இறுதி வெற்றிக்கு அத்தியாவசிமானது.’

ஒரு நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்கட்சி வர்க்கப் போராட்டத்தை மேற்கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்து நடத்துகிறது. சில கட்சிகள் பொருளாதாரப் போராட்டங்களை மட்டுமே முன்னெடுக்கும். இன்னும் சில கட்சிகள் சித்தாந்தப் பயிற்சிகளோடு தங்கள் கடமைகளை முடித்துக்கொண்டுவிடும். மேலும் சில நாடாளுமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தி அமைதி வழியில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்யும். அல்லது ரஷ்யாவிலும் சீனாவிலும் நடைபெற்றதைப் போல் புரட்சியை முன்னெடுத்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும். ‘வர்க்கப் போராட்டம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை வைத்து அதை முன்னெடுக்கும் கட்சியின் மெய்யான முகம் வெளிப்படும்.’

வர்க்கப் போராட்டத்தின் இறுதி லட்சியம் என்ன? முதலாளித்துவ சமூக அமைப்பை ஒழித்துக்கட்டி, வர்க்கங்கள் அற்ற ஒரு கம்யூனிஸ்ட் சமூக அமைப்பை உருவாக்குவதே ஆகும். ஒரு மார்க்சியவாதி வர்க்கப் போராட்டத்துக்கான நியாயங்களை ஏற்பதோடு அதை நடத்துவது அவசியம் என்பதையும் ஏற்கிறார். ஆனால் அது மட்டும் போதாது, வர்க்கப் போராட்டத்தை நீட்டித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஒரு மார்க்சியவாதி ஏற்கவேண்டும் என்கிறார் லெனின். ‘பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவது, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பதுதான் உழைக்கும் மக்களின் போராட்டத்தின் முதல் நடவடிக்கையாகும்.’

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்னும் நூலில் எங்கெல்ஸ் கேள்வி பதில் பாணியில் சில முக்கிய விஷயங்களை எளிமையாகப் புரியவைக்கிறார். இதுவரை நாம் பார்த்த விஷயங்களைத் தொகுத்துக்கொள்ளும்படியாக இவை அமைந்துளளன. பாட்டாளி வர்க்கம் என்பது என்ன? ‘தனது வாழ்வுக்கான தேவைகளை தனது உழைப்பை விற்பதன் வாயிலாக மட்டும் பெறுவதே பாட்டாளி வர்க்கம். அதன் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும் உழைப்புக்கான தேவையை மட்டுமே சார்ந்ததாக இருக்கிறது.’

பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை தனியுடைமையை ஒழிப்பதில் அடங்கியிருக்கிறது. அதை எவ்வாறு செய்வது? அமைதி வழியில் செய்யவேண்டுமா அல்லது புரட்சி தவிர்க்கவியலாததா? ‘அமைதி வழிமுறைகளில் தனியுடைமையை ஒழிப்பது நடந்தேறுமானால் இது மிகவும் விரும்பத்தக்கதாகவே இருக்கும். இந்த வழியில் நடந்தேறுவதை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள்தான் கடைசி நபர்களாக இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.’ எனில் புரட்சிகள் ஏன் நடைபெறுகின்றன? அவை ‘வேண்டுமென்றோ அல்லது அடாவடியாகவோ செய்யப்படுபவை அல்ல. ஆனால் எங்கும் எப்போதும் புரட்சிகள் சூழ்நிலைகளின் கட்டாயத்தால் ஏற்படுபவைதான். தனிப்பட்ட கட்சிகள் மற்றும் எல்லா வர்க்கங்களின் விருப்பத்துக்கும் கட்டளைக்கும் அப்பாற்பட்டவை புரட்சிகள்.’

எங்கெல்ஸ் தொடர்கிறார். ‘ஆனால், கிட்டத்தட்ட எல்லா நாகரிக நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலாத்காரமாக வன்முறையால் அடக்கப்படுகிறது என்பதையும் இந்த வழிமுறையின்மூலம் கம்யூனிசத்தின் எதிரிகள் தமது முழு பலத்தையும் கொண்டு புரட்சிக்கான வேலைகளைச் செய்கின்றனர் என்பதையும் கம்யூனிஸ்டுகள் தெளிவாக காண்கின்றனர். ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கம் புரட்சியை நோக்கி உந்தித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், இப்போது அவர்களை ஆதரித்து வாதிடுவதைப் போல எமது ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள்மூலம் பாட்டாளிகளின் நலன்களைக் காப்போம்.’

புரட்சியின் பாதை எப்படி இருக்கும்? ‘முதலில், அது ஒரு ஜனநாயகப்பூர்வமான அரசியல் சட்டத்தை நிறுவும். இதன் வாயிலாக பாட்டாளி வர்க்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதிக்கம் நிறுவப்படும்.’ அத்தகைய சூழலில் சிறு விவசாயிகளும் குட்டி முதலாளிகளும் பாட்டாளி வர்க்கத்துடன் இணங்கி தீரவேண்டிய நிலையில் இருப்பார்கள். நாம் இன்று காணும் ஜனநாயகம் என்னும் வடிவத்தை எங்கெல்ஸ் இங்கே விவரிக்கவில்லை. ‘தனியுடைமைக்கு எதிராகவும், பாட்டாளி வர்க்கத்தின் மேம்பட்ட வாழ்வுக்கு உத்திரவாதம் தருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவாமல் போகுமானால் பாட்டாளி வர்க்கத்துக்கு ஜனநாயம் என்பது முழுக்கவும் பயனற்றதாகவே இருக்கும்.’

தனியுடைமை மறைந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? ‘உற்பத்தி சக்திகள் அனைத்தையும், வணிக சாதனங்கள் அனைத்தையும், உற்பத்தி பொருள்களின் பரிமாற்றத்தையும் விநியோகத்தையும் தனிப்பட்ட முதலாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து சமுதாயம் கைப்பற்றிக்கொள்ளும். நாட்டின் மூலவளங்களின் இருப்பு மற்றும் மொத்த சமுதாயத் தேவைகளின் அடிப்படையிலான திட்டத்தின்படி சமுதாயமே அவற்றை நிர்வகிக்கும்… பெருந்தொழில் நடைமுறையுடன் பிணைந்துள்ள தீய விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்படும்.’

மேலும், மிகை உற்பத்தியும் அதன் காரணமாக எழும் சமுதாய வறுமையும் ஒழிக்கப்படும். சமுதாயத்தில் உள்ள அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் உற்பத்தி மாற்றியமைக்கப்படும். முன்னேற்றம் என்பது ஒரு சாராரின் முன்னேற்றமாக இல்லாமல் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்கும். விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சமுதாயமே முன்னின்று நடத்தும்.

இவற்றைக் கொண்டுவருவதற்கு ‘இயந்திரவியல் மற்றும் வேதியல் நடைமுறைகள் மட்டும் போதுமானவை அல்ல. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப தொழில் நடைமுறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் செயல், அறிவு ஆற்றல்களும் பொருத்தமான மாறுதலுக்கு உட்பட்டாகவேண்டும்.’

இது எப்பச் சாத்தியப்படும்? ‘மொத்த சமுதாயத்தாலும் தொழில் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும். ஒரே பொதுத் திட்டத்துக்கு ஏற்ப உற்பத்தி கொண்டு செலுத்தப்படும். இதற்கு மனிதர்கள் பன்முகத் தேர்ச்சி உடையவர்களாக பயிற்றுவிக்கப்படுவதும் அவர்களின் பல்வேறு திறமைகளும் சமச்சீராக வளர்க்கப்படுவதும் மொத்த உற்பத்திக் கட்டமைவையும் தெளிவாக காணக்கூடியவர்களாக அவர்கள் இருப்பதும் முன்னிபந்தனையாகும்.’

எங்கெல்ஸ் தொடர்கிறார். ‘ஒருவரை விவசாயியாகவும், அடுத்தவரை காலணி தயாரிப்பவராகவும், மூன்றாமவரை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவரை பங்குச் சந்தையை இயக்குபவராகவும் இருத்தி வைத்திருக்கும் உழைப்பு பிரிவினையானது, அதிகரித்த அளவிலான இயந்திரப் பயன்பாட்டால் ஏற்கெனவே பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இந்த உழைப்பு பிரிவினை முற்று முழுவதாக மறைந்துவிடும்.’

காலம் முழுவதும் சிலர் உழைப்பாளிகளாகவும் சிலர் அவர்களை நிர்வகிப்பவர்களாகவும் மட்டும் இருக்கவேண்டிய நிலைமை இராது. இளைஞர்கள் ஒரு கிளையில் இருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாறக்கூடியவர்களாக வளர்ச்சி பெறுவார்கள். ‘கம்யூனிச சமுதாயம், தனது உறுப்பினர்கள் அனைவரும் தமது புரிந்து கொள்ளும் ஆற்றலைக் கொண்டு தமது திறன்களை வளர்த்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும். இவை நடந்தேறும்போது வர்க்கங்கள் வேறு வழியின்றி மறைந்துபோகும்.’

வர்க்கங்கள் மறைந்துவிட்டால் கிராமம், நகரம் போன்ற வேறுபாடுகள் மறையும். ஒரே படித்தான, அனைவருக்குமான வளர்ச்சி சாத்தியப்படும். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலை மாறும். தொழில் சார்ந்த மக்கள் நகரங்களில் குவியும் வழக்கம் ஒழியும். விவசாயம், தொழில் இரண்டும் பின்தங்கிய நிலையில் இருக்காது. அவற்றில் ஈடுபடுவர்கள் பின்தங்கியவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இராது.

கம்யூனிச சமூகத்தில் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கோரப்படும். திட்டமிட்ட ரீதியில் உற்பத்தி சக்திகள் மேம்படுத்தப்படும். அனைவருடைய தேவைகளும் ஒன்றுபோல் தீர்க்கப்படும். அனைவருடைய தேவைகளுக்காக அனைவரும் உழைப்பைச் செலுத்தவேண்டியிருக்கும். அனைவருக்கும் தொழிற்கல்வி அளிக்கப்படும். பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளில் அனைவருக்கும் பயிற்சியளிக்கப்படும். அனைவருடைய பன்முகத் திறன்களும் வெளிக்கொணரப்படும்.
கம்யூனிசம் குடும்ப உறவுகளுக்குள் தலையிடுமா? தனிப்பட்ட சுதந்தரத்தை மறுக்குமா? எங்கெல்ஸ் பதிலளிக்கிறார். ‘தனி நபர்களின் உறவுகள் முற்றிலும் தனிப்பட்டவர்களுக்கு இடையிலான விஷயமாக இருக்கும்.’ அதே சமயம் தனியுடைமையை ஒழிக்கும்போது அத்தோடு தொடர்புடைய சில சமுதாய மதிப்பீடுகளும்கூட உடைபடும். அதன் தாக்கம் குடும்பத்திலும் எதிரொலிக்கும். ஆனால் அது ஆரோக்கியமானதாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு, பெண்கள் ஆண்களையும் குழந்தைகளையும் சார்ந்திருக்கும்படியான நிலை இருக்காது. பாலின வேறுபாடு இருக்காது. பெண்கள் பொதுவுடைமையாக்கப்படுவார்கள் என்று அறக்கூச்சலிடுபவர்கள் அற்பர்கள் என்கிறார் எங்கெல்ஸ். பெண்களைப் பொருளாக பாவிப்பவர்களாலேயே இவ்வாறு சிந்திக்க முடியும். ‘உண்மையைச் சொல்வதானால், கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்காது. நேரதிராக, விபசாரத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதன்மூலம் பெண்கள் பொதுவாக்கப்படுவதையே வேரறுக்கும்.’

(அடுத்த பகுதி : ஏன் தேவை மார்க்சியம் ?)

முந்தைய பகுதிகள் :

மார்க்ஸ்-எங்கெல்ஸ் : அறிமுகம்
மார்க்ஸ்-எங்கெல்ஸ் : அடிப்படைகள் 1
மார்க்ஸ்-எங்கெல்ஸ் : அடிப்படைகள் 2

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : அடிப்படைகள் 1

karl-marx-wikimedia-commonsபுரட்சி / அத்தியாயம் 9

உண்மைதான், மார்க்சியத்தை அவ்வளவு சுலபத்தில் ஒருவர் படித்துப் புரிந்துகொண்டுவிடமுடியாதுதான். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறை எழுதிச்செல்லும்போது, ‘மார்க்சியம் கற்பது என்பது கற்பாறைச் சுனையிலிருந்து நீர் எடுப்பதாகும்’ என்று குறிப்பிடுகிறார் வெ. சாமிநாத சர்மா. இங்கிலாந்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளரும் பேச்சாளருமான மாரிஸ் கார்ன்ஃபோர்த் இந்தச் சிக்கலையும் அதற்கான தீர்வையும் தனது நூல் ஒன்றில் விவரிக்கிறார். மார்க்சிய இலக்கியங்கள் வாசிப்பதற்கு கடினமாக இருப்பது‘விஷயத்தின் கடினமான தன்மையால் ஏற்படுகிறது. சில சமயங்களில் பழக்கமில்லாத சொற்களாலும் நேர்கிறது… இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ளும்போது, குறிப்பிட்ட இடத்தில் அழுந்தி சிக்கிக்கொள்ளதீர்கள். அந்தப் பகுதியை நீங்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் தொடர்ந்து மேற்கொண்டு படியுங்கள். கடினமான பகுதி முடிவுற்றதும் மீண்டும் நீங்கள் வழித்தடத்துக்கு வருவதை உணர்வீர்கள். இன்னும் விரிவான படிப்புடனும் விஷயத்துக்கு இன்னும் அதிகமான பரிச்சயத்துடனும் நீங்கள் அந்த நூலுக்கு மீண்டும் திரும்பலாம்.’

மார்க்சியத்தைப் புரிந்துகொள்வது என்பது ஒருசில சொற்றொடர்களைப் புரிந்துகொள்வதோ ஒருசில இலக்கணங்களையோ சூத்திரங்களையோ மனப்பாடம் செய்துகொள்வதோ அல்ல. ‘மாறாக, சோஷலிசத்துக்கான போராட்டத்தின் போக்கில் எவ்வாறு மார்க்சியத்தின் கோட்பாடுகள் வளர்க்கப்பட்டன, நமது பங்குக்கு நமது சொந்தப் போராட்டத்திலும் எவ்வாறு நாம் நடைமுறைப்படுத்தவும் வளர்க்கவும் முடியும் என்பதைக் கற்றறிவதாகும். எந்த அளவு நாம் நமது மார்க்சியக் கல்வியை முன்னேற்ற முடியுமோ, அந்தளவு நன்றாக நமது நடைமுறை அரசியல் வேலைக்கு நம்மைத் தயாரித்துக் கொள்கிறோம். அதே சமயம் எந்த அளவு நாமே அரசியல் அனுபவங்களைப் பெறுகிறோமோ அந்த அளவு நாம் மார்க்சியத்தின் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் நம்மை மேலும் நன்றாகத் தயாரித்துக் கொள்கிறோம்.’

கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் தங்கள் சொந்தப் போராட்டங்களின் ஊடாகத்தான் கம்யூனிசத்தைக் கண்டடைந்தார்கள். வாழ்க்கை வேறு, தத்துவம் வேறு என்று பிரித்து பார்க்காமல் இரண்டையும் பிணைத்துப் புரிந்துகொண்டவர்கள் இவர்கள். ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்து அல்லது ஏதோ சில நிகழ்வுகளின் அடிப்படையில் அவர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறிவிடவில்லை. தத்துவம், வரலாறு, பொருளாதாரம், சமூக அறிவியல், இலக்கியம் என்று விரிவாகவும் ஆழமாகவும் ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தியும் அவர்கள் கற்றனர். தவிரவும், மக்களிடம் இருந்தும் அவர்கள் பாடம் படித்துக்கொண்டார்கள். பண்டைய கிரேக்க வரலாறாக இருந்தாலும் சரி, ஹெகலின் தத்துவமாக இருந்தாலும் சரி; நடப்பு அரசியல், சமூக நிகழ்வுகளோடும் நடைமுறை வாழ்வின் பிரச்னைகளோடும் அவற்றைத் தொடர்புபடுத்தியே சிந்தித்தனர்.

முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம்; ஆளும் வர்க்கம், அடிமை வர்க்கம். இந்த இரண்டில் எதை ஆதரிக்கவேண்டும் என்பதில் அவர்களுக்குக் குழப்பங்கள் இருக்கவில்லை. ஏன் தொழிலாளர் வர்க்கத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் உயர்த்திப் பிடித்தனர்? தொழிலாளர்களுக்காகப் போராடுவதை எப்படி மக்களுக்காகப் போராடுவது என்று அவர்கள் எடுத்துக்கொண்டனர்? மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய தியொடோர் ஓய்செர்மான் எழுதுகிறார். ‘முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அடித்தளங்களை, அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியார் உடைமை, முதலாளித்துவப் போட்டி, சுரண்டல், உற்பத்தியில் அராஜகம் ஆகியவற்றை ஒழித்துக் கட்டாமல் தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்ளமுடியாது. இந்தக் காரணத்தாலேயே தொழிலாளி வர்க்கத்தின் சமூக விடுதலையானது, அதே சமயத்தில் சகல உழைப்பாளி மக்களுடைய, சகல சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய சமூக விடுதலையையும் இயல்பாகவே ஏற்படுத்துகிறது.’ தொழிலாளர்களின் விடுதலை உழைக்கும் மக்களின் விடுதலையாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாகவும் திகழும் என்பதை மார்க்ஸும் எங்கெல்ஸும் கண்டுணுர்ந்த அந்தத் தருணம் முக்கியமானது.

மார்க்சியம் என்பது வெறும் தத்துவம் மாத்திரமல்ல என்கிறார் வெ. சாமிநாத சர்மா. ‘மார்க்சியம் என்பது மனித வாழ்க்கையை பண்படுத்திக் காட்டுகிற ஓர் ஒழுங்குமுறை. மானிட ஜாதியின் சரித்திரத்தைப் புதிய உருவத்தில் காட்டும் கண்ணாடி. பொருளாதாரத்தை முக்கிய அடிப்படையாகக் கொணட சமுதாயத்தின் தோற்றம். முதலாளித்துவத்தின் முடிவு இன்னபடிதான் ஆகும் என்று அறுதியிட்டுச் சொல்கிற இறுதி வாசகம்… மார்க்ஸின் முடிபுகளைச் சிலர் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவன் அந்த முடிபுகளுக்கு வந்த வழியை யாரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.’

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் எந்த வழியில் பயணம் செய்து தங்கள் முடிவுகளைக் கண்டைந்தார்கள் என்பதை ஆராயும்போது அவர்களுடைய ஆளுமையும் சிந்தனையோட்டமும் வளர்ந்த கதையும் நமக்குக் கிடைக்கிறது.

கார்ல் மார்க்ஸ் தனது டாக்டர் பட்ட ஆய்வுக்காக டெமாக்ரிடஸ், எபிக்யூரஸ் என்னும் இரு கிரேக்கத் தத்துவஞானிகளை எடுத்துக்கொண்டு ஒப்பீடு செய்தார். டெமாக்ரடிஸைவிட எபிக்யூரஸ் மார்க்ஸைக் கவர்ந்ததற்குக் காரணம் டெமாக்ரடிஸ் உறுதியானவராக, மாற்று கருத்துகளுக்கு இடம் கொடுக்காதவராகத் திகழ்ந்தார். இப்படிப்பட்ட உறுதித்தன்மை மனித சுதந்தரத்தை மறுக்கிறது என்பது மார்க்ஸின் கருத்து. அதேபோல், கிரேக்கப் புராணத்தில் வரும் டைட்டன் வீரன் புரோமீதியஸ்மீது மார்க்ஸுக்கு அபிமானம் இருந்தது. களி மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கியவன் இவன். கடவுளிடம் மட்டுமே குவிந்திருந்த நெருப்பைத் (செல்வம் என்றும் கொள்ளலாம்) திருடி, பொது மக்கள் பயன்பாட்டுக்காக ‘மறுவிநியோகம்’ செய்தவன். ஆக, மனிதன் தோன்றியதற்கு மட்டுமல்ல அவன் முன்னேறியதற்கும் நாகரிகமடைந்ததற்கும்கூட புரோமீதியஸ்தான் மூலக்காரணம். ‘எளிமையாகச் சொல்லவேண்டுமானால், நான் அனைத்து கடவுள்களையும் வெறுக்கிறேன்’ என்கிறான் புரோமீதியஸ். ‘கல்லோடு சேர்த்து என்னைப் பிணைத்திருக்கும் சங்கிலியோடு இருப்பேனே ஒழிய, ஜீயஸின் (கடவுள்களின் தந்தை) அடிமையாக ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்’ என்னும் புரோமீதியஸின் வாசகத்தை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஃபிரெட்ரிக் எங்கெல்ஸின் ஆரம்ப கால ஆதர்சனம் பழங்குடி அமெரிக்க இந்தியர்கள். பீதோவன் பிடிக்கும். ஷெல்லியை ஜெர்மனியில் மொழிபெயர்த்தார். ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், இத்தாலியன் ஆகிய மொழிகளைத் துரிதமாகக் கற்றார். தனது 19வது வயதில், மதம் ஒரு மயக்கப் பொருள் என்று கண்டுகொண்டார் எங்கெல்ஸ். மதத்தை எதிர்த்து குரல் எழுப்பிய ஆங்கில சோஷலிஸ்டுகளைக் கண்டு பெருமிதம் கொண்டார். ஜனநாயகம் பற்றி தனது 23வது வயதில் எங்கெல்ஸ் இப்படி எழுதினார். ‘ஜனநாயகம் என்று பேசும் அனைத்து அரசாங்கங்களும் முரண்பாடுகள் கொண்டவை. அது ஒரு பொய். அது ஒரு போலித்தனம். இந்த வகை ஜனநாயகம் ஒரு கட்டத்தில் தவிர்க்கவியலாதபடி உடைந்து நொறுங்கும். அதன் முரண்பாடுகள் நிச்சயம் வெளியில் தெரியவரும். ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்று, அடிமை முறை. நிலவவேண்டும். அல்லது கம்யூனிசம் எனப்படும் நிஜமான சமநிலை, நிஜமான சுதந்தரம் நிலவவேண்டும்.’

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே சுதந்தரத்தை நேசித்தனர். இருவரும் வெவ்வேறு வழிகளில் பயணம் செய்து இந்த முடிவை வந்தடைந்தனர். மார்க்ஸ் தத்துவம் பயின்றுகொண்டிருந்தபோது, எங்கெல்ஸ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்தார். கவிதை எழுதினார். பீதோவனின் இசையில் மூழ்கிப்போனார். ஓவியங்கள் தீட்டினார். ஒரு கட்டத்தில் தவிர்க்கவியலாதபடி இருவரும் புத்தகங்களில் இருந்து கண்களை விலக்கி, தாம் வாழ்ந்து வந்த காலகட்டத்தையும் அதன் மக்களையும் வாசிக்கத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு தொழிலாளர்களின் துன்பமும் துயரமும் போராட்டமும்தான் தெரிந்தது. மார்க்ஸால் அதற்குப் பிறகு கிரேக்கத் தத்துவத்தில் மட்டும் மூழ்கிக்கிடக்கமுடியவில்லை. எங்கெல்ஸால் இசையை ரசிக்கமுடியவில்லை. கவிதை எழுத விருப்பமில்லை. இருவரும் சோஷலிசத்தின்மீது ஆர்வம் செலுத்தினர். அதே சமயம், இளவயதிலேயே அவர்கள் திடமான கம்யூனிஸ்டுகளாக மாறிவிட்டனர் என்று சொல்லமுடியாது.

இங்கேதான் நாம் அவர்களைக் கூர்மையாகக் கவனிக்கவேண்டும். கட்டுரைகள் எழுதவும் பதிப்பிக்கவும் தொடங்கியிருந்த எங்கெல்ஸ் திடீரென்று தனது 22வது வயதில் இனி எதுவும் எழுதப்போவதில்லை என்று முடிவு செய்தார். ‘நான் சுயமாகக் கற்றுக்கொண்ட ஒரு தத்துவவியலாளன். ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிக்கொள்வதற்கும் தேவைப்படும்போது அதைத் தற்காத்துக் கொள்வதற்கும் போதுமான விஷயங்களை நான் கற்றிருக்கிறேன். ஆனால், என் கருத்தாக்கத்தை முன்னிறுத்தி வெற்றிகரமாகப் போராடுவதற்கு தேவையானதை நான் இன்னமும் கற்கவில்லை.’

கம்யூனிசம் குறித்து முதல்முறையாக எழுதும்போது மார்க்ஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். ‘அதைப் பற்றி இன்னமும் விரிவாகப் படிக்கவேண்டியிருக்கிறது, அதைப் பற்றி ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிக்கொள்வதற்கு இன்னமும் ஆழமாக ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.’ இளவயது மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரையும் பற்றி கிரிஸ்டோஃபர் ஹில் எழுதும் ஒரு கட்டுரையில் காணப்படும் குறிப்புகள் இவை.

இங்கே நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் கண்மூடித்தனமாகவோ அல்லது வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலோ தங்கள் சித்தாந்தத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை. ஆனால் இன்றுவரை, மார்க்சியத்தை விமரிசிக்கும் பெரும்பாலானோர் மார்க்சியத்தை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களில்லை. அதே போல், மார்க்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் பலரும்கூட மார்க்சியத்தைக் கற்பதில் போதுமான ஆர்வம் செலுத்துவது இல்லை. தங்களுக்குத் தெரிந்த ஒரு சில விஷயங்களின் அடிப்படையில் இவர்கள் மார்க்ஸை ஏற்கவோ நிராகரிக்கவோ செய்கிறார்கள். கம்யூனிசத்தை நிராகரிப்பதற்கு அல்ல, அதை ஏற்பதற்கும்கூட நிறைய வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதையும் மார்க்ஸே அவ்வாறு கற்றுத் தேர்ந்தவர்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

மார்க்ஸ் தனது திருமணத்துக்குப் பிறகு அடுத்த இரு மாதங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அரசியல் சித்தாந்தம் மற்றும் வரலாற்றைத் தீவிரமாகக் கற்றுத் தேர்வதில் செலவழித்தார். அவருடைய வாசிப்பு வழக்கம் குறித்து சில வார்த்தைகள். காலை ஏழு மணிக்கு எழுந்திருப்பார். கணக்கில்லாமல் பல கோப்பை காபி அருந்துவார். அதற்குப் பிறகு தொடரும் வாசிப்பு பகல் இரண்டு மணி வரை நீளும். மதிய சாப்பாடு முடிந்ததும் மீண்டும் தொடங்கும் வாசிப்பு இரவு வரை ஓய்வின்றி தொடரும். இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு விருப்பமிருந்தால் சிறிது உலாவுவார். இல்லாவிட்டால் மீண்டும் படிப்பு. விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி வரை படித்துக்கொண்டே இருப்பார். மார்க்ஸின் படிக்கும் அறையை அவருடய மருமகன் Paul Lafargue கீழ்வருமாறு வர்ணிக்கிறார். ‘மார்க்ஸின் அறை தோட்டத்தின் பக்கமாக அமைந்திருந்தது. ஜன்னலுக்கு எதிர்புறத்தில் கணப்புச் சட்டி. அதன் அருகில் புத்தக அலமாரிகள். மேலே பத்திரிகைக் கட்டுகள், கையெழுத்துப் பிரதிகள் முதலியன கூரைவரை அடுக்கியிருக்கும்… பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றை ஒழுங்காக அடுக்கி வைக்கிறோமென்று யாராவது சொன்னால் அதற்கு மார்க்ஸ் இணங்க மாட்டார்… ஏதேனும் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டவேண்டுமென்றால், சட்டென்று குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தை எடுத்து தேவையான பக்கத்தை கண்டுபிடித்துவிடுவார்.’

மார்க்சியம் கடினமானது என்னும் சுலபமான காரணத்தைச் சொல்லி நகர்ந்துவிடும் மார்க்சிய எதிர்ப்பாளர்களும் ஆர்வலர்களும், மார்க்ஸ் ஒரு விஷயத்தை எப்படிக் கற்றுத் தேர்ந்தார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மார்க்சியம் வழிபாட்டுக்குரிய ஒரு தத்துவமோ கண்மூடித்தனமாக எதிர்க்கவேண்டிய ஒரு ஆபத்தான சித்தாந்தமோ அல்ல என்பது அதை வாசிக்கத் தொடங்கும்போதுதான் தெரியவரும்.

இந்தப் புரிதலோடு மார்க்சியத்தின் அடிப்படைகளுக்குள் நுழைவோம். அதற்கு லெனினின் சில அறிமுகக் குறிப்புகள் நமக்கு உதவக்கூடும். மார்க்சியத்தின் தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக்கூறுகளும் என்னும் தலைப்பில் மார்க்ஸின் முக்கியப் பங்களிப்புகளைப் பட்டியலிடுகிறார் லெனின். மாரிஸ் கார்ன்ஃபோர்த் வார்த்தைகளில் அவற்றைப் பார்க்கலாம்.

  • இயங்கியல் கண்ணோட்டத்தின்மூலம் பொருள்முதல்வாதத்தை ஆழப்படுத்தி வளர்த்தெடுத்தார் மார்க்ஸ். பொருள்முதல்வாதத்தை மனித சமுதாயத்தைப் புரிந்துகொள்ளும் முறையுடன் இணைத்து வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற அதன் முடிவுக்கு கொண்டு சென்றார்.
  • சமுதாயத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் மேல்கட்டுமானம் முழுவதும், சமுதாயத்தின் பொருளாதார ஒழுங்கமைவை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் காட்டினார்.
  • நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அமைப்பைப் கற்றறிந்தார். உபரிமதிப்பு கோட்பாடு அவருடைய பொருளாதாரத் தத்துவத்தின் மூலக்கல்லாகும். முதலாளித்துவத்தின் வளர்ச்சி, பண்டப் பொருளாதாரம் மற்றும் எளிய பரிவர்த்தனை ஆகியவற்றின் முதல் வித்துக்களிலிருந்து தொடங்கி அதன் உச்சபட்ச வடிவங்களுக்கும் பெருவீத உற்பத்திக்கும், சென்றடைவதைச் சித்திரித்துக் காட்டினார். கூட்டு உழைப்பின் மாபெரும் ஆற்றலை, முதலாளித்துவ அமைப்பு தோற்றுவிப்பதை எடுத்துக் காட்டினார்.
  • வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை விரித்துரைத்தார். தொழிலாளி வர்க்கம், புதிய சமூக அமைப்பைப் படைக்கும் வல்லமை படைத்த ஒரு சமூக சக்தியாகும் என்பதை எடுத்துக்காட்டினார்.

‘கார்ல் மார்க்ஸ் குறித்து’ என்னும் நூலில் மார்க்ஸின் போதனைகளை ஏழு தலைப்புகளில் பிரித்துக் காட்டுகிறார் லெனின். 1) பொருள்முதல்வாத தத்துவம், 2) இயங்கியல், 3) வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், 4) வர்க்கப் போராட்டம், 5) பொருளாதாரக் கோட்பாடு, 6) சோஷலிசம், 7) பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் போர்த்தந்திரங்கள்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

0

 

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : அறிமுகம்

புரட்சி / அத்தியாயம் 8

MarxEngels_4aகார்ல் மார்க்ஸ் மார்ச் 14, 1883 அன்று மரணமடைந்தபோது வாஷிங்டன் டிசி, பால்டிமோர், டென்வர், சின்சினாட்டி, அட்லாண்டா உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் வெளியான பத்திரிகைகள் அவரது மரணச்செய்தியை வெளியிடவில்லை. கார்ல் மார்க்ஸை அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என்பதல்ல காரணம். அமெரிக்காவின் பிரபலமான நியூ யார்க் டிரிப்யூன் இதழின் அயல்நாட்டு நிருபராக 1851 தொடங்கி 1862 வரை மார்க்ஸ் பணியாற்றியிருக்கிறார். தனது பெயரிலும் ‘லண்டன் நிருபர்’ என்னும் பெயரிலும் அவர் எழுதிய கட்டுரைகள் இரண்டு லட்சம் அமெரிக்க வாசகர்களுக்குப் பரிச்சயமானவை. இவற்றில் பல கட்டுரைகள் தலையங்கமாகவும் வெளிவந்திருக்கின்றன. இருந்தும் கார்ல் மார்க்ஸ் பற்றி ஒரு தலையங்கம் அல்ல, ஓர் அஞ்சலிக் கட்டுரை அல்ல ஒற்றை வரிச்செய்தி வெளியிடுவதும்கூட அநாவசியமானது என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

மார்க்ஸ் எழுதிய நியூ யார்க் டிரிப்யூன் அமெரிக்காவின் சக்திவாய்ந்த பத்திரிகையாக அறியப்பட்டிருந்த சமயம் அது. 1873ல் ஒயிட்லா ரீட் என்பவர் அதன் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அடிப்படையில் பழமைவாதியான அவர் தனது பத்திரிகையையும் அவ்வாறே வடிவமைக்க விருப்பம் கொண்டிருந்தார். டிசம்பர் 1878ல் வெளியான ஒரு தலையங்கம், ‘ஜெர்மானிய சோஷிலிச சக்திகளை இங்கிருந்து அகற்றியாகவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது. அதற்கு முன்பு, சார்லஸ் ஏ டானா என்பவரின் தலைமையில் டிரிப்யூன் இருந்தவரைதான் கார்ல் மார்க்ஸ் அதில் எழுதிக்கொண்டிருந்தார். மார்க்ஸை அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகம் செய்ததில் டானாவின் பங்கு முக்கியமானது. ஆனால் இவரும்கூட பிற்காலத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, பழமைவாதச் சிந்தனையோட்டத்துக்குத் தாவிவிட்டார். நியூ யார்க் சன் பத்திரிகையைக் கைப்பற்றியபிறகு டானாவுக்குத் தொழிலாளர் அமைப்புகள்மீதும் சோஷலிசத்தின்மீதும் போராட்டங்கள்மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் மார்க்ஸைத் தனிப்பட்ட முறையில் நேசித்த காரணத்தால் தனது பத்திரிகையில் அவர் மார்க்ஸின் மரணச்செய்தியை இடம்பெறச் செய்தது தனிக்கதை.

கார்ல் மார்க்ஸின் மரணச் செய்தியை வெளியிடத்தான் வேண்டுமா, அப்படியே வெளியிடுவதானாலும் அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது, எப்படி மதிப்பிடுவது என்று குழம்பித் தவித்த சில அமெரிக்கப் பத்திரிகைகள் இறுதியில் அவரைப் பற்றி ஒன்றுமே எழுதாமல் அமைதியாக இருந்துவிட்டன. சார்லஸ் டானாவைப் போல் மார்க்ஸ்மீது சில பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுதாபம்கூட இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் விரும்பியிருந்தாலும்கூட அவர்கள் பணியாற்றும் பத்திரிகைத் தலைவர்களின் அரசியல் கண்ணோட்டத்துக்கு விரோதமாக எந்தச் செய்தியையும் வெளியிட்டிருக்கமுடியாது.

இறுதியில் நியூ யார்க் சன் இப்படி எழுதியது. ‘வியாழக்கிழமை நிகழ்ந்த காரல் மார்க்ஸின் மரணம் கிட்டத்தட்ட கவனிக்கப்படவில்லை. சமீபத்தில் மறைந்து ஜெனரல்கள், தலைவர்கள், ராஜதந்திரிகளைப் போல் அவரது மரணம் முறைப்படி பதிவுசெய்யப்படவில்லை. ஆனால் அவர்களைப் போலவே மார்க்ஸும் நீண்டகாலம் நினைகூறப்படுவார் என்றே தோன்றுகிறது. நம் காலத்தின் சோஷலிச இயக்கத்தை முன்னின்று நடத்திய தீர்க்கதரிசி என்று ஒருவரை அழைக்கவேண்டுமானால் அவர் கார்ல் மார்க்ஸ் மட்டும்தான்… கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கு தொழிலாளர் இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர்… ஐரோப்பா முழுவதிலுமுள்ள உழைக்கும் பிரிவினரை ஒரு சீரான, வலுவான சமூகச் சக்தியாக மாற்றிக்காட்டியவர். அவர்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த கார்ல் மார்க்ஸின் வார்த்தைகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை. ‘பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை தங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. ஆனால் அவர்கள் வெல்வதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது. ‘ என்றார் மார்க்ஸ். எனவே அனைத்து நாடுகளைச் சேர்ந்த பாட்டாளிகளும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிணையவேண்டும்.’

அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, பிரான்ஸ், ஹாலந்து, ரொமேனியா, ஸ்பெயின், இத்தாலி, ரஷ்யா என்று உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கார்ல் மார்க்ஸின் மரணத்தை தங்கள் வாழ்நாளில் ஏற்பட்ட ஒரு பெரும் இருளாகவே கண்டனர். மார்க்ஸ் மறைந்த மறுநாள் சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் நாளேடு (New Yorker Volkszeitung) இவ்வாறு எழுதியது. ‘கார்ல் மார்க்ஸ் இறந்துவிட்ட செய்தி பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு முக்கிய உலக நிகழ்வாகவே இருக்கும். இயந்திரங்களின் ஓயாத இறைச்சல்களிலும், இருள் படிந்திருக்கும் பணியிடங்களிலும், சுட்டெறிக்கும் சூளைகளிலும் ‘எஜமான நாடுகளிலும்’ வாழும் தொழிலாளர்களுக்கு இது ஒரு துக்க தினம். மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு மத்தியில் சிந்திக்க மறக்காமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு வளமான எதிர்காலத்துக்காக உறுதியுடன் போராடும் தொழிலாளர்களுக்கு இன்றைய தினம் துக்க தினம்.’

கலீலியோ, நியூட்டன், வால்டோர் ஆகியோரின் வரிசையில் ‘கார்ல் மார்க்ஸின் பெயரும் திடமான புகழுடன் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்’ என்றது வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள், நியூ யார்க். ஆம்ஸ்டர்டாமில் இருந்து எழுதிய ஒரு கட்டுரையாசிரியர், சார்லஸ் டார்வின் இயற்கை அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்போடு பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஆற்றிய பங்களிப்பை ஒப்பிட்டார். ‘இந்த இரு பெயர்களும் ஒரு சாரார் மத்தியில் ஆழ்ந்த வெறுப்பையும் இன்னொரு சாரார் மத்தியில் நன்றியுணர்வையும் ஏற்படுத்துகின்றன.’ மார்க்ஸைப் புரிந்துகொள்வதற்கான முதல் படி இது.

கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 – 14 மார்ச் 1883) மறைந்து 130 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் வாழ்ந்து, விட்டுச்சென்ற உலகம் இன்று வெகுவாக மாறிவிட்டது. இரண்டு உலகப் போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மாபெரும் பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ளன. மைக்ரோசிப் தொடங்கி அணு குண்டு வரை பல கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களிலும் கார்ல் மார்க்ஸின் 19ம் நூற்றாண்டுக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில், எதற்காக கார்ல் மார்க்ஸ் இன்று நமக்குத் தேவைப்படுகிறார்? அவரது வாழ்வையும் சிந்தனைகளையும் இன்று நாம் நினைவுகூரவேண்டிய அவசியம் என்ன?

இரண்டு காரணங்களைச் சொல்லமுடியும். முதலாவதாக, நாம் உலகைக் காணும் முறையை அடியோடு மாற்றியமைத்தவர் மார்க்ஸ். மார்க்ஸைத் தெரிந்துகொள்ளாமல் போவதன்மூலம் உலகின் ஒரு பரிமாணம் நமக்குக் கிடைக்காமல் போகிறது. மார்க்ஸ் ‘ஓர் எளிய உண்மையை’ முன்மொழிந்தவர் என்கிறார் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ். அந்த எளிய உண்மை இது. ‘அரசியல், அறிவியல், கலை, மதம் ஆகியவற்றை நாடிச்செல்வதற்கு முன்னால் ஒரு மனிதனுக்கு முதலில் உணவும், நீரும், உடையும் இருப்பிடமும் தேவைப்படுகிறது.’ இந்த அடிப்படைத் தேவைகளும்கூட மனிதனுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்னும் கேள்வியை எழுப்பி அதற்கு விடை காண முயன்றது மார்க்சியம். இரண்டாவதாக, எங்கெல்ஸ் குறிப்பிட்டதுபோல், ‘எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சியாளர்.’ மார்க்ஸைப் பொருத்தவரை கோட்பாடு என்பது உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கோட்பாடு மட்டுமல்ல. உலகைச் சிறிதளவேனும் மாற்றுவதற்கான ஒரு கருவியும்கூட.

அதனால்தான் மார்க்சியம் ஒரு தத்துவமாக முன்மொழியப்பட்ட நாள் தொடங்கி அதற்கான மறுப்புகளும் எதிர்ப்புகளும் வலுக்கத் தொடங்கிவிட்டன. மார்க்சியத்தை ஏன் நடைமுறைப்படுத்த இயலாது என்பதை விளக்க முனையும் பல நூறு அறிவுஜீவிகள் பல்லாயிரம் சிறு, பெரு நூல்களை எழுதிக்குவித்துவிட்டார்கள். தாராளமயமும் உலகமயமாக்கலும் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவிவிட்ட இன்றைய காலகட்டத்திலும்கூட விடாப்பிடியாக மார்க்சியத்தை பலர் அதே தீவிரத்துடன் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘இந்தப் படைப்புகள் (மார்க்சியத்துக்கு எதிரான விமரிசனங்கள்) ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. மார்க்ஸின் படைப்புகள் பல புத்தகங்களில் விரியக்கூடியவை என்றாலும் அவருடைய கருத்துகள் அளவில் சுருக்கமானதுதான். அதனால்தான் ஒருசில அசலான விமரிசனங்களைக் கடந்து புதிதாகக் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு மேல் புதிதாக மார்க்சியத்தை விமரிசிக்க எதுவும் இல்லை.’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். இருந்தும், மார்க்சிய எதிர்ப்பு தொடர்வதற்குக் காரணம் அறியாமை என்கிறார் ஹாப்ஸ்பாம். மார்க்சின் படைப்புகளுக்கு ஜெர்மானிய மொழியில் அப்போதே வெளிவந்த விமரிசனங்களைத்தான் இன்னமும் பலர் வெவ்வேறு விதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது, அரசியல் காரணம். எதையும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால்தான் அது மக்களைப் பற்றிக்கொள்ளும் என்னும் விளம்பர உத்தியைத்தான் மார்க்சிய எதிர்ப்புக்கும் பலர் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் ஹாப்ஸ்பாம்.

ஒவ்வொரு தலைமுறையும் புதிது புதிதாக மார்க்ஸைக் கண்டறிந்து தாக்குதல் தொடுத்துக்கொண்டிருப்பதையும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி மார்க்சியத்தை நிராகரிப்பதையும் வைத்துப் பார்க்கும்போது, எப்படியாவது மக்களிடம் இருந்து மார்க்ஸை அந்நியப்படுத்திவிடவேண்டும் என்னும் முனைப்பு ஒரு சாராரிடம் நீடிப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்றும் மார்க்சியம் தோல்வியடைந்துவிட்டது என்றும் இன்றைய சூழலுக்கு மார்க்ஸ் தேவைப்படமாட்டார் என்றும் மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய கட்டாயத்துக்கு பல அறிவுஜீவிகள் தள்ளப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

அதே சமயம், முதலாளித்துவத்தை எதிர்த்த கார்ல் மார்க்ஸ் மட்டுமல்ல, முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களுமேகூட ஒப்புக்கொள்ளும் ஓர் மார்க்சிய உண்மை இது. ஒரு முதலாளி அல்லது முதலீட்டாளரை இயக்கும் ஒரே விசை பணம் சம்பாதிக்கவேண்டும் என்னும் விருப்பம்தான். இந்த விருப்பத்தால் உந்தப்பட்டு இயங்கும் உலகம்தான் இன்று நாம் காணக்கூடியது, நாம் வாழ்ந்துகொண்டிருப்பது. கடந்த இரு நூற்றாண்டுகளாக, அறிவுஜீவிகளும் சிந்தனையாளர்களும் இந்த வாழ்க்கைமுறைதான் சிறந்தது என்று சொல்லி வந்திருக்கிறார்கள். சிறந்ததுதான், ஆனால் யாருக்கு என்று கேள்வி எழுப்பினார் மார்க்ஸ்.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனும் ஓரளவு ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் பெருமளவிலான இயந்திரங்களை அறிமுகப்படுத்தி துரித தொழில்மயமாக்கலில் ஈடுபட்டுவந்தன. இதன் காரணமாக உற்பத்தி பெருமளவில் அதிகரித்தது. அதே சமயம், தொழிலாளர்கள் மனித இயந்திரங்களாக, கொடூரமான பணிச்சூழலில் நீண்ட நேரம் உழைக்கவேண்டி ய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர். பிரிட்டன் தொழிற்சாலைகள் குழந்தைகளையும் தொழிலாளர்களாக மாற்றி, அடிமைகளைப் போல் நடத்தியதை சார்லஸ் டிக்கன்ஸ் தனது படைப்புகளில் உயிர்ப்புடன் கொண்டுவந்திருக்கிறார்.

முதலாளித்துவ தொழில்மயமாக்கல் என்பது தீர்வல்ல, நவீன உலகின் பிரச்னைகளுக்கான தோற்றுவாய் என்பதில் கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் தொடக்கத்திலேயே தெளிவாக இருந்தனர். முதலாளித்துவ அமைப்பின் தவறுகளையும் போதாமைகளையும் வெளிப்படுத்தும் பணியையும் அந்த அமைப்பை அடிப்படையில் மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை வகுக்கும் பொறுப்பையும் இந்த இருவரும் முன்வந்து தாமாகவே ஏற்றுக்கொண்டனர்.

karl-marx2‘தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்தரமான அறிவே’ என்று தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளில் தொடக்க காலத்தில் எழுதினார் கார்ல் மார்க்ஸ். தனது 26வது வயதில் கார்ல் மார்க்ஸ் தனது பாத்திரத்தைக் குறித்து இவ்வாறு எழுதிவைத்தார். ‘நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும் என்பது குறித்த மிகத் தெளிவான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அனைத்தையும் இரக்கமற்ற முறையில் முதலில் விமரிசிக்கவேண்டும்.’ இரக்கமற்ற முறை என்பது என்ன? ‘வந்தடையப்போகும் முடிவு எப்படியிருக்கப்போகிறது என்பதைப் பற்றி அஞ்சாத வகையில் எங்கள் விமரிசனங்கள் இருக்கவேண்டும். அதிகாரத்தோடு மோதுவது குறித்த அச்சம் இல்லாதபடியும் இருக்கவேண்டும். ’

‘கார்ல் மார்க்ஸும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸும் தம் காலத்தின் மிக அவசரமான பிரச்னைகளை ஆராய்ந்தனர். அவர்கள் முதலாளித்துவ சமூக, பொருளாதார அமைப்பின் சாராம்சத்தைப் பகுப்பாய்வு செய்தனர். சோஷலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் கடைபிடிக்கவேண்டிய போர்த் தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தின் அடிப்படைகளை வரையறுத்தார்கள். எதிர்கால கம்யூனிச சமூகத்தின் முக்கியமான கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்கள்.’ என்கிறார் அந்திரரேயெவ் என்னும் ரஷ்ய வரலாற்றாசிரியர்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரையும் ஒரே பெயராக, ஒரே பதமாகப் பயன்படுத்தும் அளவுக்கு இருவரும் நீடித்த நண்பர்களாக, ஒவ்வொன்றையும் பற்றி ஒன்றுபோல் சிந்தித்தவர்களாக இருந்தனர். ஒருவருடைய படைப்பை இன்னொருவர் திருத்தி எழுதுவார். மார்க்ஸ் என்று கையெழுத்திடப்பட்ட கட்டுரையை எங்கெல்ஸும், எங்கெல்ஸ் பெயரில் வந்த கட்டுரையை மார்க்ஸும் எழுதியிருப்பார். மார்க்ஸின் மரணம் வரை நாற்பதாண்டுகாலம் நீடித்த நட்பு அது. கார்ல் மார்க்ஸின் எழுத்துகளில் இருந்து எங்கெல்ஸின் எழுத்துகளைப் பிரித்தெடுக்கமுடியாது. மட்டுமின்றி, மார்க்ஸ் என்னும் ஆளுமையையும்கூட எங்கெல்ஸைப் பிரித்தெடுத்துவிட்டு ஆராய்ந்துவிடமுடியாது. எனவே அவர்களை இருவராக அல்லாமல் ஒருவராகக் கருதி இந்தப் பகுதி தொடங்குகிறது.

(அடுத்த பகுதி : மார்க்ஸ் – எங்கெல்ஸ் : அடிப்படைகள்)