No announcement available.

ஹரிஜன்

15245217_2பறையர்கள் / அத்தியாயம் 20

1936ல் ‘ஏலா’ என்ற இடத்தில் ஷெட்யூல்டு சாதியினர் மாநாடு அம்பேத்கர் தலைமையில் நடந்தது. இதில் தீண்டாமைக்கு எதிராக மதம் மாறுங்கள் என்றும், தான் இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக சாகமாட்டேன் என்றும் அம்பேத்கர் கூறினார். இதனைத் தடுக்க மகாத்மா காந்தி சில உத்திகளைக் கையாண்டார். அதில் ஒன்று தான் 1938ல் ‘ஹரிஜன்’ என்ற சொல்லில் ஷெட்யூல்டு சாதியினரை அழைக்க வேண்டுமென்று சொல்லியது.

இச்சொல் கூடாதென்று அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். அரிசன் என்பதற்கு ‘கடவுளின் பிள்ளைகள்’ என்று பொருள். அன்றைய காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த ஜெகஜீவன்ராமும் எதிர்த்தார்.

‘ ஹரிஜன் ’ என்ற சொல்லை நாங்கள் ஏற்க முடியாது. இது ஷெட்யூல்டு சாதி மக்களையும், மற்ற இந்துக்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்கவே செய்யும். அதனால் நன்மைக்குப் பதில் தீமையே விளையும் என்றும் சொன்னார். இதற்காக ஜெகஜீவன்ராமை கட்சியைவிட்டு விலகுமாறு நோட்டீசு அனுப்பப்பட்டது. அரிசன் என்ற சொல்லுக்கான எதிர்ப்பு நாடு முழுவதும் நீடித்தபோதும் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
மராட்டியம், பிகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் ‘ ஹரிஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளன.

இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்த தீண்டப்படாதார் பல பெயர்களில் தீண்டப்படாதாராக வாழ்ந்தாலும் காந்தி அவர்களுக்குப் பொதுவாக அளித்த ‘ஹரிஜன்’ என்ற புதுப்பெயர் இவர்களைத் தனியே ஒதுக்கிவைத்தது. அனைவராலும் எளிதாகக் கண்டறியச் செய்தது. தொடாமல் ஒதுக்கி வைக்கவும், புறந்தள்ளவும், அணுகவிடாமல் பார்க்காமல் தடுத்து நிறுத்தவும், மக்களோடு கலந்து வாழவிடாமலும் சுலபமாகத் தடுத்து வந்தது.
ஹரிஜனர் வழக்காறு:

1. அனுப்பர்களின் சாவுச் சடங்கில் கோடி வெள்ளிப் போடுதல் (பிணத்தின் மீது துணிப் போர்த்துதல்) உரிமையைக் கன்னட அரிசனங்கள் பெற்றுள்ளனர்.

2. தொட்டிய நாயக்கர்களும் தெலுங்கு ஹரிஜனங்களும் உடன் பிறந்தவர்கள். நாயக்கச் சகோதரர் இருவருள் இளையவர் கன்றுக்குட்டியைச் சமைத்து உண்டதால் ஹரிஜன் என விலக்கப்பட்டான்.

3. ஈஸ்வரன் களத்துமேட்டில் வேலை செய்தபோது நெற்றி வியர்வையைத் தென்னைமரத்தின் மீது தெளிக்க, அம்மரத்திலிருந்து ஹரிஜனர் வெளிப்பட்டனர்.

‘சமூக அந்தஸ்து கிடைக்காத நிலையில் ஹரிஜனங்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தைத் தராது நமது ஜனநாயகத்தின் கூரையை வேய்ந்து கொண்டே போவது வீண்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசியுள்ளதை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்கு காந்தி தன் வாழ்நாளின் பிற்காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்’ என்று காந்திஜியினுடைய சீடனும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ஸ்ரீநாராயண பிள்ளை குறிப்பிடுகிறார். அப்படியானால் காந்தியடிகள் தன் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஹரிஜன்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

0

பறையரைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுவர். ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று பாடினார் ஔவையார். வறுமைக்கு ஒப்பான கொடுமை உடையது உலகில் என்றுதான் உள்ளது. அதுதான் வறுமை என்றார் வள்ளுவர். வறுமையின் கொடுமையை உணர்ந்த இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர். இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் பல உணவைச் சேகரித்து வாழும் நிலையிலிலிருந்து மேற்கொண்டு முன்னேறவில்லை.

மனிதர்களின் இருப்பு, இடம், காலமென்ற இருபெரும் பொருளால் வரையறுக்கப்படுகிறது. எனவே அதிகாரத்தை கட்டமைக்கிறவர்கள், தாங்கள் அதிகாரம் செலுத்துபவர்களின் நடமாடும் இடத்தை, காலத்தை வரையறைக்குள் கொண்டு வருவதில் கவனமாகச் செயல்படுகின்றனர். இந்தியச் சாதிச் சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நடமாடும் வெளியை வரையறுப்பவர்கள் அதிகாரம் செலுத்தும் ஆதிக்கச் சாதியினரே.

ஒடுக்குமுறை அரசியலின் மற்றொரு அதிகாரத் தளம் பண்பாட்டுத் தளமாகும். ஒடுக்குகின்ற தன்னுடைய வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை உயர்ந்ததாகவும், ஒடுக்கப்படுகின்ற மக்களின் பழக்க வழக்கங்களைத் தாழ்ந்ததாகவும் புனைந்து அம்மக்களுக்கும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை உளவியல் ரீதியாகவே வடிவமைத்து விடுவதில் வெற்றி அடைந்து விடுகிறது.

பொருள் ஆதாரத்தைப் பறிப்பது, வேலைப்பிரிவினை அமைப்பது, நடமாடும் வெளியை வரையறுப்பது, மொழியைப் பிடுங்குவது, கல்வியைப் பறிப்பது முதலிய பல தந்திரங்களை ஆதிக்கச் சாதியினர் கையாண்டுள்ளனர். அதனால் தாழ்த்தி வைக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

‘இந்தியர்களே அறியாமை இருளில் மூழ்கியுள்ள, கல்வி அறிவு இல்லாத அந்தத் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை மறந்து விடாதீர்கள்! அவர்கள் என் சகோதரர்கள்’ என்றார் விவேகானந்தர். அவர் போதனை ஏற்கப்பட்டுள்ளதா?

0

பாரசீக எல்லையிலிருந்து கிழக்கே வங்காள விரிகுடாக் கடல் வரை இந்திய சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த மாபெரும் முதற்பெரும் மன்னர் சந்திரகுபதர். இவர் தாய்வழியில் தாழ்த்தப்பட்டவர் என்று சில நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கருத்துப்படி, ராஜவம்சத்தில் பிறந்த சந்திரகுப்தரின் தந்தை ‘மௌரா’ என்னும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் காதல் வயப்பட, அவர்களுக்குப் பிறந்தவர்தான் சந்திரகுப்தர் என்றும், ‘மௌரா’ என்கிற பெயரிலிருந்துதான் ‘மௌரிய’ என்பது வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

சந்திரகுப்தரும், நந்த மன்னர்களும் பங்காளிகள் என்பதால் இவர்களுக்கிடையே நடந்த பங்காளிச் சண்டையால் நந்தர்களின் ஆட்சியை அழித்து மௌரியர் ஆட்சி தொடங்கியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒரு காலகட்டம்தான் சுதந்தரமும் பெருமையும் புகழும் கொண்டதாக இருக்கிறது. அது மெரியப் பேரரசின் காலமே. மற்ற காலங்களில் எல்லாம் தேசம் தோல்வியில் துவண்டு கிடந்தது. அது ஏன்? மௌரியர் காலத்தில் நான்கு வர்ண அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. மக்களில் பெரும்பான்மையினரான சூத்திரர்கள் அப்பொழுதுதான் தங்களுக்குரிய நிலையை எட்டினார்கள் – நாட்டின் ஆட்சியாளர் ஆனார்கள். இந்த நாட்டின் பெரும்பான்மையினரான மக்களின் அவல நிலைக்குக் காரணமான நால்வர்ண அமைப்பு மேலோங்கிய காலம் – தோல்வியும் அறியாமை இருளும் மேலோங்கிய காலம்.

சங்ககாலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வியைப் பற்றிப் பேசும் அதிகாரங்கள் நான்கு திருக்குறளில் சேர்க்கப்பட்டுள்ளன (குறள் 40-43 அதிகாரங்கள்). குற்றமறக் கற்க வேண்டுமென்றும், கற்றபின் தாம் கற்ற வழியே நடக்க வேண்டும் என்றும், கல்வி கற்க கற்க அறிவு சுரந்துகொண்டே போகும் என்றும், கல்வி கற்ற ஒருவனுக்கு உலகம் முழுவதும் தன் சொந்த ஊராகவே தோன்றும் என்றும், கல்விச் செல்வம் ஒன்றே அழியாச் செல்வமாம் என்றும், கல்லாதவன் மேனியழகு ஒர் பொம்மையின் அழகுக்கு நிகராம் என்றும், கல்வியை விடக் கேள்வியே மேம்பட்டதென்றும், யார் யார் என்ன சொன்னாலும், அதை ஆராய்ந்து அதனுள் காணக்கூடிய உண்மையை ஓர்வதே நல்லறிவு என்றும் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட ஒரு சிலரின் உரிமையாக இருந்ததில்லை. எக்குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும், வறியோரும், மன்னரும், எளிய குடிமக்களும் ஆகிய ஆண்களும் பெண்களும் கல்வியைத் தேடிப் பெற்றனர்.  பல குலத்தைச் சார்ந்த புலவர்கள் தமிழகமெங்கும் உலவிவந்தனர். அதன்பின் வேத நெறியைப் பின்பற்றிய பார்ப்பனர்கள் தங்கள் தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள கையாண்ட மிகக் கடுமையான வழிகளில் ஒன்றுதான் கல்வியைத் தமது தனியுடமையாக்க முயன்ற முயற்சியாகும். பார்ப்பனர்களின் இம்முயற்சியை மனிதநேயம் கொண்ட அனைவரும் கண்டித்துள்ளனர் என்பதும் வரலாற்று உண்மையாகும்.

புத்தருக்கும் லோகித்யன் என்ற பார்ப்பனுக்கும் நடந்த உரையாடல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்தை வற்புறுத்தியும், பரப்பியும் வந்த லோகித்யனை வாதத்தில் வென்றதுடன், கல்வி மக்களின் பொதுச் சொத்து என்றும் அப்பொதுச்சொத்தைத் தனதாக்கிக் கொள்பவன் கள்வனாகத்தான் இருக்க முடியும் என்றும் விளக்கி அவனை ஏற்கும்படிச் செய்தார் புத்தர்.

இந்தியாவில் நெடிய வரலாற்றில் பார்ப்பனீயத்தை வெளிப்படையாகப் புறக்கணித்த அரசர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், 20ம் நூற்றாண்டில் கோல்காப்பூர் அரசராக விளங்கியவரும் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலுமாகிய சாகு மகாராசாவும் ஆவர். கல்வி கற்பதிலும், அரச பொறுப்புக்களை வழங்குவதிலும், செல்வத்தைச் சேமிப்பதிலும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு விதிகளை மீறி, தடைகளை உடைத்துச் செயல்பட்ட காரணத்தால் கண்ணகியைச் சாக்காக வைத்துப் பார்ப்பனர்கள் மதுரையை எரித்தனர். நெருப்புக் கடவுள் பார்ப்பனக் கோலத்தில் வந்து மதுரையை எரித்தது என்பதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்?

பௌத்தர்களின் நாலந்தர் பல்கலைக்கழகத்தைப் பல்லாயிரம் மாணவர்கள் தங்கிப் படித்த அக்கல்வி நிலையத்தை இரவோடு இரவாகப் பார்ப்பனர்கள் தீயிட்டு கொளுத்தியும், மதுரையில் சமணர்களோடு அனல்வாதமும், புனல்வாதமும் நடத்தி அவர்களின் நூல்களை அழித்து பிறர் கல்வி கற்பதை தடுத்து நிறுத்த முயன்ற செய்தியை வரலாற்றில் நாம் அறிகின்றோம்.

0

Share/Bookmark

சாதியை ஒழிக்கமுடியவில்லை!

gandhiபறையர்கள் / அத்தியாயம் 6

சாதியை ஒழிப்பதற்காக இந்நாட்டில் இயக்கங்கள் பல தோன்றின. பவுத்தம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சுயமரியாதை இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை.

‘அந்நியர் ஆட்சி இருப்பதால்தான், அந்த ஆட்சிக்காரன் நம்மைப்பிரித்து ஆளுகின்றான் அவனை வெளியேற்றிவிட்டால் ஒரு நொடிப்பொழுதில் சாதியை ஒழித்துவிடலாம் என்றார்கள் நாட்டு சுதந்தரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்கள். அந்நிய ஆட்சி ஒழிந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகி, (இன்றைய தேதிக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது) விட்டது. ஆனால் சாதி ஒழிவதற்கு மாறாக அமோகமாக வளர்ந்திருக்கிறது. மற்றவர்கள் ‘சாதி ஒழிப்பு மாநாடுகள்’ என்ற பெயரால் பேச்சுக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.

இன்றுள்ள ஆளும் கட்சியிடம் சாதி ஒழிப்புப் பற்றிய திட்டமேயில்லை. இது பற்றிய கவலையுமில்லை. சாதியை அடிப்படையாக வைத்தே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ‘மக்கள் ஆட்சி முறை’ (ஜனநாயகம்) என்ற போலி நாடகம் – பிறவிக் குருடனுக்கு ‘கண்ணாயிரம்’ என்று பெயரிடுவது போல் நடந்து வருகிறது. சுதந்திரம் வந்த பிறகு சாதி ஒழியவில்லை. சாதி ஒழிப்புக்கான சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலையற்றுக் கிடக்கின்றனர்.’ (குத்தூசி குருசாமி கட்டுரைகள்).

போர்முனைக்குச் சென்று உயிரைவிடத் தயாராயிருக்கும் இளைஞர்கள்கூட சாதி முனையில் நின்று போரிட மறுக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் இளைஞர்களைப் போர் முனைக்கு அனுப்பும் துணிவு பெற்றிருந்தாலும் கூட, சுய சாதியை விட்டு அப்பால் அனுப்பும் துணிவு பெற்றவர்களாக இல்லை.

சாதியின் வடிவம் எப்போதும் சமத்துவ உணர்வுக்கு எதிரானது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணிய உணர்வைக் காயப்படுத்தவும், இழிவுப்படுத்தவும் அது விடாது முயல்கிறது. சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழினம் இன்று இனவுணர்வையும் மொழிப்பற்றையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மலிவான கட்சி அரசியலிலும், சமூக நீதிக்குத் தடைச்சுவராக விளங்கும் சாதி உணர்விலும் சங்கமித்துவிட்டதுதான் மிக மோசமான அவலம்.

‘என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்ற எண்ணத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்ற மகாத்மா காந்தி ‘தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்த மாட்டேன்’ என்று பிரகடனம் செய்தார்.

‘இந்தியாவின் உயர்சாதி மக்களே உங்களுக்கு உயிர் இருக்கிறதா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மியின் சவம் போன்று நீங்கள் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர் வெறுத்து ஒதுக்கிய மக்களிடம்தான் இந்தியாவின் எஞ்சியுள்ள வீரிய சக்தி தரிசனம் தருகிறது. நீங்கள்தான் உண்மையில் நடமாடும் பிணங்கள்’ என்று சினத்துடன் சபித்தார் சுவாமி விவேகானந்தர்.

‘சகல மனிதரும் சகோதரர், மனுஷ்ய வர்க்கம் ஆருயிர், இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசாரச் சுவர்கள் கட்டி நான் வேறு சாதி; அவன் வேறு சாதி; எங்கள் இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. ஆவண சாதிப் பிரஷ்டம் பண்ண வேண்டும் என்பது சுத்த மடமை’ என்று எழுதி, சாதி வேற்றுமை அகற்ற வாழ்க்கை முழுவதும் எழுத்து வேள்வி நடத்தினான் பாரதி. இப்படியாக சாதி கூடவே கூடாது என்று கூப்பாடுப் போட்ட தேசிய, இலக்கிய, மதவாதிகளின் பேச்சை நாம் கேட்பதாகவே இல்லை.

அரசும் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கப் போராடித்தான் வருகிறது. 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது சமூகச் சீர்திருத்தத் துறை என்று தனித்துறையை உருவாக்கினார். கிறிஸ்துதாஸ் காந்தி தான் செயலாளர். அந்தத் துறையில் எந்தச் செயல்பாடுகளும் இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்தத் துறையை கலைத்தார். மறுபடியும் கடந்த முறை கருணாநிதி வந்ததும் அந்தத் துறையைக் கொண்டு வந்து கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்தார். ஆனால் எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மறுபடியும் இப்போது வந்த ஜெயலலிதா அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. தற்போது சமூக சீர்திருத்தத் துறை திரும்பவும் செயல்படும் என்று சொல்லி ஓய்வு பெறப்போகும் கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்து உள்ளார்.

கிட்டத்தட்ட 16 ஆண்டு காலத்தில் இந்தத் துறையில் ஒரே ஒருவருக்குக்கூட நன்மை ஏற்படவில்லை. மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சாதி ஒழிப்புக் கொள்கை இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

0

காந்தியை கோட்சே கொல்லவில்லை

mahatma-gandhi-origional-wallpaper-1-8மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 29

உலகில் நடக்கும் எந்தவொரு புரட்சியிலுமே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் புதிய அரசு அமைவது வழக்கம். ரஷ்யாவில் ஜார் மன்னரை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் போராடி ஆட்சி அமைத்தபோது பாட்டாளிகளின் மதிப்பீடுகள்தான் புதிய ஆட்சியின் அடிப்படையாக அமைந்தன (அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சர்வாதிகாரத்தன்மை தனியாகப் பேசப்படவேண்டிய ஒன்று). அடிமை முறைக்கு எதிரான போராட்டமாக நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமைந்த அரசு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவானது.

ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஒரு விபரீதமான விசித்திரம் நடைபெற்றது. பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாம் போராடினோம். ஆனால், அவர்களை விரட்டியடித்துவிட்டு நாமே பிரிட்டிஷாராகிவிட்டோம் (அதுவும் அரைகுறையாக). அதாவது, பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நம்மிடம் இருந்தவர்களில், யார் கூடுதல் பிரிட்டிஷ் அடிமை மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்களோ அவர்களிடம் ஆட்சியை அமைக்கும் பொறுப்பையும் அரசியல் சாசனத்தை எழுதும் பொறுப்பையும் கொடுத்தோம். பிரிடிட்ஷாருக்கு எதிராக எந்த காந்தியின் வழியில் போராடினோமோ அவருடைய மதிப்பீடுகளை முற்றாக ஒதுக்கித் தள்ளினோம். எஜமானர் மாறிவிட்டார். ஆனால், அடிமைத்தனம் மாறவில்லை. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால், நோயாளிதான் இறந்துவிட்டார்.

சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா எப்படியான நாடாக இருக்கவேண்டும் என்று காந்தி ஒரு கனவை முன்வைத்திருந்தார். கிராம ஸ்வராஜ்ஜியம் என்று அவர் அதை எளிய வார்த்தைகளில் அடையாளப்படுத்தியிருந்தார்.

“இந்தியாவின் அதிகாரமையமாக டெல்லியோ பம்பாயோ கல்கத்தாவோ இருக்காது. அதிகாரமானது லட்சக்கணக்கான அதன் கிராமங்களிடம் இருக்கும். மக்கள் தன்னர்வத்துடன் ஒன்றுகூடிச் செயல்படுவார்கள். நாஜிக்களின் ஜெர்மனியைப் போலவோ கம்யூனிஸ்ட்டுகளின் ரஷ்யாவைப்போலவோ சர்வாதிகாரத்தால் அந்தக் கூட்டுறவு பெறப்பட்டிருக்காது.

ஏழு லட்சம் கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வாக்கு. அதாவது ஒவ்வொரு கிராமத்தினரும் ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த கிராமப் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாவட்ட நிர்வாகிகள் மாநிலப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாநிலப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் அனைவருக்குமான தலைமை நிர்வாகியாக இருப்பார்.

ஒவ்வொரு கிராமமும் தன்னுடைய அடிப்படைத் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் திறமை கொண்டதாக இருக்கும். அதேநேரம் தேவையான பிற விஷயங்களில் பிற கிராமங்களைச் சார்ந்ததாகவும் இருக்கும். உணவு, உடை ஆகியவற்றைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் இருக்கும். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மன மகிழ் நிகழ்வுகளுக்கும் விளையாட்டுக்கும் தேவையான இடங்கள் இருக்கும். அதற்கும் மேலாக நிலம் இருந்தால் அங்கு கஞ்சா, புகையிலை போன்றவை அல்லாமல் பிற உணவுப்பயிர்கள் பயிரிடப்படும். கிராமத்தின் சார்பில் ஒரு பொது கலையரங்கம் இருக்கும். பள்ளிக்கூடம் இருக்கும். பொது நலக்கூடம் இருக்கும். சுத்தமான குடிநீர் வசதி இருக்கும். நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் இருக்கும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி தரப்படும். முடிந்தவரை எல்லா செயல்பாடுகளும் கூட்டுறவாகச் செய்யப்படும். இன்று தீண்டாமையின் அடிப்படையில் சாதிகள் மேல் கீழ் என படிநிலைப்படுத்தப்பட்டிருப்பதுபோல் இருக்காது. அங்கு போராடும் வழி முறை என்பது சத்யாகிரக, ஒத்துழையாமை இயக்க வடிவில் அகிம்சை முறையிலேயே இருக்கும்.’

காந்தியின் இந்த கிராம ராஜ்ஜியம் என்பது அப்படியொன்றும் முற்றிலும் புதியதொரு கண்டுபிடிப்பு அல்ல. காலகாலமாகவே இந்தியாவில் இருந்துவந்த கிராம நிர்வாக வழிமுறைதான். அதில் புதிய அறமாக சாதி சார்ந்த சமத்துவத்தை காந்தி அழுத்தமாக முன்வைத்திருந்தார். குழந்தை ஒன்று இளைஞராவது என்றால் குழந்தைப் பருவத்தில் இருந்த கைகளும் கால்களும் பலம் பெற்று வளர்வதுதானே. நேற்றில் கால் ஊன்றி நாளையை எட்டிப் பிடிக்கும் ஒன்றாகத்தானே எந்தவொன்றின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். யாராக இருந்தாலும் அப்படித்தான் யோசித்திருக்கவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்தியாவின் கடந்த கால வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களிடம்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாதியை இந்தியாவின் சாபமாகப் பார்த்தார்கள். கிராமத்தை அதன் கோட்டையாகப் பார்த்தார்கள்.

மனிதர்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தும் சாதி, மதம், கடவுள் நம்பிக்கை போன்றவையெல்லாம் ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. எளிய மக்களின் பல ஆண்டுகால நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் விளைவாக உருவானவை. ஆனால், ஆதிக்க சக்திகள் எளிய மக்களின் அந்த நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் தங்கள் ஆதாயத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த அதிகாரத்தை அவர்கள் கைகளில் இருந்து பறிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கமுடியும். ஏனென்றால் அந்த மதிப்பீடுகளுக்கு சாதகமான ஒரு பங்களிப்பும் உண்டு.

உதாரணமாக சாதி என்பதை எடுத்துக்கொண்டால், பிற சாதியினரிடம் விலகலை ஏற்படுத்தும் அதே நேரத்தில்  குறிப்பிட்ட சாதியினருக்குள் நட்பையும் ஸ்நேகத்தையும் அது உருவாக்கவும் செய்கிறது.  மனிதன் அடிப்படையில் சுய நலம் மிகுந்த ஒரு விலங்குதான். அப்படிப்பட்டவன் சக மனிதர்களுடன் நட்புறவு கொள்ள குலம், சாதி என்ற மனோபாவம் மிகவும் அவசியமாக இருந்தது. அந்தவகையில் சாதிக்கு ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பு உண்டு. எனவே, சாதி மதிப்பீடுகள் முழுவதுமே தவறு என்று சொல்லி அவற்றின் அடிப்படையில் உருவான அமைப்புகளை அழிக்க முற்படுவது சரியாக இருக்காது. இதனால்தான் எளிய மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்படும் பல போராட்ட இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமலும் அவர்களைச் சுரண்டும் சக்திகளுக்கு பெரும் ஆதரவும் கிடைத்துவருகிறது.

ஒரு மனிதன் தன் கைகளால் கொலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கைகள் இருக்கும்வரை மனிதர்கள் கொலை செய்யத்தான் செய்வார்கள். எனவே, அந்தக் கைகளை வெட்டி எறிய வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது சாதி இருக்கும்வரை ஏற்றத்தாழ்வும் ஒடுக்குமுறையும் இருக்கும் என்று சொல்வது. உண்மையில் கைகளைக் கொண்டு ஒருவன் கொலை செய்யாமல் தடுக்க என்ன வழி உண்டோ, நல்ல செயல்களைச் செய்யவைக்க என்ன வழிகள் உண்டோ அதைத்தான் செய்யவேண்டும். அந்தவகையில் சாதி, மதம், தெய்வ நம்பிக்கை போன்ற அமைப்புகளை அவற்றின் தீய அம்சங்களை அகற்றிச் சீர்திருத்தத்தான் ஒருவர் முயற்சி செய்யவேண்டும். ஏனென்றால் அடிப்படையில் அவை ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. மனிதர்களின் அதி இயல்பானவை.

காந்திக்கு இந்தப் புரிதல் இருந்தது. எனவேதான் சாதி சார்ந்த கெட்ட குணங்களை விட்டொழித்துவிட்டு சேரிகளுக்குச் சென்று பிராயச்சித்தம் செய்யுங்கள் என்று ஆக்கபூர்வமாகத்தான் அறைகூவல்விடுத்தார். அம்பேத்காரியவாதிகள், பெரியாரியர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் சாதி மீது வெறுப்புடன் விமர்சனம் வைத்தனரேதவிர தமக்குக் கீழான சாதியினர் மீதான அடக்குமுறையை அப்படி ஒன்றும் விட்டொழித்திருக்கவில்லை. முதலில் பிராமண-பனியாவை ஒழிப்போம். அதன் பிறகு நம் பிரச்னையைப் பார்ப்போம் என்றுதான் சிந்தித்தார்கள். அது எவ்வளவு பிழையான சிந்தனை என்பதை காலம் நமக்குத் தெளிவாகக் காட்டிவிட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒட்டுமொத்த சாதி வெறியை விட்டொழிக்கச் சொன்ன காந்தியின் அணுகுமுறை துலக்கம் பெறுகிறது. காந்தியின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மேல் சாதியினர் தங்களுக்குக் கீழே இருக்கும் சாதியினருக்கு சேவை செய்ய முன்வந்ததன் மூலம் சாதி வெறியை விட்டொழிப்பது எளிதுதான் என்பதையே உணரவைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் வெளிப்படையாக அதைச் சொல்லும் தைரியமும் உள்ளவர்களைத் தலைவர்களாகப் பெறும்போதுதான் ஒரு சமூகம் முன்னேற்றத்தின் பாதையில் செல்லமுடியும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவுக்கு அப்படியான கொடுப்பினை இருந்திருக்கவில்லை. அடிமை இந்தியாவை விழித்தெழ வைக்க ஒரு காந்தி இருந்தார். ஆனால், சுதந்தர இந்தியாவை வழி நடத்த நேருவும் அம்பேத்கரும்தான் நமக்குக் கிடைத்தார்கள்.

சுதந்திரம் பெற்ற புதிய இந்திய அரசு தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு முன்வைத்த அரசியல் சாசன முன்வரைவின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிராமம் என்ற ஒற்றை வார்த்தைகூட இருந்திருக்கவில்லை (கிராம அலகுகளுக்கு உரிய அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரையைப் பெயரளவில் சேர்க்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது).

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவின் நவ சிற்பிகளில் முதன்மையானவர்களாக இருந்த நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இந்திய கிராமம் பற்றி பிரிட்டிஷாரைவிடப் பெரிய வெறுப்பே இருந்தது. அவர்கள் பிறப்பால் நிறத்தால் இந்தியர்களாக இருந்தார்கள். சிந்தையாலும் செயலாலும் பிரிட்டிஷரின் தாசர்களாக, சொன்னதைச் செய்துமுடிக்கும் குமஸ்தாவர்க்கத்தின் தலைமைப் பணியாளர்களாக இருந்தனர்.

நேரு கிராமங்களை அறிவுபூர்வமாகவும் கலாசாரபூர்வமாகவும் பின்தங்கிய இடமாகக் கருதினார். அங்கிருப்பவர்கள் எல்லாரும் குறுகிய ம்னோபாவம் கொண்டவர்கள். எனவே, உண்மையற்றவர்களாகவும் வன்முறையாளர்களாகத்தான் இருப்பர்கள் என்று கருதினார். கிராமங்களைப் புகைப்படங்களில் பார்த்திருக்கும் தைரியத்தில் இந்த அபாரமான கண்டுபிடிப்பை வெளிப்படையாக, தைரியமாக, கூச்சமில்லாமல் முன்வைத்தார். இயற்கை வளங்கள் அதிகமாகவும் மக்கள்தொகை குறைவாகவும் இருந்த மேற்குலகுக்கு தொழில்மயமாதல் மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால், புலியைப் பார்த்து யானையும் சூடு போட்டுக்கொள்வதுபோல் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவுக்கும் அதையே முன்வைத்தார். அவர் விரும்பிய நவீன கோயில்களைக் கொண்ட ஓர் இந்தியா உருவாகவேண்டுமென்றால் அதற்கு மையப்படுத்தப்பட்ட வலுவான ஓர் அரசுதான் தேவை என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது அது எந்த அளவுக்கு மேற்குலகின் நகலாக ஆகிறதோ அதில்தான் இருக்கிறது என்று கருதினார். எனவே, அவருடைய உலகில் கிராமங்களுக்கு இடமே இல்லை என்பதில் ஆச்சரியமே இல்லை.

நவீன இந்தியாவின் இன்னொரு சிற்பியான அம்பேத்கரின் உலகிலும் கிராமங்களுக்கு இடமில்லை. அவர் கிராமங்களை சாதிவெறியின் அடையாளமாகக் கண்டார். சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வு மறைய வேண்டுமானால், கிராமங்கள் அழியவேண்டும் என்று நம்பினார். அவருடைய தீர்மானம் ஒருவகையில் சரியானதுதான். ஏனென்றால், அனைத்து கிராமங்களுமே அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியின் அதிகாரமையமாகவே இருந்தன. எனவே, சமத்துவமான சமூகம் உருவாகவேண்டுமென்றால் கிராமப்புற நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டாகவேண்டிய தேவை இருந்தது.

ஆனால், இவர்கள் இருவருமே கிராமத்தை வலுவிலக்கச் செய்ததன் மூலம் நகரத்தை வலுவானதாக ஆக்கிவிட்டார்கள். நாய்க்கு பதிலாக ஓநாயைக் காவலுக்குக் கொண்டுவந்து வைத்ததைப் போன்ற ஒரு செயல் இது.

இந்தியாவுக்குத் தேவையான தொழில் வளர்ச்சி என்பது மேற்குலகில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது வெறும் அலங்கார வாக்கியம் அல்ல. இன்றும் பெருமளவிலான மக்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். விவசாயம்தான் இந்தியாவின் பிரதான தொழிலாக இருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்வதென்றால், விளைநிலங்களின் பரப்பை அதிகரித்தல், ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குதல், உற்பத்தி அளவைப் பெருக்குதல், கடின வேலைகளை எளிமைப்படுத்துதல், உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல், நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் என நடந்தேறியிருக்க வேண்டும். அதுதான் உண்மையான இந்தியத் தொழில் வளர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நேருவோ, மேற்குலகுக்கு நன்மை தரும் முறையில் இந்தியாவைத் தகவமைப்பதையே தன் பொருளாதார லட்சியமாக முன்வைத்தார். அடுத்துவந்த அரசுகள், இந்தியாவின் கனிம வளங்களில் ஆரம்பித்து உழைப்பு சக்திவரை அனைத்தையும் சூறையாடிக்கொள்ள பன்னாட்டு முதலைகளுக்கு கதவுகளை அகலத் திறந்துவைத்துவிட்டிருக்கிறது. சுதேசி இயக்கம் என்பது இன்று அனைத்துத் தளங்களிலும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. நேரு இதை விரும்பியிருக்கமாட்டார். ஆனால், அவர் ஆரம்பித்துவைத்த தொழில்மயமாக்கம் இதைத்தான் சாத்தியப்படுத்தும் என்பது காந்திக்குத் தெரிந்திருந்தது. எனவேதான் அவர் பலமுறை நேருவை அவருடைய மேற்கத்திய மோகம் குறித்து எச்சரித்திருக்கிறார். ஆனால், காந்தியின் கிராம ராஜ்ஜியம் ஒரு கற்பனைக் கனவு என்று எள்ளி நகையாடினார் நேரு.

காந்தி தன் கிராம ராஜ்ஜியத்தின் ஆதார அம்சத்தை ராம ராஜ்ஜியத்தில் இருந்து எடுத்திருந்தார். அம்பேத்கருக்கு கிராம ராஜ்ஜியத்தை எதிர்க்க அது ஒன்றே போதுமானதாக இருந்தது. ‘தவம் செய்யும் சூத்திரனின் தலையைக் கொய்வதுதான் ராம ராஜ்ஜியம்’ – இதுதான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மேதைகளின் போராளிகளின் ஏகோபித்த கண்டுபிடிப்பு.

உத்தர ராமாயணத்துக்கு மக்கள் மத்தியில் என்ன மரியாதை இருந்தது? அது பிற்சேர்க்கையா, இடைச்செருகலா? சரீரத்துடன் மேலுலகம் செல்ல விரும்பித்தான் சம்புகன் தவம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே… துவிஜர்களை எதிர்த்துப் போராடியதாகவா சொல்லப்பட்டிருக்கிறது. உன்னோடு ஐவரானோம் என்று வேடனை ஆரத் தழுவிய ராமன், பழங்குடிக் கிழவி கடித்துக் கொடுத்த பழத்தை ருசித்து உண்ட ராமன், இன்று போய் நாளை வா என்று பகைவனுக்கும் அருளிய ராமன், சிற்றன்னை சொன்ன ஒற்றை வார்த்தைக்காக நாட்டைத் துறந்து சென்ற ராமன்… இந்த ராமன்கள்தானே எளிய மக்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கும் ராமன். இந்திய மக்கள் தங்கள் சாதி உணர்வுக்கு ராமனையா முன்மாதிரியாக வைத்திருக்கிறார்கள்? வேண்டுமானால், இன்றைய பெண்ணிய அளவுகோல்களை வைத்து ராமனை ஆணாதிக்கவாதி என வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர சாதி வெறிக்கு ராமனை முன்வைப்பதில் எந்த நியாயமும் இருக்கமுடியாது. ஆனால், அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார் வரை அனைவரும் ராமராஜ்ஜியம் என்றால் அது சாதி வெறி பிடித்தது என்ற முடிவுக்கு சம்புகவதம் என்ற ஒற்றைக் கதையை முன்வைத்து வந்துவிட்டிருக்கிறார்கள்.

எனவேதான் அம்பேத்கர் கிராமங்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது சாதி இந்துக்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதாகவே முடியும். இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட வலுவான அரசாங்கமே தேவை என்று நினைத்தார். ஆனால், எண்ணிக்கை பலமே அரச அதிகாரத்தைத் தீர்மானிக்கும் தேர்தலமைப்பில் (விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு மாற்றாக) அதே சாதி இந்துக்களே மிகப் பெரிய அதிகார மையமாக உருவாக வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியினரை கலகம் செய்யச் சொல்லிவிட்டு, கம்பைப் பிற்படுத்தப்பட்ட சாதியிடம் கொடுத்துவிட்டார். கிராமப்புற அலகாக இருந்த வரையில் ஆதிக்க சாதிகளுக்குக் குறைவான அதிகாரமே இருந்தது. இன்றோ அவை பூதாகாரமாகப் பெருகிவிட்டிருக்கின்றன.

உண்மையில் பழங்கால கிராமங்களில் இருந்த மேல் சாதி ஆதிக்க மனோபாவத்தை நீக்க என்ன செய்திருக்கவேண்டும். உதாரணமாக, ஆலமரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்து சாதி வெறி மிகுந்ததாக இருக்கிறது என்றால் அதை மாற்ற என்ன செய்திருக்கவேண்டும். வாதிக்கும் பிரதிவாதிக்கும் நாற்காலியைக் கொண்டுவந்து போடு என்பதில் இருந்து ஆரம்பித்திருக்கலாம். குற்றம் நிரூபிக்கப்படும்வரை எல்லாரும் நிரபராதிகளே. அவர்களை நிறக வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கிராமத்தில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை பிரதிநிதிகள் நீதி வழங்கும் குழுவில் இருக்கவேண்டும். என்ன தவறுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் தீர்மானித்து வடிவமைத்துக் கொடுக்கவேண்டும். அதை இம்மி பிசகாமல் ஒப்பிக்கும் பொறுப்பு மட்டுமே நீதிபதிகளுக்கு உண்டு என நீதி அமைப்பில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.

ஆனால், பஞ்சாயத்து ஆலமரத்தை அடியோடு பிடுங்கி எறிவதுதான் சாதி வெறியை ஒழிக்க ஒரே வழி என்று அம்பேத்கர் நினைத்தார். கிராமங்களை அரசியல் சாசனச் சட்டத்தில் செல்லாக்காசாக ஆக்கினார். ஆனால், அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துவருகிறோம். ஒருவேளை ஒவ்வொரு கிராம சபைக்கும் அதனதன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் அதிகாரம் தரப்பட்டிருந்தால், விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டிருக்காது. ஏரிகள் தூர்ந்துபோயிருக்காது. கிணறுகள் மண்ணிட்டு மூடப்பட்டிருக்காது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டிருக்காது. அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய நிர்வாக முறை அமலாகியிருந்தால் மேற்கத்திய அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் புலம்பும் நிலை வந்திருக்காது.

இன்றைய நம் அரசின் ராணுவ பலமும் காவல்துறை பலமும் நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவிட்டிருக்கிறது. இன்று நம் ஊழல் மிகுந்த தலைவர்களைச் சரிக்கட்டுவதன் மூலம் தேச விரோத சக்திகள் ஒட்டுமொத்த தேசத்தையே சூறையாடிவிட முடிகிறது. அதிகாரக் குவிப்பு நமக்கு எந்த நன்மையையும் இதுவரை செய்திருக்கவில்லை. அல்லது அதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மையைவிட தீமையே அதிகம். காந்தி இதையெல்லாம் முன்பே யூகித்துவிட்டிருந்தார். அதனால்தான் மையப்படுத்தப்பட்ட அரசை  ஆதிமுதல் அந்தம்வரை எதிர்த்தார். கிராமங்களின் குடியரசு ஒன்றை முன்வைத்தார். அதை மறுதலித்ததன் மூலம் நேருவும் அம்பேத்கரும்தான் காந்தியைக் கொன்றிருக்கிறார்கள். கோட்சே அல்ல.

0

நேரு நிராகரிக்கப்படுவது ஏன்?

jawaharlal_nehruகாந்தியின் புகழ் அவர் மறைவுக்குப் பிறகு முன்பைவிட வேகமாகப் பரவத் தொடங்கியது என்றால் நேருவின் புகழ் அவர் வாழும் காலத்திலேயே சுருங்க ஆரம்பித்துவிட்டது. நடைமுறைத் தேவையைப் பொருத்தே ஒருவருடைய வாழ்வும் சிந்தனைகளும் நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், காந்தி தேவைப்பட்ட அளவுக்கு இந்தியாவுக்கு நேரு தேவைப்படவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. அன்று மட்டுமல்ல இன்றும்கூட இதுதான் நிலைமை.

இத்தனைக்கும் காந்தியின் வாரிசாக காந்தியாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் நேரு. வெகு சில விஷயங்கள் தவிர பெரும்பாலும் காந்தியோடு நேரு முரண்பட்டதில்லை. ஆனாலும் அந்தக் காரணங்களுக்காகவே நேரு புறக்கணிக்கப்படுகிறார். சித்தாந்த அளவில், சோஷலிசம்மீது நேரு கொண்டிருந்த பிரமிப்பு அவரைக் காந்தியிடம் இருந்தும் காங்கிரஸிடம் இருந்து அந்நியப்படுத்தியது. இரண்டாவதாக, 1962 சீன யுத்தத்தில் இந்தியா சந்தித்த தோல்வியை நேருவின் தோல்வியாகவே இந்தியா (அன்றும் இன்றும்) கண்டது. ஆக, நேருவின் சித்தாந்தம், நடைமுறை இரண்டும் காங்கிரஸால் அப்போதைக்கு அப்போதே நிராகரிக்கப்பட்டுவிட்டது.

1926-27 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டபோது சோஷலிஸ்டுகளின் அறிமுகம் நேருவுக்கு ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். குறிப்பாக, பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் (Congress of Oppressed Nationalities) உலகம் முழுவதிலும் இருந்து சோஷலிச தாக்கம் கொண்டவர்கள் ஒன்றுகூடினார்கள். இந்தச் சந்திப்புகளின் முடிவில் நேரு தெரிந்துகொண்ட உண்மை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே தனிமனித முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதுதான். தற்போதைய சமூகத்தின் கட்டமைப்பை மாற்றாமல் லட்சக்கணக்கான மக்களின் ஏழைமையையும் பஞ்சத்தையும் ஒழிக்கமுடியாது என்று நேரு கற்றுக்கொண்டார். அந்த வகையில், சோஷலிசத்தை நோக்கி நேரு நம்பிக்கையுடன் நகர்ந்ததற்கு உந்து சக்தியாக இருந்தது அவரது தனி மனித முன்னேற்றம் என்னும் கனவுதான்.

நேரு சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி குறிப்பிடுகிறார். ‘உண்மையிலேயே அது (சோஷலிசம்) என்னைக் கவர்ந்துவிட்டது. ஏனென்றால் கணக்கற்ற மக்களை பொருளாதார மற்றும் கலாசாரத் தளைகளில் இருந்து (சோஷலிசம்) விடுவிக்கிறது.’ சுதந்தரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி சோஷலிசம் என்பதை நேரு இப்படித்தான் அர்த்தப்படுத்திக்கொண்டார். இந்தக் கனவோடு அரசியலை அணுகுவதே சரியான தேர்வாக இருக்கும் என்று நேரு நம்பினார்.

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே நேருவுக்கு எதிர்ப்புகள் தோன்றிவிட்டன. ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து கடிதம் பறந்து வந்தது. ‘வல்லபபாய், ஜம்னாலால்ஜி, நான் மூவரும் உங்கள் கருத்தோட்டத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபடுகிறோம்’. அந்தக் கடிதம் ஒரு மிரட்டலையும் விடுத்தது. ‘நமது பணித்திட்டத்தில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும்வரை, நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை.’ சோஷலிசத்தை நீங்கள் துறக்காவிட்டால் நிறைய ஆபத்துகளைச் சந்திக்கவேண்டிவரும் என்று எம்.ஏ. அன்சாரி உள்ளிட்ட நண்பர்கள் நேருவுக்கு அறிவுரை கூறவேண்டியிருந்தது.

நேரு பிரதமரானபோது அவரது அமைச்சரவையில் பழமைவாதிகளே அதிகம் இடம்பெற்றிருந்தனர். படேலின் கை மேலோங்கியிருந்தது. நேருவின் சோஷலிசக் கனவைப் புரிந்துகொள்ள யாருமில்லை. இருந்தும் நேரு மதச்சார்பின்மை, சோஷலிசம், பகுத்தறிவுவாதம் ஆகியவற்றை பிரசாரம் செய்ய ஆரம்பித்திருந்தார். நேருவின் இந்தப் பிரசாரம் பூர்ஷ்வா இளைஞர்களையே அதிகம் கவர்ந்தது. நேரு ஒரு நேர்மையான, முற்போக்கான தலைவர் என்னும் தோற்றத்தை அவர்களிடையே ஏற்படுத்தியது. நேரு எங்கு சென்றாலும் கூட்டம் அலைமோதியது. அவருடைய ‘தரிசனத்துக்காக’ பெரும் கூட்டம் காத்திருந்தது. ஆனால் அதற்கு மேல் அவருடைய கொள்கைகளை யாரும் பரிசீலிக்கத் தயாராகயில்லை.

ஆகஸ்ட் 1947க்கு முன்பும்கூட நேரு விரிவான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். தனது சோஷலிசக் கனவுகளைப் பொதுக்கூட்டங்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பிரதமரானபிறகும் அதனை அவர் தொடரவே செய்தார் என்றாலும் ஒரு தலைவராக அவருக்குக் கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் அவரது கொள்கைகளுக்குக் கிடைக்கவில்லை.

புதிதாகக் கிடைத்திருக்கும் சுதந்தரத்தைக் கொண்டு என்னென்ன சாதித்துக்கொள்ளலாம் என்றுதான் அரசியல்வாதிகள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தனர். சுதந்தரம் பல நல்ல விஷயங்களைக் கொண்டுவரப்போகிறது என்றுதான் மக்களும் காத்திருந்தனர். இவர்கள் அனைவரையும்விட அதிக ஆர்வத்துடன் சுதந்தரத்தை எதிர்நோக்கியிருந்தவர்கள் முதலாளிகள்தாம். எப்போது பிரிட்டன் வெளியேறும் எப்போது நாம் சந்தையைக் கைப்பற்றலாம் என்று அவர்கள் காத்திருந்தனர். அவர்களில் சிலர் ஆகஸ்ட் 1947க்கு முன்பே காங்கிரஸுடன் உறவு ஏற்படுத்தி வைத்திருந்தனர். நேரு விவரிக்கும் சோஷலிச சித்தாந்தங்களை உள்வாங்கிக்கொண்டு பரிசீலிக்கும் அளவுக்கு யாருக்கும் பொறுமையும் ஆர்வமும் இல்லை. தேசபக்தியும் தேசநலன் சிந்தனைகளும் தியாகங்களும் மறந்துபோயிருந்தன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜனவரி 15, 1958 பத்திரிகையில் A Deep Malice என்னும் தலைப்பில் நேரு எழுதிய கட்டுரை அவரது அப்போதைய மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது. ‘யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் அளவுக்கு நாம் துவண்டு போய்விட்டோமா? இதுவே போதும் என்று திருப்தி கண்டுவிட்டோமா? கடந்த காலங்களில் காங்கிரஸுக்குப் பலத்தைக் கொடுத்த வெற்றியின் இழைகள் சோர்ந்துவிட்டனவா?’

சுதந்தரத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே காங்கிரஸ் கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட பல விஷயங்களைக்கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, பாதுகாப்புத் துறை, பெரிய தொழிற்சாலைகள் ஆகியவற்றை அரசுடைமையாக்கவேண்டும் என்பதை காங்கிரஸ் முன்னர் ஏற்றிருந்தது. இப்போதோ சோஷலிசம் என்னும் பதமே எரிச்சலூட்டும்படியாக மாறிப்போனது.

காங்கிரஸ் சந்தர்ப்பவாதிகளின் அமைப்பாகச் சுருங்கிப்போனது. மாற்றுச் சிந்தனையாளர்களால் அங்கே தாக்குப்பிடிக்கமுடியவில்லை. சோஷலிச குழுவின் தலைவரான ஆச்சாரிய நரேந்திர தேவ் மார்ச் 1948ல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அதற்குக் காரணம் பிப்ரவரி மாதம் காங்கிரஸில் சர்தார் படேல் கொண்டு வந்த தீர்மானம். காங்கிரஸுக்குள் குழுவாதம் இருக்கக்கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள் சோஷலிசம் பேசுபவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதுதான். இதைத் தொடர்ந்து, சொற்ப சோஷலிச ஆதரவாளர்களும் ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர். வெளியேறியவர்களின் கூட்டத்தில் காந்திய ஆதரவாளர்களும்கூட இருந்தனர். புனரமைக்கப்பட்ட புதிய காங்கிரஸில் அதிகார நாட்டம் கொண்டவர்களும் கொள்கைகளைக் கைவிட்டவர்களும் சமரசவாதிகளும் லாபமீட்ட விரும்பியவர்களும் மட்டுமே இருந்தனர். நேருவின் சோஷலிசக் கனவு படிப்படியாக முடிவுக்கு வந்தது. 1962 சீனப் போர் நேருவின் சோஷலிசக் கனவின் சவப்பெட்டிமீது கடைசி ஆணியைப் பாய்ச்சியது.

நேருவின் சோஷலிசக் காதலை தீவித வலதுசாரிகள் மட்டுமல்ல தீவிர இடதுசாரிகளும் நிராகரித்தனர். சோஷலிசத்தை நேரு அளவுக்கு அதிகமாகக் கொண்டு செல்கிறார் என்பது முந்தைய குழுவின் குற்றச்சாட்டு என்றால், போதுமான அளவுக்கு சோஷலிசத்தைக் கொண்டுவரவில்லை என்பது இரண்டாவது சாராரின் குற்றச்சாட்டு. நேருவின் சோஷலிசம் சோஷலிசமே அல்ல, அது வெறும் socializing மட்டுமே என்னும் விமரிசனமும் முன்வைக்கப்படுகிறது. நேருவின் சோவியத் நாட்டமும் சீன நாட்டமும் விமரிசிக்கப்பட்டது. நேருவின் காஷ்மிர் கொள்கையும் மொழிக்கொள்கையும் விமரிசிக்கப்பட்டது.

a42c7bbe5ddc4733b97fd3e9a80d1890பிரிட்டன் வெளியேறியதைத் தொடர்ந்து இந்தியாவை வலதுசாரிகள் கடத்திக்கொண்டு போகாதபடி நேரு தடுத்தார் என்கிறார்கள் சிலர். சோஷலிச இந்தியாதான் நேருவின் விருப்பம் என்றால் அதற்கான அடித்தளத்தை அழுத்தமாக அவர் உருவாக்கவில்லை என்கிறார்கள் வேறு சிலர். 1991க்குப் பிறகு நேருவின் அடையாளம், ‘தேவைப்படாதவர்’ என்பதில் இருந்து ‘ஆபத்தானவர்’ என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டது.

உலகமயமாக்கலையும் தாராளமயமாக்கலையும் தீவிரமாக எதிர்க்கும் தீவிர இடதுசாரிக் குழுவினருக்கு நேரு போன்ற ஒரு‘மென்மையான சோஷலிஸ்ட்’ தேவையில்லை. பகத்சிங் போன்ற தீவிரமானவர்களே தேவை. மொத்தத்தில் நேரு இன்று யாருக்கு தேவைப்படவில்லை.

மேலதிக விவரங்களுக்கு:

Retreat of Socialism in India, Two decades without Nehru 1964-1984, R.C. Dutt.

0

மருதன்

வரலாற்றை மாற்றிய செங்கோட்டை – 3

1858ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வந்து சேர்ந்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் 17 மாகாணங்கள் இருந்தன. இவை தவிர பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியில் இல்லாத 554 ராஜ்ஜியங்கள் (Princely states) இந்திய துணைக் கண்டத்தில் இருந்தன. இந்த ராஜ்ஜியங்களை அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆனால் ராணுவம், வெளியுறவுத் துறை மற்றும் தொலைத் தொடர்பு துறை ஆகியவற்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்வகித்து வந்தது.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவை எடுத்துக்கொண்ட பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி முறையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரயில் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்பை உருவாக்கியது. நீதி பரிபாலனை செய்யவேண்டி நீதிமன்றங்கள் பல நிறுவப்பட்டன. இந்தியர்கள் தொழில் துறைகளிலும், ஏனைய பாடங்களிலும் கல்வியறிவு பெற கல்லூரிகள் நிறுவப்பட்டன. ஆட்சி நிர்வாகத்தை திறன்பட நடத்த பிரத்தியேக இந்தியன் சிவில் சர்விஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய இராணுவம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியர்கள் மத்தியில் ஆங்கிலேயர்கள் மீதான அதிருப்தி நீங்கவில்லை.

ஆங்கிலேயர்களின் ஆட்சியை இந்தியர்கள் காலனியாதிக்கமாகத்தான் பார்த்தனர். பல்வேறு விதமான வரிச் சட்டங்கள், அதனால் ஏற்பட்ட அதிகமான வரிச் சுமை, நாட்டில் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சம், தவிர்க்கப்படாத தொற்று/ கொள்ளை நோய், அதனால் ஏற்பட்ட கோடிக்கணக்கான உயிரிழப்புகள், ராணுவத்திலும் ஆட்சியிலும் ஆங்கிலேயர்களுக்கே முன்னுரிமை, இந்திய அரசர்களை அவமரியாதை செய்தது, பிரஜைகளின் விருப்பங்களை மதிக்காதது என்று பல அதிருப்திகள் ஆங்கிலேயர்கள் மீது இந்தியர்களுக்கு இருந்தன.

சிப்பாய் புரட்சிக்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து மற்றுமொரு புரட்சி நிகழ்ந்தது. இம்முறை ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்க வந்தது இந்திய அரசர்களோ, சிப்பாய்களோ அல்ல. சாதாரண இளைஞர்கள்தாம். ஆங்கிலேயர்களிடமிருந்து ஆதரவு பெற்று, ஓய்வூதியம் பெற்று தங்களது அரண்மனைகளில் சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்த மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் படை திரண்டது. இந்தப் படை உருவாவதற்கும் ஒருவிதத்தில் பிரிட்டிஷ் அரசுதான் காரணம். அது அங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்விக்கூடங்களும் கல்லூரிகளும், பாடசாலைகளும் உலகத்தை அவர்களுக்குத் திறந்துவிட்டன. கல்வி அவர்கள் கண்களைத் திறந்தது.  தர்க்க ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தியது. பிரெஞ்சு புரட்சி பற்றியும் அமெரிக்கப் புரட்சி பற்றியும் இந்திய இளைஞர்கள் தெரிந்துகொண்டனர். உத்வேகம் கொண்டனர். ஐரோப்பிய சரித்திரமும், உலக அரசியல் முறைகளும் அவர்களை உந்தித் தள்ளியது. முற்போக்கு சிந்தனைகள் தோன்றின. இந்தியா ஏன் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதே சமயத்தில் இந்து மதத்திலும் சீர்திருத்தவாதிகள் தோன்றினர். ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து மதக் கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். பிரம்ம சமாஜும், ஆரிய சமாஜும் தோற்றுவிக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய அதே கையோடு, இந்தியர்கள் விட்டொழிக்க வேண்டிய தீமைகளையும் சாடினார். இந்து மதத்தில் புரையோடிப்போன மூட நம்பிக்கைகள் எதிர்க்கப்பட்டன. ஒற்றுமையின்மை, சாதிய பிளவுகள், தீண்டாமை, சுயநலம் ஆகியவையே இந்திய அடிமைப்பட்டதற்குக் காரணம் என்று முழங்கப்பட்டன.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள், ஆங்கிலேயர்களை எப்படியேனும் விரட்டியே ஆவது என்று வீறுகொண்டு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள், அரவிந்த கோஷ், பரின் கோஷ், பூபேந்திரனாத் தத்தா, ராஷ் பிகாரி போஸ், குதிராம் போஸ், பாகா ஜத்தின், எம்.என்.ராய், பிரஃபுல்லா சாக்கி, சூரிய சென், பீனா தாஸ், பீரித்தி லதா வாதேதார், பினய் பாசு, தினேஷ் குப்தா, பாதல் பாசு, கனய் லால் தத்தா, ராம் பிரஸாத் பிஸ்மில், சந்திர சேகர ஆசாத், சச்சிந்திரநாத் சன்யால், அஷஃபுல்லா கான், ரோஷன் சிங், ராஜேந்திர லகரி, ராஜ் குரு, பகத் சிங், சுக்தேவ், பைகுந்த ஷுக்லா, ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, மதன்லால் திங்ரா, உதாம் சிங், ஆனந்த் கன்ஹாரே, நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், செண்பகராமன் பிள்ளை, பிக்காஜி காமா, தாமோதர் சவர்கர். (விடுபட்ட பெயர்கள் ஏராளம்). மேற்குறிப்பிட்ட இளைஞர்களில் பெரும்பான்மையானோர் போராட்டத்தின் போது கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போராட்ட வீரர்கள், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லமுடியாத சித்திரவதைக்கு ஆளாகினர். மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் பின்வருமாறு – அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு, கக்கோரி ரயில் கொள்ளை வழக்கு, சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் வழக்கு, டில்லி- லாகூர் சதி வழக்கு, மத்திய நாடாளுமன்ற குண்டு வெடிப்பு வழக்கு, இந்து-ஜெர்மனி சதி வழக்கு (காதர் கலகம்).

ஒருபுறம் இளைஞர்கள் புரட்சியில் இறங்கி போராட, மறுபுறம் அனுபவசாலிகள், வழக்கறிஞர்கள் அரசியலில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர். அந்த காலகட்டத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற பெரும் அரசியல் கட்சி காங்கிரஸ்தான். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ், ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருந்தது. அப்போது சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்களும், செல்வந்தர்களும் மட்டுமே காங்கிரஸில் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களைப் பொருத்தவரை காங்கிரஸ் ஒரு விவாத மேடை மட்டுமே. அதைத் தவிர காங்கிரஸ்காரர்களுக்கு ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டுமென்றால் அரசாங்கத்துக்கு மனு போடுவார்கள். மற்றபடி வெகுஜன மக்களுக்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர் திலக், அன்னி பெஸன்ட் உள்ளிட்டோர் காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸ் வீரியம் கொண்டது. கூடவே பிளவும் ஏற்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் என்று வந்தவுடன் கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றார்கள் மிதமான கொள்கைகளை கடைபிடிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆட்சி அதிகாரத்தில் இந்தியர்களுக்கு பங்கு கிடைத்தாலே போதுமானது என்பது அவர்களது விருப்பம். ஆனால் திலகர், லாலா லஜ்பதி ராய், பிபின் சந்திர பால் போன்றோர்கள் இந்தியாவுக்கு பூரணமான சுதந்திரம் கிடைத்தாக வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். ஆங்கிலேயர்களிடமிருந்து பூரணமான சுதந்திரம் பெறவேண்டும், அதற்காக தீவிரமாகப் போராடினால் தவறில்லை என்று திலகர் கருத்து தெரிவித்தார். சுப்பிரமணிய பாரதியார் திலகருடைய கருத்தை ஆதரித்தார். காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு மிதவாத காங்கிரஸ் மற்றும் தீவிரவாத காங்கிரஸ் என்று இரு பிரிவுகள் தோன்றின.

முதல் உலக யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரவாத முழக்கங்கள் குறைந்தன. அந்த சமயத்தில்தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தி காங்கிரஸில் சேர்ந்து கோகலேவின் வழியை பின்பற்றினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தார். போராட்டங்கள் அனைத்தும் அகிம்சை வழியில் இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்டார். காந்தியின் தலைமையில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் வெகுஜன மக்களும், பெண்களும் அதிகளவில் கலந்து கொண்டார்கள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களும், அதற்கு பெருவாரியான மக்களிடருந்து கிடைத்த ஆதரவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஸ்தம்பிக்க வைத்தது. காந்தியுடன் சர்தார் வல்லபபாய் பட்டேலும், ஜவாஹர்லால் நேருவும் சேர்ந்து கொண்டனர். காங்கிரஸில் காந்தி வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்பட்டது. காந்தியின் கொள்கை பிடிவாதத்தின் காரணமாக அவருக்கும் இந்தியாவின் 20ம் நூற்றாண்டின் பெரிய சமூக/அரசியல் தலைவர்களான ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பீமாராவ் அம்பேத்கார், முகமது அலி ஜின்னா, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இரண்டாம் உலக யுத்தம் மூண்ட போது இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் ஒப்புதல் இல்லாமல், இந்திய அரசியல் தலைவர்களை கலந்தாலோசிக்காமல் அப்போது இருந்த வைசிராய் லின்லித்கவ், பிரிட்டிஷ் இந்தியா பிரிட்டனுடன் சேர்ந்து போர் புரியும் என்ற அறிவிப்பை விடுத்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸை சேர்ந்த மாகாண சட்டசபை உறுப்பினர்களும், காங்கிரஸ் மந்திரிகளும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். பிரிட்டிஷ் இந்திய இராணுவம் அப்பொழுது பெரிய படைபலத்தை கொண்டிருந்தது. அதில் சுமார் 25,00,000 போர் வீரர்கள் இருந்தனர். இந்தியா இங்கிலாந்துக்கு ஆதரவாக இரண்டாவது உலக யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்று அரசியல் கட்சிகளிடமும், மக்களிடமும் கருத்து வேறுபாடு நிலவியது. இந்திய இராணுவம் இங்கிலாந்துக்கு சாதகமாக போரில் இறங்கும் என்று ஒருதலைபட்சமாக வைஸ்ராய் அறிவித்ததை கண்டித்து சுபாஷ் கல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கினார். உடனே செயல்பட்ட ஆங்கிலேய சி.ஐ.டி பிரிவு சுபாஷ் சந்திர போஸை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறையில் சுபாஷ் சந்திர போஸ் 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். ஆங்கிலேய அரசு சிறையிலிருந்த அவரை வீட்டுக்காவலுக்கு மாற்றியது. வீட்டுக் காவலிலிருந்து தப்பிய சுபாஷ் சந்திர போஸ் 1941 ஆம் ஆண்டு, மாறுவேடத்தில் ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனிக்கு தப்பித்துச் சென்றுவிட்டார்.

1942ம் ஆண்டு, இரண்டாம் உலக யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், காங்கிரஸ் கட்சி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கியது. முஸ்லீம் லீக், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக ஆங்கிலேய அரசாங்கத்துக்கு ஆதரவாக நிறைய முஸ்லிம்கள் ராணுவ சேவையில் சேர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஜெர்மனியை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த ரஷ்யாவுக்கு பிரிட்டனுடைய துணை தேவைப்பட்டது. அதன் அவசியத்தைப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்டுகள், இந்திய ராணுவம் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதில் விருப்பம் காட்டினர். இந்து மகா சபாவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கி வைத்த காந்தி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களை தங்கள் பணிகளை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டார். வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், தங்களுடைய உத்தியோகத்தைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் காந்தி. அவர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து லட்சக்கணக்கான இந்தியர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் குதித்தனர்.

அந்த சமயத்தில் ஜப்பான் ராணுவம், ஆங்கிலேயர்களின் கட்டுபாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றியது. மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் வட கிழக்கு மாகாணங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைய ஆயத்தமாக இருந்தது. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஆங்கில அரசு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது. காந்தி உட்பட ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. முக்கிய தலைவர்களின் கைதினால் நாடு அமளி துமளி ஆனது. அஹிம்சையாக நடக்கவேண்டிய போராட்டம் வன்முறையாக மாறியது. நாடெங்கும் கலவரம். லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு பொது இடங்களிலேயே சாட்டை அடி வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கும், ராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கும் பலியானார்கள். சில போராட்டத் தலைவர்கள் தலைமறைவாகி, போராட்டத்தை தூண்டிக்கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களின் தீவிர அடக்குமுறையில், காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் 1944 ஆம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் தேசியவாதிகளுக்கு பெருத்த ஏமாற்றம். அப்பாடா, எப்படியோ போராட்டத்தை முறியடித்து விட்டோம் என்று பெருமூச்சு விட்ட ஆங்கிலேய அரசுக்கு யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் பூதாகரமான புதிய ஒரு போராட்டம் (போராட்டம் அல்ல, அது ஒரு போர்) காத்திருந்தது.

0

காந்தி கம்யூனிசத்தை நிராகரித்தது ஏன்?

 

எகிப்து நாட்டில் இருந்து வந்த ஒரு பிரமுகருக்கு 1937 ஜனவரி 22 அன்று காந்தி அளித்த பேட்டியில் இடம்பெறும் கேள்வி பதில் இது.

கேள்வி : ரஷ்யாவிலுள்ள கம்யூனிசம் தனியார் உடைமைகளுக்கு எதிரானது. நீங்கள் சொத்துரிமை வேண்டும் என்கிறீர்களா?

காந்தி : பலாத்காரம் ஏதுமின்றி கம்யூனிசம் வரக்கூடுமானால், அது வரவேற்கத்தக்கதே. அப்போது உடைமைகள் மக்கள் சார்பாக, மக்களின் பொருட்டு நிர்வகிக்கப்படுமே தவிர, யாருக்கும் தனிச்சொத்து என்று ஏதும் இராது. ஒரு லட்சாதிபதி தமது பல லட்ச மதிப்புள்ள உடைமைகளைத் தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவற்றை மக்களின் சார்பிலேதான் அவ்வாறு அறங்காவலராக நிர்வகித்து வருவார். பொது நலனைக் கருதி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளலாம்.

அகிம்சையின் வழியில் பொதுவுடைமையை அடைந்துவிடமுடியும் என்னும் காந்தியின் நம்பிக்கையை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. நேரு தன்னிடம் இருந்து மாறுபடுவதை காந்தி உணர்ந்திருந்தார். ‘நேரு நல்விளைவை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறார். நானோ அதனை அடையும் மார்க்கத்துக்கு முதன்மை அளிக்கிறேன். ஒருவேளை நான் அகிம்சையை அளவுக்கு அதிகமாக வற்புறுத்துகிறேன் என்று அவர் நினைக்கலாம். அவருக்கு அகிம்சையில் நம்பிக்கை உண்டு என்ற போதிலும், மாற்று வழிமுறைகளின் வாயிலாக சோஷலித்தைக் கொண்டுவர விரும்புகிறார்.’

இந்தியக் கம்யூனிஸ்டுகளின் வழிமுறையையும் செயல்பாட்டையும் காந்தி விமரித்தார். ரஷ்ய பாணி புரட்சியை இந்தியாவில் கொண்டுவருகிறார்கள் அவர்கள் முயற்சி தவறானது என்றார் காந்தி. அதே சமயம், கம்யூனிஸ்ட் என்று தன்னை அழைத்துக்கொள்பவரையும் தன்னையும் அவர் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளத் தயாராகயில்லை. இந்த ஒப்பீடு அவருடைய முன்முடிவை மேலும் உறுதிபடுத்தியதே தவிர மாற்றியமைக்கவில்லை. கட்சி கம்யூனிஸ்டுகளைவிட நான் எவ்வளவவோ மேல் என்று காந்தி பெருமிதமும் கொண்டார்.

யங் இந்தியாவில் 26 மார்ச் 1931 அன்று இவ்வாறு எழுதினார் காந்தி.

‘நீங்கள் (கம்யூனிஸ்டுகள்) இந்நாட்டை உங்கள்  வழியில் இட்டுச் செல்ல விரும்பினால் நாட்டு மக்களுக்கு நீங்கள் முறையாக உங்கள் நியாயத்தை எடுத்துரைக்கவேண்டும். அதனை வலுக்கட்டாயமாகத் திணிக்கமுடியாது. நாட்டை உங்கள் நோக்குக்குச் சாதகமாக வளைப்பதற்காக நாசகாரச் செயலை மேற்கொள்ள நீங்கள் துணியலாம். ஆயினும் எத்தனை பேர்களை உங்களால் அழிக்கமுடியும்? லட்சோப லட்சம் மக்களையா ஒழித்துக் கட்டுவீர்கள்?’

பகத் சிங் தூக்கிலடப்பட்டு மூன்று தினங்கள் கழித்து காந்தி எழுதும் வாசகங்கள் இவை என்பதை வைத்து பார்க்கும்போது காந்தி அறிந்து வைத்திருந்த கம்யூனிசத்தின் வடிவம் எத்தகையது என்பது புரிய வருகிறது.

1. கம்யூனிசம் என்பது கொள்கையளவில் ஏற்கத்தக்கது. ஆனால், அதை வன்முறை வாயிலாக மட்டுமே நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை ரஷ்யா நிரூபித்து காட்டியுள்ளது. அங்கும்கூட தனிப்பட்ட முறையில் லெனின் மகத்தான தலைவர் என்றபோதும் வன்முறை துணையுடன்தான் அங்கே அவர் பொதுவுடைமை ஆட்சியை அமைக்கிறார்.

2.  ரஷ்ய பாணி கம்யூனிசத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்தியக் கம்யூனிஸ்டுகள் துடிக்கிறார்கள். அவர்கள் வழிமுறை தவறானது. அதைக் காட்டிலும் அபாயகரமானது நேரு போன்றோர் கம்யூனிசத்தின்மீதும் ரஷ்யாவின்மீதும் கொண்டிருக்கும் ஈர்ப்பு.

கம்யூனிசத்தை காந்தி தன்னுடைய தனிப்பட்ட எதிரியாகவே காந்தி வரித்துக்கொண்டார் என்பது புரிகிறது. அகிம்சை வழியிலான தன்னுடைய போராட்ட முறைக்கு கம்யூனிசம் நேர் எதிரானது என்று அவர் கண்டார். எனில், கம்யூனிசம் என்பது ரஷ்யாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தத்துவம் என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல் அல்லவா?

How to Change the World என்னும் நூலில்  எரிக் ஹாப்ஸ்பாம் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார். கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் முன்வைத்த கோட்பாடுகளைக் கொண்டுதான் கம்யூனிசத்தை மதிப்பிடவேண்டுமே தவிர, ரஷ்யப் புரட்சியைக் கொண்டு மதிப்பிடக்கூடாது என்கிறார் ஹாப்க்ஸ்பாம். அதே போல், சீனாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் தனித்தனியேதான் பரிசீலிக்கவேண்டியிருக்கும். லெனின், மாவோ போன்றோர் கம்யூனிசத்தை அப்படியே நடைமுறைப்படுத்தினார்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார் ஹாப்ஸ்பாம். மார்க்சின் மாணவர்கள் என்றமுறையில் அவர்கள் தங்கள் நாட்டில் நிலவிய பிரச்னைகளுக்கு தாங்கள் அறிந்த வழியில் தீர்வைக் கொண்டுவந்தனர். அந்தத் தீர்வுகளில் உள்ள சரி, தவறுகளை விமரிசிப்பது என்பது மார்க்சியத்தை விமரிசிப்பதாகாது. ‘மார்க்சின் மாணவர்கள் அளித்த பதில்களில் நீங்கள் முரண்படலாம். ஆனால், மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுப்பிய கேள்விகளை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

இந்தியக் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை, லெனினின் சோஷலிசம், நேருவின் சோஷலிச ஈர்ப்பு, பகத் சிங்கின் புரட்சிகர அணுகுமுறை அனைத்தையும் காந்தி ஒன்றுபோலவே அணுகினார். நேரு, ஈர்ப்பு என்னும் அளவிலேயே இருந்ததால் அவரைத் தன்வசப்படுத்தமுடியும் என்று காந்தி நம்பினார். இந்த நம்பிக்கை மற்றவர்களிடம் ஏற்படாததால் அவர்களையும் அவர்களது வழிமுறைகளையும் அவர் நிராகரித்தார்.

இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குப் பதில் ‘காங்கிரஸ் ஸ்தாபனத்தை நிலைமாற்றுவித்துக் கைப்பற்றுங்களேன்’ என்று கேள்வி எழுப்பினார் காந்தி. ‘உங்களது கருத்துகளை முழுவீச்சுடன் வெளியீடு செய்வதற்கு தடையேதும் இல்லையே? யாரும் எதையும் நம்பத்தக்க முறையில் வலியுறுத்திப் பேசுவதைச் செவிமெடுக்கும் சகிப்புத்தன்மை கொண்டதாயிற்றே நம் இந்தியா?’

தீண்டப்படாதவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டியதில்லை, அவர்கள் தங்கள் உரிமைகளை இந்து மதத்தில் இருந்தபடியே கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னது போலவே கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுக்கு வெளியில் இருந்து புரட்சி செய்யவேண்டியதில்லை, காங்கிரஸில் இருந்தபடியே புரட்சி செய்யலாம் என்றார் காந்தி. இந்தியப் பிரிவினையைப் பின்னர் காந்தி எதிர்த்ததும் இந்த அடிப்படையில்தான் என்று புரிந்துகொள்ளலாம்.

- மருதன்

(மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரையின் இரண்டாவது அத்தியாயம்). 

1. காந்தியின் சோஷலிசமும் கம்யூனிசமும்

‘எல்லா சாதியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்!’

அம்பேத்கர் சிந்தனைகள், தலித் அரசியல், சாதியம், வர்க்கப் போராட்டம், உலகமயமாக்கல் என்று அடித்தட்டு மக்களோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் குறித்து எண்பதுகள் தொடங்கி விரிவாக எழுதியும் பேசியும் வருபவர் டாக்டர் ஆனந்த் டெல்டும்டே. தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான மகாராஷ்டிர எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர், செயற்பாட்டாளர். அம்பேத்கரின் பேரனும் ஆவார். தற்சமயம் ஐஐடி கோரக்பூரில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அவுட்லுக் உள்ளிட்ட பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். இவருடைய சமீபத்திய புத்தகம், The Persistence of Caste. ஆனந்த் டெல்டும்டேயுடன் மருதன் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ்வடிவம் இது.  ஆழம் அக்டோபர் இதழில் இடம்பெற்ற இந்தப் பேட்டி தமிழ்பேப்பர் வாசகர்களுக்காக இங்கும் வெளியிடப்படுகிறது.

சாதிகள் எப்படித் தோன்றின?

தற்போதைய கங்கை சமவெளியில் (ஆரியவர்தா), குடியரசுகள் மறைந்து முடியாட்சிகள் உருவான காலத்தில் சாதி முறை தோன்றியிருக்கலாம். கிட்டத்தட்ட புத்தர் பிறந்த காலகட்டம் அது. அதற்கு முன்புவரை, வர்ணப் பிரிவினைதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. வர்ணம் இருந்தபோது சாதிகள் ஏன் தோன்றின என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. முடியாட்சியின் தேவைக்காக என்று பதிலளிக்கலாம். நிதி நிர்வாகம், ராணுவம், கைவினைத் தொழில், உற்பத்தி, உழைப்பு என்று துறை வாரியாக புதிய பிரிவுகளை உருவாக்கி மக்களை அவற்றில் ஈடுபடுத்த சாதிகள் உதவியிருக்கலாம்.

முடியாட்சி காலத்தில், புதிய நிலங்களைத் தொடர்ந்து கைப்பற்றியும், காடுகளைத் திருத்தியும் செல்வம் சேர்க்கப்பட்டது. அவ்வாறு செய்யும்போது, நிலங்களை இழந்த மக்களுக்கு தூய்மையற்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டனர்.

தற்போதுள்ள நிலைக்கு சாதிமுறை வளர்வதற்கு சில நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. கிமு 2 தொடங்கி கிபி 3ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், மௌரிய, சுங்கப் பேரரசுகள் சிதறியபோது, சமூக நிலையின்மை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மனுஸ்மிருதி உருவானது. சாதியப் படிநிலைகள் நிலைபெற்றன. மீறுபவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

ஆக, வர்ணங்கள் நிலைபெற்ற சமூகத்தில் இருந்தே சாதிகளும் தோன்றின. ஆனால் புதிது புதிதாக தோன்றிய சாதிகளைச் சரியான படி வரிசையில் நிறுத்துவது இயலாமல் போனது. மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் சாதிகள்கூட தங்களுக்குள்தான் சண்டையிட்டுக்கொள்கின்றவே தவிர அடிப்படை சாதியக் கட்டமைப்பை ஒருபோதும் எதிர்த்ததில்லை. அந்த வகையில், உட்புறச் சண்டைகள் காரணமாகச் சில சாதிகள் மறைந்துபோயின; சில உடைந்து போயின; புதிதாக வேறு சில சாதிகள் தோன்றின. ஆனால், அடித்தளம் அப்படியே இருக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் மூலம், தன்னைத் தானே நிர்வகித்துக்கொள்ளும், தன்னைத் தானே ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஒருவகை நெகிழ்ச்சித் தன்மை சாதிக்கு ஏற்பட்டது.

சாம்ராஜ்ஜியங்கள் மாறின. அந்நிய ஆட்சிகள் ஏற்பட்டன. அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பௌத்தம், ஜைனம் போன்ற கருத்தாக்கங்கள் வளர்ந்தன. போர் மற்றும் படையெடுப்புகள் மூலம் புதிய நிலப்பரப்புகள் இணைத்துக்கொள்ளப்பட்டன. புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. வர்த்தகம், மூலதனம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அனைத்தையும் கடந்து, சாதி முறை நிலைத்து நின்றது.

ஒவ்வொரு சாதியும் அடுக்குகளில் மேலே ஏறுவதற்காகப் போராட வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக இப்படிப்பட்ட போராட்டங்கள் மேலாதிக்கத்துக்காக நடைபெற்றன. இந்தப் பண்புகளே சாதிக்குத் தேவைப்படும் பலத்தை அளிக்கின்றன என்று நினைக்கிறேன். இத்தனை காலம் சாதி நீடித்து நிற்பதற்கும் இனியும் நீடித்து நிற்பதற்கும் இந்தப் பண்புகளே காரணம். நிலைமையை மாற்ற ஒரே வழி, சாதிகளை முற்றிலுமாக அழித்தொழிப்பதுதான்.

பிராமண ஆதிக்கம் என்னும் கருத்தாக்கமே தவறு என்கிறார்கள் சிலர். அப்படியொன்று இருந்ததேயில்லை என்றும் வாதிடுகிறார்கள். வேறு சிலரோ 2000 வருடங்களாக பிராமண ஆதிக்கம் நிலவிவந்ததாகச் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வர்ண அமைப்புமுறை தொடங்கிய காலம் முதலே பிராமணர்கள் உயரிய பீடத்தில்தான் இருந்தார்கள். அறிவின் வலிமையை அவர்கள் ஏகபோகமாக்கிக்கொண்டார்கள். கடவுளின் பிரதிநிதிகள் என்றும் தங்களை அழைத்துக்கொண்டார்கள். எப்போது மழை பெய்யும், எப்போது அறுவடை செய்யலாம் போன்ற கேள்விகளுக்கு விடை காண பிராமணர்களையே நம்பியிருந்தார்கள் விவசாய மக்கள். அவர்களிடம் ஏதோ விசேஷ சக்தி இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். பிராமணர்களின் ஆதிக்கம் இந்த நம்பிக்கைகள் காரணமாக மேலும் அதிகரித்தது.

அதற்காக பிராமணர்களின் ஆதிக்கத்தை யாருமே கேள்வி கேட்கவில்லை என்று சொல்லமுடியாது. பரசுராமனின் புராணம் மூலம் சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் போட்டி நிலவியதை அறியமுடிகிறது. அதே போல், சமுதாயாத்தில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள் (ஆங்கிலம், நிர்வாகம் ஆகியவை) பிராமணர்களின் அதிகாரத்தை ஆட்டம் காண வைத்தன. ஆனால், அவர்கள் புதிய சூழலக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக்கொண்டார்கள். மேலாதிக்கம் செலுத்துவதற்கு தோதான தகுதிகளை வளர்த்துக்கொண்டார்கள்.

ஜோதிர்பா புலே காலம் தொடங்கி அடித்தட்டு மக்கள் மேற்கொண்ட போராட்டம் பிராமணர்களின் செல்வாக்கை அசைத்தது. இன்று, பிராமணர்கள் ஓரளவுக்கு தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர் என்றாலும் பழைய காலத்தின் நிழல்போல் அவர்கள் அதிகாரம் சுருங்கிவிட்டது.

அம்பேத்கர் குறிப்பாக பிராமணர்களை விமரிசித்தாரா அல்லது மேலாதிக்கம் புரிந்த அனைவரையுமா?

அம்பேத்கர் பிராமணியத்துக்கு எதிரானவர், பிராமணர்களுக்கு அல்ல. சாதியை வைத்து மக்களை அவர் அடையாளப்படுத்தியதில்லை. எந்தவொரு சாதியிலும் பிராமணர்கள் இருக்கமுடியும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஏன், தலித்துகளின் மத்தியிலும்கூட பிராமணீயம் இருக்கமுடியும். இப்போது இதனை நாம் கண்முன்னால் காண்கிறோம். அம்பேத்கரை ஆதரித்த பலருள் பிராமணர்களும் உயர் சாதியினரும் அடங்குவர் என்பதையும் அவரை எதிர்த்தவர்களில் சில தலித்துகளும் இருந்தனர் என்பதையும் நாம் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

சாதி முறையைக் களைந்துவிட்டு இந்து மதம் தழைத்திருப்பது சாத்தியமில்லையா?

இந்து மதத்தால் சாதிகளைக் களையமுடியாது என்பதைக் கண்டறிந்தபிறகே அம்பேத்கர் அதனைத் துறந்துவிட்டு பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். இந்து மத மறை நூல்களைச் சார்ந்து சாதிகள் இன்று தழைக்கவில்லை. தேர்தல்கள், அரசியல் சாசனத்தின் ப்ரொவிஷன்ஸ் போன்ற நவீன அமைப்புகள் சாதிக்குத் தீனி போடுகின்றன. மதமாற்றத்தால் சாதியை ஒழிக்கமுடியவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் சாதி பரவியுள்ளது. சாதியின் இயல்புகள் விநோதமானவை. சாதிகளை முற்றாக அகற்றும்வரை அவை வளர்ந்துகொண்டுதான் இருக்கும்.

தென் மாவட்டங்களில், தலித் என்னும் அடையாளத்தை மக்களால் சரிவரப் புரிந்துகொள்ளமுடியவில்லை. செப்டெம்பர் 2011 பரமக்குடி கலவரத்தைத் தொடர்ந்து அங்கும் பிற பகுதிகளிலும் உள்ள மக்களிடம் நான் உரையாடியபோது அவர்கள் சொன்ன ஒரு விஷயம் இது. எதற்காக எங்கள்மீது ஒரு புதிய பெயரைத் திணிக்கிறீர்கள்? எந்த வகையில் இந்தப் பெயர் எங்களுக்கு உதவும்? இதுபோன்ற கேள்விகளை எப்படி எதிர்கொள்வது?

சாதிய அமைப்பில் தலித் என்றொரு பிரிவு இல்லை. தீண்டத்தகாதவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட பெயர் இது. ஒடுக்கப்பட்ட வகுப்பினர், ஹரிஜன் (காந்தி கொடுத்த பெயர் இது) போன்ற அடையாளங்கள் போட்டியிட்டுக்கொண்டிருந்தபோது அடித்தட்டு மக்கள் தலித் என்னும் பெயரைத் தங்களுக்கானதாக தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். பகுதியளவில் தலித் என்பது வர்க்கப் பெயரும்கூட. பாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையின் கீழ் திரளும் அனைத்து தீண்டப்படாதவர்களையும் குறிக்கும் பெயரும்கூட.

பரமக்குடியில் சில தலித் பிரிவினர் தங்களை தலித் என்று அழைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை நான் அறிவேன். ஏன் இவ்வாறு அவர்கள் நினைக்கிறார்கள்? நான் தலித் அல்ல என்று சொல்வதன்மூலம் பிற தலித் சாதியனரைவிட நான் மேலானவன் என்னும் மேன்மை நிலையை அடைய விரும்புகிறார்கள். இந்த மனநிலை சாதீய ரீதியிலானது. நல்லவேளையாக எல்லோரும் எப்படி நினைக்கவில்லை என்பது ஆறுதலளிக்கும் சங்கதி.

பரமக்குடியில் நடத்தப்பட்ட தலித் படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் நானும் பங்குபெற்றுள்ளேன். பெரும் மக்கள் கூட்டத்தில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடன் பல விஷயங்களை விவாதிக்கமுடிந்தது. நீங்கள் எழுப்பிய கேள்வியும் அதில் இடம்பெற்றிருந்தது. அவர்களுக்கு நான் அளித்த விளக்கம் இதுதான். ‘ஒரு தலித்தாக தன்னை உணர்வதன்மூலம் பல்வேறு பிரிவினர் ஒருகுடையின் கீழ் ஒன்றிணையலாம் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.’ அம்பேத்கர்மீது அவர்களுக்கு மதிப்பு இருந்ததால், இந்த வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏற்காதவர்களிடம் நாம்தான் மனம்விட்டு உரையாடவேண்டும். ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்கமுடியும் என்று நம்புகிறேன்.

சாதிகள், கிளைச் சாதிகள் என்று பலவாறாகப் பிரிந்திருக்கும் அடித்தட்டு மக்களை தலித் என்னும் ஒற்றை அடையாளம் ஒன்றுபடுத்திவிடும் என்று நினைக்கிறீர்களா?

வர்க்கத்தின் அடிப்படையில் அடித்தட்டு மக்கள் ஒன்றுதிரள்வதற்கு, வர்க்கத்தின் அடிப்படையில் தங்கள் அரசியலை அவர்கள் உருவாக்கிக்கொள்வதற்கு தலித் என்னும் அடையாளம் முதல் படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், அப்படி நடைபெறகூடாது என்று பல சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இட ஒதுக்கீடும் அப்படியான ஒன்றாக ஆகிவிட்டது. வசதி படைத்தவர்களுக்குத்தான் இந்த ஏற்பாடு மேற்கொண்டு உதவுகிறது. தலித் சாதியினரிடையே இட ஒதுக்கீடு பகைமையை ஏற்படுத்தியுள்ளது. முதல் மோதல், ஆந்திராவில் மள்ளர்களுக்கும் மடிகர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இப்போது கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் மோதல்கள் பரவிவிட்டன.

அரசாங்கமும் தன் பங்குக்கு இந்தப் பிரிவினையை வளர்த்துவிடுகிறது. ஒவ்வொரு கிளை சாதியிலும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து வளர்த்துவிடுவதன்மூலம் சாதியும் உடன் சேர்ந்து வளர்கிறது. தலித் மக்கள் இதனை எதிர்த்திருக்கவேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இதனை விரும்பத் தொடங்கிவிட்டார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு தலித் அரசியல் என்ன செய்திருக்கிறது?

பல விஷயங்களைச் சாதித்துக்கொடுத்திருக்கிறது. சுயமதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை அளித்தது. சுயமரியாதை உணர்வை ஊட்டியது. இடஒதுக்கீட்டையும் அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு இடத்தையும் பெற்றுத் தந்தது. அரசின் கவனத்தை அவர்கள்மீது திருப்பியது. ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இன்று தலித் அரசியலின் ஆற்றல் குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை. நான் முன்பே சொன்னபடி, இடஒதுக்கீட்டின் பலன்களை ஏற்கெனவே வசதியாக இருப்பவர்கள்தான் அனுபவிக்கிறார்கள். உலகமயமாக்கல் அடித்தட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. தனியார்மயமாக்கலின் விளைவாக பொதுத்துறைகளில் ஆள்குறைப்பு ஏற்பட்டுள்ளதால் இடஒதுக்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. தரமான கல்வி மறுக்கப்படுவதால் இளைய சமுதாயத்தினர் முறைசாரா தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஊதிய பாதுகாப்பு இல்லை. குறைவான ஊதியமே கிடைக்கிறது.

தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்க இன்று அவர்களுடைய தலைவர்கள் தயாராக இல்லை. காரணம் அவர்கள் தரகர்களாக மாறிவிட்டார்கள். தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகிறார்கள்.

நிலைமை மாறவேண்டுமானால், மக்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை வைத்து மீண்டும் இயக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டும். வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு போராட்டம் தொடங்கப்படவேண்டும்.

0

மருதன்