மலர்மன்னன் மறைவு

malarmannan_1திமுக உருவானது ஏன்?, ஆரிய சமாஜம், திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும் உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் மலர்மன்னன் 9 பிப்ரவரி 2013 அன்று காலை மரணம் அடைந்துவிட்டார். மேற்சொன்ன மூன்று புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடுகள்.

திமுக உருவானது ஏன்?, ஆரிய சமாஜம் என்ற இரண்டு புத்தகங்ககளையும் எடிட் செய்தது சுவையான அனுபவம். குறிப்பாக, திமுக உருவானது ஏன் என்ற புத்தகத்துக்கு அவர் கொடுத்த தலைப்பு “திமுக தோன்றுவானேன்?’ – ஓர் ஆய்வுப்பார்வை என்பதுதான். மேற்கோள்களாலும் விமரிசனங்களாலும் நிறைந்த புத்தகம். பெரியாரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசிக்கும் மலர்மன்னன், அண்ணாவின் செயல்பாடுகளைக் கொஞ்சம் மென்மையாகவே கையாண்டிருப்பார்.

திமுக உருவானதன் பின்னணியை ஆய்வுசெய்யும் புத்தகம் என்பதால் புத்தகம் முழுக்க கருணாநிதி என்ற பெயரே வராதவாறு பார்த்துக்கொண்டிருந்தார் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தில் ஆறேழு முறை கருணாநிதியின் பெயர் வரும். அவற்றில் மூன்று முறை, கவிஞர் கருணானந்தம் பற்றிய செய்திகளை எழுதும்போது, “இவர் கருணாநிதியின் நண்பர்’ என்று குறிப்பிட்டிருப்பார். அண்ணா பேரவையை திமுகவே நடத்தும் என்று சொன்னபோது ஒருமுறையும் கண்ணதாசனுடனான மோதல் குறித்துச் சொல்லும்போது ஒருமுறையும் கருணாநிதியின் பெயர் வரும். இவையும்கூட திமுகவின் உருவாக்கத்துக்குப் பிறகு நடந்த சம்பவங்களே. ஆக, திமுகவின் உருவாக்கத்துக்கும் கருணாநிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்த இந்தப் புத்தகத்தில் முயற்சி செய்திருப்பார் மலர்மன்னன்.

புத்தகத்தை எடிட் செய்யும் சமயத்தில் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். தனக்கும் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கும் உள்ள தொடர்புகள் பற்றிப் பேசுவார். அண்ணாவுடன் அமர்ந்து அசைவ உணவு (மீன்) உண்ட சம்பவத்தைப் பெருமிதத்துடன் சொல்வார். எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர்களுள் அடியேனும் ஒருவன் என்பார். பெரியாரின் மீது அளவற்ற கோபமும் அண்ணாவின் மீது அளவுகடந்த அன்பும் கொண்டவர் என்பதைத் தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்துவார்.

malarmannan murasoliகருணாநிதியைக் கடுமையாக விமரிசிக்கக்கூடியவர். எம்.ஜி.ஆருக்கும் மலர்மன்னனுக்கும் இருந்த நட்பு கருணாநிதியை அதிருப்தியடையச் செய்தது என்றும் அதனை வெளிப்படுத்தும் வகையில் முரசொலியில் “மலர் மன்னன் கதை’ என்ற தலைப்பில் கதை வடிவிலான கட்டுரை ஒன்றை கருணாநிதி எழுதியிருக்கிறார் என்றும் சொல்வார். ஒருமுறை அந்தக் கதையின் ஒளிநகலை அனுப்பிவைத்தார்.

இந்துத்வ சிந்தனையாளராகவும் தீவிர திராவிட இயக்க எதிர்ப்பாளராகவும் அறியப்பட்ட மலர்மன்னனின் ஆரிய சமாஜம் புத்தகத்தை எடிட் செய்துகொண்டிருந்த சமயத்திலும் திமுக, திராவிட இயக்கம் பற்றியே என்னிடம் அதிகம் பேசுவார். குறிப்பாக, காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் அவர் எழுதும் கட்டுரைகள், அவற்றுக்கான எதிர்வினைகள், பாராட்டுகள் பற்றிப் பேசுவார். இரண்டு புத்தகங்களும் வெளியான பிறகுதான் அவரை நேரில் சந்தித்தேன். கிழக்கு அலுவலகத்துக்கு வந்தபோது சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கலைஞரின் கல்லக்குடி போராட்டம் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசினார்.

பின்னர் திராவிட இயக்கம்: புனைவும் புரட்டும் என்ற தலைப்பில் தான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றியும் நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகம் பற்றியும் பேசினார்.

அவர் எழுதிய அந்தப் புத்தகம் தற்போது “திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. கடந்த சென்னை புத்தக்காட்சியில் நல்ல கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த மலர்மன்னனின் மறைவு தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வ எழுத்தாளர் சமூகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

0

ஆர். முத்துக்குமார்

கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி…

 தலைப்பு வயதானவர்களை இழுபடுத்துவதாக அமைந்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன். சொல்ல வரும் விஷயத்துக்கு அழுத்தம் கொடுக்க நடைமுறையில் உள்ள ஒரு சொல்லாடலை அந்த நோக்கத்துக்காக மட்டுமே பயன்ப்டுத்தியிருக்கிறேன். மீண்டும் மன்னிக்கவும்.

தமிழ் கூறும் நல்லுலகில் வாழும்படி நேர்ந்தோருக்கு சில அனுபவங்கள் தவிர்க்க முடியாதது.
‘அந்தக் காலத்து வால்வு ரேடியோ மாதிரி வருமா? என்ன க்லியரான சவுண்டு? ட்ரான்ஸிஸ்டர்லையெல்லாம் அப்பிடி க்லியரா வருமா?’ சமீபத்தில் கூட நண்பரொருவர் சலித்துக் கொண்டிருந்தார். ‘என்னதான் இருந்தாலும் பிலிம் கேமரா மாதிரி வருமா? ஏதோ டிஜிட்டல்ங்குறாய்ங்ய.’ இத்தனைக்கும் அவர் 20களின் இறுதியில் உள்ள ஒரு இளைஞர்.

ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் வழக்கொழிந்து கொண்டிருக்கும் முந்தையது தான் சிறந்தது என்று வாதாடும் ஒரு தலைமுறை எல்லா இடங்களிலும் இருக்கலாம். நமக்கு தமிழ் பேசத்தெரியும், இந்தப் புலம்பல்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம், இதனால் சமயங்களில் பாதிப்பு கூட அடைந்திருக்கிறோம் என்பதனால் தாள முடியாமல் இப்படி புலம்ப வேண்டியிருக்கிறது.

எண்பதுகளின் இறுதியில் பால்பாயிண்ட்  பேனா தொழில்நுட்பம் செறிவடைந்து மலிவு விலைகளில் அதிகம் புழக்கத்துக்கு வர ஆரம்பித்தது (அறிவு ஜீவிகளுக்கு பால்பாயிண்ட் பேனா 1880களிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று எனக்கும் தெரியும்; ஆனால் எனது அனுபவத்தில் 1980களின் இறுதியில்தான், குறைந்த பட்சம் இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததாக உணர்கிறேன்). மேலும், எழுதுவதற்கும் அது சுலபமானது. ஆனால் 90% தலைமுறைக்கு முந்தைய, பாடபுத்தகங்களில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கண்ணைமூடிக் கொண்டு ஒப்பிக்கும் திறம் கொண்ட, ஆசிரியர்கள் (அவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள்) கொண்ட ஒரு பள்ளியில் அனைவரும் மை பேனா கொண்டுதான் எழுத வேண்டும் என்ற ஒரு மொக்கைச் சட்டம்.

ஏன் பால்பாயிண்ட் பேனா கொண்டு எழுதக்கூடாது என்று கேட்டுவிடவும் முடியாது. மூஞ்சியை 5 வினாடி உற்றுப் பார்த்தாலே 3 வருடம் ஒரே வகுப்பில் உட்கார வைத்துவிடும் அகந்தை கொண்ட வாத்திகளிடம் வாயைத் திறந்து கேள்வி கேட்பதென்பது சொந்தமாக செலவு செய்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பது தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள பள்ளிகளில் படித்த அனைவருக்கும் தெரியும். கல்வி இந்த முறையில் கற்பிக்கப்பட்டு இவர்களும் இன்னும் 2 தலைமுறைக்கு முன்பு ஆசிரியர்களாய் பணியாற்றியிருந்தால், மைக்கூடு கொண்டு வந்து மயிலிறகால்தான் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பார்களாயிருக்கும். தப்பித்தோம்.

0

இவ்வாறான தமிழ்ச் சூழலில், நமது அரசியல் சூழல் எப்படியென்றால், அய்யா செஞ்சா அம்மாவுக்குக் குத்தம், அம்மா செஞ்சா அய்யாவுக்குக் குத்தம். நூலக இடமாற்றம். இது அவர்களுக்குள்ளே நடக்கும் அகந்தை யுத்தம். கடந்த அம்மா ஆட்சியில் புதிய சட்டமன்ற கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடம், ஆட்சியை இழக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், அடுத்த ஆட்சியில் வேறு எதற்கும் பயன்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அய்யாவால் அவசர அவசரமாக, குயுக்தியுடன் கட்டப்பட்டது இந்த நூலகம். இதற்கெல்லாம் அசருகின்ற ஆளா அம்மா? ‘தூக்குடா நூலகத்தை’ என்று ஆணையிட்டு விட்டார்.

ஆனாலும், இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, தேவைப்படும் அளவைவிட, இருமடங்கு செலவு செய்து, அய்யா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக் கொண்டார். மொத்தத்தில், குழந்தைகள் படித்து, அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை அய்யா(ஐயா?)வுக்கோ அல்லது சர்வதேச தரத்தில் (முதலில் இந்தப் பதத்துக்கு, தமிழகத்தில் ஒரு தடையுத்தரவு வேண்டுமைய்யா) ஒரு குழந்தைகள் மருத்துவமனை அமைத்து, தமிழ்க் குழந்தை ஒவ்வொன்றும் குஷ்பு போல (நன்றி குஷ்புவின் தேர்தல் பிரச்சாரம்) கும்மென்றிருக்க வேண்டுமென்ற அக்கறை அம்மாவுக்கோ சிஞ்சித்தும் இல்லை. இவை இரண்டில் ஒன்றை நீங்கள் மறுத்தாலும் இந்தக் கட்டுரையை இதற்கு மேற்கொண்டு படிப்பது உங்களுக்கு(ம் எனக்கும்) நேர விரயம் தான்.

இவை அன்றாடம், நமது தோல்களின் தடிமனைக் கூட்டிவிட்ட ஒரு தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுதான். ஆனால், இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்கள் என்று அழைக்கப்ப்டும் ஒரு குழுவினர் இதற்கு ஆற்றிய எதிர்வினைதான் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. அதிலும், விகடனில் யாழ் நூலகத்தைக் கொளுத்திய நிகழ்வுடன் கூட ஒரு எழுத்தாளர் ஒப்பிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை ஆரம்பித்து (அநேகமாக முடிந்து) நூற்றாண்டுகளாகி விட்ட பின்பு எதற்கு இப்படி ஒரு பேத்தல் என்று யாருக்கேனும், ஐயமிருந்தால் அவர்களுக்கு ஒரு விளக்கம். அப்போதே இது போன்றதொரு கட்டுரை வந்திருந்தால், ஒன்று, இதற்கு கட்சி சாயம் பூசப்பட்டிருக்கு அல்லது பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு கோவிந்தாவாகியிருக்கும். இன்று, நூலகத்தின் எதிர்காலம் என்ன என்று எந்த சத்தமுமில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை வரும்போது ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ காட்டுக்கத்தல் கத்தி விட்டு ஓய்ந்து விடுவது தான் தமிழ் கலாச்சாரம். இது தான் என்னுடைய தன்னிலை விளக்கம்.

0

ஒரு பத்து ஆண்டுக்கு முன்பு கூட, நூலகம் என்பது சமுதாய அறிவூக்கத்துக்கு ஒரு இன்றியமையாத தேவையாயிருந்திருக்கலாம். எனது சொந்த அனுபவத்தில் 1997ல், ஒரு குறிப்பிட்ட தகவலுக்காக, அதற்கான புத்தகத்துக்காக, நானும் எனது நண்பனும், நாங்கள் பயணித்த ஊர்களில், கண்ணில்பட்ட நூல் நிலையங்கள் அனைத்துள்ளும் நுழைந்து வெகு நேரம் செலவிட்டுத் தேடியிருக்கிறோம். சென்னையில், பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஏதாவது நடைபாதைப் புத்தகக் கடை தென்பட்டு விட்டால் கூட, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துச் சென்று தேடியிருக்கிறோம் (தாகம்! அறிவுத்தாகம்!!).

மோட்டார் வாகனக் கண்டுபிடிப்புக்குப் பின்னர், நடந்து ஊர்களைக் கடந்த அனுபவத்தை நினைத்துப் பார்ப்பது போல் உள்ளது. இன்றைய நிலையில், சில விநாடிகளுக்குள், அன்று நாங்கள் ஊர்தோறும் அலைந்து தேடிய தகவல், எங்களுக்குக் கிடைத்துவிடும். சொல்லப் போனால், 2000 வரை நான் ஒரு புத்தகப்புழு (ஐயோ அதற்காக நான் ஒரு பெரும் படிப்பாளி என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்). பிறகு மெல்ல மெல்ல புத்தகம் படிக்கும் பழக்கம் அருகி, இன்று, இணையத்தில் கிடைக்கவில்லை புத்தகத்தில்தான் கிடைக்கிறது என்ற நிலை வந்தாலொழிய புத்தகம் படிப்பதில்லை.அதற்காக வாசிப்பதில்லை என்பதில்லை. சொல்லபோனால் இன்று அதிகம் வாசிக்கிறேன்.

கோட்டூர்புரத்தில் ரூ230 கோடி செலவில் ஒரு நூலகம் அதுவும் 2010-ல் தேவையா? இந்த நூலகத்தால் பயன் பெறப் போகின்றவர் யார்? இந்த நூலகத்துக்காக ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு தூரம் பயணிப்பார்? ஒருவருக்குத் தேவையான தகவல் அருகிலிருக்கும் (அல்லது தனது வீட்டிலிருக்கும்) இணயத்தில் கிடைக்கப் பெறும்போது, இவ்வாறு ஒரு நூலகத்தின் தேவை என்ன?

ஆனால், தமிழில், இருக்க வேண்டிய அனைத்தும் மிண்ணனு வடிவத்தில் இருக்கின்றனவா? இந்த நூலகம் மிக அதிகபட்சமாக சென்னைவாழ் மக்களுக்கும், என்றாவது சென்னைக்கு வரும் ஒருவருக்கு ஒரு சுற்றுலா தலமாக (அதுவும் கூட, இந்த நூலகம் மாற்றப்படாமல் இருந்திருந்தால், இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும்தான்; அதன் பின் தான் நமது அரசாங்கப் பராமரிப்பின் வள்ளல் தெரியுமே) மட்டுமே பயன்பட்டிருந்திருக்கும். இன்று பல மின்-நூல் கருவிகள் வந்து விட்டன. ஒவ்வொன்றும் சில ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்டிருக்கின்றன. அண்ணா நூலகம் 12 லட்சம் புத்தகங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டதென்று அறிகிறேன். அதிகபட்சமாக, 2TB கொள்ளும் இந்தப் புத்தகங்களை ஒரு வழங்கியின் மூலமாக இணயத்தில் கிடைக்கச் செய்தால், சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகத் தமிழர் அனைவருக்கும் பயன் தருமல்லவா? இந்தப் நூல்களை மிண்ணனு வடிவில் மாற்றுவதற்கு செலவும் இடமும் இப்போதுள்ளதை விட பல ஆயிரம் மடங்கு குறைவே. இதற்கு எடுக்கும் முயற்சியில் (அதாவது, நூல்களைப் மிண்ணனுவடிவில் மாற்றும்) ஒரு புதிய தொழில்நுட்பம் கூடக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கலாம் (தமிழ் OCR தொழில்நுட்பம் எந்த அளவில் உள்ளதென்று தெரியவில்லை).

ஆனால் அறிவு ஜீவிக் குழாம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அய்யாவின் அரசியலுக்கு எண்ணெய் ஊற்றும் விதமாகத் தான் பேசுகிறார்கள் – வேண்டுமென்றோ, அதுபற்றிய பிரக்ஞை இல்லாமலோ அல்லது வருங்காலத் தொழில்நுட்பம் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமலோ!

குழந்தைகள் சுமக்கும் புத்த மூட்டைகள் பற்றி, நாம் குழந்தைகளாக இருந்ததற்கு முன்னாலிருந்தே, பல்லாண்டுகளாக கவலை மட்டுமே பட்டுக் கொண்டிருக்கிறோமே? இப்படிப்பட்ட – பளுவையும் குறைக்கக் கூடிய, அதே நேரத்தில் குழந்தைகள் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில், மலிவு விலையில் (பள்ளிக்கு ஆயிரக்கணக்கில் புத்தகக் கொள்ளளவு கொண்ட மின்-நூல் கருவி தேவையில்லையே) கிடைக்கக் கூடிய மின்-நூல் கருவிகளை பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தக் கூடிய ஆலோசனகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிடலாமே? எல்லாவற்றிற்கும், வெள்ளைக்காரனுக்காக் காத்திருக்க வேண்டுமா? நாம் முன்னோடியாக இருக்கக் கூடாதா (அது சரி, இவர்களுக்கெல்லாம் வாக்களித்துவிட்டு நாம் சிலவற்றில் மட்டும் தான் உலகின் முன்னொடியாக உள்ளோம்).

0

பள்ளிகளில் நாம் படிக்கும் பாடங்கள் என்னென்ன? பொதுவாக, ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு புவியியல். ஒவ்வொன்றும் பின்னாட்களில் நாம் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏதாவதொரு வகையில் அடிப்படையாக அமையக்கூடியவை (இன்றைய நிலையில், தமிழ் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணி. ஏதோ மரியாதைக்காக பள்ளியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்). வருங்காலத்தில் கணினி (அல்லது அதற்கு இணையான அல்லது அதனை அடிப்படையாகக் கொண்ட ஏதோ ஒன்று) இல்லாத துறை என்று ஒன்று இருக்கப் போவதில்லை. மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஒரு பாடமாக ஏன் சேர்க்கக் கூடாது? (எவ்வாறாகிலும் நமது கல்விமுறையில் மாற்றமென்பது தேவை; அது பற்றி தனிக் கட்டுரை தேவை). மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஆரம்பப் பள்ளியிலிருந்தே போதிக்கத் தேவையான ஆராய்ச்சி பற்றி, இந்நூலக இயக்கம்/மாற்றம் பற்றி கிளர்ந்தெழும் அறிவு ஜீவிகள் கொஞ்சம் சிந்தித்திருக்கலாமே?

வெளிப்படையாகச் சொன்னால், காகித நூல்களின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டு, மின் நூல்களின் உபயோகத்துக்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றே இந்தக் கட்டுரை சொல்கிறது. உடனே ‘புத்தகத்தை ஒழிப்பதாவது?’ என்று அதே யாழ் நூலக ரேஞ்சுக்குக் கிளம்பத்தான் செய்வார்கள். அவர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களாக இருந்திருந்தால், காதித நூல்கள் வர ஆரம்பித்திருக்கும்போது ‘ஓலைச் சுவடிகளை ஒழிப்பதாவது?’ என்று தான் கிளம்பியிருப்பார்கள்.

எது எப்படியிருந்தாலும், அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் காகித நூல்கள் அருங்காட்சியகங்களுக்குள்ளும், வீடுகளில் உள்ள பரண்களிலும் அடைக்கலம் அடைந்துவிடும். இது தவிர்க்க முடியாதது. இன்றே எத்தனையோ பேர் பேனா கொண்டு எழுதும் முறையை கைவிட்டிருப்பார்கள் கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்.

0

இவ்வளவு கூறியும், நிகழ்காலத்தை கவனித்துப் பார்த்தால், இந்தக் கட்டுரை பேசும் பொருளுக்கு ஏதாவது பொருளுண்டா, இதற்கு செலவிட்ட நேரத்துக்கு எதுவும் மதிப்புண்டா என்ற ஆயாசமே உண்டாகின்றது.

நாம் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை நமது நடைமுறைக் கல்விப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம், நமது படைப்புகளை அதனைப் பயன்படுத்தி எவ்வாறு பரவலாகக் கொண்டு செல்லலாம் என்று பேசும் அதே வேளையில், நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் தொழில்நுட்பம், குறிப்பாக கணினி சார்ந்த தொழில்நுட்பம், எந்த அளவுக்கு சமகால வளர்ச்சியோடு ஒட்டியுள்ளது என்று பார்க்கப் புகுவதனால் வரும் விளைவுதான் இது. திறமூலம் (ஓப்பன்சோர்ஸ்) பற்றி நானறிந்த வரையில் எந்த கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் எதுவும் போதிக்கப்படுவதோ ஏன் அறிமுகப்படுத்துவதோ கூட இல்லை. முக்கிய காரணம், ‘பெரும்பாலான’ ஆசிரியர்களுக்கு, சமகால நிகழ்வுகள் பற்றி அறியும் ஆர்வமோ, அதனை பாட திட்டமாக கொண்டுவருவதற்கான முயற்சியில் அக்கறையோ இருப்பதில்லை. ஊதிய உயர்வு சார்ந்த போராட்டங்களுக்கு மட்டும்தான் ஒற்றுமையாகக் குரல் கொடுப்பார்கள்.

சமீபத்தில் கூட அண்ணா பல்கலை திறமூலம் சார்ந்த பட்டறைகளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லுரிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி, ஏனோ உடனே திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. கணினி என்றால் விண்டோஸ் மட்டுமே என்ற அளவில் பொதுவாக போதிக்கப்படுகிறது. அதிலும் அண்மைய மென்பொருள் மொழிகளும், இயங்குதளங்களும் போதிக்கப்படுவதில்லை; பெரும்பாலும் காலாவதியான தொழில்நுட்பங்களே போதிக்கப்படுகின்றன. இதில் இன்னொரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த நடைமுறை என்னவென்றால் அனேகமாக அனைத்து கல்வி நிலையங்களும் திருட்டு விண்டோஸ் பயன்பாட்டையே சார்ந்திருக்கின்றன (மைக்ரோசாப்ட், இதனை அறியாது என்பதில்லை; இதனை அறிந்தாலும் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது என்பது தனி அரசியல்). திருட்டுப் பிரதி பயன்படுத்துவதை எந்த ஒரு உறுத்தலுமின்றி மேற்கொண்டு வருகின்றனர். இதுவும் மாணவர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது. நமது வருங்காலத் தூண்களுக்கு, பாட திட்டத்தில் இல்லாத போனஸ் பயிற்சி இது.

ஆனால் காலாவதியாகப் போகின்ற ஒரு விஷயத்துக்கு, இரு அரசியல் யோக்கியர்கள் தங்களுக்குள் அகந்தை யுத்தம் நடத்திக் கொள்ளும்போது, கட்சி கட்டிக் கொண்டு கிளம்பும் ‘படைப்பளிகள்’ மற்றும் ‘சமூக ஆர்வலர்கள்’ என்றுதான் உண்மையான சுரணை அடையப் பெறுவார்களோ? நல்ல வார்த்தைகளில் சொல்லப் போனால், இருவரும் நமது தோள்பட்டையில் ஏறியமர்ந்து நமது காதிலேயே ஓ…லமிடுகிறார்கள். இதில் இது சரி இது தவறு என்று ‘சீரியஸ்’ ஆன விவாதம் வேறு.

0

அனானிமஸ்

நெடுஞ்செழியன் : நம்பர் 2

நிரந்தர முதல்வர், நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பன போன்ற பதங்களை நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நிரந்தர இரண்டாம் இடம் என்றொரு பதமும் உண்டு. அது சிலருக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, அரசியலில். கட்சிகள் மாறும். காட்சிகள் மாறும். தலைவர்கள் மாறுவார்கள். ஆனால் அந்த இரண்டாம் இடம் மட்டும் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். அவ்வப்போது அவர்களை முதலிடம் முத்தமிடும். ஆனால் நிலைக்காது. இத்தனைக்கும் முதல் இடத்தைப் பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் அவர்களுக்கு இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியல் களம் கண்ட முக்கியமான நம்பர் 2 தலைவர் நாவலர் நெடுஞ்செழியன்.

அவரைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என்று நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அவருடைய புத்தகம் ஒன்றைப் புரட்டியபோது அவர் பிறந்த தேதி கண்ணில்பட்டது. 11 ஜூலை 1920. அதாவது, இன்று.

சுயமரியாதை இயக்கம் தொடங்கி நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திமுக, மக்கள் திமுக, அதிமுக என்று திராவிட இயக்கத்தில் இருந்து உருவான பெரும்பாலான கட்சிகளில் பங்களிப்பு செய்தவர் நெடுஞ்செழியன். நாகை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்த நெடுஞ்செழியன், பட்டுக்கோட்டையில் பள்ளிக்கல்வியையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தவர்.

பெரியாரின் பேச்சை தனது தந்தையுடன் சென்று கேட்டவர். அதன் காரணமாகவே சுயமரியாதை இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நிறைய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். பிறகு சுயமரியாதை இயக்கத் தலைவர்களைத் தம்முடைய ஊருக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார். நன்றாகப் பேசக்கூடியவர் என்பதால் அவரையும் மாணவர்கள் வெளியூர்க் கூட்டங்களுக்குப் பேச அழைத்தனர். அதன்மூலம் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.

பேச்சாளராக இருந்த நெடுஞ்செழியன் நேரடியாகப் போராட்டக்களத்தில் இறங்கியது 1938ல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போதுதான். அதன்பிறகு பெரியாரோடும் அண்ணாவோடும் நெருக்கமாகப் பழகி, அவர்களுடைய அன்பைக் கவர்ந்தார். அதன் விளைவு, சுயமரியாதை இயக்கம் சார்ப்பாக நடத்தப்படும் மாநாடு, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் அந்த இரண்டு தலைவர்களோடு நெடுஞ்செழியனும் இடம்பெறத் தொடங்கினார்.

நெடுஞ்செழியனின் கல்வியறிவு, மொழியறிவு, பேச்சாற்றல், சுறுசுறுப்பு, நேர்மை ஆகிய குணங்கள் பெரியாரையும் அண்ணாவையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டன. விளைவு, முக்கியமான வேலைகள் எல்லாம் நெடுஞ்செழியனிடம் தரப்பட்டன. பல விஷயங்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 1944ல் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற பெரியார் முடிவெடுத்தபோது அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா. அதனை வழிமொழிந்தவர் நெடுஞ்செழியன்.

‘தோழர் நெடுஞ்செழியனை பெரியார் தமது மேற்பார்வையில் வைத்துப்பார்த்தார் – அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் – ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம் அவராலும் ஒருகுறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்!’ – இது நாவலர் நெடுஞ்செழியனைப் பற்றி திமுக நிறுவனர் அண்ணா செய்திருக்கும் பதிவு.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட நெடுஞ்செழியனுக்கு எழுத்தின் மீது அதிக நாட்டம். குறிப்பாக, பத்திரிகைகளில் எழுதுவது. அந்த ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மன்றம் என்ற பெயரில் சொந்தப் பத்திரிகை தொடங்கி எழுதினார். பல கட்டுரைகளை அவரே எழுதினார். உதவிக்கு, அவருடைய சகோதரர் இரா. செழியன் இருந்தார். பல திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு மன்றம் இதழில் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

பெரியாரிடம் பழகி, அவரிடமே பணியாற்றிக்கொண்டிருந்தாலும் அண்ணாவின் மீதுதான் நெடுஞ்செழியனுக்கு அன்பு அதிகம். கருஞ்சட்டைப்படை, சுதந்தர தினம் உள்ளிட்ட விஷயங்களில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் முளைத்தபோதெல்லாம் அதனைக் களைவதற்கு முனைப்பு காட்டியவர் நெடுஞ்செழியன். எனினும், மணியம்மையைத் திருமணம் காரணமாக திகவில் இருந்து விலக அண்ணா முடிவெடுத்தபோது அண்ணாவின் பக்கம் முழுமையாக வந்துவிட்டார் நெடுஞ்செழியன்.

திமுக என்ற புதிய இயக்கத்தைக் கட்டமைத்தபோது அண்ணாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளுள் நெடுஞ்செழியன் முக்கியமானவர். அன்று தொடங்கி அண்ணா கொடுத்த பணிகளை எல்லாம் தயங்காமல் ஏற்றுக்கொண்டார். திமுகவில் அவர் பெற்ற முதல் பதவி, பிரசாரக்குழுத் தலைவர். அந்தக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களுள் ஒருவர் மு. கருணாநிதி.

அன்று தொடங்கி அண்ணா எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் நெடுஞ்செழியன். இன்று முதல் நீ கழகத்தின் பொதுச்செயலாளர் என்றாலும் சரி, நாளையில் இருந்து நீ கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்றாலும் சரி, அவைத்தலைவர் என்றாலும் சரி, அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் சரி, தயங்காமல் ஏற்றுக்கொண்டார். அவருடைய நேர்மையும் பக்குவமும் நிதானமும் அவருக்குப் பல பொறுப்புகளைப் பெற்றுக்கொடுத்தன.

1953ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன்.

தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்புகின்ற விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது. ‘அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரி.

அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன்.

இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியின் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தாற்காலி முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர்வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்தார் என்று வருத்தப்பட்டார் நெடுஞ்செழியன். பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.

1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன். என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தாற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தாற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.

எனினும், 1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார்.

திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

நான் வாழ்வில் கண்டதும் கேட்டதும் என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையும் முக்கியமானது. நெருக்கடியான, சர்ச்சைக்குரிய காலகட்டங்களில் அவருடைய கருத்துகள், உரைகள் இடம்பெற்றுள்ள புத்தகம் இது. மேலும், எழுச்சி முரசு, மொழிப்போராட்டம் கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் ஆகியனவும் குறிப்பிடத்தக்க பதிவுகள். நெடுஞ்செழியன் எழுதிய பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்ட புத்தகம்.

அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும்.

0

ஆர். முத்துக்குமார்

கருணாநிதியின் தீக்குளிப்புப் பேச்சு!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா தெலுங்கு மொழியில் பேசி, வாக்குகளை வசீகரிக்கும் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். அவர் விட்ட பணியை அவருடைய அமைச்சர்கள் செய்துவருகின்றனர்.

அவரைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி சங்கரன்கோவில் சென்றார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடை தொடர்பாக பிரச்னை எழுந்தது. பிறகு அமைச்சர் அழகிரி, தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரைச் சந்தித்துப் பேசியபிறகு பிரச்னை தீர்ந்தது. சொன்னபடியே சங்கரன்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்டார் கருணாநிதி.  வழக்கம்போல பிரும்மாண்டமான கூட்டம். கூட்டணிக்கட்சித்தலைவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.

எல்லோரும் பேசியபிறகு கருணாநிதி பேசினார். அப்போது இடைத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். ஏன் திமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று பேசினார். இது இடைத்தேர்தல் மட்டுமல்ல; எடைத்தேர்தல் என்று தமக்கேயுரிய பன்ச் ஒன்றையும் வைத்தார். சங்கரன்கோவில் குறித்த தனது நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார். இப்போதைய டாபிகல் விவகாரமான திராவிட இயக்கம் நூற்றாண்டு, திராவிட – ஆரிய விவகாரம் பற்றியும் பேசினார்.  மின்வெட்டு பற்றி ஆவேசமாகப் பேசினார்.

எல்லாம் சரிதான். பேசவேண்டிய விஷயம்தான். ஆனால் அதன்பிறகு அவர் பேசியதுதான் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கருணாநிதி.

‘நான் முதல்வராக இருந்தபோது அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு நூலகத்தில் நான்கு  லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள்.

அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான்.

ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.’

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. சிலர் மாற்றவே கூடாது என்று கடுமையாக எதிர்க்கிறார்கள். அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் தங்களுடைய வாதங்களையும் எடுத்துவைக்கிறார்கள். அதைப்போலவே, நூலகத்தைக் காட்டிலும் மருத்துவமனை அமைவது எந்த அளவுக்கு அத்தியாவசியமான ஒன்று என்பதைப் பற்றியும் சில கருத்துகள் எழுந்துவருகின்றன. நூலக மாற்றம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் தொடர்ச்சியான விவாதங்கள்  நடந்துவருகின்றன. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்நிலையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனயோ வழிகள் இருக்கின்றன. நூலகத்தை மாற்றக்கூடாது என்று கோரிக்கை விடுக்கலாம். கோஷம் எழுப்பலாம்.  தனது கட்சியின்  பத்திரிகையில் எழுதலாம். கட்சித் தொண்டர்களையும் மக்களையும் ஓரணியில் திரட்டிப் போராட்டம் நடத்தலாம். ஊர்வலம் போகலாம். இப்படி, தனது எதிர்ப்பை ஜனநாயக ரீதியாகப் பதிவுசெய்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

அவற்றில் பல வாய்ப்புகளை திமுக பயன்படுத்தியும் வந்துள்ளது. இருந்தும், ‘நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்’ என்று பேசுவது எந்தவகையில் சரியான பேச்சு என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

தீக்குளிப்பு என்பது தமிழகத்துக்குப் புதிய விஷயமல்ல. மொழிப்போர் நடந்த காலகட்டங்களில் தமிழுக்கு ஆதரவாகவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் மாணவர்கள், இளைஞர்கள் உணர்ச்சிவேகத்தில் தீக்குளித்துள்ளனர். அப்படித் தீக்குளித்தவர்களை, மொழிப்போர் தியாகிகள் என்று திராவிட இயக்கங்கள் என்று கொண்டாடுகின்றன. மொழிப்போருக்குப் பிறகும் வெவ்வேறு காலகட்டங்களில் பலரும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தீக்குளித்துள்ளனர். குறிப்பாக, ஈழப்பிரச்னையை முன்வைத்து.

இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆர் காலத்தில் திமுக தலைவருடைய கைதைக் கண்டித்து சிலர் தீக்குளித்துள்ளனர். வைகோவைத் திமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் தீக்குளிப்புகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், தீக்குளிப்பு வேண்டாம்; தங்கள் இன்னுயிரை அவசரப்பட்டு இழக்கவேண்டாம் என்று உணர்ச்சிப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தவர் கருணாநிதி.

தீக்குளிப்பு என்பது காட்டுமிராண்டித்தனமான செயல்; நாகரிக முதிர்ச்சி நிலையில் இருக்கும் நாம் தீக்குளிப்பு போன்ற விஷயங்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்; எக்காரணம் கொண்டும் தீக்குளிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பேசக்கூடாது என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் தீக்குளிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியான செயலாக இருக்கமுடியாது.

வேண்டுமானால், ‘நான் தானே தீக்குளிப்பேன் என்று சொன்னேன். அடுத்தவரையா தீக்குளிக்கச் சொன்னேன்’ என்று கருணாநிதி கேட்கலாம். தலைவர் அப்படிச்சொன்னால் அதைத் தொண்டர்கள் தங்களுக்கு விடுத்த அழைப்பாகவே எடுத்துக் கொள்வார்கள் என்பது கருணாநிதி உள்ளிட்ட அத்தனைபேருக்குமே தெரிந்த சங்கதிதான்.

தொண்டர்களை உசுப்பேற்றுவதற்கு, உற்சாகப்படுத்துவதற்கு எத்தனையோ வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன. கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க கருணாநிதிக்கு இருக்கும் வாய்ப்புகள் அநேகம். ஆனால் இன்னமும் தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் முதிர்ச்சி அடைந்த கருணாநிதிக்கு அழகல்ல!

அருட்செல்வன்

மமதா, கருணாநிதி, மிரட்டல்!

எது நடக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்ததோ அதுவே நடந்துவிட்டது. ஆம். மமதா பானர்ஜியும் கருணாநிதியும் மத்திய அரசுக்கு எதிராக ஒரே சமயத்தில் களத்தில் குதித்துள்ளனர். இருவருடைய நோக்கமும் வெவ்வேறானவை. ஆனால் செய்யும் காரியம் ஒன்றுதான். மிரட்டல்.

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வைத் தன்னால் ஏற்கமுடியவில்லை. உடனடியாக அவற்றை வாபஸ் பெறவேண்டும் என்றார் மமதா பானர்ஜி. இதில் முரண்நகை என்னவென்றால் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான். கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது என்ற  மமதா பானர்ஜியின் கோரிக்கையை மீறிவிட்டார் திரிவேதி. அதற்குக் காரணம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும்தான் என்பது திரிணாமுல் காங்கிரஸின் முக்கியக் குற்றச்சாட்டு.

ஆனால் ரயில்வே அமைச்சர் திரிவேதியோ திட்டவட்டமாகப் பேசுகிறார். ரயில்வே பட்ஜெட் தொடர்பாக மமதா பானர்ஜியுடன் எவ்வித ஆலோசனையையும் நான் நடத்தவில்லை. என்னுடைய மனச்சாட்சிக்கு உட்பட்ட வகையில் பட்ஜெட்டைத் தயாரித்திருக்கிறேன். ரயில்வே துறையில் நடக்கும் விபத்துகளைத் தடுக்கவேண்டும் என்றால் துறையை நவீனப்படுத்தவேண்டும். அதற்கு நிதி வேண்டும். அதற்காகவே இந்தக் கட்டண உயர்வு. தவிரவும், ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இந்திய ரயில்வே துறைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு நலனுக்குத்தான் முன்னுரிமை. கட்சி, கட்சித்தலைமை எல்லாம் அதற்குப்பிறகுதான். போதாது? பொங்கி எழுந்துவிட்டார் மமதா பானர்ஜி.

தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுடன் மோதும் தன்னை அடக்கிவைக்கும் நோக்கத்துடனேயே தினேஷ் திரிவேதியைக் கொண்டு காங்கிரஸ் கட்சி காய் நகர்த்துகிறதோ என்ற சந்தேகம் மமதாவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை தினேஷ் திரிவேதி சந்தித்துப் பேசியதும் மமதாவை யோசிக்கவைத்தது. போதாக்குறைக்கு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டு நேராக தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேட்டி கொடுக்கத் தொடங்கியதும் மமதாவின் சந்தேகம் உச்சத்துக்குச் சென்றுவிட்டது.

எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தபிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார் மமதா பானர்ஜி. ரயில்வே அமைச்சர் திவிவேதியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யுங்கள். அவருக்குப் பதிலான முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்குங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டார் மமதா பானர்ஜி. கிட்டத்தட்ட இதே முடிவைத்தான்  தயாநிதி மாறன் விஷயத்தில் கருணாநிதி எடுத்தார். அதனை பிரதமர் மன்மோகன் சிங் அப்படியே ஏற்றுக்கொண்டார். தற்போது மமதாவின் முறை.

என்ன செய்வது என்பது பற்றிப்பேச அவசரமாகக் கூடிப் பேசினர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள். இருப்பினும், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பிவிட்டார் என்றொரு செய்தி வெளியானது. அவருக்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸின் முகுல் ராயை ரயில்வே அமைச்சராக நியமிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் மமதா என்றும் தகவல் வெளியானது.

ஆனால், நான் இன்னமும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை; ரயில்வே பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இருக்கிறேன். அதேசமயம், மமதா பானர்ஜியோ அல்லது பிரதமரோ என்னைக் கேட்டுக் கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொல்லியிருக்கிறார் திரிவேதி.

அநேகமாக மமதாவின் சொல்லுக்கு மத்திய அரசு கட்டுப்படும் என்றே தெரிகிறது. அதற்காக.  கட்டண உயர்வு திரும்பப்பெறப்படுமா என்பது சந்தேகம்தான். அதைச் சாதிக்கவேண்டும் என்றால் மமதா இன்னொரு அஸ்திரத்தை வீசவேண்டியிருக்கும்.

இன்னொரு பக்கம், திமுகவும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. திமுக மட்டுமல்ல; பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் கோரிக்கையும் அதுதான். ஆனால், மத்திய அரசின் சார்பில் எந்தவொரு உறுதிமொழியும் தரப்படவில்லை.

இலங்கை அரசை எதிர்க்காமல் இருப்பது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று விமரிசித்த கருணாநிதி, ஒருவேளை மத்திய அரசு உரிய நிலைப்பாட்டை எடுக்காதபட்சத்தில் திமுகவின் செயற்குழு கூடிய உரிய முடிவெடுக்கும் என்று கூறியிருக்கிறார். திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சமீபகாலங்களில் மோதல் ஏற்படும் சமயங்களில் எல்லாம் உயர்நிலை செயல் திட்டக்குழுவைக் கூட்டி முடிவெடுப்பதாக அறிவிப்பது திமுகவின் வழக்கம். சொன்னபடியே கூடுவார்கள். பேசுவார்கள். ஆனால், எந்தவொரு முடிவையும் திட்டவட்டமாக எடுக்காமலேயே விட்டுவிடுவார்கள்.

ஆகவே, திமுகவின் மிரட்டலை இம்முறையும் காங்கிரஸ் கட்சி அலட்சியம் செய்துவிடும் என்றே தெரிகிறது. அதேசமயம், இலங்கை விவகாரத்தில் திமுகவின் இமேஜ் மீது விழுந்திருக்கும் கறையைத் துடைக்கக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆக, கூட்டணியின் முக்கியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸும் திமுகவும் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசைக் காப்பாற்ற இரண்டு திசைகளில் செயல்பட்டுவருகிறது காங்கிரஸ் கட்சி. ஒன்று, கூட்டணிக்கட்சிகளை சமாதானம் செய்வது. மற்றொன்று, இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மேலும் சில கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது.

திரிணாமுல் காங்கிரஸ், திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கும் சேர்ந்து மொத்தம் முப்பத்தியேழு எம்.பிக்கள் இருக்கின்றனர். இவர்களை இழந்துவிட்டு, புதிய கட்சிகளைத் திரட்டுவது என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமற்ற காரியம். ஆக, இப்போதைக்கு வெள்ளைக் கொடியைத் தூக்கவே காங்கிரஸ் விரும்பும் என்றே தெரிகிறது. பார்க்கலாம்!

- தமிழ்

வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

0

ஹரன் பிரசன்னா

பழைய பேனாவும் அண்ணா நூலகமும்

தமிழ் கூறும் நல்லுலகில் வாழும்படி நேர்ந்தோருக்கு சில அனுபவங்கள் தவிர்க்க முடியாதது.

“அந்தக் காலத்து வால்வு ரேடியோ மாதிரி வருமா? என்ன க்லியரான சவுண்டு? ட்ரான்ஸிஸ்டர்லையெல்லாம் அப்பிடி க்லியரா வருமா?” சமீபத்தில்கூட நண்பரொருவர் சலித்துக் கொண்டிருந்தார் – “என்னதான் இருந்தாலும் பிலிம் கேமரா மாதிரி வருமா? ஏதோ டிஜிட்டல்ங்குறாய்ங்ய.” இத்தனைக்கும் அவர் 20களின் இறுதியில் உள்ள ஒரு இளைஞர்.
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் வழக்கொழிந்து கொண்டிருக்கும் முந்தையதுதான் சிறந்தது என்று வாதாடும் ஒரு தலைமுறை எல்லா இடங்களிலும் இருக்கலாம். நமக்கு தமிழ் பேசத்தெரியும், இந்தப் புலம்பல்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம், இதனால் சமயங்களில் பாதிப்புகூட அடைந்திருக்கிறோம் என்பதனால் தாள முடியாமல் இப்படிப் புலம்ப வேண்டியிருக்கிறது.

எண்பதுகளின் இறுதியில் ball point பேனா தொழில்நுட்பம் செறிவடைந்து மலிவு விலைகளில் அதிகம் புழக்கத்துக்கு வர ஆரம்பித்தது (அறிவு ஜீவிகளுக்கு – ballpoint பேனா 1880 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று எனக்கும் தெரியும்; ஆனால் எனது அனுபவத்தில் 80களின் இறுதியில்தான், குறைந்த பட்சம் இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததாக உணர்கிறேன்.) மேலும், எழுதுவதற்கும் அது சுலபமானது. ஆனால் 90% 2 தலைமுறைக்கு முந்தைய, பாடபுத்தகங்களில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கண்ணை மூடிக்கொண்டு ஒப்பிக்கும் திறம்கொண்ட , ஆசிரியர்கள் (அவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள்) கொண்ட ஒரு பள்ளியில் அனைவரும் மை பேனா கொண்டுதான் எழுத வேண்டும் என்ற ஒரு மொக்கைச் சட்டம். ஏன் ball point பேனாகொண்டு எழுதக் கூடாது என்று கேட்டுவிடவும் முடியாது. மூஞ்சியை 5 வினாடி உற்றுப் பார்த்தாலே 3 வருடம் ஒரே வகுப்பில் உட்கார வைத்துவிடும் அகந்தைகொண்ட வாத்திகளிடம் வாயைத் திறந்து கேள்வி கேட்பதென்பது சொந்தமாக செலவு செய்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பது தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள பள்ளிகளில் படித்த அனைவருக்கும் தெரியும். கல்வி இந்த முறையில் கற்பிக்கப்பட்டு இவர்களும் இன்னும் 2 தலைமுறைக்கு முன்பு ஆசிரியர்களாய் பணியாற்றியிருந்தால், மைக்கூடுகொண்டு வந்து மயிலிறகால்தான் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பார்களாயிருக்கும். தப்பித்தோம்.

இவ்வாறான தமிழ்ச் சூழலில், நமது அரசியல் சூழல் எப்படியென்றால், அய்யா செஞ்சா அம்மாவுக்குக் குத்தம், அம்மா செஞ்சா அய்யாவுக்குக் குத்தம். நூலக இடமாற்றம். இது அவர்களுக்குள்ளே நடக்கும் அகந்தை யுத்தம். கடந்த அம்மா ஆட்சியில் புதிய சட்டமன்ற கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடம், ஆட்சியை இழக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், அடுத்த ஆட்சியில் வேறு எதற்கும் பயன்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அய்யாவால் அவசர அவசரமாக, குயுக்தியுடன்,கட்டப்பட்டது இந்த நூலகம். இதற்கெல்லாம் அசருகின்ற ஆளா அம்மா? “தூக்குடா நூலகத்தை” என்று ஆணையிட்டு விட்டார். ஆனாலும், இந்த இரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, தேவைப்படும் அளவைவிட, இருமடங்கு செலவு செய்து, அய்யா `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்` அடித்துக் கொண்டார். மொத்ததில், குழந்தைகள் படித்து, அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை அய்யா (ஐயா?) வுக்கோ அல்லது சர்வதேச தரத்தில் (முதலில் இந்தப் பதத்துக்கு, தமிழகத்தில் ஒரு தடையுத்தரவு வேண்டுமைய்யா) ஒரு குழந்தைகள் மருத்துவமனை அமைத்து, தமிழ்க் குழந்தை ஒவ்வொன்றும் குஷ்பு போல (நன்றி குஷ்புவின் தேர்தல் பிரசாரம்) கும்மென்றிருக்க வேண்டுமென்ற அக்கறை அம்மாவுக்கோ சிஞ்சித்தும் இல்லை. இவை இரண்டில் ஒன்றை நீங்கள் மறுத்தாலும் இந்தக் கட்டுரையை இதற்கு மேற்கொண்டு படிப்பது உங்களுக்கு (ம் எனக்கும்) நேர விரயம்தான்.

இவை அன்றாடம், நமது தோல்களின் தடிமனைக் கூட்டி விட்ட ஒரு, தமிழ்நாட்டு, அரசியல் நிகழ்வுதான். ஆனால், இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்கள் என்று அழைக்கப்ப்டும் ஒரு குழுவினர் இதற்கு ஆற்றிய எதிர்வினைதான் மிகவும் அருவருக்கத்தக்கதாய் இருந்தது. அதிலும், விகடனில் யாழ் நூலகத்தைக் கொளுத்திய நிகழ்வுடன்கூட ஒரு எழுத்தாளர் ஒப்பிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை ஆரம்பித்து (அநேகமாக முடிந்து) நூற்றாண்டுகளாகி விட்ட பின்பு எதற்கு இப்படி ஒரு பேத்தல் என்று யாருக்கேனும், ஐயமிருந்தால் – அப்போதே இது போன்றதொரு கட்டுரை வந்திருந்தால், ஒன்று, இதற்கு கட்சி சாயம் பூசப்பட்டிருக்கு அல்லது பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு கோவிந்தாவாகியிருக்கும். இன்று, நூலகத்தின் எதிர்காலம் என்ன என்று எந்த சத்தமுமில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை வரும்போது ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ காட்டுக்கத்தல் கத்தி விட்டு ஓய்ந்து விடுவதுதான் தமிழ் கலாசாரம். இதுதான் என்னுடைய தன்னிலை விளக்கம்.

ஒரு பத்து ஆண்டுக்கு முன்பு கூட, நூலகம் என்பது சமுதாய அறிவூக்கத்துக்கு ஒரு இன்றியமையாத தேவையாயிருந்திருக்கலாம். எனது சொந்த அனுபவத்தில், 97-ல், ஒரு குறிப்பிட்ட தகவலுக்காக, அதற்கான புத்தகத்துக்காக, நானும், எனது நண்பனும், நாங்கள் பயணித்த ஊர்களில், கண்ணில் பட்ட நூல் நிலையங்கள் அனைத்துள்ளும் நுழைந்து வெகு நேரம் செலவிட்டுத் தேடியிருக்கிறோம்; சென்னையில், பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஏதாவது நடைபாதைப் புத்தகக் கடை தென்பட்டு விட்டால் கூட, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துச் சென்று தேடியிருக்கிறோம் (தாகம்! அறிவுத்தாகம்!!) மோட்டார் வாகனக் கண்டுபிடிப்புக்குப் பின்னர், நடந்து ஊர்களைக் கடந்த அனுபவத்தை நினைத்துப் பார்ப்பது போல் உள்ளது. இன்றைய நிலையில், சில விநாடிகளுக்குள், அன்று நாங்கள் ஊர்தோறும் அலைந்து தேடிய தகவல், எங்களுக்குக் கிடைத்துவிடும். சொல்லப் போனால், 2000 வரை நான் ஒரு புத்தகப்புழு. (ஐயோ அதற்காக நான் ஒரு பெரும் படிப்பாளி என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.) பிறகு மெல்ல மெல்ல புத்தகம் படிக்கும் பழக்கம் அருகி, இன்று, இணையத்தில், கிடைக்கவில்லை, புத்தகத்தில்தான் கிடைக்கிறது என்ற நிலை வந்தாலொழிய புத்தகம் படிப்பதில்லை.அதற்காக வாசிப்பதில்லை என்பதில்லை. சொல்லபோனால் இன்று அதிகம் வாசிக்கிறேன்.

கோட்டூர்புரத்தில் ரூ230 கோடி செலவில் ஒரு நூலகம் அதுவும் 2010-ல் தேவையா? இந்த நூலகத்தால் பயன் பெறப் போகின்றவர் யார்? இந்த நூலகத்துக்காக ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு தூரம் பயணிப்பார்? ஒருவருக்குத் தேவையான தகவல் அருகிலிருக்கும் (அல்லது தனது வீட்டிலிருக்கும்) இணயத்தில் கிடைக்கப் பெறும்போது, இவ்வாறு ஒரு நூலகத்தின் தேவை என்ன? ஆனால், தமிழில், இருக்க வேண்டிய அனைத்தும் மிண்ணனு வடிவத்தில் இருக்கின்றனவா? இந்த நுலகம் மிக அதிக பட்சமாக சென்னைவாழ் மக்களுக்கும், என்றாவது சென்னைக்கு வரும் ஒருவருக்கு ஒரு சுற்றுலா தளமாக (அதுவும் கூட, இந்த நூலகம் மாற்றப்படாமல் இருந்திருந்தால், இன்னும் ஓரிரு ஆண்டுகள்க்கு மட்டும்தான்; அதன் பின்தான் நமது அரசாங்கப் பராமரிப்பின் வள்ளல் தெரியுமே) மட்டுமே பயன்பட்டிருந்திருக்கும். இன்று பல மி-நூல் கருவிகள் (e-book readers) வந்து விட்டன. ஒவ்வொன்றும் சில ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொள்ளளவாகக்கொண்டவை. அண்ணா நூலகம் 12 இலட்சம் புத்தகங்கள்கொண்ட தாக அமைக்கப்பட்டதென்று அறிகிறேன். அதிகபட்சமாக, 2TB, கொள்ளும் இந்தப் புத்தகங்களை ஒரு வழங்கியின் மூலமாக இணயத்தில் கிடைக்கச் செய்தால், சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகத் தமிழர் அனைவருக்கும் பயன் தருமல்லவா? இந்த நூட்களை மிண்ணனு வடிவில் மாற்றுவதற்கு செலவும், இடமும் இப்போதுள்ளதை விட பல ஆயிரம் மடங்கு குறைவே. இதற்கு எடுக்கும் முயற்சியில் (அதாவது, நூட்களைப் மிண்ணனுவடிவில் மாற்றும்) ஒரு புதிய தொழில்நுட்பம் கூடக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கலாம். (தமிழ் OCR தொழில்நுட்பம் எந்த அளவில் உள்ளதென்று தெரியவில்லை.)

ஆனால் அறிவு ஜீவிக் குழாம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அய்யாவின் அரசியலுக்கு எண்ணெய் ஊற்றும்விதமாகத்தான் பேசுகிறார்கள் – வேண்டுமென்றோ, அதுபற்றிய பிரக்ஞை இல்லாமலோ அல்லது வருங்காலத் தொழில்நுட்பம் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமலோ. குழந்தைகள் சுமக்கும் புத்த மூட்டைகள் பற்றி, நாம் குழந்தைகளாக இருந்ததற்கு முன்னாலிருந்தே, பல்லாண்டுகளாக கவலை மட்டுமே பட்டுக் கொண்டிருக்கிறோமே? இப்படிப்பட்ட – பளுவையும் குறைக்கக் கூடிய, அதே நேரத்தில் குழந்தைகள் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில், மலிவு விலையில் (பள்ளிக்கு ஆயிரக்கணக்கில் புத்தகக் கொள்ளளவுகொண்ட மி-நூல் கருவி தேவையில்லையே) கிடைக்கக் கூடிய மி-நூல் கருவிகளை பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தக் கூடிய ஆலோசனகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிடலாமே? எல்லாவற்றிற்கும், வெள்ளைக்காரனுக்காக் காத்திருக்க வேண்டுமா? நாம் முன்னோடியாக இருக்கக் கூடாதா (அது சரி, இவர்களுக்கெல்லாம் வாக்களித்துவிட்டு நாம் சிலவற்றில் மட்டும்தான் உலகின் முன்னொடியாக உள்ளோம்.)

பள்ளிகளில் நாம் படிக்கும் பாடங்கள் என்னென்ன? பொதுவாக, ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு & புவியல். ஒவ்வொன்றும் பின்னாட்களில் நாம் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏதாவதொரு வகையில் அடிப்படையாக அமையக்கூடியவை (இன்றைய நிலையில், தமிழ் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணி. ஏதோ மரியாதைக்காக பள்ளியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.) வருங்காலத்தில் கணினி (அல்லது அதற்கு இணையான அல்லது அதனை அடிப்படையாகக்கொண்ட  ஏதோ ஒன்று) இல்லாத துறை என்று ஒன்று இருக்கப் போவதில்லை. மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஒரு பாடமாக ஏன் சேர்க்கக் கூடாது?(எவ்வாறாகிலும் நமது கல்விமுறையில் மாற்றமென்பது தேவை; அது பற்றி தனிக் கட்டுரை தேவை.) மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஆரம்பப்பள்ளியிலிருந்தே போதிக்கத் தேவையான ஆராய்ச்சி பற்றி, இந்நூலக இயக்கம்/மாற்றம் பற்றி கிளர்ந்தெழும் அறிவு ஜீவிகள் கொஞ்சம் சிந்தித்திருக்கலாமே?

வெளிப்படையாகச் சொன்னால், காகித நூல்களின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டு, மின் நூல்களின் உபயோகத்துக்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே இந்தக் கட்டுரை சொல்கிறது. உடனே “புத்தகத்தை ஒழிப்பதாவது?” என்று அதே யாழ் நூலக `ரேஞ்சு`க்குக் கிளம்பத்தான் செய்வார்கள். அவர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களாய் இருந்திருந்தால், காதித நூட்கள் வர ஆரம்பித்திருக்கும்போது `ஓலைச் சுவடிகளை ஒழிப்பதாவது?” என்றுதான் கிளம்பியிருப்பார்கள். எது எப்படியிருந்தாலும், இன்னும் அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் காகித நூட்கள் அருங்காட்சியகங்களுக்குள்ளும், வீடுகளில் பரண்கள் இருந்தால் அவைகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்துவிடும். இது தவிர்க்க முடியாதது. இன்றே எத்தனை பேர் பேனாகொண்டு எழுதும் முறையை கவிட்டிருப்பார்கள் கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்.

இவ்வளவு கூறியும், நிகழ்காலத்தை கவனித்துப் பார்த்தால், இந்தக் கட்டுரை பேசும் பொருளுக்கு ஏதாவது பொருளுண்டா, இதற்கு செலவிட்ட நேரத்துக்கு எதுவும் மதிப்புண்டா என்று ஆயாசமே உண்டாகின்றது. நாம் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை நமது நடைமுறைக் கல்விப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம், நமது படைப்புகளை அதனைப் பயன்படுத்தி எவ்வாறு பரவலாகக்கொண்டு செல்லலாம் என்று பேசும் அதே வேளையில், நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் தொழில்நுட்பம், குறிப்பாக கணினி சார்ந்த தொழில்நுட்பம், எந்த அளவுக்கு சமகால வளர்ச்சியோடு ஒட்டியுள்ளது என்று பார்க்கப் புகுவதனால் வரும் விளைவுதான் இது. திறமூலம் பற்றி நானறிந்த வரையில் எந்த கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் எதுவும் போதிக்கப்படுவதோ ஏன் அறிமுகப்படுத்துவதோகூட இல்லை. முக்கிய காரணம், `பெரும்பாலான` ஆசிரியர்களுக்கு, சமகால நிகழ்வுகள் பற்றி அறியும் ஆர்வமோ, அதனை பாட திட்டமாக கொண்டுவருவதற்கான முயற்சியில் அக்கறையோ இருப்பதில்லை. ஊதிய உயர்வு சார்ந்த போராட்டங்களுக்கு மட்டும்தான் ஒற்றுமையாகக் குரல் கொடுப்பார்கள்.

சமீபத்தில்கூட அண்ணா பல்கலை திறமூலம் சார்ந்த பட்டறைகளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லுரிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி, ஏனோ உடனே திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. கணினி என்றால் விண்டோஸ் மட்டுமே என்ற அளவில் பொதுவாக போதிக்கப்படுகிறது. அதிலும் அண்மைய மென்பொருள் மொழிகளும், இயங்குதளங்களும் போதிக்கப் படுவதில்லை; பெரும்பாலும் காலாவதியான தொழில்நுட்பங்களே போதிக்கப்படுகின்றன. இதில் இன்னொரு ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த நடைமுறை என்னவென்றால், அனேகமாக அனைத்து கல்விநிலையங்களும் திருட்டு விண்டோஸ் பயன்பாட்டையே சார்ந்திருக்கின்றன (மைக்ரோசாப்ட், இதனை அறியாது என்பதில்லை; இதனை அறிந்தாலும் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது என்பது தனி அரசியல்.) திருட்டுப் பிரதி பயன்படுத்துவதை எந்த ஒரு உறுத்தலுமின்றி மேற்கொண்டு வருகின்றனர். இதுவும் மாணவர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது. நமது வருங்காலத் தூண்களுக்கு, பாட திட்டத்தில் இல்லாத போனஸ் பயிற்சி இது.

ஆனால் காலாவதியாகப் போகின்ற ஒரு விஷயத்துக்கு, இரு அரசியல் யோக்கியர்கள் தங்களுக்குள் அகந்தை யுத்தம் நடத்திக் கொள்ளும்போது, கட்சி கட்டிக்கொண்டு கிளம்பும் `படைப்பளிகள்` மற்றும் `சமூக ஆர்வலர்கள்` என்று உண்மையான சுரணை அடயப் பெறுவார்களோ? நல்ல வார்த்தைகளில் சொல்லப் போனால், இருவரும் நமது தோள்பட்டையில் ஏறியமர்ந்து நமது காதிலேயே ஓ…லமிடுகிறார்கள். இதில் இது சரி இது தவறு என்று `சீரியஸ்` ஆன விவாதம் வேறு.

-அனானிமஸ்