
ஆப்ரேஷன் தனுஷ் என்ற காவல்துறையின் அதி ரகசிய செயல் திட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த ஆப்ரேஷனின் நோக்கம் தீவிரவாத இயக்கம் ஒன்றினுள் சிவா, ஆனந்தன் என்ற இரண்டு காவல் துறை ஒற்றர்களை அனுப்பி, தீவிரவாதிகளின் ஒட்டு மொத்த வலைப்பின்னலைக் கண்டுபிடித்துச் செயலிழக்க வைப்பதுதான். உண்மையில் அந்த ஒற்றர்கள்தான் கதையின் மையமாக இருந்திருக்கவேண்டும்.
தீவிரவாத இயக்கத்துக்குள் அந்த ஒற்றர்கள் எப்படி ஊடுருவுகிறார்கள், தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க என்னென்ன செய்கிறார்கள், எப்படி தீவிரவாத இயக்கத்தைச் சுற்றி வளைக்க உதவுகிறார்கள் என விறுவிறுப்பான திரைக்கதைக்கு அதில்தான் அதிக வாய்ப்பு உண்டு. படத்தில் இது தொடர்பான நான்கு வரி வசனம் இடம்பெறவும் செய்கிறது. ஆனால், படத்தை அப்படி எடுப்பதென்றால் தீவிரவாத இயக்கம் பற்றி அதிகம் வெளியில் தெரியாத பல்வேறு நுட்பமான தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருக்கும். அதற்கான முனைப்பு இல்லாததால் அந்த ஒற்றர்களை வழிநடத்தும் காவல்துறை உயர் அதிகாரிகளான ஆதியையும் (கமல்ஜி) அப்பாஸையும் (அர்ஜுன்ஜி) மையமாகக்கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் இடம்பெறும் தீவிரவாத இயக்கம் எது என்ற தெளிவான அடையாளப்படுத்தல் இல்லை. தீவிரவாத இயக்கம் பற்றி நாலைந்து பத்திரிகைச் செய்திகளைப் படித்தால் தெரிந்துகொள்ள முடிந்த தகவல்கள்கூட படத்தில் இடம்பெறவில்லை. ஏதாவது ஒன்றை மட்டும் குறிப்பிட்டுக் காட்டாமல் பல்வேறு வாசிப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் ஒன்றை உருவாக்குவது படைப்பில் அனுமதிக்கப்பட்ட விஷயம்தான். ஆனால், அது இந்தப் படத்தில் அதற்கான வலுவோடு இடம்பெறவில்லை. மொட்டையாக புரட்சிகர இயக்கம் என்று காட்டப்பட்டிருக்கிறது. தீவிரவாத இயக்கத்தின் தலைவனுக்கு பத்ரி நாராயணன் என்ற பெயர், அவனுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள் கிடைக்கிறதா என்ற அசட்டுத்தனமான கேள்வி, தீவிரவாதிகள் வசம் சயனைட் குப்பிகள்… இப்படியாக இந்து அடிப்படைவாதம், அயல்நாட்டுச் சதி, ஈழப் போராட்டம் ஆகியவை போதிய இட ஒதுக்கீடுகளுடன் படத்தில் இடம்பெற்று விஷயத்தைக் குழப்பவே செய்கின்றன.
ஹே ராம் போன்ற படங்களில் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சித்திரிக்கும்போது ஹிட்லரின் படத்தைப் பின்னணியில் காட்டுவதுவரை அதி நுட்பமாக (?!) செயல்படும் கமல், புரட்சிகர இயக்கம் என்றதும் பன்முக வாசிப்புக்கு இடம்கொடுக்க முனைந்துவிடுகிறார். அரசியல் கதாபாத்திரங்களைக் காட்டும்போது மொட்டையாக தலைவர் வாழ்க… தலைவர் வாழ்க என்று துணை நடிகர்களை விட்டு கோஷம் போடவைப்பார்களே அதுபோல் பொத்தாம்பொதுவாக புரட்சிகர இயக்கம் என்று சொல்லி முடித்துவிடுகிறார்.
இந்தப் புரட்சி என்ற வார்த்தையை வைத்து அந்த இயக்கத்தை நக்சலைட் அல்லது மாவோயிஸ இயக்கமாக நாம் யூகித்துக்கொண்டால், அந்த இயக்கத்துக்கு தமிழகக் காவல்துறையினர் விழுந்து விழுந்து சேவகம் செய்வதாகப் படத்தில் காட்டப்பட்டிருப்பது மிகப் பெரிய அபத்தமாகவே தோன்றும். எனவே, புரட்சிகர இயக்கத்தை நாமும் ஏதோவொரு பொரட்சிகரமான இயக்கமாகவே கற்பிதம் செய்துகொண்டு படத்தைப் பார்ப்போம். அதுதான் நமக்கு நல்லது.
சரி… காவல்துறையின் கோணத்தில்தான் படம் நகர்கிறது. அந்தக் காவல்துறை கதாபாத்திரங்களாவது உருப்படியாக வார்க்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
படத்தில் டி.ஐ.ஜி.யாக வரும் சீனிவாசன் தீவிரவாதிகளால் எட்டு வருடங்களாக பிளாக் மெயில் செய்யப்பட்டு காவல்துறையின் திட்டங்களை உடனுக்குடன் அவர்களுக்குத் தெரிவிக்கும் துரோகத்தைச் செய்துவருகிறாராம். டி.ஐ.ஜி. போன்ற உயர் பதவியில் இருக்கும் ஒருவரை அப்படி பிளாக்மெயில் செய்துவிட முடியுமா? அதுவும், உன் குடும்பத்தைக் கொன்றுவிடுவேன் என்று வெறுமனே மிரட்டியே எட்டு வருடங்கள் பணியவைத்துவிட்டார்களாம்.
அவரைப் போன்ற உயர் அதிகாரியை யாராவது மிரட்டினால் என்ன செய்வார்? தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்துவார். ஒருவேளை அவர் கொஞ்சம் தயிர் சாதப் பிரியர் என்றால் முதலில் தன் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவார். அவர்களைத் தனியாக எங்கும் போகவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார். தீவிரவாதிகள் அதையும் மீறி தாக்குவார்கள் என்று தெரிந்தால், வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிச் செல்வார். அல்லது பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு ஆபத்தில்லாத வேலைக்குப் போவார். எந்த ஒரு முட்டாளாவது, தீவிரவாதிகளின் இந்த வெத்து மிரட்டலுக்குப் பயந்து எட்டு வருடம் அவர்களுடைய கையாளாகச் செயல்படுவாரா?
அதிலும் பிளாக் மெயில் என்பது ஒருவரை அல்லது ஒரு சிலரைக் கடத்திச் சென்று அதிகபட்சம் ஓரிரு கோரிக்கையை முன்வைத்து செய்யப்படும் அதிரடி பேரம். அதில் அவர்கள் கேட்பதை நாம் செய்துவிட்டால் பிணைக்கைதியை நாம் மீட்டுக்கொண்டுவிடலாம். அதோடு அந்த பேரம் முடிந்துவிடும். உன் குடும்பத்தினரைக் கொன்றுவிடுவேன்… என்று எட்டு வருடங்களாகப் பூச்சாண்டி காட்டியே ஒருவரை பிளாக் மெயில் செய்யவெல்லாம் முடியாது.
ஒருவேளை அந்த உயர் அதிகாரி பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த துரோகத்தைச் செய்திருக்கலாம்… நாயகன் கேட்கும்போது குடும்பத்தினரைக் கொன்றுவிடுவதாக தீவிரவாதிகள் மிரட்டியதால் அப்படிச் செய்தேன் என்று நல்லவன்போல் வேஷம் போட்டிருக்கலாம். அது உண்மையென்றால், அதற்கான குறிப்புகள் படத்தில் எங்காவது இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தப் படத்திலோ அந்த உயர் அதிகாரியின் துரோகச் செயல்கள் வெளியே தெரியவந்ததும் பதற்றத்தில் சிகரெட் பற்றவைக்கிறார். என்னைப் பற்றி நிறைய விஷயங்கள் உனக்குத் தெரியாது என்கிறார். குற்ற உணர்ச்சி மேலிட அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்கிறார். தன்னைத்தானே நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு கவரி மான் போல் உயிரை விட்டுவிடுகிறார். பணத்துக்காக துரோகம் செய்தவர் என்றால், அதே பணத்தை வைத்து அவருக்கு அதில் இருந்து வெளியேவரவும் தெரிந்திருக்கும். அதைத்தான் முயன்றிருப்பார்.
இது இப்படியென்றால், ஹமாம் சோப்புக்கு அடுத்தபடியாக நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் கதாநாயகன் ஆதியும் அந்த டி.ஐ.ஜி.யைப் போலவே தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்கிறாராம். உன் வீட்டில் எங்களுடைய ஆட்கள் இரண்டுபேர் விருந்தாளிகள் போல் தங்கிக் கொள்வார்கள். அதற்கு அனுமதி கொடு என்று தீவிரவாதி இரவில் மிரட்டுகிறான். நாயகனும் நல்ல புள்ளையாகக் காலையில் எழுந்து அலுவலகத்துக்குப் போகும்போது தன் மனைவியிடம் கெஸ்ட் ஹவுஸை விருந்தினருக்குச் சரிசெய்து வைக்கும்படிச் சொல்லிவிட்டுப் போகிறான். இரவோடு இரவாக தன் குடும்பத்தை எங்காவது பாதுகாப்பான இடத்துக்குக்கொண்டு செல்ல வேண்டியதுதானே. அல்லது, விருந்தாளியாக வருபவர்களைப் பிடித்து சிறையில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டினால், தீவிரவாதிகள் பற்றி மேலும் தகவல்கள் கிடைத்துவிடப்போகிறது.
இத்தனைக்கும் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஏற்கெனவே சிறையில்தான் இருந்திருக்கிறான். தன் குடும்பத்துக்கு இரண்டாம் நிலை தீவிரவாதிகளிடம் இருந்து ஏதாவது தீங்கு நேர்ந்தால் தலைவனைச் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்று பதிலுக்கு அருமையாக மிரட்ட முடியும். இவ்வளவு ஏன்… ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவன் உங்கள் வசம் சிக்கியிருக்கிறான். அது ஒன்றே போதுமே அந்த இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய. அவனிடம் இருந்துதான் காவல்துறையில் இருந்த கறுப்பு ஆடு சீனிவாசன் பற்றிய தகவலைச் சித்திரவதை நிபுணர் என்று படத்தில் அடிக்கடி நினைவுபடுத்தப்படும் நாயகன் கறந்திருக்கிறான். அந்த வலைப்பின்னலின் ஒட்டுமொத்த தகவல்களையும் அந்த இயக்கத்தின் தலைவரிடமிருந்து மெள்ள மெள்ளக் கறந்துவிடமுடியாதா என்ன?
இதோடு, காவல் துறையினர் அனுப்பிய ஒற்றர் சிவா வேறு அந்தப் பொரட்சிகர இயக்கத்தில் மிக உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறார். அவர் தரும் தகவல்களை வைத்து ஒட்டுமொத்த கும்பலையே வளைத்துப் பிடித்துவிடமுடியுமே. வேட்டை மிருகத்தைச் சுற்றி வளைத்ததோடு நில்லாமல் அதன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வேறு வைத்து அழுத்தியாகிவிட்டது. வன் மிருகத்தைச் செயல் இழக்க வைக்க இதற்கு மேல் வேறு என்ன தேவை? இவ்வளவுக்குப் பிறகு ஒரு துணை கமிஷனர், இரண்டம் நிலை தீவிரவாதியின் மிரட்டலுக்குப் பயந்து கைக்குக் கிடைத்த தீவிரவாதத் தலைவனை விடுதலை செய்து, பிறகு திடீரென்று வீரம் பொங்கி எழுந்து அவனுடைய கோட்டைக்குள் தனியாகப் போய்மாட்டிக்கொண்டு உயிரைத் தியாகமெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், தீவிரவாதிகளின் கோட்டைக்குள் இருக்கும்போது அதன் தலைவனை ஸ்க்ரூ டிரைவரால் நாயகன் குத்தி கொன்றுவிடுவார். ஆப்ரேஷன் தனுஷ் கிட்டத்தட்ட வென்றுவிட்டநிலைதான். இதற்குப் பிறகு நாயகன் எதற்காக வீணாக தன் உயிரைத் தியாகம் செய்கிறான் என்பது புரியவே இல்லை. சதுரங்க ஆட்டத்தில் எதிர் தரப்பின் ராஜாவைக் கொன்றுவிட்டால் ஆட்டம் அதோடு முடிந்துவிடும். அதைவிட்டுவிட்டு தன்னுடைய சிப்பாயை வைத்து ஒரு ராஜா தன்னையே கொல்லச் சொல்வது எல்லாம் ரொம்பவும் டமாஷானவை. பின்லாடனைக் கொன்ற பிறகு ஒபாமா தன்னையும் கொன்றுவிடும்படிக் கேட்டுக்கொள்வதைப் போன்றது இது. பிற தீவிரவாத இயக்கங்கள் பற்றிய தகவல் தெரிய வேண்டுமானால் அதற்கு வேறொரு ஆப்ரேஷனால்தான் முடியும்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஆப்ரேஷன் தனுஷ் என்ற ரகசியத் திட்டம் பற்றி டி.ஐ.ஜி.க்கு எதுவுமே தெரியாதாம். அவருக்குக் கீழே பணி புரியும் டெபுடி கமிஷனர்களுக்கு மட்டுமே தெரியுமாம். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை. எந்தவொரு மேலதிகாரிக்கும் தெரியாமல் அவருடைய கீழதிகாரிகளுக்குப் பெரிய அசைன்மெண்ட்களைத் தரமாட்டார்கள். அந்த டி.ஐ.ஜி. சீனிவாசன் கொஞ்சம் சந்தேகத்துக்கு இடமான மனிதர். எனவே, அவருடைய மேலதிகாரிகள் அவரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அனைத்து முக்கியமான மீட்டிங்களிலும் அவரும் இடம்பெறுவதாகவே காட்டப்படுகிறது. ஆக, காவல் துறையின் அதிகார தரவரிசை எப்படிப்பட்டது… திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதுபற்றிய புரிதல் இல்லாத ஒருவரால்தான் இப்படி கதையை யோசிக்க முடியும்.
அதோடு இந்த டெபுடி கமிஷனர்களுக்கு என்ன சீருடை என்பதே தெரியவில்லை. பாடல் காட்சியில் காஸ்ட்யூம் மாற்றுவதுபோல் ஒரு நேரம் காக்கிச் சட்டையும் குச்சியுமாக வருகிறார்கள். இன்னொரு நேரம் பூனைப்படை வீரர்கள் போல் கறு நீல ஆடையில் வருகிறார்கள். பிறிதொரு நேரம் டிராஃபிக் போலீஸ் போல் வெள்ளை சட்டை அணிந்து வருகிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பொரட்சிகர இயக்கத்தின் கமாண்டரும் காவல்துறை அதிகாரிகள் போலவே கறு நீல சஃபாரி உடையில் வருகிறார். மொத்தமா வாங்கினால் தள்ளுபடி என்று அறிவித்திருப்பார்கள் போலிருக்கிறது. காஸ்ட்யூம் டிசைனர் பட்ஜெட்டை மிச்சம் பிடிக்க எல்லாருக்கும் ஒரே சீருடையாகத் தைத்துவிட்டார்.
இப்படியாக படத்தின் ஆதார அம்சங்களிலேயே இத்தனை குளறுபடிகள்.
இரண்டாம் நிலை விவரணைகளில் இருக்கும் பிரச்னைகளை அடுத்தாகப் பார்ப்போம். பொதுவாக, இவ்வகைப் பிழைகள் ஓரளவுக்கு மன்னிக்கத் தகுந்தவையே. குறிப்பாக, தமிழ் படங்களைப் பொறுத்தவரையில். ஆனால், பெரிய பிழைகளைச் செய்வதற்கு பல்வேறு சமரசங்களை சாக்குப் போக்காகச் சொல்லும் தமிழ் படைப்பாளிகள் இந்தச் சிறிய விஷயங்களில் செய்யும் தவறுகளுக்குத் தங்கள் திறமையின்மையைத் தவிர வேறு எதையும் காரணமாகச் சொல்ல முடியாது. ஒருவர் திறமை குறைந்தவராக இருப்பதில் தவறே இல்லை. ஆனால், அதையே தனது சாதனையாக முன்வைக்கும்போதுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.
அதோடு கமல்ஹாசன் அதி நுட்பமான விஷயங்களையெல்லாம் அதைவிட நுட்பமாகச் செய்யக்கூடியவர் என்ற பெயர் வேறு இருக்கிறது. அவருடைய அருமை பெருமை பற்றி அவருடன் இருப்பவர்கள் அல்லது அவருடைய கடைக்கண் பார்வைக்காக க்யூ வரிசையில் காத்திருப்பவர்கள் எல்லாரும் ரொம்பவே பேசுவதுண்டு.
உதாரணத்துக்கு, ஏதேனும் ஒரு காட்சியில் கமல் வலது கையில் சிறிய காயத்துக்காக பேண்டேஜ் ஒன்றைக் கட்டியிருப்பாராம். அதனுடைய தொடர்ச்சியான காட்சி சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து என்றாவது எடுக்கப்படும். அப்போது வேண்டுமென்றே இடது கையில் அந்த பேண்டேஜைக் கட்டிக் கொள்வாராம். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா முன்னேற்பாடுகளும் முடிந்து காட்சியை படமாக்க ஆரம்பிப்பார்கள். கேமரா மேன் லைட்டிங் பற்றி தன் திருப்தியை தெரிவிப்பார். இயக்குநர் வ்யூ ஃபைண்டரில் (மானிட்டரில்) ஃப்ரேமைப் பார்த்துவிட்டு, ஸ்டார்ட் கேமரா ஆக் ஷன் என்று சொல்வார். மயான அமைதி நிலவ கேமரா ஓட ஆரம்பிக்கும். அந்த நேரம் பார்த்து, லைட்ஸ் ஆஃப் என்று கமல் கர்ஜிப்பாராம்.
ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவும் இடி கேட்ட நாகம் போல் நடுங்கும். கேமரா மேன், டைரக்டர் எல்லாரும் பதறி அடித்தபடி கமல் சாரை நெருங்குவார்கள். அவரோ போலியான கோபத்துடன், உதவி இயக்குநர்களைப் பார்த்து, முந்தின காட்சியில நான் எந்தக் கையில பேண்டேஜ் போட்டிருந்தேன் என்று அதிரடியாக ஒரு கேள்வி கேட்பார். உதவி இயக்குநர் அவசர அவசரமாக தன் குறிப்பேட்டைப் புரட்டிப் பார்ப்பார். அதில் வலது கையில் பேண்டேஜ் என்று எழுதப்பட்டிருக்கும். கமல் சார் இடது கையில் ஒட்டப்பட்டிருக்கும் பேண்டேஜைப் பிய்த்தெடுத்து எல்லாரையும் அலட்சியப் பார்வை பார்த்தபடி வலது கையில் ஒட்டிக்கொள்வார். ஒட்டு மொத்த யூனிட்டும் தெய்வமே… எங்கயோ போயிட்டீங்க என்று அவர் காலில், பொது இடம் என்று கூடப் பார்க்காமல் விழும். இப்படி அவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்குவார் என்று அவரைப் பற்றி பல புராணங்கள் உருவாக்கப்பட்டு அவை உண்மை எனவும் நிலைபெற்றுவிட்டிருக்கின்றன. எனவேதான் கமலின் படத்தில் தென்படும் சிறிய பிழைகளையும் பட்டியலிடுவது மிகவும் அவசியமாகிறது.
இவற்றை மாற்றி அமைப்பதால் படத்தின் தரம் அதிகரிக்குமா என்பது பார்ப்பவர்களைப் பொறுத்ததுதான். ஒரு காட்சியில் ஜோவென மழை பெய்து அதற்கு தொடர்ச்சியான அடுத்த காட்சியில் சுள் என்று வெய்யில் அடித்தால் யாருக்கெல்லாம் நெருடலாகத் தெரியுமோ அவர்களுக்கானவைதான் இந்தக் கட்டுரைகள்.
குருதிப்புனல் படத்தின் தொடக்கத்திலேயே இப்படியான பிழைகள் வரிசைகட்ட ஆரம்பித்துவிடுகின்றன. கதாநாயகன் ஆதி காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதி மனைவியிடம் கொடுத்துவிட்டு தீவிரவாதிகளின் கோட்டைக்குப் போகிறான். படமே ஒருவகையில் அந்தக் கடிதத்தின் வாயிலாக விவரிக்கப்படுவதுபோல்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கமல் தன்னை எழுத்துத்திறமை உடையவராகவே இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார். செல்லுலாய்ட் காவியங்கள் செதுக்க வேண்டிய மிகப் பெரிய கடமை தனக்கு இருப்பதால் தனக்குள் இருக்கும் எழுத்து ராட்சஸனைக் கொஞ்சம் பின்வரிசைக்கு அனுப்பிவைத்திருக்கிறார். ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த ராட்சஸன் திமிறி எழுந்து முன்னால் வரத் தவறுவதில்லை. இந்தப் படத்தின் முதல் காட்சியில் இடம்பெறும் கடிதத்தில் அந்த ராட்சஸன் தன் கோர முகத்தை வஞ்சனையில்லாமல் வெளிப்படுத்துகிறான்.
நாட்டில் அரசியலும் வன்முறையும் அக்னி சாட்சியாக ஜோடி சேர்ந்துவிட்டன என்று ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம். அடுத்த வரியில் என்ன சொல்கிறார் என்றால், ஊழல் தீயில் நேர்மையை ஊற்றி யாகங்கள் செய்யப்படுகின்றன என்கிறார். தீ என்பது உவமை. ஊழல் என்பது அதற்கான உவமேயம். தொக்கி வந்திருக்கும் அடுத்த உவமை நெய். அதற்கு இணையான உவமேயமாக இடம்பெற்றிருப்பது நேர்மை! தீயும் நெய்யும் நண்பர்கள். ஆனால், ஊழலும் நேர்மையும் நண்பர்கள் அல்ல. அந்தவகையில் நேர்மையை நெய்யாக உவமித்தது தவறு. ஊழலுக்கு நண்பனாக இருக்கும் சுயநலம், பிழையான சித்தாந்தம், வெறுப்பு போன்ற எதிர்மறை விஷயங்கள்தான் அங்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஊழல் தீயில் நேர்மையைப் போட்டு எரித்து யாகங்கள் செய்யப்படுகின்றன என்று சொல்லியிருக்க வேண்டும். சரி இதாவது தமிழ் தெரியாததால் வந்த பிழையாகப் பொறுத்துக்கொண்டுவிடலாம்.
நேர்மைக்கு உதாரணமாக யார் யாரெல்லாம் காட்டப்படுகிறார்கள் தெரியுமா..? காந்தியடிகள், தெரேசா… மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். மூன்றாவதாகக் காட்டப்படுவது ஸ்ரீமதி இந்திரா காந்திஜி. காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமல்ல… இந்திராவுக்கே இது ஒரு புதிய செய்தியாகத்தான் இருந்திருக்கும்.
அடுத்ததாக வரும் வசனம் என்ன தெரியுமா? அரசாங்கத்தின் கவனத்தை நியாயத்தின் பக்கம் திருப்ப சில நேர்மையான போராளிகள் துப்பாக்கி ஏந்தினர். அவர்களையும் ஊழல் தீ சுட்டுவிட்டது. அந்தத் தீப்பொறிகளில் ஒன்றுதான் பத்ரி எனும் பத்ரி நாராயணன் (நாஸர்) என்று அறிமுகப்படுத்துகிறார்.
இந்த பத்ரி நாராயணனாகப்பட்டவர் ரகசியமாகச் செயல்படும் ஒரு பொரட்சிகர இயக்கத்தின் தலைவர். படத்தில் அவருடைய சித்தாந்தம் என்ன என்பது அவருக்குமே தெரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அவர் எந்த ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகப் படத்தில் காட்டப்படவில்லை. சித்தாந்தம் என்ற வஸ்துவுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருப்பதாகத்தான் காட்டவும்படுகிறார். ஆனால் அவரை ஊழல் தீப்பொறிகளில் ஒன்றாக அறிமுகப்படுத்துகிறார் கமல்ஜி. ஆக, கமல் தனக்கு ஊழல் என்றால் என்ன, நேர்மை என்றால் என்ன, பொரட்சி என்றால் என்ன என எதுவுமே தெரியாது என்று படம் ஆரம்பித்தவுடனேயே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிடுகிறார். அதையும் மீறி படத்தைப் பார்த்துவிட்டு இந்தக் காட்சி சரியில்லை… அந்த வசனம் சரியில்லை என்று சொன்னால் அதற்கெல்லாம் அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்?
இந்த வீர வசனங்கள் முடிந்த பிறகு ஒரு காட்சி வருகிறது. அதில் கதாநாயகன் ஆதி காவல்துறை ஜீப்பில் போய்க்கொண்டிருக்கிறார். பின்னால் இன்னொரு காவல் வேனும் வருகிறது. வழியில் கிளைச்சாலை ஒன்றில் இருந்து மூன்றாவதாக ஒரு பள்ளிக்கூட பஸ் வருகிறது. அந்தப் புறவழிச்சாலையில் இவற்றைத்தவிர வேறு எந்த வாகனங்களும் கிடையாது. முன்னால் போகும் காவல்துறை வண்டிகளை முந்தும்படி பள்ளிக் குழந்தைகள் ஓட்டுநரிடம் ஆர்வத்துடன் சொல்கிறார்கள். அவரும் சரசரவென வண்டியை முடுக்கிவிட்டு ஓவர் டேக் செய்கிறார். எந்த திசையில் தெரியுமா? முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடப்பக்கமாக!
நெடுஞ்சாலைகளில் இடப்பக்கமாக ஓவர் டேக் செய்வது எப்போதாவது நடக்கும் செயல்தான். ஆனால், யாரும் காவல்துறை வண்டியை அப்படி ஓவர் டேக் செய்யமாட்டார்கள். அதுவும் பள்ளிக்கூட பேருந்தை ஓட்டுபவர் அப்படிச் செய்ய வாய்ப்பு குறைவு. அதோடு சாலையில் வலதுபக்கம் தாராளமாக இடம் இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் மீறி அந்த ஓட்டுநர் ஏன் இடது பக்கமாக ஓவர்டேக் செய்கிறார் என்றால், முன்னால் போகும் ஜீப்பில் கமல் சார் இடது பக்கமாகத்தானே உட்கார்ந்திருக்கிறார். குழந்தைகள் அவரைப் பார்த்து சாரே ஜஹான் சே அச்சா என்ற பாடல் பாட வேண்டியிருக்கிறதே. அதனால், இடதுபக்கமாக ஓவர் டேக் செய்கிறார் டிரைவர். அப்படியாக திரைப்பட விதிகளை மட்டுமல்லாமல், சாலை விதிகளையும் கமல் தனக்காக வளைக்கும் திறமை கொண்டவர் என்பது இதன்மூலம் வெளிப்படுகிறது. விதிகள் என்றாலே மீறத்தானே.
கமல் சார் செல்லமாகக் குழந்தைகளைக் கடிந்துகொள்கிறார். டிரைவரைச் சரியான வழியில் ஓவர் டேக் செய்யச் சொல்லி உத்தரவிடுகிறார். அப்படியே அந்த ஓட்டுநரும் வண்டியைப் பின்னால் கொண்டுசென்று வலது பக்கமாக ஒவர் டேக் செய்கிறார். இந்த இடத்தில்தான் ஹாலிவுட் பரபரப்பு படத்தில் தொற்றிக்கொள்கிறது. ஆரம்ப காட்சியிலேயே பரபரப்பு!


தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் காவல்துறை வேனைக் குறிவைத்துத் தகர்க்கத் திட்டமிடுகிறார்கள். அதற்கு அவர்கள் செய்யும் உலகமகா காரியம் என்ன தெரியுமா. சாலையில் வழியில் இருக்கும் சிறிய பாலம் ஒன்றின் குறுக்கே கயிறைக் கட்டி பாம் ஒன்றைப் பொருத்துகிறார்கள். ஒரு ஆடோ நாயோ கடந்துபோனால் கூட கால் பட்டு வெடித்துவிடும்வகையிலான வெடி குண்டு. அந்தக் கண்ணி வெடியைப் பொது வழியில் பொருத்திவிட்டு சிறிது தள்ளிப் போய் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கிறார்கள். பள்ளிக்கூடப் பேருந்து சாலையில் வருவதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார்கள். அடங்கொய்யால… சாலையில் காவல் துறை வேன் மட்டுமே வரும் என்று நினைத்துத்தான் அந்த வெடிகுண்டைப் பொருத்தினார்களா..? காவல்துறை வேனைத் தகர்ப்பதென்றால், கையெறி குண்டு பயன்படுத்தலாம். லெவல் கிராஸிங்கிலோ வேறு எங்காவதோ காவல் வேன் நிற்கும்போது நைஸாக பாமை அதில் வைத்துவிடலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு பாலத்துக்குக் குறுக்கே கயிறுகட்டிவைத்துவிட்டு பள்ளிக்கூட பஸ் வந்ததும் தலையில் அடித்துக்கொள்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதும் அதுதானே!
அதிலும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தைப் பார்த்தால் அதைவிட பரிதாபம்.. படத்தின் நான்காவது நிமிடம் 15வது நொடியில் வரும் அந்தக் காட்சியை நிறுத்தி வைத்துப் பார்த்தால் பாம் எங்கோ வெடிக்கிறது. பேருந்து வேறு எங்கோ இருக்கிறது. காட்சியை எழுதியதில் மட்டுமல்ல, எடுத்தவிதத்திலும் குழறுபடி.


குண்டு வெடித்து பேருந்தில் வந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். பின்னால் வரும் காவல் ஜீப்பில் இருந்து பதறியபடியே இறங்கி ஓடிவரும் கமல் சார் கேமராவுக்கு சோகமாக போஸ் குடுத்தபடி பாலத்தின் மேலே நிற்கிறார். நிற்கிறார். நின்று கொண்டே இருக்கிறார். ஓடிச் சென்று யாருக்காவது உயிர் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று கூடத் தோன்றவில்லை. காட்சி ஊடகம் என்றால் ஃப்ரேம் பியூட்டிதானே முக்கியம். சரி கதாநாயகனுக்குத்தான் அந்த லட்சியம் என்றால் உடன் வந்த காவலர்களில் ஒருவர் கூடவா வெடித்து விழுந்த பஸ்ஸைப் போய் எட்டிப் பார்க்கக்கூடாது. இத்தனையும் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்துக்குள் நடைபெறும் சாதனைகள்.
இரண்டரை மணி நேரப்படத்தை இப்படிப் பிரித்து மேய்வதென்றால் இதற்கென்றே தனி புத்தகம்தான் போடவேண்டியிருக்கும். எனவே, இந்தக் கட்டுரைக்கு ஏற்ற வகையில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
கதாநாயகன் ஆதியிடம் ஆப்ரேஷன் தனுஷ் என்ற ஒரு அசன்மெண்ட் ஒப்படைக்கப்படுகிறது. அதாவது, சிவா, ஆனந்தன் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்ட இரண்டு காவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பு அவனிடம் துணைக் கதாநாயகனால் ஒப்படைக்கப்படுகிறது. அதை வெறுமனே ஒப்படைத்திருக்கலாம். ஆனால், அதற்கு ஒரு காரணம் கற்பிக்கிறேன் என்ற பேரில் மடத்தனம் வெளிப்படுத்தப்படுகிறது. ஒருவர் முட்டாளாக இருப்பதில் தவறில்லை. அதை அடிக்கடி வெளிப்படுத்திக்கொண்டிருப்பது அநாவசியம் அல்லவா. ஆதி சித்திரவதைக் கலையில் நிபுணராம். அதனால் ஆப்பரேஷன் தனுஷின் பொறுப்பு அவருக்குத் தரப்படுகிறதாம். தீவிரவாதிகளில் சிலர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க நீதான் சரி என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது. ஒற்றர்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்பதை சித்திரவதை நிபுணரிடமா கேட்கவேண்டும். அதிலும் அவர் சொல்லும் ஆகப் பெரிய ஆலோசனை என்ன தெரியுமா… சதித்திட்டத்தை வெளியில் யாருக்கும் சொல்லிவிடாதே… பிடிபட்டால் சயனைட் சாப்பிட்டு உயிரைவிட்டுவிடு. இப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஒண்ணாம் வகுப்பு பாடம் கற்றுக் கொடுக்க உண்மையிலேயே ஒருவருக்கு அசாத்திய திறமை வேண்டும்.
ஒருவழியாக காவல் துறை ஒற்றர்கள் தீவிரவாத இயக்கத்துக்குள் ஊடுருவிவிடுகிறார்கள். பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே ஒரு வருடத்தில் அவர்கள் அந்த இயக்கத்தின் பெரிய பதவிக்கும் வந்துவிடுகிறார்கள். அவர்களில் ஒருவன், தீவிரவாதிகளில் முக்கியமான யாரோ இரண்டு பேர் திருச்சிக்கு போகிறார்கள் என்ற தகவலை கதாநாயகனுக்கும் துணைக் கதாநாயகனுக்கும் தெரிவிக்கிறார். ஆனால், தீவிரவாதிகள் அவரைக் கையும் டாக்கியுமாகப் பிடித்துவிடவே சயனைடு அருந்தி உயிர்த்தியாகம் செய்துவிடுகிறார். அவருடைய உடல் நடுக்காட்டில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்படுகிறது. அதை வேதனையுடன் பார்க்கும் நாயகனும் துணை கதாநாயகனும் திருச்சி டிரெயினுக்கு நேரமாகிவிடவே ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைகிறார்கள். அங்கு பார்த்தால் அந்த ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கிறார்கள்.
இந்திய ரயில்வேத் துறையின் வசம் இருக்கும் ஒரே ஒரு கவுரவம் அது குறிப்பிட்ட நேரத்துக்குப் புறப்படுவதுதான். இயற்கைச் சீற்றம், ரயில் மறியல் போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத நேரத்தில் இந்திய ரயில்கள் பொதுவாக சரியான நேரத்தில் புறப்பட்டுவிடும். சேரும் நேரம் பற்றி சொல்வதானால், ஏதாவது ஒரு ரயில் குறிப்பிட்ட நேரத்தில் தன் டெஸ்டினேஷனைச் சென்று சேர்ந்துவிட்டதென்றால், அது முந்தின நாள் வந்து சேரவேண்டிய ரயிலாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்குத்தான் அதன் தரம் இருக்கிறது. புறப்படும் நேரத்தில் இப்படியான தாமதம் சாத்தியமில்லை. ஆனால், படத்தில் திருச்சி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தங்கிலீஷில் அறிவிக்கிறார்கள்.
எதற்காக இந்தத் தாமதம் என்றால், கதையில் இரண்டு சம்பவங்கள் நடக்க வேண்டியிருக்கிறது. முதலாவது, கதாநாயகன் மாபெரும் அதிகாரி என்றாலும் அவருக்கும் குழந்தை குட்டிகள், குடும்பம் உண்டு. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லவர்… அதே நேரத்தில் சிறிது நேரம் கிடைத்தாலும் குடும்பத்துடன் சேரத் துடிப்பவர்… அதாவது, குடும்பத்தையும் அலுவலகத்தையும் சரியாக பேலன்ஸ் செய்யும் சராசரி மனிதர் என்று காட்டுவதற்காக ஒழுங்காகப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய ரயிலை இரண்டு மணி நேரம் தாமதப்படுத்துகிறார்.
இரண்டாவது காரணம் என்னவென்றால், ரயிலில் ஏறவிருக்கும் தீவிரவாதிகளை நாயகன் யதேச்சையாகக் கண்டுபிடிக்கவும் இந்தத் தாமதமே வாய்ப்பளிக்கிறது. குடும்பத்தினருடன் பொது தொலைபேசியில் பேச ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வரும் நாயகன், அங்கு வந்து நிற்கும் கார் ஒன்றில் தீவிரவாதி ஆளுயர துப்பாக்கியைத் எடுத்து வைப்பதைப் பார்த்துவிடுகிறார். ரயிலில் ஏறி திருச்சிக்குப் போக வேண்டிய தீவிரவாதிகள் எதற்காக இவ்வளவு பெரிய ஆயுதத்தைக் கையில் கொண்டுவந்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த காரை ஓட்டி வந்த டிரைவர்தான் தீவிரவாதிகளின் தலைவர். அவரிடம் பொட்டு வெடி துப்பாக்கி கூடக் கிடையாது. அவருடன் வந்த சீடரிடம், ஆளுயரத் துப்பாக்கி, பேண்ட் பாக்கெட்டில் சொருக முடிந்த குட்டி துப்பாக்கி என சகல சம்பத்துகளும் இருக்கின்றன.
கதாநாயகன் தீவிரவாதியை ஒளிந்திருந்து மடக்கத் திட்டம் போடும்போது அவருடைய வாக்கி டாக்கிக்கு செய்தி ஒன்று வரவே அந்த சத்தத்தைக் கேட்டு தீவிரவாதி சுதாரித்துவிடுகிறார். நாயகனுக்கும் தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தீவிரவாதியின் தோளில் குண்டு பாய்ந்துவிடுகிறது. இதைப் பார்த்ததும் டிரைவர், காரை வேகமாக எடுத்துக்கொண்டு தப்பிக்கப் பார்க்கிறார். பதற்றத்தில் அருகில் இருந்த சுவரில் மோதி மாட்டிக்கொண்டுவிடுகிறார். காவலர்கள் அவரைச் சுற்றி வளைத்ததும் பதறியபடியே எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்பதுபோல் நான் டிரைவர்தான் என்று வாக்குமூலம் தருகிறார்.
இதனிடையில் குண்டடி பட்ட இன்னொரு தீவிரவாதி நேராக, ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்துவிடுகிறார். எங்காவது ஒளிந்துகொள்ளலாமென்று நினைக்காமல் நேராக மக்கள் அதிகமாக இருக்கும் நடைமேடைக்கு வந்துசேருகிறார். பயணிகளில் ஒருவரை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அந்த ரயில் நிலையமோ மிகவும் விசித்திரமான ஒன்று. அதில் நடைமேடையில் மட்டும்தான் மக்கள் இருப்பார்கள். ஓவர் பிரிட்ஜில் ஒரு ஈ காக்காய் கூட இருக்காது. எனவே, தீவிரவாதி பிணைக்கைதியைக் கேடயமாகப் பிடித்தபடி ஓவர் பிரிட்ஜில் ஏறி தப்பிக்க முயற்சி செய்வார். நாயகனும் துணை கதாநாயகனும் அதிரடியாக அவனை மறைந்திருந்து சுட்டுக் கொன்றுவிடுவார்கள்.
அதன் பிறகு டிரைவரை விசாரணை செய்ய ஆரம்பிப்பார்கள். அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று சாதிப்பார்.
அடுத்ததாக, மத்திய அமைச்சர் ஒருவர் காவல் துறையினரின் எச்சரிக்கைகளையும் மீறி ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அந்த ஊருக்கு வருவார். அவரைக் கொல்ல தீவிரவாதிகள் போட்ட திட்டம் ஒற்றர் மூலமாகக் காவலர்களுக்குத் தெரியவரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் அந்த அமைச்சரை ராக்கெட் லாஞ்சர் மூலம் கொல்லத் தீர்மானித்திருப்பார்கள். இந்த லாஞ்சரை ஏவப் போகிறவர் பொரட்சிகர இயக்கத்தின் சித்தாந்தத்துடன் ஒத்திசைவு இல்லாதவராம். அதாவது, அவர் ஃப்ரீலான்ஸாக போட்டோ பிடிப்பது, வீடியோ படம் எடுப்பதுபோல் ராக்கெட் லாஞ்சரை வைத்து அப்பப்ப யாரையாவது சுட்டு காலத்தை ஓட்டுபவர். அதற்கான பயிற்சியை எந்த சித்தாந்தப் பின்புலமும் இல்லாமல் எங்கோ ஆறு மாத டிப்ளமா கோர்ஸ் போல் படித்திருக்கிறார் போலிருக்கிறது. இதாவது பரவாயில்லை. படத்தில் வரும் பொரட்சிகர இயக்கமானது மிக முக்கியமான தாக்குதலுக்குக்கூட அவுட் சோர்ஸ்தான் செய்யும் போலிருக்கிறது.
இதில் இன்னொரு டமாஷ் என்னவென்றால், மத்திய அமைச்சரை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல ஆதி சொல்லும் ஐடியா இருக்கிறதே… அபாரம். நெடுஞ்சாலை வழியாக அழைத்துச் சென்றால் பிரச்னை. காட்டுக்குள்ளாகக் கொண்டு செல்வோம் அதுதான் பாதுகாப்பு என்று அடித்துச் சொல்கிறார் (அது ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் என்று படத்தில் சொல்லப்படுகிறது. என்றாலும் மறைவிடங்கள் மிக அதிகமாக இருக்கும் காட்டுப் பகுதி எப்படியும் பாதுகாப்பானதாக இருக்க வழியில்லை). அவர் சொல்வதுபோலவே மந்திரியைக் காட்டுப் பகுதிவழியாக அழைத்துச் செல்கிறார்கள். முன்னால் சோதனை செய்தபடியே போகும் நாயகன் ஆதிக்கு காட்டில் ஒரு இடத்தில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்கிறது. அங்கு ஜீப்பை நிறுத்தி கண்காணிக்கிறார். அவருடைய கணிப்பு சரிதான். ஆனால், தீவிரவாதியின் தாக்குதலில் இருந்து மந்திரியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. ஆதியின் கண்ணுக்கு முன்னாலே ராக்கெட் லாஞ்சர் மந்திரி வந்த காரை தாக்கி அழித்துவிடுகிறது.
இதைப் பார்த்ததும் கதாநாயகன் தீவிரவாதியைத் துரத்துகிறார். மந்திரியின் கூடவே சுமார் 20 கார்கள் வந்திருக்கின்றன. அதில் ஒவ்வொன்றிலும் சராசரியாக நான்கு பூனைப்படை வீரர்கள் என்று வைத்துக்கொண்டால் சுமார் 80 பேர் இருப்பார்கள். ஆனால், தீவிரவாதியை கமல் சார் மட்டுமே அந்தக் காட்டுக்குள் துரத்திக்கொண்டே செல்கிறார். கடைசியில் சில பல சண்டைக்குப் பிறகு அந்தத் தீவிரவாதியை துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கிறார். மிகச் சரியாக பூனைப்படையும் வந்து சேருகிறது.
அந்தத் தீவிரவாதியை விசாரணை செய்யும்போது முன்பே சிறையில் பிடிபட்டிருக்கும் டிரைவர்தான் அந்தத் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பத்ரி நாராயணன் என்ற திடுக்கிடும் உண்மை தெரியவருகிறது. கதை சூடு பிடிக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் வெடி குண்டு விபத்தில் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளின் புகைப்படங்களை மேஜையில் பரத்தி வைத்து பத்ரியிடம் ஆதி விசாரணையை ஆரம்பிக்கிறார். இந்த அப்பாவிகளை எதற்காகக் கொன்றாய்..? உனக்கு தைரியம் இருந்தா எங்க கூட மோத வேண்டியதுதான என்கிறார். பத்ரியோ பேசாமல் இருக்கிறார். உண்மையில் காவல் துறை அதிகாரிகளைக் கொல்லத் திட்டமிட்டுத்தான் அந்த வெடி குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் எதிர்பாராதவிதமாக குழந்தைகள் மாட்டிக்கொண்டுவிட்டார்கள். எனவே, அது ஒரு விபத்து என்பதை பத்ரி சொல்லியிருக்க வேண்டும்.
தீவிரவாதிகளிடம் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும். ஒரு தாக்குதலை நிகழ்த்தினால் அதற்கு பொறுப்பேற்று ஓர் அறிக்கையை நிச்சயம் வெளியிடுவார்கள். அவர்களுடைய ஆதரவாளர்களிடையே மதிப்பையும் நிதி சேகரிக்க வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால்தான் அப்படிச் செய்கிறார்கள் என்றாலும் பொதுவாக தாங்கள் செய்த செயலை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அப்படியே ஒருவேளை செய்த தவறை மறைத்தாலும் செய்யாத ஒன்றைச் செய்ததாக மார்தட்டிக் கொள்ளமாட்டார்கள். அதுவும்போக காவல் துறை அதிகாரி நேருக்கு நேர் மோது என்று சவால் விடும்போது, நாங்கள் அதைத்தான் செய்ய முயன்றோம். குறி தப்பிவிட்டது என்பதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஏனோ வாய் மூடி மவுனம் காக்கிறார்.
அடுத்ததாக, தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் ஒரு வண்டியில் அதிகாலை நான்கு மணி அளவில் செக் போஸ்ட் வழியாகப் போகப் போவதாகத் தகவல் வருகிறது. ஆதி, அப்பாஸ் அன்கோ அந்த செக் போஸ்டைச் சுற்றிக் காவலுக்கு நிற்கிறார்கள். சரியாக அதிகாலை 3.50க்கு வண்டி வந்து சேருகிறது. தீவிரவாதி ஒருவன் லாக் புக்கை எடுத்து வந்து எண்ட்ரி போடச் சொல்கிறான். அந்த நேரம் பார்த்து அப்பாஸும் ஆதியும் பின்னால் இருந்து அவனை மடக்கிப் பிடித்துவிடுகிறார்கள். இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை மெதுவாக மேஜையில் வைக்கச் சொல்லி அப்பாஸ் உத்தரவிடுகிறார். அந்த தீவிரவாதியும் அதைச் செய்கிறான். ஒரு காவலரை அனுப்பி அதை எடுத்து வைக்கச் சொல்லி அப்பாஸ் உத்தரவிடுகிறார். கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் அந்தக் காவலர், தீவிரவாதியின் துப்பாக்கியை மேஜையில் இருந்து எடுத்து ஒதுக்கி வைக்கிறார். தீவிரவாதி பயந்து சுவர் ஓரம் ஒதுங்குகிறார். அந்த நேரம் பார்த்து திடீரென்று அலாரம் கிர் என்று ஒலிக்கவே அந்தக் காவலர் பயந்து துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்திவிடுகிறார். தீவிரவாதி அதில் மாட்டி இறந்துவிடுகிறார்.
இந்தக் காட்சியில் எழும் சந்தேகம் என்னவென்றால், நான்கு மணிக்கு ஆயுதங்கள் கடத்தப்படப் போவதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் ஒரு பெரிய காவல் படையே அந்த செக் போஸ்டை முற்றுகை இட்டிருக்கிறது. அங்கு பணி புரியும் காவலர் நான்கு மணிக்கு எழுப்பும் வகையில் அலாரத்தை செட் செய்து வைப்பாரா? முந்தின நாட்களில் வேண்டுமானால், அப்படித் தூங்கியிருக்கலாம். அதிலும் செக் போஸ்டில் இரவு பணியில் இருப்பவர் அலாரம் வைத்துக் கொண்டு தூங்குவார் என்பது நம்ப முடியாத ஒன்றுதான். அவருடைய பணியே இரவு நேரக் கடத்தலைத் தடுப்பதுதான். கடமைக்காக இல்லை என்றாலும் கடமை மீறலுக்காகக் கிடைக்கும் லஞ்சத்துக்காகவாவது முழித்துக்கொண்டுதான் இருப்பார். சாலை வழியாக மட்டுமல்ல… பக்கத்து வயல்கள் தோப்புகள் வழியாகவும் ஏதேனும் வாகனங்கள் போகிறதா என்று படு உஷாராக டார்ச் அடித்துத் தேடிக் கொண்டிருப்பார். ஆனால், இங்கோ பெரும் காவலர் குழுவே சூழ்ந்திருக்கும் நிலையில் அவர் ஜாலியாக நான்கு மணிக்கு அலாரம் செட் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
அப்படியாக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டுவிடவே பத்ரிக்கு கோபம் வருகிறது. ஆதியைத் தன் பக்கம் வந்துவிடும்படி வலை விரித்துப் பார்க்கிறார். ஆதிக்கும் நேர்மைக்கும் இடையிலான பிணைப்பு ஃபெவிக்கால் பிணைப்பைவிட வலுவானது என்பது தெரியவந்ததும் தன் கைவரிசையைக் காட்டுகிறார். ஆதியின் குழந்தையின் செல்ல நாய்க்குட்டியைக் கொல்கிறார். ஆதிக்குக் கோபம் முற்றுகிறது. பத்ரியைப் போட்டு பின்னி எடுக்கிறார். அது போதாதென்று நார்க்கோ அனாலிசிஸ் டெஸ்டுக்கு உட்படுத்துகிறார். போதை மருந்தின் தாக்கத்தினால் பத்ரி விட்டு விட்டுப் பேசுகிறார். எட்டு வருஷமா… எட்டு வருஷமா என்று சொல்கிறார். பிறகு உன் மகன் பாவம். சீனிவாஸ் நீ சாகப் போற என்று சொல்கிறான்.
அடுத்த காட்சியில் ஆதியின் மகன் சீனிவாஸ் நீச்சல் குளத்தில் இருக்கும்போது காலில் சுடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். ஆனால், நாயகன் ஆதிக்கோ சட்டென்று தன்னுடைய மேலதிகாரியான டி.ஐ.ஜி. சீனிவாஸன்தான் தீவிரவாதிகளுக்கு உதவுபவர் என்று தெரியவந்துவிடுகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. இதை நான் ஒரு சந்தேகமாகத்தான் கேட்கிறேன். கமல்தான் திரைக்கதை ஆசிரியர் என்பதால் அவருக்கு அந்த டி.ஐ.ஜி. கதாபாத்திரம்தான் கறுப்பு ஆடு என்பது தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், கதாநாயகன் ஆதிக்கு எப்படித் தெரியவந்தது. பத்ரி போதை மருந்தின் பாதிப்பில் சினிவாஸ்… நீ சாகப் போற என்றுதான் சொல்கிறார். அதன்படியே ஆதியின் மகன் சீனிவாஸ்தான் துப்பாக்கியால் சுடவும் படுகிறான். இதை வைத்து டி.ஐ.ஜி.தான் துரோகி என்று எப்படி ஆதி கண்டுபிடிக்கிறார்?
இதைத் தொடர்ந்து வேறு சில மிரட்டல் நடவடிக்கைகள் நடக்கின்றன. ஆதி பயந்துவிடுகிறான். டி.ஐ.ஜி. போல் தானும் தீவிரவாதிகளுக்கு உதவத் தயாராகிவிடுகிறான். இத்தனைக்கும் தீவிரவாதிகள் தலைவன் காவலர்களுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறான். ஆனால், ஆதி வீர சாகசங்கள் செய்யும் காவலர் அல்ல. பந்த பாசத்துக்குக் கட்டுப்பட்ட யதார்த்தமான காவலர் என்பதால் தீவிரவாதிகள் சொல்வதையெல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். பத்ரியைத் தப்பித்துப்போக விட்டுவிடுகிறார். இதனால் ஆதியின் நடவடிக்கைகளில் அப்பாஸுக்கு சந்தேகம் வருகிறது.
ஒருநாள், தீவிரவாதிகளின் தலைவனைச் சந்திக்க ஆதி தனியாகச் செல்லும்போது அப்பாஸும் பின்னாலே போகிறான். ஆனால், அவன் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறான். தீவிரவாதிகள் தலைவன், ஆதியை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு தனுஷ் யார் என்று கேட்டு அப்பாஸை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறான். அப்பாஸ் மறுத்துவிடவே கடைசியில் அவனைக் கொன்றுவிடுகிறான்.
இதைத் தொடர்ந்து வந்த சோகக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது. காரணம் என்னவென்றால், அப்பாஸின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அவருடைய இஸ்லாமிய மனைவி மட்டுமல்ல ஆதியின் மனைவிகூட வெண்ணிற விதவை உடையை அணிந்துகொண்டு அழுவார். கமல் சாரின் கலாசார புரிதலை நினைத்துப் பார்த்ததும் எதற்கும் கலங்காத என் கண்ணின் மதகுகளையும் கண்ணீர் வெள்ளம் உடைத்துவிட்டது.
இதற்கு அடுத்ததாக என்ன நடக்கிறதென்றால், கமல் சாரின் பேனா வேறு அவதாரம் எடுக்க ஆரம்பிக்கிறது. ஆருயிர் நண்பன் கொல்லப்பட்டதும் தமிழ் கதாநாயகன் ஒரு ஒன் மேன் ஆர்மி அல்லவா என்ற உண்மை அவருக்கு நினைவுக்கு வந்துவிடுகிறது. தீவிரவாதிகளின் கோட்டைக்கு தனி ஆளாக ஒற்றத் துப்பாக்கியுடன் (அதையும் அவர்கள் முதலிலேயே பறித்துவிடுவார்கள் என்பது தெரிந்த பிறகும்) க்ளைமேக்ஸ் ஆவேசத்துடன் போய்சேருகிறார். தீவிரவாதிகளுடைய அநியாயத்தை இனியும் பொறுக்க வேண்டாம் என்று தோன்றினால், அவர்களுடைய இருப்பிடத்தைத் தன் ஒற்றன் மூலம் கேட்டறிந்து அவர்களைச் சுற்றி வளைத்து ஒரேயடியாக முடித்துவிடலாம். ஆனால், ஆதியோ க்ளைமேக்ஸில் தன் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காக தனி ஒரு மனிதனாக தீவிரவாதத்தை எதிர்த்துக் களத்தில் குதிக்கிறார்.
தீவிரவாதிகளின் தலைவன் சிறையில் அடைபட்டுக் கிடந்தபோது பாசக்கார தந்தையாக நடந்துகொண்ட ஆதி, அவன் அவனுடைய கோட்டையில் முழு பலத்துடன் இருக்கும்போது தன் முஷ்டி பலத்தை நம்பி சண்டைக்குப் புறப்பட்டுவிடுகிறார். ஆனால், க்ளைமேக்ஸ் சண்டையெல்லாம் போட்டு தீவிரவாதிகள் தலைவனைக் கொன்றதும் ஆப்பரேஷன் தனுஷின் ஞாபகம் வந்துவிடுகிறது. சிவாவிடம், தனி மனிதனை விடக் கடமைதான் முக்கியம். இந்த தீவிரவாத கும்பலைப் பற்றி மேலதிக விவரங்கள் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது. பத்ரியும் இறந்தாகிவிட்டது. அடுத்த தலைவர் நீதான். எனவே, என்னைக் கொன்றுவிடு. நான் பத்ரியைக் கொன்றேன். நீ என்னைக் கொன்றுவிட்டாய் என்று சொல்லிவிடு. அனைவரும் உன்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று சொல்கிறார்.
சிவாவோ தன் உயரதிகாரியைத் தானே கொல்வதா என்று தயங்குகிறான். நம் அப்பாஸுக்காகக் கொல்லு… நம் ஆப்பரேஷன் தனுஷ் வெற்றி பெற வேண்டும் அதற்காகக் கொல்லு… ஷூட் மீ மை மேன்… ஷூட் மீ மை பாய் என்று உணர்ச்சிபூர்வமாகக் கெஞ்சுகிறார். சிவாவோ உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கிறான். என்ன சொல்லியும் அவன் கொல்லாமல் சிலை போல் நிற்கவே, கடைசியாக, இது என் உத்தரவு… கொல்லுடா என்னை என்று ஆதி கர்ஜிக்கிறார். உத்தரவுகளுக்குப் பழகிப் போன சிவா சட்டென்று டிரிகரை அழுத்துகிறான். தோட்டாக்கள் ஆதியின் உடம்பை சல்லடையாகத் துளைக்கின்றன. அப்படியாக ஆப்பரேஷன் தனுஷுக்காக தன் உயிரைத் தியாகம் செய்கிறார் ஆதி.
இதோடு படம் முடிந்தது என்று நினைத்தால் கமல்ஜி இன்னொரு செய்தியையும் படத்தின் முடிவில் காட்டுகிறார். அதாவது, அப்பாஸ், ஆதி ஆகியோரின் விதவை மனைவிகள் வெண்ணுடை தரித்து மத்திய அரசு தரும் பரிசைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆதியின் மகன் சீனிவாஸ் அந்த பரிசு பத்திரத்தை காரில் வைக்கிறேன் என்று கேட்டு வாங்கிக்கொண்டு ஓடுகிறான். அப்போது இரண்டு சிறுவர்கள் அவனை வழிமறிக்கிறார்கள். நான் கோவிந்தனின் மகன் என்கிறான் ஒருவன். நான் நரசிம்மனின் மகன் என்கிறான் இன்னொருவன். ஆதியின் மகனிடமிருந்து பதக்கத்தைப் பறித்து வானில் தூக்கி எறிகிறார்கள். பிறகு மதில் ஏறிக் குதித்து வெளியேறுகிறார்கள். தீவிரவாதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தைச் சொல்வதுபோல் பின்னணிக் குரலில் இறந்து போன ஆதியின் ஆவி பேசுகிறது.
இந்தக் காட்சியின் செயற்கைத் தன்மையை விட்டுவிடுவோம். காவல் துறையும் ராணுவமும் அப்பாவிகளை தீவிரவாதிகள் என்ற போர்வையில் சுட்டுக் கொல்லும்போது அதனால் ஆத்திரமடைந்து பாதிக்கப்பட்ட சிலர் தீவிரவாதத்தின் பக்கம் போவது உண்டு. அதைச் சொன்னால்தான் தீவிரவாதி உருவாவதன் நியாயத்தைச் சொன்னதாக ஆகும். அதைவிட்டுவிட்டு தீவிரவாதிகளைக் கொன்றதால் அவர்களுடைய மகன்களும் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? உயிரோடு இருக்கும் பாத்திரங்களே உளறிக் கொட்டும்போது ஆவி மட்டும் உருப்படியாகப் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறுதான் இல்லையா?
(தொடரும்)