நெடுஞ்செழியன் : நம்பர் 2

நிரந்தர முதல்வர், நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பன போன்ற பதங்களை நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நிரந்தர இரண்டாம் இடம் என்றொரு பதமும் உண்டு. அது சிலருக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, அரசியலில். கட்சிகள் மாறும். காட்சிகள் மாறும். தலைவர்கள் மாறுவார்கள். ஆனால் அந்த இரண்டாம் இடம் மட்டும் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். அவ்வப்போது அவர்களை முதலிடம் முத்தமிடும். ஆனால் நிலைக்காது. இத்தனைக்கும் முதல் இடத்தைப் பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் அவர்களுக்கு இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியல் களம் கண்ட முக்கியமான நம்பர் 2 தலைவர் நாவலர் நெடுஞ்செழியன்.

அவரைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என்று நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அவருடைய புத்தகம் ஒன்றைப் புரட்டியபோது அவர் பிறந்த தேதி கண்ணில்பட்டது. 11 ஜூலை 1920. அதாவது, இன்று.

சுயமரியாதை இயக்கம் தொடங்கி நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திமுக, மக்கள் திமுக, அதிமுக என்று திராவிட இயக்கத்தில் இருந்து உருவான பெரும்பாலான கட்சிகளில் பங்களிப்பு செய்தவர் நெடுஞ்செழியன். நாகை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்த நெடுஞ்செழியன், பட்டுக்கோட்டையில் பள்ளிக்கல்வியையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தவர்.

பெரியாரின் பேச்சை தனது தந்தையுடன் சென்று கேட்டவர். அதன் காரணமாகவே சுயமரியாதை இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நிறைய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். பிறகு சுயமரியாதை இயக்கத் தலைவர்களைத் தம்முடைய ஊருக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார். நன்றாகப் பேசக்கூடியவர் என்பதால் அவரையும் மாணவர்கள் வெளியூர்க் கூட்டங்களுக்குப் பேச அழைத்தனர். அதன்மூலம் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.

பேச்சாளராக இருந்த நெடுஞ்செழியன் நேரடியாகப் போராட்டக்களத்தில் இறங்கியது 1938ல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போதுதான். அதன்பிறகு பெரியாரோடும் அண்ணாவோடும் நெருக்கமாகப் பழகி, அவர்களுடைய அன்பைக் கவர்ந்தார். அதன் விளைவு, சுயமரியாதை இயக்கம் சார்ப்பாக நடத்தப்படும் மாநாடு, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் அந்த இரண்டு தலைவர்களோடு நெடுஞ்செழியனும் இடம்பெறத் தொடங்கினார்.

நெடுஞ்செழியனின் கல்வியறிவு, மொழியறிவு, பேச்சாற்றல், சுறுசுறுப்பு, நேர்மை ஆகிய குணங்கள் பெரியாரையும் அண்ணாவையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டன. விளைவு, முக்கியமான வேலைகள் எல்லாம் நெடுஞ்செழியனிடம் தரப்பட்டன. பல விஷயங்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 1944ல் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற பெரியார் முடிவெடுத்தபோது அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா. அதனை வழிமொழிந்தவர் நெடுஞ்செழியன்.

‘தோழர் நெடுஞ்செழியனை பெரியார் தமது மேற்பார்வையில் வைத்துப்பார்த்தார் – அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் – ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம் அவராலும் ஒருகுறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்!’ – இது நாவலர் நெடுஞ்செழியனைப் பற்றி திமுக நிறுவனர் அண்ணா செய்திருக்கும் பதிவு.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட நெடுஞ்செழியனுக்கு எழுத்தின் மீது அதிக நாட்டம். குறிப்பாக, பத்திரிகைகளில் எழுதுவது. அந்த ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மன்றம் என்ற பெயரில் சொந்தப் பத்திரிகை தொடங்கி எழுதினார். பல கட்டுரைகளை அவரே எழுதினார். உதவிக்கு, அவருடைய சகோதரர் இரா. செழியன் இருந்தார். பல திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு மன்றம் இதழில் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

பெரியாரிடம் பழகி, அவரிடமே பணியாற்றிக்கொண்டிருந்தாலும் அண்ணாவின் மீதுதான் நெடுஞ்செழியனுக்கு அன்பு அதிகம். கருஞ்சட்டைப்படை, சுதந்தர தினம் உள்ளிட்ட விஷயங்களில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் முளைத்தபோதெல்லாம் அதனைக் களைவதற்கு முனைப்பு காட்டியவர் நெடுஞ்செழியன். எனினும், மணியம்மையைத் திருமணம் காரணமாக திகவில் இருந்து விலக அண்ணா முடிவெடுத்தபோது அண்ணாவின் பக்கம் முழுமையாக வந்துவிட்டார் நெடுஞ்செழியன்.

திமுக என்ற புதிய இயக்கத்தைக் கட்டமைத்தபோது அண்ணாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளுள் நெடுஞ்செழியன் முக்கியமானவர். அன்று தொடங்கி அண்ணா கொடுத்த பணிகளை எல்லாம் தயங்காமல் ஏற்றுக்கொண்டார். திமுகவில் அவர் பெற்ற முதல் பதவி, பிரசாரக்குழுத் தலைவர். அந்தக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களுள் ஒருவர் மு. கருணாநிதி.

அன்று தொடங்கி அண்ணா எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் நெடுஞ்செழியன். இன்று முதல் நீ கழகத்தின் பொதுச்செயலாளர் என்றாலும் சரி, நாளையில் இருந்து நீ கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்றாலும் சரி, அவைத்தலைவர் என்றாலும் சரி, அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் சரி, தயங்காமல் ஏற்றுக்கொண்டார். அவருடைய நேர்மையும் பக்குவமும் நிதானமும் அவருக்குப் பல பொறுப்புகளைப் பெற்றுக்கொடுத்தன.

1953ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன்.

தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்புகின்ற விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது. ‘அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரி.

அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன்.

இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியின் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தாற்காலி முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர்வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்தார் என்று வருத்தப்பட்டார் நெடுஞ்செழியன். பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.

1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன். என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தாற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தாற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.

எனினும், 1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார்.

திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

நான் வாழ்வில் கண்டதும் கேட்டதும் என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையும் முக்கியமானது. நெருக்கடியான, சர்ச்சைக்குரிய காலகட்டங்களில் அவருடைய கருத்துகள், உரைகள் இடம்பெற்றுள்ள புத்தகம் இது. மேலும், எழுச்சி முரசு, மொழிப்போராட்டம் கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் ஆகியனவும் குறிப்பிடத்தக்க பதிவுகள். நெடுஞ்செழியன் எழுதிய பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்ட புத்தகம்.

அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும்.

0

ஆர். முத்துக்குமார்

காலட்சேபம், கீலட்சேபம்!

அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில், ‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்’ என்று பேசியதாக செய்திகள் கசிந்தன. அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் டாக்டர் மில்லர்.

போதாது? அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக தொண்டர்கள் கிருபானந்த வாரியார் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் வந்தன. தாக்குதலின் தொடர்ச்சியாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. போலீஸாரின் உதவியுடன் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டார் வாரியார்.

வாரியார் தாக்கப்பட்ட செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது. வாரியாரைத் தாக்கியது தவறு என்று ஆவேசமாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான சட்டமன்ற உறுப்பினர் விநாயகம். அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வாரியார் பேசியது தவறுதானே என்று எதிர்க்கேள்வி எழுப்பினர் திமுகவினர்.

பிரச்னை சட்டமன்றத்தில் எழுந்த சமயத்தில் வாரியாரைத் தாக்கியவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்தான் என்ற செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. வாரியார் பேசியது தவறுதான். என்றாலும் அவரைத் தாக்கியது மோசமான காரியம். அந்தப் பெரியவரின் மனம் புண்பட்டிருக்கும். அவரைச் சமாதானம் செய்யும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டுபேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி. அந்த யோசனையைப் பார்ப்பதற்கு முன்னால் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிடுவது நல்லது.

நெய்வேலியில் வாரியார் தாக்கப்பட்டதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஆன்மிக, புராண சொற்பொழிவில் வாரியார் தீவிரத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவுப் பிரசாரத்திலும் சுயமரியாதைப் போராட்டங்களிலும் வீரியத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. புராண சொற்பொழிவுக் கூட்டங்களுக்குள் சுயமரியாதை இயக்கத்தினர் ஊடுருவி, கேள்விகள் எழுப்புவதும் சுயமரியாதைக் கூட்டங்களில் ஆன்மிகவாதிகள் சந்தேகம் எழுப்புவதும் வழக்கம். பல கூட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளன.

1944 ஆம் ஆண்டில் நடந்த புராண சொற்பொழிவுக் கூட்டம் ஒன்றில் வாரியார் பேசும்போது, தமிழ்நாட்டில் பெரியார் என்றொரு நச்சு ஆறு ஓடுகிறது என்று பேசிவிட்டார். அவ்வளவுதான். பெரியாரின் தொண்டர்கள் கொதித்து எழுந்துவிட்டனர். வாரியாருக்குக் கண்டனம் தெரிவித்தே தீரவேண்டும் என்று ஆவேசப்பட்டனர். பெரியாரின் தளபதி அண்ணாவுக்கும் தகவல் வந்தது. அரசியல் ஆசானை நச்சு ஆறு என்று விமரிசித்த கிருபானந்த வாரியாரைக் கண்டித்து கட்டுரை ஒன்றை எழுதினார்.

காட்டமான வார்த்தைகள் நிரம்பிய கட்டுரை. நச்சு ஆறாம், பெரியார்.. நாராசச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கும் புராண வாயார் கூறுகிறார் என்று தொடங்கிய அந்தக் கட்டுரை வாரியாரையும் அவருடைய போக்கையும் கடுமையாகச் சாடியது. காலட்சேபம் ஒன்றில் வாரியார் அப்படிப் பேசியிருந்ததால் தன்னுடைய கட்டுரைக்கு கீலட்சேபம் என்று எதிர்மறைத் தலைப்பை வைத்தார் அண்ணா. 2 ஜூலை 1944 அன்று திராவிட நாடு இதழில் கீலட்சேபம் கட்டுரை வெளியானது.

ஆறுதான் அய்யா! பெரிய ஆறுதான்! குப்பைக் கூளத்தையும் மேட்டையும் காட்டையும் அடித்துச் செல்லும் ஆறுதான். ஆரியத்தின் அடிவேருக்கு நச்சுநீர் பாய்ச்சும் ஆறு.. பெரியாரின் உழைப்பில் இருந்து உதித்து ஓடி வருகிறது. அதைக்கண்டு ஆரியம் ஓலமிடுகிறது. உம்முடைய ஓட்டைப் படகிலேறி, அந்த ஆற்றைக் கடக்க நினைக்காதீர்.. ஜாக்கிரதை.. ஆபத்தை அணைத்துக் கொள்ளாதீர் என்று வாரியாருக்குக் கூறுகிறேன்.. பின்னர் போச்சே பிழைப்பு என்று மனம் கரையாதீர். காலட்சேபக்காரர்களின் போக்கு இந்த என்னுடைய கீலட்சேபத்தின் பலனாக மாறக்கூடும்.. மாறாவிட்டால் அவர்களின் போக்கு நாறிப்போகும். நான் அதைத் தடுக்கமுடியாது. சுயமரியாதைச் சக்தியோடு மோதிக்கொள்ள வேண்டாம்!

அறிக்கை வெளிவந்து ஆயிற்று இருபத்தைந்து ஆண்டுகள். எச்சரிக்கைகள் நிரம்பிய அந்தக் கட்டுரைக்கான எதிர்வினையைத்தான் வாரியார் நெய்வேலியில் ஆற்றியிருக்கிறார் என்பது திராவிட இயக்கத்தினரின் குற்றச்சாட்டு. ஆனால் எம்.ஜி.ஆரோ வாரியாரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதைப் பற்றி ம.பொ.சி எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவுசெய்திருக்கும் தகவல் இங்கே:

எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு கூட்டத்தை நடத்தி, வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்து, பொன்மனச் செம்மல் என்னும் பட்டத்தைத் தனக்குத் தரச் செய்தார். எம்.ஜி.ஆரின் ஒரே எண்ணம் வாரியார் மீது பக்தி செலுத்தும் ஆத்திகர்களுக்கும் அறிஞர் அண்ணாவிடம் பக்தி செலுத்தும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட பகை தீரவேண்டும் என்பதுதான்.

0

ஆர். முத்துக்குமார்

வந்தது எமர்ஜென்ஸி!

க – 32

ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் தொடரவேண்டும்! அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தென்னகம் இதழில் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

இன்னொரு பக்கம் தமிழகத்துக்கு வரும் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதற்கு ஒத்தாசையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது.

முதல் விஷயம், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியம். இரண்டாவது விஷயம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை. இரண்டையும் சமாளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் கருணாநிதி. ஆம், தமிழகம் வரும் ஜெ.பிக்கு திமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு தரப்படும். அதேசமயம், நாடு தழுவிய அளவில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நடத்திவரும் ஜெ.பி. தமிழகத்தில் ஏதேனும் சுட்டிக்காட்டுவாரானால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தார்.

திட்டமிட்டபடி 5 மே 1975 அன்று ராஜாஜி நினைவாலயத் திறப்புவிழாவுக்கு வந்தார் ஜெ.பி. ஆனால், அன்றைய தினம் இந்திரா காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை மிஞ்சும் அளவுக்கு திமுக கொடிகளுடன் தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஜெ.பிக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டவந்த இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்தனர்.

விஷயம் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், ‘கருணாநிதி எங்கு சென்றாலும் அதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டத் தீர்மானித்துள்ளனர். அதற்கு நானும் அனுமதி கொடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் நானும் தோழமைக் கட்சியினரும் மற்றவர்களும் ஊர்வலமாகச் சென்று கோபாலபுரத்தில் நுழைய ஆரம்பித்தால் என்ன ஆகும்?’ என்று கேள்வி எழுப்பினார். அதன் எதிரொலி சில நாள்களுக்குப் பிறகு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் நடந்த மோதல்களில் கேட்டது.

அதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இப்போது ராஜாஜி நினைவாலயத்துக்கு வந்துவிடலாம். திமுகவின் கறுப்பு சிவப்பு கொடிகளுக்கும் இந்திரா காங்கிரஸாரின் கறுப்புக்கொடிகளுக்கும் மத்தியில் விழாவில் கலந்து கொண்டார் ஜெ.பி. அப்போது ராஜாஜியின் சிலையை மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன் திறந்துவைத்தார். நினைவாலயத்தை திறந்துவைத்துப் பேசினார் ஜெ.பி.

ஜெ.பி வருவதற்கு முன்புதான் மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தியிருந்தார் கருணாநிதி. குதிரைப் பந்தயத்தையும் ஒழித்திருந்தார். அவற்றுக்கு மேடையில் பாராட்டு தெரிவித்தார் ஜெ.பி. குஜராத் மாநிலத்தில் மது கிடையாது; குதிரைப்பந்தயம் கிடையாது; லாட்டரி சீட்டும் கிடையாது; அதைப்போலவே தமிழகத்திலும் லாட்டரி சீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அண்ணா ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டுத் திட்டம் என்ற பெயரில் லாட்டரி சீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஏழைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கக்கூடிய லாட்டரி சீட்டுத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்ற ஜெ.பியின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கருணாநிதி, செப்டெம்பர் 15 முதல் லாட்டரி சீட்டுத் திட்டம் தமிழகத்தில் இருக்காது என்று அறிவித்தார். நினைவாலயத்தைக் காட்டிலும் இந்த அறிவிப்புகள்தான் ராஜாஜிக்கு உண்மையான அஞ்சலி என்றார் ஜெ.பி. நடந்தது அரசு விழா என்பதாலோ என்னவோ, எம்.ஜி.ஆரின் கடிதம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் மறுநாள் நடந்த பொதுக்கூட்டத்தில் அதைப் பற்றிப் பேசினார். அதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர் பத்திரிகையில் எழுதிய பகிரங்க கடிதம் ஜெ.பியிடம் நேரடியாகவும் தரப்பட்டிருந்தது.

திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். எம்.ஜி. ராமச்சந்திரனின் கடிதத்தில் உள்ள வாசகங்கள் மிகவும் தரம் குறைந்த கசப்பான வசைமாரிகள். நடைபெறுகின்ற அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாலேயே இது ஊழல் உள்ள அரசு என்றாகிவிடாது. வேறு எந்த மாநில முதல்வரும் செய்ய முன்வராத சமயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிதான் தன்னுடைய அமைச்சரவை மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு களுக்கான பதில்களை அச்சடித்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி சரிவர நடத்தவில்லை என்றும் தவறுகளைச் செய்திருக்கிறது என்றும் குறை கூறுகிறார்கள். குற்றச்சாட்டுகளைக் கூறுவது சுலபம்; அவற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம். இதுதான் எம்.ஜி.ஆரின் கடிதத்துக்கு ஜெ.பி காட்டிய எதிர்வினை.

இந்திரா காந்திக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜெயப்ரகாஷ் நாராயணனை தமிழகத்துக்கு அழைத்து விழா நடத்துவதும் அவரைப் புகழ்ந்து பேசுவதும் இந்திரா காங்கிரஸ் தலைவர்களைக் கலவரமடையச் செய்தன. அதேசமயம் அவர்களுடைய கவனத்தைக் கலைக்கும் வகையில் இன்னொரு பிரச்னை உருவானது. அது இந்திரா காந்தியின் பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்னை.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியிருந்த இந்திரா காந்தியின் மீது வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷலிஸ்ட் வேட்பாளர் ராஜ் நாராயணன். அரசு ஊழியரைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தியது, அரசுக்குச் சொந்தமான இடங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் அவர்மீது கூறப்பட்டிருந்தன. மொத்தத்தில், தேர்தல் வெற்றிக்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியிருக்கிறார் என்பதுதான் அடிப்படையான விஷயம்.

மக்களவைக்குத் தேர்வாகி ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைக் கொடுத்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123, விதி ஏழின் படி இந்திரா காந்தி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இருந்து அவர் மக்களவைக்குத் தேர்வானது செல்லாது. தவிரவும், அவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தார் நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா.

தீர்ப்பு வெளியான நொடியில் இருந்தே தேசிய அரசியலில் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. அலகாபாத் தீர்ப்புக்குத் தலைவணங்கும் வகையில் பிரதமர் இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தத் தொடங்கின. ஆனால் பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினர் இந்திரா காங்கிரஸ் தலைவர்கள். தங்கள் கட்சித் தலைவியின்மீது முழு நம்பிக்கை இருப்பதாக அவர்கள் அழுத்தந்திருத்தமாகக் கூறினர். உச்சபட்சமாக, இந்தியா என்றால் இந்திரா; இந்திரா என்றால் இந்தியா என்றார் இந்திரா காங்கிரஸ் தலைவராக இருந்த தேவ காந்த் பரூவா.

இந்திரா காங்கிரஸ் கட்சியினர் காட்டிய பிடிவாதம் எதிர்க்கட்சிகளை ஆத்திரப்படுத்தியது. பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தியை உடனடியாக நீக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் ஃபக்ருதீன் அலி அகமதுவிடம் மனு கொடுத்தனர். இன்னொரு பக்கம் அலகாபாத் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஆளும் காங்கிரஸ் இந்தியாவில் மிகப்பெரிய கட்சி. இந்தியா, உலகத்தில் மதிக்கத்தக்க மிகப்பெரிய ஜனநாயக நாடு. இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்து இப்போது மத்திய அரசில் இருப்பவர்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அந்த முடிவுதான் இந்தியாவின் எதிர்கால அரசியல் முன்மாதிரியாகத் திகழும். அவர்களாகவே ராஜினாமா செய்திருந்தால் நாங்கள் பாராட்டியிருப்போம் என்றார் கருணாநிதி. ஏன் இன்னமும் ராஜினாமா செய்யாமல்
இந்திரா காந்தி பதவியில் நீடிக்கிறார் என்பதுதான் கருணாநிதி சொன்ன கருத்தின் அர்த்தம். கவனமாகக் குறித்து வைத்துக்கொண்டனர் இந்திரா காங்கிரஸ் தலைவர்கள்.

அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா காந்தி. அந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். அவர் கொடுத்த இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் நாடாளுமன்றத்தில் ஏதேனும் வாக்கெடுப்பு நடந்தால் அதில் கலந்துகொள்ள அவருக்கு உரிமை இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

சட்ட ரீதியான சிக்கல்கள் இந்திரா காந்தியின் கழுத்தை நெரிக்கத் தொடங்கின. போதாக்குறைக்கு, எதிர்க்கட்சிகள் வேறு ஓரணியில் திரண்டு இந்திராவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. நாட்டில் நிலவிக் கொண்டிருப்பது அசாதாரணமாக சூழ்நிலை. அதைச் சமாளிக்க வேண்டும் என்றால் சட்டரீதியான, வலுவான
புதிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் பிரதமர் இந்திரா காந்தி. அதன் பெயர், எமர்ஜென்ஸி. ஆம். இந்திராவுக்கு உருவான நெருக்கடி, இந்தியாவுக்கான நெருக்கடியாக மாறிப்போனது!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

எம்.ஜி.ஆர் : ஆயிரத்தில் ஒருவர்

‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.

என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?

சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.

‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’

ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’

விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.

வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.

காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.

‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’

எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.

‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.

எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.

கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.

திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.

‘படம் நிறுத்தப்படுகிறது.’

வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.

முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.

எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.

0

ஆர். முத்துக்குமார்

(எம்ஜிஆரின் அரசியல் வாழ்வைப் பதிவு செய்யும் ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்)

எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு

1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர். ராதாவும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நெற்றிப்பொட்டிலும், கழுத்திலும் குண்டடிப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். இருவருடைய ஸ்ட்ரெச்சர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி தான். குண்டடிப்பட்ட இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.

இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரிடம் விசாரித்ததில், திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதா தன்னை காதருகே சுட்டதாகத் தெரிவித்தார். குண்டு எம்.ஜி.ஆரின் காதை உரசிக்கொண்டு அவரது தொண்டையில் போய் பாய்ந்தது. எம்.ஆர். ராதா அங்கு தனக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்களிடம், “நான்தான் எம்.ஜி.ஆரை சுட்டேன்” என்று தெரிவித்தார். காவல்துறைக்கு தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டேன் என்றார்.
செய்தி கேட்டு, எம்.ஜி.ஆரைக் காண மருத்துமனையில் கூட்டம் திரண்டது. சுமார் 50,000 பேர் மருத்துவமனையில் கூடிவிட்டதாக ஒரு செய்தி உண்டு. எம்.ஆர்.ராதா ஆதரவாளர்களும், அவருடைய நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தனர். சினிமாக்காரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் குழுமினர். திமுகவின் அண்ணாதுரை, கருணாநிதி, நடிகர் அசோகன் என்று அனைவரும் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை நடந்த ஆபரேஷன் தியேட்டரின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, ஏதோ சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் நடந்தது ஒரு விபத்தல்ல. பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர், தி.மு.கவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரும் சட்டமன்றத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவரது ராமாபுரம் இல்லத்துக்கு எம்.ஆர். ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.கே.என்.வாசுவும் சென்றிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன என்பதை ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்தன. ‘பெற்றால்தான் பிள்ளையா படத்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா, வாசுவுக்கு கொடுத்து உதவினார். பின்னர் தனக்கு அந்தப் பணம் வேண்டுமென்று ராதா வாசுவிடம் கேட்டார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.’

ஆனால் பெற்றத்தால்தான் பிள்ளையா என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு காவல்துறையினரிடம் தான் கொடுத்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்தார்.
‘எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்ட்டி விருப்பம் தெரிவித்தது. அந்த பார்ட்டி சென்னையில் உள்ள அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தது. அந்த பார்ட்டிக்காகத்தான் நானும் எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.’ (இந்தத் தகவல் பொய் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. காரணம் காவல்துறையினர் அசோகா ஹோட்டலுக்கு சென்று விசாரித்ததில் கோயம்புத்தூரைச் சேர்ந்த எந்த சினிமாக்காரரும், வாசு குறிப்பிட்ட சமயத்தில் ஹோட்டலில் தங்கவில்லை என்று தெரியவந்தது).

மேலும், வாசு தன்னுடைய வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை மேற்சொன்ன காரணத்துக்காக அவரைச் சந்திக்கவேண்டுமென்று பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று காலம் தாழ்த்தி திரும்பியதால், ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலை கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் வாசு தெரிவித்ததாவது, ‘எம்.ஜி.ஆர் எங்கள் இருவரையும் வரவேற்றார். பின்னர் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடைய தொழிலை எம்.ஜி.ஆர் நாசம் செய்துவிட்டார் என்று கூறியபடியே கோபத்துடன் எழுந்து எம்.ஆர்.ராதா வெளியே செல்ல முற்பட்டார். பின்னர் எம்.ஆர்.ராதா தன்னுடைய வேட்டியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அருகில் இருந்த எம்.ஜி.ஆரைச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எம்.ஜி.ஆரின் இடது காதை உரசிக்கொண்டு போய் அவருடைய தொண்டையில் பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் எம்.ஆர்.ராதாவின் மீது பாய்ந்து, எம்.ஆர்.ராதா மேலும் துப்பாக்கியால் சுடாமல் தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள்ளாக எம்.ஆர்.ராதா தன்னைத் தானே கழுத்திலும், நெற்றிப்பொட்டிலும் சுட்டுக்கொண்டார்.’

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நிகழ்ந்த தொழில்முறை போட்டி. எம்.ஆர்.ராதாவுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போயின. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று ராதா நினைத்தது.

2. பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன்னுடன் பல மடங்கு வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க போட்டியிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேர்தலை சந்தித்தபோதும் திமுகவால் தமிழ்நாட்டில் காங்கிரசை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.

1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. எம்.ஆர்.ராதாவும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். தி.மு.க சார்பாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தார். அரசியலில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே காழ்ப்புணர்ச்சி இருந்ததன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார் என்ற கருத்தும் சொல்லப்பட்டது.

எது எப்படியோ, எம்.ஜிஆரை அவருடைய இல்லத்தில் வைத்தே கைத்துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர். ராதா. பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பிரபலமான வசனத்தையும் பேசியிருக்கிறார். குண்டு காயங்களுடன் இருந்த இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் உதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததை அறிந்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.கவினருக்கும், எம்.ஆர்.ராதா ஆதரவு திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று அறிந்த அரசு, சென்னையில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்படியிருந்தும் காவல் நிலையங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பரங்கிமலையில் இருந்த எம்.ஆர்.ராதாவின் தோட்டம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, காவல்துறை கண்ணீர் புகை வீசியும் லத்தித் தாக்குதல் நடத்தியும் கலைத்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எம்.ஆர்.ராதாவைக் கைது செய்து விசாரணை நடத்தியது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றதாகவும், பின்னர் எம்.ஆர்.ராதா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் காவல்துறை எம்.ஆர்.ராதா மீது சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பெரிய வழக்குகளை விசாரிக்க மாஜிஸ்டிரேட்டுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால், அவர் வழக்கை செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் தி.மு.கவே கூட எதிர்பார்க்கவில்லை. அண்ணாதுரை கூட நடந்து முடிந்த தேர்தல்களில் சட்டசபைக்காகப் போட்டியிடவில்லை, நாடாளுமன்றத்துக்குத்தான் போட்டியிட்டார். தமிழகத்தில் மூன்று முறை (சுமார் 10 ஆண்டுகள்) முதலமைச்சராக இருந்த காமராஜர், 1967ம் ஆண்டு நடக்கவிருந்த தேர்தல் சமயத்தில், ஒரு கார் விபத்தில் காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.

அங்கு பத்திரிக்கையாளர்கள் அவரைப் பேட்டி எடுத்தபோது, தான் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று பேட்டி கொடுத்தார். ஆனால் நடந்தது வேறு. காமராஜர், தான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த பி.சீனிவாசன் என்ற இளைஞரிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் கூட தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரசின் ஆட்சி, ஒரளவுக்கு ஊழல் இல்லாமல் நல்ல முறையில்தான் நடந்தது. இருப்பினும் 1967 தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம், ஆட்சி செய்தவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளிதான்.

புதிய ஆட்சி அமையவிருந்த தருணத்திலேயே, மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான இடைவெளி குறையத் தொடங்கியது. 1967 தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.கவினர் பதிவியேற்கும் தருவாயில், சென்னையில் கோட்டையில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டனர். அண்ணாதுரை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரும், தான் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுடுவதற்கு முன்னர், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மக்களிடையே சரிந்திருந்தது என்றும், துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு அவருக்கு மக்களிடையே பெரிய அனுதாபமும், ஆதரவும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது).

தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றாலும், அண்ணாதுரையின் ஆட்சியில் எம்.ஜி.ஆர் எந்தவித மந்திரிப் பதவியையும் வகிக்கவில்லை.இந்திய சுந்தரத்துக்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத புதிய கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. அவ்வழக்கை விசாரித்தவர் நீதிபதி திரு. லட்சுமணன். அரசுத் தரப்பில் ஆஜரானவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், பி.ஆர். கோகுலகிருஷ்ணன் (இவர் பின்னாளில் குஜராத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்) மற்றும் பி.இராஜமாணிக்கம். எம்.ஆர்.ராதா தரப்பில் ஆஜரானவர்கள் பிரபல வழக்கறிஞர் மோகன் குமாரமங்களம். (இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்திருந்தார்), மூத்த வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை மற்றும் என்.நடராஜன்.

எம்.ஆர்.ராதாவின் மீது அரசு தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை. 1) எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றது (இ.பி.கோ – பிரிவு 307); 2) தற்கொலை முயற்சி (இ.பி.கோ – பிரிவு 309); 3) உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது (ஆயுதச் சட்டம் – பிரிவு 25) மற்றும் ; 4) உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டது (ஆயுதச் சட்டம் – பிரிவு 27).

96 நாள்கள் விசாரணை நடைபெற்றது. 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் வெப்லி ஸ்காட் .420 காலிபர் (ஒரு குழல் துப்பாக்கியின் உட்புற குறுக்களவு விட்டம்) வைத்திருந்தனர். இருவரும் தத்தம் துப்பாக்கிகளை பி.ஆர் அண்டு சன்ஸ் (P.ORR & Sons) நிறுவனத்திலிருந்து, 1950 ஆம் ஆண்டு வாங்கியிருக்கின்றனர். அதுவும் ஒரே நாளில்.  இருவரின் துப்பாக்கி உருளைகளும் (Cylinders) ஒரே மாதிரியானவை. எம்.ஜி.ஆர் தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்த தேவையான உரிமத்தை, அரசிடம் பெற்று புதுப்பித்து வந்திருக்கிறார். ஆனால் ராதா தன் துப்பாக்கியை பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கவில்லை.

துப்பாக்கியை பயன்படுத்தும் உரிமைக்காலம் முடிந்தபிறகு துப்பாக்கியை வைத்திருக்கக்கூடாது, அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் எம்.ஆர்.ராதா அதைச் செய்யவில்லை. மேலும் உரிமம் இல்லாத துப்பாக்கியை குற்றத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். தன்னுடைய துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். பின்னர் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயற்சி செய்ததற்குத் தூண்டுதலாக (Motive) இருந்தது, எம்.ஜி.ஆர் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி. மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு நிறைய பணமுடை இருந்தது (சுமார் 7 லட்சம் ருபாய் வரை கடன் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன).அதே சமயத்தில், எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தார். எம்.அர்.ராதாவுக்கு, எம்.ஜி.ஆரின் மீது தொழில்முறைப் போட்டி, பொறாமை இருந்தது. மேலும் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் தியாகி பட்டம்தான் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

எம்.ஆர்.ராதா தரப்பில் கீழ்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

1. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.க-வில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை.

2. எம்.ஜி.ஆர் தான் எம்.ஆர்.ராதாவை சுட்டார் . சம்பவ இடத்துக்கு எம்.ஆர்.ராதா கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் எம்.ஜி.ஆரின் ஆள்கள் தான் வெடிக்காத இரண்டு தோட்டாக்களைப் போட்டிருக்கவேண்டும்.

3. எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் ஒருவரிடமிருந்து ஒருவர் துப்பாக்கியை பிடுங்குவதற்காக சண்டையிட்டனர். அந்த சண்டையில்தான் எம்.ஜி.ஆருக்கு குண்டடிப்பட்டது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை வேண்டுமென்றே சுடவில்லை.

4. சம்பவத்தின் போது எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நடந்த மோதலில் எம்.ஆர்.ராதாவுக்குக் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தின் காரணமாக எம்.ஆர்.ராதாவின் ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆரின் சட்டை துவைக்கப்பட்டு, அதிலிருந்த ரத்தக்கறை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு ரத்த வகைகளைப் பற்றித் தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு எம்.ஜி.ஆர் தெரியாது என்று பதிலளித்தார். உடனே வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்திருந்த நாடோடி திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரத்த வகைகளைக் கொண்டு திரைக்கதையில் திருப்பம் கொண்டுவந்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

5. சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வாசுவிடம் இருந்தது. அதை அவர் வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டுவிட்டுதான் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது.

6. எம்.ஆர்.ராதா பிரபல நாடக நடிகர். அவர் நாடகங்களில் நடிப்பதால் மாதந்தோறும் அவருக்கு 50,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர் கடன்பட்டார் என்று அரசு தரப்பில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

7. எம்.ஆர்.ராதா சம்பவத்துக்குப் பிறகு காவல்துறைக்கு தான் கைப்பட எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ‘எனது முடிவு’ என்ற தலைப்பு கொண்ட அறிக்கை உண்மையாக எம்.ஆர்.ராதாவால் எழுதப்படவில்லை. (எம்.ஆர்.ராதா அந்த அறிக்கையில், கொள்கைக்காகவும் கட்சி நலனுக்காகவும் தற்கொலை தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது). எம்.ஆர்.ராதா கையெழுத்து அடங்கிய வெற்று காகிதத்தில், காவல்துறை தங்களுக்குத் தேவையான விவரங்களை பதிவு செய்து அதை எம்.ஆர்.ராதா கொடுத்த வாக்குமூலமாக ஜோடித்திருக்கிறார்கள்.

எம்.ஆர்.ராதா வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்துக்கு அரசு தரப்பில் மறுவாதம் வைக்கப்பட்டது.

1. ஒரு குற்றம் நடைபெறும்போது, அதைப் பார்த்த நேரடி சாட்சிகள் இல்லாத சமயத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை வைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான், குற்றமிழைத்தவருக்கு குற்றம்புரிவதற்கு தூண்டுதல்கள்/காரணங்கள் என்ன என்பதைப்பற்றி அலசிஆராயவேண்டும். எம்.ஆர்.ராதாதான் எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டதால், எம்.ஆர்.ராதா என்ன காரணத்திற்காக எம்.ஜி.ஆரை சுட்டார் என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.

2. துப்பாக்கி மற்றும் வெடிக்கும் போர்க்கருவிகளில் நிபுணர் (Fire-arms expert), தன்னுடைய சாட்சியத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டு எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மாநிலத் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குனர் தன்னுடைய ஆய்வறிக்கையில், எம்.ஆர்.ராதாவின் தலையிலிருந்தும் கழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாட்சி கூறிய மேற்படி நிபுணர், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வேட்டி கட்டிக்கொண்டு வரும் ஒருவரால் தன்னுடைய இடுப்பில் வைத்து மறைத்து எடுத்து வர முடியும் என்று தெரிவித்தார்.

3. குற்றம் விளைந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் துப்பாக்கியை பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அந்த துப்பாக்கியை எம்.ஆர்.ராதா பிடுங்கியவுடன் எம்.ஜி.ஆர் குனிந்திருப்பார்.  தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்திருப்பார். இது நடக்கவில்லை. மாறாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட காயத்தை வைத்து பார்க்கும் பொழுது, துப்பாக்கி மிக அருகாமையிலிருந்து எந்த போராட்டமும் நடைபெறாத சமயத்தில் வெடித்திருப்பது தெரிகிறது.

4. எம்.ஆர்.ராதாவையும் வாசுவையும், எம்.ஜி.ஆர் தன் வீட்டுக்கு வந்த போது இரு கைகளையும் கூப்பி வரவேற்றிருக்கிறார். அவர் பாலியஸ்டரால் ஆன உடையை உடுத்தியிருந்தார். எம்.ஆர்.ராதாவைப்போல் ஷால் எதுவும் அணியவில்லை. உடம்பில் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்தால், பாலியஸ்டர் துணி மெலிதாக இருப்பதால் அதன் வழியாகத் தெரிந்துவிடும்.

5. தான் எந்த துப்பாக்கியால் சுடப்பட்டோம் என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை. அதாவது எம்.ஜி.ஆர் தன்னை முதலில் சுட்டார் என்று எம்.ஆர்.ராதா சொல்லியிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் துப்பாக்கியால் தன்னை சுட்டாரா அல்லது தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டாரா என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை.

6. எம்.ஜி.ஆரும் வாசுவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் எம்.ஆர்.ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார்.

7. எம்.ஆர்.ராதாவுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்க்கும்போது, அவர் தனக்குத்தானே அதை ஏற்படுத்திக்கொண்டார் என்பது தெரிகிறது.

8. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் சண்டை நடந்தது என்று நிரூபிக்கப்படாததால், எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது என்று சொல்வதும், மேலும் அந்த காயத்தினால் ஏற்பட்ட ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. சட்டை துவைக்கப்பட்டது, அதனால் முக்கிய ஆதாரம் அழிந்துவிட்டது என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.

9. வாசு முக்கிய சாட்சி. ஒரே சாட்சி. அவர்தான் குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்கிறார். குற்றத்தைப் பார்த்திருக்கிறார். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவர் கைக்கு கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா இரண்டு பேரும் குண்டடிப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்னவாகும் என்று யாரும் சொல்ல முடியாத நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில், எங்கே போலீஸ் தன்னை குற்றவாளியாக கருதிவிடுமோ என்ற எண்ணம், எந்த சராசரி மனிதனுக்கும் ஏற்படுவது சகஜம்தான். தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான், வாசு துப்பாக்கியை காவல் துறையினருக்கு ஒப்படைக்காமல், வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டு நடக்க முடிவெடுத்திருக்கிறார். இதில் ஏதும் தவறில்லை.

10. எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடித்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்திருந்தால், அவருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய்க்கு கடன் எப்படி ஏற்பட்டிருக்கமுடியும்? கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எம்.ஆர்.ராதாவுக்கு பணத்தட்டுப்பாடு இருந்தது உறுதியாகிறது.

11. எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆரின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, அதனால் எம்.ஜி.ஆரைப் பற்றி நாத்திகம் என்ற பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, குண்டர்களை வைத்து காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.ஆர்.ராதா தவறாக நினைத்திருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், காமராஜரைப் பாராட்டியிருக்கிறார். அதையறிந்த எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள், எதிர் கட்சி பிரமுகரை எம்.ஜி.ஆர் பாராட்டியது தவறு என்றும் கூறியிருக்கிறார்கள்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்.ஆர்.ராதா தான் குற்றவாளி என்று முடிவு செய்து அவருக்குத் தண்டனை வழங்கினார். 262 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவுக்கு பின்வருமாறு தண்டனைகளை வழங்கினார்.

1. எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

2. தற்கொலை முயற்சி செய்ததற்காக 6 மாத சிறை தண்டனை;

3. உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

4. துப்பாக்கியை வைத்து சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.

அனைத்து தண்டனைகளையும் எம்.ஆர்.ராதா ஒரே சமயத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவின் வயதை கருத்தில் கொண்டுதான் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு அப்போது வயது 56.

தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு எம்.ஆர்.ராதாவைக் காவல் துறையினர் கைது செய்து கூட்டிச்சென்றனர். குற்றம் நடந்த தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரை எம்.ஆர்.ராதா ஜாமீனில் வெளிவரவில்லை.
செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, எம்.ஆர்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறாக, முன் அறிவிப்பின்றி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை, 7 ஆண்டுகளிலிருந்து 3 1/2 ஆண்டுகளாக குறைத்தது.

இந்த வழக்கில் அனைவரும் வியந்த விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார், பின்னர் தன்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆச்சர்யம்! இருவர் உயிருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இது எப்படி என்று எம்.ஜி.ஆர் உள்பட அனைவரும் வியந்தனர்.

காரணம் இதுதான். எம்.ஆர்.ராதாதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் தன்னுடைய வீரியத்தை (Muscle Velocity) இழந்திருந்தன.  குறிப்பிட்ட இலக்கை வேகமாகச் சென்று தாக்கும் திறனை குண்டுகள் இழந்திருந்தன. அதனாலதான் உயிர் போகும் அளவுக்கு பெருத்த சேதம் எதையும் ஏற்படுத்தமுடியவில்லை. எம்.ஆர்.ராதா குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் 1950ம் ஆண்டு வாங்கியிருக்கிறார். குற்றம் நடந்த ஆண்டு 1967ல். இந்த இடைப்பட்ட 17 ஆண்டுகளில் எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தன்னுடைய மேஜையின் டிராவில் வைத்திருந்தார். எம்.ஆர்.ராதாவின் டிரா ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும், தோட்டாக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவேதான் தோட்டாக்கள் தன்னுடைய வீரியத் தன்மையை இழந்துவிட்டன.  தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் இவ்வாறு ஒரு புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.

தண்டனைக் காலம் முடிந்த பிறகு, எம்.ஆர்.ராதா நிறைய நாடகங்களில் நடித்தார், சில திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் அகற்ற விரும்பவில்லை. குண்டை தொண்டையிலிருந்து அகற்றுவதை விட, அகற்றாமல் விட்டு விடுவதே உசித்தம் என்று மருத்துவர்கள் எண்ணினார்கள். (மாவீரன் நெப்போலியனுக்கு போர்க்களத்தில் சண்டை இடும்போது குண்டடிபட்டு உடலில் குண்டு தைத்தது. அதை அவருடைய மருத்துவர்கள் அகற்றவில்லை. நாளடைவில் அந்தக் குண்டு நெப்போலியனின் உடலில் கரைந்து விட்டது).

எம்.ஜி.ஆர் ஒருமுறை தும்மியபோது, கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு நகர்ந்து தொண்டைக்கு வந்துவிட்டது. பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சையால் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது.

1973 ஆம் ஆண்டு பெரியார் மறைந்த இறுதிச் சடங்கில் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேசினர். நட்பு பாராட்டினர். எம்.ஆர்.ராதா தான் செய்த குற்றத்திற்காக, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தியும் உண்டு.
1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 72 வது வயதில் மரணமடைந்தார்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல்வரானார். அவர் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.

0

S.P. சொக்கலிங்கம்

வேண்டும் மாநில சுயாட்சி!

க – 31

மாநில சுயாட்சி. தங்களுடைய உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையை ஒத்திவைத்ததற்குப் பிறகு திமுக முன்வைத்த கோரிக்கை. மாநிங்களுக்குப் போதுமான அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும் என்பதுதான் அண்ணா சொன்ன கருத்து. அதை அடிப்படையாக வைத்து மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தத் தொடங்கினார் கருணாநிதி.

1972 ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் திமுக மாநாடு ஒன்றை நடத்தினார் கருணாநிதி. மாநில சுயாட்சி மாநாடாக அடையாளப்படுத்தப்பட்ட அந்த மாநாட்டில் மாநில சுயாட்சிக் கோரிக்கை அழுத்தம்திருத்தமாக வலியுறுத்தப்பட்டது. தற்போது அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றும் முடிவுக்கு வந்திருந்தார் கருணாநிதி. திமுக இன்னமும் பிரிவினை எண்ணங்களில் இருந்து விடுபடவில்லை; மாநில சுயாட்சி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பிரிவினைக் கருத்துகளைத்தான் பரப்பிவருகிறது என்பது இந்திரா காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு.

16 ஏப்ரல் 1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதி முன்மொழிந்தார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்படவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் சுருக்கம்.

மாநில சுயாட்சி என்பது திமுகவினரின் சிந்தனையில் உருவான கோட்பாடு அல்ல; மாறாக, இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் வலியுறுத்திய கோரிக்கைதான்; ஆனால் அது நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் அதைப்பற்றிப் பேசுவதை காங்கிரஸ் தவிர்த்துவிட்டது என்று ஒரு சாரார் கூறினர். தமிழரசுக் கழகத்தின் தலைவரான ம. பொ. சிவஞானம் பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் கொள்கைதான் மாநில சுயாட்சி. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் அவர். அவருடைய கோஷத்தைத்தான் திமுகவும் கருணாநிதியும் கைப்பற்றிக் கொண்டனர் என்ற கருத்தும் இருந்தது. அந்த விமரிசனங்களுக்கு சட்டமன்ற மேலவையில் விளக்கம் கொடுத்தார் ம. பொ. சிவஞானம்.

‘யாரோ சொன்னார்களாம், ‘ம. பொ. சியின் கொள்கையைக் கருணாநிதி எடுத்துக்கொண்டார் என்று!’ ஆணவம் இல்லாமல் மட்டுமல்ல; அடக்கத்தால் மட்டுமல்ல, சத்தியமாகவும் சொல்கிறேன். இந்தத் தத்துவம் எனக்குச் சொந்தமல்ல. இது, அகில உலகின் அரசியல் சாத்திரம் – சரித்திரம். அதற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கியவன் என்ற சிறப்பு எனக்கு இருக்கலாமே ஒழிய, சுயாட்சித் தத்துவமே எனக்கு ஏகபோகமல்ல. ’

கருணாநிதி கொண்டுவந்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது. இத்தனைக்கும் அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர், திமுகவின் பொருளாராக இருந்தபோது நடந்த மதுரை மாவட்ட திமுக மாநாட்டில் மாநில சுயாட்சி பற்றி மேடையில் ஆவேசமாகப் பேசியிருந்தார். மாநாட்டுக்கு வந்திருந்தவர்களை நோக்கி “மாநில சுயாட்சியை’ என்று உரத்த குரலில் கூறினார் எம்.ஜி.ஆர். அதற்கு பொதுமக்கள், “அடைந்தே தீருவோம்’ என்று பதில் குரல் எழுப்பினர். ஆனால் தற்போது கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் முகாமுக்கு வந்திருந்தனர். ஆகவே, மாநில சுயாட்சிக்குத் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது அதிமுக.

‘நீங்கள் மாநில சுயாட்சி கேட்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள். உங்களுக்கு அந்தச் சாவியைக் கொடுத்தால் தீமைகள் இன்னும் அதிகமாக வரும்’ என்றார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஹெச். வி. ஹண்டே.

எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து மாநில சுயாட்சி கேட்கலாமா? அப்போது கொடுக்கவேண்டும் என்று கேட்பீர்களா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் கருணாநிதி.

‘நல்ல ஆட்சியாக இருந்தால் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. நாங்கள் வந்தால் நிச்சயமாகக் கேட்போம். அப்போது கொடுக்கவேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ’- இது ஹண்டே கொடுத்த பதில்.

‘அப்படி நீங்கள் கேட்கும்பட்சத்தில் ஒருவேளை நாங்கள் எதிர்க்கட்சியிலே இருந்தால் நிச்சயமாக ஆதரிப்போம், பரந்த மனப்பான்மையோடு’ என்றார் கருணாநிதி.

மாநில சுயாட்சித் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் பேசினர். பிறகு முதலமைச்சர் கருணாநிதி விவாதங்களுக்குப் பதிலளிக்கும்போது மாநில சுயாட்சியின் அவசியம் பற்றிப் பேசினார்.

‘1973 – 74 நிதி நிலை அறிக்கையில் மால்கோ தேசிய மயமாக்கப்படவேண்டும் என்று அறிவித்தோம். அதற்கான சட்ட நகலை மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், இதுவரையில் அந்தப் பிரச்னை என்னவாயிற்று? முடியுமா? முடியாதா? என்கின்ற எந்தத் திட்டவட்டமான பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

‘தொழிலாளிகளுக்கு நிர்வாகத்திலே பொறுப்பு – முதலீட்டில் பங்கு’ என்ற திட்டத்தை அறிவித்து, விதிமுறைகள் வகுத்து, மசோதா கொண்டுவந்து – இன்றைக்கு அந்தச் சட்டம் மத்திய சர்க்காருடைய தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்லக் கூடாது என்று தடை இருந்தது. அந்தத் தடையை மத்திய சர்க்கார் நீக்கிவிட்டார்கள். யாரைக் கேட்டுக் கொண்டு நீக்கினார்கள்? நம் மாநிலத்தைக் கலந்துகொண்டு செய்யப்பட்டதா? இல்லை.

எண்ணெய் விலையை ஒரளவுக்காவது கட்டுப்படுத்தலாம் என்றுதான் வேர்க்கடலைக்கு லெவி வேண்டும் என்றும் வியாபாரத்துக்கு லைசென்ஸ் தரப்படவேண்டும் என்றும் அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்றும் அனுமதி கேட்டோம். இதுவரை அந்த அனுமதி தரப்படவில்லை.

மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே இதுவரை எண்ணெய் டிப்போக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய உத்தரவிடுகிற அதிகாரம் இதுவரை மாநிலத்துக்கு இருந்தது. ஆனால் திடீரென்று 1972ல் இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டது.

எனவே, அதிகாரம் கேட்பது இங்கே அமர்ந்திருக்கிற அமைச்சர் பெருமக்கள் அந்த அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா? அதிகாரம் எங்களுக்காக அல்ல; மாநிலத்துக்காகக் கேட்கிறோம். அது புரிய வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி என்று சொல்கிறோம். மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தின் சுயாட்சி என்று கூறுகிற நேரத்திலேயே அங்கு பிரிவினைக்கு எள்ளளவும் இடமில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.. மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல என்று 21 ஜூலை 1968ல் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா பேசினார்’

மொத்தம் ஐந்து நாள்களுக்கு விவாதம் நடந்தது. வாக்கெடுப்பு நடத்தவேண்டியதுதான் பாக்கி. தீர்மானத்துக்கு ஆதரவாக திமுக தவிர முஸ்லிம் லீக், ஃபார்வர்ட் ப்ளாக், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மணலி கந்தசாமி), தமிழரசு கழகம் (ம. பொ. சி) உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்தன. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்தன.

வாக்கெடுப்பு முடிந்தபோது 161 பேரும் எதிராக 23 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அவையில் இருந்து வெளியேறியது அதிமுக. அதற்காக அதிமுக தரப்பில் சொல்லப்பட்ட காரணம், தீர்மானம் பற்றி, விவாதித்து, முடிவெடுக்க கால அவகாசம் போதவில்லை என்பதுதான். கருணாநிதியின் கனவுத் தீர்மானங்களுள் ஒன்றான மாநில சுயாட்சித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. அதில் கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சி.

மாநில சுயாட்சி என்ற பதத்தை வைத்துக்கொண்டு இயங்கிய கருணாநிதிக்கும் திமுகவுக்கும் பின்னாளில் மிகப்பெரிய நெருக்கடிகள் அந்த பதத்தை வைத்தே உருவாக்கப்பட்டன. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன; ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகக் குறிப்பெடுக்கப்பட்டன. உபயம்: மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள். நிற்க.

சுதந்தரா கட்சித் தலைவர் ராஜாஜிக்கு நினைவாலயம் ஒன்றை எழுப்பியிருந்தது தமிழக அரசு. அதை யாரைக் கொண்டு திறந்துவைப்பது என்ற கேள்வி எழுந்தபோது கருணாநிதியின் நினைவுக்கு வந்த பெயர், ஜெயப்ரகாஷ் நாராயணன். அழைப்பு ஏற்றுக்கொண்டார் ஜெ. பி. ஆனால் அவர் வருவதில் இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை.

காரணம், பீகாரில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியிருந்தார் ஜெ. பி. உண்மையில் அவர் இந்திரா காந்திக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அணி திரட்டுவதாகவே இந்திரா காங்கிரஸார் சந்தேகப்பட்டனர். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் தமிழகம் வரும்போது அவரை எதிர்த்துக் கறுப்புக்கொடி காட்டுவது என்று இந்திரா காங்கிரஸார் முடிவுசெய்தனர். போதாக்குறைக்கு, தமிழகத்துக்கு வந்து ஊழலை ஒழிக்கப் போராடவேண்டும் என்று ஜெ. பிக்குக் கடிதம்

ஒன்றை எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

புதிய நெருக்கடி உருவாகியிருந்தது கருணாநிதிக்கு!

-ஆர். முத்துக்குமார்

(களம் வளரும்)

முந்தைய பாகங்களைப் படிக்க…

ராமராஜன் : ‘ எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!’

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராமராஜன் இடம்பெறுகிறார். திங்கள் முலம் வெள்ளிவரை இரவு பத்து மணிக்கு. முதல் நாள் நிகழ்ச்சி பார்த்தேன். கல்கி பத்திரிகையில் இருந்தபோது
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ராமராஜனைச் சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது.
கிராமிய சிறப்பிதழ் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டோம். யார்,யாரையெல்லாம் பேட்டி எடுக்கலாம், எதைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதலாம் என்று பட்டியல் போட்டபோது ராமராஜனின் பேட்டி அவசியம் இடம்பெறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரை எப்படிப் பிடிப்பது? எங்கே தேடுவது? யாரைக் கேட்டால் விவரம் தெரியும்? படங்கள் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.. செல் வைத்திருப்பார். ஆனால் யாரிடம் கிடைக்கும்?சில நாள்கள் கழித்து தினந்தந்தி படித்துக்கொண்டிருந்தேன். ஏதோவொரு கோவில் திருவிழாவில் நடக்க உள்ள கலைநிகழ்ச்சியில் ராமராஜன் கலந்து கொள்வதாக விளம்பரம் வந்திருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்று கடையம் ராஜுவின் பெயர். பக்கத்தில் அவருடைய மொபைல் எண். சட்டென்று அந்த எண்ணைத் தொடர்புகொண்டேன். என்னிடம் நம்பர் இல்ல.. விஜயமுரளி நம்பர் தரேன்.. அவர்கிட்ட இருக்கும்.. என்றார்.ராமராஜனின் பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜயமுரளி. அவர் மூலம் ராமராஜனின் எண் கிடைத்தது. பேசினேன். டெல்லியில் இருப்பதாகச் சொன்னார். அவர் அப்போது எம்.பியாகவும் இல்லை. ஆனாலும் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார். நம்பித்தானே ஆகவேண்டும். சென்னை வந்ததும் பேசுவதாகச் சொன்னார். சொன்னபடியே பேசினார்.

பேட்டி வேண்டும் என்றேன். என்னை எதுக்கு சார் பேட்டியெடுக்கறீங்க? நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஒண்ணும் கஷ்டப்படல சார்.. வேண்டாம் சார்.. விடாப்பிடியாக மறுத்தார். தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு சம்மதித்தார். கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் பக்கத்தில் தங்கியிருப்பதாகச் சொனனர். ஃபோட்டோகிராபர் ராஜன் சகிதம் வீட்டுக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை. வாசலுக்கு இடதுபக்கம் ஒரு அறை. அங்கே முகம் பார்க்கும் கண்ணாடி தெரிந்தது. ஒருவர் அவசரம் அவசரமாக முகத்துக்குப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தார். ஊதிப்போன முகம். பெரிய சைஸ் கண்கள். வகிடு எடுத்து சீவிய தலை. வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் எங்களை வரவேற்று, உட்காரச் சொன்னார். அமர்ந்தோம்.

வந்துட்டாங்களா.. வந்துட்டாங்களா… என்ற குரல் அவ்வப்போது கேட்டது. சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்தார் ராமராஜன். ட்ரேட்மார்க் சிவப்பு, பச்சை கலந்த சட்டை. வெள்ளை பேண்ட். நெற்றியில் சந்தனப்பொட்டு. கொஞ்சம் கீழே குங்குமம். கோல்ட் வாட்ச். குண்டு சைஸ் மோதிரம். வித்தியாசமான பர்ஃப்யூம்.
பரஸ்பர அறிமுகங்கள் முடிந்ததும் பேட்டி தொடங்கியது. உண்மையில் பேட்டி கொடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. என்ன சார்… என்னைய எதுக்கு சார் பேட்டி.. என்றார். கிராமிய சிறப்பிதழ்.. நீங்கள் இல்லாமல் எப்படி? என்றேன். கிராமம்னா நானா சார்… கிராமம்னா பாரதிராஜா சாரை எடுங்க.. இசைஞானியை எடுங்க.. என்னைய போயி எதுக்கு சார்.. தயக்கம் அகலவில்லை. பிறகு பேசத் தொடங்கினார்.மேலூரில் வளர்ந்த கதையைச் சொன்னார். மூன்று ஷோவும் சினிமா பார்ப்பதற்காகவே தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் சேர்ந்ததாகச் சொன்னார். பிறகு மானேஜர் வேலைக்கு வந்தபிறகும் சினிமா பார்ப்பதை நிறுத்தவில்லை என்றார். சிரித்துக்கொண்டேன்.பிணமாக நடிச்சாலும் சரி, சினிமாவுல ஒரு சீன்ல வந்துடணும் என்றார். எம்.ஜி.ஆர் வெறியனாகத் திரிந்த நினைவுகளை விவரித்தபோது அவர் முகத்தில் பரவசம். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்ததையும் உறவினர்கள் உதவிய கதையையும் விவரிக்கும்போது ராமராஜனின் கண்களில் நீர் முட்டியது. பல விஷயங்கள் பேசினார். பேச்சுக்குப் பேச்சு சினிமா.. சினிமா.. சினிமா.

இடையிடையே ஒரு விஷயத்தை அழுத்திச் சொன்னார். சார்… நான் சோத்துக்குக் கஷ்டப்படல… நல்லா இருக்கேன்… கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பத்திரிகைகள்ல அப்படி எழுதிட்டாங்க.. நீங்களும் அப்படி பண்ணிடாதீங்க சார் என்றார்.

திடீரென வீட்டில் இருந்த பெரியவரை அழைத்தார். அண்ணே… கொண்டாங்க… என்றார். கூல்டிரிங்ஸ் சகிதம் அறைக்குள் நுழைந்தார் அந்தப் பெரியவர். ஃபேண்டா. ஒரு பாட்டில். அதைத் திறந்து இரண்டு தம்ளர்களில் ஊற்றினார். நானும் ஃபோட்டோகிராபரும் சாப்பிட்டோம். எனக்கு ஜலதோஷம் சார் என்றார்.

அறையில் இருந்த எம்.ஜி.ஆர் சிலையைப் பார்ததும் ஏனோ விஜயகாந்த் ஞாபகம் வந்தது. கேட்டேன். அவரு முதல்ல நடிகர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா பண்ணனும்.. கட்சி ஆரம்பிச்ச பிறகு எப்படி நேர்மையா சங்கத்து வேலைகளைச் செய்யமுடியும்.. இப்படிக் கேக்குறதுக்கு எனக்கு உரிமை இருக்கு… நானும் ஒரு நடிகர் சங்க உறுப்பினர்தான் என்றார்.

திருமண வாழ்க்கை பற்றிக் கேட்டேன். நாங்க என்ன சார்.. அடிச்சுகிட்டா பிரிஞ்சோம்.. மனசு ஒத்துப்போகல.. பிரிஞ்சுட்டோம்.. என்றவர், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப்போறேன் சார். சொந்தத்துல பொண்ணு இருக்கு… என்றார். வாழ்த்து சொன்னேன். அதிமுக சார்பாக எம்.பியானது நான் செய்த பாக்கியம் என்றார். அம்மா சொன்னா எப்போ வேணும்னாலும் கட்சிக்குப் பிரசாரம் பண்ணுவேன் என்றார்.

படம் பண்ணும் திட்டம் பற்றிக் கேட்டேன். ஆமா சார்.. ரெடியாயிட்டு இருக்கேன்.. ஸ்ட்ரிக்ட் டயட்.. அநேகமா துப்பறியும் நிபுணர் வேஷம். ஸ்க்ரிப்ட் ரெடி.. ஆரம்பிச்சுடுவோம் என்றார்.

பொருளாதாரம் பற்றிக் கேட்டேன். சாதாரணமான ஆளா இருந்தேன்னா காலைல கடையில போய் டீ சாப்பிடலாம்.. நான் போக முடியுமா சார்..வெட்கமா இருக்குன்னு சொல்லல… என்னைப் பார்த்துப் பரிதாபப்படறத என்னால ஏத்துக்கமுடியல. சாதா ஹோட்டல்ல சாப்பாடு சாப்பிடலாம்.. ஆனா சினிமாக்காரனா இருந்துட்டதால அதையும் செய்யமுடியல சார்..

உதவிக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்கேன். அவருக்கு சம்பளம் கொடுக்கணும். விசேஷம் வச்சிருக்கேன்னு நண்பர்கள் பத்திரிகை வைக்கறாங்க… போகணும்.. ஆட்டோல போகமுடியாது.. வாடகைக்கு கார் எடுக்கணும்.. இப்படி நிறைய எக்ஸ்ட்ரா செலவுகள்… சொந்தக்காரங்க.. பெரியப்பா, சித்தப்பா பசங்க உதவி பண்றாங்க… ஒண்ணும் பிரச்னை இல்ல.. சார்.. இப்பவும் சொல்றேன்.. நான் கஷ்டப்படல! சீக்கிரமே நம்ம படம் வந்துடும்.. எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!

0

ஆர். முத்துக்குமார்