ஏ. ஆர். ரஹ்மான்: இசையின் நவீனம்

The more I compose, the more I know that I don’t know it all!

–    A. R. Rahman (The Times of India, 27th August 2013)

topimg_19280_ar_rehman_600x400ஏ. ஆர். ரஹ்மான் என்றழைக்கப்படும் அல்லா ரக்கா ரஹ்மான் இந்தியத் திரை இசையின் நவீன முகம். இரு தசாப்தங்களாக இந்த தேசத்தின் இசை ரசனையில் – குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் – வலுவான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பவர்.

சென்னையில் ஓர் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த திலீப் குமார் தான் இன்று சர்வதேச அளவில் தன் இசைச்சிறகுகளை விரிந்திருக்கும் இந்த ரஹ்மான். பிறப்பால் இந்துக்கள்தான் என்றாலும் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு சில‌ சிக்கல்கள் தீர்ந்த நம்பிக்கையில் இஸ்லாத்திற்கு மாறியது அவர் குடும்பம்.

ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகரும் ஒரு புகழ் பெற்ற இசையமைப்பாளரே. அவர் பெரும்பாலும் பணியாற்றியது மலையாளப் படங்களில். ரஹ்மானுக்கு முதலில் இசை பயிற்றுவித்தவர் அவரே. ஆனால் சிறுவயதிலிருந்தே வீட்டில் இசைக் கருவிகளும் சினிமாக்காரர்களும் சூழ வாழ நேர்ந்தால் இசையின்மீதும் சினிமாவின் மீதும் பெரிய ஆர்வம் ஏதும் ரஹ்மானுக்கு ஏற்பட‌வில்லை. ஒரு மின்பொறியாளர் ஆக வேண்டும் என்பதே அவரது சிறுவயதுக் கனவாக இருந்தது.

பிற்பாடு இசையின்மீது ஆர்வம் வந்தது இரு காரணங்களால். ஒன்று அவரது தந்தை வைத்திருந்த நவீன மின்னணு இசைக் கருவிகள். ரஹ்மானின் ஆர்வம் மின்பொறியியல் என்பதால் இந்தக் கருவிகள் அவரை வசீகரித்தன. அதாவது ஒரு தொழில்நுட்ப மாணவனாகவே அவர் இசைக் கருவிகளை அணுகினார். தொடக்க காலம் முதல் இன்று வரை அவரது இசையின் பிரதானக்கூறும் தனித்துவமும் இந்தத் தொழில்நுட்பத் துல்லியமே என்பதற்கான பின்புலக் காரணம் இதுதான்.

இரண்டாவது காரணம் ரஹ்மானின் பத்தாவது வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட, வீட்டின் மூத்த ஆண் என்ற வகையில் குடும்பச் சுமை அவர் தலையில் விழுந்தது. பள்ளி சென்று கொண்டிருந்த அந்த வயதில் கற்றிருந்த ஒரே விஷயமான இசையைத்தான் அவர் தொழிலாகத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

ரஹ்மான் என்ற‌ அற்புதம் நிகழ்ந்தது சூழலின் அழுத்தம் ஏற்படுத்திய விபத்தே.

*

இசைக் குழுக்களில் வாசிப்பவராகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

இந்த ஆரம்பகட்டத்தில் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், எல். சங்கர் ஆகியோரிடம் ரஹ்மான் பணியாற்றியிருக்கிறார். இளையராஜாவிடம் (விஜய் மேனுவல் என்பவரின் கீழ்) கீபோர்டிஸ்டாக இருந்த‌போது ரஹ்மான் வாசித்த புன்னகை மன்னன் தீம் ம்யூஸிக் மிகப் பிரசித்தம்.

சிறுவயதில் தூர்தர்ஷனின் வொன்டர் பலூன் என்ற குழந்தைகள் நிகழ்ச்சியில் ஒரே சமயம் நான்கு கீபோர்ட் வாசித்திருக்கிறார். மலேஷியா வாசுதேவனுடன் இணைந்து டிஸ்கோ டிஸ்கோ, மால்குடி சுபாவுடன் இணைந்து ஸெட் மீ ஃப்ரீ, டீன் இசை மாலை என்ற சூஃபி இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தார். 90களில் அவர் இசையமைத்த‌ சில விளம்பரங்கள்: 1) http://www.youtube.com/watch?v=e4Rch0KTRmc 2) http://www.youtube.com/watch?v=lBj4FampoE4 3) http://www.youtube.com/watch?v=kEHQRuE_7ck 4) http://www.youtube.com/watch?v=7TVmI9OJ_MM 5) http://www.youtube.com/watch?v=xN9b4qIGoOE

1992ல் மணி ரத்னத்தின் இயக்கத்தில் கே. பாலச்சந்தர் ஒரு படம் தயாரித்தார். அப்போது இருவருமே இளையராஜாவுடன் – இசை அல்லாத வேறு தனிப்பட்ட காரணங்களால் – கசப்புற்று இருந்தனர். பாலச்சந்தர் ஏற்கெனவே மரகதமணியை (எம். எம். கீரவாணி) வைத்துப் படங்களுக்கு இசைய‌மைத்துக் கொண்டிருந்தார்.

இருவரும் இணைவதால் மணி ரத்னமும் இம்முறை இளையராஜாவை விடுத்து வேறொரு இசையமைப்பாளரைத் தன் படத்துக்குப் பயன்படுத்தத் தீர்மானித்தார்.

ராஜீவ் மேனன் அப்போது திரைப்பட ஒளிப்பதிவாளராக வந்திருந்த புதிது. அது போக‌, விளம்பரப் படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது விளம்பரப் படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருந்தார். மணி ரத்ன‌த்திடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார் மேனன். அந்தத் திரைப்படம் ரோஜா.

ரஹ்மான் திரை வாழ்க்கை தொடங்கியது. ஓர் இசைச் சகாப்தத்தின் ஆரம்பம் அது.

ரோஜாவின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுஜாதாவிடம் அப்போது ரஹ்மானை அறிமுகம் செய்திருக்கிறார் மணி ரத்னம். பாடல்களைக் கேட்டு விட்டு “புகழுக்குத் தயாராகுங்கள்” என்று சொல்லி இருக்கிறார் சுஜாதா. பிற்பாடு நடந்தது அதுதான்.

ரோஜா என்ற‌ அந்த‌ முதல் முயற்சியிலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார் ரஹ்மான். அந்த விருதிலும் சுவாரஸ்யம் ஒன்று இருக்கிறது. 1992ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதின் இறுதிப் போட்டியில் தேவர் மகனும் ரோஜாவும் இருந்தன. இரண்டு படங்களும் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம நிலையில் இருந்தன. பாலு மகேந்திரா தான் விருதுக் குழு தலைவர். அவர் போடும் ஓட்டே விருதைத் தீர்மானிக்கும் என்ற நிலை. “ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மாமலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன். தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன்” என்று சொல்கிறார் பாலு மகேந்திரா (இந்திர விழா என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் இதைப் பகிர்ந்து கொண்டார்).

முதல் படத்திலேயே நாடறிந்த இசையமைப்பாளர் ஆனார் ஏ. ஆர். ரஹ்மான்.

*

ஏ. ஆர். ரஹ்மான் சினிமாவில் நுழைந்து 21 ஆண்டுகள் ஆகிறது. அவரது இசைப் பயணத்தை நான்கு முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் தமிழ் நாட்டில் பிரபலமடைந்தார். இரண்டாம் பகுதியில் இந்திப் படங்களின் மூலம் வட இந்தியாவில் அறிமுகமானார். மூன்றாம் பகுதியில் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். நான்காம் பகுதியில் சர்வதேசிய‌ அளவில் பிரசித்தி பெற்றார்.

1992 முதல் 1995 வரை. ரோஜா, புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்குச்சீமையிலே, திருடா திருடா, டூயட், மே மாதம், காதலன், கருத்தம்மா, பம்பாய், இந்திரா ஆகிய படங்களுக்கு இசை அமைத்தது இந்த ஆரம்ப ஆண்டுகளில் தான். என் வரையில் ரஹ்மானின் ஆகிச் சிறந்த படைப்பூக்கம் வெளிப்பட்ட‌ காலகட்டம் இதுவே.

1996 முதல் 2000 வரை ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா வழியாக இந்தியில் பிரவேசித்தாலும் தாள் (தாளம்), தில் சே (உயிரே) தவிர அங்கே நிறைய படங்கள் பணியாற்றவில்லை. தொடர்ந்து தமிழ் படங்களில் கோலோச்சினார். மின்சாரக் கனவுக்காக தேசிய விருது பெற்றார். வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்டார். ரஜினி படங்களுக்கும் (முத்து, படையப்பா), கமல் படங்களுக்கும் (இந்தியன், தெனாலி) இசையமைத்தது இந்தக் காலகட்டத்தில் தான். லவ்பேர்ட்ஸ், காதல் தேசம், மின்சாரக் கனவு, இருவர், ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, என் சுவாசக் காற்றே, காதலர் தினம், சங்கமம், ஜோடி, தாஜ்மஹால், முதல்வன், அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

2001 முதல் 2007 வரை. லகான், ரங் தே பசந்தி, யுவா (ஆய்த எழுத்து) ஸ்வதேஸ், குரு, ஜோதா அக்பர், ஜானே து யா ஜானே நா, கஜினி, பாம்பே ட்ரீம்ஸ் (ஆல்பம்) ஆகிய படங்களின் வழி இந்தித் திரையுலகில் ரஹ்மான் இசைச் சக்கரவர்த்தியாக உயர்ந்த ஆண்டுகள் இவை. லகான், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்கு தேசிய விருதுகள் பெற்றார். க்ரெய்க் ஆம்ஸ்ட்ராங் என்ற ஸ்காட்லாண்ட் இசை அமைப்பாளருடன் இணைந்து சேகர் கபூரின் Elizabeth: The Golden Age படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். பாபா, பாய்ஸ், சில்லுனு ஒரு காதல், வரலாறு, சிவாஜி ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

2008 முதல் இன்று வரை. உலக‌ அளவில் ரஹ்மான் புகழ் பெற்றதும் Slumdog Millionaire படத்துக்காக கிராம்மி, ஆஸ்கர், பாஃப்டா, கோல்டன் க்ளோப் ஆகிய சர்வதேசிய விருதுகளை அவர் பெற்றதும் இந்தக் காலத்தில் தான். சக்கரக்கட்டி, டெல்லி 6, விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன், ராக்ஸ்டார், 127 Hours, கடல், மரியான் ஆகிய படங்களுக்கு இந்த ஆண்டுகளில் இசைய‌மைத்தார்.

தற்போது கோச்சடையான், ஐ, சட்டென்று மாறுது வானிலை, காவியத் தலைவன், ஹைவே, பாணி, விண்டோ சீட், The Hundred-Foot Journey, Million Dollar Arm, Mumbai Musical ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மானின் சொந்தத் திரைக்கதையில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன‌.

இன்னும் அவர் நிறைய தூரங்கள், பிரதேசங்கள் செல்வார். பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிப்பார். காலம் காத்திருக்கிறது; ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

*

சந்தேகமே இல்லாமல் இளையராஜா என்ற இசை மேதமைக்கு அடுத்தபடியாக இந்தியா சினிமா கண்ட ஆகச்சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

இளையராஜாவுடையதைப் போல் ஆன்மாவிலிருந்து இயல்பாய்ப் பிரவாகிக்கும் ஊற்று அல்ல ரஹ்மானின் இசை; அது ஒரு க்ராஃப்ட். ஒரு விஞ்ஞானம்; ஒரு கணிதம்; திட்டமிட்ட, துல்லியமான கலை; மிக‌ உயிர்ப்புள்ள தொழில்நுட்பம்.

ரஹ்மான் கடுமையான உழைப்பாளி. ஒரு பாடலுக்கென மனதில் தோன்றும் ஒரு மிகச் சிறிய பொறியிலிருந்து தொடங்கி, அதைக் கவனமாய்ச் செதுக்கி, நுட்பமாய் மெருக்கேற்றி, அழகாய் அலங்கரித்து மிகச் சிறப்பான படைப்பாய்த் தருகிறார்.

இதன் காரணமாகவே அவரது பாடல்களில் பல அடுக்குகள் சாத்தியமாகிறது. நாம் நூறாவது முறை கேட்கும் போதும் ஒரு புதிய விஷயம் அகப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அதனால் தான். அவர் அப்பாடலில் தன் நூறாவது முயற்சியில் அந்த வியப்பைச் சொருகி இருக்கக்கூடும். அவ்வளவு தூரம் சிறந்த படைப்பாக வர ரஹ்மான் மெனக்கெடுகிறார். அதனால் தான் அவர் பொதுவாய் இசை அமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார். போன்ஸாய் உருவாக்கும் ஒரு ஜப்பானிய தோட்டக்காரனின் பொறுமையையும் துல்லியத்தையும் இதனோடு ஒப்பிடலாம்.

ரஹ்மானின் பிற்காலத்திய பாடல்கள் பெரும்பாலும் நமக்கு முதல் கேட்டலில் அவ்வளவாய் ஈர்க்காமல் போவதற்குக் காரணம் அவற்றின் நுட்பமான அடுக்குகள் ஆரம்பத்தில் நம‌க்குப் பிடிபடாமல் போவது தான். தொடர்ந்த கேட்டலில் மெல்ல முடிச்சுக்கள் அவிழ்கின்றன. உண்மையில் ரஹ்மான் இசையினூடாக நம்மைக் குழந்தைகளாக்கி வேடிக்கை காட்டுகிறார். ரஹ்மான் கடைசியாய் அமைத்த எளிமையான மெட்டு ‘சின்ன சின்ன ஆசை’ (ரோஜா) எனத் தோன்றுகிறது.

அவர் இசையின் இலக்கணங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில்லை. அவற்றில் அவருக்குப் பாண்டித்யம் இருந்தாலும் அதை உடைக்க தொடர்ந்து முயல்கிறார். தன்னிடம் பணியாற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கிறார். அவர்களின் சேஷ்டைகள் மூலமாக தன் படைப்பு இன்னும் மெருகேறும் என்றால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார். சினிமா இசை என்பது ஒரு கூட்டுக் கலை என்பதை சுத்தமாகப் புரிந்து வைத்திருப்பவர்.

ரஹ்மானின் முக்கிய சாதனை இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்தது தான். தொழில்நுட்பத்தின் குழந்தை அவர். அந்த வகையில் இளையராஜாவுக்கு ஹார்மோனியம் என்றால் ரஜ்மானுக்கு சிந்த்தசைஸர் எனலாம். அதனால் தான் அவரது பாடல்களின் ஒலியமைப்பு மிகுந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஏ. ஆர். ரஹ்மான் சினிமா இசையை முழுமையாய் நவீனமாக்கினார். அதாவது இசையின் உள்ளடக்கம் மட்டுமல்லாது அதன் மொத்த‌ ஆக்கத்திலும் நவீனத்தைப் புகுத்தினார். இரண்டிலுமே தொடர்ந்து சர்வதேச அளவில் என்னென்ன புதிய விஷயங்கள் வருகின்றனவோ உடனடியாக அதற்கேற்றாற் போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள அவர் ஒருபோதும் தவறியதில்லை. அது தான் அவரது USP.

Panchathan Record Inn and AM Studios என்ற கோடம்பாக்கத்தில் அவரது வீட்டுக்குப் பின்னாலேயே இருக்கும் அவரது ஸ்டூடியோ அதற்கு உதாரணம். இசையைப் பொறுத்தவரை ஆசியாவின் மிக நவீனமான ஸ்டூடியோக்களில் ஒன்று இது. ஒலியமைப்புக்கு தேசிய விருதுகள் பெற்ற ஏ. எஸ். லக்ஷ்மிநராயணன், ஹெச். ஸ்ரீதர் ஆகியோர் ரஹ்மானின் இந்த‌ ஸ்டூடியோவில் பணியாற்றியவர்கள்.

வெளிநாட்டிலிருந்து கொண்டே மின்னஞ்சல் மூலம் இசைக்குறிப்புகளை அனுப்பி இங்கே பாடல் பாடி பதிவு செய்யப்ப‌டும் அளவுக்கு அவர் நவீனமாய் இருந்தார்.

*

ரஹ்மானின் இசை இந்த மண்ணோடு சம்மந்தப்பட்டதல்ல. அவர் பிரபஞ்சத்தின் பிரதிநிதி. அவர் இசையமைத்த கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா, தாஜ்ம‌ஹால் போன்ற கிராமியப் படங்களில் கூட தமிழிசையை அமுக்கி விட்டு நவீனமே மேலோங்கி நின்றது. குறிப்பிட்ட இசையில் நேட்டிவிட்டி இருந்தால் கிட்டும் படைப்பு நேர்மையை விட அதுவரை யாரும் செய்திராத புதுமை முயற்சியாய் இருக்க வேண்டும் என்பதற்கே அவர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ரஹ்மான் ஒரு கட்டத்தில் முழுக்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தியதால் இங்கே தமிழில் மணி ரத்னம், ஷங்கர், ரஜினி இவர்களுக்கு மட்டும் இசை அமைத்துக் கொடுத்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் யோசித்துப் பார்த்தால் அது தானே சரியானது! வளர்ச்சிப் பாதையில் இருக்கும் எந்த இளைஞனும் அவ்வாறே முடிவெடுக்க முடியும். பத்தாண்டுகளுக்கு மேலாய்ப் போதுமான அளவு இங்கே பங்களித்து விட்டு தான் அங்கே சென்றார்.

இந்தியிலும் ஆங்கிலத்திலும் இசையமைத்ததை மேலும் உயரத்திற்குப் போனார் என்று சொல்வதை விட மேலும் பரவலாய் மக்களைச் சென்றடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அதாவது ஆழ உழுவதை மறுதலித்து அகல உழுதார்.

ரஹ்மான் தமிழ் இசையை வடக்கிலோ, இந்திய இசையை மேற்கிலோ அறிமுகம் செய்யவில்ல. அங்கே அந்தத் திரைப்படங்களுக்குத் தேவையான அவர்கள் பாணி இசையையே கொடுத்தார். அங்கு அவர்களின் ஆள் பணிபுரிந்திருந்தால் என்ன இசையை உருவாக்கி இருப்பாரோ அதையே ரஹ்மான் அவர்களுக்கு இணையாய், சமயங்களில் இன்னும் சிறப்பாய் உருவாக்கினார். Bombay Dreams, Slumdog Millionaire இரண்டும் தான் அவர் இந்திய இசையை உலகிற்குச் சொன்ன இரு முயற்சிகள். இவற்றில் Slumdog Millionaireல் அவரது மிகச்சாதாரண இசையே வெளிப்பட்டது.

மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ் என அவர் அழைக்கப்படுவதில் ஓசை நயத்தைத் தாண்டி வேறேதும் பொருத்தமில்லை. ஐரோப்பிய சாஸ்திரிய சங்கீதத்தில் தன் படைப்பாளுமையை மோஸார்ட் அழுந்தப் பதிவு செய்ததைப் போல் ரஹ்மான் இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் (கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, சூஃபி இசை போன்றவை) பெரிய முயற்சிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஓர் அபார திரை இசைக்கலைஞராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அதிலும் அப்ப‌டங்களின் தேவைக்கேற்பவே தன்னைத் தகவமைத்துக் கொண்டார். ஒருவகையில் ஹாலிவுட் இசைக்கலைஞர் ஆலன் மென்கெனுடன் ரஹ்மானை ஒப்பிடலாம். உண்மையில் மென்கென் ஆஃப் மெட்ராஸ் தான் ஏ. ஆர். ரஹ்மான்.

பின்னணி இசையில் ரஹ்மான் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் அது அவரது போதாமை என்றில்லாமல் முக்கியத்துவம் தாராதால் தான் அப்படி நிகழ்வதாகத் தோன்றுகிறது. அதாவது பாடல்களே அவரை மக்கள் மத்தியில் புகழ் பெறச் செய்கிறது. அதற்காக அவர் சிரத்தை எடுக்கிறார். பின்னணி இசை அதற்கு இணையாக இல்லை என்பதை பொதுமக்கள் கவனிப்பதே இல்லை. அது விமர்சகர்களின் திடல். அங்கு தன்னை அவர் முன்வைக்க மெனக்கெடுவதில்லை ரஹ்மான். ஆனால் அவரது பின்னணி இசை மிக‌ச் சிறப்பாக அமைந்த‌ ரோஜா, இந்தியன் போன்ற படங்களைக் கொண்டு பார்த்தால் அதிலும் அவர் நன்றாகப் பரிமளிக்கக்கூடியவர் என்றே தெரிகிறது.

வெகுஜன வெற்றியின் சூத்திரம் எதுவோ அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறார். திறமையை வெளிப்படுத்துவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

*

தமிழ் மக்களைத் தாளம் போட வைத்தவர், இந்திய இளைஞர்களை ஆட்டம் போட‌ வைத்தவர். இன்று உலகெங்கும் இருப்பவர்களைத் தன் பக்கம் திருப்பி இருப்பவர்.

சினிமா தாண்டி சாஸ்திரிய இசையிலும் அழுத்தமாய் தன் முத்திரைகள் பதிப்பார்.

அவரது அடக்கம் மற்றும் அமைதியான தோற்றம் அவரை இந்தியாவில் யூத் ஐகான் ஆக்கி இருக்கிறது. அதற்கும் அவரது இசைப் பங்களிப்பிற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் இந்தியர்கள் பொதுவாய் ஒழுக்கத்தையும் திறமையுடன் சேர்த்து ஒரு பேக்கேஜாகவே செலிப்ரிட்டிகளிடம் எதிர்பார்க்கிறார்கள். டெண்டுல்கர் போல் ரஹ்மானும் இவ்விஷயத்தில் ரசிகர்களின் ஐடியல் ஃபிகராகத் திகழ்கிறார்.

ரஹ்மான் பொதுவாகப் பேட்டிகளில் மிக அடக்கமாகப் பதில் சொல்வது வழக்கம். ஆனால் அதை இயல்பாக அல்லாமல் திட்டமிட்டே செய்வதாகக் குறிப்பிடுகிறார். புதிய தலைமுறை இதழுக்கு 2010ல் அளித்த பேட்டியில் “நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு காரசாரமாகப் பதில் சொல்வது ஒரு வழி. அமைதியாய், நிதானமாய் பதில் சொல்வது இன்னோர் வழி. நான் இந்த இன்னோர் வழியைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். ஆஸ்கர் விழாவில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பினைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னதன் நீட்சி இது.

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளர் ரஹ்மான் தான்.இடையில் அவர் முஸ்லிம் என்பதால் தன் சம்பாத்தியத்தில் தீவிரவாதத்திற்கு பண உதவி செய்வதாய் பொய்ச்செய்தி வெளியானது (நக்கீரன் என நினைவு).

இன்று தன் பெயர் ஒட்டிய லேபிளைக் கொண்டே அந்த இசையை அபாரம் என்று சிலாகிக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார் ரஹ்மான். அப்படிக் கண்மூடித்தனமாய் ரசிக்குமளவு அவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியதே ரஹ்மானின் தனிச் சாதனை தான். இசையில் அவர் ஒரு ரஜினி.

ரஹ்மான் இன்னும் பரவலாய் உலகமெங்கும் கோடானு கோடி பேர்களைச் சென்றடைவார் என்பதில் சந்தேகமே இல்லை. சமகாலத்தில் உலக மக்களை அதிகம் வசீகரித்த இசையமைப்பாளராக உருவாகுவார். இந்திய இசை அவரின் மூலமாக உலகை அடையவில்லை என்றாலும் இந்தியா என்ற தேசம் அவரால் மரியாதையாகப் பார்க்கப்படும். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு வாழ்த்துக்கள்!

சமீபத்தில் குமுதம் இதழில் அளித்த ஒரு பேட்டியில் “இசையிலும் ரசனை மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு ராஜாவைத் தாண்டி நாளைக்கு என்னையும் தாண்டி இசை ரசனை வளர்ந்து போய்க் கொண்டு தான் இருக்கும்” என்கிறார் ரஹ்மான். அதாவது காலத்திற்கேற்ப மாறும் ஃபேஷனாகவே அவர் இசையைச் சித்தரிக்கிறார். அதற்கேற்பவே அவர் மாறிக் கொள்கிறார்.

ஆனால் உண்மையில் இசை என்பது பூரணமான கலை. தொழில்நுட்பம் காலாவதியாகும்; ஆனால் நல்ல கலை சாஸ்வதமானது. மோஸார்ட், பேக், பீத்தோவன், தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, எல்லாம் அப்படித் தான் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களைக் கடந்து போவதெல்லாம் மேலோட்டமான ரசனை கொண்ட அந்தந்தக் காலத்து வெகுஜன தலைமுறைகள் மட்டுமே. தேர்ந்த ரசனை கொண்டவர்கள் வழியாக இவை வரலாற்றில் நிற்கும்.

ராஜா காலம் கடந்து நிற்பது போலவே ரஹ்மானும் காலம் கடந்து நிற்பார்.

0

ராஜா அபிமானி!

என் குழந்தைப்பருவத்தில் அந்த மிகச் சிறிய வீட்டில் (இன்று அந்த வீட்டில் என்னால் கால் நீட்டிப் படுக்க முடியாது) நாங்கள் நான்கு சிறார்கள், கிராமத்தில் சரியான படிப்பு வசதி இல்லையென்று நகரத்தில், ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டில் 3 குண்டு விளக்குகள், ஒரு மேஜை விசிறி தவிர்த்து, மின்னிணைப்பு கொண்ட மற்றொரு இயந்திரம், வானொலி. அதில் இலங்கை வானொலி சிற்சில காலம் ஒலித்தது மிகவும் பலவீனமாக நினைவில் இருக்கிறது. பின்பு அது எப்போது நின்று போனது என்று எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் எப்போதும் திருச்சி வானொலி மட்டுமே ஒலிக்கும். வந்தேமாதரம் முடிந்து பக்திமாலையுடன் தொடங்கும் நிகழ்ச்சிகள், பிடிக்கிறதோ இல்லையோ, மின்சாரம் இருந்தால் காலை 8 மணி வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். 8 மணிக்கு டெல்லி நிகழ்ச்சிகள். அநேகமாக 8:40க்கு டெல்லி நிகழ்ச்சிகளும் முடிந்து, நிலையம் தூங்கி வழிந்து மறுபடியும் தமிழ் நிகழ்ச்சிகளுடன் 12க்கோ 12:10க்கோ விழிக்கும்போல. ஆனால் 8 மணிக்குப் பிறகு நாங்கள் வானொலி கேட்பது அரிது; பள்ளி சென்று விடுவோம். அப்படியே வீட்டில் இருந்து கேட்க நினைத்தாலும் ஓர் அட்சரம் கூட புரியாத இந்தியில், தமிழிலேயே நாங்கள் கேட்க விரும்பாத ‘செய்தி’களைக் கேட்பதென்பது…

பத்து வயதுக்குள்ளேயே இருந்த எங்கள் நால்வருக்கும் கிட்டத்தட்ட ஒரே ரசனைதான். நாடக வடிவிலிருந்த எதனையும் கேட்போம். நாடக வடிவிலிருந்ததால் கொட்டும் முரசையும், விஞ்ஞானம் வீராசாமியையும்கூட விடாமல் கேட்டிருக்கிறோம். ஞாயிறன்று சூரியகாந்தியை விடமாட்டோம் (நூறு ரூபாய் என்ற தொடர் நாடகம் – பெயர் மட்டும் – இன்னும் நினைவில் இருக்கிறது). ‘மண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம்; அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்’ என்ற பாட்டு முடிவதற்குள் ஓடிச்சென்று வானொலியை அணைத்திடுவோம். நாங்கள் விவசாயத்தில் ஈடுபடாததால், எங்கள் வீட்டில் யாரும் விவசாய நிகழ்ச்சிகளைக் கேட்டதில்லை. நகரத்தில் வசித்தாலும், அனைத்து விடுமுறைகளும் கிராமத்தில்தான் கழியும். வாழ்நாளில் பாதி எங்கள் கிராமத்தில்தான் எனக்குக் கழிந்திருக்கிறது. ஆனால் விவசாயிகளால் சூழப்பட்ட எங்கள் கிராமத்தில் யாரும் எந்த விவசாய நிகழ்ச்சியையும் கேட்டதாக நான் அறியவில்லை. கிராமத்துக்குப் பொது வானொலியென்று ஒன்று இருக்கும்; ஒரு கம்பத்தில் ஒலிக் கூம்பும் கட்டப்பட்டிருக்கும்; ஆனால் அது ஒலித்ததாக எனக்கு நினைவில்லை. வாரந்தோறும் வெள்ளி ஏழு மணிக்கு காந்தியஞ்சலி – ‘காந்தி மகான் என்ற காலைக் கதிரவன், காரிருள் நீங்கிட இங்கு வந்தான்’ என்ற வழக்கமான பாடல்.

நிற்க. இவையனைத்து நிகழ்ச்சிகளையும்விட தினமும் அதிகாலை 7:30க்கு ஒலிபரப்பப்படும் திரையிசைக்கு நாங்களனைவரும் தவமே இருப்போம். ஒருநாளும் அதனைத் தவறவிடமாட்டோம். விளம்பரங்களின் எரிச்சல் துளியும் இல்லாமல்(பின்னர் எந்த வருடம் என்று நினைவில்லை – திடீரென்று, ‘கூ’வென்று சங்கூதி விளம்பரங்களுக்கிடையில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.) 8:00 மணி வரை (மட்டும்) கிட்டத்தட்ட ஐந்து பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும். சனியோ ஞாயிறோ – நாள் சரியாக நினைவில்லை – ஒரு நாள் மதியம் 1:10 முதல் 2:00 மணி வரை ஐம்பது நிமிடங்கள் எங்களுக்கு பம்பர்தான். இளையராஜா, அதற்கு முன்னர் நாட்டப்பட்ட அனைத்து கொடிகளையும் வீழ்த்திவிட்டு நாளுக்கு நாள் தன் கொடியை ஸ்திரமாக்கிக் கொண்டிருந்த காலம். அதையெல்லாம் உணரத் தெரியாத பருவம் எங்களுக்கு.

திருச்சி வானொலியில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னரோ பின்னரோ பாடல் இடம்பெற்ற திரைப்படம், இன்னார் இசையமைத்தது, இன்னார் பாடியது, சமயத்தில், இன்னார் இயற்றியது என்ற அனைத்து விபரங்களோடுதான் ஒலிபரப்புவார்கள். என்ன, அறிவிப்பாளர்தான் இழவு வீட்டிலிருந்து வந்தவர்கள்போல, எப்போதும் மாறாத சோகத்தோடே பேசுவார்கள். பெரும்பாலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் வெளியான திரைப்படங்களின் பாடல்களாக இருக்கும். இன்றைய நாள் வரை 80 முதல் 2000 வரை உள்ள திரைப்பாடல்கள் பெரும்பாலானவற்றின் படப்பெயர்களையும், வெளியான ஆண்டையும் அவற்றைப் பாடியவர்களையும் எனது நினைவிலிருந்து சொல்லும்போது வியக்காத நண்பர்கள் மிகக் குறைவு. பல ஒன்றுக்குமே தேறாத படங்களில்கூட ஒன்றோ இரண்டோ இன்றளவும் நிற்கும் பாடல்கள் அன்று வெளி வந்துள்ளதை நன்கு விபரமறிந்தபின் அறிந்து கொண்டேன். இதில் இளையராஜா மட்டுமல்ல, உலகுக்குத் தெரியாத வேறு சில இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களும் அடங்கும். சில பாடல்களை நான் கூறும்போது, அதுவும் அது இடம்பெற்றுள்ள திரைப்படத்துடன், இப்படி ஒரு படத்தில் இப்படி ஒரு பாடல் வந்திருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும் என்று நண்பர்கள் வியந்திருக்கிறார்கள். சிலநேரம் வெறும் பாடல் மட்டும்தான் நினைவிலிருக்கும்; உதாரணமாக ‘தேவி வந்த நேரம்’, எனக்கு மிகப் பிடித்த பாடல். அன்மையில்தான், வண்டிச் சக்கரத்தில் சங்கர்-கணேஷ் இசையில் இடம் பெற்ற பாடல் அது என்று அறிந்து கொண்டேன்.

சற்று வளர்ந்து விபரமறிய ஆரம்பித்தபோது, விபரமாகவே இளையராஜாவை ரசிக்க ஆரம்பித்து விட்டோம் (சங்கீதப் பின்னணியோ ஞானமோ எங்கள் வம்சத்திலேயே யாருக்கும் கிடையாதென்பதையும் இங்கு தெளிவுபடுத்தி விடுகிறேன்). பெற்றோரை நச்சரித்து வீட்டில் ஒரு கேசட் பிளேயர் (டேப் ரெக்கார்டர் என்றுதான் நாங்கள் சொல்வோம்) வாங்க வைத்து விட்டோம். அன்று பிலிப்ஸில் ஒரு mono player அது. கிட்டத்தட்ட அறிவிப்பாளரில்லாத, திரைப்படப்பாடல்களை மட்டுமே ஒலிக்கும் எங்களது இன்னோரு வானொலிதான் அது. கொஞ்சம் வளர வளர, செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து கேஸட்டுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தோம்.

வீட்டில், சரியான நேரத்துக்குச் செய்திகளைக் கேட்க நினைக்கும் பெரியவர்களுக்கு மிக இடைஞ்சலாக விளைந்தது எங்கள் ‘டேப் ரெக்கார்டர்’. கேசட்டுகளை யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாதென்பது நாங்கள் (உடன் பிறந்தவர்கள்) அனைவரும் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி. கேட்டு, எங்களால் தவிர்க்க முடியாது என்று ஒருவர் எங்கள் வீட்டுக்கு வர நேர்ந்து விட்டால், எங்கள் கேஸட்டுகளை, அவர், எங்கள் வீட்டை விட்டுப் போகும் வரை, ஒளித்துவைத்து விடுவோம். வாரக்கணக்கில்கூட சில கேசட்டுகளை ஒளித்து வைத்துத் தியாகம் செய்திருக்கிறோம். அந்த கேசட்டு மலையில், கிட்டத்தட்ட எங்களனைவருக்குமே, எந்த கேசட்டில் என்ன பாடல், எந்த வரிசையில் இருக்கிறதென்பது மனப்பாடமாகத் தெரியும். ஒரே மாதிரி ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும் கேசட்டுகளில், ஓரிரு வார்த்தைகளில் ஒரு குறிப்பு மட்டுமே எழுதி வைத்திருப்போம்.

இதற்கு இடையில், எங்கள் கிராமத்தில் ஆண்டு முழுதும் ஏதாவது ஒரு திருவிழா வந்து கொண்டே இருக்கும். கிராமத்தில் இது போன்ற திருவிழாக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு ஓர் இளைஞர் கூட்டம் உண்டு (கவனிக்க, அப்பொழுது நான் சிறுவன்). என்ன பண்ணுவார்களோ தெரியாது, ஒவ்வொரு திருவிழாவுக்கும் கூம்புக் குழாய் கட்டி, பாடல்களை பல மைல்களுக்கும் கேட்குமாறு ஒலிக்க விடுவார்கள். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், எங்கள் கிராமத்துக்குப் பேருந்து கிடையாது. குறைந்தபட்சமாக 3 கி.மீ. அதிகபட்சமாக 8 கிமீ நடந்தால்தான் எங்களுக்குப் பேருந்து. எனவே அருகிலுள்ள நகரத்துக்குச் சென்றுவருபவர்களிடம் ஒலி அமைப்பாளர் எதுவரை பாடல் கேட்கிறது என்று உறுதிப்படுத்திக் கொள்வார். இவர் உத்தேசித்திருந்த தூரத்தைவிட குறைவான தூரம் பாடல் கேட்டதாக அறிந்தால் உடனே சென்று ஒலியைக் கூட்டி விடுவார். இதில் என்ன சங்கடம் என்றால், இரண்டு கூம்புகள் எங்கள் வீட்டுக்கு நேரெதிரே அரசு/வேம்பு மரங்களின் மேலே கட்டப் பட்டிருக்கும். வீட்டுக்குள்ளேயே ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்காது. எங்களுடைய தனிப்பட்ட சங்கடம் – tape recorder-ல் எங்களால் பாட்டு கேட்கமுடியாது. ‘பாட்டுதானே கேட்க வேண்டும்? அதுதான் குழாய்கட்டி சத்தமாகவே போடுகிறார்களே?’ என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். அங்குதான் சிக்கல்.

ஊருக்கு ஒலி அமைக்க வருபவருக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதனை கிராமத்தில் பிறந்து வளர்ந்த அனைவரும் புரிந்து கொள்வார்கள். நகரவாசிகளுக்கு அதனை விளக்கவே முடியாது. இந்த ஒலிஅமைப்பு என்பது, கிராமபோன் மற்றும் இசைத்தட்டு ஆகிய இரண்டு முக்கிய ஒலியிசைக்கும் கருவிகளை உள்ளடக்கியிருக்கும். ஆதிகாலத்து பாடல்கள் கிராமபோனிலும், 60லிருந்து சமீபத்திய பாடல்கள்வரை இசைத்தட்டுகளிலும் இசைக்கப்படும். இவற்றை இயக்குவதற்கு எப்போதும் ஒருவர், இக்கருவிகளின் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், கிராமபோன் என்றால் அதற்குச் சாவி கொடுக்க வேண்டும்; இசைத்தட்டு என்றால், அதனை அடிக்கடி மாற்ற வேண்டும்; மற்றும், இரண்டிலும், தேய்ந்த தட்டுகள் ஒரே இடத்தில் மாட்டிக்கொளும்போது முள்ளைக் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். இந்த வேலையைச் செய்வதற்கு இளைஞர்களிடம் பெரும் போட்டி நிலவும். இந்த வேலையைச் செய்வது ஒரு கௌரவம்.

ஒலி அமைப்பவர் இந்த வேலையை தனக்குப் பிடித்த யாராவது ஓர் இளைஞரிடம் ஒப்படைத்துவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார் (எங்கள் ஊரை, எவ்வளவு மெதுவாக நடந்தாலும், ஒரு 10 நிமிடத்தில் சுற்றி வந்து விடலாம்; வேறு என்னதான் செய்வாரென்றால் – அது இந்தக் கட்டுரையில் அடங்காது). அவ்வாறு ஒப்படைக்கப்படுவது, பெரும்பாலும் ஒரே குழுவைச் சேர்ந்த இளைஞர்களிடம்தான். இவர்கள், எங்களுக்கு ஒரு தலைமுறைக்கு முந்தையவர்கள். இவர்கள், எப்போதுமே, 60/70 களின் பாடல்களை மட்டுமே ஒலிக்க விடுவார்கள். அந்த வயதில் எங்களுக்கு அது பழைய பாடல்கள்; மேலும் ஒலிபெருக்கி ஒலி, எங்கள் விருப்பப் பாடல்களை எங்கள் டேப் ரெக்கார்டரிலும் கேட்க விடாது. இதுதான் சிக்கல்.

இவ்வாறு பல சிக்கல்களுக்கிடையிலும் எங்களோடு எங்களது பாடல் வேட்கையும் வளர்ந்தது. ஆண்டுகள் உருண்டோட, எங்களுக்குச் சிறிய டேப் ரெக்கார்டரில் பாட்டுக் கேட்பது பிடிக்காமல் போய்விட்டது. மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் எங்களது பொருளாதாரச் சக்திக்கு மீறி, பெற்றோரை நச்சரித்து கடைசியாக, டேப் ரெக்கார்டரை ஒரு மாபெரும் ஜப்பான் மியூசிக் சிஸ்டம் கொண்டு ஒழித்துக்கட்டினோம். நாங்கள் பாடல்களை மேலும் இனிமையாகக் கேட்க ஆரம்பித்தோம். வளரவளர உடன் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனைகளும் சேர்ந்து கொண்டன. தனிப்பட்ட முறையில், எனக்கு, அண்மைய பாடல்களுடன், அனைத்து பழைய பாடல்களும் பிடிக்க ஆரம்பித்து விட்டன.

சற்றே வளர்ந்து விட்ட பின்னர், திரைப்பாடல்கள் கேட்பதென்றால், இந்தியாவில் அம்பாசிடர் கார்கள் போல, இளையராஜாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை உருவானது. மனோஜ்-கியான்களோ, எஸ்.ஏ. ராஜ்குமாரோ, மரகதமணியோ, அம்சலேகாவோ, சந்திரபோஸோ ஒருவராலும் இளையராஜா புயலைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இளையராஜாவின் நிழலில் சிறிது காலம் தேவா வண்டி ஓடியது. எங்களது முந்தைய தலைமுறைகள், வயதுக்கேற்ப, ‘பாகவதர் போல வருமா’, ‘ஏ.எம். ராஜா போல வருமா’, ‘எம்.எஸ்.வி. போல வருமா’ என்று தமிழ்நாட்டு மரபினை விடாமல் கட்டிக் காத்து வந்தனர். நாங்கள் இளையராஜா பக்தர்களாகி விட்டோம்.

கடைசியில் அந்த நாளும் வந்தது. ரோஜா படப்பாடல் வெளிவந்தது. அகில இந்தியாவே கொண்டாடியது. எங்களனைவருக்கும், மற்ற இசையமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் வெளிவந்தபோது எப்படிப் பிடித்திருந்ததோ அவ்வாறே பிடித்திருந்தது. பின்னரும் இளையராஜாவின் ஆதிக்கம் சற்று தொடர்ந்தது. அடுத்து, தமிழில், ரஹ்மானின் 2வது படமான புதியமுகம் வந்தது. பாடல்கள் சற்று சுமார்தான். இருந்தும் ரோஜா புயலால் அதுவும் கரையேறியது. எங்களுக்கும் பிடித்திருந்தது.

பின்னரும் இளையராஜாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. அடுத்து, தமிழில், ரஹ்மானின் 3வது படமான ஜென்டில்மேன் வந்தது. அது சற்றே ராஜாவின் அபிமானிகளை ஆட்டிப்பார்த்தது. பின்னர் வரிசையாக உழவன், வண்டிச்சோலை சின்னராசு, புதிய மன்னர்கள் போன்ற மரண மொக்கைப் படங்களில்கூட பாடல்கள் நன்றாகவே இருந்தன. மெதுவாக, எனது வயதையொத்தவர்கள்,’ ராஜா போல வருமா? ரஹ்மான் எல்லாம் இன்னும் ஒரு நாலஞ்சு படத்துக்குத்தான் தாங்குவார். எல்லா பாட்டும் ஒரே மாதிரியே இருக்கு. இது தாங்காது’ என்று சொல்லத் தொடங்கினார்கள். பல பத்திரிகைகள் ‘ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன’ என்று எழுதின. ராஜாவின் அபிமானிகளான நாங்கள் – அதற்கு முன்பு போல் இல்லாமல் – ராஜா இசையமைக்கும் அனைத்து படங்களின் பாடல்களையும் விடாமல் வாங்கிக் கேட்க ஆரம்பித்தோம் (அதற்கு முன்பெல்லாம் பாடல்கள் வெளிவந்து நன்றாக இருந்தால் மட்டுமே வாங்கி கேட்போம். அதிலும் நல்ல பாடல்களை மட்டும் தனியாக கேசட்டில் பதிந்து வைத்துக் கொள்வோம். இல்லா விட்டால் எங்காவது ஒலிக்கும்போது காதில் வாங்கிக் கொள்வதோடு சரி).

ராஜாவைத் தவிர வேறொருவர் இசையுலகை ஆளமுடியாது என்று (பலவீனமாக) நம்பினோம். வீரா, கோயில்காளை போல சில கேட்கும்படியான பாடல்கள் வந்தாலும் ராசைய்யா போன்ற பாடல்களை ராஜாவின் அபிமானத்தால் வலுக்கட்டாயமாகக் கேட்பது போன்ற ஒரு கொடுமையான விதி எந்த எதிரிக்கும் வாய்க்கக் கூடாது. ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாட்டெல்லாம் முதல்முறை கேட்கும்போது எனக்கு சுக்குக் கஷாயம் குடிப்பதுபோல அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ராஜா அபிமானி என்பதால் மீண்டும் மீண்டும் கேட்டேன்.

அநேகமாக 95-96ல் ராஜாவின் சிம்மாசனம் முழுமையாகவே அகன்று விட்டது. ராஜா உள்பட, ரஹ்மான், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் என்று பல இசையமைப்பாளர்கள் வரிசையாக ‘ஹிட்’ பாடல்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். மறுக்க முடியாத வகையில் மகுடம் ரஹ்மான் தலையை அடைந்து விட்டது. எனக்கு அவ்வளவுதான் நினைவா அல்லது அதுவேதான் உண்மையா என்று தெரியவில்லை. 96-97க்குப் பின் காதலுக்கு மரியாதை அதற்குப் பின் கண்ணுக்குள் நிலவு, பின்னர் சற்று சுமாராக பாரதி தவிர்த்து ராஜாவின் வேறெந்த படங்களின் பாடல்களும் இனிமையாக அமையவில்லை என்பது என் எண்ணம்.

இப்போதெல்லாம் எந்த டேப் ரெக்கார்டரும் இல்லை மியூசிக் சிஸ்டமும் இல்லை. அனைத்துமே கணினிதான். என் இசைத் தொகுப்பில் பெரும்பாலும் ராஜா பாடல்கள்தான். நான் பல அரிய பாடல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவ்வப்போது கேட்கும்போது இங்கே சொன்னதெல்லாம் மனத்துக்குள் ஓடும். ஆனால் ராஜா பித்தெல்லாம் இல்லை. ராஜாவோ, ரஹ்மானோ, அனிருத்தோ யாராயிருந்தாலும், நன்றாக இருந்தால், உறுத்தலின்றி ரசிக்க முடிகிறது. அண்மையில் ’தேரோடும் வீதியிலே’ என்றொரு படத்தின் பாடல்களைக் கேட்டவுடன் பிடித்துவிட்டது.

ஆனால், ராஜாவின் பாடல்கள் வெளிவரும்போது உண்டாகும் ஏக்கம் தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டது. ஆனால், வெளிவந்தபின் கிடைக்கும் ஏமாற்றமும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. பழசிராஜா பாடல்கள் வருவதற்குமுன் அதற்கு கொடுக்கப்பட்ட விளம்பரமும், அது வந்தபின் மரபுப்படி அதற்கு அளிக்கப்பட்ட புகழாரங்களும் மிகவும் சங்கடப்படுத்திவிட்டன. அதற்குப் பின் வந்த ‘தோனி’, தற்போது ‘நீதானே என் பொன் வசந்தம்’ – ம்ஹூம்; கொஞ்சம் கஷ்டம்தான்.

ராஜா மிகவும் ரசிக்கத்தக்க பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். வேற்று மொழிப் பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, அதுதான் பெருமை என்று கருதிக் கொண்டிருந்த பலரைத் தமிழ்பாடல் கேட்பதும் பெருமை என்று மாற்றியவர், இளையராஜா. ஒவ்வொருவருக்கும், ஓர் உச்சம் இருக்கும். மகாநதிபோல, எவ்வளவு அகன்றதாக இருந்தாலும், கடைசியில், ஒரு வாய்க்கால்தான். அதற்காக அதன் ஏற்றம் குன்றி விடாது. ஏற்றத்தையும் இறக்கத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

0

அனானிமஸ்

ஆகாசத்தூது – 2

தந்தை இறந்துவிட்டதால் குடும்பத்தைப் பராமரிக்கத் தன்னால் முடியவில்லை என்றும் நல்ல சம்பளத்துக்காக ஜெர்மனியில் ஒரு வேலை தேடிப் போவதாகவும் குழந்தைகளிடம் ஆனி சொல்லியிருப்பாள். உங்களை ஒவ்வொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பேன். அங்கு இருப்பவர்கள் உங்களைத் தங்கள் குழந்தைபோல் பார்த்துக் கொள்வார்கள். நீங்களும் அவர்களை அப்பா அம்மா என்று அழைத்து அன்புடன் இருக்க வேண்டும் என்று கண்ணீரைத் துடைத்தபடியே சொல்வாள். குழந்தைகளும் விஷயம் புரியாமல் சரி என்று சொல்வார்கள்.

முதலில் ஒரு டாக்டர் தம்பதியினர் கடைக்குட்டி மோனுவைத் தத்தெடுக்க வருவார்கள். அவர்களை வரவேற்று இருக்கைகளில் அமரச் சொல்லிவிட்டு ஆனி தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு வரச் செல்வாள். மெள்ள பின்னால் வரும் ஃபாதர், அதெல்லாம் வேண்டியதில்லை. குழந்தையை எடுத்துக் காட்டு முதலில் என்று சொல்வார். துக்கத்தை அடக்கியபடியே தூளியில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கிச் சென்று டாக்டரிடம் கொடுப்பாள். குழந்தையோ முதலில் பெரிதாக அழும். டாக்டரின் மனைவி குழந்தையை எடுத்துக்கொண்டு வேடிக்கை காட்ட தோட்டத்துக்கு எடுத்துச் செல்வார். கனத்த மவுனம் நிலவ ஃபாதரும் ஆனியும் டாக்டரும் அதைப் பார்த்தபடி நிற்பார்கள்.

இப்போது உங்களுக்குக் குழந்தை இல்லை. ஆனால், நாளையே குழந்தை பிறந்தால் என்ன செய்வீர்கள் என்ற ஆனியின் சந்தேகத்தை ஃபாதர் கேட்பார். நான் ஒரு டாக்டர். எங்களுக்கு இனி குழந்தை பிறக்காது என்பது உறுதியானதால்தான் தத்தெடுக்கவே முடிவு செய்திருக்கிறோம். அதோடு, குழந்தையை எங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்வதற்கு முன் என் சொத்தில் பாதியை எழுதிவைத்துவிட்டுத்தான் கூட்டிச் செல்வோம். தத்தெடுத்த பிறகு அவன் எங்களுடைய குழந்தை அல்லவா என்று சொல்வார். அவருடைய நல்ல மனசைப் புரிந்துகொள்ளும் ஆனி மனதைத் தேற்றிக் கொண்டு குழந்தையை அவர்களுடன் அனுப்பி வைப்பாள்.

தத்துக் கொடுத்துவிட்டதால் உறவு முறிந்துவிட்டதாக நினைக்கவேண்டாம். எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வந்து குழந்தையைப் பார்க்கலாம். நீங்கள் சொன்னால் கொண்டுவந்தும் காட்டத் தயார் என்று டாக்டர் சொல்லிவிட்டு விடைபெறுவார்.

குழந்தையோ அம்மா…. அம்மா என்று கதறி அழும். பிற குழந்தைகளும் தேம்பித்தேம்பி அழும். தன் சோகத்தை அடக்கிக் கொண்டு முகத்தில் சிரிப்பை வரவழைத்தபடி ஆனி அவர்களுக்கு விடை கொடுப்பாள். கார் புறப்படுவதற்கு முன்னால், குழந்தை மறுபடியும் அம்மா என்று வீறிட்டு அழும். அதுவரை அழுகையை அடக்கிய ஆனியால் அந்த கடைசி கதறலைக் கேட்டதும் தாங்கமுடியாது. பாய்ந்து சென்று குழந்தையை வாங்கி கட்டி அணைத்து அழுவாள். டாக்டர் தம்பதிக்கு தர்மசங்கடமாக இருக்கும். ஃபாதர் மெள்ள குழந்தையை ஆனியிடம் இருந்து பிரித்து அவர்களிடம் கொடுத்து புறப்பட்டுப் போகும்படிச் சொல்வார். கார் பார்வையில் இருந்து மறைவதுவரை குழந்தை அம்மாவைப் பார்த்தபடியே அழுதுகொண்டே இருக்கும்.

ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வை மறக்கடித்து கதாபாத்திரத்தின் இடத்துக்கு நம்மைக் கொண்டு செல்பவையே மிகச் சிறந்த படைப்புகள். இந்தப் படத்தில் அப்படியான காட்சிகள் ஏராளம் உண்டு. அது எப்படி சாத்தியமாகிறதென்றால், கேரள திரைப்படத்தினருக்கு அங்கிருக்கும் இலக்கிய உலகுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. கதை, திரைக்கதை வசனத்தை இலக்கிய பின்னணி கொண்டவரிடம் ஒப்படைப்பார்கள். அல்லது இயக்குநர்கள் இலக்கியங்களைத் தாமாகவே பக்கங்களைப் புரட்டிப் படிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். முன்னூறு பக்க நாவலை முப்பது வரிகளுக்கு மிகாமல் சுருக்கிச் சொல்லு என்று உதவி இயக்குநர்களிடம் சொல்லாதவர்களாக இருப்பார்கள். அருவியில் குளிக்கும் இன்பத்தை அடுத்தவர் சொல்லக் கேட்டுப் புரிந்துகொள்பவரால் அருவியைத்தான் புரிந்துகொள்ள முடியுமா… குளியலைத்தான் புரிந்துகொள்ளமுடியுமா?

கதை, திரைக்கதை வசனத்துக்கு இலக்கியவாதியின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்ற எளிய உண்மை உலகின் சிறந்த இயக்குநர்களுக்கு நிச்சயம் இருக்கும். இலக்கியவாதி தன் துறையில் சிறந்தவர் என்ற புரிதல் இருக்கும். தன்னைவிட புத்திசாலியை அருகில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது என்பது ஒரு கலை. தன்னுடைய படைப்புத் திறமை மீது நம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே இது முடியும்.

இல்லையென்றால், கைக்கு அடக்கமானவர்களைத் தேடிச் செல்பவர்களாகவும் தனது அசட்டுத்தனத்தை வியந்து போற்றுபவர்களைப் பக்கத்தில் அமர்த்திக் கொள்பவர்களாகவும்தான் முடங்கிப் போவார்கள். மலையாளத்தில் அப்படியான தேக்கம் நிகழவில்லை என்பதால் மிகச் சிறந்த படங்கள் என்று தேர்ந்த ரசிகர் ஒரு பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் கணிசமான மலையாளப்படங்கள் இடம் பிடிக்கவே செய்யும்.

அடுத்ததாக இன்னொரு தம்பதியினர் குழந்தையைத் தத்தெடுக்க வருவார்கள். அந்த தம்பதியில் ஆணுக்கு குழந்தையைத் தத்தெடுக்க விருப்பம் இல்லை. அவருடைய இள வயது மனைவிக்குத்தான் குழந்தை மீது ஏக்கம். உண்மையில் அவரிடம்தான் உடல்ரீதியாகக் குறை இருக்கும். இருந்தும் அந்த இள வயது மனைவி தன் மீதுதான் குறை இருப்பதாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லியிருப்பாள். எனவே அவளுடைய விருப்பத்துக்காகவும், மறுத்தால் தன் மீது உள்ள குறையைச் சொல்லிவிடுவாளோ என்ற பயத்தினாலும் அந்த ஆண் தத்தெடுக்க சம்மதித்திருப்பார். ஆனி தன் இரண்டாவது குழந்தையைத் தனியாக தத்துக் கொடுக்க விரும்பவில்லை. கால் ஊன முற்ற மூன்றாவது குழந்தையையும் சேர்த்தே அனுப்ப விரும்பியிருப்பாள். சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து இருந்தால்தான் நல்லது என்று சொல்வாள்.

ஆனால், வந்த தம்பதியினரில் ஆணுக்கு, ஊனமுற்ற குழந்தையை தத்தெடுக்க விரும்பம் இருக்காது. பாத்ரூம், கழிப்பறை உபகரணங்களை விற்கும் அவர் பண விஷயத்தில் மிகவும் கறாரானவர். இரண்டு குழந்தைகளை வளர்ப்பதென்றால் நிறைய செலவாகும். கால் ஊனமென்றாலும் வயிறு ஒழுங்காகத்தானே இருக்கிறது என்று சொல்லி அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்.

ஃபாதர் ஆனியை சர்ச்சுக்கு முன்னால் இருக்கும் மைதானத்துக்கு தனியே அழைத்துச் சென்று விஷயத்தை எடுத்துச் சொல்வார். ஊனமுற்ற குழந்தைக்கு வேறொரு நல்ல தம்பதியைப் பார்க்கலாம் என்று சொல்வார். ஆனி வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிப்பாள். சகோதரர்கள் இருவரும் பிரிக்கப்படுவார்கள்.

அடுத்ததாக, மூத்த பெண் மீனுவை ஒரு வயதான தம்பதியினர் தத்தெடுக்க வருவார்கள். மீனுவுக்கு வயது 12 ஆகியிருக்கும். அந்த வயதான தம்பதியினரில் பாட்டிக்கு எழுந்து நடக்க முடியாது. எப்போதும் வீல் சேரில்தான் அமர்ந்திருப்பார். அருகில் இருந்து ஒருவர் எப்போதும் பார்த்துக்கொண்டாக வேண்டியிருக்கும். அந்த தம்பதியினருடைய குழந்தைகள் அமெரிக்காவில் செட்டிலாகியிருப்பார்கள். வீட்டில் இவர்கள் மட்டும் தனியாக இருப்பார்கள். ஏதேனும் வேலைக்காரரை நியமித்துக்கொள்வதைவிட பாவப்பட்ட குடும்பத்தில் இருந்து யாரையேனும் அழைத்துவந்தால் மிகவும் விசுவாசமாக நடந்துகொள்வார்கள் என்பதால் அவர்கள் வந்திருப்பார்கள். அதோடு ஒரு குழந்தையை வேலைக்கு என்று வைத்துக்கொள்ளவும் அவர்களுக்கு விருப்பம் இருந்திருக்காது. அந்தக் குழந்தையை தத்தெடுத்து சொந்தக் குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவே தீர்மானித்திருப்பார்கள்.

மீனுவை அவர்களுடன் அனுப்பி வைக்க ஆனி முடிவு செய்திருப்பாள். ஆனால், மீனுவுக்கு அம்மாவுக்குப் புற்று நோய் என்பது தெரிந்திருக்கும். ஊனமுற்ற தம்பியையும் அம்மாவையும் விட்டுச் செல்லமாட்டேன் என்று அவள் அழுவாள். ஃபாதர் அவளிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லும்போது, அம்மா இறந்த பிறகு வேண்டுமானால் நான் போய்க்கொள்கிறேன் என்று சொல்வாள். தான் இறப்பதற்கு முன் உங்களை ஒரு நல்ல இடத்தில் சேர்த்துவிட்ட நிம்மதியாவது அம்மாவுக்குக் கிடைக்கட்டும். தம்பியையும் அம்மாவையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி ஃபாதர் சமாதானப்படுத்துவார். ஒருவழியாக, மீனுவும் தன் தத்து பெற்றோர் வீட்டுக்குச் சென்று சேர்வாள்.

கடைசியாக, ஊனமுற்ற பையனும் ஆனியும் மட்டும் அந்த வீட்டில் தனியாக இருப்பார்கள். எனக்கு கால் ஊனமாக இருப்பது நல்லதற்குத்தான் இல்லையா அம்மா… இல்லையென்றால் என்னையும் உன்னிடம் இருந்து பிரித்திருப்பார்களே என்று அவன் சொல்வான். இந்தச் சிறு வயதிலேயே துயரத்தை மெளனமாகச் சகித்துக்கொள்ள வேண்டிய நிலை தன் குழந்தைக்கு வந்துவிட்டதே என்று ஆனி துடிப்பாள். கிறிஸ்மஸ் திருநாள் நெருங்கும். அடுத்த வருடம் உயிருடன் இருக்க மாட்டோம் என்பது ஆனிக்கு உறுதியாகிவிட்டிருக்கும். கடைசியாக தன் குழந்தைகள் நால்வருடனும் இந்த கிறிஸ்மஸைக் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுவார். தத்துக் கொடுத்த வீட்டினருக்கு கடிதம் எழுதி குழந்தைகளை அழைத்துவரச் சொல்வார்.

ஒரு நாள் இரவில் வாசலில் கார் சத்தம் கேட்கும் ஓடிப் போய் திறந்து பார்ப்பாள். மூன்று குழந்தைகளும் பரிசுப் பொருட்களுடன் ஓடிவருவார்கள். ஆனி கைகளை நீட்டி அந்தப் பரிசுப் பொருட்களை வாங்குவாள். சட்டென்று பார்த்தால் வாசலில் யாரும் இருக்க மாட்டார்கள். தான் கண்டது பிரமை என்பது ஆனிக்குப் புரியவரும். சோகமாக இருண்டு கிடக்கும் வீட்டுக்குள் நுழைவாள்.

கிறிஸ்மஸுக்கு முந்தின நாள் ஆனியின் உடல் நிலை மிகவும் மோசமாகும். மூக்கில் இருந்து ரத்தம் பெருக்கெடுக்க ஆரம்பிக்கும். இயேசுவின் சிலையின் முன் மண்டியிட்டு கதறி அழுவாள். இந்த ஒரு நாள் மட்டும் என் உயிரை நீட்டிக் கொடுத்துவிடு. குழந்தைகளைக் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டுக் கண் மூடுகிறேன் என்று மன்றாடுவாள். இயேசுவின் சிலையில் இருந்தும் ரத்தம் வடியும்.

மறுநாள், தத்துக் கொடுக்கப்பட்ட மூன்று குழந்தைகளும் பரிசுப் பொருட்களுடன் வந்து சேர்வார்கள். கதவைத் திறந்து பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோவார்கள். ஆனியின் பிரார்த்தனை செவிமடுக்கப்பட்டிருக்காது. அவள் தரையில் விழுந்து இறந்துவிட்டிருப்பாள். குழந்தைகள் அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுவார்கள். தலையில் கிரீடம் சார்த்தப்பட்டு மூக்கில் பஞ்சடைக்கப்பட்டு ஆனி நல்லடக்கம் செய்யப்படுவாள்.

அடுத்த நாள் சர்ச்சின் முன் வாசல் மதிலில் நான்கு குழந்தைகளும் சோகத்துடன் அமர்ந்திருப்பார்கள். சற்று தள்ளி மூன்று கார்களில் தத்துப் பெற்றோர் காத்திருப்பார்கள். முதலில் இரண்டாவது மகனை அந்தப் பெற்றோர் அழைத்துச் செல்வார்கள். அவன் ஊனமுற்ற தன் தம்பியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வரமறுப்பான். வியாபாரியான அவனுடைய தத்து தந்தையோ வலுக்கட்டாயமாகப் பிரித்து அழைத்துச் செல்வார். அடுத்ததாக டாக்டர் மனைவி கடைக்குட்டியை மீனுவிடம் இருந்து வாங்கிச் செல்வார். அடுத்ததாக கடைசியாக மீனு ஊனமுற்ற தம்பியை கட்டி அணைத்து அழுவாள். அவனோ மனதைக் கல்லாக்கிக் கொண்டு அக்காவை தன்னிடமிருந்து பிரித்து போய் வா என்று சொல்வான். அவனுடைய அந்தச் செய்கை அக்காவை மேலும் துயரத்தில் ஆழ்த்தும். அவனைக் கூடவே அழைத்துச் செல்லவும் முடியாது. விட்டு விட்டுச் செல்லவும் மனமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பாள். ஊனமுற்ற சிறுவனோ வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளத் தயாரானவன்போல் சோகத்தை அடக்கிக்கொண்டு நிற்பான். மீனு அழுதபடியே தன் தத்துப் பெற்றோர் இருக்கும் காரில் ஏறிக்கொள்வாள்.
மூன்று கார்களும் புறப்பட்டுச் சென்ற பிறகு ஊனமுற்ற சிறுவன் தேவாலயத்தின் முன் வெறுமையாக விரிந்து கிடக்கும் மைதானத்தில் செயற்கைக்கால் பதிய தடுமாறியபடியே நடப்பான். அப்போது, மெள்ள ஒரு கரம் ஆறுதலாகப் பின்னால் இருந்து அவனைத் தொடும். திரும்பிப் பார்ப்பான். ஃபாதர் கருணையுடன் சிரித்தபடியே நின்றுகொண்டிருப்பார். அவருக்குப் பின்னால் இரு கைகளையும் விரித்து உலகையே அரவணைத்துக்கொள்ளத் துடிக்கும் ஏசுவின் கருணையின் குறியீடான சிலுவை பிரமாண்டமாக வானில் உயர்ந்து நிற்கும். தேவனின் சாம்ராஜ்ஜியத்தில் அநாதைகள் யாரும் கிடையாது என்பதுபோல் ஃபாதர் சிறுவனுக்கு கண்களால் ஆறுதல் சொல்வார். ஊனமுற்ற சிறுவன் முகத்தில் மெள்ள ஒரு சந்தோஷக் கீற்று வந்து மறையும்.

அப்போது தூரத்தில் ஒரு கார் வரும் சத்தம் கேட்கும். இருவரும் திரும்பிப் பார்ப்பார்கள். இரண்டாவது பையன் காரில் இருந்து துள்ளிக் குதித்தபடியே ஓடி வந்து தம்பியைக் கட்டி அணைத்துக் கொள்வான். வியாபார தம்பதி காரில் இருந்து இறங்குவார்கள். அண்ணன் தன் தம்பியை அணைத்தபடியே அவர்களுக்கு அருகில் அழைத்துச் செல்வான். அந்த தம்பதியினர் இரண்டு குழந்தையையும் அரவணைத்துக் கொள்வார்கள். துயரத்தின் இருளைக் கிழித்தபடி அடிவானத்தில் இருந்து அன்பின் சூரியன் மெள்ள உதித்துவரும். ஃபாதர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடியே அவர்களை வாழ்த்துவார்.

படம் முடிந்த பிறகும் உங்களை இருக்கையைவிட்டு எழவிடாமல் பிணைத்துப் போடுவது எதுவோ அதுவே சிறந்த படம். இந்தப் படத்தை நான் முதலில் பார்த்தபோது கடைசி எழுத்துகள் ஓடி முடியும்வரை ஒருவர்கூட இருக்கையை விட்டு எழவில்லை. இருண்ட அரங்கில் இருந்து வெளியே வந்தபோது பலருடைய கண்களில் நீர் கோர்த்து நின்றது. சுமார் இரண்டரை மணி நேரம் வேறோரு வாழ்க்கையை வாழ்ந்த மன நிறைவு அந்தக் கண்ணீரில் தெரிந்தது.

இந்தப் படத்தின் பின்னணி இசை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இளையராஜா மட்டும் இதற்கு இசை அமைத்திருந்தால் படம் தரும் அனுபவம் எங்கோ போயிருக்கும். சராசரிக்கும் கீழான படங்களையே தன் தோளில் தூக்கி நிறுத்தும் இளையராஜாவுக்கு இந்தப் படம் கிடைத்திருந்தால் உருக்கி எடுத்திருப்பார். ஒளிப்பதிவும் கூட மிகவும் சாதாரண தளத்தில்தான் இருக்கும். ஆனால், திரைப்படமானது என்னதான் காட்சி ஊடகம் என்றாலும் கதையும் திரைக்கதையும் வலுவுடன் இருந்தால் பார்வையாளரைக் கட்டிப் போட்டுவிடும் என்பதற்கு இந்தப் படம் சரியான உதாரணம். வேறென்ன, காட்சி மொழி என்பது வெறும் தொழில்நுட்ப மேதைமை அல்லவே.

000

 

இசை என்ற இன்ப வெள்ளம்

எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப்பேசுவது போல  90களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா? இப்போதைய இசை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணம் செய்கிறதா? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் தங்கள் வாழ்வோடு இணைத்துப் பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா?

எனக்குத்தெரிந்து ரஹ்மானையும் யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இணையத்தில் விவாதிக்கிறார்கள். அவர்கள் கூட சில நாள்களுக்குப்பிறகு இளையராஜாவுக்கு தாவிவிடுகிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒரிஜினாலிட்டி தேடிப் போகும் இயல்பு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? இப்போதைய இசையமைப்பாளர்கள் பூர்த்தி செய்யத் தவறும் இடம் இதுதான். அன்றைய ரசிகர்கள் பாடலின் இடைஇசையைக்கூட (interlude) ரசித்தனர். இப்போது? இப்போதைய இசை பற்றியோ இசையமைப்பாளர்கள் பற்றியோ அவர்கள் நம்மீது செலுத்தும் தாக்கம் பற்றியோ ஏதேனும் விவாதங்கள் நடைபெறுகின்றவா?

இசை இன்று மலிந்துவிட்டது என்பதுதான் உண்மை. எதை கேட்டாலும் இதன் ஒரிஜினல் வடிவம் என்ன என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. எதிலிருந்து இதை லிஃப்ட் செய்திருப்பார்கள் என்றுதான் மனம் கணக்கிடுகிறது. Casio, Roland என்று கீபோர்டுகள் சுலபமாக கிடைக்கும் இன்றைய காலகட்டத்தில், இசையை ப்ரோகிராம் செய்துவிட முடிகிறது. என்ன மாதிரியான பீட், எப்படிப்பட்ட வாத்தியக் கருவிகள் என்பதையெல்லாம் சொல்லிவிட்டால், ரெடிமேட் இசை ரெடி!

இப்படி இசை பற்றிய எந்தவித ஞானமும் இல்லாமல், அடிப்படைப்புரிதல்கள்கூட இல்லாமல், இவ்வாறு உருவாக்கப்படும் இசை எப்படி நெஞ்சைத் தொடும்?

இன்னொரு முக்கிய வித்தியாசம், அப்போதெல்லாம் இசை என்பது கேட்பதற்கானது. இன்றோ காட்சிகளோடு சேர்ந்து ரசிப்பதற்கானதாக மாறிவிட்டது. எனவே பார்வையாளர்களைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் இசையைக் கொல்வதில் சென்று முடிகின்றன.

ஐ பாட், ஐ ஃபோன், எம்பி3 போன்றவற்றில் இசையை நிரப்பி தொடர்ந்து கேட்டு சலிப்படைந்துவிடுகிறார்கள் இன்றைய ஆர்வலர்கள்.

இன்றைய இசையமைப்பாளர்கள் சர்வதேச ஆடியன்ஸை மனத்தில் வைத்தே இசையமைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பாடல்களை பகிர்ந்துகொண்டு பல்லாயிரக்காணவர்களை ஈர்க்கத் துடிக்கிறார்கள். இந்நிலையில், சர்வதேச ரசிகர்களுக்காகவே இசையை உருவாக்கவேண்டியது அவர்களுக்கு அவசியமாகிவிடுகிறது. தனித்தும் முக்கியமில்லாமல் போய்விட்டது. நாம் உருவாக்கும் இசை உள்ளத்தைத் தொடுகிறதா என்று பார்ப்பதில்லை. இப்படி உருவாகும் இசையை போகிற போக்கில் ரசிக்க மட்டுமே முடியும்.

எண்பதுகளில் உருவான இசை வேறு ரகம். ஒரு பாடலைச் சொன்னால் இசையமைத்தவர் யார் என்பதை அவர்களால் சொல்லிவிடமுடியும். இப்போதைய பாடல்களை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்றே தெரியவில்லை.

இன்றைய தொலைக்காட்சி சானல்களின் பெயர்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் எல்லாம் ஒன்றுபோல் இருப்பது போல், போஸ்டர்களில் உள்ள இசையமைப்பாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டால் எல்லாப் பாடல்களும் ஒன்றுபோலவே இசைக்கும். எது விற்கிறதோ அதைக் கொடுக்கிறேன் என்னும் மனோநிலையே இதற்குக் காரணம்.

இசையின் தரம் இப்படி இருக்கும்போது, ஏற்கெனவே அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களால் எப்படி நின்று நிதானமாக இன்றைய இசையை ரசிக்கமுடியும்? எப்படி ஒரு பாடல் அவர்கள் மனத்தில் தங்கும்? எப்படி வாழ்வோடு பிணைந்து நிற்கும்? எப்படி ஆத்மாவோடு ஒன்று கலக்கும்?

இசை மட்டுமல்ல, கலை, இலக்கியம் போன்றவற்றின்மீதும் மக்கள் ஆர்வமிழந்து வருகிறார்கள். நம் மண்ணுக்கான இசை, மண்ணின் மொழி போன்றவற்றின்மீது அவர்களுக்குப் பிடிப்பில்லை. உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நம் ரசனை போக்கை வெகுமாக மாற்றிவிட்டது.

ஒருவர் இளமையில் கேட்டு, பார்த்து, ரசித்த விஷயங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கும். எனில், இப்போதைய தலைமுறை யாருடைய இசையை எதிர்காலத்தில் சிலாகிப்பார்கள்?

0

சின்னப்பயல்

தோனி – நாட் அவுட்

வருடிச்செல்லும் மயிலின் இறகினையொத்த இசையைப்பற்றி ரசித்த சில கணத்திற்குள் இன்னுமொரு கூக்ளி ராஜா சாரிடமிருந்து “தோனி” வழியாக. முதலிலேயே சொல்லிவிடுகிறேன், நீங்கள் ஒரு “நெஞ்சத்தைக் கிள்ளாதே”வையோ “மூடுபனி”யையோ அல்லது ஒரு “முள்ளும் மலரும்” இசையையோ எதிர்பார்த்து இங்கு வந்திருப்பீர்களானால் உங்களை ராஜா இந்தத்தடவை திருப்திப்படுத்த மாட்டார் என்றே சொல்லுவேன். கொஞ்சம் வித்தியாசமாக, கதைக்களனுக்குப் பொருத்தமான இசையாகத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த “தோனி-நாட் அவுட்”-ன் பாடல்கள் அனைத்தும்.

மொத்தமே நான்கு பாடல்கள். அனைத்தும் ஒவ்வொரு ரகம். ஒன்றோடொன்று கலக்காத Different Genre. ராகதேவனுக்கு படைப்பதில் உள்ள ஆனந்தம் வேறேதிலுமில்லை. எனினும் பாடல்களைக்கேட்டு வாங்குபவருக்கே அதிஉன்னத பாடல்கள் கிடைத்திருக்கின்றன என்பது அவரின் எண்பதுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. உதாரணத்துக்கு ஸ்ரீதர் படங்களுக்கு ராஜா சார் இசைத்தது, பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் போன்றோரின் படங்களில், “சபரி” தேர்ந்தெடுத்த நெல்லிக்கனி போல அவர்கள் ராஜாவிடமிருந்து வாங்கிய இசை என்றென்றும் ராகதேவன் மற்றும் அந்த இயக்குனர்களின் பெருமையைப் பேசிக்கொண்டுதானிருக்கிறது. அவ்வகையில் பிரகாஷ்ராஜ் நல்ல ரசிகராயிருந்த போதிலும், நல்ல தெரிவாளராக இருக்கிறாரா என்றால் மிஞ்சுவது கொஞ்சம் ஏமாற்றமே!

சின்னக் கண்ணிலே

ஷ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் பாடிய துள்ளலிசைப்பாடல். என்னைக்கேட்டால் இந்த இருவரும் “முன்பே வா என் அன்பே வா“ பாடலை விட இந்தப்பாடலை அருமையாகப் பாடியிருக்கின்றனர் என்றே சொல்லுவேன். நரேஷ் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்று நினைக்கும்போது எனக்கு சிலிர்த்துத்தான் போகிறது. பனிக்கால அதிகாலையில் அனைவருக்குமே உரித்தான கரகரப்பான குரலில், இருப்பினும் பிசிறு ஏதும் தெரியாமல் தெளிவாகப் பாடியிருக்கிறார். ‘கண்ணுக்குள் நிலவு’ படப்பாடல் “ஒரு நாள் ஒரு கனவு” போலவே இதிலும் பியானோவின் இனிய சீன மணி போன்ற இசைக்கோவையுடன் தொடங்கும் பாடல், பின்னர் அந்த பியானோவின் ஒலித்துள்ளல் பாடலின் இறுதி வரை இருவரின் குரலோடும் சேர்ந்தே பயணிப்பது தென்றலின் மென்மையை உணரச்செய்யும் அற்புதம். பாடலின் கட்டமைப்பு ஐரோப்பியன் பாணியில் அமைந்த ஒரு Church Choir ஆகத்தான் இருக்கிறது. Verse and Chorus என்ற அவர்களின் பாணியில் அமைந்த பாடல் இது. Verse –ஐ ஷ்ரேயா கோஷல் தொடங்க Chorus- பின் தொடர்கிறது. 0:54-ல் தொடங்கும் Choir சட்டெனெ முடிந்து பின்னர் வயலின் மற்றும் ட்ரெம்பெட்டின் இசைக்குப்பின்னரும் தொடர்கிறது Choir. தமிழனுக்கு ஒரு புதிய அனுபவம்தானிது. இடையிடையே வந்து செல்லும் புல்லாங்குழல் இசை எந்த இடத்திலும் ஷ்ரேயா’வின் குரலை மீறிச்செல்லாமல் பாடலுக்குள் புகுந்து செல்லுதல் இன்னும் அழகு. எங்க நம்ம நரேஷக்காணமேன்னு கொஞ்சம் நம்மள நினைக்கவைத்த ராஜா சார், அவரை இதோ பாட்டுல இருக்கார்னு அறிமுகப்படுத்துகிறார் 2:11 ல், கொஞ்சம் அடிக்குரலிலேயே ஆரம்பிக்கிறார். ஒரு வேள ராஜா சார் என்ன சொல்லுவாரோன்னு பயந்துக்கிட்டே அடிக்குரல்ல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு!

அவர் இசையமைத்த பாடல்களில் இரண்டு சரணங்களுக்குமிடையில் அவர் நமது கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு இதுவரை நாம் காணாத, பிறரால் காண்பிக்க இயலாத ஒரு இசைவெளி’க்கு Interludes மூலமாக அழைத்துச்செல்வார் ராஜா. அவர் இசையமைத்த அத்தனை பாடல்களிலும் இந்தப்பயணம் இனிதே நிகழும். வெறுமனே கண்ணை மட்டும் மூடிக்கொண்டு நம் மனதை அவரிடம் கொடுத்து விட்டால், ஒரு கண்ணில்லாதவனை அழைத்துச்சென்று, திடீரென அவனுக்கு கண்ணைக்கொடுத்து, பிறகு அவன் தன் வாழ்நாளில் எப்போதுமே பார்த்தறியாதவற்றைக்காட்டி அவனை அனுபவிக்க வைத்துவிட்டு, அந்த போதையிலேயே அங்கேயே தங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் பிறகு அங்கேயே விட்டுவிடாமல் Interludes முடியும்போது மீண்டும் இந்த உலகிற்கே அழைத்து வருவது என்பது ராஜா சாரால் மட்டுமே சாத்தியம்.

அப்படியான ஒரு அற்புத Interludesஐ இந்தப்படத்தின் எந்தப்பாடல்களிலும் காணக் கிடைக்கவில்லையெனினும் இந்தப்பாடலில் அவர் Choir மூலமாக அந்தக்குறையை தீர்த்துவைக்கிறார். எனினும் இந்த Choir Style முயற்சி அவர் ஏற்கெனவே “பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் “கோடைக்காலக்காற்றே” பாடலில் பரீட்சித்துப்பார்த்ததுதான்.!

ஷ்ரேயாவின் குரலுக்கு அவ்வப்போது இடையே வந்து இதம் சேர்ப்பது புல்லாங்குழல் என்றால் நரேஷின் குரலுக்கு பதம் சேர்க்கிறது Synthesizer. 2:33 ல் ஆரம்பிக்கும் ஒரு Interlude ‘இதயம்’ படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் பழயபாடல் போல் உருக்கொண்ட “ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லே “ பாடலின் Interlude ஐ ஒத்திருக்கிறது. அந்தப்பாடலில் 2:46 ல் ஆரம்பிக்கும் Interlude அப்படியே எடுத்துக் கையாளப் பட்டிருக்கிறது இங்கே. ஒண்ணு பண்ணுங்க, இந்த “சின்னக்கண்ணிலே”வை கொஞ்சம் Tempo-வைக்குறைச்சு கேட்டுப்பாருங்க “ஏப்ரல் மேயிலே” வந்துரும்..! J

தாவித்தாவிப் போகும்

Opening Music- ல் கிட்டாரும் மணியும் Synthesizer மாக சேர்ந்து ஒலித்து பின்னர் வயலினுமாக ஆரம்பிக்கும் இந்த ராஜா சாரின் குரலில் இருக்கும் பாடல் உங்களைத்தாலாட்டும். இந்தப்பாட்டுக்கு Guitar ல Chords எடுக்கச்சொன்னா என்னால எடுக்கமுடியும். ஏன்னா அவ்வளவு எளிமையாக இருக்குங்கறத சொல்லவர்றேன். “சின்னத்தாயவள்” என்று நாயகனில் இடம்பெற்ற தாலாட்டிற்குப்பின் இதுதான் நல்ல தாலாட்டு என்றே தோன்றுகிறது எனக்கு. Pathos ஆக இசைக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல் தாலாட்டவும் தான் செய்கிறது. முதல் Interlude க்கென 1:16 ல் தொடங்கும் வயலின், பின்னர் Double Bass உடன் இணைந்து கொண்டு இசைக்க ட்ரெம்பட்டின் அமுக்கமான ஒலியுடன் நம் மனதை கனம் கொள்ள வைக்கிறது. இரண்டாம் Interlude, Guitar உடன் தொடங்கி Violin இழைக்க இழைக்க மெருகு ஏறுகிறது. இந்தப்பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் இரண்டு Inetrludes களும் பாடலை விட்டு வேறு தளத்தில் பயணித்து பின்னர் பாடல் வரிகளுக்கென ஓய்கின்றன. சின்ன சிம்ஃபொனி என்றே இந்தப்பாடலைக்கூறலாம் என்னுமளவிற்கு அதிக சங்கதிகள் விரவிக்கிடக்கிறது பாடல் முழுதும்.. ராஜாவின் கூடவே பாடும் Violin நமக்கு ஒரு Feelஐ உருவாக்கி நம்மை பாடலோடு ஒன்றத்தான் வைக்கிறது.

விளையாட்டா படகோட்டி

இந்தப்பாடலுக்கு இரண்டு Versions இருக்கு, Male Version க்கு ஹரிஹரனும், Female Versionக்கு ஷ்ரேயாவுமாக. எனக்கென்னவோ ஷ்ரேயாவின் Version தான் Better ன்னு தோணுது. மேலும் இந்தப்பாடல் முழுக்க “விருமாண்டி”யில் ஷ்ரேயாவும், கமலும் சேர்ந்து பாடின “ஒன்ன விட” பாடலின் பாணியிலேயே அமைந்தது போலவே இருக்கிறது. பாடல் தொடக்கத்திலிருந்து இடையிலும், முடிவிலும்கூட அதே பாணியிலேயே தான், Treatment செய்யப்பட்டிருக்கிறது. Rustic Style ல் Chorus உடன் ‘தந்தனத்தன தந்தன்னா’ என்று தொடங்கும் இந்தப் படகோட்டியின் பாடலில், ஆழியில் ஆடும் ஓடம் போல் நாமும் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க இயலவில்லை. இந்தப்பாட்டு முடிஞ்ச பிறகும் Loop-ல் வைக்கப்பட்டது போல திரும்பத்திரும்ப என் தலைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது நாள் பூராவும், ஏதோ போதை ஏறி பின்னர் இறங்காமல், அதையே இன்னும் அனுபவித்துக் கொண்டேயிருக்கவேணும் என்பது போன்ற உணர்வை இந்தப்பாடல் தருகிறது. கூடவே இசைக்கப்படும் வயலினுடன், Sarod-ம் கூடவே சேர்ந்து இசைக்கப்பட்டிருக்கும் என்றே எனக்குப்புலப்படுகிறது கேட்கும்போது. அலையில் மேலேறிக்கீழிறங்குவது போல, சட்டென்று அல்ல, கைதேர்ந்த படகோட்டியின் படகில் பயணித்தால், அவன் அலையின் முகடுகளுக்கேற்ப படகை திறம்பட செலுத்துபவன் போல ராஜா சார் இசைத்திருக்கிறார் இந்தப்பாடலை. தவறியும் கீழே விழுந்துவிடாமல் அதே நேரம் உங்களை முழுதும் அந்த அலைக்கழிப்பிலேயே வைத்திருப்பதும் இந்தப்பாடலின் சிறப்பு. பல விதமான ஏற்ற இறக்கங்களுடனான நோட்ஸ்களுடன் Violin ன் கற்றைகளால் இசைக்கப்பட்டிருக்கிறது இந்தப்பாடல். இசைத்த Interludes களும் இந்தப்பாடலில் பாடலை விட்டு வேறு திசையில் பயணிக்காது பாட்டின் Tempo விற்குத்தக்கவே வந்து செல்கிறது.

இந்தப்பாடலைக்கேட்பதற்கு நீங்கள் உங்கள் மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எந்த மனநிலையிலிருப்பினும் உங்களை பாடலின் Mood அதன் திசையில் பயணிக்கவைக்கும், வழிதவறவிடாமல்.

Male Version- ஐப்பற்றிக்கூற வேண்டுமெனில், ஹரிஹரனுக்கு பிருகா பாடக்கூடிய குரல். அதனால் அவர் நிறைய Yodelling-கிற்கு அதிகம் இடம் கொடுப்பார். பாடலில் அது இல்லாத போதும் வரிகள் முடிந்தபின்னருமான ராகத்தை தொடர்ந்து பாடிக்கொண்டேயிருப்பார், நல்ல உதாரணத்துக்கு “பொய் சொல்லக்கூடாது காதலில்” பாடலைக்கேட்டீர்களானால் எளிதில் விளங்கும். அந்த Extra Fittings ராஜா சாரிடம் எடுபடுவதில்லை. அவர் எதையும், பாடலுக்குத்தேவையானவற்றை மட்டுமே நறுக்கிக்கொடுக்கவைப்பார். அது போல அமைந்தது தான் “ காசி” படத்தில் ஹரிஹரன் பாடிய அத்தனை பாடல்களும், அவரின் இயல்பிலிருந்து முற்றிலும் மாற்றி தமக்கெனப் பாடச்சொல்வார் ராஜா. (சுருக்கமாகச்சொன்னால் பாடுவதில் சுதந்திரம் கிடைக்காது ராஜா’விடம் J.) அதனாலேயே இந்த Male Version ல் எனக்கு உடன்பாடில்லை.

கிரிக்கெட்டில் தோனி எப்பவுமே ஸிக்ஸர் அடிக்கிறதில்ல. Ones and Twos மற்றும் சில சமயங்களில் Boundry-யுமாக அடிப்பது போலவே ராஜா சாரின் இசை இந்தப்படத்திற்கு. நாமும் கொஞ்சம் காத்திருக்கலாம் படத்தின் பின்னணி இசையை அனுபவிக்க..!

–    சின்னப்பயல்

 

எம்.ஜி.ஆர் : ஆயிரத்தில் ஒருவர்

‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.

என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?

சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.

‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’

ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’

விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.

வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.

காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.

‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’

எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.

‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.

எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.

கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.

திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.

‘படம் நிறுத்தப்படுகிறது.’

வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.

முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.

எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.

0

ஆர். முத்துக்குமார்

(எம்ஜிஆரின் அரசியல் வாழ்வைப் பதிவு செய்யும் ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்)

உறக்கமற்றவன்

பகுதி 6

கஜினி படத்தில் எப்படி சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினோமோ, அதே மாதிரி அப்படத்தில் நடிக்கும் வில்லனையும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார் முருகதாஸ். பொதுவாக வில்லன்களை இரண்டு வேடங்களில் யாரும் நடிக்க வைத்தது இல்லை. தமது எண்ணம் புதுசாக இருக்கும், மற்றவர்களால் பாராட்டப்படும் என்று நினைத்தார் முருகதாஸ். ஆனால் சரவணன், சார் இது சரிப்பட்டு வராது, வேண்டாம் என்றார். பிடிவாதமாக தான் நினைத்ததைத்தான் செய்தார் முருகதாஸ். ஆனால் ரசிகர்களின் கருத்தும், பத்திரிகைகளின் விமர்சனங்களும் சரவணன் சொன்னதைத்தான் பிரதிபலித்தன.

இந்தியில் அமீர்கான் நடிக்க, கஜினியை ரீமேக் செய்த முருகதாஸ் தமிழில் செய்த இந்தத் தப்பைத் திருத்திக் கொண்டார் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

இந்தக் கட்டுரைகளில் நான் ஒரு விஷயத்தை வலியுறுத்த பல சம்பவங்களைச் சொல்லி வருகிறேன். அதற்குக் காரணம், ஒவ்வொரு இயக்குனர்களும் எப்படியிருந்தாலும் உதவி இயக்குனர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை உதாரணம் மூலம் விளக்கத்தான்.

பாரதிராஜாவிடம் பணியாற்றிய அன்பு பற்றி இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். உதவி இயக்குனர்களின் உரிமையை பற்றிப் பேசுகிறபோது தாஜ்மஹால் படத்திலிருந்து இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லத் தோன்றுகிறது.

இப்படத்தில் பக்கத்து ஊரிலிருக்கும் காதலி ரியாசென்னைப் பார்க்க நள்ளிரவில் ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கிச் செல்வார்கள் ஹீரோவான மனோஜும் அவரது கூட்டாளிகள் சிலரும். அப்படிச் சென்று அவரைச் சந்திக்கும்போது ஊர்க்காரர்கள் பார்த்துவிடுவார்கள். ஊர் விட்டு ஊர் வந்து காதலிப்பதா என்று கோபமுறும் அவர்கள், கூட்டமாக விரட்ட, மனோஜும் அவருடன் சென்ற அவரது தோழர்களும் தண்ணீருக்குள் சட்டென்று குதித்து உள்ளேயே மூழ்கி மூழ்கித் தங்கள் ஊருக்கு வந்து சேர்வார்கள். இது சீன். இவர்களை துரத்தி வரும் அசலூர்க்காரர்கள் தங்கள் வாயில் கத்தியை வைத்துக்கொண்டு அப்படியே தண்ணீரில் நீந்தியபடி வருவார்கள்.

துரத்தி வரும் இவர்களைத்தான் படம் பிடித்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. எல்லாரையும் கழுத்தளவு தண்ணீரில் நிற்க வைத்துவிட்டு காட்சியை எடுக்கத் தயாராகிவிட்டார். ஸ்டார்ட், கேமிரா என்று உத்தரவும் கொடுத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் சார் ஒரு நிமிஷம் என்று பாரதிராஜாவின் உத்தரவுக்கு குறுக்கே புகுந்து ஆற்றுக்குள் இறங்கி ஓடினார் அன்பு. கையோடு எடுத்து சென்ற கத்தியை தண்ணீரில் நிற்கும் அந்த வாலிபரின் வாயில் கவ்விக் கொள்ள செய்துவிட்டு மேலேறி வர, செம பிடி பிடித்துக் கொண்டார் பாரதிராஜா. ”யோவ்… அறிவிருக்கா உனக்கு? அவன் வாயில நான் கத்திய வைக்கச் சொன்னேனா” என்று கோபத்தில் தாண்டவம் ஆட, ஆடிப்போனார் அன்பு.

”இல்ல சார். போன ஷாட்ல அவரு வாயில கத்தி இருந்திச்சு. கன்ட்டினியுட்டி மிஸ்ஸாவுதேன்னு…” என்று அவர் இழுக்க, மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. அப்போது பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்தது அவர்களை அல்ல. அந்த வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கிச் செல்லும்போது மேலே தோன்றுமே நீர்க்குமிழிகள்…. இதைதான் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை அன்பு. கண் எதிரே ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதைச் சொல்லிடணும். அவங்க தப்பா நினைச்சாலும் சரி. அந்தப் படம் முழுக்க நான் டைரக்டர்கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன். சில நேரம் ஓங்கி அடித்தாலும் அடிப்பார். ஆனால் அவ்வளவும் நான் செய்து கொண்டிருக்கிற வேலைக்காக என்றால் அதுதான் சந்தோஷம் என்கிறார் அன்பு. தற்போது மிட்டாய் என்ற படத்தை இயக்கி வருகிறார் இவர்.

இது எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் இன்னொன்று. சம்பளம். படப்பிடிப்பில் தினசரி பேட்டாவை வாங்கிவிடுகிற உதவி இயக்குனர்களுக்குத் தனியாகப் பேசப்பட்ட சம்பளம் மட்டும் முழுமையாக வந்து சேராது. எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களும் அப்படியல்ல என்றாலும், சில நிறுவனங்களில் கடைசி நேரத்தில் கை விரித்துவிடுவார்கள். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இயக்குனர் ஒரு யுக்தி செய்வார். தன்னுடைய சம்பளத்தைப் பேசும்போதே உதவி இயக்குனர்களுக்குமான சம்பளத்தையும் பேசுவார். அதை என் சம்பளத்திலிருந்தே கொடுத்துவிடுகிறேன். நீங்கள் எனக்குக் கொடுக்கும்போது அதையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்களேன் என்பார். அப்படிப் பேசி வாங்கப்படுகிற சம்பளம் உதவி இயக்குனர்களின் கைக்குப் போகிறதா என்றால், பெரும்பாலான இயக்குனர்கள் அதையும் ஸ்வாகா செய்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை தரும் உண்மை.

மேய்ப்பனே புல் தின்கிற இந்தக் கொடுமைக்கு ஆளாகிற உதவி இயக்குனர்கள், வாய் பேச முடியாமல் ஒதுங்கி நின்று அழுவது இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதையெல்லாம் களைய வேண்டும் என்பதற்காகவே இயக்குனர்கள் சங்கம் அதிரடியாக ஒரு முடிவெடுத்து இருக்கிறது. உதவி இயக்குனர்களின் சம்பளத்தை சங்கமே வாங்கி அவர்களுக்குப் பிரித்துத் தரும். இப்படித் தீர்மானம் போட்ட சில தினங்களிலேயே, ‘பெண் சிங்கம்’ படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட சம்பளத்தை, முதல்வர் கருணாநிதி கையால் அப்படத்தில் வேலை செய்த உதவி இயக்குனர்களுக்கு வழங்கி தனது அதிரடியை ஆரம்பித்து வைத்தது இயக்குனர்கள் சங்கம்.

ஆனால் இந்த முறையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இயலாதபடி தொடர்ந்து முட்டுக்கட்டைகள். சில பட நிறுவனங்களும் இயக்குனர்களும்கூட இந்த முறைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. ஆனால் தனது திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறது இயக்குனர்கள் சங்கம்.

படப்பிடிப்புக்கு முன்….

ஒரு படம் கதை விவாதத்தில் துவங்கும் என்பதை நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். அந்த விவாதத்தில் உதவி இயக்குனர்களின் பணி என்ன என்பதையும் அலசிவிட்டோம். படப்பிடிப்புக்கு முன்பு இன்னும் பல முக்கியமான வேலைகள் இருக்கிறது. ‘இன்று பாடல் பதிவுடன் இனிதே துவங்குகிறோம்…’ என்ற வாசகத்தை அடிக்கடி தினத்தந்தியில் பார்த்திருப்பீர்கள்.

டைரக்டர் தனது கோ டைரக்டர் மற்றும் இரண்டு உதவி டைரக்டர்களுடன் இங்கு வந்து அமர்ந்து விடுவார். ஏற்கனவே இசையமைப்பாளரிடம் கதை சொல்லப்பட்டிருக்கும். பாடல்கள் படத்தில் எந்தெந்த இடங்களில் வரவேண்டும் என்பதை இயக்குனரும் இசையமைப்பாளரும் தீர்மானிப்பார்கள். இசைஞானி இளையராஜா போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் அந்த இடத்தையும் அவர்களே தீர்மானித்துவிடுவார்கள். நாம் சொல்வது அடுத்தகட்ட இசையமைப்பாளர்களை பற்றியும் அல்லது அறிமுகமாகிற இசையமைப்பாளர்களின் கம்போசிங் பற்றியும்.

சுச்சுவேஷனுக்கு ஏற்றார் போல இசையமைப்பாளர் ட்யூன் போட்டுக் கொண்டிருப்பார். அந்த ட்யூனை கேட்டுவிட்டு டைரக்டரின் காதில் ரகசியமாக தனது அபிப்ராயத்தை சொல்வார்கள் இந்த உதவி இயக்குனர்கள். சார், இந்த ட்யூனை விட இன்னும் பெட்டரா இருக்கலாம் என்று சொல்வதுண்டு. பல ட்யூன்கள் இந்த உதவி இயக்குனர்களால் பாழாய்ப் போகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை அந்த இசையமைப்பாளர் இயக்குனரை விட்டுவிட்டு காதில் கிசுகிசுக்கும் இந்த உதவி இயக்குனர்களைப் பிடித்துக் கொள்வார். தம்பி, எப்பிடியிருக்கு என்று அவர் நேரடியாகக் கேட்டுவிடுவதால் பலர் சூப்பர் என்று கூறி, பின்பு டைரக்டரிடம் வாங்கியும் கட்டிக் கொள்வார்கள். இந்த நேரத்தில், ’கதைக்கு இந்த ட்யூன் பொருந்துகிறதா’ என்பது மட்டுமே உதவி இயக்குனர்களின் பார்வையாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் ட்யூனுக்கு டம்மி வரிகள் போடக்கூடிய வாய்ப்பும் இந்த உதவி இயக்குனர்களுக்குக் கிடைக்கும். ‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும். கேட்கும்போதெல்லாம் அந்த ஞாபகம் தாலாட்டும்…’ என்றொரு பாடல் சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே தாலாட்டியது நினைவிருக்கலாம். அதை எழுதிய கலைக்குமார் என்பவர் டைரக்டர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தார். கம்போசிங்கின்போது அவர் போட்ட டம்மி வரிகள்தான் பின்பு பாடலாக வந்து அவரைப் பாடலாசிரியராகவும் மாற்றியது. அதன்பின் சுமார் ஐம்பது பாடல்களாவது வெவ்வேறு படங்களில் எழுதிவிட்டார் அவர்.

பாடல் பதிவு முடிந்ததும் உதவி இயக்குனர்களின் அடுத்த வேலை போட்டோ ஷுட்டிங்குக்காக உதவுவது. முன்பு இந்த கலாசாரம் இல்லை. ஆனால் இப்போது 90 சதவீத படங்களுக்கு தனியாக போட்டோ செஷன் எடுக்கப்படுகிறது. இதற்காகவே ஸ்பெஷல் போட்டோகிராபர்கள் இருக்கிறார்கள். கைமல், மணிகண்டன், போன்ற இந்த ஸ்பெஷலிஸ்டுகள் மும்பையிலிருந்து விமானத்தில் பறந்துவந்து வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். பில்…? லட்சங்களில்! இதில் இன்னொரு எக்ஸ்பர்ட்டும் இருக்கிறார். தேனி ஈஸ்வர். இவர் விகடனின் வளர்ப்பு. இவரைப்போலவே சங்கர் சத்யமூர்த்தி, ஆன்ட்டனி ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான்களும் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். இப்படி எடுக்கப்படுகிற புகைப்படங்கள் பத்திரிகை விளம்பரங்களுக்கும், போஸ்டர் அடிக்கவும் பயன்படுகின்றன. பெரும்பாலும் இவை கதையை ஒட்டியே இருக்கும். இப்போது சில இயக்குனர்கள் அதையும் செய்வதில்லை. எங்காவது நல்ல புகைப்படத்தை பார்த்தால் அதே மாதிரி நம்ம ஆர்ட்டிஸ்ட்டை வச்சு எடுத்துக் கொடுத்திடுங்க என்று கூறிவிடுகிறார்கள்.

இந்த மாதிரி அசத்தல் புகைப்படங்களைத் தேடிப்பிடிக்கிற வேலையும் உதவி இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்படும். லேண்ட் மார்க், ஹிக்கிம் பாதம்ஸ் என்று புத்தகக்கடைகளில் அலைந்து திரிந்து நல்ல புகைப்படங்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கி வருவதும் இவர்களின் வேலைகளில் ஒன்று. இன்டர்நெட்டில் தேடுவதும் இவர்களின் பணி.

(தொடரும்…)

முதல் ஐந்து பகுதிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.