ஜுராசிக் தேசம்?

ஜுராஸிக் பார்க் படம் பார்த்திருப்பீர்கள். மைக்கேல் கிரேட்டனின் நாவல் ஒன்றின் திரைவடிவம். அந்த நாவலின் அடிநாதமாக விளங்கும் கருத்து இதுதான்: ஒரு சிஸ்டம் எந்த அளவுக்கு எவ்வித் தவறும் நேர்ந்துவிடாத நேர்த்தியின் உச்சத்திற்குச் செல்கிறதோ, அதற்கு இணையாக மிகச் சிறிய மாறுதலும்கூட அந்த சிஸ்டத்தை தவிடுபொடியாக்கிவிடலாம்.

அந்தப் படத்தில் இயான் மால்கம் என்று ஒரு பாத்திரம். கணிதவியலாளர். ஜுராஸிக் பார்க் கன கச்சிதமாக விளங்குவதைப் பார்த்ததுமே அது வெகுநாள் சீராக நடைபெறாது எனச் சொல்லுவார். மற்றவர்கள் எரிச்சலடைவார்கள். எல்லாம் நல்லா நடக்கும்போது ஏன் இந்த முணுமுணுப்பு?

டைனோசர்கள் யாவும் மரபணுக்களினால் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டவை. அவை முழுதும் தமது கட்டுப்பாட்டில் இருப்பவை என்று அந்த பார்க்கின் சொந்தக்காரர் நம்பிக்கொண்டிருப்பார். அது பற்றி இயான் மால்கம் இப்படிச் சொல்வார்:

”எப்படிப்பட்டவை என்பதே தெரியாத உயிர்வகைகளை நீங்கள் மிகக் குறைவான காலத்தில் உருவாக்கி விடுகிறீர்கள். அதைப் பற்றி முழுமையாக உங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் நீங்கள் உருவாக்கிவிட்டதால் அவை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என நினைக்கிறீர்கள். ஆனால் அவை உயிருடையவை என்பதை மறந்துவிடுகிறீர்கள்.”

சர்வ நிச்சயத்தன்மையுடன் மையக் கட்டுப்பாட்டுக்குள் அனைத்தையும் கொண்டு வந்து உருவாக்கப்பட்ட ”ஜுராஸிக் பார்க்” மெல்ல மெல்ல குழப்பமடைந்து அழிவுக்குள் மூழ்குவதைத் திரைப்படம் காட்டும்.

இந்தக் கதையில் மறைந்திருக்கும் ஒரு பகடி என்னவென்றால் டைனோசர்களின் உடலமைப்பு, அதீத சிக்கலாகிப் போனதால் புற உலகில் ஏற்பட்ட சிறுமாற்றம் கூட அவற்றை அழித்துவிட்டதாகக் கருதப்படும் ஒரு கோட்பாடுதான். விண்கல் டைனோசர்களை அழித்தது அல்லது கடுமையான எரிமலைச் சீற்றங்கள் அழித்தன என்கிற கருத்துகளுடன் கூட இந்தக் கோட்பாடு பொருந்தும். விண்கல்லால் ஏற்பட்ட சூழல் மாற்றம் பிற உயிர்களால் தாக்குப்பிடிக்க முடிந்தது என்ற போதிலும் டைனோசார்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்கு முந்தைய சூழலுக்கு மட்டுமே அவை பழகியிருந்தன.

ஒரு குறிப்பிட்ட உயிரினம் தான் வாழும் புறச்சூழலுக்குத் தகுந்தபடி வாழ, அந்த உயிரினத்தின் உடல் ரீதியிலான அமைப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் நாம் தகவமைப்புகள் (adaptations)  என்று சொல்கிறோம்.

பரிணாம மாற்றங்கள் நடக்கும் விதம் குறித்து டார்வின் தொடங்கி நவீன மரபணுவியல் வரை இப்போது நமக்கு அளிக்கும் சித்திரம் சிக்கலானது. இந்தத் தகவமைப்புகள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடக்கும் மரபணுக்களின் பகடையாட்ட மாறுதல்கள், புறச்சூழலின் மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தங்கள் போன்றவை இணைந்து ஏற்படுபவை. ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு ஓர் உயிரினம் கன கச்சிதமாகத் தகவமைப்பு அடைந்திருந்தால் அந்தச் சூழலில் ஒரு சிறிய மாற்றம்கூட அந்த உயிரினத்துக்கு எமனாகிவிடலாம்.

பரிணாம உயிரியலின் அடிப்படை உண்மை இது. உயிரினங்களின் அளப்பரிய பன்மையின் மறுபக்கமாக விளங்கும் ஓர் இருண்ட யதார்த்தத்தின் விளக்க விதியும் கூட. எண்ணிப்பாருங்கள். நமது புவியில் இன்று தோராயமாக 50,000,000 உயிரின வகைகள் (species) உள்ளன. அருமையான, செழிப்பான பன்மை வளம்தான் இல்லையா? ஆனால் உண்மை என்னவென்றால் உலகில் உயிர் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இருந்த, இருக்கிற உயிரின வகைகளின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் அது இந்தத் தொகையை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னொரு விதமாகச் சொன்னால், இன்று இருக்கும் ஒவ்வொரு உயிரின வகைக்கும் இந்த பூமியின் நிலவியல்/உயிரியல் வரலாற்றில் 1000 உயிரினங்கள் அழிந்திருக்கின்றன. ஏன்? அதற்கான ஒரு விடை – சிக்கலான கட்டமைப்புகள் ஓர் உயிரினத்தில் அதிகரிக்க அதிகரிக்க அது அழிவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன. இதனை நாம் எந்த அளவு புரிந்து கொண்டிருக்கிறோம்?

அதிக விளைச்சல் தரும் நவீன விதை ரகங்களை எடுத்துக் கொள்வோம். இந்த High Yielding Varieties (HYV)  ஐ உருவாக்கியவர் நார்மன் போர்லாக் (Norman Borlaug). மிகச்சிறந்த விளைச்சலைத் தருவதற்காக மரபணு மாற்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட விதைகள். கோதுமையில் தொடங்கி அரிசி வரை  ஒவ்வொரு பயிர் வகைக்கும் விரைவில் HYV வகைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு குணாதிசயத்துக்கும் என்று தேர்ந்தெடுத்த பயிர் வகைகள். 1950 இல்  அமெரிக்கக் கோதுமையை நோய் விளைவிக்கும் ஒரு பூஞ்சணம் பெரிய அளவில் தாக்கி அழித்தது. 40 சதவிகிதப் பயிர் அழிந்தது. அந்தப் பூஞ்சணத்துக்கு எதிரான போரில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிக விளைச்சல் தரும் பண்பும் கொண்ட மரபணுக்களை உடைய கோதுமைப் பயிரை போர்லாக் உருவாக்கினார். இந்த வெற்றி ஊடகங்களால் கொண்டாடப்பட்டது.

வளரும் நாடுகளுக்கு உணவு தானியத் தன்னிறைவின் பொக்கிஷ அறைக்கு இதோ தங்கச்சாவி. ஒவ்வொரு விவசாயப் பல்கலைக் கழகமும் ஆராய்ச்சி மையமும் அதிக விளைச்சலுக்கான புதிய ரகங்களை உருவாக்க ஆரம்பித்தனர். ஆங்காங்கே உள்ள பிராந்திய உள்ளூர் வகைப் பயிர்களுக்கு மாற்றாக இவை விவசாய விரிவாக்க மையங்களால் பரப்பப்பட்டன. பசுமைப் புரட்சியின் முடிவில் உள்ளூர் வகை பயிர் வகைகள் பல அழிந்தன. இந்த HYV கள் விவசாயிகளின் தினசரி பெயர்களாயின. ஐ.ஆர் 8, ஏடிடி-36. ஆனால் விளைச்சலுக்கு மட்டும் எனத் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் புதுரகப் பயிர் வகைகள் பூச்சிகளின் தாக்குதல்களுக்கு எதிர்த்து நிற்க முடியவில்லை. அதற்குப் பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டன. இவற்றுக்கு அதிக சத்துகள் தேவைப்பட்டன. யூரியாவும் பொட்டாஷும் பாஸ்பேட்டும் உற்பத்தியாகி வந்திறங்கின. பூச்சிகளில்லாத வயல்கள். மண்புழுக்களும் இல்லாமல் போயின.

ஆனால் என்ன? யூரியா இருக்கிறதே. யூரியாவைப் போட்டால் அதிக விளைச்சல் தரும் விதைகள் இருக்கின்றனவே. உலகமெங்கும் – மெக்ஸிகோவிலிருந்து சிரியாவுக்கும் அங்கிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பசுமை புரட்சி.

ஆண்டுகள் உருண்டோடின. தமது முதுமை நாள்களில் போர்லாக் பழைய வில்லனை மீண்டும் சந்தித்தார். அதே பூஞ்சணத் தாக்குதல். அதிக வீரியத்துடன். இன்னும் அதிக நிலப்பரப்பில். கண்டங்களைத் தாண்டி பரவியபடி அதே பூஞ்சணத் தாக்குதல். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் பூஞ்சணமே வீரியம் குன்றிய நிலையில் HYV கோதுமைகளுடன் இறக்குமதியாகியிருக்கலாம். தன்னைத்தானே அதிக வலிமையாக்கிக்கொண்டு தாக்குதலில் இறங்கியிருக்கலாம். போர்லாக்கின் தீர்வு, அவரது அதே பழைய பாணியில்தான் இருந்தது. இன்னும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை உருவாக்கிப் பரப்புவது.

ஆனால் அப்படி மிகக்கச்சிதமாக அதிக நோய் எதிர்ப்பும் அதீத விளைச்சல் தன்மையும் கொண்ட பயிர்வகை சில சிறிய மாற்றங்களால் அழிந்துவிடக் கூடும். ஒரு தேசமெங்கும் ஒரே பயிர்வகை அதன் சிறந்த விளைச்சல் காரணத்துக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டபின், ஒரு சிறிய புதிய பூச்சியால் அல்லது பூஞ்சணத்தால் அழிந்தால் விவசாயமும் உணவு உற்பத்தியும் என்ன ஆகும்? கற்பனைப் பாத்திரமான இயான் மால்கம் சொல்லும் வார்த்தைகளை இங்கே சொல்லிப்பாருங்கள் – நம் யதார்த்த சூழலுக்கு எத்தனை பொருந்துகிறது என்று:

எப்படிப்பட்டவை என்பதே தெரியாத உயிர்வகைகளை நீங்கள் மிகக் குறைவான காலத்தில் உருவாக்கி விடுகிறீர்கள். அதைப் பற்றி முழுமையாக உங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் நீங்கள் உருவாக்கிவிட்டதால் அவை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவையோ உயிருடையவை என்பதை மறந்துவிடுகிறீர்கள்.

அந்த அந்த வட்டாரங்களில் உருவாகிய பயிர்வகைகள் அந்த அந்த மண்ணின் அந்த அந்த சூழலின் தன்மைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்கும். அடுத்தடுத்த வட்டாரங்களில் சிற்சில தன்மைகள் மாறுபாட்டுடன். ஒன்றுக்கு பிரச்னை வரும்போது மற்றொன்றைப் பரிமாறிக்கொள்ள முடியும். பன்மைத்தன்மை குறையும்போது, ஒற்றைத்தன்மை அதிகப்படும்போது எந்த அமைப்பும் அழிவை நோக்கி நகரும். கட்டுப்பாடு, ஒற்றைத் தன்மையுடன் ஓர் அமைப்பில் அதிகரிக்கும். கட்டுப்பாடு அதிகரிக்க அதிகரிக்க, ஓர் அமைப்பில் தவறுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கும்.

அண்மையில் தமது 95 ஆவது வயதில் காலமான போர்லாக் அவரது வாழ்க்கையில் கண்ட பாடம் அதுதான். நம் வயல்களும் இன்று ஜுராஸிக் பார்க்காகத்தான் மாறியுள்ளன. நாம் டைனோசர்களின் பாதையில் செல்கிறோமா?