போதிதர்மரின் பெயர் என்ன?

போதிதர்மர் / அத்தியாயம் 2

ஐந்தாம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு, எட்டாம் நுற்றாண்டு என்று பல்வேறு நூற்றாண்டுகளில் போதிதர்மர் வாழ்ந்தார் என்பதற்கான பதிவுகள் சரித்திரத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. ஒரு மனிதன் ஐந்நூறு ஆண்டுகளா வாழ்வான்? ஆகையால், அவர் வாழ்ந்த நூற்றாண்டு ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டு என்பது ஜான் மிக் ரே போன்ற வரலாற்றாசிரியர்களின் கருத்து. எப்படி ஆறாம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள்?

அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவாக்கிக்கொள்ளவேண்டும். போதிதர்மர் சீனாவுக்கு எதற்குச் சென்றார்? தமிழர் தற்காப்புக் கலையையும் மருத்துவக் கலையையும் சீனாவில் பரப்புவதற்கா? சத்தியமாக இல்லை. அசோக சக்கரவர்த்தியின் மகளும் மகனும் போலவே, போதிதர்மரும் பௌத்தம் பரப்புவதற்காகவும், பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பிற பணிகளுக்காகவுமே சென்றிருக்கிறார்.

தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு வாக்கில் பௌத்தமும் சமணமும் படரத்தொடங்கியது என்று பார்த்தோம் அல்லவா! அதன் பிறகு, பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் இடையே சொற்போர், விவாதம் என ஆரம்பித்த சண்டை சமயப் போர் ஆனது. சொற்போரில் சமணர்களிடம் தோற்ற பௌத்தர்கள் அவமரியாதை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இதுமட்டும் இந்தியாவில் பௌத்தம் அழிந்ததற்கான காரணம் இல்லை. பௌத்த மதத்துக்குள் உண்டான பிளவுகளும்கூட அதற்கு காரணம். அதுதான் முதன்மைக் காரணமும் கூட. மஹாயானம், தேராவாதம், வஜ்ராயானம் என்று கிட்டத்தட்ட ஆறு பிரிவுகள் பௌத்த சமயத்துக்குள் அன்றே இருந்தனவாம். இதனால் புத்தர் கண்ட பௌத்த கொள்கைகள் திரியத் தொடங்கின.

இது போக, புத்த பிக்குகளால் செல்வ போகத்தைத் துறக்க இயலவில்லை. தான, தர்மம் செய்யப்பட்ட பொருள்களே மடங்களை நிரப்பும் அளவுக்கு இருந்தது. அந்த செல்வத்தின் காரணமாக மடங்களுக்குள் பூசல்கள் ஏற்பட்டன. இந்த உட்கட்சிப் பூசல் மன்னர்களையும் மக்களையும் விரக்தி கொள்ளவைத்து புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்தது.

இவ்வாறு பௌத்த அஸ்திவாரம் சமணத்தாலும் மடங்களின் உட்கட்சிப் பூசலாலும் ஆட்டம் கண்டது. புத்த மடங்கள், புத்த குகைகள் சமண மயமாக்கப்பட்டன. புத்த பிக்குகள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனாலும் புத்த மதம் தமிழகத்தில் இன்றிருப்பதைப் போல் முழுமையாக துடைத்து எறியப்படவில்லை.

பக்தி இயக்கம் வடநாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேளை அது. தமிழகத்திலும் அதன் அதிர்வலைகள் வீசத் தொடங்கியிருந்தன. சமணர்கள் விளைவித்தவை அவர்கள் அடிமடியிலேயே இடியென வந்து விழுந்தன. பிற்பகுதி பல்லவர்களும், அதன் பின் வந்த சோழர்களும் இந்துமதக் கோட்பாடுகளை ஏற்றனர். பௌத்த, சமண சித்தாந்தங்கள் பலவற்றை உள்வாங்கிக்கொண்டு இந்து மதம் வளர்ந்தது. மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றது.

இப்படியாக, பௌத்தர்களிடம் பிடுங்கிய இடங்களுடன் சேர்த்து தங்கள் இடங்களையும் இந்து மதத்திடம் இழந்தனர் சமணர்கள். இந்து மதத்தை ஏற்காத சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர். இன்னும் பல விதங்களில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்நிகழ்வுகளை கலைநயத்துடன் விவரிக்கும் செய்யுள்களையும் கோவில் சிற்பங்களையும் சுவர் ஓவியங்களையும் இன்றும் காணலாம். இதன் விளைவால் தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த புத்த மதமும் பிறரை இம்சிக்காமல் சமணத்தை அணைத்துக்கொண்டு சாந்தத்துடன் மரணத்தை தழுவியது. இப்படியாக, பௌத்தம் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் அழியத் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் போதிதர்மர் நிச்சயமாக ஆறாம் நூற்றாண்டுக்கு மேல் பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிறந்திருந்தால் அவர் பௌத்த மதத்தை பின்பற்றியிருக்க முடியாது. மேற்கண்ட காரணங்களுடன் இன்னும் சில காரணங்களை வைத்துத்தான் போதிதர்மர் ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்து ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நவீன சரித்திர ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

அடுத்து வருவது, போதிதர்மரின் பெயர். போதிதர்மரின் இயர் பெயர் என்ன?

போதிதாராவா? தெரியவில்லை. போதிதர்மரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் இளம்வயதில் போதிதாரா என அழைக்கப்பட்டார் எனும் குறிப்புகள் மட்டும் தான்லின் (Tánlín) என்பவரின் நூலில் உள்ளன. அதேவேளையில், போதிதர்மரின் ஆசிரியரின் பெயர் ப்ரஜ்னதாரா. ஒருவேளை அவர் ஆசிரியரின் பெயரில் இருந்து போதிதாரா என்ற பெயர் வந்திருக்கக் கூடும் என்னும் வாதமும் உண்டு.

மேலும் போதிதர்மரின் தோற்றம் குறித்து இன்னும் பல கருத்துகள் நிலவுகின்றன. அவர் பாரசீக நாட்டைச் சார்ந்தவர் என்றும், தென் இந்தியாவின் பிராமணகுல மன்னனின் புதல்வர் என்றும் அவரது சமகாலத்தில் வாழ்ந்த சீன சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த முரண்பாடுகளில் இருந்து இன்றைய சரித்திர ஆசிரியர்கள் ஓர் உண்மையை நிறுவுகின்றனர். ‘போதிதர்மர் பல்லவரே’, என்று!

எப்படி? மூவேந்தர்களின் வரலாற்றைப்போல் பல்லவர்களின் வரலாறு எளிமையானதல்ல. மிக மிகச் சிக்கலானது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் இன்று சரித்திர வல்லுனர்கள் பல்லவர் தமிழர் இல்லை எனும் முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், பல்லவர் எங்கிருந்து வந்தனர் என்ற குழப்பம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
வேங்கி நாடு, ஈழம், பாரசீகம், கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கிடையிலான வேங்கி நாட்டில் வாழ்ந்த தெலுங்கு பேசும் பிராமண குடிகளே பல்லவர் என்பது ஒரு கருத்து.

சோழ மன்னனுக்கும் ஈழத்தீவில் வாழ்ந்த நாகர் இனப்பெண் ஒருவருக்கும் பிறந்த வம்சம் பல்லவர்களுடையது. தற்போது, ஈழத்தில் உள்ள மணித்தீவே (மணிபல்லவத் தீவு, நயினா தீவு, நாகத்தீவு போன்றவை இத்தீவின் பிற பெயர்கள்) பல்லவர்களின் பூர்வீகம். ஆகவே அவர்கள் தமிழ் மரபினர் என்றும் ஒரு சிலர் நம்புகின்றனர்.

இது எதுவுமே உண்மை இல்லை. பல்லவர்கள் பாரசீக ‘பஹல்வர்’ மரபினர். நாடோடிகளாகத் திரிந்த அவர்கள் பாரசீகத்திலும், வடஇந்தியாவிலும் வலுவான அரசுகள் செயல்பட்டதால் தென் இந்தியாவுக்குள் புகுந்தனர். பஹல்வரின் எரிதழல் சின்னத்தை பல்லவர்கள் தங்கள் சின்னமாகக் கொண்டிருந்தததையும் பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்ததையும் இதற்குத் தக்க சான்றாய் காண்பிக்கிறார்கள். இவை போக இவர்களிடத்தில் இன்னும் பல சான்றுகள் வேறு உள்ளனவாம்.

பல்லவர் தோற்றம் குறித்த நிலையற்ற தன்மை போதிதர்மரின் தோற்றதிலும் எதிரொலிப்பதை உணரலாம். வேற்றுமையில் ஒரு விசித்திர ஒற்றுமை இது. இதனை வைத்துக்கொண்டு தான் போதிதர்மர் பல்லவரே என்று கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிறார் பிரபல வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி பிராடன்.

போதிதர்மர் பல்லவர்தான் என்பதை நிரூபிப்பதற்கு மற்றொரு சான்றும் உள்ளது. போதிதர்மர் காலத்திய சீன ஆசிரியர்கள், போதிதர்மர் காங்சீ (Kang-Chi) எனும் ஊரைச் சார்ந்தவர் என்று குறிபிட்டுள்ளனர். இந்தப் பெயர் காஞ்சி என்பதன் சீன திரிபுபோல் தென்படுவதைக் காணலாம்.

மொத்தத்தில் போதிதர்மர் காஞ்சிபுரத்தில் ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் அரசாண்ட பல்லவ மன்னனின் மூன்றாம் மகன். இதுவே கம்பே (Tsutomu  Kambe), ஸ்வெலிபில் (Zvelebil), டுமோலின் (Dumoulin), மெக் ரே (McRae) ஆகிய பெரும்பான்மை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ளும் போதிதர்மர் பற்றிய பொதுவான ஒற்றை வரி அறிமுகம்.

இவை அனைத்துக்கும் சிகரமாக பிரபல கிறிஸ்தவ இறையியல்வாதியான ஹென்ரிச் டுமோலின் (Heinrich Dumoulin, S.J) போன்ற தற்கால ஆய்வாளர்கள் ஒரே வரியில் போதிதர்மர் எனும் நபரே கற்பனை என கூறிவருகின்றனர். ஆனால், இவர்களது கருத்து கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவாக இருப்பதைப்போல் தெரிவதால், இவர்கள் கூறுவனவற்றை நம்ப யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.

இவை தவிர போதிதர்மரின் தெளிவான இளம்பருவ வரலாறு என்று எதுவும் கிடைக்கவே இல்லை. ஆனால் எவ்வாறு அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதிக்கேற்ப அவர் இளம்பருவத்தைச் சிலர் கட்டமைத்தார்கள் என்பதை சில ஆசிரியர்களின் குறிப்புகளின் மூலம் அரிய வருகிறோம்.

இளவரசனாக இருந்த போதிதர்மர் தனது இளம்பருவத்தை பௌத்த மதத்தை கற்றுக்கொள்வதில் செலவழித்திருக்கிறார். பௌத்தத்தின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக முற்றி துறவறம் வரை அதுவே அவரை இட்டுச் சென்றுள்ளது என்பதை மட்டும் இங்கு தெளிவாகக் கூறலாம். எப்படி அவருக்கு பௌத்தத்தில் ஈர்ப்பு வந்தது என்பது தெரியவில்லை. ஆனால் ஏன் துறவறம் மேற்கொண்டார் என்பதற்கு வெவ்வேறு வகையான கருத்துகள் உள்ளன. அதற்கு முன் பௌத்த மதம் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

(தொடரும்)

பெரியார் : ‘முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!’

இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் கடுமையாக விமரிசனம் செய்த இரு பெரும் தலைவர்களான அம்பேத்கரும் பெரியாரும் மத மாற்றம் குறித்து உரையாடியிருக்கிறார்கள். இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் மதத்தில் இருந்த வெளியேறி பௌத்தத்தைத் தழுவவேண்டும் என்றார் அம்பேத்கர். ஏன் பௌத்தம் என்பதற்கான காரணங்களை விரிவாகவும் ஆழமாகவும் அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார். மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கரைப் போல் அவர் பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை. மாறாக, அவரது தேர்வு இஸ்லாமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மதங்களை நிராகரித்து பகுத்தறிவை முன்வைத்த பெரியார், இஸ்லாத்தை ஏன் தேர்வு செய்யவேண்டும்? இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே கிடையாதா? இஸ்லாத்தை பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறதா?

இந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால், மதம் குறித்த பெரியாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்ப்போம். மதம் பற்றிய பெரியாரின் பார்வை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. முதலாவதாக, அவர் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாக்கினார். இரண்டாவதாக, புனித நூல்களை ஊடுருவிச் சென்று உண்மை கண்டறிந்து, தோலுரித்தார். மூன்றாவதாக, மதம் முன்வைக்கும் உலகப் பார்வையை விமரிசித்தார். மதத்தின் புனிதத்தன்மை பற்றியும், மதச் சார்பின்மை பற்றியும் கேள்விகள் எழுப்பினார். நான்காவதாக, மத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம், கடவுள் நம்பிக்கை உருவான பின்புலத்தையும் சித்தாந்தத்தையும் விமரிசித்தார். ஐந்தாவதாக, சடங்குகளையும் விழாக்களையும் சம்பிரதாயங்களையும் சாடினார்.

அம்பேத்கரைப் போலவே பெரியாரும் இந்து மதக் கட்டுமானத்தையும் சாதியப் படிநிலை அமைப்பையும் நிராகரித்தார். பார்ப்பனீயம் எப்படி அதிகாரத்தைக் குவித்துக்கொண்டது என்பதையும் எப்படிப் பிற பிரிவினரை ஆதிக்கம் செய்கிறது என்பதையும் குறித்து அவர் விரிவாக உரையாடினார். இந்து மதம் வலுக்கட்டாயமாக தமிழர்கள்மீது திணிக்கப்பட்டது என்னும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்தார்.

ஆனால், இதற்கு தீர்வாக இந்து மதத்துக்கு மாற்றாக இன்னொரு மதத்தை நிறுவவேண்டிய அவசியத்தை பெரியார் ஏற்கவில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை ஏற்றது போல், வேறொரு மதத்தை ஏற்கவோ சிபாரிசு செய்யவோ பெரியார் துணியவில்லை. ஒரு கடவுளுக்கு மாற்றாக இன்னொரு கடவுள் முன்னிறுத்தப்படுவதை அவர் பகுத்தறிவு கொள்கை ஏற்கவில்லை. பெரியாரைப் பொருத்தவரை, மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே ஓட்டை படகில்தான் பயணம் செய்கிறார்கள். ஒரு மனிதனுக்கு நிச்சயம் மதம் தேவைதானா? மதத்தை மனிதனிடம் இருந்து பிரித்து எடுத்துவிட்டால் அங்கே ஓர் வெற்றிடம் உருவாகிவிடுமா? அதை எதைக் கொண்டாவது நிரப்பியாகவேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு பெரியாரின் பதில்:‘மதம் மனிதனுக்குத் தேவையற்றது!’ இது பெரியாரின் இறுதியும் உறுதியுமான முடிவு என்று கொள்ளலாம்.

சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான புதிதில் பெரியார் இஸ்லாத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தது உண்மை. செப்டெம்பர் 1929ல், கோயம்புத்தூர், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, இஸ்லாத்துக்குச் சாதகமான கருத்துகளை வெளிப்படுத்தினார். ‘நான் ஒரு முஸ்லிமாக இறக்கவே விரும்புகிறேன்!’ என்று அவர் பேசியதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது.

அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறினார்கள். இது நடந்த சில தினங்களில், பெரியார் ஈரோட்டில் ஓர் உரை நிகழ்த்தினார். அக்டோபர் 10 குடி அரசு இதழில் இந்த உரை முழுமையாக இடம்பெற்றிருந்தது. இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்குச் சார்பாகவும் இஸ்லாத்துக்குச் சார்பாகவும் பெரியார் தன் கருத்துகளை இதில் முன்வைத்தார். நாம் பஞ்சமர்களாகவோ முஸ்லிம்களாகவோ மாறினாலொழிய நமக்கு நீதியும் மரியாதையும் முன்னேற்றமும் கிடைக்காது என்று பிறிதோரிடத்தில் பெரியார் பேசியிருக்கிறார். அவர் குறைந்த அளவு விமரிசனம் செய்த மதம் இஸ்லாம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

ஆனால், இஸ்லாமிய மதமாற்றத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதை ஓர் இயக்கமாகவும் போராட்டமாகவும் பிரசாரமாகவும் அவர் உருமாற்றவில்லை. ஆதி திராவிடர்கள் மதம் மாறவேண்டும் என்று 1935ல் அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது, பெரியார் அவருக்குத் தன் ஆதரவை வெளிப்படுத்தினார். ஆனால், அம்பேத்கரைப் போல் மதமாற்றத்தை முனைப்புடன் ஒருபோதும் அவர் மேற்கொண்டதில்லை.

1929ல் பெரியார் இஸ்லாத்துக்குச் சாதகமாக பேசியதற்கு வேறு வலுவான காரணங்கள் இருக்கின்றன. அவருடைய உரையிலேயே அதற்கான விடையைத் தேடுவோம். ‘சகோதரர்களே, 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு ‘மோட்ச லோகம்’ கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, ‘கடவுளோடு கலந்து விட்டார்கள்’ என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை… உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.’

எனில் ஏன் அவர்களுடைய மதமாற்றம் பெரியாரை மகிழ்ச்சியடைய வைத்தது? ‘இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் தொடர்கிறார். ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’

பெரியார் இந்து மதத்தை மட்டுமல்லாமல், கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் சேர்த்தே விமரிசித்து வந்தார். இருந்தும் இந்து மதத்துக்கு நிகராகப் பிற மதங்களை அவர் சாடாமல் இருந்ததற்குக் காரணம், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்து மதத்தின் தீமைகளை அதிகம் சந்திக்க நேர்ந்ததுதான். உயர்வு, தாழ்வு பிரிவினைகள் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் இயங்கிவந்தாலும், அப்பட்டமான, மிருகத்தனமான தீண்டாமையை அதன் முழுவடிவில் இந்து மதத்தில் மட்டுமே அவர் கண்டார்.

இந்தக் காரணத்தால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவர் விடுதலையடைந்துவிட்டார் என்றே பெரியார் பொருள் கொண்டார். ‘இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவற்றை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனென்றால், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.’

பெரியார் தொடர்கிறார். ‘தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணிமானதுமான அபிப்பிராயம்.’

மதம் மாறுவதற்கு இந்து மதத்தின் தீண்டாமை ஒரு வலுவான காரணம் என்பதை ஏற்க முடிகிறது. ஆனால் எதற்காக இஸ்லாம்? கிறிஸ்தவத்துக்கோ பௌத்தத்துக்கோ சமணத்துக்கோ மாறலாமே? ‘சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையான நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?’

மிக மிக நேரடியான ஒரு விளக்கம் இது. தீண்டப்படாதவர்கள் அவ்வாறு நீடித்திருப்பதற்குக் காரணம் அவர்களுடைய பலவீனம். இந்த சுபாவத்தை மாற்றவேண்டுமானால் போராட்ட குணம் தேவை. பௌத்தமும் சமணமும் கிறிஸ்தவமும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிப்பவை. எனவே, பெரியார் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். அப்படியென்றால் பெரியார் இஸ்லாத்தை முரட்டுத்தனமான மதம் என்று சொல்கிறாரா? இல்லை.‘ஒடுக்க முடியாத, தாழ்மையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம்’ இஸ்லாத்தில் இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.

அந்த வகையில், பெரியார் இஸ்லாமிய மதமாற்றத்தை முன்வைத்தார் என்பதைவிட தீண்டப்படாதவர்களின் ‘சுபாவ மனமாற்றத்தை’ முன்வைத்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்த 69 ஆதிதிராவிடர்களும் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பெரியாரின் முதல் மகிழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சி, ‘துணிச்சல் சுபாவத்தோடு’ அடையாளப்படுத்தப்படும் இஸ்லாத்தை அவர்கள் தழுவிக்கொண்டார்கள் என்பது. கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான விடை இதுவே.

தன் உரையை நிறைவுசெய்யும்போது பெரியார் தன் கருத்தை கூர்மையாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறார். ‘அந்த சுபாவம் (தைரியம்) இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்து விட்டால் கூடப் போதுமானது என்றும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்தச் சுபாவம் வராது என்பதோடு, மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வரவிட மாட்டார்கள் என்றே சொல்லுவேன்.’

0

நந்தன்

தொடர்புடைய கட்டுரைகள் :

அம்பேத்கர் : ‘ஆகவே மதம் மாறுங்கள்!’
அம்பேத்கரா காந்தியா

பொது உரிமையியல் சட்டம் : ஏன் கொண்டுவரமுடியவில்லை?

1

1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 44 ஆம் ஷரத்தில், இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் பொது உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) ஏற்படுத்தித்தர ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Article 44 – The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.

ஆனால் அரசியலமைப்புச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு 61 ஆண்டுகள் ஆகியும், இது வரை ஆட்சி செய்த எந்த அரசியல் கட்சியும் பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதை பார்ப்பதற்கு முன்பு பொது உரிமையியல் சட்டம் என்றால் என்ன, அதனால் என்ன நன்மை என்பதை பார்த்துவிடுவோம்.

நம் நாட்டில் பல்வேறு மதத்தை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலையும் – பிறப்பிலிருந்து இறப்பு வரை (அவனுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்) அவனுடைய மதம்தான் வழிநடத்துகிறது. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சுவீகாரம், பரம்பரை சொத்துரிமை, ரட்சணை போன்ற அனைத்து விவகாரங்களிலும் ஒருவர் தான் சார்ந்த மதக்கோட்பாடுகளின்படிதான் செயல்பட்டாகவேண்டும். மதம் சார்ந்த கோட்பாடுகள், தொன்றுதொட்டு வந்த பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் சார்ந்த விஷயங்கள்தான் தனிப்பட்ட சட்டமாக (Personal Law) அங்கீகரிக்கப்படுகிறது.

இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோரே குறிப்பிடப்படும் அளவில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர பார்சிகள், யூதர்கள், பஹாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிறிய அளவில் இருக்கிறார்கள். இந்துக்களுக்கு அவர்களுடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை தனிப்பட்ட சட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்தன (இந்திய பாராளுமன்றம் இந்துக்களுக்காக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரும்வரை). தர்ம சாஸ்திரங்களிலும் முக்கியமாக யஜ்ணவாக்ய (Yajnavalkya) ஸ்மிருதிதான் குடும்பச் சொத்துரிமை பற்றிய வழக்குகளில் பயன்படுத்தப்பட்டுவந்தது. யஜ்ணவாக்ய ஸ்மிருதிகூட நேரடியாக விவாதங்களுக்கு எடுத்து கையாளப்படவில்லை. அதற்கு பதில் அதன் வியாக்கியானங்களான (உரைநூல்களான) மிதாக்ஷராவும் (Mitakshara), தயாபகாவும் (Dayabhaga) பயன்படுத்தப்பட்டு வந்தன. வங்காளத்திலும் அசாமிலும் தயாபகாவின்படிதான் சொத்து பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் மிதாக்ஷராவின்படி குடும்ப சொத்துகள் பாகம் செய்யப்பட்டு வந்தன. மிதாக்ஷராவின்படி, இந்து குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தை குடும்ப சொத்துக்குக் கூட்டு உரிமையாளர் ஆகிவிடுகிறது. ஆனால் தயாபகாவின் விதிமுறைப்படி, தகப்பனார் இறந்த பின்பு தான், குடும்ப சொத்தில் அவருடைய வாரிசுக்கு உரிமை பிறக்கிறது. மிதாக்ஷரா முறைப்படி இறந்த வாரிசின் மனைவி கணவனின் குடும்ப சொத்தில் பங்கு கேட்க முடியாது. ஜீவனாம்சம் மட்டுமே கோரமுடியும். ஆனால் தயாபகாவின்படி இறந்த வாரிசின் மனைவிகூட கணவனின் குடும்பச் சொத்தில் கணவனுக்கு சேரவேண்டிய பங்கைப் பிரித்து வாங்கலாம்.

இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர், 1956 ஆம் ஆண்டு இந்துக்களுக்காக பல சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டன. அவை பின்வருமாறு,

  1. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக, இந்து திருமணச் சட்டம்
  2. இறங்குரிமை தொடர்பாக (Intestate Succession) இந்து இறங்குரிமைச் சட்டம்
  3. இளவர் உரிமை மற்றும் இரட்சணை – இந்து இளவர் மற்றும் இரட்சணைச் சட்டம் (Hindu Minority and Guardianship Act)
  4. சுவீகாரம் மற்றும் ஜீவனாம்சம் – இந்து சுவீகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம் – (Hindu Adoptions and Maintenance Act)
  5. உயில் வழி இறங்குரிமை (Testamentary Succession) – இந்திய இறங்குரிமைச் சட்டம் – (Indian Succession Act)

மேற்சொன்ன சட்டங்கள் சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமண மதத்தை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும்.
முஸ்லிம்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட சட்டமாக ஷரியா பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஷரியா என்பது முஸ்லிம்களின் மறைநூலான குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் பின்பற்றி வந்த வழிமுறைகளில் இருந்து தொகுக்கப்பட்ட விவரங்களாகும். முஸ்லிம்களில் ஷியா, சுன்னி என்ற இரு பெரும் பிரிவுகள் உள்ளன. அதிலும் ஷியா பிரிவில் ஹனாஃபி, ஷஹஃபி, மாலிகி, ஹன்பாலி மற்றும் ஷஹரி என பல உட்பிரிவுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிலும் வாரிசுரிமை விதிகளில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. இறந்தவரின் சொத்தில் வாரிசுகளுடைய பங்குகள் ஒவ்வொரு உட்பிரிவிலும் வெவ்வேறாக இருக்கும்.

இயேசு கிறிஸ்து தோன்றி 2000 ஆண்டுகளானாலும், கிறிஸ்தவ மதம் இந்தியாவில் அதிக அளவில் பரவியது சமீப நூற்றாண்டுகளில்தான். அதுவும் போர்ச்சுக்கீசிய, ஆங்கிலேய ஆட்சியில்தான் கிறிஸ்தவம் அதிக அளவில் பரவத் தொடங்கியது. சென்ற நூற்றாண்டிலேயே ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களுக்காக திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துரிமை ஆகிய விவகாரங்களில் சட்டங்கள் கொண்டுவந்துவிட்டனர். திருமணம் சம்பந்தமாக இந்திய கிறிஸ்தவத் திருமணச் சட்டம், விவாகரத்து சம்பந்தமாக இந்திய விவாகரத்து சட்டம், சொத்துரிமை சம்பந்தமாக இந்திய இறங்குரிமை சட்டம் (Indian Succession Act) என பல சட்டங்களை ஆங்கிலேய அரசு கிறிஸ்தவர்களுக்காகக் கொண்டுவந்தது.

இதில் என்ன விஷயம் என்றால் இந்த சட்டங்கள் யாவும், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு, அந்த சமஸ்தானத்தின் அரசால் திருவாங்கூர் கிறிஸ்தவ இறங்குரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல் கொச்சின் சமஸ்தானத்தில் கொச்சின் கிறிஸ்தவ இறங்குரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய கிறிஸ்தவ இறங்குரிமை சட்டத்துக்கும் திருவாங்கூர், கொச்சின் இறங்குரிமை சட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கர்நாடக மாநிலமான கூர்க் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மேற்குறிப்பிட்ட எந்தச் சட்டமும் பொருந்தாது. அதே போல் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய சில பழங்குடியினர் மற்றும் மலைவாழ் ஜாதியினர்களுக்கும் மேற்குறிப்பிட்ட சட்டங்கள் பொருந்தாது. உதாரணத்துக்கு, மேகாலயா மாநிலத்தில் இருக்கும் காசி, ஜெயந்தியா மற்றும் காரோ மலைகளில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்னமும் இந்து முறைப்படிதான் தங்களது சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல்தான் பீகார் மாநிலத்தில் வாழும் முண்டாக்களும், ஒரிசா மாநிலத்தில் வாழும் ஓராண்களும் . கிறிஸ்தவர்களாக மாறி இருந்தாலும், தங்களுடைய பூர்வீக பழக்கவழக்கத்தின்படிதான் இன்றும் சொத்துப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றை தவிர பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி மக்களுக்கும், போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா மக்களுக்கும் தனித் தனிச் சட்டங்கள் இருந்துவருகின்றன. பார்சிகளுடைய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான விவகாரங்களுக்கு பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் பொருந்தும். அதேபோல் பார்சிகளின் சொத்துகள் தொடர்பான விவகாரங்களுக்கு இந்திய இறங்குரிமை சட்டம் பொருந்தும்.

2

ஒரு மதத்துக்கு உட்பட்ட நபருக்கு பொருந்தும் சட்டத்தைப் பற்றிதான் மேலே பார்த்தோம். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம் பொருந்தும். சிறப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கான சொத்துரிமை தொடர்பான விவகாரங்களுக்கு இந்திய இறையுரிமை சட்டம் பொருந்தும்.

இந்தியாவில் பல விதமான மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் பல உட்பிரிவுகள். ஒவ்வொரு உட்பிரிவிலும் பல சட்ட விதிகள். இஸ்லாம் மதத்தில் ஓர் ஆண் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம்; ஆனால் மற்ற மதங்களில் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது தவறு. இஸ்லாமியச் சமூகத்தில் நீதிமன்றம் செல்லாமலே தலாக் சொல்லி விவாகரத்து பெறலாம்; ஆனால் கிறிஸ்தவ சமூகத்தில் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றாலும், அதை மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும். இஸ்லாத்தில், விவகாரத்து பெற்ற பெண்களுடைய இதத் சமயத்தில் (விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதவிடாய் மாதங்களுக்கு வேறு திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இந்த மூன்று மாத காலம் இதத் காலம் என்று கூறப்படுகிறது) மட்டும் ஜீவனாம்சம் வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. மற்ற சமூகங்களில் விவாகரத்து பெற்ற மனைவி மறுமணம் செய்து கொள்ளும்வரை அல்லது சுயமாக சம்பாதிக்கும் வரை அவளுடைய முன்னாள் கணவன் ஜீவனாம்சம் வழங்கவேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தில் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானம் உருவாக்கிய கிறிஸ்தவச் சட்டத்தின் விதிகளின்படி, பெண் வாரிசுக்கு 5000 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, ஆண் வாரிசுக்கு மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் கொடுத்து விடலாம் என்று சட்டம் சொல்கிறது. இந்து சமூகத்தில் குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை என்று 2005 ஆம் ஆண்டு வரை இந்து இறங்குரிமை சட்டத்தில் விதியாக இருந்தது (விதிவிலக்காக மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னரே, பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சரிசமமான உரிமை இருக்கிறது என்று  திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது). மேலும், கிறிஸ்தவச் சமூகத்தில் இந்திய இறங்குரிமைச் சட்டத்தின்படி கணவன் இறந்து விட்டால், அவருடைய மனைவிக்கு கணவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்படவேண்டும். அதே போல் கணவனுக்கு மனைவியின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உண்டு. இந்து சமூகத்தில் இறந்த கணவனின் சொத்தில் மற்ற வாரிசுகள் போல் மனைவிக்கும் ஒரு பங்குதான்.

3

நான் இங்கு குறிப்பிட்டது பிரச்சனையின் ஒரு பகுதிதான். ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரி சட்டம்தான் இருக்கவேண்டும். சட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு விவகாரத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியான உரிமை இருந்தால் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பிரச்னையாகி போகிறது. உதராணத்துக்கு, இந்து மதத்தில் ஒருவர் ஒரு திருமணம்தான் செய்துகொள்ள முடியும். தன்னுடைய முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது அவரை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி குற்றம். இரு மணம் புரிந்த கணவருக்கு Bigamy என்ற குற்றம் புரிந்ததற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இந்நிலையில், இஸ்லாத்தில் உள்ள சட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுதிக்கொள்வதற்காக, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஓர் இந்து ஆண், மறுமணம் செய்து கொள்வதற்கு முன் போலியாக தன்னுடைய மதத்தை மாற்றிக்கொள்கிறான். (பிரபல இந்தி நடிகரான தர்மேந்திரா, தனக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தும் ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்வதற்காக, இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக செய்தி உண்டு). சட்டத்தால் ஏற்றத்தாழ்வுகள் போக்கடிக்கப்படவேண்டுமே தவிர, ஏற்றத்தாழ்வுகள் உருவாகக்கூடாது. குடும்ப விவகாரங்களில், ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருப்பதால் நீதி பரிபாலனை செய்வதிலும் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 44 வது பிரிவில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான உரிமையியல் சட்டம் கொண்டுவர அரசு முனையவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்று வரை எந்த அரசியல் கட்சியும் அதற்கான முனைப்பைச் செய்யவில்லை. காரணம் வாக்குகள் போய்விடுமே என்கிற பயம்தான். குறிப்பாக, சிறுபான்மையினரின் வாக்குகள். இந்திய அரசுப் பொது உரிமையியல் சட்டம் கொண்டுவருவது, தங்களுடைய மத நம்பிக்கைக்கு எதிரானது என்று சிறுபான்மையினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

4

ஷா பானு என்ற சுமார் 62 வயது முஸ்லிம் பெண்மணியை, அவருடைய வழக்கறிஞர் கணவன் முகமது அகமது கான் வீட்டை விட்டு விரட்டி விட்டார். விரட்டப்பட்ட ஷா பானு, 1978 ஆம் ஆண்டு இந்தூர் மாஜிஸ்டிரேட்டிடம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (Criminal Procedure code) 125 வது பிரிவின்படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி வழக்கு தாக்கல் செய்தார்.ஷா பானு தன்னுடைய பிராதில், தன்னுடைய கணவனின் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000/- என்றும், தனக்கு மாதா மாதம் தன் கணவர் ரூபாய் 500/- ஜீவனாம்சமாக தரவேண்டும் என்றும் பரிகாரம் கேட்டிருந்தார்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஷா பானுவை அவரது கணவன் தலாக் செய்துவிட்டார். தன் மனைவியின் வழக்குக்கு பதிலளித்த முகமது அகமது கான், இஸ்லாத்தின்படி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இதத் சமயத்தில் மட்டும்தான் ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். ஷா பானுவுக்கு இதத் காலம் முடிந்துவிட்டது. மேலும் திருமணத்தின் போது 3000 ரூபாய் மஹர் (இஸ்லாமில் ஆண்கள் பெண்களுக்கு திருமணத்தின் போது தரவேண்டிய அல்லது தருவதாக ஒப்புக்கொள்ளும் மணக்கொடை) தொகையை நீதிமன்றத்தில் ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டேன். எனவே, ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று வாதிட்டான். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமது அகமது கானின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாமியர்களின் ஷரியத், குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தன்னுடைய தீர்ப்பில், ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 என்று உயர்த்தியது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த்து. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 1985 ஆம் ஆண்டு வெளியானது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம்கள் குரல் கொடுத்தனர். தங்களுடைய மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுகிறது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டங்கள் தொடங்கின. கலவரம் வெடித்தது.

அந்த சமயத்தில்தான் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு, தேர்தல் நடந்து முடிந்து, இந்திரா காந்தியின் புதல்வர் ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுஆட்சியைப் பிடித்திருந்தது. ஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்திஅரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அந்த சட்டத்துக்கு The Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986 என்று பெயர். இச்சட்டத்தின்படி முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் கோரி மாஜிஸ்டிரேட்டிடம் மனு தாக்கல் செய்தால், மாஜிஸ்டிரேட் அந்த முஸ்லிம் பெண்மணியின் சொந்தக்காரர்கள் (கணவனைத் தவிர்த்து), யார் அந்த பெண்மணி இறந்த பிறகு அவருடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்களை அந்த பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்த பெண்மணிக்கு வக்ஃப் வாரியம் (இஸ்லாமிய அறக்கட்டளை) ஜீவனாம்சம் வழங்க மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.

இது போன்ற சூழ்நிலைகள்தான், நம் நாட்டில் பொது உரிமையியல் சட்டம் வருவதற்கு தடையாக இருக்கிறது.

5

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயச் சபையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதாவின்மீது விவாதம் நடைபெற்றது. அந்த வரைவு மசோதாவில், 35 வது ஷரத்தைப் பற்றி (இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது ஷரத்து) பல வித கருத்துகள் நிலவின. ஆட்சேபனைகள் எழும்பின. பொது உரிமையியல் சட்டத்தைப் பற்றி நடந்த விவாதத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி தன்னுடைய கருத்தை பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.

பொது உரிமையியல் சட்டம் கொண்டு வந்தால் மக்கள் நல்லிணக்கம் பாதிக்கும் என்று கூறுவது தவறு. பொது உரிமையியல் சட்டம் கொண்டுவராமல் இருந்தால்தான் நல்லிணக்கம் பாதிக்கப்படும். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான சட்டம் என்று இருந்தால், நாட்டை ஒருங்கிணைத்து நிர்வகிக்க முடியாது. பொது உரிமையியல் சட்டம் என்பது ஒரு மதக் கோட்பாட்டை எடுத்து இன்னொரு மதத்தின் மீது திணிப்பது அல்ல. இன்று இந்து இறங்குரிமைச் சட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்களெல்லாம் ஆங்கில சட்டத்தின் அடிப்படையிலும் ரோமானிய சட்டத்தின் அடிப்படையிலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்து சட்டத்தை தொகுக்க நினைப்பவர்கள் மற்ற சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களையும் எடுத்துக்கொள்கின்றனர். சட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை நாட்டில் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். நாட்டை ஒருங்கிணைக்க அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றப்படுவது இன்றியமையாதது.

நண்பர் திரு போக்கர், அரசியலமைப்புச் சட்ட வரைவு மசோதா குழுவுக்கு, தங்களுடைய பணி என்ன என்பது தெரியாமலே இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். நண்பர் திரு. போக்கர் ஆங்கிலேய ஆட்சியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமலே பேசியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு அவர்களுடைய திருமணம், விவாகரத்து, வியாபார ஒப்பந்தம், குற்றவியல் நடைமுறை, குற்றத்துக்கான தண்டனை அனைத்தும் ஷரியத்தின்படிதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்தபோது, எல்லோருக்கும் பொதுவான இந்திய தண்டனைச் சட்டத்தை கொண்டுவந்தார்கள். அப்பொழுதெல்லாம் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) கொண்டுவந்தார்கள். அப்போதும் சிறுபான்மையினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

வெள்ளைக்காரர்களின் ஆட்சி அங்கிலோ சாக்சன் சட்டவியல்படி நடந்தது, குர்ஆன் படி நடக்கவில்லை. அப்பொழுதெல்லாம் எதிர்ப்பை தெரிவிக்காத சிறுபான்மையினர், இந்தியர்கள் சுதந்தரம் அடைந்து ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் தருவாயில், பொதுவான உரிமையியல் சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயம் ஆகாது. ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் வெவ்வேறு மதத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கெல்லாம் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்பட்டா வருகிறது?.

பொது சட்டத்தின் வாயிலாக, ஒரு மதத்தின் கோட்பாடுகளுக்குப் பங்கம் ஏற்படுவதாக சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாத்தில் திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். அது குர்ஆன் படியும் மத குருமார்கள் வழிமுறையிலும் நடை பெறவேண்டும். முஸ்லிம் திருமணம் இந்து திருமணம் போல் புனிதச் சடங்கு கிடையாது. எனவே பொது உரிமையியல் சட்டம் கொண்டுவந்தால் அது இஸ்லாம் மதத்துக்கு ஆபத்து என்று சொல்வது தவறு. எந்த நாடாளுமன்றமும், எந்த சட்டசபையும், மத கோட்பாடுகளில் தலையிட முற்படாது. காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள பெரும்பான்மையினர் தயாராகயிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மதங்களிலிருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய மதச் சட்டங்களை மாற்றி கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் சட்டங்களை இயற்றி, சமுதாயத்தைச்சீரமைப்பு செய்தனர். நாங்கள் ஒரு படி மேலே சென்று அனைவருக்கும் சீரான சட்டத்தை கொடுக்க விரும்புகிறோம். அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் பொழுது அவர்களை நம்பிய சிறுபான்மையினர், நம்முடைய நாட்டு மக்களே ஆட்சியை நிர்வகித்து வரும் தருவாயில் ஏன் அவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டும்? நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் ஆங்கிலேயர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை, ஏன் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக செயல்பட உத்திரவாதமளிக்கும் ஜனநாயக ஆட்சியின்மீது வைக்கக்கூடாது?

(அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற வாதங்கள் – பக்கம் 549, தேதி – 23.11.1948)

இவ்வாறாக தன் வாதத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதா 35வது ஷரத்துக்கு ஆதரவாக முன்வைத்தார் அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள்.

மத பேதமின்றி அனைத்து மக்களும் வேண்டி கேட்டுப் போராடும் லோக்பால் மசோதாவையே நாடாளுமன்றம் இன்னமும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பொது உரிமையியல் சட்டத்தையா கொண்டு வந்துவிடப்போகிறார்கள்?

0

S.P. சொக்கலிங்கம்

அம்பேத்கர் : ‘ஆகவே, மதம் மாறுங்கள்!’

அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு முன்பைக்காட்டிலும் அதிகரித்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த மதத்தைவிட்டு வெளியேறி வந்தாரோ, அந்த மதத்தின் அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றக் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வதுதான்.

‘மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது பொழுதுபோக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்… உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.’

பம்பாயில் 1936ம் ஆண்டு, மே மாதம் 30,31 இரு தினங்களிலும் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை இப்படித்தான் தொடங்குகிறது. இந்த உரையின் நோக்கம் இரண்டு. முதலாவதாக, தீண்டத்தகாத மக்களிடம் அவர்கள் நித்தம் நித்தம் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான மூலக்காரணத்தை விளக்குவது. இரண்டாவது, அந்த மூலக்காரணத்தைத் தகர்த்து எறிவதற்கான வழிமுறையைச் சொல்லித் தருவது.

இந்து மதம், அதைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றால், இந்துக்களில் ஒரு பிரிவினர் ஏன் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் மேல்சாதி இந்துக்களால் ஆளப்படுகிறார்கள்? மேல், கீழ் என்னும் பிரிவுகள் எப்படி, ஏன் தோன்றின? கால ஓட்டத்தில், இந்நிலைகள் ஏன் மாறாமல் அப்படியே நீடிக்கின்றன?

‘சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதம் என்றுமே மாற்றமுடியாத ஒன்றாகும். காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்கமுடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.’

ஒரு போராட்டத்தைச் சந்திக்க மூன்று பலம் தேவை. மனித ஆற்றல், நிதிபலம் மற்றும் அறிவு வலிமை. பம்பாய் மாகாணத்தில் தீண்டத்தகாதவர்கள் மொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கே இருந்த நிலையில், அவர்கள் ஓரணியாகத் திரண்டு, அதாவது மனித ஆற்றலைக் கொண்டு போராட முடியாது. பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில் அவர்களால் நிதிபலத்தையும் திரட்டமுடியாது. நீதிமன்றங்களை அணுகி, வாதாடி நீதி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. ‘ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதவர்கள், தங்கள்மீது இழைக்கப்படும் அவமானங்களைச் சகித்துக் கொள்பவர்களாகவும் சாதி இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறையையும் துளியளவும் எதிர்த்துப் பேச முடியாத நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.’

மூன்றாவது பலத்தையும் அம்பேத்கர் பரிசீலித்தார். ‘அறிவாற்றலைப் பொருத்தவரை, நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சாதி இந்துக்களின் இழிவையும் கொடுமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு, வன்கொடுமைகளால் ஏற்பட்ட சகிப்புத்தன்மை, அவர்களிடையே கிளர்ந்தெழும் போர்க்குணத்தை மழுங்கடித்துவிட்டது. தன்னம்பிக்கை, உற்சாகம், இலக்கு முற்றிலுமாக உங்களிடமிருந்து மறைந்துவிட்டது. நீங்கள் எல்லாம் ஆதரவற்றோராக, வலிமையிழந்து காணப்படுகின்றீர்கள்.’

மூன்று அத்தியாவசிய பலங்களையும் இழந்துவிட்ட நிலையில் தீண்டத்தகாதவர்களின் கதி என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், அம்பேத்கர் இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். தீண்டத்தகாத இந்துக்கள்சிறுபான்மையினராகவும் பலமற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், மகர், மாங் மக்களைப் போலவே முஸ்லிம்களும்தானே சிறுபான்மையினர்? அவர்கள் ஏன் இந்துக்களால் தாக்கப்படுவதில்லை?‘ஒரு கிராமத்தில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தாலும், அவர்களைத் தாக்க எவரும் துணிவதில்லை. ஆனால், உங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், மொத்த கிராமமே உங்கள்மீது வன்மையான தாக்குதலைத் தொடுக்கிறதே. ஏன் இந்த நிலை?’

இந்துக்களுக்குத் துணிவில்லை என்றார் அம்பேத்கர். ‘இந்த இரு முஸ்லிம் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன், அச்சமற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். ஏனென்றால், இந்துக்கள் அவர்களைத் தாக்கினால், பஞ்சாப் முதல் சென்னைவரை வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எப்பாடுபட்டாவது தங்களைப் பாதுகாக்க அணிதிரளுவார்கள் என்று உறுதியாக அவர்கள் நம்புகின்றனர். ஆனால், உங்கள்மீது தாக்குதல் நடத்தினால் உங்களைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளனர்.’

இந்த இடத்தில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை நினைவுபடுத்திக்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் தலித் மக்கள் சாதி இந்துக்களால் தாக்கப்படுவது ஏன்? அவர்களைக் காக்க ஏன் யாரும் முன்வரவில்லை? ‘காரணம், தாசில்தாரும் போலிசும் சாதி இந்துக்களாகவே இருக்கின்றனர். இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே பிரச்னை என்றால், அவர்கள் தாங்கள் பணிசெய்யும் வேலைக்கு நேர்மையாக இருப்பதைவிட, தங்கள் சாதிக்கே விசுவாசமாக இருப்பர். நீங்கள் ஆதரவற்று இருப்பதால்தான், இந்துக்கள் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். உங்களைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.’

இதிலிருந்து தப்பவேண்டுமானால், பலமற்றவர்கள் ‘வெளியில் இருந்து பலத்தைப் பெற்றாகவேண்டும்’ என்கிறார் அம்பேத்கர். ‘வேறு சமூகத்துடன் நீங்கள் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளாமல், வேறு மதங்களில் நீங்கள் உங்களை இணைத்துக்கொள்ளாமல், வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெறமுடியாது… உங்களுக்கு வலிமை இல்லாதவரை, நீங்களும் உங்கள் எதிர்காலத் தலைமுறையும் இதே போன்ற துன்பகரமான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’

அம்பேத்கர் தொடர்கிறார். ‘இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் கீழான மக்கள் அல்ல. இந்துக்கள் நம்மை நடத்தும் நிலை, நம்மை இந்தியா முழுவதும் கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையில் இருந்து நாம் விடுபடவேண்டும் எனில், இந்தக் கசடுகளை அகற்றி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது என்ன? இந்து மதத்தாலும் இந்து சமூகத்தாலும் பூட்டப்பட்டுள்ள இரும்பு வேலிகளைத் தகர்த்தெறிய வேண்டும்.’

ஏன் தகர்க்கவேண்டும்? சீர்திருத்த முடியாதா? தீண்டாமையை அகற்றிவிட்டு, சாதிகளை ஒழித்துவிட்டு, ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்துவிட்டு, இந்து மதத்திலேயே தொடர்ந்து நீடிக்கமுடியாதா? காந்தி சொன்னது போல் சாதி இந்துக்களின் மனத்தை மாற்றமுடியாதா? ‘இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்தரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்தரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்கவேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்யவேண்டும்?… நம் நோக்கம் தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.’

ஒரு பேச்சுக்கு, இந்து மதத்தில் இருந்துகொண்டே அதனைச் சீர்திருத்துவோம் என்று வைத்துக்கொண்டாலும், முதலில் சதுர்வர்ணத்தை ஒழித்தாகவேண்டும். பிறகு, பார்ப்பன மதம் வேரறுக்கப்படவேண்டும். இதெல்லாம் சாத்தியமா? ‘இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா?’

எந்த மதத்துக்கு மாறுவது? கிறிஸ்தவமா? இஸ்லாமா? அவற்றில் சாதிகள் இல்லையா? ஏற்றத்தாழ்வுகள் இல்லையா? ‘இருக்கிறது என்றாலும் அது இந்துக்களிடையே கடைபிடிக்கப்படுவது போலுள்ளது என்று சொல்வது சிறுபிள்ளைத் தனமானது… இந்துக்களின் சாதி அமைப்புக்கு மத அங்கீகாரம் உள்ளது. பிற மதங்களில் இருக்கும் சாதிகளுக்கு அந்த மதங்களின் அங்கீகாரம் கிடையாது. மதத்தை ஒழிக்காமல் இந்துக்களால் சாதியை ஒழிக்கவே முடியாது. சாதியை ஒழிக்க முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மாறாக, சாதிகளை ஒழிக்க இவர்களின் மதங்களே பெரிதும் துணை நிற்கும்.’

தன் உரையை அம்பேத்கர் இப்படி நிறைவு செய்கிறார். ‘இந்து மதம் என் மனசாட்சியை ஈர்ப்பதாக இல்லை. என்னுடைய சுயமரியாதைக்கு மதிப்பளிப்பதாக இல்லை… மனிதனுக்காகத்தான் மதம். மதத்துக்காக மனிதன் என்பதல்ல. மனிதத் தன்மை கிடைக்க வேண்டும் எனில், மதம் மாறுங்கள். ஒருங்கிணைவதற்கு மதம் மாறுங்கள். வலிமையாகத் திகழ மதம் மாறுங்கள். சமத்துவத்தை அடைய மதம் மாறுங்கள். விடுதலைக்காக மதம் மாறுங்கள். வீட்டில் மனமகிழ்வுடன் இருக்க மதம் மாறுங்கள்… உங்களுக்கு எது நல்லது என்று சொல்வது என் கடமையாகும். என் கடமையை நான் செய்யவேண்டும். இப்பொழுது அதை நான் செய்து விட்டேன். இனி, முடிவெடுத்து கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு.’

0

நந்தன்

பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 1)

ஹிந்துக்களின் மிகப் பெரிய காவலன் என்று அவர்கள் சொல்வார்கள். இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் என்று இவர்கள் சொல்வார்கள். எது உண்மை? நடுநிலையுடன் ஆராய்கிறது இந்நூல்” என்று புத்தகத்தின் அட்டையிலேயே கொட்டை எழுத்தில் பிரகடனம் செய்துவிட்டுத்தான் நூல் துவங்குகிறது. அதாவது இந்தியாவின் மிக முக்கியமான சமூக இயக்கமான ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒருபக்கச் சார்பின்மையுடன் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்பது இது சொல்லவரும் கருத்து.

ஆனால், நூலின் துவக்கத்திலேயே நூலாசிரியர் பா.ராகவனின் நடுநிலை தெரியத் துவங்கிவிடுகிறது. “ஆதியிலே அந்த ஊருக்கு லவபுரி என்று பெயர்… அதற்கு ஆதாரம் தேடத் தொடங்கினால் இன்னோர் அயோத்தி அபாயம் ஏற்படும்…” – இதுதான் லாகூர் குறித்த ஆசிரியரின் அறிமுகம். (பக். 9) அதாவது நடுநிலை என்ற பெயரில், வரப்போகும் அத்தியாயங்களில் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் இங்கேயே கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.

உண்மையில் நடுநிலை என்பது என்ன? எந்த ஒரு பொருளைப் பற்றி எழுதப் புகுகிறோமோ, அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் – சாதகமானவை, பாதகமானவை உள்பட- கிரகித்து, நெஞ்சுக்கு நீதியுடன், ஆய்வுத் தெளிவுடன் எழுதப்பட்டால்தான் அது நடுநிலைப் பார்வை. அதில், லாகூர் குறித்த அறிமுகம் போன்ற பகடிகள் இருக்காது. இந்த நூலில் அத்தகைய பல பகடிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல வந்து செல்கின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம்…

காந்தி கொலையும் ஆர்.எஸ்.எஸ்.சும்:

 அத்தியாயம்: 4, பக்: 40. காந்திகொலையானபோது ஆர்.எஸ்.எஸ். ஒன்று செய்திருக்கலாம். கோட்சேவைக் கண்டித்து ஓர் அறிக்கை. போதும். செய்யவில்லை என்று கூறுகிறார் ராகவன். இதற்கு என்ன அடிப்படை? எந்த அடிப்படையுமே இல்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரும் காந்தி படுகொலையின்போது தலைவராக இருந்தவருமான குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் பத்திரிகைகளுக்கு அசோசியேட் பிரஸ் மூலமாக அனுப்பிய செய்தியறிக்கையில் கோட்சேவின் செயலை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அதற்கு முன்னதாக பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் படேல், காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு அனுப்பிய கடிதங்களில் காந்தியின் மறைவுக்கு கவலை தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. கோல்வல்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் அடங்கிய ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம் 12 பாகங்களாக *1 தமிழில் வெளியாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்தக் களஞ்சியத்தில், 10வது தொகுதியில் முதலிலுள்ள நூறு பக்கங்கள், மகாத்மா காந்தி கொலையை அடுத்து அரசுக்கும் கோல்வல்கருக்கும் நடந்த கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அம்சங்களே உள்ளன.

குறிப்பாக பக்கம்: 6 ,7 , 8 -ல் இக்கடிதங்கள் உள்ளன. பக்கம்: 9 , 10-ல் அசோசியேட் பிரஸ்சுக்கு அனுப்பிய அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோல்வல்கர் கூறுகிறார்: ”…அந்தச் செயலைச் செய்த தீயவன் நம் நாட்டவனாகவும் ஹிந்துவாகவும் இருப்பதால் அதன் தன்மை மேலும் கொடியதாக இருக்கிறது…. இதனால் உண்மையுள்ள நம் நாட்டவன் ஒவ்வொருவனும் வெட்கமுறுகிறான்…

1948 , பிப். 1 தேதியிட்ட இந்த அறிக்கை பல பத்திரிகைகளில் அரைகுறையாகவே வெளியிடப்பட்டது என்ற தகவலும் அதில் காணப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான அரசியல் சூழலில் பத்திரிகைகளின் போக்கு புரிந்துகொள்ளக் கூடியதே. பத்திரிகைகள் இதனை முழுமையாக வெளியிடாததற்கு ஆர்.எஸ்.எஸ். எப்படி பொறுப்பாக முடியும்?

இதே தொகுதியில், அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.சை காங்கிரசில் இணைக்குமாறு படேல் கூறியது, நேருவின் முரட்டுப் பிடிவாதம், நடுநிலையாளர்களின் சமரச முயற்சிகள், அரசின் நிபந்தனைகள், அதனை கோல்வல்கர் ஏற்க மறுத்தது (பக்கம்: 87 , 88 ) – அனைத்தும் இதில் பதிவாகியுள்ளன. குறிப்பாக மகராஷ்டிரா சட்டமன்றத்தில் நடந்த விவாதமும் அதில் அமைச்சர் மொரார்ஜி தேசாய் அளித்த பதிலும் (பக்கம்: 104 ) முக்கியமானவை. அதில் எந்த நிபந்தனையும் இன்றி ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கிக் கொள்ளப்பட்டதை மொரார்ஜி உறுதி செய்கிறார்.

அரசிடம் மண்டியிட்டதா ஆர்.எஸ்.எஸ்?

 ஆனால், பா.ராகவன் தனது புத்தகத்தில் (பக்: 39 ) ‘நேருவின் நிபந்தனைகளை கோல்வல்கர் ஒப்புக்கொண்டார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு. இதனை குருஜி சிந்தனைக் களஞ்சியத்தின் தொகுதி 10ல் , பக்கம்: 102ல் உள்ள கோல்வல்கரின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இந்த அறிவிப்பு ‘ஹிதவாத’ ஆங்கில நாளிதழில் 1949 , ஆகஸ்ட் 1ல் வெளியானது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மீது புழுதி வாரித் தூற்றுபவர்கள் பல்லாண்டு காலமாக, அரசுக்கு அடிபணிந்து தடையை விளக்கிக் கொண்டதாகவே எழுதி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் பின்னணி உள்ளதால் அதுகுறித்த சங்கடம் ஏதும் எழவில்லை. ஆனால், நடுநிலை நோக்குடன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்நூலில் அத்தகைய கருத்து எழ அனுமதித்திருக்கலாமா?

உதாரணமாக, அரசு நிபந்தனைகள் காரணமாகவே சில நிர்வாக அடுக்குமுறைகளை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றவேண்டி இருந்தது (பக்: 58) என்று குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு சர்கார்யவாஹ் பொறுப்பை சுட்டிக்காட்டி இருக்கிறார். உண்மையில், இந்தப் பொறுப்பு மட்டுமல்ல, இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்.சில் நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான நிர்வாக அடுக்குமுறைகள் அனைத்தையும் 1940க்கு முன்னதாகவே அதன் நிறுவனர் ஹெட்கேவார் உருவாக்கிவிட்டார். சங்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்த கோல்வல்கர் 1938லேயே சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுசெயலாளர்) ஆகிவிட்டார். *2 பொதுவாக ஆர்.எஸ்.எஸ்.சின் பொதுச் செயலாளராக இருப்பவரே அதன் அடுத்த தலைவராவது மரபாக இருந்து வருகிறது. அதாவது தலைவர் பொறுப்புக்கு தயார்நிலையில் உள்ளவராகவே ஒருவர் அங்கு உருவாக்கப்படுகிறார். எனவே, முந்தைய தலைவரின் பரிந்துரைதான் அடுத்த தலைவரின் நியமனமாகிறது என்ற கருத்தை சற்றே ஆராய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த பிரசாரகர்கள், மாநிலங்களின் நிர்வாகிகள் கொண்ட குழுவே (அகில பாரத கார்யகாரி மண்டல் – இதுவும் 1940 -க்கு முன்னமே உருவாகிவிட்டது) சங்கத்தின் பொதுsசெயலாளரைத் தேர்வு செய்கிறது. அவரே சங்கத்தின் நிர்வாகிகளை அறிவிக்கிறார். இந்த உரசலற்ற ஏற்பாடு ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு. இந்த பொதுசெயலாளரே பிற்பாடு முந்தையth தலைவரால் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். அதை அகில பாரத கார்யகாரி மண்டல் ஏற்பது நடைமுறை. இதில் எங்கும் ஜனநாயக நெறிமுறையே ஊடுபாவி இருப்பதைக் காண முடியும். ஆனால், பா.ராகவன் போகிற போக்கில், எந்த ஒரு அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் முறையைப் பின்பற்றுவது இந்திய வழக்கம்… இந்த இலக்கணம் பொது. ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு உட்பட்டு இயங்கும் இயக்கமாகத்தான் கருதப்படுகிறது. ஆனாலும், தலைமைத் தேர்வு என்பது முந்தைய தலைவரின் தேர்வுதான்” என்று (பக்: 58) கூறிச் செல்கிறார். இந்தக் கருத்தில் உள்ள நுண்ணிய தாக்குதல், அவரது நடுநிலையை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

ஒரு இயக்கம் குறித்த படைப்பின் ஆக்கத்தில் நடுநிலையை உறுதிப்படுத்த வேண்டுமானால், அந்த இயக்கம் குறித்த நடுநிலையாளரின் கருத்தையே மேற்கோளாகக் காட்ட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். குறித்த மேற்கோள்களை இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குறித்து நூல் எழுதிய ஒருவரது – தேஷ் ராஜ் கோயல் – கருத்தையே ஒரு சோறு என்ற தலைப்பில் பிரசுரித்திருப்பது பொருத்தமில்லை. அப்படியானால், ஆர்.எஸ்.எஸ்.சை அற்புதமாக வழிநடத்திய கோல்வல்கரின் கருத்து ஏதாவது ஒன்றை மேற்கோளாக வெளியிட்டிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி அதில் பா.ராகவனின் கருத்து ஒன்றை மேற்கோளாகக் காட்டினால் எப்படி இருக்கும்? இந்த ஒருசோறு பதம் – புத்தகத்துக்குப் பதமாக இல்லை.

தொண்டனா? தலைமையா?

பக். 56 ல் கட்சிகள் தொண்டர்களால் வாழ்கிறது. ஆர்.எஸ்.எஸ். அதன் தலைமையால் வாழ்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இக்கருத்து மேலோட்டமாகப் பார்த்தால் சரியானது போலத் தெரியும். உண்மையில் கட்சிகள்தான் இந்தியாவில் தலைவர்களால் தலைவர்களுக்காக வாழ்கின்றன. காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, அதிமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம்… என பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள் தவிர்த்த எந்தக் கட்சியும் தலைமையால்தான் (இந்தப் பாசாங்கை நூலாசிரியர் முந்தைய பக்கங்களிலேயே குறிப்பிட்டும் விடுகிறார்) வாழ்கின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படியல்ல.

ஆர்.எஸ்.எஸ்.சைப் பொருத்தவரை, அதன் அடிமட்டத் தொண்டனும் ஸ்வயம்சேவகனே; அகில பாரதத் தலைவரும் ஸ்வயம்சேவகனே. ஸ்வயம்சேவகத் தன்மையே இவர்களிடையிலான பிணைப்பு. யாரும் வலியுறுத்தாமல், எந்த ஒரு இயக்க உறுப்பினர் படிவமும்கூட நிரப்பாமல், தானாக முன்வந்து செயல்படுபவரே ஸ்வயம்சேவகர். சிறு கிராமத்தில் ஷாகா நடத்தும் ஸ்வயம்சேவகன், அதே கண்ணோட்டத்துடன் தேசிய அளவில் சங்கப் பணிகளை வழிநடத்தும் ஸ்வயம்சேவகனை மரியாதையுடன் தலைவராகக் கொள்கிறான். முழுவதும் உளப்பூர்வமான முறையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்ள இணையதளக் கட்டுரைகள் உதவாது. சர்க்கரை இனிப்பானது என்பதை உணர அதை சுவைத்துப் பார்ப்பது எப்படி முக்கியமோ அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்வது அதில் இணைந்தால்தான் சாத்தியம். அல்லாதவரை, குருடர்கள் யானையை கற்பனை செய்தது போன்ற நிலைமையே ஏற்படும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஸ்வயம்சேவகனே மேலானவன். “நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வார் இரண்டாவது தலைவர் கோல்வல்கர். இந்தத் தலைப்பில் ஒரு நூலே கிடைக்கிறது*3. ஒவ்வொருவரும் சங்கத்தில் இணைந்து அதற்கு தன்னால் இயன்ற அளவில் நேரம் ஒதுக்கிப் பணி புரிகிறார். அப்போது அவரது ஆர்வம், சிரத்தை, முயற்சி, திறமை, தன்னலமின்மை போன்ற பண்புகளின் அடிப்படையில் அவரே சங்கப் பொறுப்புகளை ஏற்கிறார். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இங்கு கிடையாது. இன்னொருவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதால் (கவனிக்கவும்: பதவியல்ல) யாரும் பொறாமை கொள்வதும் இங்கு கிடையாது.

ஒரு ஸ்வயம்சேவகன் தனது கடுமையான உழைப்பால் மாநிலத் தலைவரும் ஆகலாம்; அகில பாரதத் தலைவரும் ஆகலாம். அதற்கு அவன் தியாகங்கள் செய்யத் துவங்க வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து பிரசாரக் ஆக வேண்டும்; எந்த அறிமுகமும் இல்லாத ஊரில் சங்கவேலை செய்ய வேண்டும்; அடக்குமுறைகள், கல்லடிகளைத் தாங்கி சங்கத்தை வளர்க்க வேண்டும்; தனது தகுதிகளைக் கூடவே உயர்த்திக் கொள்ளவேண்டும். அதாவது சங்கத்தின் வளர்ச்சியும் தனிப்பட்ட ஸ்வயம்சேவகனின் வளர்ச்சியும் தியாகத்தின் அடிப்படையிலானது. வேறெந்த அளவுகோலும் இங்கு கிடையாது. அதனால் தான் 85 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ் உடைக்க முடியாத இயக்கமாகவும், மேலும் மேலும் வளரும் குடும்பமாகவும் இருக்கிறது.

இங்கு புத்தக ஆசிரியர் குறிப்பிடுவது போல (பக்: 59) பிரசாரகர்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; தானாக முன்வந்து, குடும்பவாழ்வை மறுத்து பிரசாரக் ஆகும் ஸ்வயம்சேவகனே மாற்றங்களை உருவாக்குகிறான். இங்கு யாரும் பிரசாரகர்களுக்கு (பக்: 60) மனதை ஊடுருவும் பயிற்சிகளும் அளிப்பதில்லை; பிரமச்சரியமும் தேசபக்தியும் உள்ள உறுதியுமே பிரசாரகர்களின் வலிமை. இங்கு எந்த திரைமறைவுப் பயிற்சிகளும் (பக்: 62) இல்லவே இல்லை. ஆண்டுதோறும் திறந்தவெளியில் நடக்கும் ஆளுமைப் பண்பு பயிற்சி முகாம்களே (சிக்ஷண வர்க) ஸ்வயம்சேவகர்களையும் பிரசாரகர்களையும், சங்க நிர்வாகிகளையும் பட்டை தீட்டுகின்றன. இந்த முகாம்களை யாரும் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

யாருக்கும் எதிரியல்ல

புத்தகத்தின் 69 -வது பக்கத்தில் இடதுசாரிகளின் புகழைக் குறைப்பது, வீச்சைக் கட்டுப்படுத்துவது என்னும் அடங்காப் பேரவாவைத் தீர்த்துக் கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் ஆர்.எஸ்.எஸ்.சுக்குக் கிடைத்தது” என்று கூறுகிறார் ஆசிரியர். இதுவும் தவறான கருத்து. சங்கத்தின் மூத்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டவருமான பண்டித தீனதயாள் உபாத்யாய, ஏகாத்மா மானவவாதம் (Integral Humanism) என்ற கருத்தை*4 உருவாக்கியவர். இவர் குறித்த சிறு குறிப்பும்கூட இந்தப் புத்தகத்தில் இல்லாதது குறையே. இவரே இன்றைய பாஜகவின் அடிப்படையான சித்தாந்தங்களை வடிவமைத்தவர். இவர் தனது நூலில்*5 இடதுசாரிகள் எங்கே வழி தவறுகிறார்கள், அவர்களது சித்தாந்தத்தின் சாதகம், பாதகம் என்ன என்றெல்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறார். இடதுசாரிகள் நமது நாட்டிற்கு இயைந்த வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. இன்று பாரதத்தின் பிரதான கட்சியாக இருந்திருக்க வேண்டிய இடதுசாரிகள் அந்த வாய்ப்பை தவற விட்டதற்கு இந்த மறுபரிசீலனை இல்லாததே காரணம் எனில் மிகையில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துகளை முற்றிலும் வலதுசாரியாகக் கருதிக்கொண்டு அதை எதிர்ப்பது இடதுசாரிகளின் அடிப்படையாகவே மாறிவிட்டிருக்கிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பில்லை. அடிப்படையில் இந்தியாவை ஒரு நாடாகக் கருதாமல் பல குறுந்தேசியங்களின் கூட்டமைப்பாக அணுகுவதே இடதுசாரிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான அடிப்படை வேற்றுமை. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக விட்டுக் கொடுக்காது. அதற்காக இடதுசாரிகளின் புகழைக் கெடுக்க, மெனக்கெட்டு வேலை செய்ய அதற்கு நேரமும் கிடையாது.

இதே அடிப்படைதான் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான மோதலுக்கும் வழி வகுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் ஹிந்துத்துவம் மத எல்லைகளைத் தாண்டியது. இதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 99) ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் மத விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மத அடிப்படையில் எந்தப் பகுதியில் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகின்றனரோ அப்பகுதியில் தேசவிரோதக் கருத்துக்கள் வேகமாகப் பரவுகின்றன. அப்பகுதிகளில் பிரிவினை கோஷங்கள், சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு சவாலான நடவடிக்கைகள் எழுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், பஞ்சாப், கேரளாவின் மலப்புர மாவட்டம், தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டம், கோவை நகரின் கோட்டைமேடு பகுதி போன்றவை உதாரணம். எனவேதான் ஹிந்துப் பெரும்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இன்று காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துக்களாக வாழ்ந்தவர்கள்தானே? மதம் மாறியதால் அவர்களது வேர்கள் மாறிவிடுமா? இதையே ராமாயணம் படிக்கும் இந்தோனேசிய முஸ்லிம்களுடன் ஒப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். சுட்டிக் காட்டுகிறது. நம்மைப் பிரிக்கும் மதங்களைவிட நம்மை இணைக்கு ஹிந்துத்துவப் பண்பாடு இனிமையானது என்றே ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இக்கருத்து இன்னும் சிறுபான்மையினரால் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. அதற்கு ஊடகங்களும் காரணமாக உள்ளன. இந்தப் புத்தகத்தின் தலைப்பும் (ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்) அதையே நிரூபிக்கிறது.

”தேசத்தில் இரண்டே விதமான ஸ்வயம்சேவகர்கள்தான் இருக்கிறார்கள் – முதல் பிரிவினர் இன்றைய ஸ்வயம்சேவகர்கள்; பிறர் நாளைய ஸ்வயம்சேவகர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் கூறப்படுவதுண்டு. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் சங்கம் இயங்கி வருகிறது. சங்கம் எக்காலத்திலும் யாருக்கும் எதிரியல்ல; ஒன்றுபடுத்துவதே அதன் மார்க்கம். இதனை ‘சிவனை அறிய வேண்டுமானால் சிவமாகவே ஆக வேண்டும்’ என்ற தத்துவப்படி அணுகினால்தான் புரியும்.

மோடியும் மண்டைக்காடும்

புத்தகத்தின் 14வது அத்தியாயம், பக். 134 ல் குஜராத் கலவரங்களுக்கும் அதன் அனைத்துக் கோர விளைவுகளுக்கும் முதல்வர் நரேந்திர மோடி பின்னணியில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக காங்கிரஸ் ஆதரவு ஊடகமான தெகல்கா சுட்டப்பட்டுள்ளது. உண்மையில் குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து மோடி ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்டு வருகிறார். மோடிக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் தருணம் இது. தவிர, மோடி தொடர்பான சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளவை. இந்நிலையில், முன்யூக முடிவுகளுடன் கூடியதாக எதையும் எழுதுவது தவறு. நமது ஊடகங்கள் இதைத்தான் செய்து வருகின்றன.

குஜராத் கலவரம் கண்டிப்பாக வெறுக்கப்பட வேண்டியது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை, மோடியின் அரசு எடுத்த நடவடிக்கையால், துப்பாக்கிச்சூட்டால் நூற்றுக்கணக்கான கலவரக்காரர்கள் (இதில் மதத்தைக் குறிப்பிட வேண்டாமே!) கொல்லப்பட்டதும் உண்மை*6. இதனை மூடிமறைக்கும் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாகக் கூச்சலிட்டு ஒரு கருத்தை உருவாக்க முயன்றதே மோடி மீதான அவதூறுகளுக்குக் காரணம். நானாவதி கமிஷன் அறிக்கை குஜராத் அரசுக்கு சாதகமாகவே வெளியானதை யாரும் மறக்கக்கூடாது.

அதே சமயம், இதேபோன்ற கலவரங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படும்போது ஊடகங்கள் பட்டும் படாமல் நடந்துகொள்வது ஏன்? உதாரணமாக, பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த ஹிந்துப் பெண்கள் கடலில் குளிக்கச் சென்றபோது கிறிஸ்தவ மீனவர்களால் மானபங்கப்படுத்தப்பட்டதே மண்டைக்காடு கலவரத்துக்குக் காரணம். இதற்கு அடிப்படைக் காரணம் மதமாற்றம். இதை அரசே புரிந்துகொண்டதால்தான் அங்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால், இந்த காரணத்தை குமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லும் காரணம்‘ என்று அடிக்குறிப்பாக தருகிறார் இதே புத்தகத்தில் (பக்: 93) பா.ராகவன். அதாவது ஆர்.எஸ்.எஸ்.மீது குற்றம் சுமத்தும்போது தானே முன்வந்து குற்றம் சுமத்துபவர், சிறுபான்மையினர் மீதான புகார் வரும்போது தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டுகொண்டு எதிர்த்தரப்பையே புகார்தாரர் ஆக்குகிறார். இது தற்கால ஊடக மனநிலையின் பிரதிபலிப்பே. யாரைக் குற்றம் கூறினால் யாரும் கேள்விகேட்க மாட்டார்களோ அவர்கள் முதுகில் கும்மாங்குத்து குத்துவது; எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைக் கண்டால் அடக்கி வாசிப்பது. இந்த மனநிலைக்கு பா.ராகவனும் விதிவிலக்கில்லை.

இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தேசப்பிரிவினைக் காலக் காட்சிகளில் பலவும் ‘நேரடி நடவடிக்கை’யில் இறங்கிய முஸ்லிம் லீக்காரர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், அவற்றைக் குறிப்பிடும்போதுகூட, இரு சமூகத்தினரையும் சமமாக வைப்பதாக நினைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை வன்முறையாளராக சித்தரிப்பதைக் காண (பக்: 14) முடிகிறது. தற்காப்பு நடவடிக்கைக்கும் கலவர நடவடிக்கைக்கும் வேறுபாடு இல்லையா? ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளராக இருந்த ஹொ.வெ.சேஷாத்ரி எழுதிய தேசப்பிரிவினையின் சோக வரலாறு*7, இப்புத்தகத்தின் ஆசிரியர் படிக்க வேண்டிய முக்கியமான நூல் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

பிழைகள் சரித்திரம் ஆகலாமா?

மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். குறித்து புத்தகம் எழுதினால் அதன் எதிர்ப்பாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்துடேயே, அதனை சமண் செய்யும் உத்திகளுடன் இந்தப் புத்தகத்தை பா.ராகவன் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம், அவரது அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையிலான போராட்டம்.

இருந்தபோதும், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை ஹிந்து இயக்க நண்பர்கள் பலர் ஆர்வமாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. அவர்களது சங்கம் பற்றி சங்கமல்லாத நிறுவனம் ஒன்று வெளியிடும் நூல் இது என்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது, இதில் குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகளை அவர்கள் சான்றிதழாகவேகூட நினைத்திருக்கலாம். உண்மையில் சிறுபான்மையினரின் அட்டகாசங்கள் அத்துமீறும்போதுதான் பெரும்பான்மை மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைகிறார்கள். இதற்கு கோவை (1998 கலவரங்கள்) உதாரணம். பெரும்பாலான மக்கள் ஆர்.எஸ்.எஸ். மீது கூறப்படும் புகார்களை நற்சான்றிதழாகக் கருதுவதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 97) குறிப்பிடுகிறார்.

ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. கிழக்கு பதிப்பகம் போன்ற நல்ல நம்பகத்தன்மை கொண்ட நூல் வெளியீட்டு நிறுவனம் வெளியிடும் புத்தகத்தில் உள்ள தவறுகள் நாளை சரித்திரமாக பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கமே எனது விமர்சனத்தின் நோக்கம். மக்களை மதரீதியாக பாகுபடுத்திக் குளிர்காயும் வாக்குவங்கி அரசியல் கட்சிகளைவிட, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் மோசமானதில்லை; சிறுபான்மையினரை தாக்குவது (பக்: 132) அதன் நோக்கமுமில்லை. அதற்கென, ‘அகண்ட பாரதம்; உலகின் குருவாக பாரதம் ஆக வேண்டும்’ என்பது போன்ற மாபெரும் லட்சியங்கள் உள்ளன.

மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பிறர் எழுதாத நல்ல பல கருத்துக்களும் உள்ளன. எழுதியிருக்க வேண்டிய – விடுபட்ட பல முக்கியமான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

-          தொடரும்

(ஆர்.எஸ்.எஸ்., கிழக்கு பதிப்பகம், பா.ராகவன், விலை 75 ரூ.)

அடிக்குறிப்புகள்:

1 . குருஜி சிந்தனைக் களஞ்சியம்- டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை, 2006 ,

2. ஸ்ரீ குருஜி- வாழ்வே வேள்வி- பி.ஜி.சஹஸ்ரபுத்தே, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1998 , பக்: 58

3. நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்- சக்தி புத்தக நிலையம், சென்னை, 1997

4 . INTEGRAL HUMANISM – http://en.wikipedia.org/wiki/Integral_humanism_(India)

5 . ஏகாத்ம மானவ வாதம்- பண்டித தீனதயாள் உபாத்யாய, பாரதீய ஜனசங்கம், சென்னை, 1970

6. http://www.gujaratriots.com/24/myth-5-gujarat-police-was-anti-muslim/

7. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – ஹொ.வெ.சேஷாத்ரி, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1996.