ஆப்பிரிக்கத் தாய்

africaபறையர்கள் / அத்தியாயம் 3

இந்தியா முழுமைக்கும் மக்களுக்கு நற் கருத்துக்களை கூற வந்த சமூக அமைப்புகளும் சாதி வடிவைப் பெறத் தொடங்கின. சமத்துவத்துக்காகவும் விடுதலைக்காகவும் பக்தி நெறிகளை ஏற்றுக்கொண்ட வீர சைவர்கள் (கர்நாடகத்தில் தோன்றியவர்கள்) கடைசியில் தனியொரு சாதியாக அமைந்து போயினர். கொள்வினை, கொடுப்பினை முதலியவற்றைத் தமக்கிடையே மட்டுமே செய்து கொண்டனர். அகமண முறையை அனுசரித்து தமது சாதி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். கபீர்தாசர் வழிவந்த சத்நாமிகளும் எதிர் மரபாகத் தொடங்கி இன்று தனி ஒரு சாதியாக வாழ்கின்றனர்.

குஜராத்துக்கு அருகிலுள்ள சிந்த் பகுதியில் வாழும் ‘ஜாட்’ வகுப்பினர் 8ம் நூற்றாண்டில் ‘சண்டாளர்’களாகக் கருதப்பட்டனர். இப்பகுதியை பின்னாட்களில் ஆளவந்த முகமது காஸிம் போன்ற இஸ்லாமிய அரசர்கள் ஜாட் மக்களைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருந்தனர். ஆனால் 11ம் நூற்றாண்டில் ஜாட்டுகள் பஞ்சாப், ஹரியானா நோக்கி இடம் பெயரத் தொடங்கியதும் அவர்களது தலைவிதியும் மாறியது. 17ம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் மதிப்பும் மாண்புமுடைய குடியானவ சாதியாக உருமாறியிருந்தனர். அதே நூற்றாண்டில் ஜாட் வகுப்பாரில் சிலர் மேற்கொண்டு செயல்படுத்திய கிளர்ச்சிப் போராட்டத்தின் விளைவாக அவர்கள் தங்களைப் போராளிகளாக உணர்ந்தனர். தாம் ராஜபுத்திரர்களுக்கு இணையானவர் என்று பெருமை பேசத் தொடங்கினர்.

சிவாஜி, தன்னை சத்திரியனாகக் காட்டிக்கொள்ள உத்தரப் பிரதேசத்திலிருந்து சில பார்ப்பனர்களைத் தருவித்து அவர்களது ஆசியையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார். மராத்தியப் பார்ப்பனர்கள் அவனுக்கு வழங்க மறுத்த தகுதியை இவ்வாறு அவன் பெற்றுக் கொண்டான்.

மராத்தியத்தில் தையல் தொழில் புரியும் சாதியில் சிலர் சாயம் வெளுக்கும், தோய்க்கும் பணியை மேற்கொண்டபோது வேறொரு சாதியாக உருமாறினார்கள். சில சமயங்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அச்சாதிக்குரிய பழக்க வழக்கங்களை அனுசரிக்காதபோது ‘கீழ்’ நிலைக்குத் தள்ளப்பட்டு ‘கீழ் சாதி’யான சம்பவங்களும் உண்டு. ராஜஸ்தானைச் சேர்ந்த மால்வா பகுதியில் ராஜபுத்திர வகுப்பார் விதவைகளை மறுமணம் புரிய அனுமதிப்பதில்லை. அவ்வகுப்பைச் சேர்ந்த ஒருசில குடும்பங்களில் இவ்வாறு விதவை மணங்கள் நிகழ்ந்தபோது அவர்கள் சாதியிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு பிரிந்து மால்வா ராஜபுத்திரர்கள் இரு சாதிகளாகப் பிரிந்தனர்.

நாடு முழுமைக்கும் சமணம், பௌத்தம், ஆசிவகம், சைவம், வைணவம் ஆகிய வைதிக சமயங்களின் தொகைக்கேற்ப வருண வேற்றுமையும், சாதிப் பிரிவுகளும் வலுப்பெற்று வளர்ந்தன. ஒவ்வொரு பெருங் கோயிலைப்பற்றியும், ஊர்ப்புராணங்கள் தோன்றின. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளுடன் இந்திரன் சாபம் இங்கு தீர்ந்தது, சந்திரன் சாபம் அங்கு தீர்ந்தது என்னும்  கதைகளும் அந்தக் கோயிலுக்கு வந்து பயன்பெற்ற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள் முதலியவர்களுடன் குறிப்பிட்ட சாதி மக்களையும், தெய்வ சம்பந்தம் உடையவர்களாக அப்புராணங்கள் சித்தரித்தன.

இதனால் பல சாதியர்களும் தங்களை உயர்ந்த சாதியினராகக் காட்டிக் கொள்ளத் தங்களை மேலான தெய்வங்களுடன் சம்பந்தப்படுத்தும் கதைகளைப் புனைந்தனர். இதனால் சாதி எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. இந்த நிலையில் பட்டினவர், செம்படவர், பரவர், வன்னியர் முதலியோர் பற்றிய புராணக் கதைகளும் பெருகின.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்தபோது எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும் என்னும் தலைப்பிட்ட ஆங்கிலப் பெருநூலை அரசிடம் ஒப்படைத்தார். அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு சாதியினரும், குலத்தவரும் தம்மைத் தெய்வத்தோடு தொடர்பு கொண்டவர் என்று கூறியதை குறிப்பிட்டிருந்தார்.

1910ல் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது ஒவ்வொரு சாதியரும் தங்கள் கோத்திரங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியது. அப்பொழுதுதான் ஒவ்வொரு சாதியினரும் தம்மை இந்திரன் குலமென்றும், சந்திரன் குலம் என்றும், அக்கினிக் குலம் என்றும், சூரியன் குலம் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்ளத் தொடங்கினர்.

கள்ளர், மறவர், அகம்படியார் தம்மை இந்திர குலம் என்று கூறிக் கொண்டனர். கல் தச்சர், பொன் வேலை செய்யும் ஆசாரிகள் தம்மை விசுவகர்மா பிராமணர்கள் என்று கூறிக் கொண்டனர். நாடார், வன்னியர் தம்மை ‘சத்திரியர்’ என்றும் ‘பள்ளர்’ தம்மை தேவேந்திரகுல வேளாளர் என்றும் கூறிக் கொண்டனர்.

இதனால் சோழப் பேரரசு காலத்தில் மேற்சாதியினர் (வலங்கையினர்) 98 பிரிவினராகவும், கீழ்ச்சாதியினர் (இடங்கையினர்) 98 பிரிவினராகவும் இருந்த சாதிப்பிரிவு 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2378 சாதிகளாகப் பெருகின. 1955ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் பின்தங்கிய வகுப்புக்கான குழு (பேக்வர்ட் க்ளாஸ் கமிஷன்) பின் தங்கிய சாதிகள் மட்டும் 2399 என்று கணக்கிட்டது. அப்படியென்றால் முன்னேறிய சாதிகள் (ஃபார்வர்ட் க்ளாஸ்)

எத்தனை? தாழ்த்தப்பட்ட சாதிகள் எத்தனை? இவற்றைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் சாதிப்பிரிவுகள் மட்டும் நாலாயிரத்தை நெருங்குமா? தாண்டுமா?

ஆங்கிலேயர் ஆட்சியில் தங்களை உயர்ந்த குலத்தார் என்று கூறிக்கொண்டவர்கள், நாடு விடுதலைப் பெற்றபின் தங்களைத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.

0

மனிதர்களைப் பற்பல சாதிகளாகப் பாகுபடுத்தும் பழக்கம் வருணாசிரமம் என்னும் சதுர்வண முறை நம் துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து நம் சமூக போராட்டங்கள் அனைத்துக்கும் – சிப்பாய்க் கலகத்திலிருந்து அயோத்தி காலம் வரை காரணமாக இருந்திருக்கிறது.

மருத்துவ நோக்கில் சாதிகளைப் பிரிக்க வேண்டுமென்றால் ரத்த க்ரூப் ஏ,பி,ஓ பாஸிட்டிவ், நெகட்டிவ் என்றுதான் பிரிக்க முடியும். ரத்த தானம் செய்யும்போது பொருத்தமான ரத்தம் தானா? என்று பார்த்துக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் மருத்துவத்தின் சாதி.

மானுடவியலில் மனித சாதியை ஆப்பிரிக்கன், ஏசியன், ஆஸ்திரேலியன், நியூ கினியன், காகேசியன் என்று ஐந்து வகைகளில் அடக்கிவிடுகிறார்கள். நாமெல்லோரும் ஆசிய வகை.

இந்த வகைகளிடையே சரும நிறம், கண்களின் அளவு, அமைப்பு, தலைமயிர் சுருட்டை போன்ற வெளித் தோற்றங்களில் வேறுபாடுகள் தெரிகின்றன. ஆனால் உள்ளுறுப்புகளின் அமைப்பில் வித்தியாசம் இல்லை. ஓர் ஆப்பிரிக்கனின் இதயத்தை ஒரு ஆசியனுக்கு வைக்க முடியும்.

ஆசியனின் சிறுநீரகத்தை ஒரு காகேசியன் ஏற்கலாம். இறைச்சித் தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ என்று சிவவாக்கியர் கேட்டதற்கு பதில் ‘இல்லை’ என்பதே.

நவீன மனிதன் எப்போது உண்டானான் என்பது பற்றிச் சுவாரஸ்யமான சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்க பெர்கல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலன் வில்ஸன் என்பவர் நேச்சர் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு புதிய சித்தாந்தம் கொண்டு வந்தார்.

‘நம் முன்னோர்கள் ‘நியண்டர்தால்’ என்னும் இனமல்ல. நவீன மனிதன் சுமார் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றினான். இன்றைய மனித சமுதாயம் அத்தனை பேரும் அந்த ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றியவர்கள்தான்’ என்று ஆதாரம் காட்டி எழுதியிருக்கிறார் வில்ஸன். இதற்காக அவர் பயன்படுத்திய அறிவியல் வளர்ச்சி முறை மாலிக்யுலர் பயாலஜி என்னும் இயலைச் சார்ந்தது.

இந்த ஆய்வின்படி அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி, என்று தாய் வழியிலேயே வம்சாவளியைப் பின்னால் தள்ளிக் கணக்கிட முடிந்தது. அவ்வாறு கணக்கிட்டால் நாம் எல்லோரும் ஒரு லட்சத்து சொச்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரே பெண்மணியின் வாரிசுகள். உலகில் உயிர் வாழும் அத்தனை மனிதர்களும் இந்த மகாமகா பாட்டியிடமிருந்து மைட்டோ காண்ட்ரியா பெற்றவர்கள் என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அந்தப் பெண்மணிக்கு ‘மைட்டோ காண்ட்ரியல் ஈவ்’ என்றும் பெயரிட்டார்.

பைபிளின் ஏவாள் இந்த மாதிரி இருக்க விரும்பவில்லை. இந்த ஒரே தாய் சித்தாந்தத்துக்கு எதிராக அவர்கள் மற்றொரு சித்தாந்தம் சொல்கிறார்கள். அது ‘நோவாவின் படகு’ சித்தாந்தம். இதன்படி ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதியிலிருந்து வந்த நவீன மானிடர்களால் இடம் பெயர்க்கப்பட்டனர். பிறகு  ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் அவர்கள் பரவினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க ஏவாள் சித்தாந்தம் பலரை வசீகரித்துள்ளது. அதன் சமூகவியல் அர்த்தங்கள் மிக மிக ஆழமானவை. மனித இனத்தில் எல்லோரும் ஒரே தாயிடமிருந்து ஜனித்தவர்கள் ஆவார்கள்.

ஆராய்ச்சிகளும், மருத்துவ உண்மைகளும் என்ன சொன்னாலும் சாதி பிடியிலிருந்து இறங்கி சமூக தளத்தில் ஒன்றாக இருக்க இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.

0

ஏகம் ஏகம் அநேகம்

மேட்டர் / அத்தியாயம் 14

வேகவேகமாகப் புத்தகம் எழுதி முடிக்கவேண்டுமே என்ற முனைப்பில் இருந்த மெண்டலீவுக்கு, தனிமங்களைக் கொண்டு ஒருவித ஒழுங்கை நிர்மாணித்திருப்பது உறைத்தது. உடனே அதனை ஒரு கட்டுரையாக ரஷ்ய மொழியிலும் பிரெஞ்சிலும் எழுதினார். ‘அணு எடையையும் வேதி இணைதிறனையும் அடிப்படையாகக் கொண்டு தனிமங்களை ஒழுங்குபடுத்த ஒரு முயற்சி’ என்ற அந்தக் கட்டுரையை ரஷ்ய மொழியில் 150 பிரதிகளும் பிரெஞ்சில் 50 பிரதிகளும் எடுத்துக்கொண்டார்.

இந்த அட்டவணைதான் 17 பிப்ரவரி 1869 என்ற தேதியிட்ட அந்தக் கட்டுரையில் காணப்பட்டது. ரஷ்யக் கட்டுரை உள்ளூர் ஆட்களுக்காக. பிரெஞ்சுக் கட்டுரையை மெண்டலீவ் ஐரோப்பாவில் தனக்குத் தெரிந்த வேதியியல் விஞ்ஞானிகளுக்கெல்லாம் அனுப்பிவைத்தார்.

மேலே உள்ள படத்தில் பல இடங்களில் கேள்விக்குறிகளைக் காண்பீர்கள். கமா இருக்கும் இட்த்தில் முற்றுப்புள்ளிகளைப் போட்டுக்கொள்ளுங்கள். சில நாடுகளில் 15.6 என்பதை 15,6 என்றுதான் குறிப்பார்கள்.

தனிமக் குறியீடு இருக்கும் இடங்களில் கேள்விக்குறிகளை இடுவதன்மூலம் அந்த இடத்தில் இதுவரை கண்டுபிடிக்காத ஒரு தனிம்ம் இருக்கவேண்டும் என்ற தன் கருத்தை மெண்டலீவ் மென்மையாக முன்வைத்தார். அணு எடைக்கு அருகில் கேள்விக்குறி இட்ட இடங்களில் அதுவரையில் விஞ்ஞானிகள் முன்வைத்துள்ள அணு எடை தவறு என்றும் தான் குறிப்பிட்டிருக்கும் எண்தான் சரி என்றும் தான் கருதுவதை முன்வைத்தார்.

இது அறிவியல் உலகில் பெரும் சலசலப்பு ஒன்றையும் உடனடியாக ஏற்படுத்தவில்லை. ஆனால் மெண்டலீவ் தொடர்ந்து 1870-ல் ஒரு கட்டுரை எழுதி மேலும் பல தனிமங்களின் அணு எடை எண்களை மாற்றினார். 1871-ல் அதே கட்டுரையை மேலும் விரிவாக்கி ஜெர்மன் மொழிக்கு மாற்றப்பட்டது. அப்போதுதான் மிக முக்கியமான பல விஞ்ஞானிகளைச் சென்றடைந்தது.

இந்த 1870 ரஷ்ய, 1871 ஜெர்மன் கட்டுரையில் மிக தைரியமான சில முடிவுகளை மெண்டலீவ் வெளியிட்டிருந்தார். ஆனால் இதற்கான அடிப்படை 1869 அட்டவணையில் கேள்விக்குறிகளிலேயே அடங்கியிருந்தது.

போரானைப் போல நடந்துகொள்ளும், ஆனால் போரானைவிட அதிக அணு எடை கொண்ட ஒரு தனிமம் இருக்கவேண்டும்; அதன் அணு எடை 44 என்று இருக்கும் என்றால் மெண்டலீவ். அது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பின்னர் அதனைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர். கண்டுபிடிக்கப்படாத அந்தத் தனிமத்துக்கு ஏக-போரான் என்று பெயர் வைத்தார். ‘ஏக’ என்பது ‘ஒன்று’, ‘ஒரேயொரு’, ‘தனித்துவம் கொண்ட’ போன்ற பொருள்களைத் தரும் சமஸ்கிருதச் சொல்.

ஏக-போரான் என்றால் போரானைப் போன்ற, ஆனால் தனித்துவமான ஒரு தனிமம் என்ற பொருளில் மெண்டலீவ் சொல்லியிருக்கவேண்டும். ஏன் மெண்டலீவ் லத்தீன், கிரேக்கம், ரஷ்யன், பிரெஞ்ச், ஜெர்மன் ஆகியவற்றை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்தார் போன்ற ஆராய்ச்சி என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இதில் பானினி எங்கு வந்தார் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் சமஸ்கிருத முன்னொட்டு அது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லமுடியும்.

அதேபோல அணு எடை 68 கொண்ட ஏக-அலுமினியம் என்ற ஒரு தனிமம் இருக்கவேண்டும் என்றும் அணு எடை 72 கொண்ட ஏக-சிலிகான் என்ற ஒன்று இருக்கவேண்டும் என்று வலுவாக முன்வைத்தார்.

*

நிறமாலையியல் பற்றி சென்ற வாரமே குறிப்பிட்டிருந்தேன். ஒரு தனிமத்தைச் சூடாக்கி பின் அதைக் குளிர வைக்கும்போது அதிலிருந்து ஆற்றல் கதிர்கள் வெளியாகும். அந்தக் கதிர்கள் எந்த அதிர்வெண்ணில் உள்ளன என்பதை ஆராய முடியும். ஒவ்வொரு தனிமமும் ஒருசில குறிப்பிட்ட அதிர்வெண்கள் கொண்ட கதிர்களையே வெளியிட்டன. இது ஆச்சரியகரமான ஒரு நிகழ்வு. இதனை நாம் விரிவாகப் பின்னர் பார்க்கப்போகிறோம். ஒருவித்ததில் சொல்வதானால் ஒரு தனிமத்துக்கு அதன் குறிப்பிட்ட அதிர்வெண்கள் கைரேகை போல. இந்த அதிர்வெண்ணில் ஆற்றல் கதிர்கள் வெளியானால் அது இந்தத் தனிமம். வேறு அதிர்வெண்கள் என்றால் வேறு தனிமம்.

இரண்டு தனிமங்களை ஒன்றாகக் கலந்து அவற்றைச் சூடாக்கிக் குளிர்வித்தால் அவை இரண்டு தனிமங்களின் அதிர்வெண் கலவைகளில் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும்.

இதனை வைத்துக்கொண்டு புதிய தனிமங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பலரும் இறங்கினர். புன்சென், கிர்க்காஃப் ஆகியோர் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அதைப்போல ஒருவர்தான் பிரான்ஸின் பால் எமில் லெகாக் தி போய்ஸ்பாத்ரான். இவர் தன் பங்குக்கு ஐந்து தனிமங்களைக் கண்டுபிடித்தார். ஆனால் இவர் கண்டுபிடித்த முதல் தனிமம்தான் மிக முக்கியமானது. 1875-ல், மெண்டலீவ் கட்டுரை ஜெர்மனில் வெளியான நான்கு ஆண்டுகளுக்குப்பின், லெகாக் தி போய்ஸ்பாத்ரான் தன் முதல் புதுத் தனிமத்தைக் கண்டுபிடித்தார். பிரான்ஸின் பழமையான பெயர் கால் என்பது. எனவே அதன் ஞாபகார்த்தமாக, தான் கண்டுபிடித்த தனிமத்துக்கு கால்லியம் என்று பெயர் கொடுத்தார். இந்தத் தனிமத்தின் அணு எடை ஏக-அலுமினியத்தின் அணு எடையாக இருந்தது. ஆனால் இவருக்கு மெண்டலீவ் என்ற ஒருவர் ஏற்கெனவே இப்படி ஒரு தனிமம் இருக்கும் என்று சொன்னது தெரிந்திருக்கவில்லை.

யாராவது ஒருவர் தன் ஏக தனிமங்களைக் கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த மெண்டலீவ், பிற மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளையெல்லாம் தேடிக்கொண்டே இருந்தார். லெகாக் தி போய்ஸ்பாத்ரான் தன் கண்டுபிடிப்பைப் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்த மெண்டலீவ் மகிழ்ச்சி அடைந்தார். அணு எடை 68 கொண்ட ஒரு தனிமம் உள்ளது என்று தான் 1870/71-லேயே சொன்னதை நினைவுகூர்ந்து அந்த இதழுக்கு ஒரு கட்டுரையை அனுப்பிவைத்தார். அதன் வேதிப் பண்புகள் எப்படியிருக்கும், அதன் சேர்மங்கள் எப்படியிருக்கும் என்றெல்லாம் அந்தப் பொருளைப் பார்க்காமலேயே விளக்கமாக அந்தக் கட்டுரையில் எழுதினார்.

ஆனாலும் பலர் மெண்டலீவுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. ஏதோ குத்துமதிப்பாக இந்த நபர் அடித்துவிட்டுள்ளார் என்று நினைத்தார்களோ என்னவோ.

அடுத்து 1879-ல் ஸ்வீடனின் நில்சன் என்பவர் ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு தன் நாட்டின் நினைவாக ஸ்கேண்டியம் என்று பெயர் வைத்தார். இந்த அறிவிப்பு வெளியானது ஸ்வீடிஷ் மொழியில். அது இன்னும் உலகெங்கும் பரவவில்லை. ஆனால் மெண்டலீவின் கண்டுபிடிப்பு பற்றி நன்கு அறிந்திருந்த மற்றொரு ஸ்வீடிஷ் விஞ்ஞானியான பெர் க்ளீவ், மெண்டலீவுக்குக் கடிதம் எழுதினார். ‘நீங்கள் யூகித்திருந்த ஏக-போரான் என்ற தனிமத்தை எங்கள் நாட்டவரான நில்சன் என்பவர் கண்டுபிடித்துள்ளார். அதுதான் ஸ்கேண்டியம்.’

ஆனால் க்ளீவ் அத்துடன் நிற்கவில்லை. ஓர் அட்டவணையை உருவாக்கி, மெண்டலீவ் ஏக-போரான் பற்றிக் குறிப்பிட்டிருந்த இயற்பியல், வேதியியல் பண்புகள் பற்றிய யூகங்களை ஒரு பக்கமும் அதற்கு அருகில் உண்மையாகவே அந்தத் தனிமத்தை எடுத்து அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அருகிலும் கொடுத்திருந்தார். அவை இரண்டுக்கும் அத்தனை ஒற்றுமை!

ஒரு யூகம் சரி, இரண்டாவது யூகமும் சரி. அப்படியானால் மூன்றாவது? அதற்கு மேலும் பல ஆண்டுகள் பிடித்தன. 1886-ல் ஜெர்மன் விஞ்ஞானி கிளமென்ஸ் விங்க்லர், தான் புதிய தனிமம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதை அறிவித்தார். அதற்குத் தன் நாட்டின் பெயரை வைத்து ஜெர்மானியம் என்று அழைத்தார். இவரும் மெண்டலீவ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை போல! ரிக்டர் என்ற ஜெர்மானியர் இந்த ஜெர்மானியத்துக்கும் மெண்டலீவின் ஏக-சிலிகானுக்கும் முடிச்சுப் போட்டார்.

இப்படியாக 1869-ல் மெண்டலீவின் மூளையில் உதித்த கருத்து, 1870-71-ல் வலுவடைந்து ஏக-அலுமினியம், ஏக-போரான், ஏக-சிலிக்கான் என்று பெயர் பெற்று, 1875, 1879, 1886 ஆகிய ஆண்டுகளில் முறையே கண்டுபிடிக்கப்பட்டு மெண்டலீவுக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தது.

மெண்டலீவின் தனிம அட்டவணையில் அதன்பின் ஏகப்பட்ட பிற தனிமங்கள் வந்து சேர்ந்துகொண்டன. அணு எடை மறைந்துபோய் அணு எண் என்ற கருத்து வந்து புகுந்துகொண்டது. அவற்றைப் பின்னர் பார்ப்போம். பொருள்களைப் புரிந்துகொள்வதில் மெண்டலீவின் சாதனை மிகப் பெரியது என்பது திண்ணம். இப்போது மெண்டலீவிடமிருந்து விடை பெற்றுக்கொள்வோம்.

அடுத்த இரண்டு வாரங்கள் கொஞ்சம் கணக்கு போடப்போகிறோம். வாயுக்களையும் திடப்பொருள்களையும் கொஞ்சம் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியுமா என்று பார்க்கப்போகிறோம்.

0

நேர நெருக்கடி

மேட்டர் / அத்தியாயம் 13 

மெண்டலீவ் கையில் 63 தனிமங்கள் இருந்தன. ஏற்கெனவே கரிம வேதியியல் பற்றி ஒரு புத்தகம் எழுதிப் பிரபலம் ஆகியிருந்தார். நிரந்தர பேராசிரியர் வேலை கிடைத்திருந்தது. அறிவுலகத்தில் முக்கியமான நபராக இருந்தார். அரசு இவரிடம் ஆலோசனை கேட்டது.

1867-ல் மெண்டலீவின் குருநாதரும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியருமான வோஸ்க்ரெசென்ஸ்கி வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். உடனே அந்த இடத்துக்கு மெண்டலீவ் நியமிக்கப்பட்டார். இப்போது மெண்டலீவ் மாணவர்களுக்கு வேதியியல் பாடம் நடத்தவேண்டும்.

அதற்கான பாடப் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தார் மெண்டலீவ். கரிம வேதியியல் பற்றி அவர் ஏற்கெனவே எழுதிய ஒரு புத்தகம் இருந்தது. ஆனால் பொது வேதியியல் – அதாவது கரிம வேதிப் பொருள்கள் அல்லாத கனிம வேதிப் பொருள்கள் பற்றிய விஷயங்களை விளக்கும் அடிப்படைப் புத்தகங்கள் ஏதும் உருப்படியாக இல்லை. பல மேலை நாட்டுப் புத்தகங்கள் – பிரெஞ்சு, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டவற்றின் ரஷ்ய மொழியாக்கங்கள் இருந்தன. ஆனால் மெண்டலீவுக்கு அவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எனவே தானே ஒரு புத்தகத்தை எழுத முடிவு செய்தார். அந்தப் புத்தகம்தான் தனிம அட்டவணையை நோக்கி அவரை இழுத்துச் சென்றது.

‘வேதியியல் கொள்கைகள்’ என்ற தலைப்பில் 1868-ம் ஆண்டு தொடங்கி மெண்டலீவ் தன் புத்தகத்தை எழுத ஆரம்பித்துவிட்டார். எதைப் பற்றியெல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதுவது? அதுவரை தெரிந்திருந்த பொருள்களைப் பற்றி வரிசையாக எழுத ஆரம்பித்தார். ஒவ்வொரு பொருள், அதன் இயற்பியல் பண்புகள், அதன் வேதியியல் பண்புகள், எம்மாதிரியான பொருள்களுடன் அது சேரும், எம்மாதிரியான சேர்மங்களை உருவாக்கும், அந்தச் சேர்மங்களின் பண்புகள். இப்படி.

இயற்பியல் பண்புகள் என்றால் என்ன? நிறம், மணம், அடர்த்தி என்று தொடங்கி வேறு பல முக்கியமான பண்புகள் இதில் அடங்கும். உதாரணமாக அறை வெப்பத்தில், இயல்பான வளி அழுத்தத்தில் ஒரு பொருள் திடமாக அல்லது திரவமாக அல்லது வாயுவாக இருக்கிறதா? திடமாக இருக்கிறது என்றால் அது படிகமாக உள்ளதா அல்லது தூளாக உள்ளதா? திரவமாக இருந்தால் அதன் கொழகொழப்பு எவ்வளவு? திடமாக இருந்தால் எந்த வெப்பத்துக்கு அதனை உயர்த்தினால் அது திரவமாக மாறும்? திரவமாக இருக்கும்போது எந்த வெப்பத்துக்கு உயர்த்தினால் அது வாயுவாக ஆகும்? திரவமாக ஆகாமலேயே ஒரு திடப்பொருள் வாயுவாக ஆகிவிடலாம்.

ஒரு குறிப்பிட்ட எடை உள்ள பொருளின் வெப்பநிலையை ஒரு டிகிரி அதிகமாக்க, அதாவது 40 டிகிரி செண்டிகிரேடில் இருந்தால் 41 டிகிரி செண்டிகிரேட் ஆக அதிகரிக்க, எத்தனை வெப்பத்தை அதற்கு அளிக்கவேண்டும்? (இதற்கு தன்வெப்பம் என்று பெயர்.)

இப்படிப் பலப்பல பண்புகள் அனைத்துக்கும் இயற்பியல் பண்புகள் என்று பெயர்.

மெண்டலீவ் தன் புத்தகத்தில் முதலில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கரி, நைட்ரஜன் ஆகியவற்றின் பண்புகளை விரிவாக எழுத ஆரம்பித்தார். இவை அனைத்தும் கரிம வேதியியலின் முக்கியமான தனிமங்கள். அடுத்து சமையல் உப்பை எடுத்துக்கொண்டு அதன்மூலம் சோடியம், குளோரின் என்ற இரண்டு தனிமங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். சாதாரண சமையல் உப்பைப் பற்றி, அதன் பண்புகளைப் பற்றி விளக்கியபின், குளோரின் குடும்பத்தை விளக்கத் தொடங்கினார்.

அதென்ன குடும்பம்?

ஃபுளோரின், குளோரின், புரோமின், அயோடின் என்ற நான்கு பொருள்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகச் செயல்பட்டன. இதில் முதலிரண்டும் அறை வெப்பநிலையில் வாயுக்கள். மூன்றாவது திரவம். நான்காவது திடம். இவை அனைத்தும் ஹைட்ரஜனுடன் இணைந்து அமிலங்களை உருவாக்கின. சோடியத்துடன் இணைந்து உப்புகளை உருவாக்கின. இந்த நான்கையும் ஒரே குடும்பமாகக் கருதி அதற்கு ‘ஹாலோஜென் குடும்பம்’ என்று பெயர் இடப்பட்டிருந்தது.

இதுவரை எழுதி முடித்ததே ஒரு தொகுதி ஆகிவிட்டது. ஆனால் முழுமையாகத் தொட்டதோ எட்டு தனிமங்கள்தாம். சோடியம் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ஆனால் அதனை முழுமையாக ஆராயத் தொடங்கவில்லை.

இரண்டாவது தொகுதியில் மெண்டலீவ் சோடியத்திலிருந்து ஆரம்பித்தார். எப்படி ஹாலோஜென் ஒரு குடும்பமோ, அதேபோல சோடியமும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவும் அப்போது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். சோடியம், பொடாஷியம், ருபிடியம், சீசியம் போன்றவை. இதில் முதல் இரண்டு பொருள்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை. சோடியம் என்பது சோடியம் குளோரைடு வடிவில் சமையல் உப்பில் இருப்பது. பொடாஷியம் என்பதும் கடல் உப்பில் பொடாஷியம் குளோரைடு வடிவில் கிடைக்கும். சமையல் உப்பிலேயே கொஞ்சமாகச் சேர்ந்திருக்கும்.

ருபிடியம், சீசியம் இரண்டும் ராபர்ட் புன்சென், குஸ்தாவ் கிர்க்காஃப் ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்கள். சீசியம் 1861-லும், ருபிடியம் 1860-லும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புன்சென் யார் தெரியுமா? இவருடைய பரிசோதனைச் சாலையில்தான் மெண்டலீவ் 1859-ல் ஓர் உதவியாளராகச் சேர்ந்திருந்தார். இவர்கள் ஸ்பெக்ட்ராஸ்கோபி என்ற நிறமாலையியல் வழியாக இந்தப் புதிய உலோகங்களைக் கண்டுபிடித்திருந்தனர்.

இந்த நான்கு உலோகங்களும் வேதியியல்ரீதியில் ஒரேமாதிரியாக நடந்துகொள்ளக்கூடியவை. இவற்றுக்குக் கார உலோகங்கள் என்று பெயர். ஏனெனில் இவை நீருடன் வினைபுரிந்து ஹைட்ராக்சைடு காரங்களை உருவாக்கும். சோடியம் ஹைட்ராக்சைடு, பொடாஷியம் ஹைட்ராக்சைடு… இப்படி. இந்த அமிலம், காரம் ஆகியவை பற்றி நம் ஆரம்பத்திலேயே பார்த்திருக்கிறோம். ரசவாதிகளே இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தோம்.

ஆக, இரண்டாம் தொகுதியின் ஆரம்பத்தில் கார உலோகங்களைப் பற்றி விளக்கிய மெண்டலீவ், அடுத்து கால்சியம் பற்றி எழுத ஆரம்பித்தார். இப்போது இதுவும் ஒரு குடும்பமாக இருப்பது தெரிய வந்தது.

மக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரான்ஷியம், பேரியம் என்று செல்லும் இந்த உலோகங்களுக்கு கார மண் உலோகங்கள் என்று பெயர். இவையும் நீருடன் வினை புரிந்து ஹைட்ராக்சைடு காரங்களை உருவாக்கும்.

ஹாலோஜென் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இணைதிறன் 1. கார உலோகங்களுக்கு இணைதிறன் 1. கார மண் உலோகங்களுக்கு இணைதிறன் 2. இது உடனேயே மெண்டலீவுக்கு ஒரு தெளிவான பாதையைக் காட்டியிருக்கவேண்டும்.

அதற்காக அவர் இணைதிறன் 1 கொண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்க்கவில்லை. அப்படியானால் ஹாலோஜென்னும் கார உலோகமும் ஒன்று என்றாகிவிடும். அப்படியல்ல. அவற்றுக்கிடையே வேறு சில ஒற்றுமைகள் இருக்கவேண்டும். ஒரே இணைதிறன் இருக்கவேண்டும் என்பது அவசியம். அத்துடன் அவை ஒரேமாதிரியான வினைகளைப் புரியவேண்டும். அப்படி ஆனபின், அவற்றி மேலிருந்து கீழாக அவற்றின் மூலக்கூறு எடையை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்திவிடலாம்.

அப்படிச் செய்யும்போது அந்தக் குடும்பத்தில் ஒரு தனிமம் எப்படி நடந்துகொள்கிறது என்பதை விளக்கிவிட்டால் போதும். பிற தனிமங்கள் எப்படி நடந்துகொள்கின்றன என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.

ஒவ்வொரு தனிமத்துக்கும் தனித்தனியாக அத்தியாயங்கள் வைத்து எழுதுவது சரிப்படாது என்ற முடிவுக்கு வந்த மெண்டலீவ் அடுத்து இந்த முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். ஏனெனில் புத்தகத்தை முடிப்பதாக அவர் ஒப்புக்கொண்டிருந்த நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.

இந்த நேர நெருக்கடியின் விளைவாக உருவானதுதான் தனிம அட்டவணை. ஆனால் இதிலிருந்துதான் சில ஆச்சரியம் தரத்தக்கப் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

0

கற்பனையும் கற்பிதங்களும்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 14

பாரம்பரியப் பெருமை என்று பேச ஆரம்பித்ததும் மேற்கத்தியர்களுக்குக் குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு உடம்பில் ஒரு இனம் புரியாத அதிர்ச்சி உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால்வரை ஊடுருவும். அது மிகவும் நியாயமான விஷயம்தான். உலகின் மிக உயர்ந்த புத்திசாலிகளும் மிக மோசமான குற்றவாளிகளும் ஒன்று சேர்ந்து மிக சமீபத்தில் உருவாக்கிய புதிய உலகம் அல்லவா!

பெருமளவுக்கு பனியால் மூடப்பட்டு மந்தமான வாழ்க்கை வாழ்ந்துவந்த மேற்கத்தியர்களுக்குப் பொதுவாகவே இருக்கும் உணர்வுதான் அது. ஆனால், கும்பகர்ணனைப்போல் பெரும் தூக்கம் துங்கியபடி மனித குல பரிணாம வளர்ச்சியில் பின்தங்கி இருந்தவர்கள் முழித்துக்கொண்டதும் தன் பெருத்த உடலைத் தூக்கியபடி உலகம் அதிர எட்டுவைத்து நடக்க ஆரம்பித்துவிட்டனர் (கும்பகர்ணன் என்ற இந்திய உதாரணத்தை நெருடலாகப் பார்க்கும் நவீன மனத்தினர் ராட்சஸ எந்திரமாக அதை உருவகித்துக்கொள்ளலாம்). மேற்குலகின் இத்தகைய நகர்வானது ராட்சஸ ரோடு ரோலர் தன் வழியில் குறுக்கிடும் அனைத்தையும் தரைமட்டமாக்கிவிடுவதைப்போல் உருண்டு சென்ற இடங்களில் இருந்தவற்றையெல்லாம் நசுக்கி ’சமதளம்’ ஆக்கிவிட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது முன்னேற்றமாகத் தென்படும் இந்த சமப்படுத்தலுக்குக் கீழே புதையுண்டு கிடப்பவை கொஞ்ச நஞ்சமல்ல.

ஆப்பிரிக்காவையும் அமெரிக்காவும் ஆக்கிரமித்த ஐரோப்பிய சக்திகள் அப்படியான பேரழிவைத்தான் உருவாக்கியிருக்கின்றன. ஆனால், அவற்றின் கொடூரமான தாக்குதலில் இருந்து ஓரளவுக்கு தப்பிப் பிழைத்த தேசமாக இந்தியாவைத்தான் சொல்லவேண்டும். ஐரோப்பிய வருகையால் நாம் இழந்தது ஏராளம் என்றாலும் நாம் ஒரேயடியாக அழிக்கப்பட்டுவிடவில்லை. ஆப்பிரிக்க, அமெரிக்க பழங்குடிகளைப் போல் நாம் பின்தங்கிய சமூகமாக இருந்திருக்கவில்லை. எனவேதான் நமக்கு உரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் மேற்குலகம் தரவில்லை என்றாலும் நமக்கான உள்ளார்ந்த வலுவுடன் நம்மை ஒன்றுகூட்டி எழுந்து நிற்க முடிந்திருக்கிறது.

ஆனால், நமது மீளுருவாக்கத்தில் மிகப் பெரிய பங்கை நம்மை அடக்கியாண்டவர்களேதான் ஆற்றியிருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய நகைமுரணே. இதை இன்னொருகோணத்தில் பார்த்தால், வேதனை தரும் ஒன்றுதான். நமது சாதனைகளாக நாம் நமது ஆவணங்கள், ஆதாரங்களை எடுத்துவைத்துப் பேசினால், அவற்றை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளுவதுதான் நடக்கிறது. அப்படியாக, நமது பெருமையைப் புரியவைப்பதற்கும் நம்மை அழித்தவர்களின் வாக்குமூலங்களே தேவைப்படுகிறது. இது வேதனையான நகைமுரணே.

மதம் மாறியவர்களின் மனநிலை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். சாதியைப் போலவே பிறப்பின் அடிப்படையில் மதத்தை இயல்பாகப் பெறும் ஒருவரைவிட பிற காரணங்களால் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்பவர்கள் தங்கள் விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சற்று அதிகமாகவே செயல்படுவார்கள். கிழக்கத்தியராகப் பிறந்து மேற்கத்திய சிந்தனையை வரித்துக்கொண்ட சிலரும் அப்படியான மனநிலையிலேயே செயல்படுகிறார்கள்.

மேலைநாட்டினரே ஒத்துக்கொண்ட கீழைத்தேயப் பெருமைகளைக்கூட மறுதலித்துப் பேசுவதில் இன்பம் காண்பவர்களாக இருந்துவருகிறார்கள். அது நம்முடைய உண்மை நிலையைப் புரியவைக்க மேற்கத்தியர்களின் வார்த்தைகளைத் துணைக்கு அழைத்துக்கொள்ள வேண்டியிருப்பதைவிட வேதனை தருவதாக இருக்கிறது.

நம்மிடம் எல்லாம் இருந்தன என்று சொல்வது தவறுதான். ஆனால், நம்மிடம் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதைவிட அது அவ்வளவு பெரிய தவறு இல்லை. கடந்தகாலத்தில் குறிப்பாக பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாக நம்மிடம் இவையெல்லாம் இருந்திருக்கின்றன என்று சொல்வதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்தியா ஒரு உயிர்த்துடிப்பான சமூகமாக பல்வேறு அறிவுத்துறைகளில் சுய சிந்தனையுடன் செயல்பட்டுவந்திருக்கிறது என்ற உண்மையைப் புரியவைக்க வேண்டும் என்பதுதான்.

ராமாயண, மகாபாரத காவியங்களில் சொல்லப்பட்டிருக்கும் விமானங்கள், வானில் இருந்து தாக்கும் ஆயுதங்கள், கிட்டத்தட்ட அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அதே அளவிலான இழப்பைப் பற்றிய வருணனைகள் இவையெல்லாம் இன்றும் பொருட்படுத்தி ஆய்வுசெய்யப்பட்டுவருபவையாகவே இருக்கின்றன.

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும் அமெரிக்க அணுகுண்டு தயாரிப்பாளருமான ஓப்பர் ஹைமெர், ‘அணு இயற்பியலில் இன்று செய்யப்பட்டுவரும் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்காதவை என்றோ முற்றிலும் புதியவை என்றோ சொல்லிவிடமுடியாது. நமது பாரம்பரியத்தில் கூட அந்த முயற்சிகள் முன்பே நடந்துவந்திருக்கின்றன. மேலும் இந்து, பவுத்த சிந்தனைகளில் மிக முக்கியமான சாதனைகள் வெகு பழங்காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கின்றன. இன்றைய நவீன இயற்பியல் சாதனைகள் என்பவை ஒருவகையில் அந்தப் பழம் பெரும் ஞானத்தின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவமே’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அணு வெடிப்பின் போது வெளிப்படும் அபரிமிதமான ஒளியை வருணிக்க ‘கோடி சூரியப் பிரகாசம்’ என்ற சமஸ்கிருத பதத்தைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால், அப்படியான புராணங்களில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை வெறும் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளுவதுதான் பகுத்தறிவாக நம்பப்படுகிறது.

இப்படியானவர்களுக்கு பதில் சொல்லும்முகமாகத்தான் தரம்பால் இந்திய பெருமைகளாகத் தான் பட்டியலிடும் விஷயங்களுக்கு வலுவான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்த ஆதாரங்கள்தான் அவரை அந்தப் பெருமிதத்தை அடைய வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

தரம்பால் தான் சேகரித்த பிரிட்டிஷ் ஆவணங்களில் இந்திய வான சாஸ்திரம் பற்றி இரண்டு முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். சர் ராபர்ட் பார்க்கர் பனாரஸில் 1772-ல் தான் பார்த்த கோளரங்கங்கள் பற்றி எழுதிய அறிக்கையை விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு இருக்கும் யந்திரங்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்டதாக பார்க்கர் தெரிவித்திருக்கிறார்.

கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த அந்த கோளரங்கத்தில் ஏராளமான கருவிகள் மிகவும் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இருந்த இடத்தில் இருந்து நகர்த்த முடியாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தன. ஒருசில கருவிகள் 20 அடி உயரம் கொண்டதாக இருந்தன. அளவுகள், அலகுகள் எல்லாம் மிகத் துல்லியமாக அதில் பொறிக்கப்பட்டிருந்தன. இரு நூறு வருடங்களுக்கு முந்தையவையாகச் சொல்லப்படும் அந்த கருவிகளைப் பார்த்தால் ஒரு நவீன விஞ்ஞானி (கலைஞன்) மூலம் உருவாக்கப்பட்டதுபோல் செய்நேர்த்தி மிகுந்தவையாக இருக்கின்றன. இவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மிகவும் துல்லியமாகவும் இருக்கின்றன.

மணித்துளிகளைக் கணக்கிடுதல், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வைக் கணித்தல், சூரிய சந்திரனின் நகர்வைக் கணித்தல் என பல்வேறு விஷயங்களுக்கு பெரிதும் உபயோகமாக இது இருந்திருக்கிறது. எந்தவித கண்ணாடிகளும் (தொலைநோக்கிக் கருவி) இல்லாமலே மிகத்தெளிவாக வானில் இருப்பவற்றைப் பார்க்க முடியும் அளவுக்கு இந்தப் பகுதியில் வானமானது இரவில் ஒரு பொட்டு மேகம் கூட இல்லாமல் வெகு சுத்தமாக இருக்கிறது. இங்கு இரவில் இருந்து பார்க்கும் ஒருவருக்கே நான் சொல்லவருவது புரியும்.

பழங்கால இந்தியர்களுக்கு (பிராமணர்களுக்கு) வான சாஸ்திரம் பற்றி சுயமாகவே தெரிந்திருக்குமா? பாரசீகர்களின் தொடர்பினால்தான் இவை தெரியவந்திருக்குமா என்ற சந்தேகம் எழுப்பப்டுவதுண்டு. ஆனால், இந்த சந்தேகம் தேவையற்றது. ஏனென்றால், எனக்கு இந்த தகவல்களை எடுத்துச் சொன்ன பிராமணர்கள் இவற்றைத் தங்களுடைய முன்னோர்களால் கைமாற்றித் தந்ததாகச் சொன்ன சமஸ்கிருத நூல்களில் இருந்து படித்துக் காட்டினார்கள். பருவநிலைகள் பற்றிய கணிப்பில் ஆரம்பித்து கிரகணங்கள் போன்ற நிகழ்வுகள் வரை அனைத்தைப் பற்றியும் மன்னர்களுக்கு இந்த யந்திரங்களைப் பார்த்துத்தான் தெரிவித்துவந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், ஹான் கால் (எஃப்.ஆர்.எஸ்.) ஒருவிஷயம் குறிப்பிட்டிருக்கிறார். ஒருநாள் அவர் தன் மெத்தையில் படுத்திருந்தபோது மேல் கூரையில் கிரகங்களின் படம் வரையப்பட்டிருப்பதைப் பார்த்தாராம். அதுபோன்ற வரைபடங்கள் கோயில்கள், குளத்தின் நடுவில் இருக்கும் மண்டபம், கோபுர உள் பகுதி என பல இடங்களில் பார்த்திருக்கிறார். இந்த இடங்கள் எல்லாம் பிராமணர்கள் வசிக்கும், வழிபடும் இடங்கள். மிகவும் பழமை வாய்ந்தவை. இப்படியான ஒரு இடத்தில் வேறு சமூகத்தில் இருந்து கிடைத்தவற்றை நிச்சயம் பொறித்திருக்கமாட்டார்கள். தங்களுடைய மதம் சார்ந்த பழக்கவழக்கங்களில் எந்தவித மாற்றத்துக்கும் இந்து மதம் இடம் கொடுக்காது. எனவே, இவை பிராமணர்களின் கண்டுபிடிப்புகள்தான் என்பதற்கு இதைத்தவிர வேறு ஆதாரம் தேவையில்லை என்று பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

வான சாஸ்திர மேதை பாஸ்கராச்சாரியர்தான் பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரத்தைத் துல்லியமாகக் கணித்த முதல் விஞ்ஞானி. அவருடைய கணக்குகளின்படி பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 365.2588 நாட்கள். இன்றைய நவீன விஞ்ஞானத்தின்படி அது 365.2563.

பாஸ்கர ஆச்சாரியர் கணிதத்துறையிலும் பல சாதனைகள் செய்திருக்கிறார். அந்தத்துறையில் நாம் செய்திருக்கும் சாதனைகளை வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.

0

இணைதிறன்

மேட்டர் / அத்தியாயம் 12 

இன்று மாணவர்களுக்கு இணைதிறன் (Valency) பற்றிப் பாடம் நடத்துவதாக இருந்தால் நேராக எலெக்ட்ரான்கள், சுற்றுப்பாதை, இணைதிறன் பிணைப்பு என்றெல்லாம் ஆரம்பித்திருப்போம். ஆனால் நாம் இப்போது பார்ப்பது அறிவியல் வளர்ந்த வரலாற்றை. நாம் பேசும் காலகட்டத்தில் எலெக்ட்ரான் என்பதே கண்டுபிடிக்கப்படவில்லை. சொல்லப்போனால் எலெக்ட்ரான் என்பதையே மெண்டலீவ் இறப்பதற்குச் சற்றுமுன்னர்தான் கண்டுபிடித்திருந்தனர். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் புரோட்டான் கண்டுபிடிக்கப்பட்டது.

எலெக்ட்ரான் பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இணைதிறன் பற்றிப் புரிந்துகொள்ள முடியும்.

நீர் என்பது HO என்றுதான் இருக்கும் என்று டால்ட்டன் சொன்னார் அல்லவா? அப்படியல்ல, H2O என்று இருக்கும் என்ற தன் கணக்கை கே லூஸாக் முன்வைத்தார். அதற்கடுத்து, பல்வேறு வாயு வடிவிலான சேர்மங்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்து அவற்றின் வேதிவடிவங்கள் எழுதப்பட்டன. அம்மோனியா என்பது NH3, கார்பன் டையாக்சைடு என்பது CO2, கார்பன் மோனாக்சைடு என்றும் ஒன்று உள்ளது, அது CO. நைட்ரஜனுக்கு மூன்று நிலையான ஆக்சைடுகள் உள்ளன, அவை முறையே, N2O, NO, NO2 ஆகியவை.

இவற்றைப் பரிசீலிக்கும்போது சில குழப்பங்கள் ஏற்பட்டன. ஹைட்ரஜன், ஆக்சிஜன் சேரும்போது ஒரே ஒரு நிலையான வடிவம் மட்டுமே ஏற்படுகிறது. ஆனால் நைட்ரஜன், ஆக்சிஜன் சேரும்போது பல வடிவங்களில் வெவ்வேறு சேர்மங்கள் ஏற்படுகின்றன. இது ஏன் இப்படி உள்ளது என்பதற்கான பதிலை அந்தக் கட்டத்தில் சொல்லமுடியவில்லை. இப்படி நடக்கிறது; அவ்வளவுதான்.

அடுத்தது, பல உலோகங்கள் ஆக்சிஜன், குளோரின் ஆகிய வாயுக்களுடன் இணைந்து ஆக்சைடுகளையும் குளோரைடுகளையும் உருவாக்குகின்றன. இவற்றில் பலவற்றின் ஃபார்முலாக்கள் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. சேர்மங்கள் வாயுவாக இருந்தால் உடனே அவற்றின் ஃபார்முலா என்ன என்று சொல்லிவிடலாம். திரவமாக இருந்தாலும் குறைந்த காற்றழுத்தத்தில் அவை ஆவியாகும். அப்போது அந்த ஆவியிலிருந்தும் சேர்மத்தின் ஃபார்முலாவைச் சொல்லிவிடலாம். ஆனால் மழுங்குனி போல சேர்மம் ஒரு திடப் பொருளாக, தூளாக இருந்தால் அது என்னவிதமான சேர்க்கை என்பதைக் கண்டுபிடிக்க நிறையத் திண்டாடவேண்டும்.

தனிம அட்டவணை பற்றி ஓரளவுக்குத் தெரிந்தவர்கள், இவ்வாறு குழப்பம் ஏற்படுத்தக்கூடிய தனிமங்கள் அட்டவணையின் எந்தப் பகுதியிலிருந்து வரக்கூடியவை என்பதைப் பட்டென்று சொல்லிவிடுவீர்கள். இந்தத் தொடரில் பின்னர் இவற்றை நாம் பார்ப்போம்.

இப்போதைக்கு, குழப்பம் இல்லாமல் வரக்கூடிய சில ஆக்சைடு சேர்மங்களைப் பார்ப்போம். ஏன் ஆக்சைடு என்றால், பெரும்பாலான தனிமங்கள் ஆக்சிஜனுடன் சேர்ந்து வினை புரியும். அதனால்தான்.

ஹைட்ரஜன் – H – H2O
ஹீலியம் – He – வினை புரியாது
லித்தியம் – Li – Li2O
பெரில்லியம் – Be – BeO
போரான் – B – B2O3 (பெரும்பாலும், ஆனால் B2O, B6O போன்ற ஆக்சைடுகளையும் உருவாக்கும்.)
கார்பன்/கரி – C – CO2 (பெரும்பாலும், ஆனால் CO என்பதையும் உருவாக்கும்.)
நைட்ரஜன் – N – ஏற்கெனவே பார்த்த N2O, NO, NO2 ஆகியவற்றையும் மேலும் பல ஆக்சைடுகளையும் உருவாக்கும்.
ஆக்சிஜன் – O – அதுவே
ஃபுளோரின் – F – மூன்றுவிதமான சேர்மங்களை உருவாக்கும்.
நியான் – N – வினை புரியாது

அடுத்து ஹைட்ரஜனுடன் இதே தனிமங்கள் சேர்ந்தால் என்னமாதிரியான சேர்மங்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ஹைட்ரஜன் – H – அதுவே
ஹீலியம் – He – வினை புரியாது
லித்தியம் – Li – LiH
பெரில்லியம் – Be – BeH2 (ஆனால் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் 19-ம் நூற்றாண்டில் இது உருவாக்கப்பட்டிருக்கவில்லை.)
போரான் – B – B2H6 (19-ம் நூற்றாண்டில் இதனை உருவாக்கியிருந்தார்கள், ஆனால் அதிகம் புரிந்துகொள்ளப்படவில்லை. BH3 என்பதாக மனத்தில் கற்பனை செய்துகொள்ளுங்கள்.)
கார்பன்/கரி – C – CH4 (மீத்தேன். இதுதான் மிக எளிதான சேர்மம். இயற்கையில் சதுப்பு நில வாயு என்று கிடைக்கிறது. ஆனால் இந்த இரண்டு தனிமங்களும் சேர்ந்து எண்ணற்ற பல கோடி சேர்மங்களை உருவாக்குகின்றன. கரிம வேதியியலில் அடிப்படைத் தனிமங்கள் இவை.)
நைட்ரஜன் – N – NH3 (அம்மோனியா)
ஆக்சிஜன் – O – H2O (அல்லது OH2 என்று படியுங்கள்.)
ஃபுளோரின் – F – HF
நியான் – N – வினை புரியாது

ஹைட்ரஜன் ஒருமாதிரியாக, 1, 2, 3, 4, 3, 2, 1 என்று வினை புரிவதைப் பாருங்கள். லித்தியம் – 1, பெரில்லியம் – 2, போரான் – 3, கார்பன் – 4, பிறகு மீண்டும் நைட்ரஜன் – 3, ஆக்சிஜன் – 2, ஃபுளோரின் – 1.

ஒரு ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைகிறது. எனவே அவைதான் முறையே அவற்றின் இணைதிறன்கள். அதாவது ஆக்சிஜனின் இணைதிறன் 2. ஹைட்ரஜனின் இணைதிறன் 1. இந்த இரண்டு தனிமங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அவை பிற தனிமங்களுடன் இணைவதைப் பார்த்து, பிற தனிமங்களின் இணைதிறனைக் கண்டுபிடிக்கலாம்.

கார்பனுடன் இணைய நான்கு ஹைட்ரஜன் தேவை (மிக அடிப்படையான சேர்மத்தில்). எனவே கார்பனின் இணைதிறன் 4. கார்பன் டையாக்சைடு உருவாவதிலும் இதுவே கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு கார்பனுடன் இணைய இரண்டு ஆக்சிஜன் – எனவே 2×2 = 4. (அப்படியானால் கார்பன் மோனாக்சைடை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்வியை இப்போது கேட்கக்கூடாது!)

நைட்ரஜனுக்கு மூன்று, ஃபுளோரினுக்கு 1. லித்தியம் 1, பெரில்லியம் 2, போரான் 3.

ஹீலியம் அல்லது நியானுக்கு என்ன இணைதிறன். பூஜ்யம். ஏன் என்றால் அவை யாருடனும் இணைய மறுக்கின்றன.

இப்படியே தொடங்கி அதுவரையில் தெரிந்திருந்த எல்லாவிதமான தனிமங்களோடும் ஹைட்ரஜன் அல்லது ஆக்சிஜனை வினை புரிய வைத்து, கிடைக்கும் சேர்மங்களை ஆராய்ந்து, இணைதிறனைக் கொடுத்துவிடலாம். சரி, ஹைட்ரஜன் அல்லது ஆக்சிஜனுடன் ஒரு பொருள் சேரவில்லை என்றால்? பிரச்னை இல்லை. ஃபுளோரின் அல்லது குளோரினுடன் அவை சேர வாய்ப்புள்ளது. அவை இரண்டுக்கும் இணைதிறன் 1. (ஏனெனில் HF அல்லது HCl உருவாகின்றன.)

மக்னீசியம் என்ற உலோகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது மக்னீசியம் குளோரைடை MgCl2 உருவாக்குகிறது. எனவே மக்னீசியத்தின் இணைதிறன் 2.

(அதே நேரம், கார்பன், நைட்ரஜன் மட்டுமல்ல, இரும்பு, பாதரசம், அலுமினியம், சிலிக்கான் போன்ற பல தனிமங்கள் ஆக்சிஜன், ஹைட்ரஜன் அல்லது குளோரினுடன் சேரும்போது ஒன்றல்ல பல சேர்மங்களை உருவாக்கி, விஞ்ஞானிகளைக் குழப்பின. அந்தக் குழப்பங்களை ஒருபுறம் வைத்துக்கொண்டே, அவற்றின் இணைதிறன் பொதுவாக என்ன என்பதை அவற்றின் பல்வேறு சேர்மங்களைப் பார்த்துச் சொல்லிவிடலாம்.)

18-ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து, மெண்டலீவ் தன் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும் 19-ம் நூற்றாண்டில் இடைப்பகுதி வரையில் இணைதிறன் குறித்து ஓரளவுக்குத் தெளிவான புரிதல் இருந்தது.

மெண்டலீவ், இந்த இரண்டையும் வைத்துக்கொண்டுதான் ஆரம்பித்தார். கே லூஸாக் தொடங்கி அவகாட்ரோ, கேன்னிசாரோ வழியாக மூலக்கூறு எடை (அல்லது அணு எடை) என்பது ஓரளவுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. இணைதிறன் பற்றியும் ஓரளவுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

மெண்டலீவ் கையில் 63 தனிமங்கள் இருந்தன. ஆனால் எல்லோரிடமும்தான் அவை இருந்தன. ஆனால் யாரும் செய்யாத ஒன்றை மெண்டலீவ் செய்ய ஆரம்பித்தார். அதற்கு ஒரு விசித்திரமான காரணம் இருந்தது. அதனை அடுத்து பார்ப்போம்.

0

ஒரு ரஷ்யப் பேராசிரியரின் கதை

மேட்டர் / அத்தியாயம் 11

திமித்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev) ரஷ்ய நாட்டவர். ஜார் மன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர். ரஷ்யப் புரட்சிக்குச் சற்று முந்தைய காலம்.

சைபீரியா பகுதியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்குக்கு மேல் படிப்பு படிக்க வந்தார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 1851-ல் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரியில் சேர்ந்தார். பள்ளிக்கூட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதுதான் அந்தக் கல்லூரியின் நோக்கமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மெண்டலீவ் அங்கு சேர்ந்த சமயத்தில் ஆராய்ச்சி செய்தலை நோக்கி அந்தக் கல்லூரி நகரத் தொடங்கியிருந்த்து. அறிவியல் மற்றும் கணிதம் ஒரு பாடமாக இருந்தது. அந்தப் படிப்பைத்தான் மெண்டலீவ் தேர்ந்தெடுத்தார்.

அந்தக் கல்லூரியில் கல்வி இலவசம். ஆனால் அதற்கு பதிலாக அங்கு படிப்பவர்கள் இரண்டாண்டுகள் பள்ளிக் கல்வி ஆசிரியராக இருக்கவேண்டும்.

இந்தக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக இருந்த வோஸ்க்ரெசின்ஸ்கி என்பவர்தான் மெண்டலீவின் குருநாதராக ஆனார். அவரிடமிருந்தே மெண்டலீவ் வேதியியல் ஆர்வத்தைப் பெற்று அத்துறையில் ஆராய்ச்சியில் இறங்கினார்.

படிப்பை முடித்ததும், செய்துகொண்ட ஒப்பந்தப்படி கிரைமியா பகுதியில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் மெண்டலீவ் ஆசிரியராக வேலையைத் தொடங்கினார். ஆனால் அந்தப் பள்ளியோ சுத்த மோசம். வசதிகள் துளிக்கூடக் கிடையாது. மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமே இல்லை. மெண்டலீவுக்குத் தாங்க முடியவில்லை. எனவே அரசுக்குக் கடிதம் எழுதி, கெஞ்சிக் கூத்தாடி அவர்களிடம் உதவித்தொகை வாங்கிக்கொண்டு ஜெர்மனிக்கு மேற்படிப்புக்குச் சென்றார்.

1859-ல், ஹெய்டல்பர்க் நகருக்கு வந்த மெண்டலீவ், ராபர்ட் புன்சென் என்ற வேதியியலாளரின் பரிசோதனைச் சாலையில் உதவியாளராகச் சேர்ந்தார். வேதியியல் மாணவர்கள் புன்சென் சுடரடுப்பு என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில்தான் குடுவைகளை வைத்துக் காய்ச்சுவோம்.

ஜெர்மனியில் மெண்டலீவ் இருந்தபோதுதான் கார்ல்ஸ்ரூஹே மாநாடு நடைபெற்றது. அதற்குப் பார்வையாளராகச் சென்றபோதுதான் அவகாட்ரோவின் கருதுகோள், கேன்னிசாரோவின் கருத்துகள் ஆகியவற்றை மெண்டலீவ் அறிந்துகொண்டார். அதுதான் மிகச் சரியான கருத்து என்று கிட்டத்தட்ட அனைவரும் ஏற்றுக்கொள்வதையும் மெண்டலீவ் பார்த்தார்.

தன் மேற்படிப்பை முடித்துக்கொண்டு 1861-ல் மீண்டும் பீட்டர்ஸ்பர்க் வந்த மெண்டலீவுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. பணத்துக்கு என்ன வழி? அவருக்கு ஒரு புதுமையான வழி தோன்றியது. தனக்கோ வேதியியல் நன்றாகத் தெரியும். ஏன் அதை ஒரு புத்தகமாக எழுதி விற்கக்கூடாது? ரஷ்ய மொழியில் அப்போது பாடப் புத்தகங்கள் அவ்வளவு தரமாக இல்லை.

உடனே கரிம வேதியியல் பற்றி ஒரு புத்தகத்தை எழுத ஆரம்பித்துவிட்டார். 1862-ல் அந்தப் புத்தகத்துக்கு சிறந்த புத்தகம் என்ற விருது கிடைத்தது. கணிசமான பணமும் கையில் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து அவர் திருமணம் செய்துகொண்டார்!

மாணவர்களும் மெண்டலீவின் புத்தகத்தை மிகவும் விரும்பி வாங்கத் தொடங்கினர். வேதியியல் துறையில் ரஷ்ய மொழியில் அந்தப் புத்தகத்துக்கு இணையாக வேறு ஒன்றும் கிடையாது என்று மாணவர்கள், ஆசிரியர்கள் என இரு சாராரும் ஒப்புக்கொண்டனர். சொல்லப்போனால் பிற மொழிகளில் உள்ள புத்தகங்களைவிடவும் மெண்டலீவின் புத்தகம் மிகச் சிறப்பானது என்றே நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனாலும் ஒரு முழுநேர வேலை வேண்டுமே? மெண்டலீவ் தன் குருநாதர் வோஸ்கிரசின்ஸ்கியிடம் சென்று தனக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டார். பல முயற்சிகளுக்குப் பிறகு அவர் மெண்டலீவுக்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக வேலை ஒன்றை வாங்கிக்கொடுத்தார்.

மெண்டலீவ் வேலைக்குச் சேர்ந்த நேரம் அவ்வளவு நல்லதாக இருக்கவில்லை. ஜார் மன்னரையும் அரசாட்சியையும் எதிர்த்து ஒருவிதமான கிளர்ச்சி ஆரம்பித்திருந்தது. அது அத்துமீறிப் போகாமல் இருக்க, பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டம் போட்டுப் பேசுவது தடை செய்யப்பட்டது. மாணவர்கள் இதனை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கினர். காவலர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். நிறைய மாணவர்கள் காயமடைந்தனர்.

1862-ம் ஆண்டில் பல்கலைக்கழகம் இழுத்து மூடப்பட்டது. 1863 வரை திறக்கப்படவில்லை. மாணவர் தரப்புக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு பல்கலைக்கழகங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கும் புதிய சட்டம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்குச் சில ஆண்டுகளுக்குப்பின் 1867-ல் மெண்டலீவ் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

அதன்பின் மெண்டலீவ் ரஷ்ய அமைப்பில் மிக முக்கியமான நபராக ஆனார். அரசுக்கு அறிவியல் சார்ந்து எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் அதனைத் தீர்த்துவைக்கும் முதல் ஆளாக இவர்தான் நிற்பார். சாராயத்தின் தரம் என்ன என்பதைக் கண்டறிவது, கொலை வழக்கில் கொலை எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான அறிவியல் ஆதாரங்களைத் தருவது, இப்படி எதுவாக இருந்தாலும் கூப்பிடு மெண்டலீவை என்று ஆனது.

மெண்டலீவ் பல்கலைக்கழக வேலையை எடுத்துக்கொண்டபோது 63 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவகாட்ரோவின் வழிமுறையைப் பின்பற்றி அவை அனைத்துக்கும் அணு எடை, மூலக்கூறு எடை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்த 63 தனிமங்களையும் இரண்டாக எளிதாகப் பிரிக்க முடிந்தது. உலோகங்கள். அலோகங்கள்.

அதைத்தவிர அவை உருவாக்கும் சேர்மங்களை ஆராய்வதன்மூலம் இணைதிறன் (வேலன்சி) என்ற ஒரு கருத்தும் அப்போது தெரியவந்திருந்தது.

அடுத்த வாரம், இணைதிறன் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அடுத்து மெண்டலீவின் தனிம அட்டவணையை நோக்கிப் போவோம்.

0

வாயுக்களின் உலகம்

மேட்டர் / அத்தியாயம் 7

டால்ட்டனின் காலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வாயுக்களின் அழுத்தத்துக்கும் அவற்றின் கொள்ளளவுக்குமான உறவு பற்றித் தெரிந்திருந்தது. இதற்கு பாயிலின் விதி என்று பெயர். ராபர்ட் பாயில் (Robert Boyle) என்ற 17-ம் நூற்றாண்டு ஆங்கிலேய விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப்படுவது.

ஒரு பலூனில் காற்றை ஊதி வைத்துக்கொள்ளுங்கள். அந்த பலூனை நசுக்கினால் அதன் கொள்ளளவு குறையும். ஆனால் அந்த பலூனுக்குள் உள்ள காற்றின் அழுத்தம் அதிகரிக்கும். பலூனை நசுக்காது விட்டால் மீண்டும் அழுத்தம் குறைந்து கொள்ளளவு அதிகரிக்கும்.

கே லூஸாக், லாவோய்சியருடன் இணைந்து பணியாற்றியவர். அக்காலத்தில் வாயுக்கள் பற்றிய மிக அதிகமான புரிதல் கொண்டவர் என்று யாரையாவது சொல்லலாம் என்றால் லாவோய்சியர்தான். அடுத்தது ஜான் டால்ட்டன்.

கே லூஸாக் பலவித வாயுக்களைச் சூடாக்கி அவை எப்படி மாற்றம் அடைகின்றன என்பதைப் பரிசீலித்துவந்தார். ஏனெனில் ‘சூடுகாற்று பலூன்’ கொண்டு வானில் பறப்பது அவருடைய ஆர்வமாக இருந்தது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் நாட்டில் பலரும் இந்தத் துறையில் இறங்கியிருந்தனர். அத்தகைய பரிசோதனையின்போதுதான் கே லூஸாக் மிக முக்கியமான சில கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அதில் முதலாவது இது. ஒத்த வெப்பத்தில் இருக்கும், ஒத்த கொள்ளளவு கொண்ட அனைத்து வாயுக்களும் சூடாக்கப்படும்போது ஒரே அளவில் விரிவாகும்.

அதாவது ஆக்சிஜனோ, ஹைட்ரஜனோ, கரியமில வாயுவோ, அம்மோனியாவோ, எதுவாக இருந்தாலும் கவலையில்லை. ஒரு லிட்டர் கொள்ளளவில் இவை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 30 டிகிரி வெப்பத்திலிருந்து 31 டிகிரி வெப்பத்துக்குச் செல்லும்போது இந்த வாயுக்கள் அனைத்துமே ஒரே அளவு விரிவடைகின்றன. அதாவது ஒரு வாயுவுக்கும் இன்னொரு வாயுவுக்கும், வெப்பத்தால் விரிவடைவதில் எந்த வித்தியாசமும் இல்லை.

இது ஆச்சரியமான ஒரு விஷயம். ஏனெனில் திடப்பொருள்களை எடுத்துக்கொண்டால் இப்படி நடப்பதில்லை. ஒரு மீட்டர் நீள அலுமினியக் குச்சியை 30-லிருந்து 31 டிகிரிக்குச் சூடாக்கினால் அதன் நீளம் அதிகமாகும். ஒரு மீட்டர் நீள இரும்புக் குச்சியை அதேபோல சூடாக்கினால் அதன் நீளமும் அதிகமாகும். ஆனால் இரண்டின் நீளங்களும் ஒரேமாதிரி அதிகமாகாது. ஒன்றைவிட இன்னொன்று அதிகமாக நீளும். இதற்குக் காரணம் ஒவ்வொரு திடப்பொருளுக்கும் ‘பெருக்கக் கெழு’ என்ற பிரத்யேக எண் ஒன்று உள்ளது.

ஆனால் வாயுவில் இப்படியான மாற்றங்கள் இல்லை. எந்த வாயுவாக இருந்தாலும் அது சூடாக்கப்படும்போது நடக்கும் கொள்ளளவு அதிகரிப்பு ஒரே மாதிரியானது.

கே லூஸாக் பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்வது மட்டுமல்ல, சூடான காற்று ஏற்றப்பட்ட பலூனில் பறந்தே காட்டியவர். வானில் பறந்துபோய் உயரத்தில் காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் அவர் இறங்கினார். 1804-ம் ஆண்டில் ஹைட்ரஜன் நிரப்பிய பலூனில் அவரும் ஜான்-பாப்தீஸ் பியோ என்பவரும் கடல் மட்டத்துக்கு 7,000 மீட்டருக்கு மேல் பறந்து சென்று பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

டால்ட்டனின் அணு பற்றிய சிந்தனைகளை ஆராய்ந்த கே லூஸாக், வேறு முடிவுக்கு வந்திருந்தார்.

ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் சேர்த்து எரித்தால் நீர் கிடைக்கும். ஒரு ஹைட்ரஜன் அணுவும் ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்துதான் நீர் உருவாகிறது என்றார் டால்ட்டன். சரி, செய்துதான் பார்த்துவிடுவோமே என்று பரிசோதனையில் இறங்கினார் கே லூஸாக்.

ஒரு லிட்டர் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டார். அதனுடன் இணைந்து முழுவதுமாக எரிந்துபோக எத்தனை ஹைட்ரஜன் தேவைப்படுகிறது என்று பார்த்தார். ஆப்பிளை ஆப்பிளுடன் ஒப்பிடவேண்டுமல்லவா? அதற்காக ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுமே ஒரே வெப்பத்தில், ஒரே அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். அப்படிப் பார்த்ததில், ஒரு லிட்டர் ஆக்சிஜனுடன் இணைய இரண்டு லிட்டர் ஹைட்ரஜன் தேவைப்பட்டது.

அப்படியானால் இதற்கு என்ன பொருள்?

ஒருவேளை ஒரு ஆக்சிஜன் அணுவுடன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைகின்றனவா? அது நடக்காது என்றல்லவா சொல்லியிருந்தார் டால்ட்டன். அப்படியானால் டால்ட்டனின் கருத்து தவறு என்றார் கே லூஸாக். இது நடந்தது 1808-ல்.

ஆனால் டால்ட்டன் இதனை ஏற்கவில்லை. டால்ட்டனின் வேறு ஒரு கருத்தின்படி, ஹைட்ரஜன் அணு சிறியது. ஆக்சிஜன் அணு அதைவிடப் பெரியது. அப்படியானால் இரண்டும் வெவ்வேறுமாதிரியான இடத்தைப் பரப்பி நிற்கும். எனவே அவற்றின் கொள்ளளவுகளை ஒப்பிட்டு, ஒரு லிட்டர் ஆக்சிஜனில் எவ்வளவு அணுக்கள் உள்ளன, அதே அளவு அணுக்கள்தாம் ஒரு லிட்டர் ஹைட்ரஜனில் இருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்பது டால்ட்டனின் கருத்து.

கடைசிவரை கே லூஸாக்கும் டால்ட்டனும் ஒத்துப்போகவில்லை.

ஆனால் யாராவது ஒருவர்தானே சரியாக இருக்கவேண்டும். இந்தச் சமயத்தில் அதி முக்கியமான ஒரு விஞ்ஞானியை நாம் சந்திக்கப்போகிறோம். இவருடைய ஆழமான கருத்துகள் பொருள்கள் பற்றிய நம் புரிதலை நன்கு தெளிவாக்கப்போகின்றன. இத்தாலியரான இவருடைய பெயர் அமேடியோ அவகாட்ரோ (Amedeo Avogadro).

0