ஒரு நாஸி மாமி படிக்கும் கீதை – 1

1978 டெல்லியில் ஓர் ஒதுக்குப்புறமான வீடு. எளிமையான அறை. முதுமையால் உடல் மட்டுமே தளர்ந்திருந்த அந்தப் பெண்ணின் முகம், சுருக்கங்களுக்கு உள்ளே இருந்து, வயதின் அத்தனை தடைகளையும் தாண்டிப் பிரகாசித்தது. கூர்மையான கண்களில் ஒரு வேகம் இருந்தது. அப்பெண்மணி பேசினார். அப்பேச்சு மானுட வரலாற்றையே சுருக்கிய ஒரு பார்வையாக இருந்தது.

அகன்நாத்தன் – எகிப்தில் சூரிய வணக்கத்தை ஏக தேவ வழிபாடாக முதலில் உருவாக்கிய மாமன்னன். மங்கோலிய சமவெளிகளிலிருந்து கிளம்பிய வரலாற்றுச் சக்தியாக செங்கிஸ் கான், இறுதியில் ஹிட்லர். ஒரு பெரிய கண்காணாத சக்தியின் வெளிப்பாடாகச் செயல்பட்டவர். மனித குலத்தை மகோன்னத நிலைக்கு உயர்த்த இறைச் சக்திகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகா மனிதர். பூரண நிலை அடைந்த தெய்வீக புருஷர். இந்த யுகத்தில் விஷ்ணுவின் யுகாவதாரம் அடால்ப் ஹிட்லர். அகன்நாத்தன், காலத்துக்கு அப்பால் உள்ள மனிதன். செங்கிஸ் கான், காலத்தின் போக்குக்கு வாழ்ந்த மனிதன். ஆனால் ஹிட்லர், காலத்துக்கு எதிராக நின்ற மனிதன்.

அப்பெண்மணியின் பேச்சுக்கள் 1982-ல் ஐந்து காசெட்டுகளாக வெளியிடப்பட்டன. அவரது எழுத்துக்கள் ஏற்கெனவே புத்தகமாக வெளிவந்தவைதாம். மீண்டும் புத்தகமாக வெளியிடப்பட்டன. அப்பெண்மணி வெளியிட்ட கருத்தின் சாராம்சம் இதுதான்: நாஸியிசம் ஒரு பழமையான ஆன்மிக பாதை. கிறிஸ்தவத்துக்கு முந்தைய பாகனிய ஆன்மிகத்தைச் சார்ந்தது. ஹிந்து மதத்தைப் போன்றது.

மாக்ஸிமியானி போர்ட்டாஸ் (Maximiani Portas) பிரான்ஸில் ஆங்கில-கிரேக்கப் பெற்றோருக்குப் பிறந்தவர். பிறந்த ஆண்டு 1905. வேதியியலில் பட்டப்படிப்பு. ஏழு மொழிகளில் புலமை. தனது ஆரிய இனப் பாரம்பரியத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் கர்வமும் உடையவர். ஆரியப் பண்பாட்டின் மிக உயர்ந்த ஆன்மிக உச்சமாக சூரிய வழிபாட்டை அவர் கண்டடைந்தார். 1932-ல் அவரது தேடல் இந்தியாவுக்கு அவரைக் கொண்டுசென்றது. அங்கே தனது பெயரை சாவித்திரி தேவி என மாற்றிக்கொண்டார். ‘நியூ மெர்க்குரி’ என்கிற பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்த கிருஷ்ண முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அது எவ்வித உடல் உறவுமற்ற பிளேட்டோனியத் திருமணம் என்று அவர்கள் கூறினர்.

ஆனால் இது எல்லாவற்றுக்கும் இன்னொரு முகமும் இருந்தது. முகர்ஜி ஒரு விசித்திரமான மனிதர். முதலில் கம்யூனிஸ்டாக இருந்து சோவியத் யூனியனுக்குச் சென்று, பிறகு பாசிச ஆதரவாளராக மாறி, அதன்பிறகு நாஸியிசத்தில் ஈடுபாடு கொண்டு, ஜப்பானிய ராணுவத்துக்காக உளவு பார்த்து, அதன் பிறகு மீண்டும் கம்யூனிச ஆதரவாளராக மாறி… ஆனால் எல்லா நேரங்களிலும் அவர் தொடர்ந்து சாவித்திரி தேவி எழுதுவதைப் பிரசுரித்துக்கொண்டே இருந்தார்.

வங்காளம், இரண்டாம் உலகப்போரின் ஆசியப் போர் அரங்கில் ஒரு முக்கிய இடமாக இருந்தது. கல்கத்தாவில் சாவித்திரி தேவியும் முகர்ஜியும் நேசநாடுகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தும், அவர்கள்மீது பெரிய அளவில் எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுக்காதது ஓர் அதிசயம்தான். ஒருவேளை முகர்ஜி இரட்டை உளவாளியாக இருந்திருக்கக்கூடும் எனும் ஐயத்தை இது தோற்றுவிக்கிறது. சாவித்திரி தேவி, ‘மாமி’ என்றே கல்கத்தா உயர் வட்டாரங்களில் அறியப்பட்டார். ஹிந்து மகா சபையின் நட்சத்திரப் பேச்சாளராகவும் ஆனார். அவர் எழுதிய ‘ஹிந்து சமுதாயம் எதிர்நோக்கும் ஆபத்துக்கள்’ எனும் நூல் ஹிந்து மகாசபை வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வினாயக சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இதற்கு முகவுரை எழுதினார். ஆனால் இந்த நல்லுறவு நெடுநாள் செல்லவில்லை.

இதற்குக் காரணங்கள் இருந்தன. ஒன்று ஹிந்து மகாசபை சாதியத்தை முழுமையாக நிராகரித்தது. இனப் பாகுபாடுகளை சாவர்க்கர் சமரசமின்றி நிராகரித்தார். 1920-களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பில் (ஹிந்துத்துவ மையக் கோட்பாடுகள் – Essentials of Hinduthva) இனப்பாகுபாடுகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், அவருடைய காலகட்டத்துக்கு மிகவும் முற்போக்கானவை. மானுடத்துவப் பார்வை கொண்டவை. ஐரோப்பா அத்தகைய மனநிலையை வந்தடைய முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகியதுடன், அதற்கு இரண்டாம் உலகப்போரும் மிகப்பெரிய மக்கள் குல அழிவும் தேவைப்பட்டது. சாவர்க்கர் சொல்கிறார்:

உலகமெங்கிலும் மனித குலத்தைப் பொருத்தவரையில் ஒன்று மட்டுமே நிலையான உண்மை. அது மனிதகுலம் ஒரே இனம். அந்த ஒரே இனம் ஒரே ரத்தத்தால், மானுட ரத்தத்தால் வாழவைக்கப்படுகிறது. மற்ற எல்லாப் பேச்சும் பிராந்தியம் சார்ந்த பேச்சுதான். சார்புத்தன்மை கொண்ட பேச்சுதான். இனங்களுக்கு இடையே நீங்கள் உருவாக்கும் செயற்கை மதில்களை உடைத்தெரிய இயற்கை தொடர்ந்து முயன்றபடியே உள்ளாள். இனக்கலப்பைத் தடுக்க முயற்சிப்பதெல்லாம் மண்கோட்டை கட்டுவதுபோலத்தான். உலகின் எல்லா இறைத்தூதர்களின் கட்டளைகளையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்த்தாலும், பாலியல் கவர்ச்சி அவை எல்லவற்றையும் விடச் சக்தி வாய்ந்தது.

ஹிட்லருக்கு எதிராகப் போர் புரிந்த சர்ச்சில் போன்றவர்கள் 1940-களில்கூட (அதற்குப் பின்னும்கூட) இனமேன்மையில் வைத்திருந்த நம்பிக்கை, எவ்விதத்திலும் ஹிட்லரிடமிருந்து மாறுபட்டதல்ல என்பதைப் பார்க்கும்போது, சாவர்க்கர் எந்த அளவு இனக் கோட்பாடுகளைமீறி, தன் ஹிந்துத்துவக் கோட்பாட்டை முன்வைத்திருந்தார் என்பது விளங்கும். ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்த எவ்விதத் தரவும் சாவர்க்கருக்கு இல்லை. (பின்னாள்களில் அவர் அதை நிராகரித்தார் என்கிறார்கள்.) ஆனால் அவரைப் பொருத்தவரை வரலாற்றுரீதியாக இந்தியர்கள் கலப்பினம் என்று கருதுவதில் அவருக்கு எவ்வித இழிவும் இல்லை. சமூகப் பார்வையில், சாதிகள் கலந்து அழிந்தால்தான் ஹிந்துக்களுக்கு விடி மோட்சம் என்று அவர் கருதினார்.

வனவாசிகள், தலித்துகள் ஆகியோர்மீதான உயர்த்தப்பட்டசாதியினரின் அடக்குமுறைகளை எதிர்க்கும் போராட்டங்களுக்கு சாவர்க்கரின் ஆதரவு இருந்தது. அவற்றை ஹிந்து மகாசபையும் ஆதரித்தது. கேரளாவின் தலித் போராளி அய்யன்காளி தமது போராட்டங்களை ஹிந்து மகா சபை ஆதரித்ததை நன்றியுடன் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேருவதை சாவர்க்கர் ஆதரித்தார். ஸ்ரீ அரவிந்தர் போன்ற ஹிந்து தேசியத்தின் மூத்த சிந்தனையாளர்களும் நாஸிகளை ஒரு அசுரசக்தியாகவும் இருட்கொடுமையாகவும் வர்ணித்திருந்தனர்.

மூன்றாவதாக, பாலஸ்தீனிய-இஸ்ரேல் சமாசாரத்தில் ஹிந்து மகா சபை இஸ்ரேலை ஆதரித்தது. எனவே சாவித்திரி தேவி ஹிந்து இயக்கங்களுடனான தன் உறவை ஒரு கெட்ட கனவாகவே நினைத்தார். பின்னாள்களில் அவர் எழுதிய 338 பக்க சுயசரிதையில், ஓர் இடத்தில்கூட அவர் ஹிந்து புத்தெழுச்சி அமைப்புகளைக் குறிப்பிடவில்லை.

ஆனால் சாவித்திரி தேவியால் ஐரோப்பியப் பண்பாட்டுக்கு ஒரு தேவை இருக்கிறது. ஐரோப்பிய அறிஞர்கள் தங்கள் பண்பாட்டிலிருந்து நாஸியிசம் போன்ற ஒரு கொடும் தத்துவம் ஒரு தேசத்தையே அரசாண்டதைப் பார்த்தார்கள். அத்துடன் உலக வரலாற்றில் அன்றுவரை அறிந்ததிலேயே மிக மோசமான விரிவான படுகொலையை நாஸிகள் திட்டமிட்டுச் செய்ததையும் பார்த்தார்கள். எல்லாவற்றையும்விட மேலாக அந்தப் படுகொலைக்குத் தாங்கள் மௌன சாட்சிகளாக நின்றதையும் பார்த்தார்கள். இதை எப்படி விளக்குவது? நாஸியிசம் ஒரு விதிவிலக்கு என்றும், அது உண்மையில் ஒரு பாகனிய கல்ட் என்றும் அல்லது ஆசிய/ஆரிய பழம் பண்பாடு ஐரோப்பாவில் ஊடுருவியதால் ஏற்பட்ட விபரீத விளைவு என்றும் விளக்க முயன்றார்கள். இந்தவிதமாக நாஸிகளைக் காட்ட சாவித்திரி தேவி நல்ல ஆதாரமாக விளங்கினார். “இதோ பாருங்கள், நாஸியிசத்துக்குக் காரணம் ஹிந்துப் பண்பாடுதான்.” ஆனால் உண்மையில் சாவித்திரி தேவிக்கு ஹிட்லரிடம் இருந்த பக்தி அல்லது ரசிகத்தன்மை ஒரு பக்கக் காதல் போன்றதுதான். அவருக்கு ஹிட்லரிடமோ அல்லது நாஸி உள்வட்டங்களிலோ எவ்வித மதிப்பும் பெரிய அளவில் இல்லை. நாஸி கூட்டங்களிலேயே பாகனியக் கோட்பாடுகள் கொண்டவர்கள் பலர் இருந்தனர். ஆனால் ஹிட்லரும் நாஸி உள்வட்டமும் தங்கள் செயல்பாடுகளை நிறுவன மதத்துடன்தான் இணைத்துக்கொண்டனர்.

ஆனால் 1980-களுக்குப்பிறகு நியோ-நாஸிகள் சாவித்திரி தேவியைத் தேடியெடுத்து தங்கள் கோட்பாடுகளுக்குக் கீழை மறைஞான சாயம் பூச ஆரம்பித்தனர். மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களுக்கும் ஹிந்துத்துவத்தில் ஒரு ‘நாஸி மாமியை’ கண்டுபிடிப்பதில் ஏக குஷி. ஆனால் சாவித்திரி தேவியின் வரலாற்றை நாம் பார்த்தால் அவருடைய ஹிந்துமத அறிதல் மேம்போக்கானதாகவும், பல நேரங்களில் ஹிந்து மதத்தின் கோட்பாட்டுக்கு நேர் எதிரானதாக இருப்பதையும் காணமுடியும்.

சாவித்திரி தேவி நாஸி இனவாதக் கோட்பாடுகளுக்கான ஆதாரங்களை இந்தியப் பாரம்பரியத்தில் தேடினார். ஹிந்து சமுதாய சாதி அமைப்பு இனத்தூய்மையை பாதுகாப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்று அவர் நம்பினார். பகவத் கீதையை இதற்கு ஆதாரமாகவும் அவர் காட்டினார். ‘ஹிட்லரிசமும் ஹிந்து உலகமும்’ எனும் கட்டுரையில் அவர் எழுதுகிறார்:

எனக்கு பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தின் பாடல் (யூஜீன் பர்னாப்பின் 19ம் நூற்றாண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்து) நினைவுக்கு வந்தது. “அதருமம் பரவுவதால் குலப்பெண்கள் கற்பை இழந்து கெட்டுப் போவார்கள். பெண்கள் கெட்டால் சாதிக் கலப்பு ஏற்படும். (இது உண்மையில் இனக்கலப்புதான், ஏனென்றால் தொடக்கத்தில் சாதி எனப்படுவது இனமாகத்தான் இருந்தது.) அதனால் முன்னோர்கள் குறித்த நினைவுகள் கெடும். அதிலிருந்து அறிதல் கெட்டுப்போகும். அதிலிருந்து எல்லாத் தீமைகளும் உருவாகும்.” எனக்குள் மின்னலடித்ததுபோல ஓர் எண்ணம். “இது உண்மை. இதுதான் மெயின் காம்ஃப் (Mein Kampf) கூறும் உணர்வின் ஆதி வெளிப்பாடு.”

மெயின் காம்ஃப் – எனது போராட்டம் – ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. துரதிர்ஷ்டவசமாக, நாஜி மாமி மட்டுமல்லாமல், பலரும் இந்த எண்ணத்துடன் இருக்கிறார்கள். பகவத் கீதை பிறப்பு அடிப்படையிலான சாதிப் பிரிவை ஆதரிப்பதாகக் கருதுகிறார்கள்.

ஆனால் இதனைச் சிறிது உற்று நோக்கினாலும் சாவித்திரி தேவி மேற்கோள் காட்டும் வரிகள் அர்ஜுன விஷாத யோகத்தில் (1:41) வருபவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அந்த வார்த்தைகள் அர்ஜுனன் மனக்குழப்பத்தில் இருக்கும்போது கூறும் வார்த்தைகளே. அப்படியானால் கிருஷ்ணர் அதற்கு என்ன பதில் தருகிறார்? அவர் பிறப்படிப்படையிலான சாதியை ஆதரிக்கிறாரா?

நாளைவரை பொறுத்திருங்கள்.

மேலதிக விவரங்களுக்கு:

* Nicholas Goodrick-Clarke, Hitler’s Priestess: Savitri Devi, the Hindu-Aryan Myth, and Neo-Nazism, NYU Press, 2000
* கொயன்ராட் எல்ஸ்ட், The saffron swastika: the notion of “Hindu fascism”, Volume 2, Voice of India , 2001
* கொயன்ராட் எல்ஸ்ட் , Return of the Swastika: hate and hysteria versus Hindu sanity, Voice of India , 2007
* வினாயக் தமோதர் சாவர்க்கர், Essentials of Hindutva, சாவர்க்கர் சதன் 1921-22: 1946
* Sumanta Banerjee, Memories of my Nazi Maami [Aunt], Times of India on 19 April 1999

சுட்டிகள்:

* சாவித்திரி தேவி, Hitlerism and the Hindu World”, (The National Socialist, no. 2 (Fall 1980): 18-20), http://library.flawlesslogic.com/hindudom.htm
* Shrabani Basu, The spy who loved Hitler. http://www.rediff.com/news/1999/mar/27hitler.htm
* Greg Johnson, Savitri Devi’s Communist Nephews, http://www.savitridevi.org/article-nephews.html

One comment

  1. commie.basher
    #1

    மேற்கில் இன்னும் சாவித்திரி தேவி போன்ற நாஜி கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டவர்கள் தான் இந்துத்வா சக்திகள் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் புரிதலில் இந்துத்வா இயக்கங்களுக்கும் சாவித்திரி தேவிக்குமான உறவு ஒரு குழப்பனான நிலையிலேயே இருக்கிறது.

    தங்கள் கட்டுரை இவ்விசயத்தில் தேவையான தெளிவைக் கொடுக்க முயற்சிக்கிறது. சாவித்திரி தேவிக்கும் இந்துத்வா இயக்கங்களுக்கும் பல விசயங்களில் கொள்கை அளவில் கூட ஒற்றுமை இல்லாது இருப்பது தங்கள் தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

    நன்றி.

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: