நரியின் மகாதந்திரம்

பஞ்ச தந்திரக் கதைகள்/ 4.2

imagesஒரு பெரிய காடு. அதில் கராளகேசரி என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அதற்கு உடல்நலமில்லை. அதனால், அது தூசரன் என்ற நரியை அழைத்து, ‘இன்று எனக்கு உடல் நலமில்லை. என்னால் இன்று இரைதேடச் செல்ல முடியாது. எனக்கு ஏற்ற இரையை இன்று நீதான் கொண்டுவரவேண்டும்’ என்றது.

சிங்கத்தின் கட்டளைக்குப் பணிந்த நரி, காட்டில் சுற்றித் திரிந்து சிங்கத்திற்கு இரைதேடியது. எதுவும் அகப்படவில்லை. ‘வெறுங்கையோடு சென்றால் சிங்கத்தின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமே’ என்று பயந்த நரி சோகமாக நடந்துகொண்டிருந்தது.

சற்று தூரத்தில் ஆற்றங்கரையோரமாக மேய்ந்து கொண்டிருந்த கழுதை ஒன்றை அந்த நரி பார்த்தது. அது துணிகளைத் துவைக்கும் ஒரு வண்ணானுக்குச் சொந்தமானது.

நரி, அந்தக் கழுதையிடம் சென்று, ‘ஏன் இப்படி மெலிந்து இருக்கிறாய்?’ என்று அன்போடு விசாரித்தது.

அதற்கு அந்தக் கழுதை, ‘எனக்கு முதலாளியாக இருக்கும் வண்ணான் என் மீது பொதிகளை அதிகமாகச் சுமத்துகிறான். ஆனால், குறைவாகவே உணவு கொடுக்கிறான். அதனால்தான் நான் மெலிந்துள்ளேன்’ என்றது.

‘உனக்கு ஏற்ற நல்ல உணவுகள் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். நீ என்னுடன் வா. நான் உன்னை அங்கு அழைத்துச்செல்கிறேன்’ என்றது நரி.

‘இங்கிருந்து அந்த இடம் வெகுதூரத்தில் இருக்கிறதோ?’ என்று கேட்டது கழுதை.

‘இல்லை, இல்லை. இந்த ஆற்றங்கரையின் ஓரத்தில்தான். அதன் கடைசிப் பகுதியில் பச்சைப் புல்கள் அடர்த்தியாக செழித்து வளர்ந்துள்ளன.’ என்று நரி தந்திரமாகக் கூறியது.

‘அந்தப் புதிய இடத்தில் நான் மட்டும் தனியாகவா மேய்வது?’ என்று பயந்தபடி அந்தக் கழுதை கேட்டது.

‘இல்லை, இல்லை. அங்கு நிறைய பெண் கழுதைகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நல்ல ஆண் துணை இல்லாததால் வருத்தத்துடன் உள்ளன. நீ அங்குச் சென்றவுடன் அவை உன்னைத் தழுவிக்கொள்ளும்!’ என்று ஆசை வார்த்தை காட்டியது நரி.

கழுதை அங்கு வர சம்மதித்து, நரியுடன் சென்றது.

சிங்கத்தின் குகையை நெருங்கும்போது நரி கழுதையுடன் வருவதைக் கண்ட சிங்கம், பசியின் மிகுதியால் தனது இரையை உடனே உண்ணத் துடித்தது.

பொறுமை இல்லாமல் வேகமாக அந்தக் கழுதையின் மீது பாய்ந்தது. கழுதை பயந்து போனது. அது நகரத்தில் இருந்த கழுதை என்பதால் இதுவரை அது சிங்கத்தையே பார்த்ததில்லை. எனவே கழுதை தனது கால்களால் அந்தச் சிங்கத்தை மிக வேகமாக உதைத்து குதித்து தப்பிக்கப் பார்த்தது. சிங்கத்திற்கு உடல்நலமில்லாததால் அதன் பிடி வலுவற்று இருந்தது. எனவே அது தனது பிடியை நழுவ விட கழுதை, சிங்கத்தை உதறித் தள்ளிவிட்டு ஓடிப் போனது.
இதைப் பார்த்த நரி அலுத்துக் கொண்டது. ‘அட! சிங்கமே! என்ன இப்படி இரையை தப்பவிட்டுவிட்டாயே!’ என்று புலம்பியது.

‘இன்னும் ஒருமுறை நீ அந்தக் கழுதையை என்னருகில் அழைத்துவா. இம்முறை அதைத் தப்பவிடாமல் ஒரே அறையில் அதைக் கொன்று சாப்பிட்டு விடுகிறேன்’ என்றது சிங்கம். நரி மீண்டும் அந்தக் கழுதையிடம் சென்றது.
நரி வருவதைப் பார்த்த கழுதை, ‘என்ன நரியே! இப்படிச் செய்து விட்டாயே! உன்னை நம்பி வந்த என்னைக் கொல்லப் பார்த்தாயே!’ என்றது.

‘நானா? எப்போது?’ என்று தந்திரமாகக் கேட்டது நரி.

‘அங்கு சென்றவுடன் என் மீது ஒரு விலங்கு பாய்ந்ததே. பார், அது என் முதுகில் காயங்களை ஏற்படுத்திவிட்டது. அது என்ன விலங்கு?’ என்று கேட்டது கழுதை.

‘அட, கழுதையே! அது ஒரு பெண் கழுதை. அது உன் மீதுள்ள விருப்பத்தால் உன்னைத் தழுவிக்கொள்ளப் பாய்ந்தது!’ என்று நைச்சியமாகப் பொய் சொன்னது நரி.

நரியின் வார்த்தைகளை நம்பிய அந்தக் கழுதை, ‘அப்படியா? அது என்னைக் கொல்ல வருகிறது என்று நினைத்தல்லவா நான் ஓடிவந்துவிட்டேன்.’ என்றது.

‘சரி, பரவாயில்லை. இப்போது அந்தப் பெண் கழுதைதான் என்னை உன்னிடம் அனுப்பிவைத்தது. அது உன்னுடன் வாழ விரும்புகிறதாம். உன்னை உடனே அழைத்து வருமாறு கூறி அனுப்பியது. வா, போகலாம்!’ என்றது.

நரியின் வார்த்தைகளை அப்படியே நம்பிய அந்த அப்பாவிக் கழுதை, நரியுடன் மிகுந்த ஆவலாகச் செல்ல, இந்த முறை சிங்கம் தன் உணவினைத் தவறவிடவில்லை. ஒரே அறையில் அந்தக் கழுதையைக் கொன்றது.

ஆனால், உடனே உண்ணவில்லை. குளிக்காமல் எப்படி உணவு உண்பது?
சிங்கம், நரியிடம், ‘நரியே, நான் போய் குளித்து விட்டு வருகிறேன், அதுவரையில் இந்தக் கழுதையின் உடலை பத்திரமாகப் பார்த்துக் கொள்!’ என்று காவல் வைத்து விட்டுச் சென்றது.

சிங்கம் போனதுமே, நரி, அந்தக் கழுதையின் காதுகளையும் ஈரலையும் உண்டுவிட்டது. குளித்துமுடித்துத் திரும்பிய வந்த சிங்கம் அந்தக் கழுதையின் உடலில் காதுகளும் ஈரலும் இல்லாமல் இருப்பதனைப் பார்த்து கோபம் கொண்டது.

‘யார் இவற்றை உண்டது?’ என்று கேட்டது.

‘யாரும் உண்ணவில்லையே!’ என்றது நரி.

‘அப்படியானால், இந்தக் கழுதையின் காதுகளும் ஈரலும் எங்கே?’ என்றது சிங்கம்.

‘சிங்கமே! இந்தக் கழுதைக்குக் காதுகளும் ஈரலும் இல்லை. அவை இருந்தால் நான் அழைத்ததும் அந்தக் கழுதை இங்குவர சம்மதிக்குமா?’ என்று தந்திரமாகக் கூறியது நரி.

நரியின் வார்த்தைகளை நம்பிய அந்தச் சிங்கம், கழுதையின் உடலில் ஒரு பங்கை நரிக்குக் கொடுத்துவிட்டுத் தானும் உண்டது.

‘இப்படித்தானே நீ எனக்கு உன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்?’ என்று குரங்கு கேட்டது.

அதற்கு முதலை, ‘எவன் ஒருவன் தன்னுடைய நன்மையைக் கருதாமல் உண்மையைக் கூறுகிறானோ, அவன் பானைகளைச் செய்யும் யுதிஷ்டிரன் என்ற குயவனைப் போலத் துன்பமடைவான்’ என்றது.

‘யுதிஷ்டிரன் கூறிய உண்மை என்ன?’ என்று கேட்ட குரங்குக்கு முதலை அந்தக் கதையினைக் கூறியது.

4.3. குயவன் கூறிய உண்மை!

பானைகளைச் செய்து விற்கும் யுதிஷ்டிரன் என்ற குயவன் ஒரு குப்பத்தில் வாழ்ந்துவந்தான். ஒருநாள் அவன் தான் செய்த பானைகளைப் பரணில் அடுக்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு கொட்டாங்குச்சி (தேங்காய் ஓடு) அவனின் முன்தலையில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் அந்தக் காயம் ஒரு பெரிய தழும்பாக மாறிவிட்டது.

ஒருமுறை அந்தக் குப்பத்தில் பஞ்சம் ஏற்பட்டதால், அந்தக் குயவன் வேறு ஒரு நாட்டிற்குச் சென்றான். அங்கு தன் குலத்தொழிலைச் செய்யாமல், அந்த நாட்டின் அரண்மனையில் சேவகனாகப் பணிக்குச் சேர்ந்தான். ராஜா தன் சேவகர்களைப் பார்வையிடும் போது, இவன் தலையில் பெரிய தழும்பு இருப்பதனைப் பார்த்தார். ‘இவன் முன்பு ஏதாவது படையில் சிறந்த வீரனாக இருந்திருப்பான்’ என்று நினைத்து, இவனின் திறமையைப் பாராட்டும் விதமாக அதிக ஊதியமும் மதிப்பு மிக்க பதவியும் அளித்தார். ராஜா இந்தப் புதிய சேவகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்தது மற்ற சேவகர்களுக்கும் ராஜாவின் உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஒருநாள் யுதிஷ்டிரன் தனிமையில் தனக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தபோது ராஜா அவனிடம் கேட்டார். ‘உன் தலையில் உள்ள வெட்டுக்காயம் எந்தப் போர்க்களத்தில் ஏற்பட்டது?’

சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாத யுதிஷ்டிரன், ‘ராஜா எனக்கும் போர்க்களத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? நான் என்ன படைவீரனா? நான் ஒரு பானை செய்யும் குயவன்தானே! என் தலையில் ஒரு தேங்காய் ஓடு விழுந்து காயப்படுத்திவிட்டது. அந்தக் காயம் பின்னாளில் தழும்பாக மாறிவிட்டது’ என்று நடந்த உண்மையை அப்படியே சொன்னான்..

ராஜாவுக்குக் கடுமையான கோபம் வந்தது. இவனைப் போய் பெரிய வீரனென்று நினைத்து ஏமாந்தோமே என்று அவருக்கு அவமானமாகவும் இருந்தது. ‘இந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் என்னை எவ்வளவு இளக்காரமாக நினைப்பார்கள்?’ என்று நினைத்த ராஜா, யுதிஷ்டிரனிடம், ‘உன்னுடைய இந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியும் முன்பாக இந்த நாட்டைவிட்டே ஓடிவிடு’ என்று ஆணையிட்டார்.

குயவனுக்குத் தான் செய்த தவறு இப்போதுதான் புரிந்தது. உடனே அவன், ‘ராஜா என் கைகளிலும் கால்களிலும் உள்ள வெட்டுக்காயங்களைப் பாருங்கள். இவை ஒரு போர்க்களத்தில் ஏற்பட்டவைதான்’ என்று பொய் கூறினான்.

ராஜா அவன் வார்த்தைகளை நம்பவில்லை. ‘பொய் சொல்லாதே! நீ பிறந்த குலம் போர்க்களத்தில் வருவதில்லை. ஆயிரம்தான் ஆனாலும் சிங்கக் குட்டிகளுடனே வளர்ந்தாலும், நரிக்குட்டி சிங்கக் குட்டியாகுமா? நீ அந்த நரிக்குட்டிபோலத் துள்ளாதே!’ என்று அவனைப் பழித்துக் கூறினார்.

அவன், ‘நரிக்குட்டி ஏன் துள்ளியது?’ என்று ராஜாவிடம் கேட்க, ராஜா அந்தக் கதையினைக் கூறத் தொடங்கினார்.

4.3.1. நரிக்குட்டி சிங்கக் குட்டியாகுமா?

ஒரு பெரிய கானகத்தில் ஓர் ஆண்சிங்கமும் ஒரு பெண்சிங்கமும் இணைந்து வாழ்ந்துவந்தன. எப்போதும் இரண்டும் இணையாகவே சென்று வேட்டையாடி சாப்பிட்டு வந்தன.

அந்தச் சிங்கத் தம்பதியருக்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அதனால், ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வேட்டைக்குச் சென்று பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் இரைகளைக் கொண்டுவந்து கொடுத்தது.

ஒருநாள் அந்த ஆண் சிங்கத்துக்கு எந்த இரையும் அகப்படவில்லை. அன்று அதற்கு ஒரேயொரு நரிக்குட்டி மட்டும்தான் கிடைத்தது. அது அந்த நரிக்குட்டியைக் கொண்டுவந்து பெண் சிங்கத்திடம் கொடுத்தது.
பெண் சிங்கத்திற்கு அந்த நரிக்குட்டியின் மீது இரக்கம் ஏற்பட்டது. அது அந்த நரிக்குட்டியை உண்ணாமல் தன் சிங்கக்குட்டிகளோடு இணைத்து வளர்க்கத் தொடங்கியது.

சற்று வளர்ந்துவிட்ட அந்த மூன்று குட்டிகளும் ஒருநாள் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றன. வழியில் ஒரு பெரிய யானையைப் பார்த்ததும் நரிக்குட்டி பயந்து விட்டது. அது அங்கிருந்து ஓடியது. அதனைப் பார்த்த இரண்டு சிங்கக் குட்டிகளும் அதன் பின்னாலேயே ஓடிவந்து குகைக்குள் ஒளிந்துகொண்டன.

இதனைப் பார்த்த பெண் சிங்கம் நடந்ததைத் தன் குட்டிகளிடம் விசாரித்தது. ‘யானையைப் பார்த்து இவன் பயந்துவிட்டான். அதனால் நாங்களும் இவன் பின்னாலேயே வந்துவிட்டோம்’ என்றன.

பின்னர் சிங்கக் குட்டிகள் இரண்டும் நரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன. உடனே நரிக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே பெண் சிங்கத்திடம், ‘இவர்கள் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்? நான் எந்த விதத்தில் இவர்களைவிடத் தாழ்ந்தவன்? கூழுக்கு மாங்காய் தோற்குமா? கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? நான் இவர்களை வெல்வேன்’ என்று கூறியது.

பெண் சிங்கம் நரியைத் தனியே அழைத்துச் சென்று, ‘நீ சிங்கக் குட்டி அல்ல. நீ நரிக்குட்டி. யானையை வெல்லும் தீரமும் வீரமும் நரிக்கு எப்படி இருக்கும்? நரிக்குட்டிச் சிங்கக் குட்டிகளுடன் வளர்வதனாலேயே அது சிங்கக் குட்டியாகிவிடுமா? நீ நரி என்பதனை இவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர், நீ இங்கிருந்து ஓடிச் சென்று தப்பித்துக்கொள்’ என்று எச்சரித்தது. உடனே அந்த நரிக்குட்டி அங்கிருந்து ஓடிவிட்டது.

‘அதுபோலவே நீயும், இங்கு இருப்பவர்கள் யாரும் ‘நீ போர்வீரன் அல்லன், ஒரு குயவன்’ என்பதனை அறிந்துகொள்வதற்கு முன்பாக ஓடிவிடு’ என்று எச்சரித்தார் ராஜா.

இப்படியாக கதை சொல்லி முடித்த குரங்கு, முதலையிடம் மேலும் ‘பெண்கள் மனத்தில் இருப்பதை எவரும் எளிதில் தெரிந்துகொள்ள முடியாது என்பதால் அவர்களின் அன்பை நம்பக்கூடாது’ என்றும் கூறியது.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்ட முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைச் சொல்லத் தொடங்கியது.

No comments yet

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: