அர்த்தநாசம்

பஞ்ச தந்திரக் கதைகள்/ நான்காம் தந்திரம் – லப்தஹானி (அர்த்தநாசம்)

Crocodile-Drawing-2மூன்றாம் தந்திரம் முடிந்ததும் நான்காம் தந்திரமான பல்தஹானி அதாவது அர்த்தநாசம் என்பதில் ஒரு நெடுங்கதைத் தொடரை சொல்லத் தொடங்கினார் பண்டிதர் விஷ்ணுசர்மா.

‘இளவரசர்களே எத்தனை பெரிய துன்பம் வந்தபோதும் எவன் ஒருவன் தன் அறிவினை இழக்காமல் இருக்கிறானோ, அவனே முதலையிடமிருந்து விடுபட்டக் குரங்குபோல மீள்வான்’ என்றார் பண்டிதர்.

‘குரங்கு எப்படி முதலையிடமிருந்து விடுபட்டது?’ என்று கேட்ட அந்த மூன்று இளவரசர்களுக்கும் ‘பேரழிவு’ குறித்த ஒரு நெடுங்கதையினைப் பண்டிதர் விஷ்ணுசர்மா கூறத் தொடங்கினார்.

4. பேரழிவு

கங்கைக் கரையில் ஒரு நாவல் மரம் இருந்தது. அந்த மரத்தில், சுமுகன் என்ற ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. அந்த மரத்தில் பழுக்கும் மிகவும் சுவையுடைய நாவற்பழங்களை உண்டு அது சுகமாக காலம் கழித்தது.

ஒருநாள் கங்கைக் கரையின் வழியாக ஒரு முதலையொன்று அந்த மரத்தின் கீழ் வந்து நின்றது. முதலை இனம் தனக்குப் பகை என்பது தெரிந்தும், ‘தனது வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பதே சிறந்த பண்பு’ என்பதால், அந்தக் குரங்கு முதலையை வரவேற்றது.

‘நீ என் வீட்டிற்கு முதன்முதலாக வந்துள்ளாய். உனக்கு நான் சில நாவற்பழங்களைத் தருகிறேன்’ என்றுகூறிய குரங்கு அந்த மரத்தின் கிளையை உலுக்கியது. கீழே விழுந்த நாவற்பழங்களை எடுத்து உண்ட முதலை மிகவும் மகிழ்ந்தது.

பின்னர், அது நாள்தோறும் அந்தக் குரங்கைப் பார்க்க வந்தது. குரங்கும் அதற்கு நாள் தவறாமல் நாவற்பழங்களைத் தந்து உபசரித்தது. விரைவிலேயே அந்த முதலையும் குரங்கும் இணைபிரியாத நண்பர்களாக மாறினர். இருவரும் மணிக்கணக்கில் கங்கைக் கரையில் அமர்ந்து கதைபேசி, சிரித்து, மகிழ்ந்துவந்தனர்.

ஒருநாள் அந்தக் குரங்கு கொடுத்த நாவற்பழங்களை முதலை தன் வீட்டிற்குக் கொண்டு சென்று தனது மனைவியாகிய பெண் முதலையிடம் கொடுத்தது. அப் பழங்களை உண்ட அந்தப் பெண்முதலை துள்ளிக் குதித்தது.
‘இத்தகைய சுவையுடைய நாவற்பழங்களை இதுவரை நான் என் வாழ்நாளில் உண்டதே இல்லை’ என்று கூறி, ‘இந்தப் பழங்கள் உனக்கு எங்கே கிடைத்தன?’ என்று கேட்டது.

‘இவை என் நண்பன் எனக்குத் தினமும் தருவதுதான். இன்று உனக்காக அவற்றைக் கொண்டுவந்தேன்’ என்றது ஆண் முதலை.

‘அந்த நண்பன் யார்?’ என்று கேட்டது பெண் முதலை.

‘அது அந்த நாவல் மரத்திலேயே வசிக்கும் ஒரு குரங்கு’ என்றது ஆண் முதலை. உடனே, பெண் முதலைக்கு சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது.
‘உன் குரங்கு நண்பன் தினமும் இந்த நாவற்பழங்களைச் சாப்பிட்டு வருவதால், அவனுடைய ஈரலும் இந்த நாவற்பழத்தைப் போலவே சுவையாக இருக்கும் அல்லவா? எனக்கு உன் நண்பனின் ஈரலைச் சுவைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொண்டு வந்து தருவாயா?’ என்று கேட்டது அந்தப் பெண் முதலை.

‘ஐயோ! அவன் என் நண்பன். அவனைக் கொல்வதா?’ என்று அதிர்ந்தது ஆண் முதலை.

‘அதனால் என்ன? நமக்குச் சுவையான ஈரல் கிடைக்குமே!’ என்றது பெண் முதலை.

‘சகோதரனைவிட முதன்மையானவன் நண்பன். நண்பனுக்கு துரோகம் செய்யக்கூடாது?’ என்றது ஆண் முதலை.

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு உடனே அந்தக் குரங்கின் ஈரல் வேண்டும். நீ கொண்டுவராவிட்டால் நான் இறந்துவிடுவேன்!’ என்று கூறி அடம் பிடித்தது பெண் முதலை.

ஆண் முதலையால் பெண் முதலையைச் சமாதானப்படுத்தமுடியவில்லை. வேறுவழியின்றி அது தன் குரங்கு நண்பனிடம் சென்றது. குரங்கின் ஈரலைக் கவர்வதற்கு மனத்துக்குள் திட்டமிட்டுக் கொண்டே சென்றது.

அந்த ஆண் முதலை, குரங்கு வசிக்கும் நாவல் மரத்தடிக்குச் சென்று மிகுந்த சோகமாக அமர்ந்துகொண்டது.

‘என்ன நண்பா? சோகமாக இருக்கிறாய்? என்று விசாரித்தது குரங்கு.

‘என்னுடைய மனைவி என்னைத் திட்டி விட்டாள். அதனால்தான் சோகமாக இருக்கிறேன்’ என்றது முதலை.

‘எதற்குத் திட்டினாள்?’ என்று கேட்டது குரங்கு.

‘ அது என்னவென்றால் அவள் என்னிடம் சொன்னாள். ‘நீ மட்டும் தினமும் உன் குரங்கு நண்பனின் வீட்டிற்குச் சென்று நாவற்பழங்களை விருந்தாக உண்டுவருகிறாயே, ஒருநாளாவது உன் நண்பனை இங்கு அழைத்துவந்து விருந்து கொடுத்துள்ளாயா? நீ நல்ல நண்பனா?’ என்று சொல்லி என்னைத் திட்டினாள். அத்துடன், ‘இன்றாவது உன் நண்பனை அழைத்து வா. நான் விருந்து சமைத்து வைக்கிறேன்’ என்று கூறி என்னை உன்னிடம் அனுப்பிவைத்தாள்’ என்று தந்திரமாகக் கூறியது.

‘சரி! ஆனால் நான் எப்படி உன் வீட்டிற்கு வருவது? இந்தக் கங்கை நதியை என்னால் நீந்திக் கடக்கமுடியாதே!’ என்றது.

‘அதைப் பற்றி நீ கவலைப்படாதே நண்பா! நீ என் முதுகில் ஏறிக்கொள். நான் என் வீட்டுக்கு உன்னைச் சுமந்துகொண்டு செல்கிறேன்!’ என்று நயமாகப் பேசியது முதலை.

தன் நண்பனான முதலையின் பேச்சினை நம்பிய அந்தக் குரங்கு மரத்திலிருந்து இறங்கி முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது. குரங்கைச் சுமந்துகொண்ட முதலை வேகமாக நதியில் நீந்தியது. குரங்குக்கு பயமாக இருந்தது.

‘நண்பா! மெதுவாகச் செல். நான் நதியில் விழுந்துவிட்டால் இறந்துவிடுவேன்’ என்றது குரங்கு.

தன்னிடம் குரங்கு நன்றாக அகப்பட்டுக்கொண்டது என்பதனைப் புரிந்துகொண்ட முதலை, வஞ்சக சிரிப்புடன் தன் நோக்கத்தைக் குரங்கிடம் கூறியது.

‘நண்பா! நான் உன்னை விருந்திற்கு அழைத்துச்செல்லவில்லை. என்னுடைய பெண் முதலைக்கு விருந்தாக்கவே உன்னை அழைத்துச்செல்கிறேன். அவள்தான் உன் ஈரல் மீது ஆசைப்பட்டு என்னை அனுப்பிவைத்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை அல்லவா?’ என்றது முதலை.

முதலை தன்னை வஞ்சித்து விட்டதைக் கண்டு குரங்கு மிகுந்த துக்கம் கொண்டது. பின் இந்த அபாயத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்தது. பின்னர், முதலையிடம் அன்பாகப் பேசியது.

‘நண்பா! இதனை நீ முதலிலேயே கூறியிருக்கலாமே!’ என்றது குரங்கு.

‘ஏன்? நீ தப்பிவிடுவதற்கா?’ என்றது முதலை.

‘இல்லை நண்பா! நட்புக்காக உயிரையும் தருவது குரங்கு இனத்தின் குணம். உன்னுடைய பெண் முதலை என்னுடைய ஈரலைக்கேட்டது என்று நீ முன்பே கூறியிருந்தால், அந்த மரத்தில் நான் தொங்கவைத்திருந்த என் ஈரலை எடுத்து உன்கையில் கொடுத்திருப்பேனே’ என்றது குரங்கு.

‘ஆ! என்ன? உன் ஈரல் அந்த மரத்தில் தொங்குகிறதா?’ அதிர்ச்சியுடன் கேட்டது முதலை.

‘ஆமாம். அவ்வப்போது என் ஈரலை எடுத்து காயவைப்பது என் பழக்கம்!’ என்றது குரங்கு.

‘அடடா! உன் ஈரலைக் கொண்டுவராவிட்டால் என் பெண்முதலை இறந்துவிடுவதாகக் கூறியுள்ளதே. ஈரல் இல்லாத உன்னைக் கொண்டு போய் நான் இப்போது என்ன செய்ய?’ என்று முதலை அந்தக் குரங்கிடம் கேட்டது.

‘நீ ஏன் வருத்தப்படுகிறாய் நண்பா! மீண்டும் என்னைச் சுமந்துகொண்டு எனது மரத்திற்கு அழைத்துச்செல். நான் மரத்தில் ஏறி என் ஈரலை எடுத்து உனக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று குரங்கு மிகவும் நயமாகப் பேசியது.

குரங்கின் வார்த்தைகளை நம்பிய முட்டாள் முதலை, மறுபடியும் அக் குரங்கினைச் சுமந்துகொண்டு திரும்ப அந்த மரத்திற்கே சென்றது. குரங்கு விட்டால் போதுமென்று கடகடவென்று அந்த மரத்தின் உச்சிக்கிளையில் ஏறி அமர்ந்துகொண்டது.

‘நண்பா! மரத்தில் இருக்கும் உன் ஈரலை எடுத்து எனக்குக்கொடு’ என்று கேட்டது முதலை.

‘அட, முட்டாள் முதலையே! யாராவது தன் வயிற்றிலிருந்து ஈரலை எடுத்து மரத்தில் வைப்பார்களா? அப்படிச் செய்தால் உயிர்வாழ முடியுமா?’ என்றது குரங்கு.

குரங்கு தன்னை ஏமாற்றிவிட்டதனை உணர்ந்த முதலை, ‘குரங்கின் ஈரல் இல்லாமல் தன் வீட்டிற்குச் செல்லமுடியாதே!’ என்று நினைத்து வேறு ஒரு திட்டம்போட்டது.

‘அட நண்பா! நான் கூறியதை உண்மை என்று நம்பி விட்டாயா? நான் உன்னை விளையாட்டாக ஏமாற்ற நினைத்தேன். எனக்குத் தெரியாதா, உடலைவிட்டு ஈரலைப் பிரித்துவிட்டால் உயிர்வாழ முடியாது என்று? நான் உன் நட்பினைச் சோதிக்கவே அவ்வாறு கூறினேன்’ என்றது முதலை.

குரங்கு இந்தமுறை முதலையின் வார்த்தைகளை நம்புவதாக இல்லை. அது மரத்தை விட்டுக் கீழ் இறங்கவில்லை.

உடனே, முதலை ‘என் பெண் முதலை உனக்கு விருந்தளிக்கத்தான் உன்னை அழைத்துவரச் சொன்னாள். அவள் உன்னை உண்ணவோ உண் ஈரலைச் சுவைக்கவோ விரும்பவில்லை. நீ என் நண்பனாயிற்றே! நான் அவ்வாறு உன்னைக் கொல்ல ஒத்துக்கொள்வேனா? கீழே இறங்கிவா. என் வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிடு’ என்று ஆசைவார்த்தை கூறியது முதலை.

‘நண்பா! ‘பசித்தவனின் விசுவாசத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது’ என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அதனால், இனி நான் உன்னை நம்பமாட்டேன்’ என்று கூறியது குரங்கு.

‘பசித்தவனின் விசுவாசம் என்பது என்ன?’ என்று கேட்டது முதலை.

குரங்கு, அந்த முதலைக்கு பிரியதரிசனனைக் கண்டு அஞ்சிய கங்காதத்தன் திரும்பி வராத கதையினைக் கூறத்தொடங்கியது.

4.1. பசித்தவனின் விசுவாசம்

ஓர் ஊரில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அதில் கங்காதத்தன் என்ற தவளை தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தது. கங்காதத்தனின் உறவினர்கள் பலரும் அதே கிணற்றில் வாழ்ந்துவந்தனர். அவர்களில் சிலர் வலிமைமிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் அவ்வப்போது கங்காதத்தனுக்குத் துன்பம் விளைவித்தனர்.

இதனால் மனம் வருந்திய கங்காதத்தன், ‘தன் குடும்பம் தவிர மற்ற அனைத்து உறவினர்களையும் இந்தக் கிணற்றைவிட்டு விரட்டிவிடவேண்டும்’ என்று நினைத்து ஒரு திட்டம் போட்டது.

பலவழிகளை யோசித்துப் பார்த்தும் அதற்கு ஒரு வழியும் சரியாகத் தோன்றவில்லை. ‘அவர்களை விரட்டுவது கடினம். ஆனால், அவர்களை அழிப்பது எளிது’ என்று நினைத்தது. ‘தனக்கு கெடுதல் செய்யும் எதிரிகளை தனது பகைவரைக்கொண்டுதான் அழிக்கவேண்டும்’ என்று முடிவெடுத்தது.
அந்தக் கிணற்றிலிருந்து நீர் எடுக்கப் பயன்படும் வாளிக் கயிற்றின் வழியாக மேலே ஏறிய கங்காதத்தன், கிணற்றைவிட்டு வெளியே வந்தது.

பின்னர் கங்காதத்தன் ஒரு பாம்புப் புற்றினைத் தேடிச் சென்றது. பாம்பினை அழைத்தது. அது புற்றுக்குள்ளிருந்த படியே, ‘நமக்கு இரையாகும் இனத்தைச் சேர்ந்த தவளை, ஏன் நம்மை அழைக்கிறது? ஏதாவது சதி செய்கிறதோ?’ என்று நினைத்து, உள்ளிருந்தபடியே, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது.

‘பாம்பே! நீ எனக்கு ஓர் உதவிசெய்யவேண்டும். அதற்காகத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன்!’ என்றது கங்காதத்தன்.

‘நெருப்பிடம் ஒரு துரும்பைச் சேர்த்தால் அது பொசுங்கிவிடுமல்லவா? இவன் ஏன் என்னை அழைத்து அவனுக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்’ என்று யோசித்த பாம்பு, புற்றைவிட்டு வெளியே வந்தது.

‘என்ன உதவி?’ என்று கேட்டது பாம்பு.

‘நான் தங்கியிருக்கும் கிணற்றில் என் உறவினர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து எனக்குத் தொல்லை கொடுத்து வருகின்றனர். நீ அவர்களை அழிக்கவேண்டும்?’ என்றது கங்காதத்தன்.

‘உன் பகைவர்களை அழிக்க விரும்பினால், நீ உன்னுடைய நண்பனிடம்தானே உதவிகேட்கவேண்டும். உன் பகைவனான என்னிடம் ஏன் உதவிகேட்கிறாய்?’ என்றது பாம்பு.

‘பகைவனுக்குப் பகைவனே எதிரி என்று நீதிநூல்கள் கூறியுள்ளன. அதனால்தான் நான் உன்னிடம் உதவி கேட்கிறேன்’ என்றது கங்காதத்தன்.

‘இரை நம்மிடத்திற்கு வருவதும் நாம் இரையினிடத்திற்குச் செல்வதும் நமக்கு நம்மைதானே! இவன் வாழும் கிணற்றில் நிறைய தவளைகள் இருக்கும். அவற்றை மொத்தமாக உண்டுவிடலாம்’ என்று யோசித்த பாம்பு, உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது.

கங்காதத்தன் அந்தப் பாம்பினை வாளிக்கயிற்றின் வழியாகக் கிணற்றுக்குள் இறக்கிவிட்டுத் தானும் இறங்கியது.

இரண்டொரு நாட்களில் அந்தப் பாம்பு கங்காதத்தனின் உறவினர்களில் கங்காதத்தனுக்குத் தொல்லை தந்த அனைத்து எதிரிகளையும் உண்டுவிட்டது.

பின்னர் அந்தப் பாம்பு கங்காதத்தனிடம் சென்று, ‘நீ கூறியவாறு நான் உனக்கு உதவி செய்துவிட்டேன். அதற்காக நீ எனக்கு ஏதாவது உணவு கொடு’ என்று கேட்டது. ‘என்னிடம் என்ன இருக்கிறது? நீ என் உறவினர்களை வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்’ என்றது கங்காதத்தன்.

பாம்பும் அவ்வாறே கங்காதத்தனின் உறவினர்களை சாப்பிட்டுத் தீர்த்தது. இதனை அறிந்த கங்காதத்தனின் மனைவியாகிய பெண் தவளை, ‘அட பாதகா! பகைவரை அழிக்கிறேன் என்று கூறி நம் குல எதிரியை அழைத்து வந்து இப்படி நம் எதிரிகளோடு சேர்த்து நம்முடைய உறவினர்களையும் அழித்துவிட்டாயே!’ என்று கங்காதத்தனைத் திட்டடியது.

‘தாம் தவறு செய்துவிட்டோமோ’ என்று உணர்ந்த கங்காதத்தன், பாம்பிடம் சென்றது.

‘நண்பா! நீ எனக்குச் செய்த உதவிக்கு ஏற்ப நான் உனக்கு உணவும் அளித்துவிட்டேன். இனி, நீ இந்தக் கிணற்றை விட்டுச் சென்றுவிடு’ என்று கூறியது.

இதுநாள்வரை இந்தக் கிணற்றில் இருந்துகொண்டு, எளிதாக உணவினைப் பெற்று உண்டுவந்த பாம்புக்கு இந்தக் கிணற்றை விட்டுச் செல்ல மனமில்லை.
அதனால், அந்தப் பாம்பு கங்காதத்தனிடம், ‘நான் இங்கிருந்து சென்றால் எப்படி வாழ்வேன்? எனக்கு யார் உணவுகொடுப்பார்கள்? நான் இங்கிருந்து செல்லமாட்டேன். நீதான் என்னை இங்குக் கொண்டுவந்தாய். அதனால், நீதான் எனக்கு நாள்தோறும் உணவும் அளிக்கவேண்டும்’ என்று கூறி பிடிவாதம் பிடித்தது.

வேறுவழியின்றி கங்காதத்தன் நாள்தோறும் கிணற்றைவிட்டு வெளியில் சென்று, தன் இனத்தவர்களிடம் பொய்கூறி அவர்களை அந்தக் கிணற்றுக்கு அழைத்து வந்தும், வலுக்கட்டாயமாகப் பிடித்துவந்தும் அந்தப் பாம்புக்கு உணவாகக் கொடுத்து வந்தது.

ஒருநாள் கங்காதத்தனால் எந்தத் தவளையையும் அந்தக் கிணற்றிற்குக் கொண்டுவர முடியவில்லை. பசியெடுத்த பாம்பு கங்காதத்தனின் பிள்ளைகளை உண்டுவிட்டது.

இதனை அறிந்த பெண் தவளை கங்காதத்தனிடம் அழுது, புலம்பி, ‘இந்தப் பாம்பு இனி நம்மையும் கொன்றுவிடும்’ என்று கூறியது.

கங்காதத்தன் ஒரு திட்டம் போட்டது. மறுநாள் தன் பெண் தவளையைக் கிணற்றைவிட்டு வெளியேற்றியது. பாம்பு பசியோடு வந்தது. ‘என்ன இன்று எனக்கு உணவு இன்னமும் வரவில்லையே?’ என்று கங்காதத்தனிடம் கேட்டது.

‘உனக்கு இரைதேடிவரத்தான் என் பெண் தவளை வெளியே சென்றுள்ளது. இன்னமும் வரவில்லை. அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றது கங்காதத்தன்.

பாம்பு கங்காதத்தனின் திட்டத்தை அறியாமல் வெகுநேரம் காத்திருந்தது. பின்னர், ‘என்ன இவ்வளவு நேரமாக உன் பெண் தவளை இரையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறதா?’ என்று கங்காதத்தனை அதட்டிக்கேட்டது.

உடனே, கங்காதத்தன் ‘நான் வேண்டுமானால் வெளியே சென்று, என் பெண் தவளையைத் தேடிவரட்டுமா? அப்படியே உனக்கும் சில தவளைகளை உணவாகக் கொண்டுவருகிறேன்’ என்று கேட்டது.

‘எப்படியாவது தமக்கு உணவு வந்தால் சரிதான்’ என்று நினைத்த பாம்பு, கங்காதத்தனை வெளியில் செல்ல அனுமதித்தது.

வெளியில் சென்ற கங்காதத்தன் திரும்ப வரவில்லை. மறுநாள் பாம்பு அந்தக் கிணற்றில் இருந்த ஒரு பல்லியிடம், ‘எனக்காக இரைதேடிச் சென்ற கங்காதத்தன் தம்பதியரை இன்னும் காணவில்லை. நீ கிணற்றுக்கு வெளியே சென்று அவர்களைப் பார்த்து, அழைத்து வா’ என்று கூறி அனுப்பிவைத்தது.

பல்லி கிணற்றைவிட்டு வெளியேசென்று கங்காதத்தன் தம்பதியரைச் சந்தித்தது. பாம்பு தன்னிடம் கூறியவற்றைச் சொல்லியது.

அந்தப் பல்லியிடம், ‘பசித்தவனின் விசுவாசத்தை நம்பக்கூடாது என்பதை நன்றாக அனுபவப்பட்டுத் தெரிந்துகொண்டேன் என்று நீ அந்தப் பாம்பிடம் சொல்லிவிடு’ என்று கங்காதத்தன் கூறியது. பின்னர் கங்காதத்தன் தம்பதியினர் தம் வாழ்நாளில் அந்தக் கிணற்றுப் பக்கமே செல்லவில்லை.

‘அதுபோலவே, நான் உன்னிடம் மீண்டும் வரமாட்டேன்’ என்று அந்த முதலையிடம் கூறியது குரங்கு சுமுகன்.

‘அப்படிச் சொல்லாதே நண்பா! நீ என்னுடன் வராவிட்டால் நான் நன்றிகெட்டவனாகிவிடுவேன். நீ இப்போது என்னிடம் வராவிட்டால், நான் இங்கேயே இருந்து உணவு உண்ணாமல் இறந்துவிடுவேன்’ என்றது முதலை.

‘என்ன முதலையே! நரி கழுதைக்கு நம்பிக்கையை ஏற்படுத்திச் சிங்கத்திடம் சிக்கவைத்துக் கொன்றதைப்போல, நீ எனக்கு உன்மீது நம்பிக்கையை ஏற்படுத்தி என்னைக் கொல்லத் திட்டம் போடுகிறாயா? என்று கேட்டது குரங்கு.

‘அதென்ன கதை? நரி கழுதைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அதனைச் சிங்கத்தால் கொன்றதா? அது எப்படி நடந்தது? என்று கேட்ட முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: