குகையுடன் பேசிய நரி

பஞ்ச தந்திரக் கதைகள்/ 3.8

how-to-draw-a-frog-10ஒரு சிறிய காடு. அந்தக் காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது.
அந்தச் சிங்கம் ஒருநாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தது. நாளெல்லாம் அலைந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. பொழுது சாய்ந்துவிட்டது. சிங்கத்திற்கு அதிகப் பசி. அப்போது அது ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.

‘நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்துகொள்வோம். இந்தக் குகையில் தங்கியிருக்கும் விலங்குகள் இரைதேடிவிட்டுத் திரும்பி இங்கே வரும். அப்போது நாம் அவற்றைப் பிடித்து உண்டுவிடலாம்’ என்று நினைத்து அந்தக் குகைக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது.

அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. அது அப்போது வெளியே இரை தேடி உண்டுவிட்டுத் தன் குகைக்குத் திரும்பி வந்தது. தனது குகைக்குள் நுழைய முனைந்த அந்த புத்திசாலி நரி குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்துவிட்டது.
உடனே அது ஆழ்ந்து யோசித்தது. ‘ஒருவேளை இந்தக் குகைக்குச் சிங்கம் வந்திருக்கலாம். ஆனால், அது சென்று விட்டதா? அல்லது இப்போது இந்தக் குகைக்குள் இருக்கிறதா என்பதனை நாம் எப்படி அறிந்துகொள்வது? சிங்கம் குகைக்குள் இருந்தால் நாம் இந்தக் குகைக்குள் நுழைவது ஆபத்து’ என்று எண்ணிய நரி குகையின் வாசலிலேயே நின்று சிந்தித்தது. சட்டென்று அதற்கு ஒரு யோசனை தோன்றியது.

குகைக்கு வெளியே நின்றுகொண்ட நரி, ‘ஏய், குகையே! ஏய், குகையே!’ என்று அழைத்தது.

சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்துகொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது.

நரி, மீண்டும், ‘ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்?’ என்றது.
சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது?’ என்று யோசித்தது.

நரி, ‘குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்?’ என்று கேட்டது.
அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. ‘அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை’ என்று நினைத்தது.

நரி, ‘ஏய், குகையே! நீ பேசிய பின்னர்தானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்?’ என்றது.
சிங்கம் பதறிப் போனது. ‘அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! இப்போது என்ன செய்யலாம்?’ என்று நினைத்த சிங்கத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.

‘நாம் ஏன் இந்தக் குகையைப் போலவே பேசக்கூடாது? நாம் குகைபோலப் பேசினால், அதனை அந்த நரி நம்பிவிடும். பின்னர் இந்தக் குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்!’ என்று நினைத்த சிங்கம், ‘ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே!’ என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது.

அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது.

‘ஆதலால், எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்’ என்றது குரூரநாசன். பின்னர், அது பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது.

குரூரநாசன் சென்ற பின்னர்தான் காகமாகிய சிரஞ்சீவிக்கு நிம்மதி ஏற்பட்டது. அது தனக்குள், ‘புத்தியுள்ள மந்திரி, நண்பர் யார் பகைவர் யார் என்பதனை அறிந்து ராஜாவுக்குத் தெரியப்படுத்திவிடுவான். அவனால் ராஜாவுக்கு நன்மையே. அப்படிப்பட்ட குரூரநாசன் இப்போது இங்கு இல்லை. புத்தியற்ற மந்திரிகளை உடைய இந்த ஆந்தை ராஜா விரைவில் அழிவான். அந்த ஆந்தை ராஜாவின் அருகில் உள்ள அனைத்து மந்திரிகளுமே புத்தியற்றவர்கள்தான். அதனால், தன்னுடைய திட்டம் விரைவில் நிறைவேறிவிடும்’ என்று நினைத்துக் கொண்டது.

சிரஞ்சீவி ஒவ்வொரு நாளும் ஒரு சுள்ளி என, நாள்தோறும் சுள்ளிகளை எடுத்துவந்து அந்தக் குகையின் வாயிலில் நிறைத்து வந்தது. சிரஞ்சீவியின் நடத்தையில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை. அதனால் அது தன் பணியினைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடித்தது.
பகற்பொழுதில் கண்பார்வையற்ற ஆந்தைக் கூட்டம் குகைக்குள் அடைந்து, தூங்கிக்கொண்டிருந்தது. இதுதான் தக்க தருணம் என்று நினைத்த சிரஞ்சீவி அந்தக் குகையைவிட்டு வெளியேறியது.

தன்னுடைய காகராஜனைச் சந்தித்த சிரஞ்சீவி, ‘ராஜா! என்ன நடந்தது என்பதனை நான் உங்களுக்குப் பின்னர் கூறுகிறேன். இப்போது உடனடியாக, எல்லாக் காகங்களையும் அழைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆளுக்கொரு எரியும் கொள்ளியைக் கொடுங்கள். அவை நான் ஆந்தையின் குகை வாசலில் குவித்துள்ள சுள்ளிக்குவியலில் வைத்துவிடட்டும். உடனே, குகையின் வாசல் தீப்பற்றி எரியும். ஆந்தைக் கூட்டம் அந்தத் தீயில் வெந்து அழியும்’ என்றது சிரஞ்சீவி.

சிரஞ்சீவியின் திட்டப்படி, காகராஜா தன் காகக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு எரியும் கொள்ளியுடன் ஆந்தைக் குகையை அடைந்தது. அங்கு சிரஞ்சீவி குவித்துவைத்துள்ள சுள்ளிகளில் தீயை மூட்டியது. நெருப்பும் புகையும் குகைக்குள் மண்டியதில் ஆந்தைகள் அனைத்தும் அழிந்தன.
ஆந்தைக் கூட்டம் அழிந்த பின்னர், காகராஜா தன்னுடைய பழைய ஆலமரத்தில் வழக்கம்போலத் தன்னுடைய அரசாட்சியை நடத்திவந்தது.
பின் காக ராஜன் சிரஞ்சீவியை அரசவைக்கு அழைத்து, ‘நீ எப்படி ஆந்தைக் கூட்டத்தை நம்பவைத்து ஏமாற்றினாய் எங்களுக்கு விளக்கிக் கூறு’ என்று கேட்டது.

‘பாம்பு இரையை உண்பதற்காகத் தன் தோளில் தவளைகளைச் சுமந்ததுபோலத்தான் நானும் ஆந்தைக் கூட்டத்தை வஞ்சகமாக அழித்தேன்’ என்றது சிரஞ்சீவி.

‘பாம்பு தவளைகளைத் தன் தோளில் சுமந்ததா?’ என்று வியப்புடன் கேட்ட காகராஜனுக்கு, சிரஞ்சீவி அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

3.9. தவளைகளைச் சுமந்த பாம்பு

ஒரு பெரிய கானகத்தில் மந்தவிஷன் என்கிற பாம்பு ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் இரையைத் தேடித் திரிந்த அந்தப் பாம்பு தனக்கு ஏதும் கிடைக்காததால் வருத்தமடைந்து ஓர் ஏரிக்கரைக்கு அருகில் வந்து அமர்ந்தது.

அப்போது அந்த ஏரியில் நிறைய தவளைகள் இருப்பதைக் கண்டது. ஆஹா! தனது பசிக்கு இந்தத் தவளைகள் கிடைத்தால் நன்றாக இருக்குமே! இந்தத் தவளைகளை எப்படியாவது தந்திரமாகப் பிடித்து உண்டுவிடவேண்டும் என்று திட்டமிட்டது.

அப்போது அந்தப் பக்கம் வந்த தவளையொன்று இந்தப் பாம்பைப் பார்த்து விட்டது. அது பயந்து போய், சற்று தொலைவில் இருந்துகொண்டே, பாம்பைப் பார்த்து ‘பாம்பே! ஏன் இரையேதும் தேடித் திரியாமல் இந்தக் கரையில் இப்படிச் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டது.

உடனே, அந்தப் பாம்பு தந்திரமாகப் பேசத் தொடங்கியது. ‘நான் பாவி. எனக்கு எப்படி, எங்கிருந்து உணவு கிடைக்கும்?’ என்று தன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு கேட்டது.

‘ஏன்? நீ என்ன பாவம் செய்தாய்?’ என்று தவளை விசாரித்தது.

‘இன்று காலையில் நான் இரைதேடிவந்தேன். அப்போது ஒரு தவளை குறுக்கே சென்றது. நான் அதைப் பிடிக்க நினைத்து முன்னே சென்றேன். அது புதரில் சென்று ஒளிந்துகொண்டது. நான் அதனைத் தேடிச் சென்றேன். அருகில் ஒரு பிராமணன் குளித்துக்கொண்டிருந்தான். அவனது மகன் புதரின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். நான் தேடிவந்த தவளைதான் இது என்று நினைத்து, அந்தப் பிராமணனின் பிள்ளையுடைய பாதத்தைக் கடித்து விட்டேன். அவன் இறந்துவிட்டான். அதனால் கோபம் கொண்ட பிராமணன் என்னைச் சபித்துவிட்டான்’ என்றது பாம்பு.

‘அந்தப் பிராமணன் உன்னை என்னவென்று சபித்தான்?’ என்று கேட்டது அந்தத் தவளை.

‘அந்தப் பிராமணன் என்னைப் பார்த்து, ‘இதுவரை தவளைகளைப் பிடித்து உண்டு வந்த நீ, இனிமேல் தவளைகளுக்குச் சேவைசெய்து வாழக் கடவாய்’ என்று சபித்துவிட்டான். அவன் சாபம் பலித்துவிட்டது. நான் இந்த ஏரிக்கரைக்கு வந்து தவளைகளுக்குச் சேவகம் செய்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறியது.

அந்தத் தவளை பாம்பு கூறுவது அனைத்தும் உண்மை என்று நம்பி, பாம்பு பெற்ற சாபத்தைத் தன் இனத்தாரிடம் கூறியது.

உடனே, தவளை ராஜா தன்னுடைய அனைத்துத் தவளைகளையும் அழைத்துக்கொண்டு ஏரியைவிட்டு வெளியே வந்தது. அந்தப் பாம்பினை அதிகாரம் செய்தது. ‘ஏ பாம்பே! அனைத்துத் தவளைகளையும் உன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு செல்!’ என்று கட்டளையிட்டது.

உடனே, பாம்பு மிகவும் பவ்வியமாக தவளைகளைத் தன் முதுகில் சுமந்துகொண்டு அந்தக் காட்டையே வலம்வந்தது. இவ்வாறு இரண்டு நாட்கள் சென்றன. பாம்பின் வேகம் குறைந்துவிட்டது.

தவளை ராஜா பாம்பிடம், ‘ஏன் சோர்வாக இருக்கிறாய்?’ என்று விசாரித்து.
‘நான் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகின்றன. எனக்கு மிகவும் பசிக்கிறது’ என்றது பாம்பு.

‘அப்படியா! சரி, இனிமேல் நீ சிறிய தவளைகளைப் பிடித்து உன் பசிக்கு ஏற்ப அளவாக உண்டுகொள்’ என்று உத்தரவிட்டது.

உடனே, பாம்பு, ‘எனக்குச் சாபம் கொடுத்த அந்தப் பிராமணர் எனக்கு இட்ட அதே கட்டளையைத் தாங்களும் கூறுகிறீர்கள்!’ என்று கூறியது.

அதன் பின்னர், அந்தப் பாம்பு சிறிய தவளைகளைச் சாப்பிட்டுக்கொண்டும் பெரிய தவளைகளைச் சுமந்துகொண்டும் காட்டில் திரிந்தது.

அப்போது அந்தக் காட்டிற்குள் நுழைந்த ஒரு புதிய பாம்பு இந்தக் காட்சியைக் கண்டு கோபம் கொண்டது.

‘நமக்கு இரையாக உள்ள இந்தத் தவளைகளை நீ ஏன் உன் முதுகில் சுமந்துகொண்டு திரிகிறாய்?’ என்று கேட்டது.

அதற்கு அந்தப் பாம்பு, ‘எல்லாம் காரணமாகத்தான்! காலம் கடந்தபின் உனக்கே தெரியும்’ என்றது.

சில நாட்களில் அந்தப் பாம்பு தவளைகளைச் சுமந்து சுமந்து, அவற்றை ஏமாற்றி அனைத்துத் தவளைகளையும் உண்டுவிட்டது. இறுதியாகத் தவளை ராஜாவையும் சுமந்து சென்று அதையும் சாப்பிட்டு ஏப்பம்விட்டது.

‘எந்தச் சமயத்தில் எதனைச் செய்யவேண்டுமோ அந்தச் சமயத்தில் அதனைச் செய்து பகைவர்களை வேரோடு அழித்துவிடவேண்டும். நெருப்பு தன் வலிமையால் காட்டையேகூட அழிக்கவல்லது. மரங்கள் தன் வேர்களை நிலத்தில் ஊன்றியுள்ளன. இருந்தாலும், மிருதுவான தன்மைகொண்ட தண்ணீரும் காற்றும் மரங்களை வேரோடுப் பிடுங்கிச் சாய்த்துவிடுகின்றனவே’ என்றது சிரஞ்சீவி.

காகராஜா, ‘கீழ்நிலையில் உள்ளவர்கள், தங்களுக்குச் சிக்கல் வரும் என்று நினைத்து, பயந்து எந்தச் செயலிலும் ஈடுபடுவதில்லை. நடுநிலையில் உள்ளவர்கள், ஏதாவது ஒரு காரியத்தைத் தொடங்கி, பின்னர் ஏதேனும் சிக்கல் வந்தால் அந்தக் காரியத்தைக் கைவிட்டுவிடுவார்கள். மேல்நிலையில் உள்ளவர்கள், ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்துவிட்டு எடுத்த காரியத்தை முடித்துவிடுவார்கள். அதுபோலத்தான் நீ எடுத்துக்கொண்ட காரியத்தை ஆயிரம் தடைகளையும் மீறி முடித்துள்ளாய். அதுவும் அந்தக் காரியத்தைத் தீயினால் நிரந்தரமாக முடித்துள்ளாய். சண்டையில் ஆயுத்தைப் பயன்படுத்தினால் ஒருவன் சாவான். ஆனால், சண்டையில் புத்தியைப் பயன்படுத்தினால் ஆயிரம் பேர் சாவார்கள்’ என்றுகூறி சிரஞ்சீவியைப் பாராட்டியது.

‘அரசனாகிய தங்களின் புகழினால்தான் இது சாத்தியமாயிற்று. தங்களைப் போன்றவர்களுக்கு இறைவன் நல்ல உத்திகளை வழங்குவார். இதுபோன்ற காரியங்களைத் தடியெடுத்து அடித்து முடிக்கமுடியாது. அனுசரிக்கும் புத்தியால்தான் செய்யவேண்டும். நான் அவ்வாறே செய்து, சிறப்பாக முடித்தேன்’ என்றது சிரஞ்சீவி.

அதன்பின்னர், காகராஜன் அந்த மரத்திலிருந்து நெடுநாட்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் அரசாண்டுவந்தது.

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: