நான்கு கதைகள்

சீன இதிகாசக் கதைகள்

நல்லதும் கெட்டதும்

snake womanஒரு காலத்தில் பாலைவனத்தில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவராக, எதுவும் எச்செயலும் ஏதோ ஒரு நன்மையின் பொருட்டே நிகழ்கிறது என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவரிடம் குதிரைகள் நிறைய இருந்தன.

ஒருநாள் தன்னுடைய நிலத்திலே வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்; அப்பொழுது அவருடைய குதிரைகளில் ஒன்று, அதுவும் பெண் குதிரை  காணாமல் போனது தெரிந்தது. அவருடைய வீட்டினர், அக்கம்பக்கத்து மனிதர்கள் என்று எல்லாருமே எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஓடிப்போன குதிரை கிடைக்கவே இல்லை. எல்லோரும் அவரிடம் சென்று, “குதிரை காணாமல் போனதால் உங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு ஒரு துரதிஷ்டம்தான்!” என்று தங்கள் அனுதாபத்தை அல்லது வருத்தத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர், “குதிரை காணாமல் போனதை ஏன் துரதிஷ்டம் என்று நினைக்க வேண்டும். அதுவே அதிர்ஷ்டத்தை கொண்டு வரலாம், அதற்கு நேரம் வாய்க்கும், வரவேண்டும்” என்றார்.

மறுநாள் அதிகாலைஅடிவானத்தின் பக்கமிருந்து இரண்டு குதிரைகள் ஓடி வருவதை அந்தப் பாலைவனத்துப் பாமரக் கிழவர் பார்த்தார். ஆம், அவரை விட்டு ஓடிய அந்த இளம் பெண் குதிரை ஒரு பொலி குதிரையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்தப் புதிய குதிரையின் பொலிவும் உடல் வலிவும் ஒரு போர்க் குதிரையாகவும் இருக்கும் என்று நினைக்க வைத்தது.

இரண்டும் இவருடைய இடத்துக்கு வந்து சேர்ந்தது. வந்தவுடன் பார்த்தால் நல்ல வாளிப்பான உடல் வாகுடன் அந்தப் புதிய குதிரை தோற்றமளித்தது. சந்தேகத்துக்கு இடமில்லால் இது போர்க்குதிரைதான் என்றறிந்து, ‘யாரேனும் படை வீரர் ஒருவருடைய குதிரையாகவே இது இருக்கவேண்டும். அவரிடமிருந்து தப்பி ஓடி வந்திருக்கவேண்டும். ஆகவே இது குறித்து விசாரித்து அதை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஓர் கோரிக்கையை அப்பகுதியின் மாஜிஸ்டிரேட்டிடம் இவர் வைத்தார். மாஜிஸ்டிரேட்டும், உரியவர் வந்து கோரும்வரை இவரிடமே வைத்திருக்கச் சொல்லி, பொறுத்திருந்து பார்க்கச் சொன்னார்.

ஓடிப் போன குதிரை கிடைத்ததற்காகவும்,  ஒரு புதிய குதிரை உடன் வந்ததற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு சிறு விருந்து நிகழ்ச்சி இவருடைய குடும்பத்தினராலும், அண்மையிலுள்ள குடும்பங்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இவரை அழைத்து இவரது மகிழ்ச்சியைக் குறித்து பேசவும் கோரினார்கள்.

முதியவர் அமைதியாக இருந்தார். அவர் முகத்தில் எந்த மகிழ்ச்சியின் அறிகுறிகளும் இல்லை. அவர் சொன்னார், “புதிய துடிப்பான இளங்குதிரை கிடைத்தற்காக நான் மகிழ்ச்சியடையவில்லை. இது நல்லது என்று எடுத்துக்கொள்ளவும் கூடாது. இதன் விளைவு என்ன என்பது காலம் வரும்போது தெரியும்” என்றார்.

ஒருவாரம் சென்றது, முதியவரின் மைந்தன் ஒரு நாள் புதிய குதிரையின் மேல் ஏறி சவாரி செய்தான். ஒரு போர்க்குதிரையின் மேல் ஏறி சவாரி செய்யும் அளவுக்கு அவனுக்குப் பயிற்சியோ திறமையோ கிடையாது. அடங்காத போர்க்குதிரை கீழே தள்ளிவிட்டு ஓடியது. பாவம், மைந்தனின் கால் உடைந்தது.

இப்பொழுது எல்லோரும், “ஐயோ பாவம் இந்தப் போர்க்குதிரை  துரதிஷ்டத்தை அல்லவா கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. இவருடைய பிள்ளையின் கால் முடமாயிற்றே” என்றனர். அப்பொழுது இவர், “என் மகனுக்கு ஏற்பட்ட விபத்து கெட்டது என்று ஏன் நினைக்க வேண்டும். நன்மையையும் குறிக்கலாம், காலம் வரும்போது தெளிவாகும்” என்றார்.

கொஞ்ச காலத்துக்குப் பின்னர், முதியவர் வாழ்ந்த நாட்டின் அரசன் பக்கத்து நாட்டுடன் வீண் சண்டைக்குப் போனான். அவன் போர் தொடுத்ததில் கொஞ்சமும் நியாயம் கிடையாது. அவன் கொடிய குணத்தையே அது பிரதிபலித்தது. அவன் தன் நாட்டு மக்கள் அனைவரையும் போரில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவேண்டுமென்று ஆணையிட்டான். நாடு முழுவதும் ஒரு குக்கிராமம் கூட விடாது ராணுவ அதிகாரிகள் இளைஞர்களைக் கட்டாயமாக இழுத்துச் சென்றனர். வீடு வீடாகச் சென்று சோதித்து யாரையும் விட்டுவிடாமல் பிடித்தனர். முதியவருக்கோ ஒரே பிள்ளைதான், இவனும் ராணுவத்திற்கு போய்விட்டால் அது அந்தக் குடும்பத்துக்கு பெரும் இழப்பாகவும் முடியலாம்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக முதியவரின் மகன் இப்போது முடவன் ஆகிவிட்டான் என்பதால் ராணுவத்தில் பணியாற்றுகின்ற தகுதியை இழந்திருந்தான்.  அதனால் அவர்களுக்கு அது வசதியாகப் போய்விட்டது.  ராணுவத்தினர் வீட்டில் நுழையும்போதே, அதன் வாயிலில் கட்டியிருந்த கம்பீரமான அந்தப் போர்க்குதிரையைப் பார்த்தனர். “ஓ. . . இதோ இங்கே ஒரு விலை மதிப்புள்ள போர்க்குதிரை கட்டிக்கிடக்கிறது. எனவே இந்த வீட்டிலுள்ளவர் பெரிய ராணுவ வீரனுடைய வீடாகவே இருக்கும்” என்று பேசிக்கொண்டனர்.

உள்ளே நுழைந்து வீட்டிலுள்ளோரைப் பார்த்தப்போது அந்த வீட்டில் முதியவரும், அவர் மனைவியும், முடவனான அவருடைய மைந்தனுமே இருந்தனர். “பாவம் ஏதோ போரில் இவனுக்கு கால் போயிருக்கிறது. இந்தக் குடும்பத்திலிருந்து ராணுவத்துக்கு யாரையும் எடுக்க முடியாது” என்று சொல்லி அகன்றனர்.

அக்கம்பக்கமுள்ளவர்கள் சொன்னார்கள், “நல்ல வேளை! இவருடைய மைந்தனைக் குதிரைத் தள்ளி விட்டது.  பெரியவர் சொன்னபடி இதுவே அதிர்ஷ்டமாகிவிட்டது! ஒவ்வொன்றையும் நல்லது எது, கெட்டது எது என்று அறிவுப்பூர்வமாக பார்வையிடுகின்ற இந்தப் பெரியவரின் அறிவாற்றல் சாதாரணமானதல்ல!” என்று பாராட்டினர்.

வாழ்வில் அவ்வப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகளைக் கொண்டு நல்லது, கெட்டது என்று தீர்மானித்துவிடக்கூடாது. காலம்தான் ஒவ்வொரு நிகழ்வின் விளைவையும் தோலுரித்துக் காட்டக்கூடியது.

==

தெரியாத விலங்கு

முன்னொரு காலத்தில் குய்ஷு (Guizhoo) என்ற ஊரில் கழுதைகள் கிடையாது. ஒரு கழுதையைப் பிடித்து அரசாங்க அலுவலர் ஒருவர் அந்த ஊருக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அந்தக் கழுதையை எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் அப்படியே மலை, காடு பகுதிகளில் ஊர்க்காரர்கள் விட்டுவிட்டார்கள்.

கழுதை மலையும் காடும் சேர்ந்த பகுதிகளில் தன்னிச்சையாகத் திரிந்தது. அடிக்கடி வாலைத் தூக்கிக்கொண்டு தன் கனகம்பீரக் குரலை ஒலிக்கச் செய்யும். இதன் குரலின் உரத்த ஒலியால் இதைப் பற்றி அறியாத அங்குள்ள மிருகங்கள் திடுக்கிட்டு ஓடும்.

அங்கே ஒரு புலி இருந்தது. காட்டிலிருந்து வந்த அந்தப் புலி அதுவரை கழுதையைப் பார்த்ததில்லை. கழுதையின் உருவத்தைப் பார்த்து இது சக்திவாய்ந்த மிருகமாக இருக்குமென்று நினைத்தது. கழுதையைப் பார்த்த புலி, கழுதையைப் பார்க்காதவாறு தன்னை மறைத்துக்கொண்டது. கழுதையை எங்கேனும் தூரத்தில் கண்டால், தொலைவாக இருந்து கொண்டது. இந்தப் பெரிய மிருகம் ஒருவேளை தன்னைக் கொல்லவும் கூடும் என்ற அச்சமும் அதற்கு இருந்தது.

நாளாக, நாளாக, கழுதைக்கும் புலிக்கும் உள்ள இடைவெளி குறையலாயிற்று. கழுதையைக் கொஞ்சம் கொஞ்சமாக அளந்துப் பார்க்கத் தொடங்கியது புலி. கழுதையின் உரத்த குரலொலியும் அதன் நீண்ட நேர ஆலாபனையும் திடுக்குறச் செய்தபோதிலும் கழுதையை உன்னிப்பாக புலி கவனித்துவந்தது. பிற காட்டு மிருகங்கள்கூட கழுதையைக் கண்டு அஞ்சி, அதன் காட்டுக் கத்தலைக் கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடின.

ஒருநாள் புலி, கழுதையின் எதிரே இருந்தது. கழுதையின் மேல் சின்னதாக ஒரு அடிப்போட்டது. அவ்வளவுதான் கழுதைக்குக் கோபம் வந்தது. தன் இரண்டு பின்னங்கால்களைத் தூக்கியடித்தது. அடி ஒன்றும் பலமாகவுமில்லை. அது தாக்குதலாகவும் தெரியவில்லை. உடனே புலி ஒரேயடியாகப் பாய்ந்தது. கழுதையின் கழுத்தைக் கவ்வி,  பூமியில் கவிழ்த்தது. ஒரு பெரிய உறுமலுடன் அதைப் புரட்டிப் போட்டுக் கிழித்தது. திருப்தியாக கழுதை மாமிசம் உண்டது.

ஒருவருடைய உண்மை நிலையைத் தெரியாமலே நாம் ஒருவர்மீது மதிப்பும் பயமும் கொள்கிறோம். தெரிந்துவிட்டால்?

===

ஆயிரம் நாளும் போதை

சோன்ங்ஷான் (Zhongshan) என்ற ஊரில் டிக்ஸி (Di Xi) என்பவர் இருந்தார். அவர் மது தயாரிப்பதில் கெட்டிக்காரர். அதிக போதையில் ஒருவரை நிறுத்தி வைக்கின்ற வகையில் புதுவகை மதுவை தயாரிக்கின்ற முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அதாவது, ஒரு கோப்பை மதுவின் தாக்கம் ஆயிரம் நாள்களுக்கு நீடிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்.

அதே ஊரில் லியூக்ஸாவான்ஜி என்பவன் இருந்தான். அவனொரு மொடாக்குடியன். எவ்வளவு குடித்தாலும் அவனுக்குப் போதை ஏறாது. ஒருநாள் அவன் இவரிடத்தில் மது குடிக்க வந்தான்.

இவர் அவனிடம் “மது எதுவும் மிச்சமில்லை, ஒரு புதிய மது ரகம் ஒன்றை இப்பொழுதுதான் காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். அதை உனக்குத் தர முடியாது. நீ போகலாம்” என்றார்.

அவனோ பிடிவாதமாகத் தனக்கு அந்த மதுதான் வேண்டுமென்று கூறிக்கொண்டு நின்றான்.

“இந்த மது உனக்குச் சரியாக இருக்காது. நீயோ அதிகமாகக் குடிக்கக் நினைப்பவன். இந்த மதுவோ ஒரு கோப்பைக்கு மேல் அருந்தக்கூடாது” என்றார்.

“சரி. . . அந்த ஒரு கோப்பையாவது கொடு. நான் இப்பொழுது குடித்தே ஆகவேண்டும்” என்று உட்கார்ந்துவிட்டான்.

டிக்ஸி தனது முதல் பரிசோதனையை இவனிடம் மேற்கொள்ள முடிவெடுத்தார். தனது புதிய கண்டுபிடிப்பை அவனுக்கு முதன் முதலாக ஊற்றிக் கொடுத்தார்.

ஒரு கோப்பையை அவன் அருந்திய பிறகு, மீண்டும் மது கேட்டு கெஞ்சினான். டிக்ஸி மறுத்துவிட்டார். “இனிமேல் கொடுக்கமுடியாது, இந்த ஒரு கோப்பை மதுவே உன்னை மூன்று ஆண்டுகள் மயக்கத்தில் கிடத்திவிடும். . . . நீ முதலில் இடத்தைக் காலி செய்” என்றார்.

லியூ வேறு வழியில்லாமல் கிளம்பினான். அவன் வீடு பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் என்னவோ நடக்க நடக்க வீடுவெகு தூரமாக தெரிந்தது. எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தான். வீட்டுக்குப் போய் படுக்கையில் வீழ்ந்தான். அப்படியே கட்டையோடு கட்டையாகிவிட்டான்.

அவனை அவன் வீட்டினர் பார்த்தார்கள். அவனது முகத்தின் நிறமே மாறிப்போய் இருந்தது. சாராயம் விஷமாகி இவனைச் சாகடித்து விட்டது என்று நினைத்தனர். அவனுக்கு எந்த உணர்வும் இல்லை. அவன் இறந்துவிட்டாக எண்ணி, இடுகாட்டில் புதைத்தனர்.

மூன்று ஆண்டுகள் கடந்தன. டிக்ஸி தன்னுடைய புது வகை மதுவின் வேலையைப் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தார். அதைக் குடித்துவிட்டுப் போன லியூவைத் தேடத்தொடங்கினார்.

லியூவின் வீட்டை விசாரித்து அவனது வீட்டுக்குச் சென்றார். விசாரித்தபோது விட்டிலிருந்தபவர்கள்,  “அவன் இறந்து ஆண்டுகள் ஓடிவிட்டனவே!” என்றனர்.

“இல்லை; அவன் இறந்திருக்கமுடியாது. நானொரு சிறப்பு வகை மதுவைப் பரிசோதனையாக அவனுக்குக் குடிக்கக் கொடுத்தேன். அந்த மது மூன்று ஆண்டுகளுக்குப் போதையில் இருத்தும். அந்த மதுவின் தாக்கத்தில் உணர்விழந்து கிடந்தவனை நீங்கள் உயிரற்றவன் என நினைத்து அடக்கம் செய்துவீட்டீர்கள். இன்றுதான் அவன் கண்விழித்து எழவேண்டிய ஆயிரமாவது நாள். ஆகவே இப்பொழுதே நாம் போய் அவனது புதைக் குழியைத் தோண்டிப் பார்க்க வேண்டும்” என்றார் டிக்ஸி.

அவரை நம்புவதற்கு அவர்கள் தயங்கினார்கள். டிக்ஸி மிகவும் வலியுறுத்தி லியூவின் கல்லறையை உடைக்கவும் தோண்டவும் செய்தார். கல்லறையை உடைத்து மண்ணைத் தோண்டிய போது, சவப்பெட்டி அருகே மண்ணிலிருந்து வியர்வையின் வாசம் அடித்தது. இது எல்லோருக்கும் வினோதமாக பட்டது. மண்ணை முழுவதும் எடுத்து சவப்பெட்டியை மேலே கொண்டுவந்து திறந்தபோது லியூ தூங்கி, படுக்கையிலிருந்து எழுவதைப் போல எழுந்தான்.

கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தான் எங்கிருக்கிறோம்? ஏன் இவ்வளவு பேர் தன்னைச் சூழ்ந்துகொண்டு நிற்கிறார்கள் என்பதையெல்லாம் அந்தக் குடிகாரன் கவனிக்கவில்லை. தனக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர்தான் கண்ணில் தெரிந்தார். “ஹலோ டிக்ஸி, எனக்கு ஒரு கோப்பை இன்றைக்கும் அந்த மதுவைத் தா” என்றான்.

எப்படி இருந்தது புதிய சரக்கு என்று டிக்ஸி கேட்டபோது அந்தக் குடிகாரன் சொன்னான். “அடேங்கப்பா, நானும் எவ்வளவோ குடிச்சிருக்கேன். ஆனால் உன்னுடையது பிரமாதம். சூரியன் எவ்வளவு தூரம்  ஏறியிருக்கிறான் பார்! அதுவரை நான் தூங்கி மயங்கி இருக்கிறேன் என்றால் எல்லாம் உன் புதுச்சரக்கு செய்த வேலைதான்!”

எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தனர்.மூன்று ஆண்டுகளாக அவன் தூங்கியது அவனுக்கே தெரியவில்லை. எல்லோரும் கல்லறைத் தோட்டத்திலிருந்து சிரித்துக் கொண்டே வீடு திரும்பினார்கள்.

===

நாக தேவதை

ஒரு காலத்தில் வெள்ளை பாம்பு, பச்சை பாம்பு இரண்டும் இர்மை (Er-mei) என்ற மலையில் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மந்திர ஆற்றல் கிடைத்தது. அதனால் அவை தங்களை இரண்டு அழகிய இளம் பெண்களாக மாற்றிக்கொண்டன. இள மங்கையர்கள் இருவரும் ஹேங்ஷோன் என்ற நகருக்கு வந்து வசிக்கலானார்கள்.

அந்த நகரின் அழகான ஓரிடம் மேற்கு ஏரி. அங்கு இருவரும் அடிக்கடி சென்று பொழுதைக் கழிப்பது வழக்கம். ஒரு நாள் அதே இடத்துக்கு வந்திருந்த ஹ்சுஷெங் என்னும் ஆணழகன் இவர்களைக் கண்டான். அவனைக் கண்டு வெள்ளை பாம்புப் பெண் உடனே காதல் வயப்பட்டாள்.

ஒருநாள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  தன் கணவனுக்கு வருவாய் இல்லை என்பதை உணர்ந்த வெள்ளை நாக மங்கை மூலிகை மருந்தகம் ஒன்றைத் தொடங்க அவனுக்கு உதவினாள். காடுகளிலும் மலைகளிலும் பாம்பாகச் சுற்றியிருந்ததால் எந்தெந்த செடிகள், தாவரங்கள் எந்தெந்த நோய்களைத் தீர்க்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. கூடுதலாகத் தன் மந்திர சக்தியையும் அவள் பயன்படுத்தினாள்.

இந்த மூலிகை மருந்தகத்தின் மருந்துக்கள் பெருமளவுக்கு மக்களால் விரும்பப்பட்டது. அவர்களுடைய நோய்கள் இந்த மருந்துகள்மூலம் குணமடைந்ததால் அவர்கள் மகிழ்ந்தனர். குணமே ஆகாது என்று கைவிடப்பட்ட நோய்களும்கூட இவளுடைய மந்திர சக்தியினால் குணமானது. எப்பொழுதும் இவர்களுடைய மருந்தகத்தில் கூட்டம் அலை மோதியது. ஏழை, எளியவர்களுக்காக இன்னொரு பக்கம் இலவச மருந்து உதவி மையமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மொத்தத்தில், இவர்களுடைய மருந்தகத்தின் பெயர் நாடெங்கும் பரவிப் பிரபலமாயிற்று.

ஒரு நாள் முதிய துறவி ஒருவர் இந்த மருந்தகத்துக்கு வந்தார். மாயத் தோற்றங்களையும் மெய்தோற்றங்களையும் கண்டறியும் தவ ஆற்றல் கொண்டவர் அவர். பெயர், பஹாய். இவருடைய கண்களிலே நாக மங்கை பட்டுவிட்டாள். இவர் ஹ்சுசெங்கிடம் சென்று அவன் மனைவி மானிடப் பெண் அல்லள், மாய ஆற்றல் கொண்ட நாக மங்கை, எனவே அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில், அந்த ஊரில் ஒரு விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறுகின்ற டிராகன் படகு விழா அது. இள வயதுடைய ஆண்களும் பெண்களும் போட்டிகள், கேளிக்கைகள் என்று மகிழ்ந்திருக்கூடிய சமயம் அது. விழா சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளை நறுமண  நீர்ச்செடிகளைக் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். ஆங்கங்கே நீர் குடுவைகளைக் கட்டித் தொங்கவிடும் வழக்கமும் இருந்தது. இவ்வாறு செய்தால் கெட்ட ஆவிகள் நெருங்கி வராதாம்! இருக்கும் ஆவிகளும் அவர்கள் எழுப்பும் புகை மற்றும் விருந்துகளால் வெகுண்டோடுமாம்.

ஹ்சுஷெங்கின் வீடும் இதேப்போன்று அலங்காரம் செய்யப்பட்டது. வீட்டிலிருந்து இரண்டு நாக மங்கையர்க்கும் இது மிகவும் துன்பத்தையும் நெருக்கடியையும் கொடுக்கக்கூடியது. என்றாலும் ஏதும் தெரியாதவர்கள் போல் அவர்கள் இருவரும் விருந்தில் பங்கேற்றனர்.

வெள்ளை நாக மங்கை அப்போது கர்ப்பம் தரித்திருந்தாள். இந்த நேரத்தில் அவளுடைய மந்திர சக்தி எடுபடாது. ஒரு நாள், தன் கணவனையும் அவனுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் திருப்திபடுத்த, அவள் மது அருந்த நேரிட்டது. மது அருந்த அருந்த அவள் தன் கட்டுப்பாட்டை இழந்தாள். சுயநினைவு இல்லாததால் தன் சுய உருவை எடுத்தாள்! யாருக்கும் தெரியாமல் தன் படுக்கையறையில் போய் விழுந்தாள்.

பெரிய பாம்பு வடிவில் அவள் படுக்கையறையில் கிடந்தாள். கணவன் ஹ்சுஷெங் அறைக்கு வந்தான். அவளுடைய கோலத்தைக் கண்டான். அதுவரை அப்படியோர் வெள்ளை நிறப் பாம்பை அவன் பார்த்ததில்லை. அவனுக்கு அச்சமேற்பட்டது. அச்சத்தில் மயங்கினான். அச்சம் அவனை மரணம் வரை இழுத்துக்கொண்டு போனது.

வெள்ளை நிற நாக மங்கை தன் கணவனின் நிலைமையைத் தெரிந்துகொண்டாள். அவன் உயிரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமென்று உறுதி எடுத்தாள். அவளுக்குத் தெரியாத மருந்து வகைகளா? இதற்கு மருந்து எங்கே கிடைக்குமென்று அவள் அறிந்தாள். ஆம், பெரு வெள்ளத்துக்குப் பின்னர் மனித குலம் மீண்டும் தோற்றமெடுப்பதற்கு காரணமான நுவா தம்பதிகள் வாழ்ந்த குன்லான் மலையிலே அந்த மூலிகை கிடைக்குமென்று தெரிந்துகொண்டாள்.

ஆனால் குன்லான் மலையிலே அலைந்தும் அந்த மூலிகை கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தவித்துப்போனாள். அவள் காதல் உதவிக்கு வந்தது. தன் கணவன்மீது அவள் கொண்டிருந்த அன்பின் ஆற்றலால் அந்த மூலிகை இடம் பெயர்ந்து இவளிடம் வந்தது. அதைக் கொண்டு சிகிச்சை செய்து கணவனை அவள் மீட்டெடுத்தாள்.

ஏற்கெனவே அவனை எச்சரித்திருந்த அந்தத் துறவி மீண்டும் குறுக்கிட்டார். அந்தப் பாம்புகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நீ துறவறம் பூண்டுவிடு என்று அவர் உத்தரவிட்டார்.

தன்னை பஹாய் ஒழித்துக் கட்டிவிடுவான் என்று தெரிந்து வெள்ளை நாக மங்கை பஹாயைத் தாக்க முடிவெடுத்தாள். நீருக்கடியே வாழும் உயிரினங்களைக் கொண்டு ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட வைத்து பொன் மலைக் கோயிலை மூழ்கடிக்கவும், பாஹாயுடன் போர் தொடுத்து அவனை ஒழிக்கவும் திட்டமிட்டாள். பாஹாய் தன்னுடைய மாய ஆற்றலைக் கொண்டு வானுலக வீரர்களை வரவழைத்து தன் கோயிலை தற்காத்துக் கொண்டான்.

வெள்ளை நாகப் பெண்ணுக்குப் பேறு காலம் நெருங்கியது. எனவே போரிடுவதிலிருந்து விலகிக்கொண்டாள். குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இதற்குத் தீர்வு காணலாம் என்று அமைதி கொண்டாள்.

அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது. ஹ்சுஷெங் தன் மகனைப் பார்க்கச் சென்றான். அப்பொழுது தன்னிடம் பாஹாய் தந்த ஒரு மந்திரத் தொப்பியைக் கொண்டு தன் மனைவி வெள்ளை நாகப் பெண்ணை அவன் சிறைப்பிடித்தான். பாஹாய் அந்த வெள்ளை நாகப் பெண்ணைத் தன்னுடைய கோயிலிலேச் சிறை செய்தான்.

பச்சை நாகப் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன்னுடைய மந்திர ஆற்றலைக் கொண்டு பஹாயிடமிருந்து தப்பிப்பதே போதும் போதும் என்றாயிற்று அவளுக்கு!

வெள்ளை நாகப் பெண்ணின் மகன் வளர்ந்தான். இப்பொழுதுதான் பச்சை நாகப் பெண் அவனுடன் சேர்ந்து தன் வெஞ்சினத்தைத் தீர்த்துக் கொண்டாள். பொன்மலைக் கோயிலைத் தரை மட்டமாக்கினாள். வெள்ளை நாகப் பெண்ணை விடுவித்தாள்.

வெள்ளை நாகப் பெண் தன் கணவனுடனும் மகனுடனும் ஒன்று சேர்ந்தாள். வெள்ளை நாகப் பெண்ணின் காதலையும்அன்பையும் அறிந்த ஹ்சுஷெங் மனம் மாறினான்.  மனைவியோடும் மகனோடும் மகிழ்ச்சியோடு சேர்ந்து வாழ்ந்தான்.

0

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: