ரகசியத்தைக் கூறிய பாம்புகள்

பஞ்ச தந்திரக் கதைகள் / 3.5

draw-snake-5விஷ்ணுவர்மன் என்ற மன்னனுக்கு திடீரென்று வயிற்றில் ஏதொவொரு நோய் உண்டானது. நாள் செல்லச் செல்ல அந்த நோய் மிகுதியாகி மன்னனது உடல் மெலிந்தது. அவர் தன் நோய் குணமாவதற்காக தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். அவ்வாறு அவர் செல்லும்போது வழியில் ஒரு கோயிலில் தங்க நேர்ந்தது.

அந்த ஊரில் பலி என்பவர் அரசாண்டு வந்தார். அவருக்கு இரண்டு மகள்கள். அவர்கள் இருவரும் தன்னுடைய தந்தையைப் பார்க்க வந்தனர்.
முதல் மகள் தன் தந்தையைப் பார்த்ததும் ‘வெற்றியடைவீர்!’ என்று வாழ்த்தினாள். இரண்டாவது மகள், ‘நன்றாக உணவு உண்பீர்!’என்று வாழ்த்தினாள்.

தன் இரண்டாவது மகளின் பேச்சு அவருக்குக் கோபத்தைத் தூண்டியது. உடனே அவர் தன் அமைச்சரை அழைத்து, ‘இவளை ஒரு நோயாளிக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

அமைச்சர், அரசரின் இரண்டாவது மகளை அந்த ஊரில் உள்ள கோவிலில் தங்கியிருந்த நோயாளியான மன்னர் விஷ்ணுவர்மனுக்குக் கொடுத்துவிட்டார்.

அவள் தன் கணவனை நன்றாகக் கவனித்துக்கொண்டாள். அவருடன் வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டாள். அங்கு தன் கணவருக்கு வேண்டிய உணவுகளைச் சமைப்பதற்காகத் தன் பணியாளரை அழைத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றாள். அவள் கணவன் விஷ்ணுவர்மன் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஒரு புற்றிலிருந்த பாம்பு அந்த நோயாளி மன்னனின் வயிற்றில் இருந்த பாம்பிடம் பேசியது. மன்னனின் வயிற்றுக்குள் இருந்த பாம்பு புற்றிலிருந்த பாம்பின் பேச்சுச் சப்தத்தைக் கேட்டு தானும் பதிலுரைத்தது. இதனால் அந்த இரண்டு பாம்புகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் கடைவீதிக்குச் சென்றிருந்த மனைவி வந்துவிட்டாள். இந்த இரண்டு பாம்புகளும் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தாள். அவள் ஒரு மரத்தின் மறைவில் ஒளிந்துகொண்டு அப் பாம்புகளின் பேச்சினைக் கூர்ந்து கேட்டாள்.

புற்றுப்பாம்பு, ‘அட தீயவனே! நீ ஏன் இந்த அழகிய மன்னரின் வயிற்றுக்குள் இருந்து, அவரைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்றது.

அதற்கு மன்னரின் வயிற்றுக்குள்ளிருந்த பாம்பு, ‘நான் உணவு நிறைந்த குடத்தில் நிம்மதியாக இருப்பது உனக்குப் பொறாமையாக உள்ளதா?’ என்று கேட்டது.

‘அட தீயவனே! அந்த மன்னர் கடுகினை உண்டால் நீ இறந்துவிடுவாயே! பின்னர் அவர் நிம்மதியாக வாழ்வார். இந்த விஷயம் அவருக்குத் தெரியாதவரையில்தான் நீ அவரது வயிற்றில் சுகமாக வாழமுடியும்’ என்றது புற்றுப்பாம்பு.

‘அட நீ மட்டும் என்ன நெடுங்காலம் வாழ்ந்துவிடுவாயா? யாராவது உன் புற்றுக்குள் வெந்நீரை ஊற்றிவிட்டால் நீ இறந்துவிடுவாயே’ என்றது அந்தப் பாம்பு.

இந்த ரகசியத்தை அறிந்துகொண்ட அந்த மனைவி, தன் கணவரிடம் கடுகைக் கொடுத்து உண்ணச்செய்தாள். அடுப்பில் வெந்நீர் வைத்து அதனை அந்தப் புற்றில் ஊற்றினாள். இரண்டு பாம்புகளும் இறந்துவிட்டன. மன்னர் விஷ்ணுவர்மனின் நோய் குணமடைந்தது. அவர் பழைய உடலைப் பெற்றார்.

ஆரோக்கியமடைந்த கணவருடன் சந்தோஷமாக அவள் தன்னுடைய நாட்டிற்குச் சென்றாள். அவர்களை அனைவரும் வாழ்த்தினர்.

‘ஆகையால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் ரகசியங்களைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் இந்தப் பாம்புகளைப் போல இருவருக்குமே துன்பம் வரும். ஆதலால், நாமும் இந்த சிரஞ்சீவியும் ஒருவருக்கொருவர் தங்களின் ரகசியங்களைக் காப்பாற்றுவது நன்மையைத் தரும் என்றது’ கொள்ளிக்கண்ணன்.

ஆந்தை ராஜா தன்னுடைய மந்திரி குரூரநாசனைப் பார்த்து, ‘தாங்கள் ஏதேனும் ஆலோசனை கூற விரும்புகிறீர்களா’ என்று கேட்டது.

‘ராஜா! மந்திரிமார்கள் கூறுவது அனைத்தும் சரியன்று. ராஜன் தண்டத்தை மட்டுமே கைக்கொள்ளவேண்டும். வலிமையுடையவர்கள் தங்களின் பகைவர்களைச் சண்டைசெய்தே வெல்வார்கள். தந்திரம் செய்து வெல்பவரை யாரும் வலியவர் என்று ஏற்றுக்கொள்வதில்லை. தன் வலிமையைக் காட்டாவிட்டால் எதிர்ப்படும் விளைவுகளை ஏற்கவேண்டிவரும். தண்டத்தால் பகைவர்களை அவமானப்படுத்தி வெல்பவர்களையே லட்சுமிதேவி விரும்புகிறாள். பலமுடையவன் தன் பகைவர்களைப் போரிட்டுத்தான் வெல்லவேண்டும்’ என்றது குரூரநாசன்.

ஆந்தை ராஜா தன்னுடைய மந்திரி பிரகாரநாசனைப் பார்த்து, ‘தாங்களுடைய ஆலோசனை என்ன?’ என்று கேட்டது.

‘ராஜா! சிரஞ்சீவி தங்களிடம் அடைக்கலமாக வந்துள்ளான். முற்காலத்தில் ராமன் எப்படி தன்னைத் தஞ்சம் அடைந்த விபீஷணனைத் தலைவனாக்கி ராவணாதிகளை அழித்தாரோ, அப்படியே நாம் நம்முடைய பகைவர்களையும் அழிக்கவேண்டும். அடைக்கலமாக வந்தவனைக் கொல்வது சரியல்ல. அவ்வாறு கொன்றால் நமக்கு நரகமே கிடைக்கும். வேடனிடம் அகப்பட்டிருந்த ஒரு புறாவினை விடுவிப்பதற்காக சிபிச்சக்கரவர்த்தி தன் உடல் மாமிசத்தை வேடனுக்குக் கொடுத்து அந்தப் புறாவினை மீட்டதாக மகாபாரதம் கூறியுள்ளது. தன்னிடம் அடைக்கலமாக வந்தவனைக் காக்கும்பொருட்டு நெருப்பில் குதித்தவனைப் போல…’ என்று உதாரணம் கூறிய பிரகாரநாசனை இடைமறித்து, ‘அது எப்படி நடந்தது?’ என்று கேட்டது அரிமர்த்தனன். அதற்கு அந்தக் கதையினைக் கூறியது பிரகாரநாசன்.

3.6. தியாகப் புறாக்கள்

ஒரு பெரும் காடு. அங்கு உள்ள ஒரு மரத்தில் ஓர் ஆண் புறாவும் ஒரு பெண்புறாவும் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. அவை ஒன்றையொன்று மிகவும் நேசித்தன. அந்தக் காட்டில் ஒரு வேடன் தடியும் வில்லும் அம்பும் கூண்டும் வலையும் கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்தான்.

ஒருநாள் அந்த வேடன் அந்தக் காட்டில் ஒரு பெண் புறாவினைப் பிடித்துத் தன் கூண்டில் அடைத்துக் கொண்டு, வேறு ஏதேனும் பறவைகள் சிக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டே காட்டினைச் சுற்றிவந்தான். அப்போது அடைமழை பொழியத் தொடங்கியது.

மரத்திலிருந்த ஆண் புறா, தன் பெண்புறாவைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தது. ‘இந்த மழையில் எங்குள்ளதோ? அதற்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டதோ?’ என்று நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தது.

மழையோடு சேர்ந்து புயற்காற்றும் வீசத் தொடங்கியது. வேடன் மிகவும் பயந்துவிட்டான். அவன் தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டான். பின்னர் ஒரு மரத்தினடியில் சென்று ஒதுங்கிநின்றான்.

அந்த மரத்தின் மீது இருந்த அந்த ஆண் புறா, ‘என் இணையான பெண் புறா இல்லாமல் இந்தக் கூடே வெறுமையாக உள்ளதே! எனக்கு இந்தக் காடே நரகமாகத் தோன்றுகிறது. இந்தப் புயலில், மழையில் என் இணைப்புறா எப்படி இருக்கிறதோ?’ என்று புலம்பி மனம் கலங்கியது.

வேடனின் கூண்டில் இருந்த பெண்புறா தன் கணவரின் புலம்பலைக் கேட்டு வருந்தியது. ‘முற்பிறப்பில் தீங்கு செய்தவர்களுக்கே இந்தப் பிறப்பில் மிகுதியான துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. எச் சமயத்தில் எது ஏற்படவேண்டுமோ அது தவறாமல் ஏற்பட்டு விடுகிறது’ என்றுத் தனக்குள் பேசிக்கொண்டது.

வேடனின் கூண்டுக்குள் இருந்த பெண் புறா நிமிர்ந்து அந்த மரத்தின் மீதிருந்த தன் இணையான ஆண் புறாவைப் பார்த்து, ‘நம் மரத்தினடியில் நின்றிருக்கும் இந்த வேடன் நமக்கு விருந்தாளிதான். அவனுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்காமல் இருந்தால், அவர் தன் பாவத்தை அந்த வீட்டாருக்குக் கொடுத்துவிட்டு, வீட்டாரின் புண்ணியத்தை எடுத்துக்கொண்டு செல்வார். ஆதலால், உங்களால் இயன்ற அளவு அவருக்கு வேண்டியதனைச் செய்துகொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டது.

ஆண்புறா தன் இணையான பெண்புறாவைப் பிடித்த அந்த வேடன் மீது கோபங்கொள்ளாமல், தன் இணைப்புறா கூறியவாறே அவனுக்கு நன்மை செய்ய நினைத்தது. அது, அவனை வணங்கி வரவேற்றது. வேடன் மகிழ்ந்தான்.

‘உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யவேண்டுமா?’ என்று ஆண்புறா கேட்டது.

‘எனக்கு மிகவும் குளிர்கிறது. அதனை உன்னால் போக்க முடியுமா?’ என்று கேட்டான்.

உடனே, ஆண்புறா தன் கூட்டிலிருந்து உலர்ந்த சுள்ளிகளை எடுத்துக் கொடுத்தது. வேடன் அவற்றைக் கொண்டு நெருப்பினை மூட்டிக் குளிர்காய்ந்தான்.

‘வேறு ஏதாவது உதவி வேண்டுமா?’ என்றது ஆண்புறா.

‘எனக்கு மிகவும் பசிக்கிறது’ என்றான்.

‘என் கூட்டில் உங்களுக்குத் தரத் தகுந்த உணவு ஏதும் இல்லை. ஆதலால், நான் என் உடலையே உங்களுக்கு உணவாகத் தருகிறேன்’ என்று கூறிய அந்த ஆண்புறா அந்த நெருப்பில் விழுந்து இறந்தது.

அதனைக் கண்ட வேடன், ‘என் பசியைப் போக்க இந்தப் புறா தன்னுயிரையே தியாகம் செய்துவிட்டதே!’ என்று வருந்தினான்.

‘நானோ தீய ஒழுக்கமுள்ளவன். பிற உயிர்களைக்கொன்று உயிர்வாழ்பவன். இரக்கம், உதவி போன்ற எவற்றையும் அறியாதவன். இன்றுமுதல் நான் இரக்கமுள்ளவனாக நல்லவனாக வாழ விரும்புகிறேன்’ என்று நினைத்துத் தன்னுடைய தடி, வில், அம்பு முதலியவற்றை முறித்துப்போட்டான். தன் வலையினைத் தூர வீசிவிட்டான். தன் கூண்டிலிருந்த அந்தப் பெண் புறாவுக்கு விடுதலை அளித்தான்.

அந்தக் கூண்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண் புறா, ‘தருமத்திற்காக என் இணையான ஆண்புறா உயிர்த்தியாகம் செய்துவிட்டது. அது இல்லாத இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை’ என்று கூறி அதுவும் அந்த நெருப்பில் விழுந்து இறந்தது.

அடடா! நாம் எவ்வளவு பெரிய தவறினைச் செய்துவிட்டோம். நம் தவறால் இன்று ஒரு புறா தம்பதிகளை நெருப்பிலிட்ட பாவத்திற்கு ஆளாகிவிட்டோமே’ என்று கலங்கிய வேடன், தானும் அந்த நெருப்பில் விழுந்து மாண்டான்.

‘ஆதலால், தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை நாம் எப்பொழுதும் காக்க வேண்டும்’ என்றது மந்திரி பிரகாரநாசன்.

அரிமர்த்தனன், ‘ராஜா! எனக்கும் அதே எண்ணமே உள்ளது. சிரஞ்சீவி உண்மையைப் பேசுபவனாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறான். காகராஜா இவனை மிகவும் துன்பப்படுத்தியுள்ளார். ஆதலால், நாம் இவனைக் கொல்வது சரியன்று. நம்மை அடைக்கலமாக வந்துள்ளான். இவனைக் காப்பது நம் கடமை’ என்றது.

ஆந்தை ராஜா, சிரஞ்சீவியிடம், ‘நீ எங்களுடன் வந்துவிடு. எங்களின் கோட்டையில் தங்கியிரு. நாங்கள் உன்னைப் பாதுகாப்போம்’ என்று கூறினார்.

மகிழ்ச்சியடைந்த சிரஞ்சீவி, ராஜா! நான் தங்களுடன் பழகுவதிலிருந்து என் குடிப் பிறப்பைப் பற்றித் தாங்கள் அறிந்துகொள்வீர்கள்!’ என்றது.

அதற்கு மந்திரி குரூரநாசன், ‘ஆந்தையின் குலமெல்லாம் ராஜாவின் குற்றத்தால் பாழாகும். பிறர் குற்றங்களை ராஜாவுக்கு அறிவிக்கவேண்டும். ராஜா அவற்றைக் கேட்காவிட்டால் அதற்கு என்ன பயன் இருக்கிறது?’ என்று கூறியது. மந்திரியின் பேச்சைக் கேட்காத ஆந்தை ராஜா சிரஞ்சீவியைத் தன்னுடன் அழைத்துச்சென்றார்.

சிரஞ்சீவி தன் மனத்திற்குள், ‘நம்மைக் கொல்லவேண்டும் என்று கூறியவன் இவர்களில் எல்லோரையும் விட புத்திசாலி. அவனை அழித்துவிட்டால் மற்றவர்களை வெல்வது எளிது. காரணம் மற்றவர்கள் அவர்களின் ராஜனைப்போலவே மூடர்கள்’ என்று நினைத்தது.

அரிமர்த்தனன் பணியாளர்களை அழைத்து, ‘சிரஞ்சீவிக்கு நம் அரண்மனையினைச் சுற்றிக்காட்டுங்கள்’ என்றது. அவர்கள் அவ்வாறே செய்தனர்.

சிரஞ்சீவி தன் மனத்திற்குள், ‘நாம் இவ்வாறு இங்கே இருந்தால் நாம் எப்படி வஞ்சகமாகச் செய்படுவது. எப்படியாவது ராஜாவின் அன்பினைப் பெற்று இந்தக் குகையின் தலைமைக் காவலனாக வேண்டும். பின்னர் நம் திட்டத்தினை எளிதில் செயல்படுத்திவிடலாம்’ என்று நினைத்தது.

ஆந்தை ராஜாவைச் சந்தித்த சிரஞ்சீவி, ‘ராஜா! நான் ஏன் இந்தக் குகையில் முடங்கிக்கிடக்கவேண்டும்? எனக்கு ஏதாவது காவல் பணியினைத் தாங்கள் கொடுத்தால், விசுவாசத்துடன் அதனைச்செய்துகொண்டு என் காலத்தை முடித்துக்கொள்வேன். எனக்குக் குகையின் காவல் பணியினைக் கொடுங்களேன்! விசுவாசமானவன் குகைக்கு உள்ளிருந்தால் என்ன, குகைக்கு வெளியில் இருந்தால் என்ன?’ என்றது.

அப்போது குறுக்கிட்ட குரூரநாசன், ‘ராஜா! தாங்களும் மற்ற மந்திரிகளும் மூர்க்கர்களாக இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ‘முதல் மூடன் நான். இரண்டாவது மூடன் வேடன், மூன்றாவது மூடன் அரசன், நான்காவது மூடர்கள் மந்திரி’ என்று கூறிவிட்டுச் சென்ற அதிசயப் பறவை பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டது.

ஆந்தை ராஜா, ‘தெரியாது. பறவை ஏன் அவ்வாறு கூறியது?’ என்று கேட்டதற்கு, குரூரநாசன் அந்தக் கதையினைக் கூறத்தொடங்கியது.

3.7. நான்குவிதமான முட்டாள்கள்

ஒரு மலைக்காட்டில் எண்ணற்ற வகையான பறவைகள் வாழ்ந்துவந்தன. ஒரு மரத்தில் மட்டும் ஓர் அதிசயப் பறவை வாழ்ந்துவந்தது. அந்தப் பறவை தங்கத்தையே எச்சமாக (கழிவு) இடக்கூடியது.

அந்தக் காட்டில் சுற்றித் திரிந்த ஒரு வேடன் ஒரு மரத்தினடியில் தங்கம் சிதறிக் கிடப்பதனைப் பார்த்தான். பிறகுதான் புரிந்து கொண்டான், இது ஒரு பறவையின் எச்சம் என்று. தங்கத்தையே எச்சமாக இடக்கூடிய அந்தப் பறவை ஓர் அதிசயப் பறவைதான் என்று உணர்ந்த அந்த வேடன், அப் பறவையை உயிருடன் பிடிக்க விரும்பினான்.

அந்த மரத்தினடியில் ஒரு வலையினை விரித்தான். அவன் விரித்த வலையில் அந்த அதிசயப் பறவை அகப்பட்டது. அதனைக் கவனமாகப் பிடித்துச்சென்றான் அந்த வேடன்.

‘இப்படி ஓர் அதிசயப் பறவையினை வீட்டிற்குக் கொண்டுசென்றால், எப்படியும் இந்த விஷயம் நம் ராஜாவுக்குத் தெரிந்துவிடும். அதன்பின் இந்த விஷயத்தை நான் அவரிடமிருந்து மறைத்துவிட்டதாக நினைத்து, அவர் என்னைத் தண்டித்துவிடுவாரே!’ என்று நினைத்த வேடன், அந்தப் பறவையைத் தன் வீட்டிற்குக் கொண்டுசெல்லாமல் ராஜாவின் அரண்மனைக்குக் கொண்டுசென்றான்.

ராஜாவைச் சந்தித்த அந்த வேடன், அந்தப் பறவையை ஒப்படைத்தான். அந்தப் பறவை அதிசயப் பறவை என்று கூறினான். அது தங்கத்தை எச்சமாக இடும் என்று அந்த வேடன் கூறியதும், ராஜா பெரிதும் மகிழ்ந்தார். அவர் அந்தப் பறவைக்காகவே விலைமதிப்புள்ள ஒரு கூண்டினைச் செய்து, அதில் அந்த அதிசயப் பறவையை அடைத்துவைத்தார்.

ராஜா இவ்வாறு செய்ததை அறிந்த மந்திரி ராஜாவைச் சந்தித்தார். ‘ராஜா! அந்த வேடன் ஏதேதோ கூறி உங்களை ஏமாற்றிவிட்டான். எந்தப் பறவையும் தங்கத்தை எச்சமாக இடாது. நீங்கள் ஏமாறவேண்டாம். அந்தப் பறவையை விட்டுவிடுங்கள்’ என்று மந்திரி கூறினார்.

மந்திரி கூறுவதில் உண்மையிருக்குமோ என்று நினைத்த ராஜா, அந்தக் கூண்டினைத் திறந்துவிட்டார். உடனே, அந்த அதிசயப் பறவை பறந்துசென்றது.

பின்னர் அது அரண்மனையின் உச்சிமாடத்தில் அமர்ந்துகொண்டு, ‘ஒரே மரத்தில் தங்கியிருந்த நான் முதல் மூடன். என்னைப் பிடித்துத் தானே வைத்துக்கொள்ளாமல் ராஜாவிடம் ஒப்படைத்த அந்த வேடன் இரண்டாவது மூடன். என்னுடைய அதிசயத் தன்மையைத் தன் கண்ணால் பார்க்காத இந்த ராஜா மூன்றாவது மூடன். வேடனும் ராஜாவும் முட்டாள்கள் என்றும் தான் மட்டுமே அறிவாளி என்றும் தவறாக நினைத்துச் செயல்பட்ட அந்த மந்திரி நான்காவது மூடன்’ என்று கூறிவிட்டுத் தன்னுடைய மலைக்காட்டை நோக்கிச் செல்லாமல், வேறு ஒரு காட்டினைத் தேடிப் புறப்பட்டது.

இவ்வாறு அதிசயப் பறவை பற்றிக் கூறிய குரூரநாசன், நரி ஒன்று குகையைப் பார்த்துக் கூப்பிட்டு நன்மையடைந்ததைப் போல ஒரு சிக்கல் வருவதற்கு முன்னரே அதனை உய்த்துணர்ந்து அதனைத் தீர்த்துக்கொள்ள ஆலோசிப்பவன் நன்மையையே அடைவான்!’ என்றது.

மந்திரிமார்கள், ‘நரி ஏன் குகையைப் பார்த்துக் கூப்பிட்டது?’ என்று கேட்டவுடன், அவர்களுக்கு குரூரநாசன் அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

(தொடரும்)

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: