இந்திய தேசியவாதம் : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 6

RBதேசியவாதம் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ள எரிக் ஹாப்ஸ்பாம், இது ஒரு நவீன கருத்தாக்கம் என்றும் ஐரோப்பாவே அதன் பிறப்பிடம் என்றும் குறிப்பிடுகிறார். 18ம் நூற்றாண்டு முடிவில் குறிப்பாக, 1789 மற்றும் 1848 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் இந்தக் கருத்தாக்கம் உதயமானது என்கிறார் ஹாப்ஸ்பாம். அறிவொளி தத்துவங்களால் உந்தப்பட்டு 1789ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி அரசியல் மற்றும் சிந்தாந்தத் தளங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஜனநாயகம், தேசியவாதம், லிபரலிசம் ஆகிய சிந்தனைகள் அரும்பி, பரவவும் தொடங்கின. மற்றொரு பக்கம் தொழில்புரட்சியின் விளைவாக நவீன தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை வளர்ச்சிபெற்றன. இரட்டைப் புரட்சி என்று இதனை அழைக்கிறார் ஹாப்ஸ்பாம்.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ஐரோப்பாவின் ஆதார சக்தியாக தேசியவாதம் மாறிப்போனது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் தங்களுக்கிடையில் உள்ள கலாசார, மொழி ஒற்றுமையை அங்கீகரித்து ஒரே தேசமாக அணிதிரளத் தொடங்கினர். தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை ஐரோப்பா உணரத் தொடங்கியது. சொந்த நாட்டின்மீதான பற்று மக்களை ஒன்றிணைத்தது நல்ல அம்சம்தான். ஆனால் இதே தேசியவாதம் காலனியாதிக்கத்தையும் ஐரோப்பாவையும் தோற்றுவித்தது. இதற்கும் நாட்டுப்பற்றே ஆதாரமான சக்தியாகஇருந்தது.

ஐரோப்பிய தேசியவாதத்துக்கும் இந்திய தேசியவாதத்துக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன என்கிறார் பிபன் சந்திரா. நிலப்பிரபுத்துவம் உடைந்து முதலாளித்துவம் தோன்றும்போது ஐரோப்பாவில் தேசங்கள் உருவாயின. அல்லது, நவீன தொழில்மயமாக்கலோடு இணைந்து உருவாயின. அந்த வகையில் ஐரோப்பிய தேசியவாதம் என்பது ஒரு பூர்ஷ்வா கருத்தியலாக இருந்தது. பல சமயங்களில் முடியாட்சியின் ஆதரவும் அதற்குக் கிடைத்தது. ஐரோப்பிய தேசியவாதம் இனம் சார்ந்ததாக இருந்தது. மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் ஒன்றுதிரண்டனர். அல்லது, 19ம் நூற்றாண்டில் நடந்ததைப்போல் பாசிசம், நாசிசம் என்னும் தேசவெறி கொள்கையாக உரு திரியலாம். ஜெர்மனியும் ஜப்பானும் இத்தாலியும் தேசியவாதத்தின் கோர வடிவங்களை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவிலும் பிற காலனிகளிலும் (அரை காலனிகளிலும்) தேசியவாதம் காலனியாதிக்க எதிர்ப்பாக வெளிப்பட்டது. சீனாவில் நடந்ததும் இதுதான். ஜப்பானில் முதலில் காலனி எதிர்ப்பாகத் தொடங்கி பிறகு ஜிங்கோயிசமாக மாறிப்போனது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும்இடையிலான ஒரு வேறுபாட்டை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். இந்திய மக்கள் ஒரு தேசமாகத் திரண்டபோது இந்திய தேசம் என்று அந்த வரலாற்று நிகழ்வை அழைத்தனர். சீனர்கள் தேசம் என்னும் பதத்தைப் பயன்படுத்தவில்லை; தங்கள் தேச உணர்வை சீன மக்கள் என்னும் பதத்தில் வெளிப்படுத்தினார்கள். இந்தியாவுக்கு இந்த உணர்வு ஏற்பட்டது தேசியவாதம் 19ம் நூற்றாண்டின் விளைவு என்பதால் அந்தக் காலகட்டத்துப் பெயரான தேசியம் என்பதை அது இணைத்துக்கொண்டது.

இந்திய தேசியம் பற்றி நிலவிவரும் இரண்டு சிந்தனைப் போக்குகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டி இரண்டையும் மறுதலிக்கிறார். முதல் பிரிவினர் இந்தியா என்றொரு தேசம் 19ம் நூற்றாண்டில் உருவாகவில்லை என்றும் இனி அது சாத்தியமும் இல்லை என்றும் வாதிட்டனர். இவர்களைப் பொருத்தவரை படித்த, மேல்தட்ட வர்க்கத்தினரின் நலன்களே இந்திய தேசியமாக முன்மொழியப்பட்டது. பிரிட்டிஷ் வர்த்தக நலன்களுக்கு எதிராகத் தங்கள் நலன்களை முன்னிறுத்தி இவர்கள் மேற்கொண்ட போராட்டமே தேசியவாதப் போராட்டமாக அறியப்படுகிறது. இரண்டாவது பிரிவினர் இந்திய தேசியம் என்பது 19ம் நூற்றாண்டு சிந்தனை அல்ல; இந்திய நாகரிகம் எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது இந்திய தேசியமும் என்று நிறுவ முயல்கின்றனர்.

இந்திய தேசியம் என்பது ஐரோப்பிய தேசியம் அல்ல. அது மேல்தட்டுப் பிரிவனரின் முழக்கமும் அல்ல. வேத காலத்திலேயே தோன்றிவிட்ட ஓர் உணர்வும் அல்ல. ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே ரத்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தேசியம் உருவாகவில்லை. நவீன தொழில்மயமாக்கல், முதலாளித்துவத்தின் தோற்றம் ஆகியவற்றோடு இந்திய தேசியத்தின் தோற்றத்தைத் தொடர்புபடுத்தமுடியாது. இந்திய தேசம், இந்திய தேசியவாதம் ஆகியவை காலனியாதிக்கத்தின் தாக்கத்தால் நேரடியாக எழுச்சிபெற்றன. சுதந்தரத்துக்காக நடத்தப்பட்ட காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து தேசியவாதம் கிளர்ந்தெழுந்தது.

இந்திய தேசம், தேசியவாதம் இரண்டுமே வரலாற்றின் விளைவுகள் என்கிறார் பிபன் சந்திரா. இந்திய மக்களின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சிந்தாந்த வளர்ச்சியை ஆராய்வதன்மூலம் இந்திய தேசியத்தின் பரிணாம வளர்ச்சியை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். 19ம் நூற்றாண்டு தொடங்கி இந்தியாவில் அகநிலையிலும் புறநிலையிலும் தேசக் கட்டுமானம் தொடங்கிவிட்டது. பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார சக்திகள் ஒன்றிணைந்து, ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து இந்திய மக்களிடையே ஒற்றுமை உணர்வை உண்டாக்கியது. தங்களுடைய நலன்கள் ஒன்றுபட்டிருந்ததையும் காலனிய ஆக்கிரமிப்பை எதிர்க்கவேண்டி அனைவரும் ஒன்றிணையவேண்டிருந்ததையும் இந்தியர்கள் உணர்ந்திருந்தனர் என்கிறார் பிபன் சந்திரா. இந்திய தேசியவாதம் அல்ல, காலனியாதிக்கமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தியது. காலனியாதிக்கமே அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. காலனியாதிக்கத்துக்கும் இந்தியர்களின் நலன்களுக்கும் இடையில் தீர்க்கமுடியாத முரண்பாடு ஏற்பட்டபோது அந்த எதிர்ப்புணர்வு தேசியவாதமாக மாறியது.

இந்திய மக்கள் காலனியாதிக்கத்துக்கு எதிராகத் திரண்டது உண்மை என்றால் அவர்களுடைய தேசியவாதமும் உண்மைதான் என்கிறார் பிபன் சந்திரா. காலனியாதிக்கத்துடனான முரண்பாடு சாதி, வர்க்கம், பிரதேசம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்துசென்ற காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டம்இந்தியா எங்கும் பரவிப் படர்ந்தது. அனைவருக்கும் ஒரு பொது எதிரி இருந்ததால் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு பொதுவானது என்னும் ஒரு காரணமே போதும்; அதனை எதிர்க்கவேண்டும் என்னும் விருப்பம் பிறந்துவிடும் என்று நேருவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாதத்தை அழுத்தமாக நிறுவ, பிபன் சந்திரா ஒரு கற்பனை ஒப்பீட்டை நிகழ்த்துகிறார். ஒருவேளை இந்தியா முழுமையாக ஒரே காலனியாக பிரிட்டனால் ஆளப்படாமல் வெவ்வேறு காலனிய சக்திகளால் தனித்தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தனித்தனியே அல்லவா எதிர்ப்புச் சக்திகள் பிரதேச வாரியாகத் தோன்றியிருக்கும்? விடுதலைப் போராட்ட உணர்வும் தேசியவாத உணர்வும் சிதறடிக்கப்பட்டிருக்கும் அல்லவா? பொது எதிரி இல்லாததால் பொது எதிர்ப்புணர்வும் இல்லாமல் போகியிருக்கும் அல்லவா? இந்தியா என்றொரு தேசம் உருவாகாமல் போகியிருக்கவே வாய்ப்புகள் அதிகம், இல்லையா?
லத்தின் அமெரிக்காவை உதாரணத்துக்குக் கொண்டு வருகிறார் பிபன் சந்திரா.

ஸ்பெயின் லத்தின் அமெரிக்காவைக் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. ஆனால் மேலே குறிப்பிட்டதைப் போல் தனித்தனி காலனிகளாக உடைத்து லத்தின் அமெரிக்காவை ஆட்சி செய்தது. அதனால் ஒரே மொழி பேசும் மக்கள் இருந்தும், ஒரே மதத்தை அவர்கள் கடைபிடித்தபோதும், ஒரே கலாசாரத்தைப் பின்பற்றியபோதும் லத்தின் அமெரிக்கா என்றொரு தேசமோ லத்தின் அமெரிக்க தேசியவாதம் என்றொரு உணர்வோ அங்கே உருவாகவில்லை. எதிர்ப்புகள் சிதறிப்போனது. தனித்தனியே தேசியப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தனித்தனியே விடுதலைக்கான பாதைகள் ஆராயப்பட்டன. மக்கள் தனித்தனியே தங்களுக்குள் திரண்டனர். இந்தியாவில் அப்படி நேராமல் போனதற்குக் காரணம் ஒரே காலனியாக அதனை பிரிட்டன் பாவித்ததுதான்.

இந்தியாவைப்போலவே இந்தோனேஷியாவும் நீண்டகாலம் ஒரே அந்நிய ஆதிக்கத்தின் கீழ் (டச்சு) இருந்ததால் அங்கும் தேசிய விடுதலைப் போராட்டம் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டமாக மலர்ந்து மக்களை ஒன்றுதிரட்டியது. இந்தோனேஷியா என்னும் தேசம் ஒன்றும் உருவானது. ஆனால் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து இந்தோ சீனா ஒரே தேசியமாகத் திரளவில்லை. வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்னும் மூன்று பிரதேசங்கள் தனித்தனியே தங்கள் காலனிய எதிர்ப்பை முன்வைத்துப் போராடி மூன்று நாடுகளைத் தோற்றுவித்தன. விடுதலைக்குப் பிறகு இந்த மூன்றும் ஒன்றையொன்று எதிர்க்கத் தொடங்கியதும் வரலாறே. சோவியத் யூனியனில் ஜார் ஆட்சிக்கு எதிரான போராட்டம் எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுபோல் இருக்கவில்லை. ஜார் ரஷ்யா பல்வேறு தேசியங்களின் சிறைச்சாலையாக இருந்து என்று லெனின் சுட்டிக்காட்டியிருந்ததை அலசும் பிபன் சந்திரா, சோவியத் யூனியன் பின்னாள்களில் சிதறிப்போனதற்கு ஒன்றுபட்ட தேசிய உணர்வு ஏற்படாததே ஒரு காரணம் என்கிறார். தேசிய உணர்வு, போராட்டத்தைத் தூண்டிவிடுகிறது. போராட்டம், மக்களிடையே புரிதல் உணர்வை உண்டாக்குகிறது. இந்த இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை; இந்த இரண்டுக்கும் இடையில் இயங்கியல் உறவு உள்ளது என்கிறார் பிபன் சந்திரா.

பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஒரே அரசியல் மற்றும் நிர்வாகமுறையின்கீழ் கொண்டுவந்தது. ஆட்சிசெய்வதற்கு வசதியாக இருந்த இந்த ஏற்பாடு வெவ்வேறு பிரதேசங்களில் வசித்த மக்களை ஒரே பக்கத்தில் திரட்டவும் உதவியது. கிராமப்புறங்கள், மூலை முடுக்குகள், நகரங்கள் எதுவும் இதிலிருந்து தப்பவில்லை. நவீன போக்குவரத்து வசதியும் புதிய சாலைகளும் மோட்டார் வாகன வசதிகளும் புவியியல் ரீதியாக சிதறிக்கிடந்த மக்களை ஒன்றுபடுத்தியது. நவீன தொழிற்சாலைகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தின. பெரும்பாலான இந்த நடுத்தர ஆலைகள் பிரதேச எல்லைகளைக் கடந்து அனைத்திந்திய அளவில் இயங்கின. புதிய சமூக வர்க்கங்கள் உருவாயின. முதலாளிகள், தொழிலாளர்கள் இருவருமே அனைத்திந்திய தன்மை கொண்டிருந்தனர் என்கிறார் பிபன் சந்திரா. அனைத்திந்திய தொழிற்சங்கம் (ஏஐடியுசி), ஃபெட்ரேஷன் ஆஃப் இந்தியன் சாம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (எஃப்ஐசிசிஐ) இரண்டுமே 1920களில் நிறுவப்பட்டன. இந்த இரண்டுமே இந்தியா தழுவிய அளவில் இயங்கியதோடு தேசியவாதத்தன்மையும் கொண்டிருந்தன. மதம், பிரதேசம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்தும் செயல்பட்டன. இன்னும் சொல்லப்போனால் இந்த இரண்டும் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிபிம்பகளாக இருந்தன என்கிறார் பிபன் சந்திரா.

இந்திய தேசிய உணர்வை ஊட்டியதில் அறிவுஜீவிகளின் பங்களிப்பையும் பிபன் சந்திரா பதிவு செய்துள்ளார். தொடக்கத்தில் ஆடம் ஸ்மித், ஜெரமி பெந்தம், ஜான் ஸ்டூவர்ட் மில் போல் காலனியாதிக்கம் வளர்ச்சியையே கொண்டுவரும் என்று படித்த, இந்திய அறிவுஜீவிகள் முதலில் நம்பினாலும் பின்னாள்களில் தங்கள் எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர் என்கிறார் இவர். சமூக யதார்த்தத்தைக் கண்டதும் 1870களில் இந்த மனமாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அறிவுஜீவிகள் காலனியாதிக்கக் கொள்கைகளை மக்களிடையே அம்பலப்படுத்தி விமரிசிக்கத் தொடங்கினர். அப்போது இவர்கள் தேசியவாத அறிவுஜீவிகளாக மாற்றம் கண்டனர். மக்களின் சிந்தனைகளை இவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். தேசத்தின் பிரதிநிதிகளாக அறிவுஜீவிகள் தங்களை உணர்ந்த தருணமும் இதுவே. அதாவது, தேசம் என்றொன்று உருவாவதற்கு முன்பே அதனை இவர்கள் உருவகப்படுத்திக்கொண்டு அதன் அடிப்படையில் சிந்திக்கவும் மக்களை ஒன்றுதிரட்டவும் தொடங்கினர்.

எங்கள் மொழியில் நேஷன் என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒரு பதமே இல்லை என்று 1916ம் ஆண்டு பிபின் சந்திர பால் எழுதினார். இந்தி மொழியில் உள்ள தேஸ், பர்தேஸ் ஆகிய வார்த்தைகள்கூட அருகில் உள்ள பிரதேசங்களையே குறித்தன. தனியொரு தேசத்தை அல்ல. 1866ம் ஆண்டு நேடிவ் ஒப்பீனியன் என்னும் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது. தற்போதுள்ள நிலையில் மராத்தியர்கள், குஜராத்திகள், பெங்காலிகள் என்று பலரும் தங்களைத் தனித்தனி பிரிவினராகவே கருதுகின்றனர். ஒரு முழு தேசத்தின் பகுதிகளாக அல்ல. 19ம் நூற்றாண்டின் இறுதியில்கூட ஒரியாவில் இருந்தவர்கள் வங்காளர்களையும் பிகாரிகளையும் அயல்நாட்டவர்களாவே கண்டனர். 1926ம் ஆண்டு நேரு இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘இந்தியாவின் இலக்கியம், வரலாறு, மத ரீதியலான பாரம்பரியம் அனைத்தும் தொடக்க காலத்தில் இருந்தே இந்திய ஒற்றுமையைப் போதித்து வந்துள்ளன. ஆனால் அரசியல் ரீதியில் தேசம் என்றொரு கருத்தாக்கத்தை இவை உருவாக்கவில்லை.மேற்கிலேயே இது ஒரு சமீபத்திய வரவுதான்.’

இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை 1896ம் ஆண்டு விவேகானந்தர் இவ்வாறு மதிப்பிடுகிறார். ‘இது மிக முக்கியமான இயக்கம்; இதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறேன். வெவ்வேறான இனங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் இருந்து ஒரு தேசம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெவ்வேறு இனங்கள் ஐரேப்பாவில் உள்ள வெவ்வேறு விதமான மக்களையே நினைவுபடுத்துகிறார்கள்.’

1902ல் பிபின் சந்திர பால் இந்தியாவை புதிய இந்தியா என்றும் இந்தியர்களை புதிய மக்கள் என்றும் தொடர்ச்சியாக அழைத்தார். புதிய இந்திய தேசத்தில் இந்துக்கள், முகம்மதியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சமூகப் பரிணான வளர்ச்சியில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஆதிவாசிகள் அனைவரும் முக்கிய உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அவர் கனவு கண்டார். இந்தியா என்பது வெறும் புவியியல் பரப்பை மட்டும் குறிக்கவில்லை; தனித்துவமான ஒரு தேசமாக அது உருவாகிக்கொண்டிருக்கிறது என்று1908ம் ஆண்டு லாலா லஜபதி ராய் எழுதினார். ஒரு தேசமாக உருவாக என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணவேண்டியது அவசியம் என்று 1909ம் ஆண்டு அரவிந்த கோஷ் எழுதினார்.

இந்த மேற்கோள்கள் தெளிவாக உணர்த்தும் உண்மை இதுதான். பொதுவான வரலாறு, கலாசாரம், புவியியல் ஆகியவை இருந்தபோதும், இந்தியா என்றொரு தேசம் உருவாகியிருக்கவில்லை என்பதை இந்திய தேசியவாதிகள் உணர்ந்திருந்தனர். ஆனால் அந்தத் தேசிய கருத்தாக்கம் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளைப்போல் அவர்கள் நம்பவில்லை. வரலாற்றுச் சக்திகள் ஒன்றிணைந்துகொண்டிருக்கின்றன; நம் கண்முன்னால் இந்தியா ஒரு தேசமாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் நம்பினர். பிளவுகள், வேறுபாடுகள், குறைபாடுகள், சமமற்ற நிலை, குழப்பங்கள், இக்கட்டுகள் அனைத்தையும்மீறி ஒன்றுபட்ட ஒரு தேசம் பிறப்பெடுக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

0

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: