தீர்ப்பு அரசியல்

பாகம் 5

இந்தத் தீர்ப்பின் வெற்றியை ‘அடக்கி வாசிக்கவேண்டும்’ என்பதாக இந்துத்துவ சக்திகள் அறிவித்துக்கொண்டாலும், கொண்டாடுவது வெளிப்படையானது; அதற்கான காரணம் தீர்ப்பின் விளைவாக அவர்கள் பெற்றதைவிட, தீர்ப்பின் மூலம் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளும், இத்தனை காலச் செயல்பாடுகளும் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றிருப்பதுதான். கொண்டாடுவது இயல்பானது என்றாலும், இந்த வெற்றி எந்தப் பொறுப்புணர்வையும் அவர்களுக்கு தரவில்லை. இந்த இடத்தில் 1992 அத்துமீறலுக்கு பொதுவாகவும், குறைந்தபட்சம் அதனால் புண்பட்ட முஸ்லீம்களிடம் ஒரு வார்த்தைக்காகவாவது இந்துத்துவவாதிகள் மன்னிப்பைக் கேட்பது, இந்தப் பிரச்னையில் முஸ்லீம்கள் சமரசத்தை ஏற்கும் மனநிலைக்கு இட்டுச்செல்லும். ஆனால் திமிராக, 1992 செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அவர்கள் இதை எடுத்துக்கொள்கிறார்கள்.

தமிழ்ச் சூழலில் விவாதத்தை கிளப்ப வந்த, ‘இந்துத்துவ அறிவுஜீவி’யாகப் பலரால் முன்வைக்கப்படும் அரவிந்தன் நீலகண்டன், ‘இடித்ததில் தவறில்லை’ என்கிறார். அதற்கு, பல சால்ஜாப்பு வாதங்கள். இந்தக் கட்டுரையில் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பேசுபவர்களை முன்வைத்து, அவர்களின் அரசியல் சார்ந்த விமரிசனமாகவும் பரிந்துரைகளாகவும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளேன். இந்துத்துவாவுக்கு, பொறுப்பாக நடப்பது பற்றியும், சமரசத்தை நோக்கிச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் பரிந்துரைகளாக ஏதும் நான் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. காலத்தின் போக்கில், இரு தரப்பினரும் சமரசத்தை நாடி உரையாடித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை வந்தால், இந்தப் பொறுப்பை அவர்கள்தான் உணரவேண்டும்.

என் தனிப்பட்ட பார்வையில், தீர்ப்பின் போக்கில் சொல்லப்பட்ட மற்ற விஷயங்களை விடுத்து, ஒருவேளை மூன்றில் இரண்டு பங்கு, அல்லது பாதியேனும் முஸ்லீம்களுக்கு அளித்திருந்தால் நான் தெளிவாக இந்தத் தீர்ப்பை வரவேற்றிருப்பேன். ஏனெனில் நாம் இந்துத்துவாவின் இத்தனை வருடச் செயல்பாட்டுக்கும், முனைப்புக்கும், அவர்கள் கொடுத்த விலைக்கும் பதிலாக ஒரு விலை கொடுக்காமல், இந்த பிரச்னையைத் தீர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த நிர்பந்தத் தளைகளை மனத்தில் கொண்டு, இந்தத் தீர்ப்பை அல்லது இதே போன்ற ஒரு சமரசத் தீர்ப்பை பின்னாளில் மற்ற இந்திய நீதியதிகாரங்களும் வழிமொழியக்கூடும் எனில், அதில் ஏதாவது ஒன்றில் சமரசம் கொள்வதுதான் விவேகம் என்று நினைக்கிறேன்.

அடுத்து, இந்தத் தீர்ப்பை முன்வைத்து முஸ்லீம்கள் இரண்டாம்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டதாகவும், முஸ்லீம்களுக்கு நியாயம் என்பது கிடைக்க இங்கே வாய்ப்பே இல்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் பல நியாயமற்ற தன்மைகள் என்பதாகக் கருதும் விஷயங்களுக்கு ஒரு கோப எதிர்வினையாக, கொஞ்ச நாட்களுக்கு அவ்வாறு சொல்வதால் பரவாயில்லை என்றாலும், அதைத் தீவிரமாக நம்பத் தொடங்குவது யாருக்கும் நன்மை செய்யும் என்று தோன்றவில்லை. இந்தத் தீர்ப்பு ஒரு முஸ்லீம் நீதிபதியின் பார்வைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை மறக்க முடியாது; அது ஒருபுறம் இருக்க, ஒரு குறிப்பிட்ட வழக்கில், ஒரு நீதிமன்றத் தீர்ப்பை அநியாயமாக கருதும் காரணத்துக்காக இந்தியாவில் நியாயம் கிடைக்கவே வாய்ப்பில்லை என்கிற பரப்புரையில் நியாயமில்லை என்பது மட்டுமல்ல; அது, இருக்கும் ஜனநாயக வாய்ப்புகளையும்கூடப் புறக்கணிக்கும் மனநிலைக்கு இட்டுச்செல்லும்.

ஒருவேளை இந்தியாவை ‘இந்து நாடு’ என்று சொன்னால் அது எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது என்கிற தெளிவு வேண்டும். நிச்சயமாக சட்டத்தில் கிடைக்கும் சுதந்தரம் மற்றும் அனுபவிக்கும் உரிமைகளின் அடிப்படையில், இந்தியாவை பாகிஸ்தான், பங்காளாதேசம், அரபு நாடுகள் போல ஒரு மதத்தின் நாடாகச் சொல்லமுடியாது என்பதை மறைத்துவிட்டுப் பேசுவது நேர்மையில்லை; அவ்வாறு சொல்வதனால் அடையக்கூடிய பயனும் ஏதுமில்லை.

இந்தியா விடுதலை அடைந்த பிறகான பல புள்ளிவிவரங்களை வைத்து, முஸ்லீம்களை அநீதி இழைக்கப்பட்டவர்களாகப் பலர் காட்டுகிறார்கள். (அண்மையில் அ.மார்க்ஸ் வழக்கம்போல ஒரு பேட்டியில் அதைச் சொல்லியிருக்கிறார். அதில் சில இடங்களில் அறிவுரீதியான கறார் நேர்மை இல்லை என்பதை வேறு சமயத்தில் அணுக விரும்புகிறேன்.) முஸ்லீம் மக்களை அநீதி இழைக்கப்பட்டவர்களாக நிறுவும் நிஜமான புள்ளி விவரங்களை என்னாலும் திரட்ட முடியும் என்றுதான் நினைக்கிறேன். பிரச்னை என்னவெனில் முஸ்லீம்கள் மட்டுமின்றி, இந்தியாவின் எந்த ஒரு சமூக/இனக்குழு/சாதியினரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து, சுதந்தர இந்தியாவில் இதுவரை அவர்களுக்கு அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு வருவதான புள்ளிவிவரங்களை அளிக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஏதோ ஒருவிதத்தில் கருதாத ஒரு சமூகக் கூட்டமும் (பார்ப்பனர்கள் உட்பட) இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

இதில் பிரச்னை என்னவென்றால், இந்தப் புள்ளிவிவரங்கள் பொய்யாக இருக்கவேண்டிய தேவையில்லை என்பதுதான். முஸ்லீம்களுக்கு அநீதி நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படும் விவரங்களை நான் மறுக்க வரவில்லை. அதை மீறி இந்தியாவில் அரசியல் செய்யக்கூடிய சாத்தியமும் அதற்கான வெளியும் இருக்கிறது என்பதைத்தான் சொல்ல விளைகிறேன். (இத்தகைய சாத்தியமும் வெளியும் தற்போதும், இதற்கு முன்னாலும் இல்லாத நாட்டுக்கான உதாரணமாக இலங்கையையும், தமிழர்களின் இருப்பு சார்ந்த பிரச்னையையும் குறிப்பிட முடியும். இந்திய ஜனநாயகம் அத்தகையது அல்ல என்பதையே இங்கே குறிப்பிடுகிறேன்.)

அதே நேரம் இந்தியப் பொதுமக்களின் வெகுமனம், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த வெகுமனம் (சாதியரீதியாக ஒரு நோய்க்கூறு மனநிலை கொண்டதெனினும்), மதரீதியில் சகிப்புத்தன்மையுடனான ஒரு பரந்த மனப்பான்மை கொண்டது. முஸ்லீம்கள் குறித்து சில முன்முடிவுகள் உண்டு; எனினும் அது இந்துத்துவக் கருத்தியலில் கரைத்துகொள்ளாத, முஸ்லீம்களின் இருப்பை ஒப்புக்கொள்ளும் பரந்த மனப்பான்மை கொண்டது. இதற்குப் பல நடைமுறை உதாரணங்களை அடுக்க முடியும். அவை தவிர, 2004 நாடாளுமன்றத் தேர்தலில், தொடர்ந்த பல பிரசாரங்களைத் தாண்டி, சோனியா காந்தியைப் பிரதமராக்கும்  ‘மகேசன் தீர்ப்பை’ வழங்கியதை மறக்க முடியாது. பெருமளவு தாராள மனப்பான்மை கொண்ட ஐரோப்பிய நாடுகள் எதிலும்கூட, பக்கத்து நாட்டிலிருந்து குடியேறிய ஒருவரை, அது குறித்த பிரசாரத்துக்கு இடையே, நாட்டின் முதல் பதவிக்கு மக்கள் அனுப்புவது நடக்கும் என்று தோன்றவில்லை.

ஒரு அறிவு நேர்மை கருதியே இதைச் சொல்கிறேனே அன்றி, எனக்கு இந்தியா என்கிற கட்டமைப்பின்மீது புனிதமான ஈர்ப்பும் பிடிப்பும் எதுவும் இல்லை; ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு குறித்த ஆத்திரம் மட்டுமே உண்டு; அதற்கு ஏதேனும் வகையில் இந்தியா விலை கொடுப்பதை மனதார விரும்பவும் செய்கிறேன். அதே நேரம் இந்தியக் கட்டமைப்புக்குள் கிடைக்கும் ஜனநாயக அரசியல் வெளியை, அதில் இயங்கும் சாத்தியம் இருக்கும்வரை பயன்படுத்திக்கொள்வதே இழப்புகளை ஆகக் குறைவாக்கும் உத்தியாக தோன்றுகிறது. (ஆதிவாசிகள்/மாவோயிஸ்ட் போராட்டம் போன்றவற்றில் அப்படி ஒரு சாத்தியம் இல்லாமல் இருக்கலாம் என்பது வேறு விஷயம்.)

முஸ்லீம்களால் மறக்க முடியாத உச்சபட்ச வடுவாகவும் அநீதியாகவும், குஜராத் தாக்குதலும், அதில் யாருமே தண்டிக்கப்படாததும் இருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்கள் குஜராத் முஸ்லீம்கள்மீதான தாக்குதலை கிட்டத்தட்ட முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளன; ஏராளமான அறிவுஜீவிகள் அது குறித்து எழுதியுள்ளனர்; புத்தகங்கள் வந்துள்ளன. இதற்கு நேர்மாறான ஓர் உதாரணம் உண்டு. குஜராத் அளவுக்குத் தீவிரம் அல்லாவிடினும், கர்நாடகாவில் 1992-ல் நடந்த தமிழர்மீதான தாக்குதல் ஓரளவு தீவிரமானது. குறிப்பாக அதன் பிறகான இந்த 18 ஆண்டுகளில், மெல்ல மெல்ல கர்நாடகாவில் தமிழர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளமே அழிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எந்த நியாயமான ஆவணமும் பதிவும் கிடையாது. கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள்மீதான தாக்குதல்களை ஆவணப்படுத்த, தமிழகத்தில் இருந்து சென்றுவந்த அ.மார்க்ஸோ, மக்கள் சிவில் உரிமைக் கழகமோ, 1992-க்குப்பிறகு கர்நாடகாவில் தமிழர் இருப்பில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து எதையும் ஆவணப்படுத்தும் எண்ணத்தில்கூட இறங்க மாட்டார்கள். இவர்களே செய்ய நினைக்காத ஒன்றை, மற்ற இந்திய அறிவுலகம் செய்யப் போவதும் இல்லை. இதுதவிர, தொடர்ந்து நடக்கும் அயோக்கிய அவல நாடகமான தமிழ் மீனவர்கள்மீதான இலங்கைப் படையின் தாக்குதல், அதற்கு இந்தியா உடந்தையாக இருக்கும் பாத்திரத்தை வகிப்பது, மற்றும் ஈழப்பிரச்னை என்று பேசப் பல உள்ளன.

ஆனாலும் தமிழ் சார்ந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் விரக்தி அடைந்து விபரீத முடிவுகள் எடுப்பதைவிட, இந்தியக் கூட்டமைப்பினுள் தங்கள் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுப்புவதே விவேகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் முயற்சிகள் மிகப் பெரிய அரச வன்முறையையும் அடக்குமுறையையும் மக்கள்மீது ஏவுவதற்குக் காரணமாகும் என்பது ஒரு காரணம்; இன்னமும் இந்தியக் கூட்டமைப்புச் சட்டகத்தில் – ஆயிரம் கோளாறுகளுக்கு நடுவில் – பிரச்னைகளை எழுப்பவும், தீர்வு நோக்கி நகரவும், நகர்த்தவும் ஒரு ஜனநாயக அரசியல் வெளி இருக்கிறது என்பதும் ஒரு காரணம். தமிழர்களைவிட முஸ்லீம்களுக்கு இன்னும் சாதகமான வெளி இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். போராளித்தனமாக என்ன பேசினாலும், இந்த வெளியை நடைமுறையில் சாதுர்யமாகப் பயன்படுத்துவதுதான்  விவேகமான அரசியல் செயல்பாடாக இருக்கும் என்று தோன்றுகிறது.

முந்தைய பாகங்கள்: ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

(முற்றும்)

17 comments so far

 1. அரவிந்தன் நீலகண்டன்
  #1

  1. ஹிந்துத்துவம் இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை நிச்சயமாக கூறவில்லை.
  //இந்தியப் பொதுமக்களின் வெகுமனம், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த வெகுமனம் (சாதியரீதியாக ஒரு நோய்க்கூறு மனநிலை கொண்டதெனினும்), மதரீதியில் சகிப்புத்தன்மையுடனான ஒரு பரந்த மனப்பான்மை கொண்டது. //
  இதற்கும்
  //இன்னமும் இந்தியக் கூட்டமைப்புச் சட்டகத்தில் – ஆயிரம் கோளாறுகளுக்கு நடுவில் – பிரச்னைகளை எழுப்பவும், தீர்வு நோக்கி நகரவும், நகர்த்தவும் ஒரு ஜனநாயக அரசியல் வெளி இருக்கிறது //
  இதற்கும் இருக்கும் தொடர்பையும் சிந்திக்க வேண்டும்.

  2. டிசம்பர் -6-1992 கும்மட்டம் உடைக்கப்பட்டது குறித்த எனது கருத்து பதிவு அது. ஹிந்துத்துவ அரசியல் தலைவர்களிலேயே அந்த சூழலிலே கூட அங்கே இருந்த தலைவர்களிடம் அன்று நடந்த விஷய்ங்கள் குறித்து கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது.

 2. ரோஸாவசந்த்
  #2

  /ஏனெனில் நாம் இந்துத்துவாவின் இத்தனை வருடச் செயல்பாட்டுக்கும், முனைப்புக்கும், முஸ்லீம்கள் கொடுத்த விலைக்கும் பதிலாக ஒரு விலை கொடுக்காமல், இந்த பிரச்னையைத் தீர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்/

  மேலே உள்ளதில் எழுத்து பிழை என்று மாற்றியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் ‘முஸ்லீம்கள் கொடுத்த விலை’ பற்றி சொல்லவில்லை. இந்துத்வவாதிகள் தங்கள் போராட்டம் மூலம், இழப்புகள் மூலம் கொடுத்த விலை பற்றிதான் சொல்கிறேன். கீழே உள்ளவாறுதான் இருக்க வேண்டும்.

  ‘ஏனெனில் நாம் இந்துத்துவாவின் இத்தனை வருடச் செயல்பாட்டுக்கும், முனைப்புக்கும், அவர்கள் கொடுத்த விலைக்கும் பதிலாக ஒரு விலை கொடுக்காமல், இந்த பிரச்னையைத் தீர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்?’

 3. உங்கள் நண்பன்
  #3

  முஸ்லீம்களுக்கு அநீதி நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படும் விவரங்களை நான் மறுக்க வரவில்லை. அதை மீறி இந்தியாவில் அரசியல் செய்யக்கூடிய சாத்தியமும் அதற்கான வெளியும் இருக்கிறது என்பதைத்தான் சொல்ல விளைகிறேன்.

  முஸ்லீம்கள் மட்டுமின்றி, இந்தியாவின் எந்த ஒரு சமூக/இனக்குழு/சாதியினரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து, சுதந்தர இந்தியாவில் இதுவரை அவர்களுக்கு அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு வருவதான புள்ளிவிவரங்களை அளிக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது.

  மொத்தத்தில் ரோசா உங்களின் கட்டுரை ஏதோ அவசரத்திலும் அமைதியே அனைவருக்கும் நல்லது என்கிற தொனியிலும் ஒலிக்கிற உணர்வைத் தருகிறது. தீர்ப்பு சரியா இல்லையா என்றால் என்ன பதில் சொல்வீர்கள்? அரவிந்தன் நீலகண்டன் கருத்தை மறுதலித்தால் தீர்ப்பு சரியில்லை என்று ஆணித்தரமாய் ஏன் கட்டுரையில் சொல்ல முடியவில்லை ?

 4. ரோஸாவசந்த்
  #4

  /தீர்ப்பு சரியா இல்லையா என்றால் என்ன பதில் சொல்வீர்கள்? அரவிந்தன் நீலகண்டன் கருத்தை மறுதலித்தால் தீர்ப்பு சரியில்லை என்று ஆணித்தரமாய் ஏன் கட்டுரையில் சொல்ல முடியவில்லை ?/

  தீர்ப்பு அநியாயமானது என்றுதான் தெளிவாக பலமுறை சொல்லியிருக்கிறேனே? உங்களுக்கு அதில் ஆணித்தரமாக இருப்பதாக எந்த விஷயம் தெரியவில்லை, அல்லது ஆணித்தரம் என்றால் என்ன என்று விளக்கினால் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். தீர்ப்பின் அநியாயம் அல்லது மோசமான பின் விளைவு என்பதற்கு இங்கே சொல்லாத புதிய பாயிண்ட் ஏதாவது இருந்தாலும் அறிய ஆசைப்படுகிறேன். தீர்ப்பின் அநியாயத்திற்காக கோபம் கொண்டு அதை எழுத்தில் காண்பிப்பது, ஆக்ரோஷமாக எழுதுவது இவைகளை செய்ய இந்த பிரச்சனையில் எனக்கு தோன்றவில்லை. அதற்கான காரணமும் நேரடியாக முதலிலும், பின்னர் கட்டுரையில் போக்கில் மறைவாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் பலர் அதை ஏற்கனவே செய்துவிட்டதை திரும்பவும் செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை.

 5. Narain
  #5

  ரோசா, தொடர்ச்சியாக அ.நீ அதை கும்மட்டம் என்றே சொல்லிவருவதில் இருக்கும் அரசியல் தெளிவானது. Its not a Dome, its a practising Mosque. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முஸ்லீம்கள் விட்டு விட்டதை, ஹிந்துத்துவா அதை தெளிவாக cash-in செய்து கொண்டதை விளக்கியதில் மகிழ்ச்சியே.

 6. சீனு
  #6

  // ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு குறித்த ஆத்திரம் மட்டுமே உண்டு; அதற்கு ஏதேனும் வகையில் இந்தியா விலை கொடுப்பதை மனதார விரும்பவும் செய்கிறேன்.//

  Me 2…

 7. commie.basher
  #7

  //
  Its not a Dome, its a practising Mosque.
  //

  Its is not. It was just a dome of a dilapidated building which was built as a mosque on a hindu holy site. It was a symbol of triumph by the islamic army over the native hindus.

  Now, its only logical to call it a dome because there has been no prayers offered from there for several years.
  A building can be a mosque only if there were prayers offered from there. Otherwise its just a building or a monument perhaps.

  If that were a mosque, Then Saudi arabia razes down mosques regularly. And yet not a single muslim soul has protested.

 8. Narain
  #8

  Dear commie.basher,

  I request you to read the judgement one more time. The judgement very clearly says that the “idols were ‘installed’ inside the mosque in 1949”.

  If you accept that Lord Ram was born exactly in the center of the dome, then you should also accept its a mosque.

 9. commie.basher
  #9

  The building was built as a mosque no doubt about it, prayers were offered there once and since past 60 years it remained as a building, a mosque not used for praying or offering namaz ceases to be a mosque. Where as a temple is a temple even if it is in an archaeological site.

  The question that the 2010 judgement answered was NOT “Was ram was born in this place or not?”, The question is “Do hindus believe that the place is janmasthan or not ?”. The answer is yes.

  Another question that the 2010 judgement answered is “was there a temple beneath the mosque/dome ?” The answer unanimously from all the judges was “yes”. could you dispute that ?

  What happens when you call an unused building as a mosque, we all witnessed in 1992 itself.

 10. kashyapan
  #10

  வெல்லூர் அருகில் வள்ளிமலை இருக்கிறது. மேலே ஏறுவதற்கு படிக்கட்டுகள் உள்ளன. குடவறைக் கொவில்வள்ளி கோவில் .மலையைக்குடைந்து உருவாக்கப் ப.ட்டுள்ளது மலை மேலே ஒரு குகை உள்ளது அதில ஒரு சமணத்துறவி வசிக்கிறார். குகைக்குள் ஒரு அடி விட்டத்தில் ஒரு சுனை உள்ளது. சூரிய ஒளியே பாடாததால்.அதன் நீருக்கு மருத்துவ குணம் உண்டு என்று அந்தத்துறவி கூறி அருந்தக் கொடுத்தார். தொல்லியல் துறை வேலி போட்டு வைத்திருக்கிறார்கள்.
  சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநயினார் கோவில் சமண தீர்த்தங்கரரின் கோவில் என்கிறார் வரலாற்றாளர் தொ.பரமசிவன். எண்ணாயிரம் சமணர்களை கொன்று அவர்கள் குடும்பங்களை விரட்டியபோது எடுத்துச்சென்று ஒளித்துவத்த சிலை தான் சபரி மலை ஐயப்பன் என்று நம்புபவர்கள் உண்டு.குதிக்காலிட்டு கைகட்டி அமர்ந்தநிலையில் தீர்த்தங்கரரின் சிலைகள் இருக்கும். ஐயப்பன் உருவமும் அப்படியே இருப்பதும் சரணம் போடுவதும் இந்து வழக்கம் அல்ல.
  சமண மதத்தைச்சார்ந்தவர்களை வாருங்கள் இடிக்கப்போவோம் என்றால் வர மறுக்கிறார்கள்.அரவிந்தன் நீலகண்டன் இதுபற்றி ஆரய்ந்து சொல்ல முடியுமா?—காஸ்யபன் .

 11. commie.basher
  #11

  இதை நீங்கள் ஆ.நீ சிந்தனைகள் கட்டுரையில் போய் கேட்கலாம். இங்கு வந்து கேட்பதனால் என்ன பிரயோசனம் ?

 12. களிமிகு கணபதி
  #12

  //….எண்ணாயிரம் சமணர்களை கொன்று அவர்கள் குடும்பங்களை விரட்டியபோது எடுத்துச்சென்று ஒளித்துவத்த சிலை தான் சபரி மலை ஐயப்பன் என்று நம்புபவர்கள் உண்டு….//

  நல்லவேளையாக நம்புபவர்கள் என்று சொன்னீர்கள். அது காழ்ப்புணர்வு தூண்டிய வெறும் “நம்பிக்கை” மட்டுமே. ஆதாரங்கள் கிடையாது.

  கிறுத்துவப் பாதிரிகள் கட்டிவிட்ட பல கதைகளில் இதுவும் ஒன்று. சைவர்கள் சமணர்களைக் கொன்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்கும் இல்லை. முக்கியமாக சமணர்களின் நூல்களில்கூட இல்லை.

  //….குதிக்காலிட்டு கைகட்டி அமர்ந்தநிலையில் தீர்த்தங்கரரின் சிலைகள் இருக்கும்….//

  அப்படி இருக்கும் ஏதேனும் ஒரு சிலையின் படத்திற்கான யு.ஆர்.எல் தரவும்.

  புரளிகளைப் பரப்புவதிலும் கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.

 13. commie.basher
  #13

  கலசம் வைத்திருக்கும் சமணர்கள் வீட்டின் பூஜை அறையில் போய் கூட பார்த்துவிட்டு வந்தேன். அவர்களிடம் எந்த சமண தீர்த்தங்கரரும் குதிகாலிட்டு உட்கார்ந்து இருக்கும் நிலையில் சிலையாக வடிக்கப்பட்டத்தாக இதுவரை எந்தத் பிரக்ஞையும் இல்லை.

  அவர்களிடமே இல்லாத ஒன்றைச் சொல்லிச் சொல்லித் தான் 1992ல் கலவரமே வந்தது (கும்மட்டத்தை மசூதி என்று சொல்லியது போல்). அதைத் தான் இப்பொழுதும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த கழிசடைக் கூட்டம் (இடதுசாரி அறிவுச்சீவிக் கூட்டம்) வலுவாக ஏமாற்றப்பட்டது. அது பட்டவர்த்தனமாக டீ.வி செய்திச் சேனல்களில் தெரிந்தது.

 14. ராஜன் குறை
  #14

  வித்தியாசமான, சிக்கல்களின் பரிமாணங்களை பல கோணங்களிலும் அலசும் கட்டுரை. அரசியல் தூய்மைவாதம் என்பதிலிருந்து நகர்ந்து நடைமுறைத் தர்க்கம் (pragmatism) சார்ந்தும் சிந்திப்பது அவசியம் என்று உணர்ந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. அரவிந்தன் நீலகண்டனும், நீங்களும் பொறுமையாக விவாதிக்க முன்வந்திருப்பதும் முக்கியம்தான். அதே சமயம் பெருந்தேவி பின்னூட்டத்தில் காந்தியின் தரிசனங்களின் வழியில் சிந்தித்தால் எப்படிப்பட்ட சாத்தியங்கள் பிறக்கும் என்று கூறியிருப்பது மிகவும் முக்கியம். தன் அடையாளம் சார்ந்த “நலத்தை” “கோரிக்கையை” “உரிமையை” தியாகம் செய்வதின் மேன்மை குறித்து நீங்களும், அரவிந்தன் நீலகண்டனும் பின்னொரு சமயத்தில் விவாதிக்க வேண்டும்.

  அ.மார்க்ஸ் மீது உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது புரிகிறது. எப்போதுமே “நம் தரப்பு” என நம்புபவர்கள் மீதுதான் நமக்கு அதிருப்தி அதிகம் ஏற்படுகிறது. எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அவரது அரசியல் நிலைபாடுகளின் நியாயங்களையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் நடைமுறைத் தர்க்கத்திற்கு முக்கியம். ஒன்றுக்கு மேற்பட்ட நியாயங்கள் உள்ளன என்ற புரிதலில் இருந்துதான் புதிய சாத்தியங்கள் பிறக்க முடியும். தொடர்ந்து இவ்வண்ணம் செயல்பட வாழ்த்துக்கள்.

 15. அருண்பிரபு
  #15

  //முஸ்லீம்களால் மறக்க முடியாத உச்சபட்ச வடுவாகவும் அநீதியாகவும், குஜராத் தாக்குதலும், அதில் யாருமே தண்டிக்கப்படாததும் இருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்கள் குஜராத் முஸ்லீம்கள்மீதான தாக்குதலை கிட்டத்தட்ட முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளன; ஏராளமான அறிவுஜீவிகள் அது குறித்து எழுதியுள்ளனர்; புத்தகங்கள் வந்துள்ளன.//

  அ.நீ! மேற்கண்ட வாசகங்கள் உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க தரமான ஆதாரங்கள் இல்லை. குஜராத் கலவரம் தொடர்பான சிறப்புப் புலனாய்வு நீதிமன்றத்தில் பல கலவர நிகழ்வுகள் கற்பனைப் புனைவு என வாக்குமூலங்கள் வரிசைகட்டி வருகின்றன. இந்த வழக்கில் தீஸ்தா செதல்வாட் ஜாவேத் என்கிற சமூக சேவகி அம்மையார் மிகவும் தீவிரமாக இறங்கி வேலை செய்கிறார். அவர் ஒரு தொண்டு நிறுவனமும் நடத்துகிறார். நன்கொடைகள் தாராளமாக வரிவிலக்கெல்லாம் காட்டி வாங்கிக் கொள்ளவும் செய்கிறார். (http://www.cjponline.org/)

  அவர் செய்யும் தொண்டு பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் நிறுத்துவோர் பெயரில் இவரே இட்டுக்கட்டிய கொடூரக் கதைகளைக் (cooking up macabre tales of killings) கலவர நிகழ்வுகள் என்று பிரமாண வாக்குமூலமாக சமர்ப்பிப்பது. தொண்டு நிறுவனம் என்பதால் ஏதாவது உதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில், “கடையை எரிச்சுப்புட்டங்க, வீட்டைக் கொளூத்திப்புட்டாங்க, உதவி செய்யுங்கம்மா!” என்று வருவோரிடம் பேர் ஊர் முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு,அவர்களிடம் வெற்றுத் தாட்களில் கையொப்பமும் பெற்று, “துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள், கதறக் கதற கற்பழித்தார்கள், அவர்கள் எல்லோரும் நரேந்திர மோடியின் ஆட்கள், நான் பயத்தால் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தேன்” என்கிற வகையில் எழுதி நீதிமன்றத்தில் அவர்கள் பெயரில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறார்.
  (http://www.dailypioneer.com/281457/%E2%80%98Teesta-drafted-affidavits-didnt-divulge-contents.html)

  பலருக்குத் தங்கள் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதே தெரியவில்லை. விசாரித்த போது உளறித் தொலைத்து வாக்குமூலத்தைப் பற்றி தமக்கேதும் தெரியாது என்றும் ‘அந்தம்மா’ சொன்னதைத் தான் தாங்கள் சொல்வதாகவும் கூறியுள்ளனர். என் பெயரில் எப்படி இல்லாத கதைகளைக் கட்டுவாய் என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் இந்த சமூக சேவகி அம்மையார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
  (http://www.indianexpress.com/news/guj-riots-accused-moves-sc-for-prosecuting-teesta-for-perjury/699232/)
  (http://www.indianexpress.com/news/an-unconscionable-act/447301/0)

  தீஸ்தா அம்மையாரிடம் உதவியாளராய் வேலை பார்த்த ரயிஸ்கான் பதான் என்பவர் தமக்குத் தெரியாமல் தம் பெயரில் தீஸ்தா அம்மையார் இ-மெயில்களை அனுப்பியும் பெற்றும், தம் பெயரில் மேற்கூறிய மோசடிகளைச் செய்ததாக சிறப்புப் புலனாய்வு அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
  (http://www.dailypioneer.com/282173/Teesta-in-the-dock.html)
  (http://www.indianexpress.com/news/teesta-made-riot-victims-give-false-testimo/679361/)

  அறிவு ஜீவிகள் பலர் செதல்வாட் அம்மையாருடன் சேர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரை வைத்து “கவலைகொண்ட மக்கள் நீதிமன்றம் (Concerned Citizens Tribunal)” ஒன்றை அமைத்து, “சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் சங்பரிவார் அமைப்பினர் குற்றமிழைத்தனர். நரேந்திர மோடி கலவரத்திற்குத் திட்டம் தீட்டி, குற்றவாளிகளுக்குத் தலைமை தாங்கினார்” என்று தீர்ப்பளித்தனர். இது அம்மையாரின் தொண்டு நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாக அவர்களின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது காட்சிப்பிழை என்பதும், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்கள் செதல்வாட் அம்மையார் சமைத்துத் தந்தவை என்பது இப்போது தெரிய வருகிறது.

  ஆக ஊடகங்கள் பதிவு செய்தவை உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அறிவுஜீவிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பதுவும் புலனாகிறது. Some vested interests are striving so hard to keep the people and truth in dark.

  வாலியார் எழுதிய வாத்தியார் பாட்டு ஒன்று இந்தச் சமயத்திற்கு தக்கதாகப் பொருந்துகிறது.

  என்னதான் நடக்கும் நடக்கட்டடுமே
  இருட்டினில் நீதி மறையட்டுமே
  தன்னாலே வெளிவரும் தயங்காதே-ஒரு
  *தலைவன் இருக்கிறான் மயங்காதே!

  *தலைவன் கடவுள் எனக் கொள்க.

  தற்போது பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறி, அடிப்படையே அடுக்கப்பட்ட பொய் எனும் போது கிட்டவோ தட்டவோ முழுமை என்பதை ஏற்பது இகழ்ச்சி என்பது என் துணிபு.

 16. அருண்பிரபு
  #16

  என் மறு மொழி ரோசா வசந்த் அவர்களுக்கு. அரவிந்தன் ட்விட்டரில் இது குறித்துக் கருத்துக் கூறியதும் அதைப் படித்துப் பின் கட்டுரையையும் படித்து விட்டதால் அ.நீ யை விளித்து மறுமொழிநது விட்டேன்.

 17. ரோஸாவசந்த்
  #17

  கடைசி பகுதி வெளிவந்த தினத்திற்கு பிறகு இன்றுதான் இங்கு வரமுடிந்தது. ராஜன்குறையின் கருத்து ஊக்கமாக உள்ளது. நன்றி.

  அருண்பிரபு, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அதிலுள்ள இணைப்புகளை பிறகு வாசிக்கிறேன். நிச்சயம் கணக்கில் கொள்கிறேன். நன்றி.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: