ஓ காதல் கண்மணி – ஸ்வீட் நத்திங்

Oh-Kadhal-Kanmani-poster-1மணி ரத்னத்தின் காதல் திரைப்படங்கள் பொதுவாகவே இரண்டு வகையானவை. ஒன்று, மிக தீவிரமான சமூகப் பிரச்சினை அல்லது அரசியலின் ஊடே மலர்ந்து வருபவை. இன்னொன்று, குழந்தைத்தனமான காதல் காட்சிகளான ஸ்வீட் நத்திங்கை முதன்மையாக வைக்கும் படங்கள். தீவிரமான பிரச்சினைகளைக் கையாளும் படங்களில்கூட அவர் பிரச்சினையின் தீவிரத்தையும் அதன் அலசலையும் கைவிட்டுவிட்டு அதன் பின்னணியில் காதல் திரைப்படங்களையே எடுத்திருக்கிறார். காதல் திரைப்படங்களுக்கே உரிய அத்தனை அம்சங்களையும் இந்தப் படங்களிலும் காட்டிவிட்டு பிரச்சினையின் பின்னணியில் படத்தை முடித்துவிடுவார். இவற்றிலிருந்து விலகிய மணி ரத்னத்தின் படங்கள் மிகக் குறைவே. எல்லாக் குழந்தைத்தனமான பப்பி லவ் படங்களின் காதல் காட்சிகளிலும் ஏதோ ஒரு வகை ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்.  இப்போது அதே வகையில் குழந்தைத்தனமான காதலை ஒரு படம் முழுக்க, முழுக்க என்றால் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை தந்திருக்கிறார்.

 

இன்றிருக்கும் இயக்குநர்களில் மிக நளினமான அழகான ரசனையான காதல் காட்சிகளை எடுக்கத் தெரிந்த ஒரே இயக்குநர் மணி ரத்னமாக மட்டுமே இருக்கமுடியும். வேறு சில இயக்குநர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் எடுத்திருக்கலாம். ஆனால் இதில் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருபவர் மணி ரத்னம் மட்டுமே. அலைபாயுதேவில் வரும் ‘எங்க உங்களை பிடிச்சிருவேன்னு சொல்லிடுவேனோன்னு பயமாயிருக்கு’ என்பது அந்தக் கால (இன்றும்கூட) கல்லூரி பப்பி காதலர்களின் வேத வாக்கியமானது. அதே போல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் வரும் சிம்ரன் – மாதவன் காதல் காட்சிகள் (அக்காவின் முன்னாலேயே காதலர்கள் கட்டிக்கொள்வது) மிகச் சிறப்பான ஒன்றே. ஒவ்வொரு காதல் காட்சியின் பின்னணியிலும் மணி ரத்னம் மிகக் கடுமையான விமர்சனங்களைப் பெறுவார். குழந்தைத்தனமான காதலை முன்வைத்து அவரவர் வீட்டுக்குத் தெரியாமல் தாலி கட்டிக்கொண்டு மறைத்துக்கொண்டு வாழ்வதாக இருந்தாலும் சரி, ஒரு சிறு பையன் சிறிய பெண்ணைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்வதாக (அஞ்சலி) இருந்தாலும் சரி, மணி ரத்னத்தின் படங்கள் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையைக் கொண்டு வருபவையே. அதிலும் அலைபாயுதே திரைப்படம் தந்த புதிய கலாசாரத்தை நாம் இன்றும் சமூகத்தில் பார்க்கலாம்.

இந்தப் பின்னணியில்தான் ஓ காதல் கண்மணி வருகிறது. படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் வழக்கமான மணிரத்னத்தின் படங்கள் போலவே கதைக்குள் சென்றுவிடுகிறது. ஒரு கிறித்துவத் திருமணத்தின் பின்னணியிலேயே பார்வையாளர்கள் மிகத் தெளிவாக இந்தப் படத்தின் நாயகன் நாயகியின் காதலை உணர்ந்துகொள்கிறார்கள். அக்காட்சி மிகச் சிறப்பாகத் திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிலேயே இருவரின் சிந்தனைகளும் தெளிவாக்கப்பட்டுவிடுகின்றன. பார்வையாளர்களும் இந்தப் படம் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றியது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் இதுவென்றால், படத்தின் மிகப்பெரிய பலவீனம், கதை இந்த ஒரே புள்ளியிலேயே எவ்வித திருப்பமும் இன்றி சுற்றிக்கொண்டிருப்பதுதான்.

ஒரு எளிய காதல் திரைப்படத்துக்குரிய திரைக்கதைக்கான களங்களை மிகத் தெளிவாக அமைத்துக்கொண்ட பின்பும் படம் முன்னோக்கி நகரவே இல்லை. பிரகாஷ் ராஜ் தம்பதியினரின் கதை நமக்கு மிக எளிதாகவே ஒன்றைப் புரியவைத்துவிடுகிறது. மற்ற சாதாரண கமர்ஷியல் திரைப்படங்களிலும் சிவாஜி வகையறா திரைப்படங்களிலும் வருவதைப் போல, மனமொத்த வயதான தம்பதியரைப் பார்த்து காதலர்கள் மனம் திருந்துவதைப் போன்ற எளிய காட்சிதான் இப்படத்தின் உச்சகட்ட காட்சியே என்னும்போது மிகவும் ஏமாற்றமே ஏற்படுகிறது. இதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?

எந்த விஷயத்தை திரைக்களமாக எடுத்துக்கொண்டாலும் அதைவிட்டுவிட்டு காதலைப் பேசுவதையே இந்தப் படத்திலும் மணி ரத்னம் செய்திருக்கிறார். திருமணமின்றிச் சேர்ந்து வாழ்வது தரும் பிரச்சினைகளைப் பற்றியோ அதனால் ஏற்படப்போகும் அனுகூலம் அல்லது அதிர்வுகளைப் பற்றியோ மணி ரத்னம் மூச்சே விடவில்லை. அந்த எல்லைக்குள் எங்கேயும் படம் நுழையவே இல்லை. படம் முழுக்க இருவரும் மூக்கோடு மூக்கு உரசி உடலோடு உடல் உரசி வார்த்தைகளோடு வார்த்தைகள் உரசி பார்வையாளர்களை அலுப்படைய வைக்கிறார்கள். படத்தின் கடைசி நேரக் காட்சிகள்கூட படத்தின் தொடக்க கட்ட காட்சிகளைப் போன்ற காதல் காட்சிகளால் நிறைந்திருக்குமானால் அந்தப் படத்தை எப்படிப் பொறுமையாகப் பார்ப்பது?

தேவையற்ற வகையில் படம் மெதுவாகச் செல்கிறது. மெதுவாக என்றால் மிக மெதுவாக. மாறி மாறி பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் லூட்டி அடித்துக்கொண்டும் இருப்பதுதான் படம் நெடுக. மிக சுமாரான அலைபாயுதே திரைப்படம்கூட ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கைக்குள்ளும் கொஞ்சம் பரபரப்புக்குள்ளும் சென்றது. இப்படம் அந்நிலையை அடையவே இல்லை. மிக கிளிஷேவான கதாபாத்திரங்களாக பிரகாஷ்ராஜும் அவரது மனைவியும், நாயகியின் அம்மாவும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள்தான் கதைக்கு மிக முக்கியமானவர்கள். அவர்களின் படைப்பே இந்த வகையில்தான் இருக்கிறது. ஆனால் அதே சமயம் நாயகனின் தொழிலும் நாயகியின் தொழிலும் அவரவர்கள் வாழ்க்கைப் பார்வையோடு தொடர்புபடுத்தும் வகையில் அமைந்திருப்பது மிகவும் அருமை. இந்த அர்ப்பணிப்பு மற்ற கதாபாத்திர உருவாக்கத்தில் இல்லை.
எப்படியும் சேர்ந்து வாழ்வதை பிரசாரம் செய்து மணி ரத்னம் எடுக்கப்போவதில்லை என்பதை, பிரகாஷ் ராஜ் தம்பதியரை வைத்து படம் ஆரம்பித்த கணத்திலேயே நாம் முடிவு செய்துவிடலாம். கடைசியில் அப்படித்தான் படமும் முடிகிறது. கலாசார காவலர்கள் தங்கள் வேலையைப் பார்க்கலாம். பிரச்சினையில்லை. வழக்கம்போல திருமணத்துக்கு முன்பே உடலுறவு ஒரு பிரச்சினையே அல்ல என்பது இப்படத்திலும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இப்படமே திருமணமின்றிச் சேர்ந்து வாழ்வதைப் பற்றியது என்னும்போது யாரும் ஒன்றும் சொல்லமுடியாமல் போய்விடுகிறது.
துல்கர் சல்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். மணி ரத்னம் கடைசியில் நடிக்கத் தெரிந்த ஓர் அழகான நடிகரைக் கண்டுபிடித்துவிட்டார். தொடர்ந்து இருவரும் சேர்ந்து பல படங்கள் செய்வார்கள் என்று நம்பலாம். நித்யா மேனோன் சில காட்சிகள் அழகாக இருக்கிறார். நிறைய காட்சிகளில் அழகாக நடிக்கிறார். சில காட்சிகளில் தேவைக்கு அதிகமாகவும் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் அலட்டலே இல்லாமல் மிகப் பணிவாக நடித்திருப்பது ஆறுதல். பிரகாஷ் ராஜின் மனைவியாக வரும் நடிகையும் மிக நன்றாக நடித்திருக்கிறார். இவர் முகத் தோற்றமே நம்மை பரிதாபம் கொள்ள வைத்துவிடுகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் இரண்டு பாடல்கள் மிக அருமை. ஓகே கண்மணி பாடல் வீணடிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் பெரும்பாலும் பாடல்களில் ஹம்மிங்குகளே இசைக்கப்பட்டுள்ளன. கேமரா பிரமாதம்.

படம் இத்தனை மெதுவாகச் சென்றிருக்கவேண்டியதில்லை. கடைசி வரை அவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழப் போகிறார்களா அல்லது கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார்களா என்பதுதான் கதையே என்பது பெரிய இழுவையாக உள்ளது. இந்த இரண்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஏதோ இன்னும் கொஞ்சம் தேறியிருக்கும்.

மதிப்பெண்: 39/100

 

பின் குறிப்பு: இந்த விமர்சனம் சுஹாசினிக்கு சமர்ப்பணம். திரைப்படங்களே ஓடாத நிலையில் படம் வந்த நாளே விமர்சனம் செய்யவேண்டாம் என்று மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்தேன். சுஹாசினியின் தேவையற்ற கருத்தால் முதல்நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு இந்த விமர்சனத்தை எழுதுகிறேன். மணி ரத்னம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என்பதால் இத்தோடு விட்டு வைக்கிறேன். இல்லையென்றால்…!

10 comments so far

 1. Lakshmana Perumal
  #1

  இது படத்துக்கான விமர்சனமா? அல்லது சுஹாசினிக்கு விடப்பட்ட சவாலா? அது ஒருபுறம் இருக்கட்டும். முதல் ரெண்டு பாராக்கள் ரெடிமேட் போல. மணி ரத்னத்தின் ரசிகர்களில் நானும் ஒருவன். அவரோட உயிரே படத்தை இப்படித்தான் முதல் காட்சியில் பாளை செல்வம் தியேட்டரில் பார்த்தப்ப , தலைவர் படம் , ஹீரோ ஹீரோயின் பேசுறது புரியும்னு பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அரை மணி நேரமாகியும் புரியாததால் போட்ட கூச்சல் இருக்கே. ஆனாலும் கடைசியில் மணிரத்தினத்தின் ரசிகர்கள் என்பதால் வெளங்காத தியேட்டர்ல படம் போட்டா இப்படித்தான் கேட்கும்னு சொல்லி சமாதானமாகி விட்டோம். எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் எல்லா காலத்திலும் ரசிகர்களைத் திருப்தி படுத்த முடியாது என்பதை பாலசந்தரிடமே கற்றுக் கொண்டுவிட்டோம். ஆகையால் மணி மீது எனக்கு ஏமாற்றம் ஏதும் வரப்போவதில்லை. மணிக்கே இப்படி சங்கு ஊதிட்டிங்களே!

 2. Haranprasanna
  #2

  லக்‌ஷ்மண பெருமாள், நீங்கள் என்னவோ சொல்ல வருகிறீர்கள் என்பது மட்டும் எனக்குப் புரிந்துவிட்டது, நன்றி.

 3. ஆதி முருகன்
  #3

  இல்லையென்றால் எனும் போதே புரிந்து விட்டது. நீங்களும் மௌஸ் வைத்து தான் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்

 4. அருண்பிரபு
  #4

  இந்தப்படம் ஓடும் திரையரங்க கேண்டீனில் இட்லி வடை கிடைக்கும் தானே? அங்கே (அதாவது கேண்டீனில்) படம் பற்றிப் பேசுவார்களா? அதற்கு அனுமதி உண்டா?

 5. பிச்சைகாரன்
  #5

  நச் பார்வை.. நடு நிலை பார்வை

 6. ரங்கன்
  #6

  //லக்‌ஷ்மண பெருமாள், நீங்கள் என்னவோ சொல்ல வருகிறீர்கள் என்பது மட்டும் எனக்குப் புரிந்துவிட்டது, நன்றி.//

  குசு குசு என்று கொஞ்சம் கூட காதில் விழாத வண்ணம் வாசனைகள் இருக்குமே – ஆகையால் அது இந்த படத்தில் எப்படி என்று திரு லக்ஷ்மண பெருமாள் கேட்பதாக நினைத்துக் கொண்டு நான் கேட்கிறேன். வசனங்கள் காதில் விழுந்ததா ? கடைசீயாக அலை பாயுதே பார்த்ததுதான். அதுதான் கேட்கிறேன்.

  பி. கு. அப்பா ! தமிழ் பேப்பர் விழித்துக் கொண்டுவிட்டது !!

 7. musicmonk
  #7

  பல படங்களில் குடிப்பது தவறுநு போடறான், அப்போ வராத கோபம் சுஹாசினியின் வேண்டுகோளுக்கு அடிபணிந்தது 🙂
  Master plan to make you see on the first day worked.

 8. ரங்கன்
  #8

  வசனங்கள் என்று படிக்கவும் ( வாசனை அல்ல )

 9. R. Jagannathan
  #9

  If the couple do not marry at the end and continue to live together without ‘thaali’, how can Veeramanis survive?
  I suspect Suhaasini knew the reception to the film before hand and hence spoke in support of Mani!

 10. ஆமாச்சு
  #10

  14-16-18 வயசுல கல்யாணத்தக்கு பதிலா வேற ஒன்னை ‪#‎முன்பந்தம்‬ அப்படீன்னு ஏற்படுத்தி அதன்படி தெரிஞ்ச பையனையும் பொண்ணையும் எல்லாருக்கும் தெரியும்படி சேர்த்து வைங்க. 🙂

  கல்யாணம்னு சொல்லாதீங்க. இதுக்கு பேரு முன்பந்தம். ரொம்ப முக்கியமா ‪#‎முற்போக்கு‬.

  காலத்துக்கேற்ற, உருப்படாத சட்டத்துக்கு முரணாகாத பருவத்தினர்க்கு தேவையான புதிய ஏற்பாடு.

  அதாவது அப்பா அம்மாவே பார்த்து ஏற்பாடு செய்யற ப்ரி மேரிட்டல் ரிலேசன். அதற்கு சட்ட உரிமை கேளுங்க.

  அவசியமில்லைன்னு நினைக்கறேன் – ஏன்னா இது பெற்றோர் மேற்பார்வையிலான ப்ரி மேரிட்டல் ரிலேசன்! ப்ரி மேரிட்டல் ரிலேசன் தான் தப்பில்லைன்னாயிட்டுதுல்ல! அதை பெத்தவங்களே செய்யுங்க இனி! ‪#‎மணி_அடிச்சதா‬? wink emoticon

  இதை தமிழ் கல்யாணம் மாதிரி தமிழ் வழியில் கூட நடத்தலாம். புதிய மந்திரங்கள் செஞ்சு! தாலி கூடத் தேவையில்ல.

  அதை ரெண்டு பேருக்கும் சட்டப்படி 18 ஆகும் போதோ தேவைப்படும் போதோ கல்யாணமா கன்வர்ட் செய்துக்கலாம் wink emoticon

  ‪#‎ஓகே_கண்மணி‬? ‪#‎மண்ணுரத்னம்‬

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: