லாபத்தைத் தனியார்மயமாக்குதல்

நியாயமற்ற வெளிப்படையில்லா நடைமுறையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைத் தனியாருக்குத் தாரை வார்த்ததற்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கொடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் பின்புலத்தில் இந்தத் தனியார்மயத்தைப் பார்க்கவேண்டும்.

coalமத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்ற புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிடிவாதமான முயற்சியினைத் தொடர்ந்து, தற்போது நாட்டிலுள்ள இயற்கை வளங்களை எவ்வாறு நியாயமான, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய முறையில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதே தற்போதைய ஆழமான விவாதமாக இருந்துவருகிறது. நியாயமற்ற, வெளிப்படைத் தன்மையில்லா நடைமுறையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைத் தனியா ருக்குத் தாரை வார்த்ததற்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றம் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் பின்புலத்தில் இந்தத் தனியார்மய முயற்சியைப் பார்க்கவேண்டியுள்ளது.

நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கான மத்தியக் குழு கடந்த செப்டெம்பர் 10ம் நாள் இந்திய நிலக்கரிக் கழகத்தின் பங்கு 10.00 சதவீதத்தையும், தேசிய நீர் மற்றும் மின்சக்திக் கழகத்தின் பங்கு 11.36 சதவீதத்தையும், எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் 5 சதவீத பங்கையும் விற்க அனுமதியளித்தது. நாட்டின் தற்போதைய வருமானப் பற்றாக்குறையில் 4.1 சதவீதத்தை எதிர்வரும் மார்ச் 31ம் தேதிக்குள் சமன் செய்ய மத்தியில் பொதுத்துறை பங்குகளை விற்பனைச் செய்வதன்மூலமே இதைச் சாதிக்கமுடியும் என்று கொள்கை முடிவை ஆட்சிக்கு வந்துள்ள தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வைத்துள்ளது.

பொருளாதாரச் சரிவை மீட்க இத்தகைய பொதுத்துறைப் பங்கு விற்பனைமூலமே சாத்தியம் என்கிறது அரசு. இது இந்தஅரசின் எரிசக்திக் கொள்கையின்மீதான தெளிவற்றத்தன்மையும், நாட்டின் எரிசக்தி சுயதேவையை உத்திரவாதம் அளித்துவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை உறுதிசெய்யத் தவறிவிட்டதன் விளைவாக அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொதுநலனுக்குப் பயனளிக்கும் மிகவும் அரிதான இயற்கை வளமான தாமிரத்தைப் பயன்படுத்த 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டபொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் 29.5 சதவீத பங்குகளை விற்க அரசு அதிகப்படியான ஆர்வம் காட்டுவதிலிருந்தே அரசின் இந்தக் கொள்கை வெளிப்படுகிறது.

தனியார்துறையின் திறமையின்மை

1993 முதல் 2009 வரையிலான காலத்தில் நிலக்கரி உள்ளிட்ட பல இயற்கை வளங்களைக் கையாண்டதில் தனியார் துறையின் திறமையின்மை மற்றும் இயலாமை அறிந்தே அவர்களுக்குத் தன்னிச்சையாக நெறியற்ற முறையில் நிலக்கரி ஒதுக்கீடு செய்ததை வன்மையாகக் கண்டித்தது சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீா்ப்பு. இத்தகைய இயற்கை வளங்களை முறைப்படுத்துவதில் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறமையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மறுபுறம் அழுத்தம் கொடுக்கவும் செய்தது. உண்மையில் இந்தத் தீர்ப்பின்மூலம் உச்ச நீதிமன்றம் 4 தனியார் நிறுவனங்களைத் தவிர்த்து முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 218 தனியார் உரிமத்தை ரத்து செய்தது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஏற்கெனவே உற்பத்தியைத் தொடங்கியுள்ள ஒதுக்கீட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட 42 நிலக்கரிசுரங்கங்களிலிருந்து இந்திய நிலக்கரிக் கழகம் நிலக்கரியை விநியோகிக்கலாம் எனவும் உத்தரவிட்டது. “எதிர் தரப்பு வாதிட்டதுபோல் பொதுத்துறை திறமையற்றதும், சவால்களைச் சந்திக்கத் திராணியற்றதென்ற வாதம் ஏற்புடையதாக இல்லை”.

அறிவுசார்ந்த அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதுபோல், இந்திய நிலக்கரிக் கழகம் எந்தச் சவாலையும் ஏற்று தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்.

தற்போது நடந்தேறியுள்ள இந்த மகா ஊழல் சூழலில், இந்திய நிலக்கரிக் கழகம், நாட்டின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் நிச்சயமாகக் குறிப்பிட்ட பங்களிப்பு செய்யும். ஆனால், இந்த யதார்த்த நிலை, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய தேசியக் கொள்கையில் பிரதிபலிக்கவில்லை.

மாறாக, நிலக்கரிக் கழகத்தின் 10 சதவீதப் பங்கை விற்க மத்திய அரசு எடுத்த முடிவு, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் எரிசக்தித் தேவையின் உள்ளடக்கப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஆர்வமோ, முயற்சியோ இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

நிலக்கரிச் சுரங்கத் தொழில் பற்றி நிபுணத்துவம் உள்ள திரு பிரபிர் புர்கயஸ்தா, பிரண்ட்லைன் பத்திரிக்கைக்குக் கீழ்வருமாறு பேட்டி அளித்தார். இந்திய நிலக்கரிக் கழகம் தன் வசமுள்ள மிகை வருமானத்தை வைத்து தனது உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள ஏதுவாக, கழகத்துக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதே இங்குள்ள முக்கியக் கேள்வி. இன்றும் நிலக்கரிச் சுரங்க அமைச்சகத்தின் முடிவு, கழகம் தனது மிக வருமானத்தில் பயன்படுத்தி சுரங்கங்களை விரித்துக்கொள்ளவும், உற்பத்தி அளவை கூட்டுவதற்கான முயற்சிக்கு ஆதரவாக இல்லை. மேலும், வேறு மாற்று ஏற்பாடு இல்லாமல் திட்டக் கமிஷ‌னைக் கலைத்தது, நாட்டுக்கு எவ்வளவு எரிசக்தி மின்சாரம் தேவை என்பனவற்றில் திட்டமிட எண்ணமில்லை என்றே தெரிகிறது. மாறாக, இந்தப் பங்கு விற்பனை மூலமாக வரும் நிதியை வைத்து நிலக்கரிக் கழகத்தை விரிவாக்குவதற்கு பதில், பட்ஜெட்டின் பற்றாக்குறையை நிவர்த்திக்கவே பயன்படுத்தப்படுகிறது.

இந்த பங்கு விற்பனை முடிவு என்பது 1973ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனால் நாட்டுக்குக் கிடைத்த பலன்கைள கைவிடும் முயற்சி என்றே எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. மத்தியப் பொதுத்துறை அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் திரு அசோக் ராவ் கூறுகிறார் :

‘நிலக்கரி சுரங்கங்களை தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, நாட்டின் எரிசக்தி தேவையை எள்ளளவும் கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட லாபத்தை நோக்கமாகக் கொண்ட காட்டுமிராண்டித்தனமான தனியாரிடமிருந்து சுரங்கங்களை மீட்கத்தான் இந்தத் தேசியமயத்தைத் தொடர்ந்து 1970ல் நாட்டின் எரிசக்தி கொள்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டதன் விளைவான நீராவி கொதிகலன்கள் மற்றும் எரிவாயு தொழில் நுட்பங்கைள் விரிவுபடுத்தப்பட்டது.”

அவர் மேலும் கூறுகையில், நிலக்கரிக் கழகம் ஏற்கெனவே, நிகர வருமானம் ஈட்டியிருக்கும் நிலையில், இதன் பங்குகளை விற்பதற்குப் பின் எந்தவிதத் தர்க்கரீதியான நியாயமுமில்லை. நிலக்கரிக் கழகம் ஏற்கெனவே நிகர வருமானத்துடன் தேவையான கையிருப்பும் வைத்துள்ள நிலையில், நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்தவும் மேலும் லாபம் ஈட்டும் வகையில் திட்டமிடுவதற்குப் பதில், பங்குகளை விற்பதென்பது ஏற்புடையதாகாது. இத்தகைய அரசின் முடிவு, இந்த லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் முயற்சி, இந்தக் கழகங்களின வருவாய் ஈட்டும் திறனை முற்றாக பாதித்துவிடும். மேலும், இந்தக் கழகங்களின் அசையா சொத்துக்களின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பைப் பிரதிபலிக்கவில்லை. உதாரணமாக, இந்தக் கழகங்கள் நிறுவுவதற்காக நிலங்களை மானிய விலையிக்கு அரசிடம் பெற்றிருப்பார்கள். அந்த விலைகள் தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதுதான் யதார்த்தம்.

பொதுத்துறை கழகங்களின் செயல்பாட்டை நிரூபிக்க அவர் ஓர் உதாரணமும் காட்டுகிறார். பாரத் கனரக மின் கழகம் அதிக சாம்பல் தரும் நிலக்கரியைப் பயன்படுத்தும் சிறந்த தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரி அதிக சாம்பல் தன்மை கொண்டிருப்பதால், இந்தப் புதிய தொழில்நுட்பம் அவற்றை எரிப்பதற்குப் பயன்படகிறது.

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு

பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசின் இந்த பங்கு விற்பனைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. பாரதிய ஜனதா சங்கம் உள்ளிட்ட ஐந்து மத்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் அரசின் இந்தப் பங்கு விற்பனைக்கு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியத் தொழிற்சங்க மையத்தின் தேசியச் செயலர் தோழர் ராமானந்தன், பிரண்ட்லைன் பத்திரிக்கை பேட்டியில் கூறுகையில், “அரசின் இந்தப் பங்கு விற்பனை முயற்சி படிப்படியாக நாட்டின் இயற்கை வளங்கள் யாவும் தனியார்மயத்தைச் சென்றடையும் என்பதால் அனைத்து சம்மேளனங்களும் இதை ஒரே குரலில் எதிர்த்து வருகின்றனர் என்றார். மேலும் இந்த நிலக்கரித் துறை தேசியமயமாக்கப்பட்டதால், அதில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெற்றுவந்த அனைத்து உரிமைகளும் சலுகைகளும் பறிபோகும். இந்தத்துறை தேசியமயமாக்கப்பட்ட பின்னர்தான் தொழிலாளர்களின் ஊதியம், பணி நிலை சலுகைகளில் குறிப்பிடத்தக்க உயர்வும், முன்னேற்றமும் ஏற்பட்டது. இந்தத் தனியார்மய முயற்சி இதையெல்லாம் சீர்குலைத்துவிடும்.”

மாறாக, அரசு ஜார்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை ஒரே தளத்தில் இணைத்து நிலக்கரியைக் கொண்டு செல்ல ரயில்வே துறையையும் இணைத்து அடிப்படைக் கட்டுமானத்தை விரிவுபடுத்துவதில் முழுக் கவனம் செலுத்தவேண்டும். தற்போது நிலக்கரி சுரங்கங்களுக்கும், அதன் உப நிறுவனங்களுக்கும் இருக்கும் பிரச்னை நிலக்கரியை உற்பத்தி செய்யுமிடத்திலிருந்து, தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்லவேண்டிய போக்குவரத்து சீராக இல்லாததுதான்.

இதே போல் தேசிய நீர் மற்றும் மின் கழகத்தின் பங்குகள் விற்பதென்பதும், வகை தொகையற்ற தனியார்மயத்தை நோக்கியதென்பதால், நாட்டின் நீர் மின் சக்தி சம்பந்தமான விஷ‌யத்தில் அதிகமான பாதிப்பை உண்டாக்கும். பிரபிர் புர்கயஸ்தா கூறுகையில், ‘இவ்வாறு தேசிய நீர் மற்றும் மின் சக்திக் கழகத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதென்பது, ஏற்கெனவே நாட்டின் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதக் கரிசனமும் காட்டாத தனியார் துறை, தற்போது நாட்டின் ஆறுகளையும் அவர்களின் ஆளுமைக்குள் தள்ளி விடுவதற்குச் சமமாகும். தேசிய நீர் மற்றும் மின் சக்திக் கழகம், ஒரு பொதுத்துறை நிறுகூனம் என்பதால், நீர் மின் சக்தி உற்பத்திக்கும் சுற்றுச் சூழலுக்குமிடையேயான சமத்துவத்தைச் சீராகப் பின்பற்றி வருகிறது.

மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் பங்கை விற்றதில் ஏற்பட்ட முறைகேட்டை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போதைய தேசிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்தக் கழகத்தின் 29.5 சதவீத பங்கை விற்க தீவிரம் காட்டி வருவதுதான்.

அதேபோல், நாட்டின் இரும்பு மற்றும் தாமிரத்தை உற்பத்தி செய்யும் ஒரே மத்தியப் பொதுத்துறை நிறுவனம் 1944ல் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய உலோகக் கழகம். இந்த தாமிரத்தின் தேவை, நாட்டின் மின்சக்தி, போக்குவரத்து, வானியல் ஆராய்ச்சி மற்றும் நீர் நிர்வாகம் போன்ற துறைகளுக்குப் பெரிதும் பயன்படும் அடிப்படை மூலக்கூறு என்பதால், 1966ல் மத்திய அரசு உலோகத்துறையை கையகப்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களாக்கியது. இந்தத் தேசியமயக் கொள்கையே, இந்த மிக அபூர்வமான உலோகம், நாட்டின் தேவைக்கு முற்றாக பயன்படும் என்பதால்தான்.

ஆனால், பின்னால் இத்தகைய பங்கு விற்பனை நடவடிக்கைமூலம், எந்தக் காரணத்துக்காக தேசியமயமாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை முற்றாகச் சீரழித்துவருகிறது. முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2000 டிசம்பரில், இந்த இந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் 26 சதவீத பங்கை உகந்த ஒரு நிறுவனத்துக்குப் போட்டிவிற்பனை அடிப்படையில் கொடுக்க அறிவித்தது. பின்னர், ஸ்டெர்லைட் ஆப்பர்சூனிடி மற்றும் வென்சர்ஸ் லிட் என்ற நிறுவனத்தைத் தனக்கு உகந்த நிறுவனம் என்ற அடிப்படையில், இந்தப் பங்குகளை கைமாற்ற முடிவெடுத்தது.

மேலும் 2003ல் இதே நிறுவனத்துக்கு 2002ல் நடந்த பங்குதாரர்கள் குழுமக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 18.92 சதவீத பங்கை விற்றதன் விளைவாக தற்போது அந்த நிறுகவனத்தின் பங்கு 64.92 சதமாகி, நிறுவனமே தனியாரின் ஆதிக்கத்துக்குச் சென்றுவிட்டது.

சட்ட ரீதியான சவால்கள்

2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இங்கு பங்கு விற்பனையை எதிர்த்த எண்ணற்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது. 2012ம் ஆண்டு தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு மேலும் ஹிந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் 29.35 சதவீத பங்குகளை விற்கத் தீர்மானித்தது. 2013ம் ஆண்டு இந்த ஹிந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் பங்குகளை விற்றதில் ஏற்பட்ட முறைகேடுகளையும், அதில் அந்த நிறுவன அதிகாரிகளின் பங்கு பற்றியும் மத்திய உளவுத்துறை விசாரணையைத் தொடங்கியது. ஆனால் மத்திய உளவுத்துறை விசாரணை நிலுவையில் இருக்கையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 ஜனவரியில், ஹிந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் மீதமுள்ள பங்குகளான 29.35 சதவீதத்தையும் விற்க தனது விருப்பத்தை வெளியிட்டது.

அதிகாரிகளின் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இந்தப் பங்கு விற்பனையை எதிர்த்து போடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கினைத் தாக்கல் செய்தவரும், ஹிந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியுமான திரு சி.பி. பபேல் இவ்வாறு கூறுகிறார். மத்திய அரசின் இந்தப் பங்கு விற்பனை என்பது 1966ம் ஆண்டு இந்திய உலோகக் கழக (கையகப்படுத்துதல் சட்டம்) விதிகளுக்கும், 1976ம் ஆண்டு உலோகக் கழகம் (சூதசியமயம் மற்றும் பல்வகை விதிகள்) சட்டத்துக்கும் புறம்பானது.

முன்னாள் உலோகக் கழகத்தினை இணைத்து ஹிந்துஸ்தான் தாமிரக் கழகம் 1966ம் ஆண்டு ஒரு பொதுத்துறை நிறுவனமாக்கப்பட்டது. இந்தக் கழகம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதால், இந்தப் பங்கு விற்பனையும் மக்களவை மூலமாக, விதிகள் திருத்தப்பட்ட பின்னரே மேற்கொள்ள இயலும்.

மனுதாரர்கள் மேலும் கூறுகையில், பங்குகளுக்கான அடிப்படை விலையை அல்லது கையிருப்பை மிகவும் குறைவாக ரூ 11,000 கோடிக்கு ஏலப் பிணையாக முடிவு செய்துள்ளனர். ஆனால் 2013 செப்டெம்பர் நிலவரப்படி ஹிந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் கையிருப்புப் பங்கு மதிப்பு ரூ 23,632 கோடியாகும். எதிர்வரும் 30 ஆண்டுகளுக்குக் கைவசமுள்ள கச்சாப் பொருள்கள் குத்தகைக்கு விடப்பட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

உண்மையில், 2012 பிப்ரவரி மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஒரு வினாவுக்கு சுரங்கத் துறை அமைச்சகத்தின் சட்டத்துறை கொடுத்துள்ள பதிலில், ஹிந்துஸ்தான் தாமிரக் கழகத்தின் பங்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் விற்கப்படின் இது பொதுத்துறையிலிருந்து சாதாரண நிறுவனமாகிவிடுவதோடு, 1976ம் ஆண்டு உலோகக் கழகத்தின் (தேசியமயம் மற்றும் பிறவகை) விதிகளின் படியும், பொது நல வழக்குக்கான மையம் -எதிர்-மத்திய அரசு என்ற வழக்கில் 2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் உத்தரவுக்கும் புறம்பானது என்பதையும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். இந்தக் குறிப்பிட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கழகம், மற்றும் பாரத் பெட்ரோலிய கழகம் ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை மத்திய சட்டங்களில் உரிய திருத்தம் கொண்டு வராமல், தங்களது அதிகாரத்தை வைத்து பங்குகளை விற்கமுடியாது எனத் தெளிவான தீா்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு முறையாக சட்டங்களை திருத்தாமல் இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு எதிராக வழங்கப்பட்டது.

அரசின் இத்தகைய கொள்கை முடிவுகள்மீது புலன் விசாரணை அதிகாரிகள் முன்பும், நீதித்துறை முன்பும் விசாரணையில் இருக்கையிலேயே, இந்த ஹிந்துஸ்தான் தாமிர கழகத்தின் பங்குகளை விற்க அரசு காட்டிவரும் அதிகப்படியான வேகம் ஓர் உதாரணமாக இருக்கிறது.

நன்றி : Frontline

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: