வீரவாளும் வெற்றிவேலும்

சங்க காலம் / தேடல் – 19

640px-Puhar-ILango

தம் வீர வாளினைச் சுழற்றிய திசையெங்கும் வேந்தர்களுக்கு வெற்றிதான். அவர்களுக்கு உதவியாக இருந்த படைவீரர்கள் வேலேந்தினர். வாளும் வேலும்கொண்டு படையை நடத்தி, குடிகாத்து, நாட்டினை விரிவாக்கினர். முடியுடை மூவேந்தர் மரபினரின் வெற்றிகள் அனைத்தும் இவ்வகையில் பெறப்பட்டவையே. ஒரு விதத்தில் போர்களின் வழியாகத்தான் வேந்தர்களை நாம் அடையாளம் காணமுடிகின்றது.

மூவேந்தர்களின் மரபில் சங்ககாலச் சேரர்கள், சங்ககாலச் சோழர்கள், சங்ககாலப் பாண்டியர்கள் பற்றியும் அவர்களுக்கு நட்பாக அல்லது எதிரியாக இருந்த வேளிர்கள், சிற்றரசர்கள் பற்றியும் அறிந்துகொண்டால்தான் சங்க காலத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய தெளிவான ஒரு வரைபடம் நமக்குக் கிடைக்கும்.

போர்

மூன்று வேந்தர் மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை, குடை, முடி, கோல் என்பனவாகும். “வெண்கொற்றக்குடை“ என்பது, காவல் தொழிலையும் “மணிமுடி“ என்பது, அரசியல் தலைமையையும் “செங்கோல்“ என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தமக்கு நிலைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே போர் மேற்கொண்டனர். போர் இரண்டு நிலைகளில் நடைபெற்றது. ஒன்று தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள. மற்றொன்று தன் நாட்டை விரிவாக்கிக்கொள்ள.

அக்காலப் போர்க்களத்தில் வில், அம்பு, வாள், வேல், குந்தம், கோல், கைக்கோடரி, எஃகம், முசலம் போன்றவற்றை ஆயுதங்களாகவும் இரும்பாலான மெய்மறைகள், கடுவாத்தோலால் செய்யப்பட்ட சட்டை, கேடயம், உடலில் போர்த்தும் கவசம் ஆகியன தடுப்பாயுதங்களாகவும் பயன்படுத்தினர். போரைத் தொடங்கும் முன்பு கொம்பு, சங்கு, முரசு போன்றவற்றை முழக்கினர். முரசில் வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு என மூன்று வகைகள் இருந்தன. போரில் வீர முரசினை முழக்கினர். பகைவர் போரைத் தவிர்க்க விரும்பினால் அவரிடமிருந்து திறைப்பொருளினைப் பெற்றுக்கொண்டனர்.

எதிரிகளின் கோட்டை வாயில்களையும் சுற்றுச் சுவர்களையும் உடைக்க யானைப் படையினைப் பயன்படுத்தினர். வேந்தர்களுக்கு யானைகளே தாம் உலா வரும் வாகனமாகவும் போர்க்கள வாகனமாகவும் பயன்பட்டன. போர்க்களத்துக்குச் செல்லும் முன் படையானைகளுக்கு மதுவினை ஊட்டி வெறியேற்றியுள்ளனர். தேர்கள் மிகுதியாகப் பொதுவாழ்வில் பயன்படுத்தப்பட்டன. சிறுபான்மையாகப் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. தேர்ப்படையில் பலவகைத்தேர்கள் அணிவகுத்தன. தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித்தேர் என்பன அத்தேர்களுள் முதன்மையானவை. பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையே பயன்படுத்தினர். யானைகள் பூட்டப்பட்ட தேர்களும் இருந்துள்ளன. குதிரைப் (இவுளி) படைகள் பெரும்பாலும் போர்வீரர்களால் பயன்படுத்தப்பட்டன. வாளும் வேலும் ஏந்திய வீரர்கள் குதிரைமீது சென்று எதிரிகளைத் தாக்கினர். தமிழக வேந்தர்கள் இக் குதிரைப் படைகளால்தான் தமிழகத்தின் மீது படையெடுத்த வம்பமோரியர்களையும் மோரியர்களின் தடுத்தனர். நூறு எண்ணிக்கையிலான வேல் ஏந்திய காலாட்படை வீரர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, அணிவகுத்தனர். இப் படையினைத் தூசுப்படை என்றனர். போரில் இப்படையினரே முன்சென்றனர். கடல்வழியாக வரும் எதிரிகளைத் தாக்கக் கப்பற்படையினையும் வேந்தர்கள் வைத்திருந்தனர். இது அவர்களின் கடல் வாணிபத்திற்குப் பாதுகாப்பாக இருந்தது. சேரர்களின் கப்பற்படையும் யானைப் படையும் புகழ்பெற்றவை. ஈழத்தை இக் கப்பற்படையினால்தான் இரண்டாம் கரிகாற்சோழன் (பெருந்திருமாவளவன்) வெற்றிகொண்டார்.

ஒவ்வொரு வேந்தரும் நிலையான படைகளை வைத்திருந்தனர். போர்க்காலத்தில் கூடுதல் படைக்காக வாட்குடி மக்களைத் திரட்டிப் படையினைப் பெருக்கிக்கொண்டனர். அப்படையில் மறவர், எயினர், மழவர், மல்லர் போன்ற மறக்குடியினரே இருந்துள்ளனர். தனக்குக் கீழ் உள்ள சிற்றரசுகளின் படைகளை உரிமையோடு தம் படையுடன் இணைத்துக்கொண்டனர். படைவீர்ர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளித்தனர். இப் போர்ப் பயிற்சிப் பட்டறைக்கு “முரண் களரி“ என்று பெயர். போரற்ற காலங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும் படையினரின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. இதனை “வாளுடைவிழா“ என்றனர்.

போருக்குச் செல்லுதலை ஒரு விழாவாகவே கொண்டாடியுள்ளனர். இதற்காகப் பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. நன்னிமித்தம் பார்த்தல், நற்சொல்கேட்டல் (வரிச்சி), போர்வாளினை நீராட்டுதல், குடை மற்றும் முரசினைக்கொண்டு அணிவகுப்பினை நடத்துதல், வஞ்சின மொழி கூறுதல், கொற்றவை வழிபாடு (பலியிடுதலுடன்), மரபுக்குரிய மாலையணிதல், தங்கள் சின்னம் தாங்கிய கொடியினை ஏந்துதல், அடையாளப் பூவினைச் சூடுதல் போன்றன போருக்குச் செல்லும்முன் செய்யப்பெற்ற சடங்குகளாகும். வேந்தர் தன் வீரர்களுக்கு உணவளித்து மகிழ்விப்பார். இதனைப் “பெருஞ்சோற்றுநிலை“ என்பர்.

போர் நிகழும் இடத்துக்குச் சற்று தூரத்தில் வேந்தர் பாசறை அமைத்துத் தங்குவதும் உண்டு. இது கூதிர் பாசறை, வேனிற் பாசறை என இரண்டு வகைப்படும். இந்தப் பாசறை ஓர் ஊர் போலத்தோன்றும். ஆதலால், இதனைக் “கட்டூர்“ என்றனர். பாசறைப் பணியாளர்களுள் பெண்களும் இருந்தனர்.

போருக்குப் பின்னரும் சில சடங்குகள் செய்யப்பட்டன. போரில் வீரமரணம் அடைந்தவருக்கு நடுகல் எடுத்துள்ளனர். அந் நடுகல்லைச் சுற்றி வேல் நட்டி, அரண் அமைத்துக் கோவிலும் அமைக்கப்பட்டது. அங்கு நெல் உகுத்து, நீராட்டி, நாட்பலி ஊட்டி, விளக்கேற்றி வழிபட்டுள்ளனர். போரில் வெற்றிபெற்றால் வேந்தர் வீரர்களுடன் சேர்ந்து துணங்கைக் கூத்தாடுதலும் நடைபெற்றுள்ளது. வேந்தர் தம் வீரர்களுக்கு “உண்டாட்டு“ நடத்துவர். இதில் கள்ளும் உண்வும் மிகுதியா இருக்கும். பகைநாட்டில் கொள்ளையிட்ட பொருட்களின் சில பகுதியை வரிசையறிந்து வீரர்களுக்கு வழங்குவதும் உண்டு.

தாம் வெற்றிபெற்ற நாட்டில், கொள்ளையிட்ட பின்னர் தீயிட்டு அழித்தல் (மழபுல வஞ்சி, கொற்றவள்ளை ஆகிய துறைகள் இவை பற்றி விளக்கியுள்ளன), வயல்களைக் கழுதைபூட்டப்பட்ட ஏர்கொண்டு உழுதல், நீர் நிலைகளில் யானையை இறக்கிப் பாழாக்குதல், பெண்களின் கூந்தலை அறுத்தல், ஆண்களின் பற்களைப் பிடுங்குதல் போன்ற வன்முறைகளை மேற்கொண்டனர். தாம் போர்தொடுத்த நாட்டில், ஊரில் உள்ள காவல்மரத்தை அழித்தனர். ஏன் காவல் மரத்தை அழிக்கவேண்டும்? அதன் பின்னணியில், “ஒரு குலத்தின் கருவறுத்தல் சார்ந்ததொரு பெரிய நம்பிக்கை“ இருக்கின்றது.

ஓர் இனக்குழு, மூதாதையர் உறவு வைத்துக்கொள்ளும் உயிரினமே குலக்குறி. எருமை, புலி, சிங்கம், பாம்பு, கங்காரு, மீன், பல்வேறு வகை மரங்கள், செடி – கொடிகள், புறா, கோழி, மயில், முதலான பறவைகள் இனக்குழு வாழ்வில் குலக்குறியாகக் கொள்ளப்பெற்றன. இக்குலக்குறி அந்த இனத்தின் அடையாளச் சின்னமாக அமைந்தன.

புறப்பாடல்களில், மூவேந்தர்கள் பகைவர்களை வெற்றிகொள்ளும்போது அவர்களுடைய காவல் மரங்களையும் காவல் மரங்கள் இடம்பெற்றுள்ள காவற்காட்டினையும் கோடரியால் வெட்டி எரிக்கின்ற செயல் விரித்துக்கூறப்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதன் பகைவர்களின் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. புறநானூற்றின் 3, 23, 59 ஆகிய பாடல்கள் “காவல்மரம்“ பற்றி எடுத்துரைத்துள்ளன. காவல் மரங்கள் சூரிய ஒளிக்கதிர்கள் நுழைய முடியாதவாறு அடர்ந்த சோலைக்குள் (காவு) இருந்ததாகச் சுட்டியுள்ளன. சங்க காலத்தில் இனக்குழு மக்களால் காவல் மரங்கள் புனிதமானவையாகவும் வழிபாட்டிற்குரியனவாகவும் கருதப்பெற்றிருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் காவற்காட்டினைக் காவு, கடிமிளை என்று குறிப்பிட்டுள்ளன.

காவல் மரம் வழிபாட்டுக்குரிய புனிதப் பொருளாகக் கருதப்பட்டதால்தான் அதனை அவமதிக்கும் வகையில் வேந்தர் அதனை இழிவுபடுத்தும் நோக்கோடு அதில் தமது யானைகளைக் கட்டுதல், வெட்டுதல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். “ஓர் இனத்தினை அழிக்கும்போது அவ் இனத்தின் உயிர் ஆற்றலாகவும் வளமாகவும் இருக்கும் குலக்குறியினை அழித்துவிட்டால் அவ் இனம் முற்றாக அழிந்துவிடும்“ என்ற நம்பிக்கையில் இச்செயல்கள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன.

சிறந்த படைத்தலைவருக்கு வேந்தர், “ஏனாதிப் பட்டம்“ வழங்கினார். இப்பட்டம் அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கும் குடியிருப்புப் பகுதிக்கு “ஏனாதிப்பாடி“ என்ற பெயரும் இருந்துள்ளது.

சங்கச் சேரர்கள்

கொங்கணக் கடற்கரைக்குத் தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரையும் கெங்குநாடும் இணைந்த பகுதி சேரநாடாகும். மங்களுருக்கு அருகில் கடலோடு கலக்கும் சந்தகிரி ஆற்றுக்குத் தெற்கிலுள்ள மலைப்பாங்கான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சேரநாடு அமைந்திருந்தது. சேரர்கள் மலைநாட்டுக்காரர்கள். “சேரல்“ என்பது மலையைக் குறிக்கும். மலைவேடர்களுக்கு வில்லும் அம்பும் வேட்டை ஆயுதமாக இருந்ததால், அவற்றையே தங்களின் சின்னமாகக் கொண்டனர். கரூவூர், தொண்டி, நறவு, மாந்தை, வஞ்சி முதலானவை சேரநாட்டின் முதன்மையான பெரிய ஊருகளாகும். சேரநாடு “உம்பற்காடு“ என்றும் “வேழக்காடு“ என்றும் அழைக்கப்பட்டது. சேரர்களைச் சேரர், வானவர், வில்லவர், குடவர், குட்டுவர், பொறையர், மலையர் என்று அழைத்தனர்.

சேரரில் இரண்டு கிளைவழியினர் உண்டு. 1. உதியன் சேரலாதன் கிளைவழி, 2. இரும்பொறை கிளைவழி. உதியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பெருஞ்சேரலாதன், செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் உதியன் கிளைவழியில் தோன்றியவர்கள். அந்துவன் சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலியோர் இரும்பொறை கிளைவழியினர்.

சேர நாட்டின் தெற்கில் உதியன் சேரலாதன் மரபினரும் வடக்கில் இரும்பொறை மரபினரும் ஆதிக்கம் செலுத்தினர். இரும்பொறையினர் கரூரைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்தனர்.

சேரநாட்டை முதன்முதலில் வரிவாக்கம் செய்தவர் உதியன் சேரலாதன். இவர் குழுமூரில் இருந்துகொண்டு, சேரநாட்டைச் சிறுகச்சிறுக விரிவாக்கினார். இவ் ஊரில் உள்ள ஏழை, எளியவருக்கு இவர் தொடர்ந்து உணவளித்துள்ளார். ஆதலால், இவ் ஊர் “உதியன் அட்டில்“ என்று அழைக்கப்பட்டது. இவர், பாடலிபுத்திரத்தினை ஆண்ட இறுதி நந்த மன்னரின் காலத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில், இறந்தவர் நினைவாக இருப்போருக்கு உணவளிக்கும் வழக்கம் (பெரும்பிடி, பொருஞ்சோறு) தமிழகத்தில் மிகுதியாக இருந்துள்ளது. அதனைப் பின்பற்றி இவர் முன்னோர் வழிபாட்டுச் சடங்கினைப் பெரியளவில் நடத்தினார். முன்னோர் நினைவாகத் தம் படையினருக்குப் “பெருஞ்சோறு“ அளித்துள்ளார். ஆதலால், இவரைப் “முதியர்ப் பேணிய உதியன் சேரலாதன்“ என்று சிறப்பித்துள்ளனர். பாடலிபுத்திரத்தில் நந்த மன்னருக்கும் சந்திரகுப்தமோரியருக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, நந்த மன்னருக்கு உதவியாகப் படைநடத்திச் சென்றுள்ளார். வேணாட்டு வேளிர்கள் இவருக்கு வேண்டியவர்களாக இருந்ததால், காலம் கனிந்தபோது தம் நாட்டுக்குத் தெற்கே தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று, தென் கடற்கோடியைத் தம் நாட்டுக்கு எல்லையாக்கினார். இவர் இரண்டாம் நன்னனைப் போரில் வென்றார்.

உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி தம்பதியருக்குப் பிறந்தவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவர் வடஇந்தியாவரை படையெடுத்திச் சென்றுள்ளார். யவனர்களுடனும் கடற்கொள்ளையருடனும் போரிட்டு வென்றுள்ளார். இவர் கடம்பர்களை வென்று அவர்களின் காவல் மரத்தினை வெட்டித் தனக்கு முரசு செய்தார். இவர் காலத்தில் பாடலிபுத்திரத்திற்கும் தமிழகத்திற்கும் நட்புறவு நீடித்தது. அது இந்தியாவின் உள்நாட்டு (வட, தென் இந்திய) வாணிபத்திற்கு உதவியது. இவரைக் “குடக்கோ நெடுஞ்சேரலாதன்“, “குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்“, “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்“ என்றெல்லாம் அழைத்துள்ளனர். 58ஆண்டுகள் ஆட்சிசெய்த இவர், போர்வை என்ற இடத்தை ஆண்ட சோழவேந்தர் “பெருவிறற்கிள்ளி“ என்று அழைக்கப்பட்ட வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியுடன் போஓர் என்னுமிடத்தில் போரிட்டு மாண்டார்.

இவருக்குப் பின்னர் இவரது தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆண்டார். இவர், மலை நாட்டுப் பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட “உம்பற்காடு“ எனும் பகுதியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார். இவர் காலத்தில் “கொற்றவை“ வழிபாடு சிறப்புற்று இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவர், “தான் சேர நாட்டிற்குரிய அனைத்துப் பகுதிகளையும் ஆளும் வரை மணிமுடி அணியாமல், களங்காயால் செய்த கண்ணியும் நாரால் செய்த முடியும் அணிந்துதான் அரசாட்சி புரிவேன்“ என்று கூறி, அவ்வாறே அரச பதவியினை ஏற்றமையால் இவருக்கு இப்பெயர் வந்தது. இவர் நேரிமலையில் இருந்து சேர நாட்டினைச் சீர்ப்படுத்தினார். இவர் சேர நாட்டையொட்டி மேலைக் கடற்கரையில் வியலூரை ஆண்ட மூன்றாம் நன்னன்வேண்மானை வாகைப் பெருந்துறையில் எதிர்கொண்டு அழித்தார். அவ்வெற்றியின் வழியாகச் சேரநாடு இழந்திருந்த பகுதிகளைத் திரும்பப் பெற்றார்.பூழிநாட்டின் மீது படையெடுத்து அதனையும் சேரநாட்டுடன் இணைத்தார். சேர நாட்டுப் பெருவழிகளில் இருந்த கள்வர் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தினார். பசும்பூண் பாண்டியருக்கும் தனக்கும் பகையாக இருந்த நெடுமிடல் என்ற மன்னரை அழித்ததோடு, அம் மன்னனின் வளமான நாட்டினையும் அழித்தார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை தம்பதியருக்குப் பிறந்த வெல்கெழுகுட்டுவன் ஆட்சிக்கு வந்தார். இவரைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “செங்குட்டுவன்“ என்று வரலாற்றாசிரியர்கள் பலர் தவறாகக் கணித்துள்ளனர். இவர் கடற்கொள்ளையரை முற்றாக அழித்தார். ஆதலால், இவருக்குக் “கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன்,“ “கடற்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவன்“ போன்ற சிறப்புப் பெயர்கள் வழங்கலாயிற்று. இவர் காலத்தில் மோகூரைப் பழையன் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மீது வெல்கெழுகுட்டுவனின் நண்பர் அருகை என்பவர் பகைகொண்டார். பழையன், அருகையைப் போரில் வென்று, அவரைப் புறமுதுகிடச்செய்தார். அருகை தலைமறைவானார். இதனை அறிந்த வெல்கொழுகுட்டுவன் பழையன் மீது போர்தொடுத்தார். “மோகூர்“ என்ற பெயரில் பல ஊர்கள் இருந்துள்ளன. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சிக்கு அருகில், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்கு அடுத்து, பொதியமலைக்கு அருகில் என இருந்த இ்ம் மூன்று மோகூர்கள் அல்லாத ஒரு மோகூரை ஆண்ட பழையனை அழித்து, அந்த மோகூரை வெல்கெழுகுட்டுவன் கைப்பற்றினார். பழையனின் காவல் மரமான வேம்பினை வெட்டிப் பழையனின் மனைவியரின் கூந்தல்களை அறுத்து, அவற்றைக் கொண்டு கயிறுதிரித்து, அக்கயிற்றின் (மயிர்க்கயிறு) ஒரு முனையினை வீழ்த்தப்பட்ட வேம்புமரத்தினைப் பிணைத்து, மறுமுனையினை யானைக் காலில் கட்டி, யானையால் அம் மரத்தினை இழுக்கச்செய்தார். அந்த அதன் நினைவாக அப்பகுதியில் இருந்த ஒரு ஊருக்கு “குட்டுவனஞ்சூர்“ என்ற பெயரிடப்பட்டது. இது “குட்டுவன் அஞ்சிய ஊர்“ அல்ல. இதனைக் “குட்டுவனைக் கண்டு அஞ்சிய ஊர்“ என்று பொருள் கொள்ளவும். இவர் வியலூர், கொடுகூர், நேரிவாயில் போர்களில் வெற்றிபெற்றார்.

இவரது மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது இயற்பெயர் “அத்தி“. இவர் இளமையில் ஆடற்கலையில் சிறந்து விளங்கி “ஆட்டனத்தி“ என்ற பெயரினைப் பெற்றவர். இவர் இயல், இசை, நாடகம், ஆடல், பாடல் ஆகிய கலைகளைக் கற்றும் கற்பித்தும் வந்தார். இவர் முதற்கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியை மணந்தார். கழாஅர் முன்துறையில் காவிரி நீரில் இவர் நடனமாடும்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை மருதி என்பவள் காப்பாற்றி அவரை மணந்துகொண்டாள். தன் கணவரைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் மருதி இவரை ஒப்படைத்துவிட்டு, கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாள். இவரது நாட்டின் வடஎல்லையில் வாழ்ந்திருந்த ஓரினத்தவர் இவரது நாட்டிற்குள் புகுந்து ஆட்டு மந்தையினைக் கவர்ந்து சென்றனர். இவர் தாமே சென்று அவ் ஆட்டுமந்தையினை மீட்டுவந்தமையால் இவருக்கு, “ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவருக்குப் பின்னர் அந்துவன் சேரல் முதலான சிலர் ஆட்சிக்கு வந்தனர். அப்போது சோழநாட்டினை முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி ஆண்டுவந்தார். இச்சேரர்களின் காலத்தில் பூழிநாடும் கொங்குநாடும் சேரநாட்டுடன் இணைக்கப்பெற்றன.

இவர்களைத் தொடர்ந்து செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் காலூன்றியது. இவ் வேந்தரும் மற்ற சீறூர் மன்னர்களும் வணிகர்களும் பௌத்த துறவிகள் தங்குவதற்காகக் குகைகளைச் செப்பம்செய்து வழங்கினர். புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடும் “கோ ஆதன் செல்லிரும் பொறை“ இவராகவும் இருக்கக்கூடும்.

இவரது மகன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார். இவர் “அஞ்சி“ என்ற மன்னரை எதிர்த்துத் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டார். யார் இந்த அஞ்சி? வரலாற்றில் இரண்டு அஞ்சிகள் உள்ளனர். ஒருவர் அதியமான் நெடுமான் அஞ்சி. மற்றொருவர் இவரின் முன்னோரான அஞ்சி. இருவரையுமே “அஞ்சி“ என்றே குறிப்பிட்டுள்ளனர். தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு குதிரைமலை (குதிரை மூக்கு மலை) உள்ளிட்ட நாட்டினை ஆட்சிபுரிந்தவர் அதிய மரபினரான அதியமான் நெடுமான் அஞ்சி. “எழினி“ என்பது, இவருக்குரிய குடிப்பெயராகும். இவரைக் “கொங்குநாட்டு மழவர்“ என்றும் குறிப்பிடுகின்றனர். அஞ்சி தன்னைப் பகைத்த ஏழு அரசர்களையும் எதிர்த்தவர். அஞ்சி மலையமான் திருமுடிக்காரியின் மீது படையெடுத்துச் சென்று அவருடைய திருக்கோவலூரை அழித்தார். திருமுடிக்காரி தம்பியோடிச் சென்று சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் கொல்லிமலை ஓரியும் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் பகையில் இருந்தார். காரியின் துணையுடன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின்மீது படையெடுத்தார். இதனை அறிந்த பாண்டியரும் சோழரும் அதியமானுக்குத் துணையாகப் படைகொண்டுவந்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை பகைவர் அனைவரையும் துணிந்து தாக்கித் தோல்வியடையச் செய்தார். அதியமானைக் கொன்று, களவேள்வி செய்தார். இவரின் தகடூர் வெற்றியைத் “தகடூர் யாத்திரை“ என்ற நூல் விரித்துரைத்துள்ளது. “முன்னொரு காலத்தில் 14 வேளிர்கள் ஒன்றுகூடிக் காமூரை எறித்தார்கள்“ என்று புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய காமூர் நாட்டை ஆண்டவர் கழுவுள். இவர் ஆயர்குலத் தலைவர். இவர் மூவேந்தருக்கும் அடங்காமல் இருந்தார். இவரைப் பெருஞ்சேரல் இரும்பொறைத் தாக்கி, காமூரை எறித்து, கழுவுள் கோட்டையினைக் கைப்பற்றினார். சேரநாட்டின் எல்லைக்கு வெளியிலிருந்த பூழி, கொல்லிக்கூற்றம் ஆகிய பகுதிகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார். இவரது காலத்தில் பாண்டிய நாட்டில் அறிவுடை நம்பியும் சோழ நாட்டில் கோப்பெருஞ்சோழனும் ஆட்சியிலிருந்தனர். அவ் இருவருக்கும் இணையான பெருவேந்தராக இவர் விளங்கினார்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இளஞ்சேரல் இரும்பொறை. இவரது காலத்தில் சோழரும் பாண்டியரும் சேரநாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை இவர் வென்றார். விச்சி மலையினையும் அதனைச் சூழ்ந்திருந்த காட்டையும் குறுநிலங்களையும் ஐந்து பெருங்கோட்டைகளையும் கைப்பற்றினார்.

இவருக்குப் பின்னர் ஆண்ட யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் தலைநகர் தொண்டியாகும். இவரது இயற்பெயர் “வேழநோக்கின் விறல்வெஞ் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை“ என்பதாகும். இவரது கண் யானையின் கண்போன்று இருந்தமையால் இவ் அடைமொழியைப் பெற்றார். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தலையாலங்கானப் போரில் தோல்வியடைந்து கைதியானார். பின்னர் இவருக்கும் சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, சோழருக்குத் துணையாக வந்த முள்ளூர் மலைப்பகுதியினை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியிடம் (இவர் மூவேந்தரில் யார் படையுதவிகோரினாலும் உதவுவார்.) சேரர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோல்வியுற்றார்.

இவருக்குப் பின்னர், குட்டுவன்கோதை ஆண்டார்.“வானவன்“ என்று அழைப்பர். வானவன் சேரமான் குட்டுவன் கோதையின் படைத்தலைவர் பிட்டன். இவரைப் பிட்டங்கொற்றன் என்றனர். அதியர் குடியைச் சேர்ந்த அஞ்சிக்கும் எழினிக்கும் உரிமையாக இருந்த குதிரைமலைப் பகுதியைச் சேரர் கைப்பற்றித் தன் படைத்தலைவராகிய பிட்டங்கொற்றனுக்கு வழங்கினார். அதன்பின்னர் பிட்டங்கோற்றன் குதிரைமலைப் பகுதியினை ஆண்டுவந்தார். இவர் கொங்கு நாட்டிலுள்ள குறும்பொறைக்குக் கிழக்கேயுள்ள ஆமூரை ஆண்டக் கொடுமுடியைத் தாக்கினார். கொடுமுடி வென்றார். சோழநாட்டிலும் ஆமூர் உள்ளதால், இந்தக் கொடுமுடியைச் சோழரின் படைத்தலைவர் என்று கருதலாம்.

வானவன் சேரமான் குட்டுவன் கோதைக்குப் பின்னர் திருக்குட்டுவன், இளம்கடுங்கோ ஆகியோர் ஆண்டனர்.

அதன் பின்னர் கோக்கோதை மார்பன் மாரிவெண்கோ ஆட்சிக்கு வந்தார். மாந்தரஞ்சேரல் இறந்தவுடன் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சிமாநகரை முற்றுகையிட்டார். கோக்கோதை மார்பன் கோட்டைக்குள் ஒளிந்திருந்தார். “ஒளிந்திருக்கும் வேந்தரைத் தாக்குவது உமது சிறப்பிற்கு அழகல்ல“ என்று புலவர் ஆலத்தூர் கிழாரும் புலவர் மாறோக்கத்து நப்பசலையாரும் கூறியதைப் புறக்கணித்துவிட்ட கிள்ளிவளவன், வஞ்சிமாநகரின் அகழியையும் நீர்நிலைகளையும் மதிலையும் ஊர்களையும் அழித்தார். தொண்டியைத் தலைநகராகக்கொண்டு சேரநாட்டினை ஆண்டதாக மற்றொரு கோக்காதை மார்பனும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர், கிள்ளிவளவன் மதுரைப் பாண்டியரைத் தாக்கமுயற்சித்தபோது, அவரைத் தடுத்துப் போரிட்ட, பழையன்மாறன் என்பவரிடம் தோல்வியுற்றதனை அறிந்து, மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சேரப் பேரரசு தொய்வடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டபோது சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவர் ஞாயிற்றுச் சோழனுடைய மகள் நற்சோணையை மணந்தார். இத்தம்பதியருக்குப் பிறந்தவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவன்தான் சேரர் குலம் மீண்டும் உயர்வடையக் காரணமாக இருந்தார். இவரது மனைவி இளங்கோவேண்மாள். இவரது காலத்தில் இலங்கையை முதலாம் கயவாகு ஆண்டுவந்தார். “கயவாகு பொ.யு.171 முதல் பொ.யு. 193 வரை ஆண்டார்“ என்று இலங்கை வரலாற்று நூலான மாகவம்சத்தைப் புதுப்பித்த கெய்சர் குறிப்பிட்டுள்ளார். சாதவாஹனர் ஸ்ரீ சதகர்ணியும் இவரது காலத்தவரே. கொடுங்கூரை ஆண்ட கொங்கரை எதிர்த்துச் செங்களத்தில் செய்தபோரிலும் வட ஆரியரோடு புரிந்த வண்டமிழ்ப் போரிலும் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற போரிலும் இமயத்தை நோக்கிய படையெடுப்பிலும் வெற்றிபெற்றார். இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி, கண்ணகிக்குச் சிலைசெய்து, கோயில் அமைத்துப் பத்தினித் தெய்வ வழிபாட்டினை நடத்தினார். அவ் விழாவில் இலங்கை வேந்தர் கயவாகுவும் கலந்துகொண்டார். இது தொடர்பான செய்திகளைச் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகின்றது.

சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தர் கணைக்கால் இரும்பொறை ஆவார். இவர் சோழ வேந்தர் வெங்கணானிடம் தோல்வியுற்றார்.

சங்கச் சோழர்கள்

காடுகளை அழித்துக் கழனிகளாக்கிய (கழனி – விளைநிலம்) பெருமையுடையோர் சோழர்கள். இவர்கள் நாட்டைச் “சோழநாடு“ அல்லது “சோணாடு“ என்று அழைத்தனர். வடக்கில் நெல்லூரிலிருந்து தெற்கில் புதுக்கோட்டை வரையுள்ள பகுதி சோழநாடு. காடுகளில் வாழ்ந்த புள்ளிப்புலிகளின் நினைவாக இவர்கள் தமது கொடியில் புலிச்சின்னத்தைப் பொறித்தனர். சோழர்களைச் சென்னி, செம்பியன், வளவன், கிள்ளி என அழைத்துள்ளனர். புகார், உறையூர், அழுந்தூர், ஆவூர், குடமூக்கு போன்றன சோழநாட்டின் முதன்மையான நகரங்களாகும். வளம்மிகுந்த நன்செய் நிலங்களை உடைய இப்பகுதியில் நெல்விளைச்சல் மிகுதி. முதற்சோழன் வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. இவர் இங்கு ஆட்சிசெய்தபோது வட இந்தியாவில் நந்தர்கள் ஆண்டனர். சேரநாட்டினை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆண்டார். சேரரும் சோழரும் பகைகொண்டு, போர்க்களத்தில் கடும்போர் புரிந்து, அக்களத்திலேயே இருவரும் மாண்டனர்.

இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி. வரலாற்றில் “இளஞ்சேட்சென்னி“ என்ற பெயரில் நால்வர் உள்ளனர். உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, வம்ப வடுகரை ஓட்டிப் பாழியை அழித்த இளம்பெருஞ்சேட்சென்னி. இவர்கள் நால்வரும் ஒருவரே என்ற கருத்தும் உள்ளது.

இவரது காலத்தில் சேரநாட்டினை வெல்கெழு குட்டுவனும் பாண்டிய நாட்டினைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் ஆண்டுவந்தனர். மோரியர் மற்றும் கோசர்கள் இணைந்து கூட்டுப்படை நடத்திவந்து எதிர்த்தபோது, அப் படைகளைச் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி எழில்மலை பாழிகோட்டையில் எதிர்கொண்டார். வெற்றிபெற்றார். இவரது படையில் தேர்ப்படைக்கு முதன்மைத்தன்மை தரப்பட்டுள்ளது. இவர் வம்பவடுகரை வென்றார். இவர் வேளிர் குலத்துடன் மணவுறவு கொண்டவர். இவரின் மனைவி கருவுற்றிருந்த போது, இவர் ஒரு போர்க்களத்தில் மாண்டார். குழந்தை பிறந்தது. அக் குழந்தைதான் முதலாம் கரிகாற்சோழன் (கரிகால் வளவன்). இவரை இவரது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) வளர்த்தார். கரிகால் வளவனை அழிக்கப் பெரும் எரியூட்டும் சதி நடந்தது. அதிலிருந்து தப்பும்போது இவரது கால் தீயால் கருகிப் புண்ணாகியது. அதனால் “கரிகாற்சோழன்“ என்று குறிப்பிடப்பட்டார். அதன் பின்னர் பல எதிர்ப்புகளையும் தாண்டி, தன் தாய்மாமன் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் கரிகாற்சோழன் தன் இளம்வயதிலேயே ஒரு பெரும்போரினை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சிறுவன்தானே எளிதில் வென்றுவிடலாம் என்ற தவறான கணிப்புடன், சேரரும் பாண்டியரும் வேளிர் ஒன்பதுபேர்களுடன் கூடிப் பெரும்படைநடத்தி, நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள “வெண்ணி“ என்ற ஊரின் வாசலில் (கோவில்வெண்ணி), முதலாம் கரிகாற்சோழனை எதிர்த்தபோது, துணிவுடன் போராடி அனைவரையும் அழித்தார். இவர் சேரன் பெருஞ்சேரலாதன் மீது எறிந்த வேல், பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து, முதுகின் வழியாக வெளிப்பட்டது. முதுகில் புண் ஏற்பட்டதால், அவமானமடைந்த பெருஞ்சேரலாதன் போர்க்களத்தில் வடக்கு திசைநோக்கி அமர்ந்து, உண்ணா நோம்பிருந்து (உண்ணாவிரதம்) இருந்து உயிர்நீத்தார். அப்போர் நடந்த ஊர் “வெண்ணிவாயில்“ என்றும் அவ் ஊரின் வெளிப்புறங்கள் போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டதால் “வெண்ணிப் பறந்தலை“ என்றும் இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் கோசர்கள் ஆண்டுவந்தனர். முதலாம் கரிகாற்சோழன் முதலில் உறையூரையும் பின்னர் புகாரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தார். இவர் தன் மகள் ஆதிமந்தியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று அறியப்பட்ட அத்திக்கு (ஆட்டனத்தி) மணம்செய்து கொடுத்தார். இவர் ஆட்டனத்தி கழாஅர் முன்துறையில் (கழுதகாரன் துறை) நடனம் செய்ததனைக் கண்டுகளித்துள்ளார். வலிமையான கடற்படையை நிறுவி, இலங்கைமீது படையெடுத்து வென்றார். ஊளியர், அருளாளர், வடவர், வேளிர் குலத் தலைவர் இருக்கோவேள் ஆகியோரையும் வென்றார். கழாஅர் முன்துறையை ஆண்டவர் “மத்தி“. இவர் பரதவர் குலச் சிற்றரசர். இவர் கரிகாற்சோழருக்குக் கீழ்ப் பணிந்திருந்தார். ஒருமுறை யானை பிடிக்கக் கடமைப்பட்டிருந்த எழினி என்பவர் வராததால், கரிகாற்சோழர் சினம்கொண்டார். அவரது ஏவலின்பேரில் மத்தி, எழினியைத் தேடிச்சென்றார். நெடுந்தொலைவில் இருந்த எழினியைக் கண்டுபிடித்து அவரின் பல்லினைப் பிடுங்கி, அதனை வெண்மணி வாயில் கோட்டைக் கதவில் பதித்தார். தன் பெயர் எழுதிய கல்லை அவ் ஊரின் நீர்த்துறையில் அமைத்தார்.

கரிகாற்சோழருக்குப் பின்னர் தித்தன் ஆட்சிக்கு வந்தார். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்ற வேளிரின் மகன் தித்தன். இவர் சோழரின் மகளை மணந்து சோழரானார். இவரது முழுமையான பெயர் “வீரை வேண்மான் வெளியன் தித்தன்“ என்பதாகும். ஆர்க்காட்டுத் தலைவர் ஆட்சியில் இருந்த உறையூரை வென்று அங்குச் சோழ அரசினை நிறுவினார். உறையூரைச் சுற்றிலும் காவற்காட்டினை அமைத்து உறையூரைப் பாதுகாப்பான நகராக மாற்றினார். இவருக்குக் கோப்பெருநற்கிள்ளி, வெளியன் என்ற மகன்களும் ஐயை என்ற மகளும் இருந்தனர். வெளியனின் பெயர் “தித்தன் வெளியன்“ என்பதாகும். பொருநன் என்பவர் உறையூரைத் தாக்கியபோது, தித்தனுக்கு உதவியாகப் போர்வையை (போஓர்) ஆண்ட பொருநற்கிள்ளி என்பவர் உதவ விரும்பினார். ஆனால், தித்தன் அவர் உதவியைப் பெறாமலே, பொருநனை எதிர்கொண்டார். தித்தன் கொடைத்தன்மை மிகுந்தவராகவும் இருந்துள்ளார். இவரது காலத்தில் “பெருந்துறை“ சோழர்களின் முதன்மையான துறைமுகமாக இருந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் இங்குப் பெருகியிருந்தது. தித்தன் வெளியனின் படைத்தளபதியாகப் “பிண்டன்“ என்பவர் இருந்தார். இவர், தித்தன் வெளியனின் கட்டளைப்படி முதலாம் நன்னனின் தலைநகரான பாழியைத் தாக்கியபோது, நன்னனால் தேற்கடிக்கப்பட்டார்.

தித்தனின் மகன் கோப்பெருநற்கிள்ளி. இவர் ஆட்சிக்கு வரும்முன்னரே ஆமூர் மல்லனை வென்றார். இவர் போர்வை (போர்அவை, போஓர்) கோப்பெருநற்கிள்ளி என்று அறியப்பட்டார். ஆட்சிக்கு வந்தபின்னர் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியானார். “இராஜசூயம் யாகம்“ செய்ததால் இவரை “இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி“ என்று அழைத்தனர். இவரது காலத்தில் கரூரைத் தலைநகராகக்கொண்டு மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். பாண்டிய நாட்டினைக் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆண்டுவந்தார். இவர் உறையூர்ப் பகுதியை ஆட்சிசெய்த போது அழுந்தூர்ப் பகுதியைப் பெரும்பூண் சென்னி ஆண்டதாகக் கூறுகின்றனர். இவரே கழுமலத்தில் வெற்றிவாகை சூடியதாகக் கூறப்படுகின்றது.

இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைத் தொடர்ந்து கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் ஆண்டனர்.

இரண்டு சோழ வேந்தர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போட்டி நிலவியுள்ளது. நலங்கிள்ளிக்கு அஞ்சி உறையூர், ஆவூர் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகளில் மாறிமாறி நெடுங்கிள்ளி ஒழிந்துகொண்டார். பின்னர், காரியாறு என்ற இடத்தில் அவர் கொல்லப்பட்டார்.

நலங்கிள்ளிக்குப் பின்னர் அவரின் மகன் கிள்ளிவளவன் ஆட்சிக்கு வந்தார். இவரின் தந்தைப் பெயரின் பின் பின்னொட்டான “கிள்ளி“ (நலங்கிள்ளி) என்பதனையும் அவரின் தந்தைப் பெயரின் பின்னொட்டான “வளவன்“ (கரிகால்வளவன்) என்பதனையும் இணைத்து இவருக்குக் “கிள்ளிவளவன்“ என்று பெயரிட்டுள்ளனர். இவர் பாண்டியன் பழையன் மாறனை வென்று கூடல்நகரினைக் கைப்பற்றினார். இவர் வடதிசையில் இருந்த கோசரையும் அழித்துள்ளார். பாண்டிய நெடுஞ்செழியன் மதுரையிலும் சோழன் கிள்ளி வளவன் உறையூரிலும் ஆட்சியிலிருந்தபோது தொண்டையர் கடல்வழியாக்க் கூடூருக்குள் நுழைந்து வேங்கடலைப் பகுதியில் ஊடுருவினர். அவ்வாறு வந்த தொண்டையர் மரபில் மூத்தவர் திரையன். இவர் காஞ்சிபுரத்தினைத் தலைநகராகக்கொண்டு ஆண்டார். இவர் கடலரசர் குடியைச் சேர்ந்தவர். இரண்டாம் கரிகாற்சோழன் சிறுவனாக இருந்தபோது, இத்திரையன் சோழப்பேரரசினைக் கைப்பற்றியுள்ளார். இவரைப் பல்வேல் திரையன், தொண்டைமான் இளந்திரையன் என்றும் போற்றியுள்ளனர். கிள்ளிவளவனால் பாடப்பெற்ற புகழையுடைய சிற்றரசன் “பண்ணன்“. இவர் அருமனையை அடுத்துள்ள சிறுகுடியை ஆண்டவர். இவர் வயதில் முதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியநெடுஞ்செழியன் காலத்தில் இருந்து வாழ்ந்துவருபவர். இவர் காலத்தில் செம்பியனும் சேரனும் மற்ற ஐவரும் தலையாலங்கானத்தில் கொல்லப்பட்டனர். இவரது உதவியால் சோழநாடு நெடுஞ்செழியனின் மேலாண்மைக்கு வந்த்து. இவர் பாண்டியரோடும் நல்லுறவு கொண்டிருந்தார். இவர் துறவி இயக்கனுக்குப் பாழி (சமணர் படுக்கை) அமைத்துக்கொடுத்துள்ளார். இவர் “செழியன் பெருங்குளம்“ என்ற பெயரில் ஒரு குளத்தை வெட்டியுள்ளார். இவரின் முதுமையைப் போக்கக் கிள்ளிவளவன் தன் இளமையைத் தர விரும்பினார்.

சோழன் கிள்ளி வளவனுக்குப் பின்னால் பெருந்திருமாவளவன் (இரண்டாம் கரிகாற்சோழன்) ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன் இவர் சிறைப்பட்டிருந்தார் என்று குறிப்புகள் உள்ளன. இவர் காவிரிக்குக் கரை எழுப்பினார். இவர் வெட்டிய வாய்க்கால்களுள் ஒன்று “பெருவளவாய்க்கால்“ ஆகும். இவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வடக்கில் திரையர்கள் வலிமையுடன் இருந்துள்ளனர். காஞ்சியைத் தொண்டைமான்களின் மரபினர் ஆண்டனர். இரண்டாம் கரிகாற்சோழன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்த வீரர்களை அடிமைகளாக்கிச் சோழநாட்டின் நிர்மாணப் பணிகளுக்குப் பயன்படுத்தினார்.

இவருக்குப் பின்னர் செங்கணான், நல்லுருத்திரன் போன்றார் ஆட்சிக்கு வந்தனர். செங்கணான் சிவாலயங்கள் பலவற்றை ஏற்படுத்தினார். இவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவனின் சமகாலத்தவர். செங்கணானைப் ‘பெரும்பூட்சென்னி’ என்றும் அழைத்துள்ளனர்.இவரது கழுமலப்போர் குறிப்பிடத்தக்கது. சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தரான கணைக்கால் இரும்பொறையை இவர் கைதுசெய்தார்.

சங்கப் பாண்டியர்கள்

வடக்கில் வெள்ளாறிலிருந்து தெற்கில் கன்னியாகுமரி வரையிலும் கிழக்கில் சோழமண்டலக் கரையிலிருந்து மேற்கில் கேரளாவிற்குச் செல்லும் அச்சன் கோயில் கணவாய் வரையிலும் உள்ள பகுதி பாண்டியநாடு. பாண்டியர்களின் கொடியிலுள்ள சின்னம் மீன். பாண்டியர்களை மீனவர், கவுரியர், பஞ்சவர், தென்னர், செழியர், மாறர், வழுதி, தென்னவர் என்றெல்லாம் அழைத்துள்ளனர். பாண்டியர் மரபில் பழைமையானவராகக் கருதப்படுபவர் முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன். அவருக்குப் பின்னர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் நிலந்தரு திருவிற் பாண்டியன்.

பாண்டியருக்கு முன்னர் மதுரையை (கூடல்) ஆண்டவர் அகுதை. இவர் ஆண்ட கூடல் நகரினை “அகுதைகூடல்“ என்று புலவர் கபிலர் குறிப்பட்டுள்ளார். இவர் வெளியன் வேண்மான் ஆஅய் எயினனுடன் நட்புடன் இருந்தார். ஆஅய் எயினன் புன்னாட்டினை ஆண்டவருடன் நட்புடன் இருந்தார். புன்னாட்டின் மீது பாழிநாட்டை (இது சேரநாட்டின் வடகோடியில் உள்ள எழிற்குன்றத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதி) ஆண்ட முதலாம் நன்னன் தொடர்ந்து போர்தொடுத்து அம்மக்களை வாட்டினான். இந்த அறமற்ற செயலைக்கண்டு வருந்திய ஆஅய் எயினன், நன்னனின் பாழி நாட்டின் மீது போர்தொடுத்தார். அப்போரில் நன்னனின் படைத்தலைவர் மிஞிலி, ஆஅய் எயினனுடன் மோதினார். இப்போரில் ஆஅய் எயினன் மாண்டார். போர்க்களத்தில் இருந்த ஆஅய் எயினனின் உடலை அப்புறப்படுத்த விரும்பாத நன்னன் அதனைப் பறவைகள் உண்ணட்டும் என்று இருந்துவிட்டார். இக்கெடுமையைக் கண்டு கொத்தித ஆஅய் எயினனின் நண்பர் அகுதை பாழிநாட்டின் மீது படையெடுத்தார். ஆஅய் எயினனின் உறவினரின் துன்பத்தை அகுதை நீக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. ஆஅய் எயினன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரரின் படைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் படைத்தலைவரைக் கொன்ற நன்னன்மீது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் படையெடுத்துச்சென்றுப் பெருந்துறைப்போரில் நன்னனை அழித்தார் என்பது தனிவரலாறு.

வலிமை மிக்க அகுதையைப் பூதப்பாண்டியனின் மகனான நெடியோன் விரட்டியடித்துவிட்டு, கூடலில் பாண்டியப் பேரரசிற்குக் கடைக்காலிட்டார். தப்பியோடிய அகுதைக்குக் கோசர் அடைக்கலம் தந்தார். நிலம் தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியர்தான் பாண்டிய நாட்டினை விரிவாக்கம் செய்தார். ஆதலால், இவரைப் “பன்னாடு தந்த பாண்டியன்“ என்று சிறப்பிக்கின்றனர்.

இவரை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர்வழுதி ஆவார். இவரைப் புகழந்து இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) பாடியுள்ளார். இவர் முதற்கரிகாற்சோழனின் தாய்மாமன் ஆவார். இவரது காலத்தில் சேரநாட்டினைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சோழநாட்டினை உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னியும் ஆண்டுவந்தனர்.

இவரை அடுத்து உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆண்டுள்ளார். இவரது காலத்தில் சேரநாட்டினை மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினை முடித் தலைக்கோ பெரு நற்கிள்ளியும் ஆண்டனர். இவர் வேங்கை மார்பன் என்ற அரசரின் பெரிய கோட்டையினைக் கைப்பற்றியதால் “கானப்பேரெயில்கடந்த“ என்ற அடைமொழியினைப் பெற்றுக் “கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி“யானார்.

இவரைத் தொடர்ந்து அறிவுடைநம்பி என்ற பாண்டியர் ஆண்டார். இவர்காலத்தில் சேரநாட்டினைக் கருவூர் ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினைக் கோப்பெருஞ்சோழனும் ஆண்டனர்.

இவருக்குப் பின்னர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆட்சிக்கு வந்தார். “ஒல்லையூர்“ என்பது, புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்து வட்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதனை மீட்டுத் தன்வசப்படுத்தியதால் இவருக்கு “ஒல்லையூர் தந்த“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவரை அடுத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சியினை ஏற்றார். இவரது காலத்தில் சேரநாட்டினை யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். அவ் வேந்தரைத் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் இருக்கும் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற இடத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். அவரைக் கைதுசெய்து தன் சிறையில் அடைத்தார். அச் சிறையிலிருந்து யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் தப்பிச் சென்றார். இவரை எதிர்த்துச் சோழரும் சேரரும் பெரும்படையோடு “கூடற்பறந்தலை“ என்ற இடத்தில் இவருடன் மோதினர். இவர் அவ் இருவரின் படையோடும் கடுமையாகமோதினார். அவர்கள் தமது வெற்றிமுரசினைப் போர்களத்தில் விட்டுவிட்டுப் புறமுதுகிட்டனர். அவர்களைத் துரத்திச் சென்றபோது அவர்கள் தலையாலங்கானம் என்ற இடத்தில் இவரை எதிர்த்து எழுவர் (சேரர், சோழர், திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன்) ஒன்றாகப் படைதிரண்டனர். அவர்கள் அனைவரையும் நெடுஞ்செழியன் ஒருபகற்பொழுதிலேயே வீழ்த்தி வெற்றிபெற்றார். இவர் பாண்டிய நாட்டினை நல்லூர் வரை விரிவுபடுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்புக்கோயில் என்று அழைக்கப்படும் அழும்பில் என்ற இடத்தை ஆண்டுவந்த விறல்வேள் என்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்துத் தன் நாட்டினை இழந்தார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியருக்குப் பின்னர் அழும்பில் சோழர் கைக்குச் சென்றது. பின்னாட்களில் விறல்வேள் மரபினர் தம்மை “அழும்பில்வேள்“ என்ற பெயரில் அழைத்துக்கொண்டு அழும்பிலை ஆளத்தொடங்கினர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை “வென்வேற்செழியன்“ என்றும் “நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவரின் படைத்தளபதி அதிகன் என்பார் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் கொங்கரை எதிர்கொண்டார். கொங்கர் பாண்டியரின் யானைப் படையினை அழித்தார். செய்தியறிந்த நெடுஞ்செழியன் வாகைப் பறந்தலைக்கு விரைந்தார். கொங்கரை அழித்து, கொங்கருக்குரிய நாடுகள் பலவற்றைக் கைப்பற்றினார். இவரைத் “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்“ என்றும் “பாண்டிய நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது படைத்தலைவன் “கடலன் வழுதி“. இவர் “விளங்கில்“ என்ற ஊரில் ஆட்சிசெய்தவர். துறவி இயக்கனுக்கு மலைக்குகையில் படுக்கை (சமணப் பாழி) வெட்டிக்கொடுத்தவருள் இவரும் ஒருவர். இவர் கணிய நந்தி என்பவருக்கும் பாழி அமைத்துக்கொடுத்துள்ளார். இதனை மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியங்களில் “நெடுஞ்செழியன்“ என்ற பெயரில் இரண்டு பாண்டிய அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மற்றொருவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். “செழியன்“ என்ற பெயர் சங்க இலக்கியத்தில் 23 இடங்களில் வந்துள்ளது. இச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே குறித்துள்ளது. இவரையே பசும்பூட்செழியன், பசும்பூண் பாண்டியன், பசும்பூண் வழுதி என்றும் குறித்துள்ளனர்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தர் உக்கிரப் பெருவழுதியாவார். இவரே, சித்திரமாடத்துச் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுள்ளது.

பசும்பூண் பாண்டியன் என்ற வேந்தர் பற்றிய செய்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவரைப் பாண்டியர் மரபில் எவ் இடத்தில் இணைப்பது என்று தெரியவில்லை.

கூடல்நகரில் பாண்டிய அரசினை நிறுவிய நெடியோனின் மகன் பசும்பூண் பாண்டியர் ஆவார். இவர் யானைப் படையுடன் சென்று கொல்லிமலையை ஆண்ட சிற்றரசரான அதிகனை வென்று, அங்குத் தன் யானைப்படையின் வெற்றி அணிவகுப்பினை நடத்தினார். அதன்பின் அதிகன் இவருக்கு நண்பராகி, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தன் நாட்டினை இழந்து, பாண்டியருக்குப் படைத்தலைவராக மாறினார். அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவராக இருந்தார். இவர் பாண்டியருக்கு நண்பராகியதால் அவர்களும் பாண்டியருக்கு நண்பர்களாகினர். இச் சூழலில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர வேந்தர்களுடன் இணைந்து கீழைக் கொங்கர்கள் மீது படையெடுத்தபோது, கீழைக்கொங்கர்களுக்கு ஆதரவாகப் படைநடத்திய பசும்பூண் பாண்டியர் மேலைக்கொங்கரை வென்றார். இவருக்குப் படைத்தலைவராக இருந்தவர் “அதிகன்“ என்றும் “நெடுமிடல்“ என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவரை வில்கெடு தானைப் பசும்பூட் பாண்டியன், நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன், பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியர், இயல்தேர்ச்செழியன், கைவன் செழியன், கொடித்தேர்ச் செழியன், கொற்றச் செழியன், மறப்போர்ச் செழியன் என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர்.

சங்கப் பாண்டியரின் இறுதி வேந்தர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவார். இவரைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.

– – –

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: