காலனியம் : ஆதரவும் எதிர்ப்பும்

அத்தியாயம் 4

empire_main
பிரிட்டிஷ் முடியாட்சியை நீண்டகாலம் தலைமை தாங்கி நடத்திய விக்டோரியா மகாராணி தனது அறுபதாவது ஆண்டுவிழாவை ஜூன் 1897ம் ஆண்டு விமரிசையாகக் கொண்டாடினார். உலகின் வண்ணமயமான, வளமான சாம்ராஜ்ஜியமாக பிரிட்டன் அப்போது செழிப்புடன் இருந்தது. 1860 வாக்கில் பிரிட்டனின் நிலப்பரப்பு 9.5 மில்லியன் சதுர மைல். 1909 வாக்கில் இந்த எண்ணிக்கை 12.7 மில்லியன். உலகின் நிலப்பரப்பில் இது 25 சதவிகிதம். ஒப்பீட்டளவில் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம். ஜெர்மானிய சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம். பிரிட்டனின் ஆளுகையின்கீழ் 444 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்கா, தூரக் கிழக்கு, மலேயா, நியூ கினியா, பசிபிக் தீவுகள் என்று தொடங்கி உலகம் முழுவதும் வாழ்ந்து வந்தனர். ஒரு கண்டம், நூறு தீபகற்பங்கள், இரண்டாயிரம் நதிகள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பத்தாயிரம் தீவுகள் ஆகியவை பிரிட்டனுக்குச் சொந்தமாக இருந்தன. விக்டோரியா மகாராணி நிச்சயம் மன நிறைவுடன் தனது வைர விழாவைக் கொண்டாடியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த மனநிறைவு வேறு பலரிடமும் இருந்தது. உலகம் இதுவரை கண்ட நன்மைகளில் சிறந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்றார் லார்ட் கர்ஸன். மனித வரலாற்றிலேயே மிகப் பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட சுதந்தரம் என்றால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்தான் என்று பெருமிதத்துடன் அறிவித்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். புகழ்பெற்ற ஸ்காட்டிஷ் வரலாற்றாசிரியரான நீல் ஃபெர்குசன் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தன் பாணியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்றளவும் உயர்த்திப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் மனிதாபிமான முகம் கொண்டது என்று கர்ஸன், ஸ்மட்ஸ் ஆகியோரைப் போல் நீல் ஃபெர்குசன் நிறுவ முயற்சி செய்யவில்லை என்றபோதும் பிரிட்டனின் பங்களிப்பு அதன் அனைத்துக் குறைபாடுகளையும் கடந்து பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அடிமைகளைப் பயன்படுத்தி செல்வம் குவித்தது உண்மை. அதைப் பெருமிதமாக அந்நாடு கருதியதும் உண்மை. ஆனால் எந்த அளவுக்குத் தீவிரமாக அடிமைகளைக் குவித்துக்கொண்டதோ அதே தீவிரத்துடன் அடிமை ஒழிப்பிலும் ஈடுபட்டது என்கிறார் ஃபெர்குசன். கடுமையாக இனப் பாகுபாட்டைக் கடைபிடித்த அதே பிரிட்டன் இன்று மாறிவிட்டது. 1857ம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் திரண்டு எழுந்தது. ஜமைக்காவில் 1831 மற்றும 1865ம் ஆண்டுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் 1899ம் ஆண்டும் இதே போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதெல்லம் பிரிட்டன் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி கலகக்காரர்களை ஒடுக்கியது. அயர்லாந்தில் 1840களிலும் இந்தியாவில் 1870களிலும் பஞ்சம் பரவியபோது பிரிட்டன் அவ்வளவாக அசைந்துகொடுக்கவில்லை. பல சமயங்களில் பஞ்சத்துக்கு அதுவே காரணமாகவும் இருந்திருக்கிறது. இவையனைத்தையும்மீறி வரலாற்றில் பிரிட்டன் வகித்த முக்கியப் பாத்திரத்தை நாம் மறந்துவிடக்கூடாது என்கிறார் ஃபெர்குசன்.

Nial Ferguson

Niall Ferguson

19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பண்டங்கள், மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் சுதந்தரமான நடமாட்டத்தை பிரிட்டன் அளவுக்கு வேறு எந்த நாடும் உயர்த்திப் பிடித்ததில்லை என்கிறார் இவர். மேற்கத்திய சட்டம், ஒழுங்கு, ஆட்சிமுறை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டுசென்ற பெருமை பிரிட்டனையே சேரும். சிற்சில விதிவிலக்குகள் போக, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஊழல் இருந்ததில்லை. இத்தனைப் பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றிருந்தும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் சரிந்தது ஏன்? பலரும் நினைப்பதுபோல் டப்ளின் தொடங்கி டில்லி வரை பரவிய தேசியவாதப் போராட்ட அலை அல்ல நிஜக் காரணம். பிரிட்டனுடன் போட்டிப் போட்ட பிற சாம்ராஜ்ஜியங்களே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் ஃபெர்குசன்.

காங்கோவில் பெல்ஜியம் இழைத்த கொடுமைகள் அதீதமானவை. ரப்பர் தோட்டங்களும் ரயில்வே பாதைகளும் காங்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் பலன்கள் அனைத்தும் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட் வசமே சென்று சேர்ந்தது. இவர் ஆட்சியில் ஏற்பட்ட படுகொலை, பஞ்சம், நோய் ஆகியவற்றின் காரணமாக பத்து லட்சம் காங்கோ மக்கள் உயிரிழந்தனர். மொத்த மக்கள் தொகையில் இது சரி பாதி. இதே காங்கோவை ஆண்ட பிரெஞ்சும் இத்தகைய ஆட்சியையே நடத்தினர். அல்ஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பிரான்ஸின் காலனியாதிக்கம் அளவற்ற உயிரழப்புகளையே ஏற்படுத்தியது. இப்படி பெல்ஜியம், பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி என்று பிற நாடுகள் உலகைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த சூழலில் பிரிட்டன் இந்தப் போட்டியைச் சமாளிக்க அவர்களுடன் மோத வேண்டியிருந்தது. இந்த மோதல் பிரிட்டனின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. எனவே பிரிட்டன் வேறு வழியின்றி தனது காலனியக் கொள்கையைக் கைவிட்டது.

இந்த வாதத்தின்மூலம் நீல் ஃபெர்குசன் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, ஒப்பீட்டளவில் பிற காலனியாதிக்கச் சக்திகளைவிட பிரிட்டன் அதன் காலனிகளிடம் நியாயமாகவே நடந்துகொண்டது. காலனிகளின் நலனுக்காக, அவர்களை உய்விப்பதற்காகத்தான் காலனியாதிக்கம் தோன்றியது என்று சொல்லமுடியாவிட்டாலும் இறுதியில் பிரிட்டன் தீமைகளைக் காட்டிலும் நன்மைகளையே அதிகம் வழங்கியது. ஒருவேளை பிரிட்டனின் காலனியாக இல்லாமல் போயிருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம், தனிமனித சுதந்தரம், ஆங்கில மொழி போன்ற உயர்வான பங்களிப்புகள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஃபெர்குசன். இரண்டாவது, பிரிட்டன் தன் காலனியக் கொள்கைகளைக் கைவிட்டது பெரும் உலக நன்மைக்காக. இது ஒரு தியாகம். இந்தத் தியாகத்தின் பலனாக அதன் பிற தீமைகள் அனைத்தும் உதிர்ந்து சிதறிவிட்டன.  அதாவது, அச்சு நாடுகளின்  அணியில் இருந்த ஜெர்மனி மற்றும் இத்தாலி பெரும் ஆதிக்கச் சக்திகளாக நீடித்திருந்தால் உலகம் வேறு பாதையில் சென்றிருக்கும். அதனைத் தடுக்கவேண்டுமானால் அவர்களுடைய காலனிகள் உதிர்ந்து அவர்களுடைய பலம் குறைந்தாகவேண்டும். அதற்கு முன்நிபந்தனையாக பிரிட்டன் முதலில் தன் காலனிகளை உதறித் தள்ளியது.

ஃபெர்குசனின் வாதத்தை பங்கஜ் மிஷ்ரா திட்டவட்டமாக மறுக்கிறார்.  ஐரோப்பாவை, மேலை நாட்டு மதிப்பீடுகளை, வெள்ளை நிறவெறியை உயர்த்திப் பிடிக்கும் போக்கு வரலாற்றில் நீண்டகாலமாகவே நிலவிவருகிறது என்கிறார் மிஷ்ரா. வெள்ளை நிறத்தவரே உலகை ஆளும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை அவர்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளை நிறவெறியுடன் கூக் க்ளக்ஸ் கிளான் குழுவினர் கறுப்பின மக்களை எரித்துக்கொன்றனர். வெள்ளையினம் அழிந்துவிடப்போகிறதே என்று அஞ்சினார் தியோடர் ரூஸ்வெல்ட். இஸ்லாமியர்கள் உலகின்  விரோதிகள் என்று பலர் வெளிப்படையாகவே எழுதினர். நாஜிகளின் இனவெறுப்பு சித்தாந்தத்துக்கு மேற்குலகில் பல ஆதரவுக் குரல்கள் எழுந்தன. பலமானதே உலகை ஆள்வதற்கு வல்லது என்னும் கருத்து வலுவாக ஆதிக்கம் செலுத்தியது. நீல் ஃபெர்குசன் அத்தகையோரில் ஒருவர் என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. பிரிட்டனின் காலனியாதிக்கத்தை மட்டுமல்ல அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தையும்கூட ஃபெர்குசன் நியாப்படுத்தவே செய்கிறார் என்பதையும் மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார்.

நாகரிகமற்றோரை முன்னேற்றுவதைக் கடமையாக வரித்துக்கொண்ட வெள்ளைக்காரர்களின் சுமையைக் கண்டு பரிதாபப்படும் ஃபெர்குசனின் அணுகுமுறை வலதுசாரிகளின் எழுச்சியால் முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் பிரிட்டனைவிட அமெரிக்காவில் இத்தகைய குரல்களுக்கு ஆதரவும் மரியாதையும் பெருகியிருப்பதையும் பங்கஜ் மிஷ்ரா சுட்டிக்காட்டுகிறார். நீல் ஃபெர்குசனின் சிவிலைசேஷன் : தி வெஸ்ட் அண்ட் தி ரெஸ்ட் என்னும் புத்தகத்தின் தலைப்பே அவருடைய போக்கை உணர்த்திவிடுகிறது. அனைத்து பலங்களையும் கொண்ட, அற்புதங்கள் நிறைந்த, மனித குலத்துக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும் ‘தி வெஸ்ட்’ ஒரு பக்கம். இவையனைத்துக்கும் எதிராக உள்ள ‘தி ரெஸ்ட்’ இன்னொரு பக்கம். இப்படித்தான் உலகை ஃபெர்குசன் பிரிக்கிறார். அவரைப் பொருத்தவரை நாகரிகம் என்பது என்ன? மனித வாழ்வில் தொடர்ச்சியாக முன்னேற்றங்களைக் கொண்டுவரும் திறன். கடந்த ஐந்நூறு ஆண்டுகளை எடுத்துவைத்துப் பார்க்கும்போது உலகின் பிற நாடுகளைவிட அதிக அளவிலான முன்னேற்றங்களை மனித வாழ்வில் ஏற்படுத்தியது மேலை நாடுகள்தாம். மேற்கத்திய நாகரிகம் 1500ம் ஆண்டு தொடங்கி ஆறு முக்கிய அம்சங்களில் பிற நாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்கிறார் ஃபெர்குசன். சொத்துரிமை, போட்டி மனோபாவம், அறிவியல், மருத்துவம், நுகர்வோர் சமூகம், பணி சார்ந்த விழுமியங்கள் ஆகியவையே நாகரிகத்தை இயக்கும் ஆறு ‘கில்லர் ஆப்ஸ்’ ஆகும். இவற்றைக் கொண்டே மேற்கு பிறவற்றைவிட முன்னேறியது; பிறவற்றை ஆளவும் செய்தது.

வலிமையானது பலவீனமானதை ஆள்வது இயற்கையானது, இயல்பானது என்று நிறுவ முயலும் ஃபெர்குசனை ஏற்க மறுக்கிறார் பங்கஜ் மிஷ்ரா. முதலாளித்துவ நவீனத்துவத்தை வந்தடைந்து அதன்மூலம் உலகமயமாக்கலை மேற்கு தோற்றுவித்தது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் ஃபெர்குசன். மேற்கு உண்மையில் பிற நாடுகளைவிடச் சிறந்துள்ளதா என்று அவர் பார்க்க விரும்வில்லை. அது ஏன் சிறந்த விளங்குகிறது என்று மட்டுமே கேட்கிறார். அதாவது, மேற்கு உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தது என்னும் முன்முடிவுடன் தன் ஆய்வை அவர் தொடங்குகிறார். இது தவறான அணுகுமுறை என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. வரலாறு இவ்வளவு தட்டையானதோ எளிமையானதோ அல்ல. ஃபெர்குசனின் வாதத்தை மறுக்க சி.ஏ. பெய்லியின் வாதம் ஒன்றை மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார். பெய்லியின் பார்வையில், நவீன ஐரோப்பா மற்றும் நவீன அமெரிக்காவின் உருவாக்கத்தில் ஆசியாவின் பங்களிப்பு அழுத்தமாகவே உள்ளது. ஹாம்பர்க், நியூ யார்க் பூர்ஷ்வா முதலாளிகளைப் போலவே சீன முதலாளிகளும் தென் கிழக்கு ஆசிய வர்த்தகத்துக்கும் பண்ட பரிமாற்றங்களுக்கும் பங்காற்றியுள்ளனர். வர்த்தகம் மட்டுமல்ல கலை, அறிவியல், கலாசாரம் என்று பல துறைகளில் ஆசியாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் வழக்கம் மேற்கத்திய ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது. காலனியாதிக்கம் சரியானதுதான் என்று வாதிடுபவர்களில் பலர் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தாம்.

ஃபெர்குசனின் மதிப்பீட்டின்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்பது உலகம் பின்பற்றப்படவேண்டிய ஒரு மாடல். தற்போதுள்ள நிலையில் பிரிட்டனின் இடத்தைப் பிடிப்பதற்கான தகுதி கொண்ட ஒரு நாடு அமெரிக்கா. அமெரிக்கா பிரிட்டன் வழியில் நடக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். ‘செயல்திறன் மிக்க ஒரு லிபரல் சாம்ராஜ்ஜியம் உலகுக்கு இன்றும் தேவைப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.  அந்தப் பாத்திரத்தை வகிக்க அமெரிக்கா பொருத்தமான நாடு. அதன் பாதுகாப்புத் தேவைகளுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான நோக்கத்தின்  அடிப்படையிலும் அமெரிக்கா இந்தப் பதவிக்குப் பொருத்தமானதுதான். அதற்கான தனித்துவம் மிக்க தகுதிகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது.’

அதே சமயம் அமெரிக்காவிடம் சில குறைபாடுகளும் உள்ளன என்கிறார் ஃபெர்குசன். அதன் அரசியல் கலாசாரம், பொருளாதார அமைப்பு, சமூகத் தோற்றம் ஆகியவற்றில் சில மாற்றங்களை அமெரிக்கா செய்யவேண்டியிருக்கும் என்கிறார் அவர். பிரிட்டனின் பாதையில் சென்று அதே சமயம் பிரிட்டனின் சில தவறுகளைச் செய்யாமல் இருந்தால் அமெரிக்கா ஓர் வலுவான சாம்ராஜ்ஜியமாக உருமாறும், உலகையும் உருமாற்றும் என்பதே ஃபெர்குசனின் நம்பிக்கை. அமெரிக்காவுக்கு அடுத்த சக்தி அவரைப் பொருத்தவரை சீனா. இந்த இரண்டும் ஒன்றுசேரவேண்டும் என்னும் தன் கனவையும் ஃபெர்குசன் இன்னோரிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவும் சீனாவும் கைகுலுக்கிக்கொண்டால் ஒன்றின் குறையை இன்னொன்று நிறைவுசெய்யும் வகையில் அந்தக் கூட்டணி அமையும் என்று அவர் கருதுகிறார்.

உலகின் முன்னேற்றத்துக்கு ஒரு வலிமையான தலைமை தேவையா? பின்தங்கிய நாடுகளை இத்தகைய வலிமையானதொரு தலைமை தத்து எடுத்துக்கொள்வது அவசியமா? தொடக்கத்தில் கார்ல் மார்க்ஸ் இத்தகைய நம்பிக்கையே கொண்டிருந்தார். 1853ம் ஆண்டு நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூனில் எழுதும்போது  பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அடிப்படைப் புரட்சியை ஏற்படுத்துகிறது என்றும் ஆசியாவின் சமூக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்றும்தான் குறிப்பிட்டார். இந்த நடைமுறை வலி மிகுந்தது என்றபோதும் பல ஆண்டுகளாக குவிந்துகிடக்கும் பிசகுகள் அகல இந்த ஆட்சிமுறை உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பதை அவர் வெகு விரைவில் கண்டுகொண்டார். தன் கருத்தை உடனடியாகத் திருத்திக்கொள்ள அவர்  தயங்கவில்லை.

0

மேற்கொண்டு வாசிக்க :

  1. Why we ruled the world, Niall Ferguson, niallferguson.com
  2. The Global Empire of Niall Ferguson, Janet Tassel, Harvard Magazine
  3. Watch This Man, Pankaj Mishra, London Review of Books
  4. Civilization : The West and the Rest, Niall Ferguson
  5. Empire: How Britain Made the Modern World, Niall Ferguson

One comment

  1. சோ.சுத்தானந்தம்
    #1

    காலனீயக்கொள்கை கைவிடப்பட பொருளாதார சீரழிவு முக்கிய காரணம்.ஃபெர்குசன் குறிப்பிடுவதுபோல் மற்ற ஆதிக்க நாடுகளை பல்வீனப்படுத்த பிரிட்டன் செய்த தியாகம் என்று நிச்சயம் கூறமுடியாது.காலம் காலமாக அந்நிய படையெடுப்புகளும்,ஆக்கிரமிப்புகளும் பொருளாதாரச்சுரண்டலுக்காகவே நடந்தேறியது.சுரண்டல் முற்றுப்பெற்றதும் அல்லது சுரண்டலுக்கு வழி இல்லாமல் போனதும்தான் அது வெளியேறுகிறது.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: