கவரிங் மீன்கள்

05-thanga-meengal-12-600

இந்திய தேசிய விருது பெற்ற இன்னொரு தமிழ்ப் படம். தமிழ் தேசிய அரசியல் பின்புலம் உடைய இயக்குநரான ராமுக்கு இந்த விருது தரப்பட்டதையும் அதை அவர் கவுரவமாகப் பெற்றுக்கொண்டதையும் பார்க்கும்போது ஓர் இந்தியத் தமிழனாக என் அரசியல் மனம் பூரிப்படையவே செய்கிறது. தகுதியற்ற படைப்பு என்றாலும் தரமற்ற விருதுதான் என்பதால் என் கலை மனமும் பெரிதாக வருத்தமெல்லாம் அடையவில்லை. எனவே, இது சார்ந்த வாழ்த்துகளை இரு தரப்பாருக்கும் முதலில் தெரிவித்துவிடுகிறேன்.

அப்பறம், திரைப்படம் என்பது காட்சிபூர்வமாகக் கதை சொல்லும் கலை என்றாலும் கதை, திரைக்கதை, வ்சனம் என்ற அடிப்படை அம்சங்கள் சிறப்பாக இருந்தால்தான் காட்சிபூர்வ அணுகுமுறை என்பதுபற்றிப் பேசவே முடியும். திரைக்கதை சரியாக இல்லாத ஒரு படத்தின் காட்சி மொழியும், கலர் டோனும் கேமரா நகர்வும் என்னதான் சிறப்பாக இருந்தாலும் அது விளக்கமாத்துக்குக் கட்டின பட்டுக் குஞ்சலமாகத்தான் இருக்கும். மேலும் தமிழ் திரைப்படத்தில் காட்சி மொழி சார்ந்து எந்தப் பெரிய பாய்ச்சலும் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. கிரேன் ஷாட்டோ, டிராலி ஷாட்டோ, மழைக் காட்சியோ, லொகேஷன்களோ எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர் எந்த அளவுக்குத் தலையைக் காட்டிக்கொண்டு அமர்கிறார் என்பதை மட்டுமே பொறுத்தது; கதைக்கும் காட்சிக்கும் பெரிதாக எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. எனவே, தமிழ் திரைப்பட விமர்சனம் என்பது பெரிதும் திரைக்கதை பற்றிய விமர்சனமாக மட்டுமே இருப்பதை இன்னும் சிறிது காலத்துக்குத் தவிர்க்கவே முடியாது. இந்த விமர்சனமும் அப்படியான ஒன்றே.

இனி படத்துக்குள் நுழைவோம்.

இந்தப் படம் வெளியாகத் தாமதமானபோதும் வெளியானபோதும் தமிழ் தேசிய அரசியலின் நேரடி மற்றும் மறைமுக விசுவாசிகள் தங்களுடைய ஊடகச் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, இயேசு பெருமகனாரின் இரண்டாம் வருகையை சுவிசேஷப் பிரசங்கிகள் சற்றும் மனம் தளராமல் கொண்டாடுவதைப்போல் சிலிர்த்தெழுந்து பரவசமடைந்தார்கள். ஆனால், இந்தப் படம் வெளியானபோது விசுவாசிகள் நீங்கலாகப் பொது ஜனமும் பார்க்க நேர்ந்ததால், ஒரு சில எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன. இயக்குநர் ராம் ஒரு கலைஞனின் அறச் சீற்றத்தோடு தார்ப் பாய்ச்சிக்கொண்டு களமாடினார். ஒரு கலைஞன் தன் படைப்பு விமர்சிக்கப்படும்போது கோபப்படுவது நியாயம்தான். ஆனால், ராம் ஏன் கோபப்பட்டார் என்பதைத்தான் இன்றுவரையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்பது என்ற அபத்த வாக்கியத்தில் ஆரம்பிக்கும் படம் அதே தடத்தில் வஞ்சமில்லாமல் சர சரவெனப் பயணித்து ஓர் அபத்தக் கட்டுரையோடு முடிவடைகிறது. இடையிடையே ஏராளமான அசட்டு உச்சங்களும் மிகை உச்சங்களும் உண்டு.

பேரன்பு கொண்ட அப்பா, அதைவிட பாசம் கொண்ட மகள் என்ற கரு ஒருபக்கம்… கல்வியை வியாபாரமாக்கும் தனியார் பள்ளிகள் மீதான விமர்சனம் இன்னொரு பக்கம்… பணத்தை முக்கியமாகக் கருதாத எளிய கிராமத்தான் என்ற கரு இன்னொரு பக்கம்… உலகமயமாக்கலின் கோர முகத்தின் மெல்லிய தீற்றல் வேறொரு பக்கம் எனப் பல அரிய விஷயங்களைப் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதாக இயக்குநர் பேட்டிகள் தந்தும் கோனார் நோட்ஸ்கள் எழுதியும் தமிழ் உலகுக்குச் சொல்லிக்காட்டினார். நல்ல உன்னதமான நோக்கங்கள்தான். ஆனால், படம் பார்த்தவர்களுக்கும் இந்த அம்சங்கள் படத்திலிருந்தே புரிய வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அல்லது குறைந்தபட்சம் படத்தின் டிக்கெட்டோடு இந்த கோனார் நோட்ஸையும் தந்திருந்தார் என்றால், ஓஹோ இதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும். இனி வரும் படங்களில் ராம் முன்கூட்டியே இந்தத் திருப்பணியைச் செய்துவிட்டால் சிறந்த இயக்குநர் விருதோடு நல்லாசிரியர் விருதையும் சேர்த்தே தந்துவிடலாம்.

குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு தந்தைக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மதில்ச்சுவர் இல்லாத குளம் எந்த அச்சுறுத்தலையும் தந்திருக்காதா என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்து ஆரம்பிக்கிறேன். படத்தின் க்ளைமாக்ஸ் நிகழ்வுக்கு அவசியம் என்பதால், அந்தக் குழந்தையை வீட்டிலும் ஊரிலும் இருக்கும் அனைவரும் எந்தக் கண்காணிப்பும் இன்றி அந்தக் குளத்தில் ஆடிவிளையாட அனுமதிக்கிறார்கள் (அதிலும் அந்த கிராமத்துக் குளத்தில் துணி தோய்க்கும் ஒருவரையோ குளிக்கும் ஒருவரையோ உட்கார்ந்து கல் எறியும் ஒருவரையோ கூட நாம் பார்க்க முடிவதில்லை. ராமின் கனவுக் குளம் என்பதால் அவருடைய கதாபாத்திரங்கள் தவிர வேறு யாரும் நெருங்கவே முடியவில்லை போலிருக்கிறது). அதிலும் க்ளைமாக்ஸில் பூட்டியிருக்கும் வீட்டையே திறந்துகொண்டு அதிகாலையில் குழந்தை குளத்துக்கு வந்துவிடுகிறது. இவ்வளவு அலட்சியத்துடன் இருக்கும் ஒரு அப்பாவை எப்படிப் பேரன்பு கொண்டவனாக ஏற்றுக்கொள்வது?

இதுகூடப் பரவாயில்லை. படத்தின் டைட்டிலை நியாயப்படுத்தும்வகையில் அந்த அப்பா சொல்லும் அசட்டுக் கதை இருக்கிறதே… கேட்டாலே உடம்பைப் பதற வைக்கிறது. அதாவது, காட்டில் இறப்பவர்கள் மரங்களாகிவிடுவார்கள். மலையில் இறப்பவர்கள் மேகங்களாகிவிடுவார்கள். குளத்தில் இறப்பவர்கள் தங்க மீன்களாகிவிடுவார்கள் என்று சொல்கிறார். குழந்தை தங்க மீனாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு குளத்துக்குள் குதித்துவிடுகிறது. பின் என்ன செய்யும்? இறுக்கமான பள்ளிக் கல்விக்கு மாற்றாக குழந்தையின் படைப்பூக்கத்தைத் தூண்டும் வகையில் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அப்படிச் சொல்லும் விஷயங்களைக் குழந்தைகள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பதையும் யோசித்துத்தானே நாம் பேசவேண்டும். அதைத்தானே குழந்தை மீது அன்பு கொண்ட அப்பாக்கள் செய்வார்கள். ஆனால், இந்தப் படத்தில் வரும் நாயகனோ தடுப்பு இல்லாத குளத்துக்குக் குழந்தை தனியே வந்து போவது தொடர்பாக எந்த அக்கறையும் இல்லாதவனாக இருப்பதோடு, குழந்தை குளத்தில் குதித்து இறப்பதற்குத் தோதான கதையைச் சொல்பவனாகவும் இருக்கிறான்.

படத்திலேயே இப்படியான இரண்டு அபாயமான சம்பவங்கள் கிட்டத்தட்ட நிகழவும் செய்கின்றன. படத்தின் தொடக்கத்திலேயே குழந்தை தன்னந்தனியாக குளத்தில் தங்க மீனைத் தேடிக் கொண்டிருக்கிறது. பதறியபடியே ஓடிவரும் அப்பா என்ன செய்கிறார் என்றால், குளம் ஆழம் என்பதை குளத்தில் இறங்கிக் காட்டுகிறார். அதோடு குழந்தை இனிமேல் குளத்தில் ஆழமான இடத்துக்குச் செல்லாது என்று நிம்மதி அடைந்துவிடுகிறார். குழந்தையை சுதந்தரமாக எல்லா இடத்துக்கும் சென்றுவர அனுமதிக்கவேண்டும் என்பது அப்பாவின் நோக்கமாக இருந்தால் குளத்துக்கு அருகே வீடு இருக்கும் தந்தை முதலில் குழந்தைக்கு நீச்சல் அல்லவா கற்றுத் தரவேண்டும். அதுதானே அன்பான தந்தை செய்யும் முதல் செயலாக இருக்கும்.

இன்னொரு காட்சியில் இதுபோல் குழந்தை குளத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கையில் குழந்தையின் தாத்தா சரியான நேரத்தில் வந்து காப்பாற்றிவிடுகிறார். அப்போதுகூட அவர் குழந்தைக்கு நீ சொல்லிய கதை அவளுடைய உயிரையே பறிக்கவிருந்தது என்று சொல்லி மகனிடம் கோபப்படுகிறார். அதற்கு நாயகனோ, என் கதையைக் கேட்டு குழந்தை செத்தால் சாகட்டும். அவள் என் குழந்தைதானே என்று எகிறுகிறார். இதுதான் பேரன்பு கொண்ட தந்தையின் லட்சணமா?

இப்படிச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதோடு நின்றிருந்தால் கூடப் பரவாயில்லை. செய்ய வேண்டாததைச் செய்பவராகவும் நாயகன் உருவாக்கப்பட்டிருக்கிறார். குழந்தை ஒரு நாய்க்குட்டி வேண்டும் என்று ஆசையாகக் கேட்கிறது. அதன் விலையோ 25,000. இது தெரியவந்ததும் ஒரு அப்பா என்ன செய்வார்? அதிலும் 2000 ரூபாய் பள்ளிக்கு ஃபீஸ் கட்டவே முடியாத அப்பா அவர். மகளைக் கூப்பிட்டு அடிக்குரலில் அதெல்லாம் ரொம்ப விலை அதிகம். தெரு நாய்க்குட்டி ஏதாவது ஒன்றை வளர்த்துக்கொள். அல்லது விலை குறைந்த நாய் ஒன்றை வாங்கித் தருகிறேன் என்றுதானே சொல்வார். ஆனால், இந்த நாயகனோ செய்ய முடியாத, செய்ய வேண்டாத அந்தச் செயலுக்காகப் படாதபாடு படுகிறார். போதாத குறையாக, மனஸ்தாபத்தில் இருக்கும் குழந்தையைத் திருப்திப்படுத்த பரிசுகள் வாங்கித் தருவது சகஜம்தானே என்ற ஜஸ்டிஃபிகேஷன் வேறு. தேரோட்டத்துக்குப் போன குழந்தை தேர் பொம்மை வேண்டும் என்று கேட்டால் வாங்கித்தரலாம். தேரே வேண்டும் என்று கேட்டால்..? என்னதான் அதிஅன்பான அப்பாவாக இருந்தாலும் தலையில் ஒரு கொட்டு கொட்டித்தானே அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்துவார். அதைவிட்டு விட்டு திருவிழா நிர்வாகக் கமிட்டியிடம் சென்று தேரை விலை பேசவா செய்வார். இப்படியான அதீத கதாபாத்திர உருவாக்கம் நாயகன் மீது அன்புக்கு பதிலாக எரிச்சலையே உருவாக்குகின்றன.

ஆயிஷா என்றொரு கதை. பலரும் படித்திருப்பீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி படு சுட்டியாக இருப்பாள். மாவட்ட நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்துப் படித்து ஆசிரியர்களுக்கே கற்றுக்கொடுப்பாள். அவர்களைக் கேள்விகளால் துளைத்து எடுப்பாள். 11-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தெரியாத கணக்கைக்கூட அவர்களுக்கு வெறுமனே சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல், இம்போசிஷ்ன் போல் எல்லாருக்கும் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு படிப்பில் ஆர்வமானவள். சுருக்கமாகச் சொல்வதானால், அவள் ஒரு லட்சிய மாணவி. கல்வித்துறை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கே கற்றுக் கொடுக்கும் தகப்பன் சாமி. ஆனால், அந்தக் கதையில் என்ன நடக்கிறதென்றால், அந்த ஆயிஷா உடம்பு மரத்துப் போகும் மயக்க மருந்தை தானாகவே உடம்பில் செலுத்திக்கொண்டு இறந்துவிடுகிறாள். அதாவது ஆசிரியர்களின் பிரம்படியில் இருந்து தப்பிக்க அவள் அப்படிச் செய்துகொள்கிறாளாம்.

உண்மையில் இந்தக் கதை வெளியான 90களின் பிற்பகுதியில் பள்ளிகளில் மாணவர்களை அடிப்பது அறவே நின்றுபோய்விட்டிருந்தது. அதிலும் அப்படியான ஒரு பிரச்னைக்கு எந்தவொரு குழந்தையும் இப்படி ஒரு அபாயகரமான அசட்டுத்தனமான செயலை யதார்த்தத்தில் செய்ததே இல்லை. படைப்பூக்கம் மிகுந்த லட்சிய மாணவியான ஒருத்தி அப்படிச் செய்து இறந்துபோனதாகக் காட்டியதன் மூலம் ஆசிரியர் என்னதான் சொல்லவருகிறார். நாமக்கல் அன்கோவுக்கு மிகப் பெரிய துருப்புச் சீட்டு அல்லவா அது. இதனால்தான் நாங்கள் பாடத்தைத் தவிர வேறெதிலும் குழந்தையின் கவனம் குவிய விடுவதில்லை. க்ரியேட்டிவிட்டி என்று அவர்களுக்கு சுதந்தரம் தந்தால் இப்படித்தான் ஏடாகூடமாக எதையாவது செய்துகொள்வார்கள் என்று சொல்லிக் காட்ட ஒரு வாய்ப்பை அல்லவா உருவாக்கித் தருகிறார்.

படைப்பூக்கம் மிகுந்த குழந்தை மிகப் பெரிய சாதனைகளைச் செய்ததாகக் காட்டுவதுதானே பள்ளிகளிலும் படைப்பூக்க உலகின் கதவைத் திறந்துவிட வைக்கும். தன் கட்சிக்காரருக்குத் தானே தூக்குத் தண்டனையை வாங்கித் தரும்படியாகவா ஒரு வக்கீலின் வாதம் இருக்கவேண்டும். இதே அசட்டுத்தனம்தான் ராமிடமும் வெளிப்படுகிறது.

அடுத்ததாக, தனது உன்னத கருத்துகளுக்காக இவர் அமைத்திருக்கும் திரைக்கதையைப் பார்த்தால், ராம், நீங்கள் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுகொள்ளுங்களேன் என்று கையெடுத்துக் கெஞ்சவேண்டும் போலிருக்கிறது. உலகமயமாக்கலினால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலைக் காட்சிப்படுத்த மனதுக்குள் நினைத்திருக்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தொழில் என்ன தெரியுமா… பாத்திரத்துக்கு பாலிஷ் போடும் தொழில். டவுனில் இருக்கும் கடைக்காரர்கள் தாங்களே பாலிஷ் போட ஆரம்பித்ததால் கிராமத்தில் இந்தத் தொழிலைச் செய்தவர்கள் நசிவடைய ஆரம்பித்துவிட்டார்களாம். அப்படியே நடந்தாலும் அது உள்ளூர் போட்டியால் நடக்கும் மாற்றம்தானே. இதில் உலகமயமாக்கல் என்ன பாவம் செய்தது? பன்னாட்டு கம்பெனியா பாத்திரத்துக்கு பாலிஷ் போட ஆரம்பித்துவிட்டிருக்கிறது. காளி மார்க் சோடாவை கொக்ககோலா அழித்தது. ஆட்டுக்கல், அம்மிக் குழவிகளை உள்ளூர் கிரைண்டரின் வருகைதானே இடம்பெயர்த்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என நவீனத்துவத்தின் வருகையால் நடந்த ஒரு மாற்றம் தானே இது. அதுபோல்தானே பாத்திரங்களுக்கான கிராமத்து பாலீஷ் தொழிலை டவுன் எந்திரம் இடம்பெயர்ப்பது என்பதும். மேலும் படத்தில் சொல்லிக் காட்டுவதுபோல் இந்த பாலிஷ் தொழிலானது வயதாகி இறக்கும் நிலையில் இருக்கும் பாரம்பரியத் தொழில் ஒன்றும் கிடையாதே… விஷயம் என்னவென்றால், தன் குழந்தைக்கு சில்வர் மேனாக இருக்க விரும்பி அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உலகமயமாக்கல், பன்னாட்டு நிறுவனம் என அதில் அரசியல் பேச ஆரம்பித்ததுதான் அபத்தமாகப் போய்விட்டிருக்கிறது.

இதுதான் இப்படியென்றால், குழந்தைக்கு ஒரு டீச்சரின் மீது மிகுந்த நேசம் ஏற்படுகிறது. அந்த டீச்சரின் பெயரையே தனக்குச் சூட்டிக் கொண்டு மகிழ்கிறது. அந்த ஆசிரியரைத் தன் தாயைவிட அதிகமாக நேசிக்கிறது. இதற்கு ராம் அமைத்திருக்கும் திரைக்கதை இருக்கிறதே… அப்பப்ப்பா… அதாவது, பள்ளியில் பிரேயர் நடக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் இறந்துவிட்டதால் பள்ளிக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கிறார்கள். இந்தக் குழந்தை கைதட்டி மகிழ்கிறது. உடனே வகுப்பாசிரியர் அந்தக் குழந்தையைக் கண்டித்து முட்டிக்கால் போடும்படி தண்டனை கொடுக்கிறார். போதாதென்று உன் அப்பா செத்தாலும் இப்படித்தான் பண்ணுவியா என்று படு கொடூரமாகக் கேட்கிறார். உடனே நம் லட்சிய ஆசிரியர், அறைக்குள் நுழைந்தபடியே இப்படியா குழந்தையிடம் பேசுவார்கள் என்று சொல்லி வகுப்பாசிரியரைக் கண்டித்து அந்தக் குழந்தையை எழுந்து தன் வகுப்பறைக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறார். இவ்வளவுதான் செய்கிறார். அந்தக் குழந்தைக்கு வானில் இறந்து இறங்கி வந்த தேவதைபோல் அந்த ஆசிரியர் ஆகிவிடுகிறார். மாவட்ட ஆட்சியாளர் இறந்ததெற்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்களா என்ற கேள்விகளையெல்லாம் கேட்டால் நமக்குத்தான் மனம் புண்ணாகும் என்பதால் விட்டுவிடுவோம். வேறு வகுப்பின் ஒரு ஆசிரியர் ஒரே ஒரு நாள் அன்பாக ஒரு வார்த்தை பேசியதும் அந்த ஆசிரியரையே தன் ஹீரோவாக ஒரு குழந்தை நினைத்துக்கொண்டுவிடுமா… அன்பு தேடிப் பாலையில் அலையும்போது ஒற்றை மழைத்துளி பேரின்பத்தைத் தரும் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அந்த ஆசிரியரை, அவருடைய கருணையை இன்னும் விரிவாக அல்லவா காட்சிப்படுத்தியிருக்கவேண்டும். நாலைந்து தூரிகைத் தீற்றல்களில் ஒரு உருவத்தைக் கொண்டுவருவது என்பது வேறு. ரூல்ட் நோட்டில் மார்ஜின் லைனைப் போட்டுவிட்டு பார்வையாளனையே முழு ஓவியத்தை வரைந்து கொள்ளச் சொல்வது என்பது வேறு.

அடுத்ததாக, தமிழ் சினிமாவின் க்ரானிக் நோயான மிகை. சினிமாவுக்கு நாடகீயம் தேவைதான். ஆனால், அதிலும் ஒரு கலை நயம் இருக்கவேண்டும். கட்டுப்பாடு இருக்கவேண்டும். இடைவேளைக்குப் பின்வரும் ஒரு காட்சியில் குழந்தையை அவளுடைய அம்மா ஒரு சடங்கு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இதற்கு முந்தின காட்சியில்தான் இரண்டாம் வகுப்பில் ஃபெயிலான அந்தக் குழந்தைக்கு மூன்று நாளில் மறு தேர்வு எழுதி அதில் பாஸானால்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லியிருப்பார்கள். அம்மாவும் குழந்தையை வீட்டுக்குள் பூட்டி வைத்து படிக்கச் சொல்லியிருப்பார். குழந்தை படிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கவே, ஒழுங்கா மரியாதையா படி. அப்பத்தான் சடங்கு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்று சொல்வாள் அம்மா… என்ன இழவுடா இது… பெயிலான குழந்தைக்கு மறு தேர்வு நடக்கும் முக்கியமான நேரத்திலா சடங்கு வீட்டுக்கு சுற்றுலா போவார்கள்.

இதுதான் இப்படியென்றால், அந்தச் சடங்கு வீட்டில், சிறு வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு வந்துவிடுவதாகச் சொன்னதும் சாப்பாட்டைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்துவந்துவிடுவாள் அம்மா. குழந்தை வயதுக்கு வருவது பற்றி  வெகுளியாகக் கேட்கவே ஹிஸ்டீரியா வந்தவர்போல் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகிறார். கேட்டால், தன் குழந்தையும் சிறு வயதிலேயே வயதுக்கு வந்துவிட்டால் படிக்க முடியாமல் போய்விடும் என்ற பதற்றமும் பயமும் அவரை அப்படி பேய் போல் நடந்துகொள்ளவைக்கிறதாம். கர்த்தரே… இவர்கள் செய்வது என்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். மன்னித்தருளும்.

இதுபோல் ரெயின் மேக்கர் என்ற புல்லாங்குழலைக் கண்டுபிடிக்கும் காட்சியாக படத்தில் ஒன்று வருகிறது. அதாவது, தன் செல்லக்குழந்தை கேட்கும் வோடஃபோன் நாய்க்குட்டியை வாங்க நாயகனுக்கு 25,000 ரூபாய் உடனடியாகத் தேவைப்படுகிறது. ஒரு கலைப்பொருள் சேகரிப்பாளர் அரிய பழங்குடிப் புல்லாங்குழல் ஒன்றைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து தந்தால் 25,000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருப்பார். கூகுளில் தேடினால் எளிதில் கிடைத்திருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், நாயகன் கால்நடையாகவே அந்தப் புல்லாங்குழலின் படத்தை கண்ணில் தென்படுபவர்களிடமெல்லாம் காட்டி இதைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டுத் தேடுவான். ஐம்பது வருடங்களுக்கு முந்தைய படங்களிலும் காணாமல் போனவர்களை இப்படிப் புகைப்படத்தைக் கையில் தூக்கிக்கொண்டு திரிந்துதானே கண்டுபிடிப்பார்கள். எனவே, இன்றும் அப்படியே தேடுகிறார் நாயகன்.

அதோடு இந்த ரெயின் மேக்கர் என்ற புல்லாங்குழலானது உண்மையில் கேரளப் பழங்குடிகளிடம் இருந்திருக்கவில்லை. அப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் கலைப் பொருள் சேகரிப்பாளருக்கு அதன் புகைப்படமும் பழங்குடிகளிடம் இருக்கும் விவரமும் தெரிந்திருக்கும் நிலையில் அது எந்த மலைக்கிராமத்தில் இருக்கும் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம். சிவப்புத்தோலுடன் போய்க் கேட்டுப் பார்த்துக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதால், உள்ளூர் எடுபிடிகளின் உதவியை அவர்கள் நாடியிருக்கவேண்டும். எனவே, எந்த கிராமம் என்பதைத் தேட வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், இயக்குநர் ராமின் மூளை இதை வைத்து ஓர் அதி அபாரமான ஒரு காட்சியை யோசித்துவிட்டிருப்பதால், கதையின் நாயகன் ஊரெல்லாம் தேடித் தேடி அலைகிறான். கடைசியில் அதிர்ஷ்டவசமாக ஒரு வெள்ளைக்கார தம்பதி லேப் டாப்பில் அந்த ரெயின் மேக்கர் பற்றிய வீடியோவைப் பார்த்துக் கொண்டிருப்பதை நாயகன் பார்த்துவிடுவான். இந்த இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன செய்வோம். நம்முடைய ஓட்டை ஆங்கிலத்தில் ஐ வான்ட் திஸ் பீஸ்… ஃபுல் லாங் குழல்… வேர் கெட் என்று பேசி விஷயத்தைத் தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், தமிழ் திரை நாயகன் அல்லவா… எனவே லேப் டாப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பயந்து மிரளும் படியாகத் தன் தாடி மண்டின முகத்தை பின்பக்கமாக இருந்து அவர்கள் முன் நீட்டுகிறான். அவர்கள் பயந்து ஓடிப்போகவே இவனும் துரத்துகிறான். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறவே இவனும் பாய்ந்து ஏறி லேப் டாப்பைப் பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். இப்படியெல்லாம் செய்தால் திருடன் என்று அடித்து நொறுக்கிவார்களே என்று அவன் மனத்தில் தோன்றவே இல்லை. ஏனென்றால், அவன் மனத்தில் குழந்தையின் மீதான பேரன்பும் அந்தக் குழந்தை கேட்டதை வாங்கிக் கொடுக்கத் தேவைப்படும் புல்லாங்குழலும் மட்டுமே நிறைந்திருக்கிறதாம்.

சரி இதுதான் இப்படியென்றால் அந்த புல்லாக்குழல் இருக்கும் பழங்குடி கிராமத்தைத் தேடி நாயகன் புறப்படும் சாகசப் பயணம் இருக்கிறதே… இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. இப்படி அசட்டு மிகைக் காட்சிகளை அமைத்துவிட்டு நாங்கள் மேட்டுக் குடிபோல் இழவு வீட்டில் நாசூக்காக கர்ச்சீப்பால் கண்களை ஒற்றிக் கொள்பவர்கள் அல்ல. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழும் வர்க்கத்தைச் சேர்ந்த்வர்கள். எனவே எங்கள் எல்லா உனர்ச்சி வெளிப்பாட்டிலும் மிகை இருக்கத்தான் செய்யும் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. இத்தகைய படு மட்டமான நியாயப்படுத்தல்கள் பல காலமாகத் தமிழில் வேரூன்றியிருக்கிறது. கலையழகுடன் படமெடுக்கத் தெரியாமல் இருப்பதை மறைக்கச் சொல்லப்படும் மோசமான வாதம் இது.

உண்மையில் ஒப்பாரி போன்ற உணர்ச்சிமய நேரங்கள் நீங்கலாக கடை., இடை நிலை சாதியினரும் உணர்வுகளை படு நுட்பமாக வெளிப்படுத்தும்  இயல்பு கொண்டவர்க்ளே. பூமணி, சோ தர்மன், பாமா போன்றவர்களில் ஆரம்பித்து ஜாதிக் கதாபாத்திரங்களை உரிய அடையாளங்களுடன் உயிர்ப்புடன் உலவவிட்டவர்களின் கதைகளை எடுத்துப் பார்த்தால் அந்தப் பிரிவு மக்கள் எவ்வளவு நுட்பமாக விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பது புரியும். ஐந்து நட்சத்திர விடுதியில் க்வாட்டர் அடிச்சுக் குப்புறப் படுத்தபடி எழுதிய காட்சிகளை மண்ணின் மணம் கமழும் காட்சிகள் என்று சொல்லிக் கொண்டுவந்தால், தமிழ் சமூகமே எட்டி உதைக்கத்தான் செய்யும். காலம் இந்தக் குப்பைகளை நிதானமாக அதன் இடத்துக்குத் தள்ளி வந்திருப்பதைப் பார்த்த பிறகுமா இந்த மிகை மீது இத்தனை காம வெறி?

குளத்தில் மூழ்கி இறக்க இருந்த பேத்தியைக் காப்பாற்றிய தாத்தா, பொறுப்பில்லாத தன் மகனை அடித்துவிடவே ரோஷம் கொள்ளும் மகன் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறான். எங்கு போனான் என்ன ஆனான் என்பதே சில நாட்கள் யாருக்கும் தெரியவில்லை. பள்ளி ஃபீஸுக்கு 2000 ரூபாய் சம்பாதித்துவர போயே போய்விடுகிறான். மாதக் கணக்கில் இரவும் பகலும் உழைத்து ஓடாகத் தேய்கிறான். இடையில் காய்ச்சல் வேறு வருகிறது. பயங்கரமாக இரும வேறு செய்கிறான். அதற்குள் காச நோயோ வந்துவிட்டதோ என்று பயந்துவிடேன். அப்படி அவர் உழைத்து ஓடாகத் தேய நம்பர், ஆறு, விவேகானந்தர் தெரு துபாய் குறுக்குத் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் பஸ் ஸ்டேன்ட் அருகில் போய்விட்டாரா என்றால் அதெலாம் இல்லை. ஒரு மாலையில் ரயில் ஏறினால் மறுநாள் காலையில் வீட்டை அடைந்துவிட முடியுயக்கூடிய கொச்சினுக்குத்தான் போயிருக்கிறார்.

பேரன்பு கொண்ட அப்பாவுக்குக் குழந்தையைப் பார்க்காமலேயே எப்படி இத்தனைநாள் இருக்க முடிகிறது? குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தானே சில பல ஆண்டுகளாக சில்வர் மேன் வேலையில் இருந்து வந்திருக்கிறார். அந்த வைராக்கியத்தை பார்வையாளர்களுக்காக எதற்காக மாற்றிக் கொள்ளவேண்டும்? அவனுடைய அப்பா இதற்கு முன் திட்டியிருக்கவே மாட்டாரா? சரி அப்படியே அப்போதுதான் ரோஷம் வந்தது என்றாலும் குழந்தையைப் பார்க்காமலே இருக்கும்படி அப்படி என்ன ஆத்திரம். வாரத்துக்கு ஒரு தடவை வந்துபோகவேண்டியதுதானே. குழந்தை வோட போன் நாயைக் கேட்பதும் அதற்கான பணத்தைத் தேடி அலைவதும் சிறிது காலம் கழிந்த பிறகுதானே நடக்கிறது.

இதில் இன்னொரு பலவீனம் என்னவென்றால், நாகர்கோவிலில் நடக்கும் கதையில் ஒரு கதாபாத்திரம் கூட நாக்ர்கோவில் தமிழைப் பேசவில்லை. கேரளாவில் கதை நடக்கும்போது மலையாளி கதாபாத்திரங்கள் சிறப்பாக மலையாளத் தமிழில் பேசுகிறார்கள். நாகர்கோவில் தமிழிலும் கொஞ்சம் மலையாள வாசனையைக் கலந்திருந்தால் கதையின் நம்பகத்தன்மையும் பார்வையாளர்களுக்கான ஈர்ப்பும் அதிகரித்திருக்குமே. கே.எஸ்.ரவிக்குமார் கூட கோயம்புத்தூர் கதாபாத்திரங்களை கோயம்ம்புத்தூர் தமிழில் பேச வைப்பாரே… அந்த குறைந்தபட்ச நேர்த்திகூட இல்லாமல் படமெடுத்துவிட்டு நான் மட்டுமே கலைஞன் என்று மார் தட்டித் திரிய வெட்கமாக இல்லையா? அதிலும் நாகர்கோவிலில் முதியவர்களைப் பெரிசு என்றா அழைப்பார்கள். பாட்டியை ஆச்சி என்றா அழைப்பார்கள். அம்மாவை அம்மே (அம்மை) என்றும் அப்பாவை அச்சன் என்றும் பாட்டியை அம்மச்சி என்றும் அழைப்பதாகக் காட்டினால்தானே அது டிபிக்கல் நாகர்கோவில் வாசனையைக் கொண்டுவரும்.

அதுபோல் வசனங்களில் இருக்கும் அபத்தத்தைப் பற்றிப் பேசுவதானால் பேசிக்கொண்டே செல்லலாம். குழந்தைக்கு பள்ளிக்கு ஃபீஸ் கட்ட 2000 பணம் வேண்டுமென்று நண்பனிடம் கதாநாயகன் கடன் கேட்கிறான். அவனோ பணம் இல்லை என்று சொல்வதோடு நிறுத்தாமல், உன் குழந்தையை ஃபீஸே கேட்காத அரசு பள்ளியில் சேரு என்று ஆலோசனை சொல்வான். உடனே நாயகனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். உடனே என்ன சொல்வான் தெரியுமா… பணம் இல்லாதவங்கன்னா முட்டாள்னு நினைக்காதீங்கடா… நண்பன் சொன்ன அறிவுரையில் முட்டாளாக நினைக்கும் தொனி எங்கே இருக்கிறது? பணம் இல்லாதவனுக்கு புள்ளை மேல பாசம் இருக்ககூடாதா… நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கணுங்கற ஆசை ஏழைகளுக்கு இருக்ககூடாதா என்றுதானே கேட்டிருக்கவேண்டும். முட்டாள் என்ற வார்த்தை இங்கு எதற்கு வரவேண்டும். அப்பா குதிருக்குள் இல்லையென்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்க என்ன அவசியம்?

இன்னொரு இடத்தில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை வைத்து சொற் சிலம்பம் ஆடுவார் பாருங்கள். அந்தக் காக்காவே தூக்கில் தொங்கியிருக்கும் அதைக் கேட்டால். அதாவது, குழந்தைக்கு டேன்ஸ் ஆடத் தெரியவில்லை என்று ஆசிரியர் திட்டியிருப்பார். அப்பாவோ, என் மகளுக்கு ஆடத் தெரியாதுன்னு உங்களுக்குத் தெரியுமா… அவ நன்றாக ஆடுவாள் என்று சொல்வார். எல்லா அப்பாவும் இப்படித்தான் சொல்வாங்க. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ஆசிரியர் கடிந்துகொள்வார். உடனே, நாயகன் வெகுண்டெழுந்து காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு காக்கா வந்து உங்க கிட்ட சொல்லிச்சா என்று ஆவேசமாகக் கேட்பார்.

இந்த இடத்தில் இந்தக் கேள்வி எதற்காக வருகிறது? என் மகள் திரைப்படப் பாடல்களுக்கெலாம் நன்றாக ஆடுவாள். நான் என் மகளுக்கு நிறைய நடனப் பாடல்களின் கேசட் வாங்கிக் கொடுத்து பயிற்சி கொடுத்திருக்கிறேன். அவள் நன்றாக ஆடுவாள். என் மகள் என்பதற்காக நான் சொல்லவில்லை என்று எதையாவதுதானே சொல்லியிருக்கவேண்டும். காக்கா வந்து சொல்லிச்சா என்று கேட்பவரிடம் எந்தப் பழமொழியையும் சொல்லவே முடியாதே… பாம்பின் கால் பாம்பறியும் அப்படின்னு சொன்னா பாம்பு வந்து சொல்லிச்சா என்பார்… ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் அப்படின்னா மாடு வந்து சொல்லிச்சா என்று கேட்பார் போலிருக்கிறது. ஒரு பழமொழியை எப்படிப் பயன்படுத்தவேண்டும்… எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுகூட தெரியாமல் என்னதான் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்து முடித்தாரோ தெரியவில்லை.

ஹேய்… இட்ஸ் பீன் சோ லாங்… வேர் ஹேவ் யு பீன்… ஓகே. ஹேவ் அ குட் டே… சீ யூ சூன்… இந்த உரையாடலைக் கொஞ்சம் பாருங்கள். தொலைபேசியில் ஒருவர் இன்னொருவருடன் பேசும் வசனங்கள் இவை. எதிர்முனையில் இருப்பவரை நீண்ட காலத்துக்குப் பிறகு தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. நீண்ட நாள் கழித்துப் பேசுபவரிடம் நாலைந்து வார்த்தைகள் கூடுதலாகப் பேசுவதுதானே இயல்பு. காட்சிப்படி குறுகிய உரையாடல் இடம்பெற வேண்டிய இடத்தில் நீண்ட நாள் நண்பருடன் பேசும் பேச்சு எதற்கு? ஆஸ் ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் ப்ளீஸ் க்ராண்ட் மீ டூ டேய்ஸ் லீவ் என்பதைத் தாண்டி நமக்கு எதுவும் தெரியாதென்றால் எந்த விஷப்பரீட்சையும் எடுக்காமலேயே இருந்திருக்கலாமே… அல்லது ஒரு குறுகிய உரையாடலைத் தமிழில் எழுதிவிட்டு அதை ஆங்கிலத்தில் மொழி மாற்றிக் கொண்டிருக்கலாமே… எதற்கு தமிழ் எம்.ஏ. ராம், பீட்டராக முயற்சி செய்யவேண்டும்?

அதிலும் இயக்குநர் வடிவமைத்திருக்கும் கதாபாத்திரத்தின் மன உலகை அவர் கோனர் நோட்ஸ் போட்ட பிறகும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பெரும் செல்வந்தர் வீட்டு ஏழையாகக் கதாநாயகனைக் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஒரு பரம ஏழை தன் மகளை உருகி உருகி நேசிப்பதையும் இந்த உலகம் ஏளனம் செய்யத்தானே செய்யும். உன் புள்ளைக்கெல்லாம் பெரிய பள்ளிக்கூடத்துல படிப்பு எதுக்கு… வீட்டு வேலைக்கு அனுப்பினா நாலு காசாவது கிடைக்குமே என்று வார்த்தைகளில் தேன் தடவி நஞ்சைப் புகட்டும் சமூகம்தானே இது. அதுதானே பார்வையாளர்களுக்கும் நாயகன் மேல் கூடுதல் கரிசனத்தைக் கொண்டுவரும். எதற்காகப் பணம் இருக்கறவங்க மத்தியில பணம் இல்லாமல் தவிக்கும் ஒருவரை கதையின் நாயகனாக தேர்ந்தெடுக்கவேண்டும். அவனுடைய உணர்வுகள் எல்லாமே வறட்டுப் பிடிவாதமாகவும் வீண் கவுரவமுமாகத்தானே இருக்கின்றன. அவன் ரொம்பவும் கஷ்டங்களை அனுபவிப்பதாகக் காட்டும்போது அது நம்மைத்தொடுவதே இல்லையே. குடையை மடக்கிக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு செருப்பைத் தலையில் மாட்டிக்கொண்டு நடக்கும் ஒருவன், வெய்யில் என்னை எப்படியெல்லாம் வாட்டுகிறது என்று நம் முன் நின்று கதறினால் நமக்குப் பரிதாபமா வரும். எரிச்சல்தானே வரும்.

இப்படிப் படம் முழுக்க செய்ய வேண்டியதைச் செய்யாமலும் செய்ய வேண்டாததைச் செய்தபடியும் தந்தைப் பாசம் என்ற பெயரில் நம்மை வெகுவாகச் சோதித்துவிட்டு, கடைசியில் ஒரு பிரம்மாஸ்திரத்தை வீசுவார் பாருங்கள்… மர்மம் கலங்கிப் போய்விடும். அதாவது, அப்பாவிடம் வறட்டுக் கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடிப் போய், குழந்தையின் அதிகப்படியான ஆசை ஒன்றை நிறைவேற்றுகிறேன் என்ற போர்வையில் காடு மலையெல்லாம் ஏறி கஷ்டப்பட்டுவிட்டு வீடு திரும்புவார். சொன்ன நேரத்தில் அப்பா நாய்க்குட்டியுடன் வரவில்லையென்றதும் அந்தக் குழந்தை அப்பா ஆசைகாட்டியபடியே குளத்துக்குள் குதித்து தங்கமீனாக ஆக முடிவெடுக்கிறது.

க்ளைமேக்ஸ் பரபரப்புகளுக்குப் பிறகு குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறார். தான் சொன்ன கதையும் குழந்தையின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளாமல், குழந்தையைப் ஃபெயிலாக்கின பள்ளி மீதும், பணம் சம்பாதிக்கத் தெரியாத தன்னைத் திட்டிய குடும்பத்தினர் மீதும் பழியைத் தூக்கிப் போடுகிறார். ஃபீஸே கேட்காத அரசுப் பள்ளியில் குழந்தையைச் சேர்க்கிறார். சொல்லிவைத்தாற்போல் லட்சிய ஆசிரியையும் அந்த அரசுப் பள்ளியிலேயே சேர்ந்துவிட்டிருக்கிறார். திருமணத்துக்காக தனியார் பள்ளிப் பணியில் இருந்து நின்றவர், அரசுப் பள்ளியில் எப்படியோ சேர்ந்துவிட்டிருக்கிறார். அவர் இருப்பதால், அந்தக் குழந்தையும் நன்றாகப் படித்து கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றுவிடுகிறது. எப்படிச் சொல்லிக் கொடுத்தார்… குழந்தையின் கற்றலில் இருந்த குறைபாடு எப்படித் தீர்ந்தது என்பது பற்றியெல்லாம் ஒரு காட்சியும் கிடையாது. ஏழைக் கதாநாயகன் ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆகிவிடுவதைப் பார்த்து வளர்ந்த கூட்டம்தானே… இந்த லட்சணத்தில் நான் உலக சினிமா எடுத்துவிட்டிருக்கிறேன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. உலகம் என்பது ராமின் குடும்பத்தினர் வாழும் வீட்டில் ஆரம்பித்து உதவியாளர்கள் படுத்துறங்கும் ஆஃபீஸில் முடிவடையும் ஒன்றா என்ன?

மெதுவாகக் கற்றுக் கொள்ளும் குணம் கொண்ட ஒரு சிறுமி… அந்தக் குழந்தையைக் கட்டம் கட்டித் தாக்கும் பள்ளி… குழந்தையின் எதிர்காலம் குறித்து அதீத பயம் கொள்ளும் குடும்பம்… குழந்தையின் மீது நம்பிக்கையும் பாசமும் கொண்ட தந்தை… அருமையான கதை முடிச்சு அல்லவா? பள்ளியில் குழந்தையை நடத்தும் விதம் குறித்து தொடர்ந்து சண்டை போடுகிறான். ஒருகட்டத்தில் நாங்கள் சொல்லித் தருவது தவறு என்று தோன்றினால் நீங்களே சொல்லிக் கொடுங்கள் என்று பள்ளியில் சொல்கிறார்கள். அப்பாவும் அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறார். குழந்தையை எந்தப் பள்ளிக்கும் அனுப்பாமல் வீட்டில் வைத்தே சொல்லித் தருகிறார். அக்கம் பக்கத்தில் இருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று வரலாறு கற்பிக்கிறார். வயல் வெளிக்கு அழைத்துச் சென்று தாவ்ரவியல் கற்றுத் தருகிறார்.

கோவிலுக்கு அழைத்துச் சென்று கலைகளையும் தமிழையும் பக்தியையும் பணிவையும் கற்றுத் தருகிறார். தேவாலயத்துக்கும் மசூதிக்கும் அழைத்துச் சென்று மத நல்லிணக்கத்தைக் கற்றுத் தருகிறார். கிராமத்தில் இருக்கும் பாட்டிகளிடம் அழைத்துச் சென்று பாரம்பரிய மருத்துவம் கற்றுத் தருகிறார். தச்சுக்கூடத்துக்கு அழைத்துச் சென்று மரவேலை கற்றுத் தருகிறார். சுற்றுப்புறங்களில் நடக்கும் கைவினைத் தொழில்களை அறிமுகம் செய்துவைக்கிறார். கிராமப்புறங்களில் நிலவும் சாதிய ஒடுக்குதல்களைச் சொல்லிக் காட்டி சக மனிதர்களுடன் அன்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று கற்றுத் தருகிறார்.

இப்படியாக பத்தாம் வகுப்பு வரை தன் குழந்தைக்குத் தானே ஆசிரியராக இருந்து பாடங்களோடு பல நல்ல விஷயங்களைச் சொல்லித் தருகிறார். இதனால் குடும்பத்தினருடன் சண்டைகள், பணியிடத்தில் சிக்கல்கள், நண்பர்களுடன் உரசல்கள் ஏற்படுகின்றன. எல்லாவித இழப்புகளையும் அவமானங்களையும் தாங்கிக்கொண்டு குழந்தையைப் படிக்கவைக்கிறார். பத்தாம் வகுப்பு மாநிலத் தேர்வு வருகிறது. குழந்தை மாவட்ட அளவில் முதலிடம் வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பரிசு கொடுக்கிறார்கள். நாமக்கல் அன்கோ பிரதிநிதி அந்தக் குழந்தையின் மேல் நிலைப் படிக்குப்பான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக ஏக கரகோஷத்துக்கு நடுவே சொல்கிறது. வேறு பல நிறுவனங்களும் குழந்தைக்கு உதவ முன்வருகின்றன.

குழந்தையோ நிதானமாக, தாய் மொழியில் இல்லாத கல்வி, மனப்பாடத்தையும் மதிப்பெண்ணையும் மட்டுமே இலக்காகக் கொண்ட கல்வி, தேவையற்ற நெருக்கடிகள், அநியாயக் கட்டணம் என அவர்களுடைய கல்வியில் இருக்கும் குறைகளைச் சொல்லிக் காட்டிவிட்டு, நான் என் கல்வியை ஓர் ஆசிரியரிடம்தான் பெற விரும்புகிறேன்… வியாபாரியிடம் அல்ல என்று சொல்லி தந்தையின் கையைப் பிடித்தபடி அந்த அரங்கை விட்டு கம்பீரமாக வெளியேறுகிறது. அதுவரை அவமானப்படுத்திய குடும்பத்தினரும் நண்பர்களும் தலைகுனிந்து நிற்கிறார்கள் என படத்தை எடுத்திருந்தால் அது தந்தைப் பாசத்தையும் வியாபாரக் கல்வி மீதான விமர்சனத்தையும் உருப்படியாக வைத்த படமாக வந்திருக்கும். என்ன செய்ய? தங்க மீன் என்ற கவித்துவ படிமமும் மலையேறும் சாகசங்களும் பொருள் வயிப் பிரிவின் சோகங்களும் (?) சேர்ந்து ராமைக் குழப்பியடித்திருக்கின்றன.

உலக விழாக்களில் பங்கு பெற்றது குறித்தும் புலம் பெயர் சொந்தங்கள் வழங்கும் சர்வதேச விருதுகள் பெற்றது குறித்தும் இந்திய அரசின் விருது பெற்றது குறித்தும் ராமுக்கு பெருமிதங்கள் இருக்கக்கூடும். ஆனால், உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது ராம். ஊர்க்குருவி வந்து யாரிடமும் சொல்லாமலேயே எல்லாருக்கும் தெரிந்த விஷயம் இது. நீங்கள் ஊர் குருவி வந்து சொன்னால்தான் நம்புவேன் என்று அடம் பிடித்தால் உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

ஆமென்…

4 comments so far

 1. Vinod
  #1

  Insulting a good movie is easy … writing this kind of review is one way.

 2. Dr.P.Saravanan
  #2

  பேரன்புள்ள திரு.பி.ஆர். மகாதேவன் அவர்களுக்கு வணக்கம்.
  “தங்கமீன்கள்“ குறித்து சாருநிவேதா முற்றிலும் மாறுபட்ட சிந்தனையை உயிர்மையில் வெளியிட்டிருந்தார். தாங்கள் அதனையும் தாண்டிய மாறுபட்ட சிந்தனைகளை தமிழ்பேப்பரில் முன்வைத்துள்ளீர்கள். நன்றி. ஜனரஞ்சகப் படங்களை விட்டுவிடலாம். அவற்றை மக்கள் கணித்துவிடுவார்கள். தரமான படங்களைத் தங்களைப் போன்றோர் பாராட்டலாம். ஆனால், போலி இலக்கியப் படங்களை (இப்படம் போன்றவற்றை) மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டியது எல்லோருடைய கடமை என்று கருதுகிறேன்.ராமின் கற்றது தமிழ் என்பதிலும் எண்ணற்ற குறைகள் (கதைநாயகனுக்குத் துப்பாக்கி கிடைக்கும் விதம் உள்ளிட்ட பல) உள்ளன. என்னசெய்ய? கவரிங்குகள் நீண்டநாள் உழைக்காது.
  நன்றி.
  முனைவர் ப. சரவணன்

 3. Gnanasambandan
  #3

  //இயேசு பெருமகனாரின் இரண்டாம் வருகையை சுவிசேஷப் பிரசங்கிகள் சற்றும் மனம் தளராமல் கொண்டாடுவதைப்போல் சிலிர்த்தெழுந்து பரவசமடைந்தார்கள்//

  இந்த ஒரு உவமை போதும்..
  மேற்ப்படி(குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகளை விட )ஆழமான இந்த விமர்சனம் படிக்கத் தேவை இல்லை..

  கோனார் நோட்ஸ் கொடுத்திருக்கவேண்டும் என்று சொல்லும் யெல்லோ பேஜஸ் விமர்சனம்

 4. Shanmugam
  #4

  Make sure you are not going to become a ‘negative-writer’. i followed all your writings. Finally decided to say this.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: